Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

கிறிஸ்துவைக்கொண்டு நிரப்புதல்-தடைகள்

Transcribed from a message spoken in November 2014 in Chennai

By Milton Rajendram

காலங்களின் முடிவில் எல்லாவற்றையும் கிறிஸ்துவைக்கொண்டு நிரப்புதல்

இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் தம் மகனாகிய கிறிஸ்துவைக்கொண்டு நிரப்புவதே தேவனுடைய இலக்கு. அதுபோல, நம் அழைப்பின் இலக்கும், கிறிஸ்துவைக்கொண்டு நம்மை நிரப்புவதும், நம்மூலம் கிறிஸ்துவைப் பலருக்குள் நிரப்புவதுமே. இவைகளையெல்லாம் நீங்கள் உங்கள் இருதயத்தின் ஆழத்தில் பதித்துக்கொள்ள வேண்டும் என்று மிகவும் வாஞ்சிக்கிறேன். தேவனுடைய இலக்கு அவருடைய குமாரனாகிய கிறிஸ்துவைக்கொண்டு இந்தப் பிரபஞ்சத்தை நிரப்புவது. நம்முடைய இலக்கும் கிறிஸ்துவை ஆதாயம்பண்ணுவதும், கிறிஸ்துவால் நிரப்பப்படுவதும், நம்மூலமாய்ப் பிறர் கிறிஸ்துவை ஆதாயம்பண்ணுவதும், கிறிஸ்துவால் நிரப்பப்படுவதுமாக இருக்க வேண்டும்.

குமாரனில் பிதாவின் மகிழ்ச்சி

இந்த முழு புதிய ஏற்பாட்டிலும் அல்லது இந்த முழு வேதாகமத்திலும், பிதாவாகிய தேவனை மகிழ்வுறச் செய்வது, அவரை மகிழச் செய்வது ஒன்றேவொன்றுதான் என்று நாம் பார்க்கிறோம். மத்தேயு 3, 17ஆம் அதிகாரங்களிலுள்ள வசனங்களில் இதை நாம் வாசிக்கிறோம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெறும்போது வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, “இவர் என் அன்பின் குமாரன், இவரில் நான் மகிழ்ச்சியடைகிறேன், இவரில் நான் இன்புறுகிறேன்,” என்று ஒரு சாட்சியை தேவன் சொன்னார். அதேபோல் மத்தேயு 17ஆம் அதிகாரத்தில் மறுரூப மலையிலே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து யோவான், யாக்கோபு, பேதுரு என்ற மூன்று பேருக்குமுன்பாக மறுவுருவாகும்போது, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, “இவர் என் அன்பின் குமாரன், இவரில் நான் மகிழ்ச்சியடைகிறேன், இவரில் நான் இன்புறுகிறேன்,” என்று ஒரு சாட்சியை தேவன் சொன்னார்.

இவைகளுக்கும், நம்முடைய வாழ்க்கைக்கும் ஏதோவொரு பெரிய இடைவெளியும், பிளவும் இருப்பதுபோல் நாம் நினைக்கக்கூடாது. இது ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கிறது. பிதாவினுடைய மகிழ்ச்சி, பிதாவினுடைய இன்பம், இந்த உலகத்திலே அவர் குமாரனைக் காண விரும்புகிறார். தனிப்பட்ட குமாரனாக வாழ்வதைக் காண விரும்புகிறார் என்பது மட்டுமல்ல. காலங்கள் முடிவடையும்போது, காலங்கள் நிறைவேறும்போது, யுகங்கள் நிறைவேறும்போது தேவன் இந்த உலகங்களிலே அல்லது இந்தப் பிரபஞ்சத்திலே ஒன்றேவொன்றைத்தான் காண விரும்புகிறார். அது அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து. தனிப்பட்ட நபராகிய கிறிஸ்துவை மட்டுமல்ல. அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து ஒரு கூட்டம் அல்லது ஒரு சமுதாய மக்களுக்குள் உருவாக்கப்பட்டு, அவர்கள் எல்லாரிலும் பிதாவாகிய தேவன் அவருடைய குமாரனாகிய கிறிஸ்துவை மட்டுமே காண விரும்புகிறார். அந்த நாளிலே “இவர்களுக்குள் இருப்பவர் என்னுடைய அன்பின் குமாரன்,” என்று அவர் சாட்சி பகருவார். “இவர்களுக்குள் இருக்கிற என்னுடைய அன்பின் குமாரனைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், மிகவும் இன்புறுகிறேன்,” என்று சாட்சி பகர்வார். பரலோகத்தில் இருக்கிற குமாரனைக் கண்டு இன்புறுவதைப்பற்றி, மகிழ்ச்சியுறுவதைப்பற்றி அவர் பேசவில்லை. யாருக்குள் இருக்கிற குமாரனைக் கண்டு அவர் மகிழ்ச்சியுற விரும்புகிறார்? தேவனுடைய மக்களுக்குள் அவர் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைக் கண்டு, மகிழ்ச்சியடைகிறார், அவர் இன்புறுகிறார்.

ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவைக்கொண்டு நிரப்பப்படுதல்

“நான் இன்றைக்குப் படிக்க வேண்டும்; எனக்கு இன்றைக்கு உடல்நிலை சரியில்லை; நான் ஒரு சைக்கிள் வாங்க வேண்டும் அல்லது மோட்டார் பைக் வாங்க வேண்டும்; வீடு வாங்க வேண்டும். நான் ஒரு வேலை பார்க்க வேண்டும்; வியாபாரம் பண்ண வேண்டும்; ஊழியம் பண்ண வேண்டும்; ஆயிரம்பேர், பத்தாயிரம்பேர் கொண்ட மெகா சபைகள் எழுப்ப வேண்டும்,” என்று பலர் பலவிதமாக நினைக்கலாம். இதற்கும் பிதாவானவர் அவருடைய குமாரனாகிய கிறிஸ்துவைக்கொண்டு என்னையும், என் மூலமாகப் பிறரையும் நிரப்ப விரும்புகிறார் என்பதற்கும் என்ன தொடர்பு? என்றைக்குப் பிதாவானவர் அவருடைய குமாரனாகிய கிறிஸ்துவைக்கொண்டு என்னை நிரப்பப்போகிறார்? நாம் சாகும்போது அவர் நிரப்புவது இல்லை அல்லது செத்து உயிர்த்தெழும்போதும் அவர் நிரப்புவதில்லை. இது சில தேவனுடைய மக்களுடைய தவறான கருத்து. ஒவ்வொரு நாளும், அவர் நிரப்ப விரும்புகிறார். “இந்த உலகத்திலே நம்முடைய வாழ்க்கை எப்படி இருந்தாலும் சரி; மரித்து உயிர்த்தெழும்போது திடுதிப்பென்று நாம் தேவனுக்குப் பிரியமானவர்களாக மாறிவிடுவோம். ஏதோவொரு வகையில் அற்புதம் செய்து தேவன் நம்மை அவருக்குப் பிரியமான மக்களாக மாற்றிவிடுவார்,” என்பது தவறு. அப்படி அல்ல. ஒவ்வொரு நாளும் அவர் கிறிஸ்துவைக்கொண்டு நம்மை நிரப்ப விரும்புகிறார். கிறிஸ்துவைக்கொண்டு நிரப்புவதற்காகவே காலைமுதல் மாலைவரை, ஞாயிறுமுதல் சனிக்கிழமைவரை, மாதத்தின் 31 நாட்களும், வருடத்தின் 365 நாட்களும் நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும், பிதாவாகிய தேவன் மிகக் கவனமாகவும், மிகச் சிரத்தையோடும், துல்லியமாகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 24 மணி நேரமும் நடக்கிற எல்லாச் சம்பவங்களுக்கும்பின்பு, கிறிஸ்துவைக்கொண்டு நிரப்புவது, பிதாவாகிய தேவனுடைய திட்டத்தின் இலக்கு.

கிறிஸ்துவை ஆதாயம்பண்ணுதல்

நம்முடைய மகிழ்ச்சியும், நம்முடைய துக்கமும் ஒன்றேவொன்றில்தான் இருக்க வேண்டும். கிறிஸ்துவை நான் ஆதாயம்பண்ணுகிறேன் என்றால் அது மகிழ்ச்சி. கிறிஸ்துவை நான் இழக்கிறேன் என்றால் அது வருத்தம். கிறிஸ்துவை ஆதாயம்பண்ணினால்தான் மகிழ்ச்சி இருக்க வேண்டும். கிறிஸ்துவை இழந்தால்தான் துக்கம் இருக்க வேண்டும் என்று நான் சொல்லும்போது கொஞ்சம் over spiritual ஆக இருக்க வேண்டும் என்பதற்காக நான் அப்படிச் சொல்லவில்லை.

இதைப்பற்றி நான் யோசிக்கவில்லை என்று நினைக்கிறீர்களா? இன்னும் நாம் யோபுவின் நிலைமைக்கோ அல்லது எபிரெயர் 11ஆம் அதிகாரத்தில் உள்ள மோசேயின் நிலைமைக்கோ வந்துவிடவில்லை. எகிப்தின் அரசியின் மகன், இளவரசன், என்று அழைக்கப்படுவதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே பாடநுபவிப்பதையே அவன் தெரிந்துகொண்டான். அவன் முட்டாளா? மதியற்றவனா? அறிவிலியா? உணர்ச்சிவசப்பட்டு அதைச் செய்தானா? நம்மை ஏமாற்றுவதற்காகவா இவைகளெல்லாம் தேவனுடைய வார்த்தையில் எழுதப்பட்டிருக்கின்றன?

தேவனுடைய மக்களிடத்தில் இவைகளைக் காட்டி, “கிறிஸ்துவை ஆதாயம்பண்ணுவதுதான் முக்கியம். அதனால் வேறு எதுவும் முக்கியம் இல்லை. நம்முடைய பிள்ளைகள் படிக்கக்கூடாது,” என்று நான் சொல்லவில்லை. படிக்க வேண்டும்; அது எனக்கு மகிழ்ச்சி. நிறையப் பணம் சம்பாதிக்கிற வேலைக்குப் போக வேண்டும்; அது எனக்கு மகிழ்ச்சி. ஏற்றகாலத்திலே நல்ல ஒரு திருமணம் செய்ய வேண்டும்; அது எனக்கு மகிழ்ச்சி. அதற்குப்பிறகு வீடு வாங்க வேண்டும்; அது எனக்கு ஒரு மகிழ்ச்சி. ஆனால், கிறிஸ்துவினிமித்தம் என் பிள்ளைகள் ஏதோவொன்றை இழக்கின்ற நாளிலே நான் அதிகமாக மகிழ்ச்சியடைவேன். “இது கிடைத்திருக்கலாம். ஆனால், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை ஆதாயம்பண்ணுவதற்காக நான் அதை இழக்கத் தீர்மானித்தேன்,” என்ற ஒரு அனுபவம். அது ஒருநாள் அனுபவம் இல்லை. ஒவ்வொரு நாளும் அது அன்றாட வாழ்க்கையிலே நம் மனப்பாங்காக இருக்குமென்றால் நான் மகிழ்ச்சியடைவேன். “இப்படிச் சொல்வதின்மூலம் படிப்பதை நீங்கள் ரொம்ப discourage பண்ணுகிறீர்கள். நல்ல வேலை பார்த்து பணம் சம்பாதிப்பதை உற்சாகப்படுத்தவில்லை,” என்று சிலர் நம்மைக் குறித்துக் குற்றம் சாட்டலாமே! கிருபை பெருகும்படிக்கு பாவத்தில் நிலைத்துநிற்கலாமா? “கிறிஸ்துவை ஆதாயம்பண்ணும்படிக்குப் படிக்காமல் இருக்கலாம். கிறிஸ்துவை ஆதாயம்பண்ணும்படிக்கு வேலை செய்யாமல் இருக்கலாம்,” என்று நாங்கள் சொல்வதாக சிலர் எங்களைக்குறித்துக் குற்றம் சாட்டலாம்.

கிறிஸ்துவே நம் அஸ்திபாரம்

1 கொரிந்தியர் 3, பிலிப்பியர் 3, திருவெளிப்பாடு கடைசி இரண்டு அதிகாரங்கள் ஆகியவைகளை வாசித்துப்பாருங்கள். 1 கொரிந்தியர் 3ஆம் அதிகாரத்திலே அப்போஸ்தலனாகிய பவுல், “போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய கிறிஸ்துவைத்தவிர வேறொரு அஸ்திபாரத்தை ஒருவனும் போட முடியாது,” என்று சொல்கிறார். தேவனுடைய மக்களுக்கு ஒரேவொரு அஸ்திபாரம்தான் உண்டு. அது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து. அஸ்திபாரம் என்றால் என்னவென்று சிந்தித்துப்பார்க்க வேண்டும். நம் வாழ்க்கையினுடைய அடித்தளம், நம்முடைய வாழ்க்கையினுடைய அஸ்திபாரம், நம்மைத் தாங்கி நிற்பது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே. நம்முடைய படிப்பினாலும், நம்முடைய வேலையினாலும், நம்முடைய உறவினர்களாலும், நம்முடைய நண்பர்களாலும் இந்த உலகத்தில் நாம் நிலையாக நிற்கிறோம் என்று ஒருவேளை நாம் நினைக்கலாம். “என் சாமர்த்தியமும், என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிரு” (உபா. 8:17) என்று தேவனுடைய வார்த்தை கூறுகிறது. “பலமுள்ளவனுக்காகிலும், பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு இலேசான காரியம்” (2 நாளா. 14:11). “எண்ணிக்கையில் நிறைய இருப்பவர்களுக்காகிலும், எண்ணிக்கையில் குறைவாயிருப்பவர்க்காகிலும் உதவி செய்வது உமக்கு இலேசான காரியம்.” 

அருமையான பரிசுத்தவான்களே, “நம்முடைய அஸ்திபாரம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து” என்று பவுல் சொல்லுகிறார். அதன்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கற்கள், புல், மரம், வைக்கோல் இவைகளைவைத்து நாம் வாழ்க்கையைக் கட்டலாம் என்று அவர் சொல்கிறார். அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளது என்று ஒருநாள் வெளியாகும் என்று எழுதியிருக்கிறது. மரம், புல், வைக்கோல் இவைகளைவைத்துக் கட்டினால் அது எரிந்துபோகும், அது வெந்துபோகும். ஆனால் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கற்களைவைத்துக் கட்டினால் அது வெந்துபோகாது, அது எரிந்து போகாது. நாளானது அதை விளங்கப்பண்ணும் என்று பவுல் சொல்கிறார்.

ஒரு நாள் வருகிறது. அந்த நாளிலே ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் தரம் என்ன? ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் உள்ளீடு என்ன? ஒரு மனிதனுடைய வாழ்க்கையினுடைய உட்பொருள் என்ன? ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் மதிப்பு என்ன? அதில் என்ன அருமையானது என்பதை தேவன் ஒரு நாளிலே மதிப்பிடுவார். அது மனிதர்கள் மதிப்பிடுகிற எல்லா மதிப்பீடுகளுக்கும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். பல மனிதர்கள் அதிர்ச்சி அடைவார்கள். “தேவன் இப்படித்தான் மதிப்பிடுவார் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால், அவர் வேறுவிதமாக மதிப்பிட்டுவிட்டாரே!” என்று சிலர் சொல்வார்கள். தேவன் மதிப்பிடுவது, நாம் உட்பட, பலருக்கு அதிர்ச்சியாக இருக்கும். இன்றைக்கு நாம் நம்முடைய வாழ்க்கையின் எல்லா வேலைப்பாடுகளையும், “ஆண்டவரே நீர் மதிப்பிடுகிற வண்ணமாகவே நான் மதிப்பிட விரும்புகிறேன்,” என்று சொல்ல வேண்டும். 1 கொரிந்தியர் 1, 2, 3 ஆகிய அதிகாரங்களிலும்கூடத் தேவனுக்கு எது அருமையானது, தேவனுக்கு எது மதிப்புள்ளது, தேவனுக்கு எது பொருளுள்ளது என்பதைப்பற்றி நான் யோசித்தேன்.

தடைகள்

1. மதிப்பற்ற, நேர்த்தியான மனித வாழ்க்கை

இரண்டு விதமான தடைகள் உண்டு. இதை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒன்று நம்முடைய வாழ்க்கையிலே நாம் தீமை எதுவும் செய்வதில்லை. நாம் படிப்போம். நாம் வேலைக்குப் போவோம். சிக்கனமாக வாழ்வோம். வீடு வாங்குவீர்கள். கார் வாங்குவீர்கள். கடனில்லாத வாழ்க்கை வாழ்வீர்கள். நல்ல உடல்நலம் உங்களுக்கு இருக்கும். உங்களுக்குத் தேவன் நல்ல மக்களைத் தருவார். அவர்களை நன்றாக வளர்ப்பீர்கள். உங்கள் வாழ்க்கை மிகவும் ஆசீர்வாதமாக இருக்கும். ஆனாலும், நம்முடைய வாழ்க்கையின் முடிவுக்கு வரும்போது அது மரம், புல், வைக்கோலாக மட்டும் இருக்க வாய்ப்பு உண்டு. இது உங்களுக்கு அதிர்ச்சியைத் தரும். “நான் எந்தத் தவறும் செய்யவில்லையே. யாருக்கும் எந்தத் தீங்கும் இழைக்கவில்லையே!” என்று நீங்கள் சொல்லலாம். அதுதான் 1 கொரிந்தியர் 1, 2, 3யினுடைய சாரம். அவர்களுடைய வாழ்க்கையின் முடிவை, அவர்களுடைய வாழ்க்கையினுடைய விளைவை, அவர்களுடைய வாழ்க்கையினுடைய கனியை, அந்த வேலைப்பாட்டைத் தேவன் சீர்தூக்கிப்பார்ப்பார். நிறுத்துப்பார்க்கும்போது, “மெனே, மெனே, தெக்கேல் உப்பார்சின்” என்று சொல்ல வேண்டியிருக்கும். என்ன அர்த்தம்? நீ தராசில் வைத்து நிறுக்கப்பட்டு குறைவுள்ளவனாகக் காணப்படுகிறாய் என்று பொருள். இது முதல் தடை. மனிதனுடைய பார்வையிலே இது ஒரு இயல்பான வாழ்க்கை.

ஆனால் தேவனுடைய பார்வையிலே இந்த வாழ்க்கையினுடைய மதிப்பு என்ன? இதில் எவ்வளவு கிறிஸ்து இருக்கிறார் என்பதுதான் மதிப்பு. “இதற்கு மேலே, ஒரு நல்ல வாழ்க்கை வாழ்வதற்குமேலே, என்ன எதிர்பார்க்க முடியும்?” என்று நினைக்கலாம். நல்ல வாழ்க்கை வாழ்ந்தும் கிறிஸ்துவை ஆதாயம்பண்ணாத, கிறிஸ்துவால் நிரப்பப்படாத, வாழ்க்கை வாழ முடியும். பொன், வெள்ளி, விலையேறப் பெற்ற கற்கள் என்பவையெல்லாம் கிறிஸ்துவை வருணிக்கிற, கிறிஸ்துவை சித்திரிக்கிற வார்த்தைகள்தான். வேறொன்றுமில்லை. “பொன் இதைக் குறிக்கிறது. வெள்ளி அதைக் குறிக்கிறது. விலையேறப்பெற்ற கல் இன்னொன்றைக் குறிக்கிறது. பொன் பிதாவினுடைய தெய்வீக சுபாவத்தைக் குறிக்கிறது. வெள்ளி குமாரனுடைய மீட்பின் சுபாவத்தைக் குறிக்கிறது. விலையேறப்பெற்ற கல் பரிசுத்த ஆவியின் மறுஉருவாக்கும் வேலையைக் குறிக்கிறது,” என்பதையெல்லாம் மனதிலே வைத்துப் பரிசுத்த ஆவியானவரோ, பவுலோ எழுதினதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், இப்படி அழகான பொருள் விளக்கம் கொடுக்க முடியும் என்றால் நல்லது. காரியம் அதுவல்ல.

நாம் அருமையானது என்று கருதுகிறது தேவனுடைய மதிப்பீட்டிலே வெறும் குப்பையாகவும், சாம்பலாகவும், ஒன்றுமில்லாததாகவும், இல்பொருளாகவும் மாறிவிடும். நாம் அருமையானது என்று கருதுவது, நம்முடைய படிப்பு, நம்முடைய வேலை, நம்முடைய குடும்பம், நம்முடைய மக்கள், அவர்களுடைய உயர்வுபோன்றவை. எந்த அளவுக்கு வாழ்வின் எல்லா நிலைகளிலும், சூழ்நிலைகளிலும், நிலைப்பாடுகளிலும் கிறிஸ்து நமக்குள் உருவாகின்றார் என்பதுதான் காரியம். சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு தீர்மானத்திலும், ஒரு மனிதனால் எனக்கு ஒரு இடையூறு வருகிறதென்று வைத்துக்கொள்வோம் அல்லது ஒரு மனிதனால் எனக்குத் துன்பம் வருகிறது என்று வைத்துக்கொள்வோம். ஒரு சகோதரனுடைய காலுறையிலிருந்து நாற்றம் வருகிறது. வாயைத் திறந்தால் நாற்றம் வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது அந்த மனிதனிடத்திலே என்னுடைய மாறுத்தரம் என்ன? இப்படி நுணுக்கி நுணுக்கிப் பார்த்தா கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வது? சாதாரணமான மனிதர்களுக்கு இப்படி நுணுக்கி நுணுக்கிப் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பரிசுத்த ஆவியானவர் எந்த மனிதனுடைய தராசையும்விட மிகத் துல்லியமாக நிறுத்துப்பார்ப்பார்.

இந்தச் சிறுசிறு சம்பவங்களிலே நாம் கிறிஸ்துவை வாழ்கிறோமா அல்லது கிறிஸ்துவைக் காண்பிக்கிறோமா என்பதைப்பற்றி அந்த அளவுக்குத் தேவன் துல்லியமாக நிறுத்துப்பார்ப்பாரா? யாருக்கோ அல்லது எங்கோ நடைபெறுகிற சம்பவங்களைப்பற்றி நாம் மதிப்பிடுகிறோம் என்று தயவுசெய்து நினைக்காதீர்கள். நான் என்னைத் தராசில் வைத்து நிறுத்துப்பார்க்கிறேன். சிறுசிறு சம்பவங்கள்.

2. மதமுறையிலான வாழ்க்கை

இன்னொரு தடை உண்டு. அது மதமுறைக் கிறிஸ்தவர்கள். ஒரு மதமுறைமையிலே அவர்களிடத்தில் எந்தக் குறைபாடும் காண முடியாது. இது பிலிப்பியர் 3ஆம் அதிகாரத்திலே பவுல் சொல்வது. “நான் எட்டாம் நாளில் விருத்தசேதனம் அடைந்தவன், இஸ்ரயேல் வம்சத்தான், பென்யமீன் கோத்திரத்தான், எபிரெயரில் பிறந்த எபிரெயன், நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன், பக்திவைராக்கியத்தின்படி சபையைத் துன்பப்படுத்தினவன், நியாயப்பிரமாணத்திற்குரிய நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன்”. இதன் பொருள் என்னவென்றால் மதமுறையிலே அந்தக் கிறிஸ்தவனிடத்திலே எந்தக் குறையும் காண முடியாது. அவர்களுடைய பாஸ்டர்களோ, அவர்களுடைய சாமியார்களோ, அவர்களுடைய சகோதரர்களோகூட எந்தக் குற்றமும் அவர்களிடத்திலே கண்டுபிடிக்க முடியாது. பவுல், “ஆகிலும் எனக்கு இலாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன். அது மாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நட்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்,” என்று சொல்லுகிறார்.

மதமுறையிலே நடைபெறுகின்ற காரியங்கள் கிறிஸ்துவை அறிவதற்கும், ஆதாயம்பண்ணுவதற்கும் எப்படி எதிரிடையாக இருக்க முடியும்? எபிரெயரில் பிறந்த எபிரெயனாக இருந்து, பரிசேயனாக இருந்து, பென்யமீன் கோத்திரத்தானாக இருந்து, எட்டாம் நாளிலே விருத்தசேதனம்பண்ணப்பட்டவனாயிருந்து கிறிஸ்துவையும் ஆதாயம்பண்ண முடியாதா? என்னுடைய புரிந்துகொள்ளுதலின்படி ஆதாயம்பண்ண முடியாது. சில மதமுறைப் பழக்கவழக்கங்கள் neutral ஆனவைகள் அல்ல. அவைகள் கிறிஸ்துவுக்கு எதிரானவைகள்.

தியான ஆசிரமம் வைத்திருப்பார்கள்.

“காணி நிலம் வேண்டும், காணி நிலம் வேண்டும் அங்குத் தூணில் அழகியதாய் நன்மாடங்கள் துய்ய நிறத்தினவாய் அந்தக் காணி நிலத்திடையே ஓர் மாளிகை கட்டித் தர வேண்டும்.  அங்குக் கேணியருகினிலே தென்னைமரம் கீற்று மிளநீறும் பத்துப் பன்னிரெண்டு தென்னை மரம் பக்கத்திலே வேணும்.  நல்ல முத்துச் சுடர்போல நிலவொளி முன்பு வரவேணும் அங்குக் கத்தும் குயிலோசை சற்றே வந்து காதில் படவேணும் எந்தன் சித்தம் மகிழ்ந்திடவே நன்றாயிளந் தென்றல் வரவேணும்.

அப்போது நான் ஜெபம் பண்ணுவேன். பரிசுத்த ஆவியானவர் வருவார்” என்றால் வருவாரா? எழுதி வைத்துக்கொள்ளலாம். கிறிஸ்துவையும், பரிசுத்த ஆவியையும் எங்கே அனுபவிப்போம் என்றால் சொட்டச்சொட்ட வேர்க்க விறுவிறுக்க சமையலறையில் இருப்போம், மின்சாரம் இருக்காது, கொசு சுற்றிச்சுற்றி கடிக்கும். அப்போது உட்கார்ந்து ஏதாவது செய்தியை சரிசெய்து கொண்டிருப்போம். பிள்ளைகள் சத்தம் போட்டுக்கொண்டிருப்பார்கள். சுற்றி சுவரெல்லாம் அழுக்காகக் கிறுக்கி வைத்திருக்கும். அங்கே அவருடைய சத்தம் கேட்கும்.

இதைவிட்டுவிட்டு “சூரியன் மெல்ல மறைகிறது. சுந்திரன் மெல்ல உதிக்கிறது. அங்கு பாட்டு மெல்ல கேட்கிறது, அந்தக் கண்ணாடியைப் பார்த்தால் என் உள்ளம் மெல்ல உருகுகிறது” என்பதற்கும் பரிசுத்த ஆவியானவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதற்கு அர்த்தம் உங்கள் வீட்டையெல்லாம் அழுக்காக்குங்கள், கிறுக்கிவையுங்கள். பிள்ளைகளையெல்லாம் சத்தம் போட விடுங்கள் என்பதல்ல. தேவன் ஒருவேளை சமாதான காலங்களைக் கொடுத்தால் அதற்காகக் கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நல்ல அருமையான மடிக்கணினியை வைத்துக்கொண்டு ஒன்றும் பவுல் தன்னுடைய கடிதங்களை எழுதவில்லை. வாழ்க்கையினுடைய பரபரப்பிலும், பதற்றத்திலும், பயணம் பண்ணிக்கொண்டும், சிறையிருப்பிலும் தன் கடிதங்களை எழுதினார்.

இரண்டு தடைகளை நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஒன்று நாம் ஒரு நல்ல நேர்த்தியான வாழ்க்கை வாழ்கிறோம். அதனால் நம்முடைய வாழ்க்கை நிறுத்துப் பார்க்கப்படும்போது மிகவும் மதிப்பும், அருமையும் இருக்கும் என்று நாம் நினைக்க வேண்டாம்.

இந்த உலகத்திலே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைப்பின்பற்றி வாழ்கிற மக்கள் என்ற ஒரே காரணத்தினாலே நாம் துன்பம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாய் இருக்கிற யாவரும் மிகவும் துன்பப்படுவார்கள்,” என்று பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதுகிறார். எனக்குத் துன்பமே வரவில்லை என்றால் நான் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்கிறேனா என்பது கேள்விக்குறி. இது தேவனுடைய மக்கள் எல்லாரும் கடந்துபோன, நடந்துபோன பாதை. இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதால் இரட்சிக்கப்படாத தன்னுடைய பெற்றோர்களால் பகைக்கப்படாத ஒரு மனிதனை நான் இதுவரை பார்த்ததே இல்லை. கர்த்தராகிய இயேசுவின் வருகைவரை நாம் அதைப் பார்க்கப்போவதும் இல்லை. “இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதால் என்னுடைய நண்பர்கள் என்னைவிட்டு விலகினார்கள்,” என்று சொல்லாத ஒரு தேவனுடைய பிள்ளையையும் நான் இதுவரை பார்த்ததில்லை. நம்முடைய மூத்த சகோதரர் ஆபிரகாம், மோசே தொடங்கி எல்லாரும் இதே பாதையிலேதான் நடந்துபோயிருக்கிறார்கள்.

எனவே ஒன்று நேர்த்தியான மனித வாழ்க்கை. இன்னொன்று நேர்த்தியான மதமுறையிலான வாழ்க்கை. ஒரு நல்ல இடம் வேண்டும். நாற்பது பேருந்துகள் வாங்க வேண்டும். “இந்த உலகத்திலே தேவனை அறியாதவர்கள் வைத்திருக்கிற பேருந்துகளைவிட நாம் அதிகமாக வைத்திருக்க வேண்டாமா? நம்முடைய ஆண்டவர் அவர்களைவிடத் தாழ்ந்தவரா?” என்று பேசுகிற பிரசங்கிமார்களை நான் பார்த்திருக்கிறேன். இந்த உலகத்திலே தலைசிறந்த பிரசங்கியாராக இருந்தவர் சொந்தக் கோவேறு கழுதைகூட வைத்துக்கொள்ளவில்லை. அந்தச் சமயத்திற்கு தேவைப்பட்டபோது ஒரு மனிதனிடத்தில் கழுதையைக் கடன் வாங்கிக்கொண்டார். “நீங்கள் போய்ப் பாருங்கள். அங்கே ஒரு கோவேறு கழுதையைக் கட்டியிருப்பார்கள். அது போதகருக்கு வேண்டும் என்று சொல்லுங்கள். அவன் தருவான்”. இன்றைக்குக் கிறிஸ்தவர்களாக இருந்தால் என்ன சொல்லியிருப்பார்கள் தெரியுமா? “கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார், நீ கழுதையைத் திருப்பிக்கேட்காதே” என்று சொல்லியிருப்பார்கள். ஆனால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வேலை முடிந்தபிறகு போய் அவனிடத்தில் கொடுத்துவிடுங்கள்” என்றார். ஆனால், இன்று “கர்த்தருக்குக் கொடுத்தால் நீ நன்றாக இருப்பாய். உன் பிள்ளைகள் நன்றாக இருப்பார்கள். உன் பேரப் பிள்ளைகளெல்லாம் நன்றாக இருப்பார்கள்,” என்று சொல்லியிருப்பார்கள். ஒரு குடுகுடுப்பை மட்டும்தான் இவர்கள் கையிலே இல்லை.

அப்படி அல்ல. அந்த மாதிரியான ஒரு மதமுறையிலான பழக்கம் வைத்திருப்பதால் கிறிஸ்துவை ஆதாயம் பண்ணுகிறோம் என்று சொல்ல முடியாது. பிலிப்பியர் 3ஆம் அதிகாரத்திலே அப்போஸ்தலனாகிய பவுல் “என்னுடைய இலக்கு ஒன்றே ஒன்றுதான். கிறிஸ்துவை அறிவதும், ஆதாயம்பண்ணிக்கொள்வதும்,” என்று சொல்லுகிறார். நிச்சயமாக மதமுறையிலான காரியங்களை நாம் நட்டமென்று இழக்கவேண்டியிருக்கும். குப்பையுமாக எண்ணவேண்டியிருக்கும். மதவட்டாரங்களிலே எவைகளையெல்லாம் அருமையாகக் கருதுவார்களோ அவைகளையெல்லம் நாம் குப்பையென்று கருதுகிறோம், நட்டமென்று கருதுகிறோம். “நாம் பிறந்தது முதற்கொண்டு எவைகளையெல்லாம் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல் என்று கருதினோமோ அவைகளையெல்லாம் இந்த சகோதரர்கள் மரம், புல், வைக்கோல் என்று சொல்கிறார்களே!” என்று நீங்கள் நினைக்கலாம். அப்படியென்றால் நீ பவுல் நடந்துபோன அதே பாதையில் அடியொற்றி நடக்கிறாய், அதே அடிச்சுவடுகளில் நடந்துபோகிறாய் என்று அர்த்தம். அவரோடு சேர்ந்து சொல்ல முடியும். “என் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணினேன்”. 

தேவ மக்களாலான சமுதாயம் அவருடைய மனைவி

கடைசியாக நாம் திருவெளிப்பாட்டிற்கு வரும்போது 21, 22ஆம் அதிகாரங்களிலே தேவனுடைய மக்களாலான சமுதாயம் கிறிஸ்துவினுடைய மனைவி என்று அங்கு எழுதப்பட்டிருக்கிறது. அவள் தன் கணவனுக்காக அலங்கரிக்கப்பட்ட மனைவியைப்போல் இருந்தாள். அது மகிமையுள்ள சபை என்று எழுதியிருக்கிறது. கடைசியிலே அங்கு தேவாலயம் இல்லை.

இன்று “நாற்பது பேருந்துகள் வாங்கப்போகிறோம். நூறு ஏக்கர் நிலம் வாங்கப்போகிறோம்,” என்று சொல்பவர்கள் கொஞ்சம் கற்பனை பண்ணிப்பார்க்க வேண்டும். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மலைப்பிரசங்கம் முடித்துவிட்டு ஐயாயிரம் பேர் சாப்பிட்டவுடனே, “என்னால் இப்படி ஊர் ஊராகப் போய்ப் பிரசங்கம் பண்ண முடியாது, வாழ முடியாது. எனவே, நூறு ஏக்கர் நிலம் வாங்கி ஒரு நல்ல தியான மையம் கட்டப்போகிறோம். எல்லாரும் அங்கே வந்துவிடலாம். அதுபோல, மக்களெல்லாம் இந்த மாதிரி நடந்து கஷ்டப்பட வேண்டாம். ஆயிரம் கோவேறு கழுதைகளைப் பராமரிக்கப் போகிறோம்,” என்று ஒரு அறிவுரையை கூறுவதாக நினைத்துப்பாருங்கள். உண்மையில் மக்கள் அதைத்தான் விரும்பினார்கள். “இல்லை, இல்லை. அது அந்தக் காலம். கிறிஸ்துவுக்குப்பின் அப்போஸ்தலர்களுடைய காலத்திலே அது மாறிவிட்டது” என்று சொல்கிறீர்களா? இல்லை, மாறவில்லை. அப்போஸ்தலர் நடபடிகள் முழுவதும் அது மாறவில்லை. முதல் நூற்றாண்டிலே அது மாறவில்லை. அது தேவனுடைய நித்திய நியமனம்.

இந்தப் பூமியிலே கட்டடம் வல்லமைக்கு அடையாளம். நாம் வாடகை வீட்டில் வாழ்ந்த நாட்களையும், சொந்த வீட்டில் வாழ்ந்த நாட்களையும் நினைத்துப்பார்ப்போம். சொந்த வீடு என்பது வல்லமையின் அடையாளம், அதிகாரத்தின் அடையாளம். அதை நாம் உடைத்து, இடித்து, சுக்குநூறாக்கிவிட வேண்டும். சொந்த வீடு இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு தடவையும் வெளியே போய்விட்டு வரும்போது வீடு எரிந்து தரைமட்டமாயிருந்தால் இருதயத்திலே துக்கம் துளிகூட வரக்கூடாது. அந்த வீட்டைக் கட்டின நாளிலே என்ன மகிழ்ச்சியோடு இருந்தோமோ, அதே மகிழ்ச்சியோடு அது எரிகிற நாளிலும் இருக்க வேண்டும். வீடு என்பது நம்முடைய படிப்பு, நம்முடைய வேலை, எவ்வளவு காரியங்கள் உண்டோ அவையெல்லாவற்றிற்கும் பொருந்தும்.

இந்த உலகத்திலே நம்முடைய ஆதாரம் நம்முடைய வேலைகள் அல்ல. software industry இன்னும் செழித்தோங்குகிறது. ஒருவேளை இன்னும் ஐந்து வருடத்திலே அது இல்லாமல் போகலாம். software industry இருந்தது. software industry இல்லாமல் போகலாம். இந்தக் கல்லூரி இருக்கும் அல்லது இந்தக் கல்லூரி இல்லாமல் போகலாம். ஆனால் கர்த்தர் இருந்தார்; கர்த்தர் இருக்கிறார்; கர்த்தர்இருப்பார். இருக்கிறவரும், இருந்தவரும், வரப்போகிறவருமானவர். அவரிடத்தில் யாதொரு வேற்றுமையின் நிழலும் இல்லை. திருவெளிப்பாட்டிலே சொல்லப்பட்டிருக்கிறது. அங்கே எந்தத் தேவாலயமும் இருக்கப்போவது இல்லை. எனவே கோயில் கட்டுகிறவர்களெல்லாம் ரொம்ப அதிர்ச்சிக்குள்ளாவார்கள். நாம் சுவிசேஷத்தை அறிவிப்பதற்காக கோயில் கட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. சுவிசேஷத்தை அறிவிப்பதற்காக நாம் கோயில் கட்டவேண்டுமென்றால், இயேசுகிறிஸ்துவினுடைய சீடர்களைப்போல ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, வேலை முடிந்தபிறகு நாம் அதை விட்டுவிடலாம்.

இந்த உலகத்திலே நமக்கு எந்த வல்லமையும் இருக்காது. ஆனால், தேவன் தம்முடைய பிள்ளைகளை இந்த உலகத்திலே எல்லா வல்லமையும் உள்ளவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பார்களோ அதைவிட மகிழ்ச்சியானவர்களாக வாழவேண்டுமென்று திட்டமிட்டிருக்கிறார், தீர்மானித்திருக்கிறார். “இந்த உலகத்திலே நமக்கு வல்லமை இல்லை. என்ன செய்வது? இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுவிட்டோம்; அதனால் இந்த உலகத்திலே கொஞ்சம் வல்லமை இல்லாமல்தான் வாழ வேண்டியுள்ளது. இந்த உலகத்திலே வல்லமை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! இந்தப் பக்கம் ஒரு வாள்; அந்தப் பக்கம் ஒரு சேவகன். இப்படியெல்லாம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!” என்று நினைக்கிறீர்களா? இல்லை, இல்லை, இல்லை. நாம் தேவனுடைய கோடான கோடி தேவதூதர்கள் பாதுகாப்பிலே இங்கும் அங்குமாக நடந்துபோய்க்கொண்டிருக்கிறோம். நமக்கு இருப்பதுபோன்ற w z category security இந்தப் பூமியிலே வேறு யாருக்கும் இல்லை. அதனால், நமக்கு z security இந்த உலகத்திலே தேவையில்லை. ஆனால், நாம் மக்களோடு மிக மதிப்போடு பழகுகின்றோம். என்னவோ அவர்களுடைய தயவு இல்லாவிட்டால் நமக்கு ஒன்றுமே இல்லாததுபோல நாம் மதிப்போடு பழகுகிறோம். அது அச்சத்தினால் அல்ல, எல்லா மதிப்போடும், எல்லா மரியாதையோடும், சாந்தத்தோடும், எல்லா வணக்கத்தோடும் நாம் தேவனுடைய சாயலில் உண்டாக்கப்படட மனிதர்களிடத்தில் பழக வேண்டும். ஆனால் அது அச்சத்தினால் அல்ல. “இவர்களை நாம் நேசிக்கவில்லையென்றால் இவர்களுடைய பணம் நமக்குக் கிடைக்காது. இவர்களுடைய ஆதரவு நமக்குக் கிடைக்காது. இந்த உலகத்திலே நமக்கு வரவேண்டிய ஏதோ ஒரு நன்மையை நாம் இழந்துவிடுவோம்,” என்கிற அச்சத்தினால் அல்ல.

தேவாலயம் இருக்காது. சூரியன் இருக்காது. சந்திரன் இருக்காது. ஒன்றேவொன்றுதான் இருக்கும். தேவனும் ஆட்டுக்குட்டியானவரும்தான் அங்கே இருப்பார்கள். அதாவது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே தேவாலயமாக இருப்பார், சூரியனாக இருப்பார், சந்திரனாக இருப்பார். அவர்கள் தங்க வீதிகளிலே நடப்பார்கள் என்று எழுதியிருக்கிறது. இது மக்களுடைய உணர்ச்சிகளைத் தட்டியெழுப்புகிறது. “நீ பரலோகத்திலே தங்க வீதியிலே நடக்கப்போகிறாய். அதை நீ இன்றைக்குக் காதிலே போட்டிருக்கிறாயே,” என்று சொல்லுகிற பிரசங்கிமார்களை நான் பார்த்திருக்கிறேன். அப்படி அல்ல. தங்க வீதி என்றால் நம்முடைய நடை கிறிஸ்துவுக்கு ஒத்ததாக மாறியிருக்கிறது. தேவனுடைய மக்கள் பக்குவமும், முதிர்ச்சியும் அடையும்போது அவர்களுடைய நடை நேர்கோட்டில், எல்லா விதத்திலும் பிதாவினுடைய சுபாவத்திற்கும், தன்மைக்கும், இயல்பிற்கும் ஒத்த நடையாக இருக்கும் என்பதுதான் பொன் தளத்தில் உலாவுவது அல்லது பொன் வீதியில் நடப்பது.

எனவே அருமையான சகோதர சகோதரிகளே, ஒன்று இந்தப் பூமியிலே நமக்கு ஒரு சில நன்மைகள் இல்லையே என்று நாம் அஞ்ச வேண்டாம். எபிரெயர் 11ஆம் அதிகாரத்தை நாம் மனப்பாடம் பண்ணிக்கொள்வது நல்லது. தேவன் நமக்குத் தந்திருக்கும் பொறுப்புகளை நாம் செய்ய வேண்டும். இதற்கு அர்த்தம் நாம் பொறுப்பற்ற மக்களாய் வாழ வேண்டும் என்பது அல்ல. ஆதாமைப் படைத்தபின், “நீ இரவும் பகலும் பாடல் பாடிக்கொண்டே இரு,” என்று தேவன் சொல்லவில்லை. தேவன் ஆதாமை உண்டாக்கி நிலத்தைப் பண்படுத்த அவனைத் தோட்டத்திலே வைத்தார். தேவன் இந்த உலகத்திலே நமக்குச் சில பண்படுத்துகிற பொறுப்புகளைத் தருகிறார். அவைகளை நாம் பொறுப்பற்ற விதத்திலே செய்யக்கூடாது. மிகவும் சிரத்தையோடும், கவனத்தோடும், எச்சரிக்கையோடும் செய்ய வேண்டும். ஏனென்றால், அவைகளைப்பற்றி நாம் தேவனுக்குக் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். இந்தப் பூமிக்குரிய பொறுப்புகளைக்குறித்து அக்கறையற்றிருப்போமென்றால் தெய்வீக காரியங்களைப்பற்றி, பரம காரியங்களைப்பற்றி நாம் எப்படி அக்கறையுள்ளவர்களாக இருப்போம்? யார் உங்களை நம்பி பரம காரியங்களை ஒப்புவிப்பார்கள்?

நான் சொல்வதை நீங்கள் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். “படிக்கிறவர்களெல்லாம் இனிப் படிக்க வேண்டாம். தினமும் காலையிலிருந்து சாயங்காலம்வரை வானத்தைப் பார்த்துக்கொண்டே இருங்கள்,” என்று நான் சொல்லவில்லை. அப்படிப் பார்த்துக்கொண்டே இருந்தால், சில மேகங்கள் இயேசுகிறிஸ்துபோல தோன்ற ஆரம்பித்துவிடும். “இந்த நட்சத்திரம் சிலுவை மாதிரி இருக்கிறது. அந்த நட்சத்திரம் ஜெபமாலை மாதிரி இருக்கிறது. இந்த நட்சத்திரம் குருத்தோலை மாதிரி இருக்கிறது. அப்படி உயரப் பார்த்துக்கொண்டே இருந்தால் அது சிலுவை மாதிரி இருக்கிறது,” என்று சொல்ல ஆரம்பித்துவிடுவோம். இதெல்லாம் நம்முடைய கற்பனை.

இதைத்தான் நான் நம்முடைய பொறுப்புகளை நாம் செய்ய வேண்டும் என்று சொன்னேன். ஆனால் அதே நேரத்திலே இந்தப் பூமிக்குரிய சில ஆசீர்வாதங்கள் இல்லை என்பதால் நாம் ஒருநாளும் அஞ்ச வேண்டாம், வருத்தப்பட வேண்டாம்.

அதுபோல ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுகிற இந்த வாழ்க்கையிலே, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைப் பிறருக்குப் பரிமாறுகிற இந்தப் பொறுப்பிலே நாம் இந்த உலகத்துக்குரிய சில காரியங்களை இழக்க வேண்டியிருக்கிறது என்றால் அதை இழப்பு, நட்டம் என்று எண்ணவே வேண் டாம். சொல்லப்போனால் நம்மில் பலர் அது எல்லாவற்றையும் இழப்பதற்கும், நட்டம் என்று எண்ணுவதற்கும் தயாராக இருக்கலாம். ஆனால், அதுவல்ல காரியம். அதில் எனக்கு ரொம்பப் பிடித்தது என்னவென்றால் இழப்பதை நட்டமென்று எண்ணுவது இல்லை; இழந்தபிறகு, நட்டம் என்று விட்டபிறகு, இராத்திரி தூங்கும்போது மனம் ஆறாமல், “ஐயோ! அதை இழந்துவிட்டோமே. வேறு வழியில்லாமல் இழக்க வேண்டியதாகிவிட்டதே!” என்று புலம்பக்கூடாது. பவுல் அவைகளை நட்டமென்று எண்ணி விட்டதோடு மட்டும் இல்லை. விட்ட அன்று இராத்திரியிலே பவுல் இரகசியமாக அவைகளுக்காக வருத்தப்படாமல் மகிழ்ச்சியாக இருந்தார். அது அவருக்கு மிகவும் மகிழ்ச்சியான நாள். :அப்பாடா! ஒரு குப்பையைத் தூரத்தூக்கிப் போட்டாயிற்று” என்ற எண்ணம்தான் அவருக்குள் மேலோங்கிநின்றது.

தேவனுடைய மக்களுக்காக, சுவிசேஷத்தை அறிவிப்பதற்காக அப்படிப்பட்ட பாடுகள் இந்த நாட்டில் இன்னும் வரவில்லை. இனி வரலாம். சில தீய மனிதர்கள் ஆட்சிக்கு வரக்கூடாது என்று நாம் ஜெபிக்க வேண்டும். ஆனால் அதையும் மீறி அவர்கள் ஆட்சிக்கு வர வாய்ப்பு உண்டா? அதையும் மீறி அவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஏன் நாம் ஜெபம் பண்ண வேண்டும்? ஜெபம் பண்ணாமல் இருந்துவிடலாமா? இது ரொம்ப முரண்பாடாகத் தோன்றும். ஒருபக்கம் நாம் ஜெபிக்க வேண்டும். இன்னொரு பக்கம் இந்த முழு உலகத்தின் நிலையை ஆராய்ந்துபார்க்கக்கூடிய ஒரேவொரு ஞானி யார் மட்டும்தான்?; தன்னுடைய மக்களுக்கு எப்படிப்பட்ட பாதைகளையும், சூழ்நிலைகளையும் அமைக்க வேண்டும் என்று அவருக்குத் தெரியும். எனவே நம்முடைய ஜெபங்களையும் மீறி தீய மனிதர்கள் ஆட்சிக்கு வந்து விட்டால் உடனே நாம் முறையிடக்கூடாது. என்ன சொல்வீர்கள்? “நீர் கர்த்தர். நீர் உம்முடைய பார்வையிலே செம்மையானதைச் செய்தீர். நீர் இறையாண்மையுள்ளவர்,” என்று நம்முடைய வாயை மண்ணிலே நுழுந்தப்பண்ணுவோமாக. ஆனால் எல்லா நிலையிலும் கிறிஸ்துவை ஆதாயம்பண்ணுவது, கிறிஸ்துவால் வாழ்வது, கிறிஸ்துவினுடைய சிந்தையை உடையவர்களாய் இருப்பது, இதில் நாம் தவறாமல் இருப்போமாக. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.