Transcribed from a message spoken in August, 2013 in Chennai
By Milton Rajendram
“இந்த வாரம் முழுவதும் என் வாழ்க்கையில் கர்த்தர் எந்த வேலையும் செய்யவில்லை,’ என்று ஒருவரும் சொல்ல முடியாது. ஆனால், அவர் எந்த வேலையும் செய்ததுபோலவும் இருக்காது.”உண்மையிலேயே கர்த்தர் இந்த வாரத்திலே என் வாழ்க்கையில் இருந்தாரா!” என்பதுபோல் தோன்றலாம். ஆனால், ஒரு செய்தியை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். ஒவ்வொரு நாளும் நம் வாழ்க்கையிலே கர்த்தர் வேலை செய்துகொண்டிருக்கிறார். இது மிகவும் மகிழ்ச்சியான ஒரு செய்தி.
நாம் கடந்த ஒரு சில வாரங்களாகப் பார்த்ததுபோல நாம் கிறிஸ்துவின் சரீரத்தின் உறுப்புகளாக இருக்கிறோம்; கிறிஸ்து சரீரத்தின் தலையாக இருக்கிறார். நாம் ஏன் இந்தக் கிறிஸ்துவின் சரீரத்தின் உறுப்புகளாக இருக்கிறோம்? கிறிஸ்து ஏன் தலையாக இருக்கிறார்? இதைப்பற்றி நாம் நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். அது மிக முக்கியம்; ஏனென்றால், இது நம் வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியுள்ள வாழ்க்கையாக, ஆசீர்வாதமான வாழ்க்கையாக, கனிநிறைந்த வாழ்க்கையாக மாற்றும். இதைப்பற்றி நமக்கு ஓர் அறிவு, ஒரு வெளிப்பாடு, ஒரு வெளிச்சம் இல்லையென்றால் நாம் நம் வாழ்க்கையைக் கெடுப்போம்; பிறருடைய வாழ்க்கையையும் நாம் கெடுப்போம்.
எனவே, இதை நீங்கள் மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும். கிறிஸ்துவின் சரீரம் என்றால் என்ன? “கிறிஸ்துவின் சரீரம் என்பது புதிய ஏற்பாட்டிலே ஓர் ஆழமான சத்தியம். இந்த சத்தியத்தைப்பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும்,” என்பதற்காக மட்டும் நாம் இந்தக் கிறிஸ்துவின் சரீரத்தைப்பற்றித் தெரிந்துகொள்ள விரும்பவில்லை. இது என் வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கும். என் வாழ்க்கை ஆசீர்வாதமான வாழ்க்கையாக இருக்குமா அல்லது துன்பம் நிறைந்த, துயரம் நிறைந்த வாழ்க்கையாக இருக்குமா என்பதை இந்த அறிவு தீர்மானிக்கும். ஒரு சிலருக்கு இது உடனடியாகப் புரியும். இன்னும் ஒரு சிலருக்கு ஐந்து அல்லது பத்து வருடங்கள் கழித்து புரியும். சிலருக்கு 25 வருடங்கள் கழித்து புரியும். ஆனால், ஒரு நாளில் நீங்கள் இதைப் புரிந்துகொள்வீர்கள். எவ்வளவு விரைவாக, எவ்வளவு சீக்கிரமாக நாம் இதைப் புரிந்துகொள்கிறோமோ, அந்த அளவுக்கு நாமும் நம்மோடு தொடர்புடையவர்களும், அவர்களுடைய வாழ்க்கையும் மிகவும் ஆசீர்வாதமாக இருக்கும், நன்மை நிறைந்ததாக இருக்கும்.
1 கொரிந்தியர் 12ஆம் அதிகாரத்திலே, “தேவன் தமது சித்தத்தின்படி அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே (ஓர் இடத்திலே) வைத்தார்,” என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார் (வ. 18). தேவன் தம் சித்தத்தின்படி அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார் அல்லது அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே ஓர் இடத்திலே வைத்தார். ஒரு அவயவத்தை வைக்கும்போது மற்ற அவயவங்களோடு தொடர்புடைய அல்லது மற்ற அவயவங்களைப் பொறுத்தவரை ஓர் இடத்தில் வைக்கிறார். இப்பொழுது ஒரு நூதனமான கற்பனை செய்து பார்க்க வேண்டும். எப்படியென்றால் ஏதாவது இரண்டு அவயவங்களை நம் உடலிலே இடம்மாற்றி வைத்தால் அந்தக் காட்சி எப்படி இருக்குமென்று நீங்கள் கற்பனைசெய்து பார்க்க வேண்டும். இது மிகவும் வேடிக்கையான கற்பனையாக இருக்கும். கேலிச்சித்திரம் வரைபவர்களுக்கு இது மிகவும் வசதியான கற்பனையாக இருக்கும். வாய் மேலேயும் மூக்கு கீழேயும் இருந்தால் எப்படியிருக்கும்? கண் கீழேயும் மூக்கு மேலேயும் இருந்தால் எப்படியிருக்கும்? கை கீழேயும் கால் மேலேயும் இருந்தால் எப்படியிருக்கும்? இதுபோன்ற நூதமான கற்பனைகளில் நீங்கள் ஈடுபடுவது உங்களை மிகவும் பக்திவிருத்தியடையச் செய்யும். தேவன் சரீரத்திலே ஒவ்வோர் அவயவத்தையும் ஓர் இடத்திலே வைத்திருக்கிறார்.
அதே 1 கொரிந்தியர் 12ஆம் அதிகாரம் (24, 25ஆம் வசனங்கள்) “சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல் அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படிக்கு தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு அதிக கனத்தைக் கொடுத்து இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார்.” ”வைத்திருக்கிறார்“,”அமைத்திருக்கிறார்.” சரீரத்திலே ஒவ்வோர் அவயவத்தையும் ஓர் இடத்திலே வைத்திருக்கிறார் அல்லது சரீரத்திலே ஒவ்வோர் அவயவத்தையும் ஓர் இடத்திலே அமைத்திருக்கிறார்.
அதேபோல தேவனுடைய மக்களுக்கிடையேயுள்ள தேவனுடைய குடும்பம் என்ற வாழ்க்கையில் அல்லது தேவனுடைய மக்கள் என்கிற சமுதாய வாழ்க்கையில், தேவனுடைய மக்களுக்கிடையேயுள்ள உறவில் தேவன் நம் ஒவ்வொருவரையும் ஓர் இடத்திலே வைத்திருக்கிறார்; நம் ஒவ்வொரு வரையும் ஓர் இடத்திலே அமைத்திருக்கிறார். நம் குடும்பம் என்பது தேவனுடைய குடும்பத்தினுடைய ஒரு குறுவடிவம். எனவே, தேவனுடைய குடும்பத்தைப்பற்றிய எல்லா உண்மைகளும் நம் குடும்பங்களுக்கும் பொருந்தும். எனவேதான், நான் உங்களுக்குச் சொல்கிறேன். இதை நாம் புரிந்துகொள்வது நம் குடும்ப வாழ்க்கையை மிகுந்த மகிழ்ச்சியும், நன்மையும் நிறைந்த வாழ்க்கையாக மாற்றிவிடும். இதை நாம் புரிந்துகொள்ளவில்லையென்றால் குடும்ப வாழ்க்கை நட்டமும், துக்கமும் நிறைந்த வாழ்க்கையாக மாறும். உலகத்திலே நாம் எங்கு போனாலும் இதைக் கற்றுக்கொள்ள முடியாது. தேவனுடைய குடும்பமாக இருந்தாலும் சரி, நம் குடும்பமாக இருந்தாலும் சரி, தேவன் நம்மை, ஒவ்வொரு அவயவத்தையும், ஓர் இடத்தில் வைத்திருக்கிறார் அல்லது ஓர் இடத்திலே அமைத்திருக்கிறார். இன்னொரு நபரைப் பொறுத்தவரை அவருக்கு ஓர் இடமும், எனக்கு ஓர் இடமும் உண்டு. அதை தேவன் அமைத்திருக்கிறார்.
வேதியியல் படிக்கிறவர்களுக்கு நான் ஒரு நல்ல உவமையைச் சொல்ல முடியும். கட்டு எப்படி உருவாகிறது என்று வேதியியலில் ஒரு பாடம் உண்டு. Electrovalent bond, covalent bond. ஒருவேளை கணவன், மனைவி, ஒரு பிள்ளை என்ற மூன்று பேராலான குடும்பத்தைப் பொறுத்தவரை தேவன் ஒவ்வொருவரையும் ஓர் இடத்திலே வைத்திருக்கிறார்; ஓர் இடத்திலே அமைத்திருக்கிறார் அல்லது நான்கு பேரைப் பொறுத்தவரை அல்லது ஒரு சிறிய குடும்பத்தைப் பொறுத்தவரை பெற்றோர்கள், பிள்ளைகள், உடன்பிறந்தவர்கள், மாமா, அத்தை, சித்தப்பா, சித்தி அல்லது அயலகத்தாரைப் பொறுத்தவரை அல்லது நம்மோடு உடன் வேலைபார்ப்பவரைப் பொறுத்தவரை…இது இப்படி இரண்டு பேராக இருக்கலாம் அல்லது மூன்று பேராக இருக்கலாம் அல்லது பலராக இருக்கலாம். எங்கெல்லாம் தேவன் இப்படி மக்களைத் தொடர்புபடுத்தி, உறவுபடுத்தி அல்லது நாம் பார்த்ததுபோல இணைத்து, கட்டி, சேர்த்து வைக்கிறாரோ அங்கெல்லாம் ஒருவரைப் பொறுத்தவரை அங்கு ஓர் இடம் இருக்கிறது. என் மனைவியைப் பொறுத்தவரை எனக்கு ஒரு இடம் இருக்கிறது. என் பிள்ளைகளைப் பொறுத்தவரை எனக்கு ஓர் இடம் இருக்கிறது. என் தகப்பனாரை, தாயாரைப் பொறுத்தவரை எனக்கு ஓர் இடம் இருக்கிறது. என் உடன்பிறந்தவர்களைப் பொறுத்தவரை எனக்கு ஓர் இடம் இருக்கிறது. என் அயலகத்தாரைப் பொறுத்தவரை எனக்கு ஓர் இடம் இருக்கிறது. என் மாணவர்களைப் பொறுத்தவரை, என்னோடு உடன்வேலைபார்ப்பவர்களைப் பொறுத்தவரை ஓர் இடம் இருக்கிறது. தேவன் நம்மை ஓர் இடத்திலே வைத்திருக்கிறார், அமைத்திருக்கிறார். அவர்களோடு நாம் உறவுகொண்டு வாழ்கிற வாழ்க்கை அந்த இடத்திற்கு ஒத்தவாறு இருக்க வேண்டும். இதுதான் நான் சொல்ல விரும்புகிற காரியம்.
ஒருவேளை இதைச் சற்று விளக்குவதற்காக நான் பழைய ஏற்பாட்டிலிருந்தோ, புதிய ஏற்பாட்டிலிருந்தோ ஒருசில காரியங்களைச் சொல்லலாம். ஆனால் சொல்லவருகிற முக்கியமான காரியம் என்னவென்று கேட்டால் நம் ஒவ்வொருவருக்கும் மற்றவர்களைப் பொறுத்தவரை ஓர் இடம் உண்டு. தேவனே அந்த இடத்தை அமைத்திருக்கிறார். நாம் அவர்களைப் பொறுத்தவரை அந்த இடத்தில் இருந்து, அந்த இடத்தில் நின்று, அந்த இடத்தில் நடந்துதான் வாழ வேண்டும். ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு இருப்பு, ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு நிலை உண்டு. ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு நடை உண்டு. தேவன் என்னை வைத்திருக்கிற, எனக்கு அமைத்திருக்கிற இடம் இதுவென்றால் அந்த இடத்திற்கு ஒத்தவாறுதான் நாம் இருக்க வேண்டும். அந்த இடத்திற்கு ஒத்தவாறுதான் நாம் நிற்க வேண்டும். அந்த இடத்திற்கு ஒத்தவாறுதான் நாம் நடக்க வேண்டும் அல்லது நாம் வாழ வேண்டும். அப்படி நாம் செய்யும்போது அங்கு உறவுகள் கட்டியெழுப்பப்படும் அல்லது புதிய ஏற்பாட்டினுடைய வார்த்தைகளில் சொல்வதானால் கிறிஸ்துவின் சரீரம் கட்டியெழுப்பப்படும்.
அந்த இடத்தைப்பற்றிய எந்த அக்கறையுமின்றி, “இந்த இடத்திலே நான் இப்படியிருக்க வேண்டும், இப்படி நிற்க வேண்டும், இப்படி நடக்க வேண்டும்,” என்ற எந்த அக்கறையுமின்றி நான் வாழ்வேனென்றால் அங்கு உறவுகள் சிதைக்கப்படும், கிறிஸ்துவின் சரீரம் சிதைக்கப்படும். அங்கு கிறிஸ்துவினுடைய பரிபூரணம், கிறிஸ்துவினுடைய முழுநிறைவு, நன்மைகள், ஆசீர்வாதங்களையெல்லாம் ஒன்றும் நாம் கற்பனை செய்து பார்க்க முடியாது; ஒன்றும் இருக்காது. அதற்கு மாறாக அங்கு குழப்பங்களும், இருளும், மரணமும், வறட்சியும்தான் காணப்படும்.
பழைய காலத்து தூதர்களைப்பற்றி யூதாவிலே ஒரு வசனம் உண்டு. அவர்கள் தங்கள் ஆதி நிலையைத் தக்கவைத்துக்கொள்ளவில்லை. யூதா (6 ஆம் வசனம்) “தங்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும் மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி அந்தகாரத்திலே அடைத்துவைத்திருந்தார்”. தூதர்களுக்கென்று தேவன் ஓர் இடத்தைக் குறித்திருக்கிறார், வைத்திருக்கிறார், அமைத்திருக்கிறார். அந்த இடத்தைவிட்டு, அதாவது வாசஸ்தலம் என்று எழுதியிருக்கிறது. அந்த இடத்தைவிட்டு இன்னொரு இடத்தை எடுத்துக்கொள்ள முயற்சிசெய்கிறபோது தேவன் அவர்களை நியாயந்தீர்க்கிறார். மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
என் மனைவியைப் பொறுத்தவரை அல்லது என் பெற்றோர்களைப் பொறுத்தவரை, என் சகோதர சகோதரிகளைப் பொறுத்தவரை அல்லது இந்த சகோதரியைப் பொறுத்தவரை எனக்கு ஒரு இடம் இருக்கிறது. நான் அந்த இடத்தைவிட்டுப் பிறழும்போது என் இருப்போ, நான் நிற்பதோ, நான் நடப்பதோ அந்த இடத்திற்கு ஒவ்வாமல், முரணாக, மாறுபாடாக இருக்கும்போது தேவன் அதை நியாயந்தீர்க்கிறார். தேவன் நியாயந்தீர்ப்பது நாம் நியாயந்தீர்ப்பதுபோல் இருக்காது. அதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். தேவன் நம்மைப்போல் யோசிப்பது இல்லை. நான் நினைக்கிறேன். “அந்த சைபீரியாவில் விழுந்த எரிநட்சத்திரம் இவன் தலைமேலே விழுந்திருக்கக் கூடாதா!” என்று நாம் நினைப்பதுண்டு. நம் நியாயத்தீர்ப்பு அப்படிப்பட்டது. இடிமுழக்க மக்களாகிய யோவானும், யாக்கோபும் சொன்னதுபோல, “ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினியை இறக்கி தங்கள் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ளாத இவர்களை நாங்கள் எரித்துவிடட்டுமா?” (லூக்கா 9:54) என்று நாம் சொல்லக்கூடும். ஆனால், தேவன் நாம் நியாயந்தீர்ப்பதுபோல் நியாயந் தீர்ப்பதில்லை.
தேவன் நியாயந்தீர்க்கிறார். 1 கொரிந்தியர் 11ஆம் அதிகாரத்தில் பவுல் கர்த்தருடைய பந்தியைப்பற்றி எழுதுகிறார். கொரிந்தியர்கள் ஒரு தவறு செய்கிறார்கள். என்ன தவறு என்றால் அவர்களெல்லாரும் கூடிவரும்போது, செல்வம் படைத்தவர்கள் தனியாகக் கூடி தாங்கள் கொண்டுவந்த உணவுப்பொருட்களையெல்லாம் புசித்துக் குடித்து வெறித்திருக்கிறார்கள். ஆனால், ஏழை எளிய மக்கள் பசியோடு இருக்கிறார்கள். பவுல் அதைத் தீர்க்கிறார். “புசிக்கவும் குடிக்கவும் வேண்டுமென்றால் உன் வீட்டிலேயே புசித்துக் குடி. தேவனுடைய சபை என்ற முறையிலே கூடிவரும்போது நீங்கள் உங்களுக்குள்ளே ஒரு தனிக்குழுவை ஏற்படுத்திப் புசித்தால், குடித்தால் அதைத் தேவன் நியாயந்தீர்ப்பார். அப்படிச் செய்வதால் நீங்கள் தேவனுடைய சபையை அசட்டைசெய்கிறீர்கள். ஏழைகளை வெட்கப்படுத்துகிறீர்களா?” என்று மேற்கொண்டு சொல்லும்போது “அதினால் உங்களில் சிலர் வியாதியாயிருக்கிறீர்கள். சிலர் நித்தியடைந்துமிருக்கிறீர்கள்,” என்று சொல்லுகிறார். நித்திரை என்பது தூக்கம் அல்ல; நித்திரை என்பது மரணத்தைக் குறிக்கிறது.
தேவனுடைய மக்களைப் பொறுத்தவரை நமக்கு ஒரு இடம் இருக்கிறது. அந்த இடத்திற்குத் தக்கவாறு, நாம் இருக்க வேண்டும், நிற்க வேண்டும், நடக்க வேண்டும். சில சாதாரண காரியமாக இருக்கலாம். உணவைக்குறித்துகூட நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எச்சரிக்கை என்றால் சாப்பிடும்போது அதற்காகப் “பதற்றமாகச் சாப்பிட வேண்டும்” என்று நான் சொல்லவில்லை. சாப்பாடு தேவனுடைய மக்கள் எல்லாருக்கும் உரியது. எனக்கு அதில் ஒரு பங்கு உண்டு. தேவனுடைய மக்களைப் பொறுத்தவரை என் இடத்தைவிட்டுத் தடம்புரண்டு அல்லது இடம்புரண்டு நான் நிற்கும்போது, நடக்கும்போது, வாழும்போது தேவன் நம்மை நியாயந்தீர்க்கிறார்.
தூதர்கள் அவர்கள் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ளாதபோது தேவன் நியாயந்தீர்க்கிறார். தேவன் தம் மக்கள் தங்கள் இடத்திற்குத் தக்கவாறு வாழாதபோது எப்படி நியாயந்தீர்க்கிறார்? கொரிந்தியர்கள் தங்கள் வீடுகளிலே புசித்து, குடித்து, வெறிப்பதைப்பற்றி பவுல் ஒன்றும் சொல்லவில்லை. “தாராளமாக நீங்கள் குடித்துக்கொள்ளுங்கள்.” ஆனால் சபையிலே நீங்கள் வாழவேண்டிய முறை அப்படியல்ல.
நான் சொல்லப்போவது விழுங்குவதற்கு கொஞ்சம் கடினமாக இருக்கும். ஆனால் இதை சகோதரர்கள் ஒருவேளை “நான் அளவுக்கு அதிகமாகச் சொல்கிறேன்” என்றால் தேவனுடைய மக்கள் எல்லாரும் அதை யோசித்து நீங்கள் அதைத் திருத்தலாம். நான் சொல்ல விரும்புவது அதுதான்.
நான் இரண்டுபேரை எடுத்துக்கொள்கிறேன்; பலரை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. ஏனென்றால், இரண்டுபேரைப்பற்றிப் பேசும்போது பேசுவதற்குக் கொஞ்சம் எளிதாக இருக்கும். ஆனால், இரண்டு பேருக்குச் சொல்கிற இந்தக் காரியங்கள் பலருக்கும் பொருந்தும். இரண்டுபேருக்கிடையே உள்ள உறவிலே அந்த இரண்டு பேருக்கும் ஒரு இடத்தைத் தேவன் வைக்கிறார். கணவனுக்கு ஒரு இடம் உண்டு. “உன் மனைவியினிடத்தில் நீ அன்புகூர்” என்பது ஒரு கணவனுடைய இடத்தை வரையறுக்கிறது. மனைவிக்கு ஒரு இடம் இருக்கிறது. “உங்கள் கணவனுக்கு நீங்கள் அடிபணியுங்கள்.” பணியுங்கள் அவ்வளவுதான். submit. கீழ்ப்படி என்றால் obey. பணியுங்கள். ரொம்ப எளிதான வார்த்தைதான்.
பணிதல் என்பது கீழ்ப்படிதலைவிட ரொம்ப கஷ்டம். பணிதல் இல்லாமல்கூட கீழ்ப்படிய முடியும். “கடைக்குப் போய்விட்டு வா” என்று சொல்லலாம். “ஓயாமல் கடைக்குப் போய்விட்டு வா, போய் விட்டு வா என்கிறீர்கள். சரி. பையைக் கொடுங்க. போயிட்டு வாரேன்,” என்று சலிப்புடன் பையை வாங்கிக்கொண்டு கடைக்குப்போய் சாமான் வாங்கிக்கொண்டு வந்தால் அது கீழ்ப்படிதலா? ஆம். ஆனால், பணிந்தடங்குதலா? இல்லை. மனைவியைப்பற்றிச் சொல்லும்போது “நீங்கள் அடிபணியுங்கள்” என்றும், பெற்றோர்களைப்பற்றிச் சொல்லும்போ, “உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும், போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக,” என்றும் சொல்லுகிறார்.
சிட்சை இருக்க வேண்டும். சிட்சை என்றால் சில நெறிமுறைகள் உண்டு. ஒரு நெறி என்று உண்டு. சில சமயங்களில் நம் கண்டிப்பை நம் தொனியிலே உணர்த்த வேண்டும். “Don’t do that” என்று சொல்லும்போது “இவருக்குக் கனிவாகவே பேச வராது,” என்பதற்காக அப்படிச் சொல்லவில்லை. கனிவாகவும் பேச வரும். ஆனால் அந்த சமயத்தில் “Don’t do that” என்ற தொனியிலே குழந்தைக்குத் தெரிய வேண்டும். சிட்சையில் வளர்க்கலாம். ஆனால் எரிச்சல் மூட்டாதிருங்கள்.
பிள்ளைகளைப்பற்றிச் சொல்லும்போது, “கர்த்தருக்குள் உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள்,” என்று சொல்லுகிறது. பிள்ளைகளைப் “பணியுங்கள்” என்று சொல்லவில்லை. கீழ்ப்படியுங்கள். பிள்ளைகளை, “உனக்குப் பிடிக்குதோ பிடிக்கவில்லையோ கடைக்குப் போய்விட்டு வா.” “நீங்கள் செய்கிறது எனக்குப் பிடிக்கவே பிடிக்கவில்லை. இந்த உடை எனக்குப் பிடிக்கவில்லை,” என்று பிள்ளைகள் சொல்லலாம். “பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ இந்த உடைதான் என்னால் வாங்க முடியும். இப்படிப்பட்ட மிதியடிதான் என்னால் வாங்கித்தர முடியும். குதிரை மாதிரி இருக்கிற ஷூ தான் வேண்டுமென்றால் என்னால் அதை வாங்க முடியாது. நீயே சம்பாதித்து அப்படிப்பட்ட செருப்பு, உடை வாங்கிக்கொள். இப்படிப்பட்ட செருப்புதான் எனக்கு வாங்கத் தெரியும்.” அவர்கள் மனமுவந்து பணிந்து கீழ்ப்படிந்தாலும் சரி, எப்படி கீழ்ப்படிந்தாலும் சரி, “பெற்றோர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்.”
வேலைக்காரர்களைப்பற்றிச் சொல்லும்போது, “நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல. சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்குப் பயத்தோடும் நடுக்கத்தோடும் கபடற்ற மனதோடும் கீழ்ப்படிந்து, மனிதருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ் செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி சேவியுங்கள்” என்றும், எஜமான்களுக்குச் சொல்லும்போது, “அப்படியே நீங்களும் உங்கள் வேலைக்காரருக்குச் செய்யவேண்டியதைச் செய்து, அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமானர் பரலோகத்தில் இருக்கிறார் என்றும், அவரிடத்தில் பட்சபாதமில்லை என்றும் அறிந்து கடுஞ்சொல்லை விட்டுவிடுங்கள்,” என்றும் சொல்லுகிறார். அங்கே அன்பெல்லாம் ஒன்றும் இருக்காது. “நியாயமாய் நடத்துங்கள்”. அன்பு காட்டுகிறாயோ காட்டவில்லையோ அதைப்பற்றியெல்லாம் கவலை கிடையாது. ஆனால், என்ன இருக்க வேண்டும்? நியாயமாய் நடத்த வேண்டும்.
இவைகளெல்லாம் நாம் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அற்புதமான பகுதி அந்த எபேசியர் பகுதி. ஒவ்வொரு உறவிலும் இடம் இருக்கிறது. வேலைக்காரனுக்கு ஒரு இடம். எஜமானனுக்கு ஒரு இடம். அவர் அந்த இடத்தில் நின்றுதான் வாழ வேண்டும். மனைவிக்கு ஒரு இடம். கணவனுக்கு ஒரு இடம். அந்த இடத்திற்கு ஒத்தவாறுதான் அவர் வாழ வேண்டும். பெற்றோர்களுக்கு ஒரு இடம். பிள்ளைகளுக்கு ஒரு இடம். ஆசிரியருக்கு ஒரு இடம். மாணவருக்கு ஒரு இடம். அந்த இடத்திற்கு ஒத்தவாறுதான் நாம் வாழ வேண்டும். இந்த உலகத்திலே அந்த இடத்திற்கு ஒத்தவாறு அவர்கள் வாழமாட்டார்கள்.
“என் மனைவி எனக்குப் பணியவில்லை. அதினால், நான் அவளிடத்தில் அன்புகூர முடியாது. என் கணவன் என்மேல் அன்புகூர்வதில்லை. எனவே, நான் அவருக்குப் பணிய முடியாது,” என்றால் இது தேவனிடமிருந்து வருகிற கோட்பாடல்ல. இது எங்கிருந்து வருகிற கோட்பாடு? இது இந்த உலகத்தினுடைய கோட்பாடு அல்லது இந்த உலகத்தின் அதிபதியாகிய தேவனுடைய பகைவன், சத்துரு, பிசாசு அவனிடமிருந்து வருகிற கோட்பாடு.
“அந்த ஆசிரியர் நல்ல தலைசிறந்த ஆசிரியரென்றால் நான் அவரை மதிப்பேன். இல்லையென்றால் நான் அவரை மதிக்கமாட்டேன்” அல்லது “ரொம்ப கீழ்ப்படிகிற, நன்றாகக் கவனிக்கிற மாணவனென்றால் நான் நன்றாய்ச் சொல்லிக்கொடுப்பேன். கவனிக்காத மாணவனென்றால் நான் சொல்லிக் கொடுக்க மாட்டேன்” என்பது எங்கிருந்து வருகிற கோட்பாடு? இது தேவனிடத்திலிருந்து வருவதா அல்லது உலகத்திலிருந்து வருவதா? இது உலகத்தினுடைய கோட்பாடு. உலகத்திலே இடத்தைப் பொறுத்தவரை அவர்களுக்கு எந்த மதிப்பும் இல்லை.
ஆனால், தேவனைப் பொறுத்தவரை இடம் என்பது பரிசுத்தமான ஒன்று. பரிசுத்தமான ஒன்று என்றால் அதை நாம் மீறும்போது, அதிலிருந்து நாம் பிறழும்போது, தடம் புரழும்போது தேவன் அதை இலேசாக எடுத்துக்கொள்வதில்லை. தேவன் அதை மிகவும் சிரத்தையாக எடுத்துக்கொள்கிறார்.
எல்லா மனிதர்களோடுள்ள உறவிலும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். “என் கணவன் என்மேல் அன்புகூர்வதில்லை. நான் எவ்வளவோ துன்பப்படுகிறேன். என் கணவன் அன்பினால் என் நிலையை அவன் யோசித்துக்கூட பார்ப்பது இல்லை,” என்பதுதான் ஒரு மனைவியினுடைய நிலைமையாக, சூழ்நிலையாக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த மனைவியினுடைய மனதைப்பற்றி அல்லது மனைவியினுடைய உடல்நிலையைப்பற்றி, பாடுகளைப்பற்றி என்ற எண்ணமும் இல்லை என்று வைத்துக்கொள்வோம். கணவனை ஒரு எடுத்துக்காட்டாகச் சொல்லுகிறேன்.
பிள்ளைகளைக்கூட எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். ஒருவேளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்காகப் பெரிய தியாகம் செய்து வாழலாம். ஆனால், அந்தப் பிள்ளைகள் வாழ்கிற வாழ்க்கையைப் பார்க்க வேண்டுமே! இவர் ஒரு டீ குடிப்பதற்கு யோசித்து அந்தப் பணத்தை மிச்சப்படுத்துவார். ஆனால், அவருடைய மகன் 20,000ரூபாய்க்கு android mobile வாங்கி காதிலே மாட்டிக்கொண்டு எல்லாருக்கும் காட்டிக்கொண்டிருப்பார்.
என் அம்மா ஒரு பழமொழி சொல்வதுண்டு. “காதிலே கிடக்கிறதைக் கழற்றி காலிலே செய்து போட்டுகிட்டு கதவுகிடுக்கில் நின்றுகொண்டு காலக்கால ஆட்டினாளாம்.”
அதுபோல அப்பா டீ குடிக்கிற காசை வைத்துக்கொண்டு android mobile ஒன்று வாங்கிக்கொண்டு எல்லாருக்கும் நடுவிலே நின்று காதைக் காட்டினானாம். என்ன phone இது? android! i-phone!
பெற்றோர், பிள்ளைகள், கணவன், மனைவி, வேலைக்காரர்கள், வேலைக்காரிகள், சகோதர சகோதரிகள் மிக முக்கியமாக, கடைசியாக, நான் பேசுவது யாருக்குத்தான் சகோதர சகோதரிகளுக்குத்தான். ஏனென்றால், தேவனுடைய குடும்பம் என்ற முறையிலே நாம் எப்படி வாழ்வது என்று நமக்குத் தெரியாது. பல சமயங்களில் ஒரு சகோதரன் கடினமாக நடந்துகொள்கிறாரென்றால் “இவரெல்லாம் ஒரு கிறிஸ்தவனா?” என்று இப்போதே தீர்ப்பு வழங்கிவிடக்கூடாது. பத்து வருடங்களாவது பொறுத்திருங்கள். அப்போது தெரியும். “ஓ! என்னுடைய பெற்றோர்கள் ஏன் அப்போது இதைச் செய்தார்கள் அல்லது செய்ததில்லை” என்பது அப்போது விளங்கும். கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். உடனுக்குடன் தீர்த்துவிடக்கூடாது.
சரி, காரியத்துக்கு வருகிறேன். இப்பொழுது அந்த மனைவி என்ன செய்ய வேண்டும். என்னுடைய கேள்வி இதுதான். அந்த மனைவியினுடைய உடல்நலத்தைக்குறித்தோ, உடலிலே படுகிற பாடுகளைக்குறித்தோ, இளைப்பாறுதல் இல்லை என்பதைக்குறித்தோ எந்த அக்கறையும் இல்லாமல் அந்த கணவன் வாழ்கிறான் என்று வைத்துக்கொள்வோம். சமைக்கிறாள், துணி துவைக்கிறாள், வீட்டைப் பராமரிக்கிறாள். ஆனால், அவளுடைய இளைப்பாறுதலைப்பற்றி எந்த அக்கறையுமே இல்லை என்று வைத்துக்கொள்வோம் அல்லது மனதிலே ஆயிரம் புண்கள், காயங்கள், வேதனைகள், கதறுதல்கள், விம்மல்கள் உண்டு. அதைப்பற்றியும் எந்தக் கவலையும் இல்லை என்று வைத்துக்கொள்வோம். திட்டுகிறான் என்று வைத்துக்கொள்வோமே அல்லது அடித்துவிடுகிறான் இப்போது அந்த மனைவி என்ன செய்ய வேண்டும்? நீங்கள் சொல்லுங்கள். அல்லது கணவன், “நான் எவ்வளவோ தியாகம் பண்ணுகிறேன். என் மனைவி தியாகத்தைப்பற்றி ஒரு பாராட்டுதலும் இல்லை,” என்று சொல்லுகிறான்.
இந்த உலகத்திலே விவாகரத்து மலிந்துகிடக்கிறது. திருமணம் என்பது ஒரு உடன்படிக்கை. ஆபிரகாமோடு தேவன் ஒரு உடன்படிக்கை செய்யும்போது அந்த சாயங்கால வேளையிலே இருண்டு கொண்டுவரும்போது ஒரு மிருகத்தை அறுத்து “நான் உடன்படிக்கை பண்ணுவேன்,” என்று தேவன் சொல்லுகிறார். ஏனென்றால், ஆபிரகாமுக்கு மிகவும் பயமாக இருக்கிறது. சுற்றியுள்ள தேசத்திலே வாழ்கின்ற அரசர்களெல்லாம் அவனையும், அவன் குடும்பத்தையும் தொலைத்துவிடுவார்கள் என்ற பயம் வரும்போது, அவனுடைய பயத்தை நீக்கி அவனுக்கு ஒரு நம்பிக்கையை, தைரியத்தை, கொடுப்பதற்காக, “நான் ஒரு உடன்படிக்கை செய்துகொள்கிறேன்,” என்று தேவன் சொல்லுகிறார். “ஒரு மிருகத்தை எடுத்துக்கொண்டுவந்து, இரண்டாக வெட்டி, ஆயத்தமாயிரு; நான் வருகிறேன்,” என்றார். சாயங்காலமாயிற்று தேவன் இன்னும் வரவில்லை. ஆபிரகாம் பறவைகளையெல்லாம் விரட்டிக்கொண்டிருக்கிறார். கடைசியிலே தேவன் வருகிறார். பிளந்து வைத்திருக்கிற அந்த மிருகத்தின் நடுவே தேவன் அக்கினி மயமாகக் கடந்துபோகிறார். அந்தக் காலத்தில் எப்படி உடன்படிக்கை பண்ணுவார்களாம் என்றால் மிருகத்தை அறுத்து வைப்பார்களாம். உடன்படிக்கை பண்ணுகிற இரண்டுபேரும் நடுவில் நடந்து போக வேண்டும். அப்படியென்றால் என்ன அர்த்தம் என்று கேட்டால் “இன்று நாம் செய்துகொள்வது, இந்த உறவு உடன்படிக்கை. இதில் எந்த சாரார் இந்த உடன்படிக்கையை உடைத்தாலும் சரி, அந்த மிருகத்துக்கு என்ன நேரிட்டதோ அது அந்த சாராருக்கும் நிகழ வேண்டும். நான் அந்த உடன்படிக்கையை உடைத்தேன் என்றால் அந்த மிருகத்திற்கு நேரிட்டதுபோல இரண்டு கூறாக வேண்டும்.”
கல்யாணத்தில் பாட்டெல்லாம் பாடக்கூடாது. கல்யாணம் நடக்கும்போது மிருகத்தை வெட்டி இரண்டு பேரையும் நடுவிலே நடக்கவிட வேண்டும். அவர்களுக்கு ஞாபகமாவது இருக்கும். “நாம் இந்தத் திருமண உடன்படிக்கையை உடைத்தால் மிருகத்திற்கு நேரிட்டது, அந்த விலங்கிற்கு நேரிட்டது தேவன் நேரிட வைப்பார்.” மோதிரத்தை மாற்றுவது, தாலி கட்டுவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மேளம் அடிக்கிறது. மேளமா! எத்தனை தடவை வேண்டுமானாலும் அடித்துக்கொள்ளலாம். மோதிரமா! எத்தனை தடவை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். அதனால் ஒரு தெய்வ பயம் அவர்கள் இருதயத்திலே இல்லை. இது உடன்படிக்கையின் உறவு. இந்த உலகத்திலே ஒரேவொரு உறவு உண்டு. திருமணம் என்பது உடன்படிக்கையின் உறவு. பெற்றோர் பிள்ளைகளிடையே இரத்த உறவு உள்ளது.
இந்த மனைவி என்ன செய்ய வேண்டும்? அது சிலுவையின் வழி. ஒரே தலை, ஒரே கர்த்தர் என்று எபேசியர் 4ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருப்பது என்னவென்று கேட்டால் அந்த ஒரு தலை மற்ற அவயவங்களை அததற்குரிய இடத்தில் வைத்திருக்கிறார். நாம் ஒரே தலையின்கீழ் வாழ்கிறோமென்றால் நமக்கு ஒரு இடம் இருக்கிறது. அந்தத் தலையைப் பொறுத்தவரை நமக்கு ஒரு இடம் இருக்கிறது. என் மனைவிக்கு ஒரு இடம் இருக்கிறது. என் சகோதரனுக்கு ஒரு இடம் இருக்கிறது. நான் அந்த இடத்தைவிட்டு பிறழ்கிறேனென்றால் யாருக்கு எதிராக நான் பிறழ்கிறேன். தலைக்கு எதிராக நான் பிறழ்கிறேன். நான் இன்னொரு அவயவத்திற்கு எதிராக பிறழ்கிறேன் என்று நாம் நினைக்கலாம். அது ஒரு பார்வை. மிக மிக முக்கியமான பார்வை என்னவென்றால் நான் அந்தத் தலைக்கு எதிராகப் பிறழ்கிறேன். தலை அங்கு நடவடிக்கை எடுப்பார். சரி, “நான் பிறழ்கிறேன். இன்னொரு அவயவம் அந்த இடத்தைவிட்டுப் பிறழவில்லை,” என்று வைத்துக்கொள்வோம்.
இப்பொழுது இது ஒரே ஞானஸ்நானம். ஒரே ஞானஸ்நானம் என்பது நாம் மூழ்கி எழுந்திருக்கிற அந்த ஞானஸ்நானம் இல்லை. லூக்கா 12ஆம் அதிகாரத்தில் ஞானஸ்நானம் என்றால் என்னவென்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சொல்கிறார். “நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானம் உண்டு. அது நிறைவேறும்வரை எவ்வளவாய் நெருக்கப்படுகிறேன்.” ரோமர் 6ஆம் அதிகாரத்திலே ஞானஸ்நானத்தைப்பற்றிச் சொல்கிறார். “கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் கிறிஸ்துவின் மரணத்திற்குள்ளாக நாம் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறோம் என்று நீங்கள் அறியவில்லையா?” ஒரே ஞானஸ்நானம் என்றால் என்ன அர்த்தம்?
“என் கணவன் தன் இடத்தில் நிற்கவில்லை. ஆனாலும், நான் என் இடத்தைவிட்டுப் பிறழப் போவதில்லை. என் பணிவு என்பதைவிட்டு நான் பிறழப்போவது இல்லை” என்பது மரணத்தில் நிற்கிற நிலை. அது எளிதானதல்ல. அங்கு கண்ணீர், கதறுதல், விம்மல், வேதனை, வலி, நோவு ஆகிய அனைத்தும் இருக்கும். “சகோதரனே, கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்,” என்று சொன்னவுடனே நம் உறவுகள் கட்டியெழுப்பப்படுவதில்லை அல்லது “சகோதரியே, கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! சகோதரனே, கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!” என்று சொன்னவுடனே நம் உறவுகள் நேர்த்தியாக இருக்கிறது என்று அர்த்தம் கிடையாது. அடுத்த சாரார் இடத்தை தக்கவைத்துக் கொள்ளவில்லை; “அவர்கள் தங்கள் இடத்திலிருந்து புரண்டாலும், நான் என இடத்தைவிட்டு நகர்வதாக இல்லை” என்று சொல்வதற்கு ஒரு மனிதன் அல்லது ஒரு மனுஷி சிலுவையில் நிற்பதற்கு முன்வருகிறார்கள் என்று பொருள்.
யோசுவாவின் புத்தகத்தில் நீங்கள் ஒரு நிகழ்ச்சியை வாசித்திருப்பீர்கள். இஸ்ரயேல் முழுவதும் யோர்தானைக் கடந்துபோகிறவரைக்கும் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்துபோகின்ற ஆசாரியர்கள் அந்த யோர்தானின் நடுவிலே நிற்க வேண்டும். யோர்தான் கரைபுரண்டு ஓடுகிறது. யோசுவா சொல்கிறார்: முதலாவது ஆசாரியர்கள் அந்த உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு தண்ணீரிலே காலை வைக்க வேண்டும். வெள்ளம் புரண்டோடும்போது அவர்கள் காலடி எடுத்து வைத்தவுடன் வெள்ளம் நின்றுபோயிற்று. வெள்ளம் நின்றுபோயிருக்கலாம். ஆனால், பயம் நின்று போகாது. யோர்தான் நின்று ஒரு பெரிய சுவர்போல் இருந்ததாம்.
அந்த அளவுக்கு சிலுவையின் வழியில் நடக்கிற ஒரு சகோதரன், ஒரு சகோதரி, ஒரு மனிதன், ஒரு மனுஷி தேவனுக்கு இருப்பார்களென்றால் கண்டிப்பாக தேவன் யோர்தானை நிற்க வைப்பார். நாம் எப்பொழுதுமே யோர்தானின்மேல் பாலம் அமைக்கிற ஞானமுடையவர்கள். இஸ்ரயேல் முழுவதும் யோர்தானைக் கடந்துபோகிறவரை அந்த சாட்சிப்பெட்டியை சுமந்துகொண்டு ஆசாரியர்கள் நின்றார்கள். அது மட்டுமில்லை. கடந்துபோனபிறகும் ஒரு கோத்திரத்துக்கு ஒரு கல் அடையாளமாக இருக்கவேண்டுமென்ற அந்த வழிமுறையும் நடைபெற்றது. அதுவும் முடிந்தபிறகு பொறுமையாக அதற்குப்பிறகு ஆசாரியர்கள் உலர்ந்த தரையைவிட்டு காலடி எடுத்துவைக்கிறார்கள். அப்பொழுதுதான் யோர்தான் மறுபடியும் ஓடுகிறது.
ஓர் உறவைப் பொறுத்தவரை “நான் என் நிலையைவிட்டுப் பிறழப்போவதில்லை” என்றால் பொருள் இதுதான். அப்போஸ்தலர் 2ஆம் அதிகாரத்திலே கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சிலுவையிலே மட்டுமல்ல, மரணத்தில் இருக்கும்போது எப்படி இருந்தார் என்று தாவீதின் சங்கீதத்திலிருந்து மேற்கோள் காட்டப்படுகிறது. ரொம்ப அற்புதமான பகுதி. உங்கள் எல்லாருக்கும் தெரியும். “கர்த்தரை எப்பொழுதும் எனக்குமுன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன். நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபாரிசத்திலே இருக்கிறார். ஆகையால் நான் அசைக்கப்படுவதில்லை. என் இருதயம் மகிழ்ந்தது.” “எங்கே மகிழ்ந்தது?” என்று எங்கே சொல்கிறார். கல்லறைக்குள் இருந்து இயேசுகிறிஸ்து இந்த சங்கீதத்தைப் பாடுகிறார். “கல்லறையிலிருந்து கர்த்தர் இந்த சங்கீதத்தை ஜெபித்தார்” என்று நான் சொல்கிறேன் அல்லது “என் இருதயம் மகிழ்ந்தது” என்று பிதாவை நோக்கி சொன்னார்.
அடுத்த சாரார் தன் இடத்தைவிட்டுப் புரண்டு எனக்கு மகா துன்பங்களையும், துயரங்களையும், வேதனையையும், வலியையும் கொடுத்துக்கொண்டிருக்கிறார். நான் மரணத்தில் இருக்கிறேன். ஆனால், என் இருதயம் மகிழ்ந்தது; என் நாவு களிகூர்ந்தது. யோசித்துப் பார்ப்போம். “என் நாவு களிகூர்ந்தது. என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும். என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர். உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர். ஜீவ மார்க்கங்களை எனக்குத் தெரியப் படுத்தினீர். உம்முடைய சந்நிதானத்திலே என்னை சந்தோஷத்தினால் நிரப்புவீர்.” நான் என்னுடைய இடத்தைவிட்டு பிறழக்கூடாது என்றால் அது ஒரு சிலுவையின் அனுபவம். மரணத்தின் அனுபவம். இப்படிப்பட்ட ஒரு நம்பிக்கையோடு நாம் இந்த இடத்தில் கூடியிருக்க வேண்டும்.
1 பேதுருவிலே பேதுரு பல ஆலோசனைகளை தேவனுடைய மக்களுக்குக் கொடுக்கிறார். 2ஆம் அதிகாரத்திலே வேலைக்காரருக்குச் சொல்கிறார். “வேலைக்காரரே, அதிக பயத்துடனே உங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். நல்லவர்களுக்கும் சாந்தகுணமுள்ளவர்களுக்கும் மாத்திரம் அல்ல; முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள்.” இதுதான் ரொம்ப கஷ்டமானது. இது என்ன? நல்லவர்களுக்கும் சாந்தகுணமுள்ளவர்களுக்கும் மாத்திரமல்ல; முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள். நல்லவர்களும், சாந்தகுணமுள்ளவர்களும் தங்கள் இடத்திலே இருக்கிறார்கள். தங்கள் வேலைக்காரனைப் பொறுத்தவரை முரட்டுக்குணமுள்ள எஜமானன் தன் இடத்தை விட்டுப் புரண்டுவிடுகிறான். ஆனால் வேலைக்காரனைப் பொறுத்தவரை தேவனுடைய வார்த்தை சொல்லுகிறது. “உன்னுடைய எஜமான் நல்லவனும் சாந்தகுணமும் உள்ள தன்னுடைய இடத்தில் இருக்காமல் ஒரு கீழான இடமாகிய முரட்டுக்குணமுள்ளவனாயிருந்தாலும் உன் இடத்தை நீ விடாதே. உன்னுடைய இடம் எதுதான்? கீழ்ப்படியுங்கள்.”
பேதுரு இடம்புரண்ட ஆட்களுக்குச் சொல்கிறார். உறவிலே ஒரு சாரார் இடம் புரண்டுவிடுவார்கள். முரட்டுக்குணம்…இன்னொரு சாராருக்குச் சொல்கிறார்: கீழ்ப்படியுங்கள். 1 பேதுரு 3ஆம் அதிகாரத்திலே மனைவிகளுக்குச் சொல்கிறார்: மனைவிகளே, உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். அதாவது பணியுங்கள். அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால் பயபக்தியோடுள்ள உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து போதனையின்றி மனைவிகளின் நடக்கையினாலே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள்.” கணவன் எப்படிப்பட்ட ஆள்? இடம் புரண்டவன். அவன் தன் இடத்தில் இல்லை. எபேசியரில் இருக்கின்ற கணவன் இடம் பிறழாத கணவன். அன்புகூருங்கள். இங்கே கணவரைப்பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. “உன் கணவன் அன்புகூராத கணவன். ஆனால், நீ எப்படி இருக்க வேண்டும்? எந்த அளவுக்கு உன் இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றால் வார்த்தையின்றி உன் தூய நடக்கையினாலே அவர்கள் ஆதாயம்பண்ணிக்கொள்ளப்படுவார்கள்.”
அந்த இடத்திலேதான் அவர் புறம்பான அலங்காரத்தைப்பற்றி, “அது ஒன்றும் பெரிய கவர்ச்சி இல்லை; இருதயத்தில் மறைந்திருக்கிற சாந்தமும் அமைதலுமள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது. ஏனென்றால் அதுதான் உண்மையான அழகு. புறம்பான அணிகலனால் ஒரு மனிதனை வென்றுவிடலாம் என்று நீங்கள் நினைக்கலாம். அது வெல்லாது. அதெல்லாம் வெற்றிபெறாதது. எது வெற்றிபெற முடியும் என்றால் உன்னுடைய இருதயத்தில் மறைந்திருக்கிற சாந்தகுணமுள்ள ஆவியாகிய மறைவான மனிதன் வெற்றிபெற முடியும். உன் நடத்தையால்தான் வெற்றிபெற முடியும்,” என்று சொல்லுகிறார். நகை போட்டும் சிலர் வெற்றிபெற முடிகிறது. நகை போடாமலும் வெற்றிபெற முடிகிறது. காரியம் என்னவென்று கேட்டால் நீங்கள் நகை போட்டிருக்கிறீர்களா, போடவில்லையா என்பதல்ல. தேவனுடைய இருதயம் என்னவென்றால் “உன்னுடைய இடத்தைவிட்டுப் பிறழாதே. என் அழகைப் பார்த்து என் கணவர் இரட்சிக்கப்பட்டுவிடுவார் என்று நீங்கள் நினைக்கலாம். இருதயத்தின் குணத்தைப் பார்த்துதான் அவன் இரட்சிக்கப்படுவான்,” என்று வேதம் மிகத் தெளிவாகச் சொல்கிறது.
1 சாமுவேல் சவுல் தாவீதினுடைய உறவைப்பற்றிச் சொல்கிறது. சவுல் இஸ்ரயேலுடைய அரசன். தாவீது இஸ்ரயேலின் அரசனாக அபிஷேகம் பண்ணப்பட்டவன். அது தெரிந்தவுடனே சவுல் தாவீதைக் கொலைசெய்வதற்காகத் தேடுகிறான். தாவீது என்ன சொல்கிறான் என்றால், “நான் ஒரு தெள்ளுப்பூச்சி. என் ஆண்டவனே, நான் உமக்குமுன்பாக ஒரு பூச்சியைப்போல இருக்கிறேன். இந்த பூச்சியைக் கொலைசெய்யவதற்காகவா நீர் என்னைத் தேடுகிறீர்?” என்று தாவீது கேட்கிறான்.
ஒருமுறை தாவீது இசைக்கருவி வாசித்துக்கொண்டிருக்கும்போது அவன் ஈட்டியைத் தூக்கி வீசுகிறான். ஆனால் தாவீது தப்பித்துக்கொண்டான்.
தாவீது பெரிய வீரன். கோலியாத்தை சவுலோ அவன் படையோ ஜெயிக்க முடியவில்லை; அவன் பக்கத்தில் போக நடுங்குகிறார்கள். தாவீது ஒற்றை ஆளாய்ப் போய் கோலியாத்தை முறியடித்து அவன் தலையைக் கொய்துகொண்டு வருகிறான். அதனால் தாவீது எவ்வளவு பெரிய வீரன் என்று தெரியும்.
தாவீதைப்போல இஸ்ரயேலிலே அப்படி ஒரு கவர்ச்சிகரமான அரசன் தோன்றியதில்லை. சாலொமோனைக்கூட தாவீதோடு ஒப்பிட முடியாது. அவ்வளவு பெரிய அரசன்.
தாவீது ஒரு காட்டிலே ஒரு குகையிலே ஒளிந்துகொண்டிருக்கிறான் என்ற செய்தியைக் கேட்டவுடனே சவுலும் அவனுடைய படைகளும் அவனைத் தேடி வருகிறார்கள். சவுல் இயற்கைக் கடன் கழிப்பதற்காக ஒரு குகையிலே போகிறான். அதை தாவீதும் அவன் கூட்டாளிகளும் பார்க்கிறார்கள். அவர்களும் போர்வீரர்கள். “கர்த்தர் உம் எதிரியை உமக்கு ஒப்புவிப்பேன் என்று வாக்குறுதி அளித்தார் இல்லையா? இதோ அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றுகிறார்,” என்று சொல்லும்போது தாவீது சவுலைக் கொலைசெய்வதற்காக குகைக்குள்ளே போகிறான். ஆனால் அங்கு போய் சவுலைக் கொலைசெய்யவில்லை. அவனுடைய வஸ்திரத்தின் ஒரு நுனி, ஒரு ஓரத்தை, மட்டும் அறுத்துக்கொண்டு வந்துவிடுகிறான். கொண்டுவந்து தூரத்தில் நின்று அந்த அறுத்த வஸ்திரத்தின் நுனியை, வஸ்திரத்தின் ஓரத்தை, சவுலுக்குக் காட்டி, “என் தகப்பனே, உம்முடைய உயிர் இன்று என் கையில் இருந்தது என்பதை இது நிரூபிக்கிறது. ஆனால் நான் உம்முடைய உயிரை வாங்கவில்லை. நீர் ஏன் என்னுடைய உயிரை வாங்கத் தேடுகிறீர்,” என்றான். “என் தகப்பனே பாரும். என் கையிலிருக்கிற உம்முடைய சால்வையின் தொங்கலைப் பாரும். உம்மைக் கொன்றுபோடாமல் உம்முடைய சால்வையின் தொங்கலை அறுத்துக் கொண்டேன். என் கையிலே பொல்லாப்பும், துரோகமும் இல்லையென்றும் உமக்கு நான் குற்றம் செய்யவில்லை என்றும் அறிந்துகொள்ளும். நீரோ என் பிராணனை வாங்க அதை வேட்டையாடுகிறீர்,” என்று சொன்னான். பொறுமையாய் நீங்கள் அதை வாசித்து பாருங்கள்.
ஒரு மனிதன் அவனைக் கொலைசெய்யத் தேடுகிறான். தாவீது எப்படிப்பட்ட மனிதன் என்றால் அவன் தன் இடத்தைத் தக்கவைத்துக்கொள்வதில் குறியாக இருக்கிறான். எந்த அளவுக்கு அவன் அதில் முனைப்புடன் இருக்கிறான் என்றால் அந்த வஸ்திரத்தின் ஓரத்தை அறுத்துக்கொண்டு வந்த பிறகும் தாவீதினுடைய மனச்சாட்சி அவனை வாதித்தது. அவன் கொலை செய்யவில்லை. ஒரு கீறல்கூட விழவில்லை. சாதாரணமாக அவன் வஸ்திரத்தை அறுத்துக்கொண்டு வந்ததற்கு அவன் மனச்சாட்சி அவனை வாதித்தது. நாம் பேசுகிற வார்த்தைகளுக்காக நம்முடைய மனச்சாட்சி நம்மை வாதிப்பதில்லை. ஆனால் வாதிக்குமென்றால் நாம் உண்மையிலேயே தாவீதினுடைய கூட்டத்தில் இருக்கிறோம். பரிசுத்தவான்களுடைய கூட்டம். ஒருமுறையல்ல இரண்டுமுறை. “கர்த்தர் அபிஷேகம் பண்ணினவர்மேல் எப்படி என் கைகளை வைப்பது!”
சவுலுக்கு ஒரு இடமுண்டு. தாவீதுக்கு ஒரு இடமுண்டு. அவன் தன் இடத்தைவிட்டு வீழ்ந்து ரொம்ப நாள் ஆயிற்று. ஒரு அரசன் ஒரு சாதாரண வாலிபனைக் கொலைசெய்வதற்கு இப்படித் தேடுவதா? அவன் இந்த நாட்டைப் பராமரிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு ஒரு ஆளைக் கொலைசெய்யத் தேடுகிறான். ஆனால் தாவீது தன் இடத்தைவிட்டு மாறவேயில்லை.
சிலர் இதைத் தவறாகப் புரிந்துகொள்வார்கள். சிலர் அதை அதிகாரமும், பணிந்தடங்குவதும் என்று சொல்வதுண்டு. தவறு. “மனைவிகளே, நீங்கள் பணிந்தடங்குங்கள். பிள்ளைகளே, நீங்கள் பணிந்தடங்குங்கள். வேலைக்காரரே, நீங்கள் பணிந்தடங்குங்கள். சகோதர சகோதரிகளே உங்கள் நடக்கையிலே மூப்பர்களுக்குப் பணிந்தடங்குங்கள்,” என்று துஷ்பிரயோகம் செய்வதுண்டு.
இங்கு அதிகாரத்தையும், பணிந்தடங்குதலையும்பற்றிப் பேசவில்லை. இடத்தைப்பற்றிப் பேசுகிறார். சில இடங்களில் அதிகாரமுண்டு. 2 பேதுருவிலே அதைப்பற்றி எழுதுகிறார். “நீங்கள் உங்கள் அரசாங்கங்களுக்கும், உங்கள் அரசர்களுக்கும், வரிவசசூலிப்பவர்களுக்கும் உரிய கனத்தைச் செலுத்துங்கள்.” அதை அதிகாரம், பணிந்தடங்குதல் என்று நாம் எடுக்கக்கூடாது. அரசாங்கத்திற்கு ஒரு இடம் உண்டு. ஆளுநருக்கு ஒரு இடம் உண்டு. அரசருக்கு ஒரு இடம் உண்டு. எனவே இதை நாம் செய்வோமென்றால் நம்முடைய வாழ்க்கை மிகவும் ஆசீர்வாதமாக இருக்கும். நம்முடைய சகோதர சகோதரிகளைப்பெறுத்தவரை நம்முடைய இடம் என்னவோ அந்த இடத்தின்படி நாம் அவர்களைச் சேவிக்க வேண்டும். அவர்களுக்கு நாம் பணிவிடை செய்ய வேண்டும். சகோதர சகோதரிகளைப் பொறுத்தவரை நமக்கு ஒரு இடம் இருக்கிறதா? இடம் இருக்கிறது. எல்லாருக்கும் நாம் ஒரு பணிவிடை செய்ய வேண்டியிருக்கிறது. “ஆ! என்னுடைய சகோதர சகோதரிகளுக்கு எந்தப் பணிவிடையும் செய்ய வேண்டியதில்லை,” என்று நாம் சொல்ல முடியாது. அது காயீனுடைய மனப்பாங்கு. “ஆபேல் எங்கே?” என்றால் “நான் என் சகோதரனுக்குக் காவலாளியோ?” என்று கேட்பது தவறு.
தேவன் நம்மை எப்படி தேவனுடைய மக்களோடு இணைத்திருக்கிறார் என்றால் தேவனுடைய மக்கள் எல்லாருக்கும் ஒரு இடம் உண்டு. அந்த இடத்தின்படி, அந்த இடத்தில் இருந்துதான் சில சேவைகளை, சில பணிவிடைகளை நாம் செய்ய வேண்டும். ஐக்கியம் அல்லது தேவனுடைய மக்களுக்கிடையிலான உறவு என்பது நாம் நினைப்பதுபோல, “நான் நினைத்தால் உறவுகொண்டுவிடலாம். எனக்கு விருப்பமிருந்தால் நாம் ஐக்கியம் கொள்ளலாம். விருப்பமில்லையென்றால் ஐக்கியம் கொள்ளவேண்டிய அவசியமில்லை,” என்பதல்ல.
நான் தகப்பன் என்ற இடத்தை வைத்திருப்பதால் என் பிள்ளைகளுக்குப் பணிவிடை செய்ய வேண்டியது என் பொறுப்பு. அவன் எனக்குக் கீழ்ப்படியவில்லை என்று வைத்துக்கொள்வோம். என்ன செய்வது? என் இடத்தின்படி நான் பணிவிடை செய்துதான் ஆக வேண்டும். செய்ய வேண்டியதை நான் செய்துதான் ஆக வேண்டும். ஆனால் பொருள் என்னவென்று கேட்டால் அவர்கள் அந்த இடத்திற்கு ஒத்தவாறு வாழாமல் போகலாம். ஆனாலும், நாம் நம்முடைய இடத்திற்கு ஒத்தவாறுதான் வாழ வேண்டும். ஏன் அப்படி வாழ வேண்டும்? ஏனென்றால் அவர்கள் அந்த இடத்திற்கு ஒத்தவாறு வாழாதபோது தலைக்கு எதிராக அவர்கள் செயல்படுகிறார்கள். எனவே தலையானவர் ஏற்ற காலத்திலே சிட்சிப்பார். அவருடைய சிட்சை எப்படியிருக்கும் என்று எனக்குத் தெரியாது. அவருடைய சிட்சை சிறிதாகவும் இருக்கலாம்.
தேவனுடைய மக்களுக்கிடையேயான உறவைப்பொறுத்தவரை தேவனுடைய மக்களில் ஒருவர் அந்த உறவை உதாசீனம் பண்ணுகிறார் என்று வைத்துக்கொள்வோம். தம் இடத்திற்கு ஒத்தவாறு வாழாத போது நாம் கர்த்தருடைய சிட்சைக்கு வருகிறோம். இடத்திற்கு ஒத்தவாறு நாம் வாழும்போது “ஆ! அது உயிர்த்தெழுதலில் நம்மைக் கொண்டுவந்து விடுகிறது.” தம் இடத்தின்படி வாழாத நபரை எப்படி ஜெயிப்பது? அடுத்த சாரார் தம் இடத்தின்படி வாழவில்லை என்று தெரிகிறது. அவரை எப்படி அவருடைய இடத்துக்குக் கொண்டுவருவது? 2 பேதுருவிலே அவர் அற்புதமான வழியைச் சொல்லுகிறார். “நீ உன்னுடைய இடத்தைவிட்டுப் பிறழாமல் வாழ்ந்தால் தேவன் அடுத்த சாராரைச் சிட்சித்து அவர் எந்த இடத்திற்கு வர வேண்டுமோ அப்படிப்பட்ட இடத்திற்கு அவரைக் கொண்டுவருவார்.” இப்படிப்பட்ட தேவனுடைய மக்கள், அதாவது தங்கள் இடம், நிலை, நடையின்படி வாழ்கிற மக்கள், அதிகமாகத் தேவை. ஆனால் நம்மால் நம் இடத்தில் இருக்க முடிவதில்லை. இரண்டு பேரை இணைத்து வைத்திருக்கும்போது, ஒரு ஆள் உருமிக்கொண்டிருக்கிறார்கள் என்றால் அடுத்த ஆள் அந்த இறுக்கத்தை எவ்வளவு நாளைக்குத் தாக்குப்பிடிக்க முடியும்? “எத்தனை நாளைக்குத்தான் என் கணவனை அல்லது என் மனைவியை, என் பெற்றோர்களைச் சகித்துக்கொண்டிருக்க முடியும்?” என்று நாம் நினைக்கிறோம். அதனால் நாமும் நம் இடத்தைவிட்டுப் புரண்டுவிடுகிறோம். அதன் விளைவாக அந்த உறவுகள் முறிந்துவிடுகின்றன.
எல்லாக் குடும்பங்களிலும் இது நடக்கிறது என்று நான் சொல்வேன். ஒரு கணவன் விவாகரத்துபண்ண விரும்புகிறார் அல்லது ஒரு மனைவி விவாகரத்துபண்ண விரும்புகிறார். இந்தக் குடும்பத்தைப் பாதுகாப்பது எப்படி? ஒரேவோர் ஆள் மட்டும் இந்த உறவைப் பாதுகாக்க முடியுமா? ரொம்ப கஷ்டமான கேள்வி. இதற்குப் பதில் சொல்ல முடியாது. ஒரு கணவன் விவாகரத்து பண்ண விரும்புகிறான். மனைவி இந்த உறவைத் தக்கவைத்துக்கொள்ள முடியுமா? அல்லது மனைவி விவாகரத்துபண்ண விரும்புகிறாள். கணவன் இந்த உறவை செம்மையாக்க அல்லது இனிமையாக்க முடியுமா? முடியும். அந்தக் கணவன் உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு யோர்தானில் நிற்பதற்கு ஆயத்தம் என்றால் முடியும். அந்தக் கணவன் மரணத்திலே, “தேவரீர் என் ஆத்துமா அழிவைக் காணவொட்டீர்” என்று அது எவ்வளவு துன்பமாக இருந்தாலும் சரி, தன் இடத்தில் நிற்க முடியுமென்றால் முடியும். ஆனால் நான் இதை மிகுந்த பயத்தோடு சொல்கிறேன். ஏன் பயத்தோடு சொல்கிறேனென்றால், “நீர் அந்த மாதிரியெல்லாம் ஒன்றும் நின்றதில்லை. உம்முடைய மனைவி இனிமையான மனைவி. நீர் இதுவும் சொல்லுவீர். இதற்கு மேலேயும் சொல்லுவீர்,” என்று சொல்லலாம்.
ஒருவேளை இன்னொரு மனிதனோடு உள்ள உறவிலே நான் மரணத்தில் நிற்க வேண்டியிருக்கலாம். தேவன் தம்முடைய பிள்ளைகள் எல்லாரையும் அந்த சூழ்நிலையின் வழியாகக் கொண்டு போவார். யாரும் விதிவிலக்கல்ல. மரணத்தினூடாகச் சென்று உயிர்த்தெழுதலில் வராத எந்த உறவையும் தேவன் தம் சரீரத்திலே விடமாட்டார். நம் உறவுகள் மரணத்தினூடாய்ச் சென்று உயிர்த்தெழுதலில் வர வேண்டும். அதுதான் கிறிஸ்துவின் சரீரத்தினுடைய இணைப்பு. “நாம் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும் இனிமேல் நாம் அப்படி அறியோம்.” நம் எல்லா உறவுகளும் சிலுவையினூடாய்ச் செல்ல வேண்டும். அப்படியென்றால் என்ன அர்த்தம்? சிலுவையினூடாய் என்றால் என்ன அர்த்தம்? என்றால் நான் ஒருவேளை தடம்புரள்வேன். ஆனால் நீ தடம் பிறழக்கூடாது.” “பிரதர், அது என்ன நியாயம்? நீங்கள் மட்டும் தடம்புரளுவீர்கள். நான் தடம் புரளக்கூடாதா? என்று நீங்கள் சொல்வீர்கள்.”என்னை நீங்கள் சாதகமாக எடுத்துக்கொள்வீர்களா?” சிலுவையில் இருப்பது என்பது இழிச்சவாயனாயிருப்பது. சிலுவையில், மரணத்தில் இருப்பது என்பது தோற்றுப்போனவனாயிருப்பது. சிலுவையில் இருப்பது என்பது கையாலாகதவனாயிருப்பது.
ஏசாயா 53யை வாசித்துப்பாருங்கள். “அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.” இதுதான் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. “என்ன நீர் இப்படிப் பண்ணுகிறீர்? நான் என்ன செய்வேன் தெரியுமா? நான் வழக்குப்போட்டால் என்ன நடக்கும் தெரியுமா?” என்று அவர் யாரையும் அச்சுறுத்தவில்லை. “நீதியாய்த்தீர்ப்பு செய்கிறவருக்குத் தம்மை ஒப்புக்கொடுத்தார்.” அப்படி என்றால் என்ன அர்த்தம்? “நான் என் உறவிலே இடம்புரண்டுவிடுகிறேன். சகோதரன் தன் உறவிலே திட்டவட்டமாய் நிற்கிறான்,” என்று வைத்துக்கொள்வோம். “ஆண்டவரே, நீர் நீதியாய்த் தீர்ப்பு செய்கிறவர். ஆண்டவரே என்னால் இதை நிதானிக்க முடியவில்லை. ஆனால் நான் தவறியிருந்தால் நீர் தீரும். என்னுடைய சகோதரன் தவறியிருந்தால் ஆண்டவரே மெதுவாய் நடத்தும்” என்பது நம் மனப்பாங்காக இருக்க வேண்டும். அதற்கு மாறாக, “என்னுடைய சகோதரன் தவறு. ஆதலால் எவ்வளவு சீக்கிரம் சிட்சித்து ஆண்டவரே அவனை ஒரு வழிக்குக் கொண்டுவாரும்” என்று ஜெபிக்கக்கூடாது.
என்னுடைய சகோதரன் தவறு என்றாலும், தாவீது தன் மகனைப்பற்றிப் போர்வீரர்களுக்கு சொல்லி அனுப்புகிறான்: பிள்ளையாண்டானை மெதுவாய் நடத்துங்கள். பிள்ளையாண்டானா அவன்!! தாவீதின் இருதயம் கர்த்தருடைய இருதயம். பிள்ளையாண்டானை மெதுவாய் நடத்துங்கள். யோவாப் எரிச்சலாகிறான். “யாரைப் பார்த்து மெதுவாய் நடத்து,” என்று சொல்கிறீர்கள்? அவன் எப்படிப்பட்ட ஆள்! அப்சலோம்!
உறவிலேதன் இடத்தைவிட்டுவிலகுகிற இன்னொரு சகோதரனையோ, சகோதரியையோ, மனைவியையோ, “ஆண்டவரே அடியும், உடையும், வெட்டும், திருத்தும். ஆண்டவரே நான் சரி, அவன் தவறு என்பதை நிரூபியும்,” என்று நாம் நினைத்தால் இது ஏசாயா 53இல் பார்க்கின்ற ஆட்டுக்குட்டியானவருடைய ஆவி இல்லை. “ஆண்டவரே, என்னைப் பொறுத்தவரை நான் என் இடத்தை விட்டுப் பிறழவில்லை என்று நினைக்கின்றேன். நான் நிதானிக்கிறேன். ஆனால் என் சகோதரன் தன் இடத்தின்படி நடக்கவில்லை; அவன் அதற்கு மிஞ்சி நடக்கிறான் என்றால் தேவரீர் உம்முடைய அநந்த ஞானத்தின்படி கூடுதலாகவோ குறைவாகவோ சிட்சையை நீர் வைக்காதேயும். ஆண்டவரே அவனுடைய இடத்திற்கு அவனைக் கொண்டுவாரும். எவ்வளவு குறைவான காயத்தோடு அதைச் செய்ய முடியுமோ அதைச் செய்யும்,” என்று நாம் ஜெபிக்கலாம்.
நல்ல அறுவைசிகிச்சை நிபுணர்கள் அறுவைசிகிச்கையின்போது நிறைய இரத்தம் போகவிடமாட்டார்கள். ஒரு நல்ல நிபுணர் வயிறை அறுக்கும்போது மேலேயிருந்து கீழே வரைக்கும் அறுக்கமாட்டார். எவ்வளவு சின்னதாக வெட்டமுடியுமோ அவ்வளவு சின்னதாக வெட்டிதான் செய்வார்.
“நாம் பலவீனமான இடத்தில் இருக்கிறோம்” என்று ஒருநாளும் மனைவிகளோ, பிள்ளைகளோ, வேலைக்காரர்களோ நினைக்கக்கூடாது. தேவன் அவர்களுக்காக வழக்காடுகிறவர், அவர்களோடு இருப்பார் என்று யோபு கூறுகிறார். ஒரு கணவன், மனைவி. இதிலே யார் பலமானவர். நிச்சயமாகக் கணவன்தான். “நான் வீட்டிலே வேலை செய்யாமல் இருக்கிறேன். அவர் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாங்க. அவர் வணக்கம் சொல்லச்சொன்னால் சொல்லணும்,” என்று மனைவிமார்கள் நினைப்பதற்கு இடம்கொடுக்காதீர்கள். தேவன் திக்கற்றவர்களின் தேவன். பலவீனமாயிருக்கிறான் என்று ஒரு மனைவியையோ அல்லது ஒரு வேலைக்காரனையோ அல்லது ஒரு சகோதரனையோ சாதகமாக எடுக்க முயற்சி பண்ணினால் தேவன் அவர்களுக்காக வழக்காடுவார். எனவே, அருமையான பரிசுத்தவான்களே, இதுபோல தேவனுடைய வார்த்தைகளில் நமக்கு நிறைய போதுமானது உண்டு. தேவனுடைய வார்த்தையிலே நீங்கள் ஒவ்வொருநாளும் நேரம் செலவழியுங்கள். தேவனுடைய வார்த்தையிலே அப்படிப்பட்ட நம்மை ஆசீர்வதிக்கிற பரம அறிவு உண்டு. தேவன் நம்மையும், நம்முடைய வாழ்க்கையையும் நமக்கும் நம்மோடு உறவுகொள்கிற மற்றவர்களுக்கும் பெரிய ஆசீர்வாதமாய் மாற்றுவாராக!