Transcribed and edited from a message spoken in October 2012 in Chennai
By Milton Rajendram
நம் வாழ்க்கையில், “பார்க்கமுடியாத” ஒரு வழியை தேவன் நமக்குத் தந்திருக்கிறார் என்றும், அது நம் ஆவியில் ஆழமாகப் பதிந்திருக்கிறது என்றும் நாம் நம்புகிறோம். இது, நாம் வழிவிலகிச் செல்லாதவாறு, எதேச்சையாகக்கூட வழிவிலகிச் செல்லாதவாறு, நம்மைத் தடுத்து நிறுத்துகிறது. நான் சொல்லுகிற இந்த வழிவிலகல்கள் தீமையானவைகளாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏற்புடையவை, நல்லவை என்று கருதப்படுபவைகள்கூட நாம் வழிவிலகிச் செல்வதற்கு வாய்க்காலாக மாறக்கூடும். பல எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம். வேதாகமத்தில் இழை யோடுகிற அர்த்தத்தை விட்டுவிட்டு அதை அக்குவேறு ஆணிவேறாக அலசிப்பார்ப்பதும், முழுக் கவனத்தையும் பரிசுத்த ஆவியானவர்மேல் வைப்பதற்குபதிலாக அவருடைய கொடைகளின்மேல் வைப்பதும் சில எடுத்துக்காட்டுகளாகும்.
என் கல்லூரிப் பருவத்தில் நான் தேவன்மேல் மிகவும் பக்திவைராக்கியமாக இருந்தேன். நான் வாழ்கிற இடத்தில் எல்லாருக்கும் சுவிசேஷத்தை அறிவிக்கும்வரை ஓய்வு உறக்கம் என்ற பேச்சுக்கு இடமேயில்லை என்று சபதம் செய்திருந்தேன். முட்டாள்தனமான என் சபதத்தை நிறைவேற்றுவதற்காக, சுவிசேஷப் பணியில் வைராக்கியமாக ஈடுபட்டிருந்த ஒரு குழுவுடன் சேர்ந்து நானும் உழைக்க ஆரம்பித்தேன். எனக்குள் இருந்த அந்த அக்கினி தொடர்ந்து எரியாமல் இருந்திருந்தால் நான் அங்கு இருந்திருப்பேனா என்பது சந்தேகமே. அங்கு இருந்த முறுமுறுப்புகளோ அல்லது அங்கும் இங்குமாக ஒரு சில வசனங்களை எடுத்து அவைகளை ஆதாரமாகக்கொண்டு அவர்கள் வேதத்துக்குக் கொடுத்த முற்றிலும் தவறான வியாக்கியானங்களோ என் வைராக்கியத்தை எந்த விதத்திலும் தணிக்கவில்லை. ஆனால், காலப்போக்கில் இதனால் சேதம் ஏற்பட்டது. மேலும், அவர்களுடன் இருந்த இடைவிடாத உறவின் விளைவாக, அவர்கள் தங்கள் உபதேசங்களினால் கூட்டத்தாரை அடக்கியாண்டு, ஈவு இரக்கமில்லாமல் விசுவாசிகளை அடித்துத் தின்கிற கொலைகாரர்கள் என்பதையும் கண்டுகொண்டேன். அவர்கள் தேவனைவிட உபதேசங்களையே இன்றியமையாததாகக் கருதினார்கள்.
இன்னொரு காரியம் எனக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியது. அவர்கள் சுபிட்சத்தை அதிகமாக வலியுறுத்தினார்கள். தம் பிள்ளைகள் வளம் பெற்று, மேன்மையான வாழ்க்கை வாழ வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பது உண்மை. ஆனால் இந்த இரண்டுக்கும் இடையே ஒரு நூலிழைதான் வித்தியாசம். அந்த நூலிழையை மீறினால் அதன்விளைவு இச்சை அல்லது நாசுக்காகச் சொல்வதானால், சுபிட்ச சுவிசேஷம்.
முன்னுரிமையும், முக்கியத்துவமும் கொடுக்க வேண்டியதை முற்றிலும் புறக்கணித்துவிட்டு, பொருளாதார ஆதாயம், சுகம்போன்ற காரியங்களைப்பற்றியே அவர்கள் சாட்சி கொடுத்தார்கள். கிறிஸ்து நம்மில் வளர வேண்டும் என்ற தேவனுடைய விருப்பம் நம்மில் நிறைவேறுகிறதென்றால், பொருளாதார ஆதாயம், சுகம்போன்ற காரியங்களுக்கு நான் எதிரானவனல்ல.
நான் இவைகளைச் சொல்லவேண்டிய காரணம் என்னவென்று நீங்கள் நினைக்கக்கூடும். வேதாகமத்தைப்பற்றிய அறிவை (சில வேளைகளில் அளவுக்கு அதிகமாக) அல்லது பரிசுத்த ஆவியானவரின் கொடைகளை அல்லது உபதேசங்களையும், போதனைகளையும் நாம் வலியுறுத்தக்கூடும். சந்தேகப்படாத விசுவாசி இவைகள் தெய்வீகமானவை என்று எளிதில் தவறாக எடுத்துக்கொள்வான்.
நம் தனிப்பட்ட வாழ்க்கையிலும், கூட்டுவாழ்க்கையிலும், நம் ஆவிக்குரிய நிலையையும், தெய்வ பக்தியையும், கிறிஸ்துவின் சாயலையும் வெளியே பகட்டாகக் காண்பிப்பதற்கு நாம் கிளர்ந்தெழக்கூடும். சொல்லப்போனால், நான் இவைகளுக்கு எதிரானவன் இல்லை. ஆனால், தேவனைப் பொறுத்தவரை எது முக்கியம் என்றால் கிறிஸ்துவைப்போன்ற சாயல் அல்ல மாறாக “கிறிஸ்து தன்மையே.” தேவன் நம்மில் பிரியமாயிருப்பதற்கு நம்மில் இருக்கும் கிறிஸ்துவின் அளவே காரியம். “ஒரு காரியத்தில் எந்த அளவுக்குக் கிறிஸ்து வெளியரங்கமாகிறாரோ அந்த அளவுக்குத்தான் தேவனுடைய பார்வையில் அதற்கு மதிப்பு உண்டு” என்று யாரோவொருவர் கூறினார்.
நாம் ஒருவரையொருவர் சந்திக்கும்போது, உண்மையாகவே நாம் வெளியாக்கப்படுவது முற்றிலும் வித்தியாசமான காரியம். கிறிஸ்துவுக்குள்ளான எல்லா விசுவாசிகளும் தேவனுடைய பிள்ளைகள். இது மறுக்க முடியாத உண்மை. அவர்களுடைய வாழ்க்கை இந்த உண்மையை நிரூபிக்க வேண்டும். ஆனால், அப்படி நிரூபிக்காமலும் போகலாம். என் வாதம் என்னவென்றால் இடறலுண்டாக்குகிற விசுவாசிகூட தேவனுக்குப் பிரியமானவன்தான். அப்படியானால் அவருடைய அனலுள்ள சீடனைக்குறித்து சொல்லவா வேண்டும்?
வாட்ச்மேன் நீ தன் “சாதாரண கிறிஸ்தவ வாழ்க்கை” என்ற புத்தகத்தில் நாம் தேவனுடைய குமாரர்கள் என்பதின் சிறப்பை விளக்கிக்காட்டியிருக்கிறார்.
நான் திரு.வோங் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, அவருடைய செல்ல நாய்க்குட்டி அவருடைய படுக்கையருகே உட்கார்ந்திருந்தது. அது நல்ல நாயா, கெட்ட நாயா? அது வெறுமனே .. அது ஒரு நாயா? அது உங்கள் குடும்பத்தில் ஒரு நபராக இருக்க நல்ல நாயாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.? அது கெட்ட நாய் என்றால் அது உங்கள் குடும்பத்தில் ஒரு நபராக இல்லாமல் போய்விடுமா? அது ஒரு நாயாக இருக்க வேண்டும். உங்களுக்குத் தேவனோடு இருக்கும் உறவில் உங்களுக்கும் இந்தக் கோட்பாடு பொருந்தும். கேள்வி நீங்கள் நல்ல மனிதனா அல்லது கெட்ட மனிதனா என்பதல்ல. மாறாக நீங்கள் ஒரு மனிதனா என்பதுதான் கேள்வி. உங்கள் ஜீவன் தேவனுடைய ஜீவனைவிட ஒரு தாழ்வான தளத்தில் இருந்தால் நீங்கள் தெய்வீக குடும்பத்தைச் சார்ந்தவராக இருக்க முடியாது. கெட்ட மனிதர்களை நல்ல மனிதர்களாக மாற்றுவதையே உங்கள் வாழ்க்கையின் குறிக்கோளாக வைத்திருந்தீர்கள். ஆனால், மனிதர்கள் நல்லவர்களாக இருந்தாலும் சரி அல்லது கெட்டவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் வெறுமனே மனிதர்களாக இருக்கும்வரை அவர்களால் தேவனோடு சொல்லத்தக்க எந்த உறவையும் வைத்துக்கொள்ள முடியாது. மனிதர்களாகிய நாம் தேவனுடைய குமாரனைப் பெற்றுக்கொள்வதுதான் நமக்கிருக்கும் ஒரே நம்பிக்கை. நாம் அவரை ஏற்றுக்கொள்ளும்போது நமக்குள் வரும் அவருடைய ஜீவன் நம்மைத் தேவனுடைய குமாரர்களாக்குகிறது. திரு.வோங் நான் சொன்ன சத்தியத்தைக் கண்டு, தேவனுடைய குமாரனைத் தன் இருதயத்துக்குள் ஏற்றுக்கொண்டார். அன்றைக்கே அவர் தேவனுடைய குடும்பத்தில் ஒரு நபராக மாறினார்.”
ஒரு செல்ல நாய்க்குட்டியைத் தத்தெடுத்து, அதை அன்போடும் அக்கறையோடும் நாம் வளர்க்கலாம். அது நமக்கு எவ்வளவு செல்லமாக இருந்தாலும் சரி, அதனால் ஒரு மகன் அல்லது மகளின் இடத்தை எடுத்துக்கொள்ளவே முடியாது. பிள்ளையின் இடம் பிரத்தியேகமாக ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கிறது. இந்த இடத்தை வேறு யாரும் எடுத்துக்கொள்ள முடியாது. ஒருவேளை நம் பிள்ளைகளைவிட நாய்க்குட்டி நமக்கு அதிகமாகக் கீழ்ப்படியலாம். ஆனாலும் நம் பிள்ளை நன்றிகெட்ட பிள்ளையாக இருந்தாலுங்கூட அவன் இன்னும் நம் பிள்ளைதான்.
“தேவன் வேர்களில் பிரியப்படுகிறார், தேவன் ஊற்றில் இன்னும் அதிகப் பிரியப்படுகிறார்.”
தேவனுடைய பார்வையில், மனிதனின் நளினம், நாசுக்கு, இங்கிதம் ஆகியவைகளுக்கு எந்த மதிப் பும் இல்லை. என் பிள்ளை எனக்குக் கீழ்படியாமல் போகலாம் அல்லது அயோக்கியனாக, போக்கிரியாக இருக்கலாம். அதனால் அவன் என் பிள்ளை இல்லாமல் போய்விடுவதில்லையே. அவனிடத்தில் என் ஜீவன் இருக்கிறது. அவன் என் பிள்ளை. என் சிறிய மனதால் இப்படிப்பட்ட சத்தியத்தைப் புரிந்துகொள்ள முடியுமானால், தேவன் தம் பிள்ளைகள்மேல் வைத்திருக்கும் அன்பு அளவிடமுடியாதது என்பதை நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். தேவனுடைய ஜீவன் அவருடைய பிள்ளைகளிடத்தில் இருப்பதால் அவர்களால் கிறிஸ்துவைக் காண்பிக்க முடியும். இதுவே தேவனுக்கு மிகவும் பிரியமானது. நம் கிறிஸ்தவ வாழ்க்கை உப்புச்சப்பு இல்லாத வாழ்க்கை இல்லை. அது கணந்தோறும் தேவனைப் பிரியப்படுத்த முயற்சிசெய்து வாழ்கிற ஒரு வாழ்க்கை. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் நாம் தேவனுக்கென்று பிரித்தெடுக்கப்பட்டவர்கள்.
நாம் மேலே சொன்ன காரியம், ஒழுக்கமான நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று உறுதியாக நம்புகிற ஒழுக்கவாதிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். தேவன் நல்ல வாழ்க்கையை எதிர்பார்க்கவில்லை. தேவன் நம்மில் இருக்கும் கிறிஸ்துவை அளந்து பார்க்கிறார். அதனால் ஏற்படுகிற தவிர்க்கமுடியாத ஒரு விளைவுதான் நல்ல வாழ்க்கை. முதலில் வருவது நல்ல வாழ்க்கை அல்ல. தேவன் இதற்காக இடைவிடாமல் வேலைசெய்து கொண்டேயிருக்கிறார்.
நம் கிறிஸ்தவ வாழ்க்கையைப்பற்றிய தவறான கருத்துக்கு பல குறைகள் காரணம். தேவதூதர்களுடன் சேர்ந்து வீணை வாசித்துக்கொண்டு நித்தியத்துக்கும் சந்தோஷமாக வாழ்வதுதான் இரட்சிப்பின் பொருள் என்பது நம்முடைய பல குறைகளில் ஒரு குறையாகும். அப்படியல்ல. சத்தம் போடுகிற நான்கு கால் ஜீவராசிகளைக்கொண்டு பரலோகத்தை நிரப்புவதுதான் தேவனுடைய விருப்பம் என்பது ஏற்புடையது இல்லை. இந்தக் காரியத்தைச் செய்வதற்குத் தூதர்களின் சேனை ஏற்கெனவே அவரிடத்தில் இருக்கிறது.
தூதர்கள் தேவனுடைய வேலைக்காரர்கள். நாம் தேவனுடைய குமாரர்கள். செல்ல நாய்க்குட்டியையும் பிள்ளையையும்பற்றிய உவமையை இங்கு பிரயோகித்துப்பாருங்கள். தேவனுடைய நற்பண்புகள், அவருடைய ஆள்தத்துவம் ஆகியவை மனிதனில் வெளியாக்கப்படுவதுதான் அவரை அதிகமாகத் திருப்திபடுத்தும். இதுவே இரட்சிப்பு.
இரண்டு வசனங்களைப் பார்ப்போம்: “அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர். எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது” (கொலோசெயர் 1:17).
“நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள். உங்களை நீங்களே பரீட்சித்துப் பாருங்கள். இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரென்று உங்களை நீங்களே அறியீர்களா? நீங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்களாயிருந்தால் அறியீர்கள்” (2 கொரிந்தியர் 13:5).
“கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்” (கொலோசெயர் 2:17).
இது, உண்மையாகவே, கொஞ்சம் அதிகம் என்று சொல்லும் அளவுக்கு நமக்கு சந்தோஷத்தை ஏற்படுத்த வேண்டிய ஜீவனுள்ள சத்தியம். முந்தியோ அல்லது பிந்தியோ தேவனுடைய குமாரனை முழுமையாக வெளியரங்கமாக்குவதற்கு நாம் மறுசாயலாக்கப்படுகிறோம்.. “நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனே கூடச் சாட்சிகொடுக்கிறாh” (ரோமர் 8:16).
நமக்குள் சாட்சிகொடுக்கிற ஒரு சாட்சி இருக்கிறார். இந்தச் சத்தியம் உண்மையா என்பதை பரிசோதித்துப் பார்க்கவேண்டியவர்கள் மற்றவர்கள் இல்லை. எனக்கே தெரியும். இதை மற்றவர்கள் “உறுதிப்படுத்த வேண்டும்” என்ற அவசியம் இல்லை.
ஆயினும், நாம் தேவனுடைய பிள்ளைகள்தான் என்பதை உறுதிப்படுத்த சில கனமான காரியங்களைப் பரிசீலிக்க வேண்டும். மேலும், நாம் தேர்ச்சி பெறவேண்டிய ஒரு கடைசிப் பரீட்சை இன்னும் இருக்கிறது. தேவனுக்குப் பிரியமான காரியத்தைத்தவிர நாம் உண்மையாகவே வேறொன்றும் செய்யாமல் இருக்கிறோமா என்பதுதான் அந்தப் பரீட்சை. இந்தப் பரீட்சை இன்று மேலோங்கி காணப்படுகிற தவறான கண்ணோட்டத்திலிருந்து நம்மை விடுதலையாக்குகிறது.
வேதாகமம் நம் எல்லாப் பிரச்சினைகளுக்கும் “சர்வநிவாரணி”போன்ற ஒரு தீர்வை வழங்கவில்லை. ஒவ்வொரு பிரச்சினையும் வித்தியாசமானது. அவை ஒவ்வொன்றையும் நம்மில் இருக்கும் “கிறிஸ்து தன்மை”யைக்கொண்டு தீர்க்கலாம்.
ஆம், நாம் அந்நிய பாஷையில் சரளமாகப் பேசலாம் அல்லது பரிசுத்த ஆவியின் கொடைகளைப் பயன்படுத்தலாம் அல்லது உபதேசங்களை சாதுர்யமாக மேற்கோள் காட்டலாம். இவைகளையெல்லாம் செய்தும் நாம் கிறிஸ்து இல்லாமல் இருக்க முடியும். எப்போதும் இப்படித்தான் இருக்கிறது என்று நான் சொல்லவில்லை. நாம் அந்நிய பாஷகளில் பேசும்போது தேவன் சந்தோஷப்படுகிறார் என்பதை நான் சந்தேகிக்கவில்லை. ஆனால், இனிமையான ஆறுதலின் வார்த்தைகளையும், கடிந்துகொள்ளும் வார்த்தைகளையும் நாம் நம் தாய்மொழியில் பேசும்போது தேவன் அதைவிட அதிகமாக சந்தோஷப்படுகிறார். காரியத்தின் கடைத்தொகை என்னவென்றால் ஒரு காரியத்தைப் பிடித்துக்கொண்டு அதுதான் எல்லாம் என்பதுபோல் சாதிக்கக்கூடாது.
1 கொரிந்தியர் 3 வேலைகளைப்பற்றிப் பேசுகிறது. நம் வேலைப்பாடு பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கற்களால் ஆனதென்றால் அது அக்கினிப் பரீட்சையினால் சேதமுறாது. மாறாக நம் வேலைப்பாடு மரம், புல், வைக்கோல் ஆகியவைகளால் ஆனதென்றால் அது அக்கினிப் பரீட்சைக்குத் தப்பாமல் எரிந்து சாம்பல் மேடாகிவிடும்.
“அக்கினி” என்று பவுல் எதைச் சொல்லுகிறார் என்று என்னால் விவரிக்க முடியாது. குறைந்த பட்சம் அது நம்மில் உருவாகியிருக்கும் கிறிஸ்துவின் அளவைக் குறிக்கிறது என்பது நிச்சயம். நம் சொல்லிலும், செயலிலும், கூட்டங்களிலும் கிறிஸ்து எந்த அளவுக்கு உருவாக்கப்படுகிறார் என்பதுதான் காரியம்.
தேவன் புள்ளிவிவரங்களினால் வசீகரிக்கப்படுவதில்லை. நம்மில் இருக்கும் கிறிஸ்துதன்மை எண்ணிக்கையினால் தீர்மானிக்கப்படுவதில்லை. நம் கூட்டத்தில் பெருமளவு எண்ணிக்கை பெருகிவிட்டால் தேவன் நம்மில் பிரியமாயிருக்கிறார் என்று பொருள் இல்லை. இதற்கு மாறாகவும் இருக்கக் கூடும். ஆனால், எப்போதும் அப்படித்தான் என்று சொல்ல முடியாது. ஆனால் எண்ணிக்கைதான் அளவுகோல் என்பதை அடியோடு ஒதுக்கிவிடலாம். பரவசப்படுத்துகிற ஒரு பாடலைக் கேட்டவுடன் அல்லது பாடியவுடன் நாம் நல்ல வேலைகளைச் செய்ய ஆரம்பித்துவிடுவோம் என்று நினைப்பது அறியாமை. அதுபோல ஒரே நாளில் கிறிஸ்து நம்மில் உருவாகிவிடுவார் என்று நாம் நினைத்தால் அப்போதும் நாம் ஒன்றும் வித்தியாசமானவர்கள் அல்ல.
நாம் தேவனுக்கு முன்பாக நிற்கும்போது ஒவ்வொரு நாளும் அவர் நம்மில் இருக்கும் கிறிஸ்து தன்மையைப் பார்க்கிறார். அது எவ்வளவு குறைவாக இருந்தாலும் சரி, அவர் அதில் சந்தோஷப்படுவார். அவர் நம்மில் அதிகமான கிறிஸ்துதன்மை காணப்படுகிற நாளை மட்டும் எடுத்துக்கொண்டு மற்ற நாட்களையெல்லாம் ஒதுக்கிவிடுவதில்லை. தேவன் படிப்படியானவர். அதுபோல தம் பிள்ளைகளும், மதரீதியான பக்திவைராக்கியத்தோடு வேலை செய்யாமல், படிப்படியாக வேலைசெய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். நாம் குறையக்குறைய, கிறிஸ்துதன்மை நம்மில் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகுகிறது. இதுவே தேவனுடைய கண்களில் தயவு கிடைப்பதற்கான ஒரே வழி.
இதைப்பார்க்கிற தேவன், “இதோ என் மகன். இன்று நான் அவனில் கொஞ்சம் பொன்னை, கொஞ் சம் வெள்ளியை, கொஞ்சம் விலையேறப்பெற்ற கல்லைப் பார்க்கிறேன். இதைவிட எனக்கு வேறென்ன வேண்டும்?” என்று சொல்லுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
மற்ற விசுவாசிகளுடன் உறவுகொள்வதால் கிறிஸ்துதன்மை பெருகுகிறது. உறவு ஓர் அலங்காரம். நம்மில் அன்பின் மணமும், அக்கறையின் வாசனையும் வீசும்போது நம் ஆவிக்குரிய அழகு அதிகரிக்கிறது. இந்த வாசனையைக் கிறிஸ்துவுக்கு வெளியே ஒருபோதும் காணமுடியாது. இது கிறிஸ்துதன்மை நம்மில் பெருகுவதற்கு ஏதுவாக இருக்கும். கடைசியாகப் பார்த்தால் இதுவே காரியம்.
உடன்படிக்கைப் பெட்டியைப் பாருங்கள். இது சாதாரணமானதல்ல. பெட்டிக்குள் பத்துக் கட்டளைகளடங்கிய இரண்டு பலகைகளும், மன்னா வைக்கப்பட்டிருந்த பொற்பாத்திரமும், ஆரோனின் கோலும் இருந்தன. அந்தக் கோல் துளிர்த்தது. செத்தமரம் துளிர்த்தது. உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்துகொண்டு எரிகோவின் உயர்ந்த மதில்களைச் சுற்றிவந்தபோது, ஏழாவது நாளில் அந்த கோட்டை விழுந்தது. “ஆ, எவ்வளவு அற்புதமான பெட்டி!” என்று நீங்கள் வியக்கக்கூடும்.
அது அற்புதமான பெட்டி இல்லை. ஏலியின் நாட்களில் ஒருமுறை யுத்தம் வந்தபோது எல்லா யூதர்களும் யுத்தத்துக்குச் சென்றார்கள். என்ன நடந்தது தெரியுமா? கானானியருக்குள் தங்கள் வல்லமையைக் காண்பித்து பெரிய வெற்றிகண்ட ஒன்றுக்கும் உதவாத அந்த சேனை மோசமாகத் தோற்றுப்போனது. ஆம், படுதோல்வி.
ஞானி ஏலி ஓர் ஆலோசனை கொடுத்தார். யுத்தத்துக்கு ஏன் பெட்டியைக் கொண்டுபோகக் கூடாது? எரிகோவில் அவர்களுக்கு வெற்றியைத் தேடி தந்த பெட்டி. பெட்டியை எடுத்தார்கள். யுத்தத்துக்கு சென்றார்கள், அப்புறம்? அவர்கள் தோற்றுப்போனார்கள்.
ஆம் தோற்றுப்போனார்கள்.
கற்றுக்கொள்ளும் பாடம் என்ன? தேவன் பெட்டியைப் பார்ப்பதில்லை. மாறாக இருதயத்தைப் பார்க்கிறார். அவர்களுடைய இருதயம் அவர்மேல் இல்லை, மாறாக பெட்டியின்மேல் இருந்தது. தேவன் இதில் பிரியப்படவில்லை.
அற்புதமான குரலில் அவரைத் துதிப்பதால் தேவன் அதில் மயங்கிவிடுவதில்லை. சொல்லப் போனால் அந்தக் குரலைத் தந்ததே அவர்தான். நம் இருதயம் கிறிஸ்துவால் நிரம்பி வழியும்போது அவர் சந்தோஷப்படுகிறார். வேறென்ன அவரை சந்தோஷபடுத்தும்?
நடபடிகள் 19:14இலும் இதுபோன்ற இன்னொரு எடுத்துக்காட்டு இருக்கிறது. ஸ்கேவாவின் ஏழு குமாரர்கள் பேயோட்ட விரும்பின ஒரு பெரிய குழு. பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின் நாமத்தில் ஆணையிட்டு அசுத்த ஆவியை விரட்ட முயன்றார்கள். அங்கு நடந்தது ஏறக்குறைய ஒரு பழமொழியாகிவிட்டது.
தேவன் இருதயத்தையே பார்க்கிறார்.
நீங்கள் இருபது ஆண்டுகளுக்குமுன் இருந்ததைவிட இப்போது வித்தியாசமானவராக இருந்தால் கிறிஸ்துவின் அளவு உங்களில் பெருகியிருக்கிறது என்று பொருள். திருவெளிப்பாடு 1, 2, 3ஆம் அதிகாரங்களைக் கொஞ்சம் ஆழமாகப் பாருங்கள். சபைகளைப் போஷிப்பதற்காக மட்டும் அல்ல. அவர்களில் இருக்கும் கிறிஸ்துவின் அளவை, கிறிஸ்துதன்மையை, அளப்பதற்காகவும் தேவன் அவைகளுக்கிடையே உலாவுகிறார்.
உங்கள் தொனியில் இருக்கும் மகிழ்ச்சியையா தேவன் எதிர்பார்க்கிறார்? அல்லது சரளமான மொழியில் நீங்கள் பேசுகிற செய்திகளையா தேவன் விரும்புகிறார்? தேவன் கிறிஸ்துதன்மையை எதிர்பார்க்கிறார். அவரைத் திருப்திபடுத்த அங்கு கிறிஸ்துதன்மை இல்லையென்றால் அக்கறையுள்ள எந்தப் பெற்றோரும் ஏமாந்துபோவதுபோல், அவரும் ஏமாந்துபோகிறார்.
நண்பர்களே, நாம் தணிந்துபோய்விடவேண்டாம். நாம் கிறிஸ்தவர்கள் என்பது ஒரு சாக்குப்போக்கல்ல. கிறிஸ்துவின் நிறைவான அளவுவரை வளர நாம் ஏங்குவோமாக, நம் உறவுகளின்மூலம் கிறிஸ்துதன்மையின் நறுமணத்தை வீசுவோமாக. இதுவே நம் இருதயத்தின் ஏக்கமாக மாறட்டும். அப்போது தேவனுக்குப் பிரியமானதும் விலையேறப்பெற்றதுமான ஏதோவொன்று நம்மில் வளரும். இதுவே என் ஜெபம்.