Transcribed and edited for clarity from a message spoken in January 26, 2014 in Chennai
By Milton Rajendram
“சுத்த இருதயத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே நீ விசுவாசத்தையும், அன்பையும், நீதியையும், பரிசுத்தத்தையும் அடையும்படி நாடு,” (1 தீமோ. 2:22) என்று அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவுக்குக் கட்டளையிடுகிறார். ஆகவே, சுத்த இருதயத்தோடு, தூய உள்ளத்தோடு, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நேசிக்கிற, விசுவாசிக்கிற, தேவனுடைய மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அவர்களெல்லாரும் தேவனுடைய குடும்பத்தின் பிள்ளைகளாக இருக்கிறார்கள். தேவனுடைய மக்கள் பல்வேறு நாடுகளில் எல்லா நூற்றாண்டுகளிலும் அவருக்கு உண்மையுள்ளவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். நாம் அவர்களுடைய அடிச்சுவடுகளில்தான் நடக்கிறோம். எனவே, நமக்கு ஒரு வரலாறு இல்லை என்று சொல்ல முடியாது. நமக்கு ஒரு வரலாறு உண்டு. திடுதிப்பென்று நமக்குமுந்தி இதே பாதையில் நடந்தவர்களே இல்லை என்றும், நாம்தான் இந்தப் பாதையைப் புதிதாகக் கண்டுபிடித்தோம் என்றும் நாம் நினைக்கக்கூடாது. இந்தப் பாதையிலே நடந்துபோன தேவனுடைய மக்கள் உண்டு. இந்த நூற்றாண்டிலே இந்தத் தலைமுறையிலே அதே பாதையிலே நாம் நடந்துபோகிறோம்.
ஓவ்வொரு நூற்றாண்டிலும், ஒவ்வொரு யுகத்திலும், ஒவ்வொரு தலைமுறையிலும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கு உண்மையும் உத்தமுமான சாட்சிகளாக வாழ்வதற்குத் தங்களை அர்ப்பணிக்க வேண்டும். நாம் அப்படி அர்ப்பணித்து வாழ்கிற மக்களாக இருக்க வேண்டும்.
உலகம் நம்மைப் புரிந்துகொள்வது சற்று கடினம். உலகம் பின்னிப்பிணைந்திருக்கிற கிறிஸ்தவமும் நம்மைப் புரிந்துகொள்வது சற்று கடினம். “நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல,” (யோவான் 17:16) என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறினார். அவர் இந்த உலகத்தில் ஒரு மனிதனாக வாழ்ந்தார். ஆனால், அவர் இந்த உலகத்தைச் சார்ந்தவர் அல்ல. அதுபோல் அவர்மேல் அன்புகூர்ந்து அவரை விசுவாசித்து, அவரோடு ஒன்றாக நடக்கிற தேவனுடைய மக்களும் இந்த உலகத்தில் வாழ்கிறார்கள். ஆனால், அவர்கள் இந்த உலகத்தைச் சார்ந்தவர்கள் அல்ல. நாம் இந்த உலகத்தில் வாழ்கிறோம். ஆனால், நாம் இந்த உலகத்தைச் சார்ந்தவர்கள் அல்ல.
நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுடன் ஓர் உறவுக்கு வந்திருக்கிறோம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து “உலகத்தில் இருந்தார். உலகம் அவரை அறியவில்லை. அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார். அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை,” (யோவான் 1:10, 11) என்று யோவான் கூறுகிறார். அதுபோல, “உலகம் உங்களைப் பகைத்தால் அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்,” (யோவான் 15:18) என்றும் இயேசு கூறினார்.
நாம் ஒரு மதவாழ்க்கை வாழ்கிற மக்கள் அல்ல. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோடு ஒன்றாக இணைந்து, ஒன்றித்து வாழ்கின்ற மக்கள். இது நம் வாழ்க்கையின் அழைப்பு, இது நம் வாழ்க்கையின் நோக்கம், இது நம் வாழ்க்கையின் குறிக்கோள், இது நம் வாழ்க்கையின் இலக்கு. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோடு இணைந்து, ஒன்றாகி, ஒன்றித்து வாழ்கின்ற ஒரு வாழ்க்கை.
இந்த அழைப்பு ஒரு சுமையல்ல. இந்த அழைப்பு ஒரு பாக்கியம். தேவன் நம்மைத் தம் குமாரனோடு ஐக்கியமாக இருப்பதற்கு அழைத்திருக்கிறார். “தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிறவருடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்,” என்று (1 கொரி. 1:9) சொல்லப்பட்டிருக்கிறது. நாம் “பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரர்கள்,” (எபி. 3:1) என்றும் எழுதியிருக்கிறது. தேவன் ஒரு குறிக்கோளுக்காக, ஒரு நோக்கத்திற்காக, ஓர் இலக்கிற்காக, நம்மை அழைத்திருக்கிறார். அது என்னவென்றால் அவருடைய குமாரனோடு ஐக்கியமாயிருப்பதற்கு நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். ஐக்கியம் அல்லது நட்புறவு என்றால் நாம் அந்தக் குமாரனில் பங்குபெறுகிறோம் என்று பொருள். குமாரனில் என்னவெல்லாம் இருக்கிறதோ அவைகள் எல்லாவற்றிலும் பங்குபெறுவதற்காக பிதாவானவர் நம்மை அழைத்திருக்கிறார். குமாரனில் இல்லாத எதுவும் இல்லை. தேவன் தம் முழு நிறைவையும் தம் குமாரனில் வைத்திருக்கிறார் என்று கொலோசெயரில் நாம் வாசிக்கிறோம். “தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது” (கொலோ. 2:9). மனிதர்கள் பெற்று அனுபவிப்பதற்கென்று எவைகளையெல்லாம் தேவன் கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார் என்று வேதம் சொல்லுகிறது. இப்படிப்பட்ட குமாரனோடு ஐக்கியமாயிருப்பதற்காக நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பது ஒரு சுமையல்ல அல்லது ஓர் அழுத்தம் அல்ல அல்லது ஒரு நெருக்கடி அல்ல. “ஓ! என்ன செய்வது! நான் ஒரு கிறிஸ்தவனாகி விட்டேன். இனிமேல் பல்லைக் கடித்துக்கொண்டு வாழ்ந்துவிடவேண்டியதுதான்,” என்பதல்ல. அப்படியென்றால் நாம் உண்மையாகவே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் புரிந்துகொள்ளவில்லை என்று பொருள். “ஆ! இந்த உலகத்தில் பல கோடி மக்கள் வாழ்கிறார்கள். ஆனால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோடு ஐக்கியமாயிருப்பதற்கு, அவரோடு இணைந்து வாழ்வதற்கு, அவரோடு ஒன்றாகி ஒன்றித்து வாழ்வதற்கு என்னைத் தெரிந்தெடுத்தார், என்னை முன்குறித்தார், என்னை அழைத்தார் என்பது எவ்வளவு பெரிய பாக்கியம்!”
ஆனால், இந்த வாழ்க்கை வாழ்வதற்கு நாம் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்காவிட்டால் அவரோடு ஐக்கியமாயிருக்கிற வாழ்க்கை வாழ முடியாது. இயேசு கிறிஸ்துவை எப்படி விசுவாசிப்பது? அவர் நம் கண்களுக்குமுன்பாகத் தோன்றி, தம்மைக் காண்பித்துவிட்டால் நாம் அவரை விசுவாசிக்கலாம் அல்லது ஓர் அற்புதம், அடையாளம் செய்து விட்டால் நாம் அவரை விசுவாசிக்கலாம். இல்லையா? இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதற்கு அவர் யார்? இதுதான் கேள்வி. அவர் என் கண்களுக்கு முன்பாகத் தோன்றினாரா? என் காதுகளிலே அவருடைய சத்தம் கேட்டதா? என்ன அடிப்படையிலே இந்த நபரை, இவரை, இயேசு கிறிஸ்துவை, நாம் விசுவாசிக்கிறோம்?
“இயேசுகிறிஸ்து எனக்குத் தோன்றி, என்னிடம் பேசட்டும்,” என்று சிலர் சொல்லுவார்கள். “சவுல் தமஸ்குவுக்குப் போகிற வழியில் இயேசு அவருக்குத் தோன்றி, அவருடன் பேசினார் இல்லையா? அதுபோல அவர் எனக்குத் தோன்றி, என்னுடன் பேசட்டும். அப்போது நான் அவரை விசுவாசிப்பேன்,” என்று வேறு சிலர் சொல்லுவார்கள். அவர் தோன்றிப் பேசிவிட்டால் அதற்குப்பின் விசுவாசம் தேவையில்லையே? தோன்றிப் பேசினால் மறுத்துப்பேசுவதற்கு அங்கு ஒன்றுமேயில்லை. அப்படியானால் விசுவாசிப்பதென்றால் என்ன பொருள்? அவர் தோன்றவில்லை, அவர் பேசவில்லை; அவரை என் கண்களால் காணவில்லை; உடலிலிருக்கிற இந்த ஊனக் கண்களால் நான் அவரைக் காணவில்லை; இந்த ஊனக் காதுகளால் நான் அவருடைய சத்தத்தைக் கேட்கவில்லை; ஆனால், நான் அவரை விசுவாசிக்கிறேன்.
நாம் யாரை விசுவாசிக்கிறோமோ அவரை இந்த ஊனக் கண்களால் நாம் காணவில்லை; இந்த ஊனக் காதுகளால் நாம் அவரைக் கேட்கவில்லை; இந்த ஊன உடலால் நாம் அவரைத் தொட வில்லை. ஆனால், நம் ஆவியில் வெளிப்பட்ட இயேசு கிறிஸ்துவை நாம் விசுவாசிக்கிறோம். நம் ஆவியில் வெளிப்பட்ட இயேசு கிறிஸ்து நாம் விசுவாசிக்கத்தக்கவர். என் ஊனக் கண்களால் நான் கண்டதைவிட, என் ஊனக் காதுகளால் நான் கேட்டதைவிட, இந்த ஊன உடலால் நான் தொட்டுப் பார்த்ததைவிட என் ஆவியில் நான் கண்ட இயேசுகிறிஸ்து மிகத் திடமானவர், மிக மெய்யானவர், மிக நிஜமானவர்.
இந்தக் கண்களால் கண்டதை நான் மறுக்கமுடியும். நீங்கள் கானல் நீரைப் பார்த்திருக்கிறீர்களா? சாலையில் பயணம் செய்யும்போது தூரத்தில் தண்ணீர் இருப்பதுபோல் தோன்றும். நாம் பார்ப்பது மெய்யா பொய்யா? தூரத்திலிருந்து பார்க்கும்போது உண்மையாகவே அங்கு தண்ணீர் இருப்பதுபோல் தோன்றுகிறது. ஆனால், அந்த இடத்திற்குப் போய் பார்க்கும்போது அங்கு தண்ணீர் இல்லை. நான் என் கண்களால் பார்த்தது பொய்யா? ஆம், அது பொய். கண்களை ஏமாற்ற முடியும்? குரல்களை ஏமாற்ற முடியும். “நான் அந்தச் சத்தத்தைக் கேட்டேன்,” என்று குருக்களும், சாமியார்களும், சந்நியாசிகளும், யோகிகளும் சொல்வதில்லையா? அது பொய். ஆனால், ஆவியில் நாம் எதைத் தரிசிக்கிறோமோ, எதைக் கேட்கிறோமோ, எதைத் தொடுகிறோமோ, எதை அறிகிறோமோ அது மெய்.
“தேவன் தம்முடைய குமாரனை எனக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்தபோது நான் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் யோசனைபண்ணாமலும், எனக்கு முன்பே அப்போஸ்தலரானவர்களிடத்திலே எருசலேமுக்குப் போகாமலும் அரேபியா தேசத்துக்குப் போய்,” (கலா. 1:16, 17) என்று பவுல் தன் முதல் அனுபவத்தைக் குறிப்பிடுகிறார். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தம்மைப் பவுலுக்கு இந்த உடலிலுள்ள கண்களாலோ அல்லது காதுகளாலோ காண்பிக்கவில்லை. இயேசுகிறிஸ்து தம்மைப் பவுலுடைய ஆவியில் அவனுக்கு வெளிப்படுத்தினார்.
“ஆகையால் இதுமுதற்கொண்டு நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம். நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும் இனி மாம்சத்தின்படி அவரை அறியோம்” (2 கொரிந்தியர் 5:16). இது ஒரு மிக முக்கியமான ஒரு கோட்பாடு. கிறிஸ்துவை மாம்சத்தின்படி அறியக்கூடாது, அறிய முடியாது. “ஊனக் கண்களால் காண வேண்டும், ஊனக் காதுகளால் கேட்க வேண்டும், ஊனக் கைகளால் அவரைத் தொட வேண்டும்; அப்போது நான் அவரை விசுவாசிப்பேன்,” என்பதுதான் மாம்சத்தின்படி அறிவதாகும். இது தேவனுடைய கோட்பாடு இல்லை. இப்படி மாம்சத்தின்படி அறியக்கூடாது, அறிய முடியாது. தேவன் இந்தக் கோட்பாட்டைப் பாராட்டவில்லை.
“இந்தக் கோட்பாட்டின்படி இயேசுகிறிஸ்து என்னோடு இடைப்பட்டால்தான் அவரை விசுவாசிப்பேன்,” என்று சொன்ன ஒரு மனிதன் இருந்தான். யோவான் 20ஆம் அதிகாரத்தில் அவனைப் பார்க்கிறோம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தபிறகு ஒருநாள் தம் சீடர்களுக்குத் தோன்றினார். எல்லா சீடர்களும் அங்கு இருந்தார்கள். ஆனால், அப்போது தோமா அங்கு இருக்க வில்லை. எனவே, “இயேசு வந்தார்; அவர் எங்களுக்குத் தோன்றினார்; இந்த அறைக்குள் அவர் வந்தார்; எங்களுடன் சேர்ந்து அவர் சாப்பிட்டார்,” என்று மற்ற சீடர்கள் சொன்னதை தோமா நம்பவில்லை. தோமாவின் பதில் அங்கு இருக்கிறது. மற்ற சீடர்கள் அவரிடம் “கர்த்தரைக் கண்டோம்,” என்று சொன்னார்கள். அதற்கு அவன், “அவருடைய கைகளில் ஆணிகளால் உண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலை விட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய நான் விசுவாசிக்க மாட்டேன் என்றான்” (யோவான் 20:25). ஒரேவொரு நிரூபணத் தில் தோமா திருப்தியடையமாட்டார். அவருக்கு மூன்று நிரூபணங்கள் தேவை. முதலாவது, காயங்களைப் பார்க்க வேண்டும். இரண்டாவது, காயங்களில் விரலைவிட வேண்டும். அதுவும் போதாது. அதன்பின் விலாவிலே உள்ள காயத்தில் கையைப் போட வேண்டும். தோமாவைப்போல் யாராவது சாட்சி கொடுக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். “நான் இயேசு கிறிஸ்துவை எப்படிக் கண்டேன் தெரியுமா? ஆணிகளால் கடாவப்பட்ட அவருடைய கையைக் கண்டேன். அந்தக் கைகளிலுள்ள காயங்களில் என் விரலை விட்டேன். விலாவிலே என் கைகளை விட்டேன்,” என்று யாராவது சொன்னால், நாம் அவரைப் பார்த்து, “ஐயா நீங்கள் எல்லாக் கூட்டங்களிலும் சாட்சி கொடுக்க வேண்டும். இதைவிட அற்புதமான சாட்சி வேறென்ன உண்டு?” என்று சொல்லுவோம்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அடுத்தமுறை வரும்போது தோமா அங்கு இருக்கிறார். அப்போது இயேசு தோமாவை நோக்கி, “நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார். உன் கையை நீட்டி என் விலாவிலே போடு. அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு,” என்றார். உடனே தோமா, “என் ஆண்டவரே! என் தேவனே!” என்றான். அதற்கு இயேசு, “தோமாவே நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய். காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்,” என்றார்.
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நம் பலவீனத்துக்கு இறங்கி வருகிறார். இந்த முழுப் புதிய ஏற்பாட்டிலும் இயேசுவை ‘தேவனே’ என்று ஒருவன் அழைத்த ஒரேவொரு இடம் இதுதான். “என் ஆண்ட வரே, தேவனே” என்று இயேசு கிறிஸ்துவை விளிக்கின்ற, அழைக்கின்ற, ஒரேவொரு இடம் இதுதான். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து அதனால் பரவசப்பட்டதாகத் தெரியவில்லை, அவனைப் பாராட்டியதாகவும் தெரியவில்லை. “தோமா, நீ என்னைக் கண்டு, தொட்டு, உன் கைகளை என் விலாவினில் போட்டதினால் விசுவாசிக்கிறாய். அதுவல்ல விசுவாசம். காணாமல் என்னை விசுவாசிப்பது விசுவாசம்,” என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிறார். ஒன்று புலனாகிறது. இயேசு கிறிஸ்துவை நாம் மாம்சத்தின்படி அறியோம்; மாம்சத்தின்படி இந்த இயேசுகிறிஸ்துவை அறியவே முடியாது. நாம் இயேசு கிறிஸ்துவை, தேவனுடைய குமாரன் என்ற அற்புதமான நபரை, மனிதனுடைய எல்லாப் புலன்களுக்கும், அறிவுக்கும் அப்பாற்பட்ட இந்த அற்புதமான நபரை, நம்முடைய புலன்களால், மாம்சத்தின்படி, அளவிடமுடியாது.
ஒரு பண்டிகையிலே சில கிரேக்கர்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினார்கள். அந்தச் சமயத்திலே இயேசு கிறிஸ்துவின் பெயர் பிரபலமாகியிருந்தது. அவருடைய புகழ்ச்சி பரவிவிட்டது. எனவே கிரேக்க நாட்டிலிருந்து வந்த சில கிரேக்கர்கள் இயேசுவின் சீடர்களாகிய பிலிப்புவையும், அந்திரேயாவையும் சந்தித்து, இயேசுவைக் காண வேண்டும் என்ற தங்கள் ஆசையைத் தெரிவித்தார்கள்: “ஐயா, நாங்கள் இயேசுவைக் காண விரும்புகிறோம்”(யோவான் 12:21) என்றார்கள்.
“கிரேக்கர்கள் உம்மைப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்,” என்று சொன்னவுடன், “ஓடிப் போய் அவர்களை அழைத்துக்கொண்டு வா. நான் யூதர்களுக்கு மட்டுமல்ல, புறவினத்தாருக்கும் இரட்சிப்பைத் தருவதற்கு வந்தேன் என்ற என் இரட்சிப்பின் திட்டத்தை அவர்களுக்கு எடுத்துரைக்கப் போகிறேன்,” என்று ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பரவசப்பட்டு ஒன்றும் சொல்லவில்லை.
உண்மையாகவே இயேசு கிறிஸ்து சொன்ன பதிலைப் பார்த்தால் நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள். “கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிடில் தனித்திருக்கும். செத்ததேயாகில் அது மிகுந்த பலனைத் தரும்” (யோவான் 12:24). இதற்கும், “நாங்கள் இயேசுவைக் காண விரும்புகிறோம்,” என்று கிரேக்கர்கள் சொன்னதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? நீங்கள் இயேசுவைக் காண விரும்புகிறீர்களா? கிரேக்கர்கள் இயேசுவைக் காண விரும்பியதைப்போலவா?
பெரிய ஆளாக விரும்புகிறவன் திருவிழாக்கள் வருகிறபோது அங்கு போய் பெரிய அற்புதங்கள், அடையாளங்கள் செய்து தன்னைப் பெரிய ஆள் என்று காண்பிக்க வேண்டும் என்று அவருடைய சகோதரர்கள் சொன்னார்கள். “அப்பொழுது அவருடைய சகோதரர் அவரை நோக்கி: நீர் செய்கிற கிரியைகளை உம்முடைய சீடர்களும் பார்க்கும்படி, இவ்விடம்விட்டு யூதேயாவுக்குப்போம். பிரபல மாயிருக்க விரும்புகிற எவனும் அந்தரங்கத்தில் ஒன்றையும் செய்யமாட்டான். நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்தால் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தும்,” (யோவான் 7:3, 4) என்று சொன்னார்கள். ஆனால், இயேசுவோ எப்பொழுதும் ஒரு மறைவான வாழ்க்கையையே வாழ்ந்தார். “நீர் திருவிழாவிற்கு போம்,” என்று சொன்னால், அவர் “நான் திருவிழாவுக்கு போவதில்லை. என் வேளை இன்னும் வரவில்லை,” என்று சொல்லுகிறார். ஆனால், அவர்கள் போனபிறகு அவர் மறைவாகப் போகிறார். ஒருவனை அவர் சுகப்படுத்தினபின்பு, “இதை நீ யாருக்கும் சொல்ல வேண்டாம்,” என்று சொல்லுகிறார். உண்மையாகவே அவர் மறைந்து வாழ்ந்தார்.
ஏரோதுகூட இயேசுவவைக் காண விரும்பினான். இயேசுவின் புகழைக்குறித்து அவன் கேள்விப்பட்டு, அவர் செய்கிற அற்புதங்களையெல்லாம் பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டான். ஏரோதைப் பொறுத்தவரை இயேசுகிறிஸ்து தேவனுடைய குமாரனோ, இரட்சகரோ, ஆண்டவரோ அல்ல. அவனைப் பொறுத்தவரை இயேசு ஒரு மந்திரவாதி. ஏரோது அவரைப் பார்க்கவேண்டும் என்று விரும்பினான். அவர் செய்த அற்புத அடையாளங்களைப்பற்றி அவன் கேள்விப்பட்டிருக்கிறான். அவர் குருடர்களுடைய கண்களைத் திறக்கிறார் என்றும், மரித்தவர்களை உயிரோடு எழுப்புகிறார் என்றும் அவன் கேள்விப்பட்டிருக்கிறான். இயேசு தன்னுடைய அரசவைக்கு வந்து, ஒன்றிரண்டு அற்புதங்களைச் செய்ய வேண்டும் என்று அவன் எதிர்பார்த்தான். ஏரோது கூப்பிட்ட அழைப்புக்கு அவர் போகவில்லை. தம்மைக் காண வேண்டும் என்று விரும்பினவர்களுக்கெல்லாம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தம்மைக் காண்பிக்கவில்லை.
மாம்சத்தின்படி தம்மை அறிந்துகொள்ள முயன்ற யாருக்கும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தம்மை விட்டுக்கொடுக்கவில்லை.
இயேசு உயிர்த்தெழுந்தபிறகு முதலாவது அவர் தம்மை மகதலேனா மரியாளுக்குக் காண்பித்தார். பிறகு தம் சீடர்களுக்குக் காண்பித்தார். அவர் தம்மைத் தம் சீடர்களுக்கு நாற்பது நாட்களாகக் காண்பித்துக்கொண்டிருந்தார். எம்மாவுக்கு நடந்துசென்ற இரண்டு சீடர்களுக்குத் தம்மைக் காண்பித்தார். ஆனால் உயிர்த்தெழுந்த இயேசுவை அவர்களால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.
மாம்சத்தில் உள்ள இயேசு ஒருவர் உண்டு, உயிர்த்தெழுந்த இயேசுவும் உண்டு. இரண்டு இயேசுக்களல்ல.
உயிர்த்தெழுந்த இயேசுவை அடையாளம் கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினம். மரியாள் அவரைத் தோட்டக்காரன் என்று நினைத்துக்கொண்டாள். இயேசு அவளை நோக்கி, “மரியாளே” என்று கூப்பிட்டவுடன், “இந்தக் குரலை கேட்டதுபோல் இருக்கிறது,” என்று இனங்கண்டு, “ரபூனி” என்று அழைக்கிறாள்.
இயேசு கிறிஸ்துவை எப்படிக் காண விரும்புகிறீர்கள்? தோமா கண்டதுபோல, ஏரோது காண விரும்பியதுபோல, கிரேக்கர்கள் காண விரும்பியதுபோல மாம்சத்தின்படி காண விரும்புகிறீர்களா அல்லது பவுல் கண்டதுபோல ஆவியிலே காண விரும்புகிறீர்களா? பவுல் கண்டதுபோல ஆவியில் காண விரும்புகிறீர்கள். ஆனால், யாராவது ஒருவர் வந்து, “நான் இயேசுவை விலாவிலே கையைப் போட்டு, கைகளில் விரலை விட்டு என் கண்களால் கண்டேன்,” என்று சொல்லும்போது நீங்கள் அவரைப் பரிதாபத்துக்குரியவராக நினைப்பீர்களா அல்லது “ஐயோ! நான் அவரைப்போல் இயேசு கிறிஸ்துவைப் பார்க்கவில்லையே!” என்று உங்களைக் குறித்துப் பரிதாபப்படுவீர்களா? “இவர் உயர்தரமான கிறிஸ்தவர்” என்றும் “நாம் இரண்டாந்தரக் கிறிஸ்தவர்கள்” என்றும் நினைப்பீர்களா? இதுவரை நீங்கள் அப்படி நினைத்திருந்தால் உங்கள் எண்ணத்தை நீங்கள் மாற்றிக்கொள்ளுங்கள்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்மை ஒருநாளும் மாம்சத்தின்படி ஒருவனுக்கும் வெளிப்படுத்தினது இல்லை. மாம்சத்தின்படி கண்ட கிறிஸ்துவைக்குறித்து யாராவது பெருமை பாராட்டினால் அது மிகவும் பரிதாபமானது.
ஒரேவொரு சாட்சிதான் உண்டு. இயேசுகிறிஸ்து எனக்கு ஆவியிலே தோன்றினார். அப்படித் தோன்றின இந்த இயேசு கிறிஸ்துவை என்னால் விசுவாசிக்காமல் இருக்கமுடியாது. அவர்மேல் அன்பு கூராமல் இருக்கமுடியவில்லை. நான் என் கண்களால் கண்டு, காதுகளால் கேட்டு, கைகளால் தொட்ட எந்த நபரையும்விட இந்த நபர் அற்புதமானவர், அதிசயமானவர், மாட்சிமிக்கவர், அழகானவர்.
இனிமேல் யாராவது ஒருவர் வந்து, “அங்கு ஒரு சந்நியாசி இருக்கிறார், சாமியார் இருக்கிறார். அவர் இயேசுகிறிஸ்துவை நேரில் பார்த்தாராம். நானும் அவரைப் பார்த்து நேர்காணல் கண்டு, ‘நீங்கள் இயேசு கிறிஸ்துவை எப்படிப் பார்த்தீர்கள்?’ என்று தெரிந்து கொள்ள வேண்டும்,” என்றால் நமக்கும் கிரேக்கர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. உயிர்த்தெழுந்த கிறிஸ்துவில், உயிர்த்தெழுதலில், மட்டுமே கிறிஸ்துவை அறிய முடியும். “கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும். செத்ததேயாகில் மிகுந்த பலனைத் தரும்,” என்று ஆண்டவர் சொல்லுகிறார். உயிர்த்தெழுந்த கிறிஸ்துவைத்தான் நீ காண முடியுமேதவிர மாம்சத்தில் உள்ள கிறிஸ்துவை நீ காண்பதினால் உனக்கு எந்தப் பயனும் இல்லை.
யூதர்களுக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைச் சந்திக்க வரும்போதும், அவா; அதே பதிலைத்தான் தருகிறார். “நிக்கொதேமு, நீ இந்த ஊனக் கண்களால், ஊன அறிவால் என்னை அறிய முயற்சிசெய்வது பயனற்றது. நீ புதிதாக மேலிருந்து பிறவாவிடில் தேவனுடைய அரசைக் காணமாட்டாய். நீ மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டாய்.” “ஆ! ஒருவன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் மறுபடியும் நுழைந்து இரண்டாம்முறை எப்படி பிறக்க முடியும்?” மறுபடியும் சொல்லுகிறார்: “நீ தண்ணீரினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய அரசுக்குள் நுழைய மாட் டாய்.” அதனுடைய பொருள் என்னவென்றால் தேவனுடைய அரசில் ஒரேவொரு பொருள்தான் மாபெரும் பொருள். அது பொருள் அல்ல; அது ஒரு நபர்; அந்த நபர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.
ஒருவனுக்கு ‘அன்பு வேண்டும் என்றால் அன்பு, நீதி வேண்டும் என்றால் நீதி, பரிசுத்தம் வேண்டும் என்றால் பரிசுத்தம், சுகம் வேண்டும் என்றால் சுகம், சாந்தம் வேண்டும் என்றால் சாந்தம், பொறுமை வேண்டும் என்றால் பொறுமை’ என்று பிதாவானவர் சில்லறையாகக் கொடுப்பதில்லை. உங்களுக்கு எத்தனை அலகு பொறுமை வேண்டும்? உங்களுக்கு எத்தனை அலகு சுகம் வேண்டும்? உங்களுக்கு எத்தனை அலகு நீதி வேண்டும் என்று கணக்குப் பார்த்துக் கொடுப்பதில்லை. அன்பு, நீதி, ஒளி, பரிசுத்தம், பொறுமை, சாந்தம். சுகம், தைரியம் எல்லாவற்றையும் பிதாவானவர் ஒரேவொரு நபரில் தான் வைத்திருக்கிறார். சில்லறை சில்லறையாக இந்த நற்பண்புகளைக் கொடுப்பதில்லை. அவர் மொத்தமாக இந்த நபரை மட்டுமே கொடுக்கிறார். இப்படிச் சொல்வதற்கு என்ன ஆதாரம்? “நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டிருக்கிறீர்கள். அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்” (1 கொரி. 1:30, 31) என்பதற்கும், இயேசு கிறிஸ்து அல்பாவும் ஓமெகாவுமாக இருக்கிறார் என்பதற்கும் ஒரேவொரு பொருள்தான் உண்டு. எல்லா எழுத்துக்களும் அல்பாவிற்கும் ஓமேகாவிற்கும் இடையில்தான் இருக்கின்றன. எல்லா எழுத்துக்களும் அவர்தான். இயேசு கிறிஸ்துவுக்கு வெளியே எந்த எழுத்தும் இல்லை. நம் வாழ்வின் எல்லாத் தேவைகளுக்கும் ஒரே நிரப்பீடு, பூர்த்திசெய்கிற ஒரே நிரப்பீடுதான், உண்டு; அது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து.
“நம்மிடம் இயேசுகிறிஸ்துவைத்தவிர வேறெதுவும் இல்லை. நமக்கு இயேசு கிறிஸ்துவைத்தவிர வேறெதுவும் தேவையும் இல்லை.” இதை நான் பொய்யான சாட்சியாகச் சொல்லவில்லை அல்லது இது கேட்பதற்கும், பேசுவதற்கும் சுவாரசியமாக இருக்கிறது என்பதற்காகவும் இதைச் சொல்லவில்லை. இயேசுகிறிஸ்து என்னும் நபரை நாம் இன்னும் அளந்து முடிக்கவில்லை. அவர் உயிர்த்தெழுந்த நபர்; அவர் ஆவியாக இருக்கிறார்; அவரை அறிய வேண்டும் என்றால் நாம் நம் ஆவியில் தான் அறிய முடியும்.
“எங்கள் பிதாக்கள் (சமாரியர்கள்) இந்த மலையிலே தொழுதுகொண்டு வந்தார்கள். நீங்கள் (யூதர்கள்) எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே தொழுது கொள்ள வேண்டும் என்கிறீர்களே, எந்த மலையில் தொழுது கொள்ள வேண்டும்?” என்று ஆராதனையைக்குறித்துத் தம்மிடத்தில் விசாரித்துக் கேட்கின்ற சமாரியப் பெண்ணிடம், “ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு, நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளும் காலம் வருகிறது. உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங் காலம் வரும். அது இப்பொழுதே வந்திருக்கிறது. தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாக இருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். தேவன் ஆவியாயிருக் கிறார். அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுது கொள்ளவேண்டும்” (யோவான் 4: 22-24) என்றார். “தரமான கலைநுணுக்கம் நிறைந்த கட்டிடத்திலும், குறிப்பிட்ட சூழ்நிலையிலும் தம்மைத் தொழுதுகொள்ள வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்,” என்று இயேசு கிறிஸ்து சொல்லவில்லை. தேவன் அதை விரும்புகிறார் என்று அங்கு சொல்லப்படவில்லை.
“ஒரு நல்ல கட்டிடக்கலை உள்ள சபைக் கூட்டத்திற்குப் போகும்போது மனதுக்கு எவ்வளவு சாந்தமாக இருக்கிறது!” என்று ஒருமுறை ஒரு சகோதரன் சொன்னார். ஒரு இசையைக் கேட்டு, ஆத்துமாவிலே உணர்ச்சிவசப்பட்டு, “இது இந்த உலகத்தைச் சார்ந்ததே இல்லை,” என்று மக்கள் சொல்வார்கள். இது ஆத்துமாவுக்குரியது, ஆவிக்குரியதல்ல. “சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேடத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே,” என்று பவுல் கூறுகிறார். ஆத்துமாவில் செய்யப்படுகிற பல செயல்கள் ஏறக்குறைய ஆவியில் நிகழ்கிற செயல்களுக்கு ஒப்பாக இருக்கும். ஆனால், தேவனுடைய ஆவியினால் உயிர்ப்பிக்கப்பட்டவர்களுக்கு, மறுபடி பிறந்தவர்களுக்கு, அந்த வேறுபாடு தெரியும். “இது தேவனுக்கு உரியது, இது தேவனுக்கு உரியது அல்ல” என்று ஆவியினால் பிறந்தவன் எவனும் அறிவான். நம் ஆவியில் நாம் போதுமான அளவுக்குப் பயிற்சி செய்திருப்போம் என்றால், “இது ஆவிக்குரியது, இது ஆத்துமாவுக்குரியது,” என்று தெரியும். பார்ப்பதற்கு இரண்டும் ஒன்றுபோல் தோன்றலாம். ஆனால், ’ஒன்று பரத்திற்குரியது, இன்னொன்று பூமிக்குரியது என்றும், ஒன்று நித்தியத்திற்குரியது, இன்னொன்று தற்காலிகமானது என்றும், ஒன்று மனிதனுக்குரியது, இன்னொன்று தேவனுக்குரியது,” என்பதையும் இனங்காணமுடியும்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஆவியில் மட்டுமே அறிய முடியும். நம் கண்கள், காதுகள் தொடுதல் ஆகியவைகளுடன் ஆவியை ஒப்பிடும்போது நீங்கள் ஆவியைக் குறைத்து மதிப்பிடா தீர்கள். ஆவியில் அறிதல் அல்லது உள்ளான விதத்தில் அறிதல் அல்லது இருதயத்தில் அறிதல் என்று நாம் பலவிதமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். ஆவியில் அறிவது என்பது புறம்பான கண்கள், காதுகள், தொடுகை ஆகியவைகளால் அறிவதைவிட மிகவும் மேலானது. அதனால்தான், “நீ ஆவியினால் பிறக்க வேண்டும்.” “நீ ஆவியில் தேவனைத் தொழுதுகொள்ள வேண்டும்.” “என் ஆவியோடு நான் சேவிக்கிற தேவன்,” என்று பவுல் கூறுகிறார் (ரோமர் 1:9)
எபிரெயர் 11ஆம் அதிகாரம் 1ஆம் வசனத்திலே விசுவாசம் என்றால் என்னவென்று வரையறுக்கப்பட்டிருக்கிறது. “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.” இன்னொரு மொழிபெயர்ப்பு: விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் புலனாக்கமும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. நிறைய வண்ணங்கள், நிறங்கள் இருக்கின்றன. அதைப் புலனாக்குவதற்குக் கண்கள் வேண்டும். காண்பது நிறங்களை புலனாக்குகிறது. பார்வையற்ற ஒரு மனிதனால் நிறங்களைப் புலனாக்க முடியாது. இயேசுகிறிஸ்து நம் கற்பனையோ, நிழலோ, பொய்யோ அல்ல. அவர் தோன்றி மறைகிற புகையைப் போன்றவர் அல்ல. இந்த முழுப் பிரபஞ்சத்திலும் மெய்ப்பொருள் வேறொன்றும் இல்லை. “இதை நீங்கள் அரேபியாவில் கண்டுபிடித்தீர்களா? தமஸ்குவில் கண்டுபிடித்தீர்களா? கெரிசீமில் கண்டுபிடித்தீர்களா? தாபோர் மலையில் கண்டுபிடித்தீர்களா? அல்லது குறைந்தபட்சம் இப்போது இருக்கிற எருசலேமுக்காகவது போய்ப் பார்த்தீர்களா?” என்று யாராவது கேட்கலாம். நான் எங்கும் போகவில்லை. எல்லா மலைகளும், எல்லா இடங்களுக்கும் நம் ஆவியில் உள்ளன.
இசையை நம் செவிப்புலனால் புலனாக்குகிறோம். நிறங்களை நம் கண்களால் புலனாக்குகிறோம். பார்வையுள்ளவனைப் பொறுத்தவரை நிறம் மெய். ஆனால், பார்வையற்றவனைப் பொறுத்தவரை அது பொய் என்று சொல்லமுடியாது. அவனைப் பொறுத்தவரை அது இருந்தும் இல்லாததுபோல்தான். அவனுடைய உலகத்தில் நிறம் என்று ஒன்று இல்லை. ஒரு நல்ல இசை இருக்கிறது. அதை நாம் நம் செவிப்புலனால் புலனாக்குகிறோம். நம்மைப் பொறுத்தவரை அது மெய். ஆனால், செவி கேளாதவனைப் பொறுத்தவரை அவனுடைய உலகத்திலே இது இல்லை.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என் உலகத்திலே மெய். என் ஆவி என்கிற புலனால் நான் அவரைப் புலனாக்குகிறேன். ஆனால், ஆவி என்கிற புலன் இல்லாதவனுக்கு அல்லது ஆவி என்கிற புலன் செத்துப்போனவனுக்கு, ஆவி என்கிற புலன் அற்றுப்போனவனைப் பொறுத்தவரை அவனுடைய உலகத்தில் அவர் இல்லை. பார்வையற்ற ஒருவன் வந்து, “நிறம் என்கிற ஒன்று இல்லை. நிறம் என்று ஒன்று இருந்தால் எனக்குக் காண்பி, பார்க்கலாம்; சவால் விடுகிறேன்; நீ நிறத்தை எனக்குக் காட்டிவிட்டால் நான் நிறத்தை விசுவாசிக்கிறேன்,” என்று சாதிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். “ஐயா, உங்களுக்குக் காட்ட முடியாததற்குக் காரணம் நிறம் என்று ஒன்று இல்லாததல்ல. உங்களுக்கு காட்ட முடியாததற்குக் காரணம் உங்களிடம் அதைக் காண்பதற்குரிய புலன் இல்லை,” என்பதுதான் நம் பதில். “இந்த இசை மிகவும் இன்பமாக இருக்கிறது என்பதை நிரூபித்துக்காட்டு பார்க்கலாம்,” என்று செவிகேளாத ஒருவர் சொல்லுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அதை என்னால் நிரூபிக்கமுடியாது. அதற்குக் காரணம், இசை என்று ஒன்று இல்லாததல்ல. அந்த இசையைப் புலனாக்குகிற புலன் உங்களிடம் இல்லை.
“இயேசு கிறிஸ்துவை நீங்கள் நிரூபியுங்கள் பார்க்கலாம்,” என்று சொல்வார்கள். தோமா என்கிறவர் நிரூபித்தாரா இல்லையா? தோமா தவறான புலன்களால் அவரைக் கண்டுகொள்ள, பெற்றுக்கொள்ள, அறிய முயற்சிசெய்தான். அவனுடைய பலவீனத்தைக் கருதி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கீழே இறங்கிவந்தார். ஆனால், எல்லா சமயங்களிலும் நம் பலவீனத்தைக் கருதி அவர் இறங்கிவர வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏரோதுக்கு அவர் இறங்கிவரவில்லை. பிலாத்துவுக்கு அவர் இறங்கிவரவில்லை. பிலாத்து, “சத்தியமாவது என்ன?” என்று கேட்டான். இயேசு கிறிஸ்து அமைதியாக இருந்து விட்டார். இது என்ன பதில்? “சத்தியமாவது என்ன?” அமைதிதான் பதில். அதன் பொருள் என்னவென்றால், “சத்தியம் உன் முன்னால் நின்றுகொண்டிருக்கிறது. நீ சத்தியமாவது என்னவென்று கேட்கிறாய், உனக்கு என்ன பதில் சொல்வது?” என்பதுதான் அவருடைய பதில் என்று நான் நினைக்கிறேன்.
ஆகவே, மனிதர்கள், “என் புலன்களுக்கு நீர் வெளிப்படும். என் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நீர் உம்மை எனக்குக் காண்பியும்,” என்று கூற முடியாது.
தேவனுடைய கோட்பாடுகளை நாம் அறிய வேண்டும். அவருடைய நியமம், அவருடைய வழி, அவருடைய விதி, அவருடைய பிரமாணம் எப்போதும் மிக உள்ளான விதத்திலே தம் மக்களைத் தொடும், மிக உள்ளான விதத்திலே தம் மக்களுக்கு நிரப்பீட்டைத் தரும், மிக உள்ளான விதத்திலே தேவையான வளங்களைத் தரும். அவர் தராததுபோல் இருக்கும்; ஆனால், தந்துகொண்டு இருப்பார். நாம் செத்துப்போவதுபோல் தோன்றும்; ஆனால், நாம் சாவதில்லை. புயல் கடந்து போகும். கடந்துபோனபிறகு நாம் மறைந்திருப்போம் என்று தோன்றும். ஆனால், நாம் மறைந்திருக்க மாட்டோம். பெரிய பெரிய மரங்களெல்லாம் விழுந்திருக்கும். ஆனால், புல் இன்னும் நின்றுகொண்டிருக்கும். எனவே, அருமையான பரிசுத்தவான்களே, இதுதான் தேவனுடைய மக்களுடைய அழைப்பு. எபிரெயர்11யை நீங்கள் மறந்துவிட வேண்டும்.
புலப்படுத்துதல், புலனாக்குதல், மெய்யாக்குதல், அது எப்போதும் அங்கு இருக்கிறது. இந்த உலகத்தில் யாருமே விசுவாசிக்கவில்லையென்றாலும் இயேசுகிறிஸ்து மாறுவதேயில்லை. நாம் விசுவாசிப்பதால் இயேசுகிறிஸ்து பெரியவராகிவிடுவதில்லை. நிழலான மனிதர்களான நாம் மெய்ப்பொருளாகிய இந்த இயேசுகிறிஸ்துவைப் பற்றிக்கொள்வதின்மூலம் நாமும் மெய்யானவர்களாக மாறிவிடுவோம். நாம் நித்திய வாழ்வைப் பெறுகிறோம். கண்கள் நிறங்களை மெய்யாக்குகின்றன. காது இசையை அல்லது ஓசையை மெய்யாக்குகிறது. அதுபோல், நம் ஆவியிலே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மெய்யாக்கப்படுகிறார். தேவன் இந்த வார்த்தைகளின் மூலமாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றி வாழ்கிற ஒரு வாழ்க்கைக்கு நம்மை உறுதிப்படுத்துவாராக. ஆமென்.