Transcribed from a message spoken in September 2014 in Chennai
By Milton Rajendram
1 தீமோத்தேயு 3ஆம் அதிகாரத்தில், அப்போஸ்தலனாகிய பவுல் தேவனுடைய வீட்டிலே நடக்கவேண்டிய வகையைக்குறித்து எழுதுகிறார். “தாமதிப்பேனாகில், தேவனுடைய வீட்டிலே நீங்கள் நடந்து கொள்ளவேண்டிய விதம்” (1 தீமோ. 3:15) என்னவென்று எழுதுகிறார். தேவனுடைய வீடு என்று சொன்னவுடன் செங்கற்களால் கட்டப்பட்ட ஒரு வீட்டை நாம் கற்பனைசெய்யக் கூடாது. தேவனுடைய வீடு என்பது தேவனுடைய சபை அல்லது தேவனுடைய குடும்பம். இந்த ஒரு சிந்தனை மாற்றமே நம்முடைய வாழ்க்கையிலே ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும். தேவனுடைய வீடு என்பது ஒரு கட்டடம் அல்ல; மாறாக, அது தேவனுடைய மக்களுடைய உறவு அல்லது தேவனுடைய மக்களுடைய ஐக்கியம் அல்லது தேவனுடைய குடும்பம் என்கின்ற இந்த ஒரு எண்ண மாற்றம் நம்முடைய வாழ்க்கையிலே ஒரு புரட்சியை ஏற்படுத்தும்.
ஆகவே, தேவனுடைய வீட்டிலே எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சொன்னவுடன் தேவனுடைய வீட்டிலே ஆராதனை ஒழுங்கு எப்படி இருக்க வேண்டும், எந்தப் பாடலைப் பாட வேண்டும், எப்போது ஜெபிக்க வேண்டும் என்பதுபோன்ற விவரங்கள்தான் அவை என்று நாம் நினைக்கக்கூடாது. எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது அதைப்பற்றியது அல்ல.
தேவனுடைய மக்களாகிய நாம் ஒருவரோடொருவர் எப்படி உறவுகொண்டு வாழ வேண்டும் என்கிற வாழ்க்கை முறையை அல்லது வாழ்கிற விதத்தைக் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. இயல்பாகவே நாம் உறவுகொண்டு வாழ்கிற மக்கள் அல்ல. புறவினத்தார்களுக்கும் யூதர்களுக்கும் நடுவிலே பகையாகிய ஒரு நடுச்சுவர் இருக்கிறது என்று எபேசியர் 2ஆம் அதிகாரத்தில் பவுல் சொல்கிறார் (எபே. 2:14). பகையாகிய நடுச்சுவர் புறவினத்தார்களுக்கும் யூதர்களுக்கும் நடுவிலே மட்டுமல்ல, எந்த இரண்டு மனிதனை எடுத்துக்கொண்டாலும் அவர்களுக்கு நடுவில் இந்தப் பகையாகிய நடுச்சுவர் இருக்கிறது. தன்னை மையமாய்க்கொண்டு வாழ்கின்ற ஒரு தன்னல-வாழ்க்கை அல்லது சுயநல-வாழ்க்கை எல்லா மனிதர்களுக்கும் மிகவும் இயல்பாக, எளிதாக, வரும். அதை கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு சிறு குழந்தைக்குக்கூட அதை கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. சிறு குழந்தைகள் ஒருவேளை பென்சிலுக்காக அல்லது தாளுக்காக சண்டை போடலாம். பெரியவர்கள் சண்டைபோடுகிற “பேப்பர்களும், பென்சில்களும்” வேறு ஏதாவதாக இருக்கும். அது ஒருவேளை கொஞ்சம் உயர்ந்த ரகமான “பேப்பர்களும்” “பென்சில்களு”மாக இருக்கலாம். அதுதான் நம்முடைய இயற்கையான தன்மை, நம்முடைய இயற்கையான சுபாவம்.
ஆகவே, அப்போஸ்தலனாகிய பவுல், “தாமதிப்பேனாகில், தேவனுடைய வீட்டிலே நடக்கவேண்டிய வகையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன்” (1 தீமோ. 3:15) என்று தீமோத்தேயுவுக்கு எழுதும்போது அவர் எவைகளை மனதில் வைத்து எழுதுகிறார் என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ‘இவைகள்’ என்பது அந்த நிருபத்தின் ஒருசில பகுதிகளை மட்டும் அல்ல, அது முழு நிருபத்தையும் குறிக்கிறது.
தேவனுடைய வார்த்தையை வாசிப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும் உண்மையிலேயே பரிசுத்த ஆவியானவர் அறிவையும், ஞானத்தையும், வெளிப்பாட்டையும் தராவிட்டால் நாம் இருளிலிருந்து இருளிலே நடக்கிறவர்களாக இருப்போம்.
ஆகவே, தேவனுடைய வீட்டிலே நடக்கவேண்டிய வகையைக்குறித்து நாம் அறிவதென்றால் தேவனுடைய மக்களோடு நாம் எப்படி உறவுகொண்டு வாழ்வது என்று அறிவதாகும். அதைக்குறித்து நாம் ஏன் அக்கறைப்பட வேண்டும்? ஏனென்றால், தேவனுடைய மக்கள் என்ற முறையில் நாம் ஒருவரோடொருவார் எப்படி உறவுகொண்டு வாழ்கிறோமோ அதைப் பொறுத்துத்தான் நம்மிடமிருந்து ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படுவார். சபையின் இலக்கணம் அல்லது சபையின் வரையறை என்ன? தேவன் அங்கே இருக்கிறார்; கர்த்தர் அந்த இடத்தில் இருக்கிறார். யெஹோவா ஷம்மா. “யெஹோவா ஷம்மா” என்ற வார்த்தைக்கு “கர்த்தர் அந்த இடத்திலே இருக்கிறார்” என்று பொருள். கர்த்தர் அங்கு இருக்கிறாரா, இல்லையா என்பதுதான் ஒரு கூட்டம் தேவனுடைய மக்களுடைய ஐக்கியம் அல்லது உறவின் வாழ்க்கை சபையா, சபையில்லையா என்பதைத் தீர்மானிக்குமேதவிர புறம்பான வேறு எந்தக் காரியமும் அதைத் தீர்மானிக்காது.
நாம், “எங்களிடம் அது இருக்கிறது; இது இருக்கிறது,” என்று புறம்பான நூறு காரியங்களைச் சொல்லலாம். “எங்கள் சபையின் பெயர் இது” அல்லது “புதிய ஏற்பாட்டிலே சபைக்கு இப்படித்தான் பெயர் வைத்திருந்தார்கள்; எங்கள் கூடுகை புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டபடி நடக்கிறது; நாங்கள் புதிய ஏற்பாட்டு முறைமையைப் பின்பற்றுகிறோம்,” என்று ஆயிரம் காரியங்களைச் சொல்லலாம். இவைகளெல்லாம் ஒரு சபையைத் தீர்மானிப்பதில்லை. தேவனுடைய மகிழ்வான பிரசன்னம் அங்கு இருக்கிறதா இல்லையா? தேவன் மனமகிழ்ந்து தேவனுடைய மக்களுடைய மத்தியிலே அங்கு இருக்கிறாரா என்பதுதான் சபையை வரையறுக்கும், சபையைத் தீர்மானிக்கும். இதை நன்றாய் மனதில் இருத்திக்கொள்ள வேண்டும். சபையினுடைய வரையறை என்ன? தேவன் அந்த மக்களுடைய கூட்டு வாழ்க்கையிலே, உறவின் வாழ்க்கையிலே, மனமகிழ்ந்து வாசம் பண்ணுகிறாரா என்பதுதான் சபையினுடைய வரையறை.
அவிசுவாசியொருவன் அல்லது கல்லாத ஒருவன் நம் கூடுகைக்கு வரும்போது அவன், “தேவன் உண்மையாகவே உங்கள் நடுவிலே இருக்கிறார்,” என்று சொல்லி, முகங்குப்புற விழுந்து தேவனைத் தொழுதுகொள்வான் என்று 1 கொரிந்திர் 14ஆம் அதிகாரத்திலே (25ஆம் வசனம்) அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறார். தேவனுடைய பிரசன்னம், தேவனுடைய சமுகம், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முகர்ந்து பார்க்கிற நறுமணம் அல்லது வாசனை நம்மிடையே இருக்கிறதா இல்லையா என்பதுதான் “இது சபையா இல்லையா?” என்பதைத் தீர்மானிக்கும். “நாங்கள் உண்மையான சபை” என்பதை நிரூபிப்பதற்கு பத்து அல்லது நூறு காரணங்களைச் சொல்லலாம், எழுதலாம். அவைகளெல்லாம் நிரூபணமாகாது.
நம் மத்தியிலே வருகிறவர்கள், நம்மோடு தொடர்புகொள்கிறவர்கள், நம்மோடு உறவு கொள்கிறவர்கள் நம்மிடத்தில் ஒரு வகையான வாசனையை முகர்ந்துபார்ப்பார்கள். இது உண்மையா, பொய்யா? நாம் எதையும் சொல்லாமல் போகலாம்; எனினும் அவர்கள் அரைமணி நேரமோ அல்லது அரைநாளோ அல்லது ஆறு மாதங்களோ அல்லது ஆறு வருடங்களோ நம்மோடு உறவு கொள்வார்களானால் நம்மிடமிருந்து ஒரு விதமான வாசனையை அவர்கள் முகர்ந்துபார்ப்பார்கள். இது உண்மை.
இந்த வாசனையைப்பற்றி, “எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவின் வாசனையை, நறுமணத்தை, வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” (2 கொரி. 2:14) என்று அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுகிறார். நம்மிடத்தில் ஒரு வாசனை இருக்க வேண்டும், வாசனை இருக்கிறது. இதை நான் பலதடவைகள் சொன்னபோதும், களைப்பில்லாமல் மீண்டும் ஒருமுறை சொல்லுகிறேன். நம்முடைய குணமும், கட்டமைப்பும் அந்த வாசனையைத் தீர்மானிக்கின்றன; நம்முடைய ஆசைகளும், ஆவல்களும் அந்த வாசனையைத் தீர்மானிக்கின்றன. நம்முடைய சாய்மானங்களும், ஈர்ப்புகளும் அந்த வாசனையைத் தீர்மானிக்கின்றன. நம்முடைய ஏக்கங்களும், தாகங்களும் அந்த வாசனையைத் தீர்மானிக்கின்றன. நம்முடைய உள்நோக்கங்களும், மனப்பாங்குகளும் அந்த வாசனையைத் தீர்மானிக்கின்றன. நம்முடைய websiteகளும், நம்முடைய பிரசங்கங்களும், நம்முடைய புத்தகங்களும் அந்த வாசனையைத் தீர்மானிப்பதில்லை. இதற்கு அர்த்தம் websiteகளும், புத்தகங்களும், செய்திகளும் பயனற்றவைகள் என்பதல்ல.
இதை நாம் தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கின்றேன்: தேவனுடைய வீட்டிலே நாம் நடக்கவேண்டிய வகை என்ன? தேவனுடைய மக்களோடு நாம் வாழவேண்டிய வகை என்ன? நாம் எந்த விதத்திலே வாழ்ந்தால் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினுடைய பிரசன்னமும், அவரை முகர்ந்துபார்க்கிற நறுமணமும், வாசனையும் உண்மையாகவே நம் மத்தியிலே எப்போதும் உண்டாயிருக்கும்? இதற்கு ஜீவவாசனை (2 கொரி. 2:16) என்று பெயர்; அது மக்களுக்கு ஜீவனைத் தரும்; அது மக்களை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினிடத்திலே ஈர்க்கும்; அது அவர்களை இயேசுகிறிஸ்துவை நேசிக்கச் செய்யும், இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்க செய்யும், இயேசு கிறிஸ்துவை பின்பற்றச் செய்யும்.
வாசனை என்றவுடன் அது ஒரு கருகலான விஷயம் என்று நினைத்துக்கொள்ளக் கூடாது. தேவ மக்கள் நம்மோடு தொடர்புகொள்ளும்போது, அவர்கள் இதுவரை கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்ததைவிட, நேசித்ததைவிட, பின்பற்றியதைவிட, சேவித்ததைவிட இப்பொழுது இன்னும் அதிகமாகத் தங்கள் முழு இருதயத்தோடு அவரை விசுவாசிக்கவும், நேசிக்கவும், பின்பற்றவும், சேவிக்கவும் தங்களை அர்ப்பணிக்கிறார்கள் என்றால் நம்மில் ஜீவவாசனை வீசுகிறது என்று பொருள். மக்கள் நம்மோடு தொடர்புக்கு வரும்போது அப்படிப்பட்ட விளைவு ஏற்பட வேண்டும்.
வழக்கம்போல என் எண்ணங்களை நான் நான்கு குறிப்புகளாக பகுத்துக்கொள்ளுகிறேன். அதற்கு ஆதாரமாக, முதலாவது, நான் ஒரு சில வசனங்களை வாசிக்க விரும்புகிறேன். யோவான் 13:35;; 15:12. “நீங்கள் ஒருவரிலொருவா; அன்புள்ளவர்களாயிருந்தால் அதினால் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” “நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவார் அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது.”
இந்த வசனங்களில் சபையின் இன்னொரு வரையறையை, இலக்கணத்தை, நாம் பார்க்கிறோம். “இது சபையா இல்லையா” என்றால் அதற்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பதில் என்ன தெரியுமா? “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருந்தால் அதனால் நீங்கள் என்னுடைய சீடர்கள் அல்லது என்னுடைய சபை என்று மற்றவர்கள் அறிந்துகொள்வார்கள். நீங்கள் உடுக்கிற உடைகளை வைத்தோ, நீங்கள் வைத்திருக்கிற விளம்பரப் பலகைகளை வைத்தோ, நீங்கள் பாடுகிற பாடல்களை வைத்தோ, உங்கள் websiteகளை வைத்தோ, நீங்கள் என்னுடைய சீடர்களா இல்லையா என்று மற்றவர்கள் அறிந்துகொள்ள மாட்டார்கள். நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருந்தால் என்னுடைய சீடர்களென்று இந்த உலகம் அல்லது இந்த மக்கள் அறிந்துகொள்வார்கள்.” இந்த உலகம் அல்லது தேவனை அறியாத மக்கள் நம்மை எப்படிப் பார்க்க வேண்டுமென்றால், “ஆ! உண்மையாகவே இந்தக் கிறிஸ்தவர்கள் ஒருவர்மேலொருவர் எவ்வளவு அன்பாயிருக்கிறார்கள் பாருங்கள்!” என்பதுதான் அவர்கள் வாயிலிருந்து புறப்படுகிற சாட்சியாக இருக்க வேண்டும். “இந்தக் கிறிஸ்தவர்கள் ஒருவரோடொருவர் எப்படி போட்டி போடுகிறார்கள் பாருங்கள்! ஒருவரையொருவர் எவ்வளவாய் வெறுக்கிறார்கள் பாருங்கள்!” என்பது இந்த உலகத்து மக்களுடைய வாயிலிருந்து புறப்படுகிற சாட்சியாக இருக்கலாகாது. “இயேசுகிறிஸ்துவின் பெயரைச் சொல்லுகிற இந்த மக்கள் ஒருவர்மேலொருவர் எவ்வளவு அன்பாய் இருக்கிறார்கள் பாருங்கள்,” என்று அவர்கள் வியக்க வேண்டும்.
யோவான் 15ஆம் அதிகாரம் 12ஆம் வசனம்:* “நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது.” *அன்பாயிருங்கள் என்ற வார்த்தை புதிய ஏற்பாட்டிலே இருபது, முப்பது தடவை வருகிறது. “நீங்கள் ஒருவர்மேலொருவர் அன்பாயிருக்க வேண்டும்,” என்று சொன்னால் போதாதா? “நான் உங்கள்மேல் அன்பாயிருந்ததுபோல, அதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டும்,” என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிறார்.
சில சமயங்களில் கிறிஸ்தவகள், “இயேசுகிறிஸ்துவால் இப்படிச் செய்ய முடியும், பேச முடியும். நம்மால் அவர் செய்ததுபோலச் செய்யவோ, பேசியதுபோல் பேசவோ முடியாது. ஏன்? ஏனென்றால், அவர்யார்? அவர் தேவன். நாமெல்லாம் என்ன கடவுளா!” என்று மிகவும் ஆவிக்குரியவர்கள் போலப் பேசுவார்கள். ஆனால், அப்படி நினைப்பதோ, பேசுவதோ ஆவிக்குரிய எண்ணமோ, வார்த்தையோ அல்ல; அது மிகவும் மாம்சத்துக்குரிய வார்த்தை.
ஏனென்றால், “நான் இப்படி அன்புகூர முடியும் என்றால் நீங்களும் அப்படி அன்புகூர முடியும்,” என்று ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சொல்லும்போது, நாம் “அது முடியாது,” என்று சொன்னால் அது நாம் அவரை மறுதலிப்பதற்குச் சமானம். அவர் அன்புகூர்ந்ததுபோல் நம்மால் அன்புகூர முடியாவிட்டால் நாம் மனந்திரும்ப வேண்டும். “ஆண்டவரே நீர் அன்புகூர்ந்ததுபோல் நான் அன்புகூரவில்லை என்பதற்காக மனம் வருந்துகிறேன், வெட்கப்படுகிறேன். அப்படி அன்புகூர முடியும் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் இன்றைக்கு அப்படி அன்புகூரவில்லை ஆனால், அதை நோக்கி நான் முன்னேற விரும்புகிறேன்,” என்று சொல்லி மனந்திரும்ப வேண்டும். இது நம் இருதயத்தினுடைய ஏக்கமாக இருக்கவேண்டும். இதற்குப்பதிலாக சுருக்கு வழியிலே, “அவர் கடவுள்; அவரால் அப்படி அன்புகூர முடியும்; நான் சாதாரண மனிதன்தானே. எனவே, நான் அப்படி அன்புகூர முடியாது; அப்படி அன்புகூர வேண்டிய அவசியமும் இல்லை,” என்று சாக்குப்போக்குச் சொல்லக்கூடாது.
“அவர் அன்புகூர்ந்ததுபோல நாம் அன்புகூர்ந்தால், அவர் சிலுவைக்குப் போனதுபோல நாமும் சிலுவைக்குப் போகவேண்டியிருக்குமே!” என்றால், “ஆம், போகவேண்டியிருக்கலாம்.” ஆனால் அவர் உயிர்த்தெழுதலில் பிரவேசித்ததுபோல நாமும் உயிர்த்தெழுதலில் பிரவேசிப்போம். நாம் அவரோடேகூட பாடுபட்டால் அவரோடேகூட மகிமையுமடைவோம் என்பதுதான் தேவனுடைய மக்களுடைய அழைப்பு (ரோமர் 8:17). அவருக்கு ஒரு வழி, நமக்கு இன்னொரு வழியா? அப்படியல்ல. இருவருக்கும் ஒரே வழிதான்.
“சகோதர சிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம் பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்” (ரோமர் 12:10) என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார். சகோதர சிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள். நான் உங்களுக்கு ஒரு பயிற்சியைக் கொடுக்கிறேன். ஒருவர்மேலொருவர் என்ற வார்த்தை முழு புதிய ஏற்பாட்டிலும் எத்தனை தடவை வருகிறது என்று நீங்கள் கண்டுபிடியுங்கள். வேதாகமத்துக்குரிய மென்பொருளைப் பயன்படுத்தி இப்பொழுது இதை மிகத் துரிதமாகக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், நீங்கள் அதைக் கண்டுபிடித்தபின், அவைகளையெல்லாம் பொறுமையாய் வாசியுங்கள். “ஒருவர்மேலொருவர்”, “ஒருவருக்கொருவர்”, “ஒருவர்மீதொருவர்”, “one another.” அது ஒரு நல்ல பதம். உண்மையிலேயே சபை வாழ்க்கை அல்லது கூட்டு வாழ்க்கை அல்லது தேவனுடைய மக்களுடைய வாழ்க்கை என்பது என்ன என்பதை நாம் புரிந்துகொள்வதற்கு இந்த “ஒருவர்மேலொருவர்”, “ஒருவருக்கொருவர்”, “ஒருவர்மீதொருவர்” என்கிற பதங்களையெல்லாம் வாசித்தால் ஒரு நல்ல சித்திரம் கிடைக்கும்.
ஆகவே, தேவனுடைய வீட்டில் நடக்கவேண்டிய வகை அல்லது தேவனுடைய மக்களிடையே மற்றவர்கள் முதலாவது முகர்ந்துபார்க்கவேண்டிய வாசனை என்னவாக இருக்க வேண்டும்? “இவர்கள் உண்மையிலேயே ஒருவர்மேலொருவர் எவ்வளவு அன்பாயிருக்கிறார்கள்!” என்பதுதான் அவர்கள் முகரவேண்டிய முதல் வாசனை. நான் எளிமையான காரியத்தைச் சொல்லவில்லை. ஒரு கணவனும் மனைவியும்கூட ஒருவர்மேலொருவர் அன்பாயிருப்பது மிகவும் கடினம். நான் “I Love You, I Love You honey, I Love You dear, I Love You sweetheart” என்கிற அந்தக் கதையைச் சொல்லவில்லை. இப்படி வார்த்தைகளைச் சொல்வது கஷ்டமா என்ன? வார்த்தைகளுக்கு என்ன பஞ்சம்? அந்த அன்பை நான் சொல்லவில்லை.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வைத்த அந்தத் தரத்தின்படி, அதாவது “நான் உங்கள்மேல் அன்பாயிருப்பதுபோல ஒருவர்மேலொருவர் அன்பாயிருப்பங்கள்.”
தேவனுடைய வீட்டிலே கல்வி நிச்சயமாக உண்டு. தேவனுடைய வீட்டிலே கல்வி என்று ஒன்று இல்லாவிட்டால் தேவனுடைய மக்கள் வேறு எங்கும் கற்றுக்கொள்ளமாட்டார்கள். “தகப்பன் சிட்சியாத புத்திரன் உண்டோ?” என்று எபிரெயர் 12ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். ஆகவே, குழந்தை அடம்பிடித்து மண்ணிலே உருண்டு புரண்டாலும் சரி, சட்டை போட்டாலும் சரி போடாவிட்டாலும் சரி அல்லது எப்படி போட்டாலும் சரி அன்பு செய்வதென்றால் ஒன்றும் சொல்லக்கூடாது என்பதல்ல பொருள். குழந்தை எப்படி வளர்ந்தாலும் சரி நாம் அமைதியாக இருக்க வேண்டும் என்று சொல்வீர்களா? இதுதான் அன்பு என்று நீங்கள் புரிந்துகொள்வீர்களா? நிச்சயமாக அந்த அளவுக்கு நாம் மடையர்கள் அல்ல. நான் கடினமான வார்த்தையைப் பயன்படுத்துகிறேன். அன்பு என்பது அது அல்ல. நான் என்னுடைய பிள்ளைகள்மேல் அன்பாயிருந்தால் அவர்களை சிட்சிக்கிறேன். ஆனால் சிட்சிக்கிறேன் என்பதற்காக நாம் தேவனுடைய குடும்பத்தை காவல் நிலையமாக அல்லது நீதிமன்றமாக மாற்றிவிடக் கூடாது.
தேவனுடைய குடும்பத்தின் தலையாய குணம் அன்பாக இருக்க வேண்டுமேதவிர அது கல்வி அல்ல. அன்பின் சூழலிலே நாம் கல்வி புகட்ட முடியுமென்றால் புகட்டுவோம். அன்பைக் கெடுத்து நாம் கல்வி புகட்டவேண்டுமென்றால் நாம் புகட்ட வேண்டாம். இதற்கு அர்த்தம் நாம் சுடுசொல்லுக்கோ அல்லது கண்டித்துத் திருத்துவதற்கோ பயப்பட வேண்டும் என்பதல்ல. ஆனால், கண்டித்துத் திருத்தும்போதுகூட என்னுடைய மக்களுக்கும், என்னுடைய பிள்ளைகளுக்கும் அல்லது சகோதர சகோதரிகளுக்கும் ஒன்று தெரிய வேண்டும் இது அன்பின் சூழலிலே செய்யப்படுகிறது, கண்டனம் பண்ணப்படுவதற்காக செய்யப்படுவது இல்லை என்பது அவர்களுக்குத் தெளிவாகத் தெரிய வேண்டும். கண்டனம்பண்ணுவது என்றால் “உன்மேல் எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை,” என்று பொருள். “இவனெல்லாம் எப்படி உருப்படப்போகிறான்!” என்பது தேவனுடைய மக்களைப்பற்றி ஒருநாளும் நம்முடைய எண்ணமாக இருக்கக் கூடாது. ஏனென்றால், அவர்களை அழைத்தவர் உண்மையுள்ளவர். நான் அவர்களுடைய எஜமானன் அல்ல. அவர்களை நிலைநிறுத்துவதற்கு அவர் வல்லமையுள்ளவராக இருக்கிறாரே! தேவனுடைய மக்கள் யாரைக்குறித்தும் நம்பிக்கை இழப்பதற்கு நமக்கு உரிமை இல்லை.
ஆகவே, ஒருபக்கம், தேவனுடைய வீட்டிலே நடக்கும் வகை அன்பின் சூழல். இன்னொரு பக்கம், தேவனுடைய வீட்டிலே ஆவிக்குரிய கல்வி என்று ஒன்று இருக்க வேண்டும். இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தம்முடைய சீடர்களிடத்தில் அன்பாக இருந்தார். ஆனால், அவர் தம்முடைய சீடர்களுக்கு ஆவிக்குரிய கல்வியும் புகட்டினார்; கடினமான விதத்திலே புகட்டினார்.
இந்தக் காரியத்தைக்குறித்து நாம் இன்னும் பத்து வருடங்களுக்கு அல்லது ஐம்பது வருடங்களுக்குக்கூட ஐக்கியம்கொள்ள வேண்டியிருக்கும். தேவனுடைய வீட்டிலே சில சமயங்களில் இவைகளை மீண்டும் மீண்டும் நாம் நினைப்பூட்ட வேண்டியிருக்கும்.
தேவனுடைய வீடு என்பது தேவனுடைய மக்களாலான சபை. கணவன் மனைவி பிள்ளைகள் வாழ்வதும்கூட ஒரு விதத்திலே தேவனுடைய வீடுதான்; ஒரு குறுவடிவத்திலே அது தேவனுடைய வீடு. ஒரு குடும்பம் தேவனுடைய வீடாக இல்லையென்றால், பல குடும்பங்களாக நாம் கூடிவாழ்வது திடுதிப்பென்று தேவனுடைய வீடாக மாறிவிடாது. தேவனுடைய வீட்டிலே நாம் எந்த வகையில் நடக்க வேண்டுமோ அதே வகையில் நான் என்னுடைய குடும்பத்தில் நடக்க வேண்டும். அப்படி நடக்கவில்லையென்றால் நாம் பத்து பேர் அல்லது ஐம்பது பேர் அல்லது நூறு பேர் கூடிவந்தவுடனே அது தேவனுடைய வீடாக மாறாது என்பதை நாம் எழுதிவைத்துக் கொள்ளலாம். அப்படி நினைப்பதற்கு நாம் மூடர்களல்ல. நம்மைப் பொறுத்தவரை விரிவாக்கப்பட்ட தேவனுடைய குடும்பமாகிய சபை அல்லது குறுவடிவில் இருக்கிற தேவனுடைய சபையாகிய நம் குடும்பம் ஆகிய இரண்டையும் நாம் ஒரே கோட்பாட்டின் அடிப்படையில்தான் வாழ்கிறோம்.
இதற்கு அர்த்தம் தேவனுடைய மக்களுக்கிடையே குடும்பத்துக்கும் சபைக்கும் நடுவிலே வேறுபாடு கிடையாது என்பதல்ல. குடும்பம் குடும்பம்தான்; சபை சபைதான். இந்த இரண்டுக்கும் நடுவில் சில எல்லைக்கோடுகள் உண்டு. என் வீட்டுக்குப் போவதற்கு நான் என் மனைவிக்குப் போன் பண்ணிவிட்டுப் போக வேண்டாம். என் மனைவிக்கு நான் எப்போது வேண்டுமானாலும் போன் பண்ணலாம். ஆனால் ஒரு சகோதரனுக்கு நான் எப்போது வேண்டுமானாலும் போன் பண்ணலாம் என்பது முறையாகாது. அவர் வீட்டுக்கு நான் எப்போது வேண்டுமானாலும் போகலாம் என்பது முறையாகாது. அவருக்கு மனைவி பிள்ளைகள் இருக்கிறார்கள், வயதான பெற்றோர்கள் இருக்கிறார்கள். அவர்களைக் கவனிக்க வேண்டும். அவருக்கு ஒரு வேலை உண்டு. எனவே, அந்தச் சகோதரனுக்கு எப்போது போன்பண்ணினால் வசதியாக இருக்கும் என்று தெரிந்துகொள்ள வேண்டும். காலையிலே போன் பண்ண வேண்டியிருந்தால் அல்லது இரவு ஒன்பதரை மணிக்குமேல் போன்பண்ண வேண்டியிருந்தால் சற்று தயக்கத்தோடுதான் அதைச் செய்ய வேண்டும். அடுத்த நாளுக்குத் தள்ளிப்போட முடியாது என்றால் மட்டுமே இரவில் போன் பண்ணலாம். ஏனென்றால், அவருக்கும் பல பொறுப்புகள் உள்ளன.
எனவே, நம் குடும்பம் என்பது குறுவடிவிலான தேவனுடைய சபை. சபை விரிவான வடிவிலான தேவனுடைய குடும்பம். நாம் இப்படிச் சொல்லும்போது நாம் ஏதோ சமுதாய வாழ்க்கையைச் சொல்லவில்லை. தேவனுடைய பார்வையிலே குடும்பம் என்கிற அமைப்பே இல்லை என்று நான் சொல்லவில்லை. இதைக் குறித்து நாம் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். ஏனென்றால், பேசுவதற்கு மிகவும் ஆவிக்குரியதுபோல் தோன்றலாம். “பிரதர், உண்மையிலேயே நாமெல்லாம் தேவனுடைய குடும்பம் என்றால் இந்தமாதிரி ஒரு வேறுபாடு நமக்குள்ளே இருக்கவே கூடாது பிரதர்,” என்பது பொய்யான ஆவிக்குரிய தோற்றம்.
ஆகவே, சில காரியங்களை நாம் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியிருக்கிறது. அப்படிச் சொல்ல விரும்புகிற சில காரியங்களை நான் சொல்லுகிறேன்.
இந்த நான்காவது குறிப்பு இல்லாமல் இந்த செய்தியை நாம் முடிக்கக்கூடாது. ஏனென்றால், இந்த செய்தியை முடித்தவுடனே தேவனுடைய மக்களெல்லாரும் தேவதூதர்களாக இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்போம். தேவனுடைய பிள்ளைகள் தேவதூதர்கள் அல்ல; அவர்கள் தவறு செய்வார்கள்; அவர்களிடம் குறைகள் உண்டு; அவர்கள் பிழை செய்வார்கள்; அவர்கள் விழுவார்கள்; நட்டத்தை ஏற்படுத்துவார்கள்; அவமானத்தை ஏற்படுத்துவார்கள். ஆனாலும், தேவனுடைய பிள்ளைகளிடத்தில் நாம் பொறுமையாக இருக்க வேண்டும். இது தேவனுடைய குடும்பம். இது தேவனுடைய நீதிமன்றம் அல்ல.
முதலாவது, நாம் மற்றவர்களைக்குறித்த சிந்தனையும், அக்கறையும், கரிசனையும் உள்ளவர்களாக இருக்க வேண்டும். சில வசனங்களை நீங்கள் குறித்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் எல்லாவற்றையும் நாம் வாசித்து முடிக்க முடியாது. ஆனால் இதை ஒரு மிக முக்கியமான எண்ணமாக நான் கருதுகிறேன். ஒருமணிநேரம் பேசிவிட்டு அதன்பின் ஒரு இடைவெளிவிட்டு, தொடர்ந்து பேசுவதற்குக்கூட நான் அஞ்ச மாட்டேன். ஏனென்றால், அந்த அளவுக்கு இது முக்கியத்துவம்வாய்ந்த ஒரு கருத்து.
“நீ நன்றாய் ஸ்தோத்திரம் பண்ணுகிறாய். ஆகிலும் மற்றவன் பக்திவிருத்தியடையமாட்டானே” (1 கொரிந்தியர் 14:17). “…அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று அக்கறையாயிருக்கும்படிக்கு…” (1 கொரிந்தியர் 12:24-25). “ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன்” (10:24) . “அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக…அதேனென்றால் உங்கள் காரியங்களை உண்மையாய் விசாரிக்கிறதற்கு என்னைப்போல மனதுள்ளவன் அவனையன்றி வேறொருவனும் என்னிடத்தில் இல்லை” (பிலிப்பியர் 2:4, 20). “உன் ஆயுதங்களோடே ஒரு சிறுகோலும் உன்னிடத்தில் இருக்கக்கடவது; நீ மலஜலாதிக்குப் போகும்போது, அதினால் மண்ணைத் தோண்டி, மலஜலாதிக்கிருந்து, உன்னிலிருந்து கழிந்துபோனதை மூடிப்போடக்கடவாய்” (உபாகமம் 23:13).
“நீ நன்றாய் ஸ்தோத்திரம் பண்ணுகிறாய்; ஆகிலும், மற்றவன் பக்திவிருத்தியடையமாட்டானே.” ”ஸ்தோத்திரம் ஆண்டவரே! அல்லேலூயா! ஓ! கர்த்தராகிய இயேசுவே! ஓ! பரபரபரபரபரபரபர.” பவுல் சொல்கிறார்: நீ நன்றாய் ஸ்தோத்திரம் பண்ணுகிறாய்; ஆனால், மற்றவன் கட்டியெழுப்பப்படவில்லையே! 1 கொரிந்தியர் 14ஆம் அதிகாரத்தின் மையக் கருத்து இது. 1 கொரிந்தியர் 14ஆம் அதிகாரம் அந்நிய பாஷை பேசுவதைப்பற்றியதோ அல்லது கர்த்தருடைய பந்திக்கூட்டம் எப்படி நடத்துவது என்பதற்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதிய கையேடோ அல்ல. இது பந்திக்கூட்டம் எப்படி நடத்த வேண்டும் என்பதைப்பற்றிய சட்டப் புத்தகம் அல்ல. “முதல் படி, எல்லாரும் வட்டமாக உட்கார வேண்டும். இரண்டாவது படி, நடத்துகிற தேவனுடைய தாசர்கள் அடர்ந்த நிறத்தில் கால்சட்டையும், வெளிர்ந்த நீல நிறத்தில் மேற்சட்டையும் போட வேண்டும். மூன்றாவது படி, மேஜை சரியாக வட்டத்தின் மையத்தில் இருக்க வேண்டும். நான்காவது படி, அந்த மேஜையின்மேல் ஒரு வெள்ளைத் துணியைத் தொங்கவிட வேண்டும்; அதின் நான்கு முனைகளும் சரியான அளவில் தொங்க வேண்டும்,” என்று பந்தி எப்படி நடத்த வேண்டும் என்பதைப்பற்றிய புத்தகம் அல்ல. இவைகளையெல்லாம் “பரலோகத்திலிருக்கிறவர் பார்த்து நகைப்பார். ஆண்டவர் அவர்களை இகழுவார்” (சங்கீதம் 2:4). காரியம் அதுவல்ல; “மற்றவர்கள் கட்டியெழுப்பப்படுகிறார்களா, மற்றவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா, மற்றவர்களுடைய நிலை என்ன, அவர்களுடைய தேவை என்ன, அவர்களுடைய பாடு என்ன,” என்ற எண்ணத்தால் இவைகளெல்லாம் செய்யப்படுமானால், உண்மையாகவே அது மாற்கு 8:2இல் பார்க்கிற “ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன்,” என்பவருடைய மனம்.
எனவே, 1 கொரிந்தியர் 14 அந்நிய பாஷை பேசுவதைப்பற்றியும் அல்ல, கர்த்தருடைய பந்திக்கூட்டம் நடத்துவதைப்பற்றியும் அல்ல. தேவனுடைய மக்கள் கூடி வாழும்போதும், கூடி வரும்போதும், “என்னுடைய சகோதர சகோதரிகள், தேவனுடைய மக்கள், மற்றவர்களுடைய காரியம் என்ன? நிலை என்ன? தேவை என்ன? அவர்களுக்கு இது பயனுள்ளதா?” என்ற எண்ணம் நம்மை ஆளுகைசெய்ய வேண்டும். கட்டியெழுப்பப்படுதல் என்ற பெரிய வார்த்தையை நான் விட்டுவிட விரும்புகிறேன். கட்டியெழுப்பப்படுதல் என்ற வார்த்தையை இன்று மக்கள் மந்திரம்போலப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். தேவனுடைய மக்களுக்கு அது பயனுள்ளதாக இருக்கிறதா? அது அவர்களை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவோடு நெருக்கமாய்க் கொண்டுவருமா அல்லது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அவர்களுடைய வாழ்க்கைக்குள் இன்னும் அபரிமிதமாய்க் கொண்டுவருமா அல்லது கொண்டுவராதா என்பதுதான் காரியம். அவர்களுடைய நன்மைகளை, அவர்களுடைய ஆசீர்வாதங்களை, மனதில்கொண்டே காரியங்களைச் செய்ய வேண்டும்.
1 கொரிந்தியர் 12ஆம் அதிகாரம் 24, 25யை வாசிக்கலாம். இவைகளெல்லாம் மிக முக்கியமான வசனங்கள். “நம்மில் இலட்சணமுள்ளவைகளுக்கு அலங்கரிப்பு வேண்டியதில்லை. சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல், அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படிக்கு, தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு அதிக கனத்தைக் கொடுத்து, இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார்.” அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலைப்பட வேண்டும். இங்கு கவலை என்ற வார்த்தை இருக்கிறது. தமிழில் அந்த வார்த்தை சரிதான். “மற்றவர்களைப்பற்றி உனக்குக் கவலை இருக்கிறதா?” என்று கேட்பதுண்டு. கவலை என்றால் முக்காடு போட்டுக்கொண்டு மூலையில் உட்கார்ந்து கவலைப்படுவதல்ல. “மற்றவர்களைக்குறித்த ஓர் எண்ணம், அக்கறை, கரிசனை உனக்கு இருக்கிறதா?” என்பதுதான் அதன் பொருள். கிறிஸ்துவினுடைய சரீரத்தின் தலையாய குணம் என்னவாக இருக்க வேண்டுமென்றால், அங்கு அவயவங்கள் அல்லது தேவனுடைய மக்கள் ஒருவரைக்குறித்து ஒருவார்அப்படிப்பட்ட எண்ணமும், அக்கறையும், கரிசனையும் உள்ளவர்களாக இருக்க வேண்டும்?
அப்போஸ்தலனாகிய பவுல், “கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது,” என்றும், “அவனவன் தனக்கானவைகளையல்ல பிறருக்கானவைகளையும் நோக்குவானாக,” என்றும் கூறுகிறார் (பிலிப்பியர் 2:4, 5). அதாவது “அவனவன் தன்னுடைய நலனைப்பற்றி மட்டுமல்ல மற்றவர்களுடைய நலனைப்பற்றியும் எண்ணமும், அக்கறையும், கரிசனையும் உள்ளவனாக இருப்பானாக,” என்பதே அதன் பொருள். அதே பிலிப்பியர் 2ஆம் அதிகாரம் 20ஆம் வசனத்தில் அந்த எண்ணம் தொடர்ந்து போகிறது. “உங்களுடைய காரியங்களை உண்மையாய் விசாரிக்கிறதற்கு என்னைப்போல் மனதுள்ளவன் தீமோத்தேயுவைத்தவிர வேறு ஒருவனும் இல்லை,” என்று சொல்லுகிறார்.
ஓ! இது தேவனுடைய மக்களைக்குறித்து அப்போஸ்தலனாகிய பவுலினுடைய வார்த்தை! அவர்கள் இரட்சிக்கப்பட்டவர்கள்; பரிசுத்த ஆவியைப் பெற்றவர்கள்; தேவனைச் சேவிக்க வேண்டும் என்கிற பாரமுடையவர்கள்; ஆனாலும் தேவனுடைய மக்களைக்குறித்து அக்கறையும், கரிசனையும் உடையவர்கள் பலர் இல்லை. இது துக்கமான ஓர் உண்மை. நாம் இந்தச் சூழலிருந்து விடுதலை பெறலாம். எப்பொழுது விடுதலை பெறலாமென்றால் இதைக்குறித்து நம்முடைய இருதயம் கொஞ்சம் கிளர்ந்தெழ வேண்டும். இதைக்குறித்து நாம் தேவனிடத்தில் ஜெபிக்க வேண்டும். நம்முடைய சகோதர சகோதரிகள், மனைவி மக்களைப்பற்றி நான் பேசுகிறேன். அவர்களுடைய நிலை என்ன, தேவை என்ன, சூழ்நிலை என்ன என்பதைப்பற்றிய எண்ணமோ, சிந்தனையோ, அக்கறையோ, கரிசனையோ நமக்குப் பல வேளைகளில் இருப்பது இல்லை. ஒவ்வொரு கணவனும் முதலாவது, “என்னுடைய மனைவியின் நிலையும், தேவையும் என்ன? எது அவளுக்குச் சுமையாய் அழுத்துகிறது அல்லது எது அவளுக்கு இளைப்பாறுதலையும், நிவாரணத்தையும் உண்டாக்குகிறது,” என்று யோசித்துப்பார்க்க வேண்டும். ஒரு கணவன் என்ற முறையில் நான் சொல்கிறேன், “தயவுசெய்து இதற்காக நேரம் ஒதுக்கி யோசியுங்கள்.”
அதுபோல, ஒவ்வொரு மனைவியும், “என்னுடைய கணவனுடைய நிலை என்ன, தேவை என்ன, எது அவனைச் சுமையாக அழுத்துகிறது அல்லது எது அவனுக்கு இளைப்பாறுதலையும், நிறைவையும் உண்டாக்குகிறது,” என்பதை நீங்கள் சிந்தியுங்கள். “இல்லங்க, அதெல்லாம் தானாக வந்துவிடும்,” என்று நினைக்காதீர்கள். பிள்ளைகளைப் பெற்றபிறகு நாம் இன்னும் கொஞ்சம் அதிகமாகத் தளர்ந்துவிடுவோம். “ஒரு பிள்ளையைப் பெற்று வளர்க்கிறதே பெரிசா இருக்குது! இதிலே இதைப்பற்றி வேறே நான் யோசிக்கணுமா!” என்று நினைப்பது தவறு. அது இந்த உலகத்தின் மக்களுடைய மூடத்தனம். ஒரு பிள்ளையையும், ஒரு மனைவியையும்பற்றி யோசிக்கிற ஆற்றலை, சாமர்த்தியத்தை ஒரு கணவனுக்குத் தேவன் தருகிறார். ஒரு கணவனையும், ஒரு பிள்ளையையும்பற்றி எண்ணமும், அக்கறையும், கரிசனையும் கொள்கிற ஆற்றலை, சாமர்த்தியத்தை ஒரு மனைவிக்குத் தேவன் தருகிறார்.
இப்படி நாம் பல மட்டங்களில் தேவனுடைய மக்களைப்பற்றி யோசிக்க வேண்டும். கணவன், மனைவி, பிள்ளைகளை நான் உதாரணமாய்ச் சொன்னேன். “ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல் பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன்…நீங்களும் யூதருக்கும், கிரேக்கருக்கும், தேவனுடைய சபைக்கும் இடறலற்றவர்களாயிருங்கள்” (1 கொரிந்தியா; 10:24, 33). அவனவன் தன் தன் சுயபிரயோஜனத்தைத் தேடக்கூடாது.
ஆதாமினுடைய இனத்தார்க்கு சுயநலம், சுயபிரயோஜனம், என்பது இயற்கையாக வரும். அதை யாரும் கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. என்னுடைய மகள் ஒருதடவை மேற்கோள் ஒன்றைக் காட்டினாள். அது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. Humility is not thinking low of yourself but humility is thinking less of yourselப. தாழ்மை என்பது உன்னைக்குறித்து தாழ்வாக நினைப்பது அல்ல; மாறாக, தாழ்மை என்பது உன்னைக்குறித்து குறைவாக நினைப்பது. குறைவாக நினைப்பது என்றால் நம்மைப்பற்றியே நாம் யோசித்துக்கொண்டும், பேசிக்கொண்டும் இருக்கக்கூடாது. எப்படி? “நான் பரிசுத்தமாய் இருக்கிறேனா? நான் பாவியாய் இருக்கிறேனா?” தாழ்மை என்பது என்னைப்பற்றி நினைப்பதைக் குறைத்துக்கொண்டு, மற்றவர்களுடைய நலனையும், தேவைகளையும்பற்றி நினைப்பதுதான் தாழ்மை. தாழ்மை என்பது “முந்தி நான் இப்படி நடந்தேன், இப்பொழுது இப்படி நடக்கிறேன். முந்தி கொஞ்சம் சத்தமாகப் பேசினேன். இப்போது மற்றவர்கள் என்னருகே வந்து காதைப் பக்கத்திலே வைத்துக் கேட்கக்கூடிய அளவுக்கு அமைதியாகப் பேசுகிறேன்” என்பதெல்லாம் தாழ்மை இல்லை.
“நான் மற்றவர்களைப்பற்றி யோசித்தால் பிறகு என்னைப்பற்றி யார் யோசிக்கிறது?” என்ற எண்ணம் எழுகிறதா? ஆ! இது ஏதேனிலே அன்று கேட்ட குரலின் எதிரொலி. நம்மைக்குறித்து யார் யோசிப்பது? நம்மைக்குறித்து தேவன் யோசிப்பார். “இது ரொம்ப ஆவிக்குரியதாக இருக்கிறதே!” என்று நீங்கள் நினைத்தால். என்னுடைய பதில்: “ஆம்! நாம் ஆவிக்குரியவர்களாக இருப்பதற்கு அழைக்கப்பட்டவர்கள்தான்.” என்னுடைய சகோதரர்களைக்குறித்து, என்னுடைய மனைவியைக்குறித்து, என்னுடைய பிள்ளைகளையெல்லாம்பற்றி நான் யோசிக்கிறேன்; ஆனால், என்னைக்குறித்து யாருமே யோசிக்காமல் போய்விட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம். நல்லது, பரலோகத்திலே உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்.
சகோதரர் வாட்ச்மேன் நீயினுடைய நேசித்தும் நன்மதிப்போ வேண்டேன் என்கிற பாடலை நீங்கள் ஆயிரம்முறை பாடுங்கள். தனியாகப் பாடுங்கள். மற்றவர்களுக்கு முன்பாகப் பாடாதேயுங்கள். மற்றவர்களுக்கு முன்பாகப் பாடினால் நீங்கள் என்னமோ அந்தமாதிரி ஆகிவிட்டீர்கள் அல்லது அந்த நிலையை எட்டிவிட்டீர்கள் என்று மற்றவர்கள் தவறாக நினைத்துக்கொள்ளக்கூடும். நாம் ஏதோ சிலுவையினூடாய்ச் சென்று உயிர்த்தெழுதலில் வந்த ஒரு சகோதரன் என்று மற்றவர்கள் நம்மைக் குறித்துத் தவறாக நினைத்துவிடுவார்கள். நாம் அப்படிப்பட்ட பரிசுத்தவான்கள் அல்ல. எனவே, தனியாக நடந்துபோகும்போது நீங்கள் பாடலாம். ஆனால், தயவுசெய்து பாடுங்கள். அந்தப் பாடலை இதுவரை நீங்கள் மனப்பாடமாய்ப் பாடமுடியவில்லையென்றால் தயவுசெய்து நீங்கள் அதைப் பாடிப் பாடி மனப்பாடம் பண்ணுங்கள். நான் சொல்கிறேன்; மனப்பாடம் பண்ணிப் பாடாதீர்கள். பாடிப்பாடி மனப்பாடம் பண்ணுங்கள். இந்த இரண்டு;க்கும் வேறுபாடு இருக்கிறது.
புதிய ஏற்பாட்டில்தான் கர்த்தர் மற்றவர்களைக்குறித்து அதிக அக்கறையுள்ளவராக மாறிவிட்டார் என்று தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம். உபாகமம், எண்ணாகமம் ஆகியவைகளை நீங்கள் வாசித்துப் பார்த்தால், மற்றவர்களைக்குறித்து தேவன் எவ்வளவு அக்கறையுள்ளவராக இருக்கிறார் என்றும், தம்முடைய மக்கள் மற்றவர்களைக்குறித்து அக்கறை உள்ளவர்களாக இருக்க வேண்டுமென்பதற்காக எத்தனை சட்டதிட்டங்களை வகுத்திருக்கிறார் என்றும் தெரிந்துகொள்ள முடியும். ஒருவன் ஒரு பள்ளம் தோண்டினால் அதை மூடிவிடவேண்டும். ஏனென்றால், அங்கு பள்ளம் இருப்பது தெரியாமல் ஒருவன் அதில் விழுந்துவிட்டால் அல்லது ஆடு மாடுபோன்ற மிருகங்கள் விழுந்துவிட்டால் அதற்கு அவன் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று பல சட்டதிட்டங்களை வகுக்கிறார்.
நான் ஒரு வசனத்தைச் சொல்லப்போகிறேன். நான் இந்த வசனத்தை அடிக்கடி உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். இந்த வசனம் ஆவிக்குரிய வசனம்போல் தோன்றாது அல்லது நீங்கள் அதைக் கேட்டுவிட்டு ஒருவேளை நகைக்கலாம். உபாகமம் 23ஆம் அதிகாரம் 13ஆம் வசனம். “உன் ஆயுதங்களோடே ஒரு சிறுகோலும் உன்னிடத்தில் இருக்கக்கடவது; நீ மலஜலாதிக்குப் போகும்போது, அதினால் மண்ணைத் தோண்டி, மலஜலாதிக்கிருந்து, உன்னிலிருந்து கழிந்துபோனதை மூடிப்போடக்கடவாய்.” ”உன்னுடைய வீட்டில் சின்னச்சின்ன வேலைகள் செய்வதற்காக சில ஆயுதங்கள் வைத்திருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக ஆணி, திருகாணி, அரிவாள், ஸ்குரு டிரைவர், டெஸ்டர், சுத்தியல். இந்த ஆயுதங்களோடு இன்னொரு ஆயுதமும் வைத்துக்கொள். அது என்ன? ஒரு சிறு கோல். எதற்காக? நீ மலஜலாதிக்குப் போகும்போது அதனால் மண்ணைத் தோண்டி, மலஜலாதிக்கிருந்து, உன்னிலிருந்து கழிந்துபோனதை மூடிப்போடக்கடவாய்.”
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்குமுன்தோன்றிய மூத்தகுடி என்று சொல்லப்படுகிற இந்த நாடு, உலகத்தின் எல்லா நாகரிகங்களுக்கும் நாகரிகத்தை கற்றுக்கொடுத்ததாகச் சொல்லப்படுகிற இந்த நாடு, உபாகமம் 23:13யை மட்டுமாவது தேவனிடத்திலிருந்து கற்றுக்கொள்ளுமென்றால் இந்த நாடு எவ்வளவோ சுகாதாரமான, செழிப்பான, வளமான, நோயற்ற நாடாக இருக்கும்! இந்த உலகத்திலேயே திறந்த வெளிக் கழிப்பறைகள் அதிகமாக உள்ள நாடு இந்தியாதான்.
வேதாகமம் தேவனுடைய வார்த்தை என்பதற்கு நிரூபணம் என்ன? நான் பெரிய அறிவியல் உண்மைகளையோ, புவியியல் உண்மைகளையோ நிரூபணமாகக் கொடுக்கப்போவதில்லை. தேவன் மனிதனுடைய மிக உள்ளான ஆரோக்கியத்தைப்பற்றி மட்டும் பேசவில்லை: அவர் மனிதனுடைய மிகப் புறம்பான ஆரோக்கியத்தைப்பற்றியும் பேசுகிறார். காரணம் என்னவென்றால் பாளயம் கர்த்தருடையது; எல்லா மனிதர்களுடைய சுகத்தைக்குறித்தும் அக்கறையாக இருக்க வேண்டும். அது அற்ப காரியமாக இருக்கலாம்.
தேவனுடைய மக்கள் கழிப்றையைப் பயன்படுத்தும்போது, ’இங்கு வரும் மக்கள் தேவனுடைய மக்கள், இது தேவனுடைய வீடு” என்பதை நம்மிடையே வருகிறவர்கள் இனங்கண்டு கொள்வார்கள். இதைக்குறித்து நாம் பேசலாமா, பேசக்கூடாதா? ஆ! சீனாய் மலையிலே தேவன் இதைப் பேசினாரென்றால் இந்தச் சாதாரண சென்னை மாநகரத்திலே நாம் இதைப் பேசுவது அதைவிட அதிக அவசியம். கழிவறையை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம்; அதைத் தண்ணீர் விட்டு எப்படி அலசுகிறோம் என்பதெல்லாம் காரியம். நாம் இன்னும் பல்வேறு வீடுகளிலே கூடி வரவேண்டியிருக்கலாம். மிகச் சிறிய அறையிலே, காற்றோட்டம் இல்லாத ஓரிடத்தில் கூடிவரவேண்டியிருக்கலாம். அப்போது நம்மிடையே எந்தப் புகாரும் இருக்கக்கூடாது. அங்கு போதுமான மின்விசிறிகள் இல்லாமல் போகலாம்; அந்த அறையில் போதுமான ஜன்னல்கள் இல்லாமல் போகலாம். நம் பக்கத்தில் வந்து அமர்கின்ற அருமையான தேவனுடைய மக்களிடமிருந்து துர்நாற்றம் வீசலாம். அப்போது, “இந்த நாற்றத்தையெல்லாம் பொறுத்துக்கொண்டு நான் இங்கே இருக்கிறேன்,” என்பதுபோல பாவனை ஒரு நாளும் நாம் கொடுக்கக்கூடாது.
ஈவெரா பெரியாரைப்பற்றி நான் ஒரு காரியம் கேள்விப்பட்டிருக்கிறேன். அவரும் அவருடைய துணைவியார் மணியம்மையும் ஓரிடத்திற்குப் போகிறார்கள். அவர்களுக்கு அங்கு சாப்பாடு பரிமாறுகிறார்கள். மணியம்மை சாப்பாட்டை ஒதுக்கிவைத்து விடுகிறார். என்ன காரணம் என்று பெரியார் கேட்கும்போது அந்த இடம் நாற்றம் அடிக்கிறது என்று மணியம்மை சொல்லுகிறார். அப்போது இராமசாமி அவரைக் கடிந்துகொண்டு, “மரியாதையா நீ சாப்பிடணும்,” என்று சொல்லுகிறார்.
எல்லாரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாமா, கற்றுக்கொள்ளக்கூடாதா? “இல்லங்க, நாங்க கிறிஸ்தவர்களிடமிருந்து மட்டும்தான் கற்றுக்கொள்வோம்,” என்றால், நாம் நிறைய கிறிஸ்தவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவே முடியாது அல்லது தவறான காரியங்களை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். “நீ எறும்பினிடத்தில் போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்” (நீதி. 6:6) என்று வேதம் சொல்லுகிறது. அது என்ன பரிசுத்த ஆவியினுடைய அபிஷேகத்தை பெற்ற எறும்பா?
அருமையான பரிசுத்தவான்களே, தேவனுடைய மக்களைப்பற்றிய, மற்றவர்களைப்பற்றிய அக்கறை நம்முடைய இருதயத்தில் எப்போதும் இருக்க வேண்டும். உபாகமத்திலே இன்னும் நிறைய இருக்கிறது. “நீ வயலில் அறுவடை செய்யும்போது கீழே விழும் தானியங்களைப் பொறுக்காதே; அதை அங்கங்கே ஏழைகளுக்கு விட்டுவிடு. கொஞ்சம் சிந்த விட்டுவிட்டு வா.” கூலிக்காரர்களிடம் கறாராக நடக்க வேண்டாம். ஒரு ரூபாய், 10; ரூபாய், 20 ரூபாய் போகட்டும்; விட்டுவிடுங்கள்.
தேவனுடைய மக்கள் செருப்புகளை வெளியே அடுக்கிவைப்பதைக்குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால், நான் சொல்வேன்: நம்மிடையே வருகின்ற புதியவர்கள் முதலாவது நாம் செருப்புகளை எப்படிப் போட்டிருக்கிறோம் என்பதைப் பார்ப்பார்கள். நாம் நாற்காலிகளை எப்படி போட்டிருக்கிறோம்? நம்முடைய கழிவறை எப்படி இருக்கிறது? ஆயிரம்பேர் சபைக்குப் போவார்கள், வருவார்கள். ஆனால், அங்கிருக்கும் கழிவறையைப் பார்த்தால் அவ்வளவு நாற்றமடிக்கும்.
இருக்கிற இடத்திலே மிகவும் அசௌகரியமான இடம் எங்கிருக்கிறதோ அங்கேதான் நம்முடைய செருப்பைப் போட வேண்டும். அப்படிப் போடும்போது உதறிப் போட்டுவிட்டுப் போடக்கூடாது. ஒழுங்காக அடுக்கிவைக்க வேண்டும். இன்னொரு காரியம்; நமக்குப்பின் வருகிற தேவனுடைய மக்கள் அல்லது இப்போதுதான் கிறிஸ்துவுக்குள் இளையவர்களாயிருக்கிற தேவனுடைய மக்களுக்கு சௌகரியமான இடத்தைக் கொடுக்க வேண்டும்.
நான் சமீபத்தில் மதுரைக்குப் போயிருந்தேன். ஒருவர் ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட்டைப்போல சபையைக் கட்டி வைத்திருக்கிறார். அங்கு லேவியர்கள், ஆசாரியர்கள் எல்லாம் வந்து பலிபீடத்தில் நின்று ஒவ்வொருவரும் பல காரியங்களைச் செய்கின்றார்கள். ஒருவர் கின்னரம் வாசிக்கிறார்; இன்னொருவர் யாழ் வாசிக்கிறார். வேறொருவர் இன்னொரு இசைக்கருவி வாசிக்கிறார். ட்ரம்ஸ் அடிக்கிறதற்கென்றே ஒரு தனி அறை கட்டி வைத்திருக்கிறார்கள். வெளியே இருந்து வருகிற சத்தம் ட்ரம்ஸ் அடிக்கிறவருடைய கவனத்தைத் திசைதிருப்பிவிடக்கூடாதாம். தாவீது தேவாலயத்திலே பாடுவதற்கு பாடகர்களையும், ஆடகர்களையும் கின்னரக்காரர்களையும் நிறுத்தினதுபோல எல்லாம் சரியாக இருக்கிறது. நான் சொல்கிறேன்: தேவன் முதலாவது அங்கெல்லாம் வந்து ஆய்வுசெய்யமாட்டார். தேவன் முதலாவது எங்கே போய் ஆய்வு பண்ணுவார்? முதலாவது அவர் கழிவறைக்குப் போவார். “இந்த அறையில் சேவிப்பதற்கு நீங்கள் எத்தனைபேரை நியமித்திருக்கிறீர்கள்,” என்று அவர் கேட்பார். ஏனென்றால், “ட்ரம்ஸ் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தால் நமக்கு ஒன்றும் பெரிய நட்டம் ஆகிவிடாது. ஆனால், கழிவறை கொஞ்சம் முன்னே பின்னே இருந்தால் தேவனுடைய மக்களுக்கு அங்கேயிருந்து நிறைய நோய்க்கிருமிகள் போகும், நோய்கள் வரும். எனவே பத்து ஊழியக்காரர்களை நீ அதற்கென்று நியமி. பாடுவதற்கு அங்கு இரண்டு பேரைக் குறைத்துக் கொள்வோம்.”
நான் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதாக நீங்கள் நினைக்கிறீர்களா அல்லது இதுதான் தேவனுடைய வார்த்தையா? உங்கள் மனச்சாட்சியைத் தொட்டு நீங்கள் பதில் சொல்லுங்கள். நாம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த மாதிரியெல்லாம் பேசுகிறோமா? இல்லை. மிகவும் முக்கியமாக நாம் வீடுகளில் கூடிவரும்போது இவைகளைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இரண்டாவது, நம்முடைய தேவைகளைக் குறைத்துக்கொண்டு, சுருக்கிக்கொண்டு, மற்றவர்களுக்கு நாம் பகிர்ந்துகொடுக்க வேண்டும். இதுவரை, நாம் பகிர்ந்துகொடுக்க வேண்டும் என்று நாம் சொல்லியிருக்கிறோம். ஒருவரோடொருவர் பகிர்ந்துகொள்வது. மற்றவர்களுக்கு நாம் பகிர்ந்துகொடுக்க வேண்டுமென்றால் நம்முடைய தேவைகளை நாம் குறைத்துக்கொள்ள வேண்டும், சுருக்கிக்கொள்ள வேண்டும் என்று நாம் இதுவரை சொன்னதில்லை. ஒரு ரொட்டிதான் இருக்கிறது; பத்துபேர் சாப்பிட வேண்டும். ஆளுக்கு ஒரு துண்டுதான் வரும் என்றால், நான் என்னுடைய தேவையை குறைத்துக்கொண்டு பாதி துண்டுதான் நான் சாப்பிட வேண்டும். “என்னங்க இது! இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை வாழ்ந்தால் நாம் ரொம்ப சந்நியாசிமாதிரி வாழ வேண்டும் போலிருக்குதே!” என்று நினைக்கத்தோன்றும். நாம் சந்நியாசியாய் வாழ வேண்டாம்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் போஜனப்பிரியன் என்று சொன்னார்கள். எனவே, நாம் எல்லாரும் இந்தக் காரியத்தில் நம் கர்த்தரை பின்பற்ற வேண்டும் என்று நினைக்கலாம். ஆனால், “நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை,” என்று சொன்னாரே! அவர் பசியுள்ளவராய் இருந்தார்; களைப்படைந்தவராய் இருந்தார். அவருடைய பசியைக்குறித்தோ, களைப்பைக்குறித்தோ மக்கள் எப்போதாவது அக்கறைப்பட்டார்களேதவிர பலவேளைகளில் அவரைப்பற்றி அக்கறைப்படுவதற்கு யாரும் இருந்ததில்லை. ஏசாயா 53ஆம் அதிகாரத்தை நீங்கள் ஆயிரம்முறை வாசியுங்கள்.* ’“அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாய் இருந்தார். அவரைவிட்டு நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்” *(ஏசாயா 53:3). இதன் பொருள் என்னவென்றால், அவர் நமக்காகப் பாடநுபவித்தார்; பாடு நிறைந்தவரும் துக்கம் அனுபவித்தவருமாய் வாழ்ந்தார்; ஆனால், நாம் அவரைப்பற்றி ஒன்றும் யோசித்துப்பார்க்கவில்லை. இந்த வழியில் நடக்கிறவன் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினுடைய சீடன்; அவன் உண்மையாகவே கிறிஸ்துவால் வாழ்கிறவன்; பரிசுத்த ஆவியின்படி வாழ்கிறவன். ஏசாயா 53ன்படி வாழ்ந்த நம்முடைய கர்த்தருடைய அடிச்சுவடுகளில் நாம் நடப்பதற்காக தேவனே காரியங்களை ஒழுங்குசெய்வார். பிறர் நம்மை எண்ணாமல் போக வேண்டும். அந்தப் பிறரில் நம்முடைய மனைவி மக்கள் இருப்பது மிக மிகச் சிறந்த ஆசீர்வாதம். ஆமென்! “இது மிகக் கடினமான உபதேசம்; இதை நாம் பின்பற்ற முடியாது” என்று ஒருவேளை நீங்கள் சொல்லலாம். அவர் சொல்கிறார்: முடிந்தால் பின்பற்றுங்கள்; அதனுடைய ஆசீர்வாதத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள்.
1 கொரிந்தியர் 11ஆம் அதிகாரம் 33ஆம் வசனம் பந்தியைப்பற்றிய வசனம். “ஆகையால் என் சகோதரரே, நீங்கள் போஜனம்பண்ணக் கூடிவரும்போது ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள்”. நான் இன்றைக்குச் சொல்லுகிற, பகிர்ந்துகொள்ளுகிற, எல்லா வசனங்களுமே மிகவும் சர்வ சாதாரணமான வசனங்களாகத் தோன்றும். 1 கொரிந்தியர் 11ஆம் அதிகாரத்தின் சாராம்சம் கர்த்தருடைய பந்திக்கூட்டத்தைப்பற்றியது. அதைப் பலர் மிகவும் பரவசப்பட்டு வாசிப்பதை நான் கேட்டிருக்கிறேன். பிரத்தியேகமான ஒரு தொனியில் அதை வாசிப்பார்கள்.
அந்தப் பத்தியின் சாராம்சம் என்ன? “நீங்கள் சாப்பிடுவதற்காகக் கூடிவரும்போது ஒருவருக்காகவொருவர் காத்திருங்கள்.” நம்முடைய சகோதரர்கள் சாப்பிடட்டும். ரொம்ப முக்கியமாக குழந்தைகள் முதலாவது சாப்பிடட்டும். தாய்மார்கள் முதலாவது சாப்பிடட்டும். பிள்ளைகளை வைத்திருக்கிற தாய்மார்கள் சாப்பிடட்டும். வயதானவர்கள் சாப்பிடட்டும். பிள்ளைகளை வைத்திருக்கிற தாய் தகப்பன் சாப்பிடட்டும். ஏனென்றால் இரண்டு சிறு பிள்ளைகளை வைத்திருக்கிறவர்களுடைய உழைப்பு மிகவும் அதிகம். அவர்களுக்கு இளைப்பாறுதல் இருக்காது. கூடுமானால் அந்தப் பிள்ளைகளை நாம் வைத்துக்கொண்டு சோறு ஊட்டுவோம். முடியவில்லையா அவர்கள் சாப்பிட்டு முடிக்கட்டும். 1 கொரிந்தியர் 11:33யின் விளக்கத்தை நான் சொல்கிறேன். “நீங்கள் போஜனம்பண்ணுவதற்காக கூடி வரும்போது ஒருவருக்காகவொருவர் காத்திருங்கள்.” சாப்பிடும்போது ஒரேவொரு தடவை கரண்டியால் எடுக்க வேண்டும். ஆழமாகப் போடக்கூடாது. ஒரு தடவை போட்டு என்ன வருகிறதோ அதுதான் பரத்திலிருந்து நமக்குக் கொடுக்கப்பட்டது. இதற்கு மிஞ்சினது மாம்சத்தினால் உண்டானதாயிருக்கும். ஏனென்றால், தங்களுக்கு ஊறுகாய் வைக்கவில்லை என்பதற்காக ஐக்கியத்தைவிட்டுப் பிரிந்துபோன பரிசுத்தவான்கள் உண்டு. “நான் குடிப்பதற்கு பாயாசம் கிடைக்கவில்லை,” என்பதற்காக மனம் நொந்துகொள்கிற பரிசுத்தவான்கள் இருக்கலாம். பரிசுத்தவான்கள் பரிசுத்தவான்கள்தான். இவைகளைச் செய்வதினால் அவர்கள் பரிசுத்தவான்கள் இல்லை என்று நீங்கள் கணிக்க வேண்டாம். ஏன்? 1 கொரிந்தியர் 11 பரிசுத்தவான்களைப்பற்றித்தானே பேசுகிறது. அடிமைகளாக உள்ள பரிசுத்தவான்கள் வருவதற்கு முந்தியே கொஞ்சம் பணக்காரப் பரிசுத்தவான்களெல்லாம் சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். “அவன் என்ன அடிமைதானே! நம்ம சாப்பாட்டை அவன் என்ன சாப்பிடுவது! அவசியமில்லை; ஒவ்வொருநாளும் நம்ம சாப்பிடுகிற சாப்பாட்டையா சாப்பிடுகிறான் அவன்!” பரிசுத்த ஆவியானவர் பவுலின்மூலமாய் அதைத் திருப்புகிறார். “இல்லை; உன் தேவையை நீ சுருக்கிக்கொள்.”
பாயாசம், ஸ்வீட் இருக்கிறதென்றால் மிகவும் கட்டுப்பாட்டோடு நாம் எடுக்க வேண்டும். ஏனென்றால், அது எல்லாரும் விரும்பக்கூடிய ஒன்று. என் தேவையை நான் சுருக்கிக்கொள்ள வேண்டும். “பிரதர், அப்படின்னா சாப்பிடவே முடியாது போலிருக்கிறதே! நீங்க சொல்றதைப் பார்த்தால் சாப்பிடவும் செய்ய வேண்டும்; ஆனால், கட்டுப்பாட்டோடு சாப்பிட வேண்டும். இது கஷ்டம் பிரதர்,” என்று நீங்கள் சொல்லலாம். இது மிகவும் முக்கியம். சில சமயங்களில் உபவாசம் இருப்பது எளிது. ஆனால், சாப்பாட்டைக் குறைத்து சாப்பிடுவது கடினம். “ஆண்டவரே, இது பெரிய துன்பமாக இருக்கிறதே!” என்று அங்கலாய்க்கிறீர்களா? தேவனுடைய மக்களுக்கு அதிகமாய்க் கொடுப்போம்.
இடம் குறைவாக இருக்கிறதென்றால் நம் தேவையை குறுக்கிக்கொண்டு மறறவர்களுக்குக் கொடுக்க வேண்டும். இன்று இடம் இருக்கிறது என்பதற்காக வசதியாக உட்கார்ந்திருக்கிறோம். இடம் வசதியாக இல்லையென்றால் என்ன செய்ய வேண்டும்? நாம் இடத்தை விட்டுக்கொடுக்க வேண்டும்.
நான் ஒரு தடவை ஒரு மாநாட்டுக்குப் போயிருந்தேன். ஒரு நீண்ட அரங்கத்தில்தான் சகோதரர்களெல்லாம் படுத்திருந்தார்கள். நானும் அங்குதான் படுத்திருந்தேன். நிறைய கூட்டம். இரவு முழுவதும் ஒரே பக்கமாகப் படுக்க முடியவில்லை? தூக்கத்தில் இராத்திரி கொஞ்சம் சாய்ந்து படுத்தேன். ஒருக்களித்துப் படுத்ததுதான் பாக்கி; அதற்குப்பிறகு திரும்ப என் பழைய நிலைக்குத் திரும்புவதற்கு இடமில்லை. ஏன்? நான் திரும்பிப் படுத்தவுடன் அந்த இடத்தில் இன்னொரு சகோதரன் படுத்துக்கொண்டார். உடனே காலையிலே எழுந்து, “நான் கர்த்தருக்காகப் பெரிய பாடு அநுபவித்தேன்,” என்றெல்லாம் சொல்லக்கூடாது.
ஏனென்றால், மிக வசதியான இடத்தை அமைத்துக் கொள்ளவேண்டிய இந்த உலகத்தின் அரசர், “நரிகளுக்குக் குழிகள் உண்டு; ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகள் உண்டு. மனிதகுமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை,” என்று சொன்னார், வாழ்ந்தார். “ஒரு பெரிய அறை இருக்க வேண்டும்; அதில் இரண்டு பெரிய ஜன்னல்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் ஐயாவுக்கு உறக்கம் வரும். இல்லையென்றால் உறக்கம் வராது,” என்ற நிலை இருக்கக்கூடாது.
மும்பை தாராவியிலே மூன்றரை வருடங்கள் வாழ வேண்டும். மூன்றரை வருடமும் மனரம்மியமாய் வாழ்வோமென்றால் நாம் உண்மையிலேயே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் அடிச்சுவட்டில் நடப்பதற்கு ஆயத்தமாகியிருந்திருப்போம். அங்கு பொதுக் கழிப்பிடம்தான் இருக்கும். கழிவறைக்குச் செல்வதற்கு வரிசையில் நிற்க வேண்டும். நாம் 5 நிமிடத்திற்குமேல் எடுத்துக்கொண்டால் வெளியே இருப்பவர்கள் சத்தம் போடுவார்கள்.
நாம் ஐம்பதுபேர் ஒரு மாநாட்டுக்குப் போயிருக்கும்போது அங்கு ஒரேவொரு கழிப்பறைதான் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த உலகத்து மக்கள் அதற்காக மனம் வருந்தக்கூடும். ஆனால், தேவனுடைய மக்கள் அப்படி இருக்கக்கூடாது. “பிரதர், ஐம்பதுபேர் கூடிவரவேண்டுமானால் அதற்கேற்ற ஏற்பாடுகளைச் செய்ய வேண்டாமா? இரண்டு மூன்று கழிப்பறையாவது வேண்டாமா?” என்று நீங்கள் கேட்கலாம். அது உண்மைதான். ஆனால், கூட்டத்தை ஏற்பாடு செய்பவர்களால் இரண்டு அல்லது மூன்று கழிப்பறை வசதிகளோடு ஓர் இடத்தை ஆயத்தம்பண்ண முடியுமா முடியாதா என்பது அவர்களுக்கு வைக்கப்படுகிற பரீட்சை. எனக்கு வைக்கப்படுகிற பரீட்சை என்னவென்றால் ஒரு டாய்லட்தான் இருக்கிறது. எனக்கு 2 நிமிடம்தான் கிடைக்கும். அதற்காக நான் காத்திருந்துதான் போக வேண்டும் என்பது எனக்கு வைக்கப்படுகிற பரீட்சை. அது பரீட்சை அல்ல. அது நான் என் தேவையைச் சுருக்கிக்கொள்வது.
அருமையான பரிசுத்தவான்களே, உபாகமம் 6:27யை நீங்கள் வாசியுங்கள். இன்னொருவர் எண்ணாகமம் 20:17யை வாசியுங்கள். “நாங்கள் உமது தேசத்தின் வழியாய்க் கடந்துபோகும்படி உத்தரவு கொடுக்கவேண்டும். வயல்வெளிகள் வழியாகவும், திராட்சத்தோட்டங்கள் வழியாகவும் நாங்கள் போகாமலும் துரவுகளின் தண்ணீரைக் குடியாமலும் ராஜ பாதையாகவே நடந்து, உமது எல்லையைக் கடந்துபோகுமட்டும், வலதுபுறம் இடதுபுறம் சாயாதிருப்போம் என்று உமது சகோதரனாகிய இஸ்ரயேல் சொல்லி அனுப்புகிறான் என்று சொல்லச்சொன்னான்.” சீகோன் நாட்டின் வழியாக இஸ்ரயேல் மக்கள் கடந்துபோக வேண்டியிருக்கிறது. எவ்வளவு ஒரு தாழ்மையான வேண்டுகோளை மோசே அந்த சீகோனின் ராஜாவுக்கு சொல்லுகிறான் பாருங்கள். “நாங்கள் வயல்கள் வழியாகப் போகமாட்டோம்.” ஆறு லட்சம்பேர் வயல் வழியாகப்போனால் எப்படி இருக்கும்! வயல் போர்க்களமாக மாறிடும். ஆறு லட்சம் பேர் திராட்சத்தோட்டம் வழியாயக் கடந்துபோனால் அவர்கள் கடந்துபோனபிறகு திராட்சத்தோட்டத்திலே ஒரு திராட்சை இருக்காது. ஆனால், மோசே சொல்கிறான்: நாங்கள் வயல்கள் வழியாக நடந்து போகமாட்டோம்; உங்களுடைய திராட்சத்தோட்டம் வழியாகப் போகமாட்டோம். நீர் இரண்டு கோடு போட்டால் இடது பக்கத்திலோ வலது பக்கத்திலோ இறங்கவே மாட்டோம். இராஜபாதை வழியாக, அதாவது நெடுஞ்சாலை வழியாக மட்டுமே நாங்கள் போவோம். எங்கேயாவது கிணற்றைப் பார்த்தால் நாங்கள் போய் தண்ணீரை எடுத்துக்கொள்ள மாட்டோம். நாம் நினைக்கலாம்: தண்ணீர்தானே. தண்ணீர் ஒரு பெரிய காரியமா? தண்ணீரைப்பற்றி ஒன்று சொல்கிறான்: உங்கள் துரவுகளை நாங்கள் தொடமாட்டோம். ஏனென்றால், எல்லாரும் போய் தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்? “நாங்கள் இந்தப் பாதை வழியாய்க் கடந்துபோவதற்கு இடங்கொடும்.”
நாம் எந்த அளவுக்கு அனுபவிக்கலாம், நுகரலாம், எடுத்துக்கொள்ளலாம் என்று தேவன் நமக்கு எல்லைக்கோடுகளை வகுக்கிறார். அதை எந்த அளவுக்குக் குறைக்க முடியுமோ அந்த அளவுக்குக் குறைத்துக்கொள்ள வேண்டும். உபாகமம் 2:6: “போஜனபதார்த்தங்களை அவர்கள் கையிலே பணத்திற்கு வாங்கிப் புசித்து, தண்ணீரையும் அவர்கள் கையிலே பணத்திற்கு வாங்கிக் குடியுங்கள்.” சேயீர் என்கிற நாடு ஏசாவினுடைய நாடு. ஆண்டவர் சொல்கிறார். இந்த நாட்டை, சேயீர் நாட்டை, நான் ஏசாவினுடைய புத்திரருக்குக் கொடுத்திருக்கிறேன். அதனால் நீ அவர்களிடத்தில் உணவையும், தண்ணீரையும் காசு கொடுத்துதான் வாங்கவேண்டும். அவர்களை நீ பயமுறுத்தக் கூடாது.
உணவு தண்ணீர் எல்லாவற்றையும் நான் எடுத்துக்காட்டாகச் சொல்கிறேன். தேவன் எல்லாவற்றையும் தம்முடைய பிள்ளைகளுக்குச் சுருக்கித்தான் கொடுக்கிறார். “நான் உன்னை ஆசீர்வதிப்பேன்,” என்பதற்காக இடதுபுறம், வலதுபுறம், நடுவில் என்று மனம்போன போக்கிலே போகக்கூடாது. நாம் தண்ணீரைக் குடிக்கும்போது மிச்சம் வைக்கக்கூடாது. எவ்வளவு தண்ணீர் வேண்டுமோ அவ்வளவு தண்ணீர்தான் எடுக்க வேண்டும். தண்ணீர் சிந்தக்கூடாதென்று நான் சொல்லவில்லை. ஏன் சிந்துகிறது? அதை அந்த விளிம்புரை தண்ணரை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை. விளிம்புக்கு ஒரு சென்டிமீட்டர் கீழேயே நிரப்பிக்கொள்ளலாம்.
ஒரு பொறியியல் கல்லூரியில்water dispenser வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டிலுள்ள அதிபுத்திசாலிகள் படிக்கிற கல்லூரி இது. அவர்கள் தண்ணீர் குடிக்கிற இடத்தைப் பார்த்தால் அசிங்கமாக இருக்கும். அந்த இடம் முழுவதும் ஈரமாக இருக்கும். ஆவிக்குரிய அறிவுக்கூர்மை அவர்களுக்குச் சுத்தமாக இல்லை. அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆவிக்குரிய மதிநுட்பம், அறிவுக் கூர்மை இருக்குமென்றால் அந்த இடம் சுத்தமாக இருக்க வேண்டும். மோசே சொல்கிறார்: நாங்கள் தண்ணீரை உங்களிடத்தில் வாங்குவோம். ஆனால், காசு கொடுத்துத்தான் தண்ணீரை வாங்கிக் குடிப்போம்.
பிலிப்பியர் 4:10, 11 நமக்குத் தெரியும். அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார். “எந்த நிலைமையிலிருந்தாலும் நான் மனரம்மியாயிருக்கக் கற்றுக்கொண்டேன்.” கொஞ்சம் தண்ணீரைச் சுருக்குவதால், கொஞ்சம் உணவைச் சுருக்குவதால், “எப்படா வீட்டுக்குப் போய் ஒரு முழுக் கோழியைச் சாப்பிடலாம் என்று ஆவலோடே காத்திருக்கிறேன்,” என்று சொல்லவேண்டிய அவசியமில்லை. ஆனால் அப்போஸ்தலனாகிய பவுல் நமக்கு அப்படிப்பட்ட ஒரு சாக்குப்போக்கைக் கொடுக்கிறார். “புசிப்பதற்கும் குடிப்பதற்கும் உங்களுக்கு வீடுகள் இல்லையா? அப்படி சாப்பிடனும்னா நீ வீட்டிலே போய் நல்லா மனமாற, வயிறாற நீ சாப்பிட்டுக்கோ” என்றுகூடச் சொல்கிறார். ஆனால், தேவனுடைய மக்களாகிய நாம் அப்படி இருக்கக்கூடாது. ரசம்தான் இருக்கிறதென்றால் கொஞ்சம் புகழ்ந்து சொல்வோம். “இந்த மாதிரி ரசத்தை எங்க பார்க்க முடியும்! சூடான சோறு, ரசம்; இதைப்போல சுவையான உணவு என்ன உண்டு!” என்று பாராட்டி அதை நாம் சாப்பிடுவோமாக.
உங்களுக்கு வீட்டுப்பாடமாக, பிலிப்பியர் 4:10; 2 கொரிந்தியர் 8:2; 2 கொரிந்தியர் 9:6, 8 ஆகியவைகளையெல்லாம் தருகிறேன்.
இந்தக் குறிப்பை முடிப்பதற்கு அப்போஸ்தலர் 20:35யைத் தருகிறேன். அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார்: எனக்காகவும் என்னோடுக்கூட இருந்தவர்களுக்காகவும் இந்த கைகளே வேலைசெய்து பிரயாசப்பட்டது. அப்படிப் பிரயாசப்பட்டு வாங்குவதைப்பார்க்கிலும் கொடுப்பதே பாக்கியம் என்று நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சொன்ன வார்த்தைகளை நினைவுகூறுகிறேன்.
மற்றவர்களைக் குறித்து அக்கறையும், கரிசனையும், எண்ணமும் உள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்று முதலாவது பார்த்தோம். இரண்டாவது, நம்முடைய தேவைகளைச் சுருக்கிக்கொண்டு மற்றவர்ளுக்கு நாம் பகிர்ந்தளிப்பது. மூன்றாவது, எடுப்பாரற்றுக் கிடக்கிற பொறுப்புகளை நாம் எடுத்துக் கொள்வது.
இதை நான் ஏற்கெனவே யோவான் 13ஆம் அதிகாரத்தில் குறிப்பிட விரும்பினேன். யார் சீடர்களுடைய கால்களைக் கழுவுவது? யார் கீழே விழுந்து கிடக்கிற குப்பையைப் பொறுக்குவது? இதற்கு யாரையும் நியமிக்கமுடியாது. “இது என்னுடைய பொறுப்பல்ல,” என்று கைகழுவிவிடுவது எளிது. ஆனால் நான் சொல்வேன் தேவனுடைய மக்கள் என்ற முறையிலே ஒரு நாளைக்குக் குறைந்தது நாம் பத்து தடவை குனிந்து நிமிர்வது நல்லது. ஒரு நாளைக்குப் பத்து தடவைகூட குனியவில்லையென்றால் அது நல்லதல்ல. அதுபோல இருந்த இடத்தைவிட்டு பத்து தடவை எழுந்திருப்பது நல்லது. நாம் ஒரே இடத்திலே இருந்துவிட்டோம் என்று வைத்துக்கொள்வோம். இருந்த இடத்திலிருந்தே மற்றவர்களை வேலை வாங்கிக்கொண்டிருப்போம். “அந்த மின்விசிறியைக் கொஞ்சம் போடு; அதை அணைத்துவிடு; கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா” என்று சொல்வது மிகவும் இயல்பாக வரும். “இதெல்லாம் ரொம்ப அதிகமாக இருக்குதே!”” என்று நீங்கள் கேட்கலாம்.
நாம் உட்கார்ந்திருக்கிறோம். அந்த பக்கம் போகிற சகோதரனிடம், “சகோதரனே அந்தக் கோப்பையைக் கொஞ்சம் எடுத்துக்கொண்டு வாருங்கள்,” என்று சொல்ல வேண்டாம். நான் உங்களுக்கு ஆலோசனையாக சொல்கிறேன் தயவுசெய்து அப்படிச் சொல்ல வேண்டாம். ஒருவர் அந்த பக்கமாய்ப் போனால்கூட பரவாயில்லை; நாமே போய் அந்தக் கோப்பையை எடுத்துக்கொண்டு வருவோம். நம்முடைய உடலுக்கு ஒரு நல்ல பயிற்சியைத் தரும்.
யார் அவருடைய கால்களைக் கழுவுவது?. தேவனுடைய வீட்டிலே அல்லது நம்முடைய உறவுகளிலே பல பொறுப்புகள் “உன்னுடையதா, என்னுடையதா, யாருடையது” என்று யாரும் வரையறுக்க மாட்டார்கள். வரையறுக்க முடியாது. அப்படிப்பட்ட பொறுப்புகள் நூற்றுக் கணக்கில் வரும். உண்மையாகவே இது தேவனுடைய குடும்பம். இது தேவனுடைய வீடு. நேர்த்தியான தேவனுடைய வீடு என்றால் அப்படிக் கவனிப்பாரற்றுக் கிடக்கின்ற பொறுப்புகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கடிகாரம் ஓடாமல் இருக்கும். பத்து நாளைக்கு ஓடாமல் இருக்கும். கழிவறையில் குழாய் ஒழுகிக் கொண்டே இருக்கும். இதை யார் யாரிடம் சொல்வது? இந்தப் பொறுப்புகளுக்குத்தான் எடுப்பாரற்று அல்லது கவனிப்பாரற்றுக் கிடக்கிற பொறுப்புகள் என்று பெயர். நமக்குப் பல பொறுப்புகள் இருக்கின்றன. நம்முடைய பொறுப்புகள் தலைக்குமேல் போய் நமக்குச் சுமையாக அழுத்துகின்றது. உண்மையாகவே தேவனுடைய வீட்டில் இப்படிப்பட்ட பொறுப்புகளை எடுக்கின்ற தேவனுடைய மக்களுடைய எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
கடைசியாக நான் சொல்ல விரும்புவது எபேசியர் 4:;2; “நீங்கள் ஒருவரையொருவர் அன்பினால் தாங்குங்கள்.” அல்லது கலாத்தியர் 6யிலேகூட உண்டு. “அன்பினால் ஒருவருக்கொருவர் ஊழியம் செய்யுங்கள்.” ஒருவரையொருவர் தாங்கி என்றால் ஒருவரையொருவர் சுமருங்கள் என்று பொருள்.
உடனே, தேவனுடைய மக்கள் எல்லாரும் மற்றவர்களைக் குறித்து அக்கறையுள்ளவர்களாக இருப்பார்கள் என்றோ, உடனே தேவனுடைய மக்களெல்லாரும் தங்களுடைய தேவைகளைச் சுருக்கிக்கொண்டு மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிப்பார்கள் என்றோ, உடனே தேவனுடைய மக்களெல்லாரும் எடுப்பாரற்று, கவனிப்பாரற்று, கிடக்கின்ற பொறுப்புகளையெல்லாம் தங்கள்மேல் எடுத்துக்கொள்வார்கள் என்றோ எதிர்பார்க்க வேண்டாம். அவர்கள் வளரவளர எடுப்பார்கள். சிலர் கிறிஸ்துவுக்குள் பிள்ளைகளாக இருப்பார்கள்; அவர்கள் எடுக்கமாட்டார்கள்.
சிலர் கிறிஸ்துவுக்குள் வாலிபர்களாய் இருப்பார்கள்; அவர்கள் எடுக்கலாம். சிலர் கிறிஸ்துவுக்குள் தகப்பன்மார்களாக இருப்பார்கள் அவர்கள் எடுப்பார்கள். ஆனால், தேவன் என்ன எதிர்பார்ப்பார்? தேவனுடைய வீட்டிலே ஒரு சிலராவது தகப்பன்மார்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். யார் தகப்பன்மார்கள்? இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தகப்பன்மார்கள் அல்லது இப்படிப்பட்ட ஒரு வளர்த்தியை எட்ட வேண்டும் என்ற எண்ணமுடையவர்கள் தகப்பன்மார்கள். தேவனுடைய மக்களிடத்திலே குறைகள் இருக்கும்; சாகிறவரை இருக்கும். ஆனால், நாம் அடிக்கடி சொல்வதுபோல ‘அவர் யாக்கோபிலே குற்றம் காண்கிறது இல்லை.’ அவரைப் பொறுத்தவரை “யாக்கோபே உன்னுடைய கூடாரங்கள் எவ்வளவு அழகானவைகள்.”
நம் மனைவி, மக்களிடத்தில் குறைகள் இருக்கும். சகோதர சகோதரிகளிடம் குறைகள் இருக்கலாம். ஆனால், தேவனுடைய மனப்பாங்கான “யாக்கோபே உன்னுடைய கூடாரங்கள் எவ்வளவு அழகானவைகள்” என்பதும், “என் பிரியமே நீ ரூபவதி உன்னில் பழுதொன்றுமில்லை” என்பதுமே நம் மனப்பாங்காக இருக்க வேண்டும். இது நம் மனதில் ஆழமாகப் பதிய வேண்டும். எந்தப் பழுதுமில்லை. இவைகளெல்லாம் மிக சாதாரணமான பழுதுகள். “நீ கறுப்பாயிருந்தாலும் அழகாயிருக்கிறாய்.”
இவைகளெல்லாம் ஆங்காங்கே இருக்கின்ற ஒரு சில வசனங்கள் அல்ல. தேவனுடைய பார்வையிலே நாம் உண்மையிலேயே தேவனுடைய மக்கள். நாம் அவருக்கு அருமையானவர்கள்; விலையேறப்பெற்றவர்கள். அவருடைய குணம், அவருடைய உள்ளமைப்பு நம்மில் குறைவுபடலாம். நான் சொன்ன பெரிய பட்டியலிலே பல குறைகள் குறைச்சல்கள் இருக்கலாம். ஆனால் தேவனுடைய பார்வையிலே இவர்கள் அருமையானவர்கள். நாம் ஓர் இலக்கை அவர்களுக்கு முன்பாக வைக்கிறோம். இதை நோக்கி தேவனுடைய பிள்ளைகள் வளரமாட்டார்களா அல்லது நான் வளரமாட்டேனா, அதை நோக்கி நாம் போகமாட்டோமா என்று ஏங்குகிறோம். ஆனால், தேவனுடைய மக்களிடத்தில் அவர் எவ்வளவு பொறுமையோடு தாங்குகிறவராயிருக்கிறாரோ அதுபோல நாமும் பொறுமையோடு தாங்குகிறவர்களாக இருக்க வேண்டும். ஒருவேளை கடைசிவரை கவனிப்பாரற்று எடுப்பாரற்று கிடக்கின்ற பொறுப்புகளை நாம் செய்ய வேண்டியிருக்கிறதென்றால் நாம் தாராளமாய் செய்துவிடலாம். ஒருசிலர் அதனால் ஏவப்பட்டு தேவனுடைய வீட்டிலே அதே அடிச்சுவடுகளில் நடக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றால் உண்மையிலேயே தேவன் என்னுடைய வாழ்க்கையை கனம் பண்ணிவிட்டார் என்று பொருள்.
அருமையான பரிசுத்தவான்களே, சுருக்கமாகச் சொல்வதானால், தேவனுடைய வீட்டிலே நடக்கவேண்டிய வகை என்பது தேவனுடைய சபையில் மட்டுமல்ல தேவனுடைய சபையின் குறுவடிவமாகிய நம்முடைய குடும்பத்திலும் நாம் நடக்கவேண்டிய வகையைப்பற்றியது. இதை நாம் பலமுறை சொல்லியிருக்கிறோம் ஆனால் பலமுறைகள் நாம் நினைப்பூட்டவேண்டியிருக்கிறது.
முதலாவது, தேவனுடைய வீட்டினுடைய தலையாய பண்பு அன்பாக இருக்கவேண்டுமேதவிர கல்வி அல்ல. கல்வி இருக்க வேண்டும். ஆனால் தலையாய பண்பு அன்பு. 1. முதலாவது, நாம் மற்றவர்களைக் குறித்து எண்ணமும் அக்கறையும் கரிசனையும் உள்ளவர்களாக இருப்பது. 2. இரண்டாவது, நம் தேவைகளைக் குறைத்துக்கொண்டு, சுருக்கிக்கொண்டு, தேவனுடைய மக்களுக்குப் பகிர்ந்தளிப்பது. 3. மூன்றாவது, எடுப்பாரற்று அல்லது கவனிப்பாரற்று இருக்கின்ற பொறுப்புகளை நாம் எடுத்துக்கொள்வது. 4. நான்காவது, தேவனுடைய மக்களுடைய குறைகளையும், பலவீனங்களையும், தவறுகளையும், பிழைகளையும், வீழ்ச்சிகளையும் நாம் பொறுத்துக்கொள்வது. அது நம்முடைய மனைவியாக இருக்கலாம், கணவனாக இருக்கலாம், பிள்ளைகளாக இருக்கலாம், தேவனுடைய மக்களாக இருக்கலாம்.
இவைகளை நாம் செய்வோமென்றால் உண்மையாகவே தேவன் இங்கு இருக்கிறார் என்று அவர் மகிழ்ந்து வாசம்பண்ணத்தக்க தேவனுடைய குடும்பமாக நாம் இருப்போம். ஆமென்.