Transcribed from a message spoken on August 29, 2010 in Chennai
By Milton Rajendram
தேவன் நமக்கு நித்திய ஜீவனை, அதாவது தம்முடைய ஜீவனை, தந்திருக்கிறார். இந்த ஜீவன் வளர்ந்து, பக்குவமடைந்து, முதிர்ச்சியடைந்து, கனிகொடுக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். ஆனால், தேவன் நமக்குத் தந்திருக்கிற இந்த ஜீவன் வளர்வதற்கு, பக்குமடைவதற்கு, விருத்தியடைவதற்கு, கனி கொடுப்பதற்கு, போராட்டம் உண்டு.
இதை நான் கொஞ்சம் விளக்குகிறேன். தேவனுடைய பிள்ளைகளுக்கும் தேவனற்ற பிள்ளைகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன? கிறிஸ்தவன் என்றால் யார்? “தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார். அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன். தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்”(1 யோவான் 5:11-12). கிறிஸ்தவன் என்பவன் தேவனுடைய ஜீவனை உடையவன். கிறிஸ்தவன் என்பவன் பல மதச் சடங்குகளைச் செய்பவன் அல்ல. சொல்லப்போனால் எல்லாவிதமான மதச் சடங்குகளிலுமிருந்து தேவன் நம்மை விடுவித்திருக்கிறார்.
தேவன் நமக்குத் தந்திருக்கிற அல்லது நாம் பெற்றிருக்கிற தேவனுடைய ஜீவன் எவ்வளவு அரும் செல்வம் என்பதைப் பார்ப்பதற்குத் தேவன் நம் கண்களைத் திறக்க வேண்டும். ஏனென்றால், பல சமயங்களில், “தேவன் நமக்கு அவருடைய ஜீவனைத் தந்திருக்கிறார்,” என்று சொன்னால், “அதனால் என்ன!” என்பதுபோன்ற ஒரு மனப்பாங்கு நமக்கு இருக்கும்.
ஜீவன் என்ற வார்த்தை மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு நற்செய்திகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய ஒவ்வொரு நற்செய்தியிலும் இந்த வார்த்தை ஒன்பது அல்லது பத்துமுறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், யோவான் நற்செய்தியில் மட்டும் ஏறக்குறைய 90முதல் 100முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
யோவான் நற்செய்தியில் அடிக்கடி வருகிற ஒரு சொற்றொடர் “குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறாரன்” (யோவான் 3:36). “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு” (யோவான் 6:47). யோவான் தம் கடிதங்களிலும் இதையே மீண்டும் சொல்லுகிறார். யோவான் 20 அதிகாரங்களை எழுதிவிட்டு, 20ஆம் அதிகாரத்தின் கடைசிக்கு வரும்போது, “இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்திய ஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது” (யோவான் 20:31). என்று சொல்லுகிறார். அதுபோல, 1 யோவான் 5இல், “உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவ குமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதுகிறேன்,” (1 யோவான் 5:12-13) என்று அவர் சொல்லுகிறார். எனவே, நித்திய ஜீவனே யோவான் நற்செய்தியின் மையக்கருத்தும், அவருடைய கடிதத்தின் மையக்கருத்தும் என்று சொல்லலாம்.
இயேசு கிறிஸ்துவைத் தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கும்போது நாம் பல காரியங்களைப் பெற்றுக்கொள்ளலாம், பல காரியங்கள் நடைபெறலாம். ஆனால், மிக முக்கியமானது என்னவென்றால், நாம் தேவனுடைய ஜீவனைப் பெறுகிறோம். இன்னும் சொல்லப்போனால், அதுவே தேவனுடைய குறிக்கோள், தேவனுடைய நோக்கம். மனிதனுக்குத் தம்முடைய ஜீவனையே வழங்க வேண்டும் என்பதே தேவனுடைய திட்டம். மனிதனுக்குத் தம் ஜீவனைக் கொடுக்க வேண்டும், மனிதனோடு தம் ஜீவனைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதே தேவனுடைய நித்திய, அநாதி நோக்கம்.
“தேவனுடைய ஜீவன் என்றால் என்ன?” என்ற ஒரு கேள்வி எழும். இந்தக் கேள்விக்கு அவ்வளவு எளிதில் பதில் சொல்ல முடியாது. நித்திய ஜீவன் என்றால் என்னவென்று எளிதில் வரையறுக்க முடியாது. ஆனால், ஒன்று சொல்ல முடியும். தேவன் தந்த மாபெரும் வாக்குறுதி நித்திய ஜீவன். தேவன் தந்தருளின மாபெரும் கொடை நித்திய ஜீவன்.
இரண்டு வசனங்கள் இப்படிச் சொல்லுகின்றன. “நித்திய ஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்” (1 யோவான் 2:25). வேதாகமத்தில் வருடத்தின் 365 நாட்களுக்கும் 365 வாக்குத்தத்தங்கள் இருப்பதாகச் சொல்லுகிறார்கள். இருக்கலாம். ஆனால், “இதுவே தேவன் நமக்குத் தந்திருக்கும் வாக்குறுதி.” எது? “நித்திய ஜீவன்,” என்று யோவான் சொல்லுகிறார். “தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டாகும் நித்திய ஜீவன்” (ரோமா; 6:23). தேவனுடைய கொடை நித்திய ஜீவன். தேவனுடைய வாக்குறுதி நித்திய ஜீவன். இது நான் சொல்ல விரும்புகிற முதல் காரியம். The promise of God is eternal life, the gift of God is eternal life. தேவனுடைய ஆதி நோக்கமும் இதுதான், இறுதி நோக்கமும் இதுதான்.
முதல் மனிதன் தேவனுடைய ஜீவனைப் பெறத் தவறிவிட்டான். அவன் தேவனுடைய அந்த மாபெரும் கொடையைப் பெறத் தவறிவிட்டான்.
இரண்டாவது, அதன் விளைவாக மரணம் இந்த மனிதனை ஆண்டுகொண்டது என்று எழுதப்பட்டிருக்கிறது. அவன் ஜீவனை இழந்துவிட்டால் உடனடியாகப் பெறுவது மரணம்தான். ஜீவனுக்கும் மரணத்துக்கும் நடுவில் வேறொரு தளம் கிடையாது. நான் இப்படிக் கேள்விப்பட்டிருக்கிறேன். மலையில் ஏறும்போது இரண்டில் ஒன்றுதான் நடக்கும். ஒன்று மேலே ஏறிக்கொண்டிருப்போம் அல்லது கீழே இறங்கிக் கொண்டிருப்போம். “என்னுடைய கால் அப்படியே நின்றுகொண்டிருக்கிறது,” என்று சொல்லமுடியாது. ஒன்று நாம் தேவனுடைய ஜீவனைப் பெற்றிருக்கிறோம் அல்லது மரணத்தின் பிடியில் விழுந்துவிட்டோம். அவ்வளவு தான். “நான் இரண்டுக்கும் நடுவில் இருக்கிறேன்,” என்று சொல்ல முடியாது. தேவன் அருளுகிற நித்திய ஜீவன் என்கிற கொடையைப் பெறத் தவறினால் அன்றைக்கு “நீ சாகவே சாவாய்,” என்பது தேவனுடைய கட்டளை.
ஜீவன் என்றால் என்னவென்று வரையறுப்பது எவ்வளவு கடினமோ, அப்படியே மரணம் என்றால் என்னவென்று வரையறுப்பதும் கடினம். ஆனால், ஒன்று சொல்லலாம். ஜீவனுக்கு எதிர் மரணம். மரணத்துக்கு எதிர் ஜீவன். இதை மட்டும் சொல்ல முடியும். மரணம் என்று சொன்னவுடன், இறந்த ஒருவருடைய உடலைக் கட்டிலில் கிடத்தியிருப்பதும், அழுவதும், புதைப்பதும்தான் நம் நினைவுக்கு வரும். இது உண்மைதான். அது மரணம்தான். சொல்லப்போனால், இது மரணத்தின் கடுமையான வெளியாக்கம். உடலிலிருந்து உயிர் பிரிந்துபோய்விட்டது. ஆனால், “அதுதான் மரணம், அது மட்டும்தான் மரணம்,” என்று நாம் நினைத்துவிடக் கூடாது. மரணத்தில் அது அடங்கும்.
நித்திய மரணம் என்று ஒன்று உண்டு. திருவெளிப்பாட்டில் அதைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. அது இரண்டாம் மரணம், நித்திய மரணம்.
ஆகவே, வேதாகமத்தில் மரணம் என்கிற வார்த்தை இந்த உடலைவிட்டு உயிர் பிரிவது மட்டும் அல்ல, மரணம் அதைவிடக் கொடுமையானது.
தேவன் வழங்குகிற இந்த மாபெரும் கொடையாகிய நித்திய ஜீவனை இழந்துபோன அல்லது பெறத் தவறின அல்லது நிராகரித்த மனிதன் மரணத்துக்குள் விழுந்துவிட்டான்.
மரணம் என்பது ஒரு மண்டலம்; மரணம் என்பது ஒரு ராஜ்ஜியம்; மரணம் என்பது ஒரு சூழல். அதுபோல், ஜீவன் என்பது ஒரு மண்டலம்; ஜீவன் என்பது ஒரு ராஜ்ஜியம்; ஜீவன் என்பது ஒரு சூழல் அல்லது ‘மரணம் என்பது சாத்தான். ஜீவன் என்பது கிறிஸ்து’ என்றும் சொல்லலாம். இதைக் கேட்டவுடன், “ஆ! இது பிரசங்கம்போல் இருக்கிறதே!” என்று நாம் சொல்லக்கூடும். ‘உடலைவிட்டு உயிர் போகிறது’ என்று சொல்லும்போது அது தெளிவாகப் புரிகிறது. ‘மண்டலம், ராஜ்ஜியம், சூழல், சாத்தான்’ என்று சொல்லும்போது அது புரிந்துகொள்வதற்குக் கொஞ்சம் கடினமாகத் தோன்றுகிறது. ஆனால், அது அவ்வளவு கடினம் அல்ல.
இப்போது இதை நான் விளக்குகிறேன். இந்தப் பூமி ஒரு மண்டலம். இந்த மண்டலத்தில் ஒருவன் இருக்கும்வரை, இந்தப் பூமியின் விதிகளுக்கு அவன் கட்டுப்பட்டவன். எவ்வளவு உயரத்துக்கு ஒரு கல்லைத் தூக்கி எறிந்தாலும் அந்தக் கல் மீண்டும் பூமியில்தான் வந்து விழும். அந்த விதிக்குப் பெயர் புவியீர்ப்பு விசையின் விதி.
நான் சிறுவனாக இருந்தபோது விண்கலங்களைப்பற்றிச் சிந்தித்ததுண்டு. விண்கலங்களை விண்ணில் ஏவுகிறார்களே! இந்த விண்கலங்கள் விண்ணில் சென்றவுடன் அது அப்படியே போய்க்கொண்டிருக்க வேண்டுமென்றால் அதற்கு எவ்வளவு எரிபொருள் தேவைப்படும்! அதன் வேகத்தை எப்படிக் குறைப்பார்கள், கூட்டுவார்கள்; அதன் திசையை எப்படி மாற்றுவார்கள் என்பவைகளெல்லாம் நீண்டநாள் எனக்குப் புரியாத புதிராக இருந்தன. பூமிக்குரிய மண்டலத்தைவிட்டு விண்கலம் வெளியே போனவுடன் அதற்கு எரிபொருள் தேவைப்படுமா அல்லது எந்த எரிபொருளும் தேவைப்படாமலே அது தன் நேர்கோட்டில் போய்க்கொண்டேயிருக்குமா? எரிபொருள் வேண்டுமா, வேண்டாமா? பூமியின் மண்டலத்துக்குள் இருக்கிறவரை தான் உராய்வு அல்லது புவியீர்ப்பு விதி செயல்படும். இந்த மண்டலத்தைவிட்டு வெளியேபோனபிறகு எரிபொருள் எரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த விதி அதன்மேல் செயல்படாது. நிலாவின் மண்டலத்துக்குள் போய்விட்டால் அங்கிருந்து ஒரு கல்லை எறிந்தால் அது பூமிக்கு வராது. அது நிலாவுக்குத்தான் போகும்.
“அவர் இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தம் அன்பின் குமாரனுடைய ராஜ்யத்துக்கு நம்மை உட்படுத்தியிருக்கிறார்” (கொலோ. 1:13). இருளின் மண்டலம், ராஜ்ஜியம், சூழலிலிருந்து நம்மை விடுவித்து, வெளியே கொண்டுவந்து, அவர் நம்மைத் தம் அன்பின் குமாரனுடைய ராஜ்ஜியத்துக்கு உட்படுத்தியிருக்கிறார். “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (யோவான் 5:24). இதை எப்படிப் புரிந்துகொள்வது? “இதெல்லாம் புரியாது,” என்று விட்டுவிடலாமா? மரணத்தைவிட்டு நீங்கலாக்கியிருக்கிறார். மரணத்தைவிட்டு என்றால் மரணம் என்ற மண்டலத்தைவிட்டு, ராஜ்ஜியத்தைவிட்டு, சூழலைவிட்டு என்று பொருள். ஜீவனுக்குட்படுத்தியிருக்கிறார். ஜீவனுக்குள் என்றால் ஜீவன் என்ற சூழலுக்குள் வந்திருக்கிறோம். ஜீவ சூழல் என்பது கிறிஸ்துவே.
பூமிக்குரிய சூழல், மண்டலம், ராஜ்ஜியம் இருப்பதுபோல, நிலாவுக்குரிய சூழல், மண்டலம், ராஜ்ஜியம் இருக்கிறது. நாம் பூமிக்குரிய மண்டலத்திலிருந்து நிலாவுக்குரிய மண்டலத்துக்குள் போய்விட்டால், அங்கு குதித்தால் மிதக்கிறதுபோல் இருக்கும் என்று சொல்கிறார்கள். பூமிக்குரிய மண்டலத்தில் 10 அடி உயரத்திலிருந்து கீழே குதித்தால் காயம் ஏற்படும். ஒருவேளை நிலாவில் அந்த உயரத்திலிருந்து குதித்தால் காயம் ஏற்படாதோ என்னவோ! அது வேறு மண்டலம்.
இந்த ஜீவ மண்டலம், ஜீவ சூழல், ஜீவ ராஜ்ஜியம் கிறிஸ்துவே. முன்பு நாம் கிறிஸ்துவுக்கு வெளியே இருந்தோம். இப்போது நாம் கிறிஸ்துவுக்கு உள்ளே இருக்கிறோம். நாம் கிறிஸ்துவில் இருக்கிறோம் என்பது புதிய ஏற்பாட்டின் ஒரு மாபெரும் உண்மை. “ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து…” (ரோமர் 8:1). “அந்தப்படி, நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டிருக்கிறீர்கள்” (1 கொரி. 1:30). ஆனால், தேவனுடைய மக்கள் புதிய ஏற்பாட்டை வாசிக்கும்போது இதையும் பெரிய ஆசீர்வாதமாக நினைக்கமாட்டார்கள்.
“வெள்ளியும் என்னுடையது, பொன்னும் என்னுடையது என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” (ஆகாய் 2:8); “நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப்பண்வேன்” (ஆதி. 22:17), “சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும். கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடாது” (சங். 34:10), “என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்தில் வைப்பேன்” (சங். 91:14) போன்ற வசனங்களை வாசிக்கும்போதும், கேட்கும்போதும் உற்சாகமாக இருக்கிறது. இவைகளை நாம் ஆசீர்வாதமாக நினைக்கிறோம். ஆனால், “நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டிருக்கிறீர்கள்,” என்று சொன்னால் “அதனால் என்ன?” என்பதுபோல் பார்க்கிறார்கள். அது நம்மில் அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
முன்பு நாம் மரணம் என்ற மண்டலத்தில் வாழ்ந்துகொண்டிருந்தோம், தேவனற்றவர்களாயிருந்தோம். எபேசியர் 2ஆம் அதிகாரத்தில் பவுல் எழுதுவதுபோல, நாம் “அக்கிரமங்களினாலும், பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்தோம்” (எபே. 2:1). அப்படியிருந்த நம்மை அவர் உயிர்ப்பித்து, உன்னதங்களிலே கிறிஸ்து இயேசுவுடனேகூட அமர்த்தியிருக்கிறார். நாம் கிறிஸ்துவில் இருக்கிறோம்.
நாம் ஜீவனைப் பெற்றிருக்கிறோம் என்பதின் ஒரு பொருள் என்னவென்றால் நாம் இந்த மரண மண்டலத்திலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டு, ஜீவ மண்டலத்துக்குள் அல்லது ஜீவ சூழலுக்குள் உட்படுத்தப்பட்டிருக்கிறோம். கிறிஸ்துவில் இருக்கிறோம் என்றால் நாம் ஜீவ மண்டலத்தில் இருக்கிறோம் என்று பொருள்.
இந்தப் பூமியில் எந்த மனிதனும் செய்ய முடியாத. எந்த மனிதனும் தரமுடியாத, ஒரு மாபெரும் அற்புதத்தைத் தேவன் செய்திருக்கிறார் என்பதை அழுத்திச் சொல்வதற்காக நான் இன்னொன்றைச் சொல்லுகிறேன்.
ரோமர் 7ஆம் அதிகாரத்தை வாசித்துப்பாருங்கள். அந்த அதிகாரத்தை வாசித்தால் நீங்கள் அழுவீர்கள். அது அவ்வளவு கொடுமையான அதிகாரம்! மரணச் சூழல் என்றால் என்ன, ஒருவன் மரண மண்டலத்தில் அல்லது மரணத்தின் பிடியில்.இருக்கிறான் அல்லது மரணம் ஒரு மனிதனைக் கவ்வியிருக்கிறது என்றால் அவனுடைய நிலை எப்படியிருக்கும் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் ரோமர் 7ஆம் அதிகாரத்தை வாசியுங்கள். அந்த அதிகாரத்தின் கடைசிப் பகுதியில் அப்போஸ்தலனாகிய பவுல் “நிர்ப்பந்தமான மனிதன் நான்! இந்த மரண சரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?” ஏறக்குறைய கதறுகிறார். அப்படியானால் என்ன பொருள்? “இந்த மரணச் சூழலுக்கு அல்லது மரணச் சூழலின் விதிகளுக்கு உட்பட்டிருக்கிற என்னை-என்னுடைய உடல், என்னுடைய ஆத்துமா எல்லாவற்றையும்-யார் என்னை விடுதலையாக்குவார்?” யாரும் விடுதலையாக்க முடியாது. புவியீர்ப்பு விதியிலிருந்து யாராவது விடுதலையாக்க முடியுமா?
ஒரு கல்லை மேலே தூக்கி எறிந்தால் கீழே வந்து விழும். கீழே விழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? விதிக்கு எதிராக நாம் செயல்பட முடியாது. எவ்வளவு நேரத்துக்குக் கைகளால் தாங்கிப்பிடிக்க முடியும்? கை வலிக்கும். கல் எப்படியும் கீழே விழும். ஒரு பலூனைத் தண்ணீருக்குள் அமிழ்த்திப் பிடிக்கும்போது, மிதக்கும் விதிக்கு எதிராகச் செயல்படுகிறோம். ஆனால், எவ்வளவு நேரத்துக்குப் பலூனை அமிழ்த்துப் பிடிக்க முடியும்? கை வலிக்கும். விதிக்கு எதிராகச் செயல்பட முடியாது. கையை எடுத்தவுடன் பலூன் தண்ணீருக்குமேலே வந்துவிடும்.
அதுபோல, இந்த மரண மண்டலத்தின் விதிகளுக்கு எதிராக எந்த மனிதனும் வெற்றிபெற முடியாது. “யார் இந்த மரண சரீரத்திலிருந்து என்னை விடுதலையாக்குவார்?” அடுத்த வசனம்: “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துமூலமாய்த் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.” இதற்கு என்ன அர்த்தம்? எதற்காகத் தேவனுக்கு நன்றி? இந்த மரண சரீரத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு ஒரு வழி இருக்கிறது; இந்த மரண மண்டலத்திலிருந்து வெளியேறுவதற்குத் தேவன் ஒரு வெளியேறும் வழி வைத்திருக்கிறார். யார் அவர்? இயேசு கிறிஸ்து. அல்லேலூயா! இதற்காகத்தான் பவுல் தேவனைத் துதிக்கிறார்.
திறந்தவெளி விளையாட்டு அரங்கத்தில் பார்வையாளர்கள் சுற்றி அமர்ந்திருக்க, வாட்போர் வீரர்களைச் சண்டைபோட விடுவார்களாம். இது மக்களுக்கு ஒரு வகையான பொழுதுபோக்கு. ஒரு வாட்போர்வீரன் இறந்துவிட்டால் இறந்தவனின் உடலை அவனுடைய நண்பனுடைய முதுகுக்குப் பின்னால் கட்டிவிடுவார்களாம். அவன் சண்டைபோடும்போது இறந்தவனின் உடலையும் இழுத்துக்கொண்டுதான் இப்போது சண்டைபோட வேண்டும். இறந்த ஓர் உடலை முதுகில் கட்டிக்கொண்டு அவனால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியாது. அதனால் அவனுடைய ஒரு கதறுதல் என்னவென்றால், “யார் என்னை விடுதலையாக்குவார்?” அவனை இழுத்து இழுத்தே அவன் செத்துவிடுவானாம்.
மரணச் சூழல் அல்லது மரண மண்டலம் அல்லது இருளின் மண்டலத்தின் விதிகளிலிருந்து யார் என்னை விடுதலையாக்குவார்? அது என்ன விதி? நம்மைப் பாவத்திற்கு உட்படுத்துகிற அல்லது பாவத்திற்கு நம்மைத் தள்ளுகிற விதி இந்த மரண மண்டலத்தில் உண்டு. மிக முக்கியமாகப் பாவம். இந்த உடலிலேகூட மரணத்தை உண்டுபண்ணுகிற விதி உண்டு.
இந்த மரண மண்டலத்தில் செயல்படுகிற விதிக்கு பாவ விதி அல்லது மரண விதி என்று பெயர் என்று பவுல் சொல்லுகிறார் (ரோமா; 8:2). அந்த விதி நம்மைப் பாவம் செய்ய இழுக்கும். இந்தப் பாவ விதி அல்லது மரண விதி பாவம் செய்வதற்கு ஆத்துமாவின்மேல் பயங்கரமாகச் செயல்படும். நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் பாவ விதியும், மரண விதியும் பயங்கரமாகச் செயல்படும். மேலே எறிந்த கல் கீழே வருவதுபோல, “நீ தப்பித்துப் போகலாம் என்று பார்க்கிறாயா?” என்று சொல்லி ஆத்துமாவைக் கீழே இழுத்துக்கொண்டு வரும். 100 தடவைக் கல்லை மேலே எறிந்தாலும், 100 தடவையும் கல் கீழேதான் விழும். ஏனென்றால், பாவ விதியும், மரண விதியும் அவ்வளவு பலமானவை! ஆனால், இருதயத்தில், “ஆண்டவரே, இந்த விதியிலிருந்து நான் விடுதலை பெறுவதற்கு என்ன வழி?” என்ற கதறுதல் இருக்கிறது. என்ன வழி? ஜீவனுடைய ஆவியின் பிரமாணம். கிறிஸ்து இயேசுவிலுள்ள ஜீவனுடைய ஆவியின் விதியே வழி. கிறிஸ்துவுக்குள் நுழைந்தபிறகு அல்லது தேவன் நம்மைக் கிறிஸ்து இயேசுவுக்குள் கொண்டுவந்தபிறகு, மரண மண்டலத்திலிருந்து தேவன் நம்மை ஜீவ மண்டலத்துக்குள் கொண்டுவந்து விட்டார்.
பூமிக்குரிய மண்டலத்திலிருந்து வான்வெளி மண்டலத்திற்குப் போய்விட்டால், பூமியின் விதி அந்த மண்டலத்தில் செல்லுபடியாகாது. அங்கு வேறொரு விதி செயல்படுகிறது. இந்த விதி அந்த மண்டலத்தில் செயல்படாது.
ஆதுபோல, பாவம் மரணம் என்கிற விதிகளிலிருந்து ஜீவனுடைய ஆவியின் விதி நம்மை விடுதலையாக்கிற்றே! கிறிஸ்து இயேசுவுக்குள் ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்கிற விதிகளிலிருந்து விடுதலையாக்கிற்றே. இது உண்மை.
இப்போது நான் என் மூன்றாவது குறிப்புக்கு வருகிறேன். போராட்டம் உண்டு.
தேவன் நமக்கு ஜீவனைத் தந்திருக்கிறார். இந்த ஜீவ விதி ஒவ்வொரு நாளும் பாவ விதி, மரண விதியிலிருந்து நம்மை மேற்கொள்ள வைக்கிறது. ஆனால், நாம் இன்னும் தேவதூதர்களாக மாறிவிடவில்லை. நாம் இன்னும் ஆதாமின் பிள்ளைகள்தான். நம்முடைய பழைய மனிதன் சிலுவையிலறையப்பட்டாலும், மாம்சம் என்று ஒன்று நமக்குள் இருக்கிறது. நாம் மரிக்கிறவரை இது நமக்குள் இருக்கிறது.
உண்மையின்படி நாம் இப்போது கிறிஸ்து என்கிற மண்டலத்தில் இருக்கிறோம். எனவே, ஜீவ ஆவியின் விதிதான் நம்மில் செயல்படுகிறது. ஆனால், இன்னொரு பக்கம், இன்னும் மாம்சம் நமக்குள் இருப்பதால் பாவ விதியும், மரணம விதியும் நம்மேல் செயல்பட முயல்கிறது. இது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கலாம். “அதுவா இதுவா? ஒன்றைச் சொல்லுங்கள்,” என்று நினைக்கலாம். “இரண்டுமே,” என்று நான் சொல்வேன். இரண்டு விதிகளும் ஒருவன்மேல் செயல்படுகிறது. பூமிக்குரிய விதியும் செயல்படுகிறது. ஆவிக்குரிய விதியும் செயல்படுகிறது. இது முடியும். பாவ விதியும், மரண விதியும் செயல்படுகிறது. ஜீவ ஆவியின் விதியும் செயல்படுகிறது. எனவே, அங்கு போராட்டம் உண்டு.
தேவனுடைய எண்ணம் என்னவென்றால் இந்த ஜீவன் வளர வேண்டும். நான் சொன்னதுபோல பக்குவமடைய வேண்டும், முழு வளர்ச்சி பெற வேண்டும், விருத்தியடைய வேண்டும், கனி கொடுக்க வேண்டும். நம்முடைய ஆவியில் தேவன் தம் ஜீவனை வைத்துவிட்டார். ஆனால், இன்னும் நம்முடைய எண்ணங்கள், உணர்ச்சிகள், தீர்மானங்கள், தன்மை, குணம், கட்டமைப்பு, மனப்பாங்கு, சாய்மானங்கள், சுவைகள், முன்னுரிமைகள், நடை, உடை, பாவனை, ஆகியவைகளெல்லாம் ஜீவ மண்டலத்துக்குள் வரவில்லை அல்லது ஜீவன் இந்தப் பகுதிகளுக்குள் வந்திருக்காது.
கிறிஸ்தவ வாழ்க்கை என்றால் என்ன? “முன்பு நான் சாராயம் குடித்தேன். இப்போது நான் சாராயம் குடிப்பதில்லை. முன்பு நான் சிகரெட் குடித்தேன். இப்போது நான் சிகரெட்ட குடிப்பதில்லை,” என்று சிலர் சாட்சிசொல்ல நான் கேட்டிருக்கிறேன். ஒரு பக்கம் அது நல்ல சாட்சி. ஆனால், நான் சொல்லுகிற இந்தக் காரியங்களெல்லாம் மிகவும் ஆழமானவை.
மனிதன் மிகவும் சிக்கலான ஒரு பிறவி. வெறுமனே அவன் ஒரு பாவி அல்லது ஒரு பரிசுத்தவான் என்று இனம்பிரித்துவிட முடியாது. மனிதர்கள் இரண்டு வகை: ஒன்று பாவி, இன்னொன்று பரிசுத்தவான் என்று அவ்வளவு சுலபமாகச் சொல்லிவிட முடியாது.
ஒருவனுடைய குணம், கட்டமைப்பு. நான் சொன்ன இந்தப் பட்டியலுக்குள் ஜீவன் வர வேண்டும். ஒருவன் எப்போதும் யாரையும் கிண்டல் செய்கிற ஆளாக இருப்பான்.
ஒருவிதமான பிறவிக்குணம் இருக்கும். இருபது வருடம் விசுவாசி, தேவனுக்கு ஊழியம் செய்கிறார். நல்ல மனிதர், நன்றாகச் ஜெபிக்கிற மனிதர், தாழ்மையான மனிதர், ஆனால், தெருவோரமாகக் காறித் துப்புகிறார்.
ஒரு குணம் இருக்கிறது, ஒரு தன்மை இருக்கிறது, கட்டமைப்பு இருக்கிறது, மனப்பாங்கு இருக்கிறது, சாய்மானம் இருக்கிறது. சுவைகள் இருக்கின்றன. ஒருவர் மிகவும் சத்தமாகப் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்தார். அவரைக் கேட்டபோது, “நான் நற்செய்தியைப்பற்றிய ஒரு பாடல் கேட்டுக்கொண்டிருக்கிறேன்,” என்று சொன்னார். என்னைப் பொறுத்தவரை நீங்கள் என்னதான் முயற்சி செய்தாலும் இப்படிப்பட்ட ராக் இசையில் பரிசுத்த ஆவியானவரும், கிறிஸ்துவும் இருக்க முடியாது. “இந்தப் பாடல்களின் வரிகளையெல்லாம் நாங்கள் நிருபங்களிலிருந்தும், சங்கீதங்களிலுமிருந்துதான் எடுத்திருக்கிறோம்,” என்று சொன்னாலும் இதனால் எந்த இலாபமும் இல்லை. இது ஒரு மனிதனுடைய சுவை. இதெல்லாம் எப்படித் தெரியவரும்? இதை நாம் ஒரு புத்தகத்தைவைத்துச் சொல்வதில்லை. நமக்குள் இருக்கிற பரிசுத்த ஆவியானவர் “இதில் ஜீவன் இருக்கிறது அல்லது மரணம் இருக்கிறது,” என்று அதை வகையறுப்பார்.
நம்முடைய முன்னுரிமைகள். இவைகளெல்லாம் ஜீவனின் விதிக்குள் வர வேண்டும். இவைகளிலெல்லாம் ஆண்டவராகிய இயேசு அல்லது ஜீவன் வெளிப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
சூரியன் கிழக்கில் உதிக்கிறது என்பது உண்மையானால் இதுவும் உண்மை. இதற்கு நிரூபணம் வேண்டுமா? சில நாட்களில் மேகமூட்டமாக இருக்கிறது. சூரியன் கிழக்கில் உதிப்பதைப் பார்ப்பதில்லை. அப்போது சூரியன் கிழக்கில் உதிக்கிறதா இல்லையா? பார்த்தாலும் சரி பார்க்காவிட்டாலும் சரி, சூரியன் கிழக்கில்தான் உதிக்கிறது. மழைகாலம் முழுவதும் நான் சூரியனைப் பார்க்காவிட்டாலும் சூரியன் கிழக்கில்தான் உதிக்கிறது. இதற்குப் பெயர் உண்மை. இது நம் பௌதீக உலகில் உண்மையென்றால், “கிறிஸ்து இயேசுவினால் ஜீவனுடைய ஆவியின் விதி என்னைப் பாவம் மரணம் என்கிற விதிகளிலிருந்து விடுதலையாக்கிற்று!” என்பது உண்மை. ஆனால், நேற்றுப் பாவம் செய்தேனே! சண்டை போட்டேனே! கோபப்பட்டேனே! பல மேக மூட்டங்கள் இருந்தாலும் சரி. சூரியன் கிழக்கில் உதிக்கிறது என்பது மாறாது, மெய்.
முதலாவது பிசாசு நம்முடைய விசுவாசத்தைத் தாக்குவான் “சூரியன் கிழக்கில் உதிக்கவில்லை. சூரியன் கிழக்கில் உதித்ததை நீ ஒருநாள் பார்த்துவிட்டாய் என்பதற்காக அதை நம்பாதே. இன்றைக்குச் சூரியனைப் பார்த்தாயா? பார்க்க முடிகிறதா?” என்று கேட்பான்.
மூன்று தடைகள் உண்டு. முதலாவது தடை விசுவாசமின்மை. பல தடவை நாம் நமக்குள் இருக்கும் தேவனுடைய ஜீவனை நம்புவதைவிட மரணத்தின் விதியை அதிகமாக நம்புவோம். ஏனென்றால் மரணத்தின் விதி அப்படி அப்பட்டமாகச் செயல்படும். ரோமர் 8ஆம் அதிகாரத்தை வாசித்துப்பார்க்க வேண்டும். சிதைவும் அழிவும் நம்மேல் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த முழு சிருஷ்டியிலும்கூட சிதைவும், அழிவும் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. சர்வ சிருஷ்டியும் ஏகமாய்ப் பிரசவித்துத் தவிக்கிறதாம். எதற்காக? தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்காக. ஏன் தேவனுடைய புத்திரர் வெளிப்பட வேண்டும்? ஏனென்றால், தேவனுடைய புத்திரர்தான் முதன்முதலாக இந்த மரண விதி, பாவ விதி ஆகியவைகளை மேற்கொள்ளுகிற ஜீவ விதியை அநுபவிக்கிறவர்கள். இன்னும் அது சிருஷ்டிக்குப் போகவில்லை. இந்த முழுப் படைப்பும் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்துகொண்டிருக்கிறது, கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டிருக்கிறது.
ஒரு தோட்டத்தை எடுத்துக்கொள்வோம். நாம் ஒன்றுமே செய்யவில்லையென்றால் அந்தத் தோட்டம் பூத்துக்குலுங்குமா அல்லது அழிந்துபோகுமா? ஒன்றுமே செய்யவில்லையென்றால் அங்கு முள்ளும் குறுக்கும் வளரும். பூவும் கனியும் வேண்டுமென்றால் நாம் போரட வேண்டும். ஏனென்றால், மரண விதி படைப்பில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஒன்றுமே செய்யவில்லையென்றால் ஒரு தோட்டம் அழிந்துபோகும். ஒன்றுமே செய்யவில்லையென்றால் ஒரு மனிதன் அழிந்துபோவான், சிதைந்துபோவான். அவனுடைய ஆத்துமாவும் சிதைந்துபோகும். அவனுடைய உடல்கூட சிதைந்துபோகும். “நான் எந்தத் தப்பும் செய்வதில்லை,” என்று ஒருவன் சொல்லலாம். இயேசு கிறிஸ்துவோடு ஒரு ஜீவனுள்ள உறவு இல்லையென்றால், ஒன்றுமே செய்ய வேண்டாம். இந்த ஆத்துமா சிதைந்துபோகும்.
“திருடன் திருடவும், கொல்லவும், அழிக்கவுமேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகள் ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்,” (யோவான் 10:10) என்று ஆண்டவராகிய இயேசு சொன்னார். சாத்தான் தன் மரண விதியை இந்த மண்டலத்தில் அவிழ்த்துவிட்டிருக்கிறான். இந்த மரண விதி இந்த ஆத்துமாவைத் திருடும். நம்முடைய குணம், நம்முடைய கட்டமைப்பு, நம்முடைய மகிழ்ச்சி, நம்முடைய சமாதானம், கிறிஸ்துவுக்குரிய எல்லாவற்றையும் அது திருடும், கொல்லும், கடைசியில் அது அழிக்கும். எனவே, அது மிகவும் உண்மைபோல் தோன்றும். அந்த விதிதான் மிகவும் சக்திவாய்ந்த விதி போலவும், இந்த ஜீவ விதி அவ்வளவு சக்திவாய்ந்தது இல்லை என்பதுபோலவும் தோன்றும்.
நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் மிக மிக அடிப்படையான ஆதாரம் தேவனுடைய சத்தியங்கள்மேல் அல்லது தேவனுடைய விதிகளின்மேல் நமக்கு அசைக்கமுடியாத விசுவாசம் இருக்க வேண்டும். ஜீவ விதி மரணத்தின்வழியாகச் சென்றாலும் அது மரணத்தை ஜெயிக்கும். அது மரணத்தை ஜெயமாக விழுங்கியது. மரணத்தால் இயேசு கிறிஸ்துவைப் பிடித்துவைத்துக்கொள்ள முடியவில்லை (அப். 2:24) என்று நடபடிகள் புத்தகத்தில் வாசிக்கிறோம். மரணம் கவ்வும். “நாம் செத்துப்போவோம்” என்று தோன்றும். நான் உடலைப்பற்றிச் சொல்லவில்லை. பிரதானமாக நம் ஆத்துமா.
நடபடிகள் புத்தகத்தின் கடைசியில் ஒரு நிகழ்ச்சி இருக்கிறது. பவுலின் கப்பல் பிரயாணத்தில் கப்பல் உடைந்துவிடுகிறது. எல்லாரும் தப்பி மெலித்தா என்னும் தீவில் ஒதுங்குகிறார்கள். கரைக்கு வந்தபிறகு குளிர் காய்வதற்காக தீயில் விறகு அள்ளிப்போடுகிறார்கள். அப்போது சூடு உறைத்து ஒரு விரிய்ன் பாம்பு வெளியே வந்து பவுலின் கையைக் கவ்விக்கொள்ளுகிறது. அந்தத் தீவிலுள்ள மக்கள் அதைப் பார்த்தவுடன், “இந்த மனிதன் கொலைபாதகன். இவன் கொடூரமான பாவியாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால், கப்பல் சேதத்துக்குத் தப்பி வந்தபிறகும், பாம்பு இவனை விடவில்லை,” (அப். 28:4) என்று சொன்னார்கள். “தேவன் இவனை அடிஅடியென்று அடிக்கிறார்,” என்று ஒருவேளை சிலர் சொல்லலாம். கொஞ்ச நேரத்தில் அவன் உடல் வீங்கி செத்துப்போவான் என்று அவர்கள் நினைத்தார்கள். அதுதான் மரண விதி. மரணம் அவனைக் கவ்விக்கொண்டு தொங்கிக்கொண்டிருக்கிறது. சிலர் பயந்தே செத்திருப்பார்கள். ஆனால், பவுல் அதை உதறிப்போட்டுவிட்டு ஒன்றும் நடக்காததுபோல் தன் வேலையைச் செய்தார். அவன் சாகவில்லை. உடனே அங்கிருந்த மக்கள், “இவன் தேவன்,” என்று நினைத்தார்கள்.
மரண விதி வல்லமையுள்ளதா அல்லது ஜீவ விதி வல்லமையுள்ளதா? ஒருவேளை நம்முடைய வாழ்க்கையின் இயற்கையான போக்கில் பாம்புபோன்ற மரண விதி நம்மைக் கவ்வுமென்றால், இயற்கை விதிக்கு உட்பட்ட இந்த மக்கள் “அவர்கள் முடிவு வந்தது. அவ்வளவுதான்,” என்பார்கள். ஆனால், ஜீவ ஆவியின் விதி அதை மேற்கொள்ள வல்லது என்று நாம் விசுவாசிக்கின்றோம்.
இரண்டாவது தடை. இந்த ஜீவன் நமக்குள் வளர்ந்து, பக்குவமடைந்து, விருத்தியடைந்து, கனிகொடுப்பதற்கு எதிராக இருக்கிற இன்னொன்று மாம்சம். ரோமர் 8இல் இருக்கிறது. ஆவிக்குரிய சிந்தையிருந்தால் ஜீவனும், சமாதானமுமாம். மாம்ச சிந்தையிருந்தால் மரணம். spiritually minded is life and peace. Fleshly minded is death. மரணம் நம்மை ஆக்கிரமிக்கிறதற்கு நாம் இடம் கொடுக்கிறோம். ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். மாம்ச சிந்தை மரணம்.
நம்முடைய தன்மையிலோ, நம்முடைய குணத்திலோ, நம்முடைய கட்டமைப்பிலோ, நம்முடைய சாய்மானத்திலோ, நம்முடைய மனப்பாங்கிலோ, நம்முடைய சுவைகளிலோ, நம்முடைய நடையிலோ, நம்முடைய பாவனையிலோ நாம் மாம்சசிந்தையுள்ளவர்களாக இருந்தால் நாம் இந்த மரண விதிக்கு அல்லது மரணச் சூழலுக்கு, மரண விதி நம்மேல் இயங்குவதற்கு, செயல்படுவதற்கு நாம் இடம் கொடுத்துவிடுகிறோம்.
சாத்தான் இந்தத் தளத்துக்காகக் காத்திருப்பான். நாம் மாம்ச சிந்தையுள்ளவனாக இருந்து, அவனுடைய மரண விதி செயல்படுவதற்கு நாம் அவனுக்குக் கொஞ்சம் இடம் கொடுத்தால் போதும்; அவன் நம்மை அழித்துவிடுவான். ப்ளேட்டோ என்ற தத்துவவாதி, “இந்தப் பூமிக்கு வெளியே நிற்பதற்கு எனக்கு ஓர் இடம் மட்டும் கொடு. நான் ஒரு நெம்புகோலை வைத்து இந்தப் பூமியை நெம்பிவிடுவேன்,” என்று சொன்னானாம். இது எந்த வல்லமையைக் காட்டுகிறது? பூமியின் வல்லமையையா அல்லது ப்ளேட்டோவின் வல்லமையையா அல்லது நெம்புகோலின் வல்லமையையா? இது பூமியின் வல்லமையையோ, ப்ளேட்டோவின் வல்லமையையோ, நெம்புகோலின் வல்லமையையோ காட்டவில்லை. இடத்தின் வல்லமையைக் காட்டுகிறது. கால் வைப்பதற்கு ஓர் இடம் கிடைத்தால் போதும். அவன் ஒரு சின்ன நெம்புகோலை வைத்து பெரிய பூமியைத் தள்ளிவிட்டுவிடுவான்.
உங்கள் மனதில் பதிய வேண்டும் என்பதற்காக இன்னொன்றும் சொல்லுகிறேன். மங்கோலியர்கள் என்று ஓர் இனம். அவர்கள் மத்திய ஐரோப்பாவை வென்றார்கள். பெரிய வெற்றிபெற்றார்கள். அவர்கள் நாகரிகம் இல்லாதவர்கள்; ஏறக்குறைய காட்டுமிராண்டிகள் என்று சொல்லலாம். ஆனால், அவர்கள் மத்திய ஐரோப்பாவையே வென்றார்கள். சண்டை போடுவதற்கு ஐரோப்பியர்களும் குதிரை வைத்திருந்தார்கள்; இவர்களும் குதிரை வைத்திருந்தார்கள். அவர்கள் நாகரிகம் உள்ளவர்கள். இவர்கள் நாகரிகம் அற்றவர்கள். மங்கோலியர்களுக்கு எழுத்தறிவே கிடையாது. எழுத்து என்று ஒன்று இருப்பதாக முதன்முதலாக செங்கிஸ்கான் கேள்விப்பட்டவுடன் ஆச்சரியப்பட்டானாம். “எல்லாரும் இந்தக் கலையைக் கற்றுக்கொண்டேயாக வேண்டும்,” என்பதுதான் அவன் தன் தளபதிகளுக்குக் கொடுத்த முதல் கட்டளை . எழுதத் தெரியாத மங்கோலியர்கள் எழுதப் படிக்கத் தெரிந்த, நாகரிகம் உள்ள மக்களை வென்றார்கள். என்ன காரணம் தெரியுமா? பல காரணங்கள் உண்டு. ஒரு காரணம் என்னவென்றால் அவர்களுடைய குதிரையில் சவாரி செய்யும்போது கால் வைப்பதற்கு ஒரு வளையம் வைத்திருந்தார்களாம். அதைக் கண்டுபிடித்தது மங்கோலியர்கள். கால் வைப்பதற்கு ஓர் இடம் இருந்ததால் அவர்கள் குதிரையில் இருந்து வாள் வீசும்போது அவர்கள் கால்கள் குதிரையிலிருந்து தொங்கிக்கொண்டிருக்காது. கால்கள் அந்த வளையத்தில் இருக்கும். அதனால் அவர்கள் தங்கள் வாட்களை மிகவும் பலமாக வீச முடிந்தது. ஆனால், கால் பதிக்க இடம் இல்லாத ஐரோப்பியர்கள் வாள்வீசியபோது அவர்களுடைய கால்கள் ஆடிக்கொண்டிருந்தன. அவர்களால் அவ்வளவு பலமாக வாட்களை வீச முடியவில்லை. கால்பதிக்க ஓர் இடம் என்பது எவ்வளவோ பெரிய வல்லமையைக் கொடுக்கிறது.
நாம் மாம்ச சிந்தையுள்ளவர்களாக இருக்கும்போது சாத்தான் கால்பதிக்க இடம் கொடுக்கிறோம். அப்போது அவன் தன் வல்லமையை அவிழ்த்துவிட ஆரம்பித்துவிடுவான்.
நம்முடைய சுவை… டும்டும் என்று சத்தமாக ஓர் இசையைக் கேட்பதுதான் நம் சுவை என்றால்,.. “இவ்வளவு சத்தமாக இப்படிப்பட்ட இசைகளையெல்லாம் கேட்க வேண்டுமா?” என்று ஒருவர் சொல்லும்போது, “இவைகளெல்லாம் கூடாது என்று வேதாகமத்தில் எங்காவது சொல்லியிருக்கிறதா?: என்று கேட்டால் என்ன பதில் சொல்ல முடியும்?”காலையில் எழுந்தவுடன் 15 நிமிடமாவது ஜெபம்பண்ணு” என்று சொல்லும்போது, “ஏன்? மற்ற நேரங்களில் ஜெபித்தால் தேவன் கேட்க மாட்டாரா? ஏன் 15 நிமிடம் ஜெபிக்க வேண்டும்? 10 நிமிடம் ஜெபித்தால் ஏற்க மாட்டாரா?” என்று சொன்னால் என்ன பதில் சொல்ல முடியும்? இவைகளெல்லாம் நம் சுவைகள். இந்தக் காரியங்களில் நாம் மாம்ச சிந்தையுள்ளவர்களாக மாறிவிட்டால் நாம் சாத்தானுக்கு இடம் கொடுக்கிறோம்.
மூன்றாவது, நாம் மரணத்தைவிட்டு நீங்கலாகி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறோம் என்று நமக்குத் தெரியும். எப்படித் தெரியும்? நாம் சகோதரர்மேல் அன்புகூருவதினாலே. இது மிகவும் அற்புதமானது. “நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோம் என்று அறிந்திருக்கிறோம். சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்தில் நிலைகொண்டிருக்கிறான். தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷகொலைபாதகனாயிருக்கிறான். மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்திய ஜீவன் நிலைத்திராது” (1 யோவான் 3:14, 15) என்று யோவான் சொல்லுகிறார். மரணம் ஜீவன் ஆகிய இரண்டையும் தேவனுடைய மக்களோடும், மற்ற மக்களோடும், நமக்கு இருக்கிற உறவோடு அவர் தொடர்புபடுத்திச் சொல்லுகிறார். தேவனுடைய மற்ற மக்களோடு அல்லது மற்ற மக்களோடு நம் உறவு நேர்த்தியாக இல்லையென்றால், அன்பின் உறவாக இல்லையென்றால் நாம் மரணத்திற்கு இடம் கொடுக்கிறோம். இதை நீங்கள் யோசித்துப்பார்க்க வேண்டும்.
எவ்வளவோ தேவனுடைய மக்கள் இருக்கிறார்கள். நாமும் இருக்கிறோம். தேவனுடைய தூய்மையான சாட்சிக்காக நாம் இப்படிக் கூட்டுவாழ்க்கை வாழ்கிறோம். இப்படிக் கூடி வருகிறோம். தேவனுடைய மக்கள் மத்தியில் பல சமயங்களில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் காலத்தில் இருந்த தேவாலயம்போல இன்று பெரிய வியாபாரம் நடைபெறுகிறது. அவர் “கள்ளர் குகை” என்று வருணிக்கும் அளவுக்குத் தேவனுடைய ஆலயம் மாறிவிட்டது. ஒருவேளை “கள்ளர் குகை” என்று வருணிக்கும் அளவுக்குத் தேவனுடைய மக்களை நாம் சொல்லமுடியாவிட்டாலும் அங்கு பல விதத்தில் மாம்சமும், உலகமும் வியாபாரம் செய்துகொண்டிருக்கிறது. அதற்கு நாம் சாய்ந்துகொடுக்க முடியாது. ஆனால், அதே சமயத்தில் அவர்கள் தேவனுடைய பிள்ளைகள். அவர்களோடு உள்ள நம் உறவு நேர்த்தியாக இருக்க வேண்டும். பல சமயங்களில் நாம் நிதானம் தவறிவிடுவோம். ஒரு பக்கம், அவர்கள் செய்வதுபோல் நாம் செய்ய முடியாது. ஆனால், இன்னொரு பக்கம், நாம் அவர்களைக் கண்டனம் பண்ணுகிற மனப்பாங்குக்கு அல்லது “உங்களைவிட நான் பரிசுத்தம்” என்கிற மனப்பாங்குக்கு நாம் இடம் கொடுத்தால் தேவனுடைய மக்களோடு நேர்த்தியான உறவு சரியாக இல்லாமல் போகிற ஆபத்து உண்டு. இதில் நாம் சமநிலை தவறக்கூடாது.
ஆண்டவராகிய இயேசு பரிசேயர்களைப் பார்த்து, “அவர்கள் சொல்வதுபோல் செய்யுங்கள். ஆனால், அவர்கள் வாழ்வதுபோல் செய்யாதீர்கள்,” என்று சொன்னார். இது சரியான சமநிலை. அவர்கள் தேவனுடைய மக்கள். ஒரு அவயவம் பாடுபட்டால் மற்ற அவயவங்கள் கூடப் பாடுபடும். இந்தியாவில் தேவனுடைய மக்கள் பாடுபட்டால் நாம் பாடுபடுவோமா? பாடுபடுவோம். அது ஆவிக்குரிய விதி. அவர்களும் நாமும் ஒரே தேவனுடைய பிள்ளைகள். ஒரே தேவனுடைய ஜீவனை உடையவர்கள்.
இந்தியாவில் மட்டும் அல்ல. இந்த உலகம் முழுவதும் உள்ள தேவனுடைய பிள்ளைகளோடு கூடுமானவரை நாம் நல்லுறவை நாட வேண்டும். அவர்கள் எந்தப் பிரிவைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் பரவாயில்லை. எல்லாக் குழுக்களிலும் தேவனுடைய மக்கள் இருக்கிறார்கள். ரோமன் கத்தோலிக்கரிடையிலும் தேவனுடைய மக்கள் இருக்கிறார்கள். அதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். இதன் பொருள் நாம் கத்தோலிக்க மதத்தை அங்கீகரிக்கிறோம் என்பதல்ல. “எது தேவனுக்குரியதல்ல, எது கிறிஸ்துவுக்குரியதல்ல” என்று ஒரு பக்கம் நாம் பகுத்துணர வேண்டும்.. ஆனால், இன்னொரு பக்கம் கிறிஸ்துவுக்குரிய ஏதோவொரு அளவு அங்கு இருந்தால் அதை நாம் ஒப்புக்கொள்ளவும் வேண்டும்.
“ஐயரே! ஒருவன் உம்முடைய பெயரால் பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களுடனேகூட உம்மைப் பின்பற்றாதபடியினால், அவனைத் தடுத்தோம்,” என்று சீடர்கள் கேட்டார்கள். அதற்கு இயேசு, “தடுக்க வேண்டாம். நமக்கு விரோதியாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான்,” (லூக்கா 9:49, 50) என்று சொன்னார்.
“சிலர் பொறாமையினாலும், விரோதத்தினாலும், சிலர் நன்மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள். சிலர் என் கட்டுகளோடே உபத்திரவத்தையுங்கூட்ட நினைத்து, சுத்தமனதோடே கிறிஸ்துவை அறிவியாமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள். சுவிசேஷத்திற்காக நான் உத்தரவு சொல்ல ஏற்படுத்தப்பட்டவன் என்று அறிந்து, சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள். இதனாலென்ன? வஞ்சகத்தினாலாது, உண்மையினாலாவது. எப்படியாவது கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார். அதனால், நான் சந்தோஷப்படுகிறேன். இன்னமும் சந்தோஷப்படுவேன்” (பிலி. 1:15-18) என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறார்.
கிறிஸ்துவுக்கு ஒவ்வாத, கிறிஸ்துவுக்கு முரணான, காரியங்களை நாம் விட்டுவிட வேண்டும். அவைகளை நாம் அங்கீகரிக்க மாட்டோம். ஆனால், அதே சமயத்தில் “உங்களால் கூடுமானவரை எல்லாரோடும் சமாதானமாயிருக்க நாடுங்கள்.” தேவனுடைய மக்களோடு மட்டும் அல்ல, எல்லா மனிதர்களோடும் கூடுமானவரை சமாதானமாயிருக்க நாடுங்கள். நல்லுறவை வைத்துக்கொள்ள நாம் நாட வேண்டும். இதன் பொருள் அவர்களுடைய எல்லா எண்ணங்களையும், போக்குகளையும் நாம் அங்கீகரிக்கிறோம் என்பதல்ல.
நான் மூன்று காரியங்களைச் சொன்னேன். ஒன்று விசுவாசம். சாத்தான் நம் விசுவாசத்தை அடிப்பான். “ஜீவ விதியைவிட மரண விதிதான் உண்மை, பாம்பு கவ்வினால் சாவாய். இதுதான் உண்மை,” என்று அவன் சொல்வான். இல்லை.! மரண விதியை இந்த ஜீவ விதி வெல்ல வல்லது. இதுதான் ரோமர் 8:2. கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் விதி, பாவம் மரணம் என்ற விதியிலிருந்து நம்மை விடுதலையாக்கிற்றே! திரும்பத் திரும்பப் பாவத்தில் விழுந்துகொண்டிருக்கும்போது, “இந்தப் பாவத்திலிருந்து உன்னால் விடுதலை பெறவே முடியாது,” என்று பேய் சொல்வான். அவன் பொய்யன். அவன் சொல்வது பொய். விடுதலை பெற முடியாது என்கிற பாவம் ஒன்றும் இல்லை. “அப்படியெல்லாம் ஒன்றும் பேசாதே. நாளைக்கு அந்தப் பாவத்தில் நீயே விழுந்துவிட்டால்… ரொம்பப் பேசினால் பின் அவமானமாகப் போய்விடும்,” என்று பேய் பயமுறுத்துவான்.
அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். சூரியன் கிழக்கில் உதிக்கிறது என்பது உண்மையென்றால் கிறிஸ்து இயேசுவுக்குள் ஜீவ விதி, பாவம் மரணம் என்கிற விதியிலிருந்து நம்மை விடுதலையாக்கிற்று என்பது அதைவிட அதிக உண்மை, மாபெரும் உண்மை, பேருண்மை. இதைப் பறைசாற்ற வேண்டும். இது விசுவாசம்.
இரண்டாவது, மாம்ச சிந்தையுள்ளவர்களாக இருந்தால் நாம் மரண விதி செயல்படுவதற்கு இடம் கொடுப்போம்.
மூன்றாவது, தேவனுடைய மக்களோடு நம்முடைய உறவு நைந்துபோன உறவு என்றால் நாம் மரண விதி செயல்படுவதற்கு இடம் கொடுப்போம்.
நான் இதுவரை சொன்னதை இப்போது சுருக்கமாகச் சொல்லுகிறேன். தேவன் நமக்கு ஒரு வாக்குறுதி, ஒரு கொடை, தந்திருக்கிறார். அது தேவனுடைய ஜீவன்.
இரண்டாவது சொன்னேன். தேவனுடைய ஜீவனைப் பெற்றிருப்பது என்றால் மரணம் என்கிற மண்டலத்திலிருந்து தேவன் நம்மை விடுதலையாக்கி, வெளியே கொண்டு வந்து, ஜீவன் என்கிற மண்டலத்திற்கு உட்படுத்தியிருக்கிறார். அதன் விளைவு என்னவென்றால் இந்த மரண மண்டலத்திலே சில மரண விதிகள் செயல்படுகின்றன. ஜீவ மண்டலத்தில் ஜீவ விதி செயல்படுகின்றது. தேவன் நம்மை அந்த மரண விதிகள் செயல்படுகின்ற மரண மண்டலத்திலிருந்து வெளியே கொண்டு வந்து, ஜீவ விதி செயல்படுகிற சூழலுக்குக் கொண்டுவந்திருக்கிறார். மரண விதி நம்மேல் செயல்பட முடியாது. அதுதான் அதன் பொருள்.
மூன்றாவது, தேவன் நம்மை இந்த ஜீவ மண்டலத்துக்குள் கொண்டுவந்தபிறகு அல்லது ஜீவனைத் தந்தபிறகு, வளர்ந்து, பக்குவமடைந்து, விருத்தியடைந்து, கனிகொடுக்க வேண்டும். நம்முடைய குணம், நம்முடைய கட்டமைப்பு, சாய்மானம்,, மனப்பாங்கு, நம்முடைய எல்லாப் பகுதிகளுக்குள்ளும் இந்த ஜீவ விதி ஆளுகை செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இது எவ்வளவு பெரிய ஆசீர்வாதம்! இது நடைபெறும்போது, நாம் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருப்போம்.
நான்காவது சொன்னேன். ஆனால், மரண விதி நம்மேல் ஆதிக்கம் செலுத்துவதற்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது. மூன்று வாய்ப்புகள். ஒன்று, அவன் நம் விசுவாசத்தைப் பலவீனப்படுத்துவான். இரண்டாவது நம் மனம், மாம்ச மனமாக இருப்பது. மூன்றாவது, தேவனுடைய பிள்ளைகளோடு நம் உறவு நேர்த்தியாக இல்லாமல் இருப்பது.
அற்புதமான வாழ்க்கையைத் தேவன் நமக்கு அருளியிருக்கிறார்.