Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

கிறிஸ்துவாகிய இரகசியம்

Transcribed and edited for clarity from a message spoken in December, 2013 in Chennai

By Milton Rajendram

“பிதாவாகிய தேவனின் இரகசியமாகிய கிறிஸ்துவை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாக வேண்டுமென்றே இப்படி விரும்புகிறேன்” (கொலோசெயர் 2:2).

“புறவினத்தார்களுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார். கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்” (கொலோசெயர் 1:27).

“நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கும் இரகசியத்தைக் கற்றுக்கொண்டேன்” (பிலிப்பியர் 4:11).

சபை–தேவனுடைய குடும்பம்

சபை என்பது தேவனுடைய குடும்பம். தேவனுடைய குடும்பத்தில் இருக்கும் தேவனுடைய மக்கள் எப்போதும் நம் இருதயத்தில் இருக்கிறார்கள். நம் பிள்ளைகள் ஒருவேளை வெளியூரில் இருக்கலாம். ஆனாலும், அவர்கள் எப்போதும் நம் இருதயத்தில் இருக்கிறார்கள்; நாம் அவர்களைத் தொடர்புகொண்டு பேசுகிறோம் அல்லது அவர்கள் நம்மைத் தொடர்புகொண்டு பேசுகிறார்கள், காரியங்களை பகிர்ந்துகொள்கிறோம். அவர்களுடைய நிலை, அவர்களுடைய சூழ்நிலை, அவர்கள் கடந்துபோகிற பாதை ஆகியவைகளெல்லாம் நம் இருதயத்தில் இருக்கின்றன. அதுபோல, தேவன் நமக்கு இரங்குகிறபடி எந்த அளவுக்கு நாம் ஒருவரையொருவர் தொடர்புகொள்கிறோமோ, எந்த அளவுக்குக் கூடிவருகிறோமோ, அந்த அளவுக்கு ஒருவரையொருவர் நாம் புரிந்துகொள்கிறோம். இது நல்லது.

ஆனால், ஒரு காலத்திலும் புள்ளிவிவரங்களுக்காக நாம் உறவை நாடக்கூடாது. “நூறுபேருடன், ஆயிரம்பேருடன் அல்லது இரண்டாயிரம்பேருடன் எங்களுக்குத் தொடர்பு இருக்கிறது” என்ற புள்ளி விவரத்துக்காக நாம் கூடிவரக்கூடாது. மிகப் பெரிய போதகராகிய இயேசுவால் பன்னிரெண்டு பேருக்குமேல் பெரிய தொடர்பும், உறவும் வைத்துக்கொள்ளவில்லை. தேவனுடைய மக்களோடு அவர் நமக்குத் தருகிற தொடர்புக்காக, உறவுக்காக, ஐக்கியத்துக்காக, நட்புறவுக்காக தேவனைத் துதிக்கிறோம். ஏனென்றால், அது நமக்கு சுமையல்ல. ஒருபக்கம் அது ஒரு பொறுப்பு, இன்னொரு பக்கம் அது சுமையல்ல. பிள்ளைகள் நம் பொறுப்பு. ஆனால் சுமையல்ல. நம் வாழ்க்கைத் துணை நமக்கு ஒரு பொறுப்பு, நமக்கு சுமையல்ல. அதுபோல, சகோதர சகோதரிகள் நம் பொறுப்பு, அவர்கள் ஒரு சுமையல்ல. ஒரு பக்கம், அவர்களுடைய நிலைமைக்கு நாம் அவர்களுக்குக் கிறிஸ்துவைப் பரிமாறுகிறோம். இன்னொரு பக்கம், நம்முடைய நிலைமைக்கு அவர்கள் கிறிஸ்துவை நமக்குப் பரிமாறுகிறார்கள்.

தேவனுடைய மக்களோடு பேசுவது மிகவும் கடினம். ஏனென்றால், கதைகள் சொல்வது எளிது. தேவனுடைய வார்த்தையை வைத்துக்கொண்டு நாம் கதை கதையாய் கதாகாலசேபம் பண்ணலாம். நாம் கூடிவருவது தேவனுடைய மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும். ஒரேவொரு மனிதனுக்கு அனுகூலமாக இருக்கக்கூடாது. அந்த மனிதனுடைய புகழுக்கோ, அந்த மனிதனுடைய மகிமைக்கோ, அந்த மனிதனுடைய வருவாய்க்கோ வழிகோலுவதற்காக நாம் ஒருநாளும் கூடிவரவேண்டிய அவசியம் இல்லை. நாம் கூடிவருவது தேவனுடைய மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.

கிறிஸ்தவ வாழ்க்கையின் இரகசியம்

ஓர் இரகசியத்தை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் போகிறேன். “இந்த உலகத்தில், வெற்றியோடு வாழ்வதற்கு இரகசியம் என்ன? நோயின்றி நூறு வயதுவரை வாழ்வதற்கு இரகசியம் என்ன? உங்கள் தொழிலில் நீங்கள் வெற்றிபெறுவதற்கு இரகசியம் என்ன? உங்கள் குடும்ப வாழ்க்கையில் நீங்கள் வெற்றிபெறுவதற்கு இரகசியம் என்ன? உங்கள் பிள்ளைகளை உங்களுக்குக் கீழ்ப்படியச் செய்வதற்கு இரகசியம் என்ன? நீங்கள் வேலைபார்க்கும் அலுவலகத்தில் உங்களுடன் சேர்ந்து வேலைசெய்பவர்களை உங்களுக்கு அடிபணியச்செய்வதற்கு அல்லது உங்களுடன் ஒருங்கிணைந்து வேலைசெய்யவைப்பதற்கு இரகசியம் என்ன?” என்று சொன்னால் அது விலைபோகும். எப்போதுமே ஒன்றை விற்கவேண்டுமானால் எப்படித்தான் விற்க வேண்டும்? “நான் உங்களுக்கு ஓர் இரகசியத்தைச் சொல்லப்போகிறேன்” என்று சொன்னால் போதும். மக்கள் அதன்பின் ஓடிவருவார்கள். அது இந்த உலக மக்களின் வழக்கம்.

தேவனுடைய மக்களுக்கு ஓர் இரகசியம் உண்டு என்று புதிய ஏற்பாட்டில் நாம் வாசிக்கிறோம். “நான் உங்களுக்கு ஒரேவொரு இரகசியத்தைச் சொல்லுகிறேன். அது என்ன இரகசியம் தெரியுமா?” என்று நான் உங்களிடம் கேட்டால், நீங்கள் உடனே பதில் சொல்லிவிடுவீர்கள். ஏனென்றால், பொதுவாக என் கேள்விகளுக்குப் பதில் செல்வது மிகவும் எளிது. நீங்கள் பதில் சொல்லமுடியாத அளவுக்கு என்னால் ஒரு கேள்வி கேட்கவே முடியாது. ஏனென்றால், “இவர்கள் என்ன கேள்வி கேட்டாலும், அந்தக் கேள்விக்குப் பதில் ‘கிறிஸ்து’ என்று சொல்லிவிட்டால் இவர்கள் கூத்தாடிவிடுவார்கள், கொண்டாடிவிடுவார்கள். ஏனென்றால் இதைத்தவிர கர்த்தருடைய இரண்டாம் வருகையைக் குறித்தோ அல்லது தெய்வீக சுகமளிப்பதைப்பற்றியோ அல்லது அசுத்த ஆவிகளின் தந்திரங்களும் தேவனுடைய ஆயுதங்களும் என்பதைப்பற்றியோ இவர்களுக்குப் பேசத் தெரியாது. ஒன்றேவொன்றுதான் இவர்களுக்குத் தெரியும். அது கிறிஸ்து,” என்று உங்களுக்குத் தெரியும். “இயேசு கிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருக்கிறேன்,” என்று 1 கொரிந்தியர் இரண்டாம் அதிகாரத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறார். இதை அவர் ஏதோ ஒரு கோஷம்போல் “கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து, கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து” என்ற சொல்லவில்லை. உண்மையாகவே எல்லாவற்றிற்கும் தீர்வு கிறிஸ்துவே.

நம் வாழ்க்கைப் பாதையில் பல நெருக்கங்களும், பல வருத்தங்களும் நிறைந்திருக்கின்றன. தேவனுடைய மக்கள் எத்தனை துன்பங்கள் வழியாகப் போகிறார்கள்! தேவனை அறியாத பலர் அப்படிப்பட்ட துன்பங்கள் வழியாகப் போவதில்லையே! தேவனுடைய மக்கள் ஏன் இவ்வளவு துன்பப்பட வேண்டியிருக்கிறது? நம்முடைய சகோதர சகோதரிகள் உடலிலே, மனதிலே, பொருளாதாரத்திலே, குடும்பத்திலே, அலுவலகத்திலே எவ்வளவு துன்பங்கள் வழியாகப் போக வேண்டியிருக்கிறது! இது தேவன் நம்மேல் அன்புகூருகிறார் என்பதற்குச் சான்றா அல்லது அன்பு கூரவில்லை என்பதற்குச் சான்றா அல்லது இதற்கு எந்தப் பொருளுமே இல்லையா? பொருள் ஒன்றும் இல்லை! எல்லா மனிதர்களுக்கும் நேரிடுகிற சோதனையே நமக்கும் நேரிடுகிறது. எனவே, அளவுக்குமீறி இதற்குப் பொருள் கூற முயற்சிக்க வேண்டாம் என்று எடுப்பதா அல்லது தேவன் உண்மையிலேயே நம்மேல் அன்புகூருகிறார் என்று நாம் அர்த்தம் கொள்ள வேண்டுமா? உண்மையாகவே தேவன் நம்மேல் அன்புகூருகிறார்.

இரகசியத்தின் காரணம்

இன்றைக்கு ஒரு பிரசங்கம் பண்ணவேண்டும் என்பதற்காக நான் இந்த இரகசியத்தைச் சொல்லவில்லை. நான் கடந்துபோகிற ஒரு பாதை உண்டு. நான் தேவனுடைய மக்களிடம் ஒன்றைப் பகிர்ந்துகொள்வதற்குமுன் நான் இப்படி யோசிப்பேன். “நான் கடந்துபோகிற பாதை ஒன்று இருக்கிறது. மற்ற சகோதர சகோதரிகள் இன்னொரு பாதைவழியாகப் போகிறார்கள். நான் பகிர்ந்துகொள்வது அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்குமா?” என்று யோசித்துப்பார்த்து எனக்கு ஒரு தெளிவு இருந்தால் அதைச் சொல்வேன். நான் இப்போது போகிற பாதைக்கு வேறு சில சகோதர சகோதரிகள் இன்னும் சில ஆண்டுகள் கழித்து வரலாம். எடுத்துக்காட்டாக, வாலிபர்கள் திருமணம் செய்து பிள்ளைகளைப் பெற்று அவர்களை வளர்ப்பதற்கு இன்னும் கொஞ்சக் காலம் ஆகலாம் இல்லையா? அதைத்தான் நான் சொன்னேன். இப்படி பல அனுபவங்கள். இன்றைக்கு எனக்குப் பயனுள்ளதாக இருப்பது, இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகள் கழித்து அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கலாம். அப்படிப் பகிர்ந்துகொள்ளும்போதுகூட நாம் தேவனுடைய மக்கள் எல்லாரையும் மனதில் வைத்துத்தான் பகிர்ந்துகொள்ளுகிறோம். அதற்காக ஒவ்வொருவருக்கும் துண்டுதுண்டாக ஒரு செய்தி கொடுக்கவேண்டும் என்பதல்ல நம் நோக்கம். நம்முடைய அனுபவத்திலிருந்து நாம் ஒன்றைப் பகிர்ந்துகொள்ளும்போது அது தேவனுடைய மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும், இருக்கும்.

கிறிஸ்துவாகிய இரகசியம்

இப்போது நான் சொல்லப்போவதைச் சற்று உற்றுக்கவனியுங்கள். கிறிஸ்து தேவனுடைய இரகசியம். கிறிஸ்து நம்மில் இருப்பது ஓர் இரகசியம். நாம் கிறிஸ்துவால் வாழ்வது ஓர் இரகசியம். நான் மீண்டும் சொல்லுகிறேன். கிறிஸ்து தேவனுடைய இரகசியம். கிறிஸ்து நம்மில் இருப்பது ஓர் இரகசியம். கிறிஸ்துவால் நாம் வாழ்வது ஓர் இரகசியம். இந்த மூன்று காரியங்களுக்கும் ஒத்த வசனங்களை யாராவது சொல்லமுடியுமா?

கிறிஸ்து தேவனுடைய இரகசியம். “தேவனுடைய இரகசியம் கிறிஸ்து” என்று கொலோசெயர் 2:2 கூறுகிறது. தமிழில் “தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியம்” என்று இருக்கிறது. ஆனால் அது அப்படியல்ல. “கிறிஸ்து தேவனுடைய இரகசியம்” என்பதுதான் சரி. “கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்,” என்று கொலோசெயர் 1:27 சொல்லுகிறது. “நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்,” என்று பிலிப்பியர் 4:11 கூறுகிறது. தமிழில் “கற்றுக்கொண்டேன்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், ஆங்கிலத்தில் வாசிக்கும்போது அங்கு தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது “எந்த நிலைமையிருந்தாலும் மனரம்மியமாயிருப்பதின் இரகசியத்தை நான் கற்றுக்கொண்டேன்.” எந்த நிலைமையிலும், எந்தச் சூழ்நிலையிலும் மனரம்மியமாய், மனமகிழ்ச்சியோடு, வாழ்கிற இரகசியத்தைக் கற்றுக்கொண்டேன். ‘இரகசியம்’ அல்லது ‘பரம இரகசியம்’ என்ற வார்த்தையைப் பரிசுத்த ஆவியானவர் பவுல்மூலமாக ஏனோதானோவென்று பயன்படுத்தவில்லை என்று நான் நினைக்கிறேன். இந்த வார்த்தை உண்மையிலேயே கனமான, பொருட்செறிவுள்ள வார்த்தை என்று நான் நினைக்கிறேன். என்னுடைய வாழ்க்கைக்கு இது பயனுள்ளது. உங்கள் வாழ்க்கைக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். அது உங்கள் உடல்நலக் குறைவாக இருக்கலாம். வேறு ஏதாவதாக இருந்தாலும் சரி அல்லது வாழ்க்கையில் ஒரு பிரச்சினையாக இருக்கலாம். தேவனுடைய மக்கள் எல்லாரும் போகிற பாதைதான். எனவே, நமக்கு ஓர் இரகசியம் தேவைப்படுகிறது. இந்த இரகசியம் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

1. கிறிஸ்து தேவனுடைய இரகசியம்

முதலாவது, கிறிஸ்து தேவனுடைய இரகசியம். “சகல பரிபூரணமும் அவருக்குள் வாசமாயிருக்கிறது,” என்று கொலோசெயர் 1:19இல் வாசிக்கிறோம். “தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது,” என்று கொலோசெயர் 2:9இல் வாசிக்கிறோம். நற்செய்தி என்றால் என்னவென்று எபேசியர் 3:8இல் அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார். கிறிஸ்துவிலுள்ள அளவற்ற ஐசுவரியங்களை, ஆராயமுடியாத ஐசுவரியங்களை, ஆராய்ந்தறியமுடியாத, தீர்ந்துபோகாத வளங்களை, செல்வங்களை, புறவினத்தாருக்கு அறிவிப்பதுதான் நற்செய்தி என்று அவர் சொல்கிறார். இதற்காகவே பரிசுத்தவான்களெல்லாரிலும் மிகச் சிறியவனாகிய தன்னைத் தேவன் தெரிந்தெடுத்தார் என்றும் பவுல் கூறுகிறார். தேவன் ஒரு நிறைவை வைத்திருக்கிறார். இந்த நிறைவை தேவன் மக்களுக்குக் கொடுக்கவேண்டும் என்று அவர் குறிக்கோள் உடையவராயிருக்கிறார், நோக்கம் கொண்டுள்ளார், திட்டமிட்டுள்ளார். தேவன் தம்மிடமுள்ள எல்லா நிறைவையும் மனிதர்களுக்கு வழங்க வேண்டும் என்று விரும்புகிறார். இது தேவனுடைய நோக்கம், தேவனுடைய குறிக்கோள், தேவனுடைய திட்டம். தேவனுடைய நிறைவு என்பது நாம் இந்தப் பூமியில் அனுபவித்து மகிழ்கிற, துய்க்கிற, எல்லா நிறைவையும்விட மேலானது. காற்றை நாம் அனுபவிக்கிறோம். தண்ணீரை நாம் அனுபவிக்கிறோம். உணவை நாம் அனுபவிக்கிறோம். இன்னும் இந்தப் பூமியில் மனிதர்கள் எவைகளையெல்லாம் அனுபவிக்கிறார்களோ அவைகளெல்லாம் இந்தப் பூமிக்குரிய ஒரு நிறைவு. அதுபோல, தேவன் பரத்துக்குரிய நிறைவு என்று ஒன்றை வைத்திருக்கிறார். அதை மனிதர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பது தேவனுடைய திட்டமும், நோக்கமும், குறிக்கோளுமாகும். நான் சொல்கிற இந்தக் காரியங்களெல்லாம் புதிய ஏற்பாட்டில் உள்ளன. குறிப்பாக யோவான் எழுதின நற்செய்தி, பவுல் எபேசியருக்கும், கொலோசெயர்களுக்கும் எழுதிய நிருபங்களிலும் இவைகளைப் பார்க்கலாம். ரோமருக்கு எழுதின கடிதத்திலும் இது உண்டு. தேவனுடைய நிறைவால் மனிதர்கள் வாழ வேண்டும் என்பது தேவனுடைய திட்டம், தேவனுடைய நோக்கம்.

முதல் மனிதனாகிய ஆதாமுக்கும் தேவனுடைய திட்டமும் நோக்கமும் அதுதான். படைக்கப்பட்ட இந்த நிறைவால் அவன் வாழ வேண்டும் என்பது தேவனுடைய நோக்கமோ, திட்டமோ அல்ல. படைக்கப்படாத, பரத்துக்குரிய, நித்தியத்துக்குரிய, தேவனுடைய நிறைவால், வளங்களால் ஒரு மனிதன் வாழ வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அப்படிப்பட்ட வாழ்க்கைக்கென்று தேவன் மனிதனை உண்டாக்கினார். அந்த எல்லா நிறைவையும், அந்த எல்லா வளங்களையும் தேவன் மனிதனுக்குக் கொடுப்பதற்காக அவர் இரண்டு படிகளை எடுத்தார். முதல்படி என்னவென்றால் அவர் கிறிஸ்துவில் எல்லா வளங்களையும், நிறைவையும் வைத்தார். இந்த முதல் குறிப்பு மிக முக்கியமானது. கிறிஸ்துவுக்கு வெளியே தேவன் மனிதனுக்கு ஒன்றையும் கொடுப்பதில்லை. நன்மை என்று ஒன்று, ஆசீர்வாதம் என்று ஒன்று, தேவன் மனிதனுக்குக் கொடுக்க திட்டமிட்டிருப்பாரென்றால் அது அவருடைய குமாரனாகிய கிறிஸ்துவில் மட்டும்தான் இருக்கிறது. கிறிஸ்துவுக்கு வெளியே தேவன் மனிதனுக்குக் கொடுக்க எந்த நன்மையும் வைக்கவில்லை.

அவரில், அவருக்குள்

அதுபோல் அவர் கிறிஸ்துவில் வைக்காத எந்த நன்மையும் இல்லை, “அவருக்குள் ஜீவன் இருந்தது. அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது” என்று (யோவான் 1:4) யோவான் கூறுகிறார். யாருக்குள்? அவரில், அவருக்குள். நாம் இப்போது கொலோசெயர் 2ஆம் அதிகாரத்தில் வாசித்ததுபோல் அவருக்குள், அவரில். தமிழில் வாசிக்கும்போது அந்த அழுத்தத்தைப் பார்க்கமுடியவில்லை. அந்த வலியுறுத்தல் இல்லை. ஆனால், தேவனுடைய நிறைவு, வளங்கள் “அவருக்குள்”தான் “அவரில்”தான் இருக்கின்றன. அவரில் ஜீவன் இருக்கிறது. அவரில் தேவத்துவத்தின் பரிபூரணம் இருக்கிறது. “தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார். அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்த சாட்சியாம்” (1 யோவான் 5:12). இது தேவன் தருகிற சாட்சி. அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு வெளியே அவர் எந்த நன்மையையும் வைக்கவில்லை. ஜீவன் அவருக்கு வெளியே இல்லை. தேவனுடைய நிறைவு, தேவனுடைய வளங்கள், கிறிஸ்துவுக்கு வெளியே இல்லை.

‘தேவனுடைய நிறைவு’ ‘தேவனுடைய வளங்கள்’ என்று சொல்லும்போது இது ஏதோ கருகலான ஒரு காரியம் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். “அது என்ன தேவனுடைய நிறைவு, தேவனுடைய வளங்கள்?” என்று கலங்க வேண்டாம். இந்த மனித வாழ்க்கைக்கு வேண்டிய எல்லாம் அவரில் இருக்கிறது. உணவு, காற்று, தண்ணீர், உறைவிடம் ஆகியவைகளெல்லாங்கூட கிறிஸ்துவில் இருக்கின்றனவா? ஆம், இருக்கின்றன. அன்பு, நீதி, பரிசுத்தம், சமாதானம், பொறுமை, நீடிய சாந்தம் ஆகியவைகள் கிறிஸ்துவுக்குள் இருக்கின்றனவா? ஆம், கிறிஸ்துவுக்குள் இருக்கின்றன. கிறிஸ்துவுக்குள் இல்லாத நன்மையான எதுவும் இல்லை. தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார். அந்த நித்திய ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறது. “குமாரனை உடையவன் ஜீவனை உடையவன். தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்” (1 யோவான் 5:11, 12). ஜீவன் இருக்கிறது என்பதல்ல யோவானுடைய வாதம். அந்த ஜீவன் இயேசு கிறிஸ்துவில் இருக்கிறது என்பதுதான் யோவானுடைய வாதம். தேவனுடைய மக்கள் தேவனுடைய ஜீவனைப் பெற்றிருக்கிறார்கள் என்பது ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், இந்த ஜீவனை மனிதன் தன் முயற்சியினால் பெற முடியாது.

சிலர் இந்தப் பூமியில் சில நிழல்களைக் கண்டுபிடிக்கிறார்கள். மனிதனுடைய இருதயத்தில் ஒரு தேட்டம் இருக்கிறது. நித்திய ஜீவன் வேண்டும் என்ற தேடல் மனிதனுடைய இருதயத்தில் எங்கோ இருக்கிறது. சாகாவரம் வேண்டும் என்று இந்த மனித உலக வரலாற்றில் நிறையப்பேர் தேடி இருக்கிறார்கள். ஆனால், சாகாவரம் என்பது ஒரு காரியம் அல்ல, அது ஒரு பொருள் அல்ல, அது ஒரு நபர். அது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. சாகாவரம் தேடி, என்றைக்கும் இளமையாக இருக்கின்ற தேகம் வேண்டி, மனிதர்கள் அலைந்திருக்கிறார்கள். சிலர் பொய் சொல்வார்கள்: “1000 வருடம் உயிரோடிருக்கிற ஒருவரை நான் இமயமலையில் பார்த்தேன். அவர் கி.பி.174 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பிறந்தார். இப்போதுகூட உயிரோடிருக்கிறார். நான் இமய மலைக்குப் போயிருந்தபோது அவரைப் பார்த்தேன். அவர் இன்னும் 16 வயது இளைஞனைப்போல் இருக்கிறார்,” என்று சொல்லுகிற பொய்காரர்கள் உண்டு. நிழல்களைக் கண்டுபிடித்து, நிழல்கள்தான் மெய் என்று வாழ்கிற மனிதர்கள் உண்டு. ஆனால், நித்திய ஜீவனும், மற்ற எல்லா நிறைவும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவில்தான் இருக்கின்றன. நாம் கடந்துபோகிற எல்லாச் சூழ்நிலைகளிலும் தேவனுடைய நிறைவால், தேவனுடைய வளங்களால் வாழ முடியும். தேவன் இதை கிறிஸ்துவில் வைத்திருக்கிறார். இது முதலாவது காரியம்.

கிறிஸ்துவில் தேவ நிறைவு

கிறிஸ்து என்பதே ஒரு படிதான். ஒரு சகோதரன் இப்படிச் சொல்லுகிறார். “Christ is God’s conception.’’’ கிறிஸ்து தேவனுடைய இருதயத்தில் கருக்கொண்டவர். தேவன் தேவனாகவே இருப்பார் என்றால் அவருடைய வளங்கள், அவருடைய நிறைவு, அவருடைய ஐசுவரியங்கள் ஆகியவைகளை மனிதன் காண்பதற்கோ, கேட்பதற்கோ, உற்றுநோக்குவதற்கோ, பெறுவதற்கோ, தொட்டுப் பார்ப்பதற்கோ வழியே இல்லை. 1 யோவான் 1ஆம் அதிகாரத்தில் அப்போஸ்தலனாகிய யோவான் அவ்வாறு எழுதுகிறார்: நாங்கள் சாட்சி பகர்கின்றோம். நித்திய ஜீவனைப்பற்றி, அது ஆதியில் இருந்த நித்திய ஜீவன். இந்த நித்திய ஜீவன் வெளிப்பட்டது. இது யோவானுடைய பெரிய வாதம். ஆதியில் இருந்த நித்திய ஜீவன் இந்தப் பூமியில் மனுவுருவானது, மனிதர்களால் வெளிப்பட்டது. அந்த நித்திய ஜீவனை நாங்கள் கேட்டோம், பார்த்தோம், உற்றுநோக்கினோம், எங்கள் கைகளினால் தொட்டோம். “ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப் பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவ வார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்” (1யோவான் 1:1).

நாம் பொய்ச்சாட்சிகள் அல்ல, “என்ன பண்றது? நான் கிறிஸ்தவன். இயேசுகிறிஸ்துவின்மேல் விசுவாசம் வைத்துவிட்டேன். எனக்குள் நான் நொந்து, வெந்து, நம்பிக்கையற்று, தொய்ந்துபோய் இருக்கிறேன். செத்துப்போய்விடுவேனோ என்று பயப்படுகிறேன். ஆனால் வெளியே கெம்பீரமாக இருப்பதுபோல் காட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது. Praise the Lord, brother! என்று சொல்லித்தான் ஆக வேண்டும்,” என்பதல்ல நம் சாட்சி. அது பொய்ச்சாட்சி. நம்முடைய சாட்சி மெய்சாட்சி. இருதயத்தின் ஆழத்திலிருந்து, வாழ்க்கை என்னும் உரைகல்லில் உரசிப்பார்த்து இதை உண்மை என்று அறிவிக்கிறோம். நாங்கள் கேட்டு, நாங்கள் பார்த்து, எங்கள் கண்களினால் உற்று நோக்கி, எங்கள் கைகளினால் தொட்டுப்பார்த்த ஜீவ வார்த்தை. இதை நாங்கள் அறிவிக்கிறோம். நம் வாழ்க்கையினாலும், நம் வார்த்தையினாலும் நாம் எதை அறிவிக்கிறோம்? இது ஜீவன், இது வார்த்தை, இது ஜீவ வார்த்தை. உண்மையாக இவருக்குள் தேவனுடைய நிறைவு இருக்கிறது என்று நாங்கள் கண்டோம். நாங்கள் “அவருடைய மகிமையைக் கண்டோம். அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது” (யோவான் 1:14).

இது தேவனுடைய முதல் படி. மனிதன் பார்க்கத்தக்க, தொடத்தக்க, நோக்கத்தக்க விதத்தில் தேவன் வெளிப்பட்டார். ஒருவேளை, “நீங்கள் தொட்டீர்களா? கண்டீர்களா? பார்த்தீர்களா? நோக்கிப்பார்த்தீர்களா?” என்று நீங்கள் கேட்கலாம். ஒருவேளை தமஸ்குவுக்குப் போகிற வழியில் பவுல் கிறிஸ்துவைச் சந்தித்ததுபோல் அல்லது கிறிஸ்து பவுலைச் சந்தித்ததுபோல் நாம் சந்திக்காமல் இருக்கலாம். ஆனால், நாமெல்லாரும் ஏதோவொரு வகையில் கிறிஸ்துவைச் சந்தித்திருக்கிறோம். The order of the experience may be different but the nature of the experience is the same. உண்மையாகவே, நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவைச் சந்தித்திருக்கிறோம் என்று சாட்சிபகர முடியும். யாரோ சொல்லிக்கொடுத்து சாட்சி சொல்வதில்லை. உண்மையில் நாம் ரோமன் கத்தோலிக்கர்களாக இருந்தபோது இயேசுவைக் கண்டிருக்கலாம். இந்துக்களாக இருந்தபோது இயேசுவைக் கண்டிருக்கலாம். ஏதோவொரு பின்புலத்திலிருந்து நாம் வருகிறோம். ஆனால், “நாங்கள் உண்மையாகவே இயேசுகிறிஸ்துவைக் கண்டோம்,” என்பதுதான் நம் ஒவ்வொருவரின் சாட்சியாகும்.

2. உங்களில் கிறிஸ்து இரகசியம்

இரண்டாவது, இன்னொரு முக்கியமான காரியம். தேவன் எடுத்த இரண்டாவது படி மிகவும் அற்புதமானது. இரண்டாவது படி முதல்படியைவிட அற்புதமானது. கிறிஸ்து நமக்கு வெளியே இல்லை. மாறாக நமக்குள் இருக்கிறார் என்று கொலோசெயர் 1:27இல் பார்த்தோம். கிறிஸ்து தேவனுடைய இரகசியம். இது பெரிய உண்மை. இதைவிட மகாபெரிய உண்மை என்னவென்றால் “கிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறார்.” “அப்படியே கர்த்தரோடிசைந்திருக்கிறவனும் அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான்,” என்று 1 கொரிந்தியர் 6:17 இல் வாசிக்கிறோம். இது மிக அற்புதமான வசனம். (R.S) One who is joined to the Lord or united to the Lord or in relationship with Lord is one spirit. இயேசு கிறிஸ்துவோடு உறவுள்ள நாம் அவருடனே ஒரே ஆவியாக இணைந்துள்ளோம் என்று 1 கொரிந்தியர் 6:17 சொல்லுகிறது. அதற்கு ஒத்த இன்னொரு வசனம் ரோமர் 8:16. “நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனே கூடச் சாட்சி கொடுக்கிறார்.” ஆவியானவர் நம்முடைய ஆவியில் சாட்சி கொடுக்கிறார் என்று சில மொழிபெயர்ப்பில் வாசிக்கிறோம். ஆவியுடனே அல்லது ஆவியில் என்று எப்படி இருந்தாலும் சரி காரியம் இதுதான். தேவனுடைய ஆவியானவர் நம்முடைய ஆவியில் ஒன்றாக இணைந்திருக்கிறார் என்பதுதான் காரியம்.

இது புதிய ஏற்பாட்டில் மறுக்க முடியாத உண்மை. இதற்குமேலே போய், “நான் கடவுள், நான் தேவன். ஜீவனிலும் சுபாவத்திலும் நான் தேவன், நான் கடவுள்,” போன்ற கூற்றுகளுக்கு அங்கு இடம் இல்லை. தேவனுடைய ஆவி நம் ஆவியுடன் இணைந்திருக்கிறது என்பதே மிகவும் அற்புதமான உண்மை. கிறிஸ்துவோடு நம் ஆவியில் ஒரே ஆவியாக இணைக்கப்பட்டிருக்கிறோம் என்பதே என்னைப் பொறுத்தவரை மாபெரும் உண்மை. அல்லது தேவனுடைய ஆவியானவர் நம்முடைய ஆவியில் ஒன்றாக இணைந்திருக்கிறார். ஏதோவொரு விதத்தில் நாம் தேவனோடு ஒன்றாக இணைந்திருக்கிறோம் என்ற இந்தக் கூற்றே என்னைப் பொறுத்தவரை மா அற்புதமானது. இதற்குமேலே போய், “நான் தேவன், நான் கடவுள். I am God” என்ற ஓர் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து, அதன்பின் “not in His Godhead but in His life and nature” என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை. தேவனோடு இணைந்திருக்கிற ஒரு பகுதி தேவனுடைய மக்களாகிய நம்மிடத்தில் உண்டு.

இது ஒரு யுக்தி அல்ல. அதாவது “நீங்கள் தேவனில் பங்குபெற வேண்டுமானால் ’ஆ…இயேசுவே! ஓ..இயேசுவே என்று மூச்சுப்பயிற்சி செய்யுங்கள்” என்பதுபோன்ற மூச்சுப்பயிற்சி அல்ல. ஓ.. இயேசுவே அல்லது ஆ.. இயேசுவே என்று சொன்னவுடன் கிறிஸ்துவுடன் ஒன்றாகி விடுவோமா? ஒரு கிறிஸ்தவ சகோதரன் ஒருமுறை என்னிடம் இப்படிச் சொன்னார். “நீங்கள் நன்றாக மூச்சு விடுங்கள். அதற்காகக் கர்த்தருக்கு ஸ்தோத்திரம். காலையில் நீங்கள் எழுந்தவுடன் நல்ல சுத்தமான காற்று கிடைத்தால் நன்றாக மூச்சுவாங்கி மூச்சுவிடுங்கள். ஆனால், அதற்கும் தேவன் உங்களோடு இணைந்திருப்பதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அது ஒரு நல்ல உடல்பயிற்சி, அவ்வளவுதான்.” ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தம் சீடர்களிடத்தில் என்றைக்காவது, “உங்களுடைய எல்லாப் பிரச்சினைக்கும் காலையில் நீங்கள் எழுந்ததும் நன்றாக மூச்சு விடாததுதான் காரணம்,” என்று சொன்னாரா? இப்படிச் சொல்வதால் நீங்கள் நல்ல சுத்தமான காற்றைச் சுவாசிக்காதீர்கள் என்று அவர் சொல்லவில்லை. நானும் அப்படிச் சொல்லவில்லை. தேவனோடு இணைந்திருப்பதையும் இதையும் தொடர்புபடுத்த வேண்டாம்.

தேவனுடைய ஆவியுடன் ஒன்றாக இணைந்திருக்கிறோம்.

நாம் ஏன் அவருடைய ஆவியுடன் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கிறோமென்றால் கிறிஸ்துவில் இருக்கிற நிறைவும், வளங்களும் கதையல்ல. நம்முடைய வாழ்க்கைச் சூழ்நிலையிலேயே, நாம் வாழ்க்கைப் போராட்டங்களின் வழியாகச் செல்லும்போது அந்த வளங்களும், நிறைவும் மெய்யாகவே நமக்குக் கிடைக்கின்றன. அதை நம்முடைய ஆவியில் பரிசுத்த ஆவியானவர் உணர்த்துகிறார், மெய்யாக்குகிறார். உண்மையாகவே நாம் கிறிஸ்துவால் வாழ முடியும் என்று நிரூபிக்கிறார், எண்பிக்கிறார். நம்முடைய போராட்டம் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் அல்ல. பிரச்சினைகள் பல வடிவங்களில் வரும். வீட்டில், தெருவில், அலுவலகத்தில், மனைவி பிள்ளைகள்மூலம், பேருந்தில் எல்லா இடங்களிலும் கிறிஸ்துவில் இருக்கும் நிறைவால், வளங்களால் வாழ முடியும் என்று பரிசுத்த ஆவியானவர் நிரூபிப்பார். அவமானம், துர்க்கீர்த்தி, கனவீனம், வசைமொழி போன்றவைகளெல்லாம் கிறிஸ்துவின் பள்ளியில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள். போதுமான அளவுக்கு இந்தப் பாடங்களை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இரகசியம் என்ன? நமக்குள் இருக்கும் கிறிஸ்துவின் இரகசியம். கிறிஸ்துவில் இருக்கும் நிறைவை, வளத்தை நாம் எல்லா நேரமும் உணர்வதற்காக, அனுபவிப்பதற்காக, அனுபவத்தில் ருசிப்பதற்காக, தேவன் நம் ஆவியில் நம்மோடு ஒன்றாக இருக்கிறார். இது எங்கோ நடக்கிற ஒன்றல்ல. கிறிஸ்துவில் தேவனுடைய எல்லா நிறைவும், வளங்களும் இருக்கின்றன. அந்தக் கிறிஸ்து நம்மில் இருக்கிறார்.

நான் ஒரு சாட்சி சொல்ல விரும்புகிறேன். கொலோசெயர் 1:27யை ஒரு நாள் வாசித்தவுடன், பரவசப்பட்டு, மிகுந்த மகிழ்ச்சியோடு ஒரு சகோதரியிடம் போய், “உங்களுக்கு விஷயம் தெரியுமா? கிறிஸ்து மகிமையின் நம்பிக்கையாக நமக்குள் இருக்கிறார். உங்களுக்குள் இருக்கிறார்,” என்று சொன்னேன். அவர் என்ன சொன்னார் தெரியுமா? அது ஒரு விஷயமே இல்லை என்பதுபோல், “அதுதான் எனக்கு எப்போதே தெரியுமே!” என்றார்.

3. கிறிஸ்துவை இரகசியமாகக் கற்றுக்கொள்ளுதல்

மூன்றாவது, இதை நாம் ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்கிறோம். எதை? இந்தக் கிறிஸ்துவால் வாழ்வதை. பிலிப்பியர் 4:12 என் வாழ்க்கையில் இன்னும் உண்மையாகவில்லை. நாம் அதை மீண்டும் வாசிக்கலாம். “தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும். எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்.” ஒன்றுமில்லாமல் நான் இன்னும் வாழக் கற்றுக்கொள்ளவில்லை.

ஒன்றும் இல்லாமல் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்லுகிறேன். தூக்கம் இல்லாமல் வாழ நான் கற்றுக்கொள்ளவில்லை. என்னுடைய ஒரு ஜெபம் என்னவென்றால், “ஆண்டவரே, என் மனைவிக்கு உடல்நலம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. ராத்திரி மட்டும் கொஞ்சம் நல்ல தூக்கத்தைத் தாரும். அப்போதுதான் நானும் தூங்க முடியும்.” இப்படியெல்லாம் தேவனுடைய மக்கள் ஜெபிப்பார்களா? இப்படி ஜெபித்தபிறகு நான் உடனே மறுபடியும் இப்படி ஜெபிப்பேன். “தேவனே, கிறிஸ்துவே என் ஓய்வாக இருக்கிறார் என்றும், கிறிஸ்துவை ஓய்வாகக் கொண்டு நான் வாழ முடியும் என்பதை நான் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக சில இரவுகளில் என் தூக்கத்தை நீர் எடுத்துக்கொண்டால், அதற்காகவும் நான் உம்மைத் துதிக்கிறேன். ஆண்டவரே அப்படிப்பட்ட சூழ்நிலைகளை நினைத்துப் பார்த்தால் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால், அப்படி நீர் ஒழுங்குசெய்தால் நான் அதற்கும் தயார். நான் அப்படிப்பட்ட பாதையின் வழியாகப் போகவேண்டியிருந்தால் அந்தப் பாதையிலும் நீர் எனக்குப் போதுமானவர் என்பதைக் கற்றுக்கொள்ள எனக்குக் கிருபை தாரும்.” இப்படிப் பயந்து பயந்துதான் நாம் வாழ்கிறோம் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். “இன்றைக்கு சாப்பாடு இல்லாமல் போய்விடுமோ! நாளைக்கு நோய் வந்துவிடுமோ! வேலை கிடைக்காமல் போய்விடுமோ!” இப்படிப் பயந்துபயந்து வாழ்வதா தேவனுடைய பிள்ளைகளின் வாழ்க்கை? அப்படி அல்ல. “மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்,” (வெளி. 12:11) என்று வேதத்தில் வாசிக்கிறோம். எனவே, நாம் பயந்து வாழ்வதில்லை. ஆனால், “கிறிஸ்து நமக்காக மாம்சத்தில் பாடுபட்டபடியால், நீங்கள் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள்,” (1 பேதுரு 4:1) என்று பேதுரு சொல்வதுபோல் பாடுபடுகிற சிந்தையை நாம் தரித்துக்கொள்ள வேண்டும். அந்தப் பாதை வழியாகக் கடந்துபோகும் போது ஏதோ விநோதமான ஒன்று வந்துவிட்டது என்று நாம் நினைத்துக்கொள்ளக் கூடாது.

ஒரு கற்பனை செய்து பார்த்துக் கொள்வது நல்லது. இப்போது கொசுக்கள் இல்லாத நல்ல இடத்தில் வாழ்கிறோம். ஒருவேளை ஒரு சின்ன அறை மட்டும்தான் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அங்கு நிறைய கொசுக்களும் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். ஒருவேளை தேவன் அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை அமைப்பாரென்றால் தேவன் நமக்குக் கிருபை அருள்வார். நாம் வலியப்போய் வாங்கவேண்டும் என்று சொல்லவில்லை. நம் வாழ்க்கைப் பாதையில் தேவன் சில நெருக்கங்களையும், சுருக்கங்களையும், வருத்தங்களையும் வைப்பார். வைப்பது எதற்காகவென்றால் கிறிஸ்துவால் வாழ்கிற இரகசியத்தை நாம் கற்றுக்கொள்வதற்காக. அதற்கு ஒத்த வசனம் உபாகமம் 8:3: “அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல. கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்.” “கர்த்தரோடிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான்” (1 கொரி. 6:17) என்பதுபோல, உபாகமம் 8:3யைப் பவுல் எழுதவில்லை. ஆனால், பவுல் எழுதியிருக்க முடியும். பிலிப்பியர் 4:12யை மோசே எழுதவில்லை. ஆனால் மோசே எழுதியிருக்க முடியும்.

தேவனுடைய மக்கள் எல்லாக் காலங்களிலும் நடந்துபோகிற பாதை இதுதான். ஒருவேளை கர்த்தருடைய வருகை தாமதித்தால், இன்னும் 2000 ஆண்டுகளுக்குப் பிறகும், மறுபடியும் தேவன் நம்மை இந்தப் பூமியில் தூக்கிப்போட்டால் இதேபோல் கிறிஸ்துவால் வாழ்கிற இரகசியத்தைப்பற்றிப் பேசுகிற தேவனுடைய மக்கள் அன்றும் இந்தப் பூமியில் வாழ்வார்கள். இப்படிப்பட்ட மக்களே இல்லாதபடிக்கு அவர்களை இந்தப் பூமியைவிட்டு அறவே கூண்டோடு அழித்துவிடலாம் என்று நினைக்கலாம். நாம் கிறிஸ்துவால் வாழ முடியாது என்று இந்த உலகம், விஞ்ஞான உலகம், நவீன உலகம், நினைக்கிறது. இன்னும் 100, 200, 1000, 2000 ஆண்டுகளானாலும் “மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல. கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” என்று விசுவாசிக்கிற மக்கள், கிறிஸ்துவை இரகசியமாகக் கற்றுக்கொண்டிருக்கிற மக்கள் இந்தப் பூமியில் இருப்பார்கள்.

ரோமர் 8:37யை வாசிப்போம்: “மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்” (ரோமர் 8:38-39). இது பிலிப்பியர் 4:13க்கு ஒத்தது. “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு.” பிலிப்பியர் 4:13றும், ரோமர் 8:37யும் ஒரே வசனம்தான். இவையெல்லாவற்றின்வழியாக நான் நடந்துபோனாலும்.. எவையெல்லாவற்றின்வழியாக? மரணம், தாழ்வு, உயர்வு, அதிகாரங்கள், துரைத்தனங்கள்.. ஒரு நீண்ட பட்டியல் இருக்கிறது. “கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ, இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே” (ரோமர் 8:36, 37). பவுலின் எண்ணம் அதேதான். ஒரு ஆங்கில மொழிபெயர்ப்பு இப்படிச் சொல்லுகிறது. Over whelming victory is ours. Traditionally it is said that we are more than conqueror. One recent translation says that complete victory is ours. Over whelming victory is ours. இது நம்முடைய சாட்சி. வாழ்வு மட்டும் அல்ல, மரணமானாலும். உயர்வு மட்டும் அல்ல, தாழ்வானாலும். வருங்காரியங்கள் மட்டும் அல்ல, நிகழ்காரியங்களானாலும். எல்லாவற்றிலும் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்?

வெற்றியின் இரகசியம்

நம்முடைய வெற்றியின் இரகசியம் என்ன? எப்படி எல்லா நிலையிலும் நாம் கிறிஸ்துவால் வாழ முடியும்? மூன்று வேளைக்குப்பதிலாக இரண்டு வேளை சாப்பிட்டால் வாழ்ந்துவிட முடியுமா? 21 நாட்கள் அல்லது 40 நாட்கள் உபவாசம் இருந்தால் வாழ்ந்துவிட முடியுமா? உலகத்தில் தேவனைத் தேடுபவர்கள் இப்படிப்பட்ட யுக்திகளையெல்லாம் பயன்படுத்துவார்கள். “உப்பு, புளி, காரம் சாப்பிடாமல் வாழுங்கள், பிரதர்,” என்று ஆலோசனை சொல்வார்கள். தேவனுடைய மக்களுக்கு இரகசியம் உண்டு. கிறிஸ்துவைக்கொண்டு வாழ்வதுதான் இரகசியம். இதை நடைமுறைப்படுத்துவது எப்படி? இது அவர்மேல் நாம் வைத்துள்ள விசுவாசம். நம்மேல் அவர் வைத்துள்ள அன்பின்மேல் நாம் வைத்திருக்கிற விசுவாசம். மரணம்போன்ற சூழ்நிலையாக இருக்கிறது. ஆனால், நான் பிதாவின் அன்புக்குப் பாத்திரன். இதில் எந்த மாற்றமும் இல்லை. என்னுடைய முயற்சியினால் அல்ல. என்னை அன்பு செய்வதற்கென்றே அவர் என்னைத் தெரிந்தெடுத்திருக்கிறார். நம்மேல் அன்புகூரவேண்டுமென்று பிதாவானவர் நம்மைத் தெரிந்தெடுத்திருக்கிறார். பவுல் அதைத்தான் தன் வெற்றியின் இரகசியமாகக் கூறுகிறார். இவையெல்லாவற்றிலும் கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? மரணச் சூழ்நிலைவழியாக நாம் போகிறோம். நாம் மரித்துவிடுவோமா? மரித்துவிடுவோம் என்றால் பிலிப்பியர் 4:4, உபாகமம் 8, ரோமர் 8:37 பொய். நாம் மரித்துவிடுவதில்லை. வேலையேயில்லாமல் அதிக நாட்கள் போய்க்கொண்டிருக்கும். ஒரு காலத்தில் எப்படிப்பட்ட எண்ணம் வருமென்றால் இனிமேல் நமக்கு வேலையே கிடைக்காது. அது பொய். இங்கு இருப்பவர்கள் எல்லாரும் சாமர்த்தியசாலிகள் என்பதால் நம்மெல்லாருக்கும் நல்ல வேலை கிடைக்கவில்லை. எவ்வளவோ தவறுகள் நம் வாழ்க்கையில் நாம் செய்திருக்கிறோம். ஆனால், அவையெல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு தேவனுடைய அன்பு நம்மைப் பாதுகாக்கும்.

முதலாவது தேவனுடைய வளங்கள், நிறைவு, ஐசுவரியங்கள் எல்லாம் கிறிஸ்துவில் பரிபூரணமாகக் குடிகொண்டிருக்கின்றன. இரண்டாவது கிறிஸ்து நம்மில் இருப்பது ஓர் இரகசியம். மூன்றாவது இந்த இரகசியத்தை நாம் ஒவ்வொரு நாளும் கற்றுக்கொண்டு வாழப் பழக வேண்டும். பவுல் கற்றுக்கொண்டேன் என்று சொல்ல முடியும். ‘நான் கற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறேன்’ என்றுதான் சொல்ல முடியும். ‘கற்றுக்கொண்டிருக்கிறேன்’ என்று சொல்ல எனக்குத் துணிவில்லை. கற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறேன். உங்கள் பாதையிலும் கிறிஸ்துவால் வாழக் கற்றுக்கொள்ளத் தொடங்குங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு உதவிசெய்வார்.