Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்

Transcribed and edited for clarity from a message spoken in May 2014 in Chennai

By Milton Rajendram

கிறிஸ்துவே மையம்

“…கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்” (கொலோ. 3:11). “நாம் ஆரம்பத்தில் கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்” (எபி. 3;:14).

கிறிஸ்துவே எல்லாருக்கும் எல்லாமுமாயிருக்கிறார். கிறிஸ்து எல்லாமுமாயிருக்கிறார் என்பது புதிய ஏற்பாட்டில் பரிசுத்தவான்கள் கண்டுபிடித்த ஒரு மாபெரும் உண்மை. இது ஒரு மாபெரும் உண்மை மட்டும் அல்ல, இதுவே மைய உண்மை என்றும் நாம் சொல்லலாம். மற்ற எல்லா உண்மைகளும் இந்த மைய உண்மையிலிருந்துதான் வருகின்றன. மற்ற எல்லா உண்மைகளும் இந்த மைய உண்மையை நோக்கித்தான் செல்கின்றன. இது ஏறக்குறைய ஒரு சக்கரத்தின் மையம்போன்றது. சக்கரத்தின் எல்லாக் கம்பிகளும் இந்த மையத்திலிருந்துதான் போகின்றன. அதுபோல எல்லாக் கம்பிகளும் இந்த மையத்தை நோக்கித்தான் செல்கின்றன. இதை நாம் மனதில் நன்றாகப் பதித்துக்கொள்ள வேண்டும். கிறிஸ்து எல்லாமுமாயிருக்கிறார்.

மூன்று கோணங்கள்

கிறிஸ்து எல்லாமுமாயிருக்கிறார் என்பதைப் புதிய ஏற்பாட்டிலிருந்து நாம் பல கோணங்களில் பார்க்கலாம். ஆனால், அதை நான் மூன்று குறிப்புகளாகச் சுருக்கிச் சொல்லுகிறேன். 1. முதலாவது, கிறிஸ்து போதுமானவர் அல்லது கிறிஸ்து நம் இளைப்பாறுதல். 2. இரண்டாவது, கிறிஸ்துவுக்குரிய முதன்மையான இடம். 3. மூன்றாவது, கிறிஸ்துவை ஆதாயம்பண்ணிக்கொள்ளுதல்.

1. கிறிஸ்து நம் இளைப்பாறுதல்

“ஆகையால் தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாயிருக்கிறது. ஏனெனில், அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான்” (எபி. 4:9, 10). கிறிஸ்து நம் இளைப்பாறுதல் மட்டும் அல்ல. கிறிஸ்து தேவனுடைய இளைப்பாறுதல் என்றும் நாம் சொல்லலாம். கிறிஸ்து தேவனுடைய இளைப்பாறுதல். கிறிஸ்து நம்முடைய இளைப்பாறுதல். ‘இளைப்பாறுதல்’ என்ற இந்த வார்த்தையின் பொருள் என்னவென்பதை நாம் புரிந்துகொள்ள முயற்சிசெய்ய வேண்டும். கிறிஸ்து தேவனுடைய இளைப்பாறுதல், கிறிஸ்து நம் இளைப்பாறுதல் என்று எபிரெயா; 3, 4ஆம் அதிகாரங்கள் சொல்லுகின்றன. கிறிஸ்து நம் இளைப்பாறுதல், கிறிஸ்து தேவனுடைய இளைப்பாறுதல்.

2. கிறிஸ்து எல்லாவற்றிலும் முதன்மையானவர்

இரண்டாவது, கிறிஸ்துவுக்குரிய இடம். “அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்” (கொலோ. 1:18). எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி என்றால் எல்லாவற்றிலும் அவருக்கே முதன்மையான இடம் இருக்கும்படி என்று பொருள். இந்த முழுப் பிரபஞ்சத்திலும், சபையிலும், தேவனுடைய மக்களுடைய வாழ்விலும் கிறிஸ்துவுக்குரிய இடம் முதன்மையான இடம் என்று நாம் வாசிக்கிறோம். இந்தக் காலகட்டம் அல்லது இந்த யுகம் முடிவுக்கு வரும்போது கிறிஸ்து அவருக்குரிய இடமாகிய முதன்மையான இடத்துக்கு வந்திருப்பார்.

முதலாவது, கிறிஸ்து தேவனுடைய இளைப்பாறுதல். இரண்டாவது, கிறிஸ்துவுக்குரிய முதன்மையான இடம். மூன்றாவது, கிறிஸ்துவை ஆதாயம்பண்ணிக்கொள்ளுதல்.

3. கிறிஸ்துவை ஆதாயம்பண்ணிக்கொள்ளுதல்

“ஆகிலும் எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன். அது மாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கும், நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்வைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய்த் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும்…” (பிலி. 3:7-9). பவுல் இந்த வசனங்களில் கிறிஸ்துவை ஆதாயம்பண்ணிக்கொள்ளுவதைப்பற்றிப் பேசுகிறார்.

கிறிஸ்து எல்லாமுமாயிருக்கிறார். அதை மனதில் பதித்துக்கொள்வதற்காக மூன்று குறிப்புகளாகச் சொன்னேன். கிறிஸ்து நம் இளைப்பாறுதல். கிறிஸ்துவுக்குரிய முதன்மையான இடம். கிறிஸ்துவை ஆதாயம்பண்ணிக்கொள்ளுதல். இப்போது நான் சொல்லப்போவதெல்லாம் இதற்கு விளக்கங்கள் போன்றதுதான்.

இரண்டு அற்றங்கள்

இரண்டு அற்றங்களுக்கு நாம் போகிற வாய்ப்புண்டு. ஒன்று நிறையப் பேசுவது, நிறைய படிப்பது, நிறைய விளக்குவது, நிறைய பொருள்விளக்கம் தருவது. புத்தகங்கள், செய்திகள், ஆகியவைகளை நம்பி வாழ்வது. இது ஓர் அற்றம். ஏறக்குறைய தேவனுடைய மக்களுடைய பேசுதல் என்பது புறவினத்தார் கொடுக்கிற கதாகாலசேபம்போல் ஆகிவிடுகிறது. அரைமணி நேரம் அல்லது ஒருமணி நேரம் இலக்கிய வட்டாரங்களிலே பேசுவதுபோல மிகவும் சுவையாக அல்லது சுவாரஸ்யமாகப் பேசுவது. இதனால் தேவனுக்கோ, தேவனுடைய மக்களுக்கோ எந்தப் பயனும் இல்லை. வாராவாரம் அப்படிப்பட்ட ஒரு பிரசங்கம் கேட்பதினாலே தேவனுடைய மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அது ஓர் அற்றம்.

இன்னொரு அற்றம், நாம் எப்போதும் நம் அனுதின வாழ்க்கையையே நினைத்துக்கொண்டிருப்பது. நம் வாழ்க்கைப் பாதையிலே எவ்வளவோ சுமைகளும், அழுத்தங்களும். நெருக்கங்களும், வருத்தங்களும், இழப்புகளும், இயலாமைகளும், இருக்கின்றன. அது நமக்குப் பெரிய துன்பத்தையும், வருத்தத்தையும், வேதனையையும் தருகிறது. ‘இவைகளுக்கு என்ன விடை? இவைகளுக்கு என்ன தீர்வு? இவைகளுக்கு என்ன பதில்? இவைகளுக்கு என்ன விடுதலை?’ என்ற கண்ணோட்டத்தோடேயே தேவனிடமும், தேவனுடைய வார்த்தையிடமும், தேவனுடைய மக்களுடைய ஐக்கியத்துக்கும் வருவது. இரண்டு அற்றங்கள். ‘என்னுடைய வாழ்க்கையில் நிலைமை இப்படி இருக்கிறது. இதற்குத் தீர்வு என்ன? பதில் என்ன? விடுதலை என்ன? இதிலிருந்து முன்னேறிச்செல்வதற்கு வழி என்ன?’ இதைச் சுற்றியே நம் எண்ணமும், சொல்லும், செயலும், நம் முழு வாழ்க்கையும் வந்து கொண்டிருக்கிறது. இது ஓர் அற்றம். இன்னொரு அற்றம், வாழ்க்கையோடு எந்தத் தொடர்பும் இல்லாத ஆராய்ச்சி. ஆதியாகமம்முதல் திருவெளிப்பாடுவரை ஆராய்ச்சி. இப்படி ஓர் ஆராய்ச்சி. அப்படி ஓர் ஆராய்ச்சி. இதை எப்படி சுவையாகச் சொல்வது. அதை எப்படி சுவாரஸ்யமாகச் சொல்வது. இப்படி வாழ்க்கை முழுவதும் பெரிய ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பது. தேவனுடைய மக்களாகிய நாம் இந்த இரண்டு அற்றங்களையும் தவிர்க்கவேண்டும்.

பரிசுத்த ஆவியினால் போதிக்கப்படுவது அல்லது பரிசுத்த ஆவியினால் போதிக்கப்பட்ட தேவனுடைய மக்களிடமிருந்து நாம் உதவிபெறுகிறது என்ற ஒன்று உண்டு. எனவே, நாம் அறவே வாசிக்கவோ அல்லது கேட்கவோ மாட்டோம் என்பதல்ல. நமக்குமுன்பாகத் தேவனுடைய மக்கள் ஆண்டவரைப் பின்பற்றி நடந்திருக்கிறார்கள், வாழ்ந்திருக்கிறார்கள். நாம் ஆண்டவராகிய இயேசுவைப் பின்பற்றுவது எப்படி என்று நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அப்படிக் கற்றுக்கொள்ளும்போது அவர்கள் செய்த தவறுகளை நாம் தவிர்க்கலாம். அவர்கள் பெற்ற வெற்றிகளை நாம் பெறலாம். அவர்கள் 100 ஆண்டுகள் செலவழித்து கற்றுக்கொண்ட பாடங்களைக் கற்றுக்கொள்ள நாமும் ஏன் 100 ஆண்டுகள் செலவழிக்க வேண்டும்? அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்.

இன்னொரு பக்கம், நாம் தேவனை அலாவுதீனின் அற்புத விளக்கைப்போல் பார்க்கக்கூடாது. புறவினத்தார் கடவுளைப்பற்றி வைத்திருக்கிற கற்பனை இதுதான். கடவுள் எதற்காக இருக்கிறார் என்றால் நம் துன்பங்களையெல்லாம் தீர்ப்பதற்காக, துடைப்பதற்காக இருக்கிறார். ஒரு மனிதன் ஒன்றிரண்டு பேருடைய பிரச்சினையை தீர்த்துவிட்டால் அவன் ஒரு குருவின் ஸ்தானத்தை அடைந்துவிடுவான். பிறகு பிரச்சினையிலுள்ள மக்கள் விளம்பரங்கள்வழியாக அந்தக் குருவைத் தேடிப்போவார்கள். பின்பு சாரைசாரையாகக் கார்கள் செல்லும். “அவர் என்னுடைய இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவைத்த குரு. எனவே, உங்களுக்கும் அந்தப் பிரச்சினை இருந்தால் அவரைத் தேடிப் போங்கள்,” என்று மக்கள் சொல்வார்கள்..

ஆனால், இன்னொரு பக்கம், தேவன் நம்முடைய வாழ்க்கையோடு தொடர்புகொண்டுதான், வாழ்க்கை யோடு பின்னிப்பிணைந்துதான் கிறிஸ்துவை நமக்கு எல்லாமுமாக மாற்றுகிறார். வாழ்க்கை இல்லாமல் தேவன் கிறிஸ்துவை நமக்கு எல்லாமுமாக மாற்றுவதில்லை. எனவே, நம் வாழ்க்கையின் நிலைமையைப்பற்றி, சூழ்நிலையைப்பற்றி, நம்முடைய பாதையைப்பற்றி, நம்முடைய வழியைப்பற்றி, தேவன் மிகவும் கரிசனை உள்ளவராயிருக்கிறார்.

அறிவும் அனுபவமும்

இரண்டு அற்றங்களுக்கு நாம் போகக்கூடாது. அறிவைத் தேடுவது அல்லது அனுபவத்தைத் தேடுவது. ஒரு பக்கம் நாம் தேவனுடைய மக்களிடமிருந்து அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதுபோல இன்னொரு பக்கம், நம் வாழ்க்கையின் அனுபவத்தில் தேவன் மிகவும் ஆர்வமுள்ளவராயிருக்கிறார். இன்னும் சொல்லப்போனால், முதலாவது தேவன் நமக்கு ஒன்றைக் கற்றுத்தருவதற்குமுன்பு நம் வாழ்க்கையில் ஒரு நிலைமைக்கு நம்மைக் கொண்டுவருவார். நம் வாழ்க்கையில் ஒரு சூழ்நிலையை அவர் உண்டாக்குவார். ஒரு நிலையையும். ஒரு சூழ்நிலையையும் நம் வாழ்க்கையில் உண்டாக்கியபிறகுதான் பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவுக்குரிய ஒன்றை நமக்குக் கற்றுத்தர முடியும். நம்முடைய வாழ்க்கையில் ஒரு நிலையையும், ஒரு சூழ்நிலையையும் உண்டாக்காமல் பரிசுத்த ஆவியானவர் நமக்கு ஒன்றையும் கற்றுத்தர முடியாது. எனவே. நம் வாழ்க்கையில் நாம் ஒரு நிலைமைக்கும், ஒரு சூழ்நிலைக்கும் வரும்போது அதில் நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். ஏனென்றால், கிறிஸ்துவுக்குரிய அருமையான ஒன்றைத் தேவன் நமக்குக் கற்றுக்கொடுப்பதற்காக நம்மை அந்த நிலைமைக்குக் கொண்டுவருகிறார். தேவன் நம்மை அந்த நிலைமைக்குள், சூழ்நிலைக்குள் கொண்டு வந்திருக்கிறார் என்பது எதைக் காட்டுகிறது என்றால் தேவன் கிறிஸ்துவுக்குரிய ஒன்றைக் கற்றுக்கொடுப்பதற்காகக் கொண்டுவந்திருக்கிறார். அது தேவனுடைய எண்ணம். தேவனுடைய விருப்பம், தேவனுடைய நோக்கம் என்பதை அது நமக்குக் காட்டுகிறது. இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். “இந்த நிலையில், இந்தச் சூழ்நிலையில் நான் இதுவரை காணாத, இதுவரைக் கேட்காத, இதுவரை அறியாத விதத்தில் கிறிஸ்துவை எப்படி அறியப்போகிறேன், கேட்கப்போகிறேன், காணப்போகிறேன்,” என்பது நமக்குப் பரவசமாகக்கூட இருக்க வேண்டும்.

எல்லாருக்கும் எல்லாமுமாயிருக்கிறார்

“கிறிஸ்து எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்,”என்று கொலோசெயர் 3:11இல் நாம் வாசித்தோம். அவர் எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார். இந்த “எல்லாரும்” யார் என்று அங்கு ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. அவர் யூதருக்கு மட்டுமல்ல, கிரேக்கர்களுக்கும் எல்லாமுமாயிருக்கிறார். சுயாதீனர்களுக்கு மட்டுமல்ல, அடிமைகளுக்கும் எல்லாமுமாயிருக்கிறார். ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் எல்லாமுமாயிருக்கிறார். பண்பாடு உள்ளவா;களுக்கு மட்டுமல்ல, பண்பாடு அற்றவர்களுக்கும் எல்லாமுமாயிருக்கிறார். இது மிகவும் ஆச்சரியமாயிருக்கிறது. கிறிஸ்து படித்தவர்களுக்கும், பண்பாடு உள்ளவர்களுக்குத்தான் எல்லாமுமாயிருக்க முடியும் என்பதல்ல. மக்களுடைய பின்புலத்தைப்பற்றி அவருக்கு எந்தக் கவலையும் இல்லை. படிக்காதவர்களுக்கும், பண்பாடு இல்லாதவர்களுக்கும், எல்லாவித மக்களுக்கும் அந்த எல்லா மக்களுக்கும், எல்லா நிலைமைக்கும், எல்லா சூழ்நிலைக்கும், அவர் எல்லாமுமாயிருக்கிறார்.

##1. கிறிஸ்து நம் இளைப்பாறுதல் முதலாவது கிறிஸ்து தேவனுடைய இளைப்பாறுதல் அல்லது கிறிஸ்து நம்முடைய இளைப்பாறுதல். எபிரெயர் 3. 4 ஆம் அதிகாரங்களை வாசித்துப்பாருங்கள். எல்லா மனிதர்களும் ஓய்வைத் தேடுகிறார்கள். ஒரு நாளின் முடிவில் மக்கள் இளைப்பாறுதலைத் தேடுகிறார்கள். இளைப்பாறுதலைத் தேடி சிலர் மதுபானக் கடைகளுக்குப் போகிறார்கள். அந்த நாளின் முடிவில் மதுபானம் குடித்தபின் தங்களுக்கு இளைப்பாறுதல் கிடைப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். அல்லது பெரிய நிறுவனங்களில் வேலைபார்ப்பவர்கள் வாரக் கடைசியில் சனிக்கிழமைகளில் கூட்டமாக விருந்துக்குப் போகிறார்கள். அது இளைப்பாறுதல் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இவ்வாறு மனிதர்கள் இளைப் பாறுதலைத் தேடுகிறார்கள். அது அவர்களை இயக்குகிறது, நெருக்குகிறது, உந்தித்தள்ளுகிறது. எல்லா மனிதர்களும் இளைப்பாறுதலைத் தேடுகிறார்கள். ஒரு நாளின் முடிவில், ஒரு வாரத்தின் முடிவில், ஒரு மாதத்தின் முடிவில், ஒரு வருடத்தின் முடிவில் அல்லது நம் வாழ்க்கையின் முடிவில் நமக்கு இளைப்பாறுதல் அல்லது ஓய்வு தேவை. அந்த நாளை முடிக்கும்போது நாம் இளைப்பாறுதல் அற்றவர்களாகத் தூங்கப் போகக்கூடாது. சிலர் அலுவலகத்தைவிட்டு வந்தவுடன் தட்டில் சோற்றைப்போட்டுக்கொண்டு தொலைக்காட்சிப்பெட்டிக்குமுன் உட்கார்ந்துவிடுவார்கள். அது அவர்களுக்குப் பெரிய இளைப்பாறுதல். தொலைக்காட்சிப் பெட்டிக்குமுன்னால் உட்கார்ந்து அதில் வரும் விளம்பரங்களையும், செய்திகளையும் கேட்டால்தான் அவர்களுக்குக் கலகலப்பாக இருக்கும். அப்போதுதான் அவர்கள் வீட்டில் ஒரு உயிரோட்டமே இருக்கும். அதைக் கேட்டால்தான் அவர்களுடைய சாயங்காலம் நிறைவடைகிறது. குடிகாரன் குடியை நிறுத்தியவுடன் அவன் கைகால்கள் உறத ஆரம்பிப்பதுபோல் தொலைக்காட்சிப்பெட்டிக்குமுன் உட்கார்ந்து எதையாவது கேட்கவில்லையென்றால் அவர்களுக்கு உதறல் எடுத்துவிடுகிறது. என்னுடைய மாபெரும் தரிசனம் தொலைக்காட்சியை எதிர்ப்பதுதான் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம்! இதை நான் ஓர் எடுத்துக்காட்டாகச் சொன்னேன்.

மனிதர்களுக்கு இளைப்பாறுதல் வேண்டும். “திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான்,” (நீதி. 27:7). இந்த வசனத்தைப்பற்றி நான் சிந்தித்துப் பார்ப்பதுண்டு. இவர்களுடைய டிவி, சினிமா, மதுபானம், வாரக் கடைசி விருந்துகள் போன்றவைகளெல்லாம் தேன்கூடுகள். ஆனால், உண்மையிலேயே கிறிஸ்துவில் திருப்தியடைந்தவன் தேன்கூடுகளை மிதிப்பான். வேண்டுமென்றுபோய் மிதிப்பதல்ல. உண்மையிலேயே மனதின் ஆழத்திலிருந்து, “இந்தத் தேன்கூட்டில் ஒன்றும் இல்லை,” என்று அவன் அறிக்கைசெய்வான்.

கிறிஸ்து போதுமானவர்

“இயேசு கிறிஸ்துவில் எனக்குப் போதுமான அளவுக்கு எல்லாம் இருக்கிறது. நான் போதுமான அளவுக்குத் திருப்தியாயிருக்கிறேன். எனக்குத் திருப்தியைத் தருவதற்கு இன்னொன்று அவசியம் இல்லை,” என்கிற நிலைமைக்கு ஒருவன் வரும்போதுதான் அவனால் தேன்கூட்டை மிதிக்க முடியும். அப்போதுதான் அவன் இளைப்பாறுதலோடு இருக்கிறான் என்று பொருள். இயேசு கிறிஸ்து போதுமானவர், திருப்தியானவர் என்பதற்கு புதிய ஏற்பாடு முழுவதும் போதுமான அளவுக்குக் காரியங்கள் இருக்கின்றன. பிதாவாகிய தேவன் இந்தப் பூமியிலே அல்லது இந்தப் பிரபஞ்சத்திலே ஒன்றேவொன்றைப் பார்த்துத்தான் திருப்தியடைகிறார். அவருடைய குமாரனாகிய கிறிஸ்துவைப் பார்த்து, “இவர் என் அன்பின் குமாரன். இவரில் நான் திருப்தியடைகிறேன். இவரில் நான் பூரிப்படைகிறேன். இவரில் நான் பிரியமாயிருக்கிறேன். இவரில் நான் மகிழ்கிறேன். இவரில் நான் களிகூருகிறேன்.” நீங்கள் இதை எப்படி மொழிபெயர்த்தாலும் சரி. “இவரில் நான் திருப்தியடைகிறேன்.” ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பார்க்கும்போது பிதாவின் இருதயம் திருப்தியடைகிறது.

இயேசு கிறிஸ்து அல்பாவும் ஓமெகாவுமாக இருக்கிறார். அவர் முதலும் கடைசியுமாக இருக்கிறார். அவர் தொடக்கமும் முடிவுமாக இருக்கிறார் (வெளி. 1:8). “அவருக்குள் ஞானம், அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது” (கொலோ. 2:3). “தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது” (கொலோ. 2:9). “அவரே தேவனால் நமக்கு ஞானமும், நீதியும், பரிசுத்தமும், மீட்புமானார்” (1 கொரி. 1:31). இவைகளெல்லாம் மிகவும் முக்கியமான வசனங்கள். கிறிஸ்துவுக்கு வெளியே நாம் மகிழத்தக்க, இன்புறத்தக்க, திருப்தியடையத்தக்க எதுவுமே இல்லை. இதன் பொருள் என்னவென்று தோன்றலாம். நான் மகிழ்வதற்கு, இளைப்பாறுவதற்கு, திருப்தியாவதற்கு, இன்புறுவதற்கு, ஓய்வுறுவதற்குத் தேவையான அனைத்தும் கிறிஸ்துவுக்குள் இருக்கிறது. எனக்கு ஏதொவொன்று குறைவுபடுகிறது என்றால் அதை நான் வேறு எங்கோபோய்த் தேடவேண்டிய அவசியம் இல்லை. அப்படிப்பட்ட தேட்டம் வெறுமையிலும், மாயையிலும், சூன்யத்திலும் முடிவடையும். இதுதான் அதன் பொருள்.

“திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான்; பசியுள்ளவனுக்கோ கசப்பான பதார்த்தங்களும் தித்திப்பாயிருக்கும்” (நீதி. 27:7). முதல் பகுதி ஆவிக்குரியவனைப்பற்றியும் அதன் பின்பகுதி உலகத்து மனிதனைப்பற்றியும் பேசுகிறது. இதை மனதில் வைத்துத்தான் சாலொமோன் எழுதினாரா என்று எனக்குத் தெரியாது. ஆனால், பல சமயங்களில் ஒரு தீர்க்கதரிசி தான் எழுதுகிற எல்லாவற்றின் முழுப் பரிமாணங்களையும் அறிந்துதான் எழுத வேண்டும் என்ற அவசியம் இல்லை. தங்களுக்கு ஆவியானவர் வெளிப்படுத்தியதை அவர்கள் எழுதினார்கள். ஆனால், அவர்கள் எழுதியதின் முழுப் பரிமாணம் இன்றைக்கு நமக்கு விளங்குகிறது.

கிறிஸ்து போதுமானவர் என்பதற்கு என்ன நிரூபணம்? கிறிஸ்து போதுமானவர் என்றால் நாம் பல்வேறு எண்ணங்களுக்கும், செயல்களுக்கும் இடங்கொடுக்க மாட்டோம். நம்முடைய வாழ்வின் முடிவுக்கு நாம் வரும்போது நம்முடைய நித்தியத்துக்கு கிறிஸ்து போதுமானவரா? “தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும், இதற்குப்பின் வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது” (1 தீமோ. 4:8) என்று பவுல் கூறுகிறார். இந்த வாழ்க்கைக்கும், இனி வரும் வாழ்க்கைக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் அது பிரயோஜனமுள்ளது. இந்த வாழ்க்கைக்கும் இனிவரும் வாழ்க்கைக்கும் கிறிஸ்து போதுமானவர்.

என் கண்கள் மூடும்போது நான் திருப்தியோடு, நம்பிக்கையோடு மூடுவேன் என்று நான் உறுதியாக நம்புகிறேன். பலர் தங்கள் கண்களை மூடும்போது திருப்தியோடு, நம்பிக்கையோடு மூடமாட்டார்கள். அவர்களை அச்சம் சூழ்ந்துகொள்ளும். தத்துவம் பேசினவர்கள், இந்த உலகத்தில் ஏதோவொன்றை அருமையும் பெருமையுமாய்க் கருதினவர்கள், இந்த உலகத்தைவிட்டு அவர்கள் உயிர் பிரிந்துபோகும்போது அச்சத்தோடு அவர்கள் பிரவேசிப்பார்கள். அச்சம், கிலி, நடுக்கம் அவர்களைப் பிடித்துக்கொள்ளும். ஆனால், தேவனுடைய மக்கள் அப்படிப் போவதில்லை. “சமாதானத்தோடு படுத்து நித்திரைசெய்வேன்” “என் மாம்சமும் நம்பிக்கையோடு தங்கியிருக்கும்” (சங் 16:9). நம்முடைய புலன்களெல்லாம் ஒடுங்கிப்போகும்போது, “இதுவரை நான் வாழ்ந்த வாழ்க்கையைப் பார்க்கும்போது, இனிவரும் வாழ்க்கையில் உண்மையிலேயே நான் பரலோகத்தில் இருப்பேனா அல்லது யாரிடமாவது மரித்த ஆத்துமாக்களுக்காகத் திருப்பலி செய்யச்சொல்லிவிட்டுப் போக வேண்டுமா? ஆண்டவரே என்னுடைய ஆத்துமாவை உத்திரிக்கிற ஸ்தலத்தில் நீண்ட நாட்கள் கஷ்டப்பட விட்டுவிடாதேயும். சீக்கிரமாகப் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளும். இதற்காக நான் எதையாவது இந்தப் பூமியில் விட்டுச்செல்கிறேன்.” இப்படிச் செய்வது எதைக் காட்டுகிறது என்றால் கிறிஸ்துவில் அவர்களுக்கு இளைப்பாறுதல் இல்லை என்பதைக் காட்டுகிறது. இளைப்பாறுதல் உள்ளவன்தான் “உத்திரிக்கிற ஸ்தலத்துக்குப் போய்விடுவேனோ அல்லது நரகத்துக்குப் போய்விடுவேனோ? வருடத் திற்கு ஒருமுறையாவது தனக்காகத் திருப்பலி நிறைவேற்றி அல்லது நவம்பர் 2ஆம் தேதி கல்லறைத் திருவிழா அன்றைக்கு தன்னை நினைவுகூர்ந்து பரலோகத்துக்கு அனுப்பிவிட வேண்டும்” என்று நினைக்க மாட்டான்.

நம்முடைய நித்தியம் இயேசு கிறிஸ்துவுக்குள் காப்புறுதி செய்யப்பட்டிருக்கிறது. “என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது. தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார்” (சங். 73:26). அப்படியானால் என்ன பொருள்? நம்முடைய மனம் மங்கிப் போகலாம். நம்முடைய இருதயம் ஒடுங்கிப்போகலாம். நம்முடைய உடல் ஒன்றுமில்லாமல் போய்விடலாம். ஆனாலும், நாம் நம் ஆவியிலே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின்மேல் துடிப்பும், பற்றுறுதியும் உள்ளவர்களாக இருப்போம். இதை எப்படி நிரூபிப்பது? நிரூபிப்பதற்குக் காலதாமதம் ஆகலாம். எனவே, இப்பொழுதே விசுவாசிப்பது நல்லது.

இயேசு கிறிஸ்து போதுமானவரா? இயேசு கிறிஸ்து உங்கள் இளைப்பாறுதலா? தேவனே அவரில் இளைப்பாறுதல் அடைகிறார், திருப்தியடைகிறார். நீங்கள் இளைப்பாறுதலும் திருப்தியும் அடைகிறீர்களா? அவருக்கு வெளியே எதுவும் தேவையில்லை.

##2. கிறிஸ்துவுக்குரிய முதன்மையான இடம் இரண்டாவது, கிறிஸ்துவுக்குரிய முதன்மையான இடம். வாழ்வின் எல்லா நிலைகளிலும் தேவன் ஒன்றேவொன்றைத்தான் செய்கிறார். கிறிஸ்துவை அவருக்கு இடமாகிய முதன்மையான இடத்துக்குக் கொண்டுவருவதே அவருடைய நோக்கம். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவோடு நமக்கு ஓர் உறவு இருக்கிறது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நாம் என்றைக்கு விசுவாசித்தோமோ அன்றைக்கு அவரோடு நமக்கு ஓர் உறவு ஏற்பட்டுவிட்டது. இந்த உறவு பிரிக்கமுடியாத உறவு. நாம் பாடுவதுபோல “கொடியோடு இணைந்துள்ள கிளைபோலவே” என்பது அற்புதமான பாட்டு. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோடு நமக்கு ஓர் உறவு இருக்கிறது. ஆனால், அந்த உறவு நம் வாழ்நாள் முழுவதும் சரிசெய்யப்படுகிறது. அவருக்குரிய இடமாகிய மையமான, முதன்மையான இடத்திற்கு நாம் அவரை அவ்வளவு எளிதில் கொண்டுவருவதில்லை. உறவு இருக்கிறது. ஆனால் அந்த உறவில் அவருக்கு முதன்மையான இடம் இல்லை. மையமான இடம் இல்லை. “நீரே என் வாழ்வின் மையம்” என்று சொல்லும்போது இயேசு கிறிஸ்து இன்றைக்கு என் வாழ்க்கையின் மையமாக இருக்கிறார் என்பது பொருள் அல்ல. அது என் இருதயத்தின் ஏக்கத்தையும் வாஞ்சையையும் காட்டுகிறது, “ஆண்டவரே, நீர் என் வாழ்க்கையின் மையமாக இருக்க வேண்டும். நீர்தான் மையம். ஆனால் நீர் அந்த மைய இடத்துக்கு வரவேண்டும்,” என்று நாம் அறிக்கைசெய்கிறோம். கொலோசெயா; 3:11இல் கிறிஸ்து மையத்திற்கு வந்துவிட்டார் என்று சொல்லவில்லை. எல்லாக் காரியங்களிலும் அவர் முதன்மையான இடத்திற்கு வருமாறு தேவன் அவரை இப்படி மாற்றியிருக்கிறார் என்று அந்த வசனம் சொல்லுகிறது. கிறிஸ்து நம்முடைய வாழ்க்கையின் முதன்மையான, மையமான இடத்திற்கு வரும்போது மற்ற எல்லாக் காரியங்களும், நபர்களும் அதினதின் இடத்தில் பொருந்தும் என்று 17 ஆவது வசனம் சொல்லுகிறது. “எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.”

எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது

எனக்கு சின்ன வயதில் ஒரு பயம் இருந்தது. இந்தப் பூமி அந்தர வெளியில் தொங்கிக்கொண்டிருக்கிறது என்று நான் கற்றுக்கொண்டபோது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஒருவேளை இது விழுந்துவிட்டால் கீழே எங்குபோய் முட்டும்! எங்கும் முட்டவே முட்டாது. அப்படியானால் கீழே போய்க்கொண்டேயிருக்குமா? ஆனால் என்னை ஆறுதல்படுத்தின வசனம் இது: “எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.” ஏனென்றால் இந்த உலகத்தின் எல்லாப் பொருட்களும் சிதறிப்போகாமல் தன் தன் இடத்தில் நோ;த்தியாக, இசைவாக, பொருத்தமாக இருப்பது எந்த விதியினால் தெரியுமா? நியூட்டனின் புவிஈர்ப்பு விதியின்படி அல்ல. நியூட்டனின் விதி வேண்டுமானால் உயிரற்ற பொருட் களை அதினதின் இடத்தில் வைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால், கிறிஸ்துவுக்குள்தான் சகலமும் நிலைநிற்கிறது. கிறிஸ்து உயிரற்ற பொருட்களை மட்டும் அல்ல, உயிருள்ள எல்லாப் பொருட்களையும், நம்முடைய உறவுகள், போக்குவரத்துகள், இடைப்பாடுகள், பரிமாற்றங்கள், வாழ்வின் நிலைமைகள், சூழ்நிலைகள் எல்லாவற்றையும் அதினதின் இடத்திலே பொருத்தமாக நிறுத்துவார். அவருக்குரிய இடத்திற்கு அவர் வரும்போது எல்லாம் சரியாகும்.

பலிபீடம் மற்றும் கூடாரத்தின் வாழ்க்கை

தேவனுடைய மக்களுடைய வாழ்க்கை கூடார வாழ்க்கை, பலிபீடத்தின் வாழ்க்கை என்று நம் விசுவாசத்தின் தகப்பனாகிய ஆபிரகாம் வாழ்ந்து காண்பித்திருக்கிறான். சகோதரன் வாட்ச்மேன் நீ எழுதிய “A life of tent and altar” செய்தியை நீங்கள் வாசிக்க வேண்டும். கூடாரம் மற்றும் பலிபீடத்தின் வாழ்க்கை. தேவனுடைய மக்களுடைய வாழ்க்கை கூடாரத்தின் வாழ்க்கை. தேவனுடைய மக்களுடைய வாழ்க்கை பலிபீடத்தின் வாழ்க்கை. உண்மையிலேயே தேவனை விசுவாசித்து வாழ்கிற வாழ்க்கை என்பது அதுதான். “நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது” (யாக். 1:17). எல்லாவற்றையும் கர்த்தரே தருகிறார். அதற்கு அவர் மனிதர்களை உபாயங்களாகப் பயன்படுத்துகிறார். கர்த்தர் கொடுத்ததை அவர் பலிபீடத்தில் வைக்கச் சொல்ல முடியுமா? அவர் கொடுத்ததைத்தான் பலிபீடத்தில் வைக்கச் சொல்வார். வேறு யாரோ கொடுத்ததை அவர் பலிபீடத்தில் வைக்கச் சொல்லமாட்டார். “ஆண்டவரே, நான் உமக்குரிய இடத்தைக் கொடுத்தால் நீர் என் வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளையும், சூழ்நிலைகளையும், நிலைகளையும், உறவுகளையும், அதினதின் இடத்தில் வைத்துப் பாதுகாத்துக் கொள்வீர்,” என்று விசுவாசிக்கிற அளவுக்குத் தேவன் நம்மைக் கொண்டுவருவார். அப்படிப்பட்ட இடத்தை அவருக்குக் கொடுக்க நாம் ஆயத்தமாயிருக்க வேண்டும்.

அவருக்குரிய இடம் முதன்மையான இடம். “ஆண்டவரே, இந்த இடத்தை நான் உமக்குக் கொடுக்க முடியும், கொடுத்தால் நீர் என் எல்லாக் காரியங்களையும் அதினதின் இடத்தில் வைத்துக்கொள்வீர் என்று நான் நம்புகிறேன்.”

##3. கிறிஸ்துவை ஆதாயம்பண்ணுதல் மூன்றாவது, கிறிஸ்துவை ஆதாயம்பண்ணிக்கொள்வது, துணி துவைப்பது, வீடு பெருக்குவது, கடைக்குப் போவது, பாத்திரம் கழுவுவது போன்ற சில பொறுப்புகளை நினைக்கும்போது “காலையிலிருந்து இரவுவரை இவைகளையே செய்துகொண்டிருக்கிறோமே! இவைகளிலிருந்து ஓய்வு வராதா?” என்று நினைக்கத் தோன்றும். கிறிஸ்துவை ஆதாயம்பண்ணிக்கொள்வது திடுதிப்பென்று ஒரேநாளில் நடக்கிற காரியம் அல்ல. பாத்திரம் கழுவும்போது அல்லது வீடு பெருக்கும்போது நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்? ஊழியம் செய்கிறோம் என்று என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால், ஒன்று சொல்ல முடியும், நாம் கிறிஸ்துவை ஆதாயம்பண்ணிக்கொண்டிருக்கிறோம். 24 மணி நேரமும் நாம் கிறிஸ்துவை ஆதாயம்பண்ணிக்கொண்டிருக்கிறோம். குழம்பு எப்படி செய்கிறோம் என்பதைப்பொறுத்து நாம் கிறிஸ்துவை ஆதாயம்பண்ணலாம் அல்லது ஆதாயம்பண்ணாமலும் போகலாம். பாத்திரம் எப்படித் தேய்க்கிறோம் என்பதைப் பொறுத்து நாம் கிறிஸ்துவை ஆதாயம்பண்ணலாம் அல்லது ஆதாயம் பண்ணாமலும் போகலாம். “இந்தத் துடைப்பம் எப்படி இருக்கிறது பாருங்கள்” என்று முறுமுறுப்போடு நாம் பெருக்கினால் நாம் கிறிஸ்துவை ஆதாயம் பண்ணப்போவதில்லை. சரி. நல்ல துடைப்பம் ஒன்று நாம் வாங்க வேண்டும், ஆனால், இருக்கிற துடைப்பத்தை வைத்து நாம் பெருக்கலாம் என்று சொன்னால் நாம் கிறிஸ்துவை ஆதாயம் பண்ணிக்கொள்கிறோம். கிறிஸ்துவை ஆதாயம் பண்ணாத ஒரு தருணம் நம் வாழ்க்கையில் இல்லை.

இந்த வாழ்க்கையில் ஏதோவொன்று நம் வாழ்க்கையில் குறைவுபடும். இந்த உலகத்தில் இலாபமானவைகள் என்று கருதப்படுகிற பல காரியங்களை கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று கருதிவிட்டு விட்டதாகப் அப்போஸ்தலானாகிய பவுல் பிலிப்பியர் 3ஆம் அதிகாரத்தில் கூறுகிறார். அவர் சொல்லுகிற காரியங்கள் மிக உயர்ந்தவைகள். “நான் எட்டாம் நாளில் விருத்தசேதனமடைந்தவன். இஸ்ரயேல் வம்சத்தான். பென்யமீன் கோத்திரத்தான். நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன். பக்தி வைராக்கியத்தின்படி சபையைத் துன்பப்படுத்தினவன். நியாயப்பிரமாணத்திற்குரிய நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன். ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன். அது மாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்” (பிலி. 3:5-8). இந்த உலகத்தில் மக்கள் பல விஷயங்களை இலாபம் என்று கருதுவார்கள்.

நாம் நினைப்பதுபோல் தேவன் நம் பிரச்சினைகளைத் தீர்ப்பதில்லை. தேவனுக்கு நாம் பிரச்சினைகளையும் கொடுத்து தீர்வையும் கொடுக்க முடியாது. அவர் தருகிற தீர்வை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்படித்தான் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று நாம் தேவனுக்கு ஆலோசனை சொல்பவர்கள் அல்ல. நாம் ஜெபிக்கலாம். அது தவறல்ல. ஆனால், தேவன் அதை இப்படியும் தீர்க்கலாம், அப்படியும் தீர்க்கலாம். இதை நான் அவிசுவாசத்தினால் சொல்லவில்லை. நாம் தேவனுடைய குணத்தைப் பரிசோதிப்பதைவிட அவர் நம் குணத்தைப் பரிசோதிப்பதுதான் அவசியம். கர்த்தர் நமக்குப் போதுமானவர். அவர் ஏற்ற காலத்தில் நமக்கு எல்லா நன்மைகளையும் தருவார். எனவே, நாம் பயப்பட வேண்டாம். “இவன் வீக்கங்கண்டு செத்துப்போவான்,” என்று மக்கள் ஆச்சரியத்தோடு நம்மைப் பார்ப்பார்கள். நாம் இன்னும் உயிரோடு இருக்கிறதைக் கண்டு, “இவன் கடவுள் போன்றவன்” என்று சொல்வார்கள்.

ஒன்று, கிறிஸ்து நம் இளைப்பாறுதல். இரண்டு, கிறிஸ்துவுக்குரிய முதன்மையான இடம். மூன்று, நாம் செய்கிற எல்லா வேலையிலும் நாம் கிறிஸ்துவை ஆதாயம் பண்ணிக்கொள்ளலாம். எல்லாக் காரியங்களிலும். நல்ல உணவு இருக்கலாம், இல்லாமல் போகலாம். நல்ல போக்குவரத்து இருக்கலாம், இல்லாமல் போகலாம். நல்ல வீடு இருக்கலாம், இல்லாமல் போகலாம். உபவாசம் என்று சொல்லுகிறார்கள் அல்லவா? உபவாசம் என்றால் தண்ணீர், உணவு இவைகளை விடவேண்டாம். நல்ல சாப்பாடு இல்லாமல் போகட்டும். உணவைப்பற்றிய எந்தப் புகார் கூறுதலும் இல்லாமல், குறை சொல்லுதலும் இல்லாமல் முறுமுறுப்பும் இல்லாமல் “பழைய குழம்பு புதுக் குழம்பு” என்ற எந்தப் பேச்சும் இல்லாமல் “உப்பு இல்லை, புளி இல்லை, சோறு வெந்தது வேகாதது” என்று எதுவும் சொல்லாமல் சாப்பிட்டால் நாம் கிறிஸ்துவை அதிகமாக ஆதாயம் பண்ணிக்கொள்வோம். இப்படி 21 நாட்கள் செய்து பார்ப்போம். அந்த 21 நாட்களும் நாம் என்ன செய்கிறோம்? நாம் எந்த ஊழியமும் செய்யவில்லை. ஆனால், கண்டிப்பாகக் கிறிஸ்து நமக்குள் பெருகுவார்.

இந்த உலகத்தைப் பொறுத்தவரை உணவு ஒரு ஆதாயம், உடை ஒரு ஆதாயம். உறைவிடம் ஒரு ஆதாயம். வேலை ஒரு ஆதாயம், பணம் ஒரு ஆதாயம். இதுபோன்ற பல காரியங்களை இந்த உலகம் ஆதாயம் என்று கருதுகிறது. அவைகள் ஆதாயம் அல்ல. அருமையான பரிசுத்தவான்களே, உங்கள் வாழ்க்கையின் நிலையைப் பரிசுத்த ஆவியானவர்அறிவார். தேவன் அறிவார். ஆனால், கிறிஸ்து போதுமான, திருப்தியான, நிறைவான தீர்வு என்பதை நீங்கள் விசுவாசியுங்கள். “நான் சொல்லுகிறவைகளைச் சிந்தித்துக்கொள். கர்த்தர் எல்லாக் காரியங்களிலும் உனக்கு புத்தியைத் தந்தருளுவார்” (2 தீமோ. 2:7).