Transcribed from a message spoken in November 14, 2014 in Chennai
By Milton Rajendram
“நான் இயேசுகிறிஸ்துவைத் தெரிந்துகொண்டேன் என்று சொல்வதைவிட, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்னைத் தெரிந்துகொண்டார்,” என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். என்னைப்போன்ற ஒரு மனிதன் இயேசுகிறிஸ்துவைக் கண்டுபிடித்திருக்கவே முடியாது. ஏனென்றால், இந்த உலகத்திலே நமக்கு மிகப் பெரிய ஈடுபாடுகள் உண்டு.
என்னை மிகவும் பெரியவன் என்று கருதிய என்னுடைய நண்பர்கள் பலர் உண்டு. உங்களுடைய நண்பர்கள் பலர் அப்படி உங்களை மிகப் பெரியவர்கள் என்று கருதியிருப்பார்கள். நாம் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட அடுத்த கணமே அவர்கள் நம்மை பரிதாபமாகப் பார்ப்பார்கள். கல்லூரியிலே படித்துக்கொண்டிருக்கும்போது இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால், “எப்படி இருந்தான் தெரியுமா! இப்படி ஆகிவிட்டானே!” என்று சொல்வார்கள். நம்முடைய அறையைக் கடந்துபோகிறபோது, “ஃபாதர், எங்களுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்,” என்று கிண்டல் செய்வார்கள். நம்முடைய அறைக்குமுன்பாக “வரப்போகிற தேர்வுக்கான வினாத்தாளை கடவுள் ஃபாதர்க்கு வெளிப்படுத்திவிட்டார். வினாத்தாள் வேண்டும் என்பவர்கள் அவரை அணுகிப் பெற்றுக்கொள்ளலாம்,” என்று நோட்டீஸ் எழுதி ஒட்டி விட்டுப் போவார்கள், கேலி செய்வார்கள். யாரோ ஒருவர் நம்மை மூளைச்சலவை செய்து இயேசு கிறிஸ்துவுக்குள் கொண்டுவரவில்லை.
நான் இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன். “இந்துக்கள் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்வது மிகவும் கடினம்; ஆனால், கிறிஸ்தவர்களாகப் பிறந்தவர்கள் அல்லது ரோமன் கத்தோலிக்கார்களாகப் பிறந்தவர்கள் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்வது எளிது,” என்ற கருத்தும் உண்மையானதல்ல. ஒருவேளை இந்துப் பின்புலத்திலிருந்து வருகிறவர்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்வது கொஞ்சம் எளிதாகக்கூட இருக்கலாம். “விக்கிரகம் வெறும் கல்தானே! இது ஒரு சாதாரண மண்! இதற்குமுன் நின்று கொண்டு, உயிருள்ள ஒரு நபரிடம் பேசுவதுபோல் எப்படிப் பேசுகிறேன்? நான் பேசுவதற்கெல்லாம் இது செவிகொடுக்கும் அல்லது நடவடிக்கை எடுக்கும் என்று நான் எப்படி எதிர்பார்க்கிறேன்?” என்ற எண்ணம் அவர்களுக்கு ஒருநாள் தோன்றலாம். ஆனால், கத்தோலிக்கர்களுக்கோ அல்லது புரொட்டஸ்டாண்ட்காரர்களுக்கோ அப்படிப்பட்ட எண்ணம் வரவே வராது. ஏனென்றால், ஒரு பொய்யான திருப்தி அவர்களுக்கு உண்டாகிவிடும். அவர்களிடம் இயேசுகிறிஸ்துவைப்பற்றிச் சொன்னால், “இயேசு கிறிஸ்துவா? எங்களுக்குத் தெரியாத இயேசுகிறிஸ்துவா?” என்பார்கள். சபையைப்பற்றிப் பேசினால், “சபையா? எங்களுக்குத் தெரியாத சபையா?” என்பார்கள்.
ஆகவே, “இவர்களுக்குச் சொல்வது எளிது; அவர்களுக்குச் சொல்வது கடினம் என்றோ அல்லது அவர்களுக்குச் சொல்வது எளிது; இவர்களுக்குச் சொல்வதுதான் கடினம்,” என்று சொல்லவே முடியாது.
“நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னைத் தேசங்களுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன்,” (எரே. 1:5) என்று அவர் எரேமியாவுக்குச் சொல்லுகிறார். “உன் தாயின் கருவில் உருவாகுமுன்னே உன்னைத் தெரிந்துகொண்டேன்,” என்றும் சொல்கிறார். இன்னொரு இடத்தில், “அவர் உலகத் தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டார்,” (எபே. 1:4) என்று சொல்கிறார்.
ஒவ்வொரு மனிதனுடைய இருதயத்திலும் ஒரு வெறுமை இருக்கிறது. “There is a God shaped vacuum in every man’s heart,” என்று French mathematician and physicist, Blasie Pascal சொல்கிறார். “ஒவ்வொரு மனிதனுடைய இருதயத்திலும் கடவுளால் உருவாக்கப்பட்ட ஒரு வெற்றிடம் உண்டு,” என்று அவர் சொல்கிறார். பிளேஸி பாஸ்கல் என்பவர் அழுத்தம், வெற்றிடம் ஆகியவைகளைப்பற்றி ஆராய்ச்சி செய்தார். இயற்பியலில் அழுத்தம், வெற்றிடம் ஆகியவைகளைப்பற்றிய ஆராய்ச்சியில் அவர் கண்டுபிடித்த விதிகளை பாஸ்கல் விதி என்று சொல்வார்கள். ஆனால், “ஒவ்வொரு மனிதனுடைய இருதயத்திலும் கடவுளால் உண்டாக்கப்பட்ட ஒரு வெற்றிடம் உண்டு,” என்பதே அவர் கண்டுபிடித்த பாஸ்கல் விதியைவிட மாபெரும் விதியாகும்.
வயிற்றிலே பசி ஏற்படுகிறதென்றால், வயிற்றில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது என்று பொருள். பசி அமர்கிறவரை, தீர்கிறவரை, அது ஒரு மனிதனை உந்தித்தள்ளுகிறது; மனிதன் அதைத் தேடுகிறான். இந்தப் பசியைத் தீர்ப்பதற்கு ஏதோவொன்று இருக்கிறது. பசியைத் தீர்ப்பதற்கு பெயர் உணவு என்று கடவுள் மனிதனுக்கு எந்தப் புத்தகத்திலும் எழுதிக்கொடுக்கவில்லை. ஆனால், பசி வந்தவுடனே அதைத் தீர்ப்பதற்கு உணவை எடுத்து உண்ண வேண்டும் என்கிற அறிவு, உணர்வு, மனிதனுக்கு, படைக்கப்பட்ட எல்லா உயிரிகளுக்கும் உண்டு. மனிதனுக்கு மட்டுமல்ல, எல்லா விலங்கினங்களுக்கும், பறவைகளுக்கும் அந்த வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் என்ற உணர்வு உண்டு. அதுபோல மனிதனுடைய இருதயத்திலுள்ள வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் என்கிற துடிப்பு, உந்துதல், எல்லா மனிதர்களுக்கும் இருக்கிறது. ஆகவே, எதையாவது வைத்து அந்த வெற்றிடத்தை நிரப்பிவிடலாம் என்று மனிதன் முயற்சிசெய்கிறான்.
வேதாகமத்தில் பிரசங்கி என்று ஒரு புத்தகம் உள்ளது. இதை எழுதினவன் சாலொமோன் என்ற ஓர் அரசன். இஸ்ரவேலை ஆண்ட அரசர்களிலேயே மிகப் புகழ்வாய்ந்த அரசன் சாலொமோன் அரசன்தான். அவன் மிகப் பெரிய செல்வந்தன். அவனுடைய ஞானம் உலகப் புகழ்வாய்ந்தது. சாலொமோனுடைய ஞானத்தைப் பார்ப்பதற்காகவும், கேட்பதற்காகவும் பல்வேறு நாட்டு அரசர்களும், அரசிகளும் அவனுடைய நாட்டிற்கு வந்தார்கள். அவன் எப்படி ஒரு குழந்தையை அதன் சொந்தத் தாய்க்குக் கொடுத்தான் என்பதைத் திரைப்படங்களில்கூட காண்பித்திருக்கிறார்கள். சாலொமோன் மிக ஞானமுடையவன்; மிகப் பெரிய செல்வந்தன்; மிக செல்வாக்கு உள்ளவன்.
இவனுக்கு கடவுளை ஓரளவுக்குத் தெரியும். கடவுள்தான் தனக்கு இந்த ஞானத்தைத் தந்திருக்கிறார் என்று அவனுக்கு தெரியும். அவன் அரச பதவிக்கு வரும்போது தன்னை மிகவும் சிறியவனாய்க் கருதுகிறான். “ஓ! உம்முடைய மக்களை ஆள்வதற்குரிய ஞானம் என்னிடத்தில் இல்லை. எனவே, நீர் எனக்கு ஞானத்தைத் தர வேண்டும்,” என்று கேட்கிறான். ஆனால், வாழ்க்கையில் ஒரு பதவி வந்தபிறகு, அந்தப் பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்கு அவன் இந்த உலகத்திலே மற்ற அரசர்களுடைய உதவியை நாடுகிறான். தான் பெரிய அரசனாக மாற வேண்டுமென்றால் அதற்கு எகிப்து அரசனுடைய உறவு வேண்டும்; அசீரிய அரசனுடைய உறவு வேண்டும் என்று அதை நாடுகிறான்.
அந்தக் காலத்திலே அரசர்களுடைய உறவு வேண்டுமென்றால் என்ன செய்வார்கள்? அந்தக் காலத்திலே மட்டுமல்ல; இந்தக் காலத்திலும் அப்படித்தான் நடக்கிறது. பணக்காரர்களுடைய உறவு வேண்டுமென்றால் திருமணம் செய்வார்கள். அந்தக் காலத்திலே எகிப்து ஒரு பேரரசு. அது அந்தக் காலத்து அமெரிக்கா. “எகிப்து பேரரசின் ஆதரவு இருந்தால்தான் நம் நாடு செழிப்பாக இருக்கும்,” என்று நினைக்கும் அளவுக்கு எகிப்து ஒரு பேரரசாக இருந்தது. சாலொமோன் எகிப்து அரசனுடைய மகளைத் திருமணம்செய்தார். அவனுடைய மனைவிமார்கள் வீட்டுக்கு வரும்போதே சிலைவழிபாட்டுக்குரிய எல்லா விக்கிரகங்களையும் கொண்டுவந்தார்கள். “என்னுடைய கடவுளைக் கும்பிடுவதற்கு எனக்கு ஒரு கோயில் கட்டித்தரவேண்டும்,” என்று அவர்கள் கேட்கிறார்கள். எகிப்து பேரரசினுடைய மகள் கேட்டால் கோவில் கட்டிக்கொடுக்காமல் இருக்க முடியுமா? முடியாது. இவர் கோயில் கட்டிக்கொடுக்கிறார். இதுபோல பல்வேறு அரசர்களுடைய மகள்களை சாலொமோன் திருமணம் செய்து கொள்கிறார். ஒவ்வொரு அரசிக்கும் கோயில் கட்டிக்கொடுக்க வேண்டியிருந்தது. இப்படி 5, 10 கோயில்கள் கட்டிக்கொடுத்தால் இவரது நிலைமை என்ன ஆகும்? அவனுடைய மனைவிகள் அவனுடைய இருதயத்ததைக் கர்த்தரைவிட்டு வழுவிப்போகச் செய்தார்கள்.
கடவுள் அந்த மனிதனுக்கு அரச பதவியைக் கொடுக்கிறார்; அரசைக் கொடுக்கிறார்; செல்வாக்கைக் கொடுக்கிறார்; செல்வத்தைக் கொடுக்கிறார்; அதிகாரத்தைக் கொடுக்கிறார். இவைகளையெல்லாம் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமென்றால் தனக்கு இந்த உலகத்து மனிதர்களுடைய ஆதரவும், அன்பும், பக்கபலமும் வேண்டும் என்று அவன் நினைக்கிறான். அவனுடைய முடிவு என்ன தெரியுமா? பிரசங்கி 2ஆம் அதிகாரத்தின் ஒரு பகுதியை நான் வாசிக்க விரும்புகிறேன்.
பிரசங்கி 2:1முதல் 11வரை வாசிக்கலாம். “நான் என் உள்ளத்திலே சொல்லிக்கொண்டது என்னவென்றால்: வா, இப்பொழுது உன்னை சந்தோஷத்தினாலே சோதித்துப்பார்ப்பேன். இன்பத்தை அநுபவி என்றேன்; இதோ, இதுவும் மாயையாயிருந்தது. நகைப்பைக்குறித்து அது பைத்தியம் என்றும், சந்தோஷத்தைக்குறித்து அது என்ன செய்யும் என்றும் சொன்னேன். வானத்தின்கீழ் மனுபுத்திரர் உயிரோடிருக்கும் நாளளவும் பெற்று அநுபவிக்கத்தக்கது இன்னதென்று அறியும்பொருட்டு, என் இருதயத்தை ஞானத்தால் தேற்றிக்கொண்டிருக்கும்போதே, நான் என் தேகத்தை மதுபானத்தால் சீராட்டிக்கொண்டிருக்கவும், மதியீனத்தைப் பற்றிக்கொண்டிருக்கவும் என் உள்ளத்தில் வகைதேடினேன். நான் பெரிய வேலைகளைச் செய்தேன். எனக்காக வீடுகளைக் கட்டினேன், திராட்சத்தோட்டங்களை நாட்டினேன். எனக்காகத் தோட்டங்களையும் சிங்காரங்களையும் உண்டாக்கி, அவைகளில் சகலவகைக் கனிவிருட்சங்களையும் நாட்டினேன். மரங்கள் பயிராகும் தோப்புக்கு நீர்ப்பாய்ச்சுகிறதற்குக் குளங்களை உண்டுபண்ணினேன். வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் சம்பாதித்தேன். வீட்டிலும் வேலைக்காரர் பிறந்தார்கள். எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் ஆடு மாடுமுதலான திரண்ட ஆஸ்திகள் எனக்கு இருந்தது. வெள்ளியையும் பொன்னையும், ராஜசம்பத்தையும் மாகாணங்களிலுள்ள பொருள்களையும் சேகரித்தேன். சங்கீதக்காரரையும் சங்கீதக்காரிகளையும், மனுபுத்திரருக்கு இன்பமான பலவித வாத்தியங்களையும் சம்பாதித்தேன். எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் நான் பெரியவனும் திரவியசம்பன்னனுமானேன். என் ஞானம் என்னோடேகூட இருந்தது. என் கண்கள் இச்சித்தவைகளில் ஒன்றையும் நான் அவைகளுக்குத் தடைபண்ணவில்லை. என் இருதயத்துக்கு ஒரு சந்தோஷத்தையும் நான் வேண்டாமென்று விலக்கவில்லை. நான் செய்த முயற்சிகளிலெல்லாம் என் மனம் மகிழ்ச்சிகொண்டிருந்தது. இதுவே என் பிரயாசங்கள் எல்லாவற்றினாலும் எனக்கு வந்த பலன். என் கைகள் செய்த சகல வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன். இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது. சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை”.
“எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது,” என்று ஒன்றிரண்டுமுறை மட்டும் அல்ல, 12 அதிகாரங்கள் கொண்ட இந்தப் புத்தகத்திலே பல பத்து தடவைகள் vanity, vanity, vanity of vanities என்று அவன் சொல்கிறான். இதுபோன்ற ஒரு மனிதன் இந்த உலகத்திலே வாழ்ந்திருப்பானா? “என் கண்கள் இச்சித்தவைகளில் ஒன்றைக்கூட நான் விலக்கவில்லை. என் இருதயம் எதை சந்தோஷம் என்று சொன்னதோ அந்த சந்தோஷத்தை நான் விட்டுவைத்ததில்லை,” என்று அவன் சொல்லுகிறான். சாலொமோன் எவ்வளவு செல்வந்தன் என்றால் அவனுடைய நாட்களில் வெள்ளி ஒரு பொருட்டாகக் கருதப்படவில்லை; அது கற்களைப்போல் கருதப்பட்டதாம். வெள்ளி கல்லுக்குச் சமானமாய் இருந்தது. முந்நூறு மனைவிகளையும், எழுநூறு மறுமனையாட்டிகளையும் உடையவனாயிருந்தான் என்று அவனைப்பற்றி எழுதியிருக்கிறது. அதனுடைய முடிவு, “நான் ஞானத்தைச் சம்பாதித்துக்கொண்டிருக்கும்போதே என் உடலை மதுபானத்தினால் சீராட்டினேன்,” என்று அவன் சொல்கிறான்.
இன்றைக்கு உள்ள பெரிய பணக்காரர்கள் ஒருவேளை எப்படி வீடு கட்டுவார்கள்? அவர்கள் வீட்டில் நீச்சல் குளம் இருக்கலாம்; அவர்களுக்குச் சொந்த விமானம் இருக்கலாம்; விமானம் ஏறி இறங்குவதற்கு வசதி இருக்கலாம். இதுபோன்ற பல வசதிகள் அவர்களுடைய வீடுகளில் இருக்கலாம். இத்தனை வசதிகள் இருந்தாலும் இவர்களுடைய வீடுகள் சாலொமோனுடைய வீட்டுக்கும், அவனுடைய வசதிகளுக்கும் வெறும் நிழல்கூட இல்லை. சங்கீதக்காரர்கள், சங்கீதக்காரிகள், வேலைக்காரர்கள், வேலைக்காரிகள். அரபு தேசத்து ஷேக் இருக்கிறார்கள் இல்லையா? இவன் அவர்களையெல்லாம்விட ஒரு ஆடம்பரமான வாழ்க்கை வாழ்கிறான். முடிவாக அவன் சொல்வது, “எல்லாம் எனக்கு மாயையாக இருந்தது”. காரணம் என்ன? “அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாய்ச் செய்திருக்கிறார். உலகத்தையும் (நித்தியத்தையும்) அவர் உள்ளத்திலே வைத்திருக்கிறார். ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவருகிற கிரியையை மனுஷன் கண்டுபிடியான்” (பிர. 3:11). அதற்கு முந்தி இன்னும் இரண்டு வசனங்களை வாசிக்கலாம். “எல்லா நதிகளும் சமுத்திரத்திலே ஓடி விழுந்தும் சமுத்திரம் நிரம்பாது. தாங்கள் உற்பத்தியான இடத்திற்கே நதிகள் திரும்பவும் வரும். எல்லாம் வருத்தத்தினால் நிறைந்திருக்கிறது. அது மனுஷரால் சொல்லி முடியாது. காண்கிறதினால் கண் திருப்தியாகிறதில்லை, கேட்கிறதினால் செவி நிரப்பப்படுகிறதுமில்லை” (பிர. 1:7, 8). “பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை. செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை. இதுவும் மாயையே” (பிர. 5:10). எல்லாவற்றையும் மாயை என்று சொல்கிறான். பணம் மாயை, பெண்கள் மாயை, சங்கீதம் மாயை, இலக்கியம் மாயை, இசை மாயை. அவன் சொல்வதற்குக் காரணம் என்ன? “எல்லா நதிகளும் சமுத்திரத்தில் விழுந்தும் சமுத்திரம் திருப்தியாகிறதில்லை”.
இதைத்தான் பிளேஸி பாஸ்கலும் சொன்னார். “மனிதனுடைய இருதயத்திலே ஒரு வெற்றிடம் இருக்கிறது. அந்த இடத்தை அவன் எதைக்கொண்டு நிரப்பினாலும் நிரப்ப முடியாது. ஏனென்றால், அந்த வெற்றிடம் தேவன் ஒருவருக்காகவே படைக்கப்பட்டது”. இது மிக எளிமையான ஓர் எண்ணம். கற்ற மனிதனாக இருந்தாலும் சரி, கல்லாத மனிதனாக இருந்தாலும் சரி. எல்லா மனிதர்களுடைய இருதயத்திலும் அந்த வெற்றிடம் இருக்கிறது. அதைப் பிரசங்கியினுடைய வார்த்தையின்படி சொல்வதானால், “தேவன் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாய்ச் செய்திருக்கிறார். உலகத்தையும் மனிதனுடைய இருதயத்திலே வைத்திருக்கிறார்”. இது போதுமான அளவுக்குச் சரியான மொழிபெயர்ப்பு இல்லை. தேவன் தாம் படைத்த எல்லாவற்றையும், மனிதன் உட்பட, மிக நேர்த்தியாக, மிக அழகாகப் படைத்திருக்கிறார். ஆனால், மற்ற எல்லாப் படைப்புகளிலுமிருந்து மனிதன் வேறுபட்டவன். ஏனென்றால், மற்ற எல்லாப் படைப்புகளுக்கும் இல்லாத ஒன்றை அவர் மனிதனுக்குள் வைக்கிறார். God has put eternity into man’s heart.
நான் ஒரு கத்தோலிக்கன். “கடவுள் இருக்கிறார்,” என்று யாராவது சொன்னால் “அவர் இருந்துவிட்டுப் போகட்டும்,” என்று சொல்வேன். “கடவுள் இல்லை,” என்று யாராவது சொன்னால் “அவர் இல்லாமல் இருந்துவிட்டுப் போகட்டும்,” என்பேன். ஏனென்றால், இந்த சர்ச்சைகளிலே எனக்கு ஈடுபாடு இருந்ததில்லை. எமக்குத் தொழில் கவிதை, இலக்கியம், அறிவியல், கலைகள். இவைகள்தான் எங்களுடைய ஆர்வமேதவிர, இந்த மாதிரி சர்ச்சைகளிலெல்லாம் நாங்கள் ஈடுபட்டதே இல்லை. ஆனால், அவனுடைய இருதயத்திலும் தேவன் நித்தியத்தை வைத்திருக்கிறார். “உலகத்தையும் அவர் உள்ளத்திலே வைத்திருக்கிறார்,” என்பதை “தேவன் நித்தியத்தையும் மனிதனுடைய இருதயத்தில் வைத்திருக்கிறார்,” என்று மொழிபெயர்க்கலாம்.
அந்த சகோதரனுடைய இருதயத்திலும் நித்தியத்தை வைத்தார். அந்த சகோதரியினுடைய இருதயத்திலும் நித்தியத்தை வைத்தார். இந்த சகோதரனுடைய இருதயத்திலும் நித்தியத்தை வைத்தார். என்னுடைய இருதயத்திலும் நித்தியத்தை வைத்தார். நித்தியத்தை வைத்தார் என்றால் என்ன பொருள்? நித்தியத்தையும் மனிதனுடைய இருதயத்தில் வைத்தார். God has put eternity in the heart of men. மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒன்றை தேவன் அவனுடைய இருதயத்திலே வைத்திருக்கிறார். அது ஒரு வெறுமையையும், ஒரு பசியையும், ஒரு தாகத்தையும் எப்போதுமே வைத்துக்கொண்டிருக்கிறது. இந்த வெறுமை, வெற்றிடம், பசி, தாகம் “ஒருவேளை நான் ஞானவானாக மாறினால் அது தீர்ந்துவிடுமா!” என்று அவன் நினைக்கிறான்.
சாலொமோனைப்போன்ற ஒரு அறிவாளி, ஒரு ஞானவான், அவனுக்கு முந்தியோ, பிந்தியோ இஸ்ரயேலிலே தோன்றினது இல்லை, உலத்திலும் தோன்றினது இல்லை. நோபல் பரிசு வாங்கியவர்களில் பெரும்பாலான அறிஞர்கள் யூதர்கள். இந்த வருடம் பிரான்சு நாட்டைச் சார்ந்த ஒருவர் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றிருக்கிறார். இவர் பிரெஞ்சாகத்தான் இருப்பார் என்று பார்த்தால் அவரும் ஒரு யூதன்தான். கணினி அறிவியலில் 50 விழுக்காடு யூதர்களாகத்தான் இருப்பார்கள். தேவன் அவர்களைக் கண்டிப்பாக ஆசீர்வதித்தார். அதனால்தான் ஹிட்லருக்கு அவர்கள்மேல் பயங்கரமான வெறுப்பு. “பிழைப்புக்காக நம் நாட்டுக்கு வந்தவர்கள் நம் ஊரிலே வியாபாரம் பண்ணுகிறார்கள், பணக்காரர்களாக இருக்கிறார்கள், அதிகாரம் பண்ணுகிறார்கள், வசதியாக வாழ்கிறார்கள். எனவே, இவர்களை அழிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும்,” என்று அவன் கங்கணம்கட்டினான்.
சாலொமோன் இந்த அறிவாளிகளுக்கெல்லாம் அறிவாளி. ஆனால், அவனுடைய அந்த வெற்றிடம் தீரவில்லை.
“நான் வெள்ளியையும், பொன்னையும் சம்பாதித்தேன்,” என்றும், “எருசலேமிலே எனக்குமுன் இருந்த எல்லாரைப்பார்க்கிலும் நான் திரவியசம்பன்னனானேன்,” என்றும் அவன் சொல்லுகிறான். அவன் வேறு யாரைப்பற்றியும் சொல்லவில்லை. அவன் தன்னைப்பற்றித்தான் சொல்லுகிறான். “பணப்பிரியன் பணத்தினால் திருப்தியாகிறதில்லை. செல்வப்பிரியன் செல்வத்தினால் நிறைவடைவதில்லை,” என்றும் தன்னுடைய அனுபவத்தைத்தான் அவன் சொல்கிறான்.
வேதியியலில் எனக்கு மிகப் பிடித்த ஒன்று உண்டு. எல்லா சோதனையின் முடிவிலும் “இதுதான் அதன் விளைவு,” என்று சொல்லி முடித்துவிடுவார்கள். ஆனால, இவர்கள் inference எழுதச் சொல்வார்கள். கல்லூரியிலே படிக்கும்போது இது மிகவும் நூதனமாக இருக்கும். “இதென்ன இவர்கள் பெரிய நூதனமான சோதனைக்கூடம் வைத்திருக்கிறார்கள். எல்லாரும் முடிவை மட்டும் எழுதச் சொல்லி முடித்துவிடுகிறார்கள். இவர்கள் மட்டும் inference எழுதச் சொல்கிறார்களே” என்று நினைத்ததுண்டு.
எல்லாச் சோதனைகளின் முடிவிலும் சாலொமோனுடைய inference என்ன தெரியுமா? “திருப்தியாகிறதில்லை” என்று அவன் எழுதுகிறான். “சங்கீதக்காரர்கள், சங்கீதக்காரிகளைச் சம்பாதித்தேன். திருப்தியாகவில்லை. நான் மகா பெரிய வேலைகளைச் செய்தேன். கட்டடங்களைக் கட்டினேன். தோட்டங்களை உண்டாக்கினேன். நான் திருப்தியாகவில்லை. இது உண்மை. 300 மனைவிகளும், 700 மறுமனையாட்டிகளும் இருந்தார்கள். நான் திருப்தியாகவில்லை,” என்பதுதான் அவனுடைய முடிவு. இவன் தன்னுடைய வெற்றிடத்தை நிறைவாக்குகிறதற்காக வேறு எந்த மனிதனும் செய்யாத எல்லா பரிசோதனைகளையும் செய்தவன்.
கல்லூரியிலே படிக்கும்போது “போதைப்பொருட்களை வாங்க வேண்டும், மதுபானம் குடிக்க வேண்டும், சீட்டு விளையாட வேண்டும்,” என்று துடிப்பார்கள். எல்லாக் கல்லூரிகளிலும் இது இருக்கும். நான் படித்த கல்லூரியில் எங்கள் blockயில் “இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம். இதுதான் எங்கள் உலகம்,” என்ற சினிமா பாடல் வரிகளை எழுதிப் போட்டிருந்தார்கள். என்னுடைய மூன்றாவது பருவம் முடிந்து நான்காவது பருவத்திலே நான் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டேன். ஏற்றுக்கொண்டவுடனே “Be not wise in your understanding Fear the lord and depart from evil. உன்னை நீயே ஞானி என்று எண்ணாதே. கர்த்தருக்குப் பயந்து தீமையை விட்டு விலகு,” என்பதுதான் நான் என் அறையில் முதலில் எழுதிப்போட்ட வசனம். “மில்டன் சாமியார் ஆகிவிட்டான்,” என்றார்கள்.
கல்லூரியில் இரண்டவது வருடம் படிக்கும்போதுதான் கொஞ்சம் தலைவர்களாக மாற ஆரம்பிப்பார்கள். முதல் வருடம் கொஞ்சம் பயபக்தியோடே இருப்பார்கள். இரண்டாம் வருடம் எல்லாரும் ராஜாக்களும், ராணிகளுமாக இருப்பார்கள். “இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம். இதுதான் எங்கள் உலகம்,” என்று உல்லாச வாழ்க்கை வாழ்வார்கள். விரலைத் தீயில் வைத்தால் சுடும் என்பதை அறிந்துகொள்ள ஆராய்ச்சிசெய்ய வேண்டிய அவசியம் இல்லை. மாபெரும் ஆராய்ச்சியாளன் ஒருவன் பிறந்து, வாழ்ந்து தன்னுடைய முடிவை எழுதிவைத்துவிட்டு மரித்திருக்கிறான். பிரசங்கி 12ஆம் அதிகாரத்தின் கடைசி மூன்று வசனங்களை நாம் வாசிக்கலாம். “என் மகனே! இவைகளினாலே புத்தியடைவாயாக. அநேகம் புஸ்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு முடிவில்லை. அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு. காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள். எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் நன்மையானாலும் தீமையானாலும் தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்”. இது அவருடைய முடிவுரை. “ஒவ்வொரு கிரியையையும் நன்மையானாலும், தீமையானாலும் தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்’.”வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும். உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட. ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி” (பிர. 11:9).
சரி, புதிய ஏற்பாட்டிற்கு வருவோம். யோவான் 4ஆம் அதிகாரத்தில் ஒரு நிகழ்ச்சி இருக்கிறது. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஒருநாள் பயணம் செய்துகொண்டு போகும்போது, போகிற வழியிலே உச்சி வெயிலாக இருக்கிறது; சாப்பிடுகிற வேளை. எனவே, அவருடைய சீடர்கள் உணவு வாங்கிக்கொண்டு வருவதற்காகப் போகின்றார்கள். அவர் உட்கார்ந்து கிணற்றண்டையிலே காத்துக்கொண்டிருக்கிறார். அப்போது, தண்ணீர் எடுப்பதற்காக ஒரு சமாரியப் பெண் அங்கு வருகிறாள். அவர் அந்தச் சமாரியப் பெண்ணிடத்தில், “நான் தாகமாக இருக்கிறேன். எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தா,” என்று கேட்கிறார். அதற்கு அவள், “நீர் யூதனாயிற்றே; யூதர்கள் சமாரியரோடு எந்த உறவும் வைத்துக்கொள்வதில்லை. அப்படியிருக்க சமாரியப் பெண்ணாகிய என்னிடம் நீர் எப்படித் தண்ணீர் கேட்கலாம்?” என்று கேட்கிறாள். அதற்கு இயேசுகிறிஸ்து, “நீ தேவனுடைய ஈவையும், உன்னிடத்தில் தண்ணீர் கேட்கிறவர் யார் என்பதையும் அறிந்திருந்தால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய். அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார்,” என்றார். அதற்கு அந்தப் பெண், “கிணற்றிலிருந்து தண்ணீர் மொள்ள உம்மிடத்தில் ஒரு வாளிகூட இல்லை. கிணறும் ஆழமாக இருக்கிறது. அப்படியிருக்க, நீர் எப்படி இந்த ஆழமான கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பீர்? தண்ணீரை மொண்டுகொள்ளவே வழியில்லை? அப்படியானால், ஜீவத் தண்ணீரை எப்படித் தருவீர்? எங்களுக்கு இந்தக் கிணற்றைத் தந்த எங்கள் முற்பிதாவாகிய யாக்கோபைவிட நீர் பெரியவரோ?” என்று கேட்டாள்.
எல்லாரும் இயேசுகிறிஸ்துவிடம் எப்போதுமே கேள்வி கேட்பார்கள். “நீர் கன்பூசியஸைவிட பெரியவரா? பிளேட்டோ, அரிஸ்டாட்டிலைவிடப் பெரியவரா?” யூதர்கள் “நீர் ஆபிரகாமைவிடப் பெரியவரா? மோசேயைவிடப் பெரியவரா?” என்று கேட்பார்கள்.
நான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதற்குமுன் யாராவது என்னிடத்தில் வந்து இயேசுகிறிஸ்துவைப்பற்றிப் பேசியிருந்தால், “நீர் திருவள்ளுவரைவிடப் பெரியவரோ?” என்று கேட்டிருப்பேன். என்னைப் பொறுத்தவரை திருவள்ளுவர்தான் பெரிய தத்துவ ஞானி. ஒருவன் இயேசு கிறிஸ்துவை அறியவில்லை என்றால் திருவள்ளுவர் சொன்ன வார்த்தையின்படி தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொண்டாலே போதும் அவனுடைய வாழ்க்கை இன்பமாக இருக்கும் என்று இன்றைக்குக்கூட நான் சொல்வேன். “வருவாய் குறைந்தால்கூட பரவாயில்லை. செலவை நீ மட்டுப்படுத்திக்கொள்,” என்று சொல்லுகிறார். இதைவிட அறிவாளி யார் இருக்க முடியும்.
அற்றால் அறிவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.
முதலில் சாப்பிட்ட உணவு செறித்தபிறகு அளவு மீறாமல் அடுத்த உணவை சாப்பிடு. இதுதான் உன்னுடைய உடம்பு ரொம்ப நாளைக்குச் சுகமாய் இருப்பதற்குரிய வழி. இதைச் சொன்னவன் அறிஞனா இல்லையா? கண்டிப்பாக அறிஞன்தான். அதனால் “நான் நீர் திருவள்ளுவரைவிட பெரியவரோ?” என்று கேட்பேன்.
சமாரியர்கள், “எங்கள் பிதாவாகிய யாக்கோபைப்பார்க்கிலும் நீர் பெரியவரோ?” என்று கேட்பார்கள். அவர்கள் ஆபிரகாமைத் தங்கள் கோத்திரப்பிதாவாக ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் யாக்கோபைத் தங்கள் பிதாவாக ஏற்றுக்கொண்டிருந்தார்கள். யூதர்கள், “நீர் எங்கள் பிதாவாகிய ஆபிரகாமைவிடப் பெரியவரா?” என்று கேட்பார்கள். “நீர் சொல்வது பகவத்கீதையைவிடப் பெரியதா?” என்று நாம் சொல்வோம்.
அவர்களுடைய உரையாடல் தொடர்கிறது. “நீ போய் உன் கணவனை அழைத்துக்கொண்டுவா,” என்று இயேசு சொல்கிறார். “எனக்குக் கணவன் இல்லை,” என்று அவள் பதில் சொல்கிறாள். அப்போது ஆண்டவராகிய இயேசு, “உனக்குக் கணவன் இல்லை என்று நீ சொன்னது உண்மைதான். ஐந்து பேர் உனக்குக் கணவர்களாக இருந்தார்கள். இப்பொழுது நீ ஒருவனுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறாய். அவனும் உனக்குக் கணவன் இல்லை,” என்று சொல்கிறார். இந்த ஒரு வாக்கியத்தில் அவள் உடைந்துவிடுகிறாள். “நான் பேசிக்கொண்டிருக்கிற இந்த மனிதன் ஆபிரகாமைவிடப் பெரியவர், யாக்கோபைவிடப் பெரியவர், கன்பூசியஸைவிடப் பெரியவர், சாக்ரடீஸைவிடப் பெரியவர், இந்த உலகத்தின் எல்லா தத்துவஞானிகளைவிடப் பெரியவர், யோகானந்தாவைவிடப் பெரியவர், பிரம்மானந்தாவைவிடப் பெரியவர், பூஜ்ஜியானாந்தாவைவிடப் பெரியவர்”.
நாம் நற்செய்தி அறிவிக்கும்போது, ஒருபக்கம், “சிலைகள் வெறும் கல்” என்று சொல்ல வேண்டும். ஆனால், மற்றொரு பக்கம், அவர்கள் புண்படும் வண்ணம் ரொம்ப வீராப்பாகப் பேசக்கூடாது. “உனக்கு அறிவு இருக்கிறதா? இவ்வளவு பெரிய படிப்பெல்லாம் படித்துவிட்டு கல்லுக்குமுன்னால் போய் கும்பிடுகிறாயே!” என்று சொல்லக்கூடாது. அதையே சித்தர்கள் வாயிலே போட்டுவிடலாம். நான் சொல்லவில்லை. உங்கள் சித்தர் சொல்லியிருக்கிறார்.
“நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புஷ்பம் சாற்றியே சுற்றி சுற்றி வந்து முணுமுணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா? சுட்ட சட்டி சட்டுவம் கரிச்சுவை அறியுமோ? நட்ட கல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்“
என்று நான் சொல்லவில்லை. கைலைநாதர் சித்தர் சொல்லியிருக்கிறார். யாராவது கல்லெறிய வேண்டுமென்றால் அவரைப் பிடித்துக் கல்லெறிந்துகொள்ளுங்கள்.
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம். மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டாம். மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாம். மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே!
இதையெல்லாம் சொன்னது கிறிஸ்தவர்கள் அல்ல. இந்த நாட்டில் வாழ்ந்த சித்தர்கள். நம்முடைய ஆழ்வார்களும், நாயன்மார்களும் சித்தர்களை ஒத்துக்கொள்ளமாட்டார்கள். ஏன்? ஆழ்வார்கள், நாயன்மார்களுக்கெல்லாம் இராச இராச சோழன் கட்டினதுபோன்ற பெரிய கோயில்கள் இருக்க வேண்டும். இவர்கள் அங்கே போய் திருப்பதிகம் பாடுவார்கள். ஆனால், சித்தர்களோ, “நீ கோயில் கட்டி பாட்டுப்பாடுவதினாலே சாதாரண மனிதனுக்கு என்ன பயன்? அவனுக்குப் பயனுள்ள எதையாவது செய்,” என்றார்கள். அதனால் சித்தர்களைக் கலகக்காரர்கள் என்று முத்திரை குத்தினார்கள். இன்றைக்கு சித்தர்கள் வாழ்ந்திருப்பார்கள் என்றால் சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்டிருப்பார்கள் என்பது என்னுடைய கருத்து.
“நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்,” என்று அந்தப் பெண் இயேசுகிறிஸ்துவிடம் சொல்கிறாள். அவர் தான் கொடுக்கிற தண்ணீரைப்பற்றிச் சொல்கிறார். *“இந்தக் கிணற்றுத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்குத் திரும்பத்திரும்பத் தாகமுண்டாகும். ஆனால், நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது. அது அவன் இருதயத்திற்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்.* நீ ஐந்துபேரோடுதான் வாழ்ந்திருக்கிறாய். உனக்கு சூப்பர் சீனியர் ஒருவன் வாழ்ந்தான். அவன் பெயர் சாலொமோன். அவனுக்கு 300 மனைவிகள், 700 மறுமனையாட்டிகள். அவனும் ‘எனக்குத் தாகம் தீரவில்லை’ என்றுதான் சொன்னான்”. மனிதர்கள் இன்னும் 20 நூற்றாண்டுகள் அல்லது 200 நூற்றாண்டுகள் இந்தப் பூமியில் வாழ்ந்தாலும், அவர்கள் எந்தக் கிணற்றிற்குப் போனாலும் சரி, அவர்களுடைய தாகம் தீரப்போவதில்லை.
யோவான் 7ஆம் அதிகாரத்திலே இன்னொரு நிகழ்ச்சி. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து எருசலேமுக்கு ஒரு பண்டிகைக்குப் போகிறார். யூதர்கள் ரொம்ப மதரீதியான ஆட்கள், மதப்பக்திவாய்ந்தவர்கள்.
மனிதனுடைய ஒரேவொரு தேவை தேவன் மனித உருவில் வெளிப்பட்டார். அவருடைய பெயர் இயேசுகிறிஸ்து. அந்த நபர்மேல் வைக்கிற விசுவாசம் ஒன்றுதான் அவனுடைய எல்லாத் தாகத்தையும், பசியையும், வெறுமையையும் முழுமையாய்த் தீர்க்கிற, நிறைவாக்குகிற, திருப்தியாக்குகிற ஒரேவொரு பொருள். நான் இயேசுகிறிஸ்துவின் உபதேசங்களைப்பற்றிச் சொல்லவில்லை. இயேசு கிறிஸ்து என்கிற நபரைப்பற்றிச் சொல்லுகிறேன். இயேசுகிறிஸ்து சொன்ன பலவற்றை திருவள்ளுவர்கூடச் சொல்லியிருப்பார். சீனர்கள், “எங்கள் கன்பூசியஸ்கூடச் சொல்லியிருக்கிறார்,” என்று சொல்வார்கள். கிரேக்கர்கள், “எங்கள் சாக்ரடீஸ்கூடச் சொல்லியிருக்கிறார்,” என்று சொல்வார்கள். ஒவ்வொரு கலாச்சாரமும், “எங்கள் ஊரில் பிறந்தவரே சொல்லியிருக்கிறார்,” என்று சொல்வார்கள்.
“பண்டிகையின் கடைசி நாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டுப் பேசினார்.” எல்லாருக்கும் திருவிழா ரொம்பப் பிடிக்கும். தேர், சப்பரம், கடைகள், வேடிக்கைகள், விளையாட்டுக்கள் என்று கொண்டாட்டமாக இருக்கும். பண்டிகையின் கடைசி நாளாகிய பிரதான நாளில் ஒரு மனிதன் திருப்தியாயிருக்க வேண்டும். ஆனால், “உன்னுடைய பண்டிகை, உன்னுடைய திருவிழாக்கள், உன்னுடைய மத கோலாகலங்கள் ஒருநாளும் உன்னைத் திருப்திப்படுத்த முடியாது,” என்கிறார். பண்டிகையிலே ஏற்கெனவே சத்தமும் கூச்சலுமாகத்தான் இருக்கும். அதனால் கொஞ்சம் உரத்த சத்தமாய்ப் பேச வேண்டும். “ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக் கடவன்”. நான் சொல்கிற உபதேசங்கள் அல்ல. நான் ஒரு புது மதத்தை உங்களுக்குச் சொல்லப் போவதும் இல்லை. இயேசுகிறிஸ்து என்கிற நபரோடு உங்களுக்கு உள்ள உறவு.”
“ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்கிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் புறப்பட்டு ஓடும் என்றார்”.
இந்த இரண்டு வசனங்களையும் நீங்கள் இணைத்துப்பார்க்க வேண்டும். யோவான் 4ஆம் அதிகாரத்திலே அந்த சமாரியப் பெண்ணிடம், “நான் தருகிற நீர் நித்தியஜீவனுக்கென்று ஊறுகிற நீரூற்றாயிருக்கும். நான் உனக்கு ஒரு நீரூற்றைத் தருவேன்,” என்று சொல்கிறார். யோவான் 7ஆம் அதிகாரத்தில் “நான் தருவது நீரூற்று மட்டுமல்ல. அது நதியாக இருக்கும். அவன் உள்ளத்திலிருந்து பாய்ந்தோடும்,” என்று சொல்கிறார். “முதலாவது, நான் தருவது நீரூற்று. இப்போது நான் தருவது, பாய்ந்தோடும் நதிகள். முதலாவது நீ திருப்தியடைவாய்’ இரண்டாவது உன்மூலமாய்ப் பலர் திருப்தியடைவார்கள்”.
பிரசங்கி, யோவான் 4, யோவான் 7. இந்த மூன்று வேத பகுதிகளையும் நீங்கள் பொறுமையோடு வாசித்துப்பாருங்கள். நான் சொல்வது பொய்யல்ல. ஒரு மனிதனுடைய உண்மையான தேவை இயேசுகிறிஸ்து. மறுபடியும் நான் பிளேஸி பாஸ்கலுடைய ஒரு மேற்கோளைச் சொல்கிறேன். “கிறிஸ்துவே எல்லாவற்றிற்கும் மையமாக இருக்கிறார்”. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் கிறிஸ்துவை நோக்கி ஈர்க்கப்படுகிறது. “நான் உயர்த்தப்பட்டிருக்கும்போது எல்லா மனிதரையும் நான் என்னிடத்தில் ஈர்த்துக்கொள்வேன்,” என்று ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சொன்னார்.
உண்மையாகவே மனித உருவில் வெளிப்பட்ட தேவன் உண்டென்றால் அது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே. சாத்தான் பல பொய்களையும் கற்பனைக் கதைகளையும், கற்பனைகளையும், மூடநம்பிக்கைகளையும், கண்மூடிப்பழக்கங்களையும் சேர்த்துவிடலாம். “நான்தான் கடவுள்” என்று சொல்கிற நபர்கள் நிறைய வருவார்கள். ஆனால், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மரித்தார்; மூன்றாம் நாளிலே அவர் உயிர்த்தெழுந்தார். அவர் உயிர்த்தெழுந்ததினாலே தேவனுடைய மகன், மனித உருவில் வெளிப்பட்ட தேவன், என்று பலமாய் நிரூபிக்கப்பட்டார். இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்பது வரலாற்று உண்மை. எருசலேமுக்கு வெளியே இன்றைக்கும் இருக்கிற அந்தக் கல்லறை வெறும் கல்லறையாக இருக்கிறது என்பது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மரித்தார், அவர் உயிர்த்தெழுந்தார் என்பதற்குச் சாட்சி.
எல்லா மனிதனுடைய தொடக்கம் பெற்றோர்கள். முடிவு மரணம். ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தொடக்கம் பரிசுத்த ஆவியானவர். அவருடைய முடிவு உயிர்த்தெழுதல். அவருக்கு நம்முடைய இருதயங்களை நாம் திறந்துகொடுப்போமாக. “இதோ! வாசல்படியில் நின்று கதவைத் தட்டுகிறேன். ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால் நான் அவன் வீட்டிற்குள் வந்து அவனோடே போஜனம் பண்ணுவேன். அவனும் என்னோடு போஜனம் பண்ணுவான்” (வெளி. 3:20). இயேசுகிறிஸ்துவின் உறவைப்போல, மனித வாழ்க்கையில் இந்த முழுப் பிரபஞ்சத்திலும் மேன்மையான உறவு வேறு எதுவும் இல்லை. ஒரு மனிதனுடைய வெற்றிடத்தை, பசியையும் தாகத்தையும் நிறைவாக்க, முழு மனித வரலாற்றிலும் ஒரேவொரு நபர்தான் உண்டு. அது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து. சமாரியப் பெண்ணுக்கு அதை நிரூபித்தார். எருசலேமிலுள்ள பண்டிகையில் வந்த யூதர்களுக்கு அதை நிரூபித்தார். நூற்றாண்டுகள், நூற்றாண்டுகள்தோறும் பல்வேறு மக்களுக்கு அதை நிரூபித்தார்.
யாரையும் மூளைச்சலவை பண்ணி இயேசுகிறிஸ்துவிடம் கொண்டுவரவில்லை. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தம் அன்பினால் அந்த நபர் எவ்வளவு மேன்மையானவர் என்பதால் நம்மை ஈர்த்தார். நாம் அவரை விசுவாசித்தோம். அவர்மேல் அன்பு செலுத்தினோம். அவர் உண்மையாகவே தேவனுடைய மகன் என்று கண்டுகொண்டோம். அவர் எவ்வளவு நிறைவானவர் என்பதை நம்முடைய வாழ்க்கையில் அனுபவித்தோம்.
யோவானுக்கு மிக நெருக்கமான ஒரு சீடன் இருந்தார். அவரைச் சித்திரவதை செய்வதற்காக ரோமப் போர்வீரர்கள் கைது செய்வதற்கு வந்தார்கள். அவர் தப்பித்தப்பி ஓடினார். ஓர் இடத்திலே அவரைப் பிடித்து, கைதுசெய்து விட்டார்கள். கைது செய்தபிறகு, “ஒரு மணி நேரம் கொடுங்கள் எனக்கு ஜெபிப்பதற்கு,” என்று சொல்லிவிட்டு, தன்னைக் கைதுசெய்ய வந்த போர்வீரர்களுக்கு நல்ல விருந்தை ஆயத்தம்பண்ணுமாறு தன் நண்பர்களிடம் சொன்னானாம். ஒரு மணி நேரம் தன்னுடைய இருதயத்தை கர்த்தரிடத்தில் ஊற்றினாராம். அவர் ஏறக்குறைய எண்பது வயதிற்குமேல் உள்ளவர். அந்த மனிதர்கள் அவரைக் கைதுசெய்து தேசாதிபதியினிடத்தில் கொண்டுபோகும் போது தேசாதிபதி அந்த மனிதனைப் பார்த்து, “இயேசுகிறிஸ்து தேவனுடைய குமாரன் அல்ல அல்லது மனித உருவில் வந்த தேவன் அல்ல. இராயனே கர்த்தர் என்று ஒரு வார்த்தை சொல்லி விட்டால் நான் உன்னை விடுதலையாக்கிவிடுவேன். வேறே ஒன்றும் வேண்டாம். உன்னைப் பார்த்தால் வயதான கிழவனாக இருக்கிறாய்,” என்று சொன்னானாம். அதற்கு அவருடைய பதில், “60 வருடங்களாக நான் இந்த இயேசுகிறிஸ்துவைப் பின்சென்றிருக்கிறேன். அவரோடு நடந்துகொண்டிருக்கிறேன். ஒருமுறை கூட அவர் எனக்கு உண்மையற்றவராக இருக்கவில்லை. இப்படிப்பட்ட அவருக்கு நான் எப்படி உண்மையற்றவனாக இருக்க முடியும் அல்லது அவர் உண்மையற்றவர் என்று நான் எப்படிச் சொல்ல முடியும்?” என்று பதில் சொன்னாராம். அவரை எரித்துக் கொன்றார்களாம்.
இந்த இயேசுகிறிஸ்து உண்மையிலேயே மனிதனுடைய இருதயத்தின் ஆழ்ந்த தேவைகளையும், வாழ்க்கையின் உள்ளான தேவைகளையும் நிறைவுசெய்யக்கூடியவர் என்பதற்கு நாம் பகர்வது பொய்சாட்சியல்ல. யுகங்கள்தோறும், எல்லா நூற்றாண்டுகளிலும் அவரால் கவரப்பட்ட, அவரால் ஈர்க்கப்பட்ட, அவரால் பிடிக்கப்பட்ட தேவனுடைய மக்கள் சாட்சி பகர்ந்திருக்கிறார்கள். அந்த மாபெரும் பரம்பரையில் இந்த நூற்றாண்டிலே நாமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு அப்படிப்பட்ட நிறைவானவரும், எல்லா இன்பங்களிலும் நிறைவுசெய்பவராக இருப்பாராக. சங்கீதத்திலே தாவீது சொன்ன இந்த வசனத்தை அடிக்கடி சொல்வோம். “அவர்களுக்குத் தானியமும் திராட்சைரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைப்பார்க்கிலும் அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர்” (சங். 4:7). கர்த்தர் அப்படிப்பட்ட சந்தோஷத்தை நம் எல்லாருடைய இருதயத்திலும் கட்டளையிடுவாராக. ஆமென்.