Transcribed from a message spoken in January, 2014 in Chennai
By Milton Rajendram
”நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேற்ற நினைவுகளே“ (எரே 29:11).
இந்த வசனத்தை நாம் அடிக்கடி வாசித்திருக்கிறோம்: “உங்களுக்காக நான் வகுத்திருக்கும் என் திட்டங்கள் தீமைக்கு நேராக இல்லை. நன்மைக்கும், சமாதானத்துக்கும், நேராக இருக்கின்றன,” என்று தேவன் சொல்லும்போது ஒரு பெரிய வரலாற்றுப் பின்புலம், பின்னணி, அங்கு இருக்கிறது. இந்த வாக்குறுதியை அவர் யாருக்குக் கொடுக்கிறாரோ அவர்கள் நல்ல மக்கள் அல்ல. அவர்கள் தேவனுக்குத் தீமை செய்தவர்கள், தேவனுக்கு நன்றியில்லாதவர்கள், தேவனுக்குத் துரோகம் இழைத்தவர்கள். ஆனாலும், தேவனுடைய திட்டங்கள் அவருடைய மக்களுக்கு எப்போதும் நன்மைக்கும், சமாதானத்துக்கும் ஏற்றவைகளாகவே இருக்கின்றன. இது மிகவும் எளிய கூற்று.
எரேமியாவுக்குப் ‘புலம்பலின் தீர்க்கதரிசி’ என்ற இன்னொரு பெயரும் உண்டு. அவருடைய வாழ்க்கை கண்ணீரும் கம்பலையுமாக இருக்கிறது. ஆனாலும், அப்படிப்பட்ட மக்களுக்குத் தேவன் இப்படிப்பட்ட வாக்குறுதி அளிக்கிறார். “உங்களுக்காக நான் தீட்டியுள்ள திட்டங்கள் எப்போதுமே சமாதானத்துக்குரியவைகளும், நன்மைக்குரியவைகளுமாகவே இருக்கின்றன,” என்று அவர் சொல்லுகிறார். இதில் நமக்கு அசைக்கமுடியாத, உறுதியான நம்பிக்கை வேண்டும். தம் மக்களுக்கான தேவனுடைய திட்டம் நன்மையும், சமாதானமுமான திட்டங்களே. ஆனால், தம் மக்களுடைய உள்ளக் கிடக்கையையும், உள்ளமைப்பையும், இயற்கையையும், தன்மையையும் தேவன் அறிவார். அவர்கள் உத்தமமானவர்கள் என்பதால் தேவன் அவர்களுக்கு நன்மையும், சமாதானமுமான திட்டங்களைத் தீட்டவில்லை. இவர்கள் நூறு விழுக்காடு நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள் என்பதால் அவர்களுக்கு நன்மையும், சமாதானமுமான திட்டங்களை அவர் தீட்டவில்லை.
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றி யோவான் இரண்டாம் அதிகாரத்தில் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது. மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அவர் அறிந்திருந்தார். அவர்களுடைய உள்ளத்தில் என்ன இருந்தது என்பதை அவர் அப்படியே அறிந்திருந்தார். எனவே, அவர் அவர்களுடைய சொல்லுக்கு இணங்கவில்லை. “இயேசு எல்லாரையும் அறிந்திருந்தபடியால், அவர்களை நம்பி இணங்கவில்லை. மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக்குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்க வேண்டியதாயிருக்கவில்லை” (யோவான் 2:24, 25). அவர் சிலுவைக்குப் போகிற வேளையில் அவருடைய சீடர்கள் எல்லாரும் அவரைக் கைவிட்டு விட்டு ஓடிப்போனார்கள். அப்போது இயேசுகிறிஸ்து அதிர்ச்சியடையவில்லை. “மூன்றரை வருடங்கள் என் நண்பர்களாக இருந்தீர்கள். எனக்காகச் சிறைச்சாலைக்குச் செல்லவும், மரிக்கவும் தயார் என்று வீரவசனம் பேசினீர்கள். ஆனால், இப்படிக் காலை வாரிவிட்டீர்களே!” என்று ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து அதிர்ச்சியடையவோ, புலம்பவோ, ஏமாற்றமடையவோ இல்லை. மனிதர்களுடைய இயற்கையும், தன்மையும் அவருக்குத் தெரியும்.
“நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார். நாம் மண்ணென்று நினைவுகூறுகிறார்” (சங். 103:14). நம் உருவம், நம் உள்ளக்கிடக்கை, நம் இயற்கை, நம் தன்மை, இன்னதென்று அவருக்குத் தெரியும். தெரிந்தும், அவர் நமக்காக நன்மையும், சமாதானமுமான திட்டங்களைத் தீட்டியுள்ளார்.
“And Peter” என்று சகோதரன் Watchman Nee எழுதிய செய்தியை வாசித்துப்பாருங்கள். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் கல்லறைக்கு மரியாள்கள் வருகிறார்கள். அப்போது அங்கு, “அவர் உயிர்த்தெழுந்தார். அவர் இங்கேயில்லை. இதோ அவரை வைத்த இடம். நீங்கள் அவருடைய சீடரிடத்திற்கும் பேதுருவினிடத்திற்கும் போய்: உங்களுக்குமுன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அவர் உங்களுக்குச் சொன்னபடியே அங்கே அவரைக் காண்பீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்,” என்று தேவதூதன் மகதலேனா மரியாளிடம் சொன்னார் (மாற்கு 16:6-7). “சீடர்களிடத்தில்” என்று பொதுவாகச் சொல்லாமல், “சீடர்களிடமும் பேதுருவிடமும்” என்று அழுத்தந்திருத்தமாகச் சொன்னார். பேதுரு எப்படி மறுதலித்தார் என்று நமக்குத் தெரியும்.
நம்மிடம் தேவனைப்பற்றிய அறிவு, தேவனுடைய அன்பு, தேவனுடைய பரிசுத்தம், தேவனுடைய வழிகள், தேவனுடைய நியமங்கள் ஆகியவைகளைப்பற்றிய அறிவு, இல்லாததால் அல்லது இவைகளின்மேல் நம்பிக்கை இல்லாததால் அல்லது விசுவாசம் இல்லாததால் நம்முடைய வாழ்க்கையை நாம் தாறுமாறாக்கிக்கொள்ளுகிறோம். சில சமயங்களில் நம் வாழ்க்கையை நாம் தாறுமாறாக்கிக்கொள்ளுகிறோம். சில சமயங்களில் நம் வாழ்க்கை தாறுமாறானபிறகும்கூட நாம் தேவனிடத்தில், “தேவன் என்ன இப்படிப் பண்ணிவிட்டார்!” என்று மனத்தாங்கல் அடைவோம். “ மனுஷருடைய மதியீனம் அவன் வழியைத் தாறுமாறாக்கும் என்றாலும் அவன் மனம் கர்த்தருக்கு விரோதமாய்த் தாங்கலடையும்” (நீதி. 19:3).”என்ன இயேசு கிறிஸ்து இப்படிப் பண்ணிட்டாரு? அவருக்குக் கண் இல்லையா? காது இல்லையா? மூக்கு இல்லையா?” என்று புலம்புவோம். பின்னர் அதற்காக வருந்துவோம், தேவனுடைய இடைப்படுதலைப் புரிந்துகொள்வோம், உண்மைநிலையைப் புரிந்துகொள்வோம்.
தேவன் எப்போதுமே ஒரு புதிய ஆரம்பத்தைத் தொடங்குவதற்குத் தயங்குவதேயில்லை. அதனால்தான் அவர் ‘உயிர்த்தெழுதலின் தேவன்’ என்றழைக்கப்படுகிறார். நம் தேவன் உயிர்த்தெழுதலின் தேவன். யோவான் பதினோராம் அதிகாரத்தில் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து, “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்,”என்று தம்மை அறிமுகப்படுத்துகிறார். லாசரு மரித்து, கல்லறையில் வைக்கப்பட்ட அந்தத் தருணத்திலே இயேசு தம்மைப்பற்றி, “நான் உயிர்த்தெழுதல், நான் ஜீவன்” என்று சொல்லுகிறார். நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுதலாக இருக்கிறார். உயிர்த்தெழுதல் என்றால் என்ன பொருள்? இனிமேல் நம்பிக்கை என்று ஒன்று இல்லை, காரியங்கள் முடிவடைந்துவிட்டன என்று வைத்துக்கொள்வோம். இந்த நிலைக்கு ’மரணநிலை’ என்று பெயர். மரணத்திற்குப்பின் எந்த மனித சக்தியும் அதிலிருந்து அவனைக் கொண்டுவர முடியாது. காரியம் முடிந்துவிட்டது. மரிக்காதவரை நம்பிக்கை ஒரு துளியாவது இருக்கலாம், நம்பிக்கைத் துளிர் இருந்துகொண்டே இருக்கும். ஆனால், ஒரு மனிதன் மரித்தபிறகு அங்கு நம்பிக்கை என்று ஒன்று இல்லை. ஆனால், இந்த இயற்கையான தளத்திலே அல்லது பூமிக்குரிய தளத்திலே அல்லது மனிதர்களைப் பொறுத்தவரை ‘இனிமேல் நம்பிக்கை இல்லை’ என்கிற ஒரு கட்டத்தை நாம் எட்டும்போதும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து அப்படிப்பட்ட கட்டத்தை மாற்றுகிறார். அவரால் மாற்ற முடியும். எனவே, அவர் உயிர்த்தெழுதல் என்று சொல்லுகிறார்.
“…என்னவெனில் பிழைப்போம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக எங்கள் பலத்துக்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டாயிற்று. நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாயிராமல், மரித்தோரை எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாயிருக்கத்தக்கதாக, மரணம் வருமென்று நாங்கள் எங்களுக்குள்ளே நிச்சயித்திருந்தோம். அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார்,” (2 கொரிந்தியர் 1:8-10) என்று பவுல் கூறுகிறார். தேவனைப்பற்றி தேவனுடைய மக்கள் எழுதியிருக்கிற சில சித்தரிப்புகளை நாம் கவனிக்க வேண்டும். “நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்,” (2 கொரி. 1:3) என்று பவுல் கூறுகிறார். அவர் இரக்கங்களின் பிதா, அவர் ஆறுதலின் தேவன். அவர் பிதாதான். ஆனால், எப்படிப்பட்ட பிதா? இரக்கங்களின் பிதா. அவர் தேவன்தான். ஆனால், எப்படிப்பட்ட தேவன்? ஆறுதலின் தேவன். அதே பகுதியின் பின்பகுதியில் “அவர் மரித்தோரை உயிரோடு எழுப்புகிற தேவன்” என்று சொல்லுகிறார். தேவன் தனக்குச் சொன்ன வாக்குறுதிக்காக ஆபிரகாம் காத்திருக்கும்போது, “அவர் மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவர்;” என்று கூறுகிறார். (ரோமர் 4:17). நம் தேவன் உயிர்த்தெழுதலின் தேவன். நம் தேவன் புதிய ஆரம்பத்தின் தேவன். தேவன் ஒரு மரணச் சூழலிலிருந்து ஒரு புதிய ஆரம்பத்தை ஆரம்பிப்பதற்கு அல்லது தொடங்குவதற்கு ஒருநாளும் தயங்குவதேயில்லை.
இன்னும் சொல்லப்போனால் இந்த முழு வேதாகமமுமே உயிர்த்தெழுதலில்தான் ஆரம்பிக்கிறது. ஆதியாகமம் முதல் அதிகாரத்தைப் பாருங்கள். “பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது. ஆழத்தின்மேல் இருள் இருந்தது. தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்,” என்று (ஆதி. 1:2) வாசிக்கிறோம். தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தபோது மிகவும் அழகாகத்தான் படைத்தார். ஆனால், படைக்கப்பட்ட ஒரு சிருஷ்டியின் முரட்டாட்டம் அல்லது கலகம் அல்லது தேவனோடு ஒத்துழைக்காத அந்த இயற்கையின் காரணமாக ஒரு மாபெரும் விபத்து நேரிட்டது. அதன் விளைவாக பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் மாறினது. ஆழத்தில் இருள் இருந்தது. தேவன் ஒளியான பிரபஞ்சத்தைப் படைத்தார். ஆனால், அந்தச் சிருஷ்டிப்பின் ஒத்துழையாமை, முரட்டாட்டம், கலகம் ஆகியவைகளின் காரணமாக அழகான பூமி தன் அழகை இழந்தது. இந்த ஒத்துழையாமை, முரட்டாட்டம், கலகம் ஆகியவைகளை நாம் இன்றைக்கும் பார்க்க முடியும். எந்தச் சிருஷ்டிப்புக்குள்? நமக்குள். அது மிருகக்காட்சி சாலையில் இருப்பதாக நினைத்துக்கொள்ள வேண்டாம்.
பூமியானது ஒழுங்கின்மையும், வெறுமையுமாய் இருந்தது என்றால் என்ன பொருள்? அது நம்பிக்கையில்லாத ஒரு சூழ்நிலை. அடுத்த வாக்கியம் சொல்லுகிறது. “ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.” பின்பு முதல்நாள் கொஞ்சம் உயிர் துளிர்க்கிறது. இரண்டாம் நாள் இன்னும் கொஞ்சம், மூன்றாம் நாள் அதைவிட இன்னும் கொஞ்சம் அதிகம், நான்காம் நாள், ஐந்தாம் நாள், ஆறாம் நாள் இந்தச் சிருஷ்டிப்பின் மகுடமாகிய மனிதன் சிருஷ்டிக்கப்படுகிறான். தேவன் ஒருநாளும் சோர்ந்துபோவதோ அல்லது கைவிட்டு விடுவதோ இல்லை.
ஆதியாகமம் ஆறாம் அதிகாரத்தில் தேவன் மனம் வருந்துவதைப் பார்க்கிறோம். “தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது” (ஆதி. 6:6). இந்த இடத்தைத்தவிர வேறு எங்காவது தேவன், “ஆ! இவ்வளவு அற்புதமாக உண்டாக்கின இந்த வாழ்க்கையை, இந்த உலகத்தை, இந்த பிரபஞ்சத்தை, சிருஷ்டிக்கப்பட்ட இந்த மனிதன் இப்படிக் கெடுத்துவிட்டானே!” என்று மனம் உடைந்துவிட்டதாகவோ, நம்பிக்கை இழந்துவிட்டதாகவோ பார்க்கவில்லை. “பொறுத்தது போதும், இனிமேல் இவனைக் கைகழுவிவிடுகிறேன்,” என்று தேவன் நினைக்கவில்லை. மனிதர்களாகிய நாம் இப்படிப்பட்ட கட்டத்திற்கு பல தடவை வருகிறோம். “போதும் கர்த்தாவே, போதும், என் பிதாக்களைப் பார்க்கிலும் நான் நல்லவன் இல்லை. என்னை எடுத்துக்கொள்ளும்,” என்ற ஜெபத்தை ஜெபித்தவன் பழைய ஏற்பாட்டின் ஒரு மாபெரும் தீர்க்கதரிசி என்று உங்களுக்குத் தெரியுமா? அவனைப்போல் ஒரு வல்லமையான தீர்க்கதரிசி வந்ததில்லை. எலியா. அவன் ஜெபித்தபோது வானத்திலிருந்து அக்கினி இறங்கி வந்து பலியைப் பட்சித்தது, எரித்தது. ஆனால், அதே தீர்க்கதரிசி தன் சோர்ந்துபோன வேளையில் இப்படி ஜெபிக்கிறான். சோர்ந்துபோன வேளையில்தான் நாம் எவ்வளவு தீய மனிதர்கள் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிய வரும். “என்னைப்போல் தீயவன் வேறு ஒருவனும் இல்லை. எடுத்துக்கொள்ளும் கர்த்தாவே,” என்று ஜெபிக்க ஆரம்பிக்கிறான்.
தேவன் உயிர்த்தெழுதலின் தேவன், புதிய ஆரம்பத்தின் தேவன். இரட்சிப்பு என்று நாம் சொல்லுகிற வார்த்தைக்கு sozo என்ற கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கிரேக்க வார்த்தைக்கு ஒன்றை முழுமையாக்குவது, சொஸ்தமாக்குவது, சுகமாக்குவது, குணமாக்குவது என்று பொருள். இந்த வார்த்தையை எலும்புமுறிவு மருத்துவர்கள் பயன்படுத்துவார்களாம். முறிந்துபோன எலும்பைக் கட்டுவதற்கு sozo என்று பெயர் “நான் இந்த எலும்பை sozo செய்ய வேண்டும். இந்த எலும்பை இரட்சிக்க வேண்டும்,” என்று சொன்னால் அது நன்றாக இருக்காது. முறிந்துபோன எலும்பைப் பொறுத்தவேண்டும். அதன் சுகமான, சொஸ்தமான, இயல்பான, ஆரோக்கியமான நிலைமைக்கு அதைக் கொண்டுவர வேண்டும் என்பது மருத்துவர்களுடைய நோக்கம். அதுபோல ஆண்டவராகிய இயேசு sozo செய்வதற்காக வந்தார்.
ஒருவேளை ஒரு எலும்பு இரண்டு துண்டுகளாக உடையலாம் அல்லது பல துண்டுகளாக உடையலாம். மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை இரண்டு துண்டுகளாக உடைப்பதில்லை. மண் கலயத்தைப் போட்டு உடைத்தால் எத்தனை துண்டுகளாக உடையுமோ அத்தனை துண்டுகளாகப் போட்டு உடைக்கிறார்கள். “கண் புதைந்த மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போல சாந்துணையும் சஞ்சலமேதான்”. பார்வையில்லாத, தெளிந்த எண்ணமில்லாத இந்த மனிதர்களுடைய பூமிக்குரிய வாழ்க்கை ஒரு மண்கலம்போல சாகிறவரை சஞ்சலம் நிறைந்த வாழ்க்கையாக இருக்கிறது. (கவிஞன் மிகவும் அற்புதமாக எழுதியிருக்கிறான். இது வெளிப்பாடு இல்லை. ஆனால் “என்று உங்கள் புலவர்களிலும் சிலர் சொல்லியிருக்கிறார்கள்,” என்று சொல்லும் அளவுக்கு மதிப்பைப் பெறுகிறான்). மனிதனுடைய வாழ்க்கை ஒரு மண்கலம்போல் இருக்கிறது. அதை அவன் போட்டு உடைத்துவிடுகிறான். சிலர் போட்டால் இரண்டு துண்டுகளாக உடைகிறது. வேறு சிலர் போட்டால் அது இருபது துண்டுகளாக உடைகிறது. நூறு துண்டுகளாகவும் உடையலாம். இன்னும் சிலர் வேண்டுமென்றே கீழே போட்டு இருநூறு துண்டுகளாக உடைக்கிறார்கள். இரண்டு துண்டுகளாக உடைந்திருக்கிறது. இரண்டு துண்டுகளாக உடைக்கிறவன் மற்றவர்களைப் பார்த்து, “உங்களுடைய வாழ்க்கை இருநூறு துண்டுகளாக உடைந்திருக்கிறது. என் வாழ்க்கை இரண்டு துண்டுகளாகத்தான் உடைந்திருக்கிறது. நான் உங்களைவிடப் பரிசுத்தம்,” என்று மார்தட்டிக் கொள்ளவேண்டிய தேவையில்லை. இரண்டு துண்டுகளாக உடைத்தாலும் அது பயனற்றதுதான். இருநூறு துண்டுகளாக உடைத்தாலும் அது பயனற்றதுதான். தேவனோடுள்ள உறவில் ஒரு மனிதன் ஒரு பெரிய சங்கிலியைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். ஒருவனுடைய சங்கிலியில் இருநூறு கண்ணிகள் அறுந்துவிடுகின்றன என்று வைத்துக்கொள்வோம். இவனுடைய கதி என்னவாகும்? இவன் கீழே விழவேண்டியதுதான். இன்னொருவனுடைய சங்கிலியில் ஒரேவொரு கண்ணிதான் அறுந்துவிடுகிறது. அவனுடைய கதி என்ன? இவன் கீழே விழுவானா? ஆம், இவனும் கீழே விழுவான். இருநூறு கண்ணிகள் அறுந்துபோனாலும் சரி அல்லது இரண்டு கண்ணிகளே அறுந்துபோனாலும் சரி, நிலைமை ஒன்றுதான். இரண்டுபேருமே கீழே விழுவார்கள்.
நாமெல்லாரும் நம் வாழ்க்கையை உடைத்துக்கொண்டவர்கள். மனிதர்கள் எல்லாரும் தங்கள் வாழ்க்கையை உடைத்துக்கொண்டவர்கள். “நீதிமான் ஒருவனாகிலும் இல்லை. உணர்வுள்ளவன் இல்லை. தேவனைத் தேடுகிறவன் இல்லை. உணர்வுள்ளவன் இல்லை, தேவனைத் தேடுகிறவன் இல்லை. எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள். நன்மை செய்கிறவன் இல்லை. ஒருவனாகிலும் இல்லை. அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனை செய்கிறார்கள். அவர்களுடைய உதடுகளின்கீழே பாம்பின் விஷம் இருக்கிறது. அவர்கள் வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருக்கிறது. அவர்கள் கால்கள் இரத்தஞ்சிந்துவதற்குத் தீவிரிக்கிறது. நாசமும் நிர்ப்பந்தமும் அவர்கள் வழிகளிலிருக்கிறது. சமாதான வழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள். அவர்கள் கண்களுக்குமுன்பாகத் தெய்வபயம் இல்லை” (ரோமர் 3:10-18). “எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களானோம்” (ரோமர் 3:23). மனிதனின் உண்மையான நிலைமை என்னவென்று ரோமர் 1, 2, 3ஆம் அதிகாரங்களில் பவுல் பிட்டுப்பிட்டு வைக்கிறார். விழுந்துபோன ஒவ்வொரு மனிதனின் நிலையை அவர் சித்திரிப்பதை ஒவ்வொரு மனிதனும் வாசிக்க வேண்டும். அவனுடைய வாயிலிருந்து வருகிற வார்த்தைகள் அவ்வளவு தீய வார்த்தைகள்! தீய வார்த்தைகள் என்று சொல்லும்போது நான் கெட்ட வார்த்தைகளைச் சொல்லவில்லை. அவனுடைய இருதயத்தின் நினைவுகள், அவனுடைய வாயிலிருந்து வருகிற சொற்கள் எவ்வளவு விஷம் நிறைந்தவை என்பதை அப்போஸ்தலனாகிய பவுல் அந்த மூன்று அதிகாரங்களில் வருணிக்கிறார்.
இது நான் சொல்ல விரும்புகிற முதலாவது காரியம். நம்முடைய நிலைமைக்கு sozo தேவைப்படுகிறது. சில விபத்துகளில் எலும்புகள் முறிகின்றன. சதைகள் கிழிந்துபோகின்றன. வேறு சில விபத்துகளில் நரம்புகள்கூட தெரித்துப்போகின்றன. அப்படிப்பட்ட நிலைமையில் நரம்புகளை சரிசெய்ய முடியாது. நரம்புகளைச் சேர்க்கமுடியாது. இந்த மனிதனுடைய கதி அவ்வளவுதான். எலும்புகள் ஒட்டலாம். சதைகள் வளரலாம். ஆனால் நரம்புகளின் கதி அதோ கதிதான்!
மனிதன் தன்னை ஞானி என்று நினைக்கிறான். முதல் மனிதனாகிய ஆதாம் தொடங்கி இன்றுவரை எல்லா மனிதர்களிடமும் அது தொடர்ந்து வருகிறது. நாம் இரட்சிக்கப்பட்டபிறகும் அந்தத் தன்மையும், இயல்பும், சுபாவமும் தொடர்ந்து வருகின்றன. “உன்னை நீயே ஞானி என்று எண்ணாதே,” என்று வேதாகமம் கூறுகிறது. ஆனால், மனிதனுடைய கூற்று என்ன தெரியுமா? “எங்களிடம் ஞானம் டன் கணக்கில் இருக்கிறது. அதனால் நாங்கள் யாரிடமும் கேட்க வேண்டிய அவசியமே கிடையாது. உங்களுக்கு ஞானம் தலையில் மட்டும்தான். எங்களுக்கு ஞானம் முடியில் இருக்கிறது, நகத்தில் இருக்கிறது, உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை இருக்கிறது. என் எடை 75 கிலோ. என் ஞானத்தின் எடையும் 75 கிலோ. உங்களுக்கு வேண்டுமானால் சொல்லுங்கள், கொஞ்சம் தருகிறோம்,” என்ற விதத்தில் இன்றைக்கு மனிதர்கள் நடக்கிறார்கள். இது முதல் மனிதனாகிய ஆதாமிடமிருந்து வந்தது. உண்மையிலேயே ஒரு மனிதன் தேவனை முகமுகமாகச் சந்திக்கும்போது அவனுக்கு வருகிற முதல் உணர்ச்சி என்ன தெரியுமா? “நான் பாவியாகிய மனிதன், நான் காரியம் அறியாத மூடன். உமக்கு முன்பாக மிருகத்தைப்போல் இருக்கிறேன். நீர் என்னைவிட்டுப் போக வேண்டும்” (சங்கீதம் 73:22; லூக்கா 5:8). இது ஆசாபின் சாட்சி, பேதுருவின் சாட்சி. ஒளியாக இருக்கிற தேவனைச் சந்திக்காதவரை, “நான் எவ்வளவு பரிசுத்தவான்! நான் எவ்வளவு பெரிய ஞானி! நேர்மையானவன்! நீதிமான்!” என்று ஒரு மனிதன் மார்தட்டிக்கொள்ளலாம். ஒன்று சொல்லுகிறேன். நாம் எல்லாரும் தேவனைச் சந்திப்போம். யாரும் விதிவிலக்கல்ல. தேவன் நம் எல்லாருக்கும் ஒரு நேர்காணல் அருள்வார். ஒரு நேர்காணல் தராமல் தேவன் ஒருவனையும் நியாயந்தீர்ப்பதில்லை. தேவன் நம் வாழ்க்கையைப் பொருத்துவதில் விற்பன்னர், நிபுணர், கைதேர்ந்தவர்.
இரண்டாவது காரியம் என்னவென்றால் உடைந்துபோன, சுக்குநூறாகிப்போன, சின்னாபின்னமான, நொறுங்கிப்போன எந்த மனிதனாலும் ஒட்டமுடியாத, சீர்பொருத்தமுடியாத, சரிபார்க்கமுடியாத, இந்த வாழ்க்கையை sozoபண்ணுவதற்கு பல மனித தந்திரங்களும், யுக்திகளும் இந்த உலகத்தில் உருவாகியிருக்கின்றன. தன் நிலை தேவனுக்குமுன்பாக உடைந்துபோன, நொறுங்கிப்போன, சின்னாபின்னமான, சிதைந்த, சிக்கலான ஒரு வாழ்க்கை என்பதை அறிந்த மனிதன் அதைச் சீர்பொருத்துவதற்காக அல்லது சொஸ்தமாக்குவதற்காக பல்வேறு யுக்திகளையும், தந்திரங்களையும், உபாயங்களையும், முறைமைகளையும், வழிகளையும், எந்திரங்களையும் உருவாக்கியிருக்கிறான். முதல் மனிதனாகிய ஆதாமில் தொடங்கி இன்றுவரை இது நடந்துகொண்டிருக்கிறது.
புது வருடத்தின் ஆரம்பத்தில் மக்கள் பட்டாசு கொளுத்துகிறார்கள். தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறார்கள். சரி. வருடத்தின் ஆரம்பத்தில் பட்டாசு கொளுத்தி உங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறீர்கள். இரண்டாம் தேதி என்ன செய்வீர்கள்? அடுத்த மாதம் என்ன செய்வீர்கள்? வருடத்தின் 365 நாட்களும் மகிழ்ச்சியாக இருக்கப் பட்டாசு கொளுத்திக்கொண்டிருப்பீர்களா? ஒவ்வொரு நாளும் பட்டாசு கொளுத்தி உங்கள் மகிழ்ச்சியை ஊதிக்கொண்டே இருப்பீர்களா? பட்டாசு கொளுத்துவதற்கு நான் எதிராளி அல்ல. ஆனால், என் கேள்வி என்னவென்றால் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? ஜீவனுள்ள நாட்களெல்லாம் நான் மகிழ்ச்சியாயிருக்க வேண்டும்? அதற்கு என்ன வழி? நித்திய நித்தியமாக மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒரு வழி இருந்தால் அந்த உபாயத்தை எனக்குச் சொல்லித்தாருங்கள். என் வாழ்க்கைப் போராட்டங்களின் வழியாக நான் போகும்போது நான் பட்டாசு கொளுத்துவது எனக்கு ஆறுதலைத் தரவில்லை. நாம் எல்லாரும் வாழ்க்கையில் பல போராட்டங்களின் வழியாகப் போகிறோம். அந்தப் போராட்டங்களின் வழியாகப் போகும்போது பட் டாசு கொளுத்துவதோ அல்லது மதுபானக்கடைக்குப் போய் மது அருந்துவதோ வாழ்க்கைப் போராட்டங்களில் நமக்கு உண்மையாகவே ஞானத்தையும், பலத்தையும், விடுதலையையும் தருமா? தருவதில்லை என்பது நமக்கு நன்றாகத் தெரியும். (எத்தனை விதமான மதுபானக் கடைகள்). “ஆனால், நாங்கள் தருவோம்,” என்று இந்த உலகம் சொல்லும்.
எனவே, நான் இரண்டாவது சொல்ல விரும்புவது என்னவென்றால் இந்த உலகத்தில் பல மனித உபாயங்களும், யுக்திகளும், எந்திரங்களும் ஒன்றோடொன்று போட்டிபோட்டுக்கொண்டு, “நாங்கள் உன் வாழ்க்கையை sozoவாக்குவதற்கு, சீர்பொருத்துவதற்கு, சொஸ்தமாக்குவதற்கு, மகிழ்ச்சியாக்குவதற்கு, களிப்பாக்குவதற்கு இதோ ஒரு யுக்தி வைத்திருக்கிறோம்,” என்று சொல்லும். அது குடிப்பது, கூத்தாடுவதுபோன்ற ஒரு பாவவழியாக இருக்கலாம்.
அந்த வழி ஒரு தத்துவமார்க்கமாக இருக்கலாம். The art of living. இந்த வழியை உண்டாக்க நான் ஒரேவொரு காரியம் செய்தால் போதும். நீண்ட தாடி வைத்துக்கொள்ள வேண்டும். என் பெயரை மாற்றிக்கொள்ள வேண்டும். ஸ்ரீஸ்ரீமகான் என்று ஏதாவது ஒரு பெயர் வைத்துக்கொள்ள வேண்டும். எல்லாரும் முடியைக் கட்டையாக வெட்டியிருக்கிறார்கள் என்றால் நான் என் முடியை நீளமாக வைத்துக்கொள்ள வேண்டும். எல்லாரும் சாதாரணமான நீண்ட கால்சட்டையும், மேல் சட்டையும் போடுகிறார்கள் என்றால், நான் காவி உடுத்திக்கொள்ள வேண்டும். ஜிப்பா போட்டுக்கொள்ள வேண்டும். ஒரு தோற்றம் வேண்டும் இல்லையா? நான் இவைகளை நம்பவில்லை. ஏனென்றால், “ஓ! தத்துவஞானியே! நீ ஒரு மனிதன்! நீ விழுந்துபோன ஒரு மனிதன்! நீ உன் உண்மையான போராட்டங்களை மற்றவர்களுக்கு எடுத்துரைக்கவில்லை.! நீ மறைக்கிறாய்! நீ பொய் சொல்லுகிறாய்”! உண்மையான ஒளி இயேசுகிறிஸ்து என்று நமக்குத் தெரியும். ஒரு மனிதன் இயேசு கிறிஸ்துவிடம் வரும்போது, அவருடைய ஒளி அவன்மேல் வீசும்போது, “நான் பாவியாகிய மனிதன். என்மேல் கிருபையாயிரும்” அல்லது “என்னைவிட்டு நீர் அகன்று போகும்” என்று அவன் சொல்லுவான்.
மதங்கள்கூட அப்படிப்பட்ட வழிதான். “நாங்கள் உங்கள் வாழ்க்கையை sozoவாக்குகிறோம். முழுமையாக்குகிறோம், சீர்பொருத்துகிறோம், சீராக்குகிறோம், மகிழ்ச்சியும் களிப்பும் கொண்டாட்டமும் நிறைந்த வாழ்க்கையாக்குகிறோம்,” என்று தீய வழிகளாகிய மதுபானம், கேளிக்கைகள் ஆகியவைகளில் தொடங்கி மிக உயர்ந்த வழிகள்போல் தோன்றுகிற தத்துவங்களும், மதங்களும்கூட அதுதான்.
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மதங்களை அங்கீகரிக்கவில்லை; தேவாலயங்களை அவர் அங்கீகரிக்கவில்லை. அவருடைய சீடர்கள் எருசலேம் தேவாலயத்தைக்குறித்து மிக உயர்வாகப் பேசினார்கள். “ஆ! ஆண்டவரே இந்த எருசலேம் தேவாலயத்தின் உயர்ந்த கட்டிடத்தைப் பார்த்தீரா? எவ்வளவு அழகாக இருக்கிறது! எவ்வளவு அருமையான இசைக்குழு! எவ்வளவு அருமையான பிரசங்கம்! சொற்பொழிவு!” என்று பரவசமாகப் பேசினார்கள். அதற்கு அவர், “இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே! இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட் டுப்போகும். உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக விடப்படும்,” என்று சொன்னார். “ஆ! எங்கள் பிதாக்கள் இந்தத் தேவாலயத்தில் நூறு ஆண்டுகளாக வழிபட்டிருக்கிறார்கள். இதில் ஒரு கல்லின்மேல் இன்னொரு கல்லிராதபடிக்கு இடிக்கப்பட்டுவிடும் என்று சொல்லுகிறீரே!” என்று நாம் ஆச்சரியப்படலாம். அதைப்பற்றி அவருக்கு அக்கறை இல்லை. ஏனென்றால், சின்னாபின்னமாகிப்போன மனிதனின் வாழ்க்கையை இது sozoவாக்க முடியாது, இரட்சிக்க முடியாது, சீர்படுத்த முடியாது, குணப்படுத்த முடியாது. மதங்களால் மனிதனின் முறிந்த வாழ்க்கையைச் சீர்படுத்த முடியாது.
“வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள், அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே. என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை,” (யோவான் 5:39, 40) என்று ஆண்டவராகிய இயேசு சொன்னார். அன்றைக்கு மக்கள் மதங்களை நம்பினார்கள். இன்றைக்கும் நம்புகிறார்கள். ஆனால், மதங்களால் மனிதனை இரட்சிக்க முடியாது. வேதவாக்கியங்களை நீங்கள் ஆராய்ந்துபார்க்கிறீர்கள்; அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று நம்புகிறீர்கள்; நல்லது. ஆனால் வேதவாக்கியங்களால்கூட நம்மை இரட்சிக்க முடியாது. நம் வாழ்க்கையைக் குணமாக்கி, முறிந்த மனங்களையும், எண்ணங்களையும், உணர்ச்சிகளையும், முறிந்த எலும்புகளையும் சரிசெய்ய முடியாது; பொருத்த முடியாது. ஏனெனில், உண்மையாகவே ஜீவன் வேதவாக்கியங்களிலிருந்து வருவதில்லை. ஜீவன் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து என்ற நபரிடமிருந்து வருகிறது. “உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை,” என்று அவர் சொல்லுகிறார். “நான் வேதம் வாசிக்கிறேன்,” என்று ஒருவன் சொல்லலாம். அவன் வேதத்தை வாசித்துக்கொண்டே தேவனைத் தவறவிட முடியுமா? தாராளமாகத் தவற விடமுடியும். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நமக்கு யார் என்று காண்பிப்பதுதான் பரிசுத்த வேதாகமத்தின் மாபெரும் செயலாகும்.
இப்போது மூன்றாவது காரியத்துக்கு வருகிறேன். ஒருவனுடைய வாழ்க்கை எந்த நிலைமையிலிருந்தாலும் எலும்பு முறிவு கட்ட, சீர்பொருத்த வல்ல இரட்சகர் ஒருவர் உண்டு. அவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. இதை நான் மலைமேல் நின்று பறைசாற்றுவேன். இதற்கு நாங்கள் மெய்ச் சாட்சிகளாயிருக்கிறோம். அதாவது, “நான் ஒரு கிறிஸ்தவன். எனவே, இயேசுகிறிஸ்துவுக்கு வக்காலத்து வாங்க வேண்டும்,” என்பதற்காக நாம் யாரும் பேச வேண்டிய அவசியம் இல்லை. இயேசு கிறிஸ்துவுக்கு வக்காலத்து வாங்குவதற்காக விளையாட்டுவீரர்களோ, நடிகர்நடிகைகளோ தேவையில்லை. “இவர் நடிகர். இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டிருக்கிறார். இயேசுகிறிஸ்துவுக்கு ஒரு நடிகர் சாட்சி சொன்னால் ஒரு மவுசு கிடைக்கும் இல்லையா?” என்று சிலர் சொல்லுகிறார்கள், நினைக்கிறார்கள். அது அவசியம் இல்லை. நடிகர் நடிகைகள் அல்லது விளையாட்டு வீரர்கள் இரட்சிக்கப்படக்கூடாது என்பதல்ல. அவர்கள் இரட்சிக்கப்படட்டும். அதற்காக நாம் தேவனை ஆராதிக்கிறோம்.
இதை நாங்கள் கண்டு, கேட்டு, உற்றுநோக்கி, எங்கள் கைகளால் தொட்டு அறிந்திருக்கிறோம். நம் புலன்களால் நாம் அனுபவிக்கிற எந்த உண்மையையும்விட ஆண்டவராகிய இயேசு உண்மையானவர் என்பதை உறுதிப்படுத்துவதற்காகவே யோவான் இந்த நான்கு வார்த்தைகளையும் பயன்படுத்தியிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். “ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினால் கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவ வார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்” (1 யோவான் 1:1). இதன் பொருள் என்னவென்றால், “எங்கள் அனுபவத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றை நாங்கள் சொல்லவில்லை. நாங்கள் அனுபவித்து மெய்யென்று கண்டதை நாங்கள் உங்களுக்குப் பறைசாற்றுகிறோம்”. சிலர் வாக்குவாதம் பண்ணுவார்கள். நாம் வாக்குவாதம் பண்ணுவதில்லை. நாம் உண்மையைப் பறைசாற்றுபவர்கள். நாம் உண்மையை வாதிடுபவர்கள் அல்ல. வாதிடுகிற திறமை நமக்கு இல்லை. ஆனால், பறைசாற்றுகிற திறமை நமக்கு உண்டு. இயேசுகிறிஸ்து எப்படிப்பட்ட வாழ்க்கையையும் சீர்பொருத்துகிறவர் என்பதைப் பறைசாற்றுகிற நிலைமை, தகுதி, எனக்கு உண்டு. ஏனென்றால் நான் உடைத்துச் சின்னாபின்னமாக்கின என் வாழ்க்கையை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து செப்பனிட்டார், சீராக்கினார், நேர்த்தியாக்கினார், மகிழ்ச்சியாக்கினார்.
தாவீது தன் அனுபவத்தைச் சொல்லுகிறான். “நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன், என்னைக் கழுவியருளும். அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன். நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படிச் செய்யும். அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூரும்” (சங். 51:7, 8). அதாவது, “நீர் என்னைக் குணமாக்கினால், நீர் சுகமாக்கின என் எலும்புகள் களிகூரும்,” என்று சொல்லுகிறார்.
இங்கு இருக்கிற தேவனுடைய பிள்ளைகள் எல்லாரும் உண்மையான சாட்சிகள். நாம் யாராவது இல்லாத ஒன்றை இருக்கிறதுபோல் புனைந்து சொல்லுகிறோமா? இல்லை. “நான் அப்படிப்பட்ட மோசமான நிலைமையில் இருந்தேன். இயேசு என் வாழ்க்கையில் வந்திராவிட்டால், இயேசு என்னைக் கண்டிராவிட்டால், என்னுடைய வாழ்க்கை அடியோடு அழிந்திருக்கும். அல்லது, சிலர் சொல்லுவதுபோல், இந்த இடத்தில் புல் முளைத்திருக்கும். ஆண்டவராகிய இயேசு என்னைக் கண்டிராவிட்டால், சந்தித்திராவிட்டால், அவர் என்னைத் தொட்டிராவிட்டால், அவர் என்னை இரட்சிக்காதிருந்திருந்தால் என்னுடைய வாழ்க்கை சீரழிந்து, சின்னாபின்னமாகி, உருக்குலைந்து போயிருக்கும். இது என் சாட்சி. இதுதான் உங்களுடைய சாட்சியுமாகும். நீங்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களைத் தனியாகக் கேட்டுப்பாருங்கள். நம்மெல்லாருடைய சாட்சியும் ஏறக்குறைய அப்படித்தான் இருக்கும். நாம் சொல்லுகிற சாட்சியை ஒத்திகைபார்த்து சொல்லவில்லை.”நீங்கள் இப்படிச் சொல்ல வேண்டும். நான் இப்படிச் சொல்வேன். நாம் இருவரும் ஒன்றுபோல் சொல்ல வேண்டும். அப்போதுதான் அது சரியாக இருக்கும், மற்றவர்கள் அதை நம்புவார்கள்,” என்று பேசி வைத்துச் சொல்லவில்லை.
இந்த 20 நூற்றாண்டுகளில், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைத் தன் இரட்சகராக கண்ட தேவனுடைய மக்கள் இந்த உலகத்தின் எந்த மூலையிலிருந்தாலும் நீங்கள் அவர்களை விசாரித்துப் பாருங்கள். ஒரே காரியம் எல்லாரிடத்திலும் அங்கு இழையோடும்: “நீங்கள் அப்படிப் பார்த்தீர்களா? நானும் அப்படித்தான் பார்த்தேன்,” என்று தேவனுடைய மக்கள் சாட்சி சொல்வார்கள். நாம் எல்லாரும் ஏன் இங்கு கூடியிருக்கிறோம்? நம் உறவின் தளம் என்ன? நம் உறவை இணைக்கின்ற இழை என்ன? கிறிஸ்துவைத்தவிர ஜாதியும் அல்ல, மதமும் அல்ல, மொழியும் அல்ல, நாடும் அல்ல. நம்மை இணைக்கின்ற ஒரே இழை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே.
எனவே, அருமையான சகோதர சகோதரிகளே, தேவன் உயிர்த்தெழுதலின் தேவன் அல்லது புதிய ஆரம்பத்தின் தேவன் என்பதை நாம் விளங்கிக்கொள்வதற்காக அல்லது மனதில் பதித்துக்கொள்வதற்காக மூன்று குறிப்புகளாக வைத்தேன்.
“வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும், மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன். என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் உண்டாகும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது,” என்று ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து கூறினார் (மத். 11:28, 29).
மனிதனுடைய வாழ்க்கை சாந்துணையும் சஞ்சலமேதான்; சாகும்வரை சஞ்சலமேதான். மனிதர்கள் எப்போதும் ஒரு பாரமும், சுமையும் உள்ள மக்களாகவே வாழ்கிறார்கள். இவர்களுடைய புறம்பான மகிழ்ச்சியெல்லாம் வெறும் பூச்சுகள்தான். உள்ளான ஓர் இளைப்பாறுதலோ, ஓர் இலகுவோ மனிதனுக்குக் கிடையாது.
பெரிய மீசை வைத்திருப்பான்; கழுத்தில் வடம்போன்ற பெரிய தங்கச் சங்கிலி போட்டிருப்பான்; “என்ன தம்பி? எப்படி இருக்கீங்க?” என்று கெம்பீரமாகக் கேட்பான். ஆனால், அவனுடைய இருதயத்தின் ஒரு மூலையில் இலேசாகத் தட்டினால் போதும், கண்ணீர் வடித்துவிடுவான். அப்படிப்பட்ட நிலைமை அவனுடைய இருதயத்துக்கு உண்டு. எல்லா மனிதர்களுடைய நிலைமையும் அதுதான். வெளியே அவனுடைய தோற்றம் அப்படி இருக்கலாம். ஆனால், எல்லா மனிதர்களுடைய இருதயத்திலும் அப்படிப்பட்ட ஒரு நிலை இருக்கும். தேவனால் வடிவமைக்கப்பட்ட ஒரு வெற்றிடம் எல்லா மனிதர்களிடமும் இருக்கிறது. தேவன் உண்டாக்கின ஒரு வெற்றிடம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உண்டு. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுடன் ஒரு மனிதன் ஓர் அன்பின் உறவுக்கு, நம்பிக்கையின் உறவுக்கு, ஒரு விசுவாச உறவுக்கு, வரும்போது மட்டுமே அவனுடைய பாரங்களும், சுமைகளும் அவனைவிட்டு எடுபடும். அவன் மிகவும் இலகுவாக உணர்வான்.
எல்லாக் கோள்களும் எப்படி சூரியனைச் சுற்றி தன்தன் பாதையிலே, தன்தன் தடத்திலே, தன்தன் வட்டத்திலே, சுற்றிவருகிறதோ அதுபோல எல்லா மனிதர்களுடைய மையம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவாக இருக்க வேண்டும். மையம் என்று சொல்லும்போது நம் அன்பு, நம் நம்பிக்கை, நம் விசுவாசம், நம் பற்றுறுதி எல்லாம் அவர்மேல் இருக்க வேண்டும். அந்த வெட்டவெளியில், அந்த வான்வெளியில், தன் தடத்தைவிட்டு, தன் பாதையைவிட்டு, ஒரு கோள் தடம்புரண்டால் அதன் பாரமெல்லாம், சுமையெல்லாம், மாறிப்போகும். அது தன் தடத்தில் இருக்கும்போது அதற்கு எந்தச் சுமையும் இல்லை.
அதுபோல, நம் வாழ்க்கையில் நாம் நம் ஆண்டவராகிய இயேசுவை மையமாக எடுத்துக்கொள்ளும்போது நமக்கு எந்தப் பாரமும், சுமையும் இருக்காது. நமக்குப் பொறுப்புகள் இருக்கும்; நோய்கள், பலவீனங்கள் ஆகியவைகளின் வழியாக நாம் கடந்துபோவோம். ஆனால், அப்போஸ்தலர் நடபடிகள் 28ஆம் அதிகாரத்தில் பவுலைப்பற்றி மக்கள் சொன்னது நினைவிருக்கிறதா? பவுல் கப்பல் சேதத்துக்குத் தப்பி மெலித்தா தீவில் கரை ஒதுங்கினார். நெருப்பை மூட்டி குளிர்காய்ந்தார்கள். பவுல் சில விறகுகளை வாரி அந்த நெருப்பின்மேல் போடுகையில் ஒரு விரியன் பாம்பு அனலுறைத்துப் புறப்பட்டு அவனுடைய கையைக் கவ்விக்கொண்டது. பாம்பு அவன் கையில் தொங்குவதைப் பார்த்த அந்தத் தீவார், “இந்த மனுஷன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை. இவன் சமுத்திரத்துக்குத் தப்பிவந்தும், பழியானது இவனைப் பிழைக்கவொட்டவில்லையென்று,” சொன்னார்கள். அவன் பாம்பைத் தீயில் உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தான். அவனுக்கு வீக்கங்கண்டு அல்லது அவன் சடிதியாய் விழுந்து சாவானென்று அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள். நெடுநேரமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தும், ஒரு சேதமும் வராததைக் கண்டபோது, வேறு சிந்தையாகி, ‘அவன் தேவன்’ என்று சொன்னார்கள். கொஞ்ச நேரத்துக்குமுன் அவனைக் கொலைபாதகன் என்று சொன்னார்கள். இப்போது இவன் தேவன் என்று சொல்லுகிறார்கள். “அந்தச் சகோதரன் அல்லது அந்தச் சகோதரி படுத்த படுக்கையாக விழுந்து விடுவார்கள் என்று நினைத்தோம். ஆனால், அவன் இன்னும் எழுந்து நடமாடிக்கொண்டிருக்கிறான். உங்கள் கதி அதோ கதிதான் என்று நினைத்தோம். ஆனால், நீங்கள் இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறீர்களே,” என்பார்கள்.
2 கொரிந்தியர் 4 ஆம் அதிகாரத்தை நான் உங்களுக்குப் பல தடவை வாசித்துக்காட்டியிருக்கிறேன். “நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போவதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை” (2 கொரி. 4:8). யோசித்துப்பாருங்கள். என்னுடைய கற்பனை எப்படி இருக்கும் என்றால் ஒரு முட்டை இருக்கிறது. ஒரு முட்டையை எல்லாப் பக்கங்களிலுமிருந்து நெருக்கினால் அது உடையுமா உடையாதா? ஆனால், இங்கு ஒரு முட்டை, “நான் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போவதில்லை,” என்று சாட்சி கொடுக்கிறது. இது அற்புதம்! நாம் அப்படிப்பட்ட மண்பாண்டங்கள்; நோய்கள் வழியாக நாம் செல்வோம்; பொருளாதார நெருக்கடி வழியாக நாம் செல்வோம்; உறவுகளின் நெருக்கங்களின் வழியாக நாம் செல்வோம்; ஆனாலும் நாம் செத்துப்போவதில்லை.
ஆண்டவராகிய இயேசு நம் இளைப்பாறுதலும், நம் இலகுவாகவும் இருக்கிறார். இதுதான் இயேசு கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தி. இந்த நற்செய்தி எல்லாருக்கும் அவசியம். எனக்கு இந்த நற்செய்தி அவசியம். ஏனென்றால், ஒருமுறை நாம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவோடு ஒரு உறவுக்கு வந்தபிறகு அதற்குப்பின் நாம் நம் வாழ்க்கையைக் குழப்புவதே இல்லை என்பதல்ல பொருள். அதற்குப்பிறகும் நாம் நம் வாழ்க்கையைக் குழப்புகிறோம். ஆண்டவர் ஒருநாளும் சோர்ந்து போவதில்லை. “எத்தனை தடவை நான் உன் வாழ்க்கையைச் சுத்தம் செய்வது?” என்று தேவன் ஒருபோதும் சலித்துக்கொள்வதில்லை. ஒரு தாய் எத்தனை தடவை தன் குழந்தைக்குத் துணிமாற்றுகிறாள்? எல்லையே இல்லாமல் போய்விட்டது என்பதல்ல. நம்பிக்கையோடு அவர்கள் மாற்றுகிறார்கள். “ஒருநாள் என் மகன் அல்லது மகள் வளர்ந்து பக்குவப்படுவான்(ள்)”. அந்தப் பாரத்தை அவர்கள் பாக்கியமாகக் கருதுகிறார்கள்.
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஒருநாளும் சோர்ந்துபோவதில்லை. “இவனை எத்தனை தடைவை திருத்தினாலும் இவன் திருந்தவேமாட்டான்,” என்று தேவன் நினைப்பதில்லை. “அவர் நம்மேல் இரங்குவார். நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்” (மீகா 7:19). நான் கல்லூரயில் படித்துக்கொண்டிருந்தபோது இப்படிப் படித்திருக்கிறேன். “தேவன் நம் பாவங்களைச் சமுத்திரத்தின் ஆழங்களில் தூக்கிப்போட்டபின் ‘இங்கு மீன்பிடிக்க அனுமதி இல்லை’ என்ற ஒரு பலகையையும் அங்கு வைத்துவிடுகிறார்.” நாளைக்கு வந்து, “நான் நேற்று போட்ட பாவம் எங்கு இருக்கிறது?” என்று தேடிப்பார்ப்பதற்கு அனுமதி இல்லை. ஒரு சிறுவன் ஆண்டவரிடம் போய் ஜெபித்தானாம். “ஆண்டவரே, நான் இப்படி ஒரு பாவம் செய்துவிட்டேன்; என்னை மன்னியும்,” என்று ஜெபித்தானாம். ஆண்டவர், “நான் உன்னை மன்னித்துவிட்டேன்,” என்று சொன்னாராம். அந்தச் சிறுவன் அடுத்த நாளும் அதே பாவத்தைச் செய்தானாம். அவன் மீண்டும் ஆண்டவரிடம் போய், “ஆண்டவரே, நான் நேற்று செய்த அதே பாவத்தை இன்றைக்கும் செய்தேன்; என்னை மன்னியும்,” என்று சொன்னானாம். ஆண்டவர் அவனைப் பார்த்து, “நேற்று நீ பாவம் செய்தாயா?” என்று கேட்டாராம். நாம் ஒருவேளை நினைவில் வைத்துக்கொள்ளலாம். ஆனால், தேவன் அதை நினைவில் வைத்துக்கொள்வதில்லை. “ஏனெனில், நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன்,” என்று தேவன் சொல்லுகிறார் (எபி. 8:12). இது பெரிய ஆசீர்வாதம். தேவன் மன்னித்துவிடுவார். ஆனால், ‘நீ அப்படிப்பட்ட ஆள்தானே’ என்று அவர் குறித்துவைத்துக்கொள்வார் என்று நாம் நினைக்கிறோம். அப்படியல்ல. ஆண்டவரிடம் போய், “ஆண்டவரே, நான் இந்தப் பாவம் செய்தேன்,” என்று சொல்லும்போது, “தெரியும், தெரியும், நேற்றும் இந்தப் பாவத்தைத்தானே செய்தாய். கடந்த பத்து வருடங்களாக இந்தப் பாவத்தைத்தானே செய்துகொண்டிருக்கிறாய். கடந்த 30 அல்லது 40 வருடங்களாக அதைச் செய்துகொண்டிருக்கிறாயே!” என்று அவர் நினைப்பதுமில்லை, சொல்வதுமில்லை. நாம் அப்படிப்பட்ட எண்ணத்தோடு மக்களைப் பார்க்கவும் கூடாது. “உங்கள் பாவங்களை என் முதுகுக்குப்பின்னால் தூக்கிப்போட்டேன்.” தேவன் ஒரு புதிய தொடக்கத்தைத் தொடங்குவதற்கு ஒருநாளும் சோர்ந்துபோவதில்லை. “எத்தனை தடவைதான் ஒரு புதிய தொடக்கம்!” என்று அவர் ஒருபோதும் சலித்துக்கொள்வதில்லை.
ஒருவன் திராட்சைத் தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான். அதில் கனியைத் தேடினபோது அதில் ஒன்றுங் காணவில்லை. அவன் தோட்டக்காரனை நோக்கி, “இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடி வருகிறேன். ஒன்றையுங் காணவில்லை. இதை வெட்டிப்போடு. இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது?” என்று சொன்னான். அதற்கு அவன், “ஐயா, இது இந்த வருடமும் இருக்கட்டும். நான் இதைச் சுற்றிலுங்கொத்தி, எருப்போடுவேன். கனி கொடுத்தால் சரி, கொடாவிட்டால் இதை வெட்டிப்போடலாம்,” என்று சொன்னான். ஒரு மரம் கனி கொடுக்காவிட்டால் அது அந்த மரத்துக்கு மட்டும் கேடல்ல. அது மற்ற மரங்களுக்கும் கேடு உண்டாக்கும். ஒன்று இடத்தை அடைக்கும். இரண்டாவது மற்ற மரங்களுக்குப் போகவேண்டிய சத்தை எடுத்துக்கொண்டு மற்ற மரங்களையும் கெடுத்துவிடும்.
எனவே, சமுதாய வாழ்க்கை, கிறிஸ்தவ சமுதாய வாழ்க்கை, சபை வாழ்க்கை என்பது நான் தனியான ஆள் அல்ல. நான் ஒரு கெட்ட மரம் என்றால் மற்ற நல்ல மரங்களுக்குப் போகவேண்டிய சத்தையும் நான் உறிஞ்சுகொண்டிருக்கிறேன். தேவனுக்கு முன்பாக நாம் நம் இருதயத்தைப் பிளந்துபோட்டு அந்தரங்கத்தில் ஆராய்ந்து பார்க்க வேண்டும். “ஆண்டவரே, என் உண்மை நிலை என்ன?” என்று பார்க்க வேண்டும். உன் சகோதரனுடைய இந்த நிலைமைக்கு நீ காரணம். உன் சகோதரனுடைய ஆசீர்வாதத்துக்கு நீ காரணம். அப்போது அந்தத் தோட்டக்காரன் பரிந்துபேசினான். “இந்த ஒரு வருடம் இதை விடும். நான் கொத்தி எருப்போடுகிறேன். இந்த வருடமும் கனி கொடுக்காவிட்டால் அடுத்த வருடம் வெட்டிவிடலாம்.” ஒருவேளை அடுத்த வருடம் அந்தச் சொந்தக்காரன் வந்து, “தோட்டக்காரனே, போனவருடம் நீ என்ன சொன்னாய் நினைவிருக்கிறதா? கொத்தி எருப்போடுவதாகவும், இந்த ஒரு வருடம் பார்க்கலாம் என்று சொன்னாயே. இந்த வருடமும் கனி தரவில்லை. இப்போது வெட்டிப்போடு,” என்று சொல்லியிருந்தால் அந்தத் தோட்டக்காரன் என்ன சொல்லியிருப்பான் தெரியுமா? “இந்த வருடமும் இருக்கட்டும். நான் கொத்தி எருப்போடுவேன்,” என்றுதான் சொல்லியிருப்பான்.
அருமையான சகோதர சகோதரிகளே! அருமையான பரிசுத்தவான்களே! ரோமர் 8:28 எல்லாருக்கும் தெரியும். “அன்றியும் அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.” இதைப்பற்றிய ஒரு வெளிச்சத்தை நான் பெற்றேன். நாம் செய்கிற முட்டாள்தனங்களும் நன்மைக்கேதுவாக நடக்குமா? ஆம், நம்முடைய முட்டாள்தனங்களைக்கூட தேவன் நன்மைக்கேதுவாக மாற்றுகிறார்.
கழிவுப்பொருட்களையெல்லாம் இப்போது மீண்டும் மறுசுழற்சி முறையின்மூலம் பயன்படுத்துகிறார்கள். மக்கிப்போன குப்பைகள், பாலிதீன் பைகள் போன்றவைகளை மீண்டும் பயன்படுத்துகிறார்கள்; உரமாகப் பயன்படுத்துகிறார்கள்; சாலைகள் போட பயன்படுத்துகிறார்கள். வீணான தாள்களைக்கொண்டு கலைநயம்மிக்க பொருள்களைத் தயாரிக்கிறார்கள். இதனுடைய கர்த்தா, இதனுடைய கலைநிபுணர் யார் தெரியுமா? ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துதான். “உதவாக்கரை வேலை” என்று நினைப்போம். “இது முட்டாள்தனம்” என்று நினைப்போம். அதையும் தேவன் நன்மைக்கேதுவாக மாற்றுகிறார். இதன் பொருள் தேவன் நம் முட்டாள்தனத்தை அங்கீகரிக்கிறார் என்பதல்ல. “நம் முட்டாள்தனத்தை தேவன் கண்டும் காணாதவர்போல் இருக்கிறார். எனவே, நாம் தொடர்ந்து முட்டாள்தனமான செயல்களைச் செய்துகொண்டேயிருக்கலாம்,” என்று நினைக்கக் கூடாது. ஆனால், நம் முட்டாள்தனங்கள், மதியீனங்கள், மூடத்தனங்கள் ஆகியவைகளையும் தேவன் பொறுத்து, அவைகளுக்கு மத்தியில், ரோமர் 8:28இன்படி எல்லாவற்றையும் நன்மைக்கேதுவாக மாற்றுகிறார். இந்த வார்த்தைகள் நம்மை ஆற்றுவதாக, ஊக்கமளிப்பதாக, “ஓ! இதுவரை என் வாழ்க்கை கனிநிறைந்த வாழ்க்கை அல்ல,” என்று அங்கலாய்க்கலாம். இந்த வருடத்தில் தேவன் அதைப் பயனுள்ள வாழ்க்கையாக, கனிநிறைந்த வாழ்க்கையாக, மாற்றுவார். ஆமென்.