Transcribed and edited for clarity from a message spoken in October, 2012 in Chennai
By Milton Rajendram
எபேசியர் 4ஆம் அதிகாரம் கிறிஸ்துவின் சரீரத்தைப்பற்றிப் பேசுகிறது. அந்தப் புத்தகம் முழுவதும் கிறிஸ்துவின் சரீரத்தைப்பற்றிப் பேசுகிறது.
என் பின்புலம், நான் இதைப்பற்றி அதிகமாகப் பேசுவதற்கு ஒரு காரணமாகும். நம் அனுபவம் என்னவோ, நம் பின்புலம் என்னவோ, அது நாம் வேதத்தை எப்படி வாசிக்கிறோம் என்பதைப் பாதிக்கிறது. பரிசேயனாகிய சவுல் தமஸ்குவுக்குப் போகிற வழியில் கிறிஸ்துவைச் சந்தித்தபிறகு, அவன் பழைய ஏற்பாட்டை வாசித்த விதம் முற்றிலும் மாறிற்று. முன்பு பழைய ஏற்பாட்டை வாசித்துவிட்டு நசரேயர்களை, இயேசுவைப் பின்பற்றுபவர்களை, அவன் கொடுமைப்படுத்தினான், கொலைசெய்தான். ஆனால், இப்போது அதே பழைய ஏற்பாட்டை வாசிக்கும்போது, அதின் ஒவ்வொரு பக்கத்திலும் அவன் கிறிஸ்துவைக் காண்கிறான். அப்படியானால், இதற்குமுன் பழைய ஏற்பாட்டின் எந்தப் பகுதிகளையெல்லாம் படித்து, வாசித்து, வியாக்கியானம்பண்ணி, பொருளுரையும், விளக்கவுரையும் கொடுத்து, “இந்த வசனத்தின்படி இப்படிப்பட்ட இயேசுகிறிஸ்துவை தேவனுடைய குமாரன் என்று சொல்லுகிறவர்களை நாம் கொலைசெய்யவேண்டும், கொடுமைப்படுத்த வேண்டும், சிறைச்சாலையில் போடவேண்டும்,” என்ற முடிவுக்கு வந்தானோ, இப்போது அதே பழைய ஏற்பாட்டை வாசிக்கும்போது அவன் அப்படிப்பட்ட முடிவுக்கு வரவில்லை.
கொலோசெயரில் வாசிப்பதுபோல போஜனம், பானம், பண்டிகை, மாதப்பிறப்பு, ஓய்வுநாட்கள் ஆகியவைகள், “வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கின்றன. அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.” உண்மையில், பழைய ஏற்பாடு முழுவதும் குழந்தைகளுக்குக் காண்பிக்கிற படங்கள் நிறைந்த ஒரு புத்தகம்போன்றதுதான். படத்தைக் காண்பிக்கும்போது குழந்தைகளுக்கு எளிமையாகப் புரியும். அதுபோல, தம் பிள்ளைகளுக்கு எளிமையாகக் கற்றுக்கொடுப்பதற்காக தேவன் பழைய ஏற்பாட்டில் பல சித்திரங்களை, படங்களை, வைத்திருக்கிறார். ஆனால் உண்மை, நிஜம், கிறிஸ்துவைப்பற்றினதுதான். பழைய ஏற்பாட்டிலுள்ள எல்லாப் படங்களின் நிஜம் கிறிஸ்துவே. எதை எடுத்துக்கொண்டாலும் சரி–அது மன்னாவாக இருந்தாலும் சரி, ஓய்வுநாளாக இருந்தாலும் சரி–அதன் நிஜம் கிறிஸ்துவே. பழைய ஏற்பாட்டின் மிகப்பெரிய சித்திரம் ஒன்று கூடாரம், மற்றொன்று கானான் தேசம். இயேசுகிறிஸ்துவே இந்த இரண்டு சித்திரங்களின் நிஜம்.
எனவே, நம் பின்புலம் நாம் வேதத்தை வாசிக்கிற விதத்தைப் பாதிக்கும். நான் ஒரு ரோமன் கத்தோலிக்கனாக வளர்ந்திருந்தால் நான் வேதத்தை வாசிக்கிற விதம் ஒரு விதமாக இருக்கும். நான் ஒரு பெந்தெகொஸ்தே விசுவாசியாக இருந்தால் அல்லது அவர்களோடு என் சகவாசம் அதிகமாக இருந்தால் நான் வேதத்தை வாசிக்கிற விதம் இன்னொரு விதமாக இருக்கும். இப்படி எப்படிப்பட்ட பாதைவழியாக நாம் சென்றிருக்கிறோமோ அல்லது எப்படிப்பட்ட பின்புலத்திலிருந்து தேவன் நம்மை அழைத்திருக்கிறாரோ அதற்கேற்ப நாம் வேதத்தை வாசிக்கிற விதமும் இருக்கும்.
குறிப்பாக, சவுலின் அனுபவத்தைப்போல. கலாத்தியரில் அவர் தன் அனுபவத்தைச் சொல்லுகிறார். “தேவனுடைய சபையை நான் துன்பப்படுத்தி, அதைப் பாழாக்கி, என் ஜனத்தாரில் என் வயதுள்ள அநேகரைப்பார்க்கிலும், யூதமார்க்கத்திலே தேறினவனாய், என் பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக மிகவும் பக்திவைராக்கியமுள்ளவனாயிருந்தேன்,” (கலா. 1:14) என்று பவுல் கூறுகிறார். எதுவரை அவர் இப்படி இருந்தார்? “தம்முடைய குமாரனை நான் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கும்பொருட்டாக அவரை எனக்குள் வெளிப்படுத்த பிரியமாயிருக்கும்வரை.” அதன்பிறகு அவர் என்ன செய்தார்? “உடனே நான் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் யோசனைபண்ணாமலும், எனக்குமுன்னே அப்போஸ்தலரானவர்களிடத்திலே எருசலேமுக்குப் போகாமலும், அரபி தேசத்துக்குப் புறப்பட்டுப் போனேன்” (கலா. 1:14, 15) என்று சொல்கிறார். ஏனென்றால், அது அவருடைய வாழ்க்கையில் ஒரு பெருவெள்ளம்போல வந்தது. அந்த சம்பவத்தை அவரால் ஜீரணிக்க முடியவில்லை, கிரகிக்க முடியவில்லை. இது எப்படி? “நான் வேதத்தை வாசித்திருப்பதின்படி, நான் புரிந்துகொண்டிருப்பதின்படி, நான் இயேசுகிறிஸ்துவை மேசியா என்று ஏற்றுக்கொள்ள முடியாது. அவரை ஏற்றுக்கொண்டிருப்பவர்களை, பின்பற்றுபவர்களை, அவருடைய பெயரைச் சொல்பவர்களை, நான் கொடுமைப்படுத்த வேண்டும், சிறையில் அடைக்க வேண்டும், கொலைசெய்ய வேண்டும். இந்த இயேசுகிறிஸ்து எப்படி தேவனுடைய குமாரனாக இருக்கமுடியும்?” என்ற கேள்விகள் எழுந்திருக்கும். அவர் அரேபியாவில் மறுபடியும் பழைய ஏற்பாட்டை வாசித்திருப்பார், திரும்பவும் வாசித்திருப்பார், திரும்பத்திரும்ப வாசித்திருப்பார் என்று நான் விசுவாசிக்கிறேன். அநேக சவுல்கள் வேதாகமத்தைத் தங்கள் அரேபியாக்களிலே இன்னும் திரும்பத்திரும்ப வாசித் துக்கொண்டிருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். நானும் அப்படிப்பட்ட ஒரு சவுல்தான்.
அவர் மீண்டும்மீண்டும், மறுபடியும் மறுபடியும் இந்தப் பழைய ஏற்பாட்டை வாசிக்கிறார். அவருடைய பரிசேய குருமார்கள், வேதபாரகர்கள்–குறிப்பாக கமாலியேல்–இதே பழைய ஏற்பாட்டை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து, “யெஹோவாதான் தேவன், அவரைத்தவிர வேறு தேவன் இல்லை,” என்று ஆணித்தரமாகப் போதித்திருக்கிறார்கள். இதை மறுபரிசீலனை செய்வது என்பது ஒரு பெரிய சவால். நற்குணமுள்ளவனும், புலவனும், பண்டிதனுமாகிய கமாலியேல்போன்ற ஒருவன் சொன்னது தவறாக இருக்கமுடியுமா? கமாலியேல் ஒரு பண்டிதன் மட்டும் அல்ல; அவன் எருசலேமில் இருந்த எல்லா மனிதர்களாலும் மதிக்கப்பட்ட ஒரு பெரிய மனிதனுமாக இருந்தான். கமாலியேல் சொன்னால் சொன்னதுதான். அவன் சொல்வதற்கு ஒரு மதிப்பு உண்டு. “அப்பொழுது சகல ஜனங்களாலும் கனம்பெற்ற நியாயசாஸ்திரியாகிய கமாலியேல் என்னும் பேர்கொண்ட ஒரு பரிசேயன் ஆலோசனைச் சங்கத்தில் எழுந்திருந்து சங்கத்தாரை நோக்கி, இஸ்ரவேலரே, இந்த மனுஷருக்கு நீங்கள் செய்யப்போகிறதைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்,” (அப். 5:34, 35) என்று சொன்னால் யூதர்களின் ஆலோசனைச் சங்கம் அவனுக்குச் செவிகொடுக்கிறது. அவ்வளவு மதிப்புள்ள மனிதன். இப்படிப்பட்ட ஒரு குணசாலியும், புத்திசாலியும் சொன்ன காரியங்களெல்லாம் தவறாக இருக்க முடியுமா? பவுலிடம் போய், “அப்படியானால் நீங்கள் உங்கள் பேராசிரியராகிய கமாலியேலிடம் படித்ததெல்லாம் தவறா?” என்று கேட்டிருந்தால் அவர் என்ன பதில் சொல்லியிருப்பார். அவருடைய பதில் பிலிப்பியர் 3ஆம் அதிகாரமாகத்தான் இருந்திருக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன். “நான் எட்டாம் நாளில் விருத்தசேதனம் அடைந்தவன், இஸ்ரவேல் வம்சத்தான், பென்யமீன் கோத்திரத்தான், எபிரேயரில் பிறந்த எபிரேயன், நியாயப்பிரமானத்தின்படி பரிசேயன் பக்திவைராக்கியத்தின்படி சபையைத் துன்பப்படுத்தினவன், நியாயபிரமாணத்திற்குரிய நீதியின்படி குற்றஞ்சாட்டப் படாதவன். ஆகிலும் எனக்கு இலாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்” (பிலி. 3:5-8). இப்படி விட்டுவிட்டபின். “ஐயோ! கிறிஸ்துவுக்காக இவைகளையெல்லாம் விட்டுவிட்டேனே!” என்று அவர் வருத்தப்படவில்லை, புலம்பவில்லை. சில சமயங்களில், “ஐயோ! இயேசுகிறிஸ்துவுக்காக இவைகளையெல்லாம் விட்டுவிட்டோமோ, இழந்துவிட்டோமே!” என்று வருத்தப்படுபவர்கள் உண்டு
“உங்கள் பேராசிரியராகிய கமாலியேல் சொன்னதெல்லாம் சரியா அல்லது தவறா? என்ற கேள்விக்குப் பதில் அளிப்பது எளிதல்ல. உடனே”சரி” அல்லது “தவறு” என்று ஒரு வரியில் பதில் கூறிவிட முடியாது. ஆண்டவராகிய இயேசு மற்றவர்கள் தம்மிடம் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் இப்படி ஒரு வரியில் பதில் சொல்லிவிடவில்லை. “இப்படியா, அப்படியா” என்று கேட்டால் அவர் இன்னொரு பதில் கொடுப்பார். “இந்த மலையில் தொழுதுகொள்ள வேண்டுமா அல்லது அந்த மலையில் தொழுதுகொள்ள வேண்டுமா?” என்று கேட்டால், அவருடைய பதில் என்ன? “இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளும் காலம் வருகிறது” (யோவான் 4:20) *“மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி இவளைக் கல்லெறிய வேண்டும். கல்லெறியலாமா அல்லது கல்லெறியக் கூடாதா, என்ன சொல்லுகிறீர்?” இது வேதபாரகர், பரிசேயருடைய கேள்வி. இயேசுவின் பதில்: “உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன்.” **“எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்?” என்று பிரதான ஆசாரியனும், ஜனத்தின் மூப்பரும் அவரிடத்தில் கேட்டபோது, அதற்குப் பதில் சொல்லாமல், ”யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷனால் உண்டாயிற்றோ? யாரால் உண்டாயிற்று?” *என்று கேள்வி கேட்பார். பல கேள்விகளுக்கு அவர் பதில் கொடுக்கவில்லை. ஏனென்றால், அவர் விவாதத்தை வளர்க்க விரும்பவில்லை. இருதயத்தில் பசியும் தாகமும் இருந்தவர்களிடம் அவர் பேசினார். வெறுமனே வாக்குவாதம்செய்வதற்காக அவர் பேசவில்லை. வாக்குவாதத்தில் ஜெயிப்பதால் நமக்குப் பெருமையும் இல்லை; வாக்குவாதத்தில் தோற்பதைப்பற்றி நமக்குக் கவலையும் இல்லை. அந்தக் காலகட்டம் நிச்சயமாக ஒரு போராட்டம் நிறைந்த காலகட்டம். ஏனென்றால், மனம் ஒரு புதிய வழியினூடாய்ப் போகவேண்டியிருக்கிறது. “அதே பழைய ஏற்பாடு, அதே வசனங்கள். ஆனால், இப்போது அதே வசனங்களில் நான் இயேசுவை தேவனுடைய குமாரனாகப் பார்க்கிறேன், என் ஜீவனாகப் பார்க்கிறேன், என் இரட்சகராகப் பார்க்கிறேன், என் எல்லாமுமாகப் பார்க்கிறேன், அவரைப் பின்பற்றுபவர்களைக் கொடுமைப்படுத்தக்கூடாது,” என்று பார்க்கிறேன்.
அதுபோல, கிறிஸ்துவின் சரீரம். இதைப்பற்றி வேதத்திலிருந்து ஒருவிதமான புரிந்துகொள்ளுதலை நான் பெற்றிருக்கிறேன். ஒரு திருப்புமுனையான சம்பவம், ஒரு பெருவெள்ளம், வாழ்க்கையில் வரும்போது நாம் மீண்டும் புதிய ஏற்பாட்டுக்குப் போய்ப் பார்க்கிறோம். அதே புதிய ஏற்பாடுதான், அதே வசனங்கள்தான். ஆனால், கிறிஸ்துவின் சரீரம் என்பது நான் நினைத்துக்கொண்டிருப்பதல்ல. கிறிஸ்துவின் சரீரம் என்பது நான் நினைத்துக்கொண்டிருந்ததைவிட மேலானது அல்லது உயர்வானது என்று நான் பார்க்கிறேன்.
எபேசியர் 5ஆம் அதிகாரத்தின் கருப்பொருள் கிறிஸ்துவின் சரீரமாகிய சபை. எபேசியர் நிருபம் முழுவதையும் வாசித்து கிறிஸ்துவின் சரீரம் என்று நான் எதைப் ‘பரிசுத்த கற்பனை’ செய்துகொண்டிருந்தேனோ இன்று அதே வசனங்களைப் பார்க்கும்போது நான் பரிசுத்த கற்பனை செய்துகொண்டிருந்தது கிறிஸ்துவின் சரீரம் அல்ல என்று நான் பார்க்கிறேன். ஒரேவோர் எடுத்துக்காட்டு எபேசியர் 4ஆம் அதிகாரம். எபேசியர் நிருபத்தின் முதல் மூன்று அதிகாரங்களில் பவுல் கிறிஸ்துவின் சரீரத்தைப்பற்றிய வெளிப்பாட்டைக் கொடுத்துவிடுகிறார். அதன்பின், 4ஆம் அதிகாரத்துக்கு வரும்போது அவர் என்ன சொல்லுகிறார்? “ஆதலால், கர்த்தர்நிமித்தம் கட்டுண்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தியென்னவெனில், நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து, மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய் அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்” (எபே. 4:1-3).
கிறிஸ்துவின் சரீரத்தைப்பற்றிய வெளிப்பாட்டைக் கொடுத்துவிட்டு அதன்பின் அவர் என்ன சொல்கிறார்? “மக்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றேவொன்றுதான். எல்லா இடங்களுக்கும் சென்று இந்த வெளிப்பாட்டைப் பறைசாற்றுங்கள். இந்த வெளிப்பாட்டைக்குறித்து ஒவ்வொரு நாளும் பேசிக்கொண்டேயிருங்கள். இந்த வெளிப்பாட்டைக்குறித்து மாநாடு நடத்துங்கள். இந்த வெளிப்பாட்டைக்குறித்து பயிற்சி நடத்துங்கள். இந்த வெளிப்பாட்டைக்குறித்து புத்தகங்களை வெளியிட்டுக்கொண்டிருங்கள். செய்திக்குப்பின் செய்தியாக பேசிக்கொண்டிருங்கள்,” என்று சொன்னாரா? இல்லை. “நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்துகொள்ளுங்கள்,” என்று சொன்னார். பேசுகிற, எழுதுகிற செய்திகளோ அல்லது நடத்துகிற மாநாடுகளோ, பயிற்சிகளோ, கூட்டங்களோ அல்ல காரியம். கிறிஸ்துவின் சரீரத்தைப்பற்றிய தரிசனத்தை நாம் பார்த்திருந்தால் அது நம் அனுதின நடையைப் பாதிக்க வேண்டும். தேவனுக்கும் நமக்கும் இடையேயுள்ள உறவை அது பாதிக்கும். நமக்கும் ஏனைய பரிசுத்தவான்களுக்கும் இடையேயுள்ள உறவையும் அது பாதிக்கும். பாதிக்கும் என்று சொல்லும்போது நான் எதிர்மறையாகச் சொல்லவில்லை. அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். தேவனுக்கும் எனக்கும் இடையேயுள்ள உறவில், எனக்கும் மற்ற பரிசுத்தவான்களுக்கும் இடையேயுள்ள உறவில் ஒரு தாக்கம் இருக்கும். எபேசியர் 4-6ஆம் அதிகாரங்களில் பவுல் அதைப்பற்றித்தான் பேசுகிறார். கிறிஸ்துவின் சரீரத்தைப்பற்றிய வெளிப்பாட்டை அல்லது தரிசனத்தை நாம் உண்மையிலேயே பார்த்திருந்தால், இந்த காரியங்களைக்குறித்து நாம் அதிகமாக யோசிக்க வேண்டும்.
வெளிப்பாடு என்றால் என்ன? தரிசனம் என்றால் என்ன? “என்னிடம் வெளிப்பாடு இருக்கிறது, என்னிடம் தரிசனம் இருக்கிறது,” என்று திரும்பத் திரும்பச் சொல்வதால், நம்மிடம் தரிசனமோ அல்லது வெளிப்பாடோ இருக்கிறது என்ற பொருள் அல்ல. எப்படி ஒரு பொய்யை உண்மையாக்குவது? திரும்பத் திரும்பச் சொன்னால் பொய் உண்மையாகிவிடும். எப்படி ஒரு பாதிப் பொய்யை உண்மையாக்குவது? “பாதி உண்மை ஒரு பொய்” என்று வாட்ச்மேன் நீ கூறினார். “அப்படியானால் நீங்கள் மட்டும்தான் முழு உண்மையைப் பேசுகிறீர்களா? மற்றவர்களெல்லாம் அரை உண்மையைத்தான் பேசுகிறார்கள் என்று கூறுகிறீர்களா?” என்று கேட்க வேண்டாம். இது பாதி சத்தியமா அல்லது முழு சத்தியமா என்பதைப் பார்ப்பதற்கு ஒரேவொரு பரீட்சையை மட்டும் நான் உங்களுக்குத் தருகிறேன். அதே 4ஆம் அதிகாரத்தில் அவர் மேலும் கூறுகிறார். “மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய் அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்.” இதுதான் பரீட்சை.
உண்மையிலேயே சபை வாழ்க்கை வாழ்வதென்றால் அங்கு என்ன இருக்க வேண்டும்? மற்ற பரிசுத்தவான்களோடு சேர்ந்து நாம் ஒரே செய்தியைப் படிப்பதும், ஒரே கூட்டத்தில் கூடி வருவதும், ஒரே மாநாட்டிலும், ஒரே பயிற்சியிலும் கலந்துகொள்வதல்ல சபை வாழ்க்கை. தாழ்மை, சாந்தம், நீடியபொறுமை, அன்பினால் ஒருவரையொருவர் தாங்குவது–இதுதான் சபை வாழ்க்கை என்று பவுல் இங்கு குறிப்பிடுகிறார். தாங்குவது என்றால் ஒருவரையொருவர் சகிப்பது என்றுகூடச் சொல்லலாம். பின்பு அவர் நிறையக் காரியங்களைக் கூறுகிறார். நாம் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டிருக்கிறோம். நாம் ஒரே சரீரமாக இருக்கிறோம். நாம் ஒரே ஆவியையுடையவர்களாக இருக்கிறோம். ஒரே கர்த்தரையுடையவர்களாக இருக்கிறோம். ஒரே விசுவாசத்தைக் கொண்டிருக்கிறோம். ஒரே ஞானஸ்நானத்தைப் பெற்றிருக்கிறோம். ஒரே தேவனையும் பிதாவையும் உடையவர்களாயிருக்கிறோம். இவைகளையெல்லாம் நாம் ஏற்கெனவே பெற்றிருக்கிறோம். இவைகளையெல்லாம் நாம் உற்பத்திசெய்யவேண்டிய தேவையில்லை. ஒரே சரீரம் என்பது நாம் தேவனிடமிருந்து பெற்றிருக்கிற ஒரு கொடை, ஈவு, பரிசு. இது நாம் உற்பத்திசெய்து தேவனுக்குக் கொடுக்கிற ஒன்றல்ல. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை நாம் இரட்சகராகப் பெற்றுக்கொண்டபோது நாம் அவரை ஜீவனாகப் பெற்றோம். நாம் அவரை ஜீவனாகப் பெற்று வாழ்வதின் விளைவாக அவருடைய பல நற்பண்புகள், குணாம்சங்கள், நம்மிடம் காணப்படலாம். ஆனால், இது ஏதோ நாம் உற்பத்திசெய்து தேவனை சந்தோஷப்படுத்த நாம் அவருக்குக் கொடுக்கிற ஒரு காரியம் என்று பெருமையாக நினைக்கக்கூடாது. சிலர் இயேசுகிறிஸ்துவைச் சிறிதளவு வாழக்கூடும். சிலர் இயேசுகிறிஸ்துவைப் பெரிதாக வாழக்கூடும். அவர்கள் சிறிதாக வாழ்ந்தாலும் சரி, பெரிதாக வாழ்ந்தாலும் சரி, அவர்கள் தேவனுடைய பிள்ளைகள்தான், விசுவாசிகள்தான். சிலர் கிறிஸ்துவுக்குள் குழந்தைகளாக இருக்கலாம். சிலர் கிறிஸ்துவுக்குள் வாலிபர்களாக இருக்கலாம். சிலர் கிறிஸ்துவுக்குள் பிதாக்களாக இருக்கலாம். ஆனால், எல்லாரும் தேவனுடைய பிள்ளைகள்தான்.
அதுபோல, கிறிஸ்துவின் சரீரம் என்ற உண்மையைப் பார்த்த சிலர் அந்த உண்மைக்குத் தக்கபடி வாழலாம். சிலர் அந்த உண்மைக்குத் தக்கபடி சிறிதளவு வாழலாம். சிலர் அந்த உண்மைக்குத் தக்கபடி பெரிதாக வாழலாம். ஆனால், எல்லாரும் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அவயவங்கள். ‘சிலர் மட்டும்தான் அவயவங்கள். வேறுசிலர் அவயங்கள் இல்லை’ என்று சொல்லமுடியாது. எந்தக் குழுவாவது, “நாங்கள் கிறிஸ்துவின் சரீரம்” என்று சொல்லும்போது தங்களோடு கூடிவருகிறவர்களை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு சொல்வார்களானால் “அந்தோ பரிதாபம்! அவர்களுக்கு ஐயோ!” என்றுகூடச் சொல்லலாம். இயேசு கிறிஸ்துவை இரட்சகராக பெற்றுக்கொண்ட தேவனுடைய பிள்ளைகள் எல்லாராலும் ஆனதுதான் கிறிஸ்துவின் சரீரம். அதற்கு அவர் கொடுக்கிற காரணம் இதுதான். நமக்கு ஒரே சரீரமும் ஒரே ஆவியும் உண்டு; ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும், ஒரே தேவனும் பிதாவும் உண்டு என்று பவுல் ஆறு காரணங்களைக் கூறுகிறார். அவர் ஆறு ஒருமைகளைக் குறிப்பிடுகிறார்.
பின்பு, அதே அதிகாரம் 15ஆம் வசனத்தில் அவர் இவ்வாறு கூறுகிறார். “அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்.” நாம் கிறிஸ்துவின் சரீரத்தில் இருக்கிறோம், கிறிஸ்துவின் சரீரத்தின் உண்மையில் வாழ்கிறோம் என்றால் முதலாவது தலைக்கும் அவயவங்களுக்கும் இடையேயுள்ள உறவு நேர்த்தியாக இருக்க வேண்டும். முதலாவது நாம் கிறிஸ்து–உணர்வுள்ளவர்களாக இருக்க வேண்டும். ‘சரீர–உணர்வுள்ளவர்களாக’ இருக்க வேண்டும் என்பதைக்குறித்து நான் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். சரீர-உணர்வுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதைப்பற்றி நம்மில் பலர்கூட பல தடவை கேள்விப்பட்டிருப்போம். கிறிஸ்து–உணர்வுள்ளவர்களாக, தலை–உணர்வுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடச் செய்யும் அளவுக்கு சரீர–உணர்வுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தமுடியும்.
முதலாவது, நாம் கிறிஸ்துவுக்குள் வளர்வதைப்பற்றிக் கேள்விப்படுகிறோம். வளர்வது என்றால் என்ன பொருள்? தலைக்குள் வளர்வது என்றால் என்ன பொருள்? ஒரு குழந்தையை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்வோம். பிறந்த குழந்தைக்கு எல்லா அவயவங்களும் இருக்கும். ஆனால், அது தலைக்குள் வளர்ந்திருக்காது. அப்படியானால் என்ன அர்த்தம்? அதன் கைகள், கால்கள் முழுவதும் தலைக்குக் கட்டுப்பட்டிருக்காது. அந்தக் குழந்தையிடம் ஒரு பொருளைக் கொடுத்தால் அது தன் கைகளை வைத்து அந்தப் பொருளை ஒழுங்காகப் பிடிக்க முடியாது. ஏனென்றால், அந்தக் கை தலையின் கட்டுப்பாட்டுக்குள் இசைந்து இயங்கும் அளவுக்குத் தலைக்குள் வளரவில்லை. கால்கள் தலைக்குள் வளரும்போது கால்கள் தலையோடு சேர்ந்து வேலை செய்யும். அதுபோல, அந்த குழந்தைக்குச் சாப்பாடு கொடுத்தால் சாப்பாடு நேரே வாய்க்குள் போகாது. எங்கெல்லாமோ போகும். வாயைச் சுற்றியுள்ள எல்லா இடங்களுக்கும் போகும். அதற்குள் ஜீவன் இருக்கிறது. ஆனால் வளர்ச்சி இல்லாததால், அவயவங்களால் தலையோடு சேர்ந்து இசைவாக வேலைசெய்ய முடியவில்லை. அதுபோல, நாம் வளராதபோது, நாம் தலையாகிய கிறிஸ்துவோடு சேர்ந்து வாழ்வதும், வேலை செய்வதும் ஒரு குழந்தை சாப்பிடும்போது எப்படியிருக்குமோ அப்படி அலங்கோலமாக இருக்கும். நம் கிறிஸ்தவ வாழ்க்கையும், கிறிஸ்தவ வேலையும் இப்படி அலங்கோலமாகத்தான் இருக்கும்.
முதலாவது, நாம் கிறிஸ்துவின் சரீரத்தில் வாழ்கிறோம் என்றால், தலைக்குள் வளர்வதாகும். தலைக்குள் வளர்வதென்றால் என்ன பொருள்? நாம் கிறிஸ்து–உணர்வுள்ளவர்களாக இருக்க வேண்டும். நாம் ஒரு சூழ்நிலையில் வாழும்போது நாம் கிறிஸ்து–உணர்வுள்ளவர்களாக இருக்க வேண்டும். தலையைப்பற்றிய உணர்வுள்ளவர்களாக இருக்க வேண்டும். கிறிஸ்துவைப்பற்றிய உணர்வில்லாமலே, தலையைப்பற்றிய உணர்வில்லாமலே, நாம் வாழவும் முடியும், சேவிக்கவும் முடியும்.
இரண்டாவது, அதே அதிகாரத்தின் 16ஆவது வசனம்: அவராலே சரீரம் முழுதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய்க்கூட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும் தன்தன் அளவுக்குத் தக்கதாய்க் கிரியைசெய்கிறபடியே, அது அன்பினால் தன்னைத்தானே கட்டியெழுப்புவதற்கேதுவாகச் சரீர வளர்ச்சியை உண்டாக்குகிறது. கிறிஸ்துவின் சரீரத்தில் நாம் வாழ்கிறோம் என்றால் அதற்கு இன்னோர் அம்சமும் இருக்கிறது. ஒவ்வோர் உறுப்பும் தன்தன் அளவுக்குத்தக்கதாய் செயல்படுகிறபடியே அது வளர்ந்து அன்பினாலே கட்டியெழுப்புகிறது. ஒரு பக்கம், நாம் தலையைப்பற்றிய உணர்வுள்ளவர்களாக இருக்கிறோம். இன்னொரு பக்கம், நாம் சரீரத்தைப்பற்றிய உணர்வுள்ளவர்களாக இருக்கிறோம். மற்ற உறுப்புகளைக்குறித்து, மற்ற அவயவங்களைக்குறித்து, நாம் உணர்வுள்ளவர்களாக இருக்க வேண்டும். நான் ஓர் உறுப்பு என்றால் என் அளவுக்குத்தக்கபடி நான் செயல்படும்போது மற்றோர் உறுப்பு, அவயவம், கிறிஸ்துவில் வளர்வதற்கு நான் உதவியாயிருக்கிறேன். நான் ஓர் உறுப்பு. எனக்கு ஓர் அளவு இருக்கிறது. என் அளவுக்குத்தக்கபடி நான் செயல்படுவதினாலே மற்ற உறுப்புக்கள் தலைக்குள் வளர்வதற்கு நான் உதவியாயிருக்கிறேன்.
இன்னும் சில உறுப்புக்களைக் கணுக்கள் என்று சொல்லலாம். “சகல கணுக்களினாலும் இசைவாய்க் கூட்டி இணைக்கப்பட்டு” என்று சொல்லப்பட்டிருக்கிறது. கணுக்களும் உறுப்புக்கள்தான். கணுக்கள் ஒரு நல்ல வேலையைச் செய்யும். அவை மற்ற உறுப்புக்கள் கிறிஸ்துவோடு இணைக்கப்படுவதற்கு உதவிசெய்கின்றன. மற்ற உறுப்புக்கள் ஒன்றோடொன்று இணைக்கப்படுவதற்கும் உதவிசெய்கின்றன. இரண்டு உறுப்புக்களை இணைத்துவிட்டு அந்தக் கணுக்கள் மறைந்துவிட வேண்டும். இரண்டு உறுப்புக்களை இணைக்கிற ஒரு கணு கடைசிவரை அந்த இரண்டு உறுப்புக்களுக்குமிடையே இருக்க முயற்சிசெய்யக்கூடாது. அந்தக் கணு தன்னை இன்றியமையாத கணு என்று கருதக்கூடாது. அப்படி மாற்றக்கூடிய வாய்ப்பு அதிகம் உண்டு. “இந்த உறுப்பும் மற்றோர் உறுப்பும் இணைவதற்கும் நான் இல்லாமல் முடியாது” என்ற அளவுக்கு, நிலைமைக்கு, நான் வந்துவிட்டால் நான் ஒரு கணுவல்ல. நாம் நம் சகோதர சகோதரிகளை ஒருவரோடொருவர் இணைப்பதற்கு நாம் பழக வேண்டும். (இணைப்பதென்றால் மாம்சப்பிரகாரமான அல்லது இயற்கையான தளத்தின்படி ரோட்டரி சங்கம், அரிமா சங்கம் கூடிவருவதைப்போல் கூடிவருவதைச் சொல்லவில்லை). அவர்கள் இணைக்கப்படுவதால் உண்மையிலேயே கிறிஸ்து அவர்களுக்குள் வளர்கிறார். பல சூழ்நிலைகளில் அவர்கள் கிறிஸ்துவை வாழ்வதற்குப் பழகிக்கொள்கிறார்கள். ஒருவருக்கொருவர் கிறிஸ்துவைப் பரிமாறுவதற்குப் பழகிக்கொள்ளுகிறார்கள்.
அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள், மேய்ப்பர்கள் போதகர்கள் இவர்களுடைய வேலை என்ன? “பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது கட்டியெழுப்பப்படுவதற்காகவும்” (வ. 12) கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். எல்லாமே உறுப்புகள்தான். சில உறுப்புகள் கொடைபெற்ற உறுப்புகளாக இருக்கின்றன.
“வெளியரங்கமாகுகிறதெல்லாம் வெளிச்சமாயிருக்கிறது” என்று எபேசியர் கூறுகிறது. எனவே ஒன்றைச் சொல்லித்தான் ஆக வேண்டும். எல்லா உறுப்புகளையும் சீர்பொருத்துவதுதான் கணுக்களுடைய வேலை. மற்றவர்களோடு எப்படி உறவுகொண்டு அவர்களைச் சேவிக்க வேண்டும் என்று நமக்குத் தெரியாது.
குழந்தையாக இருந்தபோது பள்ளிக்கூடத்தில் ஒரு விளையாட்டு விளையாடுவதை நான் பார்த்திருக்கிறேன். இரண்டு குழந்தைகளுக்குக் கண்ணைக் கட்டிவிட்டு, இரண்டுபேருடைய கைகளிலும் ஒரு கோப்பையில் கூழும் ஒரு கரண்டியும் கொடுத்துவிடுவார்கள். இருவரும் மாறிமாறி ஒருவருக்கொருவர் அந்தக் கூழை ஊட்ட வேண்டும். போட்டியின் கடைசியில் பார்த்தால் இருவருடைய முகமெல்லாம் கூழாயிருக்கும். கோப்பையும் காலியாக இருக்கும். வாயில் கூழை ஊற்றுவதற்குப்பதிலாக வாயைச்சுற்றி கூழை ஊற்றியிருப்பார்கள். நாமும் சில சமயங்களில் இந்தக் குழந்தைகளைப்போல, எப்படியாவது ஊழியம் செய்ய வேண்டும் என்பதற்காக கொண்டுபோகிற கூழையெல்லாம் எப்படியோ ஊற்றிவிட்டு வந்துவிடுவோம். வாய், மூக்கு, கண், காது என்று எல்லா இடங்களிலும் ஊற்றிவிடுவோம்.
கொடை பெற்ற உறுப்புகளுடைய வேலை என்ன? நாம் மற்றவர்களை எப்படிச் சேவிக்க வேண்டும் என்று அவர்கள் கற்றுத்தருவார்கள். நாமும் கற்றுக்கொள்கிறோம். அவர்கள் உதவிசெய்கிறார்கள். எப்படிப் பேச வேண்டும், எப்படிப் பேசக்கூடாது என்று கற்றுத்தருவார்கள். ஒருவேளை என் பிள்ளைகளை எப்படி வளர்க்கவேண்டும் என்று எனக்குத் தெரியாமல் போகலாம். ஒரு சகோதரனுக்கு அதில் அனுபவம் இருக்கிறது. அப்போது அந்த கொடைபெற்ற உறுப்பு என் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்குக் கற்றுத்தரலாம். “சகோதரனே, இந்தச் சூழ்நிலையில் குழந்தைகளை இப்படி நடத்தக்கூடாது,” என்று அவர் கற்றுத்தரலாம். உடனே, அவர் என்ன உறுப்பு என்று நாம் ஆராய்ச்சி செய்யவேண்டிய தேவையில்லை. அவர் என்ன பட்டத்துடன் வருகிறார் என்று அலசிப்பார்க்கத் தேவையில்லை. இவர் அப்போஸ்தலரா, தீர்க்கதரிசியா, சுவிசேஷகரா என்று ஆராய்ச்சி செய்யத் தேவையில்லை. அப்படியில்லை. நாமெல்லாரும் சில சமயங்களில் சிறிய போதகராக, மேய்ப்பராக இருக்கிறோம். சில சமயங்களில் சிறிய தீர்க்கதரிசியாக இருக்கிறோம். சில சமயங்களில் சிறிய சுவிசேஷகராக இருக்கிறோம். சில சமயங்களில் சிறிய அப்போஸ்தலனாகக்கூட இருக்கிறோம்.
ஒரு சகோதரன் வெளிநாட்டுக்குப் போயிருந்தார். அங்கு அவர் ஒரு சபைக்குப் போயிருந்தாராம். பெயர் Full Gospel Church. அங்கு பாஸ்டர் பிரசங்கம் பண்ணினாராம். எப்படித் தெரியுமா? “ஒரு நாளைக்கு ஒரு சிகரெட்டுக்கு அதிகமாகக் குடிக்காதீர்கள். நாம் இச்சையடக்கம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.” இப்படிச் சொல்வதால் நான் குறை கூறுவதாக நினைக்க வேண்டாம். நாம் இதை வெளியரங்கமாக்கத்தான் வேண்டும். இப்படிப்பட்ட காரியங்களைப் பார்க்கும்போது அவருடைய பாரம் அதிகரிக்கும். அத்தேனே பட்டணத்தை பவுல் சுற்றிப்பார்த்தபோது அவருடைய ஆவி கிளர்ந்தெழுந்தது. அதுபோல, இந்தச் சகோதரன் சுற்றிச்சுற்றிப் பார்ப்பார். Full Gospel Church, Fuller Gospel Church, Fullest Gospel Church, Fuller than the fullest Church இப்படி எல்லாவற்றையும் பார்த்தபிறகு, “நான் அப்போஸ்தலனா, தீர்க்கதரிசியா, சுவிசேஷகனா, மேய்ப்பனா, போதகனா என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் சுவிசேஷத்தை அறிவிக்கப்போகிறேன்,” என்று தீர்மானித்து விடுவார். “அது சுவிசேஷமா என்றுகூட எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்த இயேசு கிறிஸ்துவைச் சொல்லப்போகிறேன்” என்று வாயைத் திறப்பார்.
இதுதான் கொடைபெற்றவர்களின் வேலை. கிறிஸ்துவாகிய தலையோடு இணைப்பது எப்படி? “சகோதரனே, நான் யாரைக் கல்யாணம் பண்ண வேண்டும்?” என்று ஓர் அவயவம் கேட்டால், நம் பதில், “சகோதரனே, நீங்கள் தலையோடு தொடர்புகொள்ளுங்கள். எனக்கு அந்த ஞானம் இல்லை,” என்பதாகத்தான் இருக்க வேண்டும். தலையோடு எப்படி இணைப்பது, தலைக்கு எப்படி பணிந்தடங்குவது, தலைக்கு எப்படி அடங்கிவாழ்வது? எந்த அளவுக்கு ஒரு கூட்டம் சகோதர சகோதரிகள் தலையாகிய கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டு, கிறிஸ்துவின் தலைத்துவத்துக்குக் கீழ்ப்படிந்து, அடிபணிந்து வாழ்கிறார்களோ அந்த அளவுக்குத்தான் அங்கு கிறிஸ்துவினுடைய சரீரம் நிஜத்தில் இருக்கிறது. எந்த அளவுக்குப் பரிசுத்தவான்கள் ஒருவரோடொருவர் இணைந்து கிறிஸ்துவைப் பரிமாறுகிறார்களோ, கிறிஸ்து பெருகுவதற்கு ஒருவருக்கொருவர் உதவிசெய்கிறார்களோ, கிருபையாயிருக்கிறார்களோ அந்த அளவுக்கு அங்கு கிறிஸ்துவின் சரீரம் நிஜத்தில் இருக்கிறது. தொடர்ந்து எபேசியர் 4, 5, 6ஆம் அதிகாரங்களை வாசித்துப்பார்த்தால் இது நிச்சயமாகத் தெரியவரும்.
ஆனால், இன்றைக்குக் கொடைகள் என்ன செய்யும் என்று எனக்குத் தெரியும். இது மனிதனுடைய மாம்சத்திலும் இருக்கிறது, கொடைபெற்றவர்களின் மாம்சத்திலும் இருக்கிறது. மனிதனுடைய மாம்சத்தைப்பற்றி 1 கொரிந்தியர் 1, 2, 3, 4ஆம் அதிகாரங்களில் வாசிப்பதுபோல, “நான் பவுலைச் சேர்ந்தவன், நான் கேபாவைச் சேர்ந்தவன், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவன்,” என்றும், இன்னும் சில ஆவிக்குரியவர்கள், “நாங்கள் இவர்கள் யாரையும் சேர்ந்தவர்களல்ல. நாங்கள் கிறிஸ்துவைச் சேர்ந்தவர்கள்,” என்றும் கூறுகிறார்கள். இவர்கள் “நாங்கள்enominationனும் அல்ல, inter denominationனும் அல்ல, undernominationனும் அல்ல,” என்று சொல்லுவார்கள்.
ஒரு சகோதரன் எனக்கு உதவி செய்துவிட்டால் உடனே அவர்மேல் எனக்குத் தனி அபிமானம் வந்துவிடும். அப்படி அபிமானம் வருவது எதற்கு ஆரம்பமென்றால் மற்ற சகோதர சகோதரிகளின்மேலுள்ள அபிமானத்தைப்பார்க்கிலும் இந்த சகோதரன்மேலுள்ள அபிமானம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். இன்னும் கொஞ்சம் அதிகமாகும். இந்த அகில உலகத்திலும், எந்த யுகத்திலும் இந்த சகோதரன் அளவுக்குக் கொடை பெற்றவர்கள் வேறு யாரும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அந்த அபிமானம் போகும்.
பேதுரு சொன்னதுபோல, இயேசுவுக்கு ஒரு கூடாரம் போடுவோம். அப்படியே மோசேக்களுக்கும் எலியாக்களுக்கும் கூடாரம் போடுவோம். இயேசுவுக்கு கூடாரம் வேண்டாம் என்று யாரும் சொல்வதில்லை. இது மனிதனுடைய மாம்சத்தில் இருக்கிறது. இது மதரீதியான மாம்சம். மோசே நியாயப்பிரமாணத்தின் பிரதிநிதியாக இருக்கிறார். எலியா தீர்க்கதரிசிகளின் பிரதிநிதியாக இருக்கிறார். சபை சரித்திரம் முழுவதும் இப்படி இயேசுவுக்கு ஒரு கூடாரத்தையும் பல உபகூடாரங்களையும் நாம் பார்த்துக்கொண்டேதான் இருப்போம். இதில் நாம் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். இன்னொரு பக்கம் அந்த கொடை பெற்றவர்களும் தாங்கள் கிறிஸ்துவைச் சேவிப்பதாகச் சொல்வார்கள். அங்கு, கிறிஸ்துவுக்கு ஒரு கூடாரம் இருக்கும். ஆனால், கூடவே இன்னும் இரண்டு கூடாரங்களும் இருக்கும். துரதிருஷ்டவசமாக இன்று மோசேக்கும், எலியாவுக்கும் கூடாரங்கள் இருப்பது மட்டும் அல்ல. அவர்களுடைய கூடாரங்கள் இயேசுகிறிஸ்துவின் கூடாரத்தைவிட பெரியதாகவும் இருக்கின்றன. உதவி வேண்டும் என்பதற்காக இயேசுவின் கூடாரத்தைத்தான் காட்டுவார்கள். ஆனால் பின்புலத்தில் மோசே, எலியா ஆகியவர்களின் கூடாரம் எழும்பிக்கொண்டிருக்கும். ஒருநாள் தேவன், “இவர் என் நேசகுமாரன். இவர்மேல் பிரியமாயிருக்கிறேன். இவருக்குச் செவிகொடுங்கள்,” என்று சொல்வார். அப்போது அவர்கள் கண்விழித்துப் பார்ப்பார்கள். அப்போது அவர்கள் இயேசுவைத்தவிர வேறு யாரையும் பார்க்கமாட்டார்கள். அவர்களுடைய மோசே, அவர்களுடைய எலியா, அவர்களுக்கு அவர்கள் உண்டாக்கியிருந்த கூடாரங்கள் ஆகியவைகளெல்லாம் மறைந்துபோகும். நாங்கள் மோசேக்கு கூடாரம் கட்டவில்லை, நாங்கள் எலியாவுக்கு கூடாரம் கட்டவில்லை, நாங்கள் இயேசுவுக்கு மட்டுமே கூடாரம் கட்டினோம்; கிறிஸ்து வாழ்வதற்காக, கிறிஸ்து வெளியாவதற்காக, கிறிஸ்துவைப் பெரிதாக்குவதற்காக,” என்று சொன்னதெல்லாம் அப்போது வெளியரங்கமாகும்.
இதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். சபை என்பது ஒரு கட்டிடம் இல்லை அல்லது சபை என்பது எந்தவொரு கொடைபெற்ற உறுப்புகளுக்கும் கூடாரம் கட்டுவதல்ல; அவர்கள் எப்படிப்பட்ட கொடை பெற்றவர்களாக இருந்தாலும் சரி. இது நாம் நம் தலையாகிய கிறிஸ்துவோடு இணைந்து, அவருடைய தலைத்துவத்துக்கு அடிபணிந்து வாழ்கிற நம் அனுதின வாழ்க்கை. இரண்டாவது, இது மற்ற உறுப்புகளோடு இணைந்து அவர்கள் கிறிஸ்துவில் வளர்வதற்கு, கிறிஸ்துவை வாழ்வதற்கு நாம் அவர்களுக்கு பரிமாறுகிற வாழ்க்கை. இதுவே சபை வாழ்க்கையாகும்.