Unedited transcript of a message spoken on January 10, 2016 in Chennai
By Milton Rajendram
இந்த முழு வேதாகமத்திலும் தேவனுடைய நித்திய நோக்கமும், நித்தியத் திட்டமும் விவரித்துப் பேசப்பட்டுள்ளன. இந்த முழு வேதாகமும் தேவனுடைய நித்திய நோக்கத்தையும், தேவனுடைய நித்தியத் திட்டத்தையும் சித்திரிப்பதாகத்தான் உள்ளது. இதை நாம் வலியுறுத்தவேண்டிய அவசியம் என்னவென்றால் வேதாகமத்திலிருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக சில எண்ணங்களை, சில கருத்துக்களை, சில உபதேசங்களை எடுத்துக்கொண்டு அவைகளை அளவுக்குமீறி வலியுறுத்தும்போது சமநிலை தவறிவிடுகிற வாய்ப்பு உண்டு. “உம் வார்த்தை சமூலமும் சத்தியம்” (சங்கீதம் 119:160). “The sum of your word is truth.” தேவனுடைய வார்த்தையில் ஒரு பகுதி மட்டுமல்ல சத்தியம்; தேவனுடைய வார்த்தையின் முழு மொத்தமும் சேர்ந்ததுதான் சத்தியம்.
அப்போஸ்தலர் 20ஆம் அதிகாரத்தில், எபேசு சபையிலுள்ள மூப்பர்களோடு அப்போஸ்தலனாகிய பவுல் கலந்துரையாடுகிறார். அப்போது, “தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல் எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்,” (அப். 20:26) என்று சொல்லுகிறார். தேவனுடைய ஆலோசனை மனிதனுடைய மனதைவிடப் பலமடங்கு உயர்ந்தது, பலஅடுக்கு உயர்ந்தது. God’s mind is not many times larger than human mind; God’s mind is many orders greater than human mind.
கணிதம் படிப்பவர்களுக்கு many times என்பதற்கும் many order என்பதற்கும் வேறுபாடு தெரியும். இரண்டு மடங்கு, மூன்று மடங்கு, நான்கு மடங்கு என்பது ஒன்று; 10, 10, 10 என்பது இன்னொன்று. இரண்டு மடங்கு, மூன்று மடங்கு என்பது பெரிதுதான். ஆனால், 10 2, 103, 104, என்பது மாபெரிது. பலமடங்கு உயர்ந்தது என்பதற்கும், பல அடுக்கு உயர்ந்தது என்பதற்கும் பெரிய வேறுபாடு உண்டு. தேவனுடைய மனதை, மனிதனுடைய மனதோடு ஒப்பிடும்போது, அது பல மடங்கு அல்ல, பல அடுக்கு உயர்ந்தது என்று ஏசாயா 55ஆம் அதிகாரத்தில் நாம் வாசிக்கின்றோம். “என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார். பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது” (ஏசாயா 55:8, 9). வானங்கள் பூமியைவிட எவ்வளவு உயரமாக உள்ளது? சில மடங்குகள் அல்லது சில அடிகள் உயரமாக உள்ளதா? அதை நாம் கணக்கிட முடியாது. மனிதனுடைய மனதுக்கு எல்லைகளும், கட்டுப்பாடுகளும் உண்டு. நாம் மனிதனுடைய மனதைவைத்து தேவனுடைய மனதைப் புரிந்துகொள்ள முயற்சிசெய்யும்போது நாம் தவறுகள் செய்ய வாய்ப்பு உண்டா, இல்லையா? உண்டு.
ஆகவே, பயத்தோடும் நடுக்கத்தோடும் இந்த வேதத்தை, தேவனுடைய வார்த்தையை, நாம் அணுக வேண்டும். அதற்காக மனிதர்களாகிய நாம் நம்முடைய மனதைப் பயன்படுத்தக்கூடாது என்று தேவன் சொல்லவில்லை. முதலாவது கட்டளையே, “உன் தேவனாகிய கர்த்தரை உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக,” என்பதே. வரிசை மாறாமல் சொல்ல வேண்டும்: இஸ்ரயேலே கேள். உன் தேவனாகிய கர்த்தரை உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக. தேவனை அன்புகூருவதற்கு நம் மனம் வேண்டாம் என்று வேதம் சொல்லவில்லை. மனதைப் பயன்படுத்தினால் நாம் தேவனை அன்புகூருவது நின்றுபோய் விடும் என்றோ, நம் மனதைப் பயன்படுத்தக்கூடாது என்றோ, நம்முடைய விசுவாசத்தை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்றோ வேதம் கோரவில்லை. பிரகாசிப்பிக்கப்பட்ட, புதிதாக்கப்பட்ட மனதைப் பயன்படுத்துகிற யாவரும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை தங்கள் முழு மனதோடும் அன்புகூருவார்கள். மனதைப் பயன்படுத்துவதால் ஒரு மனிதன் இயேசு கிறிஸ்து தேவன் என்று கண்டுபிடிக்க முடியாது என்பதல்ல. அதனால் இயேசு கிறிஸ்துவின்மேல் அவனுக்குள்ள விசுவாசம் குறைந்துவிடாது. புதிதாக்கப்பட்ட, பிரகாசிக்கப்பட்ட, ஒளிர்ப்பிக்கபட்ட மனதைப் பயன்படுத்துகிற எவனும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தேவனும், மனிதனுமான இரட்சகர் என்பதைக் கண்டுபிடிப்பான். “நான் உலகத்திற்கு ஒளியாக இருக்கிறேன். என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான்,” என்று இயேசு கிறிஸ்து சொன்னார் (யோவான் 8:12). அதன் பொருள் என்னவென்றால் ‘ஒளியில் நடக்கிற எவனும் நான் உண்மையிலேயே தேவன் என்றும், நான் வெறுமனே மனிதன் அல்ல என்றும் கண்டுபிடிப்பான்; இருளிலே நடக்கிறவனோ என்னைக் கண்டுபிடிக்க மாட்டான்.’
இந்த முன்னுரையின் சுருக்கம் என்னவென்றால், என்னதான் தேவன் மனிதனுக்குப் புரிகின்ற ஒரு மொழியில் வேதாகமத்தை எழுதிக் கொடுத்தபோதுங்கூட தேவனையும், அவருடைய மனதையும் புரிந்துகொள்ள நாம் பிரயாசப்பட வேண்டும்.
இதை விளக்குவதற்காக நான் ஒரு விளக்கம் சொல்கிறேன். நான் மைசூர் அரண்மனையைப் பார்த்ததில்லை. ஆனால், மைசூருக்குச் சுற்றுலா செல்கிறவர்கள் வழக்கமாக மைசூர் அரண்மனையைப் பார்ப்பார்கள். மைசூர் அரண்மனை மிகப்பெரிய அரண்மனை என்று சொல்வார்கள். ஒரு சாதாரணமாக வீட்டை முன்னால் நின்று பார்த்தால் அந்த வீட்டின் அமைப்பு என்னவென்று ஒரு பார்வையிலேயே தெரிந்துவிடும். ஆனால், மைசூர் அரண்மனையை அதற்குமுன்னால் நின்று பார்த்து ,ஒரு பார்வையிலேயே அந்த அரண்மனையின் அமைப்பைத் தெரிந்துகொள்ள முடியாது. ஏனென்றால், மனிதனுடைய பார்வையின் வீச்சோடு ஒப்பிடும்போது அந்த அரண்மனை மிகப் பெரியது.
அதுபோல, மனிதனுடைய மனதைப் பார்க்கும்போது, தேவனுடைய மனதின் வீச்சை மனிதனுடைய மனதின் வீச்சோடு ஒப்பிடும்போது, தேவனுடைய மனம் மிகப் பெரியது. ஆகவேதான், பயத்தோடும் நடுக்கத்தோடும் வேதத்தை வாசிக்க வேண்டும் என்றும், நம்முடைய மனதைப் பயன்படுத்த வேண்டும் என்றும் நான் சொல்லுகிறேன். ஆனால், பயத்தோடும் நடுக்கத்தோடும் என்று நான் சொல்லும்போது, பயந்துபயந்து, “புரியுமோ, புரியாதோ என்கிற பயத்தில் படிக்க வேண்டும்,” என்று நான் சொல்லவில்லை. மதிப்போடும், மரியாதையோடும், வணக்கத்தோடும் நாம் வேதத்தை அணுக வேண்டும்.
ஒரு சமநிலையைக் காத்துக்கொள்வதற்காக தேவனுடைய நித்திய நோக்கம் என்னவென்பதை விளக்குவதற்கு நான் நான்கு காரியங்களை உங்களுக்குச் சொல்லுகிறேன். இந்த நான்கு காரியங்களையும் எதற்காகச் சொல்லுகிறேன் என்றால் நீங்கள் தேவனுடைய வார்த்தையை, பரிசுத்த வேதாகமத்தை, வாசிக்கும்போது ஒரு சமநிலையோடு, சமநிலை தவறாமல், நீங்கள் புரிந்துகொள்வதற்கு இந்த நான்கு காரியங்கள் அல்லது நான்கு குறிப்புகள் உங்களுக்கு உதவிசெய்யும். இது என்னுடைய இறுதி முடிவானது என்று நான் சொல்லவில்லை. கடந்த காலங்களிலே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோடு நாம் வாழ்கின்ற வாழ்க்கையின் அடிப்படையிலும், பரிசுத்த வேதத்தை நான் வாசித்து அதைப் புரிந்துகொண்டதின் அடிப்படையிலும் நான் இதைச் சொல்லுகிறேன். இந்த நான்கு குறிப்புகள், நான்கு காரியங்கள், தேவனுடைய மனதை, தேவனுடைய எண்ணத்தை, தேவனுடைய சித்தத்தை, நோக்கத்தை நாம் புரிந்துகொள்வதற்கு, சமநிலையோடு நாம் புரிந்துகொள்வதற்கு, உதவி செய்யும் என்பதால் சொல்லுகிறேன். நீங்கள் அதில் தொடர்ந்து பிரயாசப்பட வேண்டும். இன்னொருவர் பேசி அதை நாம் கேட்பதால் நாம் தேவனுடைய திட்டத்தையும், நோக்கத்தையும்பற்றிய அறிவைப் பெற்றுக்கொள்வதில்லை. நாமாக வேதாகமத்திலே, தேவனுடைய வார்த்தையில், உழைக்காவிட்டால், பிரயாசப்படாவிட்டால், தேவனுடைய திட்டத்தையும் நோக்கத்தையும்பற்றிய ஒரு தனிப்பட்ட, அந்நியோன்னியமான அறிவை நாம் ஒரு நாளும் பெற முடியாது
அந்த நான்கு குறிப்புகளாவன:
தேவனுடைய நோக்கத்தை, தேவனுடைய திட்டத்தை, தேவனுடைய வார்த்தையிலிருந்து நாம் புரிந்துகொள்வதற்கு மையம்
ஆங்கிலத்தில் இதை மனதில் வைத்துக்கொள்வது இன்னும்கூட கொஞ்சம் எளிமையானது.
மையத்திலுள்ளதை revelation அல்லது worship என்று நான் சொல்வேன். மையத்திலுள்ள revelation of Christ அல்லது worship என்று ஏன் சொல்லுகிறேன் என்று சிலர் கேட்கலாம். என்னைப் பொறுத்தவரை மனிதனுடைய மாபெரும் ஆராதனை அல்லது தொழுகை என்பது கிறிஸ்து நம்மில் வெளிப்படுத்தப்படும்போது நம் இருதயத்தில் எழுகிற மாறுத்தரம்தான் உண்மையான ஆராதனை, உண்மையான தொழுகை. கிறிஸ்து யார் என்பதை தோமா பார்த்தபோது, அவருடைய இருதயத்திலும், அவருடைய வாயிலும் புறப்பட்ட வார்த்தைகள்: என் ஆண்டவரே, என் தேவனே. இது அவருடைய தொழுகை, அவருடைய ஆராதனை. எனவே நடுவிலிருப்பது ஆராதனை.
முதல் அச்சு சீடத்துவம்; இரண்டாவது அச்சு ஐக்கியம்; மூன்றாவது அச்சு உக்கிரணத்துவம். எனவே, ஆங்கிலத்தில் நினைவில்வைத்துக்கொள்வது இன்னும் எளிமையானது.
ஒருவேளை இந்தச் செய்தியின் முடிவிலே குறைந்தபட்சம் இந்த நான்கு வார்த்தைகளை நாம் ஞாபகத்தில் வைத்திருப்போம். ஆனால், வெறுமனே நான்கு வார்த்தைகளை மட்டும் ஞாபகத்தில் வைத்திருந்தால் போதாது.
நடுவில் இருப்பது ஆராதனை; நடுமையத்தில் உள்ள புள்ளி. மீதி மூன்று அச்சுகள் சீடத்துவம் என்பது ஓர் அச்சு, ஐக்கியம் என்பது இன்னொரு அச்சு, உக்கிராணத்துவம் என்பது இன்னொரு அச்சு. கிறிஸ்துவின் வெளிப்பாடு, சீடத்துவம், ஐக்கியம், உக்கிராணத்துவம். நீங்கள் இன்னொன்றைச் சொல்லலாம். “இவ்வளவு அழகான வார்த்தைகளைச் சொல்வது முக்கியமல்ல; வாழ்க்கைதான் முக்கியம்,” என்று சொல்கிற ultraspiritualவாதிகளை நான் சந்தித்தது உண்டு. “என்ன பேசுகிறோம், எப்படிப் பேசுகிறோம் என்பது ஒரு பொருட்டல்ல; எதுதான் பொருட்டு? வாழ்க்கைதான் பொருட்டு,” என்று சொல்லுகிற அதிமேதாவிகளை நான் சந்தித்திருக்கிறேன்.
அப்படியானால் முழு வேதாகமத்தையும் நாம் இருட்டிலேயே போட்டுவிடலாம். ஏனென்றால், அது பேசுகிறது. அது மட்டுமல்ல. அது பேசுவதை மிக நேர்த்தியாக, மிகத்தெளிவாக, மிக அழகாக, பேசுகிறது. பேசிவிட்டு அந்தப் பேச்சுக்கு ஒத்த வாழ்க்கை இல்லையென்றால் அது அந்த வாழ்க்கை வீணானது.
ஆனால், ஒரு வாழ்க்கையை உற்பத்திசெய்வதற்கு, உருவாக்குவதற்கு, தேவன் பேச வேண்டும். தேவன் அமைதியாக இருந்திருந்தால் தேவனுடைய இருதயம் என்னவென்றோ, தேவனுடைய மனம் என்னவென்றோ, தேவனுடைய வழிகள் என்னவென்றோ, தேவன் எப்படிச் செயல்படுகிறார் என்றோ நமக்குத் தெரியாது. அதனால்தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்குத் தேவனுடைய வார்த்தை என்று பெயர். “ஆதியிலே தேவனுடைய வார்த்தை இருந்தது” என்றால் தேவன் பேசுகிறார், தம் மனதை, தம் இருதயத்தை, மனிதன் புரிந்துகொள்ளும் வண்ணமாக அவர் திறந்துகாண்பிக்கிறார் என்று பொருள்.
இந்த நான்கையும் நான் சொல்வதற்கு என்ன காரணம்? தேவனுடைய வார்த்தையிலே தேவனுடைய நித்திய நோக்கத்தையும், நித்தியத் திட்டத்தையும் ஒரு சமநிலையோடு பார்ப்பதற்கு இது உதவிசெய்யும் என்று நான் வாக்குறுதி பண்ணினேன். இன்னொன்றையும் நான் யோசித்துப்பார்த்தேன். “பிரதர், நீங்கள் பேசுவதெல்லாம் படித்தவர்களுக்குத்தான் புரியும், உதவிசெய்யும். படிக்காதவர்களுக்கோ, படிப்பறிவு குறைந்தவர்களுக்கோ நீங்கள் பேசுவது புரியாது, உதவிசெய்யாது,” என்று சிலர் நினைக்கலாம், சொல்லலாம். ரோமருக்கு எழுதிய கடிதத்தை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்வோம். இதைப் படித்தவர்கள் மட்டும்தான் புரிந்துகொள்ள முடியுமா அல்லது படிக்காதவர்களும் புரிந்துகொள்ள முடியுமா? மனதைத் தொட்டுச் சொல்லுங்கள். அந்த நிருபத்தை வாசிக்கும்போது, இதெல்லாம், என்னைப் பொறுத்தவரை, படித்தவர்களுக்குக்கூடப் புரியாது. நல்ல ஒரு பல்கலைக்கழகக் கல்வியுடையவர்கள்கூட ரோமருக்கு எழுதின கடிதத்தை படித்து, புரிந்துகொள்வது எளிதல்ல. ஆவிக்குரிய மனம், புதிதாக்கப்பட்ட மனம், உழைப்பு, பிரயாசம் இவைகள்மூலமாகத்தான் நாம் ரோமருக்கு எழுதிய கடிதம்போன்ற ஒரு புத்தகத்தைப் படித்துப் புரிந்துகொள்கிறோம். இதில் கல்லூரிப் படிப்பு உள்ளவர்களுக்கும் கல்லூரிப் படிப்பு இல்லாதவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. “இதை எப்படியாவது புரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஒரு நோக்கமும், ஒரு குறிக்கோளும், உழைப்பும், பிரயாசமும், ஒப்புவிப்பும் இருக்கும்போது மட்டுமே நாம் நம்முடைய வாழ்க்கையில் இப்படிப்பட்ட பகுதிகளைப் புரிந்துகொள்ள முடியுமேதவிர மேலோட்டமாகச் செய்தித்தாளைப் படிப்பதுபோல் படித்துப் புரிந்துகொள்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.
நான் மதுரையில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது ஒருநாள் மதுரை சவுராஷ்டிரா கல்லூரியில் துண்டுப்பிரசுரம் கொடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு பையன் என்னிடம் வந்து, “வேதாகமம் உனக்கு நல்லாத் தெரியுமா?” என்று ஒரு கேள்வி கேட்டான். நான் நன்றாக யோசித்துத் தாழ்மையாகப் பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக, “ரொம்பத் தெரியாது,” என்றேன். உடனே அவன், “ரொம்பத் தெரியாதுன்னா அப்போ எதற்கு இங்கே வந்து இதைச் செய்கிறாய்? எதற்கு இதைக் கொடுத்துக்கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டான். நான் வெட்கப்பட்டேன். “இப்படிப்பட்ட ஒரு கேள்விக்கு எப்படிப் பதில் கொடுக்க வேண்டும்,” என்று அன்றைக்கு சாயங்காலம் ரொம்ப யோசித்து பார்த்தேன். இதுபோல வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் பல சம்பவங்களும், நம்முடைய எண்ணங்களைத் தட்டியெழுப்புவதற்காகத் தேவன் பயன்படுத்துகிறார். “வேதாகமம் உனக்கு நல்லாத் தெரியவில்லை என்றால், நீ எதற்கு இங்கே வந்து வேலை செய்கிறாய்?” மறக்க முடியாத சம்பவம் இல்லையா?
இந்த மையக் குறிப்பையும், மூன்று குறிப்புகளையும்பற்றி சுருக்கமாக நான் சொல்லுகிறேன். தேவனுடைய நோக்கமும், தேவனுடைய திட்டமும் கிறிஸ்துவை இந்த முழுப் பிரபஞ்சத்தில் வெளியாக்குவது. “காலங்கள் நிறைவேறும்போது இந்த முழுப் பிரபஞ்சமும், பிரபஞ்சம் முழுவதும், கிறிஸ்துவால் நிரம்பியிருக்கும்” (எபே. 1:9). “பரலோகத்திலுள்ளவைகளும், பூலோகத்திலுள்ளவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவின் தலைத்துவத்துக்குள் கூட்டிச்சேர்க்கப்பட வேண்டும்,” என்பது தேவனுடைய திட்டம். தேவனுடைய நோக்கத்திலும், திட்டத்திலும் மையத்திலிருப்பது கிறிஸ்துவைப்பற்றிய வெளிப்பாடு. இந்த முழுப் பிரபஞ்சத்தையும் கிறிஸ்துவைக்கொண்டு நிரப்பி அல்லது கிறிஸ்துவின் தலைத்துவத்துக்குள் கூட்டிச்சேர்ப்பது என்பது எங்கு தொடங்குகிறது என்றால் ஒரு கூட்டம் மனிதர்களை, ஒரு கூட்டம் மக்களை, தேவன் கிறிஸ்துவைக்கொண்டு நிரப்புகிறார்.
கிறிஸ்துவைக்கொண்டு நிரப்புவதென்றால் மனிதர்களெல்லாம் மண்பாண்டங்கள் என்றும், ஒவ்வொரு நாளும் தேவன் கிறிஸ்துவை அதற்குள் ஊற்றுகிறார் என்பதுபோலவும் கற்பனைசெய்துகொள்ளக் கூடாது. அப்படியல்ல. வைரங்களெல்லாம் கரித்துண்டுகள்தான். ஆனால், பூமிக்குக்கீழே உள்ள அழுத்தத்தினால், அந்தக் கரித்துண்டுகளெல்லாம் எதையோகொண்டு நிரப்பி, வைரங்களாக மாறிவிடுகின்றன. இது மறுவுருவாக்குகிற அல்லது மறுசாயலாக்குகிற ஒரு வழிமுறை. கரி கரியாகவே இருக்கும்; ஏதோவொரு மந்திரமான வழிமுறையின்மூலமாக அந்தக் கரிக்குள்ளே ஒன்றை ஊற்றி ஊற்றி ஒரு நாள் இந்தக் கரித்துண்டுகளெல்லாம் வைரத்துண்டுகளாக மாறிவிடுவதாக நாம் கற்பனைசெய்துகொள்ளக் கூடாது. பூமிக்குக்கீழே உள்ள வெப்பத்தினாலும், அழுத்தத்தினாலும், தாங்கமுடியாத வெப்பத்தினாலும், அழுத்தத்தினாலும் பல நூறு ஆண்டுகளோ, பல ஆயிரம் ஆண்டுகளோ, பல இலட்சம் ஆண்டுகளோ கழித்துத்தான் அவைகளுடைய மறுவுருவாகுதல் அல்லது மறுசாயலாகுதல் முடிவடைகிறது. ஆகவே, பிரபஞ்சம் முழுவதையும் கிறிஸ்துவைக்கொண்டு நிரப்புவது தேவனுடைய திட்டம். தேவன் எங்கு தொடங்குகிறார் என்றால் ஒரு கூட்டம் மக்களைக் கிறிஸ்துவைக்கொண்டு நிரப்புகிறார். அப்படிப்பட்ட மக்களாக இருப்பதற்கு நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் வந்திருக்கிறோம். தேவனுடைய நோக்கம், திட்டம், நிறைவேறுவதற்கு ஒத்துழைக்கின்ற மக்களாய் நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கின்றோம், அவரை நேசிக்கின்றோம், அவரை இரட்சகராகவும், ஆண்டவராகவும் நாம் பெற்றிருக்கிறோம். அதன் அடிப்படை ஆதாரம் தேவனுடைய பக்கத்தில் அவர் கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறார்; நம்முடைய பக்கத்தில் நாம் கிறிஸ்துவை அறிவோம்.
ஒருமுறை ஏதோவொரு போர் நடந்தபோது, சீனாவைச் சேர்ந்த சில போர்வீரர்கள் காட்டுக்குள்ளே மாட்டிக்கொண்டார்கள்; சாப்பிடுவதற்கு ஒன்றும் இல்லை; அவர்களுக்குக் கிடைத்ததெல்லாம் சோயா என்ற தாவரம் மட்டுமே. அவர்கள் அந்தச் சோயாவைச் சாப்பிட்டு பல ஆண்டுகள் உயிர் பிழைத்தார்கள். அப்பொழுதுதான், “இந்தச் சோயாவிலே அந்த அளவுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன; வேறு எதுவுமே இல்லாமல் வெறும் சோயாபீனைச் சாப்பிட்டே உயிர் பிழைக்கலாம்; அதைச் சாப்பிட்டு நல்ல சுகத்தோடும், ஆரோக்கியத்தோடும் உயிர் பிழைக்கலாம்” என்றும் கண்டுபிடித்தார்கள். அந்த அறிவு அவர்களை வாழ வைத்தது.
ஆகவே, நாம் கிறிஸ்துவை அறிகிற அறிவு என்று சொல்லும்போது அது ஏதோ ஏட்டறிவு அல்லது எழுத்தறிவு என்று தவறாகப் புரிந்துகொள்ளதீர்கள். இந்த அறிவு நம்மை வாழ வைக்கிற அறிவு. “ஓ! கிறிஸ்துவைப்பற்றி மட்டும் நான் இப்படி அறிந்திருந்தால், என்னுடைய வாழ்க்கை எவ்வளவு நன்மையும், இன்பமும், ஆசீர்வாதமும் நிறைந்ததாக மாறியிருக்கும்!” என்று நாம் எண்ணுவோம். இதுதான் கிறிஸ்துவைப்பற்றிய அறிவு. பொதுவாக இரட்சிக்கப்பட்ட, ஆவிக்குரிய கிறிஸ்தவர்களிடத்திலே இப்படி ஒரு நம்பிக்கை உண்டு. “பிரதர், அறிவு மிகவும் ஆபத்தானது. நம்முடைய முதல் தகப்பனாகிய ஆதாம் அறிவு விருட்சத்திலே சாப்பிட்டான். என்ன நிகழ்ந்தது பாருங்கள். அதினால் அறிவுப் பக்கம் நாம் போகவே கூடாது,” என்று சொல்வார்கள். அப்படியானால் எங்கு முட்டாள்தனம் காணப்படுகிறதோ அங்குதான் நாம் காணப்பட வேண்டும். அப்படிச் சொல்ல மாட்டார்கள். ஆனால், கொஞ்சம் ஒரு கேள்வி கேட்டால் போதும், “பிரதர், நீங்கள் அறிவு விருட்சத்தில் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்,” என்று சொல்வார்கள்.
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை அவருடைய சீடர்கள் பல கேள்விகள் கேட்டார்கள். “இராஜ்ஜியத்தை எப்பொழுது தருவீர்? வருகிறவர் நீர்தானா?” யூதர்கள் கேட்டார்கள்: நீர் யார் என்று சொல்லும்? “நீங்கள் அறிவு விருட்சத்தில் இருக்கிறீர்கள்,” என்று ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து டபாய்க்கவில்லை. “நான் யார் என்று பலமுறை உங்களுக்குப் பதில் சொல்லுகிறேன். நீங்கள் அதை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்கிறீர்கள். இன்னொரு முறை சொல்லுகிறேன். ஆபிரகாம் இருப்பதற்கு முந்தியே இருக்கிறேன்,” என்று ரொம்பப் பச்சையாகச் சொல்லுகிறார். “ஆபிரகாம் இருப்பதற்கு முந்தியே நான் இருக்கிறேன் என்றால் நான் யார் அல்ல என்று பொருள்? நான் சாதாரண ஒரு மனிதனல்ல”. ஆகவே, நான் சொன்னதுபோல ஏட்டறிவு அல்லது எழுத்தறிவு அல்ல தேவனுடைய வார்த்தை குறிப்பிடுகிற இந்த அறிவு. அது அனுபவ அறிவு. தமிழிலே நான் இப்படி 2 வார்த்தைகளைப் பயன்படுத்துவேன். கற்றறிவு, உற்றறிவு. அனுபவம்சாராத அறிவு, அனுபவம்சார்ந்த அறிவு. அனுபவம்சாராத என்றால் புறம்பான ஒரு அறிவு. சூரியன் கிழக்கே உதிக்கிறது என்பது ஒரு புறம்பான அறிவு. நான் அதைப் பார்க்காவிட்டாலுங்கூட அது உண்மைதான். ஒரு நாள் நான் காலையிலே எழுந்து சூரியன் கிழக்கிலே உதிப்பதைப் பார்த்துவிட்டேன் என்று வைத்துக்கொள்வோமே, அந்த புறம்பான அறிவு இப்போது அனுபவஅறிவாக மாறிவிடுகிறது.
ஆகவே, அறிவு எதற்காகவென்றால், “ஓ! தேவனை கிறிஸ்துவில் நான் இப்படி அறிந்திருந்தால் எப்படியாய் மாறியிருக்கும்?”என்ற நிலை ஏற்படும். தேவனுடைய பக்கத்தில் அவர் கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறார். நம்முடைய பக்கத்தில் நாம் அவரை அறிகிறோம். “நான் என் தாயின் வயிற்றிலிருந்ததுமுதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினாலே என்னை அழைத்த தேவன், தம்முடைய குமாரனை நான் புறவினத்தார்களிடத்தில் நற்செய்தியாய் அறிவிக்கும்பொருட்டாக, அவரை எனக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்தபோது…” (கலா. 1:15, 16).
ஒன்றை நான் குறிப்பிட விரும்புகிறேன். கிறிஸ்துவைப்பற்றிய வெளிப்பாடும், கிறிஸ்துவைப்பற்றிய அறிவும் நாம் எந்த அளவுக்குக் கிறிஸ்துவால் வாழ்கிறோம், கிறிஸ்து நமக்குள் உருவாக்கப்படுகிறார், கிறிஸ்து நமக்குள் வீடமைக்கிறார், கிறிஸ்துவை நாம் வழங்குகிறோம், கிறிஸ்துவை வெளியாக்கிறோம் என்ற இந்த மூன்று அச்சுகளையும் பாதிக்கக்கூடியது. அந்த நடுமையத்தில் இருக்கின்ற வெளிப்பாடும், அறிவும் எந்த அளவுக்கு வலுவுள்ளதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு இந்த மூன்று அச்சுகளிலும், இந்த மூன்று திசைகளிலும் நாம் வளர்வோம், பெருகுவோம். நீங்கள் அதைக் கற்பனை செய்துகொள்ளலாம். ஒருவேளை ஒரு கனசதுரம் என்று கற்பனை செய்துகொள்வோமே. கனசதுரம் என்று கற்பனை செய்துகொண்டால் அந்த மையத்திலுள்ள கிறிஸ்துவின் வெளிப்பாடும், கிறிஸ்துவின் அறிவும் எந்த அளவுக்குப் பலம் வாய்ந்ததாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு நாம் வளர்ந்து, பெருகிக்கொண்டே போவோம். கிறிஸ்துவைப்பற்றிய வெளிப்பாடும், கிறிஸ்துவை நாம் அறிகிற அறிவும் குறைவாக இருக்குமென்றால், அந்த அளவுக்குத்தான் இந்த மீதி மூன்று அச்சுகளில் நம்முடைய வளர்த்தியும், நம்முடைய பெருக்கமும் இருக்கும்.
இஸ்ரயேல் மக்கள் எகிப்திலே கிறிஸ்துவை ஆட்டுக்குட்டியாக அறிந்துகொண்டார்கள், அனுபவித்தார்கள். வனாந்தரத்திலே கிறிஸ்துவை அவர்கள் மன்னாவாக, தண்ணீராக அனுபவித்தார்கள். கானானிலே கிறிஸ்துவைப் பாலும், தேனும் ஓடுகிற நல்ல தேசமாக அனுபவித்தார்கள்.
நன்றாகக் கவனிக்க வேண்டும். தயவுசெய்து பழைய ஏற்பாட்டில் உள்ள எல்லாவற்றிற்கும் ஒரு அர்த்தம் சொல்வதற்கு முற்படக்கூடாது. நீங்கள் ஒரு கைதேர்ந்த போதகர்; அல்லது ஆசிரியர்; அதற்குரிய போதுமான கல்விக்காய் நீங்கள் பிரயாசப்பட்டிருக்கிறீர்கள் என்றால்தவிர புதுப்புது அர்த்தங்கள் சொல்ல முயற்சிசெய்ய வேண்டாம். “அங்குள்ள நீல நிறக் கயிறு எதைக் குறிக்கிறது? ராகாப் தன்னுடைய வீட்டிலிருந்து சிகப்பு நூலை விட்டாள். சிகப்பு என்பது இரத்தத்தை குறிக்கிறது. அது இரத்தத்தின்மூலமாய் நமக்கு இரட்சிப்பு கிடைக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது,” என்பதுபோன்ற விந்தையான பொருள் விளக்கங்கள் கொடுக்க முயற்சி செய்ய வேண்டாம். நல்ல பரவசமான பொருள் விளக்கமாக இருக்கலாம். பரவசமான பொருள் விளக்கமெல்லாம் தேவன் விரும்புகின்ற, தேவன் கருதியுள்ள பொருள்விளக்கம் அல்ல. “பிரதர், நீங்கள் மட்டும் பொருள்விளக்கம் கொடுக்கலாமா?” நானும் பொருள்விளக்கம் கொடுக்கமாட்டேன். ஆராய்ந்துபார்க்காமல் எந்தப் பொருள்விளக்கமும் கொடுக்கக்கூடாது.
ஆனால், இது மிக முக்கியமானது. கிறிஸ்து மன்னா என்பதற்கு எந்தப் பொருள்விளக்கமும் நான் கொடுக்கவில்லை. “நான்தான் வானத்திலிருந்து இறங்கி வந்த மன்னா,” என்று பொருள்விளக்கம் கொடுத்தவர் யார்? யோவான் 6ஆம் அதிகாரத்திலே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பொருள்விளக்கம் கொடுத்தார். “இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்த்த தேவ ஆட்டுக்குட்டி,” என்று ஆட்டுக்குட்டிக்குப் பொருள்விளக்கம் கொடுத்தவர் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து. எதற்குத் தெள்ளத்தெளிவான பொருள்விளக்கம் இருக்கிறதோ, அதைமட்டும்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆகவே, கிறிஸ்துவைப் பாவங்களை மன்னிக்கிற ஆட்டுக்குட்டியாகவும் வெளிப்பாட்டைப் பெற்று, அறிந்து, நாம் அனுபவிக்கலாம். அவர் வானத்திலிருந்து இறங்கி வந்த மன்னாவாய், பாறையிலிருந்து ஓடிவந்த தண்ணீராய், வெளிப்பாட்டைப் பெற்று, அறிந்து அனுபவிக்கலாம். கிறிஸ்துவை எல்லா ஐசுவரியமும்கொண்ட பாலும் தேனும் ஓடுகிற தேசமாகவும் நாம் அறிந்து அனுபவிக்கலாம். பாலும் தேனும் ஓடுகிற தேசமென்றால் அவருக்குள் இல்லாத வளங்களே இல்லையென்று அர்த்தம். முழு வேதாகமுமே அதைத்தான் சொல்லுகிறது. “நான் அல்பாவும், ஓமெகாவுமாய் இருக்கிறேன்,” என்றால் “எனக்கு முந்தியும், எனக்குப் பிந்தியும் வேறெதுவும் இல்லை,” என்று பொருள். “கிறிஸ்துவின் அளவற்ற ஐசுவரியங்கள்” (எபே. 3:8) என்றும் முழு வேதாகமமும் அதைக் காண்பிக்கிறது.
இப்போது என்னுடைய முதல் அச்சுக்கு வருகிறேன்: சீடத்துவம், அதாவது கிறிஸ்து நம்மில் வாழ்வதும், கிறிஸ்து நம்மில் உருவாக்கப்படுவதும். “கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும் வாழ்கிறேன், இனி நான் அல்ல, கிறிஸ்துவே என்னில் வாழ்கிறார். நான் இப்பொழுது மாம்சத்தில் வாழ்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே வாழ்கிறேன்” (கலாத்தியர் 2:20). “என் சிறு பிள்ளைகளே, கிறிஸ்து உங்களில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறேன்” (கலா. 4:19).
கிறிஸ்து தம்மை வெளிப்படுத்துவதும், நாம் கிறிஸ்துவை அறிவதும் எதற்காகவென்றால் நாம் கிறிஸ்துவால் வாழ வேண்டும், கிறிஸ்து நம்மில் உருவாக்கப்பட வேண்டும். கிறிஸ்து நம்மில் உருவாக்கப்படுவது என்றால் நம்முடைய தன்மை, நம்முடைய குணம், நம்முடைய வழிகள், நம்முடைய உள்ளமைப்பு என எல்லா விதத்திலும் நாம் கிறிஸ்துவைப்போல மாறுவதாகும். இதைப் புதிய ஏற்பாடு கிறிஸ்துவின் சாயல் என்றழைக்கிறது. “நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியைப்போலக் கண்டு, பிரதிபலித்து ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுசாயலாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம்” (2 கொரி. 3:18) அல்லது மறுவுருவாக்கப்பட்டுக்கொண்டிக்கிறோம் என்று வாசிக்கிறோம்.
இதுபோன்ற நூறு வசனங்களைத் தொகுத்து, “இவைகளெல்லாம் மனப்பாட வசனங்கள்” என்று யாராவது சொன்னால்கூட மிகவும் நன்றாக இருக்கும். ஏனென்றால், ஏறக்குறைய ஒரு நூறு வசனங்களை நாம் திரும்பத்திரும்ப, திரும்பத்திரும்ப மேற்கோள்காட்டுவோம். எந்த அளவுக்கு மேற்கோள் காட்டுவோமென்றால் “அந்த நூறு வசனங்களைத்தவிர நமக்கு வேறு எதுவுமே தெரியாது போலிருக்கிறதே!” என்கிற அளவுக்கு நாம் மேற்கோள்காட்டுவோம். அது நல்லது.
ஆகவே, முதல் அச்சு கிறிஸ்துவின் குணம் தேவனுடைய பிள்ளைகளுக்குள், தேவனுடைய மக்களுக்குள் உருவாக்கப்படுவது. கிறிஸ்துவின் குணம் தேவனுடைய மக்களுக்குள் உருவாக்கப்படுவது மிகவும் பரிதாபமான, சோகமான ஒரு கதை. ஏனென்றால், தேவனுடைய மக்கள் பலரோடு நாம் பழகும்போது நாம் அறிவது என்னவென்றால் கிறிஸ்துவின் குணம் உருவாக்கப்படுவது மிகவும் அரிதான ஒரு காரியமாகக் காணப்படுகிறது. உண்மை. இது மிகவும் அதிர்ச்சியாக இருக்கலாம். நான் இயேசுகிறிஸ்துவைப்போல மாறுவதற்குத்தான் நான் இயேசுவை ஏற்றுக்கொண்டிருக்கிறேன். நீங்கள் இப்படிச் சொல்லுகிறீர்களே. பெரும்பாலும் சகோதரர்கள் இதை ஒத்துக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால், இது ஒரு அரிதான காரியமாகவே காணப்படுகிறது. தேவனுடைய மக்கள் பத்து ஆண்டுகள், இருபது ஆண்டுகள், முப்பது ஆண்டுகள் கிறிஸ்தவர்களாக, விசுவாசிகளாக, தேவனுக்கு ஊழியம் செய்பவர்களாகக்கூட இருப்பார்கள்.
இன்னும் ஒன்று சொல்வேன். தேவனுடைய ஊழியர்கள் என்று சொல்வதினாலே அவர்களுக்குள்ளே கிறிஸ்து தானாகவே உருவாகிவிட்டார் அல்லது உருவாகிவிடுவார் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் தலைமைத்துவப் பொறுப்பில் இருக்கின்றவர்களுக்குள் கிறிஸ்து உருவாக்கப்படவில்லையென்றால் அதைப்போன்ற ஒரு பரிதாபம் வேறு எதுவும் இல்லை. அவர்கள் மிகப் பெரிய இழப்பையும், கேட்டையும் தேவனுடைய மக்களுக்குக் கொண்டுவருவார்கள். “என் சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக,” (யாக்கோபு 3:1) என்று யாக்கோபு எச்சரிக்கிறார். அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து உங்களில் அநேகம்பேர் போதகராகாதிருப்பீர்களாக. உடனே எல்லாரும், “நான் போதகராக மாட்டேன்,” என்று சொல்லலாம். குறைந்தபட்சம் நம்முடைய பிள்ளைகளுக்கு நாம் போதகராக இருக்க வேண்டியுள்ளது. அப்படியானால் கண்டிப்பாக அந்த அளவுக்கு ஆக்கினை இருக்கிறது. பள்ளிக்கூடத்திற்குப் போனால் பரீட்சை வைப்பார்கள் என்பதற்காகப் பள்ளிக்கூடத்திற்குப் போகாமல் இருக்க முடியுமா? தவறான போதகனாக இருந்தால் அதிக ஆக்கினை கிடைக்கும் என்பதற்காகப் பேசாமலே இருந்துவிட முடியுமா? பேசாமல் இருந்துவிட்டால் ஆக்கினையே கிடையாதே! அப்படியல்ல.
சீடத்துவத்திற்கு நம்முடைய திட்டம் என்ன? இயேசுகிறிஸ்துவினுடைய தன்மையும், குணமும், வழிகளும், உள்ளமைப்பும் நமக்குள் உருவாக்கப்பட வேண்டும். கிறிஸ்துவை வாழ்வதைப்பற்றியும், கிறிஸ்து நமக்குள் உருவாக்கப்படுவதைப்பற்றியும் தேவனுடைய மக்களுக்கிடையே மிகக் குறைவான அறிவே காணப்படுகிறது.
நாம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் சீடர்களாக, கிறிஸ்து நம்மில் வாழ வேண்டும், கிறிஸ்து நம்மில் உருவாக்கப்பட வேண்டும் என்றால் தொன்றுதொட்டு இந்த இருபது நூற்றாண்டுகளிலே கைதேர்ந்த கிறிஸ்துவின் சீடர்கள் சில ஆவிக்குரிய பயிற்சிகளை உத்தமமாக, உண்மையாகக் கைக்கொண்டிருக்கிறார்கள். தனிமையாய் இருத்தல், அமைதியாய் இருத்தல், ஜெபம், உபவாசம், வேதத்தைப் படிப்பது, வேதத்தை ஆராய்வது, வேதத்தை மனப்பாடம்செய்வது, கீழ்ப்படிவது, பாவ அறிக்கை செய்வதுபோன்ற சில ஆவிக்குரிய பயிற்சிகளை அவர்கள் உத்தமமாகக் கைக்கொண்டிருக்கிறார்கள். அது சீடத்துவத்திலே வளர்வதற்கு, கிறிஸ்து வாழ்வதற்கும், கிறிஸ்து அவர்களுக்குள் உருவாக்கப்படுவதற்கும் மிகவும் உறுதுணையாக இருந்திருக்கிறது. அதைப்பற்றிய அறிவும், அதைக் கைக்கொள்வதால் விளைகின்ற பலன்களையும்பற்றி இன்றைக்கு தேவனுடைய மக்களிடையே ஒரு விழிப்புணர்வு கிடையாது.
அதற்கு ஒரு காரணம், இந்த ஆவிக்குரிய பயிற்சிகளைப் பெரும்பாலும் கைக்கொண்டவர்கள் கத்தோலிக்க சமயத்திலிருந்த பரிசுத்தவான்கள். ஒரு காரியம் கத்தோலிக்க சமயத்திலே இருந்ததென்றால் நாம் அதை உடனே குப்பையிலே தூக்கியெறிந்துவிடுகிறோம். உண்மையா, பொய்யா? கத்தோலிக்க சமயத்திலிருந்து நன்மைகளெல்லாம் வர வாய்ப்பு உண்டா? உண்டு. கத்தோலிக்க சமயத்திலிருந்து பல தீமைகள் விளைந்துள்ளன. புரொட்டஸ்டாண்ட் சமயத்திலிருந்தும் தீமைகள் விளைந்துள்ளன. பெந்தெகோஸ்தே மார்க்கத்திலிருந்தும் தீமைகள் விளைந்துள்ளன. எல்லாவற்றையும் நாம் தள்ளிவிட்டால் நாம் பெற்றுக்கொள்வதற்கென்று ஒன்றுமே இருக்காது. யூதமதத்திலிருந்தும் தீமைகள் விளைந்துள்ளன.
இரண்டாம் நூற்றாண்டிலே மார்சியன் என்ற ஒரு மனிதர் வாழ்ந்தார். யூதர்கள் நியாயப்பிரமாணத்தை வைத்திருந்தார்கள்; ஆனால், அவர்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை எதிர்த்தார்கள். ஆகவே, “யூதர்களுடைய பழைய ஏற்பாடு வேதமல்ல,” என்று அவர் புறக்கணித்தார். “நான்கு நற்செய்தி நூல்களும் வேதம் அல்ல,” என்று அதையும் புறக்கணித்தார். கடைசியிலே அவர் பவுல் எழுதின கடிதங்களை மட்டும்தான் வேதம் என்று எடுத்துக்கொண்டார். அதிலும்கூட சில ஒவ்வாத காரியங்களை அவர் மாற்றி, திருத்தம் செய்துகொண்டார். எனவே, மார்சியனுடைய வேதம். என்ன? “யூதர்கள்மூலமாகத் தீமை வந்தது; அதன்மூலமாய்த் தீமை வந்தது. இதன்மூலமாய்த் தீமை வந்தது. எதன்மூலமாய்த் தீமை வருகிறதோ, அவையெல்லாவற்றையும் தள்ளிவிட வேண்டும்,” என்பதுதான் அவருடைய வேதம். தீமை வந்த எல்லாவற்றையும் மார்சியன் தள்ளிவிட்டார். திருத்தியமைக்கப்பட்ட பவுலின் கடிதங்களை மட்டுமே அவர் வேதமாக்கிக் கொண்டார். அப்போதுதான் அலெக்சாந்தரியாவைச் சேர்ந்த கிலமெண்ட என்ற ஒரு பரிசுத்தவான் அதை எதிர்த்து, “இல்லை. இது மார்சியனுடைய மார்க்கபேதம்,” என்று எழுதுகிறார்.
புதிய ஏற்பாட்டிலுள்ள 27 புத்தகங்களும் வேதத்தின் பகுதிகளே என்று எப்படி தீர்மானிக்கப்பட்டது தெரியுமா? இதுபோன்ற மார்க்கபேதங்கள் எழும்போது அந்த மார்க்கபேதங்களுக்கு பதில் அளிக்கிறார்கள் இல்லையா? இந்த 27 புத்தகங்களும் புதிய ஏற்பாட்டில் உள்ளன என்று பதில் அளிக்கும்போதுதான் இதெல்லாம் வருகிறது. ஏறக்குறைய 6ஆம் நூற்றாண்டிலே லியோ என்கிறவர் தன்னை உலகளாவிய சபையின் தன்னிகரகற்ற தலைவராகப் பிரகடனம் செய்துகொள்கிறார். அதாவது போப்பானவராக. ஏறக்குறைய 6ஆம் நூற்றாண்டிலே இது நடைபெறுவது. அந்த 6 நூற்றாண்டுகளும் சபை இருந்தது. சபையிலே சீரழிவுகள் இருந்தன. கேடுபாடுகள் இருந்தன. ஆனால், சபையும் இருந்தது. முற்றுமுடிய முழுக்கமுழுக்க அது கேடுபாடுகளும், சீரழிவும் கொண்டதல்ல. கேடுபாடுகளும், சீரழிவும் எல்லா நூற்றாண்டுகளிலும் உண்டு.
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து அவர்களை எச்சரித்தார். “கோதுமை நாற்றுகள் நடுவிலே பதர்களும் உண்டு. இரண்டையுமே வளர விடுங்கள்,” என்றுதான் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சொன்னார். “நான் நாட்டினது நல்ல நாற்றுகள் அல்லவா? இந்தத் தீய நாற்றுகளெல்லாம் எங்கிருந்து வந்தன? எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது,” என்று கர்த்தர் ஒன்றும் அதிர்ச்சியடைந்துவிடவில்லை. மார்சியன் வருவார் என்று அவருக்குத் தெரியும். மார்சியன்போன்ற பல கேடுபாடுகளையும், சீரழிவையும் கொண்ட மக்கள் இருந்திருக்கிறார்கள். ஆகவே, தேவனுடைய மக்களாகிய நாம் எச்சரிக்கையோடும், கவனத்தோடும் இருக்க வேண்டும். நன்மைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தீமைகளை தள்ளிவிட வேண்டும். சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட மனிதனிடமிருந்துகூட நாம் நன்மைகளை எடுத்துக் கொள்ள வேண்டும், தீமைகளைத் தள்ளிவிட வேண்டும்.
யாக்கோபு எருசலேமிலுள்ள சபையின் தலைவராக இருக்கிறார்; எருசலேமிலுள்ள சபையிலே பெரும்பாலும் யூதர்கள்தான் கிறிஸ்தவர்களாக இருந்தார்கள். புறவினத்தார் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டபோது அவர்கள் விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டும் என்று அந்த யூதக் கிறிஸ்தவர்கள் வலியுறுத்தினார்கள். ஆனால் பவுல், பர்னபாபோன்ற அப்போஸ்தலர்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட புறவினத்தார்கள் விருத்தசேதனம் பண்ணவேண்டிய அவசியம் இல்லை என்றார்கள். இதை முன்னிட்டு பவுல், பர்னபாபோன்ற அப்போஸ்தலர்களுக்கும், எருசலேமிலேயிருந்த யூத அப்போஸ்தலர்களுக்கும் பெரிய கருத்துமோதல் உருவானது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக எருசலேமில் ஒரு மாநாடு நடைபெறுகிறது. அதை அப்போஸ்தலர் 15ஆம் அதிகாரத்திலே பார்க்கிறோம். மாநாட்டின் முடிவிலே யாக்கோபு எழுந்து, “புறவினத்தாரை நாம் விருத்தசேதனம் பண்ணுவதற்கு வலியுறுத்தக்கூடாது,” என்று தன் தீர்மானத்தை வழங்குகிறார். ஆனால், கடைசிவரையிலே யாக்கோபு யூதக்கிறிஸ்தவர்களுக்குத் தலைவராகவே இருக்கிறார்.
பவுல் ஒருமுறை எருசலேமுக்குத் திரும்பிவரும்போது அவர், “நீர் யூத மார்க்கத்திற்கு விரோதி என்று இங்குள்ளவர்கள் நினைக்கின்றார்கள். எவ்வளவோ ஆயிரக்கணக்கான யூதர்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் கருத்தில்கொண்டு அவர்கள் மனம் புண்படாதபடிக்கு நீர் மொட்டையடித்துக்கொள்ள வேண்டும்,” என்று சொல்லுகிறார்.
இப்படிப்பட்ட யாக்கோபை தலைசிறந்த சீடன் என்றும், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலன் என்றும் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? மனந்திறந்து சொல்லுங்கள். ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள். ஆகவே, யாக்கோபு எழுதின கடிதம் என்று ஒரு கடிதம் இருந்தால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? அடுத்த மார்சியன் நம்பர் 2 ஆக மாறிவிடுவீர்கள். “இந்த யாக்கோபு எழுதின கடிதம் தவறுதலாக நுழைந்துவிட்டது,” என்று சொன்னது வேறு யாருமில்லை மார்டின் லூத்தர் சொன்னார். ஏனென்றால், ”விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்,” என்பதுதான் மார்டின் லூத்தருடைய மாபெரும் வெளிப்பாடு. ஆனால், “கிரியையில்லாத விசுவாசம் செத்தது,” என்று யாக்கோபு சொல்லுகிறார். “யாக்கோபுக்கு ஒரு முடிவு கட்டவேண்டும். விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்பது புதிய ஏற்பாட்டின் முழு சாராம்சம் என்று நான் சொல்கிறேன் யாக்கோபு நம்முடைய கருத்துக்கு மாற்றுக்கருத்து ஒன்றை வைக்கிறார். ஆகவே யாக்கோபுடைய கடிதம் இந்தப் புதிய ஏற்பாட்டிலே இருந்திக்கவே கூடாது,” என்பது மார்டின் லூத்தருடைய வாதம்.
தேவன் மிகவும் பெரியவர். அவருடைய மனம் மிகவும் பரந்தது. அவருடைய இருதயம் மிகவும் விரிந்தது. யாக்கோபினுடைய எல்லா எல்லைகளுக்கும், மட்டுப்பாடுகளுக்கும் மிஞ்சி யாக்கோபையும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பயன்படுத்துகிறாரா, தள்ளிவிடுகிறாரா? பயன்படுத்துகிறார். யாக்கோபு எழுதின பத்து கடிதங்கள் அங்கு இல்லை. ஆனால், யாக்கோபு எழுதின ஒரு கடிதம் அங்கு இருக்கும். இது தேவனுடைய இருதயத்தைக் காண்பிக்கும். பவுல் மொட்டையடித்துக்கொள்ள வேண்டும் என்று யாக்கோபு சொன்னதை நாம் தள்ளிவிட வேண்டும். ஆனால், யாக்கோபுடைய கடிதத்தை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தக் கடிதத்தைப் பார்க்கும்போதெல்லாம் எப்படித் தான் பார்க்க வேண்டும்? “பவுலை மொட்டையடிக்கச் சொன்னவருடைய கடிதம். அதனால் இந்தக் கடிதத்தை ரொம்ப எச்சரிக்கையோடே பார்க்க வேண்டும். குற்றப்பார்வையோடு பார்க்க வேண்டும்,” என்பதல்ல.
இது முதல் அச்சு, சீடத்துவம். தொன்றுதொட்டு இயேசுகிறிஸ்துவின் கைதேர்ந்த சீடர்கள், சில ஆவிக்குரிய பயிற்சிகளை, ஆவிக்குரிய பழக்கங்களை, கைக்கொண்டிருக்கிறார்கள். அது இயேசு கிறிஸ்துவை வாழ்வதற்கும், கிறிஸ்து அவர்களுக்குள் உருவாக்கப்படுவதற்கும் மிகவும் உறுதுணையாக இருந்தன. தேவனுடைய மக்கள் பெரும்பாலும் அதைத் தவறவிட்டுவிட்டார்கள். ஏனென்றால், ஆதியிலே இதைக் கைக்கொண்டவர்களெல்லாம் யார்? பொதுவான சபையில் இருந்தவர்கள்.
இரண்டாவது அச்சு ஐக்கியம் அல்லது கிறிஸ்து நம்மில் வீடமைப்பது. மையம் வளமாக இருக்கும்போது இந்த அச்சுகளில் வளர்ச்சி ஏற்படும். கிறிஸ்துவைப்பற்றிய வெளிப்பாடும், அறிவும் வலுவடையும்போது நம்முடைய சீடத்துவம் வளரும். சீடத்துவம் வளரும்போது கிறிஸ்துவைப்பற்றிய வெளிப்பாடும், அறிவும் வலுப்படும். ஆகவே, மையத்திலிருந்து அச்சுகளுக்கு ஒரு பாதிப்பு ஏற்படுவதுபோல அச்சுகளில் ஒரு பாதிப்பு ஏற்படும்போது இரண்டு திசைகளிலும் ஒரு ஓட்டமும், பரிமாற்றமும் இருக்கும்.
இரண்டாவது அச்சு, கிறிஸ்து நம்மில் வீடமைப்பது அல்லது ஐக்கியம். நான் ஒரு தனி சீடனல்ல. ஒரு குகையில் வாழ்கின்ற சீடன் அல்ல. நான் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் அடிச்சுவடுகளில் நடப்பதற்கு, (நான் பயன்படுத்துகிற ஒரு வார்த்தை அடியொற்றி நடப்பது. நல்ல வார்த்தை. இதை 1 பேதுரு 2:21யில் பயன்படுத்துகிறார்) நாம் பின்பற்றும்படிக்கு அவர் நமக்கு முன்மாதிரியை வைத்துப் போனார். இதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிற கிரேக்க வார்த்தைக்கு அடியில் எழுதுதல் என்று பொருள்.
சின்னப் பிள்ளைகள் எழுத்து எழுதப் பழகும்போது எதைக் கொடுப்பார்களென்றால், எழுத்து குழியில் இருப்பதுபோல ஒரு பலகையை அல்லது தாளைக் கொடுப்பார்கள். ஆ என்ற எழுத்து ஒரு குழி மாதிரி இருக்கும். அந்தக் குழியிலே அந்தப் பிள்ளைகள் தவறாமல் எழுதிவிட முடியும். அதற்கு அடியில் எழுதுதல் என்று பெயர். அந்தக் குழியைவிட்டு வேறு இடத்திலே கோடு போடுவதற்கு வாய்ப்பே இல்லை, இருக்காது. அந்தமாதிரி அந்தக் குழி இருக்கும், பள்ளம் இருக்கும். இதற்கு அடியில் எழுதுதல் என்று பெயர்.
இயேசுகிறிஸ்து நாம் பின்பற்றுகின்ற, அடியொற்றி நடக்கின்ற, அடியில் எழுதுதலாக இருக்கின்றார். முன்மாதிரி என்றால் அடியில் எழுதுதல் என்று பொருள். ஒரு சகோதரன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு அடியொற்றி நடக்கிறார். அந்தச் சகோதரனோடுள்ள உறவு அதேபோல் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை அடியொற்றி நடப்பதற்கு எனக்கு உதவிசெய்கிறது. இந்தச் சகோதரனுடைய உறவு இல்லையென்றால் அந்த அளவிற்கு இயேசுகிறிஸ்துவை எப்படி அடியொற்றி நடப்பது, அவரை எப்படி வாழ்வது, அவர் எனக்குள் எப்படி உருவாக்கப்படுவது என்று தெரியாமல் அந்த அளவுக்கு நான் இழந்துவிடுவேன்.
சிலபேர், “நான் என்னுடைய சபை பொறுப்புகளிலே கிரமமாக, ஒழுங்காக, தவறில்லாதவனாக இருக்கிறேன். ஆகவே, நான் நல்ல சீடன்,” என்று நினைத்துக் கொள்வதுண்டு. அப்படியல்ல. உண்மையாகவே சபை வாழ்க்கையினுடைய நோக்கம் என்னவென்றால் நாம் சீடத்துவத்தில் வளர்வதற்கு சபை வாழ்க்கை நமக்கு உதவி செய்கிறது. கிறிஸ்துவை வாழ்வதற்குத் தேவனோடுள்ள உறவு நமக்கு உதவிசெய்கிறது. கிறிஸ்து நமக்குள் உருவாக்கப்படுவதற்கு தேவ மக்களோடுள்ள உறவு நமக்கு உதவிசெய்கிறது. கிறிஸ்துவை நாம் அறிவதற்கும், கிறிஸ்து நமக்குள் வெளிப்படுத்தப்படுவதற்கும் தேவ மக்களோடுள்ள உறவு நமக்கு உதவிசெய்கிறது. இதுதான் சபையினுடைய அல்லது ஐக்கியத்தினுடைய அல்லது தேவமக்களுடைய உறவினுடைய நோக்கம்.
தேவமக்களோடு ஒருவனுக்கு உறவே, ஐக்கியமே இல்லையென்றால் இப்படிப்பட்டவன் எந்த அளவுக்குக் கிறிஸ்துவைப்பற்றிய அறிவையும், வெளிப்பாட்டையும் பெற்றுக்கொள்ள முடியும் அல்லது கிறிஸ்துவின் சீடனாக வளர முடியும்? என்னுடைய பதில் “இன்றைக்கு மிகவும் கேள்விக்குரியது”. ஆனால், தேவமக்களோடுள்ள உறவு என்பது எப்படி இருக்க வேண்டும்? ஒரு கூடுகைதான் உறவா? ஒரு கூடுகைக்கு வந்துவிட்டு போய்விட்டால் உறவினுடைய காரியங்கள், உறவினுடைய பொறுப்புகளெல்லாம் நிறைவேறிவிட்டதா என்றால் இல்லை. ஆனால், கூடி வாழ்வதிலே கிறிஸ்துவைப்பற்றிய வெளிப்பாடு, அறிவு, சீடத்துவத்தில் வளர்வது ஆகியவைகள் அடங்கும். தேவ மக்களோடு ஒரு நேர்த்தியான உறவு கொண்டு வாழும்போது கிறிஸ்துவைப்பற்றிய அறிவும், வெளிப்பாடும் வலுவடையும். அது மூன்று அச்சுகளையும் பாதிக்கும்.
ஐக்கியம் அல்லது தேவமக்களோடுள்ள உறவு நேர்த்தியாக இல்லையென்றால் என்னவாகும்? சிலர் பொதுவாக தேவனுடைய பிள்ளைகளோடு தொடர்புகொண்டுவிட்டு பல துன்பங்களை அனுபவிப்பார்கள். அனுபவித்தபிறகு ஒரு ஓட்டுக்குள், ஆமை தன்னுடைய தலையை ஓட்டுக்குள் சுருக்கிக்கொள்வதைப்போல உள்ளே இழுத்துக்கொள்வார்கள். அதன்பின் பொதுவாக கிறிஸ்தவர்கள் தொடர்புவைத்துக்கொள்ள மாட்டார்கள். எந்த அளவுக்குத் தொடர்பு குறைவாக இருக்கிறதோ அந்த அளவுக்குப் பிரச்சனைகள் குறைவு என்று நினைக்கிறார்கள். விசுவாசிகளோடு, கிறிஸ்தவர்களோடு கூடி வாழ்ந்தால் என்ன வரும்? பிரச்சனைகள் வரும். உண்மையா, பொய்யா?
மூன்றாவது அச்சு, உக்கிராணத்துவம். கிறிஸ்துவை வெளியாக்குவதும், கிறிஸ்துவை வழங்குவதும். சீடத்துவம் என்றால் நமக்குள் கிறிஸ்து உருவாக்கப்படுவது. ஐக்கியம் என்பது தேவமக்களோடுள்ள உறவு. அது நாம் கிறிஸ்துவின் சீடனாக வளர்வதற்கும், வாழ்வதற்கும், கிறிஸ்து நமக்குள் உருவாக்கப்படுவதற்கும் உதவி செய்கிறது. ஐக்கியம் என்று ஒன்று இல்லையென்றால் நாம் கிறிஸ்துவின் சீடனாக வளர்வதும், வாழ்வதும் அந்த அளவுக்குத் தடைபடும்.
அதேபோல ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து, “உலகமெங்கும் போய் நற்செய்தி அறிவித்து சகல ஜாதிகளையும் சீடராக்குங்கள்,” என்று சொன்னார். “நீங்கள் எப்படி இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றி வாழ்கின்றீர்களோ, அதுபோல உலகமெங்கும் போய் மனிதர்களை இயேசுகிறிஸ்துவை, கிறிஸ்தவ மதத்தை, அவர்கள் தழுவச் செய்யுங்கள்,” என்று அவர் சொல்லவில்லை. இயேசுகிறிஸ்து வாழ்ந்ததுபோல வாழ்பவன்தான் சீடன். இந்தப் பூமியில் இயேசு கிறிஸ்து வாழ்ந்ததுபோல வாழுமாறு அழைக்கப்பட்டிருக்கிறோம். நாம் சீடர்களாக வாழ வேண்டும். மற்றவர்களையும் சீடர்களாக்க வேண்டும். குரு எப்படி வாழ்ந்தாரோ அப்படியே வாழ்கிறவன்தான் சீடன்.
“என்ன? நீ கிறிஸ்தவன் ஆகிவிட்டாயாமே!” என்று யாராவது கேட்டால், “இயேசுகிறிஸ்து வாழ்ந்ததுபோல நானும் இந்தப் பூமியில் ஒரு அருமையான வாழ்க்கை வாழத் தீர்மானித்திருக்கிறேன்,” என்று சொல்லலாம். இதை யாராவது, “அப்படியெல்லாம் வாழ்ந்துவிடாதே,” என்று சொல்ல முடியுமா? “நான் சபை கூடுகைக்குக் போனேன். நான் அது செய்கிறேன். இது செய்கிறேன்,” என்றால் அவைகளுக்கு வேண்டுமானால் அவர்கள் மறுப்புச் சொல்லலாம். ஆனால், “இயேசு இந்தப் பூமியிலே வாழ்ந்ததுபோல நான் வாழத் தீர்மானித்திருக்கிறேன்,” என்றால் “அந்தமாதிரி மட்டும் வாழ்ந்துவிடாதீர்கள். உங்களால் பலருக்குத் துன்பம் வந்துவிடும்,” என்று சொல்வார்களா? யாராவது சொல்வார்களா? யாரும் சொல்லமாட்டார்கள். “இயேசுபோல வாழ்ந்துகொள்ளலாம். ஆனால் கிறிஸ்தவர்கள்போல் வாழ்ந்துவிடாதே,” என்று சிலபேர் சொல்வார்கள். அதற்காக நாம் மனந்திரும்ப வேண்டும்.
ஆகவே மூன்றாவது அச்சு, நாம் தனிப்பட்ட வாழ்க்கையில் உண்மையாகவே சீடர்களாக வாழ்கிறோம் என்றால், சீடர்களாக நாம் கூடி வாழ்கிறோம் என்றால் மற்றவர்களையும் சீடர்களாக்க வேண்டும்.
இதைக் கேட்டுவிட்டு இதை ஒரு பெரிய சுமைபோல் கருதிவிட வேண்டாம். நாம் ஒரு ஆரோக்கியமான சூழலிலே வாழ்கிறோம். ஆனால், நோய்கள் சீக்கிரம் தொற்றக்கூடிய நிலையிலே ஒரு கூட்டம் மக்கள் வாழ்கின்றார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்களைப் பார்க்கும்போது நம்முடைய மனதிலே என்ன எண்ணம் எழும்? நோய் நொடிகள் இல்லாத ஒரு ஆரோக்கியமான சூழலிலே வாழ்கின்ற சாத்தியம் இருக்கும்போது, ஏன் அவர்கள் நோய் நொடிகள் உள்ள ஒரு சூழலிலே வாழ வேண்டும் என்ற பரிதாபம் எழுமா எழாதா? இயேசுவைப்போல வாழ்வது என்பது ஒரு பெரிய சுமையல்ல. அது நமக்கு அளிக்கப்பட்டுள்ள ஒரு பெரிய பாக்கியம். ஆகவே, உண்மையான சீடர்கள் எப்படி இருக்கவேண்டும் என்றால் பவுல் சொல்வதுபோல “கிறிஸ்துவுக்குள் எங்களை எப்பொழுதும் வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு கிறிஸ்துவை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” (2 கொரி. 2:14).
நன்றாய்க் கவனிக்க வேண்டும். எங்கோ ஒருநாள் நாம் சுவிசேஷத்தை அறிவிக்கும்போது இந்த வாசனையை நாம் வீசுவதில்லை. நம்முடைய வீடு, நாம் பயணம்பண்ணுகிற போக்குவரத்து, நாம் படிக்கின்ற இடம், குறிப்பாக நாம் வேலைபார்க்கின்ற இடம், (ஏறக்குறைய எட்டுமணி நேரத்திலிருந்து 12 மணி நேரம்வரை நாம் வேலைபார்க்கிற இடத்தில் இருக்கிறோம்) அந்த இடத்தில் நாம் கிறிஸ்துவை அறிகிற அறிவின் நறுமணத்தை அல்லது வாசனையை வீச வேண்டும். நற்செய்தியை வெளிப்படையாக அறிவிக்காமல்கூட வாழ்கிற முறையிலே, நாம் வேலை செய்கிற முறையிலே கிறிஸ்துவை அறிகிற அறிவின் வாசனையை நாம் வெளிப்படுத்த வேண்டும். அதுதவிர நாம் பேசுவதற்கோ அல்லது செயலாற்றுவதற்கோ வாய்ப்பு கிடைக்கும்போது நாம் கிறிஸ்துவை அவர்களுக்கு வழங்க வேண்டும்.
நாம் உண்மையாகவே சீடர்களாக வாழ்வோமென்றால், இயேசுகிறிஸ்துவால் வாழ்கின்றோம், இயேசு கிறிஸ்து நமக்குள் உருவாக்கப்படுகிறாரென்றால் நாம் வேலைசெய்கிற இடத்திலே, நாம் படிக்கிற இடத்திலே, பயணம் செய்கிற இடத்திலே நாம் ஒருவருக்கு கிறிஸ்துவை நம்முடைய வார்த்தைகளைக்கொண்டு பகிர்ந்துகொடுக்கும்போது அவர்கள் கிறிஸ்துவைப் பெற்றுக்கொள்வார்கள். ஏனென்றால், நமக்குள் உருவாக்கப்பட்டுள்ள கிறிஸ்து அவ்வளவு வல்லமையுள்ளவர். அவர் பாய்ந்தோடக்கூடியவர்.
இந்த வரைச்சட்டத்திலே நாம் வேதாகமம் முழுவதையும் பார்க்க வேண்டும். இந்த மூன்றும் சீராக நம்முடைய வாழ்க்கையிலே வளர்ச்சிபெற வேண்டும். சீடத்துவம் வளர்ச்சி பெற வேண்டும். ஐக்கியம் வளர்ச்சி பெற வேண்டும். உக்கிராணத்துவம் வளர்ச்சி பெற வேண்டும். நாம் ஐக்கியமும், உக்கிராணத்துவம் இல்லாத, சீடத்துவ specialistகளாக மாறிவிடக் கூடாது அல்லது உக்கிராணத்துவ specialistகளாக மாறிவிடக்கூடாது. அதாவது இந்த உக்கிராணத்துவ specialistகள் எப்போது பார்த்தாலும் சுவிசேஷத்தைப் பேசிக்கொண்டே இருப்பார்கள். சீடத்துவத்தையோ, ஐக்கியத்தையோபற்றி அவர்களுக்கு அக்கறை இருக்காது அல்லது சிலர் ஐக்கியத்தில் specialistகள். “பிரதர், சபையைப்பற்றி உங்கள் அடித்தளம் என்ன? எது முறையான சபை? சபைக்கு என்ன பெயர் வைக்க வேண்டும்?” என்றே பேசிக்கொண்டிருப்பார்கள். என்னமோ சபைக்குச் சரியான ஒரு பெயர் வைத்து விட்டவுடனே கிறிஸ்து நமக்குள் பெருகிவிட்டதுபோல ஒரு பொய்யான கருத்து? சீடத்துவத்திற்குச் சில யுக்திகள் உதவுமா? எப்பொழுது பார்த்தாலும் “ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்” என்று சொல்லிக்கொண்டிருந்தால் சீடத்துவத்தில் வளர்ந்துவிடுவோமா? நம் சட்டைப் பையில் அல்லது நம்முடைய தோளில் தொங்கிக்கொண்டிருக்கிற பையில் ஒரு வசனத்தை எழுதித் தொங்கப்போட்டுவிட்டால் நல்ல உக்கிராணக்காரர்களாகக் கிறிஸ்துவை வழங்கிவிடுவோமா?
இவைகளிலே எனக்கு உடன்பாடு இல்லை. தேவனுக்கு நன்றி சொல்வதில் எனக்கு உடன்பாடு உண்டு. ஆனால், பொருளற்ற விதத்திலே “ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்” என்று சொல்வதிலே எனக்கு உடன்பாடு இல்லை. சமயம் வாய்த்தாலும், சமயம் வாய்க்காவிட்டாலும் ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது, நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ இயேசுகிறிஸ்துவை அறிவிப்பதிலே எனக்கு உடன்பாடு உண்டு, அது என்னுடைய உயிர்மூச்சு. ஆனால் ஒரு பேட்ஜ்ஜை போட்டுக்கொள்வதிலே எனக்கு உடன்பாடு இல்லை.
ஆகவே, மூன்று அச்சுகளிலும் நாம் சீராக வளர்வதற்கு நடுமையம் கிறிஸ்துவைப்பற்றிய அறிவும், கிறிஸ்துவைப்பற்றிய வெளிப்பாடும் ஆதாரமாக இருக்க வேண்டும். ஏதோ யுக்திகளைப் பின்பற்றி நாம் சீடத்துவத்தில் வளரவில்லை. சபை என்கிற யுக்தியை நாம் வளர்க்கவில்லை. சுவிசேஷம் அறிவிக்கிற யுக்தியை நாம் வளர்க்கவில்லை. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து என்கிற நபர், அவர்மேல் நாம் கொண்டிருக்கிற அன்பு, அவர்மேல் நாம் வைத்துள்ள விசுவாசம், அவர்மேல் நாம் வைத்துள்ள பற்று, அவருக்காக நாம் தத்தம்செய்வது இவைகளின் அடிப்படையில்தான் நாம் சீடத்துவத்தில் வளர்கிறோம், ஐக்கியத்தில் நாம் கட்டியெழுப்பப்படுகிறோம், உக்கிராணத்துவத்தில் நாம் உண்மையுள்ளவர்களாயிருக்கிறோம். இந்த வரைச்சட்டத்தை நீங்கள் உங்கள் மனதிலே வைத்துக்கொள்ளுங்கள். தேவனுடைய வார்த்தையை வாசிப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும், நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கைக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தேவனுடைய மக்கள் ஒரு மகிழ்ச்சியான, ஆரோக்கியமான, கனிநிறைந்த வாழ்க்கை வாழ்வதற்கு இது மிகவும் உங்களுக்கு உதவி செய்யும், ஊன்றுகோலாக இருக்கும். காத்தருக்கு ஸ்தோத்திரம்.