Transcribed from a message spoken on October 2014 in Chennai
By Milton Rajendram
“உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவே மகிமையின் நம்பிக்கை” (கொலோ. 1:27). தேவனுடைய மக்களுடைய விதி நேர்மறையானது; அது மகிமை. தேவன் நம்மிடத்தில் ஒரு வேலையை ஆரம்பித்திருக்கிறார். பாவத்தின் காரணமாக மனிதனுடைய ஆவி, ஆத்துமா, சரீரம் ஆகிய மூன்று பகுதிகளுமே சேதப்படுத்தப்பட்டன. மனிதனுடைய ஆவி மரித்துப்போனது, அவனுடைய ஆத்துமா கறைப்பட்டுப்போனது, அவனுடைய சரீரம் பலவீனமான, பாவத்திற்கு வளைந்துகொடுக்கக்கூடிய, பாவத்திற்கு உடனடியாக விட்டுக்கொடுக்கக்கூடிய, மாம்சமாக மாறியது. மனிதனுடைய ஆவி செத்துப்போனது. அவனுடைய ஆத்துமா, அதாவது அவனுடைய மனம், உணர்ச்சிகள், தீர்மானங்கள் ஆகியவைகளெல்லாம் கறைப்பட்டு, கெட்டுப்போயின. அவனுடைய உடல் பாவத்திற்கு உடனடியாக வளைந்துகொடுக்கிற மாம்சமாக மாறியது.
ஆனால், தேவன் மனிதனை அப்படி விட்டுவிடவில்லை. தம்முடைய படைப்பு கெடுக்கப்படும்போது அல்லது சிதைக்கப்படும்போது தேவன் வெறுமனே கைகட்டிக்கொண்டு நின்று, வேடிக்கை பார்ப்பதில்லை. “ஐயோ! நான் படைத்த அற்புதமான படைப்பு சாத்தானால் சூறையாடப்படுகிறதே! கெடுக்கப்படுகிறதே! சிதைக்கப்படுகிறதே!” என்று அவர் செய்வதறியாது திகைத்து, கையாலாகதவர்போல இருப்பதில்லை. அது மட்டும் அல்ல. “நான் இந்தப் படைப்பைத் தீர்மானிக்கக்கூடிய, சித்தமுள்ள அங்கமாக உண்டாக்கினேன். இது கெட்டுப்போனதற்கும், சிதைந்துபோனதற்கும், பாழானதற்கும் அவன்தான் பொறுப்பு. எனவே, நான் செய்வதற்கு ஒன்றும் இல்லை,” என்றும் தேவன் விடுவதில்லை. இது தேவனுடைய அற்புதமான குணம்.
பலவேளைகளில் தன் பிள்ளைக்கு எல்லாவற்றையும் செய்தும், அந்தப் பிள்ளைத் தன் வாழ்க்கையைக் கெடுத்துக்கொண்டால் அந்தப் பெற்றோர் என்ன செய்வார்கள்? பெற்றோர் தங்கள் பிள்ளைகளைக் கல்லூரியில் சேர்க்கிறார்கள். அந்தப் பிள்ளைகளோ படிப்பதைத்தவிர மற்ற எல்லாக் காரியங்களையும் செய்து, நான்கு ஆண்டுகளை வீணாக்கினால் அவர்களுடைய பெற்றோர் என்ன செய்ய முடியும்? “இனிமேல் நான் செய்வதற்கு ஒன்றும் இல்லை,” என்று சொல்வார்களா?
“நான் என் திராட்சைத்தோட்டத்திற்காகச் செய்யாத எந்த வேலையை அதற்கு இனிச் செய்யலாம்? அது நல்ல திராட்சைப் பழங்களைத் தருமென்று நான் காத்திருக்க, அது சகப்பான பழங்களைத் தந்ததென்ன?” (ஏசாயா. 5:4) என்று தேவன் இஸ்ரயேல் மக்களைக்குறித்துச் சொல்வதாக நாம் வாசிக்கிறோம்.
ஆனால், ஆச்சரியம் என்னவென்றால் தேவனுடைய மனம் உலகத்து மக்களைப்போல் சிந்திப்பதில்லை என்று நான் உறுதியாகச் சொல்லுகிறேன்.
ஒரு மனிதன் தன் வாழ்க்கையைக் கெடுக்கிறான், கெடுக்கிறான், கெடுத்துக்கொண்டேபோகிறான் என்று வைத்துக்கொள்வோம். அப்போது தேவன், “நான் என்ன செய்ய முடியும்? என்னால் ஒன்றும் செய்ய முடியாது. இந்த எல்லைவரை அவன் தன் வாழ்க்கையைக் கெடுத்திருந்தால் சீர்செய்யலாம். இந்த எல்லைக்கு மீறிப் போயிருந்தால் என்னால் அதைச் சீர்செய்ய முடியாது,” என்று சொல்வாரா அல்லது “இது நான் படைத்த வாழ்க்கை. சாத்தான் நேரடியாகப் பாழாக்கினானோ அல்லது சாத்தானோடு தோழமைகொண்டு அந்த மனிதனே பாழாக்கினானோ, இந்த வாழ்க்கையை நான் மீட்கப்போகிறேன், செப்பனிடப்போகிறேன். நான் அதை விடப்போவதில்லை,” என்று எண்ணுவாரா? எது தேவனுடைய எண்ணம்?
மனிதன் சுயநோக்கமும், சுயசித்தமும் உடையவனாக இருந்தாலும், இறுதியில் மனிதன் தேவனுடைய உடைமை. நாம் சுயமாக எண்ணுகிறவர்கள், தீர்மானிக்கிறவர்கள் என்பதால் நாம் நம்முடைய உடைமை இல்லை. இறுதியில், கூட்டிக்கழித்துப் பார்த்தால், மனிதன் தேவனுடைய உடைமை. எனவேதான், மனிதன் தேவனுக்குமுன்பாக நியாயத்தீர்ப்பில் வந்து நிற்க வேண்டும். ஏனென்றால், தேவன் மனிதனுக்கு வாழ்க்கை என்று ஒன்றையும், அவனை மனிதன் என்கிற பாத்திரமாகவும், வைத்திருப்பதால் இந்த வாழ்க்கையைவைத்து அவன் என்ன செய்தான் என்று அவன் தேவனுக்குக் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.
கெடுக்கப்பட்ட வாழ்க்கையைத் தேவன் மீட்கிறார் அல்லது இரட்சிக்கிறார். கெடுக்கப்பட்ட ஒரு பொருளை அதன் ஆதி நிலைக்குக் கொண்டுவருவதுதான் மீட்பு அல்லது இரட்சிப்பு. ஒரு நாற்காலி உடைந்துவிட்டால் இந்தக் காலத்தில் மனிதர்கள் அதைத் தூர எறிந்துவிடுகிறார்கள். ஆனால், பழைய காலத்தில் மனிதர்கள் அதை அவ்வளவு சீக்கிரத்தில் தூரப்போட மாட்டார்கள். ஒரு துண்டுப்பலகையைவைத்து ஆணிஅடித்து அதைச் சரிசெய்து, மீண்டும் பயன்படுத்துவார்கள். அதில் ஓரளவுக்குத் தேவனுடைய மனம் இருக்கிறது. இன்று ஒரு துணி கிழிந்துவிட்டால் தூக்கிஎறிந்துவிடுவார்கள். அந்தக் காலத்தில் அதை ஊசி நூலைவைத்துத் தைப்பார்கள்.
உடைந்த நாற்காலிகளைப் பழுதுபாருங்கள் என்றோ அல்லது கிழிந்த துணியைத் தையுங்கள் என்றோ நான் சொல்லவில்லை. ஒன்று பழுதுபட்டுவிட்டால் அல்லது சேதமடைந்துவிட்டால் தேவன் அதை விட்டுவிடுவதில்லை என்பதற்காக நான் இவைகளைச் சொல்லுகிறேன். அதை மீட்பதற்கு என்ன தேவையோ அந்தப் பணியைத் தேவன் ஆரம்பிக்கிறார். மீட்பதற்குத் தம் உயிரையே கொடுக்க வேண்டியிருந்ததால் தேவன் அதை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவில் ஆரம்பித்தார்.
முதலாவது, இன்று தேவன் நம்முடைய செத்துப்போன ஆவியை உயிர்ப்பிக்கிறார்; கெட்டுப்போன நம்முடைய ஆத்துமாவை மறுசாயலாக்குகிறார். கெட்டுப்போன என்றால் நம்முடைய மனம், உணர்ச்சி, தீர்மானங்கள் எல்லாம் தேவனைப்போல் இருக்க வேண்டும். ஆனால், அவைகள் அப்படி இல்லை. எனவே, தேவன் அவைகளை மறுசாயலாக்கி, தேவனைப்போல் எண்ணமும், தேவனைப்போல் உணர்ச்சியும், தேவனைப்போல் தீர்மானிக்கவும் நம்முடைய ஆத்துமாவை மறுசாயலாக்குகிறார். ஒரு நாளிலே, சாவுக்கினமான இந்த உடலையும் அவர் உயிர்ப்பிப்பார் அல்லது மறுவுருவாக்குவார் என்று வேதம் சொல்லுகிறது.
இது மிகவும் எளிமையான எண்ணம். ஒருவிதத்தில் பார்த்தால், மனிதனுடைய மூன்று பகுதிகளும் வீழ்ச்சியினால், பாவத்தினால், சேதமடைந்தன. ஆண்டவராகிய இயேசுவின் இரட்சிப்பில் மனிதனுடைய மூன்று பகுதிகளையும் அவர் அவனுடைய ஆதி நிலைக்குக் (ஆதி நிலை என்றால் தேவன் மனிதனைப் படைத்தபோது அவன் என்ன நிலையில் இருந்தானோ அந்த நிலைக்கு) கொண்டுவருகிறார். ஆனால், அதுகூட அவ்வளவு சரியல்ல. ஏனென்றால், அதைவிட உயர்ந்த நிலைக்குக் கொண்டுவருகிறார்.
ஆதி நிலையிலே, முதல் மனிதனாகிய ஆதாமிடத்தில் தேவனுடைய ஜீவன் இல்லை. கெட்டுப்போன அல்லது சேதமடைந்த இந்த மனிதனை தேவன் ஆதி நிலைக்கும்மேலாக, தேவனுடைய ஜீவனைப் பெற்ற மனிதனாக, இருக்கும் நிலைக்குக் கொண்டுவருகிறார்.
“பிரியமானவர்களே, இப்பொழுது நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம். இனி எவ்விதமாயிருப்போமென்று வெளிப்படவில்லை. ஆகிலும், அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்” (1 யோவான் 3:2). எப்படி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தேவனை முற்றுமுடிய வெளிக்காண்பித்தாரோ, காண்பித்தாரோ அதேபோல் நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அல்லது தேவனைக் காண்பிக்கிறவர்களாக மாறுவோம். இந்த இரட்சிப்பின் வேலை ஆண்டவராகிய இயேசுவின் வருகையிலே முடிவுபெறும்.
நம்முடைய விதி அல்லது இலக்கு மகிமை. மகிமையே தேவனுடைய பிள்ளைகளின் இலக்கு. ஆசீர்வாதம் தேவனுடைய பிள்ளைகளின் இலக்கு அல்ல. கல்லறை தேவனுடைய மக்களின் இலக்கு அல்ல. கல்லறை அல்லது மரணம் என்பது தற்காலிகமான ஓய்வு என்று புதிய ஏற்பாடு சொல்லுகிறது. “அவர்கள் தங்கள் கிரியைகளைவிட்டு ஓய்ந்திருப்பார்கள்” (வெளி. 14:13). ஆண்டவராகிய இயேசு வரும்போது, நாம் மகிமைக்குள் நுழைவோம் அல்லது மகிமை நம்மிலிருந்து வெளிப்படும். இந்த இரண்டுமே நடைபெறும். ஒரு பக்கம் நாம் மகிமைக்குள் நுழைகிறோம். இன்னொரு பக்கம், மகிமை நமக்குள்ளிருந்து வெளிவருகிறது. நாம் எப்போது மகிமைக்குள் நுழைவோம் என்றால் மகிமை நமக்குள்ளிருந்து எப்போது வெளிவரத் தயாராக இருக்கிறதோ அப்போது நாம் மகிமைக்குள் நுழைவோம்.
ஒரு கட்டத்தில் முட்டைக்குள்ளிருந்து கோழிக்குஞ்சு வெளிவர ஆயத்தமாயிருக்கிறது. இது ஏறக்குறைய மிகத் துல்லியமான உவமை. நாம் மகிமைக்குள் நுiழைவதென்பது அதுதான். நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற இந்த உலகம்தான் பெரிய உலகம் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், இது ஏறக்குறைய முட்டைத்தோடுதான். ஒருநாள் நாமும் அந்த முட்டைத்தோட்டை உடைத்துக்கொண்டு வெளியே வர ஆயத்தமாயிருப்போம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் ஆயத்தமாயிருப்பார். எனவே, நாம் மகிமையடைவோம்.
“எங்களைப் பார்த்தால் மகிமையடைகிற ஆள்போல் தெரிகிறதா?” என்று நீங்கள் கேட்கலாம். இயேசு கிறிஸ்து தேவனை எப்படிக் காண்பித்தாரோ அப்படி நாம் தேவனைக் காண்பித்துக்கொண்டிருக்கிறோமா? நம்முடைய கோபங்கள், சாபங்கள், வருத்தங்கள், கசப்புகள், கவலைகள், வீழ்ச்சிகள், பயங்கள், திகில்கள், தேவனுக்கு ஒவ்வாத, தேவனுக்கு முரணான, தேவனுக்கு மாறுபாடாக நம்மிடத்தில் இருக்கிற காரியங்களின் பட்டியல் நீண்ட பட்டியலாக இருக்கும். நம்மைப் பார்க்கும்போது ஒரு நாள் நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஒத்த சாயலைப் பெறுவோம் என்கிற நம்பிக்கை நமக்கு இல்லை. அப்படிப்பட்ட நம்பிக்கை நமக்கு இருக்கிறதோ இல்லையோ, நம்மைச் சுற்றியிருக்கிறவர்களுக்கு இருக்காது. நம்முடைய பிள்ளைகளைப் பார்த்து, “என்னுடைய மகன் ஒருநாள் இயேசுவின் சாயலுக்கு ஒத்த சாயலாகப்போகிறான்,” என்று நம்மில் எத்தனை பேருக்கு நம்பிக்கை இருக்கும்? நம்முடைய சகோதர சகோதரிகள், உடன்பிறந்தவர்கள் ஆகியவர்களை நினைக்கும்போது, “இவர்கள் மகிமையடைவார்கள்,” என்கிற நம்பிக்கை நமக்கு வருவதில்லை. ஏனென்றால், அவர்களுடைய குறைகள் அவ்வளவு அதிகம். என்னுடைய குறைகள் அவ்வளவு அதிகம். ஒரு நபரைப் பார்க்கும்போது நம்முடைய கண்களைக் கவருவது அவர்களுடைய குறைகள்தான். தூரத்தில் இருந்தால், “எனக்கு அவர் தேவதூதன். அவருக்கு நான் தேவதூதன்.”
நாம் மகிமைப்படுத்தப்படுவோம் என்பதற்குத் தேவன் என்ன தளம் வைத்திருக்கிறார்? என்ன அடிப்படை யில் அவர் இதைச் செய்யப்போகிறார்? இவ்வளவு குறைகள் இருக்கின்றன. என்ன தளத்தின்பேரில் நாம் மகிமைப்படுத்தப்படுவோம் என்று நம்புகிறோம்? கிறிஸ்துவானவர் நம்மில் இருப்பதே அந்த நம்பிக்கையின் தளம், நம்பிக்கையின் அடிப்படை அல்லது நம்பிக்கையின் இரகசியம். எனவே, தேவன் ஒருநாள் நம்மை மகிமைக்குள் நுழையப்பண்ணுவார். இந்த மனிதனுடைய எல்லாக் குறைகளையும் தராசின் ஒரு தட்டிலும், அவனுக்குள் இருக்கிற கிறிஸ்துவை மறுதட்டிலும் வைத்தால் “இவனுடைய குறைகள் இவன் மகிமைப்படுவதைத் தடுத்துவிடும்” என்று நான் எண்ணுவதைவிட, “ஓ! இவனுக்குள் கிறிஸ்து இருப்பதால் இவன் நிச்சயமாக மகிமைப்படுவான்,” என்று நான் எண்ணுவதற்கு அதிகமான தளம் இருக்கிறது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அப்படிப் பார்க்கிறார். தேவன் எப்போதும் அப்படித்தான் பார்க்கிறார்.
வேதாகமத்தில் பலருடைய பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. ஆபிராமை ஆபிரகாம் என்று பெயர் மாற்றினார். சீமோனை பேதுரு என்று பெயர் மாற்றினார். பெயர் மாற்றத்திற்குப்பின் இருக்கிற தேவனுடைய எண்ணம் என்னவென்று பார்க்க வேண்டும். சீமோன் என்றால் மணல் என்று பொருள். பேதுரு என்றால் பாறை என்று பொருள். “இவன் மணலைப்போன்று உறுதியில்லாத ஒரு மனிதன், உற்சாகமான மனிதன். ஆனால், உறுதியில்லாத மனிதன். இவனை நான் பாறையைப்போன்று உறுதியான மனிதனாக மாற்றுவேன்,” என்பதுதான் தேவனுடைய எண்ணம். எனவேதான் ஆண்டவராகிய இயேசு, “நீ பேதுருவாக இருக்கிறாய். இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்,” (மத். 16:18) என்றார்.
அந்த மனிதனைப் பார்த்தபோது எல்லாரும் அவனில் சீமோனைத்தான் பார்த்தார்கள்; மணல்போன்ற, வடிவம் இல்லாத, உறுதியில்லாத ஒரு மனிதன். ஆனால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவனில் பேதுருவைப் பார்க்கிறார். கற்பாறைபோன்று ஒரு திடமான, உறுதியான. வடிவமான மனிதனைப் பார்க்கிறார். ஆனால், வடிவம் இல்லாத மணலை திடமான, வடிவமான கற்பாறையாக மாற்றுவதற்கு தேவன் பல ஆண்டுகள், பல காலங்கள், எடுத்துக்கொள்கிறார். தேவன் அதை நம்பிக்கையோடு செய்கிறார்.
ஆண்டவராகிய இயேசுவின் நம்பிக்கை பரீட்சிக்கப்படுகிறது. “இந்த இராத்திரியிலே சேவல் கூவுகிற தற்குமுன்னே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய்” (மத். 26:34). பேதுரு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை மூன்றுமுறை மறுதலித்தார். ஒருவேளை இதுதான் பேதுருவின் முடிவு என்று நாம் நினைக்கலாம். ஆனால், தேவனைப் பொறுத்தவரை அப்போதும் முடிவுவரவில்லை. தேவன் விரக்கியடைந்து, “நான் கைவிட்டுவிட்டேன்,” என்று சொல்லவில்லை.
இஸ்ரயேல் மக்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்று அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் 9-11ஆம் அதிகாரங்களில் எழுதுகிறார். அதில் அவர் தேவனுடைய நம்பிக்கையைக் காட்டுகிறார்.
மனிதர்களாகிய நம்முடைய நம்பிக்கை சீக்கிரம் அற்றுப்போகும். ஆனால், தேவன் நம்மேல் வைத்திருக்கிற நம்பிக்கை அற்றுப்போவதில்லை. அவர் விரக்தியடைந்து, “இனிமேல் இந்தக் காரியத்தில் இவனைப் பொறுத்தவரை நான் ஒன்றும் செய்ய முடியாது,” என்று எண்ணுவதில்லை. இதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். மற்ற மனிதர்களைப் பொறுத்தவரை அவ்வளவு சீக்கிரத்தில் நாம் நம்முடைய நம்பிக்கையை இழந்துவிடவோ அல்லது இழந்துபோன நம்பிக்கையை அறிக்கையிடவோ கூடாது.
“அல்லாமலும் நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுவதில் நாம் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம். வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே” (எபி. 10:23). நாம் நம் நம்பிக்கையை அறிக்கையிடுவதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம். ஏன்? ஏனென்றால் வாக்குறுதிசெய்தவர் உண்மையுள்ளவர்.
வங்கிகளை நாம் நம்புகிறோம். ஆனால், திவால் என்பது நடக்கக்கூடிய ஒரு காரியம்தான். அது ஒன்றும் நூதனமான காரியம் இல்லை. ஒரு வங்கி, “நாங்கள் திவாலாகிவிட்டோம்,” என்று சொன்னால் திவால்தான். அங்கு வைப்புநிதி வைத்திருந்தவர்கள் கதி அவ்வளவுதான். அரசு வங்கியென்றால் உத்தரவாதம் உண்டு. நம்முடைய 100 ரூபாய் நமக்கு 100 ரூபாயாக வரும் என்ற நம்பிக்கையோடு முதலீடு செய்கிறோம். வங்கிமுறைமையில் நமக்கு அவ்வளவு நம்பிக்கை இருக்கிறது அல்லது மக்கள் எல்லாரும் செய்கிறார்கள். எனவே, அது நம்பிக்கைக்கு உரியதுதான் என்று நாம் நினைக்கிறோம்.
“அது மாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் நாங்கள் மேன்மைபாராட்டுகிறோம். மேலும், நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது” (ரோமர் 5:3-5). பொறுமை பரீட்சையை உண்டாக்கும் என்று தமிழில் இருக்கிறது. அப்படியல்ல. பொறுமை நிரூபிக்கப்பட்ட குணத்தை உருவாக்கும். இரு மிகவும் முக்கியமான வசனம். உபத்திரவங்களில் களிகூருவதாக அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறார். நாம் உபத்திரவங்களில் களிகூர முடியாது. உபத்திரவத்தின் பாதையில் கடந்தபோன எல்லா மனிதர்களும் ஒன்று சொல்ல முடியும். உபத்திரவம் மகிழ்ச்சியைத் தராது. நம்மைப்பொறுத்தவரை உபத்திரவத்தின் முடிவு ஏதோவொரு இழப்பு அல்லது ஒரு நட்டம் அல்லது ஒரு துன்பம் அல்லது ஒரு வேதனை அல்லது ஒரு வலி. உபத்திரவத்தின் விளைவுகள் இப்படித்தான் இருக்கும் என்று நாம் நினைப்போம்.
மகிழ்ச்சி என்பது வேறு, களிகூருதல் என்பது வேறு. “நான் தேர்வில் வெற்றிபெற்றுவிட்டேன்,” என்பது மகிழ்ச்சி. “என் தேர்வில் 99 வாங்கிவிட்டேன்” என்பது களிகூருதல். “நாங்கள் எங்கள் உபத்திரவங்களில் களிகூருகிறோம்,” என்று பவுல் கூறுகிறார்.
நம்முடைய பார்வை மிகவும் மட்டுப்பட்டது. பவுலின் பார்வை என்னவென்றால் “உபத்திரவங்களில் நாங்கள் களிகூருகிறோம்.” ஏனென்றால், உபத்திரவம் விடாப்பிடியாக ஒன்றைப்பற்றிக்கொள்ளச் செய்கிறது. “நீ இங்கே இரு. நான் அதுவரை போய்விட்டு வந்துவிடுகிறேன்,” என்று சொன்ன எலியாவை எலிசா விடாமல் பின்பற்றினான். இதுதான் விடாப்பிடியானதன்மை.
ஒரு தேர்வில் தோற்றுவிட்டால் வாழ்க்கை முடிந்துவிட்டதாக மக்கள் நினைப்பார்கள். ஒரு தேர்வில் மூன்று அல்லது நான்கு பாடங்களில் தோற்றுப்போனால் என்ன வேலை கிடைக்கும்? ஒரு வேலையும் கிடைக்காது என்று நாம் சொல்வோம். உலகம் அப்படிச் சொல்லும். நம் பிள்ளைகள் பாடங்களில் தோற்றுப்போக வேண்டும் என்று நான் சொல்லவில்லை, அதை நான் உற்சாகப்படுத்தவுமில்லை. ஆனால், தேர்வில் தோற்றவுடன் சூரியன் மறைந்துவிட்டது, உலகம் சுழல்வது நின்றுவிட்டது, இனிமேல் வாழ்க்கையில் ஒன்றுமில்லை என்பதுபோன் எண்ணத்தை நாம் கொடுப்பதும் தவறு. என்ன சொல்லலாம். “தேவன் உனக்குச் சில கிருபைகளையும், கொடைகளையும், கொடுத்திருந்தால், அவர் உனக்கு ஒரு தாலந்தைக் கொடுத்திருந்தால், நீ அதை இரண்டு தாலந்துகளாக மாற்ற வேண்டும். இரண்டு தாலந்துகள் கொடுத்திருந்தால் அதை நீ நான்கு தாலந்துகளாக மாற்ற வேண்டும். ஐந்து கொடுத்திருந்தால் அதை நீ பத்தாக மாற்ற வேண்டும். தேவன் உனக்கு ஒரு தாலந்தைக் கொடுத்துவிட்டு உன்னிடம் பத்து தாலந்தை எதிர்பார்க்க மாட்டார். தேவன் உனக்கு எவ்வளவு வளங்களைக் கொடுத்திருக்கிறார் என்று உனக்குத் தெரியும். அதன்படி நீ உற்பத்திசெய்யாவிட்டால் தொடர்ந்து தேவன் உனக்குத் தர மாட்டார். அந்தக் காரியத்தில் “ஆண்டவரே, நீர் எனக்கு நிறைய வளங்களைத் தந்திருந்தீர். ஆனால், நான் அதற்கேற்ற கனிகளை விளைவிக்கவில்லை,” என்று நான் மனந்திரும்புகிறவரை தேவன் மேற்கொண்டு நமக்குத் தரமாட்டார்.
நமக்குக் கொடுக்கப்பட்ட வளங்களில் நாம் உண்மையாயில்லையென்றால் எந்த மேலாளர் அல்லது எந்த முதலீட்டாளர் நம்மை நம்பி முதலீடு செய்வான்? தேவனும் அப்படித்தான். அது வேறு காரியம். இன்னொரு பக்கம், ஒரு தோல்வி வந்தவுடன் வாழ்க்கை அஸ்தமித்துவிட்டது என்று எண்ணுவது இந்த உலகத்தின் இயல்பு. அது சாத்தான் கொண்டுவருவது.
உபத்திரவத்தின் ஒரு கனி என்னவென்றால் விடாப்பிடியானதன்மை. லூக்கா 18ஆம் அதிகாரம் விடாப் பிடியானதன்மைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. ஒரு நகரத்தில் ஒரு நீதிபதி இருந்தார். அவன் தேவனுக்குப் பயப்படாதவன், மனிதர்களை மதிக்காதவன். அந்த நகரத்தில் ஒரு விதவையும் இருந்தாள். அந்த விதவை அந்த நீதிபதியிடம் போய், “நீர் எனக்கும் என் எதிரிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயம் செய்யும்,” என்று வேண்டினாள். இவ்வாறு அவள் வெகுகாலமாக விடாப்பிடியாகத் தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருந்தாள். ஆனால், அந்த நீதிபதி செவிகொடுக்கவில்லை. “இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவுசெய்கிறபடியினால், அவள் அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியாயம் செய்ய வேண்டும்” என்று சொன்னான். “அநீதியுள்ள அந்த நீதிபதி சொன்னதைச் சிந்தித்துப் பாருங்கள். அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும்பகலும் கூப்பிடுகிற வர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயம் செய்யாமலிருப்பாரோ? சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயம் செய்வாரென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (லூக். 18:1-8).
அநீதியுள்ள ஒரு நீதிபதியடம் ஒரு விதவை இவ்வளவு நம்பிக்கையோட விடாப்பிடியாக வேண்ட முடியும் என்றால் தேவனிடத்தில் எவ்வளவு நம்பிக்கை இருக்க வேண்டும்! “அநீதியுள்ள அந்த நீதிபதி சொன்னதைச் சிந்தித்துப் பாருங்கள். அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும்பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயம் செய்யாமலிருப்பாரோ?”
இங்கு நீடிய பொறுமை என்று சொல்லப்பட்டிருக்கிறது. விடாப்பிடியான பொறுமை. தளர்ந்துபோகாத பொறுமை, தொய்ந்துபோகாத பொறுமை. அது நிரூபிக்கப்பட்ட குணத்தை உருவாக்குகிறது. ஒருவன் குணவான் என்று எப்படித் தெரிகிறது? உபத்திரவத்தில் இவன் விடாப்பிடியாக நிலைத்திருந்தவன். எதற்காக விடாப்பிடியாக நிலைத்திருக்க வேண்டும்? தேவனுடைய சாட்சிக்காக, இயேசு கிறிஸ்துவின் சாட்சிக்காக. நம்முடைய நலனுக்காக அல்ல. ஏனென்றால் நம்முடைய வாழ்க்கை தேவனுடைய சாட்சியோடு கட்டப்பட்டிருக்கிறது. நாம் விழுந்தால் தேவனுடைய சாட்சி அடிவாங்கும். நாம் வாழ்ந்தால் தேவனுடைய சாட்சி பலமடையும். எனவே, நம்முடைய வாழ்க்கையும், வீழ்ச்சியும் தேவனுடைய சாட்சியோடு பின்னிப்பிணைந்திருக்கிறது. நமக்கு ஓர் இழப்பு என்றால் அது நமக்கு மட்டும் அல்ல இழப்பு. நாம் அறிக்கையிடுகிற வேனுக்கும் அது இழப்பு.
நிரூபிக்கப்பட்ட குணம். ஒவ்வொரு வாரமும் சபையில் 10 நிமிடம் பேசுவது ஒரு நல்ல பயிற்சி. ஏன் தெரியுமா? நாம் பேசுவது அடுத்த நாளில், அடுத்த வாரத்தில், அடுத்த மாதத்தில் பரீட்சைக்கு வரும். நீ பேசியது உன் வாழ்க்கையில் எவ்வளவு உண்மை என்பது பரீட்சைக்கு வரும். சில சமயங்களில் நாம் பரீட்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போதே நாம் அதைப்பற்றிப் பேச வேண்டியிருக்கும்!
விசுவாசத்திற்கும் நம்பிக்கைக்கும் என்ன வேறுபாடு? “பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக” (ரோமர் 15:13). நம் தேவன் நம்பிக்கையின் தேவன். ஆபிரகாமைக்குறித்து இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது. “உன் சந்ததி இவ்வளவாய் இருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடு விசுவாசித்தான்” (ரோமர் 4:18). இயற்கையான தளத்தில், இயற்கையான விதிகளின்படி, நம்புவதற்கு ஏதுவில்லை. ஆனால், தேவனுடைய வாக்குறுதியின்படி அவன் அதை நம்பினான். இயற்கை விதிகளின்படி என் நம்பிக்கை இருக்க வேண்டுமா அல்லது தேவனுடைய வாக்குறுதிகளின்படி அல்லது தேவனுடைய குணத்தின்படி என் நம்பிக்கை இருக்க வேண்டுமா? தேவனுடைய வாக்குறுதி என்றுகூட நான் சொல்லமாட்டேன். தேவனுடைய குணம் என்று சொல்வேன்.
ஏனென்றால், தேவனுடைய வாக்குறுதிகளை நாம் தாறுமாறாகக்கூடப் பயன்படுத்த முடியும். “வெள்ளியும் என்னுடையது, பொன்னும் என்னுடையது என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்,” (ஆகாய் 2:8) என்ற வசனத்தைப் பிடித்துக்கொண்டு, “ஆகையால் தேவனே, என் மகளுக்கு 10 கிலோ தங்கம் தாரும்,” என்றுகூட நாம் கேட்கலாம். இது முட்டாள்தனம். அவர் 10 கிலோ தங்கம் தரவில்லையென்றால் வெள்ளியும் பொன்னும் அவருடையவை அல்ல என்றாகிவிடுமா? இதன் இடஅமைப்பைப் பார்க்க வேண்டும். தேவாலயத்தைக் கட்டும்போது பொருள் இல்லையே என்று கட்டுகிற வேலை நின்றுவிட வேண்டாம் என்பதற்காக “வெள்ளியும் என்னுடையது, பொன்னும் என்னுடையது,” என்று தேவன் சொன்னார்.
எனவே, தேவனுடைய வாக்குறுதியின்மேல் என்றுகூட நான் சொல்ல மாட்டேன், தேவனுடைய குணத் தின்மேல் நம்பிக்கை. வாக்குறுதிகளை நாம் தவறாகப் பயன்படுத்தலாம். ஆனால், தேவனுடைய குணத்தைத் தவறாகப் பயன்படுத்த முடியாது.
தேவனுடைய ஒரு குணத்தை நான் சொல்லுகிறேன். தேவன் எல்லாவற்றிலும் தம் பிள்ளைகளைக் கலந்தாலோசிப்பார். இது உண்மையா பொய்யா? இரவும் பகலும் ஒரு குறிப்பிட்ட காரியத்துக்காக நீ தேவனிடத்தில் கதறுகிறாய் என்று வைத்துக்கொள்வோம். ஒரு வாரமோ, ஒரு மாதமோ, ஒரு வருடமோ, 2 வருடமோ, 5 வருடமோ அது தாமதமாகலாம். “அவர்கள் தூரத்தில் கண்டு அணைத்துக்கொண்டார்கள்.” தேவன் ஒரு உண்மையைக் காண்பிப்பதற்கும், அந்த உண்மையை மெய்யாக்குவதற்கும் இடையே ஒரு கால இடைவெளி உண்டு என்பது விசுவாசத்தின் அடிப்படைப் பண்பு. காலஇடை வெளி என்று ஒன்று இல்லையென்றால் விசுவாசம் என்று ஒன்று தேவையில்லை. அதேபோல், நாம் நம்புவதற்கும் நாம் நம்புவது நிறைவேறுவதற்கும் கால இடைவெளி இருக்கிறது. காலஇடைவெளியில் நாம் தேவனுடைய குணத்தின்மேல் நம்பிக்கையுடையவர்களாக இருக்க வேண்டும்.
நம்முடைய பெரிய நம்பிக்கை என்ன தெரியுமா? நம்முடைய ஆனந்த பாக்கியம் என்ன தெரியுமா? நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மீண்டும் வருவார் என்கிற நம்பிக்கை. ஆனால், சுற்று முற்றும் பார்த்தால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வருவதுபோல் தோன்றவில்லை. இயேசு கிறிஸ்து வரும்போது வானத்தில் நிறங்களெல்லாம் மாறும் என்று நான் நினைக்கவில்லை. திடுதிப்பென்றுதான் ஆண்டவராகிய இயேசு வருவார் என்று நான் நினைக்கிறேன். அது நம் நம்பிக்கை. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வருவார்.
உபத்திரவத்தின் பொருள் என்ன? என்ன காரணத்துக்காகத் தேவன் இந்த உபத்திரவத்தைத் தருகிறார் என்ற கேள்வியை நீண்ட நாள் கேட்கக்கூடாது. சில சமயங்களில் நம் பாவங்களோடு இடைப்படுவதற்காகத் தேவன் நமக்கு உபத்திரவங்களைத் தருவார். “மாம்சத்தில் பாடுபகிறவன் இனி மாம்சத்திலிருக்கும் காலம்வரைக்கும் மனிதனுடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய சித்தத்தின்படி பிழைக்கத்தக்கதாகப் பாவங்களைவிட்டு ஓய்ந்திருப்பான்,” (1 பேதுரு 4:2) என்று பேதுரு எழுதுகிறார்.
வேறு சில சமயங்களில் நம் கட்டமைப்பில் சில மாற்றங்களைச் செய்வதற்காக நம்மை உபத்திரவத்தின் பாதையில் நடத்துவார். இது அடிக்கடி நடைபெறுகிற ஒன்று. பாவத்தை நானே கண்டுபிடித்துவிடுவேன். அதை மற்றவர்கள் சொல்லவேண்டிய தேவையிருக்காது. ஆனால், என் கட்டமைப்பில், என் உள்ளான கட்டமைப்பில், ஒரு குறைபாடு இருக்கிறது. அது என்னுடைய கண்களுக்கும் தென்படாது. மற்றவர்களுடைய கண்களுக்கும் புலப்படாது. என்னால் மற்றவர்களுக்குத் தொந்தரவு உண்டாகும். ஆனால், ஏன் தொந்தரவு உண்டாகிறது என்று மற்றவர்களுக்குப் புலப்படாது. சில சமயம் புலப்பட்டாலும், அதைச் சுட்டிக்காட்டுகின்ற தைரியம், துணிவு, யாருக்கும் வராது. நம்முடைய உள்ளான கட்டமைப்பின் குறைபாடுகளை, நுணுக்கமான குறைபாடுகளை, தொடுவதற்காகவும் தேவன் நம்முடைய வாழ்க்கையில் உபத்திரவங்களை அனுமதிப்பார். ஆனால், “ஆண்டவரே, நீர் என்னிடத்தில் என்ன காண்பிக்க விரும்புகிறீர்?” என்று தேவனுக்குமுன்பாக நாம் நம்மைத் திறந்துவைத்திருக்க வேண்டும். போதுமான அளவுக்கு நாம் தேவனிடத்தில் நம்மைத் திறந்துவைத்தபிறகு, தொடர்ந்து அதிலேயே நாம் தாபரிக்கக் கூடாது.
மூன்றாவது தேவன் என்ன செய்ய விரும்புகிறார் என்றால் என்னுடைய குணத்தை ஒரு திடமான குணமாக மாற்ற விரும்புகிறார். அதற்கும் பாவத்திற்கும் தொடர்பு இல்லை. தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் தேவனுடைய குமாரர்களாக, அவருக்குப் பயன்படுகிறவர்களாக, மாற வேண்டும் என்றால் நம்முடைய குணம் திடமான குணமாக இருக்க வேண்டும்.
இயேசு மரணச் சூழ்நிலையை ஆயிரம்முறை சந்திக்கிறார். “நாங்கள் மடிந்துபோகிறோம்,” என்று அவருடைய சீடர்கள் கதறுகிறார்கள். பற்பல மரணச்சூழ்நிலைவழியாகப் போகிறார்கள். கடைசி மரணச் சூழ்நிலை கெத்செமனே. சாத்தான் வந்து அவருடைய காதுகளில் பேசியிருப்பான். “ஓ! நீர் மரிக்கவா போகிறீர்? எவ்வளவு பெரிய துன்பமாக இருக்கும்! ஒருவேளை மரணத்தோடு உம் கதை முடிந்துவிட்டதென்றால்?” ஆண்டவர் சொல்லுகிறார். “என் மாம்சமும் நம்பிக்கையோடு தங்கியிருக்கும். என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர். உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்” (சங். 16:9-10).
எனவே, பாவங்கள் அல்லது நம் கட்டமைப்பின் குறைபாடுகள் என்ற இரண்டும்தான் நம்முடைய உபத்திரவங்களுக்கு, நாம் போகிற பாதைக்குக் காரணம் இல்லை. திடமான குணம் நம்மில் உருவாக வேண்டும் என்பதற்காகவும் தேவன் நம்மை அந்தப் பாதையில் நடத்துகிறார்.
திடமான குணத்தின் மிக முக்கியமான அம்சம் என்ன? மனிதர்களிடத்தில் நாம் நம்பிக்கையாக இருப்பது. சூழ்நிலைகளைக்குறித்து நாம் நம்பிக்கையாயிருப்பது. நம்பிக்கையற்ற பல மக்களை நாம் சந்திப்போம். ஒரு தோல்வியைப் பார்த்தவுடன் அவர்கள் நம்பிக்கையெல்லாம் அற்றுப்போகிறது. ஒரு கடனைப் பார்த்தவுடன் அவர்கள் நம்பிக்கையெல்லாம் போய்விடுகிறது. மனிதர்கள் எவ்வளவு எளிதில் தங்கள் நம்பிக்கையை இழந்துவிடுகிறார்கள் தெரியுமா? ஒரு எலும்புமுறிவில் அவர்களுடைய நம்பிக்கை போய்விடுகிறது. சிலர் அதனால் தங்கள் வாழ்க்கையைக்கூட முடித்துக்கொள்கிறார்கள். அது சாத்தானுடைய வேலை. நம் தேவன் நம்பிக்கையின் தேவன். அவர் நம்மை சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் நிரப்புவாராக.
எனவே, நாம் நம்மைக்குறித்து நம்பிக்கையுடையவர்களாக இருக்க வேண்டும். தேவனுடைய மற்ற பிள்ளைகளைக்குறித்து நம்பிக்கையுடைவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் கடந்துபோகிற பாதையைக்குறித்தும் நம்பிக்கையுடைவர்களாக இருக்க வேண்டும். தேவனுடைய குணம் “தேவன் இப்படிச் செய்வார்; அல்லது இப்படிச் செய்ய மாட்டார்” என்று உறுதியாகத் தெரிந்திருந்தால் அதிலே நாம் நம்பிக்கையுடைவர்களாக இருக்க வேண்டும்.
விசுவாசத்திற்கும் நம்பிக்கைக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை நான் சொல்லவில்லை. விசுவாசம் என்பது தேவன் செய்துமுடித்த உண்மைகளின்மேல் வைப்பது. நம்பிக்கை என்பது தேவன் செய்யப் போகிறவைகளின்மேல் வைப்பது. எனவே, விசுவாசமும் நம்பிக்கையும் நெருங்கின தொடர்புடையவை. ஆயினும் இரண்டுக்கும் ஒரு நுட்பமான வேறுபாடு உண்டு.
எனவே, நாம் நம்பிக்கையின் தேவன்மேல் விசுவாசம் வைப்போமாக, ஆமென்.