Uneditted transcript of a message spoken in Chennai
By Sakaya Milton Rajendram
வெளிப்படுத்தின விசேஷம் 22:12யை வாசிப்போம். “இதோ சீக்கிரமாய் வருகிறேன். அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.”
எங்கள் தேவனே, உம்முடைய மக்களாகக் கூடிவருகிறதற்கு நீர் தந்த இந்தச் சிலாக்கியத்திற்காய் நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். உம்முடைய சமுகத்தில் அமர்ந்து உம்முடைய வேத வாக்கியங்களை நாங்கள் தியானிக்கும்போது உம்முடைய பரிசுத்த ஆவியினால் எங்களோடு பேசுமாறும், எங்களுடைய இருதயத்தின் கண்களைத் திறக்குமாறும், நாங்கள் ஜெபிக்கின்றோம். உமக்குப் பிரியமான மக்களாய் நாங்கள் மாறுவதற்கு எங்களுக்கு உதவி செய்வீராக. ஆமென்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இரண்டாவது முறை வருவார் என்று புதிய ஏற்பாடு நமக்குப் போதிக்கிறது. அப்படி வரும்போது “நான் அவனவனுக்கு அவனவனுடைய செய்கைகளுக்குத் தக்கதாக ஒரு வெகுமதியைக் கொண்டு வருவேன்,” என்று அவர் இந்த இடத்திலே கூறுகிறார். அது இலாபமாக இருக்கலாம் அல்லது நட்டமாக இருக்கலாம். என்னுடைய செய்கைகளுக்குத் தக்கதாக நான் பெறுகின்ற வெகுமதி எனக்கு இலாபமாக இருக்கலாம் அல்லது என்னுடைய செய்கைகளுக்குத் தக்கதாக நான் பெறுகின்ற வெகுமதி எனக்கு நட்டமாக இருக்கலாம்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இரண்டாவது முறையாக வருவார் என்பதைப்பற்றி நம்முடைய ஐக்கியத்திலே, நம்முடைய கூடுகைகளிலே, நாம் அதிகமாக கலந்துரையாடினது இல்லை. தேவன் ஒரு கால அட்டவணை, ஒரு calendar வைத்திருக்கிறார், அந்தக் கால அட்டவணையின்படி ஒரு நாளிலே அவர் மீண்டும் இந்த உலகத்திற்கு வருவார் என்பது தேவனுடைய மக்களுடைய எண்ணம். சிலர் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மேகங்கள்மீது வருகின்ற அந்தக் காட்சி தொலைக்காட்சிகளிலே special episodeபோல இருக்கும் என்கின்ற அந்தப் பரவசத்திற்காகக் காத்திருக்கின்றார்கள். பலருக்கு அது பரவசமான நிகழ்ச்சியாக இருக்கப்போவதில்லை. அது என்னுடைய செய்கைகள், என்னுடைய வாழ்க்கை, என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை, என்னுடைய சபை வாழ்க்கை, தேவனுக்காக என்னுடைய இருதயம் முழு இருதயமாக இருந்ததா, தேவனுக்கு எப்படிப்பட்ட பணிவிடை செய்தோம் என்பவைகளை எல்லாம் பொறுத்துத்தான் அந்த நாள் பரவசமான நாளா அல்லது நாம் கதறுகின்ற நாளா என்பதைத் தீர்மானிக்கும். இதைப்பற்றி ஒரு சிறிய, மிகக் குறைவான அளவிலே இந்த சத்தியத்தை நாம் நமக்குமுன்பாக வைக்கவேண்டியது அவசியம் என்று நான் கருதுகிறேன்.
எப்படி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களைச் சுமந்துத் தீர்க்கிற தேவஆட்டுக்குட்டியாக முதல்முறையாக இந்தப் பூமிக்கு வெளிப்பட்டாரோ, அதுபோல அவர் இரண்டாவது முறையாக இந்தப் பூமிக்கு வருவார் என்று இந்தப் புதிய ஏற்பாடு கூறுகிறது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வாக்குறுதி அளித்தார். நாம் திருவெளிப்பாட்டிலே இப்போது வாசித்த வாக்கியம்கூட, “இதோ நான் வருகிறேன்,” என்று சொல்லுகிறது. “இதோ நான் வருகிறேன்” என்றால், “ஒரு நாள் என்னுடைய calendar, என்னுடைய scheduleபடி வரப்போகிறேன்” என்பதல்ல. எந்தக் கணத்திலும் நான் வரலாம். யாராவது ஒருவர் நம்மைக் கூப்பிடும்போது, “இதோ” என்று சொன்னால், அதனுடைய பொருள் என்ன? “ஒரு மணிநேரம் கழித்து வருகிறேன். நாளைக்கு வருகிறேன். அடுத்த வாரம் வருகிறேன்” என்பதல்ல. “உடனடியாக வருகிறேன். சீக்கிரமாக வருகிறேன்” என்று பொருள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து முதல் நூற்றாண்டிலேயே திரும்ப வருவார் என்கின்ற ஒரு எதிர்பார்ப்போடு தேவனுடைய மக்கள் வாழ்ந்தார்கள். அந்த எதிர்பார்ப்பு மங்கியபோது, தேவ மக்களுடைய வாழ்க்கை நடையும், சபை வாழ்க்கை முறைமைகளும், அமைப்புகளும் சற்று மாறின. இன்றைக்கு சில சமயங்களிலே நாம் கேட்கும்போது, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவர் வாக்குறுதி அளித்தபடியே எந்தக் கணமும் வரலாம் என்று நாம் புரிந்துகொண்டபோதும்கூட, அவர் எந்தக் கணமும் வரலாம் என்ற எதிர்பார்ப்போடு நாம் வாழவில்லை.
சில தீர்க்கத்தரிசன specialists உண்டு. உலகத்திலே இருக்கின்ற வரவாற்று நிகழ்ச்சிகளையெல்லாம் கொஞ்சம் analysis பண்ணி, “ஆகவே, இது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வருகின்ற தருணம்” அல்லது “இந்த ஆண்டு அவர் வரலாம்” என்று அவர்கள் prediction பண்ணுவார்கள். பொதுவாக இது கேட்பதற்கு மிகவும் சுவராஸ்யமாக இருக்கும். ஒருநாள் workshop, ஒரு நாள் seminar என்றெல்லாம் கூப்பிட்டு பேசுவது மிகவும் இன்பமாக இருக்கும். நானும் அவைகளிலே கலந்துகொண்டிருக்கிறேன். அது தவறல்ல. தேவனுடைய வாக்கு, தேவனுடைய வார்த்தை, எந்த அளவிற்குத் துல்லியமானது என்பதை நிருபிக்கின்ற எதுவுமே தேவனுக்கு மகிமையைக் கொண்டுவருகிறது. தேவனுடைய வார்த்தை பொய் சொல்லுவதில்லை. ஆனால், அந்தக் கோணத்திலிருந்து நாம் இன்று ஐக்கியம் கொள்ளப்போவதில்லை.
“நான் ஒரு நாளிலே வருவேன்” என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொன்னார். ஆனால் இன்று நம்முடைய emphasis, நம்முடைய வலியுறுத்துதல், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினுடைய வருகையைப்பற்றியதல்ல. வரும்போது ஒரு வெகுமதியை அவர் கொண்டுவருகிறார் என்பதைத்தான் நாம் இன்று பார்க்கப்போகிறோம்.
எப்படி முதல் தடவை இந்தப் பூமிக்கு ஆண்டவராகிய இயேசு வந்தபோது இரட்சகராக வந்தாரோ அதுபோல இரண்டாம் முறை வரும்போது அவர் ஒரு நியாயாதிபதியாக, ஒரு நீதிபதியாக, நியாயந்தீர்ப்பவராக வருவார் என்பது நற்செய்தியின் ஒரு பங்கு. அவர் மீட்பராக, இரட்சகராக, வந்தது நற்செய்தியின் ஒரு பங்குபோலவும், அவர் நியாயாதிபதியாக வருவார் என்பது நற்செய்தியில் ஒரு பிற்சேர்க்கைபோலவும் நாம் நினைத்துக்கொள்கிறோம். “இயேசு கிறிஸ்து இரட்சகர், அவர் நமக்காக உயிர் கொடுத்தார், நம் பாவங்களை மன்னித்தார், நமக்கு நித்திய ஜீவனைத் தந்தார், பரிசுத்த ஆவியைக் கொடையாக ஈந்தார்” என்பதுதான் முக்கியமான புத்தகம் என்றும், புத்தகத்தை எழுதி முடித்தபிறகு, ஒரு பிற்சேர்க்கையாக by the way “நான் நியாயாதிபதியாகவும் வருவேன்,” என்று தேவன் சொன்னதுபோல் நாம் கற்பனைசெய்துகொள்கிறோம். அப்படியல்ல, முழுமையான நற்செய்தி - ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இரட்சகராக மட்டுமல்ல, அவர் நியாயாதிபதியாகவும் இருக்க வேண்டும்.
ஆகவே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இரண்டாவது முறை வரும்போது அவர் நியாயாதிபதியாக, நீதிபதியாக, நியாயந்தீர்ப்பவராக வருவார் என்பது உலகத்து மக்களைப் பொறுத்தவரை அச்சுறுத்துகிற காரியமாக இருக்கலாம். ஆனால், தேவனுடைய மக்களைப் பொறுத்தவரை அது மகிழ்ந்து களிகூரக்கூடிய காரியமாக இருக்க வேண்டும். ஏனென்றால், அது நற்செய்தி. “நீர் இந்தப் பூமியையும், சபையையும், தேவ மக்களையும் தீர்க்காமல் விட்டுவிடுவீரா, நியாயாந்தீர்க்காமல், நீதித் தீர்க்காமல் அப்படியே விட்டுவிடுவீரா?” என்பது பரிசுத்தவான்களுடைய கூக்குரலாக இருக்கும். “நீர் அப்படியே விட்டுவிடுவீரா?” திருவெளிப்பாட்டிலே பரிசுத்தவான்களுடைய குரல் கேட்கிறது, “நீர் இந்த உலகத்தை நியாயம் தீர்க்கவே மாட்டீரா?” என்றால் அது நற்செய்தியல்ல.
தேவனுடைய ஆதி நோக்கம், தேவனுடைய இறுதி நோக்கம், தேவனுடைய நித்திய நோக்கம் படைக்கப்பட்ட ஒரு கூட்டம் மக்களை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்த சாயலாக்குவது அல்லது இந்த முழு பிரபஞ்சத்தையும் கிறிஸ்துவைக்கொண்டு நிரப்புவது. நாம் அடிக்கடி எபேசியர் 1ஆம் அதிகாரம் 10, 11ம் வசனங்களிலே வாசிப்பதுபோல “காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்தில் உள்ளவைகளும், பூலோகத்தில் உள்ளவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள் கூட்டப்பட வேண்டும் என்று அவருக்குள் தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார்.” இது எபேசியர் 1ஆம் அதிகாரம் 11ஆம் வசனம். இது ஏறக்குறைய முழு வேதாகமத்தினுடைய ஒரு மையக் கருத்தைப்பற்றிப் பேசுகிறது. தேவனுடைய நித்திய நோக்கம், ஆதி நோக்கம், இறுதி நோக்கம் படைக்கப்பட்டவைகள், படைக்கப்படாதவைகள் அல்லது வானத்திலும், பூமியிலும் படைக்கப்பட்டவைகள் - படைக்கப்பட்டவைகளைப்பற்றிதான் நாம் பேசுகிறோம். பரலோகத்தில் உள்ளவைகளும், பூலோகத்தில் உள்ளவைகளுமாகிய சகலமும் அவருக்குள்ளே கூட்டி, இசைவாய்ச் சேர்க்கப்பட வேண்டும். அவருடைய தலமைத்துவத்துக்கு உள்ளே கூட்டி இசைவாய்ச் சேர்க்கப்பட வேண்டும் என்பது தேவன் தம்முடைய இருதயத்திலே தீர்மானித்திருந்த தீர்மானம், நோக்கம், குறிக்கோள். இதை நாம் ஆதியாகமத்திலும் பார்க்கிறோம். புதிய ஏற்பாட்டிலும் பார்க்கிறோம்.
முழு வேதாகமத்தையும் இந்த நித்திய நோக்கத்தினுடைய வெளிச்சத்தில்தான் நாம் படிக்கிறோம், புரிந்துகொள்கிறோம், புரிந்துகொள்ள முடியும். தேவனுடைய நித்திய நோக்கம், God’s Eternal purpose என்ற வெளிச்சம், என்ற வரைச்சட்டம், என்ற framework இல்லாமல் இந்த வேதாகமத்தைப் படித்தால், அது அங்கும் இங்குமாக சிதறின சில வசனங்களாகத்தான் நமக்குத் தென்படுமேதவிர தேவனுடைய மனதையும், தேவனுடைய இருதயத்தையும் நாம் பார்ப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும், அதன்படி நம்முடைய வாழ்க்கையை regulate பண்ணுவதற்கும் அது நமக்குப் பயன்படாது. எது கிறிஸ்துவுக்கு ஒத்ததாக மாற்றப்பட்டிருக்கிறதோ அதுதான் கிறிஸ்துவோடு இசைவாகக் கூட்டிச்சேர்க்கப்பட முடியும். எந்தவொரு மனிதன், எந்தவொரு மனித சமுதாயம், எந்தவொரு சபை, கிறிஸ்துவுக்கு ஒத்ததாக உருமாற்றப்பட்டிருக்கிறதோ, மறுவுருவாக்கப்பட்டிருக்கிறதோ, ஒத்த உருவாக்கப்பட்டிருக்கிறதோ அந்தவொரு மனிதன், அந்தவொரு மனித சமுதாயம், அந்தவொரு சபைதான் கிறிஸ்துவோடு அவருடைய தலமைத்துவத்திற்குள்ளே இசைவாகக் கூட்டிச்சேர்க்கப்பட முடியும்.
‘ஒட்டு மண் சுவராகாது’ என்று பழைய காலங்களிலே ஒரு பழமொழி சொல்வார்கள். நான் நானாக இருப்பேன், என்னுடைய தன்மை, என்னுடைய சுபாவம், என்னுடைய குணாதிசயங்களின்படிதான் நான் இருப்பேன், அதை மறுவுருவாக்கவோ, ஒத்த உருவாக்கவோ நான் அனுமதிக்க மாட்டேன். அதற்காக நான் ஒரேயடியாக ஒன்றுமே செய்யாமலும் விடமாட்டேன். மேலோட்டமாக சில cosmetic changes பண்ணிக்கொள்வேன். என்னுடைய உணவை மாற்ற மாட்டேன், என்னுடைய உடற்பயிற்ச்சியை மாற்ற மாட்டேன். ஆனால் கொஞ்சம் make up மட்டும் போட்டுக்கொள்வேன். அநேகக் கிறிஸ்தவர்கள் ஆவிக்குரிய make up அடிப்பவர்கள். உணவுப் பழக்கங்களை மாற்றுவது கடினம், நம்முடைய வாழ்க்கை நடையை மாற்றுவது கடினம். ஏதோவொரு சந்தர்ப்பத்திற்கு ஒரு lipstick, ஒரு powder, கண்மை போட்டுக்கொள்வது மிகவும் எளிது. அன்றைக்குப் பார்த்து “ஓ! அல்லேலூயா, Praise the Lord” என்று சொல்வது. I call them the spiritual makeup, religious makeup.
ஆகவே, உள்ளான விதத்திலே கிறிஸ்துவைப்போல் மறுவுருவாக்கப்படுகிற, ஒத்தஉருவாக்கப்படுகிற மனிதர்களும், சபைகளும், மனித சமுதாயமும்தான் கிறிஸ்துவோடு எபேசியர் 1:10, 11இல் நாம் வாசிப்பதுபோல அவருடைய தலைமைத்துவத்துக்குள்ளே அல்லது அவருடைய தலைத்துவத்துக்கு உள்ளே under His headship கூட்டிச்சேர்க்கப்பட முடியும் அல்லது கூட்டிச்சேர்க்கப்பட முடியாது. இரும்பின் தன்மையிருந்தால் காந்தத்தோடு அதைக் கூட்டிச் சேர்க்கலாம், மரத்தின் தன்மையிருந்தால் காந்தத்தோடு அதைக் கூட்டிச்சேர்க்க முடியாது. இதைப் புரிந்துகொள்ள முடியும். இரண்டு பொருட்களைக் கூட்டிச்சேர்ப்பதற்கு அவைகளுடைய தன்மை இசைவாக இருக்க வேண்டும், ஒத்ததாக இருக்க வேண்டும், பொருத்தமாக இருக்க வேண்டும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒரு காந்தம்தான். ஆனால் குறைந்தபட்சம் நான் ஒரு இரும்பின் தன்மையாவது பெறாவிட்டால், அவரோடு கூட்டிச்சேர்க்கப்படுவது, இசைவாக, பொருத்தமாக கூட்டிச்சேர்க்கப்படுவது, ஒத்ததென்று கூட்டிச்சேர்க்கப்படுவது நடைபெறாது.
இந்த முழு பிரபஞ்சத்திலேயும் கிறிஸ்துவுக்கு ஒத்ததாக மறுவுருவாக்குவதும், ஒத்தவுருவாக்குவதும் தேவனுடைய நீண்டகாலச் செயல்திட்டம். God’s Long-term project. தம்முடைய இந்த நீண்டகால செயல்திட்டத்திலிருந்து தேவன் இடதுபுறம், வலதுபுறம் விலகுவதில்லை. அதே எபேசியர் ஒன்றாம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். அவர் தம்முடைய ஆலோசனைக்குத்தக்கதாக, எல்லாவற்றையும் நடப்பிக்கிறவர். who works all things according to the counsel of His will என்று எழுதியிருக்கிறது. தம்முடைய சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் இந்தப் பூமியிலே நடப்பிக்கிறார். பூமியிலும் வானத்திலும் நடப்பிக்கிறார். தேவதூதர்களுடைய வாழ்க்கையிலும் அதையே நடப்பிக்கிறார். ஒரு சிற்றெறும்பு, கட்டெறும்பின் வாழ்க்கையிலும் அதையே நடப்பிக்கிறார். சங்கீதக்காரன் இதைக் குறித்து ஆச்சரியப்படுகிறான். கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் அவர் ஆகாரம் கொடுக்கிறார் என்று எழுதுகிறான். “ஏற்றவேளையில் ஆகாரத்தைத் தருவீர் என்று அவைகளெல்லாம் உம்மை நோக்கிக் காத்திருக்கும். நீர் கொடுக்க, அவைகள் வாங்கிக்கொள்ளும்; நீர் உம்முடைய கையைத் திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும். நீர் உமது முகத்தை மறைக்க, திகைக்கும்; நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள, அவைகள் மாண்டு, தங்கள் மண்ணுக்குத் திரும்பும்.”
“நாம் எப்படிப்பட்ட தேவனை உடையவர்களாய் இருக்கிறோம். பெரிய திமிங்கலங்களைக்குறித்து அக்கறைகொண்டு அவைகளுக்கும் ஆகாரம் கொடுக்கிறார், உப்புப் பெறாத காக்கைக் குஞ்சுகளுக்கும் அவர் ஆகாரம் கொடுக்கிறார். இந்த மாபெரும் தேவனுடைய செயல் திட்டத்தில் நமக்கும் ஒரு பங்கு இருக்கிறது,” என்று ஒரு பரிசுத்தவான் எழுதுகிறார்.
இந்தப் பூமியிலே கிறிஸ்துவல்லாத ஒரு மூலக்கூறும் புகுந்திருக்கிறது. ஏதேன் தோட்டத்திலே - மனிதர்களாகிய நாம் கிறிஸ்துவல்லாத ஒரு மூலக்கூறுக்கு நம்மைத் திறந்து, நம்மை விரித்து, இடங்கொடுத்தோம். ஆகவே, முதல் மனிதன்தொட்டு கிறிஸ்துவல்லாத அந்த மூலக்கூறு சந்ததி சந்ததியாய், தலைமுறை தலைமுறையாய் நமக்குள்ளும் வந்திருக்கிறது. அதை நாம் பாவம் எனலாம், உலகம் எனலாம், மாம்சம் எனலாம், சுயம் எனலாம். இவையெல்லாமே கிறிஸ்துவல்லாதவை, கிறிஸ்து இல்லாதவை என்றும் சொல்லலாம். கிறிஸ்துவல்லாதவை, கிறிஸ்து இல்லாதவை, கிறிஸ்துவுக்கு முரணானவை, கிறிஸ்துவுக்கு ஒவ்வாதவை, கிறிஸ்துவுக்கு எதிரானவை, கிறிஸ்துவுக்குப் பகையானவை. இப்படி பல வார்த்தைகளைப் பயன்படுத்தி இதை வர்ணிக்க வேண்டியிருக்கும். அது கிறிஸ்துவுக்கு எதிர்த்து நிற்கும். என்னிலே, நம்மிலே கிறிஸ்துவுக்கு எதிர்த்து நிற்கக்கூடிய ஒரு மூலக்கூறு உண்டு. இதை நாம் இனங்காண வேண்டும். தமிழில் பேச்சுவழக்கில் சொல்வதுபோல “நாமெல்லாம் இலேசுப்பட்ட ஆட்கள் இல்லை. பார்ப்பதற்கு ஐயோ பாவம்போல் இருப்பேன் நான், ஆனால் இலேசுப்பட்ட ஆள் இல்லை.” அதைப் பவுல் கண்டுபிடித்தார். “என்னில் பாவம் வாசமாயிருக்கிறது,” என்று ரோமர் 7இல் அவர் கூறுகிறார். ஒருவன் நிறைய project வைத்திருக்கிறான். “அந்த நல்லது பண்ண வேண்டும், இந்த நல்லது பண்ண வேண்டும்,” என்று நிறைய வைத்திருக்கிறான். அந்த project எல்லாம் take offகூட ஆகவில்லை. பல projects take off ஆன வேகத்திலேயே land ஆகிவிட்டது. அது ரோமர் 7ம் அதிகாரம்..
ஆகவே, இப்படியிருக்க தேவன் தம் நித்திய நோக்கத்தையும், நித்தியத் திட்டத்தையும், நிறைவேற்றுவதிலே செய்யவேண்டிய ஒரு காரியம் என்னவென்றால் காலங்கள் நிறைவேறும்போது எது கிறிஸ்துவுக்கு ஏற்றதாய், கிறிஸ்துவுக்கு ஒத்ததாய், கிறிஸ்துவுக்கு உகந்ததாய் மறுவுருவாக்கப்பட்டிருக்கிறதோ, ஒத்த உருவாக்கப்பட்டிருக்கிறதோ அது கிறிஸ்துவோடு கூட்டி இசைவாய்ச் சேர்க்கப்படும். கிறிஸ்துவுக்கு ஏற்புடையதல்லாத, கிறிஸ்துவுக்கு ஒவ்வாத, கிறிஸ்துவுக்கு உகாத, கிறிஸ்துவுக்கு ஏற்காத, கிறிஸ்துவல்லாத, கிறிஸ்து இல்லாத அவர் என்ன செய்வார்?
ஒன்று நான் சொல்ல விரும்புகிறேன். “இவன் நூற்றுக்கு நூறு சதவிகிதம் கிறிஸ்துவுக்கு ஒத்து உருவாக்கப்பட்ட மனிதன் அல்லது இது நூற்றுக்கு நூறு சதவிகிதம் கிறிஸ்துவுக்கு ஒத்து உருவாக்கப்பட்ட சபை,” என்று ஒன்று கிடையாது. எந்தளவிற்கு To that degree to which we have been transformed and conformed to the character of Christ, we will be headed up, we will be gathered up into Christ. இது நமக்குப் பரவசத்தையோ அல்லது பெரிய கதறுதலைையோ கொண்டுவருவதில்லை என்பதுதான் இந்தச் செய்தியினுடைய பாரம். என்னுடைய வாழ்க்கையின் பெருவாரியான பகுதியைக் கிறிஸ்துவோடு கூட்டிச்சேர்க்கலாமா அல்லது கிறிஸ்துவோடு கூட்டிச்சேர்க்க முடியாதா என்று மதிப்பிடுகின்ற, கணிக்கின்ற, assess பண்ணுகின்ற, evaluate பண்ணுகின்ற ஒரு நாள் வருகிறது, slangஇல் இப்படி சொல்வார்கள்: பொத்தாம் பொதுவாக “நாமெல்லோரும் இயேசுவோடு இருப்போம், அவர் வருவார், நான் அவரோடு போவேன், அவரோடு நான் பாடுவேன், நான் ஆடுவேன், நான் தாவீதைப் பார்ப்பேன், ஆடுவேன், மிரியாமைப் பார்த்து ஆடுவேன்,” என்பதெல்லாம் நல்ல கற்பனை. ஒரு நாள் வருகிறது, இது உண்மை.
அப்போஸ்தலர் 17:31யையும், ரோமர் 2:16யையும் வாசிப்போம். “மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்.” அப்போஸ்தலனாகிய பவுல் எப்படி நற்செய்தி அறிவிக்கிறார் என்று இங்கு எழுதியிருக்கிறது. அத்தேனே பட்டணத்தில் நற்செய்தியை அறிவிக்கும்போது, இவை அவருடைய கடைசி வாக்கியங்கள். தேவன் ஒரு நாளை நியமித்திருக்கிறார். அந்த நாளிலே தான் நியமித்த ஒரு மனிதனைக்கொண்டு, இந்தப் பூமி, வானம், பூமியிலுள்ள மனிதர்கள் எல்லாரையும் அவர் நியாந்தீர்ப்பார். இது உண்மை. இது உறுதி. இது நிச்சயம். இதற்கு நிரூபணம் அந்த மனிதனை அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினார்.
“நான் உங்களுக்கு humor பண்ணுகிறேன், joke அடிக்கிறேன் என்று நினைக்காதீர்கள்,” என்று அத்தேனே பட்டணத்திலுள்ள தத்துவஞானிகளுக்கு அவர் சொல்லுகிறார். “அந்த மனிதன் மரித்தார்; தேவன் அவரை உயிரோடு எழுப்பினார். ஆகவே, நான் சொல்கிறபடி, ஒரு நாளிலே இந்த மனிதனைக்கொண்டு பூமியிலுள்ள அனைவரையும் அவர் நியாயமாய் நியாயந்தீர்ப்பார், நீதியாய் நியாயந்தீர்ப்பார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒரு நாளிலே நீதியாய் நியாயந்தீர்க்க வருவார்,” என்பது நற்செய்தியினுடைய ஒரு பங்கு.
இந்த நியாயத்தீர்ப்பு ஒரு நாளில் நடைபெறும். இந்த நியாயத்தீர்ப்பு இருசாராருக்கு நடைபெறும். தேவன் உலகத்தையும் நியாயந்தீர்ப்பார், தேவ மக்களையும் நியாயந்தீர்ப்பார். திருவெளிப்பாடு 20:12,13யைக் குறித்துக்கொள்ளுங்கள். “மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள். சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.” ஆனால், தேவன் உலகத்தை நியாயந்தீர்க்கிற அளவுகோல் வேறு, தேவனுடைய மக்களை நியாயந்தீர்க்கிற அளவுகோல் வேறு.
நான் சில உண்மைகளை மட்டும் உங்களுக்குமுன்பாக வைக்கிறேன். தேவன் நியாயந்தீர்க்கும்போது இரு சாராரை நியாயந்தீர்க்கிறார். ஒன்று, இந்த உலகத்து மக்கள். “ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக்கொண்டு நீங்கள் என்ன செய்தீர்கள்? ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றி உங்களுடைய முடிவு என்னவாக இருந்தது?” என்பது அவர்களுக்கு அவர் பயன்படுத்துகிற அளவுகோலாக இருக்கும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களுக்கு யாராக இருக்கிறார்? அவர் கடவுள்களில் ஒருவர், அவரும் ஒரு கடவுள். ‘புத்தன், இயேசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக? தோழா, ஏழை நமக்காக’ என்ற மனப்பாங்கு உள்ளவர்களாக இருந்தால், அவர்களைத் தேவன் நியாயந்தீர்ப்பார்.
இயேசு கிறிஸ்து மகாத்துமாக்களில் ஒருவரோ, கடவுள்களில் ஒருவரோ அல்ல. அவர் தேவாதி தேவன். அவர் இந்தப் பூமிக்கு மனிதனாக வந்தார். மனிதனுடைய பாவங்களிலிருந்து மீட்டு இரட்சிக்கிற ஒரே நபர், ஒரே பெயர், ஒரே நாமம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே. “அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.” அதனுடைய அர்த்தம் என்னவென்றால் மனிதர்கள் பாவ மன்னிப்பும், மீட்பும், இரட்சிப்பும் பெறுவதற்கு இந்த ஒரு நபர் இன்றி, வேறொரு நபர் தேவனால் கொடுக்கப்படவில்லை.
“இயேசு கிறிஸ்துவைக் கேள்விப்படாமல் அமேசான் காடுகளில் வாழ்ந்துகொண்டிருக்கிற காட்டுமிராண்டி மக்களைக்குறித்து நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?” என்று ஒரு சிலர் கேட்கலாம். நீங்கள் அமேசான் காடுகளில் வாழவில்லை. நாம் இந்த உலகத்திலே வாழ்கிறோம், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றிக் கேட்கின்ற வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது. மிக முக்கியமாக நல்லதொரு மனசாட்சியும், நல்லதொரு மனமும் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
“இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படும். நாம் ஒரு நாள் பரலோகத்திலே இருப்போம் அல்லது நாம் இறந்தபிறகு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வருவார். அந்த நாளிலே நாம் மீண்டும் உயிர்த்தெழுவோம். அதன்பின் நாம் யுகயுகமாய் கிறிஸ்துவோடு வாழ்வோம்,” என்று fairytale முடிவுபோல தேவனுடைய நற்செய்தியை முடிக்க முடியாது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி அப்படி முடியவில்லை. “இயேசு வருகிற நாளிலே நாம் மரித்திருந்தால் உயிர்த்தெழுவோம், நாம் உயிரோடு இருந்தால் வானங்களிலே எடுத்துக்கொள்ளப்படுவோம். பிறகு நாம் அவரோடு வாழ்வோம்,” என்று நற்செய்தி முடியவில்லை.
தேவனுடைய மக்களுக்கு நியாயத்தீர்ப்பு உண்டு. நம்மையும் தேவன் நியாயந்தீர்ப்பாரா? ஆம். தேவனுடைய மக்களையும் அவர் நியாயந்தீர்ப்பார். நமக்கு என்ன அளவுகோல்? தேவன் எந்த அளவுகோலை, எந்த நிறைகோலை, எந்தத் தரத்தைவைத்து தேவனுடைய மக்களை நியாயந்தீர்ப்பார் என்றால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துதான் அந்த அளவுகோலாகவும், நிறைகோலாகவும், தரமாகவும் இருப்பார். இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டீர்களா, ஏற்றுக்கொள்ளவில்லையா என்பதல்ல அளவுகோல். இந்த இயேசு கிறிஸ்து உங்கள் உள்ளமைப்பிலும், வாழ்க்கையிலும், உங்கள் பணிவிடையிலும், உங்கள் முழு வாழ்க்கையிலும் எவ்வளவு உருவாகியிருக்கிறார் என்ற அளவுகோலைவைத்து தேவனுடைய மக்களையும், தேவனுடைய மக்களுடைய சமுதாயங்களாகிய சபைகளையும் அளந்து அவர்களுக்கு வெகுமதி அளிப்பார். அவர்களுக்குப் பரலோகமா, நரகமா என்பதல்ல கேள்வி; அவர்களுக்கு ஒரு வெகுமதி உண்டு. “என்ன வெகுமதி?” என்று என்னைக் கேட்க வேண்டாம். அதைப்பற்றிப் பேசுவதற்கு நான் இந்த இடத்தைத் எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், ஒரு வெகுமதி உண்டு. அந்த வெகுமதியைப்பொறுத்து நாம் பரவசம் அடைவோம்,அல்லது கதறுவோம்.
கதறுதல் என்றால் என்ன தெரியுமா? ஒரு மனிதன் தன் தலைப்பிள்ளை செத்துப்போனால் கதறுவான் இல்லையா? ஒரு குழந்தை அல்லது ஒரு வாலிபன், ஒருவனுடைய முதல் மகன் இறந்துபோனால் ஒரு மனிதன் எப்படிக் கதறுவானோ அதுதான் கதறுதல். “அது பரவாயில்லை. 10 மதிப்பெண்களுக்கு 9 மதிப்பெண்கள் வாங்கி தேர்ச்சி பெற்றுவிடுவோம் இல்லையா?” என்று நினைக்காதீர்கள். அக்கம்பக்கம் சுற்றிப் பார்த்து, “அவர் 8 மதிப்பெண்கள்தான் வாங்கியிருக்கிறார். இவர் 7 மதிப்பெண்கள்தான் வாங்கியிருக்கிறார். நான் 9 வாங்கியிருக்கிறேன். பரவாயில்லை,” என்று நாம் மகிழ்ச்சி அடைவோம் என்று நினைக்கின்றோம். கறைபடிந்த, சீரழிந்த, இந்தப் பாவ உலகத்திலே இப்படிப்பட்ட காரியங்கள் நமக்கு மகிழ்ச்சியைத் தரும். “எனக்கு ஒரு கண் போனால் பரவாயில்லை, என்னுடைய எதிரிக்கு இரண்டு கண்களும் போய்விடவேண்டும்,” என்று உலகத்து மக்கள் சொல்லுவார்கள். இது உலக மக்களின் தத்துவம். “எனக்கு ஒரு கண் போய் விட்டதே!” என்று அவர்கள் கதறுவதில்லை. “என்னுடைய பகைவனுக்கு இரண்டு கண்ணும் போய்விட்டது!” என்று அவர்கள் பரவசமடைவார்கள்.
ஆனால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்தப் பூமியைச் சுதந்தரிப்பதற்காக வருவார். இந்தப் பூமி மனிதர்களுடைய பூமி அல்ல, இது பிசாசுடைய பூமி அல்ல. தற்காலிகமாக இது மனிதர்களுடைய நிர்வாகத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது அவருடையது. அவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவர். தற்காலிகமாகத் தம் Lordshipஐ அவர் மனிதர்களின் கைகளிலே விட்டுக் கொடுத்திருக்கிறார். அவ்வளவுதான்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்தப் பூமியினுடைய அதிபதியாகிய, ஆளுநராக, வரும்போது, “நான் 10க்கு 9 வாங்கிவிட்டேன். என் அண்டை அயலகத்தார் அல்லது என் நண்பர்கள், எதிரிகள் இவர்களெல்லாம் 8, 7, 6தான் வாங்கியிருக்கிறார்கள்,” என்ற தத்துவங்கள் மனிதர்களுக்கு மகிழ்ச்சியையோ, பரவசத்தையோ தராது. மாறாக, கதறுதலை உண்டாக்கும். இதை நீங்கள் நம்புங்கள்.
“நான் கிறிஸ்துவல்லாத எத்தனையோ காரியங்களை அருமையானவை என்று கட்டிப்பிடித்துக்கொண்டிருந்தேனே! கிறிஸ்துவுக்குரிய காரியங்களை அசட்டைசெய்தேனே, புறக்கணித்தேனே, அற்பமாக எண்ணினேனே, தாழ்வாக எண்ணினேனே, மதிப்பற்றவை என்று எண்ணினேனே!” என்ற கதறுதல் அந்த நாளிலே உண்டாகும்.
1 கொரிந்தியர் 3ஆம் அதிகாரம் இதைப்பற்றி விளக்கமாகப் பேசுகிறது. 1 கொரிந்தியர் 3ஐப்பற்றி அதிகமாகச் சொல்ல வேண்டியதில்லை. “அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்.” ”இதற்கு வெகுமதி என்ன? அதனுடைய தரம் என்ன? இதனுடைய மதிப்பு என்ன? இதனுடைய உள்ளீடு என்ன?” என்று அந்த நாளிலே தீயானது பரிசோதிக்கும். இதை நான் கடைசிக் குறிப்புக்கு வைத்திருக்கிறேன்.
என்னுடைய முதல் குறிப்பு: தேவனுடைய மக்களுக்கு இறுதித் தீர்ப்பு என்று ஒன்று உண்டு. There is a final judgement. உலகத்திற்கு ஒரு தீர்ப்பு உண்டு. தேவனுடைய மக்களுக்கும் ஒரு தீர்ப்பு உண்டு. தேவனுடைய மக்களுக்கு அளிக்கப்படுகின்ற தீர்ப்பின் முடிவு வெகுமதியாக இருக்கும் அல்லது நட்டமாக இருக்கும். இன்னும் இரண்டு வசனங்களைக்கூட நீங்கள் குறித்துக்கொள்ள வேண்டும். 2 தீமோத்தேயு 4:1; 1 பேதுரு 4:5. இந்த வசனங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நியாயாதிபதியாக, நீதிபதியாக, மரித்தோரையும், உயிரோடிருப்பவரையும் நியாயந்தீர்ப்பார் என்று கூறுகின்றன. 2 தீமோத்தேயு 4:1; 1 பேதுரு 4:5. “நான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது.” அப்போஸ்தலனாகிய பவுல் நற்செய்தி அறிவித்தபோதெல்லாம் நியாயத்தீர்ப்பைப்பற்றியும் பேசினார். அது நற்செய்தியின் ஒரு பகுதியாக இருந்தது. “ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வருவார், ஒரு நாளிலே அவர் எல்லாவற்றையும் தீர்ப்பார், அளப்பார், நிறுத்துப்பார்ப்பார்,” என்று அவர் கூறினார். “உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் நியாயத்தீர்ப்புக்கொடுக்க ஆயத்தமாயிருக்கிறவருக்கு அவர்கள் கணக்கொப்புவிப்பார்கள்,” என்று பேதுரு எழுதுகிறார்.
என்னுடைய இரண்டாவது குறிப்பிற்குச் செல்கிறேன். இந்தத் தீர்ப்பினுடைய முடிவு நான் சொன்னதுபோல வெகுமதியாக இருக்கும் அல்லது நட்டமாக இருக்கும். இந்த முழு மனித வாழ்க்கையும் ஒரு வெகுமதியில் முடிவடையலாம் அல்லது நட்டத்தில் முடிவடையலாம். ஆகவே, இது தேவனுடைய மக்களுக்கு ஒரு விதமான பயபக்தியை உண்டுபண்ண வேண்டும்.
“கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு,” என்று எபேசியர் 2:8 கூறுகிறது. நாம் கிரியைகளினால் அல்ல கிருபையினால் விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். இது 16ம் நூற்றாண்டு தொடங்கி தேவமக்களுடைய பாடலாக இருக்கிறது. கிரியைகளினால் அல்ல கிருபையினால், not by works but by grace. அல்லேலூயா ! நான் மகிழ்ச்சி அடைகிறேன், நீங்கள் மகிழ்ச்சியடைய வேண்டும். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், கிருபையினால் விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்படுவது என்பதன் பொருள், அதற்குப்பிறகு தேவனுடைய மக்கள் தங்களுடைய முழு வாழ்க்கையையும், தங்களுடைய சமுதாய வாழ்க்கையையும், எப்படி வாழ்ந்தாலும் சரி, அது ஒரு பொருட்டல்ல என்பதல்ல. அவர்கள்தான் இரட்சிக்கப்பட்டுவிட்டார்களே! அப்படியல்ல. இரட்சிப்பு என்பதே ஒரு நீண்ட வழிமுறை, நீண்ட ஒரு செயல்முறை. என்றைக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நாம் விசுவாசித்தோமோ அன்றைக்கு நம் இரட்சிப்பு தொடங்கினது. இப்போது நாம் இரட்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம். அவர் வருகின்ற நாளிலே நம்முடைய இரட்சிப்பு நிறைவுபெறும் என்றுதான் புதிய ஏற்பாடு போதிக்கிறது. புதிய ஏற்பாடு இதைப் பூடகமாகவோ, ஒளிவுமறைவாகவோ, கருகலாகவோ போதிக்கவில்லை. வெளிப்படையாகப் போதிக்கிறது.
Save என்பது இறந்த காலத்திற்கும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது, நிகழ்காலத்திற்கும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது, எதிர்காலத்திற்கும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்போது” நாம் இரட்சிக்கப்படுவோம் என்று எழுதியிருக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல், “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன், இது முதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்,” என்று கூறுகிறார் (2 தீமோத்தேயு 4:8). நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்த நாளிலே தருவார். அந்த நாள். The day, the day, that day. தேவனுடைய மக்கள் அந்த நாள் என்ற எதிர்பார்ப்பிலே வாழ்ந்தார்கள். அந்த நாளின் வெளிச்சத்திலே அவர்கள் வாழ்ந்தார்கள். “கிருபையினாலே அவர் எனக்கு ஒரு கிரீடத்தைத் தருவார்,” என்று பவுல் பாடவில்லை. “நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்த நாளிலே நீதியின் கிரீடத்தை எனக்குத் தருவார்.”
யாக்கோபு எழுதிய நிருபத்தைப் புதிய ஏற்பாட்டிலிருந்து தூக்கிவிட வேண்டும் என்று ஒரு காலகட்டத்திலே, மார்ட்டின் லூத்தர் உட்பட, ஒரு சாரார் சொன்னார்கள் . “யாக்கோபுக்குக் கிருபையைப்பற்றிய ஒரு வெளிப்பாடே இல்லை. இவர் பவுலுக்கு எதிராளிபோல் எழுதுகிறார். பாருங்கள், ஆபிரகாம் விசுவாசத்தினால் இல்லை, கிரியையினால் இரட்சிக்கப்பட்டான். ராகாப்பைப் பாருங்கள். கிரியையினால் இரட்சிக்கப்பட்டாள் என்று இவர் கிரியைப்பற்றி எழுதுகிறார். எனவே, இது புதிய ஏற்பாட்டில் இருக்கக்கூடாது,” என்று சொன்னார்கள். அப்படியல்ல, தேவனுடைய மக்கள் ஒரு தவறு, ஒரு பிழை, செய்கிறார்கள். கிருபை என்றவுடன் அதற்குபிறகு நம் வாழ்க்கையைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை, நியாயத்தீர்ப்பைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை, வெகுமதியையும், நட்டத்தையும்பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று ஒருவிதமான போதைக்குள் ஆளாகிவிடுகின்ற ஆபத்து உண்டு. அந்த ஆபத்தைச் சரிக்கட்டுவதற்காக யாக்கோபு எழுதுகிறார்.
கிருபை நம்மைப் பொறுப்பற்றவர்களாக மாற்றுவதில்லை. கிருபையும் பொறுப்பும் ஒன்றுக்கொன்று முரணானதில்லை. தேவன் நமக்குக் கிருபை அளிக்கிறார். ஆனால், பொறுப்போடு பரிசுத்த ஆவியைப் பின்பற்றி பரிசுத்த ஆவியினுடைய வழிகளில் நடக்கின்றவர்களுக்கு தேவன் கிருபை அளிக்கின்றார். நாம் தேவனுடைய கிருபையைப் பெற்று வீணாக்கவும் முடியும். தேவன் அதிகமான கிருபை அளிக்க முன்வருகிறார். ஆனால், அந்தக் கிருபையில் எதையுமே நாம் பெறாமல், பயன்படுத்தாமல், கிருபையை வீணாக்கவும் முடியும்.
ஆகவே, தேவனுடைய மக்களைத் தேவன் நியாயந்தீர்க்கும்போது ஒரு வெகுமதியைத் தருகிறார் என்று 2 தீமோத்தேயு 4:8இல் பார்க்கிறோம். அந்த வெகுமதியை அப்போஸ்தலனாகிய பவுல் நீதியின் கிரீடம் என்று சொல்லுகிறார். அந்த வெகுமதி எப்படிப்பட்டது என்று மிகவும் துல்லியமாக, தெள்ளத் தெளிவாக எழுதி வைத்திருக்கவில்லை. கிரீடம் என்றவுடனே 12 நட்சத்திரங்கள் கொண்ட ஒரு கிரீடத்தைக் கர்த்தர் தலையிலே சூட்டுவார் என்பதுபோல தேவனுடைய மக்கள் கற்பனை செய்துகொள்ள வேண்டாம். ஆனால், எல்லோருக்கும்முன்பாக ஒரு கிரீடம் சூட்டினால் ஒருவன் எப்படி மகிழ்வானோ அப்படிப்பட்ட மகிழ்ச்சி கிடைக்கும்.
பள்ளி, கல்லூரியில் படிக்கையில் பரிசு வாங்குவதற்கு மேடைக்கு வருமாறு பெயர் சொல்லிக் கூப்பிடும்போது, மேடைக்கு நடந்து போகும் அந்தத் தருணம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். எல்லாருடைய கண்களுக்குமுன்பாக நாம் கனம்பண்ணப்படுவது மகிழ்ச்சியைத் தரும். மனித இயல்பு நல்ல இயல்பு. அதில் எந்தத் தவறும் இல்லை. யாருக்குமுன்பாக, எதற்காக, கனம் பண்ணப்படுகிறோம், எந்தக் கனத்திற்காக நாம் மகிழ்ச்சி அடைகிறோம் என்பதுதான் முக்கியமான காரியம்.
என்ன வெகுமதி? அது கண்டிப்பாக தங்கம், வெள்ளி, பொன் இல்லை. “நாம் பரலோகத்தில் தங்க வீதியில் நடப்போம். இன்றைக்கு அதையெல்லாம் காதிலே, கழுத்திலே போட்டிருக்க வேண்டுமா?” என்று சொல்கிற பிரசங்கிமார்களை எனக்குத் தெரியும். பரலோகத்திலே நாம் தங்க வீதிகளில் நடப்போம் என்பது உண்மைதான். ஆனால், அந்தத் தங்கம் நாம் இப்போது காதிலே, கழுத்திலே போட்டுக்கொண்டிருக்கிற தங்கம் அல்ல. மனிதர்கள் புரிந்துகொள்வதற்காக வேதாகமத்தில் அப்படிப்பட்ட பதங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தங்கம் விலையேறப்பெற்றது அல்லது மங்காதது அல்லது துருப்பிடிக்காதது. அதுபோல தேவனுடைய சுபாவம் மங்காதது, துருப்பிடிக்காதது, கறைபடாதது என்பதைக்குறிக்க பொன் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அது தேவனுடைய சுபாவம். நம்முடைய வாழ்க்கை, நடை தேவனுடைய சுபாவமுள்ளதாக இருக்கும். புதிய எருசலேமிலே தேவனுடைய மக்கள் எல்லாரும் அப்படிப்பட்ட வாழ்க்கை, நடை, உடையவர்களாக இருப்பார்கள் என்பதைத்தான் தங்க வீதி அல்லது பொன் வீதி குறிக்கிறது.
“பூமியில் தாரைக் காய்ச்சி ஊற்றி சாலை போடுவதுபோல, புதிய எருசலேமில் தங்கத்தைக் காய்ச்சி ஊற்றி சாலை போடுவார்கள்போலிருக்கிறது. பார்ப்பதற்கும், நடப்பதற்கும் நன்றாக இருக்கும்,” என்று நான் சிறு வயதில் நினைத்தேன்.
திருவெளிப்பாடு 22:12க்கு வருகிறேன். “இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.”அவனவனுக்கு அவர் அளிக்கின்ற வெகுமதி ஆவரோடுகூட வருகிறது. அது வெகுமதியாக இருக்கலாம் அல்லது நட்டமாக இருக்கலாம். “அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும்,” என்று 1 கொரிந்தியர் 3ஆம் அதிகாரத்தில் நாம் வாசித்தோம். அந்த நாளிலே தேவன் ஒவ்வொருவனுடைய வேலைப்பாட்டையும் பரிசோதிப்பார்.
நம்முடைய வாழ்க்கை ஒரு வேலைப்பாடு. நம்முடைய பணிவிடை ஒரு வேலைப்பாடு, நம்முடைய குடும்பம் ஒரு வேலைப்பாடு. மனித வாழ்க்கை ஒரு வேலைப்பாடு. அந்த மனித வாழ்க்கையினுடைய முடிவு என்ன?, கனி என்ன?. What is the outcome of this human life? What is the outcome of these services? what is the outcome of so-called ministry? what is the outcome of so-called church life? “நாங்கள் program நிறைய பண்ணினோம், நிறைய பாட்டு record பண்ணினோம்,” என்று அநேகர் சொல்லலாம். ஆனால், பாட்டு record பண்ணும்போது நாம் கிறிஸ்துவுக்கு ஒத்தவர்களாக மறுவுருவானோமா, ஒத்தவுருவானோமா என்பதுதான் காரியம்.
Youtubeஇல் மக்கள் பதிவேற்றம் செய்கிற பாடல்களை பார்க்கிறோம். அவர்கள் செலவழிக்கின்ற முயற்சியையும், பிரயாசத்தையும், பிரயத்தனங்களையும் பார்க்கும்போது, இதில் ஒரு சதவிகிதம் முயற்சியை அவர்கள் மறுவுருவாவதற்கும், ஒத்தவுருவாவதற்கும் செலவழித்தால், தேவ மக்களுடைய தாக்கம் இந்த உலகத்தின்மேல் பலமடங்கு அதிகமாய் இருக்கும். தேவனுடைய மக்கள் இதுபோன்ற முயற்சிகளில் ஒரு fraction, ஒரு பின்னம், ஒரு பகுதி, தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும், சபை வாழ்க்கையையும், குடும்ப வாழ்க்கையையும், சமுதாய வாழ்க்கையையும் மேம்படுத்துவதற்கு, திருத்துவதற்கு, சரிசெய்வதற்கு பயன்படுத்துவார்கள் என்றால் The impact of Christians, Impact of the Church in the world will be tremendous . நாம் அதை ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். இன்றைக்குத் தனிப்பட்ட கிறிஸ்தவர்களுடைய, சபைகைளுடைய தாக்கம் உலகத்தின்மேல் மிகவும் நலிந்து, மெலிந்து காணப்படுகிறது.
பேதுரு ஒருமுறை சொன்னதுபோல், “வெள்ளியும், பொன்னும் என்னிடத்தில் இல்லை,” என்று இன்றைக்கு பலர் அழுதுகொண்டு இருக்கிறார்கள். ஆனால், பேதுரு, “வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை, எங்கள் சபைப் பெயரில் நாங்கள் இன்னும் நிலபுலம் வாங்கவும் இல்லை, பதிவு செய்யவும் இல்லை. நாங்கள் மிகவும் ஏழை சபை,” என்பதுபோல் சொல்லவில்லை. “வெள்ளியும், பொன்னும் என்னிடத்தில் இல்லை, I have something better. என்னிடத்தில் உள்ளதை உனக்குத் தருகிறேன். நசரேயனாகிய இயேசுவின் நாமத்தில் எழுந்து நட.,” என்று தன்னிடம் இருந்த கிறிஸ்துவைக் கொடுத்தார்.
இரண்டு நண்பர்கள் இருந்தார்கள், ஒருவர் போப்பாக மாறினார்.அடுத்தவர் துறவியாக மாறினார். பல ஆண்டுகள் கழித்து துறவியான நண்பர் போப்பாக மாறின நண்பரைச் சந்திக்கச் சென்றார். அவரைச் சந்திக்கச் சென்ற அறையில் போப் நண்பர் பிறரோடு சேர்ந்து அமர்ந்து தங்க நாணயங்களையும் வெள்ளி நாணயங்களையும் எண்ணிக்கொண்டிருந்தார். தன் துறவி நண்பரைப் பார்த்தவுடன், “நண்பா, Silver and Gold I have none. வெள்ளியும், பொன்னும் என்னிடத்தில் இல்லை என்று சபை சொல்ல முடியாது,” நகைச்சுவையுடன் சொன்னார். அதற்கு அவருடைய துறவி நண்பர், “ஆம் ! வெள்ளியும், பொன்னும் என்னிடத்தில் இல்லை என்று சபை சொல்ல முடியாது. ஆனால், என்னிடத்தில் உள்ளதை உனக்குத் தருகிறேன், நசரேயனாகிய இயேசுவின் நாமத்தினாலே எழுந்து நட என்றும் சபை சொல்ல முடியாது,” என்று சொன்னார்.
நாம் எதை நமக்கு அருமையானதாக, மதிப்புள்ளதாக, விலையேறப்பெற்றதாகக் கருதுகிறமோ அதுதான் நம்மிடத்தில் இருக்கும். வெள்ளியையும், பொன்னையும் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும்வரை அது நம்மிடத்தில் இருக்கும். கிறிஸ்துவைக் கட்டிப்பிடித்துக்கொண்டால் கிறிஸ்து இருப்பார்.
இந்த உலகத்தின்மேல் தாக்கத்தை உண்டுபண்ணுகிற ஒன்று, விலையேறப்பெற்ற ஒன்று, மதிப்புள்ள ஒன்று, வீரியமுள்ள ஒன்று, மக்களைத் திகைக்கவைக்கின்ற ஒன்று இருக்கிறது. அப்போஸ்தலர் 2ஆம் அதிகாரத்திலே பார்ப்பதுபோல அவர்களெல்லாம் பிரமித்தார்கள், ஆச்சரியப்பட்டார்கள். “எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா? அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி?”என்று ஆச்சரியப்பட்டார்கள்.
அவர்கள் பேசிய பல்வேறு மொழிகளுக்கு இப்போது நம் சகோதரர்கள் மலிவான counterfeit ஒன்று கண்டுபிடித்துவிட்டார்கள். அது உண்மையான தாக்கத்தை ஏற்படுத்துகிறதா? அப்போஸ்தலர் 16இல் பிலிப்பிய சிறை அதிகாரி, “ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்? என்று கேட்டதுபோல இந்த உலகம் நம்மிடம் கேட்பதில்லை. “ஆண்டவன்மாரே, நாங்கள் ஏன் இரட்சிக்கப்பட வேண்டும்?”என்றுதான் கேட்கிறது. ஏனென்றால், நம்மிடத்தில் உருவாகியிருக்கும் கிறிஸ்துவினுடைய அளவும் நிறைவும் அவ்வளவுதான். தேவமக்களுக்கு அதைப்பற்றி ஒரு பரிதவிப்போ, ஒரு தவிப்போ, ஒரு கதறுதலோ இல்லை, தேவனுடைய மக்களுக்குள் கிறிஸ்துவின் அளவு மிகவும் குறைவாகக் காணப்படுகிறது. அதை ஈடுகட்டுவதற்காக Youtubeல் காணொளி போடுவார்கள்.
ஒரு குறிப்பை வலியுறுத்துவதற்காக நான் கொஞ்சம் மிகைப்படுத்திப் பேசுகின்றேன். திருவெளிப்பாடு 11ஆம் அதிகாரம் 18ம் வசனத்தை வாசிப்போம். “ஜாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் மூண்டது; மரித்தோர் நியாயத்தீர்ப்படைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாயிருந்த சிறியோர் பெரியோருக்கும் பலனளிக்கிறதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும், காலம் வந்தது என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள்.” 1 பேதுரு 1:17யையும் வாசிப்போம். “அன்றியும், பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்.”
பயத்துடனே நடந்துகொள்ளுங்கள். Conduct yourself with fear. தேவனுடைய மக்களுக்கு இன்றைக்கு பயம் என்ற வார்த்தையே பிடிக்காது. “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்” நீதிமொழிகள் 1:7. இப்படி நாம் ஒரு வசனத்தை மேற்கோள்காட்டியவுடன், “பயமா! அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல,” என்று அவர்கள் இன்னொரு வசனத்தைச் சொல்வார்கள். “நீங்கள் ஒரு வாள் வீசினால், நாங்கள் இரண்டு வாள் வீசிவிட்டோம் பாருங்கள்,” என்பதுபோல் வசனத்தைப் பயன்படுத்துவார்கள்.
வேதத்தைப் படிக்கவேண்டிய முறை இதுவல்ல. தேவனுக்குப் பயப்படுகிற பயம் பயபக்தி, பெருமதிப்பு, வணக்கத்துக்குரிய தகுதி. இது கிருபைக்கு முரணானது அல்ல. “இப்படிப்பட்ட அசுத்தனாகிய எனக்கு, பாவியாகிய எனக்கு, நாற்றமடிக்கும் மனிதனாகிய எனக்கு, அருவெறுக்கத்தக்க மனிதனாகிய எனக்கு, தேவன் இப்படிப்பட்ட heavenly riches பரம வளங்களை, பரம செல்வங்களை, கொடுத்திருக்கிறாரே!” என்பது தேவனுடைய மக்களுக்கு தேவன்பேரில் பயபக்தியை உண்டாக்க வேண்டும்.
“அவர் பட்சபாதம் இல்லாமல் நியாயந்தீர்ப்பார். ஒரு நாளிலே நமக்கு வெகுமதியோ, நட்டமோ, உண்டு. அது நமக்குத் தவிப்பையோ அல்லது பரவசத்தையோ உண்டாக்கும். ஆகவே, நீங்கள் இந்தப் பூமியிலே பரதேசிகளாக சஞ்சரிக்கிற நாள்வரைக்கும் அந்தப் பிதாவினிடத்தில் பயபக்தியோடு நடந்துகொள்ளுங்கள்,” என்று பேதுரு எழுதுகிறார். அது வெகுமதியா, நட்டமா என்பதை 1 கொரிந்தியர் 3 மிகத் தெளிவாகப் பேசுகிறது. இதை நீங்கள் படித்துப்பார்க்க வேண்டும். 1 கொரிந்தியர் 3ஆம் அதிகாரம். “ஒருவன் கட்டினது எரிந்தும் போகலாம்; தீயின்வழியாகப் போகும்போது எரியாமலும் வெளிவரலாம். எரியாமல் வெளிவந்தால் நீங்கள் வெகுமதியைப் பெறுவீர்கள். எரிந்து சாம்பலாக வெளிவந்தால் நீங்கள் வெகுமதியைப் பெறமாட்டீர்கள். உங்கள் முழு மனித வாழ்க்கையும் நட்டமாக முடிந்துவிடும்,” என்கிறார்.
மொத்தம் நான்கு குறிப்புகள். முதலாவது இறுதித்தீர்ப்பு, இரண்டாவது வெகுமதி அல்லது நட்டம். மூன்றாவது குறிப்பு நடைமுறை வாழ்க்கை.
ஒரு நாளிலே தேவன் நம்மை நியாயந்தீர்ப்பார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒரு நாளில் வருவார், நம்மை நியாயந்தீர்ப்பார், நமக்குள் உருவான கிறிஸ்துவின் அளவின்படி ஒன்று நாம் வெகுமதியைப் பெறுவோம் அல்லது நட்டத்தைப் பெறுவோம். மல்கியாவிலே ஒரு வசனம் உண்டு. அதை நாம் அடிக்கடி மேற்கோள் காட்டியிருக்கிறோம். “என் சம்பத்தை நான் சேர்க்கும் நாளிலே அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; ஒரு மனுஷன் தனக்கு ஊழியஞ்செய்கிற தன்னுடைய குமாரனைக் கடாட்சிக்கிறதுபோல நான் அவர்களைக் கடாட்சிப்பேன். அப்பொழுது நீங்கள் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கு ஊழியஞ்செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைத் திரும்பவும் காண்பீர்கள்” (மல்கியா 3:17, 18).
சரி, ஒரு நாளிலே தேவன் நமக்குள் உருவான கிறிஸ்துவினுடைய அளவைவைத்து நம்மை நியாயந்தீர்ப்பார். ஆனால், அந்த நாள்வரை நாம் காத்திருக்க வேண்டுமா? இந்த நாட்களிலே தேவனுடைய மக்கள் நியாயத்தீர்ப்பின் வெளிச்சத்திலே எப்படி வாழ்வது? அதன் நடைமுறை விளைவு என்ன? நடைமுறைத் தாக்கம் என்ன? “எதிர்காலத்தில் ஏதோவொரு நாளிலேதானே தேவன் நம்மை நியாயந்தீர்ப்பார். இருக்கட்டும். இன்றைக்கு நாம் மனம்போல் வாழலாம், இல்லையா? மரித்தபின் நாம் பரலோகத்திற்குப் போவோமா, போகமாட்டோமா? போய்விடுவோம் என்றால், அது போதும். மற்றபடி வெகுமதி கூடவோ, குறையவோ இருந்தால் பரவாயில்லை. நட்டம், கூடவோ குறையவோ இருந்தால் பரவாயில்லை. நரகத்திற்குப் போகமாட்டோம் இல்லையா? பரலோகத்திற்குப் போய்விடுவது உறுதிதானே! நாம் மரித்தபின் பரலோகத்திற்குப் போவோம் என்று வேதாகமம் உறுதியாகச் சொல்கிறதா இல்லையா. சொல்லுகிறது. அப்படியென்றால் பரவாயில்லை. வேறு எதைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்லை,” என்பதுதான் இன்று பெரும்பாலான தேவமக்களுடைய மனப்பாங்கு.
ஒரு நாளிலே தேவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்ற ஒரு மனிதனைக்கொண்டு நியாயந்தீர்ப்பார். அன்று நாம் அவரைப் பார்ப்போம். இன்று தேவனுடைய மக்கள் அந்த நியாயத்தீர்ப்பின் வெளிச்சத்திலே வாழ வேண்டும். நியாயத்தீர்ப்பு என்று ஒன்று இல்லவே இல்லை என்ற ஒரு மனப்பாங்கிலே தேவனுடைய மக்கள் இன்றைக்கு வாழ்கின்றார்கள். தேவனுடைய மக்கள் நியாயத்தீர்ப்பின் வெளிச்சத்திலே வாழ வேண்டும் என்று புதிய ஏற்பாடு ஆணித்தரமாகப் போதிக்கிறது. 1 கொரிந்தியர் 5ஆம் அதிகாரம் 12, 13ஆம் வசனங்கள். “புறம்பே இருக்கிறவர்களைக்குறித்துத் தீர்ப்புச்செய்கிறது என் காரியமா? உள்ளே இருக்கிறவர்களைக்குறித்தல்லவோ நீங்கள் தீர்ப்புச்செய்கிறீர்கள்? புறம்பே இருக்கிறவர்களைக்குறித்து தேவனே தீர்ப்புச்செய்வார். ஆகையால் அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டுத் தள்ளிப்போடுங்கள்.” இன்னொரு வசனத்தை வாசிப்போம். 1 கொரிந்தியர் 4ஆம் அதிகாரம் 3, 4. “ஆயினும் நான் உங்களாலேயாவது மனுஷருடைய நியாயநாளின் விசாரணையினாலேயாவது தீர்ப்பைப் பெறுவது எனக்கு மிகவும் அற்ப காரியமாயிருக்கிறது; நானும் என்னைக்குறித்துத் தீர்ப்புச்சொல்லுகிறதில்லை. என்னிடத்தில் நான் யாதொரு குற்றத்தையும் அறியேன்; ஆகிலும் அதினாலே நான் நீதிமானாகிறதில்லை; என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே.” “நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்? நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?” 1 பேதுரு 4:17, 18.
1 கொரிந்தியர் 5ஆம் அதிகாரத்திலே பவுல் புறம்பேயிருக்கின்றவர்கள், உள்ளே இருக்கின்றவர்கள் என்று இரு சாரார்களைப்பற்றிச் சொல்லுகிறார். “புறம்பே இருக்கின்றவர்களை நியாயந்தீர்க்க முடியாது. உள்ளே இருக்கின்றவர்களை நியாயந்தீர்க்க முடியும்” என்பது மட்டுமல்ல, நியாயந்தீர்க்க வேண்டும் என்று சொல்லுகிறார். சபை வாழ்க்கையிலே ஒரு கொடிய பாவத்திலே வாழ்ந்த ஒரு மனிதனோடு எப்படி இடைப்பட வேண்டும் என்று 1 கொரிந்தியர் 5ஆம் அதிகாரத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார். “உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே; ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே. இப்படிப்பட்ட காரியஞ்செய்தவனை நீங்கள் உங்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள்,” என்று சொல்லுகிறார். இது அஞ்ஞானிகளுக்கிடையேகூட கேள்விப்படாத பாவம். இது தேவ மக்களுடைய சமுதாயத்தில் நடைபெறுகிறது. அது அவர்களுக்கு ஒரு பெரிய காரியமாகத் தெரியவில்லை. அதைக்குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கும்மேலாக, அவர்கள் அதைக்குறித்து இறுமாப்படைந்தார்கள்.
இதுதான் முக்கியமான காரியம். இது தீர்க்கப்படவேண்டிய ஒன்று. இது கிறிஸ்துவுக்கு ஒவ்வாதது மட்டும் அல்ல, இது கிறிஸ்துவுக்கு முற்றுமுடிய பகையானது. தேவ மக்களையும், தேவ மக்களுடைய சமுதாயத்தையும் அது இற்றுப்போகச் செய்யும், இல்பொருளாக்கிவிடும். இந்த உலகத்திலே அதை ஒரு குப்பையாக மாற்றிவிடும். இதுதான் தேவமக்களுடைய வாழ்க்கை என்றால், இதுதான் தேவமக்களுடைய வாழ்க்கையின் தரம் என்றால் இவர்கள் இந்த உலகத்திற்குக் கிறிஸ்துவைக் காண்பிக்க மாட்டார்கள், காண்பிக்க முடியாது; அவர்கள் கிறிஸ்துவைப் பிரகாசிக்கமாட்டார்கள், பிரகாசிக்க முடியாது. அவர்கள் உப்புச்சப்பில்லாத, கால்களின்கீழ் போட்டு மிதிக்கத்தக்க குப்பையாக மாறிவிடுவார்கள்.
ஆகவே, கொரிந்திய சபை இதைத் தீர்க்கவேண்டும் என்று சொல்லி அவர் தீர்ப்பையும் கூறுகிறார். என்ன தீர்ப்பு? “அவனை வெளியே அகற்றுங்கள்.” இந்தத் தீர்ப்பைக் கேட்டவுடன், “இது கேட்பதற்குக் கொடுமையாக இருக்கிறது. அன்பு, பரிவு, இரக்கம், தயவு - இப்படித்தானே இருக்க வேண்டும்! அப்போஸ்தலனாகிய பவுல் சொன்ன தீர்ப்பு சரியா? நீங்களே சொல்லுங்கள். அவனை அன்போடு, இரக்கத்தோடு, தயவோடு, பட்சமாக நடத்துங்கள் என்றுதானே சொல்ல வேண்டும்? அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டுத் தள்ளிப்போடுங்கள் என்று சொல்லவேண்டுமா?” என்று சிலர் நினைக்கலாம். இவன் தன்னுடைய வாழ்க்கையையும், தன்னைச் சுற்றியுள்ள தேவ மக்களுடைய வாழ்க்கையையும், தேவ மக்களுடைய சாட்சியையும் சீரழிக்கிறான். இப்படிப்பட்டவனோடு கனிவோடு, பணிவோடு, அன்போடு, பண்போடு, தயவோடு, பட்சமாய் நடந்துகொள்ளவது மூடத்தனம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இதை எப்படி நியாயந்தீர்ப்பாரோ அப்படி அவருடைய மனதோடும், அவருடைய இருதயத்தோடும் நாம் நியாயந்தீர்க்கப் பழக வேண்டும். அது நமக்கு இயல்பாக வருவதில்லை.
இதைத்தான் நான்காம் அதிகாரத்திலே பவுல் சொல்லுகிறார். “வேறொரு மனிதனுடைய நியாயத்தீர்ப்பை நான் அதிகமாக மதிப்பதில்லை,” என்று ஒருவன் சொன்னால், “ஓஹோ! அப்படியென்றால் உங்களுடைய நியாயத்தீர்ப்பைத்தான் நீங்கள் மதிப்பீர்களோ?” என்று பவுலிடம் கேட்டால், “என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே,” என்று அவர் சொல்லுகிறார்.
மனிதர்களாகிய நாம் நம்மை நியாயந்தீர்க்கும்போது எப்போதுமே கொஞ்சம் மிருதுவான கையுறையைப் போட்டுக்கொண்டுதான் நம்மை அடிப்போம். மற்றவர்களை அடிக்கும்போது கையுறையை எடுத்துவிட்டு குத்துகிற குத்தில் இரத்தம் வருவதுபோல் அடிப்போம். ஒரு தவறு செய்திருப்போம். “அன்றைக்கு நான் கொஞ்சம் களைப்பாக இருந்ததால் நான் அப்படிப் பேசிவிட்டேன்,” என்று அதற்குச் சாக்குப்போக்கு சொல்வோம். சரி. இதுபோலவே மற்றவர்களும் களைப்பாக இருக்கமாட்டார்களா? எனக்கொரு நியாயக்கோல், மற்றவர்களுக்கு இன்னொரு நியாயக்கோலா?
எனக்கொரு நிறைகோல், பிறருக்கு இன்னொரு நிறைகோலா? எனக்கொரு அளவுகோல் பிறருக்கு இன்னொரு அளவுகோலா? “கள்ளத்தராசு கர்த்தருக்கு அருவருப்பானது; சுமுத்திரையான நிறைகல்லோ அவருக்குப் பிரியம்” நீதிமொழிகள் 11:1.
ஒரு திருக்குறளை மேற்கோள்காட்டுகிறேன். சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி. முன்னே நான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல்போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுநிலையோடு தீர்ப்பது சான்றோருக்கு அழகு. பிறரைச் சீர்தூக்குவதற்குமுன்னால் என்னை நான் சமப்படுத்த வேண்டும். நாம் நம்மை அவ்வளவு சமப்படுத்துகிற ஆள் இல்லை. நமக்கு நாம் எப்போதுமே சமமாகத்தான் தெரிவோம். இந்த முழு சமுதாயத்திலும் மிகவும் சமப்படுத்தப்பட்ட ஆள் நாம்தான் என்று சொல்வோம். இது மனித சுபாவம்.
“நானும் என்னை நியாயந்தீர்க்கிறதில்லை. என்னை நியாயந்தீர்க்கிறவர் கர்த்தரே,” என்று பவுல் சொல்லுகிறார். “ஆண்டவரே, கொரிந்தியர்கள் என்னை ஒருவிதமாய் நியாயந்தீர்க்கிறார்கள். நீர் என்னை எப்படி நியாயந்தீர்க்கிறீர்?” என்று பவுல் சொல்வதுபோல் தெரிகிறது.
சில நடைமுறைக் காரியங்களைச் சொல்லுகிறேன். பவுல் கொரிந்தியர்களை நியாயந்தீர்க்கலாம். ஆனால், கொரிந்தியர்கள் பவுலை நியாயந்தீர்ப்பது சற்று கடினம். ஏனென்றால், கொரிந்தியர்களுக்கு நற்செய்தியை அறிவித்து, அவர்களைப் பெற்றெடுத்த ஒரு தகப்பனுடைய இடத்தில் பவுல் இருக்கிறார். இது கொரிந்தியர்களுக்கும் தெரியும். “அவனுடைய நிருபங்கள் பாரயோசனையும் பலமுமுள்ளவைகள்; சரீரத்தின் தோற்றமோ பலவீனமும், வசனம் அற்பமுமாயிருக்கிறதென்கிறார்களே. For his letters,” they say, “are weighty and powerful, but his bodily presence is weak, and his speech contemptible,” என்று கொரிந்துவில் இருந்த அவருடைய எதிரிகள்கூடச் சொல்லக்கூடிய இடத்தில் இருந்தவர் பவுல்.
தேவனுடைய மக்கள் இந்தப் பூமியிலே வாழ்கின்ற நாட்களில் தங்களைத் தாங்களே நியாயந்தீர்க்க வேண்டும். 1 கொரிந்தியர் 11ஆம் அதிகாரத்தில் கர்த்தருடைய பந்திக்கு வரும்போது, “எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்…நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்,” என்று அவர் சொல்லுகிறார். நியாயந்தீர்த்தல் என்பதற்கு இன்னொரு வார்த்தை நிதானித்தல். நம்முடைய நிலைமை என்னவென்று நிதானித்துத் தீர்க்க வேண்டும், நியாயந்தீர்க்க வேண்டும், அப்படித் தீர்த்தபிறகு, பந்தியில் பங்குபெற வேண்டும் என்று பவுல் குறிப்பிடுகிறார். நம்மை நாமே நிதானித்தால், நியாயந்தீர்த்தால் நாம் கர்த்தரால் நியாயந்தீர்க்கப்படமாட்டோம் என்று அவர் எழுதுகிறார்.
ஆகவே, நித்திய நியாயத்தீர்ப்பின் வெளிச்சத்தில் தேவனுடைய மக்களாகிய நாம் இன்றே நம்மைப் பரிசோதிக்கவும், நியாயந்தீர்க்கவும் வேண்டும். இந்தப் பயிற்சியை நாம் செய்ய வேண்டும். “இல்லை. புதிய ஏற்பாட்டிலே அப்படியொன்றும் இல்லை. இது ரோமன் கத்தோலிக்க மக்களுடைய பழக்கம். தற்பரிசோதனை என்பது தியானத்திற்குப் போகும்போது மக்கள் பண்ணுகிற செயல். நாம் ரோமன் கத்தோலிக்க மகா பாபிலோனைவிட்டு வெளியே வந்துவிட்டோம். எனவே, இது நமக்குரியது இல்லை,” என்று நாம் சொல்ல முடியாது. நம்மை நாமே நிதானிப்பது, நம்மை நாமே நியாயந்தீர்ப்பது, புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிறது.
“நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப்பாருங்கள். இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரென்று உங்களை நீங்களே அறியீர்களா? நீங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்களாயிருந்தால் அறியீர்கள்.” “ஆண்டவரே, உம்முடைய நியாயத்தீர்ப்பின் வெளிச்சத்திலே நீர் என்னை நியாயந்தீரும்,”என்று தேவனுடைய மக்கள் சொல்ல வேண்டும். நாம் மிகவும் சொகுசான, மிருதுவான, கையுறைகளை மாட்டிக்கொண்டு, “அது சரிதான், இது சரிதான்,” என்று நம்மைத் தட்டிக்கொடுப்பவர்கள். அப்படியல்ல, “நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்,” என்று யோவேல் கூறுகிற வார்த்தைகள் நமக்குரியவை.
“தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.” நொறுங்குண்ட இருதயம் என்றால் என்ன? நருங்குண்ட ஆவி என்றால் என்ன? எந்தவித reservationனும் இல்லாமல் தேவனுக்குமுன்பாக நம்மை வைத்து, “ஆண்டவரே, நீர் என்னை நியாயந்தீரும், அது எவ்வளவு கடுமையாக இருந்தாலும் பரவாயில்லை. என் மனைவியோ, கணவனோ, பிள்ளைகளோ, நண்பர்களோ, சகோதர சகோதரிகளோ, நானோ தீர்ப்பதிலே பொய் இருக்கும். ஆனால், நீர் நியாயந்தீர்ப்பதிலே பொய்யே இருக்காது. பொய்யின் ஒரு நிழல்கூட இருக்காது. ஆண்டவரே, நீர் என்னை நியாயந்தீரும்,” என்று நம்மைத் தேவனுக்குத் திறப்பதுதான் நொறுங்குண்ட இருதயம்.
தேவனுடைய மக்கள் எல்லாரும் இப்படிப்பட்ட வெளிச்சத்தில் வாழ்வார்கள் என்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்போது அவர் நியாயந்தீர்ப்பதற்கு நம்மிடத்தில் ஒன்றும் இருக்காது. இது நம்முடைய தொடர்ச்சியான பயிற்சியாக இருக்க வேண்டும்.
ஒன்று நம்மை நாம் நியாயந்தீர்க்க வேண்டும். இன்னொரு பயிற்சி மற்றவர்கள் நம்மை நியாயந்தீர்ப்பதற்கும் நாம் நம்மை விட்டுக்கொடுக்க வேண்டும். குறிப்பாக நம்மை நடத்துகின்றவர்கள், நமக்குமேல் இருக்கின்றவர்கள், நமக்கு மூத்தவர்கள் நம்மைத் தீர்ப்பிடுவதற்கு நாம் விட்டுக்கொடுக்க வேண்டும். “கொரிந்துவில் எங்களை நியாயந்தீர்ப்பதற்கு நீர் யார்? நற்செய்தியைப்பற்றி எங்களுக்குத் தெரியாதா?” என்று கொரிந்தியர்கள் அப்போஸ்தலனாகிய பவுலுக்கு எதிர்த்துநின்றார்கள். “இந்தப் பிரச்சினையை எங்களால் கையாள முடியும். நாங்கள் அவனை நியாயந்தீர்க்கிறோம், நியாயந்தீர்க்கவில்லை. அது எங்கள் பாடு. நீர் சரியான அப்போஸ்தலனே கிடையாது, பொய்யான அப்போஸ்தலன். ஏனென்றால், நீர் வேலை செய்கிறீர், கூடாரத் தொழில் பண்ணுகிறீர். நல்ல தத்துவங்களை ஒழுங்காகப் பேசத்தெரியவில்லை. ஒழுங்காகப் பாடத் தெரியவில்லை,” என்பதுபோல் கொரிந்தியர்கள் பேசுகிறார்கள். இந்தத் தொனி அங்கு இருக்கிறது. அப்போஸ்தலன் என்றால் எப்படியிருக்க வேண்டும் என்று அவர்கள் ஓர் அளவுகோல் வைத்திருந்தார்கள். அவர்களுடைய அளவுகோலின்படி, பவுல் ஒரு நல்ல அப்போஸ்தலன் இல்லை.
தான் ஓர் அப்போஸ்தலன் என்று 2 கொரிந்தியர் முழுவதும் பவுல் வலியுறுத்துகிறார். 1 கொரிந்தியரில் சொல்லப்பட்ட பாவங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிற ஒரு சபைக்கு அவர் ஆவிக்குரிய தந்தையாக, நற்செய்தியைக் கொடுத்த ஒரு தந்தையாக, தாயாக, காரியங்களை எடுத்துரைக்கிறார். “கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே; கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தினால் நான் உங்களைப் பெற்றேன்,” என்று கூறுகிறார். ஆயினும், அவர்கள் பவுலுக்கு இணங்கவில்லை.
எல்லாரும் எல்லாரையும் நியாயந்தீர்க்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. சபை என்பது ஒரு நீதிமன்றம் இல்லை.
இதைத்தான் அப்போஸ்தலனாகிய பவுல், “புறம்பே இருக்கிறவர்களைக்குறித்துத் தீர்ப்புச்செய்கிறது என் காரியம் இல்லை. உள்ளே இருக்கிறவர்களைக்குறித்துத் தீர்ப்புச்செய்வதுதான் என் காரியம்,” என்று கூறுகிறார். உள்ளே இருப்பவர்கள் யார்? பவுலும், நற்செய்தி அறிவித்துப் பெற்றெடுத்த அவருடைய பிள்ளைகளும் உள்ளே இருக்கிறவர்கள். அந்தச் சமுதாயத்தில் ஒரு தவறு நடக்கிறது, ஆண்டவருடைய நாமம் தூஷிக்கப்படுகிறது என்றால், “சகோதரனே, இது தேவனுடைய வார்த்தையின் வெளிச்சத்தில், தேவனுடைய கோட்பாடுகள், தேவனுடைய வழிகள், தேவனுடைய நியமங்களின் வெளிச்சத்தில் தவறு. இதைச் செய்யக்கூடாது,” என்று சொல்ல வேண்டும். அவர் அதைச் சொல்லுகிறார்.
“அன்பு அப்படியெல்லாம் செய்யாது,” என்று நீங்கள் நினைத்தால், ஒன்று சொல்லுகிறேன். “மறைவான சிநேகத்தைப்பார்க்கிலும் வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது. சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்” (நீதிமொழிகள் 27:5, 6). யூதாசை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். Rabbi, Praise the Lord! யூதாஸ் முத்தமிட்டுக் காட்டிக்கொடுத்தான். இன்று முத்தத்திற்குச் சமம் என்ன தெரியுமா? சிரித்து, சிரித்து மழுப்பலாகப் பேசினால் அது முத்தத்திற்குச் சமம்.
என் சகோதரனுடைய ஒரு தவறையும் நான் சுட்டிக்காட்டுவதில்லை. அவனுடைய ஒரு தவறை நான் சுட்டிக்காட்டினால் நாளைக்கு நான் பகைவனாக மாறிவிடுவேன் என்ற எண்ணத்தில் நண்பனுடைய தவறைச் சுட்டிக்காட்டாமல் இருப்பதுதான் நட்பின் இலக்கணம் என்றால் அது தவறு. சிநேகிதனுடைய கடிந்துகொள்ளுதல் சத்துருயிடும் முத்தங்களைவிட நல்லது. அதற்காக நண்பனை எப்போதும் கடிந்துகொண்டேயிருக்க வேண்டும் என்ற பொருள் இல்லை. ஒரு சமநிலை தவறாமல் இதைச் செய்ய வேண்டும். ஆனால், கடிந்துகொள்ள அஞ்சுகிறவன் ஒரு உண்மையான சிநேகிதன் அல்ல.
மிக முக்கியமாக நான் நற்செய்தியினால் பெற்றெடுத்த என்னுடைய பிள்ளைகளை நான் திருத்த வேண்டும், சரிசெய்ய வேண்டும், கடிந்துகொள்ள வேண்டும். கடிந்துகொள்ளலாம் என்பதல்ல, கடிந்துகொள்ள வேண்டும். அதற்கு எனக்கு அனுமதியிருக்கிறது என்பதல்ல, அதற்குப் பொறுப்பு எனக்கிருக்கிறது.
யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் எப்போதும் திருத்தலாம், கடிந்துகொள்ளலாம் என்று நான் சொல்லவில்லை. என்னுடைய பிள்ளைகளை நான்தான் கடிந்துகொள்ள வேண்டும், சரிசெய்ய வேண்டும். நான் என் பிள்ளைகளை இன்னொரு சகோதரனிடம் கூட்டிக்கொண்டுபோய், “இவனுக்கு இரண்டு வார்த்தைகள் சொல்லுங்கள்,” என்று சொல்வது சரியல்ல. என் பிள்ளைகளுக்கு என்ன சொல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லையென்றால் சகோதரனைத் தனியாகச் சந்தித்து, சூழ்நிலையை விளக்கிச்சொல்லி, சில ஆலோசனை கேட்கலாம். பிறகு நான் போய் என் பிள்ளைகளிடம் பேச வேண்டும்.
இரண்டு காரியங்கள் சொன்னேன். ஒன்று, தேவ மக்கள் நியாயத்தீர்ப்பின் வெளிச்சத்தில் வாழ வேண்டும். நியாயத்தீர்ப்பு என்று ஒன்றே இல்லை, வெகுமதி என்று ஒன்றே இல்லை, தண்டனை என்று ஒன்றே இல்லை, நாம் பரவசப்படுவதற்கோ, கண்ணீர் சிந்திக் கதறுவதற்கோ ஒன்றும் நடக்கப்போவதில்லை என்ற ஒரு மூடத்தனத்தில், கற்பனையில் வாழக்கூடாது. இதன் வெளிச்சத்தில் வாழ்வதென்றால் இன்று நம்மை நாமே நிதானிக்கின்ற, நியாயந்தீர்க்கின்ற பயிற்சி நமக்கு அவசியம்.
நம்மை நிதானிப்பதற்கும், நியாயந்தீர்ப்பதற்கும் நம்மை நடத்துபவர்களையும், மூத்தவர்களையும் நாம் மன்றாட வேண்டும். நாம் மன்றாடவும் மாட்டோம். அவர்களாகவே நியாயந்தீர்த்தால் ஏற்றுக்கொள்ளவும் மாட்டோம். “பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா?” என்று 1 கொரிந்தியர் 6:2இல் பவுல் வினவுகிறார். “இந்த உலகத்தை நியாயந்தீர்க்கிற வேலையை நான் செய்ய முடியாது. அதனால் நீங்களெல்லாரும் இந்த உலகத்தை நியாயந்தீர்க்க வேண்டும்,” என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மை கீழ்நீதிமன்றத்தில் நீதிபதிகளாக நியமிப்பார்போலும். ஆனால், நியாயந்தீர்ப்பதில் இன்று நமக்கு எந்தப் பயிற்சியும் இல்லையென்றால் நாளைக்கு எப்படி நியாயந்தீர்ப்போம்? நம்மை நியாயந்தீர்க்கிற பயிற்சியும் இல்லை. பிறரால் நியாயந்தீர்க்கப்படுகிற பயிற்சியும் இல்லை.
நன்றாகக் கவனியுங்கள். முதலாவது, என்னை நான் நியாயந்தீர்க்க வேண்டும். இந்தப் பயிற்சி வேண்டும். இரண்டாவது, எனக்கு மூத்தவர்களும், என்னை நடத்துபவர்களும், என்னை நியாயந்தீர்க்க நான் விட்டுக்கொடுக்க வேண்டும். அந்தப் பயிற்சியைப் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் மூன்றாவது மற்றவர்களை நிதானமாய் நியாயந்தீர்க்கிற ஒரு ஞானமும், நிதானமும், பக்குவமும், முதிர்ச்சியும் நமக்கு உண்டாகும் அல்லது உண்டாகாது. தன் சிந்தனையை, சொல்லை, செயலை “இது சரி அல்லது தவறு” என்று நிதானிக்கிற, திருத்துகிற, நியாயந்தீர்க்கிற பழக்கம் இல்லாத ஒருவனால் மற்றவர்கள் அந்தத் தவறு செய்யும்போது, அது சரியா தவறா என்று இனங்காணக்கூட அவனுக்குத் தெரியாது. அது பரிதாபமானது. அவனுடைய பெற்றோர்களோ, அவர் வாழ்ந்த சபை என்கிற சமுதாயமோ அதை அவனுக்குக் கற்பிக்கவில்லை.
எனவே, ஒரு நாளில் பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்கள் என்றால் எப்படிப்பட்ட பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்கள்? இன்றைக்கு தங்களைத் தாங்களே நியாயந்தீர்த்த பரிசுத்தவான்கள், மற்றவர்களால் நியாயந்தீர்க்கப்படுவதற்கு தங்களை ஒப்புவித்த பரிசுத்தவான்கள், தங்கள் அதிகாரத்துக்குட்பட்டவர்களை நியாயந்தீர்த்த பரிசுத்தவான்கள்.
“அவர் (ஆண்டவராகிய இயேசு) வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்,” என்று 1 பேதுரு 2:23இல் வாசிக்கிறோம்.
சில சமயங்களிலே என்னை நியாயந்தீர்க்கக்கூடாத ஒருவன் என்னை நியாயந்தீர்க்கலாம். அப்போது நாம் அவரிடம்போய், “நீர் என்னை எப்படி நியாயந்தீர்க்கலாம்?” என்று சண்டைபோடக் கூடாது. தேவனுடைய மக்கள் என்ன செய்ய வேண்டும்? தேவனிடத்தில் சொல்லவேண்டும்.
ஆபிரகாம் தேவனை நீதியுள்ள நீதிபதி, சர்வலோகத்தின் நியாதிபதி என்று அழைத்தார். He recognizes God as the supreme judge of all the earth.
நாம் நாமைத் தேவனிடத்தில் ஒப்புக்கொடுக்க வேண்டும். “தேவனே! நீர், என்னை உம்முடைய கைகளிலிருந்து எடுத்து இன்னொரு மனிதன் தன் விருப்பம்போல் செய்வதற்கு அவனுடைய கைகளிலே கொடுத்துவிடப் போவதில்லை. காய்பாவோ, அன்னாவோ, பிலாத்தோ உம்மை மீறி என்னை நியாயந்தீர்த்துவிட முடியாது. அவர்களெல்லாம் தற்காலிக நியாயாதிபதிகள், மெய்யும் பொய்யும் கலந்த நியாயாதிபதிகள்; ஆனால் நீர் சர்வலோகத்தின் நியாயாதிபதி,” என்பதுதான் நம் நிலைப்பாடு
கடைசியாக, ஆவிக்குரிய தீர்ப்பு. முதலாவது இறுதித்தீர்ப்பு. இரண்டாவது வெகுமதியும் நட்டமும் உண்டு. மூன்றாவது நியாயத்ததீர்ப்பின் வெளிச்சத்தில் தற்காலத்தில் தேவனுடைய மக்கள் வாழ்வது, சுயதீர்ப்பு, மற்றவர்களால் தீர்க்கப்படுவது, நடத்துபவர்களால்,
நான்காவதும் கடைசியுமாக ஆவிக்குரிய தீர்ப்பு. நாம் பாவம், மாம்சம், உலகம், சுயம் ஆகியவைகளால் ஆளப்படுகிற மனிதர்களாக இருப்பதால், இருக்கின்ற ஒன்று இல்லாததுபோலவும், இல்லாத ஒன்று இருக்கிறதுபோலவும் நமக்குத் தோன்றும். மனிதர்கள், சமுதாயம், சூழ்நிலைகள் ஆகியவைகளில் “இது சரி, இது தவறு” என்று எல்லாம் வெள்ளையும், கறுப்புமாக இருக்காது. அவைகள் சாம்பல் நிறமாக இருக்கும். “இது உண்மையா, பொய்யா?” என்று தெளிவாக வரையறுக்க முடியாது. சில சூழ்நிலைகளை “இது வெள்ளை, இது கறுப்பு” என்று நாம் கோடு போட்டு வகையறுத்துவிட முடியாது. அது வெள்ளையும் கறுப்பும் விரவின, கலந்த, ஒரு சூழ்நிலையாக இருக்கும் அல்லது மனிதர்களாக இருப்பார்கள். அப்போது நம்மால் நியாயந்தீர்க்க முடியாது.
‘ஆகாத மருமகள் கை பட்டாலும் குற்றம், கால் பட்டாலும் குற்றம்’ என்று ஒரு பழமொழி உண்டு. ‘மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்’ என்றும் சொல்லுவார்கள். இவைகள், நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோமோ அப்படித்தான் நம்முடைய நியாயத்தீர்ப்பு இருக்கும் என்பதைக் காட்டுகின்றன.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றி, “கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும், நீதியின்படி ஏழைகளை நியாயம்விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார். நீதி அவருக்கு அரைக்கட்டும், சத்தியம் அவருக்கு இடைக்கச்சையுமாயிருக்கும்.,” என்று ஏசாயா 11:3-5 கூறுகின்றன. “தோற்றத்தின்படி தீர்ப்பு செய்யாமல், நீதியின்படி தீர்ப்புசெய்யுங்கள்,” என்று யோவான் 7:24இல் ஆண்டவராகிய இயேசு கூறுகிறார். இரண்டு வசனங்களையும் வாசிப்பது மிகவும் முக்கியம்.
யதார்த்தம் என்றால் உண்மை என்று பொருள். நாம் பல போர்வைகளை மூடிக்கொண்டு வருவோம். நாங்கள் வெகுதூரத்திலிருந்து வந்திருக்கிறோம். “நாங்கள் புறப்பட்டபோது சூடாக இருந்த எங்களுடைய அப்பம் இப்போது பூசணம் பூத்துவிட்டது; மடிப்புக் குலையாமல் போட்ட எங்களுடைய துணி இப்போது கிழிந்துவிட்டது. புதியதாக போட்ட எங்களுடைய செருப்பு இப்போது தேய்ந்துவிட்டது,” என்று கிபியோனியர்கள் யோசுவாவை ஏமாற்றினார்கள். இயேசு தன்னை இன்னும் நண்பனாகவே கருதுவதாக யூதாஸ் நினைத்திருக்கலாம். அவர் நண்பனாகத்தான் கருதினார். “சிநேகிதனே” என்றுதான் அவர் கூப்பிட்டார். “சிநேகிதனே முத்தத்தினாலா மனித குமாரனைக் காட்டிக்கொடுக்கிறாய்?” என்று கேட்டார். அது முத்தமல்ல வஞ்சனை என்று நிதானிக்கிற, தீர்க்கிற, அறிவும், ஞானமும் நமக்கில்லை. அவர் தமது கண் கண்டபடி, தமது காது கேட்டபடி, தோற்றத்தின்படி தீர்ப்பு செய்யவில்லை.
நம்மையும் சரி, பிறரையும் சரி தோற்றத்தின்படி தீர்ப்பு செய்யக்கூடாது. திருவெளிப்பாடு 2, 3ஆம் அதிகாரத்தை நீங்கள் வாசித்துப்பாருங்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஏழு பொன்குத்து விளக்குகளின் மத்தியிலே உலாவி, ஏழு சபைகளின் நடுவே உலாவி, ஒவ்வொரு சபையையும் தீர்க்கின்றார். எபேசுவைப்பற்றிச் சொல்லும்போது, எட்டு காரியங்களைப் புகழ்ந்து சொல்லுகிறார். “ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு. ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்,” என்கிறார். ஒரேவொரு காரியத்தை அவர் நியாயந்தீர்க்கிறார். “என்னை அறிந்த நாளிலே, நீ என்மேல் வைத்திருந்த அன்பை நீ விட்டுவிட்டாய். ஆகவே நீ மனந்திரும்ப வேண்டும். நீ மனந்திரும்பாவிட்டால் உன்னுடைய மற்ற எட்டு நல்ல காரியங்களினிமித்தம் நான் உன்னை விட்டுவைக்க முடியாது, மனந்திரும்பாத அந்த ஒரு காரியம் எனக்கு மிக முக்கியமானது. ஆகையால், இந்தப் பொன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நான் அகற்றி விடுவேன்.”
தீர்ப்பது மிகவும் கடினமான ஒரு காரியம், மிகவும் சிக்கலானது. உண்மையிலேயே ஒரு மனிதன் தன்னை சிலுவையில் கிடத்துவதற்கு ஆயத்தமாக இருந்தால் அவன் நன்றாய்த் தீர்க்க முடியும். பரிசுத்த ஆவிக்கு முற்றுமுடிய கீழ்ப்படிய ஆயத்தமாய் இருந்தால் அவன் நன்றாய்த் தீர்க்க முடியும்.
ஏனென்றால், மெய்யும், பொய்யும் கலந்திருக்கும்; நன்மையும் தீமையும் கலந்திருக்கும்; சரியும் தவறும் கலந்திருக்கும்; எட்டு நன்மைகளும், ஒரு தீமையும் கலந்திருக்கும். எபேசுவிலே இருந்ததுபோல.
இதைப்போல், அவர் பிற சபைகளைப்பற்றியும் சொல்லுகிறார். தேவனிடத்தில் நாம், “தேவனே, உம்முடைய இருதயத்தின்படி இன்று தீர்ப்புசெய்கிற ஒரு ஞானமுள்ள இருதயத்தை எனக்குத் தாரும். என்னை, என்னுடைய சூழ்நிலைகளை,” என்று நாம் ஜெபிக்க வேண்டும்,
நம்மை நாமே நியாயந்தீர்த்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம். ஆனால் நம்மை நாம் நியாயந்தீர்க்கத் தவறினால் “உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்” என்று எழுதியிருக்கிறது. இதைக் கடைசியாகச் சொல்லி முடித்துக்கொள்ள வேண்டும்.
மூன்றாவது குறிப்பிலே சொல்ல வேண்டும். ஒன்று, நம்மை நாமே நியாயந்தீர்ப்பது; இரண்டு, மூத்தவர்களால், நடத்துகிறவர்களால், ஞானமுள்ளவர்களால் நம்மை நியாயந்தீர்க்க ஒப்புக்கொடுக்கப்படுவது; மூன்றாவது இரண்டையும் நாம் செய்யத் தவறும்போது நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருப்பதால், தேவன் இந்த உலகத்திலேயே நம்மை சிட்சிக்கிறார். “மறுமையிலே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மை நியாயந்தீர்ப்பார்,” என்றுதேவனுடைய மக்கள் தயவுசெய்து நினைத்துக்கொள்ள வேண்டாம். அந்த நாளிலே உலகத்தோடு நாம் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு, ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு இந்த உலகத்திலேயே நாம் நம்மையும் நியாயந்தீர்ப்பது இல்லை, மற்றவர்கள் நியாயந்தீர்க்கும்போது விட்டுக்கொடுப்பதுமில்லை, முரண்டுபிடிக்கிறோம்.
“நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி, என்னைக் கடிந்துகொள்ளட்டும்; அது என் தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும்; என் தலை அதை அல்லத்தட்டுவதில்லை” சங்கீதம் 141:5. என்னை நடத்துகிறவர்களோ, மூத்தவர்களோ என்னை நியாயந்தீர்க்கட்டும். என் சகோதரர்கள்கூட என்னை நியாயந்தீர்க்கட்டும். மூத்தவர்கள், நடத்துபவர்கள் நியாயந்தீர்க்கும்போது நான் அல்லல் தட்டுவதில்லை. சகோதரர்கள் நியாயந்தீர்த்தால் அதை நான் தேவனிடத்தில் கொண்டுபோவேன். அதையும் நான் தள்ளும்போது தேவன் நம்மை நேரடியாகச் சிட்கிக்க வேண்டியிருக்கிறது.
நான்கு குறிப்புக்களைச் சொன்னேன். முதலாவது தேவனுடைய மக்களுக்கு ஒரு இறுதி நியாயத்தீர்ப்பு உண்டு. ஒரு நாளை தேவன் நியமித்திருக்கிறார். ஒரு நபரை நியமித்திருக்கிறார். அந்த நபரை அளவுகோலாய்க் கொண்டு, நிறைகோலாய்க் கொண்டு, தரமாய்க் கொண்டு அந்த நபரே நம்மை நியாயந்தீர்ப்பார். இரண்டாவது, நியாயத்தீர்ப்பின் விளைவு. வெகுமதியாக இருக்கும் அல்லது நட்டமாக இருக்கும். நம்முடைய முழு மனித வாழ்க்கையும், நம்முடைய பிரயாசங்களும், நம்முடைய பணிவிடைகளும், வெகுமதியில் முடிவடையலாம் அல்லது நட்டத்தில் முடிவடையலாம். எந்த அளவுக்கு அது நமக்குள்ளும், பிறருக்குள்ளும் கிறஸ்து உருவாக்கப்பட்டார் என்பதைப் பொறுத்திருக்கிறது. நம் நகைச்சுவைகள், நாம் பேசுகின்ற வீணான வார்த்தைகள், நாம் பேசுகின்ற கோள்சொல்லுதல். “உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக; பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்,” லேவியயராகமம் 19:6. ஒருவரைப்பற்றி இன்னொருவரிடத்தில் பேசவே வேண்டாம். “மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” மத்தேயு 12:36.
ஒருவரோடு ஒரு மணி நேரம் சேர்ந்து பயணிக்கிறோம். நம்முடைய பழக்கம் என்னவென்றால், பேச ஆரம்பித்து விடுவோம். ஐந்து நிமிடம் பேசலாம், பத்து நிமிடம் பேசலாம். அதன்பிறகு பேசுவதற்கு ஒன்றும் இல்லை. அமைதியாகி விடுகிறேன். இது சரியா தவறா? சரி. ஒரு மணிநேரம் வெட்டிக்கதை பேசுவதைவிட என் மெளனம் ஆயிரம் மடங்கு நன்மையையும் ஆசிர்வாதத்தையும் எனக்குக் கொண்டுவரும். நான் வீணாக வாயை மூடிக்கொண்டிருப்பதைச் சொல்லவில்லை. பேசுவதற்கு ஒன்றுமில்லை என்றால் நான் அமைதியாகி விடுகிறேன் அல்லது நான் பேசுவது வீணான காரியம் என்றால், அதை இது எனக்குப் பிரயோஜனமான காரியம் இல்லை என்றால் அமைதியாகிவிடலாம். நாம் இரண்டுபேர் சேர்ந்து பயணிக்கிறோம் என்பதற்காக ஒன்றரை மணிநேரம் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லவே இல்லை. தேவைப்படும்போது, ஒரு வாக்கியம் நான் பேசுகிறேன். இரண்டு வாக்கியங்கள் அவர் பேசுகிறார் அவ்வளவு தான். இப்படிப்பட்ட சகோதரர்களோடு இணைந்து வாழ்வதும், இணைந்து வேலை செய்வதும் எனக்கு மிகவும் சுகமானது. பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற சகோதரரோடு இணைந்து வேலை செய்வது மிகவும் கடினமானது.
அருமையான பரிசுத்தவான்களே, இறுதி நியாயத்தீர்ப்பு உண்டு. நம் வாழ்வினாலும், நம்முடைய பணிவிடையினாலும் கிறிஸ்து எந்த அளவுக்கு உருவாக்கப்பட்டார் என்பது முக்கியமோ, கிறிஸ்து எந்த அளவுக்கு உருவாக்கப்படவில்லை என்பதும் முக்கியம். அதுதான் முக்கியமான காரியம். கிறிஸ்து உருவாக்கப்பட்டால் அதற்கு வெகுமதி உண்டு என்பது மட்டுமல்ல, கிறிஸ்து உருவாக்கப்படுகிற வாய்ப்புகளைக் கெடுத்தால் அல்லது அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றால் இழப்பு உண்டு, நட்டம் உண்டு. அது இரண்டாவது குறிப்பு, வெகுமதியும் நட்டமும் உண்டு.
மூன்றாவது, இறுதி நியாயத்தீர்ப்பின் வெளிச்சத்தில் இன்று தேவனுடைய மக்கள் ஒரு நியாயத்தீர்ப்பு செய்து வாழவேண்டும். மிக முக்கியமாக நம்மை நாமே, என்னை நானே நியாயந்தீர்த்து வாழ்கிற பயிற்சி எனக்கு இருக்க வேண்டும். இரண்டாவது என்னுடைய பொறுப்புக்கு உட்பட்டவர்களை நியாயந்தீர்ப்பது அவசியம், திருத்துவது, சரிசெய்வது. மூன்றாவது என்னையும் நான் நியாயந்தீர்ப்பது இல்லை, ஞானமுள்ளவர்களால், நடத்தப்படுகிறவர்களால், மூத்தவர்களால் என்னுடைய பெற்றோர்களால் நியாயந்தீர்க்க நான் விடவில்லை என்றால், தேவனே இந்த உலகத்திலே நம்மை சிட்சிக்கிறார்.
நான்காவதும் இறுதியுமாய்ச் சொன்னேன், நம்முடைய நியாயத்தீர்ப்பு ஆவிக்குரிய நியாயத்தீர்ப்பாக இருக்க வேண்டும். மனிதர்கள் நியாயத்தீர்ப்பு செய்வதுபோல் செய்யக்கூடாது. நண்பனுக்கு ஒரு நியாயத்தீர்ப்பு, பகைவனுக்கு ஒரு நியாயத்தீர்ப்பு; எனக்குப் பணம் தந்தவனுக்கு ஒரு நியாயத்தீர்ப்பு, பணம் தராதவனுக்கு ஒரு நியாயத்தீர்ப்பு. அப்படியல்ல, பட்சபாதம் இல்லாமல் தேவன் பார்க்கிற வண்ணமாய் அவருடைய மனதோடும், அவருடைய இருதயத்தோடும், அவருடைய கண்களோடும் நாம் நியாயத்தீர்ப்பு செய்யப் பழக வேண்டும். பரிசுத்த ஆவியானவர் சிலுவையினூடாய் வாழ்கின்ற தம் பிள்ளைகளுக்கு அப்படிப்பட்ட ஞானத்தை அருள்வார். தேவன் இதை உங்கள் நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தவதற்குத் தேவையான எல்லா ஞானத்தையும், எல்லா கிருபைகளையும், எல்லா உதவிகளையும் அருள்வாராக. ஆமென்.