Transcribed and edited for clarity from a message spoken in July 2014 in Chennai
By Milton Rajendram
கிறிஸ்துவின் குணமே தேவனுடைய ஆசீர்வாதத்தின் ஆதாரம். எங்கு இயேசு கிறிஸ்துவின் குணம் காணப்படுகிறதோ, அங்கு தேவன் தம் ஆசீர்வாதத்தையும், நன்மையும் அருள முடியும், பொழிய முடியும், பெய்ய முடியும், வைக்க முடியும். தேவன் தம் ஆசீர்வாதத்தையும், நன்மையும் வைப்பதற்கு இயேசுகிறிஸ்துவின் குணம் ஓர் ஆதாரமாக, ஒரு தளமாக, இருக்கிறது.
வேதத்திலிருந்து நாம் பல்வேறு காரியங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். ஒருவேளை நாம் ஒரு உலகளாவிய நிறுவனத்தின் ஒரு பங்காக, ஒரு பகுதியாக, இருந்தால் நம் நிறுவனத்திற்கே உரிய சிறப்புப் போதனைகளும், உபதேசங்களும் இருக்கும். மற்ற நிறுவனங்களிலிருந்து நாம் எப்படி வேறுபட்டவர்கள் என்று நம்மை இனம்பிரித்துக் காண்பிப்பதற்காக அல்லது உயர்த்திக் காண்பிப்பதற்காக நம் நிறுவனத்திற்கே உரிய பிரத்தியேகமான போதனைகளையும், உபதேசங்களையும், “இப்படிப்பட்ட போதனைகளும், உபதேசங்களும் மற்ற நிறுவனங்களிலே காணப்படுவதில்லை; இங்கே மட்டும்தான் அவைகளைக் காணமுடியும்,” என்று அவ்வப்பொழுது நாம் உயர்த்திப் பேசவேண்டும். ஆனால், நாம் இப்படி ஒரு உலகளாவிய நிறுவனத்தின் பங்கோ, பகுதியோ அல்ல. நாம் கிறிஸ்துவின் சரீரம். கிறிஸ்துவின் சரீரம் இந்த உலகம் முழுவதும் எல்லாக் காலங்களிலும் இருக்கிறது என்பதை நாம் அறிவோம்.
தேவனுடைய மக்களாகிய நாம் பகிர்ந்துகொள்ளும்போது ஒன்றைக்குறித்து நாம் மிகவும் பாரப்படுகிறோம். உண்மையிலேயே தேவனுடைய மக்களுக்குப் பயனுள்ளது எது? வெறுமனே ஒரு ஞாயிற்றுக்கிழமை கூடுகையில் ஒரு செய்தி கொடுக்க வேண்டும் என்பதற்காக நாம் செய்திகளை அல்லது சாட்சிகளைக் கொடுத்துவிட்டுப் போய்விடக்கூடாது. உண்மையிலே தேவனுடைய மக்களுடைய வாழ்க்கைக்கு அது பயனுள்ளதாக இருக்க வேண்டும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோடு அவர்களுக்குள்ள உறவு பலப்பட வேண்டும். இந்தப் பூமியிலே அவர்கள் வாழ்கின்ற வாழ்க்கை தேவனுக்குப் பிரியமான வாழ்க்கையாக மாற வேண்டும். இவைகளுக்கு எது பயனுள்ளதாக இருக்கிறதோ அவைகளை மட்டுமே நாம் ஒருவரோடொருவர் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்.
தேவனுடைய மக்கள் எல்லா விதத்திலும் ஆசீர்வாதமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த விருப்பம் தேவனுடைய விருப்பத்தின் ஒரு எதிரொலி என்று நான் நம்புகிறேன். ‘எல்லா விதத்திலும்’ என்று நான் சொல்லும்போது பிரதானமாக தேவனுடைய மக்கள் இந்தப் பூமியிலே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் சாட்சிகளாக, அவருடைய குணத்தைப் பிரதிபலிக்கின்றவா;களாக, அவர் இந்தப் பூமியிலே எப்படி வாழ்ந்தாரோ அதே அடிச்சுவடுகளில் வாழ்கின்றவர்களாக இருக்க வேண்டும் என்பது நம் முதலாவது ஏக்கமும், தவிப்புமாக இருக்கிறது. இரண்டாவது, இந்தப் பூமியிலே தேவனுடைய மக்கள் நன்மைகளும், ஆசீர்வாதங்களும் நிறைந்த ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்று நான் ஏங்குகிறேன், தவிக்கிறேன். இந்த இரண்டாவது ஏக்கத்தையும், தவிப்பையும்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இதுவும் தேவனுடைய இருதயத்தின் விருப்பமும், ஏக்கமும்தான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா அல்லது அது அவ்வளவு ஒரு பொருட்டில்லையா? அவருக்கு அது ஒரு பொருட்டுதான். அது ஒரு பிரதானமான காரியம் இல்லையென்றாலும் அவருக்கு அது ஒரு பொருட்டுதான்.
இது உங்கள் மனதிலே நிற்க வேண்டும் என்பதற்காக நான் அதை மூன்று குறிப்புகளாகப் பிரித்துக்கொள்கிறேன். “இந்த மூன்று என்ற எண்ணிக்கையை எங்கிருந்து பிடித்தீர்கள்?” என்று நீங்கள் கேட்கலாம். எங்கிருந்தும் பிடிக்கவில்லை. இரண்டு என்பது மிகவும் குறைவான எண். நான்கு, ஐந்து குறிப்புகள் என்றால் நீங்கள் ஞாபகம் வைத்துக்கொள்ளமாட்டீர்கள். ஆகவே, மூன்று என்பது உதவியாக இருக்கும் என்பதற்காக இவ்வாறு வைத்திருக்கிறேன்.
நான் மூன்று குறிப்புகளை உங்களுக்குச் சொன்னேன். முதலாவது, கிறிஸ்துவின் குணமே காரியம். காரியம் என்றால் “All that matters is only the character of Christ”. இரண்டவாது, தேவனுடைய ஆசீர்வாதம் இக நன்மைகளையும், பர நன்மைகளையும் உள் ளடக்கியது. மூன்றாவது, தேவனுடைய ஆசீர்வாதத்தின் வழி சிலுவையின் வழி.
இந்த மூன்றும் உடனே விளங்காது என்று எனக்கு நன்றாய்த் தெரியும். ஆனால், உங்கள் மனதிலே நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக நான் முன்பே சொல்லிவிட்டேன். இப்போது இந்த மூன்றையும் சற்று விளக்குவதற்காக, நீங்கள் புரிந்துகொள்வதற்காக, சிறிது நேரம் நான் எடுத்துக்கொள்கிறேன்.
முதலாவது, நம்முடைய மனித வாழ்க்கை முடிவடையும்போது அல்லது இந்த மனித வாழ்க்கையிலும் சரி அல்லது மனித வாழ்க்கையின் முடிவிலும் சரி, இந்த யுகத்திலும் சரி அல்லது இந்த யுகம் முடிந்து இன்னொரு யுகம் வரும்போதும் சரி, தேவனுடைய பார்வையிலே ஒரேவொரு காரியம்தான் முக்கியமானது. தேவனுடைய பார்வையிலே ஒன்றேவொன்றுதான் தென்படும். மீதி எதுவும் தேவனுடைய பார்வையிலே தென்படாது. தேவனுடைய பார்வையிலே ஒன்றேவொன்றுதான் அருமையானது. வேறு எதற்கும் எந்த அருமையும் இல்லை. அது என்னவென்று கேட்டால் ஒரு மனிதனிடத்தில் அல்லது ஒரு சமுதாய மனிதனிடத்தில் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் குணம் எந்த அளவுக்கு உருவாக்கப்பட்டிருக்கிறதோ அது மட்டுமே தேவனுடைய பார்வையில் தென்படும்; அது மட்டுமே தேவனுடைய பார்வையில் மதிப்புள்ளது; அது மட்டுமே தேவனுடைய பார்வையில் அருமையானது. அதைத்தவிர வேறொன்றிலும் தேவனுக்கு ஈடுபாடோ, அக்கறையோ, விருப்பமோ, பொருட்டோ இல்லை. இதை நாம் பலமுறை சொல்லியிருக்கிறோம். ஆனால், எத்தனைமுறை சொன்னாலும், இதை நாம் புரிந்துகொள்ள வேண்டிய அளவிற்குப் புரிந்துகொள்வதில்லை என்பது என் கருத்து. ஆகையால், நான் “நாம் எல்லாரும் அறிந்திருக்கிறதுபோல” என்ற பதத்தைப் பயன்படுத்த விரும்பவில்லை.
ஒரு கால்பந்து விளையாட்டுப் பயிற்சியாளரைப்பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். கால்பந்து விளையாட்டில் பயிற்சியாளர்தான் மிக முக்கியமான ஆள். வெற்றியோ, தோல்வியோ அது அவரையே சாரும். மிகப் பிரபலமான ஒரு பயிற்சியாளர் இருந்தாராம். அவரிடத்தில் கொடுக்கப்பட்ட விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சியை ஆரம்பித்தபோது அவர் முதன்முதலாகச் சொன்ன வாக்கியம் என்ன தெரியுமா? கால்பந்தைக் கையில் வைத்துக்கொண்டு, “இது கால்பந்து,” என்று சொன்னாராம். பயிற்சிக்காக வந்திருந்த விளையாட்டு வீரர்களெல்லாம் ஏற்கெனவே பல ஆட்டங்களில் பங்கு பெற்றவர்கள்; நல்ல பயிற்சியும், தேர்ச்சியும் பெற்றவர்கள். கால்பந்து விளையாட்டைப்பற்றி அவர்களுக்கு எல்லாம் தெரியும். ஆனால், அவர் பயிற்சியை ஆரம்பிக்கும்போது, அந்தப் பந்தைக் காட்டி, “இது ஒரு கால்பந்து,” என்றுதான் சொல்வாராம். அதைக் கேட்கும்போது விளையாட்டு வீரர்களுக்கு எப்படியிருக்கும்? அதிலே ஒருவன், “பயிற்சியாளர் அவர்களே! இவ்வளவு கஷ்டமான பாடத்தை முதல் நாளிலேயே ஆரம்பிக்காதீங்க. நீங்க ரொம்ப வேகமாகப் போகிறீங்க. கொஞ்சம் மெதுவாகப் போங்க,” என்று ஜோக் அடிச்சானாம். இதற்குப் பெயர் கிண்டல். அதாவது, “இதோ பாருடா! சொல்ல வந்துவிட்டார்! இதற்கு பெயர் கால்பந்தாம்! பெரிய பாடம்பா!” என்று கிண்டல் செய்கிறானாம். “எதுவுமே இவர்களுக்குத் தெரிந்ததாகக் கருத வேண்டாம்,” என்பதுதான் அந்தப் பயிற்சியாளனுடைய பாணி.
அருமையான தேவனுடைய மக்களே! “கிறிஸ்துவின் குணம் மட்டுமே தேவனுடைய பார்வையில் காரியம் என்பதை நாம் பலமுறை கேள்விப்பட்டிருக்கிறோம்; ஆகவே, நமக்கு இது தெரியும்,” என்று நான் துணிந்து சொல்ல மாட்டேன். இதைப்பற்றி முதன்முதலாகப் பேசுவதுபோல் நான் பேசுகிறேன். நீங்களும் இதைப்பற்றி முதன்முதலாகக் கேள்விப்படுவதுபோல் கேளுங்கள்.
ஒருநாள் ஒரு வேதவல்லுநன் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவிடம் வந்து, “கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எது?” என்று கேட்டான். அதற்கு அவர், “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூருவாயாக…உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக,” என்று கூறினார். அவன் அதைப் புரிந்துகொண்டதற்கு அடையாளமாக, “சரிதான், போதகரே, நீர் சொன்னது சத்தியம். ஒரே தேவன் உண்டு. அவரைத்தவிர வேறோரு தேவன் இல்லை. முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப் பலத்தோடும் அவரிடத்தில் அன்புகூருகிறதும், தன்னிடத்தில் அன்புகூருகிறதுபோல் பிறனிடத்தில் அன்புகூருகிறதுமே சர்வாங்கதகனம் முதலிய பலிகளைப்பார்க்கிலும் முக்கியமாயிருக்கிறது,” என்றான். அவன் விவேகமாய் பதில் சொன்னதைக் கண்டு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மகிழ்ச்சியடைகிறார். ஏன் தெரியுமா? தேவனிடத்தில் முழு இருதயத்தோடும் அன்புகூர வேண்டும் என்றும், தன்னிடத்தில் அன்புகூருவதுபோல தன் அயலானிடத்திலும் அன்புகூர வேண்டும் என்று அவன் திரும்பச் சொல்லியிருந்தாலே போதும். ஆனால், அவன் மேற்கொண்டு ஒன்று சொல்கிறான். இதுதான் “சர்வாங்கதகனம் முதலிய பலிகளைப் பார்க்கிலும் முக்கியம்,” என்று சொல்கிறான். இதை அவன் சர்வாங்க தகனபலியோடு ஒப்பிடுகிறான். சர்வாங்க தகனபலியெல்லாம் ஒன்றும் பொருட்டல்ல. இதுதான் காரியம். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து கொதித்தெழுந்து, “இதோ பாரப்பா! சர்வாங்க தகனபலியைப்பற்றியெல்லாம் பேசாதே. நீ என்ன புரிந்துகொண்டாயோ, அதை மட்டும் சொல்லு. தேவனை முழு இருதயத்தோடு அன்புகூர வேண்டும். உன்னில் அன்புகூருவதுபோல் உன் அயலானிடத்திலும் அன்புகூர வேண்டும். இதைவிட்டுவிட்டு தேவாலயத்திலே செலுத்தப்படுகிற சர்வாங்க தகனபலிகளையெல்லாம் தாக்கி மட்டும் பேசாதே,” என்று அவர் சொல்லவில்லை. “அவன் விவேகமாகப் பதில் சொன்னான்,” என்றே கர்த்தர் சொல்கிறார். கர்த்தர் சொல்வதின் பொருள் என்ன? அவர் என்ன சொல்லுகிறார் என்றால், “பரவாயில்லையே! இந்த இரண்டு கட்டளைகளும் முக்கியம் என்று தெரிந்தது மட்டுமில்லை. எது முக்கியமில்லை என்றும் தெரிந்திருக்கிறானே!”
இது மாற்கு 12ஆம் அதிகாரத்திலே எங்கோ ஒரு மூலையிலே ஒளிந்து கிடக்கிற ஒரு வசனமல்ல. ஏசாயா 1ஆம் அதிகாரத்தில் நாம் இதைப் பார்க்கலாம். ஏசாயா இந்த வாலிபனுடைய முன்னோடி என்று சொல்லலாம். ஏசாயாவின் புத்தகத்தை அவன் நன்றாய் வாசித்திருக்கக்கூடும். “இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவர வேண்டாம்; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது. நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வுநாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச் சகிக்கமாட்டேன். உங்கள் மாதப்பிறப்புகளையும், உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது; அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது; அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன்” (ஏசாயா 1:13-14). “கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் சர்வாங்கதகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப் பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்” (1 சாமு. 15:22).
ஆக, “இது ஏதோ ஒரு புதிய ஏற்பாட்டு எண்ணம். பழைய ஏற்பாட்டிலே சர்வாங்க தகனபலிகள் முதலான பலிகளிலே அவர் ஆர்வமுள்ளவராய் இருந்தார். புதிய ஏற்பாட்டிலே தேவனுடைய ஆர்வம் மாறிவிட்டது” என்பதல்ல. அவர் என்றுமே இந்தப் பலிகளிலே ஆர்வம் கொண்டதில்லை. இந்தப் பலிகள் உண்மையான பலியாகிய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்னடையாளமும், நிழலும் என்கிற விதத்தில் மட்டும்தான் தேவனுக்கு ஆர்வமும், ஈடுபாடும் உண்டு.
“ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்,” (எபி. 13:15) என்று சிலர் வசனத்தை மேற்கோள்காட்டக்கூடும். விசுவாசிகள், “துதிகளின் மத்தியில் வாசம்செய்கிற தேவனே! ஆண்டவரே! உம்மைத் துதிக்கிறோம்! துதிக்கிறோம்! துதிக்கிறோம்! ஸ்தோத்திரம் ஆண்டவரே,” என்று கொஞ்சம் உணர்ச்சிபூர்வமாக, குரல் தழுதழுக்க, நாத்தழுதழுக்க சொல்லிவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா? ஒரு பாஸ்டர், “நீ துதிக்கும்போது உனக்குக் கண்ணீர் வரணும்யா. கண்ணீர் வரவில்லை என்றால் நீ சரியான அன்பு செலுத்தவில்லை,” என்று சொன்னதுண்டு. அதற்காக நான், “ஆண்டவரே! எனக்குக் கண்ணீர் வரமாட்டேங்குதே,” என்று ஜெபம் பண்ணியிருக்கிறேன். ஆனால், காரியம் அதுவல்ல. என்னமோ கண்ணீர்தான் பெரிய ஆயுதம்போலவும், அந்தக் கண்ணீரைப் பார்த்தவுடனே, “ஆ! இதற்குமேல் என்னால் பொறுக்க முடியாது. என்னுடைய மகனுக்கு…மகளுக்கு என்ன வேண்டுமோ அதைக் கொடுத்துவிட வேண்டும்,” என்று தேவன் சொல்வதில்லை. இவைகளெல்லாம் தேவனுடைய மக்கள் மத்தியிலே பரவலாக இருக்கின்ற தவறான கருத்துக்கள்.
தேவன் நம் கண்ணீரைப் பார்த்து மனதுருகுகிறாரா? மனதுருகுகிறார். நாம் அவரைத் துதிக்கும்போது தேவன் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறாரா? மகிழ்ச்சியடைகிறார். நாம் அவரை நோக்கிக் கூப்பிடும்போது மகிழ்ச்சியடைகிறாரா? மகிழ்ச்சியடைகிறார். ஆனால், மத்தேயு 7ஆம் அதிகாரத்தில், “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை,” (மத். 7:21) என்று ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தெள்ளத் தெளிவாக உரைத்தார். இதன் பொருள் என்னவென்று கேட்டால் மதமுறைமையிலான சடங்குகளையோ, வழிபாடுகளையோ செய்வதின்மூலம் தேவனுடைய இருதயத்தை நாம் ஒருநாளும் கவர முடியாது. அதில் தனக்கு ஆர்வம் இல்லையென்று ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சொல்கிறார். பிதாவுக்கும் அதிலே ஆர்வம் இல்லையென்று சொல்லுகிறார்.
புதிய ஏற்பாட்டிலே ஒரு மாபெரும் வசனம் உண்டு. யோவான் 4ஆம் அதிகாரத்திலே மதமுறையிலான மனிதர்கள் எவைகளையெல்லாம் ‘இது அருமையானது! அது பெருமையானது! இது மேன்மையானது! இது உயர்வானது! இது முக்கியமானது!’ என்று கருதுகிறார்களோ அவை எல்லாவற்றையும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஒரேவொரு பிரஷ் எடுத்து கருப்புச் சாயம் பூசிவிடுகிறார். அந்த சமாரியப் பெண் சொல்கிறாள்: நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன். எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே (அந்த மலைக்குப் பெயர் கெரிசீம்) தொழுதுகொண்டுவந்தார்கள். (சமாரியா நாட்டிலுள்ள கெரிசீம் மலையிலே தொழுதுகொண்டார்கள்). நீங்கள் எருசலேமிலிருக்கிற (சீயோன்) மலையிலே தொழுதுகொள்ள வேண்டும் என்கிறீர்களே. எந்த மலையிலே தொழுதுகொள்ள வேண்டும்? பிதாவே என்று கூப்பிட்டுத் தொழுதுகொள்ள வேண்டுமா? இயேசுவே என்று கூப்பிட்டுத் தொழுதுகொள்ள வேண்டுமா? உட்கார்ந்து தொழுதுகொள்ள வேண்டுமா? நின்று தொழுதுகொள்ள வேண்டுமா? கைகளைக் கும்பிட்டு தொழுதுகொள்ள வேண்டுமா? ‘ஆவியானவா; கடந்துபோகிறார்; அவரைத் தொடுகிற தருணம் இது. உங்கள் வாய்ப்பை நழுவவிட்டுவிடாதீர்கள்’ என்று நான் மெல்லத் தொழுதுகொள்ள வேண்டுமா? சத்தம் போட்டுத் தொழுதுகொள்ள வேண்டுமா?” எப்படித் தொழுதுகொள்ள வேணடும்?; அந்த சமாரியப் பெண்ணின் கேள்விக்குப் பின்னால் பல கேள்விகள் தொக்கியிருக்கின்றன. “இப்படித் தொழுதுகொள்ளவேண்டுமா? அப்படித் தொழுதுகொள்ளவேண்டுமா? இங்கே தொழுதுகொள்ள வேண்டுமா? அங்கே தொழுதுகொள்ள வேண்டுமா?”
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பல சமயங்களில் இந்த மாதிரி கேள்விகளுக்கெல்லாம் பதிலே கொடுப்பதில்லை. “இராயனுக்கு வரி கொடுப்பது நியாயமோ அல்லவோ? நாம் கொடுக்காலாமோ, கொடுக்கக்கூடாதோ?” (மாற்கு 12:24) என்று ஒரு கேள்வி. பல சமயங்களில் முள்ளை முள்ளால் எடுப்பதுபோல கேள்வியைக் கேள்வியாலே அவர் தாக்கிவிடுவார். “இராயனுடையதை இராயனுக்கும் தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்.,” என்று பதில் சொன்னார். தேவன் உண்மையிலே நமக்கு அப்படிப்பட்ட ஞானத்தைத் தர வேண்டும். மனிதர்கள் கேட்கின்ற எல்லா கேள்விகளுக்கும் நாம் பதில் கொடுக்கும் விதமாக நாம் வாக்குவாதத்திலே இறங்க வேண்டிய அவசியம் இல்லை.
ஒரு சமயம் பிலாத்து “சத்தியமாவது என்ன?” (யோவான் 18:38) என்ற ஒரு மாபெரும் கேள்வியைக் கேட்டான். “சத்தியமாவது என்ன? இரண்டு எடுத்துக்காட்டுகள் தரவும்,” என்று என்னிடம் யாராவது கேட்டிருந்தால் நான் பெரிய கட்டுரையே எழுதிக் காட்டியிருப்பேன். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மாபெரும் பதிலளித்தார். என்ன பதில்? மௌனம். ஏனென்றால் “இவன் இந்தக் கேள்வியைக் கேட்கிறானேதவிர கேள்விக்குரிய பதிலைப் பெறுவதற்குரிய இருதயம் அவனிடத்தில் இல்லை,” என்று அவருக்குத் தெரியும். தேவன் அப்படிப்பட்ட ஞானத்தை நமக்குத் தர வேண்டும். கேட்கிற கேள்விக்கெல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
இன்று கிறிஸ்தவர்களிடையே எத்தனையோ கேள்விகள்! ’பிரதர், இப்படி ஞானஸ்நானம் கொடுக்க வேண்டுமா, அப்படி ஞானஸ்நானம் கொடுக்க வேண்டுமா? இப்படி சபை கூடவேண்டுமா, அப்படி சபை கூட வேண்டுமா? வட்டமாக நாற்காலி போட்டிருக்கவேண்டுமா, வரிசை வரிசையாய் நாற்காலி போட்டிருக்கவேண்டுமா? பிள்ளைகளையெல்லாம் தனியாகக் கூட்டிக்கொண்டுபோய் குழந்தைகள் கூட்டம் நடத்தவேண்டுமா? உள்ளே நடத்தவேண்டுமா, வெளியே கூட்டிக்கொண்டுபோய் குழந்தைகள் கூட்டம் நடத்த வேண்டுமா,”
எது தேவனுடைய பார்வையிலே ஏற்பானது? எந்தப் பதிலும் நமக்கு தெரியாது. ஆனால், ஒன்று நமக்கு தெரியும். அவர் சொன்னார்: தேவன் ஆவியாயிருக்கிறார். அவரைத் தொழுதுகொள்ளுகிறவா;கள் ஆவியிலும் உண்மையிலும் அவரை தொழுதுகொள்ள வேண்டும். அவர் அதோடு நிறுத்தவில்லை. “தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்,” என்று சொன்னார். பிதா ஒருவிதமான தொழுகையாளர்களை விரும்புகிறார். ஆவியிலும் உண்மையிலும் தொழுதுகொள்கிறவர்களை விரும்புகிறார். மனிதனுடைய சுபாவம் என்னவென்றால், “ஆவியில் தொழுதுகொள்வது என்றால் என்ன?” என்று உடனே விவாதம்பண்ண ஆரம்பித்துவிடுவான்.
இதன் பொருள் என்னவென்றால் சர்வாங்க தகனம்முதலிய பலிகளைப்பார்க்கிலும் ஒரு மனிதனுடைய இருதயம் தேவனை நோக்கியும், மற்ற மனிதா;களை நோக்கியும் எப்படி இருக்கிறது என்பதே தேவனுக்கு முன்பாகக் காரியம். வேறு ஒன்றும் காரியம் அல்ல.
“நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின்முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து,” என்று சொல்லும்போது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து எதை முக்கியத்துவப்படுத்துகிறார்? தேவனுடைய பார்வையில் நம் காணிக்கையும், தசமபாகமும், பலிகளும், பாடல்களும், ஜெபங்களும், கூட்டங்களும், நாம் கூடிவருகிற முறைகளும், போதனைகளும், பிரசங்கங்களும், உபதேச அமைப்புமுறைகளும் முக்கியம் அல்ல; தேவனுக்கு முன்பாக நம் இருதயம் எப்படி இருக்கிறது என்பதே காரியம் என்று அவர் தெளிவாகக் கூறுகிறார்.
தேவன் யார் யாரோடு உறவுபடுத்தியிருக்கிறார்? என் மனைவியோடு, பிள்ளைகளோடு, பெற்றோரோடு, சகோதர சகோதரிகளோடு, உடன்வேலைபார்க்கிறவா;களோடு என் உறவு எப்படியிருக்கிறது? அது மட்டுமே காரியம். நீங்கள் இதை ஒப்புக்கொள்ளாமல் போகலாம். பின்பு அல்ல இப்போதுகூட மறுக்கலாம். நான் இந்த மேடையைப் பயன்படுத்தி உங்களை இடித்துத் தரைமட்டமாக்க விரும்பவில்லை. அதன் பொருள் என்னவென்றால் ஒரு ஆள் கொஞ்சம் வாட்டசாட்டமாக இருக்கிறார்; ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளுத்துக்கட்டுகிறார்; ஓங்கிஓங்கிப் பேசுகிறார் என்று வைத்துக்கொள்வோமே. அவரை எதிர்த்துப் பேசுவதற்கு மனம் வராது. அதற்கு அவர் ஒரு வாய்ப்புகூட கொடுக்க மாட்டார். ஒருவேளை நான் தவறாயிருந்தால் என் தவறை நீங்கள் சுட்டிக்காட்டுவதற்கு நான் உங்களுக்கு இடங்கொடுக்கிறேன். ஒருவேளை இப்பொழுது முடியவில்லையென்றால் இந்தக் கூடுகை முடிந்தபிறகு, கூடுகை முடிந்தபிறகு என்றால் இந்த வாரத்தில் ஒருநாள் நீங்கள் சுட்டிக்காட்டுங்கள். இன்னும் நான் திருத்தப்படுவதற்கும், சரிசெய்யப்படுவதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன்.
முதலாவது, தேவனுடைய பார்வையிலே கிறிஸ்துவின் குணம் மட்டுமே காரியம். கிறிஸ்துவின் குணம் என்பது தேவனுக்கு முன்பாக நம் இருதயம் எப்படி இருக்கிறது? தேவன் உறவுபடுத்தியிருக்கின்ற மற்ற மனிதர்களோடு, நம் வாழ்க்கைத் துணையோடு, பெற்றோர்களோடு, பிள்ளைகளோடு, தேவனுடைய மக்களோடு, உடன்வேலைபார்ப்பவர்களோடு, அயலகத்தாரோடு, தெருவிலே போகிறவர்களோடு நம் மனம், நம் இருதயம் எப்படி இருக்கிறது? இது மட்டுமே காரியம். இதைப்பற்றி மட்டுமே பிதாவானவர், “இவர் என்னுடைய நேச குமாரன்; இவரில் பிரியமாயிருக்கிறேன்” என்று சொல்ல முடியும். இதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?
பெந்தெகொஸ்தே விசுவாசிகள் அதிகமாக அந்நிய பாஷை பேசுகிறார்கள். உண்மையிலேயே ஒருவன் ஆவியிலிருக்கிறானா இல்லையா என்பதை அவன் அந்நிய பாஷை பேசுகிறானா இல்லையா என்பதை வைத்துத்தான் அவர்கள் தீர்மானிப்பார்கள். நான் அவர்கள் கூட்டத்துக்குப் போனால், என்னை ஆத்தும மனிதன் என்று அவர்கள் சொல்லிவிடுவார்கள். தேவனுக்குமுன்பாக நம் இருதயமே காரியம் என்று சொன்னால் அது அவர்களுக்கு நூதனமாகத் தோன்றும்.
நான் பவுலைப்போல சொல்ல முடியாவிட்டாலும், என் 20 வயதுவரை நான் ரோமன் கத்தோலிக்க முறைப்படி வளர்க்கப்பட்டவன். அடுத்து, பெந்தெகோஸ்தே முறைப்படி வளர்க்கப்பட்டவன். அடுத்த 10 வருடம் பிரதரன் முறைப்படி வளர்க்கப்பட்டவன். இப்படி நான் ஒரு சாட்சி சொல்லலாம். நான் பெந்தெகோஸ்தே முறைப்படி வளர்க்கப்பட்ட நாள்முதற்கொண்டு என்னை ரொம்ப பெந்தெகொஸ்தே ஆக்குவதற்கு என் பாஸ்டர் அதிமாக முயற்சிபண்ணினார். என்னை அந்நியபாஷை பேச வைப்பதற்கு அவர் பலவந்தம் செய்திருக்கிறார். நான் கொஞ்சம் விறைப்பான ஆள். அது காரியமல்ல.
இரண்டாவது, தேவனுடைய ஆசீர்வாதம். அது இக நன்மைகளும் பர நன்மைகளும் உள்ளடக்கியது. ஆசீர்வாதம் என்கிற வார்த்தையை நாம் மிகவும் இலேசாகப் பயன்படுத்துகிறோம். “ஆண்டவரே எங்களை ஆசீர்வதியும்,” என்று சொல்லிவிடுகிறோம். உங்களுக்கு எப்போதாவது சமயம் கிடைத்தால் சகோதரர் வாட்ச்மேன் நீயினுடைய “ஆசீர்வாதம்” என்ற ஒரு செய்தியை நீங்கள் வாசியுங்கள். மிகவும் அற்புதமான செய்தி. அந்தச் செய்தியைப் படித்தபின், உண்மையிலேயே, நீங்கள், “ஆண்டவரே, எங்களுடைய முயற்சிகள்மேல் உம்முடைய ஆசீர்வாதம் தங்கட்டும்,” என்று சொலலு;கிற அந்த வாக்கியம் இருதயத்தின் ஆழத்திலிருந்து வரும். அது நமக்கு ஊட்டுகிற வலிமை, வல்லமை, மிகவும் பெரிதாக இருக்கும். “உம்முடைய ஆசீர்வாதம் என்பது எவ்வளவு பெரிது என்பதை நாங்கள் உணா;ந்திருக்கிறோம். தேவனே, உம்முடைய ஆசீர்வாதத்தை நீர் இதில் தங்கப்பண்ணும்,00 என்று ஜெபிக்கிற ஜெபம் மிக ஆணித்தரமான ஜெபம்.
தேவனுடைய உண்மையான ஆசீர்வாதத்தை ரோமர் 8ஆம் அதிகாரம் 28, 29, 30 ஆகிய வசனங்களில் நாம் வாசித்தோம். “அன்றியும் அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்”. ”சகலமும் நன்மைக்கேதுவாக” என்று சொன்னவுடன், “அதைத்தான் நம்ம ஊரிலேகூட ‘எல்லாம் நன்மைக்கே’ என்று சொல்லியிருக்காங்க,” என்று மக்கள் சொல்லுவார்கள். எதைச் சொன்னாலும், “அதைத்தான் திருவள்ளுவர்கூட சொல்லியிருக்காரு,” என்பார்கள். அது என்னமோ திருவள்ளுவர் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதியிருப்பார்போல! எது உண்மையான நன்மை என்று அவர் தொடா;ந்து கூறுகிறார். “தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும் பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்.” தேவனுடைய பார்வையில் ஒரேவொரு நன்மைதான் நன்மை. அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாயிருப்பதுதான் ஒரே நன்மை. தேவன் ஒரு மனிதனிடத்தில், தம்முடைய ஒரு பிள்ளையினிடத்தில், தம்முடைய முதற்பேறான குமாரனுடைய சாயலைப் பார்க்கும்போது, “இதோ நான் விரும்புகிற, நான் நாடுகிற, நான் ஆசிக்கிற நன்மை. அதை நான் இங்கு பார்க்கிறேன்,” என்று பரவசமடைவார். தேவன் மனிதர்களுக்குத் தருகிற மாபெரும் நன்மை கிறிஸ்துவின் சாயல்.
நான் இப்பொழுது சாயல் என்ற வார்த்தைக்குப்பதிலாக கிறிஸ்துவின் குணம் என்ற இன்னொரு வார்த்தையைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டேன். ஏனென்றால், சாயல் என்றவுடன் தேவ மக்கள் ஒருவிதமான கற்பனைசெய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள். நம் புறம்பான நடை, உடை, பாவனையைப்பற்றிப் பேசுகிறோம் என்று நினைக்க ஆரம்பித்துவிடுவார்கள். நம்முடைய நடை பிரத்தியேகமான பாணியில் இருக்க வேண்டும், நம்முடைய குரல் ஒருவிதமாக இருக்க வேண்டும் என்று முக்கியத்துவப்படுத்துகிறார்கள். டி.வி.யிலே கிறிஸ்தவ பிரசங்கிமார்கள் எப்படிப் பேசுகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் எப்போதாவது மருத்துவமனைக்குப்போகும்போது பிரசங்கிமார்கள் பேசுவதை அங்கிருக்கும் டிவியில் கேட்கும்போதுதான், “நான் பேசுவதையெல்லாம் ஒரு கிறிஸ்தவன் பேசுவதுபோல கருதவேமாட்டார்களோ,” என்று தோன்றுகிறது. அந்தப் போதகர்கள் ஒரு பிரத்தியேகமான தொனியே வைத்திருக்கிறார்கள். அதற்குக் கண்டிப்பாக ஒரு வருடம் பயிற்சி வேண்டும்போல் தெரிகிறது. என்னால் இந்தத் தொனியிலே ஒருபோதும் பேசவே முடியாது.
சாயல் என்றால் என்ன? சாயல் என்பது இயேசுகிறிஸ்துவின் குணம். இப்போது நான் பத்துப் பன்னிரெண்டு வார்த்தைகளைப் பயன்படுத்துவது உண்டு. மீண்டும் ஒருமுறை நான் அந்த வார்த்தைகளை அடுக்க விரும்பவில்லை. வெறுமனே நம் சொற்களும், செயல்களும் மட்டுமல்ல; நம் பார்வை, நம் மிக மிக மிக உள்ளான நுணுக்கமான காரியங்களெல்லாம் இந்தக் குணத்திலே அடங்கும். நம் குணத்தை யாராலும் வரையறுக்க முடியாது. நம் மனைவியாலும்கூட அது முடியாது. 25 வருடம் கூட வாழ்கின்ற மனைவியாக இருந்தாலும் சரி, கணவனுடைய குணத்தை அவ்வளவு எளிதில் வரையறுக்க முடியாது. ஒருவேளை என் மகள் என் ஒரு குணத்தைச் சித்தரிக்கும்போது என் மனைவி, “ஆ! இதைத்தான் இதைத்தான், நான் 25 வருடமாக தேடிக்கொண்டிருக்கிறேன். எப்படி இதற்கு ஒரு வார்த்தை வடிவம் கொடுக்கிறது என்று தெரியாமல் திண்டாடிக்கொண்டிருந்தேன். ஏதோ ஒன்று இருக்கும் என்று தெரியும். ஆனால், எப்படிச் சொல்கிறது என்று தெரியாது. பயத்தினால் அல்ல; மாறாக, இதுதான் என்று வரையறுத்து என்னால் சொல்ல முடியவில்லை,” என்று சொல்லலாம்.
தேவனுடைய பார்வையிலே நன்மை என்பது ஒன்றே ஒன்றுதான்; அது கிறிஸ்துவின் குணம். ஒருவேளை உடனே நாம், “அது அவருக்கு நன்மை. எனக்கு அதிலே என்ன நன்மை இருக்கிறது? இந்த உலகத்திலே, இந்தப் பூமியிலே, நாம் பெற்று அனுபவிக்கிறவைகள் எனக்கு நன்மைகள். உணவு ஒரு நன்மை. உடல்நலம் ஒரு நன்மை. போக்குவரத்து வசதிகள் ஒரு நன்மை. வீடு ஒரு நன்மை. பிள்ளைகள் நன்மை. பிள்ளைகள் வெற்றிகரமாக இருப்பது” என்று நினைக்கலாம்.
நேற்று, நானும் என் மனைவியும் ஒரு கல்லூரிக்குப் போயிருந்தோம். என் மனைவி 25 ஆண்டுகள் வேலைசெய்த ஒரு கல்லூரியில் ஒரு கலைநிகழ்ச்சி வைத்திருந்தார்கள். நாங்கள் இளம் வாலிபர்களாய்ப் பார்த்த மாணவர்களெல்லாம் இப்போது முதிய வாலிபர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் ஒன்றேவொன்றைப்பற்றித்தான் பேசுகிறார்கள். தங்கள் பிள்ளைகளைப்பற்றி அவர்கள் பேசுகிறார்கள். 17ஆம் சங்கீதத்தில், “தங்களுக்கு மீதியான பொருளைத் தங்கள் குழந்தைகளுக்கு வைக்கிறார்கள்” (சங். 17:14) என்று வாசிக்கிறோம். இதுதான் அவர்களுடைய வாழ்க்கை. அவர்களுடைய வாழ்க்கையைக் கூட்டிக்கழித்து அவர் இப்படிச் சொல்கிறார். அவர்கள் அனுபவித்து மீதியானதை தங்கள் பிள்ளைகளுக்கு வைத்துப்போகிறார்கள். அதிலே அவர்களுக்குப் பெரிய பெருமிதம். ஒருவர், “என்னுடைய மகள் அரசு ஸ்டேன்லி மருத்துவக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு M.B.B.S படிக்கிறாள்,” என்று சொல்லுகிறார். இன்னொரு பழைய மாணவர், “என்னுடைய மகள் அந்தக் கல்லூரியில் படிக்கவில்லை. அவள் ராமசந்திரா மருத்துவக் கல்லூரியில்தான் படிக்கிறாள்,” என்று சொல்லுகிறார். மனிதர்கள் இவைகளைத்தான் நன்மைகள் என்று கருதுகிறார்கள். நீங்கள் சிந்தித்துப் பதில் சொல்லுங்கள். உண்மையிலேயே பூமிக்குரிய நன்மைகள் பொருட்டா பொருட்டில்லையா? அவைகள் பொருட்டு. சமநிலை வழுவாமல் நான் பேச விரும்புகிறேன்.
இறுதியாக, முடிவாக, நன்மை என்று ஒன்றேவொன்றுதான் உண்டு. அது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் குணம். அதைத்தவிர தேவனுக்கு தேவனுக்கும் சரி, நமக்கும் சரி வேறு எதுவும் நன்மை இல்லை. நாம் முடிவாக, இறுதியாக, வரும்போது கிறிஸ்துவின் குணமே காரியம். “நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன்; நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்,” என்று சங்கீதம் 17:15இல் வாசிக்கிறோம். “நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்,” என்றால் என்ன பொருள்? நான் அந்த வசனத்தைவைத்துப் பெரிய ஆராய்ச்சியெல்லாம் பண்ணவில்லை என்று ஒப்புக்கொள்கிறேன். ஆனால், நான் ஒன்றை உறுதியாகச் சொல்ல முடியும். ஒன்றேவொன்றுதான் நம்மைத் திருப்தியாக்கும். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் சாயல் அல்லது குணம் மட்டுமே நம்மைத் திருப்தியாக்கும். “இல்லங்க, நான் பரலோகத்தில் தாவீதைப் பார்ப்பேன். சாலோமொனைப் பார்ப்பேன், எஸ்தரைப் பார்ப்பேன், நெகேமியாவைப் பார்ப்பேன், சீலாவைப் பார்ப்பேன், இயேசுவையும் பார்ப்பேன். அவரைப் பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்,” என்று நீங்கள் சொல்லலாம். சரி, பார்த்து என்ன செய்வீர்கள்? “நீர் செய்த அற்புதங்களைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்பொழுது நான் முகமுகமாய்க் காண்கிறேன். எனக்கு இரண்டு மூன்று அற்புதம் செய்து காட்ட முடியுமா?” என்று கேட்பீர்களா?
எந்த அளவுக்கு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் சாயல் நம்மிடத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறதோ அந்த அளவுக்கு மட்டுமே நாம் அவருடைய சாயலால் திருப்தியாவோம். நம்மில் உருவாக்கப்படாத ஒரு சாயலை இயேசுவிடம் கண்டு நாம் திருப்தியடையமாட்டோம்.
ஆயினும், இந்தப் பூமிக்குரிய நன்மைகள் தேவனுடைய பார்வையிலே ஒரு பொருட்டு. மத்தேயு 6ஆம் அதிகாரத்தில், “ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள்,” என்று ஆண்டவராகிய இயேசு சொன்னதாக வாசிக்கிறோம். “இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரம பிதா (பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதா) அறிந்திருக்கிறார்”. “இதெல்லாம் உங்களுக்கு வேண்டாம். அஞ்ஞானிகள்தான் இவைகளெல்லாம் தங்களுக்கு வேண்டும் என்று சொல்கிறார்கள். நாம் பரம ஞானிகள். நமக்கு இதெல்லாம் வேண்டாம். நமக்குத் துணி வேண்டாம், வீடு வேண்டாம், வாசல் வேண்டாம்,” என்று நான் சொல்லவில்லை. உடனே அடுத்த அற்றத்துக்குப்போய், “நமக்கு என்னதான் வேண்டும்? கிறிஸ்து மட்டுமே போதும். துணி வேண்டாம்; வீடு வேண்டாம்; வாசல் வேண்டாம்,” என்று ஒரு ஆள் சொல்வார். அப்புறம் இன்னொருவர் சுபிட்ச சுவிசேஷம் சொல்லலாம். “உனக்கு என்ன வேண்டும்? ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து உனக்குத் துணி தர விரும்புகிறார். சோப் தர விரும்புகிறார். சூப் தர விரும்புகிறார். என்னையா நீ? சாதாரண பைக்கில போய்க்கொணடிருக்கிறாய்? நீ பெரிய மோட்டார் சைகிள்ல போக வேண்டாமா?” என்று சொல்வார். இவைகளெல்லாம் தேவனை அறியாத மக்களுடைய உளறல். இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரம பிதா அறிந்திருக்கிறார். அது தேவனுடைய பார்வையில் ஒரு பொருட்டு.
ஆனால், இந்த உலகத்து மக்கள் இந்தப் பூமிக்குரிய நன்மைகளை எப்படிப் பார்க்கிறார்களோ, எப்படித் தேடுகிறார்களோ, எப்படி சேமிக்கிறார்களோ, எப்படிக் குவிக்கிறார்களோ, எப்படி அதற்காகக் கவலைப்படுகிறார்களோ, சஞ்சலப்படுகிறார்களோ அதேபோல் தேவனுடைய மக்கள் வாழக்கூடாது என்று ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து கற்றுக்கொடுத்தார். இவைகள் வேண்டும். ஆனால் உலகத்து மக்களுக்கும் தேவனுடைய மக்களுக்கும், மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு உண்டு; பரலோகத்துக்கும் நரகத்துக்குமுள்ள வேறுபாடு உண்டு. இந்த உலகத்துப் பொருளை அவர்கள் எப்படி நோக்கிப்பார்க்கிறார்கள். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இந்த உலகப்பொருளுக்காக உழைத்தார். ஆனால் இந்த உலகத்து மக்கள் அதை ஆசையாய்த் தேடுவதுபோல அவர் தேடவில்லை. இந்த உலகத்துப் பொருள்கள் நமக்குத் தேவை என்று கர்த்தர் அறிகிறார்.
மத்தேயு 6:33: “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு கூடக் கொடுக்கப்படும்”. இந்த வசனத்தை நான் மிகவும் வேகவேகமாய்ப் பேசுகிறேன். ஏனென்றால், பொதுவாகப் பாஸ்டர்கள், பெரிய பெரிய தலைவர்கள், பேசும்போது தேவனுடைய மக்களைத் தூண்டி எழுப்புவதற்கு, “நீ தேவனுடைய ராஜ்யத்தை முதலாவது தேடு; அப்பொழுது இவைகளெல்லாம் கூடக் கொடுக்கப்படும்; இந்த உலகத்திலே நீ பெரிய பணக்காரனாக மாறிவிடுவாய்,” என்று பேசுவதுண்டு. பெரிய பணக்காரனாக மாறவேண்டும் என்பதற்காக யாரைத் தேட வேண்டுமாம்! தேவனைத் தேட வேண்டுமாம். தேவனைப்பற்றி ஒரு அறிவில்லை. தேவனுடைய நித்திய திட்டத்தையும், நித்திய நோக்கத்தையும், நித்திய குறிக்கோளையும்பற்றிய ஒரு அறிவோ அல்லது தேவனுடைய விதிகளைப்பற்றி, தேவனுடைய வழிகளைப்பற்றி அல்லது தேவனுடைய இருதயத்தைப்பற்றி, தேவனுடைய ஆவியைப்பற்றி எந்த ஒரு அறிவுமில்லாத மனிதனுடைய பேச்சு அது. தேவன் தம்முடைய மக்களுக்கு இந்த உலகத்திற்குரிய தேவைகளைப் பூர்த்திசெய்ய விரும்புகிறார். சங்கீதத்திலே இரண்டு இடங்களிலே இந்த வசனங்கள் உண்டு. நான் அதை அடிக்கடி மேற்கோள் காட்டியிருக்கிறேன். அருமையான வசனங்கள். ஒன்று “அவர் மிருக ஜீவன்களுக்கும், கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கு ஆகாரம் கொடுக்கிறார்,” என்றும் (சங். 147:9) இன்னொன்று, “அந்த சமுத்திரத்திலே விளையாடும்படி நீர் உண்டாக்கின திமிங்கலங்களும் உண்டு. ஏற்ற வேளையில் ஆகாரத்தைத் தருவீர் என்று அவைகளெல்லாம் உம்மை நோக்கிக் காத்திருக்கும். நீர் கொடுக்க அவைகள் வாங்கிக்கொள்ளும்; நீர் உம்முடைய கையைத் திறக்க அவைகள் நன்மையால் திருப்தியாகும். நீர் உமது முகத்தை மறைக்க, திகைக்கும்; நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள, அவைகள் மாண்டு, தங்கள் மண்ணுக்குத் திரும்பும்” (சங். 104:26-29).
தேவனுடைய இருதயம் எப்படிப்பட்டதென்றால் பெரிய திமிங்கலத்திற்கும் அவர் உணவு கொடுப்பதைப்பற்றி அக்கறையுள்ளவராய் இருக்கிறார். மிகச் சிறிய காக்கை குஞ்சுக்கும் அவர் உணவு கொடுப்பதைப்பற்றி அக்கறையுள்ளவராய் இருக்கிறார். “உங்களுக்கெல்லாம் உணவு தேவையில்லை,” என்று அவர் ஒருபோதும் சொல்வதில்லை.
தேவனுடைய ஆசீர்வாதங்கள் இறுதியாக, முடிவாக, பரம ஆசீர்வாதங்கள். பரம ஆசீர்வாதம் என்பது கிறிஸ்துவின் சாயல். ஆனால், அவருக்குள் இந்த இகத்திற்குரிய நன்மைகளும் உண்டு.
மூன்றாவது, உலகத்து மக்களுக்கும் தேவனுடைய மக்களுக்கும் உள்ள வேறுபாடு இதுதான். தேவன் தம் மக்களுக்கு இந்த இகத்துக்குரிய நன்மைகளைத் தர விரும்புகிறார். தேவன் தம் மக்களுக்கு ஆசீர்வாதத்தைக் கொடுக்கத் தெரிந்துகொண்ட வழி சிலுவையின் வழி. உலகத்து மக்கள் சிலுவையின் வழியை நம்புவதில்லை, அந்த வழியை அவர்கள் விசுவாசிப்பதில்லை, சிலுவையின் வழியை அவர்கள் பற்றிக்கொள்ளமாட்டார்கள். சிலுவையின் வழியில் அவர்கள் நடக்கமாட்டார்கள். ஆனால் இந்தப் பூமிக்குரிய நன்மைகள் வேண்டும் என்பார்கள்.
தேவனுடைய வழியாகிய சிலுவையின் வழி இல்லாமல், இந்தப் பூமிக்குரிய நன்மைகள் வேண்டும் என்று அவர்கள் நாடும்போது அவர்களுக்கு அதைக் கொடுப்பதற்கு ஒருவன் ஆயத்தமாய் இருக்கிறான். அவனுக்குப் பெயர்தான் இந்த உலகத்தின் அதிபதி. “ஆ! மிகவும் நல்லது! நம்முடைய வழி அது,” என்று அவன் மகிழ்ச்சியடைகிறான்.
தேவனும் தம்முடைய மக்களுக்கு இந்தப் பரம நன்மையாகிய கிறிஸ்துவின் சாயலை, குணத்தை, மட்டுமல்ல;. இந்தப் பூமிக்குரிய நன்மைகளையும் தம்முடைய மக்களுக்கு வழங்க விரும்புகிறார். ஆனால், அவர் அவர்களுக்கு இந்த நன்மைகளைக் கொடுக்கிற வழியிலே எந்த சமரசமும் பண்ணுவது கிடையாது. பரம நன்மையாகிய கிறிஸ்துவின் சாயலுக்கு அவர் ஒரு வழி வைத்திருக்கிறார். சிலுவைதான் வழி. பாட்டு பாடிக்கொண்டேயிருந்தால் கிறிஸ்துவின் சாயல் வந்துவிடுமா? தேவாரம் திருவாசகம் மாதிரி உருகிஉருகிப் பாடினால் கிறிஸ்துவின் குணம் உருவாகிவிடுமா?
கணித மேதையும், கிறிஸ்தவ தத்துவஞானியுமாகிய Blaise Pascal என்பவரை நான் அடிக்கடி மேற்கோள் காட்டியிருக்கிறேன். “Men never do evil so willingly and so thoroughly as when they do it out of religious conviction”. “மத வைராக்கியத்தின் காரணமாக ஒரு தீங்கை மிகவும் மகிழ்ச்சியாகவும் தங்கள் முழு ஆக்ரோஷத்தோடும் செய்வதைப்போல மனிதர்கள் வேறு எப்போதுமே தீங்கு செய்யமாட்டார்கள்,” என்று அவர் சொன்னார்.
ஆகவே, பரத்திற்குரிய நன்மைக்கு தேவன் ஒரு வழி வைத்திருக்கிறார். அது சிலுவையின் வழி. பிலிப்பியர் 3ஆம் அதிகாரம் 7, 8, 11ஆம் வசனங்களை நீங்கள் நூறு தடவை வாசியுங்கள். “ஆகிலும், எனக்கு இலாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்கு நஷ்டமென்று விட்டேன். என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்… அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்”. இது பவுலின் அனுபவம். சிலருடைய அனுபவம், ” ஐயோ! எல்லாம் போச்சே! ஐயோ ஏன் விட்டேன் என்று இருக்கிறதே! கிறிஸ்தவனாக ஆகிவிட்டேனே! இல்லையென்றால் சண்டைபோடலாமே! அல்லது வேறு ஏதாவது வழியில் இதைச் சாதித்திருக்கலாமே!” என்று அங்கலாய்த்துக்கொண்டிருக்கலாம்.
நித்திய நித்தியமாக, யுகயுகமாக, ஆசீர்வாதத்துக்கு தேவனுடைய வழி ஒன்றேவொன்றுதான் இருக்கிறது. கிறிஸ்துவின் சாயலை அவர் சிலுவையின் வழியாக மட்டுமே உருவாக்குகிறார். ஒரு மனிதனுக்குள் கிறிஸ்துவின் சாயலை உருவாக்க வேறு வழி இல்லை.
மனிதர்கள் சுருக்கு வழிகள், குறுக்கு உபாயங்கள், நிறைய கண்டுபிடிக்கலாம். “நீங்கள் தசமபாகத்தை மட்டும் கொடுத்துவிடுங்கள். ஞாயிற்றுக்கிழமை கூடுகைக்குத் தவறாமல் வந்திருங்கள். காலையில் முதலாவது வேதம் வாசியுங்கள்; ஜெபம் பண்ணுங்கள். இதைச் செய்தால் போதும் நீங்கள் கிறிஸ்துவைப்போல் மாறிவிடுவீர்கள்,” என்று சொல்லலாம். “ஞாயிற்றுக்கிழமை கூடுகைகளை நீங்கள் ஏனோதானோவென்று வைத்துக்கொள்ளுங்கள் அல்லது இஷ்டம்போல வைத்துக்கொள்ளுங்கள்; காலையிலே தூக்கம் வந்ததென்றால் தூங்கிக்கொள்ளுங்கள்; விருப்பமனால் ஜெபியுங்கள் அல்லது வேதம் வாசியுங்கள்,” என்று நான் சொல்லவில்லை. ஆனால், தசமபாகத்தை கொடுத்தல், ஞாயிற்றுக்கிழமை கூடுகைக்குச் சரியாகப் போய்வருதல், நல்ல பாடல், ஞாயிற்றுக்கிழமை கூடுகைக்கு முந்தி சனிக்கிழமை சுத்திகரிப்பு கூடுகை, அப்புறம் மாதத்தின் கடைசி நாளில் முழு இரவு ஜெபம், வெள்ளிக்கிழமை உபவாசக் கூட்டம்போன்ற சில மதப்பழக்கவழக்கங்கள் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கிறது என்று சொல்வதும், நம்பச்செய்வதும் தவறு.
முழு இரவு ஜெபம் முடிந்தவுடன் தசமபாகத்தை ஒரு கவரில் போட்டு முழங்காலில் நின்று பாஸ்டரிடம் கொடுத்து ஜெபம் பண்ணும்போது, “தேவனை நான் கொள்ளையடிக்கவில்லை. இந்த மாதச் சம்பளத்திலே தசமபாகத்தை நான் ஒழுங்காகக் கொடுத்துவிட்டேன்,” என்ற ஒரு நல்ல உணர்ச்சி இருக்கும். மதப் பழக்கவழக்கங்கள் கிறிஸ்துவின் சாயலை உருவாக்கிவிடுமா என்றால் உருவாக்கலாம். ஆனால் உருவாக்காமல் போகிற வாய்ப்புகள் உண்டு. ஆனால் கிறிஸ்துவின் சாயலை ஒன்று நிச்சயமாக உருவாக்கும். அது என்ன? சிலுவையின் வழி.
சிலுவையின் வழி என்பது என்ன? அதை நாம் இன்னொரு நாள் பார்க்கலாம். அது மிகவும் இன்பமானதல்ல. இந்த வழியிலே நடக்கும்போது முதலாவது நமக்கு நட்டம் ஏற்படும், வருத்தம் ஏற்படும், துன்பம் ஏற்படும், அவமானம் ஏற்படும். நீங்கள் யாரிடமாவது மன்னிப்பு கேட்டிருக்கிறீர்களா? எத்தனை தடவை மன்னிப்பு கேட்டிருப்பீர்கள்? மன்னிப்பது எவ்வளவு கடினமே, மன்னிப்பு கேட்பது அதைவிடக் கடினம் அல்லது அந்த அளவுக்குக் கடினம். ஒருவனிடத்தில் போய், “நான் அப்படிச் சொன்னது தவறு. நீ என்னை மன்னித்துக்கொள்,” என்று சொல்வது எவ்வளவு வெட்கமாக இருக்கும் தெரியுமா? நம் முகம் போகிற போக்கு, நம் குரல் எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும். அப்புறம் நாம் மன்னிப்புக் கேட்கிறோம்; ஆனால், யாரிடம் மன்னிப்புக் கேட்டோமோ அவர் மன்னித்ததுபோல் தோன்றவில்லை என்று வைத்துக்கொள்வோம். அப்போது நம் மனப்பாங்கு எப்படி இருக்க வேண்டும்? “நான் கேட்பதைக் கேட்டுவிட்டேன். அவன் மன்னித்தாலும் சரி, மன்னிக்காவிட்டாலும் சரி, அவன் கா;த்தருக்குக் கணக்கு ஒப்புவிப்பான்,” என்பதா மன்னிப்புக் கேட்பவருடைய மனப்பாங்கு! ஒருவேளை நாம் செய்த தீங்கு அவ்வளவு கொடிது என்று அவர் நினைக்கிறார். எனவே, மன்னிப்புக் கேட்கப் போகும்போது அவர் முகத்தைத் திருப்பிக்கொண்டு போகிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்போது நாம் என்ன செய்ய வேண்டும் அல்லது நம் மனப்பாங்கு எப்படி இருக்க வேண்டும்? “நான் மன்னிப்புக் கேட்க வேண்டும்? இப்போது கேட்டுவிட்டேன். என்னுடைய பங்கை முடித்துவிட்டேன். இனிமேல் மன்னிப்பதும் மன்னிக்காததும் அவருடைய பங்கு. கர்த்தர் அவரைப் பார்த்துக்கொள்வார்,” என்பதல்ல. அடுத்த வாரம் மீண்டும் போக வேண்டும். ஒருவேளை இந்த வாரம் கொஞ்சம் மனம் நெகிழ்ந்திருக்கலாம், மிருதுவாயிருக்கலாம். “உண்மையிலேயே நான் செய்த தீங்கு மிகக் கொடுமையானது. தயவுசெய்து என்னை மன்னியுங்கள்,” என்று சொல்ல வேண்டும். இப்போது அவர் முகத்தைத் திருப்பாமல் போகலாம். ஆனால், எந்தப் பதிலும் இல்லை. ஒருவேளை இன்னொரு வாரம் கழித்துப் போகலாம். மறுபடியும் மறுபடியும் ஏன் செல்ல வேண்டும்? போதும் என்று தேவன் சொல்லும்வரை செல்ல வேண்டும். “தேவனே, இன்னொருமுறை நான் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமென்றால் அதற்கும் நான் தயார்”. இது சிலுவையின் வழிக்கு ஒரு நல்ல உதாரணம். “நான் பேசினது தவறு. நான் பார்த்தது தவறு. நான் செய்தது தவறு,” என்று மனந்திரும்ப வேண்டும், மன்னிப்புக் கேட்க வேண்டும். “அதை விடுங்கப்பா; இதெல்லாம் ஒரு பெரிய பொருட்டா! வார்த்தைகளைப் பேசினோம். சில வார்த்தைகள் வந்திடுச்சி; இதெல்லாம் நடக்கத்தான் செய்யும்,” என்று தட்டிக்கழிப்பது, ஏனோதானோவென்று எடுத்துக்கொள்வது உலக மக்களுடைய வழி. நம்மைப் பொறுத்தவரை அது வழி அல்ல. நான் பேசினது தவறு. நான் பேசாதது தவறு. நான் அப்படிப் பார்த்தது தவறு. நான் அப்படி முறைத்தது தவறு. அப்படி விறைப்பாக இருந்தது தவறு“. ஆனால் உலகத்து மக்களைப் பொறுத்தவரை அவர்கள் அந்த வழியில் நடக்கமாட்டார்கள்.
எந்த உலகத்து நன்மையாக இருந்தாலும் சரி–அது ஒரு உடல்நலமாக இருந்தாலும் சரி, பொருள் நலமாக இருந்தாலும் சரி, இனிய இசைவான உறவுகளாக இருந்தாலும் சரி அல்லது உள் அமைதியாக இருந்தாலும் சரி–அவைகளை சிலுவையின் வழியிலும் இந்த நன்மைகளை நாம் பெறமுடியும்; சிலுவையற்ற வழியிலும் இந்த நன்மைகளை நாம் பெற முடியும். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் சாத்தான் சொன்னான். அவன் இந்த உலகத்தின் சகல இராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து, “நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து என்னைப் பணிந்துகொண்டால், இவைகளெல்லாம் உமக்குத் தருவேன்,” என்று சொன்னான். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து அவனைப் பொய்காரன் என்று சொல்லவில்லை. ஒரு வகையில் அவன் சொன்னது உண்மைதான். ஆனால், ஆண்டவராகிய இயேசு எப்பொழுதுமே சிலுவையின் வழியைத் தெரிந்துகொண்டார். இந்த வழி மட்டுமே இறுதியிலே வீரியமுள்ளது, கனிபயக்கக்கூடியது, என்றும் நிலைநிற்கிறது, தேவனுக்கு முன்பாக மதிப்புள்ள நன்மையை தரக்கூடியது என்பதற்கு பிலிப்பியர் 2ஆம் அதிகாரம் நிரூபணம். “அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்”. இதை நாம் நூறு தடவை தியானிக்க வேண்டும். அடிமை என்றால் அவன் காலால் எட்டி உதைக்கப்படுவான், காரித் துப்பப்படுவான்.
ஆனால் இதை சிலுவையின்வழி என்று அழைத்தபோதும், இந்த வழி சிலுவையின் வழி மட்டுமல்ல இதற்குப் பெயர் மகிமையின் வழி என்றும் நம் எல்லாருக்கும் தெரியும். இந்தப் பக்கத்திலிருந்து நாம் பார்க்கும்போது இதற்கு சிலுவையின்வழி என்று பெயர் அந்த பக்கத்திலிருந்து பார்க்கும்போது அதற்கு மகிமையின் வழி என்று பெயர். அல்லேலூயா! உண்மையாகவே அல்லேலூயா சொல்ல வேண்டிய தருணமிது. கண் திறக்கப்பட்டவர்கள் மட்டுமே இப்படி உரைக்க முடியும். இது சிலுவையின் வழி; ஆனால் இது மகிமையின் வழி. உலகத்து மனிதனைப் பொறுத்தவரை காரித் துப்பப்பட்டு, கன்னத்தில் அறையப்பட்டு, மனிதர்களால் புறக்கணிக்கப்பட்டு, ஒரு நண்பனும் இல்லாமல்… இவன் உண்மையிலேயே பிதாவுக்குப் பிரியமாயிருந்தானா? பிதாவுக்குப் பிரியமற்றவனாயிருந்தானா? நல்லவனா? கெட்டவனா? என்ற எந்த உறுதிப்பாடும் இல்லாமல் கைவிடப்பட்டவனாய்… வாட்ச்மேன் நீயினுடைய ஒரு பாடலை நீங்கள் நன்றாய்ப் படிக்க வேண்டும். நேசித்தும் நன்மதிப்போ வேண்டாம். அந்தப் பாடல் ஆங்கில மொழிபெயா;ப்பைவிட தமிழ் மொழிபெயா;ப்பு நன்றாக இருக்கிறது.
நேசித்தும், நன்மதிப்போ வேண்டேன்;
சேவித்தும், சன்மானமோ வேண்டேன்;
உழைத்தும், என்றும் எண்ணவோ வேண்டேன்;
துன்புற்றும், என்னைக் கருதவோ வேண்டேன்.
இது ஊற்றுதல், பருகுதலில்லை;
இது உடைத்தல், பேணுதலில்லை;
மற்றோர் ஆசீர்க்காய்த் துன்புறும் வாழ்க்கை;
ஆறுதலும், அன்பும் நல்கும் வாழ்க்கை.
பரிதாபம், பரிவு நான் ஒப்பேன்;
பாராட்டும், சீராட்டும் நான் ஒப்பேன்;
தனியனாய், மறக்கப்பட்டோனாய்,
பேச்சற்றோனாய், கைவிடப்பட்டோனாய்.
நீதி கிரீடத்தின் கிரயமாய்க்
கண்ணீர், குருதி;
உத்தம வாழ்வின் கிரயமாய்
எல்லாம் இழந்தேன்.
கர்த்தாவே, அன்று நீர் பூவில் வாழ்ந்தபோது
தேடி நடந்த பாதை இதே;
காயங்கள், நட்டங்கள் மகிழ்வுடன் சகித்தீர்
மாந்தர் நெருங்கி வந்திளைப்பாற.
இன்னும் போகும் தூரம் அறியேன்;
பின்னோக்குதல் இன்றி முன்னே செல்கிறேன்.
பின்பற்றுவேன் உம் பூரண முன்மாதிரி
நன்றியீனம் கசப்பின்றி தாங்கி.
கர்த்தாவே, ஜெபிப்பேன் இவ்வேளை,
துடைப்பீர் எந்தன் மறைவான கண்ணீர் யாவும்;
கர்த்தாவே, நீரே என் பரிசென்றறிவேன்,
பிறர்க்கென்றும் ஆசீர்வாதமாகுவேன்.
இது நல்ல பாடல். இதைப் பாடுங்கள். நூறு தடவை பாடலாம். உண்மையான பரிசுத்தவான்கள் எந்த நிறுவனத்திற்கும் உரியவர்களல்ல. சகோதரர் வாட்ச்மேன் நீ Lord’s Recoveryக்கு உரியரவல்ல. “We are for the Lord . We are for the Lord. We are for the Lord’s Recovery” என்று சொல்கிற பல பரிசுத்தவான்கள் வாட்ச்மேன் நீயை உண்மையிலேயே சந்திக்கும்போது அதிர்ச்சிக்குள்ளாகப் போகிறார்கள்.
ஆகவே, நான் சொல்வது இந்த உலகத்துக்குரிய நன்மைகளைக்கூட தேவன் தம்முடைய மக்களுக்குத் தருகிறார். அது பொருள் வளமாக இருக்கலாம். ஒரு வேலையாக இருக்கலாம். வருவாயாக இருக்கலாம். வீடாக இருக்கலாம். ஆனால், அதுவும்கூட எந்த வழியில்தான் தருவார்? சிலுவையின் வழியில்தான் தருவார். மந்திரத்தால் தேவன் இதைச் செய்வதில்லை. அந்த சிலுவையின் வழியில், அந்த மகிமையின் வழியில், என்ன அடங்குமென்றால் உண்மையிலேயே அவன் அதை பலிபீடத்தில் வைத்தபிறகு, “ஆண்டவர் உண்மையிலே அதை எடுக்கமாட்டார். அப்படி எடுக்கிறமாதிரி பாவனை காட்டிவிட்டுத் தந்திடுவார்,” என்ற ஒரு இரகசிய எதிர்பார்ப்புகூட இல்லாமல், “ஆண்டவரே, நீர் அதைத் தராவிட்டாலும் அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை”. நல்ல வேலை எனக்கு வேண்டும். நல்ல வருவாய் எனக்கு வேண்டும். நல்ல உடல்நலம் வேண்டும். ஆனால், நான் எதிர்பார்க்கிற நல்ல வேலை இல்லை என்றாலும் நாம் நம்முடைய முன்னோடியாகிய தாவீதோடு சேர்ந்து, “அவர்களுக்குத் தானியமும் திராட்சைரசமும் பெருகியிருக்கிற காலத்தின் மகிழ்ச்சியைப்பார்க்கிலும் அதிகமான மகிழ்ச்சி;யை என்னுடைய இருதயத்தில் தந்தீர். சுமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன். கா;த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்”(சங். 4:7) என்று நம்மால் கூற முடிய வேண்டும்.
ஆகவே, என் அறிவின்படி நாம் பலிபீடத்தில் வைக்கிற எல்லாவற்றையும் தேவன் அக்கினியை அனுப்பி கபளீகரம் செய்துவிடுவது இல்லை. என் அறிவின்படி. ஆனபோதிலும் நாம் இரகசியமாக மனதிலே, “அவர் எப்படியும் கபளீகரம் செய்யமாட்டார்,” என்று நினைக்கக்கூடாது. சிறுபிள்ளைகள் கையில் தின்பண்டம் வைத்திருக்கும்போது, “தா” என்று கேட்டால் “தரமாட்டோம்” என்று சொல்லமாட்டார்கள். தருவதற்குக் கையை நீட்டுவார்கள். அவர்களுடைய எண்ணம் என்னவென்று கேட்டால் நாம் அவர்களிடத்திலிருந்து வாங்கமாட்டோம் என்பதுதான்.
நம் தேவன் எப்படிப்பட்டவர்தான்? கொடுத்துவிட்டு அவர் கேட்பார்; ஆனால் அவர் மறுபடியும் அதை எடுத்துக்கொள்வதில்லை. தேவன் இந்த வார்த்தைகளால் நம் விசுவாசத்தைத் திடப்படுத்துவாராக. கிறிஸ்துவின் குணமே தேவனுடைய ஆசீர்வாதம் தங்குவதற்கான ஆதாரம். முதலாவது சொன்னேன். கிறிஸ்துவின் குணமே காரியம். வேறு எதிலும் ஒரு காரியம் இல்லை. இரண்டவவது, தேவனுடைய ஆசீர்வாதத்தில் பர நன்மையாகிய கிறிஸ்துவின் குணம் மட்டுமல்ல. இக நன்மைகளும் அடங்கும். மூன்றாவது, ஆனால் வேறுபாடு என்னவென்று கேட்டால் தேவன் இந்த இக நன்மைகளைக்கூட தம்முடைய பிள்ளைகளுக்கு சிலுவையின்வழி மூலமாய்த்தான் தருவார். இந்த உலகத்து மக்களுக்குத் தருவதுபோல் சிலுவையின்வழி இன்றி அவர் தருவதில்லை. தேவனுடைய மக்கள் ஆசீர்வாதமான மக்களாய் வாழவேண்டுமென்று நான் வாஞ்சிக்கிறேன் அதற்காக ஜெபிக்கிறேன். நாம் ஒருவருக்கொருவர் பணிவிடை செய்ய நாம் வாஞ்சிக்கிறோம். ஆனால் நாம் இந்தக் கோட்பாட்டை மனதில் வைத்துக்கொள்வோமாக. ஆமென்.