Transcribed from a message spoken in September 2013 in Chennai
By Milton Rajendram
“கிறிஸ்துவின் சரீரம் என்பது புதிய ஏற்பாட்டிலே உள்ள மிக முக்கியமான ஒரு சத்தியம். எனவே நம்முடைய போதனைகளையும,; உபதேசங்களையும் முறைப்படுத்திக்கொள்ள வேண்டும்,” என்பதற்காக நான் இதைப்பற்றிப் பேசவில்லை. கிறிஸ்துவின் சரீரம் என்பது நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் தேவனுடைய ஆசீர்வாதத்தைக் கொண்டுவருகிற அல்லது ஆசீர்வாதத்தைத் தடுக்கிற ஒரு மிக முக்கியமான உண்மை. கிறிஸ்துவின் சரீரம் என்றால் என்ன என்பதைப்பற்றிய வெளிச்சம் நமக்கு இருக்குமென்றால், நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய ஆசீர்வாதம் காணப்படும்; குறிப்பாக நம்முடைய கூட்டு வாழ்க்கையில், நம்முடைய சமுதாய வாழ்க்கையில், நம்முடைய குடும்ப வாழ்க்கையில் தேவனுடைய ஆசீர்வாதம் காணப்படும். கிறிஸ்துவின் சரீரத்தைப்பற்றிய ஒரு தெளிந்த எண்ணம் இல்லையென்றால் நம்முடைய வாழ்க்கையில், குறிப்பாக கூட்டுவாழ்க்கையில், குடும்ப வாழ்க்கையில், சபை வாழ்க்கையில் தேவனுடைய ஆசீர்வாதம் காணப்படாது.
எபேசியர் 4ஆம் அதிகாரத்தில் 4முதல் 6வரையுள்ள வசனங்களை நாம் ஏற்கெனவே வாசித்திருக்கிறோம். கிறிஸ்துவின் சரீரத்தைப்பற்றிய 7 ஒருமைகள் என்று இதைச் சொல்வதுண்டு. ஒரே சரீரம், ஒரே ஆவி, ஒரே நம்பிக்கை, ஒரே கர்த்தர், ஒரே விசுவாசம், ஒரே ஞானஸ்நானம், நம் எல்லார்மேலும் இருக்கிற ஒரே தேவன், எல்லாரோடும், எல்லாருக்குள்ளும் இருக்கிற ஒரே தேவன், நம் எல்லாரிலும் இருக்கிற ஒரே தேவன் என்று 9 ஒருமைகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். எத்தனை ஒருமைகள் என்பது காரியமில்லை. அது நம்முடைய இருதயத்தை, நம்முடைய வாழ்க்கையை, நம்முடைய நடைமுறை அனுபவத்தை எப்படிப் பாதிக்கிறது என்பதுதான் காரியம்.
இயற்கையான வாழ்விலே மனிதர்கள் ஒருவரோடொருவர் இணைக்கப்படத்தக்கவர்களல்ல. இயற்கையான வாழ்விலே மனிதர்களுக்கிடையே பகை இருக்கிறது. பகையாகிய நடுச்சுவர் இருக்கிறது. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தம் சிலுவை மரணத்தின்மூலமாக அந்தப் பகையாகிய நடுச்சுவரைத் தகர்த்தார் என்று எபேசியர் 2ஆம் அதிகாரத்திலே நாம் வாசிக்கிறோம். பகையாகிய நடுச்சுவர் இருந்த இடத்திலே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தம்மையே ஒரு கட்டாக வைத்திருக்கிறார். இது அவர் சிலுவையிலே செய்துமுடித்திருக்கின்ற அற்புதமான காரியம். இயற்கையான வாழ்வின்படி இரண்டு மனிதர்கள் ஒருவரோடொருவர் இணைக்கப்பட முடியாது. கிறிஸ்துவில், புதிய சிருஷ்டிப்பில், மட்டுமே இரண்டு மனிதர்கள் ஒருவரோடொருவர் இணைக்கப்பட முடியும். இது இரண்டு மனிதர்களுக்கு மட்டுமல்ல; ஒரு சமுதாய மக்களுக்கும் இது பொருந்தும். இயற்கையான வாழ்விலே நாம் ஒருவரோடொருவர் இணைக்கப்படுவது என்பது ரொம்ப நாளைக்குத் தாக்குப்பிடிக்காது. ஆனால் புதிய சிருஷ்டிப்பிலே, கிறிஸ்துவிலே, ஆவியிலே, நாம் ஒருவரோடொருவர் இணைக்கப் படுவது என்பது நித்தியத்திற்கும் தேவனுக்குமுன்பாக மிதப்புள்ளதாயிருக்கும்.
தேவன் சிலுவையிலே பகையாகிய நடுச்சுவரைத் தகா;த்து கிறிஸ்துவையே இணைப்பாக, கட்டாக, பிணைப்பாகக்கொண்டு எதற்காக இப்படித் தம் மக்களை ஒருவரோடொருவர் தொடர்புபடுத்தியிருக்கிறார், உறவுபடுத்தியிருக்கிறார் என்பதற்கான காரணத்தை எபேசியர் 3ஆம் அதிகாரத்தில் நாம் ஏற்கெனவே வாசித்திருக்கிறோம். இப்படி நாம் ஒருவரோடொருவர் கொண்டுள்ள உறவில் மட்டுமே கிறிஸ்துவினுடைய அகலம், நீளம், ஆழம், உயரம் ஆகியவைகளை நாம் அறிந்துகொள்ள முடியும். கிறிஸ்துவினுடைய பரிபூரணத்தையும், முழுநிறைவையும், நாம் அனுபவிக்க வேண்டுமென்றால், அதை நாம் தேவனுடைய மக்களோடு கொண்டுள்ள உறவில் மட்டும்தான் அனுபவிக்க முடியும்.
எந்தக் குடும்பத்திலே தேவனுடைய ஆசீர்வாதமும், பரிபூரணமும், முழுநிறைவும் இருக்குமென்றால் எங்கு உறவுகள் இணைக்கப்பட்டிருக்கிறதோ, கட்டப்பட்டிருக்கிறதோ, பிணைக்கப்பட்டிருக்கிறதோ அங்கு கிறிஸ்துவினுடைய பரிபூரணமும், முழுநிறைவும் இருக்கும். அங்கு இருக்கிற உறவுகள் மிகவும் வலுவிழந்த உறவுகள், பலவீனமான உறவுகள் என்றால் அங்கு கண்டிப்பாக கிறிஸ்து வினுடைய பரிபூரணமும், முழுநிறைவும் இருக்காது. இது குடும்பத்துக்கும் பொருந்தும். தேவ னுடைய குடும்பமாகிய சபைக்கும் பொருந்தும்.
இன்னொன்றையும் நான் சொல்ல விரும்புகிறேன். கிறிஸ்துவுக்குள் தேவனுடைய மக்களாகிய நாம் ஒருவரோடொருவர் இணைக்கப்பட்டிருக்கிறோம், கட்டப்பட்டிருக்கிறோம், பிணைக்கப்பட்டிருக்கிறோம். ஆனால், இன்றைக்குப் பரிசுத்த ஆவியானவருடைய வேலை என்னவென்று கேட்டால் நாம் என்னதான் கிறிஸ்துவுக்குள் இணைக்கப்பட்டிருக்கிறோம், பிணைக்கப்பட்டிருக்கிறோம், கட்டப்பட்டிருக்கிறோம் என்றாலும் இன்னும் நம்முடைய பழைய மனிதன் அல்லது இயற்கையான மனிதன் நம்மிலிருந்து முற்றிலும் போய்விடவில்லை. ஒருபக்கம் நாம் புதிய சிருஷ்டியிலிருக்கிறோம். ஆனால், இன்னொரு பக்கம் அனுபவத்தில் நமக்குள் பழைய மனிதனின் தாக்கம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. எனவே, பரிசுத்த ஆவியானவருடைய மிக முக்கியமான வேலை இந்த இணைப்புகளை இசைவான இணைப்புகளாக மாற்றுவது. நாம் இணைக்கப்பட்டிருக்கிறோம்; ஆனால் அவைகள் இசைவான இணைப்புகளல்ல. நாம் கட்டப்பட்டிருக்கிறோம்; ஆனால் அவைகள் பொருத்தமான கட்டுகளல்ல. நாம் பிணைக்கப்பட்டிருக்கிறோம்; அவைகள் பின்னப்பட்ட பிணைப்புகளல்ல.
பரிசுத்த ஆவியானவருடைய மிக முதன்மையான வேலை என்னவென்றால் இணைக்கப்பட்டிருக்கிற தேவனுடைய மக்கள் இருவரையோ, பலரையோ இசைவாக இணைப்பது; கட்டப்பட்டிருக்கிற தேவனுடைய மக்கள் இருவரையோ, பலரையோ பொருத்திக் கட்டுவது; பிணைக்கப்பட்டிருக்கிற தேவனுடைய மக்கள் இருவரையோ, பலரையோ பின்னிப்பிணைத்துக் கட்டுவது; பொருத்தமாகப் பின்னிப் பிணைப்பது. பொருத்தமாக என்றால் இறுக்கமாகவும் இருக்கக்கூடாது, இளக்கமாகவும் இருக்கக் கூடாது. சில சமயம் உடை வாங்கும்போது ரொம்ப இளக்கமாக இருக்கும். சில சமயங்களில் உடை வாங்கும்போது இறுக்கமாக இருக்கும். இறுக்கமாகவும் இருக்கக்கூடாது. பொருத்தமானது என்றால் இறுக்கமாகவும் இருக்கக்கூடாது, இளக்கமாகவும் இருக்கக்கூடாது; சரியாகப் பொருந்தவேண்டும்.
தேவனுடைய மக்களோடு நாம் உறவுகொண்டுதான் வாழ வேண்டும். இது நமக்குக் கொடுக்கப்பட்ட தெரிந்தெடுத்தல் அல்ல. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் சார்பாக எங்கு உறவுகள் சிதைந்து அல்லது உடைந்து போகிறதோ, அங்கு உறவுகளைக் கட்டியெழுப்புவதற்காக நாம் போக வேண்டும். தேவன் நம்மை அனுப்புவார். சில சமயங்களில் கொஞ்சம் இறுக்கமாகச் செயல்பட்டுவிடுவோம். சில சமயங்களில் இளக்கமாகச் செயல்பட்டுவிடுவோம். ஆனால், நாம் பொருத்தமாகச் செயல்பட வேண்டும். பொருத்தமாக ஒருவரையொருவர் கட்டியெழுப்ப வேண்டும். எனவே, நான் இரண்டையும் மனதில் வைத்து இவைகளைச் சொல்லுகிறேன்.
தேவனுடைய குடும்பமாகிய சபை அல்லது குடும்பம் என்று சொல்கிற நம்முடைய குடும்பம் இந்த இரண்டிற்கும் தேவனுடைய சபையைப்பற்றிச் சொல்லியிருக்கிற எல்லாக் காரியங்களும் பொருந்தும். இன்னும் சொல்லப்போனால் ஒரு குடும்பம் கட்டியெழுப்பப்படவில்லை என்றால் அந்தக் குடும்பங்களாலான அந்த சபை ஒன்றும் ரொம்பப் பெரிதாக, அற்புதமாக கட்டியெழுப்பப்பட முடியாது; கணவன், மனைவி, பெற்றோர், பிள்ளைகள் ஆகிய உறவு கட்டியெழுப்பப்படவில்லையென்றால் இவர்களைக்கொண்டு தொகுக்கப்படுகிற தேவனுடைய குடும்பமாகிய சபையானது அப்படி பரத்திற்குரிய விதத்திலே கட்டியெழுப்பப்பட முடியாது. இவைகள் இரண்டும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்திருக்கின்றன. தேவனுடைய குடும்பமாகிய சபை கட்டியெழுப்பப்படுகிறதென்றால் அங்குள்ள தேவனுடைய மக்களாலான குடும்பங்களும் கட்டியெழுப்பப்படுகின்றன அல்லது தேவனுடைய மக்களாலான குடும்பங்கள் கட்டியெழுப்பப்படுகிறதென்றால் தேவனுடைய சபையும் கட்டியெழுப்பப்படும். “இது நடக்கிறது; அது நடைபெறவில்லை,” என்று சொல்வது தவறு. என்னுடைய அறிவின்படி அது சாத்தியமல்ல.
இதில் சொல்லப்படுகிற ஒன்பது ஒருமைகளும், (நான் வேண்டுமென்று ஒன்பது ஒருமைகள் என்று சொல்லவில்லை. என்னைப் பொறுத்தவரை ஒன்பது ஒருமைகள் இருக்கின்றன). உண்மையிலேயே நம்முடைய உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கு, கிறிஸ்துவின் பரிபூரணத்தையும், அவருடைய முழு நிறைவையும் நம்முடைய அனுதின வாழ்க்கையிலே, நம்முடைய உறவிலே, அனுபவிப்பதற்கு தேவன் நமக்குக் கொடுத்திருக்கிற இரகசிய திறவுகோல் என்று நான் நம்புகிறேன். உண்மையிலேயே நாம் இவைகளைப்பற்றிப் புரிந்துகொள்வோமென்றால் கிறிஸ்துவைப்பற்றிய நம்முடைய சாட்சி மிகவும் வல்லமையுள்ள சாட்சியாக இருக்கும், ஜீவனுள்ள சாட்சியாக இருக்கும். நம்முடைய வாழ்க்கை யின்மூலமாக பலர் கிறிஸ்துவைக் காண்பார்கள், தொடப்படுவார்கள், ஈர்க்கப்படுவார்கள், அவர்கள் தேவனோடு கட்டியெழுப்பப்படுவார்கள்.
முதலாவது, நான் தலைகீழாகப் போக விரும்புகிறேன். வரிசைக்கு ஒன்றும் அதிகமான முக்கியத்துவம் இருப்பதாகத் தோன்றவில்லை. “முதலாவது எதைப்பற்றி சொல்லியிருக்கிறதென்றால் ஒரே சரீரம். ஒரே ஆவி, ஒரே கர்த்தர், ஒரே தேவன் இதற்கெல்லாம் முன்பு வருவது எது? ஒரே சரீரம்,” என்பதெல்லாம் வெறுமனே பேச்சு சவடாலுக்காகச் சொல்லப்படுகிறதேதவிர அப்படியல்ல. காரியம் என்ன? தேவன் தம் மக்களுக்காகக் கொண்டுள்ள இருதயத்தின் பாரம் என்ன? இதை நாம் தொட வேண்டுமேதவிர நம்முடைய பேச்சு சாதூியத்திற்காக அல்லது அது அமைப்பதற்கு ரொம்ப அழகாக இருக்கிறது என்பதற்காக அப்படிச் செய்யக்கூடாது.
முதலாவது நான் கடைசிக் குறிப்பிலிருந்து சொல்லுகிறேன். நமக்கு ஒரே தேவன் உண்டு. “எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு. அவர் எல்லார்மேலும், எல்லாரோடும் உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர்” (எபே. 4:6). எல்லார்மேலும் இருக்கிற ஒரே தேவன் பிதா; எல்லாரோடும், அதாவது எல்லார் ஊடாகவும், இருக்கிற ஒரே தேவன் பிதா; எல்லாருக்குள்ளும் இருக்கிற ஒரே தேவன் பிதா.
சபை தேவனுடைய குடும்பம்.. நம்முடைய குடும்பத்தின் தலையாய குணாம்சம் என்னவாக இருக்க வேண்டுமென்றால் அன்பாக இருக்க வேண்டும். எல்லார்மேலும் ஒரே தேவனாகிய பிதா உண்டு என்றால் தேவனுடைய குடும்பத்தை வரையறுக்கும் அம்சம் அன்பு என்பதே அதன் பொருள்.
“இது சபையா, இது தேவனுடைய குடும்பமா?” என்பதை வரையறுக்கின்ற பல பத்து காரணிகளை நாம் சொல்லலாம். சகோதரர் சகரியா பூனன் சொன்ன வார்த்தைகள் எனக்கு இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. சபை–அன்பு என்கிற ஒரு உபதேசத்தைதவிர மற்ற எல்லா உபதேசங்களிலும் இவர்கள் மிகச் சரியாக இருக்கிறார்கள். எல்லா சபைகளையும் எடுத்துக்கொள்ளுங்கள். “நாங்கள்தான் சபை என்பதற்குப் பத்து காரணங்களாவன. ஒன்று, நாங்கள் எந்தப் பெயர்ப்பலகையும் வைத்துக்கொள்வதில்லை. இரண்டு, நாங்கள் வட்டமாகக் கூடிவருகிறோம். மூன்று, எங்களுக்கு எந் தப் பெயரும் இல்லை. நான்கு, எங்கள் தலைவர் எங்கு உட்கார்ந்திருக்கிறார் என்று உங்களால் கண்டுபிடிக்க முடியாது.” இவைகளெல்லாம் ஒரு பொருட்டல்ல. தலைவர் எங்கு உட்கார்ந்திருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியாமல் போகலாம். ஆனால், இவர்தான் தலைவர் என்று எல்லாருக்கும் தெரியும். அது ஒரு காரணமல்ல.
கிறிஸ்துவின் சரீரத்தை வரையறுக்கிற தலையாய அம்சம் பிதாவாகிய தேவனுடைய அன்பு. “நாம் அவருடைய புத்திரராயிருக்கும்படி தேவன் தம் அன்பினால் நம்மை முன்குறித்தார்,” (எபே. 1:4-6) என்று சொல்லப்பட்டிருக்கிறது. தேவன் மனிதனை எதற்காக உண்டாக்கினார்? அவர் மனிதனைப் படைத்தது எதற்காரக? அவரிடத்தில் அன்புகூர்வதற்கு ஒரு மனித உயிரி தேவைப்பட்டதால் அவர் மனிதனை உண்டாக்கினாரா? இல்லை தம்மை உள்ளடக்கிக்கொள்ளவும், தம்மை வெளிக்காண்பிக்கவும் உண்டாக்கினார் என்ற சித்திரம் கேட்பதற்கு மிக நன்றாக இருக்கும். அதாவது “மனிதன் ஒரு பாத்திரம்; இந்தப் பாத்திரத்தில் அவன் தேவனை உள்ளடக்கிக்கொள்ள வேண்டும்; அந்தப் பாத்திரத்திற்குள் தேவனை வைத்துவிட்டால் பிறகு அந்தப் பாத்திரம் தேவனை வெளிக்காண்பிக்கும்,” என்று சொல்லப்படுகிற இந்தச் சித்திரம் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் மிக அற்புதமாக இருக்கிறது. அதில் உண்மை இருக்கிறது. அதில் உண்மை இல்லாமல் இல்லை.
ஆனால், தலையாய காரணம். தேவன் தம்முடைய இருதயத்தில் மறைந்திருக்கிறதைக் காண்பிப்பதற்கு, தம் அன்பைச் செலுத்துவதற்கு அவருக்கு ஓர் உயிரி தேவைப்பட்டது. எனவேதான் தேவன் மனிதனைச் சிருஷ்டித்தார். “தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே…” (எபே. 2:4). அவருடைய மிகுந்த அன்பினாலே அவர் நம்மில் அன்புகூர்ந்தார். இந்த முழு சிருஷ்டிப்பிற்குப்பின்பாக ஒரு புத்திக்கூர்மை இருக்கிறது என்பது பெரிய காரியமல்ல. இந்த முழு சிருஷ்டிப்பிற்குப்பின்பாக ஒரு இருதயம் இருக்கிறது, ஒரு அன்பின் இருதயம் இருக்கிறது.
எனவே, நம்முடைய உறவுகள்கூட அன்பினால்தான் கட்டியெழுப்பப்படும். சட்டரீதியாக உறவுகள் ஒருநாளும் கட்டியெழுப்பப்பட முடியாது. உறவுகளை இப்படிக் கட்டியெழுப்பலாமா? அப்படிக் கட்டியெழுப்பலாமா? *“சரீரம் அன்பினாலே தன்னைத்தானே கட்டியெழுப்புகிறது” (எபே. 4:16). வேறு எந்தச் சூழலிலும் உறவுகளும், குடும்பங்களும், தேவனுடைய சபையும் கட்டியெழுப்பப்பட முடியாது. மிக முக்கியமாக அதிகாரம்-கீழ்ப்படிதல் என்ற அடிப்படையிலே எந்த உறவுகளும் கட்டியெழுப்பப்பட முடியாது. ஒரு வீட்டிலே அல்லது ஒரு சபையிலே வேறு என்ன வேண்டுமானாலும் கூடலாம், குறையலாம். ஆனால் ஒன்று குறையக்கூடாது. அது என்ன? தேவனுடைய அன்பு. நாம் பல தவறுகளைச் செய்கிறோம். நம்முடைய குடும்ப வாழ்க்கையில், சபை வாழ்க்கையில், பற்பல தவறுகளைச் செய்கிறோம். ஆனால், எல்லாவற்றையும் தேவன் மூடுவார். நம்முடைய அடிப்படையான அன்பு வற்றிப் போகிறது என்றால் அதற்குபின்பு அங்கு தேவனுடைய சபை என்று வரையறுப்பதற்கு ஒன்றும் இல்லை.
நம் எல்லார்மேலும் இருக்கிற ஒரே தேவன் பிதா என்பதின் பொருள் என்ன? பிதா என்றால் யார்? தேவன் பிதா என்றால் நாம் எல்லாரும் தேவனுடைய பிள்ளைகள் என்று பொருள். தேவனுடைய மக்களால் தொகுக்கப்பட்டது தேவனுடைய குடும்பம். சபை என்பது தேவனுடைய குடும்பம். தேவனுடைய சபையின் தலையாய குணாம்சம் என்னவென்றால் அங்கு ஒரு குடும்பத்தினுடைய குண நலன்கள் இருக்க வேண்டும். “குடும்பம் என்பதால் எந்த ஒழுங்கும், முறையும், கிரமமும் அற்றவர்கள் என்று பொருளா?” என்று ஒருவேளை நீங்கள் கேட்கலாம். ஒரு குடும்பத்திலே ஒரு ஒழுங்கு, முறை இருக்கிறது.
முதலாவது, நான் இந்தக் குறிப்பைச் சொல்ல விரும்புகிறேன். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தம் சீடர்களிடம், “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள். நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்” (யோவான் 13:34) என்று சொன்னார். நீங்கள் இயேசுகிறிஸ்துவினுடைய சீடர்கள் என்று இந்த உலகம் எப்படி அறிந்துகொள்ளும்? “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால் அதினால் நீங்கள் என்னுடைய சீடர்கள் என்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்” (யோவான் 13:25). “நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது.” (யோவான் 15:12). எப்படி அன்பாயிருக்க வேண்டுமென்றால் “நான் உங்கள்மேல் எப்படி அன்பாயிருந்தேனோ அதுபோல நீங்கள் ஒருவர்மேலொருவர் அன்பாயிருங்கள்.” இயேசுகிறிஸ்து நம்மேல் எப்படி அன்பாயிருந்தார் என்றால் ஒருவன் தன் சிநேகிதனுக்காகக் கொடுக்கிற அன்பிலும் உயர்ந்த அன்பு வேறொன்றில்லை. அன்பினுடைய அளவுகோல், தரம் என்ன? இயேசுகிறிஸ்து காண்பித்த அன்பினுடைய அளவுகோல் என்னவென்றால் அது ஜீவனைக் கொடுக்கிறது.
ஒரு மனைவி கணவனுக்காக எவ்வளவு கொடுக்க முடியும்? துணி துவைக்கலாம்; துவைத்த துணியைக் காயவைக்கலாம், காய்ந்த துணியை மடித்து வைக்கலாம், தேய்த்து வைக்கலாம். சாயங்காலம் முதுகு முறிந்துபோயிருக்கிறது. நான் இப்படிச் சொன்னவுடன் கணவன்மார்கள் தங்கள் மனைவியின் சுகத்தைப்பற்றியும், நலனைப்பற்றியும் கவலைப்படுவதில்லை என்று நான் சொல்லவில்லை. தயவுசெய்து கொஞ்சம் பொறுமையாய்க் கேளுங்கள்.
இயேசுகிறிஸ்து யாருக்காகத் தம் உயிரைக் கொடுத்தாரோ அவர்களுக்காக நான் உயிரைக் கொடுக்க மாட்டேன். தேவைப்பட்டால் கொஞ்சம் நல்ல மனிதர்களுக்காக உயிரைக் கொடுப்பேனேதவிர இயேசுகிறிஸ்து யாருக்காக உயிரைக் கொடுத்தாரோ அவர்களுக்காக நான் உயிரைக் கொடுக்க மாட்டேன். “நான் காண்பிப்பதுபோல நீங்கள் ஒருவர்மேலொருவர் அன்பு காண்பிக்க வேண்டும்,” என்று இயேசு சொல்கிறார். “நீங்கள் ஒருவர்மேலொருவர் அன்பாயிருப்பதினால் நீங்கள் என்னுடைய சீடர்களென்று இந்த உலகம் அறிந்துகொள்ளும்” என்று சொல்லுகிறார். உங்களுடைய உபதேசங்களைவைத்து நீங்கள் இயேசுகிறிஸ்துவின் சீடர்களென்று இந்த உலகம் அறிந்துகொள்ளாது. “நாங்கள் இயேசுகிறிஸ்துவின் சீடர்களென்று” நிரூபிப்பதற்கு மக்கள் நூறு அம்சங்களைக் காட்டலாம். நல்ல இணையதளம் வைத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு நாள் காலையிலும் open windows அல்லது e-manna அனுப்பலாம் இவைகளெல்லாம் நாம் சீடர்களென்று காண்பிக்க முடியாது. நாம் ஒருவரிலொருவர் அன்பாயிருப்பதினால் இந்த உலகம் நாம் இயேசுகிறிஸ்துவின் சீடர்களென்று அறிந்துகொள்ளலாம். முதலாவது சொன்னது தேவனுடைய அன்பு.
இரண்டாவது, தேவன் தம்முடைய குமாரனை நம் எல்லாருக்குள்ளும் பங்காக வைத்திருக்கிறார். அவர் நம் எல்லார் ஊடாகவும் இருக்கிறவர். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து உங்களுக்குரியவரோ எனக்குரியவரோ அல்ல. அவர்யார்? நம் எல்லாருக்கும் உரியவர் என்று 1 கொரிந்தியர் 1ஆம் அதிகாரம் கூறுகிறது. “எங்களுக்கும், தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து.” எந்த ஒரு கிறிஸ்தவனும், “இது என்னுடைய இயேசுகிறிஸ்து,” என்று சொல்ல முடியாது. அவர் பொதுவான கர்த்தர். ”தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்” *(1 கொரி. 1:9).
ஐக்கியம் என்ற வார்த்தையினுடைய பொருள் என்ன? 1 யோவான் 1ஆம் அதிகாரம் 3ஆம் வசனத்தில் இதே வார்த்தை இருக்கிறது. “எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.” ஐக்கியம் என்கிற வார்த்தைக்கு கிரேக்க வார்த்தை “koinonia”. அதன் பொருள் என்னவென்றால் common participation.
முஸ்லீம் மக்கள் ஒரு பெரிய மீனையோ, ஆட்டையோ,, மாட்டையோ சமைத்து மேசையில் வைத்துவிட்டு, எல்லாரும் அந்த ஒரேவொரு ஆட்டிலிருந்தோ, மீனிலிருந்தோ எடுத்துக்கொண்டு போய் சாப்பிடுவார்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இதுதான் பொதுவான் பங்கேற்பு. நாம் அனுபவிக்கிற அல்லது நமக்குள்ளிருக்கிற ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஒரேவொரு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. எப்படி ஒரு ஊரிலிருக்கிற எல்லா மக்களும் ஒரே கிணற்றிலிருக்கிற தண்ணீரை மொண்டு கொள்கிறார்களோ, அதேபோல நாம் எல்லாரும் ஒரே கிறிஸ்துவைப் பகிர்ந்துகொள்கிறோம்.
எனவே, தேவனுடைய குடும்பத்தை வரையறுக்கும் அம்சம் “இவர்கள் ஒரே கிறிஸ்துவை அனுபவிக்கிறவர்கள்” என்பதாகத்தான் இருக்க வேண்டும். ஒன்றைக் கவனிக்க வேண்டும். இவர்கள் அனுபவிக்கிற கிறிஸ்து என்றால் இதைப்பற்றி நீங்கள் பரவசமடைய வேண்டும். தேவன் தம்முடைய செல்வங்கள், வளங்கள் எல்லாவற்றையும் தம்முடைய குமாரனில் வைத்திருக்கிறார். தேவன் தம்முடைய செல்வங்கள், ஈவுகள், கொடைகள், நன்மைகள், ஆசீர்வாதங்கள் எல்லாவற்றையும் தம்முடைய குமாரனிலே ஊனுருக்கொள்ளச் செய்திருக்கிறார். அவருடைய குமாரன் தேவனுடைய செல்வங்கள், வளங்கள் எல்லாவற்றின் ஒட்டுமொத்தமாக இருக்கிறார். கிறிஸ்துவுக்கு வெளியே தேவனுடைய வளங்களும், செல்வங்களும் ஒன்றுமில்லை. கிறிஸ்துவுக்குள் இல்லாத தேவனுடைய செல்வங்களும், வளங்களும் ஒன்றுமில்லை. நாம் நம்முடைய நடைமுறை வாழ்க்கையிலே எப்படி அனுபவிக்கிறோம் என்பது நம்முடைய ஐக்கியத்தைப் பொறுத்திருக்கிறது. யாரோடுள்ள ஐக்கியத்தைப் பொறுத்திருக்கிறது?
ஒருவேளை நாம் எல்லாரும் ஒரு மீனை வெட்டி எடுத்துக்கொண்டோம் என்று வைத்துக்கொள்வோம். அந்த மீன் எவ்வளவு சுவையாக இருக்கிறது என்பது எதைப் பொறுத்திருக்கிறது. மீனோடுள்ள ஐக்கி யம் மட்டுமல்ல. ஒருவரோடொருவர் உள்ள ஐக்கியத்தையும் பொறுத்திருக்கிறது. சில சமயங்களில் கிறிஸ்துவினுடைய செல்வங்களையும், வளங்களையும் நம்மால் அனுபவித்துமகிழ முடிவதில்லை. காரணம் என்னவென்றால் யாரோடு சேர்ந்து அந்த செல்வங்களையும், வளங்களையும் நாம் அனுபவிக்கிறோமோ அவர்களோடு நம்முடைய உறவு, ஐக்கியம், நேர்த்தியாக இல்லை.
பேதுரு கணவர்களுக்கு ஒரு வசனத்தைச் சொல்லுகிறார். “உங்கள் மனைவிகளோடே புத்தியாய் வாழ்ந்து, ஞானமாய் வாழ்ந்து… ஏனென்றால் அவர்களும் உங்களோடு கிருபையைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அழைக்கப்பட்டவர்கள்.” கிறிஸ்துவில் இருக்கின்ற எல்லா சொல்வங்களுக்கும், வளங்களுக்கும்தான் கிருபை. புதிய ஏற்பாடு பயன்படுத்துகிற வார்த்தை கிருபை. உங்கள் மனைவியும் அதே கிருபையைத்தான் அனுபவிக்கிறார். நீங்களும் அதே கிருபையைத்தான் அனுபவிக்கிறீர்கள். மனைவிக்கும் உங்களுக்கும் இடையே உள்ள ஐக்கியம் கேள்விக்குரியாக இருந்தால் அல்லது மிக வும் பலவீனமாக இருந்தால், அங்கு இசைவோ, பொருத்தவோ அல்லது நல்ல ஒரு பின்னிப்பிணைக்கப்பட்ட தன்மையோ காணப்படவில்லையென்றால் நீங்கள் அனுபவிக்கிறன்ற கிருபையின் அளவு குறைவானது. சிலபேர், “கல்யாணம் பண்ணியாயிற்று. இனி என்ன இருக்கிறது!” என்று சொல்வார்கள். ஓ! இது மிகவும் பலவீனமான உறவு. பரவாயில்லை இந்த உறவாவது இருக்கிறது என்பதற்காக நான் கர்த்தரை ஆராதிக்கிறேன். ஆனால், இது பலவீனமான உறவுதான். இது மிகவும் ஐசுவரியமான, ஆழமான உறவு என்று சொல்வதற்கில்லை.
மூன்றாவது, நம் எல்லாருக்குள்ளும் இருக்கிற பிதாவாகிய தேவன். இது நம் எல்லாருக்குள்ளும் தேவன் தம்முடைய ஜீவனை வைத்திருக்கிறார். எல்லார்மேலும் இருக்கிற பிதாவாகிய தேவன் தேவனுடைய அன்பு. எல்லார் ஊடாகவும் இருக்கிற பிதாவாகிய தேவன் தேவனுடைய குமாரன். எல்லாருக்குள்ளும் இருக்கிற பிதாவாகிய தேவன் தேவனுடைய ஜீவன்.
நாம் தேவனுடைய குமாரனுக்குள் பெற்றுக்கொண்டது தேவனுடைய ஜீவன். நாம் எல்லாரும் ஒரே ஜீவனை உடையவர்கள். கொலோசெயர் 3ஆம் அதிகாரம் 1, 2, 3ஆம் வசனங்கள் மிக அற்புதமான வசனங்கள். நமக்குத் தெரியும். “நம்முடைய ஜீவன் கிறிஸ்துவுடனேகூட தேவனுக்குள் மறைந்திருக்கிறது.”
நாம் இந்த உலகத்திற்குரியவர்கள் அல்ல. யோவானில் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இப்படிச் சொன்னார். “நான் இந்த உலகத்தானல்லாததுபோல நீங்களும் இந்த உலகத்தாரல்ல” (யோவான் 17:16). ஒருவன் தேவனுடைய ஜீவனைப் பெற்றிருக்கிறான் என்பதற்கு அடையாளம் என்ன? அவன் “பிதாவே” என்று கூப்பிடுகிறான். “கர்த்தராகிய இயேசுவே” என்று கூப்பிடுகிறான். “ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே” என்று தூய தமிழில் கூப்பிடுகிறான். “அல்லேலூயா” என்று சொல்லுகிறான். “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று சொல்லுகிறான். “ஸ்தோத்திரம்” என்று சொல்லுகிறான். இவைகளெல்லாம் நல்லது. ஒருவன் தேவனுடைய ஜீவனைப் பெற்றிருக்கிறான் என்பதற்கு நிரூபணம் என்ன? நிரூபணம் என்னவென்றால் அவனுக்குள்ளாக “நான் இந்த உலகத்திற்குரியவனல்ல” என்ற ஓர் உணர்வு இருக்கும். “நான் மறுபடியும் பிறந்திருக்கிறேன். தேவனுடைய ஜீவனைப் பெற்றிருக் கிறேன். ஆனால் எனக்குள் இப்படிப்பட்ட உணர்வு இருந்ததேயில்லை,” என்றால் அவனுடைய புதிய பிறப்பை நான் சந்தேகிக்கின்றேன். கொஞ்சம் அற்றத்திற்குப் போய்,. “உண்மையிலேயே அவனுக்குள் தேவனுடைய ஜீவன் உள்ளாக இருக்கிறதா இல்லையா?” என்று கேட்பேன். அது ஒரு கேள்விக்குறி. ஆனால், எனக்கு நன்றாய்த் தெரியும். தேவனுடைய ஜீவனைப் பெற்ற தேவனுடைய பிள்ளைகள் ஒவ்வொருவருக்குள்ளும் “நான் இந்த உலகத்தானல்ல” என்கிற உணர்வு உண்டு.
பவுல் சொன்னதுபோல, “எங்கள் குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது” (பிலி. 3:20). தேவனுடைய ஜீவன் ஒரு புதிய உணர்வையும், திறமையையும், தன்மையையும், வல்லமையையும், பிரமாணத்தையும் நமக்குள் கொண்டுவருகிறது. தேவனுடைய ஜீவனில் உள்ளுணர்வு இருக்கிறது. தேவனுடைய ஜீவனில் வல்லமை இருக்கிறது. தேவனுடைய ஜீவனில் சுபாவம் இருக்கிறது. தேவனுடைய ஜீவனில் பிரமாணம் இருக்கிறது.
நாம் இந்த உலகத்திற்குரியவர்களல்ல. எனவே, இன்னொரு சகபிரயாணியைப் பார்க்கும்போது, “ஓ! நீங்களும் இந்த உலகத்திற்குரியவர்கள் அல்ல. உங்களுடைய குடியிருப்பும் பரலோகத்திற்குரியது. என்னுடைய குடியிருப்பும் பரலோகத்திற்குரியது.” “நீங்கள் எங்கே போகிறீர்கள்?” என்று தொடர்வண்டியில் பிரயாணம்பண்ணும்போது கேட்பது உண்டு. “திண்டுக்கல்” என்றால் “நானும் திண்டுக்கல்தான் போகிறேன்.” ஓ! என்ன ஒரு மகிழ்ச்சி இது. ஏனென்றால், “நானும் திண்டுக்கல், நீங்களும் திண்டுக்கல்,” என்று சொன்னவுடனே நமக்குள் ஓர் ஒத்தஅதிர்வு ஏற்படும். என்னுடைய எண்ணங்கள் இவருக்குப் புரியும். என்னுடைய சுவைகள் இவருக்குப் புரியும். ஆ! ஒத்த அதிர்வு, இது உண்மைதான். ஆனால், இவைகளையெல்லாம்விட மாபெரும் ஒத்த அதிர்வு என்னவென்றால், “நீங்கள் எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள்? ஓ! நீங்கள் பரத்திற்குரியவர்களா? நானும் பரத்திற்குரியவன்தான். கா;த்தருக்கு ஸ்தோத்திரம். உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனேகூட தேவனுக்குள் மறைந்திருக்கிறதா? என்னுடைய ஜீவனும் கிறிஸ்துவுடனேகூட தேவனுக்குள் மறைந்திருக்கிறது. நீங்கள் இந்தப் பூமிக்குரியவர்கள் அல்ல. மேலானவைகளை நாடுகிறவர்களா? நானும்கூட இந்தப் பூமிக்குரியவனல்ல, மேலானவைகளையே நாடுகிறவன்.”
இப்போது, நாம் இரண்டாவது கட்டத்திற்குப் போவோம். எல்லார்மேலும் உள்ள ஒரே பிதா. எல்லார் ஊடாகவும் உள்ள ஒரே பிதா. எல்லாருக்குள்ளும் இருக்கிற ஒரே பிதா. இது முதல் வரிசை.
இரண்டாவது வரிசை: ஒரே கார்த்தர், ஒரே விசுவாசம், ஒரே ஞானஸ்நானம், ஒரே சரீரம், ஒரே ஆவியானவர், ஒரே நம்பிக்கை. இதைப்பற்றி ஏற்கெனவே தொட்டிருக்கிறோம். இன்னும் கொஞ்சம் நாம் பார்க்கலாம்.
ஒரே கர்த்தருக்கு நான் வருகிறேன். நம்முடைய உறவுகள் கட்டப்படுவதற்கு, இசைவாக இணைக்கப்பட்டு, பொருத்தமாகக் கட்டப்பட்டு, பின்னிப் பிணைக்கப்படுவதற்கு தலையாய மூன்று காரியங்கள் ஒரே கர்த்தர், ஒரே விசுவாசம், ஒரே ஞானஸ்நானம். இது கேட்பதற்கு ரொம்ப கவர்ச்சிகரமாக இருக்கிறது. ஒரே கர்த்தர் என்றால் நம்முடைய எல்லா உறவுகளுக்கும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தலையாக இருக்கிறார் என்று பொருள். நாம் இணைக்கப்பட்டிருக்கிறோம். ஆனால், நம்முடைய இணைப்பு கிறிஸ்துவைத் தலையாகக் கொண்டது. நாம் ஒருவரோடொருவர் கட்டப்பட்டிருக்கிறோம். ஆனால், நம்முடைய கட்டு கிறிஸ்துவைத் தலையாகக் கொண்டது. நாம் ஒருவரோடொருவர் பிணைக்கப்பட்டிருக்கிறோம். ஆனால், நம்முடைய பிணைப்பு கிறிஸ்துவைத் தலையாகக் கொண்டது. இதற்கு ஒரு அர்த்தம்தான் உண்டு.
கிறிஸ்து தலையாக இருக்கிறார் என்றால் நம் எல்லா உறவுகளிலும், உறவுப்படுத்தப்படுகிற இரண்டு பேருக்கும் தலையாகிய கிறிஸ்து ஒரு இடத்தை வரையறுக்கிறார் என்று பொருள். கணவன் மனைவி உட்பட நாம் எல்லாரும் கிறிஸ்துவைத் தலையாகக்கொண்ட உறவுகளை உடையவர்கள். கிறிஸ்துவைத் தலையாகக்கொண்ட எல்லா உறவுகளிலும் நம் ஒவ்வொருவருக்கும் ஓர் இடம் வரையறுக்கப்படுகிறது. தலையாகிய கிறிஸ்து நம்மை ஓர் இடத்தில் வைக்கிறார், நம்மை ஓர் இடத்தில் அமைக்கிறார், நமக்கு ஓர் இடத்தை வரையறுக்கிறார். “தேவன் தமது சித்தத்தின்படி, அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார்” (1 கொரி. 12:18). அவர் அவயவங்கள் ஒவ்வொன்றையும் ஓர் இடத்தில் அமைத்திருக்கிறார்.
கணவன் மனைவி என்ற உறவிலே ஒவ்வொருவருக்கும் ஓர் இடத்தை அவர் வைக்கிறார். பெற்றோர்கள், பிள்ளைகள் என்ற கிறிஸ்துவைத் தலையாகக்கொண்ட உறவிலே ஒவ்வோர் அவயவத்திற்கும் ஓர் இடத்தை அவர் வைக்கிறார். சகோதர சகோதரிகள் என்ற கிறிஸ்துவைத் தலையாகக் கொண்ட உறவிலே ஒவ்வொரு சகோதரனுக்கும், சகோதரிக்கும் ஓர் இடத்தை அவர் வைக்கிறார். வைக்கிறார் அல்லது அமைக்கிறார் அல்லது வரையறுக்கிறார்.
அது இலகுவானது அல்ல. அந்த இடம் என்னவென்று அந்த இடத்தில் வைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனுக்கும் தெரியும். அந்த இடத்தைவிட்டுப் புரண்டு, இடம்பெயர்ந்து, நம்மை வைத்த இடத்தில் நாம் இருக்காமல் நம்முடைய இடம் பெயர்வோம் என்றால் பொதுவாக அது நமக்குத் தெரியும். இது தேவனுடைய ஜீவனைக்கொண்ட தேவனுடைய பிள்ளைகள் எல்லாருக்கும் உள்ள ஓர் அனுபவம். என்னுடைய இடத்தைவிட்டு நான் பெயர்ந்து அல்லது நகர்ந்து எனக்குரியதல்லாத ஒரு இடத்தில் இருப்பேன் என்றால் அது எனக்குத் தெரியும். இடம் என்றால் என்ன? கணவன் மனைவி என்று சொல்லும்போது என்னுடைய பாரம் கணவன் மனைவிக்கிடையே உள்ள உறவைப்பற்றியது மட்டும் தான் என்று நீங்கள் நினைத்துவிட வேண்டாம். ஆனால் அதைப்பற்றியதும்கூட என்னுடைய பாரம்.
பத்து வருடம், இருபது வருடம், முப்பது வருடம் கணவன் மனைவியாய் இருப்பவர்களுக்கும் இது பொருந்தும். இன்னும் அந்த உறவுகளிலே இசைவோ, பொருத்தமோ அல்லது பின்னுதலோ இல்லாமல் இருக்கலாம். முப்பது வருடமானபிறகும் ஒரு கணவனுக்கும், மனைவிக்கும் இடையே உள்ள உறவில் இசைவோ, இணக்கமோ, இல்லாமல் போகிற வாய்ப்பு உண்டு. பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையே உள்ள உறவு மேலோட்டமாக இருக்கக்கூடிய சாத்தியக்கூறு உள்ளது. அவர்கள் கேலி செய்துகொள்வார்கள், சிரித்துக்கொள்வார்கள். ஆனாலும், அவர்கள் உறவு மேலோட்டமான தாகத்தான் இருக்கும். மேலோட்டமாக என்றால் அங்கு பரத்திற்குரிய எந்த மூலக்கூறுகளும் இல்லை. பரத்திற்குரிய, தேவனுக்குரிய, நித்தியத்திற்குரிய, ஆவிக்குரிய எந்த மூலக்கூறுகளும் அங்கு இல்லாமல் இருக்கிற வாய்ப்பு உண்டு. அது மிகவும் பரிதாபமான உறவு. அப்படிப்பட்ட உறவுகளிலே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் பரிபூரணமும், முழுநிறைவும் காணப்படுவதில்லை.
இடம் என்றால் ஒவ்வொரு இடத்திற்குரிய பொறுப்பு, இருப்பு, நிலை, நடை ஆகியவைகள் உண்டு. ஏதோ இலக்கியப்பூர்வமாக இருக்கவேண்டுமென்பதற்காக இந்த வார்த்தைகளையெல்லாம் நான் பயன்படுத்தவில்லை. மிகவும் பாரத்தோடு நான் இதைச் சொல்கிறேன். என்னுடைய மனைவியோடு, பிள்ளைகளோடு, பெற்றோர்களோடு, சகோதர சகோதரிகளோடு உள்ள உறவுகளிலே எனக்கு ஓர் இடத்தைத் தேவன் அமைத்திருக்கிறார், வைத்திருக்கிறார், வரையறுத்திருக்கிறார் என்றால் அதன் பொருள் என்ன? அந்த உறவுகளிலே எனக்கு ஒரு பொறுப்பு உண்டு. “நான் என் சகோதரனுக்குக் காவலாளியோ?” என்று கேட்க முடியாது. நான் என் சகோதரர்களுக்குக் காவலாளிதான்.
இயேசுகிறிஸ்து அண்ணன் தம்பி இரண்டுபேருக்கும், “உனக்குப் பத்திலே ஆறு பாகம்,” என்றும் “அவனுக்குப் பத்திலே நாலு பாகம்,” என்றும் பாகம் பிரிக்கவில்லை. ஆனால், அவர்களுக்கு அவர் ஊழியம் செய்யாமல் போகவில்லை. “பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்,” என்று அவர்கள் வழக்கைத் தீர்த்துவிட்டுத்தான் போனார். கர்த்தர் எல்லா வழக்குகளையும் தீர்ப்பார். ஆனால், நாம் தீர்ப்பதுபோல் தீர்ப்பதில்லை.
கல்யாணம் பண்ணும்போது உங்கள் அப்பா எவ்வளவு நகை கொடுத்தார்கள். அப்படியானால் சொத்திலே கொஞ்சம் குறைத்துத்தான் தருவார்கள். இது நாம் தீர்க்கிற விதம். அவர் தீர்க்கிற விதம் அப்படியல்ல. ஆனால், அவர் தீர்ப்பார்.
எனவே, இடம் என்றால் அதற்குரிய பொறுப்புகள் உண்டு. நம் எல்லாருக்கும் பொறுப்பு இருக்கிறது. பொறுப்பு என்றால் என்ன? நம்முடைய சகோதரனைக்குறித்து நமக்குப் பொறுப்பு இருக்கிறது. பொறுப்பு இருக்கிறதென்றால் சகோதரனுடைய காரியம் என்னவென்று ஓர் எண்ணம் வரும். ஒவ் வொரு இடத்திலும் நமக்குப் பொறுப்பு உண்டு. ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்றாற்போல் நான் இப்படித்தான் இருக்க வேண்டும், நான் இப்படித்தான் நிற்க வேண்டும், நான் இப்படித்தான் நடக்க அல்லது வாழ வேண்டும். இவைகளெல்லாம் இடத்தைப்பொறுத்து வரையறுக்கப்படுகின்றன. இப்போது நான் “இதுதான் கணவனுடைய, மனைவினுடைய, பெற்றோருடைய, கொஞ்சம் வளர்ந்த சகோதரனுடைய, வளர்கின்ற சகோதரனுடைய, பிள்ளைகளுடைய இடத்தின் வரையறை” என்று நான் வரையறுக்கப்போவதில்லை. பரிசுத்த ஆவியானவர் நமக்குப் போதிப்பார். சொல்லவேண்டியதை நான் சொல்லிவிடுகிறேன்.
உறவுகள் கட்டப்படாததற்கு ஒரு காரணம் என்னவென்றால் நம்முடைய இடத்தைவிட்டு நாம் பெயர்ந்து போவது. யூதாவிலே அதைப்பற்றி எழுதியிருக்கிறது. சில தேவதூதர்களை ஓர் இடத்திலே வைத்தார். அவர்கள் தங்கள் இடத்தைவிட்டுப் பெயர்ந்தார்கள். அவர்கள் தேவன் வைத்த இடத்திலே திருப்பதியடையவில்லை. “தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்கள்” (யூதா 6). “எனக்கு இன்னொரு இடம் வேண்டும்” என்பதுபோல் அவர்கள் செயல்பட்டார்கள். தேவன் அவர்களைத் தீர்க்கிறார். தேவன் தூதர்களுக்குரிய இடத்தை வைத்திருக்கிறார், வரையறுத்திருக்கிறார்.
தேவன் உன்னை எந்த இடத்தில் வைத்திருக்கிறாரோ அந்த இடத்திலிருந்துதான் நீ வாழ வேண்டும். அது வசதியாக இல்லை எனறால் அது தலையை எதிர்த்து நிற்பது. அதேபோல நான் கணவன் என்கிற முறையிலே என்னுடைய இடத்தைவிட்டுப் பெயா;ந்துபோகிறேன் என்று வைத்துக்கொள்வோம். இடத்தைவிட்டுப் பெயர்ந்துபோவது என்றால் என்ன? என்னுடைய பொறுப்புகள், நான் இருக்கிற இருப்பு, நான் இருக்கிற நிலை, நான் செய்கிற செயல்பாடுகள் இவைகளெல்லாம் மாறுபாடாக, ஒவ்வாததாக, முரண்பாடாக இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம்.
அதனால் என் மனைவிக்கு மிகுந்த துன்பம், பாடுகள், கண்ணீர், வேதனை வருகிறது. எந்த உறவிலும் இரண்டுபேரும் தங்கள் இடத்தில் நேர்த்தியாக இருக்கும்போதுதான் அந்த உறவுகள் கட்டியெழுப்பப்படும், இணைக்கப்படும், பிணைக்கப்படும். இரண்டுபேரிலே ஒருவர் அல்லது பலரிலே ஒருவர் அல்லது இருவர் தங்கள் இடத்தைவிட்டுப் பெயர்ந்துபோவார்கள் என்றால் அடுத்த சாராருக்கு நிறைய துன்பம் வரும். அது அவர்களுக்குக் கண்ணீரையும், கதறுதலையும் கொண்டு வரும். உண்மையிலேயே பாடு என்று சொல்லும்போது “எல்லாருக்கும் பாடுகள் உண்டு, எல்லாருக்கும் தலைவலி இருக்கிறது,” என்று சொல்லவில்லை. சில சமயங்களில் நான் என்னுடைய இடத்தை விட்டுப் பெயரும்போது என்னுடைய பிள்ளைகளுக்கோ, பெற்றோர்களுக்கோ, மனைவிக்கோ கண்ணீரையும், கதறுதலையும், ஒரு விம்முதலையும் அதாவது “ஆண்டவரே, இந்த நிலைமை மாறாதா?” என்று அடுத்த சாரார் கதறக்கூடிய, அழக்கூடிய, கண்ணீர்விடக்கூடிய, விம்மக்கூடிய நிலைமைக்கு நாம் தள்ளிவிடுகிறோம். நான் என்னுடைய இடத்தின்படி வாழ வேண்டும். என்னுடைய இடத்திற்கு மிஞ்சி மேலேபோய் அல்லது கீழேபோய் வாழக்கூடாது.
கண்டிப்பாக கணவன் மனைவியைப் பொறுத்தவரை உங்களுக்கு ஒரு இடம் உண்டு. ஒவ்வொரு இடத்திலும் நீங்கள் செய்ய வேண்டிய பொறுப்பு, ஒரு பணிவிடை இருக்கிறது. அவர்கள் வணங்காக் கழுத்துள்ளவர்களாய் இருந்தாலும் நீங்கள் அவர்களுக்குச் செய்யவேண்டிய பணிவிடை உண்டு. அவர்கள் கல்லெடுத்து எறிவார்கள். ஆனாலும், நீங்கள் செய்ய வேண்டும்.
நீங்கள் ஒரு ஆளுக்குக் கல்யாணம் பண்ணி வைப்பீர்கள். அப்பொழுது “இவரைப்போல நல்லவர் யாரும் இல்லை,” என்று சொல்வார்கள். பத்து வருடம் கழித்து “இவன் கல்யாணம் பண்ணி வைத்தான். அதனால்தான் எனக்கு இவ்வளவு பாடு,” என்பார்கள். கல்யாணம் பண்ணி வைக்கும்போது தெரியவில்லையோ? பத்து வருடம் கழித்துத்தான் “கண் திறக்கப்பட்டு” உரைப்பார்கள்.
ஒரு சகோதரனுக்கு நான் கல்யாணம் செய்து வைத்தேன். அவர் ஒருநாள் ராத்திரி எனக்குப் போன் செய்து என்னைத் திட்டித்தீர்த்தார். நான் வாயடைத்துப் போனேன். உடனே, “இனிமேல் யாருக்கும் நான் கல்யாணம் முயற்சியே செய்ய மாட்டேன்,” என்று சொல்லிவிட முடியுமா? “உங்களுக்கு எதற்கு இந்த வேலை?” என்று என் பிள்ளைகள் சொல்வார்கள். ஆனால், “நீங்கள் எனக்கு இன்னும் திருமணம் பண்ணிவைக்கவில்லை,” என்று இன்றைக்கும் எனக்கு மெயில் வருவதுண்டு. எனவே திருமணம் பண்ணி வைத்தாலும் கல்லெறியப்படும், திருமணம் பண்ணிவைக்காவிட்டாலும் கல்லெறிவார்கள். ஆகவே, நாம் இப்போது எப்படி முடிவெடுப்பது? நம்முடைய இடம் என்னவோ அதற்குரிய பொறுப்புகளை நாம் செய்ய வேண்டும்.
சரி, அடுத்த சாரார் தன்னுடைய இடத்தைத் தக்கவைத்துக்கொள்ளவில்லை. அவர்கள் தங்கள் இடத்தைவிட்டுப் பெயர்ந்து வாழ்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். நாம் என்ன செய்ய வேண்டும்? இதுதான் மிக முக்கியமான கேள்வி? கணவன் என்ற இடத்தைவிட்டு நான் பெயர்ந்து வாழ்கிறேன் என்று வைத்துக்கொள்வோம். மனைவி என்ன செய்ய வேண்டும்? அப்போது, “நானும் பெயர்ந்து வாழ்வேன்,” என்று மனைவி சொல்லலாமா?
ஒரே கர்த்தர் என்பதின் பொருள் என்னவென்றால் ஒரு உறவிலே இரண்டு சாரார் இருக்கிறார்கள். ஒரு சாரார் தன்னுடைய இடத்தைவிட்டுப் பெயரும்போது அடுத்த சாரார் தங்கள் இடத்தைவிட்டுப் பெயரக்கூடாது. “திறப்பின் வாசலில் நிற்பதற்கு ஒரு மனிதனைத் தேடினேன்.” உறவுகளெல்லாம் அழிந்துபோவதற்கு, உடைந்துபோவதற்கு, முறிந்துபோவதற்கு, சின்னாபின்னமாய்ப் போவதற்கு காரணம் என்னவென்றால் ஒரு சாரார் அந்த இடத்தைவிட்டுப் பெயர்ந்து போகும்போது அடுத்த சாரார், “என்னால் இந்த இடத்தைவிட்டுப் பெயர்ந்துபோக முடியாதா? நானும் பெயர்ந்து போகிறேன்,” என்ற பாணியில் செயல்படுவதுதான் காரணம். இங்கு ஒரு கர்த்தரும் இல்லை. ஒரு விசுவாசமும் இல்லை. ஒரு ஞானஸ்நானமும் இல்லை. அடுத்த சாரார் தங்கள் இடத்தைவிட்டுப் பெயர்ந்து போகும்போது, நான் என்னுடைய இடத்தைவிட்டுப் பெயராமல் இருந்தேனென்றால் “அது எனக்குக் கண்ணீரையும், அழுகையையும், கதறுதலையும், வேதனையையும் கொண்டுவருகிறதே!” என்றால் வரும், இல்லை என்று யார் சொல்வது?
ஆனால், நாம் எதை விசுவாசிக்கிறோம் என்றால் தன்னுடைய இடத்தை விட்டுப் பெயர்ந்த சாரார் எனக்கு எதிராகச் செயல்படவில்லை. யாருக்கு எதிராகச் செயல்படுவது? ஒரே தலைக்கு எதிராக அவர்கள் சவால் விட்டிருக்கிறார்கள். எனவே, நடவடிக்கை எடுக்கவேண்டியது, தீர்க்கவேண்டியது யார்? ஒரே தலை. அவர் தீர்ப்பார். ஒரே தலை இவரை இந்த இடத்திலும், அவரை அந்த இடத் திலும் வைத்திருக்கிறார். இந்த ஒரு அவயவம் அப்படியே தன்னுடைய இடத்தைவிட்டு உருள்கிறது. உருண்டுபுரண்டு வேலைசெய்கிறது. அப்போது தலையானவர் சும்மா இருப்பதில்லை. ஆ! இன் னொரு அவயவமானது தன்னுடைய இடத்தைவிட்டுப் பெயராமல்–அது சிலுவையாகவே இருந்தாலும்–இருப்பதால் நான் தீர்க்கவேண்டும் என்று அவர் சொல்கிறார்.
வேதத்திலிருந்து பல எடுத்துக்காட்டுகளை நாம் காட்டலாம். சவுலைப் பொறுத்தவரை தாவீது சவுலுடைய வேலைக்காரன் என்கிற தன்னுடைய இடத்தை வைத்துக்கொள்கிறான். ஆனால், சவுல் தாவீதினுடைய அரசன் என்கிற இடத்தைச் சரியாக வைத்துக்கொள்ளவில்லை.
சில சமயங்களில் இடத்தின்படி வாழவேண்டும் என்று சொன்னவுடனே உங்களுடைய கற்பனை என்னவென்றால் மனைவிகளெல்லாம் தங்கள் இடத்தில் இருக்க வேண்டும். பிள்ளைகளெல்லாம் தங்கள் இடத்தில் இருக்க வேண்டும். வேலைக்காரர்களெல்லாம் தங்கள் இடத்தில் இருக்க வேண்டும். கணவர்கள், பெற்றோர்கள், எஜமான்கள் எல்லாம் தங்கள் இஷ்டம்போல எவ்வளவு உயரமான இடத்தில் வேண்டுமானாலும் இருந்துகொள்ளலாம் என்பது அல்ல.
சவுல் இருப்பது உயர்ந்த இடம், அவன் அரசன். தாவீது இருப்பது தாழ்ந்த இடம், வேலைக்காரன் என்றுகூடச் சொல்லலாம். ஆனால், தன்னுடைய இடத்தைவிட்டுப் பிறழ்வது யார்? சவுல். பெற்றோர்கள் தங்கள் இடத்தைவிட்டுப் பெயர முடியும். ஒருவேளை பிள்ளைகள் தங்கள் இடத்தின்படி வாழவில்லை, இடத்தைவிட்டுப் பெயர்ந்துவிட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் எனக்குரிய கீழ்ப்படிதலையோ, பணிவையோ தரவில்லை என்று வைத்துக்கொள்வோம். உடனே, நான் என்னுடைய இடத்தைவிட்டுப் பெயர்ந்துபோவதற்கு எனக்கு எந்த உரிமையும் இல்லை. நாம் கிறிஸ்துவை ஒரே தலையாய்க்கொண்டு வாழ்கிற மக்கள் என்றால் என்னுடைய பிள்ளைகள் தங்கள் இடத்தைவிட்டுப் பெயரலாம். ஆனால் பெற்றோர், தகப்பன் என்கிற முறையிலே நான் என்னுடைய இடத்தைவிட்டுப் பெயரக் கூடாது.
இடத்தைவிட்டுப் பெயர்வது என்றால் என்ன பொருள்? “எப்படிவேண்டுமானாலும் போ,” என்று சொல்வது இடத்தைவிட்டு பெயர்வதாகும். “நீதான் பொறுப்பு” என்று கைகழுவுவது இடத்தை விட்டுப் பெயர்வதாகும். இல்லை, இல்லை. கடைசிவரை யார்தான் பொறுப்பு? “நாம் பிள்ளைகளைப் பெற்றோம்; அவர்கள் கீழ்ப்படிந்தால் அவர்களுடைய வளர்ச்சிக்கு நான் பொறுப்பு. கீழ்ப்படியவில்லையென்றால் அவர்கள் வளர்ச்சிக்கு நான் பொறுப்பு இல்லை,” என்று சொல்லக்கூடாது. நாம் தேவனுடைய சாயலால் படைக்கப்பட்டவர்கள்; தேவனுடைய ஜீவனால் மறுபடி ஜெநிப்பிக்கப்பட்டவர்கள். எனவே, கடைசிவரை அவர்கள் வாழ்வுக்கும், தாழ்வுக்கும் நாம் பொறுப்பு. அவர்கள் கீழ்ப்படியவில்லையென்றாலும் நாம்தான் அவர்களுக்குப் பொறுப்பா என்றால் ஆம், நாம் பொறுப்பு. நீங்கள் ஆச்சரியப்படலாம். “கீழ்ப்படியாவிட்டால் நான் எப்படி பொறுப்பு?” அவர்கள் பிறந்ததுமுதல் விவரம் தெரிகிறவரை அவர்களுக்குக் கொடுத்த காரியங்கள் இருக்கிறதில்லையா அதற்கெல்லாம் யார்தான் பொறுப்பு? நான்தான் பொறுப்பு.
சவுல் தாவீதைக் கொல்வதற்கு வகைதேடுகிறான். குகைக்குள் அவன் இயற்கைக் கடன் கழிப்பதற்காக வரும்போது தாவீதினுடைய நண்பர்கள், “கர்த்தர் தம்முடைய வாக்குறுதியை நிறைவேற்றினார். இன்றைக்கு சவுலினுடைய உயிர் உம் கையில் இருக்கிறது. ஒரே வெட்டாக வெட்டிவிடு,” என்று சொல்லும்போது தாவீது வெட்டவில்லை. அவன் சவுலின் சால்வையின் ஒரு ஓரத்தை மட்டும் அறுத்துக்கொண்டு வருகிறான். சால்வையின் ஓரத்தை அறுத்துக்கொண்டு வந்தபிறகு தாவீதினுடைய இருதயம் அவனை வாதித்தது. தாவீது உண்மையாகவே கிறிஸ்துவை தலையாகக்கொண்டு, அவர் வரையறுத்த இடத்திலே வாழ்ந்த மனிதர்.
தாவீதின் குமாரனாகிய இயேசுகிறிஸ்து அதைவிடத் தம்முடைய இடத்தில் வாழ்ந்த ஒரு மனிதர். அவரைவிடச் சிறந்த உதாரணம் எதுவும் இல்லை. “நீர் கல்லுகளை அப்பங்களாக மாற்றும்,” என்று பிசாசு சொன்னபோது, அவர் கல்லுகளை அப்பங்களாக மாற்றவேண்டியதுதானே! அவர் தம்முடைய இடத்தைவிட்டுப் பெயரவில்லை. “நீர் தாழ விழுந்து பணிந்து இறங்கவேண்டியதுதானே!” அவர் இறங்கவில்லை. “பண்டிகைக்குப் போய் பெரிய ஆள் என்று காட்டவேண்டியதுதானே!.” அவர் பெயரவில்லை. “நீர் சிலுவையிலிருந்து நேரே குதித்தால் நீர் தேவனுடைய குமாரனென்று உம்மை நாங்கள் விசுவாசிப்போம்,” என்றதற்கு அவர் மனிதகுமாரன் என்ற இடத்தைவிட்டு ஒருநாளும் பெயரவில்லை.
தாவீதுடைய எடுத்துக்காட்டைவிட தாவீதின் குமாரனுடைய எடுத்துக்காட்டு சாலச்சிறந்தது. அவருடைய இடத்திலே செல்வாக்கு இருக்கிறது; வல்லமை இருக்கிறது; அதிகாரம் இருக்கிறது. அவர் சொல்ல ஆகும். ஆனால் அவர் தம்முடைய இடத்தைவிட்டுப் பெயரவில்லை. தேவன் அதை அங்கீகரிப்பார். தேவன் ஆசீர்வதிப்பார்.
தாவீதுக்கு யோவாப் என்கிற படைத்தளபதி இருந்தான். அவன் ரொம்ப ஞானி. தாவீது கணக்கெடுப்பு எடுக்கும்போது, “நீர் இப்படி புள்ளிவிவரம் எல்லாம் எடுக்க வேண்டாம்,” என்று யோவாப் கண்டிக்கிறான். ஒருமுறை யோவாப் போர்களத்திற்குப் போய், அந்தப் போரை வென்றபிறகு, “இப் போது போரில் வெற்றி பெற்றாயிற்று. நீர் இப்பொழுது வாரும். வந்து வெற்றியை நீர் எடுத்துக் கொள்ளும்,” என்று தாவீதுக்குச் சொல்லியனுப்புகிறான். தாவீது அங்கே போகிறான். அவர்கள் அந்த அரசருடைய கிரீடத்தை மட்டும் தாவீதுடைய தலைமேல் வைத்து சூட்டுகிறார்கள். உண்மையிலேயே தன்னுடைய இடத்தின்படி தீர்க்கமாக வாழும்போது அவனுடைய வேலைக்காரர்களும் அவனுக்குரிய இடத்தைக் கொடுக்கிறார்கள். தேவன் ஒருநாள் அதை கனம்பண்ணுவார்.
எனவே, நான் சொல்ல விரும்புகிற காரியம் இதுதான். ஒரே கர்த்தரைத் தலையாகக்கொண்டு வாழ்வதின் பொருள் என்னவென்றால் அடுத்த சாரார் தங்கள் இடத்தைவிட்டுப் பெயர்ந்தாலும் நாம் ஒருநாளும் நம்முடைய இடத்தைவிட்டுப் பெயரக்கூடாது. “அவர்கள் நம்மைச் சாதகமாக எடுத்துக்கொள்வார்களே!” என்றால் எடுத்துக்கொள்ளட்டும். தேவன் நியாயந்தீர்ப்பார். தேவன் நியாயந்தீர்ப்பார் என்று நான் சொல்லும்போது அவர் அவர்களை அடிப்பார், உதைப்பார், கையை முறிப்பார், காலை முறிப்பார் என்று புறவினத்தார் சொல்வதுபோல நான் சொல்லவில்லை. என்னுடைய தீர்ப்பு மிகவும் குறைவானது. எனக்கு ஒரு துன்பம் வந்துவிட்டதென்றால் நான் மற்றவர்களை மிகவும் கடுமையாகத் தீர்ப்பேன். நான் மற்றவர்களுக்குத் துன்பம் இழைத்துவிட்டால் அதை நான் மிகவும் மெதுவாகத் தீர்ப்பேன். நாம் சாதாரண மனிதர்கள், இயற்கையான மனிதர்கள். ஆனால், தேவன் நம்மைப்போல் தீர்ப்பதில்லை. அவர் உள்ளதை உள்ளபடி தீர்க்கிறவர். எனவே அடுத்த சாரார் தங்கள் இடத்தைவிட்டுப் பெயரும்போது காலத்திற்குமுந்தி அல்லது இடத்திற்கு மிஞ்சி நாம் தீர்க்கக்கூடாது. “தேவனே, உம்முடைய அளவுகோலின்படி நீர் தீர்ப்பீராக,” என்று நாம் விட்டுவிட வேண்டும்.
1 கொரிந்தியரிலே நாம் இதை வாசித்திருக்கிறோம். அவர்கள் கர்த்தருடைய பந்திக்கென்று கூடிவரும்போது சிலர், பணக்காரர்கள், ஒரு கூட்டமாய்க் கூடிவந்தார்கள். ஏழைகள் இன்னொரு கூட்டமாய்க் கூடிவந்தார்கள். அவர்கள் தங்கள் இடத்தின்படி வாழவில்லை. நாம் தேவனுடைய பிள்ளைகள் என்ற முறையிலே கூடிவரும்போது நாமெல்லாரும் சகோதர சகோதரிகள் என்பதுதான் நம்முடைய இடம். மாமா, மச்சான், நாம் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள், இந்த ஊரைச் சேர்ந்தவர்கள், இந்த இடத்தைச் சேர்ந்தவரேகள், இந்தப் படிப்பைச் சேர்ந்தவர்கள் என்று எதுவும் இல்லை. நாம் கூடிவரும்போது அவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தேவனுடைய பிள்ளைகள் என்ற முறையிலே நாம் கூடிவரும்போது நாம் தேவனுடைய மக்கள் என்கிற ஸ்தானம் உண்டு. இடத்திற்கு இன்னொரு பெயர் ஸ்தானம். இவர்களும் ஐந்தாவதுதான். நானும் ஐந்தாவதுதான். அப்படியல்ல. நாம் இருவரும் ஒன்றுதான். ஐந்து என்கிற முறையிலே ஐந்து இலக்கம் ஒன்றுதான். உங்கள் ஸ்தானம் ஒன்றாவது ஸ்தானமாக இருக்கலாம். என்னுடைய ஸ்தானம் பத்தாவது ஸ்தானமாக இருக்கலாம். இதை எடுத்துக்காட்டாகச் சொல்லுகிறேன். இதை நீங்கள் எழுத்தின்படி எடுத்துக்கொள்ள வேண்டாம். கிறிஸ்துவை நாம் தலையாகக்கொண்டு வாழும்போது ஸ்தானம் என்று ஒன்று .இருக்கிறது.
1 கொரிந்தியர் 11ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். தேவன் நியாயந்தீர்க்கிறார். “நீங்கள் கர்த்தருடைய பந்தியை அசட்டை பண்ணினதினாலே, உங்கள் இடத்தை நீங்கள் அசட்டை பண்ணினதினாலே உங்களில் சிலர் வியாதியாயிருக்கிறார்கள், சிலர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்” (1 கொரி. 11:30). தேவனுடைய தீர்ப்பு மிகவும் கடினமானது. ஒருவேளை கணவன் தன்னுடைய இடத்தைவிட்டுப் பெயர்ந்து மனைவியை நடத்தும்போது, மனைவி உடனே, “நாம் இரண்டுபேரும் இடத்தை மாற்றிவிடுவோம். நீர் கணவனாய் இருப்பதற்குத் தகுதியில்லை. நான் கணவனுடைய இடத்தை எடுத்துக்கொள்வேன்,” என்று சொல்லவேண்டிய அவசியமில்லை. இந்த ஆபத்து அல்லது விபத்து எல்லாருக்கும் நேரிடுகிற வாய்ப்பு இருக்கிறது. “என்னுடைய மனைவி போதுமான அளவுக்கு அன்பும், மரியாதையும் செலுத்தவதில்லை. எனவே, நான் அவர்களுக்குப் போதுமான அன்பும், மரியாதையும் கொடுக்கப்போவதுமில்லை,” என்பது தவறு. தேவன் அவருடைய கணிப்பின்படி தீர்ப்பதற்கு நாம் காத்திருக்க வேண்டும்.
இதோடு தொடர்புடையதுதான் ஒரே விசுவாசம், ஒரே ஞானஸ்நானம். இதோடு மிகவும் தொடர்புடையது என்பதால் ஒரே ஞானஸ்நானத்தை நான் இப்பொழுது கொண்டுவருகிறேன். அடுத்த சாரார் தன்னுடைய இடத்தைவிட்டுப் பெயர்ந்தாலும் நான் என்னுடைய இடத்தைவிட்டுப் பெயராமல் இருப்பது ஒரே ஞானஸ்நானம். “இல்லை, நான் பல்லாவரம் ஆற்றிலே, பம்மல் ஆற்றிலே ஒரு ஞானஸ்நானம் எடுத்தேன்,” என்று சொன்னால் அந்த ஞானஸ்நானம் பெரிய ஞானஸ்நானம் இல்லை. அது ஒரு எளிமையான ஞானஸ்நானம்.
ஞானஸ்நானம் எடுப்பதற்கு விலைக்கிரயம் கொடுக்க வேண்டும். லூக்கா 12ஆம் அதிகாரம் 50வது வசனம்: “ஆகிலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானம் உண்டு. அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்,” என்று ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தம் சிலுவை மரணத்தைப்பபற்றிப் பேசுகிறார். ஞானஸ்நானத்தைப்பற்றி நாம் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் ரோமர் 6ஆம் அதிகாரத்தை நாம் வாசிக்க வேண்டும். ஞானஸ்நானத்தைப்பற்றி ரொம்பத் தெளிவாக இருக்கிறது. ஞானஸ்நானம் என்றால் கிறிஸ்துவுடனேகூட சிலுவையிலறையப்பட்டு, நாம் அடக்கம்பண்ணப்பட் டோம். இது என்றோ ஒருநாள் நாம் பெற்ற ஞானஸ்நானமா அல்லது இந்த ஞானஸ்நானத்தில் நாம் வாழவேண்டுமா? ஒவ்வொருநாளும் ஞானஸ்நானம் பெற வேண்டும்.
நல்ல எடுத்துக்காட்டு யோசுவாவின் புத்தகத்திலே இருக்கிறது. இஸ்ரயேல் மக்களெல்லாம் யோர்தான் நதியைக் கடந்துபோகுமவரை ஆசாரியர்கள் ஞானஸ்நானத்தில் நின்றார்கள். நம்முடைய இடத்தைவிட்டு நாம் பெயரவே கூடாது.
கைக்கடிகாரம் எனக்கு சரிபார்க்க தெரியாது. சைக்கிள் நான் சரிசெய்யலாம். கைக்கடிகாரம் மிக நுணுக்கமான காரியம் அது. நான் சரிசெய்ய ஆரம்பித்தால் இருக்கிறதும் போய்விடும். அதுபோல பல உறவுகளிலே அடுத்த சாரார் இடம் பெயர்கிறார்கள். எனவே, “அவர் பெயர்ந்த இடத்திலிருந்து நான் அவரைப் பழைய இடத்திற்குக் கொண்டுவரப்போகிறேன்,” என்று ஆரம்பித்தால் இருக்கிற உறவும் இல்லாமல் போய்விடும். அதனால் நம்முடைய மாம்சப்பிரகாரமான, இயற்கையான கைகளை வைத்து நாம் உறவுகளைத் தொடக்கூடாது.
கலாத்தியர் 6ஆம் அதிகாரத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார். “சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள். நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு” (கலா. 6:1). அப்படி சீர்பொருத்தும்போது ஒன்றைக்குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உன்னுடைய இடத்தைவிட்டுப் பெயரக்கூடாது. பிள்ளைகளை நாம் கீழ்ப்படுத்த வேண்டும். கணவன்மார்கள் தவறு செய்வார்களா? தாராளமாகத் தவறு செய்வார்கள். ஆனால், மனைவி தன் இடத்தைவிட்டுப் பெயரக்கூடாது, சாராள் “ஆண்டவனே” என்று பணிந்து தன்னுடைய கணவனுக்கு வேலைசெய்தாள் என்று இருக்கிறது. அதைப் பார்க்கும்போது நம்முடைய குடும்பங்களையும் பார்க்க வேண்டும். “இவரையெல்லாம் ‘ஆண்டவனே’ என்று பணிபுரிய வேண்டிய அவசியமில்லை, சகோதரனே,” என்று நீங்கள் சொல்லக்கூடும். ஆபிரகாம் பெரிய ஆளாக இருக்கக்கூடும் என்று நீங்கள் நினைக்கலாம். அப்படியல்ல. “அவன் எந்த இடத்தில் இருந்தாலும் சரி, அது அவன் இருக்க வேண்டிய இடம். நான் அவனை ‘ஆண்டவனே’ என்று பணிந்து என் கணவனுடைய தேவைகளைக் குறித்தும், மகிழ்ச்சியைக்குறித்தும் அவனுடைய இளைப்பாறுதலைக்குறித்தும் நான் அக்கறையுள்ளவளாக இருப்பேன்.”
“எங்கு மக்கள் சிலுவையில் அறையுண்ட வாழ்க்கை வாழ்கிறார்களோ அங்கு கிறிஸ்துவின் சரீரம் இருக்;கிறது. எங்கு மக்கள் சிலுவையில் அறையுண்ட வாழ்க்கை வாழவில்லையோ அங்கு கிறிஸ்து வின் சரீரம் இல்லை,” என்று சகோதரன் ஆஸ்டின் ஸ்பார்க்ஸ் சொல்கிறார். இது சபையா? சபையில்லையா? நான் மிகச் சாதாரணமாகச் சொன்னேன். “நாங்கள் பெயர்ப்பலகை வைக்கவில்லை. பெயர் எதுவும் இல்லை. நாங்கள் வட்டமாக உட்கார்ந்திருப்போம். தலைவர் எங்கு இருக்கிறார் என்று தெரியாது. எனவே நாங்கள் சபை,” என்றால் தேவன் சிரிப்பார். பரலோகத்தில் அமர்ந்திருக்கிறவர் நகைப்பார் (சங். 2.:4). எங்கு தேவனுடைய மக்கள் சிலுவையில் அறையுண்ட வாழ்க்கை வாழ்கிறார்களோ அங்கு தேவன் விரும்புகிற சபை இருக்கிறது. அங்கு தேவன் தம்முடைய சபை யைக் கட்டியெழுப்புகிறார். அப்படிப்பட்ட சபையைப் பாதாளத்தின் வாசல்கள் மேற்கொள்வதில்லை. தேவனுடைய எதிரியாகிய சாத்தானுக்கு அப்படிப்பட்ட குடும்பங்களிலும், சபைகளிலும் வேலை இருக்காது. ஆனால், எங்கே புல் தடுக்கி விழுந்தால் நாம் இடத்தைவிட்டுப் பெயர்ந்துவிடுகிறோமோ அதை நாம் உடனடியாக சரிசெய்துவிட வேண்டும். இல்லையென்றால் இன்றிலிருந்து ஒரு ஐந்து வருடம் அல்லது பத்து வருடம், பதினைந்து வருடம், இருபது வருடம் கழித்து அதனுடைய பலாபலனை நாம் அனுபவிப்போம்.
இந்த நாட்களில் நான் கற்றுக்கொண்டது என்னவென்றால் தேவன் சில சமிக்ஞைகளை ரொம்ப சீக்கிரமாகவே காண்பிக்கிறார். இருபது வருடத்துக்குமுந்தியே ஒரு சமிக்ஞையை அவர் காண்பிக்கிறார். தேவன் ஒன்றும் காண்பிக்காமல் விடவில்லை. அந்த சமயத்தில் அதை நாம் உதாசீனம் பண்ணுகிறோம். நம்முடைய கணவனைக்குறித்தோ, மனைவியைக்குறித்தோ, பிள்ளைகளைக் குறித்தோ, சகோதர சகோதரிகளைக்குறித்தோ சில (சமிக்ஞை என்றால்) சிக்னல் காட்டுகிறார். நாம் அதைக்குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். “ஓ! இந்த இடத்திலே நம்முடைய கோட்டை மிகவும் பலவீனமாக இருக்கிறது. எனவே, இந்தக் இடத்தில் கோட்டையைச்சுற்றிக் கொஞ்சம் பலப்படுத்த வேண்டும்.” நாம் ரொம்ப பரபரப்பாக இருக்கிறோம். வேலைக்குப் போக வேண்டும். வீட்டிலே சமைக்க வேண்டும். வீட்டைச் சுத்தம் பண்ணவேண்டும். ரொம்ப பரபரப்பாக இருப்பதால் பத்து வரு டங்கள், இருபது வருடங்கள் கழித்து நம்முடைய கோட்டை பலவீனமாகத்தான் இருக்கிறது!! நம் முடைய உறவு பலவீனமாகவே இருக்கிறது. நம்முடைய வாழ்க்கையிலே ஒருநாள் புயல் வீசும். அதில் எந்த விதிவிலக்கும் இல்லை. இப்படிப் புயல் வீசும்போது அல்லது எதிரி தாக்கும்போது அந்தக் கோட்டை தாக்கப்படுகிறது. எனவே, நம்முடைய உறவுகளில் இருக்கிற சில இறுக்கங்களை அல்லது இளக்கங்களை அல்லது பெலவீனங்களை நாம் அதிகாலமே கவனமுள்ளவர்களாக இருக்க வேண்டும். கணவனுக்கும் மனைவிக்கும், பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும், சகோதர சகோ தரிகளுக்கும் இருக்கிற உறவைக்குறித்து தேவன் மிகவும் பாரப்படுகிறார்.
எனவே ஒரே கர்த்தர், ஒரே விசுவாசம், ஒரே ஞானஸ்நானம் என்பவைகள் வெறுமனே கோஷம்போடுவதற்காக அல்ல. தேவன் நம்முடைய உறவுகளை, மிக அழகாய், அவருடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளத்தக்கவிதத்திலே கட்டுவதற்கு இவைகளெல்லாம் தேவன் நமக்குக் கொடுக்கின்ற அற்புதமான மகத்துவம். தேவன் நமக்கு உண்மையிலேயே ஞானத்தைத் தருவாராக.
ஒருவேளை சிலர் இந்த வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். ஆனால், எனக்குத் தெரிந்து தேவனுடைய மக்கள் எல்லாரும் இதை ஏற்றுக்கொள்வார்கள். “நீங்கள் அப்படியென்றால் பெண்களை அல்லது பிள்ளைகளை அடிமைப்படுத்துகிறீர்கள்,” என்று சிலர் சொல்லலாம். “உங்கள் கணவனோ அல்லது பெற்றோர்களோ எப்படி இருந்தாலும் சரி அதிகாரமும் கீழ்ப்படிதலும் என்ற கோட்பாட்டின்படி கீழ்ப்படியுங்கள்,” என்று சொல்லுகிறேனா? அப்படியானால் “நீங்கள் சொல்வது தவறு,” என்று நீங்கள் என்னிடம் தாராளமாகச சொல்லலாம். ஆனால், இதுதான் தேவனுடைய இறுதியான வார்த்தை என்றால் “செய்கிறேன்” என்பதுதான் சரியான மனப்பாங்காக இருக்க வேண்டும்.
இதற்கு ஆதாரம் ரோமர் 6ஆம் அதிகாரம். ஒவ்வொருவருக்கும் அதாவது எவனுக்கு வரிசெலுத்த வேண்டுமோ அவனுக்கு வரிசெலுத்து. எவனைக் கனம்பண்ணவேண்டுமோ அவனைக் கனம்பண்ணு. எவனுக்கு மரியாதை கொடுக்க வேண்டுமோ அவனுக்கு மரியாதை கொடு. அவன் கொள்ளையடித் தாலும் சரி, நீ வருமான வரி கட்டித்தான் ஆக வேண்டும் என்று தேவனுடைய வார்த்தை சொல் கிறது. அவனைத் தீர்ப்பவர் யார்? அவனுடைய இடத்தைவிட்டு அவன் பெயரலாம். நம்முடைய இடத்தைவிட்டு நாம் பெயர்வதற்கு நமக்கு எந்த உரிமையும் இல்லை. அது தேவனுடைய வழி அல்ல. உறவுகளைக் கட்டுவதற்கு ஒரே கர்த்தர் என்கிற ஒரே வழிமுறை அது அல்ல. கர்த்தர் நமக்கு மட்டும் தலை அல்ல. அவர் சர்வலோகத்துக்கும் தலையாக இருக்கிறார்.
“மோசம்போகாதிருங்கள் தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார். மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினாலே அழிவை அறுப்பான். ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்திய ஜீவனை அறுப்பான்” (கலா. 6:7, 8). “அவன் இடம்பெயர்ந்து என்னுடைய வரியைக் கொள்ளையடிக்கிறான். எனவே, நான் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை,” என்று நினைப்பது தவறு. நான் செலுத்த வேண்டும்.
அதுபோல, அரசியல் தலைவர்களைக்குறித்து நாம் இளக்காரமாய் பேசுவதுண்டு. அதைக்குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்கள் செய்வது தவறாக இருக்கலாம். தவறு என்று சொல்லலாம். ஆனால், அவர்களைக்குறித்து இளக்காரமாகப் பேசுவதற்கு நமக்கு எந்த உரிமையும் இல்லை. “மாண்புமிகு முதலைமைச்சர் செய்வது தவறு,” என்று சொல்வதற்கு நமக்கு உரிமை உண்டு. ஆனால் “இவர்களா?” என்று இளக்காரமாகப் பேசுவதற்கு நமக்கு உரிமை இல்லை. “அந்த வாத்தியார் இருக்கிறாரே! அவருக்கு ஒன்றுமே தெரியாது,” என்று சொல்வதற்கு நமக்கு எந்த அதிகாரமும் இல்லை.
இந்த உலகத்திலே இடத்திற்கு எந்த மதிப்பும் கிடையாது. அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், நாம் நம்முடைய இடத்தின்படி வாழ வேண்டும். அப்போது தேவனுடைய ஆசீர்வாதம் இருக்கும். அடுத்த சாரார் தன்னுடைய இடத்தின்படி வாழாவிட்டாலும் நீ வாழும்போது “உன்னுடைய பிள்ளைகள் ஆசீர்வாதமாக இருப்பார்கள்,” (1 கொரி. 7:14) என்று பவுல் சொல்கிறார். “உங்கள் பிள்ளைகள் பரிசுத்தமாக்கப்பட்டிருப்பார்கள்,” என்பதின் பொருள் என்ன? “என்னத்தினாலெனில், அவிசுவாசியான புருஷன் தன் மனைவியானல் பரிசுத்தமாக்கப்படுகிறான். அவிசுவாசியான மனைவி தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே. இப்பொழுதோ அவைகள் பரிசுத்தமாயிருக்கின்றன”(1 கொரி. 7:16). ஒரு சாரார் தன்னுடைய இடத்தைத் தக்கவைத்துக் கொள்கிறார்கள் என்றால் தேவனுடைய ஆசீர்வாதம் அங்கு இருக்கும். இரண்டு சாராருமே தங்கள் இடத்தைவிட்டுப் பெயரும்போதுதான் அங்கு தேவன் செயல்படுவதற்கு ஒரு தளம் இல்லாமல் போய்விடும்.
தேவன் தம்முடைய பரிசுத்த ஆவியினால் இந்த வார்த்தைகளைப் போதிப்பாராக. நீங்கள் தயவு செய்து தியானித்துப்பாருங்கள். நான் சொன்னதோடு நீங்கள் விட்டுவிடாதீர்கள். இது ஒரு செய்தி என்று நீங்கள் தயவுசெய்து விட்டுவிடாதீர்கள். உங்கள் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.