Transcribed from a message spoken in August 2014 in Chennai
By Milton Rajendram
தேவன் தம்முடைய மக்களுக்கு ஒரு திட்டத்தையும், நோக்கத்தையும், குறிக்கோளையும், இலக்கையும் வைத்திருக்கிறார். ஆனால், தேவனே தீட்டின திட்டமாக இருந்தாலும், அதை நாம் வேதனையும், வருத்தமுமின்றி எட்டமுடியாது. ஒரு காரியம் தேவனுடைய சித்தம் என்பதால், எந்த வேதனையும், வருத்துமுமின்றி அது தானாக நிறைவேறிவிடும் என்று நாம் சொல்ல முடியாது. “இது தேவனுடைய சித்தம். எனவே, அதில் எந்த வேதனையும், வருத்தமும் இருக்காது. தேவனுடைய சித்தம் என்றால் அது மிகவும் சமாதானமாக இருக்கும்; தேவனுடைய சித்தம் இல்லையென்றால் அது ஒரே போராட்டமாக இருக்கும்,” என்று சிலர் சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒருவேளை நீங்களும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இப்படிப்பட்ட சில பிரமாணங்களைக் கொடுக்கும்போது நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். என்ன அடிப்படையில் இப்படிப்பட்ட பிரமாணங்களைக் கொடுக்க வேண்டும்?
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினுடைய வாழ்க்கை போராட்டம் நிறைந்த வாழ்கையா அல்லது ஆரம்பம்முதல் கடைசிவரை சமாதானம் நிறைந்த வாழ்கையா? புறம்பாகப் பார்த்தால் அது போராட்டம் நிறைந்த வாழ்கை. ஆனால், உள்ளாகப் பார்த்தால் இயேசுவைப்போல் சமாதானம் உள்ள மனிதன் அவருக்கு முந்தியும் வாழ்ந்ததில்லை, பிந்தியும் வாழப்போவதில்லை. “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன். என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்,” (யோவான் 14:27) என்று அவர் சொன்னார். தன்னைக் கைதுசெய்வதற்காக பல நூறு போர்வீரர்கள் வரும்போது எந்த மனிதனால் அவர்களுக்கு நன்மை செய்ய முடியும்? தான் சிலுவையில் தொங்கும்போது எந்த மனிதனால் இன்னொரு மனிதனுடைய தேவையைக்குறித்து யோசிக்க முடியும்? நாம் நன்றாக இருக்கும்போதுகூட மற்றவர்களுடைய நன்மையைக்குறித்து நம்மால் யோசிக்க முடியாது. மற்றவர்களை விட்டுவிடுவோம். நம்முடைய கணவன், மனைவி, பெற்றோர், பிள்ளைகள் போன்றவர்களைக்குறித்துகூட நம்மால் யோசிக்க முடியாது. அப்படி இருக்கும்போது ஒரு மனிதன் சிலுவையிலே அறையப்பட்டுத் தொங்கும்போது தன்னோடுகூட அறையப்பட்ட இன்னொரு கள்ளனுடைய நன்மையைக்குறித்து, அவனுடைய எதிர்காலத்தைக்குறித்து, அக்கறைப்படுகிறான் என்றால் உண்மையிலேயே அவன் சமாதானம் நிறைந்த ஒரு மனிதனாகத்தான் இருக்க வேண்டும்.
தேவனுடைய மக்கள் சமாதானம் என்று சொல்வது தேவனுடைய பார்வையிலே அல்லது வேதத்தினுடைய வெளிச்சத்திலே பெரிய சமாதானம் இல்லை. அவர்களைப் பொறுத்தவரை சமாதானம் என்றால் என்ன? என் மனைவி நான் செல்வதையெல்லாம் கேட்க வேண்டும். என்னுடைய பிள்ளைகள் நான் சொல்வதெற்கெல்லாம் கீழ்படிய வேண்டும். நான் வேலை பார்க்கிற இடத்திலே யாரும் எனக்கு எந்தப் பிரச்சனையும் பண்ணக்கூடாது. நான் தாமதமாகப் போனாலும் என் முதலாளி என்னை ஒன்றுமே சொல்லக்கூடாது. வருடா வருடம் எனக்குச் சம்பள உயர்வு வர வேண்டும். எந்த வியாதியும் இருக்கக் கூடாது. என்னுடைய பாஸ்டர் என்னைக்குறித்து, “அவரைப்போல ஒரு உத்தம விசுவாசி கிடையாது. முழு இரவு ஜெபத்தின்போது அவர் தன்னுடைய தசமபாகத்தைத் தவறாமல் தந்துவிடுவார்,” என்று மிகவும் உயர்வாகச் சொல்ல வேண்டும். இதைத்தான் தேவனுடைய மக்கள் பலர் சமாதானம் உள்ள வாழ்க்கை என்று சொல்கிறார்கள்.
ஆனால், தேவனால் போதிக்கப்பட்ட எல்லோருக்கும் ஒன்று தெரியும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் சரி அல்லது அவருடைய சீடர்களும் சரி, அப்படிச் சொல்லவில்லை. “நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை. கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை. துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை. கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை,” என்பதுதான் பவுலின் சாட்சி. “நாங்கள் நெருக்கப்படுவதே இல்லை,” என்பது பவுலினுடைய சாட்சியல்ல.
எனவே, தேவனுடைய திட்டமாகவே இருந்தாலும், அதற்குத் தடைகள் உண்டு, எதிர்ப்புகள் உண்டு, போராட்டம் உண்டு, வேதனை உண்டு, வருத்தம் உண்டு. இவைகளின்வழியாகத்தான் தேவன் தம் திட்டத்தை நம்முடைய வாழ்கையில் நிறைவேற்றுகிறார். இன்னும் சொல்லப்போனால் சிலுவை என்பதே அதுதான். ஆனால், இன்றைக்குப் பொதுவாக தேவனுடைய மக்கள் விரும்புவது சிலுவையில்லாத ஒரு உயிர்த்தெழுதல்; பாடுகள் இல்லாத ஒரு மகிமை இருக்குமென்றால் அது எவ்வளவு அற்புதமாக இருக்கும்! “உனக்காக இயேசு கிறிஸ்து எல்லாப் பாடுகளையும் பட்டுவிட்டார். ஆகவே, நீ எந்தப் பாடும் படவேண்டிய அவசியம் இல்லை. பாடு அவருக்கு; மகிமை உனக்கு. சிலுவை அவருக்கு; உயிர்த்தெழுதல் உனக்கு,” என்று அவர்கள் மிகவும் சாமர்த்தியமாகச் சொல்வார்கள். இது கேட்பதற்கு அழகாக இருக்கிறதா, இல்லையா? இது கேட்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. அது உண்மைதானே என்று பலர் நினைக்கலாம். “அவர் உனக்காகப் பாடுபட்டார். ஆகவே, நீ பாடுபட வேண்டிய அவசியம் இல்லை,” என்பது பாவ மன்னிப்பை பொறுத்தவரை. ஆனால், தேவனுடைய நித்திய நோக்கமும், நித்திய திட்டமுமாகிய அவருடைய சாயலுக்கு நம்மை ஒத்த சாயலாக மாற்றுவது என்பதைப் பொறுத்தவரை “அவர் பாடுபட்டார்; எனவே, மகிமை உனக்கு. அவர் சிலுவையிலே அறையப்பட்டார்; ஆகவே, உயிர்த்தெழுதல் உனக்கு” என்பது கிடையாது. “அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடுகூட ஆளுகையும் செய்வோம்” (2 தீமோ. 2:12).
நாம் இப்பொழுது வாசித்த 2 கொரிந்தியா; 4ஆம் அதிகாரம் அதற்கு சாட்சியாக இருக்கிறது. “கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்படிக்கு, இயேவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்துதிரிகிறோம்…இப்படி மரணமானது எங்களிடத்திலும், ஜீவனானது உங்களிடத்திலும் பெலன் செய்கிறது” (2 கொரி. 10, 12). “மரணம் அவருக்கு, ஜீவன் எங்களுக்கு. பாடு அவருக்கு, மகிமை எங்களுக்கு. சிலுவை அவருக்கு, உயிர்த்தெழுதல் எங்களுக்கு. எங்கள் கொடி வெற்றிக்கொடியே! அல்லேலுயா! எங்கள் கொடி வெற்றிக்கொடியே!” என்று பவுல் புது சுலோகம் கண்டுபிடிக்கவில்லை.
தேவனுடைய வார்த்தையை ஆழ்ந்து வாசிப்பதற்குத் தேவனுடைய மக்களுக்கு அதிகமான நேரமும், இல்லை, இருதயமும் இல்லை. ஞாயிற்றுக்கிழமை கூடுகைக்குப் போகின்றோம். ஒவ்வொருநாளும் வேதம் வாசிக்க வேண்டும் என்பதற்காக வாசிக்கின்றோமேதவிர “உண்மையிலேயே தேவனுடைய இருதயமும், மனமும் என்ன?” என்பதற்காக வேதாகமத்தை ஆழ்ந்து படிப்பதற்குத் தேவனுடைய மக்கள் எத்தனைபேர் தங்கள் நேரத்தைச் செலவழிப்பதற்கு ஆயத்தமாக இருக்கிறார்கள்?
ரோமன் கத்தோலிக்க மார்க்கத்தில் மக்கள் வேதாகமத்தைச் சொந்தமாக வாசிக்க ஆரம்பித்தபோது, “நாங்கள்தான் பால்காரர்கள். எங்களுக்குத்தான் எப்படி பால் கறந்து உங்களுக்குத் தருவது என்று தெரியும். தேவனுடைய வார்த்தையைத் தேவனிடத்திலிருந்து எப்படிப் பெற்று எப்படிச் சொல்லித்தர வேண்டும் என்று எங்களுக்குத்தான் தெரியும். உங்களுக்குத் தெரியாது,” என்று சாமியார் சொன்னாராம். உடனே ஒரு விசுவாசி, “பால்காரன் அதிகமாகத் தண்ணீர் கலக்கிறான் என்று ஒருநாள் நான் கண்டுபிடித்துவிட்டேன். அன்றிலிருந்து நானே பால் கறக்க ஆரம்பித்து விட்டேன்,” என்று சொன்னாராம். இது ரோமன் கத்தோலிக்க மதத்திலிருந்து வெளிவருகிறவர்களுக்கு மட்டும் அல்ல; எல்லாப் போதகர்களும் பொருந்தும். எல்லாப் போதகர்களும் இப்போது பால்காரர்கள்தான். தண்ணீர் என்பது என்ன? தேவனுடைய எண்ணங்களோடே மனிதனுடைய எண்ணங்களையும் கொஞ்சம் விரவிக் கலந்துகொடுப்பதுதான் தண்ணீர். சிலர் வேண்டுமென்றே கலந்து கொடுக்கலாம். சிலர் வேண்டும் என்று கலந்து கொடுப்பது இல்லை. ஆனால், அவர்கள் தங்களை அறியாமலே கலந்துகொடுப்பார்கள். அவர்களுடைய பழக்கமே அதுதான். உள்ளதை உள்ளபடிப் பேசாமல் கொஞ்சம் உயர்த்திப் பேசுவது அல்லது கொஞ்சம் பொய்யைக் கலந்து பேசுவது நம்முடைய சுபாவத்தில் இருக்கிறது. கலப்படமாய்ப் பேசுவது மனிதர்களுக்கு இயற்கையாகவே வரும். குறைந்தபட்சம் தேவனுடைய மக்களுக்கு நாம் என்ன சொல்ல வேண்டும் என்றால், “இதில் நமக்குத் தெளிவு இருக்கிறது; இதில் இன்னும் நமக்குத் தெளிவில்லை,” அல்லது “இதில் உங்களுக்கு உடன்பாடு இல்லையென்றால் நாம் கலந்து ஆலோசிக்கலாம்,” என்று எப்போதும் நாம் திறந்த மனதுடன் இருக்க வேண்டும்.
தேவனுடைய செயல்கள், தேவனுடைய வழிகள் ஆகிய இரண்டும் வித்தியாசமானவைகள் என்று வேதம் சொல்லுகின்றது. தேவனுடைய மக்கள் பலர் அவருடைய செயல்களை அறிவார்கள்; ஆனால், அவருடைய வழிகளை அறியமாட்டார்கள். இதை சங்கீதத்திலே நாம் வாசிக்கின்றோம் “அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது கிரியைகளை இஸ்ரயேல் மக்களுக்கும் தெரியப்பண்ணினார்” (சங். 103:7).
இஸ்ரயேல் மக்கள் பார்த்ததுபோன்ற அற்புதங்களை கிறிஸ்தவர்கள் யாரும் பார்த்ததில்லை. எகிப்தியரின் தலைப்பிள்ளைகள் இறந்தபோது அவர்கள் வீடுகளிலே யாரும் சாகவில்லை. சிவந்த சமுத்திரத்தை உலர்ந்த தரையிலே நடப்பதுபோல அவர்கள் நடந்துவந்தார்கள். ஆனால், எகித்தியர்கள் அப்படி நடக்க முற்பட்டபோது சமுத்திரம் அவர்களை மூழ்கடித்தது. வனாந்தரத்திலே அவர்கள் நாற்பது ஆண்டுகள் நடந்தார்கள். ஒவ்வொரு நாளும் அவர்கள் மன்னாவை உண்டார்கள். அவர்களுடைய கோத்திரங்களில் பலவீனப்பட்டவன் ஒருவனாகிலும் இல்லை. அவர்கள் கால்கள் வீங்கவும் இல்லை, அவர்கள் மிதியடிகள் தேயவும் இல்லை. அவர்கள் ஆடைகள் பழையதாகவும் இல்லை. பகலிலே மேகத் தூணிலும், இரவிலே அக்கினித் தூணிலும் அவர்களை நடத்தினார். அவர்களுக்குத் தாகம் வந்தபோது அவர்களோடு கூடச்சென்ற ஞானக் கன்மலையின் தண்ணீரை அவர்கள் குடித்தார்கள்.
நம்மைச் சாட்சிசொல்லச் சொன்னால் நம் வாழ்க்கையில் பல பத்தாண்டுகளுக்குமுன் என்றோ நடந்த ஒரு அற்புதத்தைத்தான் நம்மால் சொல்ல முடியும். ஆனால், அவர்கள் அப்படிச் சொல்லவில்லை. “இன்றைக்குக் காலையில் நான் மன்னா சாப்பிட்டேன். மதியம் கன்மலையிலிருந்து நான் தண்ணீர் குடித்தேன். ஒரு மணிக்கு மேகத்தூண் எனக்குமேலே சென்றது,” என்று எப்பொழுமே அவர்களுடைய சாட்சி அன்றைய சாட்சியாக இருந்தது. நாம் பேசுவதற்கு மிகவும் கஷ்டப்படுவோம். “எதைப் பேசுவது? புதிது புதிதாகப் பேசுவதற்கு அப்படி ஒன்றும் அற்புதங்கள் நடைபெறவில்லையே!” என்று நாம் நினைக்கலாம்.
இஸ்ரயேல் மக்கள் தேவனுடைய வல்லமையான கிரியைகளைப் பார்த்தார்கள். ஆனாலும், அவர்களுக்குத் தேவனுடைய வழி என்னவென்று தெரியவில்லை. தேவன் மோசேக்குத் தம்முடைய வழிகளைத் தெரியப்படுத்தினார். மோசேக்கு தேவனுடைய வழி தெரிந்தது. “நான் இந்த மக்களையெல்லாம் இந்த வனாந்தரத்திலே அழித்துவிட்டு, உன்னை நான் பெரிய தேசமாக்குவேன்,” (யாத். 32:10) என்று கர்த்தர் சொன்னபோது, தேவனுடைய வழி மோசேக்குத் தெரிந்திருந்ததால், “கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் உம்முடைய மகத்துவத்தினாலே மீட்டு, பலத்த கையினாலே எகிப்திலிருந்து கொண்டுவந்த உமது மக்களையும், உமது சுதந்தரத்தையும் அழிக்காதிருப்பீராக. கர்த்தர் அவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணியிருந்த தேசத்தில் அவர்களைக் கொண்டுபோக முடியாததாலும், அவர்களை வெறுத்தபடியினாலும், அவர்களைக் கொன்றுபோடும்படிக்கே கொண்டுவந்தார் என்று நாங்கள் விட்டுப் புறப்படும்படி நீர் செய்த தேசத்தின் குடிகள் சொல்லாதபடிக்கு இவர்களை மன்னியும்,” (உபா. 9:26, 27) என்று அவர் விண்ணப்பித்தார். இன்னொரு இடத்தில், “நீர் அவர்களை மன்னித்தருளும். மன்னிக்கவில்லையென்றால் நீர் எழுதின உம்முடைய புத்தகத்திலிருந்து என்னுடைய பெயரைக் கிறுக்கிப்போடும்,” (யாத். 32:32) என்று சொன்னார். மோசேக்குத் தேவனுடைய வழிகள் தெரிந்திருந்தது. இஸ்ரயேல் மக்களுக்குத் தேவனுடைய வழிகள் தெரியவில்லை.
பாலும் தேனும் ஓடுகிற நல்ல தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ள தேவனே அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தார். ஆயினும், முதலாவது அவர்கள் ஒற்றர்களை அனுப்பினார்கள். ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒரு பிரபுவாக பன்னிரண்டு கோத்திரங்களுக்குப் பிரதிநிதிகளாகப் பன்னிரண்டு பிரபுக்களைத் தெரிந்தெடுத்து, அந்த நாட்டை வேவுபார்ப்பதற்கு அவர்களை ஒற்றர்களாக அனுப்பினார்கள். அவர்கள் அந்தத் தேசத்தை வேவுபார்த்துவிட்டு வந்தபின்பு மோசேயினிடத்தில் அவர்கள், “உண்மையிலே தேவன் நமக்கு வாக்குறுதிசெய்த தேசம் நல்ல தேசம்தான், வளமான தேசம்தான்,” என்று அறிக்கை சமர்ப்பித்தார்கள். அங்கிருந்து ஒரு திராட்சைக்குலையை பன்னிரண்டு பேர் சுமந்துகொண்டு வந்தார்கள். இது உண்மை. அப்படியானால் அது எவ்வளவு வளமான தேசம்! இப்படிச் சொல்லிவிட்டு, “ஆனாலும், அந்தத் தேசத்தை நம்மால் சுதந்தரிக்க முடியாது, ஏனென்றால், அவர்களுடைய பட்டணங்கள் அரணிப்பானவை. அதாவது ஒவ்வொரு பட்டணத்தைச் சுற்றிலும் பெரிய உயர்ந்த மதில்சுவர்கள் உள்ளன. அங்கு இருக்கின்ற மக்கள் பலவான்கள், அரக்கர்கள். அரக்கர்கள் என்றால் அங்கு இருப்பவர்கள் எவ்வளவு உயரமான மக்கள் என்றால் அவர்களுடைய பார்வையிலே அவர்களுக்குமுன்பு நாம் வெட்டுக்கிளிகளைப்போல் காணப்படுவோம். எனவே, நம்மால் இந்த நல்ல தேசத்தைச் சுதந்தரிக்க முடியாது,” என்று சொன்னார்கள். அவர்கள் தேவனுடைய கிரியைகளைப் பார்த்தார்கள். அவர் எப்படி எகிப்தியருடைய தலைச்சன்களைக் கொன்றார். தங்களை உலா;ந்த தரையிலே நடந்து போகச்செய்தார், ஆனால் எகிப்தியரைச் சமுத்திரத்திலே மூழ்கடித்தார். மன்னாவைப் புசித்தார்கள். தங்களோடு கூடச்சென்ற ஞானக் கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள். பகலிலே மேகஸ்தம்பமும் இரவிலே அக்கினி ஸ்தம்பமும் வழிநடத்தினது. எல்லாவற்றையும் அவர்கள் பார்த்தார்கள். ஆனால், நல்ல தேசத்திற்குள் நுழைய வேண்டிய ஒரு தருணம், ஒரு காலகட்டம், வந்தபோது “இது எங்களால் முடியாது,” என்று சொன்னார்கள். அவர்கள் உண்மையாகவே தேவனுடைய வழியை அறிந்திருந்தார்களா? அவர்கள் தேவனுடைய கிரியைகளைச் சாகிறவரையில் பார்த்தாலும் தேவனுடைய வழியை அறிந்திருப்பார்கள் என்கிற எந்த நிச்சயமும் இல்லை. சிலர் ஒருமுறை அல்லது இரண்டுமுறை அல்லது மூன்றுமுறை ஒரு கிரியையைப் பார்த்தபிறகு, அதிலிருந்து “இதுதான் தேவனுடைய வழி” என்று உடனே விளங்கிவிடும். ஆனால், சிலருக்கு ஒருமுறை, இரண்டுமுறை, நான்குமுறை, பத்துமுறை தேவனுடைய கிரியைகளைப் பார்த்தாலும் அதற்குபின்னால் இருப்பது தேவனுடைய வழி என்பது அவர்களுக்கு விளங்குவதில்லை.
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்.
உண்மையிலேயே தேவனுடைய வழியை அறிகிற ஒரு பசி, தாகம், தவிப்பு, கதறுதல் ஒரு மனிதனிடத்தில் இருக்க வேண்டும். “ஆண்டவரே, இந்தச் சூழ்நிலைக்கு எங்களைக் கொண்டுவந்திருக்கின்றீர். இதிலே உம்முடைய வழி என்ன?” என்று கேட்பதற்குப்பதிலாக, “மோசே நம்மை இந்த வனாந்தரத்திலே அழிப்பதற்காகத்தான் கொண்டுவந்தான். இவனை நாம் கல்லெறிவோமாக,” என்று அவர்கள் உடனே பேச ஆரம்பித்து விட்டார்கள். அது மட்டும் அல்ல. “நாங்களும், எங்களுடைய மனைவி மக்களும் இந்த வனாந்தரத்திலே சாகவா கொண்டுவந்தீர்? நாங்கள் எகிப்திற்கே திரும்பிப் போகப்போகிறோம்,” என்று அன்று இரவெல்லாம் அழுதார்கள். இந்தச் சம்பவங்களெல்லாம் எண்ணாகமம் 13, 14ஆம் அதிகாரங்களிலே நமக்குத் திருஷ்டாந்தமாக எழுதப்பட்டிருக்கின்றன. திருஷ்டாந்தமாக என்றால் முன்மாதிரியாக, எடுத்துக்காட்டாக, என்று பொருள். எண்ணாகமம் 13, 14யைப் பல தடவைகள் வாசித்துப்பாருங்கள்.
காலேப் யோசுவா ஆகிய இரண்டு பேரும், “கர்த்தர் நம்மோடு இருந்தால் அவர்கள் நமக்கு இரையாவார்கள். அவர்களைக் காத்த நிழல் அவர்களை விட்டு விலகிப்போயிற்று,” என்று சொன்னார்கள். நன்றாய்க் கவனிக்க வேண்டும். இயேசுவை ஏற்றுக்கொள்ளாத மக்களையும் காக்கின்றவர் தேவன்தான். இதை நூறுமுறை சொன்னாலும் நமக்கு விளங்குவதில்லை. நம் பிள்ளைகள் நமக்குக் கீழ்ப்படிந்தாலும் சாப்பாடு கொடுக்கின்றோம், கீழ்ப்படியாவிட்டாலும் சாப்பாடு கொடுக்கின்றோம் இது பிதாவினுடைய மிகப்பெரிய பண்பு. “அவர்களைக் காத்த நிழல் அவர்களை விட்டு விலகிற்று,” என்று அவர்கள் இருவரும் சொன்னார்கள். காலேப் யோசுவா ஆகிய இரண்டுபேரும் வேறே ஆவியை உடையவர்கள். மற்றவர்கள் நுண்ணிய நூல் பல கற்றவர்கள். ஆனால், காலேப் யோசுவா ஆகிய இருவர் மட்டும் உண்மை அறிவு உடையவர்கள். “கர்த்தர் நம்மேல் பிரியமாய் இருந்தால் அவர்களை நம் கைகளிலே ஒப்புக்கொடுப்பார்.”
ஆகவே, நாம் தேவனுடைய வழிகளை அறிய வேண்டும். அறிய வேண்டும் என்கின்ற ஒரு எண்ணம், ஆவல், தவிப்பு, கதறுதல், பசி, தாகம் எப்போதும் நம்முடைய இருதயத்திலே இருக்க வேண்டும். இப்படிச் சொல்லலாம் தேவனுடைய கிரியைகள் புறம்பானது. தேவனுடைய வழிகளோ உள்ளானது. தேவனுடைய வழிகளுக்கு தேவனுடைய விதி, தேவனுடைய கோட்பாடுகள், தேவனுடைய பிரமாணங்கள், என்று வேறுசில வார்த்தைகளைப் பயன்படுத்தலாம்.
இதற்குப் பழைய ஏற்பாட்டிலே பல எடுத்துக்காட்டுகளைக் கொடுக்கலாம். தேவனுடைய வழிகள் தெரிந்த மக்கள் இருந்தார்கள். ஆபிரகாமிற்கு தேவனுடைய வழி தெரியும். லோத்துவை அழிக்க வேண்டுமென்று தேவன் தம்முடைய தூதர்களோடு இறங்கினபோது ஆபிரகாம் தேவனோடு பேரம் பேசினார். ஐம்பது பேர், நற்பத்தைந்து பேர், நாற்பது பேர், முப்பது பேர், இருபது பேர், பத்துப் பேர், ஐந்து பேர் என்று ஆபிரகாம் தேவனோடு பரிந்துபேசினார். ஆபிரகாமிற்குத் தேவனுடைய வழி தெரிந்திருந்தது. தேவனுடைய வழி என்ன? “அநீதிமான்களோடே நீர் நீதிமான்களை அழிக்கமாட்டீர். ஏனென்றால் நீர் சர்வ லோகத்தின் நியாயாதிபதி” என்கிற தேவனுடைய வழி அவனுக்குத் தெரிந்ததால் அவர் ஐந்து நீதிமான்கள் இருந்தால், ஐந்து லட்சம் அநீதிமான்கள் இருந்தாலும் தேவன் அழிக்கமாட்டார். ஆனால், இன்னோரு அற்புதமான கோட்பாடு உண்டு. அது ஒரு நீதிமான்நிமித்தம்கூட அந்தப் பட்டணத்தை அவர் விட்டுவைப்பார்.
சவுல் அமலேக்கியரோடு போரிடப் போகும்போது “எல்லா அமலேக்கியரையும், ஆடு, மாடு, மக்கள் எல்லாவற்றையும் அழித்து எரித்துவிடு,” என்று சாமுவேல் சொல்லி அனுப்புகிறார். ஆனால், சவுல் சில நல்ல ஆடு மாடுகளை மட்டும் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடுவற்காகக் கொண்டுவருகிறான். காரண காரியங்களுடன் வாதிட்டுப் பார்த்தால் இது சரிதான். “தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடுவதற்காகத்தான் ஒரு சில ஆடு மாடுகளைக் கொண்டுவந்தோம். கடைசியில் இந்த ஆடு மாடுகளையும் கொலைதான் செய்யப்போகிறோம். ஆனால், பலியிட்டுக் கொலைசெய்யலாமே,” என்று சொன்னான். ஆனால், தேவனுடைய வழி அதுவல்ல.
புதிய ஏற்பாட்டிலே பரிசேயர்கள் இருந்தார்கள் அவர்களுக்குத் தேவனுடைய வழி தெரியுமா? தேவனுடைய வழி தெரியும். யோசுவாவின் புத்தகத்திலே இந்தச் சம்பவம் உண்டு. யோசுவாவும் காலேபும் மிகவும் அறிவாளிகள். அதனால்தான் மற்றவர்களெல்லாம் “நாம் எகிப்திற்கே திரும்பிப்போய்விடலாம்,” என்று சொல்லும்போது, “இல்லை. தேவன் நமக்கு வெற்றியைத் தருவார்,” என்று சொன்னார்கள். இவர்கள் வெற்றிமேல் வெற்றி என்று கானான் தேசத்தை சுதந்தரித்துக்கொண்டுவந்தபோது. கிபியோன் என்ற ஒரு இனத்தவர்கள், “இஸ்ரயேல் மக்கள் நம்மை வென்று, கொன்றுபோட்டுவிடக்கூடாது. ஆகவே, இவர்களோடு நாம் சமாதானம் பண்ணிக்கொள்ள வேண்டும்,” என்று ஒரு நாடகமாடுகின்றார்கள். கிபியோனுடைய தலைவர்கள் எல்லோரும் பழைய, கிழிந்துபோன ஆடையை உடுத்திக்கொள்கின்றார்கள். பூசணம்பூத்த அப்பத்தை எடுத்துக்கொள்கிறார்கள். பழைய, கிழிந்த துருத்திகளில் திராட்சை ரசத்தை எடுத்துக்கொள்கிறார்கள். தேய்ந்து கிழிந்த செருப்பைப் போட்டுக்கொண்டு, “நாங்கள் வெகு தூரத்திலிருந்து வெகு நாட்களாய் பிரயாணம் பண்ணி உங்களுடைய தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் செய்த அற்புத அடையாளங்களையெல்லாம் கேள்விப்பட்டு, உங்களோடு சமாதானஉடன்படிக்கை பண்ணிக்கொள்வதற்காக வந்தோம்,” என்று சொல்லுகின்றாரகள்.
தேவன் இஸ்ரயேல் மக்களிடத்தில் “தேசத்து மக்களைத் துரத்திவிடு. எதிர்த்தார்கள் என்றால் கொன்றுவிடு,” என்று மிகத் தெளிவான கட்டளையைக் கொடுத்திருக்கின்றார். பழைய ஏற்பாட்டினுடைய காலகட்டமும், சட்டதிட்டமும் அப்படி.
அப்பொழுது யோசுவாவும் அவனோடு இருந்த தலைவர்களும் இந்தக் கிபியோனியருடைய பேச்சைப் பார்த்து, இது அவர்கள் போடுகிற நாடகம் என்று தெரியாமல் அவர்களோடு உடன்படிக்கை பண்ணிக்கொள்கின்றார்கள். இதை நாம் யோசுவா 9:4-15 பார்க்கின்றோம். இந்த உடன்படிக்கையின் பலாபலன்களைப் பின்பு அனுபவிக்கின்றாரகள்.
ஆகவே, மேலோட்டமாய் தேவனுடைய செயல்கள் மட்டும் தெரியும் என்றால் இவர்கள் செய்தது சரிதான். ஏனென்றால், இவ்வளவு நன்றாய்ப் பேசுகின்றார்களே!
தேவனுடைய செயல்கள் என்பது புறம்பான செயல்களைப் பார்த்து ஒரு வாதப்பிரதிவாதத்தைப் பார்த்து ஒரு முடிவுக்கு வருவது. “ஆ! இவர்கள் வெகு தூரத்திலிருந்து வந்திருக்கின்றார்கள். நம்முடைய தேவனைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றார்கள். நம்முடைய தேவனை இவர்கள் ஆராதிக்கின்றார்கள். இவர்கள் விக்கிரக ஆராதனை செய்பவர்கள் அல்ல. மேலும் நமக்கு அடிமைகளாக இருப்பதாகச் சொல்லுகின்றார்கள்.” ஆனால், தேவனுடைய வழியை அறிந்திருந்தால், “அந்த மக்களோடு உடன்படிக்கை பண்ணாதே,” என்று இஸ்ரயேல் மக்கள் சொல்லியிருப்பார்கள்.
இன்னொன்றையும் சொல்ல விரும்புகின்றேன். இயேசு கிறிஸ்துவை அறியாத பல மக்கள் கூட்டங்களிலே தேவனுடைய வழிகளைப்பற்றிய அறிவு இருக்கிறதா? ரோமர் 1:19-21இல் நாம் வாசிக்கின்றோம். “தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். எப்படியென்றால் காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை; தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானது முதற்கொண்டு, தெளிவாய்க்காணப்படும். ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை. அவர்கள் தேவனை அறிந்திருந்தும் அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள். உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.” எல்லா மக்களுக்கும் தேவன் தம்முடைய செயல்களைப் போக்குச்சொல்ல இடமில்லாத அளவிற்கு வெளிப்படுத்தியிருக்கின்றார். “தேவன் ஒருவர் உண்டு என்று எங்களுக்குத் தெரிவதற்கு வாய்ப்பில்லை,” என்று யாரும் சொல்லிவிட முடியாது. சங்கீதம் 8:3, 4இல் நாம் இப்படி வாசிக்கின்றோம. “உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கின்றேன்.” ஆகவே, உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளாலே தேவனுடைய செயல்கள் என்னவென்று எல்லா மனிதர்களுக்கும் ஒரு வெளிச்சம் இருக்கின்றது. அவர் யாரையும் வெளிச்சம் இல்லாமல் விடவில்லை. அப்போஸ்தலர் 17:27 “கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டு பிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார். அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே!” என்று பார்கின்றோம். ஒருவேளை அவர் கண்களுக்கு புலப்படாமலும், தென்படாமலும் போகலாம். ஆனால், தடவியாகிலும் அவரைக் கண்டுபிடிக்க முடியும். இது தேவனுடைய செயல்கள். தேவனுடைய வழிகள்கூட இயேசு கிறிஸ்துவை அறியாத பல மக்கள் கூட்டத்திற்கு தெரியுமா, தெரியாதா? இதைப்பற்றி உங்களுடைய கருத்து என்ன? திருவள்ளுவருக்கு தேவனுடைய வழிகளைப்பற்றிய அறிவு ஓரளவிற்கு இருந்ததா?
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்
இது தேவனுடைய வழியா, இல்லையா? உனக்குத் துன்பம் விளைவிக்கிறவனுக்கு சிறந்த வழி அவன் வெட்கப்படுமாறு அவனுக்கு நன்மை செய்து விடு.
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வாரைப் பொறுத்தல் தலை.
நிலமானது தன்னை வெட்டுகிறவனையே தாங்குவதுபோல உன்னை இகழ்பவனைத் தாங்கு, பொறுத்துக்கொள். இதுதான் மிகச் சிறந்தது. இவைகளெல்லாம் சிந்திக்கத் தெரிந்த ஒரு மனிதனுக்குத் தேவனுடைய வழிகள் தெரியும் என்பதைக் காட்டுகின்றது. இதை நானே இயற்கையாகச் சொல்கின்றேனா அல்லது தேவனுடைய வார்த்தையும் அப்படியே சொல்கின்றதா? “அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குக் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள்” (ரோமர் 2:14). நியப்பிரமாணமில்லாத திருவள்ளுவர் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கின்றபோது, நியாயப்பிரமாணமில்லாத திருவள்ளுவர் தனக்குத்தானே நியாயப்பிரமாணமாயிருக்கின்றார். இதை நான் மிகைப்படுத்திச் சொல்வதாக நீங்கள் நினைக்கின்றீர்களா? நியாயப்பிரமாணமென்பது என்ன? தேவனுடைய வழிகள். பிரமாணம் என்றால் சட்டம், விதி, வழி, கோட்பாடு. இவைகளெல்லாம் ஒன்றுதான்.
புறவினத்தாருக்குத் தேவனுடைய வழிகள் தெரிகின்றன. “அவர்களுடைய மனச்சாட்சியும்கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.” தேவன் அவர்களுக்கு ஒரு வெளிச்சத்தைக் கொடுக்கின்றார். துரதிருஷ்டவசம் என்னவென்றால் தேவனுடைய மக்களுக்கேகூட தேவனுடைய வழிகள் தெரிவதில்லை.
தேவனுடைய மக்களுக்குத் தேவனுடைய வழிகள் தெரியாததால் பொருளாதாரத்தைக்குறித்துத் தவறுகின்றார்கள். இரண்டு காரியங்கள் உண்டு பொருளாதாரத்தைக்குறித்தும், ஆசீர்வாதத்தைக்குறித்தும். ஒன்று தாராளமனதுடன் தேவனுக்கும் தேவனுடைய மக்களுக்கும் கொடுப்பது. இது இரண்டாவது பக்கம்தான். ஆனால், முதல் பக்கம் தேவன் இன்றைக்கு என்ன அளவு அளந்திருக்கிறாரோ அதற்குள் நாம் மனநிறைவோடு வாழ்ந்து நம்முடைய சொந்தக் கைகளினாலே வேலைசெய்து பிரயாசப்படுவது. இதை நாம் சொல்லிக்கொடுப்பது கிடையாது. நீ முதலில் தாராளமாய்க் கொடுக்க வேண்டாம். முதலாவது, இருப்பதற்குள் மனநிறைவாய் வாழக் கற்றுக்கொள். ஒரு சைக்கிள் வைத்துக்கொண்டு, ஒரேவோரு அறையில் ஒரேவொரு மின்விசிறியை வைத்துத்தான் வாழ வேண்டும் என்றால் வாழ வேண்டும். நாம் நமது சொந்தக் கைகளினாலே வேலைசெய்து பிரயாசப்படவேண்டும். கடன் வாங்காதே என்ற கோட்பாடும் தேவனுடைய வழிதான். நீ கடன் கொடுப்பாய் நீ கடன் வாங்க மாட்டாய் என்பது இல்லை. இது என்னுடைய இரண்டாவது குறிப்பு.
முதலாவது தேவனுடைய செயல்கள். இரண்டாவது தேவனுடைய வழிகள். முதலாவது தேவனுடைய மக்கள் தேவனுடைய வழிகளில் நடக்க வேண்டும். தேவனை அறியாத மக்கள்கூட தேவனுடைய வழிகளைத் தெரிந்துவைத்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது தேவனுடைய மக்கள் எவ்வளவு அதிகமாகத் தேவனுடைய வழிகளைத் தெரிந்து வைத்திருக்கவேண்டும்.
துர்ப்பாக்கியமான நிலைமை இன்றைக்கு! பொருளாதாரத்தைக்குறித்த மூடப்பழக்கவழக்கங்கள். ஒரு மூடப்பழக்கவழக்கம் என்னவென்றால், தேவனுடைய மக்கள் தரித்திரராய் இருப்பார்கள். இன்னொன்று “நீ எப்படி வாழ்ந்தாலும் சரி. நீ விசுவாசத்தோடு சொல்ல வேண்டும். இயேசுவுக்குள் நான் பணக்காரன். அவர் எனக்குக் கார் கொடுத்து விட்டார். மத்தேயு 21:21-22இல் உள்ளபடி (நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், இந்த அத்திமரத்திற்குச் செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப்பார்த்து; நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளையெல்லாம் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.* ஆகவே, நான் பணக்காரன். எனக்கு ஒரு கார் இருக்கிறது. எங்கே இருக்கிறது? இதோ இருக்கிறது. இப்படியே சொல்லிக்கொண்டிருந்தால் ஒரு நாளைக்கு எனக்குக் கார் வந்துவிடும்,” என்பதைப்போன்ற ஏமாற்று வஞ்சனை வேலை வேறு இல்லை!
உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? இயேசு கிறிஸ்து பகிரங்மாகவோ அல்லது மார்த்தாள் வீட்டிற்குப் போகும்போதோ லாசருவிடம், “லாசருவே! நீ என்ன இப்படி இருக்கிறாய்? கர்த்தர் எனக்குக் குதிரையைக் கொடுத்தார் என பத்துமுறை சொல். ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் காலை வணக்கம், பரிசுத்த ஆவியே. நீர் எனக்குக் குதிரையைக் கொடுத்ததற்காய் நன்றி என்று சொல்,” என்று சொல்லியிருப்பாரா? இவைகளையெல்லாம் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? தேவனுடைய மக்களுக்குக்கூட தேவனுடைய வழி தெரிவதில்லை.
அப்படியானால் “நாம் திருவள்ளுவர் சொன்னபடியே வாழ்ந்து விடலாமே!” என்று நாம் நினைக்கலாம். அப்படியானால் இயேசு கிறிஸ்து எதற்கு என்று நான் கேட்கிறேன். ஒரு மனிதன் திருக்குறள்படி வாழ்கின்றான் என வைத்துக்கொள்வோம். அவனுடைய வாழ்க்கை செழிப்பான வாழ்க்கையாக இருக்குமா, இருக்காதா? ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில்
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்
என்று சொல்லுகிறான்.
முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்
தெய்வத்தான் ஆகா எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
என்று. வருந்தி நீ உழைத்தால் கண்டிப்பாக உனக்குச் செல்வம் இருக்கிறது என்று சொல்கிறார். இதன்படி ஒருவன் வாழ்ந்தால் அவன் இந்த உலகத்தில் ஒரு வளமான வாழ்க்கை வாழலாமா, வாழமுடியாதா? இது என்னுடைய மூன்றாவது குறிப்பு.
தேவனுடைய நோக்கம் தம் மக்கள் வளமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதல்ல. தேவனுடைய நோக்கம் அவருடைய குமாரனாகிய கிறிஸ்துவின் குணம் படைக்கப்பட்ட ஒரு கூட்டம் மனிதர்களுக்குள் உருவாக்கப்பட வேண்டும். இது நம்முடைய சுவிசேஷம். இதுதான் புதிய ஏற்பாட்டினுடைய சுவிசேஷம். தேவன் தம்முடைய முதற்பேறான குமாரனுடைய சாயலை ஒரு கூட்டம் மனிதர்களுக்குள் உருவாக்க விரும்புகிறார். தேவனுடைய பார்வையிலே விலையேறப்பெற்ற பொக்கிஷம், செல்வம், இது ஒன்றுதான். இந்த உலகத்தில் நாம் சுகமாக வாழ்ந்தோம், நோய்நொடி இல்லாமல் வாழ்ந்தோம், செல்வத்தோடு வாழ்ந்தோம், கல்வியோடு வாழ்ந்தோம், என்பது ஒரு பொருட்டல்ல. ஆகவே மூன்றாவது நான் சொல்லுகிறேன்
தேவனுடைய செயல் ஒன்றாவது, தேவனுடை வழி இரண்டாவது, மூன்றாவது தேவனுடைய நபர். ஆண்டவாராகிய இயேசு கிறிஸ்து யோவான் 5:39, 40இல் இப்படிச் சொன்னார். “வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை.” வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்து, தேவனுடைய செயல்கள் என்ன, தேவனுடைய வழிகள் என்ன என்பவைகளையெல்லாம் கண்டுபிடிக்கலாம், ஆனால், ஜீவன் கிடையாது. எதற்கு ஜீவன் தேவை? தேவனுடைய குமாரனுடைய சாயலும், குணமும் நமக்குள் உருவாக்கப்பட வேண்டும் என்றால் வெறுமனே தேவனுடைய வழிகளினால் அந்தச் சாயலும், குணமும் உருவாக்கப்படுவதில்லை. ஓரளவுற்கு தேவனுடைய சாயல், தேவனுடைய குணம், நமக்குள் உருவாக்கப்படலாம். நான் சாயல் என்ற வார்த்தையைக்கூட பயன்படுத்த விரும்பவில்லை. ஒருவேளை அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு நன்மையும், ஆசீர்வாதமும் இருக்கலாம். அவருடைய குமாரனுடைய குணம், அவருடைய குமாரனுடைய சாயல், அவர்களுக்குள் உருவாக்கப்படுவதில்லை. தேவனுடைய குணமும், சாயலும், உருவாக்கப்படுவதற்கு தேவனுடைய ஜீவன் வேண்டும்.
கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார் என்ற ரோமர் 10:4 மிக முக்கியமான வசனம். இதற்கு என்ன அர்த்தமென்றால், நியாயப்பிரமாணத்தில் தேவன் தம்முடைய வழிகளைக் காண்பித்திருக்கிறார். ஆனால், எழுத்தைவைத்து தேவன் ஓரளவுக்குத்தான் தன்னைக் காண்பிக்க முடியும். எபிரெயரிலே பழைய உடன்படிக்கையைப்பற்றி எழுதியிருக்கிறது. பழைய உடன்படிக்கை பலவீனமுள்ளது. ஏன் பழைய உடன்படிக்கை பலவீனமுள்ளது? ஏனெனில் அது எழுத்தின்படியானது. எழுத்தைவைத்து தேவன் தாம் எப்படிப்பட்டவர் என்பதை எவ்வளவு காண்பிக்க முடியும்? என்னுடைய இருதயத்தில் உள்ளதை, என்னுடைய மனதில் உள்ளதை, நான் எப்படிப்பட்டவன் என்பதை என்னுடைய எழுத்தையும் பேச்சையும்வைத்து ஓரளவுக்கு நீங்கள் கண்டுபிடிக்கலாம். ஆனால், நான் எழுதுவதும் பேசுவதும் நானா அல்லது அதற்கும் மேலா? ஒரு மனிதன் எழுதுவதையும், பேசுவதையும்வைத்து சொல்லவே முடியாது. ஓரளவுக்கு அவன் எழுதுவதும், பேசுவதும் அவன் யார் என்பதைக் காட்டும். உள்ளத்தின் நிறைவினால் வாய் பேசும். அதினால் அவன் என்ன பேசுகிறான் என்பதைவைத்து மிக முக்கியமாகப் பேச்சுவாக்கில் சிதறிப்போகும் வார்த்தைகளைவைத்தும் அந்த இருதயத்தில், மனதில், என்ன இருக்கிறதென்று கண்டுபிடிக்க முடியும். ஆனாலும், உண்மையாகவே அந்த மனிதன் யார் என்று எழுத்தைவைத்து, பேச்சைவைத்து, யாரும் முற்றுமுடிய கண்டுபிடிக்க முடியாது.
இப்படியிருக்க தேவனை எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? அவருடைய நியாயப்பிரமாணத்தை வைத்து. நியாயப்பிரமாணம் தேவனை நிழலாகத்தான் காட்டமுடியும். எபிரெயர் 10:1 நியாயப்பிரமாணம் நன்மைகளின் நிழலாகத்தான் இருக்கிறது. அது பொருள் அல்ல நிழல். நியாயப்பிரமாணம் நன்மைகளின் பொருள் அல்ல, நன்மைகளின் நிழல். தேவன் எப்படிப்பட்டவர் என்பதை நிழல் வடிவத்தில்தான் நாம் நியாயப்பிரமாணத்தினால் பார்க்கமுடியும், அந்த நிழலே அவ்வளவு அற்புதமாக இருக்கின்றது! எந்தத் தேவன் இப்படிப்பட்ட ஒரு நியாயப்பிரமாணத்தைத் தரமுடியும்?
தேவன் சாப்பாட்டைக்குறித்தும் சில கோட்பாடுகளைக் கொடுத்திருக்கின்றார், கட்டடக்கலையைப்பற்றிச் சில கோட்பாடுகளைக் கொடுத்திருக்கின்றார், சுகாதாரத்தைப்பற்றிச் சில கோட்பாடுகளைக் கொடுத்திருக்கின்றார். மாடிவீடுகட்டும்போது உன்னுடைய வீட்டில் தடுப்புச்சுவர் இருக்க வேண்டும். அப்படிச் தடுப்புச்சுவர் இல்லாமல் கட்டி ஒருவன் இறந்துபோனால் அவனுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும். காலைக் கடன் கழிப்பதுகுறித்த சில வழியையும் அவர் சொல்லிவைத்திருக்கின்றார். “தேவன் உன்னை நேசிப்பதுபோல உன் அயலானையும் நேசிப்பாயாக,” என்று உயர்ந்த வழி மட்டும் சொல்லுவதில்லை. உயர்ந்த வழியும் இருக்கும், சிறிய வழியையும் அவர் சொல்லி வைத்திருக்கிறார். அறுவடை செய்யும்போது கடைசியில் சிந்துகின்ற தானியங்களை எடுக்காதே. அதை அப்படியே விட்டுவிடு, ஏழைகளுக்கு அது உதவும் என்றும் சொல்லியிருக்கின்றார். இவைகளெல்லாம் பழைய ஏற்பாட்டிலே உண்டு. போரடிக்கிற மாட்டின் வாயை கட்டாயாக. அப்படியானால் தேவன் ஆடு மாடுகளைக்குறித்து மிகவும் அக்கறையுள்ளவராக இருக்கின்றாரா? இவைகளையெல்லாம்பற்றி தேவன் நமக்குக் கட்டளைகளைக் கொடுக்க வேண்டுமா? காலைக்கடன் கழிக்க பாளயத்திற்குப் புறம்பே போக வேண்டும், கையிலே ஒரு குச்சி வைத்திருக்க வேண்டு;ம், மணலைப் போட்டு மூடிவிட்டு வரவேண்டும்.
ஏழைகளைக்குறித்து கவனமாயிரு. தானியங்களை விட்டுவிடு. உன்னுடைய தேசத்தில் ஏழைகள் உண்டு, தரித்திரர் உண்டு, அவர்கள் வாழட்டும் என்பதெல்லாம் நம்முடைய தேவன் எப்படிப்பட்டவர் என்பதைக் காட்டுகிறது. ஆனாலும், இது நிழல்தான். உண்மையிலேயே அது பொருள் அல்ல, நிழல்தான்.
அப்படியானால் பொருள் எங்கே இருக்கிறது? அந்தப் பொருள் யார்? நாம் அதை அறிவோம் கொலோசெயர் 2:9 சொல்லுகிறது. “தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது.” அல்லது கொலோசெயர் 2:17. “இவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது. அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.” 16ஆம் வசனத்திலே எவைகளைப்பற்றி என்று குறிப்பிட்டிருக்கிறது. “மாதப்பிறப்பைக்குறித்தாவது, போஐனத்தைக்குறித்தாவது, பானத்தைக்குறித்தாவது ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.” இவைகளெல்லாம் எடுத்துக்காட்டுகள். நியாயப்பிரமாணத்தை அல்லது தேவனுடைய வழிகளை திருவள்ளுவர் கண்டுபிடித்திருந்தாலும் சரி அல்லது புத்தர் கண்டுபிடித்திருந்தாலும் சரி அல்லது கன்ஃபூசியஸ் கண்டுபிடித்திருந்தாலும் சரி அல்லது சாக்ரடீஸ் கண்டுபிடித்திருந்தாலும் சரி. தேவன் எப்படிப்பட்டவர் என்பதை எல்லா மக்களும் தடவித்தடவிப் பார்க்கத்தான் செய்கின்றார்கள். அவர்கள் எந்த அளவுக்கு முழுஇருதயத்தோடு தடவித்தடவித் தேடுகிறார்களோ, அந்த அளவுக்குத் தேவன் அவருடைய வழிகளை நிழலாக அவர்களுக்குக் காண்பித்திருக்கிறார். அதைத் தேவனே செய்கிறார். அந்த வழிகளின்படி மக்கள் ஓரளவுக்கு வாழ்கிறார்கள். ஆனால், அவைகள் நிழல்கள்தானேதவிர அதனுடைய பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.
எனவே, தேவனுடைய நித்திய நோக்கமும், நித்தியத் திட்டமும் தேவனுடைய செயல்களை மட்டும் காண்பிப்பதல்ல. தேவனுடைய வழிகளை மட்டும் வெளிப்படுத்துவதல்ல, தேவனுடைய நபர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து யார் என்பதைக் காண்பிப்பதற்கும்தான். மாற்கு 12:33இல் வாசிக்கிறபடி “முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப்பலத்தோடும், அவரிடத்தில் அன்பு கூருகிறதும், தன்னிடத்தில் அன்புகூருகிறதுபோல் பிறனிடத்தில் அன்புகூருகிறதுமே சர்வாங்கதகனம் முதலிய பலிகளைப்பார்க்கிலும் முக்கியமாயிருக்கிறது.” அவனுக்கு தேவனுடைய வழி தெரிந்திருக்கிறது. ஆனால், அவன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றிப்போனான் என்று எழுதப்படவில்லை.
தேவனுடைய நபர் இயேசு கிறிஸ்துதான் ஊனுருவாக வந்திருக்கிறார். புலப்படுகிற தேவனாக அவர் இருக்கிறார். மரியாள் விலையேறப்பெற்ற தைலத்தைக் கொண்டுவந்து ஆண்டவராகிய இயேசுவின்மேல் ஊற்றுகிறாள். உடனே, அவருடைய சீடர்கள் அதைக் கண்டு கோபப்பட்டு, “இந்த வீண் செலவு எதற்கு? இந்த நளததைலத்தை உயர்ந்த விலைக்கு விற்று அந்தப் பணத்தைத் தரித்திரருக்குக் கொடுக்கலாமே?” என்று சொன்னார்கள். இது தேவனுடைய வழியா இல்லையா? இது தேவனுடைய வழிதானே. இப்படி உடைத்து ஊற்றின தைலமெல்லாம் என்னவாயிற்று? வீணாயிற்று. அப்படியானால் அவர்கள் சொல்வது சரிதான் இல்லை. இதை விற்றுத் தரித்திரருக்குக் கொடுத்திருக்கலாம். எவ்வளவோபேர் பணமில்லாமல் இருக்கிறார்கள். எவ்வளவோபேர் பசியோடு இருக்கிறார்கள், வீடு இல்லாமல் இருக்கிறார்கள். துணி இல்லாமல் இருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது இவள் என்ன தலைமேல் ஊற்றிவிட்டுப் போகிறாள்! இது எதைக் காண்பிக்கிறதென்றால் தேவனுடைய வழியைவிட ஒன்று உண்டு, தேவனுடைய நபராகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. எழுத்தின்மூலமாகத் தேவன் தன்னைப்பற்றி வெளிப்படுத்த முடியாத ஒன்றை அவர் இயேசு கிறிஸ்துவில் மட்டும்தான் வெளிப்படுத்த முடியும். அந்த இயேசு கிறிஸ்துவோடு ஒன்றாய் இணைக்கப்பட்டிருக்கிற மக்கள் தேவனை அந்த அளவுக்கு நெருக்கமாக தேவனை அறிந்துகொள்ள முடியும். அது தேவனுடைய செயல்களை அறிந்துகொள்வதல்ல, தேவனுடைய வழிகளை அறிந்துகொள்வது மட்டுமல்ல, தேவனுடைய நபரையே அறிந்துகொள்வது.
அருமையான பரிசுத்தவான்களே, இதைக்குறித்து நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். தேவனுடைய செயல்கள், தேவனுடைய வழிகள், தேவனுடைய நபர். தேவனுடைய நோக்கம் தம்முடைய பிள்ளைகளுடைய வாழ்விலே அற்புதங்களைச் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பதா? அவைகள் தேவனுடைய செயல்கள்தான். தேவனுடைய நோக்கம் அவருடைய குமாரனுடைய குணத்தையும், சாயலையும் அவருடைய பிள்ளைகளுக்குள் உருவாக்க வேண்டும். தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடு நாம் ஒன்றாயிருந்து, அந்த நபரை அறிய அறிய எந்த எழுத்தும் தொடமுடியாத பகுதிகளாகிய நமக்குள் உண்டு. எந்தக் கட்டளையும் தன்னைக் குற்றப்படுத்த முடியாத அளவிற்கு ஒரு மனிதன் தன்னை வைத்துக்கொள்ளலாம். முடியுமா, முடியாதா? ஆனால், தேவனுடைய குமாரன் தேவனுடைய நபர் அந்த இயேசு கிறிஸ்துவோடு ஒரு மனிதன் தன்னை இணைத்துக்கொள்ளும்போது, “ஆ! இது தேவனுக்கு ஒவ்வாதது! இது தேவனுக்கு உகந்ததல்ல! இது தேவனுக்கு முற்றிலும் முரணானது, மாறுபட்டது” என்பதைப் பரிசுத்த ஆவியானவர் நமக்கு உணர்த்த முடியும். இப்படிப்பட்ட நாட்டமுள்ளவர்களாக நாம் இருப்போமாக.
என்னிடத்திலே இருக்கிற எல்லாவற்றையும் உங்களால் சொல்லமுடியாது. நானும் உங்களிடத்தில் இருக்கிற எல்லாவற்றையும் சொல்லமுடியாது. மறைவாக என்று நான் சொல்லும்போது ஒழிப்பிடத்தில் செய்கிற குற்றத்தை நான் சொல்லவில்லை. எந்த மனிதனாலும் அதை அறிய முடியாது. என்னாலும் அதை அறிய முடியாது. ஆனால், தேவனுடைய செயல்கள், தேவனுடைய வழிகள் இவைகளுக்கும் அப்பாற்பட்டு தேவனுடைய நபராகிய கிறிஸ்துவோடு ஒரு மனிதன் ஒன்றாயிருக்க நாடும்போது இப்படிப்பட்ட மறைவான, உள்ளான பகுதிகளில்கூட பரிசுத்த ஆவியானவர் தேவனை நமக்கு வெளிப்படுத்த முடியும்.
இப்பொழுது மேற்கோள் காட்டின வசனங்களையெல்லாம் நீங்கள் கொஞ்சம் ஆழ்ந்து படித்தால் அது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நம்முடைய வாழ்க்கை தேவனுக்குமுன்பாகவும் நம்முடைய குடும்பத்திற்கும், நம்முடைய பிள்ளைகளுக்கும், மற்ற மனிதர்களுக்கும் மிகவும் கனிநிறைந்த வாழ்க்கையாக இருக்கும் ஆமென்.