Transcribed from a message spoken In October 2014 in Chennai
By Milton Rajendram
தேவனுடைய பக்கத்தில், எப்போதெல்லாம் மனிதர்கள் தேவனுடைய பரிபூரணத்தால் வாழ்ந்து, தேவனுடைய பரிபூரணத்தை வெளிப்படுத்துகிறார்களோ, அப்போதெல்லாம் தேவன் மகிழ்ச்சியடைகிறார். மனிதனுடைய பக்கத்தில், எப்போதெல்லாம் தேவனுடைய பரிபூரணத்தால் நாம் மனித வாழ்க்கை வாழ்கின்றோமோ, அப்போதெல்லாம் நாம் மகிழ்ச்சியடைகிறோம். எனவே, உண்மையிலேயே தேவனுக்கும் மனிதனுக்கும் இது மிகவும் அற்புதமான ஒன்று. தேவனுடைய பரிபூரணத்தால் நாம் வாழும்போது தேவன் அதிலே மகிழ்ச்சியடைகிறார்; நாமும் மகிழ்ச்சியடைகிறோம். ஏனென்றால், எல்லா நிலைமைக்கும், எல்லாத் தேவைக்கும், குறைவுக்கும் அது போதுமானதாக இருக்கிறது.
தேவனுடைய பரிபூரணம் என்றால் என்னவென்பதை விளக்குவது சற்று கடினம். ஆனால், இந்த உலகத்தில் மனிதர்கள் எவைகளெல்லாம் தங்கள் வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசமானவை என்று கருதுகின்றார்களோ அல்லது எவைகளெல்லாம் இருந்தால் தங்கள் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருக்கும் என்று நினைக்கின்றார்களோ, அவையெல்லாவற்றையும்விட தேவனுடைய பரிபூரணம் மிகவும் மேலானது.
“நல்ல உடல்நலம், நல்ல வேலை, நல்ல வருவாய், நல்ல குடும்பம், இருந்தால் என் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக, மிகவும் திருப்தியாக, மிகவும் இன்பமாக இருக்கும்,” என்று இந்தப் பூமியிலே மனிதர்கள் பல காரியங்களை விரும்புகின்றார்கள், நாடுகின்றார்கள், தேடுகின்றார்கள், உழைக்கின்றார்கள்; அதற்காகத் தவிக்கின்றார்கள், ஏங்குகின்றார்கள். இப்படி மனிதர்கள் எந்தெந்தக் காரியங்களை நாடுகிறார்களோ, தேடுகிறார்களோ, தவிக்கின்றார்களோ அவையெல்லாவற்றையும்விட தேவனுடைய பரிபூரணம் மேலானது. உடல்நலம், வேலை, வருவாய், குடும்பம் என்று இந்தப் பூமியிலே மனிதர்கள் அனுபவிக்கின்ற எல்லா இன்பங்களையும்விட தேவனுடைய பரிபூரணம் மேலானது.
தேவனுடைய பரிபூரணத்தை அவருடைய குமாரனாகிய கிறிஸ்துவை விசுவாசிக்கிற மனிதர்கள் எல்லாரும் அனுபவித்து அறிய வேண்டும், காண வேண்டும், அந்த பரிபூரணத்தால் அவர்கள் வாழ வேண்டும், அந்த பரிபூரணத்தை அவர்கள் வெளியாக்க வேண்டும் என்பது தேவனுடைய விருப்பம், தேவனுடைய நோக்கம், தேவனுடைய திட்டம்.
நிலத்திற்குள் எவ்வளவோ பரிபூரணம் இருக்கிறது! மனிதர்களாகிய நாம் சாப்பிடுகிற எல்லா உணவும் இந்த மண்ணுக்குள்ளிருந்துதான், இந்த நிலத்திற்குள்ளிருந்துதான், வருகிறது. அப்படியென்றால் மனிதர்களாகிய நாம் சாப்பிடுகிற இந்தப் பரிபூரண நிறைவெல்லாம் இந்த மண்ணுக்குள், இந்த நிலத்துக்குள், இருக்கிறது. மனிதனுடைய உடல்நலத்திற்கு, உடல்பலத்திற்கு, தேவையான எல்லாக் கனிமங்களும், எல்லாத் தாதுக்களும், இந்த மண்ணுக்குள், இந்த நிலத்திற்குள், இருக்கின்றன. இந்த மண்ணுக்குள் இருக்கிற பரிபூரணமெல்லாம்–இந்த வளங்கள், செல்வங்கள்–ஒருநாள் தீர்ந்துபோகாதா? இதுவரை இந்த நிலத்திற்குள் இருக்கிற பரிபூரணம் தீர்ந்துபோகவில்லை. ஆனால், ஒருநாள்-அது எந்த நாள் என்று தெரியாது-பல பத்தாயிரம் ஆண்டுகள், பல நூறாயிரம் ஆண்டுகள் கழித்து ஒருவேளை அது வற்றிப் போகலாம் அல்லது தீர்ந்துபோகலாம். குறைந்தபட்சம் தண்ணீர் வற்றிப்போகிறது அல்லது தீர்ந்துபோகிறது என்று தெரியும். எனவே அது ஒரு விதி, அது ஒரு பிரமாணம்.
படைக்கப்பட்ட எல்லா வளங்களும், எல்லாச் செல்வங்களும், எல்லாப் பரிபூரணங்களும் ஒருநாள் வற்றிப்போகும், தீர்ந்துபோகும். ஆனால், அது தேவனுடைய பரிபூரணத்திற்கு ஒரு நல்ல நிழலாயிருக்கிறது. படைக்கப்பட்ட இந்தப் பரிபூரணம்கூட வற்றிப்போகாததுபோல, தீர்ந்துபோகாததுபோல, தோன்றுகிறது இல்லையா? தலைமுறைதோறும் இந்த நிலத்திலே மனிதர்கள் பயிரிட்டு பயிரிட்டு பயிரிட்டு பயிரிட்டு அந்த நிலத்திலுள்ள பரிபூரணத்தையெல்லாம் வெளியே கொண்டுவந்து அனுபவித்து மகிழ்கிறார்கள், அதைக் காண்கின்றார்கள், அந்தப் பரிபூரணத்தால் வாழ்கின்றார்கள், அந்தப் பரிபூரணத்தை அவர்கள் வெளியாக்குகின்றார்கள். ஆனால், தேவனுடைய பரிபூரணம் வற்றாதது, தீர்ந்துபோகாதது.
நேர்மறையாகச் சொல்வதானால், தேவனுடைய பரிபூரணம் பெருகிக்கொண்டேபோகக்கூடியது. “பரிபூரணம் அல்லது நிறைவு என்று சொல்கிறீர்கள். பரிபூரணம் அல்லது நிறைவு எப்படி மேன்மேலும் பெருக முடியும்? பரிபூரணம் என்றாலே அது ஒரு பெரிய எல்லையை எட்டிவிட்டது என்றுதானே பொருள்?” என்று நீங்கள் ஒருவேளை ஆச்சரியப்படலாம். தேவனுடைய பரிபூரணம் பெருகிக்கொண்டே போகக்கூடியது. இன்னும் சொல்லப்போனால் நித்திய நித்தியமாக தேவனுடைய பரிபூரணம் பெருகிக்கொண்டே போகும். அவருடைய குமாரனாகிய கிறிஸ்துவில் இருக்கிற தேவனுடைய பரிபூரணம் பெருகிக்கொண்டே போகும். இது மிகவும் ஆச்சரியமானது.
என் பிள்ளைகள் சிறுவர்களாக இருந்தபோது என்னிடம் காசு கேட்டபோது, நான் “இல்லை” என்று சொன்னால் “வங்கிக்குப் போனால் பணம் கிடைக்குமே, வாருங்கள், போவோம்,” என்று சொல்வார்கள். அவர்களைப் பொறுத்தவரை வங்கி என்பது வற்றாத ஒரு பரிபூரணம். சிலர் பங்குச் சந்தையைப்பற்றி அப்படி நினைக்கின்றார்கள். கொஞ்சம் பரிபூரணத்தை அதற்குள் போட்டால் அது காலாகாலமாக வற்றாத, தீர்ந்துபோகாத, பெருகிக்கொண்டேயிருக்கிற பங்குகளைத் தந்துகொண்டேயிருக்கும் என்று அவர்கள் நினைக்கின்றார்கள். அது பொய்.
ஆனால், தேவன் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார். தேவன் ஒரு அற்புதமான பொருளை வடிவமைத்திருக்கிறார், திட்டமிட்டிருக்கிறார். அந்தப் பொருளிலே தேவன் கொஞ்சம் பரிபூரணத்தை வைக்கிறார். அந்தப் பொருளிலே தேவனுடைய பரிபூரணம் ஒவ்வொரு நாளும் வளர்ந்துகொண்டும், பெருகிக்கொண்டும், யுகயுகமாய் நித்திய நித்தியமாய் பெருகிக்கொண்டே போகும். அது தேவனுடைய திட்டம். அந்தப் பொருளுக்குப் பெயர் தேவனுடைய சபை அல்லது கிறிஸ்துவின் சரீரம். தேவன் அவருடைய சபையிலே அல்லது கிறிஸ்துவின் சரீரத்திலே பரிபூரணத்தை வைக்கிறார்.
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின்மேல் விசுவாசம் வைத்து, அவருடைய ஜீவனால் உயிர்ப்பிக்கப்பட்ட எல்லா மக்களோடும் இருப்பதுதான் தேவனுடைய சபை, தேவனுடைய வீடு, கிறிஸ்துவின் சரீரம். தேவனுடைய சபை என்பது ஒரு கட்டிடமல்ல. சபை என்பது ஒரு உபதேச அமைப்புமுறை அல்ல. தேவனுடைய சபை என்பது ஒரு நிகழ்ச்சிநிரல் அல்ல. தேவனுடைய சபை என்பது ஒரு அகில உலக ஸ்தாபனமோ, நிறுவனமோ, அல்ல. மாறாக, தேவனுடைய சபை என்பது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் விசுவாசம் வைத்து, அவருடைய ஜீவனால் உயிர்ப்பிக்கப்பட்ட தேவனுடைய மக்களாலான ஒரு உயிரி. இதற்குப் பெயர்தான் தேவனுடைய சபை.
தேவன் தம் பரிபூரணத்தைச் சபையிலே, கிறிஸ்துவின் சரீரத்திலே, வைத்திருக்கிறார் என்றவுடன், அதை அவர் ஓர் அமைப்புமுறையிலே அல்லது உபதேச அமைப்பிலே அல்லது ஒரு நிறுவனத்திலே அல்லது ஒரு ஸ்தாபனத்திலே அல்லது ஒரு கட்டிடத்திலே வைத்திருக்கிறார் என்பதல்ல அதன் பொருள். “இந்தக் கட்டிடத்திலே தேவனுடைய பரிபூரணம் உள்ளது. இந்த ஊரிலே தேவனுடைய பரிபூரணம் உள்ளது,” என்று நினைத்து கட்டிடத்தைநோக்கி அல்லது ஊரைநோக்கிப் போக வேண்டாம். “இந்த ஊருக்குப் போனால் நமக்கு இந்த வியாதி தீரும் அல்லது இந்தக் கட்டிடத்திற்குப் போனால், கோயிலுக்குப் போனால், குருசடிக்குப் போனால், நாம் வேண்டிக்கொண்டது நடக்கும்,” என்பதுபோன்ற மூடநம்பிக்கைகள் அநேக மக்களிடையே உள்ளன. அவைகள் மூடநம்பிக்கைகள்.
தேவன் தம் பரிபூரணத்தை ஒரு உயிரில்லாத ஜடப்பொருளில் ஒருநாளும் வைக்கமாட்டார். அது வீடோ, ஒரு கோயிலோ, ஒரு குருசடியோ, ஒரு ஊரோ, ஒரு அமைப்புமுறையோ அல்லது ஒரு உபதேசமோ அல்லது ஒரு சர்வதேச நிறுவனமோ எதுவாக இருந்தாலும் சரி, இவைகளிலே தேவன் தம் பரிபூரணத்தை வைக்கமாட்டார். இதைச் சொன்னதற்காக ஒரு மனிதன் கல்லெறிந்து கொலைசெய்யப்பட்டான். ஸ்தேவான். “தேவன் கைகளினால் கட்டப்பட்ட ஆலயங்களிலே வாசமாயிரார்,” என்று அவர் சொன்னார். அதைக் கேட்ட யூதர்கள் எல்லாரும் கைகளிலே கல்லை எடுத்துக்கொண்டார்கள். “எங்கள் தேவாலயம் உட்படவா? எங்கள் தேவாலயத்திலே தேவனுடைய மகிமை பிரசன்னமாயிருந்தது. இந்தத் தேவாலயத்துக்குள்ளேயா தேவன் வாசமாயிருக்கமாட்டார்?” என்று கொதித்தெழுந்துவிட்டார்கள். இந்தத் தேவாலயம் மனிதர்களுடைய கைகளினால் கட்டப்பட்ட ஒரு ஜடப்பொருள். கைகளினால் கட்டப்பட்ட உயிரற்ற ஜடப்பொருளாலான எதிலும் தேவன் வாசமாயிருக்கமாட்டார், அதில் தேவனுடைய பரிபூரணம் இருக்காது.
தேவனுடைய பரிபூரணம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவோடு ஜீவனில் ஒன்றாக இணைக்கப்பட்ட தேவனுடைய மக்களுக்குள் ஒரு மட்டிற்கு, ஓரளவிற்கு, ஒரு எல்லைக்குட்பட்டு உள்ளது. தேவனுடைய மக்கள் எல்லாருக்குள்ளும் தேவன் அதை வைக்கிறார். இயேசுகிறிஸ்துவோடு ஜீவனில் இணைக்கப்பட்ட எல்லாரும் தேவனுடைய பரிபூரணத்தை அனுபவிக்க முடியும், காண முடியும். தேவனுடைய பரிபூரணத்தால் அவர்கள் தங்கள் பரிபூரணத்தை வெளிக்காண்பிக்க முடியும். இப்படி தேவனுடைய மக்கள் எல்லாருக்குள்ளும் அவர் தம் பரிபூரணத்தை, கிறிஸ்துவின் பரிபூரணத்தை, வைத்திருக்கிறார்.
ஆனால், கிறிஸ்துவின் பரிபூரணம் இவருக்குள் கொஞ்சம், அவருக்குள் கொஞ்சம், இன்னொருவருக்குள் கொஞ்சம் என்று இருப்பதல்ல அவருடைய திட்டம். இந்தப் பரிபூரணத்தை இவர்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வதினாலே தேவனுடைய பரிபூரணம் அல்லது கிறிஸ்துவின் பரிபூரணம் பல மடங்கு பெருகும். பல மடங்கல்ல, பல அடுக்குப் பெருகும்.
பல மடங்கு என்றால் many times. பல அடுக்கு என்றால் many order. வங்கியில் போட்ட நூறு ரூபாய் இருநூறு, முந்நூறு, நானூறு, ஐநூறு ரூபாயாகப் பெருகினால் அது பல மடங்கு பெருகுகிறது என்று பொருள். ஆனால், அதே நூறு ரூபாய் ஆயிரம், பத்தாயிரம், இலட்சம் என்று பெருகினால் அது பல அடுக்குப் பெருகுகிறது என்று பொருள்.
“இந்தச் செய்தி கொஞ்சம் நூதனமான செய்தியாக இருக்கிறதே!” என்று சிலர் கேட்கலாம். சில முக்கியமான வசனங்களை வாசிப்போம். “அவருடைய பரிபூரணத்தினால் நாமெல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம்” (யோவான் 1:16). “எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்” (எபே. 1:22). எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய பரிபூரணம் அல்லது நிறைவு. * The fullness என்ற ஆங்கில வார்த்தையைப் பரிபூரணம் அல்லது நிறைவு என்று மொழிபெயர்த்திருக்கின்றார்கள். நான் சில சமயங்களில் தேவனுடைய நிறைவு என்றும், வேறு சில சமயங்களில் தேவனுடைய பரிபூரணம் என்றும் பயன்படுத்துகிறேன். ஆனால் பெரும்பாலும் தேவனுடைய பரிபூரணம் என்று பயன்படுத்தலாம் என்ற ஒரு முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறேன்.
“அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும் தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும் வேண்டுமென்று…வேண்டிக்கொள்கிறேன்” (எபே. 3:19). தேவனுடைய மக்கள் “தேவனுடைய பரிபூரணத்தினால் நிறையப்படவேண்டும்” என்பது பவுலின் ஒரு ஜெபம்.
இதன் பொருள் என்ன? சபை என்பது தேவனுடைய பரிபூரணம். அவருடைய பரிபூரணத்தினாலே நாம் கிருபையின்மேல் கிருபை பெற்றோம். தேவனுடைய பரிபூரணத்தை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மனிதர்களிடத்திலே கொண்டுவந்தார். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து வருகின்றவரை தேவனுடைய பரிபூரணம் கிடைக்கவில்லை. ஆனால், இன்று ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவில் தேவனுடைய பரிபூரணம் மனிதர்களுக்குக் கிடைக்கிறது. தேவனுடைய சபை தேவனுடைய பரிபூரணமாக இருக்கிறது. தேவன் தம் பரிபூரணத்தை மக்களுக்குக் கொடுத்திருக்கிறார்.
ஆனால், “நீங்கள் அந்தப் பரிபூரணத்தால் நிறையப்பட வேண்டும்,” என்பது அப்போஸ்தலனாகிய பவுலின் ஒரு ஜெபம். நாம் இன்னும் அந்தப் பரிபூரணத்தால் நிறையப்படவில்லை. நம் வாழ்க்கையின் பல தருணங்களிலே, பல கட்டங்களிலே, பல சூழ்நிலைகளிலே, நாம் தேவனுடைய பரிபூரணத்தால் வாழவில்லை. மாறாக, நாம் இந்த இயற்கையான வளங்களால் வாழ்கிறோம், வாழ முயல்கிறோம். நாம் இயற்கையான வளங்களால் வாழ முயலும்போது அதன் முடிவு ஒன்று, வற்றிப்போகும், தீர்ந்து போகும் அல்லது தோல்வியாக இருக்கும் அல்லது மட்டுப்பட்டதாக இருக்கும். ஒரு நாள் இல்லையென்றால் ஒருநாள் நாம் இயற்கையான வளங்களால் வாழ முடியாது. தேவனுடைய மக்கள் தேவனுடைய வளங்களால், தேவனுடைய பரிபூரணத்தால், பரம வளங்களால் வாழ முடியும்.
இன்னொரு வசனம்: “நான் உங்களிடத்தில் வரும்போது கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் சம்பூரணமான ஆசீர்வாதத்தோடே வருவேனென்று அறிந்திருக்கிறேன்” (ரோமர் 15:29). சுவிசேஷம் என்ற வார்த்தை மூலமொழியில் இல்லை. “I know that when I come to you I come with the fullness of blessing of Christ”. “கிறிஸ்துவினுடைய ஆசீர்வாதத்தின் பரிபூரணத்தோடு, சம்பூரணத்தோடு, உங்களிடத்திற்கு நான் வருவேன்,” என்று பவுல் எழுதுகிறார். தேவனுடைய மக்களாகிய நாம் ஒருவரையொருவர் சந்திக்கும்போது கிறிஸ்துவின் ஆசீர்வாதத்தின் பரிபூரணத்தோடு, சம்பூரணத்தோடு, வருகிறோம். இந்தக் கூடுகைக்கு மட்டுமல்ல. நாம் ஒருவரையொருவர் சந்திக்கும்போது கிறிஸ்துவின் ஆசீர்வாதத்தின் சம்பூரணத்தோடு அல்லது பரிபூரணத்தோடு அல்லது நிறைவோடு சந்திக்கிறோம். நான் உங்களைச் சந்திக்க வரும்போது கிறிஸ்துவின் பரிபூரணத்தோடு உங்களைச் சந்திப்பேன். வெறுங்கையோடு நாம் யாரையும் சந்திப்பதில்லை அல்லது பார்ப்பதில்லை. நாம் தேவனுடைய மக்களைச் சந்திக்கும்போது கிறிஸ்துவின் பரிபூரணத்தோடு சந்திக்க வேண்டும். வெறுங்கையோடு, வெறும் வார்த்தையோடு, வெற்று வார்த்தையோடு, வெற்றுச் சிரிப்போடு, வெற்று வேடிக்கையோடு நாம் தேவனுடைய மக்களைச் சந்திக்கக் கூடாது.
வேதம் முழுவதும் தேவனுடைய பரிபூரணத்தைப்பற்றிக் கூறுகிறது. இதில் முக்கியமானது என்னவென்றால் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நாம் தேவனுடைய பரிபூரணத்தால் வாழ வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். அதற்கென்றே அவர் நம்முடைய வாழ்க்கையிலே பல்வேறு விதமான சூழ்நிலைகளை அமைக்கிறார். நம்முடைய சில சூழ்நிலைகள் மிகக் கடினமான சூழ்நிலைகளாகத் தோன்றலாம். நாம் நம்முடைய வாழ்க்கையின் எல்லாவிதமான சூழ்நிலைகளிலும் தேவனுடைய பரிபூரணத்தால் வாழ வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இந்தச் சூழ்நிலையில் இயற்கையான திறமையால், இயற்கையான ஞானத்தால், இயற்கையான வளத்தால், இயற்கையான செல்வத்தால் வாழ முடியாது என்பது நம்முடைய வாழ்க்கையிலே பலமுறை வரும். அப்படிப்பட்ட நிலைமை, அப்படிப்பட்ட தேவை, அப்படிப்பட்ட நெருக்கம், அப்படிப்பட்ட குறைவு வரும்போதெல்லாம் தேவனுடைய நோக்கம் தேவனுடைய பரிபூரணத்தால் நாம் வாழ வேண்டும் என்பதே.
2 கொரிந்தியர் 12:9; பிலிப்பியர் 4:13 ஆகிய வசனங்களின் அடிப்படையில் இந்தக் கூற்றைச் சொல்லுகிறேன். இயற்கையான வளங்களால் வாழ முடியாது. ஆனால், கிறிஸ்துவிலுள்ள தேவனுடைய பரிபூரணத்தால், தேவனுடைய வளங்களால், தேவனுடைய செல்வங்களால், நாம் வாழ முடியும், வாழ வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இந்த இரண்டு வசனங்களையும் நாம் வாசிக்கலாம். அதற்கு அவர் “என் கிருபை உனக்குப் போதும். பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்” (2 கொரி. 12:9). “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றiயுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” (பிலி. 4:13).
பவுலின் வாழ்க்கையிலே ஒரு நெருக்கமும், ஒரு நோயும், ஒரு தேவையும், ஒரு குறைச்சலும் இருக்கிறது. அந்த நெருக்கத்திலிருந்து, அந்த நோயிலிருந்து, அந்தக் குறைச்சலிலிருந்து, அந்தத் தேவையிலிருந்து இயற்கையான முறையில் விடுதலை பெறுவதற்கு அல்லது தீர்வு பெறுவதற்கு வழி இல்லை. ஆனால், தேவன் “என் கிருபை உனக்குப் போதும். பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்,” என்று சொல்கிறார். அதேபோல பிலிப்பியர் 4ஆம் அதிகாரத்திலே பவுல் “நான் குறைச்சலிலிருந்தேன். ஆனால் எந்த நிலைமையிலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு என்ற மாபெரும் இரகசியத்தை நான் கற்றுக்கொண்டேன்,” என்று சொல்கிறார்.
இந்தப் பூமியிலே நாம் கிறிஸ்துவிலுள்ள தேவனுடைய பரிபூரணத்தால் வாழ முடியும் அல்லது வாழ வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். ஆனால், இன்றைக்கு நான் இன்னொரு பகுதியை வலியுறுத்த விரும்புகிறேன. தேவன் தம் பரிபூரணத்தை தேவனுடைய மக்களுக்கிடையேயுள்ள உறவுகளிலே வைத்திருக்கிறார். எனவே, நான் இப்பொழுது பகிர்ந்துகொள்ளப்போகிறது மிக முக்கியமான காரியம். நம்முடைய உறவுகளிலே தேவனுடைய பரிபூரணத்தை அனுபவிப்பது அல்லது தேவனுடைய பரிபூரணத்தைப் பெருக்குவது எப்படி என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். தேவனுடைய மக்களுக்கிடையிலான இந்த உறவுகளுக்கு மிகுந்த மதிப்பு உண்டு, மிகுந்த பொருள் உண்டு. இது லயன்ஸ் கிளப் அல்லது ரோட்டரி கிளப் கூட்டத்தைப்போன்றது அல்ல. தேவனுடைய மக்கள் கூடிவருவதும், தேவனுடைய மக்கள் கூடிவாழ்வதும் அதற்கு ஒப்பானது அல்ல. தேவனுடைய மக்கள் கூடிவாழ்வதின் விளைவாக அவருடைய பரிபூரணம் பலமடங்கு, பலஅடுக்கு, பெருகும். இப்படிப்பட்ட ஒரு மதிப்பு, இப்படிப்பட்ட ஒரு பொருள் அதிலே இருப்பதால்தான் தேவன் தம் மக்கள் கூடிவாழுமாறு தேவனுடைய சபை அல்லது தேவனுடைய குடும்பம் அல்லது தேவனுடைய வீடு அல்லது கிறிஸ்துவின் சரீரம் என்ற ஒன்றை அமைத்திருக்கிறார்.
தேவனுடைய பரிபூரணம் நம் உறவுகளிலே எப்படி பெருகுகிறது என்பதை நான் சுருக்கமாய்ச் சொல்ல விரும்புகிறேன். உலகத்தைப் பொறுத்தவரை உறவுகளின் வாழ்க்கை அல்லது உறவின் வாழ்க்கை என்பது மிகவும் சிக்கலான வாழ்க்கை. இந்த உலகத்து மனிதர்கள் உறவுகொண்டு வாழ்வதைவிட உறவில்லாமல் ஒரு தனிமனிதனாய் வாழ்வதை மிகவும் விரும்புவார்கள். ஆனால், தேவனைப் பொறுத்தவரை அவருடைய மக்கள் உறவின் வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது தேவனுடைய விருப்பம், தேவனுடைய திட்டம். ஏனென்றால், அந்த உறவின் வாழ்க்கையிலே, அந்த உறவுகளிலே, மாபெரும் பொருளும், மதிப்பும், ஆசீர்வாதமும் உண்டு.
தேவனுடைய மக்களுக்கிடையிலான உறவு என்று நான் சொல்லும்போது சகோதர சகோதரிகளுக்கிடையே உள்ள உறவை மட்டும் அல்ல, கணவன் மனைவி உறவு, பெற்றோர் பிள்ளைகள் உறவு, வேலைக்காரர் எஜமான் உறவு, இப்படி எல்லா உறவுகளுக்கும் இது பொருந்தும். உறவுகளின்மூலமாக தேவனுடைய சம்பூரணத்தை, தேவனுடைய பரிபூரணத்தை, நாம் அனுபவிக்கலாம், பெருக்கலாம். ஆனால், அது நம்முடைய உறவினுடைய தரத்தைப் பொறுத்தது, எப்படி உறவுகொண்டு வாழ்கிறோம் என்பதைப்பொறுத்தது. புதிய ஏற்பாடு பயன்படுத்துகிற வார்த்தை இயேசுகிறிஸ்துவின்மூலமாக சரீரமாக சபையைக் கட்டியெழுப்புவது. சபையைக் கட்டியெழுப்புவது என்பது யாரோவொருவர் சபை என்ற கட்டிடத்தைக் கட்டுவார், நாம் அதற்கு அன்பளிப்பு கொடுப்பது அல்ல. அது மிகவும் தாழ்வான ஒரு கருத்து. சபையைக் கட்டியெழுப்புவது என்றால் நம்முடைய உறவுகளைக் கட்டியெழுப்புவது அல்லது நாம் எப்படி உறவுகொண்டு வாழ்கிறோம் என்பதைப் பொறுத்தது.
உங்கள் மனதிலே தங்குவதற்காக அதை நான்காகப் பிரித்துக்கொண்டேன். தேவனுடைய பரிபூரணத்தை நாம் நம்முடைய உறவுகளிலே அனுபவிக்க வேண்டுமென்றால், நம்முடைய உறவுகள்மூலமாய் பெருக்க வேண்டுமென்றால், நம்முடைய உறவுகளிலே இந்த நான்கும் இருக்க வேண்டும். ஒன்று, உறவுகளில் பொறுப்பு. இரண்டு, உறவுகளில் இசைவு. மூன்று, உறவுகளில் பகிர்வு. நான்கு, உறவுகளில் பொறுமை. Responsibility in our relationships. Harmony in our relationships. Sharing in our relationships. Long-suffering or bearing in our relationships. பொறுப்பு, இசைவு, பகிர்வு, பொறுமை.
ஒன்றாவது, நம் உறவுகளிலே பொறுப்பு உண்டு. நம் உறவுகளிலே ஒருவரைப் பொறுத்தவரை ஒருவருக்கு இடமுண்டு என்று நாம் கடந்த நாட்களிலே பார்த்திருக்கிறோம். அதற்கு இன்னொரு வார்த்தைதான் பொறுப்பு. தேவன் அவருடைய ஜீவனைக்கொண்டு நம்மை மீண்டும் உயிர்ப்பித்து, நம்மை ஒருவரோடொருவர் உறவுபடுத்தியிருக்கிறார். இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதற்குமுன்பு நமக்கு ஒருவரோடொருவர் எந்த உறவும் இல்லை. தேவனோடும் எந்த உறவும் இல்லை. தேவனுடைய மக்களோடும் எந்த உறவும் இல்லை. இயேசுகிறிஸ்துவை நாம் விசுவாசித்தபோது தேவனோடு நாம் ஒரு உறவுக்கு வந்தோம். தேவனுடைய ஜீவனைப் பெற்றுக்கொண்டோம். தேவனுடைய ஒரே ஜீவன் அவருடைய மக்கள் எல்லாருக்குள்ளும் இருப்பதன் விளைவாக தேவனுடைய மக்களாகிய நாம் ஒருவரோடொருவர் உறவுபடுத்தப்பட்டிருக்கிறோம். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தேவனுடைய மக்களாகிய எல்லாரோடும் நாம் உறவுபடுத்தப்பட்டிருக்கிறோம். இது ஒரு உண்மை. சூரியன் கிழக்கில் உதிக்கிறது என்பது எப்படி உண்மையோ அப்படி. காலையிலே நான் விழித்தாலும் அது உண்மைதான். காலையிலே நான் விழிக்காவிட்டாலும் அது உண்மைதான். இது மாறாதது. உலகளாவிய உண்மை. தேவனுடைய மக்களாகிய நாம் ஒருவரோடொருவர் உறவுபடுத்தப்பட்டிருக்கிறோம். தேவன் நம்மை உறவுபடுத்தினபோது ஒருவரைப் பொறுத்தவரை ஒருவரை ஓர் இடத்தில் வைக்கிறார்.
புரிந்துகொள்வதற்காக நான் எளிமையான ஓர் உவமையைச் சொல்கிறேன். சூரிய மண்டலத்திலே நடுவிலே சூரியன் இருக்கிறது. மற்ற ஒன்பது கோள்களும் தன் தன் இடத்திலே சுற்றி வருகின்றன அல்லது துணைக்கோள்களெல்லாம் இந்த கோள்களைச் சுற்றி வருகின்றன. இது மிக எளிய ஓர் உவமை.
என்னுடைய மனைவியைப் பொறுத்தவரை எனக்கு ஒரு இடம் உண்டு. என்னுடைய பிள்ளைகளைப் பொறுத்தவரை எனக்கு ஒரு இடம் உண்டு. என்னுடைய பெற்றோரைப் பொறுத்தவரை எனக்கு ஒரு இடம் உண்டு. சகோதர சகோதரிகளைப் பொறுத்தவரை எனக்கு ஒரு இடம் உண்டு. A relative position. தேவன் நம்மை ஓர் இடத்தில் வைக்கிறார் என்று 1 கொரிந்தியர் 12ஆம் அதிகாரத்திலே வாசிக்கிறோம். “தேவன் தமது சித்தத்தின்படி அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார்” (1 கொரி. 12:18). “சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல் அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படிக்கு தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு அதிக கனத்தைக் கொடுத்து, இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார்” (1 கொரி. 12:25).
முதல் வார்த்தை, சரீரத்தில் வைத்திருக்கிறார். இரண்டாவது வார்த்தை, சரீரத்தைச் சரிசெய்திருக்கிறார். Adjusted, Blended. இந்த உறவுகளை வருணிப்பதற்காகப் புதிய ஏற்பாடு உடலை ஓர் உருவகமாகப் பேசுகிறது. எப்படி இந்த உடலிலே ஒவ்வொரு உறுப்புகளும் அதனதின் இடத்திலே வைக்கப்பட்டிருக்கின்றனவோ, அதுபோல உறவுகளிலே ஒவ்வொரு நபருக்கும் ஓர் இடம் இருக்கிறது. இடம்தான் ஒரு மனிதனுடைய பொறுப்பை வரையறுக்கிறது, தீர்மானிக்கிறது. இடம் ஒரு மனிதனுடைய செயல்பாட்டை வரையறுக்கிறது. இடம் ஒரு மனிதனுடைய கொடையை வரையறுக்கிறது. இடம் ஒரு மனிதனுடைய அளவை வரையறுக்கிறது.
உறவுகளிலே இந்த அடிப்படைக் காரியங்களைப் புரிந்துகொள்ளாததால் உறவுகள் எப்படி சிதைந்து போகின்றன என்று பார்த்திருக்கிறேன். எடுத்துக்காட்டாக, ஒரு கணவனும் மனைவியும் தங்களிடையே உள்ள உறவுகளைச் சிதைக்கும்போது, சிதைக்கப்படுவது அந்த ஒரு உறவு மட்டும் அல்ல, எத்தனை உறவுகள் சிதைக்கப்படுகின்றன? குறிப்பாகப் பிள்ளைகள். சின்னாபின்னமாகிவிடுகின்றன. ஏறக்குறைய ஒரு லாரி மோதி 5, 6 பேர் சிதைந்துபோனால் எப்படி ஒரு அகோரக் காட்சி இருக்குமோ, அதுபோல அந்த உறவுகள் சிதைந்து சின்னாபின்னமான ஒரு அகோரக் காட்சியை நாம் பார்க்கிறோம். உறவுகளிலே பொறுப்பு, செயல்பாடு, அளவு, கொடை என்று ஒன்று இருக்கிறது. அதை நாம் இனங்காண வேண்டும்.
எபேசியர் 5, 6ஆம் அதிகாரங்களிலே இந்தக் காரியங்கள் உள்ளன. “மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள்” (எபே. 5:22). “கணவர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்” (எபே. 5:25). “பிள்ளைகளே உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள்” (எபே. 6:1). “பெற்றோர்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல் கர்த்தருக்கேற்ற சிட்சையிலும், போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக” (எபே. 6:4). “வேலைக்காரரே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கும் பயத்தோடும், நடுக்கத்தோடும், கபடற்ற மனதோடும் கீழ்ப்படிந்து, மனிதருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய்த் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்” (எபே. 6:5, 6).
நாம் மாணவர்களுக்கு வகுப்பில் பாடம் நடத்துகிறபோது யாரும் நம்மை மேற்பார்வையிடுவது கிடையாது. சாட்சாத்து தேவன் என் எஜமானாயிருந்தால் நான் இந்த எழுபத்தைந்து பேருக்கு எப்படி பாடம் நடத்துவேனோ அப்படி பாடம் நடத்த வேண்டும். “எஜமான்களே, அப்படியே நீங்களும், வேலைக்காரருக்குச் செய்யவேண்டியவைகளைச் செய்து அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமான் பரலோகத்தில் இருக்கிறாரென்றும், அவரிடத்தில் பட்சபாதமில்லையென்றும் அறிந்து, கடுஞ்சொல்லை விட்டுவிடுங்கள்,” (எபே. 6:9) என்று உறவுகளைப்பற்றி எழுதியிருக்கிறது.
ஒரு மனைவியினுடைய இடம் என்ன, பொறுப்பு என்ன? ஒரு கணவனுடைய பொறுப்பு என்ன, இடம் என்ன? பிள்ளைகளுடைய இடம் என்ன, பொறுப்பு என்ன? பெற்றோருடைய இடம் என்ன, பொறுப்பு என்ன? வேலைக்காரர்களுடைய இடம் என்ன, பொறுப்பு என்ன? எஜமானுடைய இடம் என்ன, பொறுப்பு என்ன?
தேவன் மனிதனிடத்தில் கேட்ட முதல் கேள்வி என்ன தெரியுமா? “ஆதாமே நீ எங்கே இருக்கிறாய்?” அது மிக முக்கியமான கேள்வி. இன்னொன்று காயீன் தன்னுடைய சகோதரனாகிய ஆபேலைக் கொலை செய்தபோது தேவன் காயீனிடத்தில் கேட்ட ஒரு கேள்வி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே? அதற்கு இவனுடைய பதில்: நான் அறியேன். என்ன இறுமாப்பான பதில். “நான் என் சகோதரனுக்குக் காவலாளியா?” “நான் என் சகோதரனுக்குப் பொறுப்பா?”
மனிதர்களைப் பொறுத்தவரை பொறுப்பில்லாமல் வாழ்வது அவர்களுக்கு இன்பமானது. ஆனால், உறவுகளிலே பொறுப்பு உண்டு. நாம் தேவனுடைய மக்களோடு உறவுபடுத்தப்பட்டிருக்கிறோம். தேவன் அப்படிப்பட்ட ஒரு உறவை நமக்குள் உருவாக்கியிருக்கிறார். அதைக் காண்பதற்கு நமக்குக் கண்கள் வேண்டும். இது தேவன் தருகிற ஆவிக்குரிய உறவு. இந்த உறவிலே நமக்குப் பொறுப்புகள் உண்டு. நமக்கு ஒரு பொறுப்பு உண்டு. கணவன் மனைவிக்கிடையே உள்ள பொறுப்புகள். பெற்றோர் பிள்ளைகளுக்கிடையே உள்ள பொறுப்புகள். வேலைக்காரர் எஜமான்களுக்கிடையே உள்ள பொறுப்புகள். இவைகளையெல்லாம் நாம் இனங்காண வேண்டும்.
1 பேதுரு 5ஆம் அதிகாரத்தை நீங்கள் வாசியுங்கள். “நீங்களெல்லாரும் தெய்வ பயத்தோடு ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்.” எடுத்தோம் கவிழ்த்தோம் என்று நாம் வாழக் கூடாது. நாம் வாழ்வதிலே, நாம் செயலாற்றுவதிலே, நாம் பேசுவதிலே, நாம் சிந்திப்பதிலே, நம்முடைய உறவுகளிலே நமக்கு ஒரு பொறுப்பு உண்டு என்று உணர்ந்து, சிந்திக்க வேண்டும், பேச வேண்டும். செயலாற்ற வேண்டும். 1 பேதுரு 5ஆம் அதிகாரத்தில் பேதுரு அதைக்குறித்துத் தொடா;ந்து எழுதுகிறார். “மூப்பர்களே, உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும் அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும், சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும் கண்காணிப்புச் செய்யுங்கள்” (1 பேதுரு 5:1-3).
பெற்றோர் என்ற முறையில், பிள்ளைகளுக்கு நாம் செய்ய வேண்டிய முதல் காரியம் பிள்ளைகளை வளர்ப்பதுதான். ஆனால், நாம் பிள்ளைகளுக்கு முன்மாதிரிகளாய் இருப்பது அதைவிட முக்கியமான காரியம். அவர் இளைஞர்களுக்குச் சொல்கிறார். “இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்,” (1 பேதுரு 5:5). சமையலறையில் வேலைசெய்யும்போது நம் உடை அழுக்காகிவிடக்கூடாது என்பதற்காக ஒரு துணியை மேலே போட்டுக்கொள்வதுபோல, நாம் மனத்தாழ்மையை அணிந்துகொள்ள வேண்டும். இது முதலாவது காரியம்.
ஒரு உறவிலே நமக்குக் குறிக்கப்பட்ட இடத்திலே நாம் வாழ்வது தேவனுடைய பரிபூரணத்தை நம்முடைய வாழ்க்கையிலே பெருக்கும். தேவனுடைய பரிபூரணம் என்றால் தேவனுடைய சமாதானம், தேவனுடைய மகிழ்ச்சி, தேவனுடைய இளைப்பாறுதல், தேவனுடைய ஓய்வு, தேவனுடைய குணம், தேவனுடைய பண்புகள், தேவனுடைய பிரசன்னம்.
நம்முடைய உறவுகளிலே நமக்கு ஓர் இடம் உண்டு. ஆனால், துரதிருஷ்டவசமாக, பொதுவாக, அந்தந்த இடத்தில் நாம் இருப்பதில்லை. உறவுகளுக்கிடையே நம்முடைய இடம் என்னவோ, நம்முடைய பொறுப்பு என்னவோ, அதற்குக் கூடுதலாகவோ, குறைவாகவோ நாம் ஈடுபடக் கூடாது. என்னுடைய மனைவியைப் பொறுத்தவரை எனக்கு ஒரு இடமும், பொறுப்பும் இருக்கிறது. அந்தப் பொறுப்பை வேதம் “உங்கள் மனைவிகள்மேல் நீங்கள் அன்புகூருங்கள்,” என்று சொல்லுகிறது. “உங்கள் கணவர்களுக்குக் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோலக் கீழ்ப்படியுங்கள்,” என்று ஒரு மனைவியினுடைய இடத்தைத் தேவன் வரையறுக்கிறார். நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்தால் எப்படி கீழ்ப்படிவீர்களோ அப்படி உங்கள் கணவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள் என்று வேதம் சொல்லுகிறது. கணவனுடைய இடத்தைச் சொல்லும்போது, “உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்,” என்று சொல்லுகிறது. எப்படி அன்புகூர வேண்டுமென்றால் “உன் சொந்த உடலை நீ எப்படிப் பேணுவாயோ அப்படி உன்னுடைய மனைவியை நீ பேண வேண்டும்.”
ஒருவேளை ஒருவனுடைய மனைவி கணவனுக்குக் கீழ்ப்படியவில்லை என்று வைத்துக்கொள்வோம். கணவன் என்ன செய்ய வேண்டும்? கணவன் தன் மனைவியின்மேல் அன்புகூருவதற்கு அவனுடைய மனைவி அவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பது நிபந்தனை அல்ல. “உங்கள் மனைவி உங்களுக்குக் கீழ்ப்படிகிறவரை நீங்கள் உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள். உங்கள் மனைவி உங்களுக்குக் கீழ்ப்படியவில்லை என்றால் நீங்கள் அன்புகூர வேண்டிய அவசியம் இல்லை,” என்று வேதம் சொல்லவில்லை. இது இந்த உலகத்தினுடைய வழி. தேவனுடைய வழி அல்ல. தேவன் நம்முடைய இடத்தை வரையறுக்கிறார். அடுத்த சாரார் தங்களுடைய இடத்தைத் தக்கவைத்துக் கொண்டாலும் சரி, தக்க வைத்துக்கொள்ளாவிட்டாலும் சரி, அந்த இடத்தில் அவர்கள் இருந்தாலும் சரி, தடம் புரண்டாலும் சரி நம்முடைய இடத்தைவிட்டு நாம் ஒருநாளும் நகரக் கூடாது. என்னுடைய இடம் என்னுடைய மனைவியின்மேல் அன்புகூருவது. நான் எப்படி என்னுடைய உடலைப் போஷிக்கிறேனோ, அதுபோல நான் என்னுடைய மனைவியைப் பேண வேண்டும். இந்த இடத்தைவிட்டு நாம் பிறழக் கூடாது.
“என்னுடைய கணவன் என்மேல் அன்புகூரவில்லை. என்னுடைய நிலைமையைப்பற்றி அவருக்குக் கவலையில்லை. என்னுடைய கை வலிக்கிறது. ஆனால், அவர் காலையில் பையைத் தூக்கிக்கொண்டு அலுவலகத்துக்குப் போகிறார். சாயங்காலம் வருகிறார். வந்தவுடன் மடிக்கணினியை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிடுகிறார். இப்படிப்பட்ட ஆளுக்கு நான் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோலக் கீழ்ப்படிய முடியுமா?” என்று ஒரு மனைவி நினைத்தால் தேவனுடைய வார்த்தை என்ன சொல்லுகிறது? அப்படிப்பட்ட கணவருக்குக் கர்த்தருக்குக் கீழ்ப்படிவதுபோல கீழ்ப்படியச் சொல்கிறார்.
தேவனுடைய மக்களைப் பொறுத்தவரை ஏதாவது பொறுப்பு இருக்கிறதா? இருக்கிறது. என்னுடைய பொறுப்பு, “நான் கூட்டத்திற்கு வருவேன். கூட்டம் முடிந்தவுடன் போய்விடுவேன்,” என்பதல்ல. “என்னுடைய பெற்றோரைப் பொறுத்தவரை என்னுடைய பொறுப்பு என்ன? இடம் என்ன? தேவனுடைய மக்களைப் பொறுத்தவரை என்னுடைய இடம் என்ன? பொறுப்பு என்ன?” என்று நாம் தேவனிடம் கேட்க வேண்டும். நாம் அந்தப் பொறுப்புகளை மனமுவந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். தேவன் நம்மை ஒரு இடத்தில் வைக்கிறார், ஒரு பொறுப்பைத் தருகிறார் என்றால் நாம் அதை மனமுவந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். குடும்பங்களும், தேவனுடைய சபையும் இதனால் மிகவும் ஆசீர்வதிக்கப்படும்.
தேவனுடைய சபையிலே, தேவனுடைய வீட்டிலே, கிறிஸ்துவினுடைய சரீரத்திலே, போதுமான தேவனுடைய பரிபூரணம் உண்டு. பற்றாக்குறை, போதாக்குறை, இங்கு இல்லை. போதுமான அன்பு, போதுமான அக்கறை, போதுமான தாழ்மை, போதுமான தயவு, போதுமான தைரியம், போதுமான திடநம்பிக்கை அவருடைய சரீரத்திலே உண்டு. எனவே, தேவனுடைய மக்கள் ஆவிக்குரியவிதத்திலே வறுமையிலும், ஏழ்மையிலும், தரித்திரத்திலும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எதிர்கால நம்பிக்கை இல்லை, திடநம்பிக்கை இல்லை, தைரியம் இல்லை, உடல்நலம் இல்லை, அன்பு இல்லை, தாழ்மை இல்லை, சாந்தம் இல்லை என்பது ஆவிக்குரிய வறுமை. தேவனுடைய மக்கள் ஆவிக்குரிய வறுமையிலே வாழ வேண்டிய அவசியம் இல்லை. தேவனுடைய வீட்டிலே பரிபூரணம் உண்டு. தேவனுடைய மக்கள் வறுமையிலே வாழ்கிறார்கள்.
இரண்டாவது, உறவுகளிலே இசைவு வேண்டும். இசைவு என்றால் என்னவென்பதற்கு ஒரு எடுத்துக்காட்டுச் சொல்லுகிறேன். வேத வசனத்தை நான்குபேர் வாசித்தாலும் ஒரே ஆள் வாசித்தமாதிரி இருக்க வேண்டும். பாடுவதிலே இசைவு வேண்டும். அதற்குப் பயிற்சி வேண்டும்.
ஒரு பாட்டைப் பாடும்போது ஒருவர் வேகமாகப் பாடுவார். இன்னொருவர் கண்ணீரோடே மெல்லப் பாடுவார். இன்னொருவர் அந்தப் பாட்டை உற்சாகத்தோடு பொங்கிப் பொங்கிப் பாடுவார். ஒருவர் உச்சக் குரலில் பாடுவார். இன்னொருவர் கட்டைக் குரலில் பாடுவார். எத்தனைபேர் பாடினாலும் ஒரே நபர் பாடியதுபோல் இருப்பதுதான் இசைவு. அவரவர் தங்கள் தங்கள் வீட்டிலே பாடும்போது எப்படி வேண்டுமானாலும் பாடலாம். அதற்கு இசைவு தேவையில்லை. ஆனால், சேர்ந்து பாடும்போது இசைவு வேண்டும். ஒருவர் மிகவும் நன்றாகப் பாடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். பிறர் அவரைக் கவனிக்காமல் தங்கள் விருப்பம்போல் பாடுகிறார்கள் என்றால், “நான் நன்றாகப் பாடுகிறேன். நீங்கள் யாருமே இசைந்து வரமாட்டேன் என்கிறீர்கள். தயவுசெய்து நீங்கள் என்னோடு இசைந்து வாருங்கள். இல்லையென்றால் நான் பாடுவதை நிறுத்திவிடுவேன்,” என்றால் இது தேவனுடைய பரிபூரணத்தை அனுபவிக்கிற வழி அல்ல. ஒருவேளை அவர்தான் மிகச் சிறந்த பாடகராக இருக்கலாம். அவர் பாடுவதுதான் சரியான மெட்டாக இருக்கலாம். அவர் பாடுகிற வேகம்தான் சரியான வேகமாக இருக்கலாம். அவர் பாடுகிற கட்டைதான் சரியான கட்டையாக இருக்கலாம். ஆனாலும், அவர் எல்லாரையும் சுற்றிப் பார்க்க வேண்டும். தனியாகப் பாடும்போது எப்படி வேண்டுமானாலும் பாடலாம். ஆனால், கூடி வந்து பாடும்போது மற்றவர்களோடு இசைந்துதான் பாட வேண்டும். இல்லையென்றால் 40 பேர் எப்படி சேர்ந்துபாட முடியும்?
இசைவு என்றால் என்னவென்பதை நாம் உறவுகளிலே கற்றுக்கொள்வோம். உறவுகளிலே இசைவு என்பது ஒருமனம். “நீங்கள் ஏக சிந்தையும் ஏகஅன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள்” (பிலி. 2:2) என்று பவுல் சொல்வதுபோல், இசைவு என்பது ஒருமனம் அல்லது ஒரு ஆத்துமா. தேவனுடைய பரிபூரணத்தை நாம் நம் வாழ்க்கையிலே அனுபவிக்க வேண்டுமென்றால் சில காரியங்களை நாம் சேர்ந்துசெய்ய வேண்டும். இசைவுக்கு இன்னொரு வார்த்தை சேர்ந்துசெய்தல். நாம் சேர்ந்துசெய்யும்போதுதான் நமக்கு இசைவு தேவைப்படுகிறது?
பழைய ஏற்பாட்டிலே பெட்டியைச் சுமப்பதற்கு நான்கு ஆசாரியர்கள் வேண்டும். ஒரு மேசையை நான்குபேர் தூக்கும்போதுதான் இசைவு எவ்வளவு குறைவாக இருக்கிறதென்று தெரியவரும். நான்கு பேரும் ஒரே உயரத்தில் இருக்க மாட்டார்கள். ஒருவர் உயரமாக இருப்பார். ஒருவர் குட்டையாக இருப்பார். அது பிரச்சனையாக இருக்கும். உயரமாக இருக்கிறவர் மேலே தூக்கிக்கொண்டிருப்பார். ஆனால், குட்டையாக இருக்கிறவருக்குத் தூக்குவதற்குச் சிரமமாக இருக்கும்.
குடும்பம் என்பது தேவனுடைய சபையின் குறு வடிவம்.A family is a miniature of the Church. குடும்பம் என்றால் ஏதோவொன்று என்று நினைத்துக்கொண்டிருப்பது தவறு, அறிவீனம். பற்பல காரியங்களை நாம் சேர்ந்து செய்கிறோம். “என்னால் எதையும் சேர்ந்தே செய்ய முடியாது. என்னால் சேர்ந்து பாட முடியாது. சேர்ந்து படிக்க முடியாது. சேர்ந்து பெருக்க முடியாது. எதுவுமே என்னால் செய்ய முடியாது,” என்றால் தேவனுடைய பரிபூரணத்தை நாம் அனுபவிக்க முடியாது.
தேவனுடைய பரிபூரணத்தை நாம் அனுபவிக்க வேண்டுமென்றால் சேர்ந்து, இசைந்து, செயல்பட நாம் கற்றுக்கொள்ள வேண்டும். பிள்ளைகளை யார் வளர்ப்பது? கணவன் வளர்ப்பதா? மனைவி வளர்ப்பதா? அறிவுள்ள எந்த மனிதனுக்கும் தெரியும். இது ஒரு ஆள் செய்கிற வேலை அல்ல. இது இருவரும் இசைந்து செய்கிற வேலை.
சபையில் பேசுவதும் இசைந்து செய்ய வேண்டும். சேர்ந்து பேசுவதா, தனி ஆளாகப் பேசுவதா? ஒரேவொருவர் மட்டும் அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ பேசினால் எவ்வளவு பெரிய தலைவராகிவிடலாம் என்று நினைக்கலாம். அப்படியல்ல. பேசுவது என்பது நாம் சேர்ந்து இசைவாகச் செய்கிற ஒரு வேலை. நம்முடைய உறவின் வாழ்க்கையிலே தேவனுடைய சபையாக பற்பல காரியங்களை நாம் சேர்ந்து செய்கிறோம். எங்கெல்லாம் நாம் சேர்ந்து செய்யும்போது ஒரு இசைவு இருக்கிறதோ, அங்கெல்லாம் நாம் தேவனுடைய பரிபூரணத்தை அனுபவிப்போம்.
இசைவு என்பது சாதாரண காரியம் அல்ல. அவருக்கு ஒரு மனம் இருக்கும். எனக்கு இன்னொரு மனம் இருக்கும். நான் என்னுடைய மனதை அவருடைய மனதோடு இசைக்க வேண்டும். Tune பண்ண வேண்டும். Sonameter, சுரமானியைப் பள்ளிக்கூடத்திலே துண்டு காகிதம்வைத்து விளையாடிக்கொண்டிருப்போம் இல்லையா? அந்தக் கட்டையை மெல்ல மெல்ல நகர்த்திக்கொண்டு வரவேண்டும்; சரியாக அந்த அதிர்வுஎண் ஒத்துவரும்போது காகிதம் துள்ளும். ஒத்த அதிர்வு.
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இசைவைப்பற்றி, “பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும். பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும். உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக்குறித்தாவது பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்திலிருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும்,” (மத். 18:19, 20) என்று சொன்னார். தேவனுடைய மக்களுக்கிடையிலான உறவுகளில் இசைவு எவ்வளவு பெரிய ஆசீர்வாதத்தை, பரிபூரணத்தை, கொண்டுவரும் என்பதற்கு இதைவிடச் சிறந்த கூற்றை வேறெங்கும் நாம் பார்க்க முடியாது.
இசைவு என்பது சாதாரணமான காரியம் அல்ல. என்னுடைய பிள்ளைகள் என்னோடு இசைய வேண்டும். நான் அவர்களோடு இசைய வேண்டும். நாம் உறவுகளிலே இசைவைக் காத்துக்கொள்ளும்போது, அங்கு அந்த ஒத்தஅதிர்வு, resonance இருக்கும். அந்த ஒத்தஅதிர்வு வெறுமனே காகிதத்துண்டுகளைத் துள்ளப்பண்ணுவதோடு நின்றுவிடாது. அப்படிப்பட்ட ஒத்தஅதிர்வு இருந்தால் நாம் பூமியிலே கட்டுவது பரலோகத்தில் கட்டப்படும், பூமியிலே கட்டவிழ்ப்பது பரலோகத்தில் கட்டவிழ்க்கப்படும். இதன் பொருள் என்னவென்றால், அப்படிப்பட்ட இசைவு இருந்தால் உண்மையிலேயே நாம் தேவனுடைய பரிபூரணங்களையும், வளங்களையும், அனுபவிக்க முடியும்.
மூன்றாவது, உறவுகளிலே பகிர்வு. “விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள். காணியாட்சிகளையும், ஆஸ்திகளையும் விற்று ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்துகொடுத்தார்கள்.” (அப். 2:44, 45) என்றும், “விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும், ஒரே மனமுமள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது,” (அப். 4:32) என்றும் வாசிக்கிறோம்.
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்த அந்த ஆரம்ப நாட்களிலே அனுபவம் இந்த அளவுக்குப் பரவசமாக இருந்தது. எந்த அளவுக்கு என்றால் “நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளில் கிரயத்தைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தார்கள். அவனவனுக்குத் தேவையானதற்குத் தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது. அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை,” (அப். 4:34, 35). அவர்கள் வீடுகள்தோறும் அப்பம் பிட்டு மிகவும் மனமகிழ்ச்சியோடு இருந்தார்கள்.
2 கொரிந்தியர் 8, 9ஆம் அதிகாரங்களைப் பல பத்துத்தடவை வாசியுங்கள். எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குப் பஞ்சம் வந்தது. எருசலேமிலே ஏழைகள் இருந்தார்கள். அவர்களுக்காகக் கொஞ்சம் பணவுதவி, பொருளுதவி, செய்வதற்காக அப்போஸதலனாகிய பவுல் மக்கதோனியா அகாயா நாடுகளில் இருந்த தேவனுடைய மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். அகாயா நாட்டிலிருந்த ஒரு ஊர்தான் கொரிந்து பட்டணம். அவர் அங்குள்ள பரிசுத்தவான்களுக்கு, “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே. அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும் அவருடைய தரித்திரத்தினாலே நீங்கள் ஐசுவரியவான்களாகும்படிக்கு உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே” (2 கொரி. 8:9) என்று எழுதுகிறார்.
நம்முடைய உறவுகளிலே போதுமான அளவுக்கு வளங்கள் உள்ளன. அப்படியிருக்கும்போது ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் நடுவிலே அல்லது பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் நடுவிலே வளங்கள் இல்லாததுபோல ஒரு வறுமை அல்லது தரித்திரம் அல்லது ஒரு ஏழ்மை ஏன் வர வேண்டும்? காரணம், சமநிலைப் பிரமாணம் உண்டாயிருக்கட்டும் என்று அவர் சொல்கிறார். அவர்களுடைய குறைச்சலிலே உங்களுடைய நிறைவு அவர்களுக்கு உதவி செய்யட்டும். அப்பொழுது உங்களுடைய குறைச்சலிலே அவர்களுடைய நிறைவு உங்களுக்கு உதவி செய்யும்.
எனவே, உறவு என்றால் நாம் நமக்குரியவைகளை ஒருவரோடொருவர் பகிர்ந்துகொள்ள வேண்டும். நம்முடைய நேரத்தை, நம்முடைய உழைப்பை, நம்முடைய பணத்தை, நம்முடைய எல்லா வளங்களையும் பகிர்ந்துகொள்ள வேண்டும். இந்தப் பூமியிலே தேவன் நமக்கு அருளியிருக்கிற எல்லாச் செல்வங்களையும், ஆசீர்வாதங்களையும் பகிர்ந்துகொள்வது. மிக முக்கியமாக நம்முடைய மனதிலே, நம்முடைய இருதயத்திலே, ஒரு பகுதியைப் பகிர்ந்துகொள்வது. நம்முடைய நேரத்தையோ, பணத்தையோ, வீட்டையோ அல்லது வேறு எதையாவது பகிர்ந்துகொள்வதற்குமுன், முதலாவது, நாம் நம்முடைய இருதயத்திலே ஒரு பகுதியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். இருதயங்களைப் பகிர்ந்து கொள்வதென்றால் “என்னுடைய மனைவியினுடைய நிலை என்ன, தேவை என்ன, நெருக்கம் என்ன, தவிப்பு என்ன,” என்பதைப்பற்றி யோசிப்பதற்கு ஒரு கணவனுடைய இருதயத்திலே கொஞ்சம் இடம் கொடுக்க வேண்டும். அவளுடைய கை வலிக்கிறதா, விரல் வலிக்கிறதா? நேற்று வலித்த அதே இடத்திலே வலிக்கிறதா அல்லது வேறு இடத்திலே வலிக்கிறதா என்று கண்டுபிடிப்பதற்கு கணவனுடைய இருதயத்திலே இடம் இருக்க வேண்டும். “கணவனுடைய நிலை என்ன, வேலை பார்க்கிற இடத்திலே என்ன பிரச்சினையோ, என்ன நெருக்கமோ, என்ன தவிப்போ!” என்று யோசிப்பதற்கு மனைவியின் இருதயத்தில் இடம் இருக்க வேண்டும். “உனக்கு மட்டும்தான் நெருக்கமா? எனக்கும் நெருக்கம்தான். நீ வேலைக்குப் போகிறாய். நானும் வேலைக்குப் போகிறேன். இரண்டு பேருக்குமே நெருக்கந்தான். அதனால், நானும் உன்னைப்பற்றி யோசிக்க மாட்டேன். நீயும் என்னைப்பற்றி யோசிக்க வேண்டாம்,” என்பது ஆரோக்கியமான, மகிழ்ச்சியான நிலைமை அல்ல.
தயவுசெய்து 2 கொரிந்தியர் 8, 9ஆம் அதிகாரங்களை வாசியுங்கள். அற்புதமான அதிகாரங்கள்! பகிர்ந்துகொள்வதைப்பற்றி கோட்பாடு அங்கிருக்கிறது. “எப்படியெனில், மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு அதிகமானதுமில்லை, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானதுமில்லை,” (2 கொரி. 8:14) என்று எழுதியிருக்கிறபிரகாரம், நம்முடைய கைகளிலே கொடுக்கப்பட்டிருக்கிற நேரம், உழைப்பு, பணம் அல்லது இந்த உலகத்துக்குரிய செல்வங்களெல்லாம் நமக்குரியவைகள் அல்ல. நாம் உக்கிராணக்காரர்கள் என்று வேதம் சொல்கிறது. நாம் எவ்வளவு குறைவாகத் தொட வேண்டுமோ அவ்வளவு குறைவாகத் தொட வேண்டும். அடுத்த நாளைக்குச் சேகரித்து வைப்பது, அடுத்த வாரத்திற்குச் சேகரித்து வைப்பது, அடுத்த வருடத்திற்குச் சேகரித்து வைப்பது, அடுத்த தலைமுறைக்குச் சேமித்து வைப்பதைக்குறித்து கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நான் சேமிப்பதற்கு எதிரானவன் அல்ல. “சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில் போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள். அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாதிருந்தும் கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்து வைக்கும்” (நீதி. 6:6-8) என்பது எனக்குத் தெரியும். நாம் சம்பாதிக்கிற எல்லாவற்றையும் தின்று தீர்த்துவிடக் கூடாது. நாம் சேகரித்து வைக்க வேண்டும். ஆனால், அது ஒரு எல்லை மீறிப்போய் விடக்கூடாது. மிகுதியாய்ச் சேகரித்தவனுக்கு ஒன்றும் மிஞ்சாது.
நாம் தேவனுடைய பரிபூரணத்தால் வாழ வேண்டும். எப்படி நாம் தேவனுடைய பரிபூரணத்தால் வாழ்கிறோமோ, அப்படியே நம்முடைய பிள்ளைகளும் தேவனுடைய பரிபூரணத்தால் வாழ முடியும். “நாங்கள் மன்னாவினால் வாழ்ந்தோம். எங்கள் பிள்ளைகளுக்கு மன்னா கிடைக்குமா?” என்று நாம் அஞ்ச வேண்டிய அவசியமில்லை.
தேவனுடைய மக்களுக்கு ஒரு குறைவு வருகிறது. அந்தக் குறைவை நிறைவுசெய்வதற்காக நான் என்னுடைய பொருள் வளங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். அதன் விளைவாக என்னுடைய பிள்ளைகளுக்கு ஒன்று குறைவுபட்டால்…? நம் தேவன் ஆபிரகாமின் தேவன் மட்டுமல்ல, ஈசாக்குக்கும் தேவன், அவர் யாக்கோபுக்கும் தேவன். அவர் மூன்றாம் தலைமுறைக்கும் தேவன்தான், அவர் நான்காம் தலைமுறைக்கும் தேவன். அவர் என்றென்றும் சதாகாலங்களிலும் நமக்குத் தேவனாக இருப்பார். வீம்புக்கென்று நாம் நம்முடைய பிள்ளைகளைத் தரித்திரத்தில்விட விரும்பவில்லை. அதற்காகப் பயந்து பயந்து வாழ விரும்பவில்லை. தேவனுடைய மக்களுக்குக் கொடுப்பதால் “ஐயோ! என் பிள்ளைக்குக் கொடுக்கவேண்டியது குறைந்துபோய்விடுமே!” என்று நாம் அஞ்சி அஞ்சி சாக வேண்டுவதில்லை. உறவுகளிலே பகிர்வு இருக்க வேண்டும்.
நான்காவது, உறவுகளிலே பொறுமை இருக்க வேண்டும். மிக முக்கியமானது. “நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்தீர்களானால் அழிவீர்கள்,” (கலா. 5:15). “சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள். நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு. ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்” (கலா. 6:1, 2).
உறவுகளிலே பொறுப்பு, உறவுகளிலே இசைவு, உறவுகளிலே பகிர்வு என்ற முதல் மூன்று குறிப்புகளுக்கும் இந்த நான்காவது குறிப்பு, அதாவது உறவுகளிலே பொறுமை, பாதுகாப்பு வலைபோன்றது. உறவுகளில் தோல்விகள் வரும். ஒரு உறவிலே நான் என்னுடைய பொறுப்பிலே நேர்த்தியாய் இருக்கிறேன்; ஆனால், அடுத்த சாரார், என்னுடைய மனைவி, என்னுடைய பிள்ளைகள், என்னுடைய பெற்றோர் இருக்க வேண்டிய இடத்திலே இருக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். இப்பொழுது என்ன செய்வது? அவர்கள் தவறுகிறார்கள். உறவுகளிலே தவறுகள் நடைபெறும். அடுத்த சாரார் தங்களுடைய பொறுப்பிலே தவறுவார்கள்.
நான் இசைகிறேன்; என்னை இசைக்கிறேன். ஆனால், அடுத்த சாரார் தங்களை இசைப்பதில்லை, திருத்திக்கொள்வதில்லை, சரிசெய்துகொள்வதில்லை. தங்கள் இசைவிலே அவர்கள் தவறுவார்கள்.
நான் எனக்குரியதைப் பகிர்ந்துகொள்கிறேன். ஆனால், அடுத்த சாரார் பகிர்ந்துகொள்வது இல்லை. பகிர்ந்துகொள்வதிலே தவறுவார்கள்.
இதற்கு நம்முடைய பிரதியுத்தரம் எப்படி இருக்க வேண்டும்? நீடிய பொறுமை. பிள்ளைகள் தங்கள் பொறுப்புகளிலே தவறுவார்கள். பெற்றோர்கள் தங்கள் பொறுப்புகளிலே தவறுவார்கள். கணவர் தன் பொறுப்பிலே கண்டிப்பாகத் தவறுவார். தன்னுடைய பொறுப்பிலே தவறாத கணவனை நீங்கள் கண்டு பிடித்தால் சொல்லுங்கள். அவரைக் காட்சியரங்கில் வைக்க விரும்புகிறேன். தன்னுடைய கடமையிலே தவறாத மனைவியைக் கண்டால் சொல்லுங்கள். நான் கோயில் கட்ட விரும்புகிறேன்.
உறவுகளிலே நீடிய பொறுமை வேண்டும். கர்த்தர் ஞானத்தைத் தருவாராக. என்னுடைய பெற்றோரைப் பொறுத்தவரை என்னுடைய இடம் எப்படியிருக்க வேண்டும்? மிஞ்சியும் போகக் கூடாது. குறைந்தும் போகக் கூடாது. நாம் உறவுகளிலே நம்முடைய இடத்தைச் சரிசெய்து கொள்ள வேண்டும். காலங்கள் மாறும்போது நம்முடைய இடங்களும், நம்முடைய பொறுப்புகளும் மாறும். நம்முடைய உறவுகளிலே நம் இடத்தைச் சரிசெய்து கொள்ள வேண்டும். ஆனால், ஒரு பாதுகாப்பு வலை இருக்கும். கீழே விழுந்து கை கால் முறியாத அளவுக்கு நான் பார்த்துக்கொள்கிறேன்.
அருமையான பரிசுத்தவான்களே, நம்முடைய உறவுகளிலே நம்முடைய இடத்தை நாம் வரையறுக்க வேண்டும். நம்முடைய பொறுப்புகளை வரையறுக்க வேண்டும். மனமுவந்து நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். யார் யாருக்குப் பொறுப்போ அதைத்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். யாருக்குப் பொறுப்பு இல்லையோ அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. என்னுடைய மகனே என்றாலும்கூட மிஞ்சி நான் பொறுப்பை எடுக்கக்கூடாது. சில பொறுப்புகளை அவன்தான் எடுக்க வேண்டும். தவறு செய்தால் பரவாயில்லை, கற்றுக்கொள்வான்.
உறவுகளிலே நம்முடைய பொறுப்புகளை நாம் சரிசெய்வோமென்றால் தேவனுடைய பரிபூரணத்தை நாம் கொடுக்கவும் முடியும், பெறவும் முடியும். நம்முடைய உறவுகளிலே நாம் ஒருவரோடொருவர் இசைத்துக்கொள்வோமென்றால் தேவனுடைய பரிபூரணத்தைக் நாம் கொடுக்கவும் முடியும், பெறவும் முடியும். நம்முடைய உறவுகளிலே நாம் பகிர்ந்துகொள்வோமென்றால், தேவனுடைய பரிபூரணத்தை நாம் கொடுக்கவும் முடியும், பெறவும் முடியும். இப்படி தேவனுடைய பரிபூரணம் தேவனுடைய மக்களுக்கிடையே பரிமாறப்படும்போது, அது பலமடங்கு பெருகும். அது நமக்குப் போதுமானதாகும். நம்முடைய வாழ்க்கையிலே பல்வேறு சூழ்நிலைகளின்வழியாக நாம் போகும்போது இப்படி தேவனுடைய பிள்ளைகளோடு உள்ள உறவு நமக்குத் தேவனுடைய பரிபூரணத்தை நாம் அனுபவிக்கச் செய்யும், ஒரு நிறைவைத் தரும்.
அப்போஸ்தலனாகிய பவுல் சொல்வதுபோல, “இவையெல்லாவற்றிலும் அன்பின் கட்டை நீங்கள் தரித்துக்கொள்ளுங்கள்.” அதுபோல, எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு நீடியபொறுமை அல்லது நீடியசாந்தம் தரித்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், அடுத்த சாரார் தவறுவார்கள், தோற்றுப்போவார்கள், வீழ்ச்சியடைவார்கள், தங்களுடைய பங்கைச் செய்யமாட்டார்கள். தேவனுடைய வீட்டிலே போதுமான சாந்தமும், நீடிய பொறுமையும், சகிப்புத்தன்மையும், இருக்க வேண்டும். தேவனுடைய வீடு என்பது காவல் நிலையம் அல்ல. தேவனுடைய வீடு என்பது நீதிமன்றம் அல்ல. இங்கு நாம் மோசேயினுடைய பத்துக் கட்டளைகளைவைத்து தேவனுடைய வீட்டிலே உறவுகளை நாம் கட்டியெழுப்ப முடியாது, கூடாது. இப்படி எங்கு தேவனுடைய வீடு, தேவனுடைய குடும்பம், கட்டியெழுப்பப்பட முடியுமோ அங்கு தேவனுடைய பரிபூரணம் அபரிமிதமாகவும், உதாரத்துவமாகவும் இருக்கும்; அங்கு எந்தக் குறைச்சலும் இருக்காது. தேவன் நம்மை ஆசீர்வதிப்பார், ஆமென்.