Transcribed from a message spoken in November 2012 in Chennai
By Milton Rajendram
நாம் எப்படி இயேசுகிறிஸ்துவைப்போல் வாழ முடியும்? இயேசுகிறிஸ்துவின் ஜீவன் நமக்குள் இருக்கிறது அல்லது கிறிஸ்து நமக்குள் ஜீவனாக இருக்கிறார். இது நமக்குத் தெரியும். இந்த உண்மை நமக்குத் தெரியவரும்போது கண்டிப்பாக நம் விசுவாசம் நமக்குள் எழும்பும். கிறிஸ்து ஜீவனாக என் ஆவியில் இருக்கிறார். எனவே, அவர் வாழும்போது நான் கிறிஸ்துவை வெளியாக்குகிறேன் அல்லது வெளிப்படுத்துகிறேன். அப்படி நம் விசுவாசம் நமக்குள் எழும்பும். “நான் இப்போது என்ன செய்ய வேண்டும்? நான் செய்வதற்கு ஏதாவது இருக்கிறதா? கிறிஸ்து எனக்கு ஜீவனாக இருக்கிறார். இது உண்மை. ஆனால், பல சமயங்களில் கிறிஸ்துவை வாழ்வது கடினமாகத்தான் இருக்கிறது. அதற்கு என்ன காரணம்? இயேசு கிறிஸ்துவைப்போல் எப்படி வாழ்வது? என் பிறவிக்குணம், என் சாய்மானம், என் மனப்போக்கு, என் எண்ணங்கள், என் உணர்ச்சிகள், என் செயல்கள், என் மனப்பாங்கு (My Disposition, Inclination, Tendency, Thoughts, Feelings, Volition, Actions, Attitude) என் சுபாவம், என் தன்மை ஆகியவைகளைப்பற்றி எனக்குக் கொஞ்சமாவது தெரியும். என்னுடைய கேள்வி என்னவென்றால் கிறிஸ்துவை எப்படி வாழ்வது?” என்று சிந்திக்க ஆரம்பிப்போம். கிறிஸ்து நம்மில் ஜீவனாக இருக்கிறார் என்பதில்தான் ஆரம்பிக்கிறோம். “சில சமயங்களில் கிறிஸ்து என்னில் வாழ்வதுபோல் தோன்றுகிறது. ஆனால், பல சமயங்களில் கிறிஸ்து என்னில் வாழ்வதுபோல் தோன்றவில்லையே! என்னிலிருந்து வெளியாகவில்லையே! இதை நான் எப்படிக் கையாளுவது?” என்ற கேள்வி எழுகிறது. இது மிகவும் முக்கியமான விஷயம்.
முதலாவது, “கிறிஸ்துவைப்போல் வாழ வேண்டும்” என்ற பசிதாகம் இருக்க வேண்டும். மத்தேயு 5ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளதுபோல “நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்.” முதலாவது, இந்தப் பசியும்தாகமும் வேண்டும். “ஆண்டவரே, நான் உம்மைப்போல் வாழ விரும்புகிறேன்,” என்ற தாகம் நமக்குள் கொழுந்துவிட்டு எரிய வேண்டும். தாகமே இல்லையென்றால் நாம் என்னதான் பெரிய உபாயங்களையெல்லாம் சொல்லிக் கொடுத்தாலும், அது வேலைசெய்யாது. தாகமே இல்லாத ஒருவனுக்குத் தண்ணீரை மண் பாத்திரத்தில் கொடுத்தால் என்ன அல்லது குழாயில் கொடுத்தால் என்ன? அல்லது அதை சூடுபண்ணிக் கொடுத்தால் என்ன அல்லது ஆறவைத்துக் கொடுத்தால் என்ன? எந்த வித்தியாசமும் இல்லை. தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற தாகமே அவனுக்கு இல்லையே! மண் பாத்திரத்தை எடுத்து குடிக்க வேண்டும் அல்லது குழாயைத் திறந்து குடிக்க வேண்டும் என்கிற உபாயம் எளிதாக இருக்கிறது. ஆனால், குடிக்க வேண்டும் என்ற தாகம் அவனிடம் இல்லையே! எனவே, முதலாவது, இயேசுகிறிஸ்துவைப்போல் வாழ வேண்டும் என்ற தாகம் வேண்டும். அதில் அவனுக்கு நாட்டமே கிடையாது.
பலருக்கு பலவிதமான நாட்டம் இருக்கும். ஒரு பெரிய இசைஞானியாக மாற வேண்டும் என்ற நாட்டம் இருந்தால் அவனுடைய எண்ணம், ஏக்கம் எல்லாம் எப்போதுமே இசைஞானியாக மாறுவதிலேதான் இருக்கும். இதுதான் அவனுடைய தாகம் என்றால் கிறிஸ்துவைப்போல் மாற வேண்டும் என்பது அவனுடைய வாழ்க்கையில் நிஜமாக மாற முடியாது.
பசிதாகம் ஏற்பட்டபிறகு, கிறிஸ்து நம்மில் ஜீவனாக உள்ளார் என்ற உண்மை நமக்குத் தெரிய வருகிறது. அப்போதுகூட நடைமுறையில் நாம் என்ன செய்ய வேண்டும்? “ஆண்டவரே, நான் உம்மைப்போல் மாற விரும்புகிறேன்,” என்று ஜெபிக்க வேண்டும். நம்மிடம் தாகம் இருக்குமென்றால், ஒவ்வொரு நாளும் நாம் ஆண்டவரிடம், “ஆண்டவரே, இன்று நான் உம்மை வாழ விரும்புகிறேன்,” என்று கூறுவோம். நம் வாழ்நாள் முழுவதும், சாகும்வரை, நாம் இந்த ஜெபத்தை ஏறெடுக்க வேண்டியிருக்கும்: “ஆண்டவரே, நான் இன்று உம்மை வாழ விரும்புகிறேன். இன்று இன்னும் அதிகமாக வாழ விரும்புகிறேன்.” இந்த ஜெபத்தில் நாம் பலவிதமான வார்த்தைகளைப் பயன்படுத்தலாம். ஆனால், சாராம்சத்தில் இதுதான் நம் ஜெபமாக இருக்கும்: “நான் உம்மை வாழ விரும்புகிறேன்.”
கிறிஸ்தவ வாழ்க்கை என்பது நிச்சயமாக வெளியே சில சட்டதிட்டங்களைவைத்து அதின்படி வாழும் வாழ்க்கை இல்லை. அதனால், கிறிஸ்தவ வாழ்க்கை என்பது சட்டதிட்டங்களே இல்லாத வாழ்க்கையும் இல்லை. அதாவது வெளியே சில புறம்பான சட்டதிட்டங்களைவைத்து கிறிஸ்தவ வாழ்க்கை வாழ முடியாது.
இரண்டாவது, கிறிஸ்துவைப்போல் வாழ்வதென்றால் அதில் ஒரு spontaneity இருக்கும். அது இயல்பான வாழ்க்கையாக இருக்கும். அது சுமையான வாழ்க்கையாக இருக்காது. இதற்கு அர்த்தம் கிறிஸ்தவ வாழ்க்கையில் துன்பங்களே கிடையாது என்பதல்ல. துன்பங்கள் இருக்கும், பாடுகள் இருக்கும். ஆனால், அது சுமையான வாழ்க்கையாக இருக்காது. அது இயல்பான வாழ்க்கையாக இருக்கும்.
மூன்றாவது, நாம் கிறிஸ்துவைப்போல் வாழ வேண்டும் என்பதால் நாம் “சுய–ஆக்கினைத்தீர்ப்பில்” வாழ்ந்துகொண்டிருக்க மாட்டோம். இதற்கு obsession என்று பெயர். எப்போது பார்த்தாலும் ‘நான் பேசினது தவறு, நான் சிரித்தது தவறு,’ என்று நம்மை நாமே ஆக்கினைக்குள்ளாக்கிக்கொள்கிற வாழ்க்கை அல்ல. இப்படி இல்லை. கிறிஸ்தவ வாழ்க்கை என்பது Self Obsession இல்லை. புத்த பிட்சுகள் அல்லது கத்தோலிக்க கன்னியாஸ்திரீகள் எப்படி வாழ்கிறார்கள்? Self Obsession . அவர்கள் தாங்கள் நடக்கும் விதத்தைக்குறித்து, அது எவ்வளவு மெல்ல இருக்க வேண்டும், எவ்வளவு இனிமையாக இருக்க வேண்டும், எவ்வளவு வேகமாக அல்லது மெதுவாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். ஒருவேளை அவர்கள், “சாப்பாட்டு அறைக்குச் செல்லும்போது நான் அளவுக்கு அதிகமாக வேகமாக நடந்துபோனேன். என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே. அவசரமாக நடந்ததால் நான் ஓரமாக நடப்பதற்குப்பதிலாக நடுவில் நடந்து போனேன்,” என்று பாவ அறிக்கைப்பண்ணக்கூடும். உண்மையிலே கிறிஸ்துவைப்போல் வாழும் போது நமக்கு இப்பேர்ப்பட்ட உணர்வுகள் வரும். ஆனால் அவர்கள் Self Obsessionனில் வாழ்கிறார்கள். உணர்வடைவதால் வாழவில்லை.
நான்காவது, மற்றவர்களை நாம் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கமாட்டோம். “இவர்களெல்லாம் கிறிஸ்துவைப்போல் வாழ்கிறார்களா?” என்று மற்றவர்களை நாம் தீர்க்கமாட்டோம். அதாவது “நாம் எப்படி வாழ்கிறோம். கத்தோலிக்கர்கள் எப்படி வாழ்கிறார்கள். CSIக்காரர்கள் எப்படி வாழ்கிறார்கள்” என்று நியாயந்தீர்க்கும் வாழ்க்கை இல்லை.
இந்த நான்கு விஷயங்களையும் நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
ரோமர் 8ம், கலாத்தியர் 5ம் மிகவும் நடைமுறைக்குரிய அதிகாரங்கள். இந்த இரண்டு அதிகாரங்களையும் 10 அல்லது 15 தடவை வாசித்துப்பாருங்கள். இன்னுங்கூட நான் சொல்லுவேன் குறைந்தது 100 தடவையாவது அந்த 2 அதிகாரங்களையும் வாசித்தால்தான் அதின் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்ள முடியும், அதில் ஒரு sequence of thoughts வரும்.
முதலாவது “நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்.” ரோமர் 8இல் வசனங்களை நாம் 1முதல் 16வரைத் தொடர்ந்துபடித்தாலுங்கூட எண்ணம் வசனத்தின்படி வராது. வசன அமைப்பின் காரணமாக வாக்கியங்களைக் கொஞ்சம் மாற்றியமைத்தால்தான் அதிலுள்ள எண்ண ஓட்டத்தை நாம் பார்க்க முடியும். “நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள். ஜீவ ஆவியானவர் உங்களில் இருக்கிறார் அல்லது பரிசுத்த ஆவியானவர் உங்களில் இருக்கிறார்.” இதுதான் முதல் எண்ணம். என்றைக்கு நாம் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தோமோ அன்றைக்கு நாம் கிறிஸ்துவினுடையவர்கள், அன்றைக்கு நாம் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டோம். எப்படி ஜீவன் நம் ஆவியில் இருக்கிறதோ, அப்படியே பரிசுத்த ஆவியானவர் நமக்குள் இருக்கிறார். இந்த உண்மைகள் மாறாத பிரமாணங்கள் போன்றவை. ஜீவ ஆவியானவர் அல்லது பரிசுத்த ஆவியானவர் உங்களில் இருக்கிறார்.
அப்புறம், “நம் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயிருந்தாலும், நம் ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயிருக்கிறது.” இப்பேர்ப்பட்ட வசனங்களைச் சொன்னாலே போதும், நாம் கேட்பவர்களை இழந்துவிடுவோம். கேட்பவர்களுக்குச் சலிப்பு ஏற்பட்டுவிடும்.
இது விளங்குகிறது இல்லையா? ஜீவ ஆவியானவர் நம்முடைய ஆவியில் இருக்கிறார். ஆகையால், நம்முடைய ஆவியில் இருக்கிற ஜீவ ஆவியானவருடைய ஒரு வேலை என்னவென்று கேட்டால் இந்த ஜீவனைத் தொடர்ந்து அளித்துக்கொண்டேயிருப்பது அல்லது இந்த ஜீவனை வளரச் செய்வது அவருடைய வேலை. இந்த ஜீவனை வளரச்செய்வதுதான் பரிசுத்த ஆவியானவருடைய ஒரேவொரு வேலை. பரிசுத்த ஆவியானவர் நமக்குள் இருப்பதற்கு ஒரேவொரு காரணம்தான் இருக்கிறது. கிறிஸ்து நமக்குள் ஜீவனாக இருக்கிறார். அந்த ஜீவன் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் வளர வேண்டும் என்பதுதான். இதற்காகத்தான் அவர் வேலை செய்கிறார்.
இந்த வேலை யாரிடத்தில் ஆரம்பிக்கிறது? நம்மிடத்தில் இல்லை. அவர் இந்த ஜீவனை நமக்குள் பலப்படுத்துகிறார். பரிசுத்த ஆவியானவர் ஜீவனைப் பலப்படுத்தும்போது அல்லது அந்த ஜீவனை வளரச்செய்யும்போது…ஒரு செடி ஒவ்வொரு கணமும் வளர்கிறதா அல்லது ஒவ்வொரு நாளும் வளர்கிறதா? ஒவ்வொரு கணமும் அது வளர்கிறது. நமக்குள் இருக்கும் ஜீவன்கூட, கிறிஸ்துவாகிய ஜீவன், வருடந்தோறும் வளர்கிறாரா அல்லது கணந்தோறும் வளர்கிறாரா? அதை notice பண்ண முடியாது. அது imperceptible progress.
சின்னப்பிள்ளைகள் table rose வளர்ப்பார்கள். அது வளர்ந்திருக்கிறதா என்று ஒவ்வொரு நாளும் அதைப் போய்ப் பார்ப்பார்கள். “நீ அதை ஒவ்வொரு நாளும் போய்ப் பார்க்காதே. நீ கண் வைத்தால் அது வளராது,” என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
பரிசுத்த ஆவியானவர் நமக்குள் இருக்கும் கிறிஸ்துவாகிய ஜீவனைப் பலப்படுத்துகிறார் அல்லது வளரச்செய்கிறார். இதை அவர் கணந்தோறும் செய்கிறார். இது நம் நினைவைப் பொறுத்த காரியம் இல்லை. இதை நான் என் நினைவில் வைத்திருந்தால் அவர் அதைச் செய்வார். இதை நான் என் நினைவில் வைத்திருக்கவில்லையென்றால் அவர் அதைச் செய்யமாட்டார் என்பதல்ல.
Table roseயை நான் நினைத்துக்கொண்டிருந்தால்தான் அது வளருமா? என் ஞாபகத்தில் இல்லையென்றால் அது வளராதா? அதை மறந்துவிட்டால் வளராதா? வளரும்.
பரிசுத்த ஆவியானவருடைய வேலை நம் ஞாபகத்தைப்பொறுத்த விஷயம் இல்லை. தேர்வு எழுதும்போது நீ பரிசுத்த ஆவியானவரை நினைத்துக்கொண்டிருக்கிறாயா? “ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை நீ செய்யக்கூடிய எல்லா வேலையையும் நிறுத்திவிட்டு ஜெபிக்க வேண்டும்,” என்று கத்தோலிக்க சந்நியாசிகள் சொல்வதுண்டு. தேர்வு எழுதும்போது பரிசுத்த ஆவியானவரை மறந்துவிடுகிறோம். ஒழுங்காகப் படித்தவன் அந்த 3 மணிநேரமும் கேள்வித்தாளைப் பார்த்து தேர்வு எழுதுவான். ஒழுங்காகப் படிக்காதவன்தான் ‘கர்த்தராகிய இயேசுவே’ என்று கூப்பிட்டுக்கொண்டிருப்பான். இதில் உண்மையாகவே பரிசுத்த ஆவியால் நிறைந்திருக்கிறவன் யார் என்று சொல்லுங்கள். 3 மணி நேரமும் ஒழுங்காகத் தேர்வு எழுதுகிறவன்தான். இது வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், இது தான் உண்மை. அந்த 3 மணிநேரமும் அவனுடைய மனம் கேள்வித்தாளிலும், எழுதும் பதிலிலும்தான் இருக்கிறது. அந்த 3 மணிநேரமும் பரிசுத்த ஆவியானவர் அவனுக்குள் ஜீவனை வளரச் செய்கிறாரா இல்லையா?
ஆவியானவருடைய காரியங்கள் அல்லது கிறிஸ்துவுக்குரிய காரியங்கள் நம் ஆவியில் தோன்றும். The Things of the Spirit. அப்படியானால் என்ன பொருள்? கிறிஸ்துவினுடைய அன்பு அல்லது ஒளி தோன்றும் அல்லது நீதி, பரிசுத்தம், பாடுகள், சிலுவை மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவை நம் ஆவியில் தோன்றும். இவைகளெல்லாம் எங்கிருக்கின்றன? ஜீவனில் இருக்கின்றன. ஆகையால், ஆவியானவர் ஜீவனை வளரச்செய்கிறார் என்றால் கிறிஸ்துவுக்குரிய காரியங்களை அவர் நம் ஆவியில் வெளியரங்கமாக்குகிறார் என்று பொருள். கிறிஸ்துவுக்குரிய இந்தக் காரியங்கள். எடுத்துக்காட்டாக, அவருடைய சிலுவை மரணம் நம் ஆவியில் வெளியரங்கமாகும்போது அதை நாம் உணர்வோமா உணரமாட்டோமா? நிச்சயமாக உணர்வோம்.
ஒரு மாணவனை ஓர் ஆசிரியர், “என்ன வீட்டுப்பாடம் எழுதிவிட்டுவந்திருக்கிறாய்? இப்படித்தான் எழுதுவதா?” என்று திட்டுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த மாணவனுக்கு எப்படித் தோன்றும்? வாத்தியாரைக் கடித்துக் குதறிவிடலாமா என்று தோன்றலாம்;. அவர்மேல் கசப்பு வரும், கோபம் வரும், எரிச்சல் வரும், வெறுப்பு வரும், தோல்வி வரும், மனம் உடைந்துபோவான். இந்த அனுபவம் எல்லாருக்கும் இருக்கும்.
அலுவலகத்திலிருந்து 6 மணிக்கு வீட்டுக்குக் கிளம்பலாம் என்று நினைக்கும்போது, குழுத் தலைவர் வந்து, “6.30 மணிக்கு ஒரு கூட்டம் இருக்கிறது,” என்று சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த நேரத்தில் பரிசுத்த ஆவியானவர் என்ன செய்வார் என்றால் கிறிஸ்துவுக்குரிய காரியங்களை நம் ஆவியில் வெளியரங்கமாக்குவார். இது அந்த நபருக்குத் தெரிய வருமா வராதா? தெரிய வரும். எப்படித் தெரிய வரும் என்றால் ஒரு மெல்லிய உணர்வு தோன்றும். அதை ஆவியானவருடைய sensation, registration, impress என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். ஓர் எதிரொலி…மெல்லிய குரலில் கேட்டால் எப்படி கேட்குமோ அப்படி…உடனே அது ஓர் எதிரொலி என்று நினைத்துவிட வேண்டாம். அது ஒரு fine impress.. அது என்ன செய்யும் என்றால் அது ஆவியானவரின் காரியங்களுக்குக் கவனம் செலுத்த வைக்கும். Be mindful of the Things of the Spirit. இது ஒன்றுதான் நாம் செய்யவேண்டிய காரியம் என்று நான் நினைக்கிறேன். இன்றைய என் புரிந்துகொள்ளுதலின்படி, அவர் impression தரும்போது நாம் அவைகளுக்கு அக்கறை செலுத்த வேண்டும். அப்போது நாம், “கர்த்தாவே, எனக்கு அது வேண்டும். அதற்கு நான் அக்கறை செலுத்த விரும்புகிறேன்,” என்று சொல்ல வேண்டும். இதுதான் நாம் செய்ய வேண்டியது. இதுதான் நம்மால் செய்ய முடிந்தது. வேறொன்றும் செய்ய முடியாது.
இவையெல்லாம், நான் சொன்ன இந்தக் காரியங்களெல்லாம், நம் அனுபவ வாழ்க்கையில் ஒரு வழிமுறையைப்போல் 1முதல் 6வரை என்று வரிசைக்கிரமமாக நடைபெறாது. எல்லாம் சட்டென்று கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்துவிடும். ஆசிரியை எதிர்த்துப் பேசி விடுவோம் அல்லது குழுத் தலைவரைப் பார்த்து, “உன் வேலையைப் பார்த்துக்கொண்டு போ” என்று சொல்லிவிடுவோம். அதற்குள் நான் சொன்ன எல்லாப் படிகளும் நடந்து முடிந்துவிடும் அல்லது “ஆண்டவரே, நீரே இதை அனுமதித்தீர்,” என்று வார்த்தைகளில் சொல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அமைதியாக இருந்திருப்போம். இதுவும் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்துமுடிந்துவிடும். நாம் இப்படி ஆவியானவரின் காரியங்களுக்கு அக்கறை செலுத்தும்போது அவருடைய ஜீவன் நம் எல்லாப் பகுதிகளையும் நிரப்பும்.
ஒரு செடி வளரும்போது இரண்டு இலைகள் வெளிவருகின்றன. கொஞ்ச நாட்கள் கழித்துத் தண்டு வருகிறது, கிளைகள் வருகின்றன. பின்பு பூ வருகிறது, காய் வருகிறது, கனி வருகிறது. இவைகளெல்லாம் எங்கிருந்து வருகின்றன? ஜீவனிலிருந்து வெளியரங்கமாகின்றன. அந்த ஜீவன் பூமியிலிருக்கிற கனிமங்களை எடுத்துக்கொண்டு வளர்கிறது. பொட்டாசியம் பாஸ்பரஸ்போன்ற கனிமங்களை எடுத்துக்கொண்டு அது வளர்கிறது. ஜீவன் இருக்கிறது. ஒரு செடி வளர்கிறது. முதலில் ஒரு சின்ன இலை வெளியரங்கமாகிறது. இது வெளியரங்கமா? வெளியரங்கம்தான். ஆனால், ரொம்ப சின்ன வெளியரங்கம்.
அதுபோல கிறிஸ்துவாகிய ஜீவன் வெளியரங்கமாவதற்கு நம்முடைய எண்ணங்கள், உணர்ச்சிகள், தீர்மானங்கள், சுவைகள், inclinations, tendencies, attributes எல்லாமே தேவைப்படுகின்றன. ஜீவன் இருக்கிறது. ஆவியானவருடைய வேலை என்னவென்று கேட்டால், அந்த ஜீவன் முழுவதும் வெளியரங்கமாவதற்கு அவர் எதையெல்லாம் எடுக்க விரும்புகிறார் என்றால் நம்முடைய மனப்பாங்கு, நம்முடைய சுவை, நம்முடைய எண்ணங்கள், நம்முடைய உணர்ச்சிகள், நம்முடைய தீர்மானங்கள் இவைகளெல்லாமே அவருக்குத் தேவை. நாம் அதற்கு அக்கறை செலுத்தும்போது, அந்த ஜீவனைப் பெருகப்பண்ணுகிறார், அபரிமிதமாக்குகிறார்.
அந்த ஜீவன் மிகவும் பலமுள்ளதாகிவிடுகிறது. இன்னும் சொல்லப்போனால் நம் ஆத்துமாவின் எல்லாப் பகுதிகளுக்கும் அவர் ஜீவனை வழங்குகிறார். “அவர் நம் சாவுக்கேதுவான சரீரத்திற்கு ஜீவனை அளிக்கிறார்,” என்று ரோமர் 8:11 கூறுகிறது. ரொம்ப முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த ஜீவன் மிகவும் பலமான ஜீவன், வல்லமையான ஜீவன். இது பலவீனமான நோஞ்சான்போன்ற ஜீவன் இல்லை. நமக்கு ஏன் கோபம் வருகிறது? அந்த ஜீவனின் வல்லமையைவிட நம் கோபம்தான் மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கிறது. ஆவியானவரின் காரியங்களுக்கு அக்கறை செலுத்தினால் அந்த ஜீவன் அபரிமிதமாகும்.
அதற்கடுத்து “ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்” (ரோமர் 8:13). கிறிஸ்துவின் காரியங்கள் நம் ஆவியில் வெளியரங்கமாகின்றன. அதில் ஒரு காரியம் அவருடைய சிலுவை மரணம். நம்முடைய மாம்சத்தின் கிரியைகள் என்னவாகும் என்று கேட்டால், அவருடைய ஜீவன் இதை சிலுவை மரணத்திற்குட்படுத்தும். அதை நாம்தான் செய்ய வேண்டும். ஒரு பக்கம், அது அவருடைய ஜீவன், இன்னொரு பக்கம் நாம்தான் அதைச் செய்ய வேண்டும். நம் ஆவியினால்.
அதற்கடுத்த வசனம்: “எவர்கள் தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுகிறார்களோ அவர்கள் தேவனுடைய புத்திரர்களாயிருக்கிறார்கள்.” நடத்தப்படுவதென்றால் நான் என்ன வேலை பார்க்க வேண்டும், எந்த ஊரில் பார்க்க வேண்டும் என்பதல்ல. இது இந்த நடத்துதலைப்பற்றிச் சொல்லவில்லை. ஆவியானவர் எங்கு நடத்துவார் என்று சொன்னால், கிறிஸ்துவின் காரியங்கள் நம் வாழ்க்கையில் நிஜமாவதற்கு நடத்துவார். எப்படி நடத்துவார்? கிறிஸ்துவின் காரியங்களை அவர் நம் ஆவியில் வெளியரங்கமாக்குவார். கிறிஸ்துவினுடைய காரியங்களில் மிக முக்கியமான காரியம் அவருடைய சிலுவை மரணம்.
உன் ஆசிரியர் உன் வீட்டுப்பாடத்தைப்பற்றி கன்னாபின்னாவென்று திட்டும்போது, அவர் கிறிஸ்துவுக்குரிய ஒரு காரியமாகிய தன் மாம்சத்தின் கிரியைகளை எப்படி சிலுவை மரணத்திற்குட்படுத்தினாரோ அதை நம் ஆவியில் வெளியரங்கமாக்குவார். அதற்கு நாம் அக்கறை செலுத்தினால் அந்த ஜீவன் அபரிமிதமாகி நாமும் நம் மாம்சத்தின் கிரியைகளை சிலுவை மரணத்திற்குட்படுத்துவோம். இதன்மூலம் நாம் அவருடைய குமாரர்களாக வேண்டும். இதைத்தான் ரோமர் 8ஆம் அதிகாரம் ‘ஆவியின்படி நடத்தல்’ என்று கூறுகிறது. ஆவியானவர் முன்னேயிருந்து நம்மை நடத்துகிறார். நாம் அந்த ஆவியின்படி நடக்க வேண்டும். அவர் கிறிஸ்துவுக்குரிய காரியங்களுக்குள் நடத்துகிறார். நாம் அவரைப் பின்பற்றி நடக்கிறோம். எப்படிப் பின்பற்றி நடக்க வேண்டும்? Be mindful of the things of the Spirit. இந்த ஒரேவொரு வாக்கியத்தை மட்டும் நாம் நினைவில் வைத்துக்கொள்வோம்.
இன்னொன்று, ஒரு நெருக்கடி வரும்போது…நெருக்கடி என்றால் என்ன? ஆசிரியர் உன்னைத் திட்டுவது உனக்கு ஒரு நெருக்கடி, உன் குழுவின் தலைவர் உன்னை 6 மணிக்குமேல் வேலை செய்யச் சொல்வது உனக்கு ஒரு நெருக்கடி, மாணவர்கள் தேர்வு எழுத மாட்டோம் என்பது ஆசிரியனாகிய எனக்கு ஒரு நெருக்கடி. நமக்கு நெருக்கடி வரும்போது பல சமயங்களில் நாம் ஆவியின்படி நடக்க முயற்சிசெய்வோம். ஆனால், நாம் ஆவியின்படி நடப்பதில்லை. இதற்கு என்ன காரணம்?
ஆவியானவர் இருக்கிறார். கிறிஸ்துவின் ஜீவன் நம்மில் வளர்வதற்காகவும் வெளியரங்கமாவதற்காகவும் அவர் நம்மில் எப்போதும் வேலை செய்துகொண்டிருக்கிறார். அதனால் அந்த ஜீவனிலிருக்கிற கிறிஸ்துவின் காரியங்கள் நம் ஆவியில் வெளியரங்கமாகும். அப்போது நாம் ஆவியானவரின் காரியங்களுக்கு அக்கறை செலுத்துவோம். அப்படி அக்கறை செலுத்தினால் போதும். “கர்த்தாவே, எனக்கு அது வேண்டும்” அல்லது “கர்த்தாவே, நீர் எனக்கு வேண்டும்,” என்று சொன்னால் போதும். அவர் உடனே வந்து நம் எல்லாப் பகுதிகளையும் ஜீவனைக்கொண்டு நிரப்புகிறார். அதில் ஒன்று நாம் நம் மாம்சத்தின் கிரியைகளை சிலுவை மரணத்திற்குட்படுத்துவோம். இதன்மூலம் நாம் வளர்கிறோம். அவருடைய குமாரர்களாகிறோம்.
ஆனால் நெருக்கடி வரும்போது இது ஏன் பலமுறை வெற்றிபெறுவதில்லை? நெருக்கடி வரும்போது நம் உணர்ச்சிகள் கொந்தளித்துவிடுகின்றன என்பதாலா? இரண்டுவிதமான நடை இருக்கின்றன. இந்த இரண்டு நடைகளில் ஒன்று நம் அன்றாட வாழ்க்கையின் சாதாரணமான விவகாரங்கள் அடங்கியுள்ளன. இதில்தான் நாம் Be mindful of the things of the Spirit என்று போடப்பட்டிருக்கிறது. காலையில் எழுந்திருக்கிறோம், படுக்கையைச் சரிசெய்கிறோம், குளிக்கச் செல்கிறோம், சாப்பாட்டு மேஜையைச் சுத்தம்செய்கிறோம், சமையல் வேலைக்கு உதவி செய்கிறோம் அல்லது உதவி செய்யாமல் இருக்கிறோம், துணிகள் இஸ்திரி போடுகிறோம். பள்ளிக்கோ கல்லூரிக்கோ வேலைக்கோ போகிறோம், அவசரமாகப் போகிறோம் அல்லது மெதுவாகப் போகிறோம், பிள்ளைகளுக்கு வேலை கொடுக்கிறோம். அவர்கள் செய்கிறார்கள் அல்லது செய்யாமல் போகிறார்கள். செய்யாமல் போனால் கோபம் வருகிறது அல்லது கோபம் வராமல் போகிறது. இவைகளெல்லாம் அன்றாட வாழ்க்கையில் சாதாரணமான காரியங்கள். இதில்தான் நாம் Be mindful of the things of the Spirit. இதில்தான் உங்கள் மனதை ஆவியின்மேல் பொருத்துங்கள். இதன்விளைவு என்னவென்றால் ஜீவன் அபரிமிதமாக இருக்கும். மாம்சத்தின் கிரியைகளை நாம் நிச்சயமாக மரணத்திற்குட்படுத்துவோம். என்னுடைய புரிந்துகொள்ளுதல் என்னவென்றால் இந்த சாதாரணமான காரியங்களில் நாம் ஆவியானவரின்படி நடக்காவிட்டால் நெருக்கடி வரும்போது நம்மால் ஆவியானவரின்படி நடக்க முடியாது. ஏனென்றால், நாம் சாதாரணமாகவே நம் வாழ்வின் அன்றாட காரியங்களில் நாம் ஆவியானவரின்படி நடக்காமல் மாம்சத்தின்படியே நடந்து பழக்கப்பட்டிருந்தால்…ஒரு குறிப்பிட்ட அம்சத்தில் ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம், ஒரு வருடம், பல வருடங்கள் ஒரே மாதிரி நடந்து பழக்கப்பட்டிருந்தால்…எடுத்துக்காட்டாக செய்தித்தாள் படிக்கிற பழக்கம். வேதாகமத்தை வாசிப்பதுபோல முதலிலிருந்து கடைசிவரை படிக்கும் பழக்கம் ஒருநாள், ஒரு வாரம், ஒரு மாதம், ஒரு வருடம் என்று என் மாம்சத்தின்படியே நடந்து நடந்து…இதை நிறுத்த முடியாது என்ற நிலையை எட்டி விட்டோம்.
மாணவர்கள் தங்கும் விடுதியில் அசிங்கமான படங்கள் ஒட்டிவைத்திருப்பார்கள். இவன் பாலியல் சோதனைக்கு ஆளாகும்போது அதற்குப் பலியாகிவிடுவான். காரணம் என்ன? காலையில் எழுந்ததும் இவன் எதில்தான் கண்விழிக்கிறான்? அப்படிப்பட்ட படங்களில்தான். சுவர் முழுவதும் அதைத் தான் ஒட்டி வைத்திருப்பார்கள். அவனுடைய மனம், உணர்ச்சி, சித்தம் எல்லாம் மாம்சத்தின்படி நடந்து நடந்து பலவீனமாகி கீழ்நோக்கிச் செல்லும் போக்கில் இப்போது உச்சகட்டத்தில் இருக்கிறது. இந்த சமயத்தில் நாம் “இப்போது ஆவியின்படி நடக்கப்போகிறேன்” என்று சொன்னால் நடக்க முடியாது. தோல்விதான். எங்கே நாம் ஆவியின்படி நடக்க ஆரம்பிக்க வேண்டும்? அன்றாட வாழ்க்கையின் சாதாரணமான காரியங்களில் நாம் ஆவியானவரின்படி நடந்திருந்தால் நெருக்கடி வரும்போது அந்தப் பழக்கம் நமக்குக் கைகொடுக்கும்.
பழைய ஏற்பாட்டில் ஒரு நல்ல எடுத்துக்காட்டு உண்டு. கோலியாத்துடன் சண்டை போடுவதற்காக தாவீது செல்கிறான். கோலியாத் ஒரு மாபெரும் போர்வீரன். தாவீது ஒரு மேய்ப்பன், இடையன். அவன் கோலியாத்துக்கு எதிராகப் போருக்குச் செல்லும்போது அவனுக்குப் போர்க்கவசங்களை மாட்டி, கேடகங்களைக் கொடுத்து போகச் சொன்னார்கள். அவன் அவைகளைப் போட்டுக் கொண்டு நடந்து பார்த்து, “இவைகளைப் போட்டுக்கொண்டு என்னால் யுத்தத்திற்குச் செல்ல முடியாது,” என்று கூறினான். காரணம் என்ன? அவனுக்கு அதில் அப்பியாசம் இல்லை, பழக்கம் இல்லை. பழக்கம் இல்லாத ஒன்றை திடுதிப்பென்று செய்யச் சொன்னால் செய்ய முடியாது. இப்போது நெருக்கடி வந்திருக்கும்போது இவன் கவசங்களை அணிந்துகொண்டு, கேடகங்களைப் பிடித்துக்கொண்டு போய் நின்றால் அது வேலை செய்யுமா? வேலை செய்யாது,
எரேமியா 12:5: “நீ காலாட்களோடே ஓடும்போதே உன்னை இளைக்கப்பண்ணினார்களானால் குதிரைகளோடே எப்படிச் சேர்ந்து ஓடுவாய்?” கர்த்தர் நம்மை முதலாவது குதிரைகளோடு சேர்ந்து ஓட விடுவதில்லை. அவர் நம்மை முதலாவது காலாட்களோடே நடந்துபோகச் செய்கிறார். இந்த காலாட்கள் யார்? காலையில் எழுந்து வந்து, “என்ன காப்பி ஆறிப்போச்சி?” என்று சொல்வது காலாட்களோடு யுத்தம். இது குதிரைகளோடே சண்டையா அல்லது காலாட்களோடே சண்டையா? காலாட்களோடே. அல்லது போர்வையை மடித்து வைக்கிறோமா அல்லது மடிக்காமல் வைக்கிறோமா. இதற்கு அர்த்தம் நான் சட்டம் கொடுக்கிறேன் என்றல்ல. போர்வையை மடித்துவைத்தால் அவர் பெரிய ஆவிக்குரியவன் என்று நான் சொல்லவரவில்லை. போர்வையை மடித்துவைத்து விட்டு, மடித்துவைக்காதவர்களைப் பார்த்து, “இவனெல்லாம் என்ன கிறிஸ்தவன்” என்று நினைத்தால் அவன்தான் பரிதாபமான கிறிஸ்தவன் அல்லது அதை ஒழுங்காக மடித்துவைக்கவில்லையென்றால் அவன் மனமுறிந்துபோவான். அன்றாட வாழ்க்கையின் சாதாரணமான காரியங்களில் நாம் ஆவியானவரின் காரியங்களுக்குக் கவனத்தைச் செலுத்தும்போது, அக்கறை செலுத்தினால் போதும். மற்றதை ஆவியானவர் பார்த்துக்கொள்வார். “ஆண்டவரே, அது எனக்கு வேண்டும். அதுதான் என் தேவை.” குதிரைகளோடே ஓடும்போது நாம் ஆவியின்படி நடப்போம்.
எங்கே தெரியுமா ஆரம்பிக்க வேண்டும்? நம் பழக்கங்கள் ஒரு structure போன்றவை. பல பழக்கங்கள் சேர்ந்து ஒன்றோடொன்று இணைந்து, பொருந்தி, பின்னிப் பிணைந்திருக்கின்றன. It is a structure of habits. ஒரு பழக்கம் இன்னொரு பழக்கத்தோடு தொடர்புடையது. அந்தப் பழக்கம் இன்னொரு பழக்கத்தோடு தொடர்புடையது. இந்தப் பழக்கம் மற்ற மூன்று பழக்கத்தோடு தொடர்புடையது. எடுத்துக்காட்டாக, காலையில் எழுந்திருக்க முடியவில்லை. அதற்குக் காரணம் என்ன? இரவு தாமதமாகப் படுக்கைக்குச் செல்வது. ஏன் தாமதமாகப் படுக்கைக்குச் சென்றோம்? ஒருவேளை சில விருந்தினர்கள் வந்திருப்பார்கள். அவர்களுடன் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்திருப்போம். “பேசினது போதும். சரி கிளம்புங்க,” என்று சொல்லுகிற தைரியம் நமக்கு இருக்காது. ஒருவேளை மத்தியானம் தூங்கியிருப்போம். இந்தப் பழக்கங்களையெல்லாம் உடைக்காமல் காலையில் எழுந்து ‘தேவனை நோக்கிக் கூப்பிட வேண்டும்’ என்றால் எப்படிக் கூப்பிடுவது? ஒருவகையான குற்ற உணர்ச்சிக்குள்ளாகிவிடுவான். கொஞ்ச நாட்களுக்கு முயற்சிசெய்வார்கள். முடியவில்லையென்று தெரிந்ததும், “என்னால் முடியாது, உங்கள் ஆலோசனையையெல்லாம் எடுத்துக்கொள்ள முடியாது,” என்று கைவிட்டுவிடுவார்கள். அதற்குக் காரணம் முடியாது என்பதல்ல. அவர்களுடைய பழக்கம் ஒரு structureஆக மாறிவிட்டது. நாம் எங்கே போய் முதலாவது பிடிக்க வேண்டும்? ஒரு சின்ன பழக்கத்தை உடைக்க வேண்டும். எடுத்ததுமே ஒரு பெரிய பழக்கத்தை உடைக்கச்சொல்ல மாட்டார்கள். ஒருவனிடம் பல கெட்ட பழக்கங்கள் இருக்கலாம். அதில் ஒரு சின்ன கெட்ட பழக்கம் இருக்கும். அதைவிட இன்னும் சிறிய கெட்ட பழக்கம் இருக்கும். முதலாவது எங்கே ஆரம்பிக்க வேண்டும்? சாதாரணமான காரியங்கள். எடுத்துக்காட்டாக, செய்தித்தாள் படிக்கிறோம். படித்து முடித்தபிறகு அதை ஒழுங்காக மடித்து வைப்போம். இதிலேயே நாம் இன்னும் போராடிக்கொண்டுதான் இருக்கிறோம். பரவாயில்லை. ஆனால், சண்டை நிறுத்தம் மட்டும் அறிவிக்கக்கூடாது. சண்டை நிறுத்தம் அறிவித்தால் என்ன நடக்கும்? அந்த நேரத்தைப் பயன்படுத்தி எதிரி இன்னும் நிறைய ஆட்களைச் சேர்த்துக்கொள்வான், நிறைய ஆயுதங்களைச் சேர்த்துக்கொள்வான். அதுபோல, Be mindful of the things of the Spirit in ordinary things. அப்போது, நெருக்கடி வரும்போது we will be mindful of the things of the Spirit and we can walk according to the Spirit.