Transcribed from a message spoken in August 2014 in Chennai
By Milton Rajendram
நான் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிற காரியம் மிகவும் முக்கியமானது. மிக அழகான செய்தி கொடுப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை. நாம் இந்தப் பூமியைவிட்டுக் கடந்துபோகும்போது நம் எத்தனை செய்திகள் நிலைத்துநிற்கிற மதிப்பை பரிசுத்தவான்களுடைய இருதயத்திலே விட்டிருக்கும் என்று நம்மால் சொல்ல முடியாது. எது நம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிலே மகிமையாக மாற்றப்படுகிறதோ அது மட்டுமே மதிப்புள்ள செய்தி. எது பரிசுத்தவான்களுடைய வாழ்க்கையிலே கிறிஸ்துவாக மாற்றப்படவில்லையோ அந்த செய்திக்கு எந்தப் பொருளும், எந்த மதிப்பும் இல்லை.
கிறிஸ்துவின் சரீரம் என்பது புதிய ஏற்பாட்டிலே தேவனுடைய மிக மையமான ஓர் எண்ணம் என்பதால் மட்டும் நான் இதைப் பகிர்ந்துகொள்ளவில்லை. மாறாக, இது நம் வாழ்க்கையை மாற்றும். இன்றைக்கு நம் வாழ்க்கையிலே பல பாடுகளும், துக்கங்களும், கண்ணீரும், வேதனையும், நெருக்கங்களும், இடுக்கண்களும் இருக்கலாம். அவைகளோடு கிறிஸ்துவின் சரீரம் தொடர்புடையதா என்றால் அவைகளோடு கிறிஸ்துவின் சரீரம் மிக நெருங்கின தொடர்புடையது. சில சமயங்களில் கிறிஸ்துவின் சரீரத்தைப்பற்றி ஒரு செய்தியோ அல்லது பன்னிரெண்டு செய்திகளோ அல்லது ஒரு புத்தகமோ வாசித்தபிறகுங்கூட, “ஆ! கிறிஸ்துவின் சரீரத்தைப்பற்றி புதிய ஏற்பாடு என்ன சொல்கிறது என்று எனக்கு ஒரு தெளிவு இருக்கிறது,” என்று சொல்லலாம். ஆனால், அது என் வாழ்க்கையோடு எப்படி தொடர்புடையது என்று நம்மால் சொல்ல முடியவில்லை என்றால் நாம் கேட்ட அந்த ஒரு செய்திக்கோ அல்லது பன்னிரெண்டு செய்திகளுக்கோ அல்லது ஒரு புத்தகத்திற்கோ எந்தப் பயனும் இல்லை. எந்தப் பொருளும் இல்லை; எந்த மதிப்பும் இல்லை. எனவே, நாம் கிறிஸ்துவின் சரீரம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யும்போது அது நம் வாழ்க்கையோடு என்ன தொடர்புடையது என்பதை நாம் புரிந்துகொள்வதற்கு தேவனிடத்தில் ஜெபிக்க வேண்டும். கிறிஸ்துவின் சரீரத்தை நாம் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து ‘இதுதான் கிறிஸ்துவின் சரீரம்’ என்று வரையறுத்துக் கூறிவிட முடியாது.
பழைய ஏற்பாட்டில் எசேக்கியேல் புத்தகத்தின் கடைசி பத்து அதிகாரங்களில் தேவனுடைய ஆலயத்தைப்பற்றிய ஒரு சித்திரம், வர்ணனை, கொடுக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக அந்த வர்ணனையைப் படித்து முடிப்பதற்குள் நாம் களைத்துப் போய்விடுவாம். “அந்த பத்து அதிகாரங்களில் கொடுக்கப்பட்டுள்ள தேவனுடைய ஆலயத்தின் எல்லா விவரங்களையும்கொண்டு நான் ஒரு வரைபடத்தை வரைந்துவிடப் போகிறேன். ஒரு elevation, topview, perspective view, isometric view, இவைகளையெல்லாம் நாம் வரைந்துவிடப் போகிறேன்,” என்றால் உங்கள் முயற்சி தோல்வியில் முடிவடையும் அல்லது நீங்கள் வெற்றி பெறுவீர்கள். ஆனால், அந்த வெற்றியின் முடிவிலே உங்களுக்கு மகிழ்ச்சி இருக்காது; ஒரு வறட்சியை நீங்கள் அனுபவிப்பீர்கள். முயற்சிசெய்து பாருங்கள்.
அதுபோல, கிறிஸ்துவின் சரீரத்தை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து “இதுதான் கிறிஸ்துவின் சரீரம்” என்று நம்மால் கூற முடியாது. நம் வாழ்க்கைச் சூழ்நிலைக்கும், தேவன் இரங்கி பரிசுத்த ஆவியானவரால் வெளிப்படுத்துவதற்கும் தக்கவாறு மட்டுமே நாம் கிறிஸ்துவின் சரீரத்தை உணர்ந்துகொள்ளவும், அறிந்துகொள்ளவும் முடியும். எனவே, கிறிஸ்துவின் சரீரத்தைப்பற்றி பரிசுத்த ஆவியானவருடைய வெளிப்பாட்டிற்கும், நம் வாழ்க்கைச் சூழ்நிலைக்கும் தக்கவாறு மட்டுமே நாம் புரிந்துகொள்ள முடியுமேதவிர உட்கார்ந்து அக்குவேறு ஆணிவேராகப் பிரித்துப் பார்ப்பதால் எந்தப் பயனும் இல்லை. (நான் சொல்கிற வார்த்தை பகுத்து, தொகுத்து, வகுத்து–நான் இதை எதுகை மோனைக்காகச் சொல்லவில்லை. உண்மையிலேயே இவை பொருள் மிகுந்த வார்த்தைகள்).
இன்றைக்கு நான் சொல்ல விரும்புகிற காரியத்தின் ஒரு முன்னுரையை மட்டும் நான் சொல்லிவிடுகிறேன். நான் சொல்வது முன்னுரைதான். முழுவதையும் சொல்வதற்கு நான் இன்னொரு நாள் எடுத்துக்கொள்கிறேன்.
இந்தப் பூமியில் இரண்டு பேரை உறவுப்படுத்துவது என்பது மிகவும் கடினமான காரியம்; முடியாத காரியம். எல்லா மனிதர்களுக்கும் இடையிலே பகை என்கிற ஒரு நடுச்சுவர் இருக்கிறது. ஒருவரையொருவர் தங்கள் இருதயத்தில் நேசிக்கிற ஒரு கணவனுக்கும், மனைவிக்கும் இடையில்கூட பகையாகிய நடுச்சுவர் உண்டு. அவர்கள் 10 வருடம், 50 வருடம் வாழ்ந்தபிறகும் அவர்கள் நடுவிலே பகையாகிய நடுச்சுவர் இருக்கிறது. இது விழுந்துபோன மனிதனுடைய இயற்கை. “இல்லை, இல்லை, என் அன்பெல்லாம் அப்படிப்பட்டது இல்லை. இது தெய்வீக அன்பு,” என்றால் நாம் கண்மூடித்தனமாக இருக்கின்றோம் என்று பொருள். எல்லா மனிதர்களுக்குமிடையே, இயற்கையான மனிதர்கள் இரண்டு பேருக்கு இடையில், பகை என்கிற நடுச்சுவர் இருக்கிறது. பகை என்றால் சண்டைபோடுவது என்று நான் சொல்லவில்லை. ஓர் உறவு இசைவாகவும், பொருத்தமாகவும் இருப்பதற்கு எதிராக என்னவெல்லாம் இருக்கிறதோ அதற்குப் ‘பகை என்கிற நடுச்சுவர்’ என்று பொருள். இரண்டு பேருடைய குணங்கள், தன்மை, இயல்பு, பிறவிக்குணம், சாய்மானம், மனப்பாங்கு, சுவைகள் ஒன்றுபோல் இருப்பதில்லை. அவர்கள் 50 வருடங்கள் கணவன், மனைவியாக வாழ்ந்தாலும் இப்படிப்பட்ட பல காரியங்கள் ஒன்றுபோல் இருப்பதில்லை. அது அவர்களுக்கு நடுவில் பகையாகிய நடுச்சுவராக இருக்கிறது. இது இரண்டு மனிதர்களுக்கு மட்டும் இல்லை. பல மனிதர்களை ஒருவரோடொருவர் உறவுப்படுத்தும்போது பகையாகிய நடுச்சுவர்கள் இன்னும் அதிகமாக வந்துவிடுகின்றன. மூன்றுபேரை உறவுப்படுத்தும்போதும் அதிலே ஒரு சிக்கல் வரும். மூன்று நண்பர்கள் இருக்கும்போது, இந்த மூன்று பேரில் “நான்தான் இருவருக்கும் நெருக்கமாக இருக்க வேண்டும். இருவரும் இரகசியத்தை முதலில் என்னிடம்தான் சொல்ல வேண்டும்,” என்ற மனப்பாங்கு எழும். இயற்கையான மனிதர்களுக்குள் உறவுகள் என்பது அவ்வளவு எளிதானதல்ல. அது பகை.
தேவன் என்ன செய்கிறார்? ஆண்டவராகிய இயேசுறிஸ்துவினுடைய சிலுவையில், அவருடைய மாம்சத்தில், இந்தப் பகையாகிய எல்லா நடுச்சுவர்களையும் தகர்த்தார். “அவரே நம்முடைய சமாதானகாரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி, பகையைச் சிலுவையினாலே கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார்” (எபே. 2:14-16). பகை இருந்த இடத்திலே அவர் சமாதானமாக கிறிஸ்துவை வைத்துவிட்டார்.
பகை என்பது ஒருவரையொருவர், ஒருவரிடத்திலிருந்து ஒருவர் தள்ளுகிற ஒரு இயற்கையென்றால், சமாதானமானது ஒருவரையொருவர் சேர்க்கிறது. பகை என்பது ஒருவரிடத்திலிருந்து ஒருவரை பிரிக்கின்ற ஒரு இயற்கையென்றால், சமாதானம் என்பது ஒருவரிடத்தில் ஒருவரை சேர்க்கின்ற, இணைக்கின்ற, கட்டுகின்ற, பொருத்துகின்ற ஒன்று. அந்த கிரேக்க வார்த்தைக்கு இவ்வளவு அர்த்தங்கள் இருக்கின்றன.
நான் கிரேக்க பண்டிதனல்ல. எனக்குத் தெரிந்த ஒன்றேவொன்று Vine’s expositary dictionary of Greek words. ஆனால் அது போதும். சில வார்த்தைகள் புதிய ஏற்பாட்டிலே மிக முக்கியமானது. அதில் ஒன்று இணைக்கப்படுவது. இந்த உலகத்திலே மனிதன் வீழ்ந்தபோது சத்துரு, பகைவனாகிய சாத்தான், ஒருவரிடமிருந்து ஒருவரைப் பிரிக்கின்ற பகை என்கிற இயற்கையை மனிதர்களுக்குள் வைத்தான். ஆனால், அவனுடைய வேலைப்பாட்டை ஒழிக்கிற தம்முடைய சிலுவையிலே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து என்ன செய்தார்? அந்தப் பகை என்கிற இயற்கையை ஒழித்துவிட்டு அதனுடைய இடத்திலே சமாதானம் என்கிற இயற்கையை இரண்டு பேருக்கு நடுவில் மட்டுமல்ல, தேவனுடைய பிள்ளைகள் எல்லாருக்கும் இடையே இதை வைத்திருக்கிறார். தேவனுடைய பிள்ளைகளுக்கிடையே உள்ள பகையை கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சிலுவையிலே ஒழித்துவிட்டார். அதனுடைய இடத்திலே நம்மை ஒருவரோடொருவர் சேர்க்கிற சமாதானம் என்ற ஒன்றை வைத்திருக்கிறார். இந்த சமாதானம் கிறிஸ்துவே என அழகிற்காக நான் சொல்லவில்லை. He himself is our peace. அவரே சமாதான காரணராகி என்று எபேசியரில் எழுதியிருக்கிறது. ஆனால் ஆங்கில வேதாகமத்தில் அப்படி இல்லை. Christ is our peace. கிறிஸ்து நம்முடைய சமாதானமாக இருக்கிறார்.
புரிந்துகொள்வதற்காக வேதியலில் பயன்படுத்தப்படுகிற ‘இணைப்பு’ என்பதைப் பகிர்ந்துகொள்கிறேன். இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் ஒரு ஆக்ஸிஜன் அணு இருக்கிறது. ‘இணைப்பு.’ இணைப்பு அல்லது கட்டு என்றுகூடச் சொல்லலாம். தனியாக இருக்கின்ற இந்த மூன்று அணுக்களையும்-ஹைட்ரஜன் அணுக்கள் 2, ஆக்ஸிஜன் அணு 1-இந்த மூன்றையும் அவர் இணைத்து அல்லது கட்டி தண்ணீராக மாற்றிவிடுகிறார். இதில் ரொம்ப நல்ல ஒரு கோட்பாடு இருக்கிறது.
தேவன் உறவுபடுத்தும்போது, இணைக்கும்போது, கட்டும்போது அங்கு என்ன வருகிறது? தனித்தனியாக இருக்கும்போது இல்லாத ஒரு நன்மை, இல்லாத ஒரு ஆசீர்வாதம் அவர் இணைக்கும்போதும், சேர்க்கும்போதும் அங்கு வருகிறது. இதை நாம் மறந்துவிடக்கூடாது. ஏன் உறவுகள் அவசியமென்றால் தனியாகக் கிடைக்காத ஒரு நன்மையும், ஆசீர்வாதமும் தேவன் உறவுபடுத்தும்போது, இணைக்கும்போது, கட்டும்போது அங்கு இருக்கிறது.
இந்த உலகத்திலேயே இரண்டை சோ;த்து வைக்கிற காந்தங்களை எடுத்தால்-வடதுருவத்தையும், தென் துருவத்தையும் எடுத்துக்கொண்டால்- ஒன்றையொன்று ஈர்த்துக்கொள்ளும். அதேபோல positive charge, negative charge எடுத்தால் ஈர்த்துக்கொள்ளும் அல்லது சூரியன் நடுவில் இருக்கிறது. கோளங்கள் தன் தன் பாதையிலே சுற்றி வருகின்றன. சூரியனும், கோளங்களும் ஒன்றையொன்று ஈர்க்கின்றன. இப்படி இந்த உலகத்திலே ஒன்றோடொன்றிலிருந்து பிரிக்கிற சக்தி இருந்தாலும், ஈர்க்கிற சக்தியையும் தேவன் வைத்திருக்கிறார். இந்த உலகத்திலேயே மிகப் பிரமாண்டமான ஈர்க்கும் சக்தி என்ன தெரியுமா? கிறிஸ்து. அல்லேலூயா. சார் ஐசக் நியூட்டன் என்பவர் வெட்கப்பட வேண்டும். Greatest Law of Gravity is not two masses attract each other with the force directly proportional to their product of their masses and inversely proportional to the square of its radius.அதுவல்ல பெரிய Law of Gravity.
இந்த உலகத்திலேயே மிகப் பிரமாண்டமான ஈர்ப்பு சக்தி கிறிஸ்து. எபேசியர் 2ஆம் அதிகாரத்திலே Christ is our peace என்றால் Christ is the greatest Force of Gravity என்று பவுல் சொல்கிறார்; நாம் இரண்டு பேர் சேர்ந்திருக்க முடியுமா முடியாதா என்பது எதைச் சார்ந்திருக்கிறது? நமக்குள் இருக்கிற கிறிஸ்துவின் அளவைச் சார்ந்திருக்கிறது. மிகவும் எளிமையானது. நமக்குள் இருக்கிற கிறிஸ்துவின் அளவு பெரிதாக இருக்குமென்றால் நாம் சேர்ந்திருக்க முடியும். நாம் சேர்ந்திருக்க முடியவில்லை என்றால், பகை தலைதூக்குகிறது அல்லது பகையினுடைய பல முகங்கள், பல கோணங்கள், பல அம்சங்கள் தலைதூக்குகிறது என்றால் நமக்குள் இருக்கிற கிறிஸ்துவின் அளவு குறைவு என்று பொருள். இதை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சிலுவையிலே செய்து முடித்துவிட்டார். இது எபேசியர் 2ஆம் அதிகாரம்.
எபேசியர் 4ஆம் அதிகாரம் எதைப்பற்றி பேசுகிறதென்றால் இப்பொழுது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தேவனுடைய மக்கள் எல்லாரையும் ஒருவரோடொருவர் சேர்த்துவிட்டார், இணைத்துவிட்டார் அல்லது கட்டிவிட்டார். தேவனுடைய மக்களுக்கிடையே ஒரு சேர்ப்பு, இணைப்பு, ஒரு கட்டு இருக்கிறது. இது உண்மை. அதைத்தான் நாம் எபேசியர் 4ஆம் அதிகாரத்திலே நாம் வாசித்தோம். ஒருமை. இப்படி தேவனுடைய மக்களுக்கிடையே சேர்க்கப்பட்ட, இணைக்கப்பட்ட, கட்டப்பட்ட நான் இந்த வார்த்தைகளைத் திரும்பதிரும்பப் பயன்படுத்துகிறேன். சேர்க்கப்பட்ட, கட்டப்பட்ட, இணைக்கப்பட்ட இன்னொரு வார்த்தைகூட வைத்திருக்கிறேன். இவைகளெல்லாம் நமக்கு ஒரு சித்திரத்தைத் தரும். இதனுடைய விளைவுதான் தேவனுடைய குடும்பம் அல்லது கிறிஸ்துவின் சரீரம். இந்த ஒரு புரிந்துகொள்ளுதல் இல்லாமல் கிறிஸ்துவின் சரீரம் என்று பேசும்போது அல்லது கேட்கும்போது எந்தப் பொருளும் இல்லை. தேவனுடைய மக்களை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஒருவரோடொருவர் சேர்த்திருக்கிறார், இணைத்திருக்கிறார், கட்டியிருக்கிறார். இதற்குப் பெயர்தான் கிறிஸ்துவின் சரீரம். அவர்களை உறவுபடுத்தியிருக்கிறார். நாம் பயன்படுத்துகிற இன்னொரு வார்த்தை.
இதனுடைய விளைவு என்ன? ஒரு சின்ன எடுத்துக்காட்டு கொடுத்தேன். 2 ஹைட்ரஜன் அணுவையும் ஒரு ஆக்ஸிஜன் அணுவையும் சேர்த்தால் அதனுடைய விளைவு தண்ணீர். 2 ஹைட்ரஜன் அணு தனித்தனியாக இருப்பது பெரிய நன்மை அல்ல. ஒரு ஆக்ஸிஜன் அணு தனியாக இருப்பது பெரிய நன்மை அல்ல. ஆனால், அவைகள் உறவுபடுத்தப்பட்டு, சேர்க்கப்பட்டு, இணைக்கப்படும்போது அது பெரிய நன்மையாக மாறிவிடுகின்றது.
தேவனுடைய மக்களுக்கிடையே ஏன் உறவு வேண்டும்? தேவன் ஏன் உறவுபடுத்தியிருக்கிறாரென்பதற்கு எபேசியர் 3ஆம் அதிகாரத்தில் பதில் இருக்கிறது. “சகல பரிசுத்தவான்களோடுங்கூட கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து, அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும் அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று உங்களுக்காக வேண்டிக்கொள்கிறேன்” (எபே.3:18-19). எபேசியருக்கு எழுதின கடிதத்திலே உள்ள இந்த ஜெபத்தினுடைய வார்த்தைகளை நாம் இன்னொரு வகையிலும் புரிந்துகொள்ள முடியும். நீளம், அகலம், உயரம், ஆழம் கிறிஸ்துவின் அன்பிற்கு மட்டுமல்ல; அதை கிறிஸ்துவுக்கே பயன்படுத்தலாம். நாம் பெற்றிருக்கிற இந்த கிறிஸ்துவினுடைய அகலம், நீளம், உயரம், ஆழம் ஆகியவைகளை நாம் உணர்ந்துகொள்ள வேண்டுமென்றால் எல்லாப் பரிசுத்தவான்களோடு சேர்ந்துதான் உணர்ந்துகொள்ள முடியும். தேவனுடைய அன்பு அறிவுக்கொட்டாத அன்பு; ஆனால், இந்த அறிவுக்கெட்டாத அன்பை சகல பரிசுத்தவான்களோடுங்கூடச் சேர்ந்துதான் அறிந்துகொள்ள முடியும்.
“எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்” (எபே. 1:23). கிறிஸ்துவின் பரிபூரணத்தை, முழு நிறைவை, நாம் அனுபவிக்க வேண்டுமென்றால் நமக்கு உறவுகள் அவசியம் அல்லது கிறிஸ்துவின் பரிபூரணத்தையும், முழு நிறைவையும் நாம் அனுபவிப்பதற்காகவே தேவன் தம்முடைய மக்களை ஒருவரோடொருவர் உறவுபடுத்தியிருக்கிறார், சேர்த்திருக்கிறார், இணைத்திருக்கிறார், கட்டியிருக்கிறார். united, joined, and bonded together. எனவே, நாம் உறவுகளைப்பற்றி அக்கறையற்றிருப்போமென்றால் இந்த கிறிஸ்துவினுடைய பரிபூரணத்தையும், முழு நிறைவையும், நன்மையையும், ஆசீர்வாதத்தையும், அதாவது பரம வளங்களை நாம் காணவோ, அறியவோ, அனுபவிக்கவோ, அவைகள் நமக்குள் உருவாக்கப்படவோ, மற்றவர்களுக்குப் பரிமாறவோ, வழங்கவோ, வெளிக்காண்பிக்கவோ முடியாது. எனவே, நாம் உறவுகளைக் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தேவனுடைய மக்கள் கிறிஸ்துவின் சரீரத்தைப்பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதைப்பற்றி அல்லது ஒரு கூட்டம் மக்கள் தங்களை கிறிஸ்துவின் சரீரம் என்று கருதுவதைப்பற்றி எனக்கு அவ்வளவாக பாரமோ, அக்கறையோ இல்லை. ஒரு கணவனும், மனைவியும் தேவனுடைய மக்களாக இருந்தால், அவர்களுக்கிடையேயுள்ள உறவுகூட இந்தக் கிறிஸ்துவின் சரீரத்தினுடைய ஒரு குறுவடிவம். The miniature of the Body of Christ. நான் தேவனுடைய குடும்பமாகிய சபையைக்குறித்து எந்த அளவுக்கு பாரமுள்ளவனாக இருக்கிறேனோ, நாம் எல்லாரும் இருக்கவேண்டுமோ அதுபோல நம் குடும்பத்தைக் குறித்தும் நாம் பாரமும், அக்கறையும் உள்ளவர்களாக இருக்க வேண்டும். தேவனுடைய குடும்பத்தின் குறுவடிவமாகிய, சிறுவடிவமாகிய குடும்பங்களைக்குறித்து-கணவன், மனைவி, பெற்றோர், பிள்ளைகள், உடன்பிறந்தவர்கள் இவர்களுக்கிடையே உள்ள உறவைப்பற்றியும்-நாம் கவனமுள்ளவர்களாக, அக்கறையுள்ளவர்களாக, எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும். பத்து வருடம், இருபது வருடம் கணவன், மனைவியாக வாழ்ந்துவிட்டோம் என்பதால் இன்னொரு முப்பது வருடம் நாம் கணவன், மனைவியாக வாழ்கின்ற வாழ்க்கை கிறிஸ்துவின் பரிபூரணத்தை நமக்கும், பிறருக்கும் தரும் என்பதற்கு எந்தவொரு உத்தரவாதமும் இல்லை. நாம் நம் உறவுகளைப்பற்றி அக்கறையற்றிருப்போமென்றால் அல்லது கவனக்குறைவாக இருப்போமென்றால்-இதை நான் உங்கள் இருதயத்திலே பதிக்க விரும்புகிறேன்-தேவனுடைய மக்களுக்கிடையே மட்டுமல்ல நான் குடும்பத்தைப்பற்றியும் சொல்லுகிறேன்.
இன்னும் சொல்லப்போனால் நான் கணவன், மனைவிக்கிடையேயுள்ள உறவு அல்லது இணைப்பு, கட்டு இதைப்பற்றியே சொன்னால்கூட அது தவறாகாது. It equally applies to two of God’s people, God’s children who are united in marriage.
எனவே, நான் சொல்வது வேறு எதற்காவது உதவிசெய்யுமோ அல்லது பயனுள்ளதாக இருக்குமோ இருக்காதோவென்று எனக்குத் தெரியாது. ஒரு மனிதனுடைய வாழ்க்கை எந்த அளவுக்குக் கிறிஸ்துவை மற்றவர்களுக்கு வழங்குகிறது என்பதை பெரும்பாலும் அவர்களுடைய குடும்ப வாழ்க்கையிலிருந்து தீர்மானித்துவிடலாம். மனைவியோடு, கணவனோடு, பிள்ளைகளோடு, பெற்றோர்களோடு அவர்களுடைய உறவு எப்படி இருக்கிறது என்பதை வைத்து இவருக்குள் உள்ள கிறிஸ்துவின் அளவை, இவர் மற்றவர்களுக்கு வழங்குகிற கிறிஸ்துவின் அளவை ஒருவாறு நாம் கணித்துவிட முடியும்.
எனவேதான், எபேசியர் 4ஆம் அதிகாரத்தின் பாரம் கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்டியெழுப்புவதைப்பற்றியது. இந்த கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்டியெழுப்புவதென்றால் தேவன் நம் இருதயத்தை மிகவும் பிரகாசமாக்க வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன். ஏனென்றால், பல பதங்கள், பல சொற்றொடா்கள், பல கருத்துக்கள், பல எண்ணங்கள் நம் மனதுக்குள் ஏற்கெனவே இருக்கின்றன. நாம் பல வருடங்கள் இந்த வேதத்தை வாசித்திருப்பதால், பல செய்திகளைக் கேட்டிருப்பதால் பற்பல எண்ணங்களும், சிந்தனைகளும் நம் இருதயங்களில் இருக்கின்றன. அவைகளெல்லாம் உண்மையாகவே தேவனுடைய எண்ணத்தையும், சிந்தனையையும் பெற்றுக்கொள்வதற்கு ஒருவிதத்தில் தடையாக இருக்கின்றன.
கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்டியெழுப்புவது என்றால் எபேசியர் 4ஆம் அதிகாரம் (16 ஆம் வசனம்) கொலோசெயர் 2ஆம் அதிகாரத்திலுள்ள வசனங்களின்படி நான் புரிந்துகொண்டது என்னவென்றால் நாம் உறவுகளைக் கட்டியெழுப்ப வேண்டும். எப்படி நான் சொல்கிறேனென்றால் அதில் ‘கிறிஸ்துவின் சரீரம் கட்டியெழுப்பது’ என்று எழுதியிருக்கிறது. இதைப்பற்றி எபேசியர் 4ஆம் அதிகாரத்தில் ஒரு முக்கியமான வசனம் இருக்கிறது. அதை நாம் வாசிக்கலாம் (16 ஆம் வசனம்) “அவராலே சரீரம் முழுதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய்க் கட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும் தன்தன் அளவுக்குத் தக்கதாய்க் கிரியைசெய்கிறபடியே, அது அன்பினாலே தனக்குப் பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீர வளர்ச்சியை உண்டாக்குகிறது.” இதிலே கணுக்கள், இணைப்புகள். Joints and Ligaments என்று எழுதியிருக்கிறது. இவைகளெல்லாம் புரிந்துகொள்வதற்கு சற்று கருகலான பகுதிகள். இஷ்டம்போல நமக்கு நவீனமான எண்ணங்களை நாம் கொண்டுவரலாம். நவீனமான, நூதனமான, சுவாரசியமான எண்ணங்களை நாம் கொண்டுவரலாம். அதைக்குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சுவாரசியமாய் நாம் கொடுக்கிற விளக்கங்களெல்லாம் தேவனுடைய எண்ணங்கள் என்று சொல்ல முடியாது.
உண்மையிலேயே தேவன் என்ன எண்ணத்தோடு எழுதியிருக்கிறார் என்று நான் சொல்ல விரும்புகிறேன். தேவன் பகையாகிய நடுச்சுவரை உடைத்து, தேவனுடைய மக்களைச் சேர்த்திருக்கிறார், இணைத்திருக்கிறார், கட்டியிருக்கிறார். He has united, joined, bonded, and knit together God’s people ஆனால், அன்று தொடங்கி அந்த உறவுகளை அவர் கட்ட விரும்புகிறார் அல்லது வலுப்படுத்த விரும்புகிறார் அல்லது வளப்படுத்த விரும்புகிறார். ஒருநாளிலே ஒரு கணவனும் மனைவியுமாக இணைந்தவர்கள் இன்னும் 50 வருடங்களும் அவர்களுடைய உறவு வலுப்பட்டுக்கொண்டிருக்கிறது; அது இன்னும் இன்னும் வளமாகிக்கொண்டிருக்கிறது. ஐம்பது வருடம் கழித்தும் அந்த மனைவி தன் கணவனை “நான் புரிந்துகொண்டேன்” என்றோ அல்லது ஒரு கணவன் “நான் என் மனைவியைப் புரிந்துகொண்டேன்” என்று சொல்ல முடியும் என்றால் உண்மையிலேயே அவர்களுடைய உறவு தேவனுக்குமுன்பாக மிகவும் அழகானது.
உறவுகள் கட்டியெழுப்பப்பட வேண்டும். அதற்குப்பிறகு ஒரு வழிமுறை ஒன்று இருக்கிறது. தேவன் நம்மைச் சேர்த்திருக்கிறார், இணைத்திருக்கிறார், கட்டியிருக்கிறார் என்றவுடனே “அல்லேலூயா! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!” என்று நாம் அமர்ந்துவிட முடியாது. தேவன் நம்மை இணைத்திருக்கிறார், சேர்த்திருக்கிறார், கட்டியிருக்கிறார். எனவே, அன்றிலிருந்து ஒரு வழிமுறை ஆரம்பிக்கிறது. இந்த வழிமுறையை நாம் மிகவும் அக்கறையோடும், கரிசனையோடும் செய்ய வேண்டும். ஒரு கணவனுக்கும் மனைவிக்குமோ அல்லது பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமோ மிக முக்கியமாக தேவனுடைய மக்களுக்கிடையே உள்ள இந்த உறவுகளைக்குறித்து ஒரு வழிமுறை இருக்கிறது. அதைக்குறித்து நாம் அக்கறையோடு இருக்க வேண்டும், கரிசனையோடு இருக்க வேண்டும்.
கணுக்கள் என்றால் இரண்டு எலும்புகள் இணைகிற இடத்துக்குப் பெயர் joints. நாம் தேவனால் இணைக்கப்பட்டிருக்கிறோம். எனவே, நாம் ஒரு கணுவாக இருக்கிறோம். தேவனுடைய மக்கள் எல்லாருக்கும் நடுவிலும் ஓர் இணைப்பு இருக்கிறது. இந்த உயிரியை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாது. மனிதனுடைய எலும்பு மண்டலத்தை நாம் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? இந்த ஒரு கையில் மாத்திரம் நூற்றுக்கணக்கான இணைப்புகள் இருக்கிறதாகச் சொல்கிறார்கள். நூற்றுக்கணக்கான கணுக்கள் உள்ளன. தேவனுடைய மக்களாகிய நாம் இணைக்கப்படும்போது ஒரு கணு அல்லது இணைப்பு உருவாகிறது. இந்த இணைப்பு இசைவாக வேண்டும். இரண்டு எலும்புகள் சேர்ந்தால்கூட ஒன்றோடொன்று இசைவாக இருக்க வேண்டும். அந்தக் கணுக்கள் இசைவாக வேண்டும். அதுபோல, நம் இரண்டுபேரையும் தேவன் ஒருமைப்படுத்தியிருக்கிறாரென்றால் நம் இரண்டுபேருக்குள்ளேயும் ஒரு bond இருக்கிறது, ஒரு கட்டு இருக்கிறது. இந்தக் கட்டு ரொம்பப் பொருத்தமாக இருக்க வேண்டும். சில சமயம் ரொம்ப நெருக்கிவிட்டாலும் அது நல்ல கட்டு இல்லை; ரொம்ப இளக்கமாக அல்லது நெகிழ்வாக இருந்தால் அதுவும் கட்டு கிடையாது.
“சரியாக, பொருத்தமாக இருக்கிறது,” என்று சொல்வார்கள். சில உடைகளைத் தையல்காரரிடம் கொடுத்துத் தைத்து வாங்கி வந்தால் அதில் திருப்தி இருக்காது. ஒருவேளை அது தொளதொளவென்று இருக்கும் அல்லது ரொம்ப இறுக்கமாக இருக்கும். இது நல்ல எடுத்துக்காட்டு. தேவன் தம் மக்களை ஒருவரோடொருவர் கட்டும்போது, bond பண்ணும்போது, அது ரொம்ப நெருக்கமாகவும் இருக்கக் கூடாது, மூச்சுவிட முடியாத அளவுக்கு இறுக்கமாக இருக்கக்கூடாது; தொளதொளவென்றும் இருக்கக் கூடாது. ரொம்ப நெருங்கிவிட்டால் நம் உறவிலே ரொம்ப பிரச்சினைகள் வரும். உடனே, நாம் இன்றைக்கு இராத்திரி போய் “இனிமேல் நாம் நிறைய வைத்துக்கொள்ளக் கூடாது,” என்று முடிவு எடுத்துவிடுவோம். நாம் ரொம்ப இளக்கமாகவும், நெகிழ்ந்தும் இருக்கக்கூடாது.
நான் ஒரு சகோதரனைப் பார்த்திருக்கிறேன். அவர் ஒரு தட்டிலே சாப்பிட்டுவிட்டு அதே தட்டிலே இன்னொரு சகோதரனுக்கு சோறு கொடுப்பார். “இந்த அளவுக்கு எனக்கு ஐக்கியம் வேண்டாம்” என்று நான் நினைத்தேன்.
கணுக்களும், கட்டுகளும் எப்படி இருக்க வேண்டும்? கணுக்கள் இசைவாக இருக்க வேண்டும். கட்டுகள் பொருத்தமாக இருக்க வேண்டும். இசைவு, பொருத்தம். இவைகளை நாம் ஒவ்வொரு நாளும் நம் உறவுகளிலே கட்டியெழுப்ப வேண்டும். கட்டியெழுப்பப்படுவது…இதுதான் கிறிஸ்துவின் சரீரம். இன்னொன்றும் நான் சொல்வேன். ஒவ்வொருநாளும் நாம் நம் உறவுகளை இசைவாக்கவும், பொருத்தமாக்கவும், பின்னிப்பிணைக்கவும் நாம் கற்றுக்கொண்டேயிருக்கிறோம். இதைத்தான் இன்றைக்குப் பரிசுத்த ஆவியானவர் செய்துகொண்டிருக்கிறார். எபேசியர் 2ஆம் அதிகாரம், “அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாய் எழும்புகிறது; அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்பட்டுவருகிறீர்கள்” (எபே. 2:21, 22) என்று சொல்லுகிறது. இதன் பொருள் என்னவென்றால் கட்டுகின்ற வேலையை கிறிஸ்து செய்து முடித்துவிட்டார்; பரிசுத்த ஆவியானவர் அதை நிஜத்திலே கொண்டு வருகிறார். அது எப்போதுமே அப்படித்தான். எதை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தம் மனிதவாழ்க்கை, சிலுவைமரணம், உயிர்த்தெழுதல் ஆகியவைகளின்மூலமாகச் செய்துமுடித்தாரோ, அவைளைப் பரிசுத்த ஆவியானவர் நம் நடைமுறை வாழ்க்கையிலே அனுபவமாக்குகிறார் அல்லது நிஜத்திற்குள் கொண்டுவருகிறார்; அதை நமக்கு மெய்யாக்குகிறார். நாம் கிறிஸ்துவுடனேகூட சிலுவையில் அறையப்பட்டோம். ஆனால் அதை மெய்யாக்குவது, நிஜமாக்குவது பரிசுத்த ஆவியானவருடைய வேலை. எனவே, பரிசுத்த ஆவியானவருடைய மிக முக்கியமான ஒரு வேலை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சேர்த்த, இணைத்த, கட்டின அவருடைய மக்களுக்கிடையே உள்ள உறவுகளை இசைவாக்குவது, பொருத்துவது, பின்னிப்பிணைப்பது. Fit together, compacted together, knit together, held together. இந்த நான்கு வார்த்தைகளை நீங்கள் குறித்துக்கொள்ளுங்கள். அதிலே தேவனுடைய ஒரு ஆழமான எண்ணமும், உணர்வும், உணர்ச்சியும் இருக்கிறது என்பது முக்கியம். We are united. We are joined. We are bonded.
இந்த சூரிய மண்டலம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. To be held together. ஒருவேளை இந்த சூரிய மண்டலத்திற்கு வெளியேபோய் நீங்கள் அதைக் கற்பனைசெய்து பார்க்க வேண்டும். நாம் இந்தப் படத்தை மட்டும்தான் பார்ப்போம்; சூரியனும், அந்த ஒன்பது கோள்களும், அந்த கோள்களைச்சுற்றி துணைக்கோள்களும் சுற்றிவருகிறதைப் பார்த்தால் to be held together என்தற்கு ஒரு நல்ல illustration அதுதான். They are held together by whom? Not by Sir Isaac Newton’s Law of Gravity but by the power of His Word. “சகலத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறார்” என்று எபிரெயர் 1:3 சொல்கிறது. அல்லேலூயா! அவருடைய வல்லமையுள்ள வார்த்தையின் ஒரு வார்த்தை புவிஈர்ப்புவிசை. அவர் சொன்னார் புவிஈர்ப்புவிசை உண்டானது. ஒருநாள் அவர் அவருடைய வார்த்தையைத் திரும்ப எடுத்துக்கொள்வார். அப்பொழுது புவிஈர்ப்புவிசை என்று ஒன்று இருக்காது. “நீர் வானங்களைப் பழைய வஸ்திரத்தைப்போல சுருட்டுவீர்” (சங். 102) என்றால் என்ன அர்த்தம்? அவர் சொன்னார் பிரமாணம் உண்டானது. அவர் வார்த்தையைத் திரும்பப் பெற்றுக்கொள்வார். அந்தப் பிரமாணம் செயல்படாது. அவர்தான் பிரமாணத்தைக் கொடுத்தார். ஒரு மனிதன் அதைக் கொடுக்கவில்லை. மனிதனால் அந்தப் பிரமாணத்தைப் கிரகித்துக்கொள்ள முடியும். அந்தப் பிரமாணத்தை கிரகித்தாலே நோபல்பரிசு கொடுத்து விடுகிறார்கள். ஏனென்றால் அப்படி ஒரு பிரமாணம் இருக்கிறது என்று அவர் கண்டுபிடித்துவிட்டாராம்.
எனவே, தேவனுடைய மக்களோடு-கணவனோடு, மனைவியோடு, பிள்ளைகளோடு, பெற்றோரோடு, உடன்பிறந்தவர்களோடு, சகோதர சகோதரிகளோடு-நாம் எப்படி உறவைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று கற்றுக்கொள்ள வேண்டும். “என் மகனோடு என் உறவை எப்படிக் கட்டியெழுப்புவது என்று எனக்குத் தெரியாது. என் மகளோடு நான் எப்படி உறவுகளைக்கட்டியெழுப்ப வேண்டும் என்று எனக்குத் தெரியாது,” என்று நாம் அறிக்கையிட வேண்டும். சில சமயங்களில் அந்த உறவு மிக நெகிழ்வாக இருக்கிறது; சில சமயங்களில் மிக இறுக்கமாக இருக்கிறது. அது பொருத்தமாக இல்லை. இதை எப்படிக் கட்டியெழுப்புவது என்றால் நாமெல்லாரும் ஒருவரோடு ஒருவர் இணைக்கப்பட்டிருக்கிறோம். எனவே, நாம் ஒருவருக்கொருவர் பணிவிடைசெய்வதின்மூலமாகத்தான் இந்த உறவுகள் கட்டியெழுப்பப்படும், இசைவாக்கப்படும், பொருத்தப்படும், பின்னிப்பிணைக்கப்படும் அல்லது அப்படி கூட்டாக, ரொம்ப அழகாக வைத்துக்கொள்ளப்படும்.
நாம் ஒருவருக்கொருவர் பணிவிடை செய்யப்போகிறோமா? இதை எபேசியர் 4ஆம் அதிகாரம் சொல்கிறது. அவர் கொடைபெற்ற தேவனுடைய மக்களை பரிசுத்தவான்களைச் சீர்பொருந்தும்பொருட்டு, பரிசுத்தவான்களை ஆயத்தப்படுத்துவதற்கு, கொடுத்திருக்கிறார். நம் இயற்கையான பண்பு, இயற்கையான தன்மை, இயற்கையான குணத்தின்படி நாம் உறவுகளைக் கட்டியெழுப்புவதில் வல்லவர்கள் இல்லை. உறவுகளை உடைப்பதில் நாம் வல்லவர்கள். இதை நான் தாழ்மையாகச் சொல்லவில்லை. அது நம் இயற்கை. அவர் பகையாகிய நடுச்சுவரை உடைத்தாலும் நம் வாழ்க்கையிலே அது உண்மையாக வேண்டும். நிலையைப் பொறுத்தவரை அது உண்மை. அனுபவத்தைப் பொறுத்தவரை அது உண்மையாயிருக்க வேண்டும். “நான் கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்” என்பது என் நிலையைப் பொறுத்தவரை உண்மை; ஆனால் அனுபவத்தைப் பொறுத்தவரை அது உண்மையாக வேண்டும். எனவே, எப்படி நம் உறவுகளை இசைவாக்க முடியும் என்றால் நாம் ஒருவருக்கொருவர் பணிவிடை செய்வதின்மூலமாகப் பொருத்த முடியும் அல்லது பின்னிப்பிணைக்க முடியும். For the perfecting of the saints unto the work of the Ministry unto the building up of the Body of Christ. அதாவது இந்த கொடைபெற்ற தேவமக்களுடைய பணவிடை என்ன? தேவனுடைய மக்கள் எல்லாரும் ஒருவருக்கொருவர் பணிவிடைசெய்கிற வேலையைச்செய்ய அவர்களை நாம் பயிற்றுவிக்க வேண்டும்; அவர்களை நாம் ஆயத்தப்படுத்த வேண்டும். அதனுடைய விளைவு கிறிஸ்துவின் சரீரம் கட்டியெழுப்பப்படும் அல்லது உறவுகள் கட்டியெழுப்பப்படும். எனவே, “நாம் கிறிஸ்துவில் கொஞ்சம் தேறியிருக்கிறோம்,” என்று நினைத்தால் நாம் செய்யவேண்டிய முதல் வேலை என்னவென்றால் “நாம் ஒருவருக்கொருவர் எப்படி பணிவிடை செய்வது” என்பதை நாம் பிறருக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
முதலாவது நான் ஒன்றைத் தெளிவுப்படுத்த வேண்டும். நாம் ஒருவருக்கொருவர் பணிவிடை (ஒரு வேலை) செய்ய வேண்டும். இதைத்தான் எபேசியர் 4:16 “தன்தன் அளவுக்குத் தக்கதாய்க் கிரியை செய்கிறது” என்று சொல்கிறது. நாம் கொடுக்க வேண்டும். பணிவிடை என்றால் நாம் ஏதோவொன்றைக் கொடுக்க வேண்டும். நாம் உறவுப்படுத்தப்பட்டிருக்கிறோம் என்பதால் நாம் நம் இஷ்டத்திற்கு வாழலாம் என்பதல்ல பொருள். யார் யாரோடு நாம் உறவுபடுத்தப்பட்டிருக்கிறோமோ அவர்களுக்குப் பணிவிடை செய்கிற வேலையைப் பரிசுத்த ஆவியானவர் கொடுக்கிறார். பணிவிடை எப்படி செய்ய வேண்டும்? பணிவிடை என்றால் ஏதொவொன்றை நாம் அவர்களுக்கு கொடுக்க வேண்டும் அல்லது ஏதொவொன்றை நாம் அவர்களிடத்திலிருந்து பெற வேண்டும். supply என்றால் ஒருவர் கொடுக்கிறார் ஒருவர் பெற்றுக்கொள்கிறார்.
ஒருவருக்கு நூறு ரூபாய் குறைவுபடுகிறது என்று வைத்துக்கொள்வோம். நான் உடனே நூறு ரூபாய் கொடுக்கிறேன். மேலோட்டமாய்ப் பார்த்தால் இது ஒரு பொருள். அவருக்கு ஒரு நூறு ரூபாய் என்ற பொருள் குறைவுபடுகிறது. நான் நூறு ரூபாய் என்ற பொருளை அவருக்குக் கொடுக்கிறேன். ஆழமாகப் பார்த்தால் அவருக்குக் கொஞ்சம் கிறிஸ்து குறைவுபடுகிறார். நாம் அவருக்குக் கொஞ்சம் கிறிஸ்துவைக் கொடுக்கிறோம். “நீங்கள் எப்படி நூறு ரூபாயையும் கிறிஸ்துவையும் சம்பத்தப்படுத்துகிறீர்கள்?” என்றால் சம்பந்தப்படுத்த முடியும்.
நான் எந்தத் தேவனுடைய மக்களோடு உறவுப்படுத்தப்படுகிறேனோ-அது என் மனைவியாகக்கூட இருக்கலாம்-அவர்களுக்கு ஏதோவொன்று குறைவுபடுகிறது; ஆனால், அந்தக் குறைவை எனக்குள் இருக்கிற ஒரு பொருளைக்கொண்டு நான் நிறைவு செய்கிறேன். ஒருவேளை கொஞ்சம் துணி மடித்து வைப்பதாகக்கூட இருக்கலாம் அல்லது பாத்திரம் கழுவிக்கொடுப்பதாக இருக்கலாம் அல்லது கடைக்குப் போவதாக இருக்கலாம். நான் ரொம்ப பெரிய ஆவிக்குரிய விஷயமெல்லாம் சொல்லவில்லை. ஆறுதலான வார்த்தையாகக்கூட இருக்கலாம். தேவனுடைய மக்களுக்குள் என்ன குறைவுபடுகிறது என்பதைப் பற்றிய ஒரு உணர்திறன், ஒரு உணர்வும், ஒரு திறமையும் அதைக் கொடுக்கிற ஒரு கொடையும் நமக்கு வேண்டும். பல வேளைகளில் தேவனுடைய மக்களுடைய குறைவு என்ன அல்லது நிலைமை என்ன என்று அறிகிற அறிவும், உணர்வும் நமக்கு இல்லை. தேவனுடைய மக்கள் என்றவுடனே நம் சகோதர சகோதரிகளை நாம் நினைத்துக்கொள்ள வேண்டாம். அது நம் கணவன் மனைவியாகக்கூட இருக்கலாம். என் மனைவியினுடைய நிலை என்ன? கணவனுடைய நிலை என்ன? பிள்ளையினுடைய நிலை என்ன? இன்பம் என்ன? துன்பம் என்ன? நெருக்கம் என்ன? அவர்களுடைய ஆறுதல் என்ன?
சில நாட்களுக்குமுன் நான் ஒரு சகோதரனைச் சந்தித்தேன். அவர் என்னிடம், “சந்தோஷமான விஷயம் ஐந்து சொல்லுங்கள். அப்புறம் சகோதரனே, உங்கள் மனதை ரொம்ப அழுத்திக்கொண்டிருக்கிற ஐந்து விஷயங்களைச் சொல்லுங்கள். அப்புறம் உங்கள் அப்பாவைப்பற்றி ஐந்து நல்ல விஷயம் சொல்லுங்கள்,” என்று கேட்டார். இது ரொம்ப பயனுள்ளதாக இருந்தது. “சகோதரனே, உன்னை அழுத்திக் கொண்டிருக்கிற இரண்டு விஷயத்தைச் சொல்லுங்கள். சந்தோஷமான இரண்டு விஷயங்களை சொல்லுங்கள்.” ஆனால், இப்படிப்பட்ட உணர்வு நமக்கு இருக்க வேண்டும்.
இன்னும் சொல்லப்போனால் நாம் பேசுவது, நாம் கூடிவருவது இதெல்லாம் பிரதானமாக எதற்காகத் தெரியுமா? ஒருவருடைய நிலையை ஒருவர் அறிந்துகொள்வதற்காக. அப்போஸ்தலனாகிய பவுல், “அன்றியும், எனக்கடுத்த காரியங்களும், என் சுக செய்திகளும் உங்களுக்குத் தெரியவரும்பொருட்டு, அவைகளையெல்லாம் நமக்குப் பிரியமான சகோதரனும் கர்த்தருக்குள் உண்மையுள்ள ஊழியக்காரனுமாயிருக்கிற தீகிக்கு உங்களுக்கு அறிவிப்பான். நீங்கள் எங்கள் செய்திகளை அறியவும், அவன் உங்கள் இருதயங்களுக்கு ஆறுதல் செய்யவும், அவனை உங்களிடத்தில் அனுப்பினேன்,” (எபே. 6:21, 22) என்று கூறுகிறார். நாம் கூடிவருவது அல்லது உறையாடுவது பிரதானமாக எதற்காக? அதற்காக அந்த நோக்கத்துடன் நிலைமை என்னவென்று அறிந்துகொள்கிற எக்ஸ்ரே கண்களோடு நாம் உரையாட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால், உண்மையிலேயே நம் இருதயத்தின் ஒரு பாரம் என்னவாக இருக்க வேண்டுமென்றால், “ஆண்டவரே, என் சகோதர சகோதரிகளுடைய நிலை என்னவென்று நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன்.” துருவித்துருவி அறிந்துகொள்வதை நான் சொல்லவில்லை. அந்த நிலையை நான் சொல்லவில்லை. அதைப் பொறுத்தவரை என் ஜெபம் என்னவென்று கேட்டால், “ஆண்டவரே, அதுபோன்ற விஷயங்கள் எனக்குத் தெரியாமலிருந்தால் மிகவும் நல்லது.” ஆனால், நம் சகோதர சகோதரிகளுடைய, தேவனுடைய மக்களுடைய வாழ்க்கையில் ஒரு குறைவு இருக்கிறது; அதனால் அவர்கள் மிகவும் வேதனைப்படுகிறார்கள். அவர்களுக்கு ஒரு மறைவான கண்ணீர் இருக்கிறது. இதைப்பற்றி நமக்குத் தெரியவில்லையென்றால், “:ஆண்டவரே, அதைப்பற்றி நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்,” என்று இருக்க வேண்டும்.
எனவே, கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்டியெழுப்புவது அல்லது உறவுகளைக் கட்டியெழுப்புவது என்றால் நாம் ஒருவருக்கொருவர் பணிவிடை செய்வதின்மூலமாக நாம் கட்டியெழுப்பப்பட முடியும். அந்தப் பணிவிடை ஒரு சாதாரண சரீரப்பிரகாரமான வேலையாகக்கூட இருக்கலாம். அங்கு குப்பை இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இதை யார் எடுப்பது? வேறு யாரோவொரு சகோதரர் எடுக்க வேண்டாம். முதலாவது, அதை நான் எடுத்துக்கொள்ள வேண்டும். சில சமயம் டீ குடித்த கோப்பையைக் கொண்டு போய்க் கழுவுகிற இடத்தில் வைப்பதற்கு நாம் மற்றவர்களிடம் உதவி கேட்போம். “இந்த டம்ளரைக் கொண்டுபோய் வைத்துவிட்டு வந்துவிடுவாயா?” என்று கேட்போம். அதைக்கூட கூடுமானவரை எல்லாவற்றிலும் நானே முந்திக்கொள்வது நல்லது. நம் மனைவிமார்கள் இதை மிகவும் மனமுவந்து செய்ய முன்வரலாம். கூடுமானவரை டீ குடித்த கப்பை நீங்கள் கொண்டுபோய் கழுவுகிற இடத்தில் வைத்து விடுங்கள் என்று நான் நியாயப்பிரமாணம் கொடுக்க விரும்பவில்லை. ஆனால், மனைவிமார்களுடைய நிலை எப்படியிருக்க வேண்டும் என்றால், “நீங்கள் எதற்கு வீணாக எழுந்திருக்க வேண்டும். கொஞ்சம் வாசித்துக்கொண்டிருங்கள்; நானே அந்த கப்பை கழுவி வைத்துவிடுகிறேன்”. அப்படியென்றால் கடைசியிலே யார்தான் கழுவுவது? கழுவுவது முக்கியமில்லை. அங்கு நடைபெறுகிற பரிமாற்றங்கள் முக்கியம். ஒருவருக்கொருவர் பணிவிடை செய்வது என்றால் பெரிதாக நினைத்துக்கொள்ள வேண்டாம். ஒரு துணியை மடித்து வைக்கிறது, மடித்து வைத்ததை அதன் இடத்தில் வைப்பது பணிவிடையாகும். ஏனென்றால் ஒரு நாளில் மனைவியினுடைய முதுகை முறிக்கிற வேலைகள் நூறு இருக்கும். எல்லாம் நூறு கிலோ தூக்குகிற வேலையல்ல. இந்த மாதிரி சின்னச்சின்ன வேலைகள்…துவைக்கிற வேலை, காயப்போடுகிற வேலை, கிளிப் போடுகிற வேலை, மடித்துவைக்கிற வேலை, வீடு பெருக்கிற வேலை… இப்படி நூறு வேலை சேர்த்தால் அந்தப் பெண்ணின் நிலைமை என்னவாகும்.
அதுபோல, தேவனுடைய மக்களுக்கிடையேயும் சிறு சிறு வேலைகளே நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான வேலைகளாகிவிடுகின்றன.
எனவே, அருமையான பரிசுத்தவான்களே, ஒருவருக்கொருவர் நாம் பணிவிடை செய்வதின்மூலமாகத்தான் நம் உறவுகள் கட்டியெழுப்பப்படுகின்றன. பணிவிடைக்கான வாய்ப்புகளை நாம் பார்க்க வேண்டும். ஒரே ஒரு பாடம் போதும். ஒருவருக்கொருவர் பணிவிடை செய்ய வேண்டும். ஒரேவொரு சகோதரர் எல்லாருக்கும் பணிவிடை செய்து எல்லாருடைய உறவுகளையும் அவர் கட்டியெழுப்ப முடியுமா? எனக்கும் சகோதரனுக்கும் நடுவில் இருக்கிற உறவை இன்னொரு சகோதரன் பணிவிடை செய்து வளர்க்க முடியுமா? முடியாது. நம் இரண்டு பேருக்கும் உள்ள உறவை யார்தான் பணிவிடை செய்து வளர்க்க முடியும்? சகோதரனுக்கு நானும், எனக்கு சகோதரனும் பணிவிடை செய்துதான் வளர்க்க முடியும்.
வாங்குவதைப் பார்க்கிலும் கொடுப்பதே பாக்கியம். நம் சகோதரர்களுக்குக் கொடுப்பதற்கென்று நாம் ஒரு பங்கை ஒதுக்கி வைக்க வேண்டும். நம் நேரத்தில் ஒரு பங்கு, நம் பணத்தில் ஒரு பங்கு, நம் உடல் உழைப்பில் ஒரு பங்கு, நம் இருதயத்தில் ஒரு பங்கு. அதென்ன இருதயத்தில் ஒரு பங்கு? என் மனைவி, என் மகள், என் மகன் இவர்களை அன்புகூர்வதற்கே என் இருதயத்தைச் செலவழித்துவிட்டேனென்றால் தேவனுடைய மக்கள்மேல் அன்புகூர்வதற்கு இருதயம் இருக்காது. என் மனைவி, என் மகனுடைய மேற்படிப்பு, என் மகளுடைய படிப்பு, கல்யாணம் இதைப்பற்றி யோசிப்பதற்கே என் மனதைச் செலவழித்துவிட்டேனென்றால் சாயங்காலம் வீட்டிற்கு வந்தபிறகு தேவனுடைய மக்களைப் பற்றி யோசிப்பதற்கு என்ன இருக்காது? மனிதிலே ஒரு கொள்திறன்தானே இருக்கிறது. அந்த மனது சாயங்காலம் வரும்போது சோர்வாகிவிடும். எனவே, நம் நேரத்தில், நம் பணத்தில், நம் உடல்உழைப்பில், நம் மனதில், நம் இருதயத்தில் தேவன் நமக்குத் தந்த எல்லா வளங்களிலும், செல்வங்களிலும் பரிசுத்தவான்களுக்கு ஒரு பங்கு உண்டு.
தேவன் கத்தி முனையில் அந்தப் பங்கை வாங்குவதில்லை. ஏலியினுடைய பிள்ளைகள் செய்ததுபோல, “முதலில் எனக்குரிய பங்கை வைத்துவிட்டு நீ பிறகு பலிசெலுத்து” என்று தேவன் வாங்குவதில்லை. நாம் மனமுவந்து தேவனுடைய மக்களுக்குக் கொடுக்க வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். நம் இருதயம் விசாலமாய்த் திறந்திருக்க வேண்டும். சில சமயங்களில் நான் கொடுப்பதற்குத் தயாராக இருக்க மாட்டேன். சில சமயங்களில் மற்றவர்கள் எடுப்பதற்குக்கூட நாம் விட்டுக்கொடுக்க வேண்டும். ஒன்று நான் உண்மையிலேயே தேவனுடைய மக்களுக்கென்று ஒதுக்கிவைத்திருப்பது. இன்னொன்று நான் ஒதுக்கவில்லை. ஆனால் தேவனுடைய பிள்ளைகள் எடுத்துக்கொண்டு போகிறார்கள். இப்போது நாம் என்ன செய்ய வேண்டும். 2 கொரிந்தியர் 12ஆம் அதிகாரத்தில் “மிகவும் சந்தோஷமாய் நான் உங்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும், செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன்,” என்று பவுல் சொன்னது நிறைவேறுகிறது. ஒன்று செய்வினை, மற்றொன்று செயப்பாட்டுவினை. செலவுபண்ணுவது என்றால் நானே மனமுவந்து ஒதுக்கிவைப்பது. செலவுபண்ணப்படுவது என்றால் நான் ஒதுக்கி வைக்கவில்லை; அவர்களே எடுத்துக்கொண்டுபோய்விட்டார்கள். அதற்கும் ஒரு பங்கை நாம் ஒதுக்கி வைக்க வேண்டும்.
ஒரு புத்தகம் காணாமல் போய்விட்டதென்றால், உடனே மனம் துவண்டுவிட வேண்டாம். ஒரு ஒழுங்கு இருப்பது நல்லது. ஆனால், அதையும் மீறி ஒன்றிரண்டு புத்தகங்கள் தொலைந்துபோனால் கவலைப்பட வேண்டாம். “இது என் சகோதரனுக்குள் நான் விதைத்திருக்கிற மகிமை. கர்த்தருடைய வருகையிலே இது வெளியே வரும்,” என்று மகிழ்ந்திருப்போமாக. ஆனால், நான் எடுத்த ஒரு துண்டு பிரசுரத்தையும் சகோதரர்களுக்கு திருப்பிக்கொடுத்துவிட நான் விரும்புகிறேன்.
எனவே, நான் இன்று எபேசியர் 4இலிருந்து ஒன்றும் பெரிதாகச் சொல்லவில்லை. தேவனுடைய மக்கள் இப்படி நினைக்கிறார்கள், அப்படி நினைக்கிறார்கள். அதைப்பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை. ஆனால், நான் உறுதியாகச் சொல்ல முடியும். கிறிஸ்துவின் சரீரத்தை கட்டியெழுப்புவதென்றால் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சிலுவையிலே நம்மைச் சேர்த்திருக்கிற, இணைத்திருக்கிற, கட்டியிருக்கிற அந்த உறவுகளைப் பரிசுத்த ஆவியானவர் இசைவாக்க வேண்டும், பொருத்தமாக்க வேண்டும், பின்னிப்பிணைக்க வேண்டும் என்று விரும்புகிறார். அதை நாம் ஒருவருக்கொருவர் பணிவிடை செய்வதின்மூலமாகவே செய்ய முடியும்.
நம் வாழ்க்கையிலே பல சோதனைகள் வரும். உறவுகள் பொதுவாக எப்பொழுது சோதிக்கப்படும் என்றால் மனைவிக்கு உடல்நலம் சரியில்லை என்று வைத்துக்கொள்வோம். ரிச்சர்ட் உம்ராண்ட்டைப்பற்றி நான் சொல்லியிருக்கிறேன். பொருளாதாரம் மிகவும் குறைவாக இருக்கிறது. பணம் மிகவும் குறைவாகி விட்டது. பணம் குறைவாகிவிட்டதென்றால் ஒரு கணவனுக்கும் மனைவிக்குமிடையே உள்ள உறவு நெருக்கத்திற்குள்ளாகும். இந்த இடத்திலே இன்னும் எத்தனைபேர் உட்காரலாம்? நாம் நெருக்கி நெருக்கி உட்கார்ந்தால் இன்னும் 30 பேர் உட்காரலாம். அப்படியெல்லாம் நாம் கஷ்டப்பட வேண்டுமா? கஷ்டப்பட வேண்டாம். நாம் அதை விரும்பவில்லை. ஆனால், நிலைமை அப்படி ஏற்பட்டால் நம் உறவுகள் பரீட்சிக்கப்படும்.
நான் ஒரு மாநாட்டிற்குப் போயிருந்தேன். இராத்திரியிலே எல்லாரும் பாய் விரித்து ஒரு இடத்திலே படுத்திருந்தோம். ஒரேமாதிரி படுக்கமுடியாதென்று கொஞ்சம் சாய்ந்து படுத்திருந்தேன். கொஞ்சம் சாய்ந்து படுத்தபிறகு திரும்பி சாய்ந்து படுப்பதற்கு இடமில்லை. என் இடம் பறிபோயிற்று. நான் அந்த சகோதரனை எழுப்பித்தான் கொஞ்சம் இடம் கொடுங்கள் என்று கேட்க வேண்டும். ஆனால் நான் கேட்கவில்லை. மிஞ்சிப்போனால் ஒருநாள் தூக்கம் போகும், அவ்வளவுதானே!
எப்போது நம் வசதிகள், நம் வளங்கள், நம் செல்வங்கள் குறைகிறதோ, நாம் நெருக்கத்திற்குள்ளாகிறோமோ நம் இடம் குறையும், பணம் குறையும், சுகம் குறையும். அப்போது நம் உறவுகள் மிகவும் பரீட்சிக்கப்படும். ஆனால் அப்பொழுது நாம் பணிவிடை செய்ய முடியும். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையின்மேல் பணிவிடை செய்தார். தம் தாய்க்குப் பணிவிடை செய்தார். “ஆண்டவரே, நீர் மகிமையில் வரும்போது என்னை நினைத்தருளும்,” என்று சொன்ன கள்ளனுக்கும் அவர் சிலுவையிலே பணிவிடை செய்தார். நான் சொன்னது மிகவும் அதிகமானதுதான். சிலுவையில் இருக்கும்போது யார்தான் எனக்கு பணிவிடை செய்ய வேண்டும்? மற்றவர்கள்தான் எனக்குப் பணிவிடை செய்ய வேண்டும். “தேவனுடைய குமாரனே, நீர் கவலைப்படாதீர், நீர் கண்டிப்பாக உயிர்த்தெழுவீர்; விசுவாசம் உமக்குக் கொஞ்சம் பலமாக இருக்கட்டும்,” என்று சொல்ல வேண்டியிருக்கும். மற்றவர்கள்தான் காடி கலந்த கடற்காளானைக் கொடுத்தார்கள். அதாவது அது வலி நிவாரணி. “யாராவது வலியிலிருந்து விடுதலை தரமாட்டார்களா? யாராவது என் தாயைப் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லமாட்டார்களா? உம் கல்லறையிலிருந்து கல்லைப் புரட்டிப்போடுவதற்கு யாராவது உத்தரவாதம் தரமாட்டார்களா?” என்று அவர் எதிர்பார்க்கவில்லை.
நாம் சிலுவைக்கு ஒப்பான ஒரு நிலைமையிலிருந்தாலும் நாம் பிறருக்குப் பணிவிடை செய்ய முடியும். குறைந்தபட்சம் நம் உடன் பயணம் செய்பவர்க்கு, நம் கணவனுக்கு அல்லது மனைவிக்கு நாம் பணிவிடை செய்ய முடிய வேண்டும். இதைப் பரிசுத்த ஆவியானவர் செய்கிறார்.
ஒன்றேவொன்றைச் சொல்லி நான் முடித்துவிடுகிறேன். “ஆவியின் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்வதற்கு எச்சரிக்கையாயிருங்கள், ஜாக்கிரதையாயிருங்கள்.” இது என்ன ஆவியின் ஒருமைப்பாடு என்றால் அந்த சகோதரனுக்கும் பரிசுத்த ஆவியானவர் ஒரு எண்ணத்தைக் கொடுப்பார். இந்த சகோதரனுக்கும் பரிசுத்த ஆவியானவர் ஒரு எண்ணத்தைக் கொடுப்பார். அந்த சகோதரனுக்கு ஒரு தேவை இருக்கலாம். அந்தத் தேவையைப்பற்றி ஒரு எண்ணத்தை இந்த சகோதரனுக்கு கொடுக்கலாம். இந்த சகோதரன் போய் அந்தத் தேவையை நிறைவு செய்கிறார். அந்த சகோதரனின் நிறைவை அவர் பெற்றுக்கொள்கிறார். இப்பொழுது அவர்கள் ஆவியின் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்கிறார்கள்.
ஒரு மனிதன் ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தை வாசிக்கிறான். இன்னொரு மனிதனிடத்தில், “நீ அந்த இரதத்தோடு போய் சேர்ந்துகொள்,” என்று தேவன் சொல்கிறார். சேர்ந்துகொள்ளும்போது அவர்கள் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்கிறார்கள்.
இரண்டு மனிதர்கள் ஜெபிக்கிறார்கள். ஒரு மனிதனுக்கு, “நீ அவனைக் கூப்பிடு, பேதுருவைக் கூப்பிடு,” என்று தேவன் சொல்கிறார். இன்னொரு மனிதனுக்கு, “கொர்நேலியு உனக்கு ஆள் சொல்லி அனுப்புவான்,” என்று தேவன் சொல்கிறார். இது ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வது.
ஒரு மனிதன் கண் குருடாகி ஜெபிக்கிறான். இன்னொரு மனிதனுக்கு, “அவன் கண் குருடாகி ஜெபிக்கிறான். எனவே நீ போ,” என்று தேவன் சொல்கிறார். “இல்லை, அவன் மிகக் கொடூரமான மனிதன்,” என்று அனனியா சொல்கிறான். “இல்லை, நீ போ,” என்று தேவன் சொல்கிறார். இவர்கள் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்கிறார்கள்.
“அப்படியானால் சகோதரனே, யார் யாரைப்பற்றியெல்லாம் கர்த்தர் இன்று சொல்லப்போகிறார் என்று நாம் ரொம்ப மனஅழுத்தமாக இருக்க வேண்டியிருக்குமே!” என்று நினைக்கிறீர்களா? அப்படி மனஅழுத்தமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. ஆவியில் வாழ்வதென்றாலே என்ன பொருளென்றால் நமக்கு ஒரு தனிப்பட்ட ஆலோசகர் இருந்தால் நம் நிகழ்ச்சிகளை எப்படிப் பின்பற்றுவாரோ அப்படி பரிசுத்த ஆவியானவர் நடத்துவார். “சார், நீங்கள் இன்றைக்கு 6 மணிக்கு இவரைப் பார்க்க வேண்டும். சார், இன்றைக்கு இந்தக் கடிதத்தை அனுப்ப வேண்டும். சார், நாளைக்கு உங்களுக்கு ஒரு கூட்டம் இருக்கிறது,” என்று ஒரு தனிப்பட்ட ஆலோசகர் செய்கின்ற ஊழியத்தைப் பார்க்கிலும் பரிசுத்த ஆவியானவர் மிகச் சிறந்த ஊழியம் செய்வார். இது தேவனுடைய பிள்ளைகளுடைய சிலாக்கியம். அதனால் நாம் ஜெபிக்க வேண்டும். “ஆண்டவரே, உம் பிள்ளைகள் எல்லாருடைய நிலைமையைப்பற்றியும், இன்று அவர்கள் தேவையில் இருப்பார்களென்றால் அந்தத் தேவைக்கு என்னிடமிருந்து நான் பரிமாற வேண்டும் அல்லது கொடுக்க வேண்டுமென்றால் நான் அதை இழந்துபோக விரும்பவில்லை.” அப்பொழுது நாம் ஆவியின் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்கிறோம். இதுதான் உங்களின் புரிந்துகொள்ளுதலின்படி ஆவியின் ஒருமைப்பாடா அல்லது ஆவியின் ஒருமைப்பாடு என்றால் நான் எதைப் பேசினேனோ அதையே இன்னொருவர் பேசுவதா?
இதை நான் முடித்துக்கொள்கிறேன். ஒரே சரீரம், ஒரே ஆவியானவர், ஒரே நம்பிக்கை, ஒரே கர்த்தர், ஒரே விசுவாசம், ஒரே ஞானஸ்நானம், ஒரே தேவனும் பிதாவுமானவர் என்பதைப்பற்றி நாம் இன்னொரு நாளிலே நாம் ஐக்கியங்கொள்ளலாம். ஆனால் இந்தக் காரியத்தை நாம் சிரத்தையோடு எடுத்து செய்வோமென்றால் உண்மையிலேயே நாம் யார் யாரோடு தொடர்புகொள்கிறோமோ, உறவுகொள்கிறோமோ குறிப்பாக நம் குடும்பங்கள், தேவனுடைய மக்களுக்கிடையே உள்ள உறவு. கிறிஸ்துவின் அன்பை மட்டுமல்ல, கிறிஸ்துவின் செல்வங்களை அவருடைய சகல பரிபூரணத்திலும் நாம் ஒருவருக்கொருவர் கொடுப்பதற்கும், நாம் அனுபவிப்பதற்கும் மிகவும் உதவியாக இருக்கும். நம் உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கு, ஒருவருக்கொருவர் பணிவிடைசெய்வதற்கு, ஒருவருடைய தேவையைக் குறித்து நாம் அக்கறையும், கரிசனையும் உணர்வும் உள்ளவர்களாக இருப்போமென்றால் நாம் அறிந்த கிறிஸ்து, நாம் பார்க்கிற கிறிஸ்து, நாம் அனுபவிக்கிற கிறிஸ்து, நாம் வாழ்கிற கிறிஸ்து, நமக்குள் உருவாகுகிற கிறிஸ்து, நாம் மற்றவர்களுக்குப் பரிமாறுகிற கிறிஸ்து மிகவும் ஐசுவரியசம்பன்னராய் இருப்பார், ஆமென்.