Transcribed from a message spoken in September 2014 in Chennai
By Milton Rajendram
“காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்று தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார். மேலும் கிறிஸ்துவின்மேல் முன்னே நம்பிக்கையாயிருந்த நாங்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு தமது சித்தத்தின் ஆலோசனைக்குத் தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே நாங்கள் முன்குறிக்கப்பட்டு கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரராகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம்” (எபே. 1:9-12).
“விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி நிலைபெற்றவர்களாகி, சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணா;ந்து, அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன். நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு, சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமென்” (எபே. 3:17-21).
நாம் வாசித்த பகுதிகள் தேவனுடைய நித்திய நோக்கத்தைப்பற்றி அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியிருக்கின்ற வார்த்தைகள். இந்த முழு வேதாகமத்திலும் தேவன் ஒரு நித்திய நோக்கத்தை வைத்திருக்கிறார் என்று நமக்குத் தெரியும். தேவன் அந்த நித்திய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே பூமியிலே செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்; மனித வரலாற்றிலே செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்; தனிப்பட்ட வாழ்க்கையிலே செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்; மிக முக்கியமாக தேவனுடைய மக்கள், தேவனுடைய சபை, கிறிஸ்துவின் சரீரம் இதன் வரலாற்றிலே செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். தேவன் தம் நித்திய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். தேவன் எல்லாவற்றையும் தம் நித்திய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே அல்லது எட்டுவதற்காகவே செய்கிறார் என்று நாம் வாசித்த வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஒருவேளை நாம் இந்த மனித வரலாற்றை அல்லது தேவனுடைய மக்களுடைய வரலாற்றை அல்லது நம்முடைய வாழ்க்கையைப் பார்க்கும்போது அதில் ஒரு நோக்கமோ, திட்டமோ இல்லாததுபோல தோன்றலாம். நம்முடைய வாழ்க்கையில் நடக்கிற நிகழ்ச்சிகளுக்குப்பின்னால் ஒரு நோக்கம் அல்லது ஒரு திட்டம் அல்லது ஒரு குறிக்கோள் இருப்பதுபோல் தோன்றாமல் போகலாம். ஆனால், மனித வரலாறு, தேவனுடைய மக்களுடைய வரலாறு, சபையினுடைய வரலாறு, தேவனுடைய மக்களுடைய வாழ்க்கை, நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவைகளுக்குப்பின்னால் தேவனுடைய நோக்கம். இதை இப்படிக்கூடச் சொல்லலாம். தேவனுடைய நோக்கம் நிறைவேறுவதற்காகவே அன்றி வேறொன்றிற்காகவும் தேவன் எதையும் செய்ததில்லை. இந்தப் பூமியில் மனிதர்களுடைய வாழ்க்கையிலே, சபை வரலாற்றிலே அல்லது மனித இனத்தின் வரலாற்றிலே நிகழ்கின்ற பல காரியங்களுக்குப் பொருள் இல்லாமல் இருப்பதுபோலத் தோன்றலாம். “இதற்குப்பின்னால் தேவன் இருக்கிறாரா? இவைகளெல்லாம் தேவனோடு தொடர்புள்ளவைகள் அல்ல. இவைகளின்மேல் ஒரு அதிகாரமோ, ஒரு கட்டுப்பாடோ, ஒரு அரசாங்கமோ தேவையில்லை,” என்று நம்முடைய பார்வைக்கு பொருளற்றதுபோல அல்லது தேவனுடைய நோக்கத்தோடு தொடர்புஇல்லாததுபோலத் தோன்றலாம். ஆனால், அவைகளுக்குப்பின்னால் தேவனுடைய நோக்கம் இருக்கிறது. தேவனுடைய நோக்கத்திற்காகவே அன்றி தேவன் வேறெதையும் இந்தப் பூமியில், மனித வரலாற்றில், அனுமதிப்பதில்லை. “மனிதர்கள் இந்த மனித வரலாற்றை ஆளுகைசெய்கிறார்கள், அரசாங்கம் நடத்துகிறார்கள்,” என்று நாம் நினைக்கலாம். ஆனால், உண்மையிலேயே தேவன்தான் அரசாங்கம் நடத்துகிறார்.
இதை நாம் புரிந்துகொள்வது தேவனுக்குமுன்பாக ஒரு மதிப்பும், பொருளும் உள்ள ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும். நம்முடைய வாழ்க்கையின் இறுதியிலே இந்த வாழ்க்கையின் பொருள் என்ன, இந்த வாழ்க்கையின் மதிப்பு என்ன, இந்த வாழ்க்கையினுடைய கனி என்ன வென்று நாம் மதிப்பிட்டுப் பார்க்கும்போது, தேவனுடைய நோக்கத்தைப்பற்றிய ஒரு தெளிவு நமக்கு இருந்தால் நம்முடைய வாழ்க்கை பொருள் நிறைந்த, கனியுள்ள, மதிப்புள்ள வாழ்க்கையாக இருக்கும் அல்லது நம்முடைய வாழ்க்கை பொருளற்ற, மதிப்பற்ற, கனியற்ற வாழ்க்கையாக மாறிவிடும்.
தேவனுடைய நித்திய நோக்கத்தை எளிய வார்த்தைகளில் சொல்லலாம். தேவன் தம்முடைய குமாரனாகிய கிறிஸ்துவில் அவருடைய நிறைவை அனுபவித்து அறிய வேண்டும் என்பதற்காக ஒரு உயிரியைப் படைத்திருக்கிறார். நான்கு சிறு வாக்கியங்களைச் சொல்லுகிறேன். ஒன்று, தேவனிடத்தில் பரிபூரணம் உண்டு, நிறைவு உண்டு, சம்பூரணம் உண்டு. மனிதர்களுடைய இருதயத்தை, மனிதர்களுடைய மனதை, வருணிக்கிற ஒரு முக்கியமான வார்த்தை பற்றாக்குறை அல்லது போதாக்குறை. எப்போதுமே மனிதர்கள் பற்றாக்குறை, போதாக்குறையில்தான் இருப்பார்கள். ஒரு நபரைச் சந்தித்தால், ஒரு குடும்பத்தைச் சந்தித்தால், வாய் திறந்து பேச ஆரம்பித்தால் அவர்கள் தங்கள் இருதயங்களில் இருக்கிற பற்றாக்குறையை வெளிக்கொட்டுவார்கள். ஆனால், தேவனைப் பொறுத்தவரை அவர் போதுமான நிறைவுடையவர்.
மனிதர்களுக்கும் தேவனுக்கும் அல்லது இயற்கை உலகத்திற்கும் பரத்திற்கும் அல்லது இந்தப் பூமிக்கும் பரத்திற்கும் உள்ள ஒரு பெரிய வேறுபாடு என்னவென்றால் இந்தப் பூமி பற்றாக்குறையுள்ள பூமி. ஆனால், பரத்திலே தேவன் போதுமான நிறைவுள்ளவராக இருக்கிறார். இது நமக்குள் ஒருவிதமான எண்ணத்தை ஏற்படுத்தலாம். “என்னுடைய வாழ்க்கையிலே எவ்வளவோ போதாக்குறைகள் உள்ளன. ஆனால், தேவனிடத்தில் போதுமான நிறைவு உள்ளதென்று சொல்கிறீர்கள். அதற்கும் என்னுடைய வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு?” என்று கேட்கலாம். தேவனிடத்தில் சம்பூரணமும், பரிபூரணமும், நிறைவும், உண்டு.
இரண்டு, தேவனுடைய நிறைவு அவருடைய குமாரனாகிய கிறிஸ்துவில் இருக்கிறது. இதன் அர்த்தத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு பிரசங்கம் பண்ணுவதற்காக, கேட்பதற்கும் பேசுவதற்கும், அழகாக இருக்கும் என்பதற்காகத் “தேவனுடைய நிறைவு அவருடைய குமாரனாகிய கிறிஸ்துவில் இருக்கிறது,” என்று நான் சொல்லவில்லை. இது ஒரு இரகசியம். தேவனுடைய நிறைவு அவருடைய குமாரனாகிய கிறிஸ்துவில் இருக்கிறது.
மூன்று, கிறிஸ்துவில் தேவனுடைய நிறைவை நாம் அனுபவித்து அறிய வேண்டுமென்று தேவன் சித்தங்கொண்டிருக்கிறார், திருவுளம்பற்றியிருக்கிறார், தீர்மானித்திருக்கிறார். தேவனுடைய நிறைவை நாம் அனுபவித்தறிய வேண்டும். அனுபவித்தறிய வேண்டும். Experiential knowledge.
நான்காவது, இப்படி அனுபவித்தறிவதற்கு படைக்கப்பட்ட ஒரு உயிரி வேண்டும் அல்லது படைக்கப்பட்ட ஒரு நபர், படைக்கப்பட்ட ஒரு குலம், வேண்டும். படைக்கப்பட்ட இந்த உயிரிதான் மனிதன் அல்லது சபை என்றுகூடச் சொல்லலாம். படைக்கப்பட்ட ஓர் உயிரி கிறிஸ்துவிலுள்ள தேவனுடைய உயிரை அனுபவித்தறிய வேண்டும் என்பது தேவனுடைய விருப்பம்.
தேவனுடைய நித்திய நோக்கம் என்ன? 1. ஒன்று, தேவனிடத்தில் நிறைவு உண்டு. 2. இரண்டு, தேவனுடைய நிறைவு அவருடைய குமாரனாகிய கிறிஸ்துவில் உள்ளது. 3. மூன்று, தேவனுடைய நிறைவை அனுபவித்தறிய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். 4. நான்கு, தேவனுடைய நிறைவை படைக்கப்பட்ட ஓர் உயிரி அனுபவித்தறிய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
தேவனுடைய நிறைவு என்றால் என்ன? ஒரு மனிதனுக்கு என்ன தேவையோ அவையெல்லாம் தேவனிடத்தில் உள்ளது. படைக்கப்பட்ட உயிரியாகிய ஒரு மனிதனுக்கு எது தேவையானாலும், அந்தத் தேவையைப் பூர்த்திசெய்யக்கூடிய நிறைவு தேவனிடத்தில் உண்டு. மனிதனுக்கு என்னென்ன தேவையோ அவையெல்லாவற்றையும் பூர்த்திசெய்கிற நிறைவு தேவனிடத்தில் உண்டு. மனிதனுக்கு நூறு ரூபாய் தேவைளென்றால் அது தேவனிடத்தில் உண்டு என்று மிகத் தாழ்வான ஒரு தளத்திலே நான் பேச விரும்பவில்லை. ஆனால், அதே சமயத்திலே அந்த நூறு ரூபாயும் தேவனிடத்தில் உண்டு. ஒருபக்கம் தேவனுடைய நிறைவு என்று சொல்லும்போதே உங்களுக்குப் பணம் வேண்டுமென்றால் பணம் கிடைக்கும்; சுகம் வேண்டுமென்றால் சுகம் கிடைக்கும்; வேலை வேண்டுமென்றால் வேலை கிடைக்கும்; கல்யாணம் வேண்டுமென்றால் கல்யாணம் நடக்கும் என்ற தளத்திலே நான் பேச விரும்பவில்லை. ஆனால், அவைகளும் தேவனுடைய நிறைவில், தேவனுடைய சம்பூரணத்தில், தேவனுடைய பரிபூரணத்தில், அடங்கியிருக்கின்றன.
தேவனுடைய நிறைவு என்றால் என்ன? நான் இப்பொழுது ஒரு நீளமான பட்டியல் சொல்லப் போகிறேன். சில உங்கள் மனதில் நிற்கும். சில உங்கள் மனதில் நிற்காது. தேவனுடைய இயல்பு, தேவனுடைய பண்புகள். தேவனுடைய குணம், தேவனுடைய கட்டமைப்பு. தேவனுடைய எண்ணங்கள். தேவனுடைய உணர்ச்சிகள். தேவனுடைய தீர்மானங்கள். தேவனுடைய உணர்வுகள். தேவனுடைய பிரமாணங்கள். தேவனுடைய வழிகள். தேவனுடைய செல்வங்கள். தேவனுடைய வளங்கள். இவையெல்லாம் தேவனுடைய நிறைவிலே அடங்கும். இவைகளுக்குள் உங்கள் தேவையை பொருத்த முடியுமா என்று பாருங்கள். இவையனைத்தும் தேவனுடைய நிறைவு, தேவனுடைய சம்பூரணம், தேவனுடைய பரிபூரணம்.
ஆனால், தேவன் மனிதனுக்குப் புலப்படாதவர், தேவன் பரத்திற்குரியவர், நித்தியத்திற்குரியவர், அவர் ஆவிக்குரியவர்; அவர் படைக்கப்பட்ட எந்தப் புலன்களுக்கும் அகப்படாதவர், வசப்படாதவர். அவர் அதரிசனமான தேவன் என்ற வார்த்தைக்கு என்ன பொருள்? அவர் இந்தப் படைப்பின் எந்தப் புலன்களுக்கும் புலப்படாதவர், அகப்படாதவர், வசப்படாதவர். இந்தப் புலன்களுக்கெல்லாம் அவர் அப்பாற்பட்டவர், புலன்களையெல்லாம் கடந்தவர், புலன்களையெல்லாம் மிஞ்சினவர். தேவனுடைய செல்வங்கள், தேவனுடைய பண்புகள், தேவனுடைய குணங்கள் ஆகியவைகளைப் படைக்கப்பட்ட எந்தப் புலன்களாலும் தொடமுடியாது. அவர் அதரிசனமான தேவன். ஒருவரும் சேரக்கூடாத ஒளியிலே வாசம்பண்ணுகிற தேவன்.
“தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை,” (யோவான் 1:18) என்று பழைய ஏற்பாட்டிலிருந்து புதிய ஏற்பாடுவரை தேவனைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. “உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும்,” என்று மோசே தேவனிடம் கேட்டான். ஆனால், கர்த்தர், “நீ என் முகத்தைக் காணமாட்டாய். ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரேடிருக்கக்கூடாது. என் மகிமை கடந்துபோகும்போது என் பின்பக்கத்தைக் காண்பாய். என் முகமோ காணப்படாது,” என்றார் (யாத். 33:18-23). கர்த்தர் கடந்து போகும்போது மோசே அவரைப் பின்னாலிருந்து பார்த்தார் என்பதல்ல இதன் பொருள். தேவனைப் பிரத்தியட்சமாய் அவருடைய இயல்பு என்ன, குணங்கள் என்ன, பண்புகள் என்ன என்று ஒரு மனிதனும் உள்ளது உள்ளபடி அறிய முடியாது. நிழலாட்டமாய் தேவனை அறிந்துகொள்ளலாம். ஒரு மனிதனை முன்னால் நின்று பார்ப்பதென்றால் அவனை மிக நெருக்கமாக அறிவது என்று பொருள். கடந்து போகும்போது பின்னால் பார்த்தால் அவரை நெருக்கமாக அறியவில்லை என்று பொருள். “அவர் கடந்து போகும்போது பார்த்தேன். அவருடைய முகம் என்ன, அவருடைய இலட்சணம் என்ன, என்றெல்லாம் எனக்குத் தெரியாது,” என்பதுதான் அதன் அர்த்தம். “தேவன் என்னுடைய சிநேகிதன்,” என்று அழைக்கிற மோசேக்குக்கூட அவர் தன்னை யார் என்று காண்பிக்கவில்லை. மோசேயோடு முகமுகமாய்ப் பேசினதாக எழுதியிருக்கிறது. ஆனால், “உம்முடைய வழிகளை எனக்குக் காண்பியும். உம் முடைய நெறிகளை எனக்குப் போதியும்,” என்று மோசே வேண்டினான்.
தேவனுடைய வழிகள் மகா உன்னதமானவை. சிருஷ்டிக்கப்பட்ட எந்த உயிரியும் தேவனை, அவருடைய நிறைவை, அறிந்துகொள்ள முடியாது. ஆனால், தேவன் தம் நிறைவை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு வழியை வைத்திருக்கிறார். அந்த வழி இயேசுகிறிஸ்து. நாம் அறியமுடியாத தேவனுடைய நிறைவை இயேசுகிறிஸ்துவில் அறிந்துகொள்ள முடியும். இதுதான் கிறிஸ்துவினுடைய முக்கியத்துவம். அவர் நம் பாவங்களுக்காக இரத்தம் சிந்தி மரித்தார்; பல நன்மைகளையும், ஆசீர்வாதங்களையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்கிறார் என்பது கிறிஸ்துவின் பிரதானமான, முதன்மையான, முக்கியத்துவம் அல்ல. கிறிஸ்துவின் முதன்மையான முக்கியத்துவம் என்ன? தேவனுடைய நிறைவை மனிதன் அறிய முடியாது. ஆனால், கிறிஸ்துவில் தேவனுடைய நிறைவை மனிதன் அறிய முடியும். இதுதான் அப்போஸ்தலனாகிய பவுல் எழுதின வாக்கியத்தினுடைய பொருள். “தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் (தேவனுடைய நிறைவெல்லாம்) சரீரப்பிரகாரமாக அவருக்குள் (கிறிஸ்துவில்) வாசமாயிருக்கிறது (ஊனுருக்கொண்டுள்ளது)” (கொலோ. 2:9). அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபம் அதாவது காணமுடியாத தேவனுடைய, புலப்படாத தேவனுடைய புலப்படுகிற வடிவம், உருவம். யார்? கிறிஸ்து. தேவனுடைய நிறைவாகிய அவருடைய செல்வங்கள், அவருடைய வளங்கள், மனிதனுக்குப் புலப்படாதவை. ஆனால் கிறிஸ்துவில் தேவனுடைய செல்வங்களும், வளங்களும், மனிதனுக்குப் புலப்படும். இது தேவனுடைய வழி.
கிறிஸ்துவினுடைய முக்கியத்துவம் என்னவென்றால் தேவனுடைய நிறைவைப் புலப்படுகிற விதத்திலே தேவன் மனிதனுக்காக ஓர் ஏற்பாடு வைத்திருக்கிறார். இது அவர் மாம்ச உருவில் வந்தபிறகு நடைபெற்றது அல்ல. அவர் இந்தப் பூமியிலே மனுவுருவான பிறகுதான் இது நடைபெற்றது என்பது அல்ல. இந்தக் கிறிஸ்து நித்தியத்திலேயே இருக்கிறார். நித்தியத்திலிருந்து தேவனுடைய நோக்கம் என்னவென்றால் தேவன் தம் நிறைவை கிறிஸ்துவில் புலப்படுத்த, பிரத்தியட்சமாக்க, விரும்புகிறார்.
தேவன் தம் நிறைவைப் புலப்படத்தக்கவாறு வழிவகுத்திருக்கிறார். அவர்தான் இயேசுகிறிஸ்து. தேவனுடைய இயல்பு, தேவனுடைய பண்பு, தேவனுடைய கட்டமைப்பு, தேவனுடைய எண்ணங்கள், தேவனுடைய உணர்ச்சிகள், தேவனுடைய தீர்மானங்கள், தேவனுடைய உணர்வுகள், தேவனுடைய பிரமாணங்கள், தேவனுடைய வல்லமை, தேவனுடைய வழிகள், தேவனுடைய செல்வங்கள், தேவனுடைய வளங்கள் ஆகிய எல்லாவற்றையும் படைக்கப்பட்ட உயிரியாகிய நாம் கிறிஸ்துவில் அறிய முடியும்.
மனிதன் தன் இயற்கையான புலன்களைவைத்து, இயற்கையான அறிவைவைத்து, இயற்கையான ஞானத்தைவைத்து, இயற்கையான திறமையைவைத்து, தேவனை அறிந்துகொள்ள ஒருநாளும் முடியாது. இதைப்பற்றி மிகவும் விளக்கமாக 1 கொரிந்தியர் 2ஆம் அதிகாரத்திலே பவுல் ஒரே வார்த்தையில் எழுதுகிறார். “ஜென்மசுபாவமான மனிதன் தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ள மாட்டான்.” இதன் பொருள் என்னவென்றால் நம்முடைய இயற்கையான எந்தப் புலனையையும்வைத்து, அதாவது இயற்கையான அறிவு, இயற்கையான கண், இயற்கையான காது, இயற்கையான சுவை, இயற்கையான திறமை, இயற்கையான முயற்சி, இயற்கையான பிரயத்தனம், இயற்கையான மேட்டிமை போன்றவைகளைவைத்து தேவனுடைய ஆவிக்குரியவைகளைத் தொட முடியாது, புரிந்து கொள்ள முடியாது.
ஒரு சின்ன எடுத்துக்காட்டு சொல்கிறேன். ஒரு படித்த மேதாவியும், படிப்பறிவே இல்லாத ஒருவரும் இந்த வீட்டிற்குள் வருகிறார்கள். படித்த மேதாவிக்குக் கண் பார்வையில்லை. படிப்பறியாதவனுக்குக் கண் பார்வை இருக்கிறது. இந்த இரண்டுபேரில் யார் இந்த வீட்டிற்குள் நுழைய முடியும்? கண் பார்வை உடையவர், ஆனால், இன்னொருவர் படித்த மேதாவியாயிற்றே! ஆனாலும், அவர் நுழைய முடியாது. ஏனென்றால், வீட்டிற்குள் நுழைவதற்குத் தேவை கண் பார்வைதானேதவிர, படிப்பு அல்ல. தவறான திறமையைவைத்து வீட்டிற்குள் நுழைய முடியாது.
அதுபோல, இயற்கையான திறமை, இயற்கையான அறிவு, இயற்கையான வளங்கள், இயற்கையான மண்டலத்திற்குரிய எதையும்கொண்டு தேவனுடைய நிறைவை அறிய முடியாது, தேவனுடைய ஆவிக்குரிய மண்டலத்திற்குள் நுழைய முடியாது. இதைத்தான் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து யோவான் 3ஆம் அதிகாரத்திலே, “மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும். நீ மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய இராஜ்ஜியத்தைக் காணமாட்டாய். நீ ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய இராஜ்ஜியத்தில் நுழைய மாட்டாய்,” என்று சொன்னார்.
தேவனுடைய வளங்கள், செல்வங்கள், நிறைவு பலருக்கு அந்நியமாகவும், அர்த்தமற்றவையாகவும் இருக்கும். ஏனென்றால், அவைகளை அவர்களால் பார்க்க முடியாது, கேட்க முடியாது, சுவைக்க முடியாது, தொடமுடியாது, அவை புலப்படவே புலப்படாது. அது மட்டுமல்ல. அவைகளைப் பார்க்கிற, கேட்கிற, சுவைக்கிற, மக்கள் அவைகளைப்பற்றி உயர்வாகப் பேசும்போது அது அவர்களுக்குப் பைத்தியமாகத் தோன்றும். “வானவில்லிலே ஏழு நிறங்கள் உள்ளன,” என்று பிறவியிலே பார்வையற்ற ஒருவனுக்குச் சொல்லும்போது வானவில்லும், ஏழு நிறங்களும் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும். அவனுடைய உலகத்திலே நிறம் என்று ஒன்று கிடையாது.
“குயிலின் சத்தம் எவ்வளவு இனிமையாக உள்ளது!” என்று சொல்லும்போது பிறவியிலேயே செவித்திறன் இல்லாமல் பிறந்தவனுக்கு அது பைத்தியமாகத் தோன்றும். அவனுடைய உலகத்திலே குயிலின் இசை என்று ஒன்று கிடையாது.
வானவில்லின் நிறங்களைப் பார்ப்பது கட்புலன். குயில் கத்தும் ஓசையைக் கேட்பது செவிப்புலன். அதுபோல, தேவனை அறிவதற்கு ஒரு புலன் வேண்டும். ஆனால், அந்தப் புலன் மனிதர்களிடத்தில் இல்லை. படைக்கப்பட்ட இந்த இயற்கை உலகத்திலே தேவனை அறிகிற புலன் இல்லை. Seeing is a faculty. Hearing is a faculty. Tasting is a faculty. In the natural created world, there is no faculty to know God, to know the fullness of God.
இதை ஒரு படைக்கப்பட்ட உயிரி அனுபவித்தறிய வேண்டும் என்பது தேவனுடைய நோக்கம். தேவன் இந்தப் பிரபஞ்சத்தை எதற்காகப் படைத்தார்? தேவன் இந்தப் பிரபஞ்சத்தின், ஏறக்குறைய, ஒரு மைய உயிரியாகிய மனிதனை ஏன் படைத்தார் என்றால் கிறிஸ்துவில் தேவனுடைய நிறைவை அனுபவித்து அறிவதற்கு அவருக்கு ஒரு சிருஷ்டிப்பு தேவை. இது தேவனுடைய திட்டம். இது தேவனுடைய நோக்கம். மனிதனை எதற்காகச் சிருஷ்டித்தார்? கிறிஸ்துவில் தேவனுடைய நிறைவை அல்லது கிறிஸ்துவில் உள்ள தேவனுடைய நிறைவை அல்லது கிறிஸ்துவில் இருக்கும் தேவனுடைய நிறைவை அனுபவித்து அறிவதற்காகத் தேவன் மனிதனைச் சிருஷ்டித்தார்.
தேன் இனிப்பானது என்று எல்லாருக்கும் தெரியும். இது அறிவு. ஆனால் தேனை ஒரு தடவை நாம் நம் வாயில்வைத்து ருசித்து, “தேன் இனிப்பானது,” என்று சொல்வது அனுபவ அறிவு. அனுபவித்து அறிவது. மனிதன் தேவனுடைய நிறைவை அறிந்துகொள்ள வேண்டும் என்ற தேவனுடைய நோக்கத்தை எப்படி அறிந்துகொள்ள வேண்டும்? அனுபவித்து அறிய வேண்டும்.
நம் வாழ்க்கையோடு தொடர்புடைய ஒரு நீண்ட பட்டியலை நான் இப்போது சொன்னேன். “எனக்கு இப்போது உடல்நிலை சரியில்லை, வேலை இல்லை, கையிலே பணம் இல்லை. இதற்கும் இந்த நீண்ட பட்டியலுக்கும் என்ன தொடர்பு?” என்ற கேள்வி நம் மனதிலே எழலாம். உங்கள் கேள்விக்குப் பதில் இதுதான். உங்கள் கேள்விக்குப் பதில் வெளியே இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. பதில் வெளியே இருப்பதாக யாராவது உங்களுக்குச் சொன்னால் அது பொய். கிறிஸ்துவுக்கு வெளியே மனிதனுடைய தேவையைப் பூர்த்திசெய்வதற்கு ஒன்றும் இல்லை. கிறிஸ்துவுக்கு வெளியே மனிதனுடைய தேவையைப் பூர்த்திசெய்வதற்கு ஏதோவொன்று இருக்கிறது என்று யாராவது உங்களுக்குச் சொன்னால் அது பொய். அது மெய்யல்ல.
நான் சொல்ல விரும்பியது இவ்வளவுதான். கிறிஸ்துவில் தேவனுடைய நிறைவு உள்ளது. அதை அனுபவித்தறிய வேண்டும். அதை அனுபவித்து அறிவதற்காகத் தேவன் மனிதனை அல்லது சபையை உண்டாக்கியிருக்கிறார். மனிதனுக்கும் சபைக்கும் உள்ள தொடர்பு என்ன என்று நாம் பார்க்க வேண்டும். நான் சொன்னது படைக்கப்பட்ட ஒரு உயிரி அல்லது சிருஷ்டிக்கப்பட்ட உயிரி. தேவன் உருவாக்கியிருக்கிறார்.
எபேசியரில் அப்போஸ்தலனாகிய பவுல் மிக அருமையான ஜெபங்களை ஏறெடுக்கிறார். முதல் ஜெபம் எபேசியர் 2ஆம் அதிகாரத்தில் உள்ளது. இரண்டாவது ஜெபம், எபேசியர் 3ஆம் அதிகாரத்தில் உள்ளது. 3ஆம் அதிகாரத்திலுள்ள ஜெபம் என்னவென்றால்
நல்ல ஜெபக் குறிப்புகள். இந்த ஜெபக் குறிப்புகளை வைத்து நாம் ஜெபிக்கலாம். முதலாவது குறிப்பு, “ஆண்டவரே உம்முடைய ஆவியினாலே என்னுடைய உள்ளான மனதில், உள்ளான மனிதனில், வல்லமையாய்ப் பலப்படுத்தும்”. இரண்டாவது, “விசுவாசத்தினாலே கிறிஸ்து எங்கள் இருதயத்தில் வாசமாயிருக்க வேண்டும்”. மூன்றாவது குறிப்பு, “நாங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி, சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர எனக்கு உதவி செய்யும்”. நான்காவது குறிப்பு “தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும் வேண்டும்.”
பரிபூரணம் என்பது தேவனுடைய நிறைவு. பரிபூரணம், நிறைவு ஆகிய இரண்டும் ஒன்றுதான். தேவனுடைய இந்த நிறைவினாலே நாம் நிறைய வேண்டும் என்பது தேவனுடைய திட்டம், தேவனுடைய நோக்கம். தேவனுடைய இந்த சகல நிறைவினாலும், சகல பரிபூரணத்தாலும் நாம் நிறையப்பட வேண்டும் என்பது தேவனுடைய நோக்கம். இந்த நோக்கம் நிறைவேறுவதற்காக அப்போஸ்தலனாகிய பவுல் ஜெபிக்கிறார்.
நம் வாழ்க்கையின் நோக்கம் அல்லது நம் வாழ்க்கையில் நடைபெறுகிற எல்லாம் எதற்காக நடைபெறுகிறது என்று நமக்குத் தெரியாது. தேவனுடைய பிள்ளை ஒருவருடைய ஐந்து வயதுக் குழந்தைக்கு புற்றுநோய் இருந்தது. ஒரு வருடம் கழித்து, “இனிமேல் நம்பிக்கைக்கு இடமில்லை,” என்று மருத்துவர் சொல்லிவிட்டார். இதன் பொருள் என்னவென்ற கேள்வி நம் மனதிலே தோன்ற வேண்டும். கண்ணை மூடிக்கொண்டு போக முடியாது. இதன் பொருள் என்ன?
இன்று காலையிலே மருத்துவமனையில் நான் ஒருவரைப் பார்த்தேன். அவருக்கு ஏதோவொரு வியாதி. அந்த வியாதியின் காரணத்தால் அவருடைய ஒரு பக்கத்தையே எடுத்துவிட்டார்கள். அதனால் அவரால் உட்காரக்கூட முடியாது. ஒரே பக்கத்திலேயே அவர் படுத்திருக்க வேண்டும்.
இந்த நிகழ்ச்சிகளுக்கும், சூழ்நிலைகளுக்கும் என்ன பதில்? இவைகளையெல்லாம் நினைக்கும்போது இந்த உலகத்து மக்கள் பயந்து நடுங்கிவிடுவார்கள். தேவனுடைய மக்களாகிய நமக்குக் கவலையோ, கண்ணீரோ, கதறுதலோ இல்லை என்று நான் சொல்லவில்லை. நமக்கும் பயங்கள் உண்டு, கண்ணீர் உண்டு, கதறுதல்கள் உண்டு, அழுகை உண்டு. ஆனால், உலகத்து மக்களுக்கும் நமக்கும் வேறுபாடு உண்டு. நாம் இந்த நிகழ்ச்சிகளையும், சூழ்நிலைகளையும் எதிர்கொள்கிற விதமும், அதற்கு ஊடாய் நடந்துபோகிற விதமும், உலகத்து மக்கள் இவைகளை எதிர்கொள்கிற விதமும், அதன் ஊடாய் நடந்துபோகிற விதமும் வேறுபாடானது. இதன் பொருள் என்னவென்றால் தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நாம் நிறையப்படுவதுதான் நம்முடைய வாழ்க்கையின் எல்லா நிகழ்ச்சிகளுக்குப்பின்னும், எல்லாச் சூழ்நிலைகளுக்குப்பின்னும், இருக்கிற தேவனுடைய நோக்கம். இதை ரோம 8:28-29ஆம் வசனங்கள் பறைசார்ற்றுகின்றன என்று நான் சொல்வேன். “அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார். எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார். எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார். எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்”. தேவனுடைய தீர்மானம், தேவனுடைய நோக்கத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது.
நன்மை என்ன? இந்த உலகத்தில் ஒரேவொரு நன்மைதான் உண்டு. தேவனுடைய நிறைவு மட்டும்தான் உண்டு. தேவனுடைய பரிபூரணத்தைத்தவிர, தேவனுடைய நிறைவைத்தவிர, இந்தப் பூமியில் வேறு எந்த நன்மையும் இல்லை. நல்ல துணிமணிகள் நன்மைதான். நல்ல உணவு நன்மைதான். தேவையில் உள்ள ஒருவனுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் அவன் தேவைகள் பூர்த்தியாகலாம். ஆனால், ஒரு மனிதனைச் செல்வந்தனாக்க அவனுக்கு நிறையப் பொருள்கள் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அவனுடைய தேவைகளைக் குறைக்க வேண்டும். அவனுடைய உள்ளத்தின் தேவைகளைக் குறைக்க வேண்டும். “உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்” இவ்வளவுதான் ஒரு மனிதனுடைய தேவை. இதை அப்போஸ்தலனாகிய பவுல், “உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்” (1 தீமோ. 6:8) என்றும், “போதுமென்கிற மனதுடனேகூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்” (1 தீமோ. 6:6) என்றும் சொல்லுகிறார்.
இன்றைக்கு என் தேவையைப் பூர்த்திசெய்ய கிறிஸ்துவில் தேவனுடைய நிறைவு போதுமானது என்பது நம் நம்பிக்கை, நம் விசுவாசம். இதை என் வாழ்க்கை நிரூபித்தால் என் வாழ்க்கை பொருளுள்ள, மதிப்புள்ள, கனியுள்ள வாழ்க்கை. இதை என் வாழ்க்கை நிரூபிக்கவில்லையென்றால் என் வாழ்க்கை பொருளற்ற, மதிப்பற்ற, கனியற்ற வாழ்க்கை. நான் மீண்டும் சொல்கிறேன். என் நிலை, என் நெருக்கம், என் தேவை, என் சூழ்நிலை என்னவாக இருந்தாலும், இந்த நிலைக்கும், இந்தச் சூழ்நிலைக்கும், இந்தத் தேவைக்கும், இந்த நெருக்கத்திற்கும் கிறிஸ்துவிலுள்ள தேவனுடைய நிறைவு போதுமானது.
நான் பேசின இந்த வார்த்தைகள் என்னைச் சோதிக்கும், புடமிடும். “கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது,” (சங். 105:19) என்று யோசேப்பைப்பற்றிச் சொல்லியிருப்பதுபோல, எவன் பேசுகிறானோ, எவன் இதை ஏற்றுக்கொள்கிறானோ அவனுடைய இந்த நிலைக்கும், இந்தச் சூழ்நிலைக்கும், இந்த நெருக்கத்திற்கும் கிறிஸ்துவிலுள்ள தேவனுடைய நிறைவு போதுமானதா என்று தேவனுடைய வார்த்தை நம்மைப் புடமிடும்.
ஆனால், “தேவரீர், நீர் உண்மையுள்ளவர்.” என்பதுதான் நம் வாழ்க்கையின் பொருளும், மதிப்பும், கனியும் ஆகும். நாம் கர்த்தரைப் பார்க்கும்போது நாம் நம் கிரீடங்களை அவருடைய சிங்காசனத்திற்குமுன்பாக வைத்து அவரைப் பணிந்துகொள்கிறோம் என்றால் அதன் பொருள் என்ன? “தேவனே, நீர் உண்மையுள்ளவர். கிறிஸ்துவில் நிறைவு எங்களுடைய எல்லா நிலைமைக்கும் போதுமானது என்பது எங்கள் வாழ்க்கையிலே உண்மை என்று நாங்கள் கண்டோம்,” என்பதே அதன் பொருள். “நீர் உண்மையுள்ளவர்,” என்பது நம் சாட்சியாக இருக்க வேண்டும். சாட்சியாக இருக்கும். நாம் ஒரு நிலைமையிலும், ஒரு சூழ்நிலைகளிலும், ஒரு தேவையிலும், ஒரு நெருக்கத்திலும் இருக்கும்போது தேவன் அதை இப்படி நிறைவேற்றுவார் என்று நாம் கணக்கிடலாம். ஆனால், தேவன் அப்படி நிறைவேற்றுவார். தேவன் இப்பொழுது நிறைவேற்றுவார் என்று நாம் கணிக்கலாம். ஆனால், தேவன் அப்பொழுது நிறைவேற்றுவார். இதை நன்றாய் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். உலகத்து மனிதன் கணக்கிடுவதுபோல் தேவன் கணக்கிடுவதில்லை.
ஒரு அவிசுவாசி, தேவனை அறியாத ஒரு மனிதன், ஒரு விசுவாசியிடம் வந்து, “நான் உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன்,” என்று சொல்லுகிறார் என்று வைத்துக்கொள்வோம். “எனக்காக அம்மா கஷ்டப்படுகிறார்கள். இவர் எந்த வரதட்சணையும் இல்லாமல் திருமணம் செய்துகொள்கிறேன் என்று சொல்கிறார். கல்யாணம் பண்ணிக்கொள்ளலாமே!” என்று நினைக்கும்போது இந்த வார்த்தை புடமிடும்.
உலகம் அப்படிக் கணக்கிடும். ஆனால், தேவனுடைய கணக்கீடு மிகவும் வேறுபாடானது. இந்த உலகத்தில் இதுதான் நம் போராட்டம். உலகத்து மக்கள், “இந்தத் திசையிலிருந்து இப்படி நன்மை வரவேண்டும். உனக்கு அந்தத் திசையிலிருந்து அப்படி நன்மை வரவில்லை. இப்படிப்பட்ட நன்மைகள் வரவேண்டும். ஆனால், அவைகள் வரவில்லை. எனவே, உன் வாழ்க்கை ஒரு தோல்வி,” என்று கூக்குரல் போடுவார்கள். அவர்கள் அப்படி நம்மை நம்ப வைப்பார்கள்.
அப்படியென்றால் மிகப்பெரிய தேல்வியடைந்த ஒரு மனிதர் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துதான். “நீர் என்ன இவ்வளவு பெரிய வேலை செய்தீர்! இப்போது உம்மைச் சிலுவையிலே தொங்கவிட்டார்களா, இல்லையா?” என்று உலகம் ஏளனம் செய்தது. இயேசுகிறிஸ்து சிலுவையில் தொங்கினபோது, “இந்த மனிதன் ஒரு தோல்வி, படுதோல்வி,” என்று இந்த உலகம் சொன்னது. “நீர் தேவனுடைய குமாரன் என்று சொன்னீர், இதுதான் நிரூபணமா?” என்று இந்த உலகம் கேட்டது. இயேசுகிறிஸ்து எப்போதும் பிதாவின் நிறைவினால் வாழ்ந்த மனிதர். பிதா போதுமானவர். பிதா போதுமானவர். பிதாவின் நிறைவு போதுமானது. அவர் பிதாவின் பரிபூரணத்தால் வாழ்ந்தார்.
உலகத்தின் வழி வேறு. “என்னுடைய நிலைமைக்கும், சூழ்நிலைக்கும், தேவைக்கும், நெருக்கத்திற்கும் உடனடியாக தேவை பத்தாயிரம் ரூபாய் என்றால் உடனே பத்தாயிரம் ரூபாய் வரும். ஒரு மணமகள் என்றால் மணமகள் வரும். ஒரு மாப்பிள்ளை என்றால் மாப்பிள்ளை வரும். வேலை என்றால் வேலை வரும்,” என்பது உலகத்தின் வழி. ஆனால், தேவன் ஒரு வழியை வைத்திருக்கிறார். தேவனுடைய நிறைவு வரும். ஆனால், தேவனுடைய நிறைவு சிலுவையின் வழியாக வரும். அது தேவனுடைய வழி. சிலுவை என்பது வேறொன்றும் இல்லை. நம் பார்வைக்கு அது முரண்பாடாய்த் தோன்றினாலும் தேவன் உண்மையுள்ளவர் என்று அசையாமல் காத்திருக்கிற அந்த வழிக்குப் பெயர்தான் சிலுவை. என் மாம்சம் நம்பிக்கையோடே தங்கியிருக்கும். தேவன் உண்மையுள்ளவர். தேவன் நம்பத்தக்கவர். தேவன் சார்ந்துகொள்ளத்தக்கவர். அவர் ஒருநாளும் கைவிட்டதில்லை. “மற்றவர்கள் எல்லாம் நன்றாக இருக்கிறார்கள். நாங்கள் நன்றாக இல்லை,” (சங். 73) என்று ஆசாப் புலம்புகிறான். “தேவனுடைய கூடாரத்திற்கு, தேவனுடைய சமூகத்திற்கு வந்து சிந்திக்கும்வரை நான் அப்படி நினைத்தேன்,” (சங். 73:16) என்று அவர் சொல்லுகிறார்.
இந்த வார்த்தைகள் நம்மை உற்சாகப்படுத்த வேண்டும். உலகத்து மக்களைப் பார்த்து நாம் ஒருநாளும் பொறாமைப்பட வேண்டிய அவசியமில்லை. நான் தேவனுடைய நிறைவினால் வாழ விரும்புகிறேன். உயிர்த்தெழுந்த காலை நம் வாழ்க்கையை நிரூபிக்கும். எந்த அளவுக்கு நாம் தேவனுடைய நிறைவினால் வாழ்கிறோமோ, அந்த அளவுக்குக் கிறிஸ்துவின் நிறைவை நாம் மற்றவர்களுக்கு வழங்குகிறவர்களாக இருப்போம்.
தேவன் இறுதி நாளிலே, இந்தக் காலங்கள் யுகங்கள் நிறைவேறும்போது, ஒன்று செய்வார். கிறிஸ்துவுக்குள் அவர் எல்லாவற்றையும் கூட்டிச்சேர்ப்பார். கூட்டிச்சேர்த்தல் என்றால் கிறிஸ்துவல்லாத ஏதாவது எனக்குள் இருந்தால் அதை அவர் கழித்துவிடுவார். எல்லா வியாபாரிகளும் அதைச் செய்வார்கள். கடலை வாங்குகிறவன் பொக்கைக் கடலையைக் கழித்துவிடுவான். இறால் வாங்குகிறவன் உடைந்துபோன இறாலை தூக்கியெறிந்துவிடுவான். எல்லாரையும் கூட்டிச்சேர்க்கும்போது கிறிஸ்துவல்லாத எல்லாம் எரிந்துபோகும். கிறிஸ்துவல்லாத எல்லாவற்றையும் கழித்துப்போடுவார், “இது கிறிஸ்து இல்லை,” என்று தள்ளிவிடுவார்.
எந்த நிலையில், எந்தச் சூழ்நிலையில், எந்த நெருக்கத்தில், எந்தத் தேவையில் கிறிஸ்துவில் உள்ள தேவனுடைய நிறைவால், தேவனுடைய பரிபூரணத்தால், நாம் வாழ்ந்தோமோ அதெல்லாம் நித்தியத்திற்குப் போகும். எந்தத் தேவைகளுக்கெல்லாம் கிறிஸ்து போதுமானவர் அல்ல என்று இந்த உலகத்து மக்களுடைய வழியை அல்லது இயற்கையின் வழியை அல்லது பாவ வழியை அல்லது மாம்சத்தின் வழியை நாம் கையாண்டோமோ அந்தச் சமயத்தில் அது நமக்கு ஒரு திருப்தியைத் தரும். ஒரு இன்பத்தைத் தரும். ஆனால், அதெல்லாம் எரிந்துபோகும். விமான நிலையத்தில் பெட்டிகளையெல்லாம் ஸ்கேன் பண்ணுவதைப்போல் தேவன் நம்மை ஸ்கேன் பண்ணினால் என்ன மிஞ்சியிருக்கும் என்று தெரியாது. நாம் அப்பொழுது மிகவும் அழுவோம், கதறுவோம். உண்மையிலேயே நாம் தேவனுடைய பரிபூரணத்தால் பல சூழ்நிலைகளில் வாழவில்லை. தேவனுடைய பரிபூரணத்தால் நாம் வாழ்ந்தால் நம்மைச் சுற்றியிருக்கிற மக்களுக்கும் நாம் தேவனுடைய பரிபூரணத்தைக் கொடுப்போம்.
எப்படி நாம் தேவனுடைய பரிபூரணத்தை மக்களுக்குக் கொடுக்கிறோம்? முதலாவது நம் இருதயத்திலே இடம், நம் நேரம், உழைப்பு, வீடு, செல்வங்கள் எல்லாவற்றையும் நாம் தேவனுக்கென்றும், தேவனுடைய மக்களுக்கென்றும் திறந்து வைத்திருக்கிறோம். நம்மைப் பொறுத்தவரை தேவனுடைய மக்களுடைய சமுதாய வாழ்க்கை நிறைவாகத்தான் இருக்க வேண்டுமேதவிர ஒருநாளும் குறைவாக இருக்கக் கூடாது.
எனவே, அருமையான சகோதர, சகோதரிகளே நம் அழைப்பு சாதாரணமான அழைப்பு அல்ல. தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படுவதற்கு அவருடைய மக்கள் நடத்தப்படுவது அவருடைய நோக்கம். “Being filled with all the fullness of God is God’s purpose. தேவன் இந்த வாக்கியங்களை நம் அனுபவ வாழ்க்கையில் உண்மையாக்குவாராக. ஆமென்.