Transcrsibed from a message spoken in May 2015 in Chennai
By Milton Rajendram
ஒரு கூட்டம் மனிதர்களுக்குள் கிறிஸ்துவை உருவாக்கி அவர்கள்மூலமாய்க் கிறிஸ்துவை வெளியாக்குவது தேவனுடைய நோக்கம், தேவனுடைய திட்டம். அதற்காக,
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையிலே நாம் அறிந்த, நாம் வாழ்ந்த, நமக்குள் உருவாக்கப்பட்ட அந்தக் கிறிஸ்து மகிமையாக முற்றுமுடிய வெளியாக்கப்படுவார். ஆனால், அந்த நாள் திடுதிப்பென்று நடப்பதில்லை. நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் ஓரளவுக்கு நாம் கிறிஸ்துவைக் காண்கின்றோம், கிறிஸ்துவால் வாழ்கின்றோம், அந்தக் கிறிஸ்து நமக்குள் உருவாக்கப்படுகிறார். In measure, we manifest Christ in our life to those around us. ஏதோ ஒரு குறிப்பிட்ட விதத்திலே நாம் வாழ்கின்ற சூழ்நிலையிலே நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு இந்தக் கிறிஸ்துவை வெளியாக்குகின்றோம். கிறிஸ்துவை வழங்குகின்றோம். இது தேவனுடைய நோக்கம். தேவனுடைய திட்டம். எல்லாவற்றிலும் கிறிஸ்து முதன்மையானவராக இருக்க வேண்டும் அல்லது முதலிடம் பெற வேண்டும்.
இரண்டாவது, தேவனுடைய நோக்கத்தையும், திட்டத்தையும் நிறைவேற்றுவதற்கு தேவனுடைய வழியாகிய கிறிஸ்து என்ற நபருடைய மகத்துவத்தையும், மேன்மையையும் நாம் காண வேண்டும். வேறு எந்த வழியையும் தேவன் வைத்திருக்கவில்லை. ஒரு நியாயப்பிரமாணத்தைக்கொண்டோ, ஒரு சடங்காச்சாரத்தைக்கொண்டோ தேவன் இந்த நோக்கத்தையும், திட்டத்தையும் மனிதர்களுடைய வாழ்க்கையில் நிறைவேற்றுவதில்லை. இது தேவனுடைய வழி இல்லை. தேவனுடைய வழி கிறிஸ்து என்ற நபர். அவர் புலப்படுகிற தேவன். கிறிஸ்து, ஒரு மாபெரும் மனினதாக மாறினார். அதன் விளைவாக ஒரு மாபெரும் பணியைச் செய்துமுடித்தார். சிலுவை மரணம் உயிர்த்தெழுதல்மூலமாக ஒரு புதிய மனிதனை உண்டாக்கினார், ஒரு புதிய மனித இனத்தை தோற்றுவித்தார். தேவன் தம்முடைய குமாரனை இப்படிப்பட்ட ஒரு சிலுவையின் பாதையிலே மனிதனாக்கி, மனித வாழ்க்கை வாழச் செய்து, சிலுவை, உயிர்த்தெழுதல்வழியாகச் சென்றபின்பு, தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு தம்முடைய குமாரனாகிய கிறிஸ்துவைத்தவிர வேறு எந்த வழியையும் தெரிந்தெடுத்துக்கொள்வதில்லை. தேவன் மனிதர்களைப் பொறுத்தவரை தம்முடைய எல்லா இடைப்பாடுகளையும் தம்முடைய குமாரனாகிய கிறிஸ்துவில் மட்டுமே வைத்திருக்கிறார். அவருடைய குமாரனாகிய கிறிஸ்துவுக்கு வெளியே மனிதர்களோடு இடைப்படுவதற்கும், மனிதர்களுக்குக் கொடுப்பதற்கும் அவரிடத்தில் வேறு ஒன்றும் இல்லை. கிறிஸ்துவுக்குப் பதிலீடாக உள்ள எல்லாவற்றிற்கும் நாம் விலக வேண்டும். கிறிஸ்து போதுமானவர்.
இப்போது நான் பகிர்ந்துகொள்ள இருக்கின்ற மூன்றாவது குறிப்பு, நம்முடைய நடைமுறை வாழ்க்கையோடு தொடர்புடையது. தேவனுடைய நிரப்பீடு அல்லது தேவனுடைய ஏற்பாடு. Provision. தேவனுடைய ஏற்பாடு அல்லது தேவனுடைய நிரப்பீடு-கிறிஸ்துவின் போதுமான நிறைவு. Sufficiency of Christ. கிறிஸ்துவின் போதுமானதன்மை. நம்முடைய வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளிலும் தேவனுடைய நோக்கத்தின்படி, தேவனுடைய திட்டத்தின்படி, வாழ்வதற்கு கிறிஸ்து போதுமானவர். இது நம்முடைய thesis. நமக்கு முன்சென்ற தேவ மக்களுடைய வெளிப்பாடும் இதுதான். பல நூறு, பல ஆயிரம் ஆண்டுகள் நமக்குமுன்பு வாழ்ந்த விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாமுடைய வெளிப்பாடும் இதுதான். யெஹோவாயீரே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும். It will be provided in the mountain of the Lord. ஆபிரகாம் தன்னுடைய மகனாகிய ஈசாக்கைப் பலியிடுவதற்காகப் போகிறான்; பலிக்குத் தேவையான விறகை ஈசாக்கையே தூக்கி வரச்செய்கிறான்; போகிற வழியிலே ஈசாக்கு தன்னுடைய தகப்பனாகிய ஆபிரகாமைப் பார்த்து, “அப்பா, விறகு இருக்கிறது, கத்தி இருக்கிறது, பலி ஆடு எங்கே?” என்று வினவுகிறான். “கர்த்தர் அதைப் பார்த்துக்கொள்வார்,” என்று அதற்கு ஆபிரகாம் சொல்கிறான். “The lord shall see to it” or “It will be provided by the Lord”. “கர்த்தர் அதை ஏற்பாடு செய்வார். கர்த்தர் அதை வழங்குவார். கர்த்தர் அதை நிரப்பீடு செய்வார்.” அதற்குரிய எபிரெய வார்த்தை Jehovah Jireh.
நம்முடைய வாழ்க்கையின் பல்வேறு சூழ்நிலையில் “அது இருக்கிறது, இது இருக்கிறது; ஆனால், அது இல்லையே! இது இல்லாமல் நான் எப்படி வாழப்போகிறேன்? இது இல்லாவிட்டால் என்னுடைய வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்துவிடுமே! இது இல்லையென்றால் அதற்குப்பிறகு வாழ்க்கை என்பதற்கு வழி இல்லை அல்லது அர்த்தம் இல்லை,” என்று ஒருவேளை நாம் நினைக்கலாம். “எல்லாம் முடிந்து விட்டது” என்ற நிலைமை வரும்போது, “தேவன் அதற்கு ஏற்பாடு செய்வார் அல்லது ஏற்பாடு செய்திருக்கிறார்,” என்பதுதான் அதற்கு தேவனுடைய பதில்.
He giveth more grace when the burdens grow greater என்ற பாடலைப்பற்றி ஒரு homework தருகிறேன். இதை இயற்றியவர் யார், அவருடைய வாழ்க்கை என்ன, எப்படி இருந்தது, எந்த வாழ்க்கைப் பின் னணியில் அவர் இந்தப் பாடலை இயற்றினார் என்பதை நீங்கள் கண்டுபிடிக்குமாறு நான் உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நாம் பாடுகின்ற பாடலெல்லாம் வானத்திலிருந்து குதிக்கவில்லை. ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். அவைகள் புலவர்கள் நூல்நிலையத்தில் உட்கார்ந்து தங்களுடைய கவிதைத் திறனைக் காட்டுவதற்காக எழுதிய பாடல்கள் இல்லை. நாம் பாடுகின்ற பல பாடல்கள் தேவனுடைய மக்கள் வாழ்க்கைச் சூழலில், வாழ்க்கைச் சூளையில் (வாழ்க்கை என்பது ஒரு சூளை) பிறந்த பாடல்கள். அந்த வாழ்க்கைச் சூளையில் சென்ற தேவனுடைய மக்களுடைய அனுபவத்தோடு நம்முடைய அனுபவத்தையும் சேர்த்து, அவர்கள் அனுபவத்தை, அவர்கள் வாழ்ந்த கிறிஸ்துவை நாம் பாடலில் போட முயற்சி செய்கிறோமேதவிர பாடலை மொழிபெயர்க்கிற வேலையை நான் விட்டுவிட்டேன்.
பாரங்கள் கூடும், உம் கிருபையும் கூடும்! பாடுகள் சேரும், உம் பெலனும் சேரும்! சோர்வு பெருகும், உம் பரிவும் பெருகும்! சோதனைகள் சூழும், உம் ஓய்வும் சூழும்!
உம் அன்பின் எல்லையை, அருளின் அளவை
ஆற்றலின் வரம்பைக் கண்டவர் யார்?
இயேசுவில் முடிவில்லா உம் செல்வங்களை
ஈகின்றீர், ஈகின்றீர், மேலும் ஈகின்றீர்.
நம் தாங்கும் திறன் தீர்ந்து வற்றிப்போகையில், நம் பெலன் பாதியில் இற்றுப்போகையில், பூவின் வளங்கள் எல்லாம் அற்றுப்போகையில், நம் தந்தை வழங்கத் தொடங்குகின்றார்!
தேவனின் வளங்கள் உன் தேவையை மிஞ்சும், அஞ்சாதே! ஈவதே தந்தையின் நெஞ்சம்! சாய்ந்துகொள், தாங்குவார்! உன் பாரங்கள் கொஞ்சம்! தந்தையின் நித்திய புயம் உன் தஞ்சம்.
நம்முடைய வாழ்வின் எல்லாச் சூழல்களுக்கும் தேவன் ஏற்பாடு செய்திருக்கிறார், போதுமான ஏற்பாடு செய்திருக்கிறார். போதுமான ஏற்பாடு என்றால் “தப்பித்தோம் பிழைத்தோம்” என்ற முறையில் நாம் நம்முடைய வாழ்க்கையை முடிக்கப்போவது இல்லை. “அப்பாடா! நல்லகாலம்! எப்படியோ இந்தச் சூழ்நிலையிலிருந்து தப்பித்தோம்,” என்பதல்ல. போதுமான, நிறைவான, sufficient provision God has provided. தேவனுடைய போதுமான நிறைவு கிறிஸ்துவில் இருக்கிறது. போதுமான நிறைவு கிறிஸ்துவாகவே இருக்கிறார்.
இதை நான் மறுபடியும் சொல்கிறேன். பேச்சு சாமர்த்தியத்துக்காக நான் இதைச் சொல்லவில்லை. ஆதியாகமம் தொடங்கி திருவெளிப்பாடுவரை தேவனுடைய வேதாகமம் முழுவதும் தேவன் இந்த ஒன்றேவொன்றைத்தான் நிரூபிக்க முயற்சி செய்கிறார். அவருடைய குமாரனாகிய கிறிஸ்து மனித வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளுக்கும், எல்லாத் தேவைகளுக்கும், எல்லா நெருக்கங்களுக்கும், எல்லா வருத்தங்களுக்கும், எல்லாவற்றிற்கும் போதுமான நிறைவாக இருக்கிறார், ஆமென்.
மீண்டும் இதை உங்கள் மனதில் பதிப்பதற்காக நான் இரண்டு குறிப்புகளைத்தான் சொல்லப் போகிறேன். முதலாவது குறிப்பு, கிறிஸ்து எல்லா நிழல்களின் மெய்ப்பொருளாயிருக்கிறார். மெய்ப்பொருள் என்ற வார்த்தை வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. யோபு அதைப் பயன்படுத்துகிறார். “நீ ஞானமில்லாதவனுக்கு எப்படி உசாவுதுணையாயிருந்து, மெய்ப்பொருளைக் குறைவற அறிவித்தாய்?” (யோபு 26:3) அல்லேலூயா! மெய்ப்பொருள் என்பதற்கு நாம் நிஜம் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தலாம்.
முதலாவது குறிப்பு, எல்லா நிழல்களின் மெய்ப்பொருள் கிறிஸ்து. எல்லா நன்மைகளின் நிழலுக்கும், நாம் பழைய ஏற்பாட்டிலே எடுத்துக்காட்டுகளைப் பார்க்கிறோம். அந்த எல்லா நன்மைகளின் நிழலுக்கும் கிறிஸ்துவே மெய்ப்பொருளாக இருக்கிறார் அல்லது நிஜமாக இருக்கிறார் அல்லது realityயாக இருக்கிறார்.
இரண்டாவது குறிப்பு, நம் வாழ்க்கையின் எல்லா நெருக்கங்களும், வருத்தங்களும், இல்லாமைகளும் கிறிஸ்துவை அந்தத் தேவைக்கு நிரப்பீடாக நமக்குக் காண்பிப்பதற்காகத் தேவனால் ஏற்பாடு செய்யப்படுகின்றன. நம் வாழ்க்கையின் எல்லாச் சூழ்நிலைகளும், எல்லா இல்லாமைகளும் கிறிஸ்து அந்தச் சூழ்நிலைக்கு, அந்த இல்லாமைக்குப் போதுமானவர் என்பதை நிரூபிப்பதற்காக அல்லது நாம் அனுபவிப்பதற்காக அல்லது நம் அனுபவத்தில் நிரூபிப்பதற்காக நம் வாழ்க்கையிலே தேவன் ஏற்பாடு செய்கிறார்.
முதலாவது, “எல்லா நன்மைகளின் நிழல்களுக்கும் கிறிஸ்து நிஜமாக இருக்கிறார், மெய்ப்பொருளாக இருக்கிறார்,” என்று சொன்னேன். இரண்டாவது, நம் வாழ்க்கைச் சூழ்நிலையின் எல்லா இல்லாமைகளையும், கிறிஸ்து அந்தச் சூழ்நிலைக்கும், அந்தத் தேவைக்கும் போதுமானவர் என்பதை நிரூபிப்பதற்காக, தேவன் நம் வாழ்க்கையிலே ஒழுங்குபண்ணுகிறார், அமைக்கிறார், ஏற்பாடு செய்கிறார். நம்மில் பலர் உங்களுடைய வாழ்க்கையின் அனுபவத்தில் இதைச் சந்தித்திருப்பீர்கள்.
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து எல்லா நன்மைகளின் மொத்த உருவமாய், ஊனுருவாய், உள்ளார் என்று வேதாகமம் சொல்கிறது. தேவன் மனிதனுக்கு என்னென்ன நன்மைகளைத் தர விரும்புகிறாரோ அந்த எல்லா நன்மைகளின் மொத்த வடிவமாக அல்லது (embodied) ஊனுருவாக, பார்க்கக்கூடிய வடிவமாக, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இருக்கிறார். நீங்கள் என்ன நன்மைகளை வேண்டுமானாலும் குறிப்பிடலாம். அந்த எல்லா நன்மைகளும் கிறிஸ்துவில் வாசமாயுள்ளன. தேவன் மனிதனுக்கென்று ஏற்பாடு செய்திருக்கின்ற எல்லா நன்மைகளின் மொத்த வடிவம், ஊனுரு, கிறிஸ்து. கிறிஸ்துவின் அளவற்ற செல்வங்களை, ஆராய்ந்துமுடியாத அளவற்ற செல்வங்களை, புறவினத்தாரிடத்தில் நற்செய்தியாய் அறிவிக்கும்பொருட்டுத் தனக்குக் கிருபை அளிக்கப்பட்டுள்ளதாக பவுல் கூறுகிறார் (எபே. 3:8). “To preach as good news the unsearchable riches of Christ”. Unsearchable, untraceable, inexhaustible riches of Christ. “நற்செய்தி” என்பது “கிறிஸ்துவே” என்று பவுல் சொல்கிறார். கிறிஸ்து செய்த ஏதோவொன்றல்ல நற்செய்தி. கிறிஸ்து தந்த ஏதோவொன்றல்ல நற்செய்தி. கிறிஸ்துவே நற்செய்தி. “அது அவ்வளவு பரவசமாக இல்லையே! கிறிஸ்து குணமாக்குகிறார், கிறிஸ்து விடுவிக்கிறார் என்பது பரவசமான நற்செய்தி. தேவன் கிறிஸ்துவையே நமக்கு வழங்கியிருக்கிறார் என்பது அப்படி என்ன பெரிய நற்செய்தி?” என்று ஒருவேளை பலர் கேட்கலாம்.
இந்தக் கிறிஸ்துவில் எப்படிப்பட்ட செல்வங்களும், வளங்களும் உள்ளன? Riches and resources. கிறிஸ்துவிலே செல்வங்கள் உள்ளன. ஐசுவரியங்கள் உள்ளன. எப்படிப்பட்ட செல்வங்கள்? எப்படிப் பட்ட ஐசுவரியங்கள்? ஆராய்ந்து அறிந்து முடியாத செல்வங்கள், தீர்ந்துபோகாத செல்வங்கள் கிறிஸ்துவில் உள்ளது. இந்த செல்வங்களைப்பற்றி நாம் அறிந்துகொள்வதற்கு நம்மிடத்தில் ஒரு ஆவல் இருக்க வேண்டும். அது என்ன செல்வங்கள்? நான் சொல்கிறேன். மனிதனுடைய எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்கின்ற செல்வங்கள். அவைகள் ஆவிக்குரியவைகளாக இருக்கலாம் அல்லது இந்த உலகத்திற்குரியவைகளாக இருக்கலாம். எல்லாவிதமான ஆவிக்குரிய உடலுக்குரிய, இகத்திற்குரிய பரத்திற்குரிய, பூமிக்குரிய பரத்திற்குரிய, இம்மைக்குரிய மறுமைக்குரிய, இந்த உலகத்திற்குரிய நித்தியத்திற்குரிய எல்லாச் செல்வங்களும் இந்தக் கிறிஸ்துவில் நிறைவாய் இருக்கிறது.
தேவனுடைய வழி, ஒரு உபாயமோ, ஒரு யுக்தியோ அல்ல என்று சொன்னேன். தேவனுடைய வழி ஒரு நபர், ஒரு மனிதன். நாம் தேவனிடத்தில் ஆயிரம் பிரச்சனைகளோடு போகலாம். “என்னுடைய கணவன் ஒரு பிரச்சனை…என்னுடைய மனைவி பிரச்சனையாக இருக்கிறாள்…என்னுடைய பிள்ளைகள் பிரச்சனையாக இருக்கிறார்கள்…என்னுடைய பெற்றோர்கள் பிரச்சனையாக இருக்கிறார்கள்… என்னுடைய உடல்நலமின்மை பிரச்சனையாக இருக்கிறது…என்னோடு வேலைபார்க்கிற இடத்திலே எல்லாமே பிரச்சனைதான்…மேலே இருப்பவர்க்கு ஒரு பிரச்சனை…கீழே இருப்பவர்க்கு ஒரு பிரச்சனை…பக்கத்தில் இருப்பது பிரச்சனை…முன்னால் இருப்பது பிரச்சனை…பின்னால் இருப்பது பிரச்சனை. கொஞ்சம் ஆர அமர பார்த்தால் உலகத்திலே என்னைத் தவிர எல்லாருமே எனக்குப் பிரச்சனைகள்தான்,” என்று சொல்லலாம். ஆனால் கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது. உலகத்திலே ஒரேவொரு பிரச்சனை தான் உண்டு. அது யார்? நான்தான். நாம் ஆயிரம் பிரச்சனைகளோடு கர்த்தரிடத்தில் போகலாம். ஆனால், கர்த்தர் ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு தீர்வு தரமாட்டார். கர்த்தர் நம்முடைய எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஒட்டுமொத்தமாக ஒரேவொரு தீர்வைத் தருவார். “இதோ உனக்கு ஒரு தீர்வு, என்னுடைய குமாரனாகிய கிறிஸ்து,” என்று ஒரேவொரு தீர்வைத் தருவார். அதை வாங்கிக்கொண்டு நாம், “அல்லேலூயா” சொல்வோமா? அல்லது “நான் ஒரு பிரச்சனையோடு போனால், இவர் என்னமோ என்னுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சொல்லி சப்பென்று ஆக்கிவிட்டாரே,” என்று சொல்வோமா?
இதை நான் விளக்க விரும்புகிறேன். கிறிஸ்துவுக்குள் ஆராய்ந்தறியமுடியாத, தீர்ந்துபோகாத, unsearchable, untraceable, inexhaustible, past our understanding செல்வங்களும், வளங்களும் உள்ளன என்று எபேசியர் 3:8 தெள்ளத்தெளிவாகச் சொல்கிறது.
“கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாய் இருக்கிறார்” (கொலோ. 3:11). Christ is all and in all. நாம் ஒரு புதிய மனித இனத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவேளை பார்வைக்கு அப்படித் தோன்றாமல் போகலாம். ஆனால், உள்ளாக நாம் புதிய மனித இனத்தைச் சேர்ந்தவர்கள். நம்மைப் பார்ப்பவர்கள் நாம் அவர்களைப்போன்ற ஒரு மனித இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று ஏமாந்துபோவார்கள். இந்தப் புதிய மனித இனத்திலே அல்லது இந்தப் புதிய மனிதனிலே “கிரேக்கனென்றுமில்லை, யூதனென்றுமில்லை, விருத்தசேதமுள்ளவனென்றும் விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, நாகரிகமுள்ளவனென்றுமில்லை நாகரிகமில்லாதவனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை. கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்” (கொலோ. 3:11). இந்தப் புதிய மனிதனிலே நாகரிகம் இல்லாத மனிதர்களும் உண்டு. நாகரிகமுள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு என்று நாம் எதையும் தீர்மானிக்கவோ, முடிவுபண்ணவோ முடியாது.
நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது இரட்சிக்கப்பட்டேன். சில சமயம் கேம்புக்குப் போவதுண்டு. உடன் தங்கியிருக்கும் சில சகோதரர்கள் மற்றவர்களுடைய சோப்பை எடுத்துப் பயன்படுத்துவார்கள். “என்னதான் சகோதரர்களாக இருந்தாலும் கேம்ப்பிற்கு வரும்போது சோப்பு கொண்டுவரக் கூடாதா? சரி, சோப்பு கொண்டுவராவிட்டால்கூட பரவாயில்லை. மற்றவர்களுடைய சோப்பைக் கேட்டாவது எடுக்கக்கூடாதா!” என்று நான் நினைத்தது உண்டு. இன்றைக்கு அந்த சகோதரர்களெல்லாம் பெரிய பேராசிரியர்களாக இருக்கிறார்கள். ஆனால், அந்தச் சகோதரன் இன்னும் மாறவே இல்லை. புறம்பாக அவர் அப்படி இருக்கலாம். உள்ளாக அவர் கிறிஸ்துவால் நிறைந்த ஒரு மனிதன். அவர்மூலமாக எத்தனையோபேர் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை அறிந்திருக்கிறார்கள்.
இந்தப் புதிய மனிதனில் நாகரிகமுள்ளவனென்றுமில்லை, நாகரிகமற்றவனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் இருக்கிறார். ஆச்சரியம்! கிறிஸ்து எல்லாமுமாக இருக்கிறார். Christ is all.
கிறிஸ்துவே எல்லாமும்! எல்லாமுமாய் இருந்தார், எல்லாமுமாய் இருக்கிறார், எல்லாமுமாய் இருப்பார். கிறிஸ்துவே எல்லாமும் என்று இயேசுகிறிஸ்துவைப்பற்றி இப்படிச் சொல்லலாம். அவருக்குக் காலக்குறிப்பு போட வேண்டிய அவசியம் இல்லை. He is the great I am.
“போஜனத்தையும் பானத்தையுங்குறித்தாவது, பண்டிகை நாட்களையும், மாதப்பிறப்பையும், ஓய்வுநாட்களையுங்குறித்தாவது ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக. அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது. அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது” (கொலோ. 3:16, 17). இந்த வசனத்தை நீங்கள் தனியாக இருக்கும்போது பல தடவைகள் வாசித்து, தேவனிடத்தில் ஜெபிக்க வேண்டும். Information is second-hand. Wisdom is always first-hand. “இப்படியிருக்க, நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய் மாத்திரம் இருக்கிறபடியால், வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது” (எபி. 10:1).
இந்த இரண்டு வசனங்களிலே ஒரு கருத்தை நாம் பார்க்கிறோம். நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல் அவைகளின் நிழலாய் மாத்திரம் இருக்கிறது. இந்த ஒரேவொரு கூற்றை உங்கள் மனதிலே பதித்துக்கொள்ளுங்கள். நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல் அல்லது மெய்ப்பொருளாயிராமல் நிழலாய் மாத்திரம் இருக்கிறது. நியாயப்பிரமாணத்தில் கூறப்பட்டவைகள் நிழல்கள்தானேதவிர பொருள் அல்ல. ஒரு புகைப்படம் என்பது நிழல். மனிதன் ஒரு மெய்ப்பொருள். வெயிலிலே நாம் ஒரு நிழலைப் பார்க்கலாம். அந்த நிழலுக்குரிய பொருளானது எங்கோ தூரத்திலே நிற்கிற ஒரு மரம். அதுபோல கிறிஸ்துதான் மெய்ப்பொருள்.
இந்த மெய்ப்பொருளின் நிஜத்தினை அவர் பழைய ஏற்பாட்டிலே அல்லது பழைய உடன்படிக்கையிலே அல்லது நியாயப்பிரமாணத்திலே காட்டுகிறார். போஜனம், பானம், பண்டிகைநாட்கள், ஓய்வுநாட்கள், மாதப்பிறப்பு ஆகிய எல்லாமே நிழல்கள்தான். இவை மெய்ப்பொருள் அல்ல. போஜன பானங்கள் ஒரு நிழல். உண்மையான போஜனமும், உண்மையான பானமும் கிறிஸ்துவே.
கிறிஸ்துவால் வாழ முடியும் என்கிற மாபெரும் உண்மையை கண்டுபிடித்தவர் யார்? நீங்கள் ஒவ்வொரு வரும். கிறிஸ்துவால் வாழ முடியும் என்கிற மாபெரும் உண்மையைக் கண்டுபிடித்தவர் யார்? பவுல் கண்டுபிடித்தார் என்று நான் கடன்வாங்கின உண்மையைச் சொல்லவில்லை. பவுல் கண்டுபிடித்தார். நானும் கண்டுபிடித்தேன், ஓரளவுக்கு. பவுல் கண்டுபிடித்த அளவுக்கு நான் கண்டுபிடிக்கவில்லை. In my own way, I have discovered we can live by Christ.
போஜனமும் பானமும் ஒரு நிழல்; கிறிஸ்துவே மெய்ப்பொருள். பண்டிகைகள் ஒரு நிழல்; கிறிஸ்துவே மெய்யான பண்டிகை. இப்படி மாற்றிச் சொல்ல வேண்டும். ஓய்வுநாள் ஒரு நிழல்; கிறிஸ்துவே உண்மையான ஓய்வுநாள். மாதப்பிறப்பு ஒரு நிழல்; கிறிஸ்துவே மெய்யான மாதப்பிறப்பு.
இப்படிப் பழைய ஏற்பாட்டிலே தேவன் பல நன்மைகளைக் கொடுக்கிறார். ஒரு பண்டிகை என்பது நாம் மகிழ்ச்சியடைகின்ற, இன்புறுகின்ற, நன்மைதான். ஓய்வு என்பது நாம் எல்லாரும் இன்புறுகிற ஒரு நன்மைதான். ஓய்வை விரும்பாத ஒரு மனிதன் உண்டா? ஒரு நாளின் முடிவிற்காக ஆவலோடு காத்திருக்கிறோம். போஜனபானத்தில் மகிழ்ச்சியடையாத இன்புறாத மனிதன் யாராவது உண்டா? நாம் எல்லாரும் போஜனபானத்தில் மகிழ்ச்சியடைகிறோம், இன்புறுகிறோம். இல்லையா? எந்த முனிவனாவது வந்து, “நாங்களெல்லாம் ஒரேவொரு வேர்க்கடலைப் பருப்பைச் சாப்பிட்டுவிட்டு ஒரு நாள் வாழ்ந்துவிடுவோம்,” என்று சொன்னால் அவன் பொய் சொல்லுகிறான் என்று அர்த்தம். நாம் எல்லாரும் போஜன பானத்தில் இன்புறுகிறோம், ஓய்வில் இன்புறுகிறோம், பண்டிகையில் இன்புறுகிறோம், மாதப் பிறப்புகளில் இன்புறுகிறோம், எல்லாவற்றிலும் இன்புறுகிறோம். இப்படி மனிதன் அனுபவித்து மகிழ்கிறான், இன்புறுகிறான், துய்க்கிறான்,
நாம் அனுபவித்து மகிழ்வதற்கு தேவன் எவ்வளவோ நன்மைகளைக் கொடுத்திருக்கிறார். “நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்;” (1 தீமோ. 6:17) என்று தேவனைப்பற்றி விவரித்திருக்கிறது. தேவன் மனிதர்களுக்காக ஆயத்தம்பண்ணி வைத்திருக்கிற ஏற்பாடு, செய்து வைத்திருக்கிற நன்மைகள், கோடி கோடி. நியாயப்பிரமாணத்தில் சொல்லப்பட்ட எல்லா நன்மைகளும் நிழல் மட்டுமே; அது பொருள் அல்ல என்று கொலோசெயர் 3ஆம் அதிகாரத்திலும், எபிரெயர் 10ஆம் அதிகாரத்திலும் பார்க்கிறோம். ஆகவே, யாராவது “சனிக்கிழமைதான் ஓய்வுநாள் கொண்டாட வேண்டும். ஞாயிற்றுக்கிழமை ஓய்வுநாளைக் கொண்டாடக் கூடாது,” என்று சொன்னால், “எனக்கு சனிக்கிழமையும் ஓய்வுநாள் அல்ல. ஞாயிற்றுக்கிழமையும் ஓய்வு நாள் அல்ல. திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளியும் எனக்கு ஓய்வுநாள் அல்ல. என்னுடைய ஓய்வுநாள் கிறிஸ்துவே, அல்லேலூயா!” என்று சொல்வேன்.
தேவனுடைய மக்கள் பல்லாயிரம் பேர் இன்னும் பழைய ஏற்பாட்டில் உள்ள நிழல்களைப் பிடித்துக்கொண்டு, பற்றிக்கொண்டு, இறுகப் பற்றிக்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஒருவேளை நம்முடைய உறவினர் ஒருவர் தூரத்தில் இருக்கும்போது skypeயில் பேசலாம் அல்லது தொலைபேசிமூலமாகப் பேசலாம். ஆனால், அவர் இங்கு வந்தபிறகுகூட நான் “skypeயில் பேசுவேன் அல்லது தொலைபேசிமூலமாகத்தான் பேசுவேன்,” என்று அடம்பிடித்தால் என்ன அர்த்தம்? “skypeல பேசிப் பேசி skypeல பேசினால்தான் எனக்குப் பேசின மாதிரி இருக்கிறது,” என்றால் அது பொருளற்றது. நிழல்களை அனுபவித்து, இன்புற்று மகிழ்ந்து, “நான் இவைகளைத்தான் பிடித்துக்கொள்வேன்,” என்பது பொருளற்றது.
மெய்ப்பொருளாகிய இயேசுகிறிஸ்து வந்துவிட்டார். கொலோசெயருக்கு பவுல் அந்த நிருபத்தை எழுதியதற்குக் காரணம் அவர்கள் நிழல்களை இறுகப் பிடித்துக்கொண்டார்கள். “இதைப் புசிக்கக் கூடாது. இதைத் தொடக் கூடாது. அதைச் செய்யக் கூடாது. இதைச் செய்யக் கூடாது. புளி உப்பு காரம் அதிகமாய்ச் சேர்க்கக் கூடாது. அசௌவம் அதிகமாய்ச் சேர்க்கக் கூடாது. இதைச் செய்யக் கூடாது. அதைச் செய்யக் கூடாது. இவைகளையெல்லாம் செய்தால் நம்முடைய வாழ்க்கை மிகவும் வெற்றியுள்ள வாழ்க்கையாக இருக்கும். தேவன் உங்களிலே மிகவும் பூரிப்படைவார்,” என்ற பாணியில் அவர்கள் சொன்னதால்தான் பவுல் அப்படிச் சொல்கிறார். “போஜனத்தையாவது பானத்தையாவதுகுறித்து ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.” அதற்காக நாம் எல்லாரும் மூக்குமுட்டச் சாப்பிட்டு விட்டுத் தூங்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அப்படியும் சொல்லவில்லை.
பழைய ஏற்பாட்டிலே ஆசாரியர்கள் இருந்தார்கள். அவர்கள்தான் தேவனை அணுக முடியும். பொதுநிலையினர் தேவனை அணுக முடியாது. பழைய ஏற்பாட்டு நிழல்களிலே இது முக்கியமான ஒரு நிழல். நாம் எல்லாரும் தேவனிடத்தில் சேர முடியாது. ஆசாரியர்கள் மட்டும்தான் தேவனை நெருங்கிப் போய்ப் பலி செலுத்த முடியும். இன்றைக்கும் அதைப் பிடித்து வைத்திருக்கின்ற தேவனுடைய மக்களாலான குழுக்கள் பல நூறு. ஒரு சாதாரண கிறிஸ்தவனுக்கும் ஆசாரியனாக அல்லது குருவாக இருக்கும் கிறிஸ்தவனுக்கும் வேறுபாட்டைக் காட்டுவதற்காக எவ்வளவோ முயற்சிகளைச் செய்கிறார்கள். “நான் திருமணம் ஆகாதவன்; ஏனென்றால் நான் ஒரு குரு. என்னுடைய உடை வித்தியாசமான உடை; ஏனென்றால், நான் ஒரு குரு. என்னுடைய நடை வித்தியாசமான நடை; ஏனென்றால் நான் ஒரு குரு. என்னுடைய தொனி வித்தியாசமான தொனி. ஏனென்றால் நான் ஒரு குரு. என்னுடைய உணவு வித்தியாசமான உணவு; ஏனென்றால் நான் ஒரு குரு,” என்கிற பாணியில் வாழ்கிறார்கள்.
இவர்கள் எங்கு வாழ்கிறார்கள்? மெய்ப்பொருளைப் பற்றிக்கொண்டு வாழ்கிறார்களா அல்லது நிழலிலே வாழ்கிறார்களா? நிழலிலே வாழ்கிறார்கள். எபிரெயருக்கு எழுதின கடிதத்தின் கருப்பொருள், பாரம், என்னவென்றால், “அருமையான சகோதரர்களே! நீங்கள் நிழல்களை விட்டுவிட்டு மெய்ப்பொருளை அனுபவித்து மகிழுங்கள். நீங்கள் இன்னும் தேவதூதர்கள் நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார் என்று தேவதூதர்களைப்பற்றியே பெருமைபாராட்டாதிருங்கள். குமாரனாகிய இயேசுகிறிஸ்து எல்லா தேவதூதர்களையும்விட மேன்மையானவராக இருக்கிறார். ‘மோசே எங்களுக்கு நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார்’ என்பதிலே நீங்கள் திருப்தியடைய வேண்டாம். மோசேயைப் பார்க்கிலும் இயேசுகிறிஸ்து மாபெரும் பிரமாணத்தை, ஜீவனுள்ள ஆவியின் பிரமாணத்தை அல்லது புதிய உடன்படிக்கை என்கிற ஒரு மாபெரும் பிரமாணத்தை, கொடுத்திருக்கிறார். ‘யோசுவா எங்களைக் கானானுக்குள் நடத்தினார்’ என்று நீங்கள் திருப்தியடையாதிருங்கள். உண்மையான கானானுக்குள், உண்மையான ஓய்வுக்குள், தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து உங்களை நடத்துகின்றார். ஆரோனுடைய ஆசாரியத்துவத்தைக்குறித்து நீங்கள் திருப்தியடையாதிருங்கள். உண்மையான ஆசாரியர் இயேசு கிறிஸ்து. மெல்கிசதேக்கின் முறைமையின்படி இவர் ஆசாரியராயிருக்கிறார். அந்த ஆசாரியர்களெல்லாம் ஒழிந்துபோவார்கள். இந்த ஆசாரியர் என்றைக்கும் நிலைநிற்கிற ஆசாரியராயிருக்கிறார். ஆசாரிப்புக் கூடாரத்தைக்குறித்து திருப்தியடைதிருங்கள். இயேசுகிறிஸ்து உண்மையான ஆசாரிப்புக் கூடாரமாய் இருக்கிறார். அங்கு செலுத்தப்பட்ட பலிகளைக்குறித்து நீங்கள் திருப்தியடையாதிருங்கள். ஆண்ட வராகிய இயேசுகிறிஸ்து ஒரே தரம் செலுத்தப்பட்ட பலியினாலே நம்மைப் பூரணப்படுத்தியிருக்கிறார். இன்னொரு பலி அவசியம் இல்லை.” எபிரெயருக்கு எழுதின கடிதத்தை நீங்கள் இந்தக் கண்ணோட்டத்தோடு வாசித்துப் பாருங்கள்.
நிழல்களில் நீங்கள் திருப்தியடையாதிருங்கள். மெய்ப்பொருளாகிய கிறிஸ்து எல்லா நிழல்களையும்விட மேன்மையானவர். Most excellent. இன்னொரு வசனத்தை வாசிக்க வேண்டும். “ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும், காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர். சர்வாங்க தகனபலிகளும், பாவ நிவாரணபலிகளும் உமக்குப் பிரியமானது அல்ல என்றீர். அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன். புஸ்தகச்சருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்றார். நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்டு வருகிற பலிகளைக்குறித்து மேற்சொல்லியபடி: பலியையும், காணிக்கையையும், சர்வாங்க தகனபலிகளையும், பாவ நிவாரணபலிகளையும் நீர் விரும்பவில்லை. அவைகள் உமக்குப் பிரியமானதல்ல என்று சொன்னபின்பு: தேவனே, உம்முடைய சித்தப்படி செய்ய, இதோ, வருகிறேன் என்று இரண்டாவதை நிலைநிறுத்துவதற்கு முதலாவதை நீக்கிப்போடுகிறார். இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்” (எபி. 10:5-10).
இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கின்ற மக்கள் எந்த பலியையும் செலுத்த வேண்டியதில்லை? பழைய ஏற்பாட்டில் இருந்ததுபோல, இன்று புதிய ஏற்பாட்டிலும் தங்களை ஆசாரியர்கள் என்று சொல்லிக் கொள்கிற ஒரு குறிப்பிட்ட வகையினர் உண்டு. “நீங்களெல்லாம் ஜெபம் பண்ணக்கூடாது. பலிபீடத்தில் நிற்பதற்கு யாருக்குத்தான் தகுதி உண்டு? ஆசாரியனுக்குத்தான் தகுதி உண்டு. ஆசாரியனுக்குத் தகுதி என்ன? அவன் திருமணம் செய்திருக்கக் கூடாது,” என்று தங்களை வேறுபடுத்திக்காண்பிக்கின்ற ஒரு கூட்டத்தார் இருக்கிறார்கள். “இவர்கள் மனச்சாட்சியிலே சூடுண்ட பொய்யர்” (1 தீமோ. 4:1) என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார். “திருமணம் செய்யாததினாலே நாங்கள் தேவனுடைய மற்ற மக்களைவிட உயர்ந்தவர்கள்,” என்கின்ற கொள்கை உடையவர்கள், கொள்கையை பரப்புகின்றவர்கள், “மனச்சாட்சியிலே சூடுண்ட பொய்யர்கள்”. அவர்கள் ஆயிரம் காரணங்கள் கொடுக்கலாம்.
இது முக்கியமான குறிப்பு. ஆனால் தலைப்பிலிருந்து சற்று விலகிப்போகிறேன். அதைச் சொல்ல வேண்டும். எவ்வளவோ தியாகங்கள் அவர்கள் செய்கிறார்கள்? தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு. தேவனுடைய இராஜ்ஜியத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக் கொண்டவர்களும் உண்டு. இரண்டு விதமான அண்ணகர்கள் உண்டு. தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய் பிறந்தவர்கள் உண்டு. மனிதர்களால் அல்லது ஒரு அமைப்பு முறையால், மதத்தினால், அண்ணகர்களாக்கப்படுகிறவர்களும் உண்டு. தேவனுடைய இராஜ்ஜியத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக் கொண்டவர்களும் உண்டு. மனிதனுடைய நன்மைகளுக்கும், இன்பங்களுக்கும் தங்களை ஒதுக்கிக்கொள்ளுகிறவர்களும் உண்டு. மனித அமைப்பு முறையினால் ஒரு மனிதன் தன்னை அண்ணகனாக்கிக்கொண்டால், அதனால் அவனுக்கும் எந்தப் பயனும் இல்லை, தேவனுக்கும் எந்தப் பயனும் இல்லை. அது ஒரு செயற்கையான உயர்வு மனப்பான்மையை ஒருவருக்குள் ஏற்படுத்திவிடுகிறது. இதுதான் ஆசாரியத்துவம் என்றால் நாம் பழைய ஏற்பாட்டின்படி பலிகளையும்கூடச் செலுத்த வேண்டும்.
சில கிறிஸ்தவர்கள் தசமபாகத்தைப்பற்றி ஆணித்தரமாகப் பேசுவார்கள். “தசமபாகத்தைக் கொண்டு வா. இல்லையென்றால் நீ டாக்டருக்குச் செலவுபண்ண வேண்டியிருக்கும்,” என்ற தொனியில் பேசுவார்கள். இது ஏறக்குறைய அச்சுறுத்தல். Psychological threat. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இப்படி அச்சுறுத்தி, யாருடைய கைகளையாவது வளைத்து, எங்கேயாவது காணிக்கை வாங்கியிருக்கிறாரா? அப்போஸ்தலனாகிய பவுல் இப்படி யாருடைய கைகளையாவது முறுக்கி, “நீ எனக்குக் காணிக்கைத் தரவில்லையென்றால், தசமபாகம் தரவில்லையென்றால், அதைவிட அதிகமாக இரண்டு மடங்கு நீ லூக்காவுக்குக் கொடுக்கவேண்டியிருக்கும்,” என்று சொன்னாரா?
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து எல்லா நிழல்களின் மெய்ப்பொருளாகஇருக்கிறார். மிக முக்கியமாக பழைய உடன்படிக்கை சட்டங்களாலானது; ஆனால், புதிய உடன்படிக்கை ஆவியினாலாவது. பழைய உடன்படிக்கை எழுத்தினாலானது; புதிய உடன்படிக்கை ஆவிக்குரியது. எபிரெயருக்கு எழுதின கடிதம் 8, 10ஆம் அதிகாரங்களில் நாம் இதைப் பார்க்கிறோம். “அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரயேல் குடும்பத்தாரோடு பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களிலே அவைகளை எழுதுவேன்…அப்பொழுது சிறியவன் முதற்கொண்டு பெரியவன் வரைக்கும் எல்லாரும் என்னை அறிவார்கள். ஆகையால், கர்த்தரை அறிந்துகொள் என்று ஒருவன் தன் அயலானுக்கும், ஒருவன் தன் சகோதரனுக்கும் போதிக்க வேண்டுவதில்லை” (எபி. 8:10, 11). இது புதிய உடன்படிக்கை. “புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி, அவரே எங்களைத் தகுதியுள்ளவராக்கினார். அந்த உடன்படிக்கை எழுத்துக்குரியதாயிராமல் ஆவிக்குரியதாயிருக்கிறது. எழுத்து கொல்லுகிறது. ஆவியோ உயிர்ப்பிக்கிறது” (2 கொரி. 3:6) என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறார்.
இந்த வேறுபாட்டை நன்றாக மனதில் பதித்துக்கொள்ள முடியும். பழைய உடன்படிக்கை சட்டம், எழுத்திற்குரியது. புதிய உடன்படிக்கை ஆவியின்படியானது. அது எழுத்திற்குரியது. இதற்கு சில எடுத்துக்காட்டுகளை நான் உங்களுக்குத் தர விரும்புகிறேன். இது முதலாவது குறிப்பு.
பழைய ஏற்பாட்டில் தேவன் நன்மைகளை நிழல்களில் மட்டுமே காண்பித்தார். புதிய ஏற்பாட்டில் அந்த நிழல்களின் மெய்ப்பொருளாகிய கிறிஸ்துவைக் கொடுத்திருக்கிறார். எல்லாப் பலிகளின் நிறைவேற்றம் கிறிஸ்து. இது இரண்டாவது குறிப்பு.
தேவனுடைய நோக்கம் நாம் கிறிஸ்துவைக் கண்டு, கிறிஸ்துவால் வாழ்வது; கிறிஸ்து நமக்குள் உருவாக்கப்பட்டு, கிறிஸ்து நம்மூலம் வெளியாக்கப்படுவது அல்லது நம்மூலமாய்ப் பரிமாறப்படுவது, வழங்கப்படுவது. இதற்கு முதலாவது நாம் கிறிஸ்துவால் வாழ வேண்டும். கிறிஸ்துவால் நாம் வாழாமல் கிறிஸ்துவை வெளியாக்குவது என்பது கூடாத காரியம். ஆகவே, தேவன் தம்முடைய மக்கள் எல்லாரையும் பொறுத்தவரை, “என்னுடைய மக்கள் வாழ்வின் எல்லா நிலைகளிலும், சூழ்நிலைகளிலும், தேவைகளிலும், நெருக்கங்களிலும் கிறிஸ்துவால் மட்டுமே வாழ வேண்டும். கிறிஸ்துவைக்கொண்டு மட்டுமே வாழ வேண்டும்,” என்ற ஒரு காரியத்தில் மிகவும் வைராக்கியமுள்ளவராய் இருக்கிறார்.
கிறிஸ்துவை வாழ வேண்டும் என்று கொஞ்ச நாட்களுக்குமுன்பு நான் பயன்படுத்தினது உண்டு. ஆனால், கிறிஸ்துவை வாழ வேண்டும் என்பது அந்த அளவுக்குப் புதிய ஏற்பாட்டிற்கு உரியதல்ல. கிறிஸ்துவால் வாழ்வது என்பது புதிய ஏற்பாட்டிற்கு உரியது. “நானே வானத்திலிருந்து இறங்கின ஜீவ அப்பம். இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்,” (யோவான் 6:51) என்றும், *“என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்,”( (யோவான் 6:57) (என்னாலே வாழ்வான்) என்றும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொன்னார். இயேசுகிறிஸ்துவைக்கொண்டு வாழ்வது, இயேசுகிறிஸ்துவால் வாழ்வது, என்கிற எண்ணம், கருத்து, புதிய ஏற்பாட்டிலே இருக்கிறது.
நம்முடைய வாழ்க்கையிலே பிரச்சினைகள் உள்ளதா? நம் எல்லோருக்கும் பிரச்சினைகள் உண்டு. வாழ்க்கையில் வருத்தங்களும், நெருக்கங்களும் உள்ளதா? நெருக்கங்கள் என்றால் எல்லாப் பக்கத்திலும் நாம் சூழ்ந்து நெருக்கப்படுகிறோம். “இது விசாலமாகிவிடாதா?” என்று ஒரு ஏக்கம் இருக்கிறது. நம் உடலிலோ, நம் மனதிலோ அல்லது நம் உணர்ச்சிகளிலோ வேதனையும், வலியும், நோவும் இருக்குமா இருக்காதா? இவைகளுக்கெல்லாம் காரணம் என்ன? நம்முடைய வாழ்க்கையின் தேடல்களுக்கும், குறைச்சல்களுக்கும், நெருக்கங்களுக்கும், வருத்தங்களுக்கும், சோதனைகளுக்கும், போராட்டங்களுக்கும்; காரணம் என்ன?
பெதஸ்தா குளத்தருகே பலர், “நம்மை யாராவது சுகமாக்க மாட்டார்களா?” என்று படுத்திருந்தார்கள். இயேசுகிறிஸ்து முப்பத்தெட்டு வருடம் வியாதியாயிருந்த ஒரேவொருவனைப் பார்த்து, “நீ சுகமாக விரும்புகிறாயா?” என்று கேட்டார். “நான் சுகமாக விரும்புகிறேன்,” என்று அவன் சொன்னான். அவர் ஏன் மற்றவர்களைப் பார்த்து அந்தக் கேள்வியைக் கேட்கவில்லை. காரணம் சொல்கிறேன். நம்முடைய வாழ்க்கையின் தேவைகள், நெருக்கங்கள், சோதனைகள், போராட்டங்கள், வேதனைகள், கண்ணீர்கள், துன்பங்கள், நோய்கள் எல்லாவற்றிற்கும் காரணம் என்ன? கிறிஸ்து இந்தச் சூழ்நிலையில் போதுமானவர் என்று நிரூபிப்பதுதான் எல்லாவற்றிற்கும் காரணம். அல்லேலூயா! “உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ள மாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக. அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார். இந்த நாற்பது வருஷமும் உன்மேல் இருந்த வஸ்திரம் பழையதாய்ப் போகவுமில்லை. உன் கால் வீங்கவுமில்லை. ஒருவன் தன் புத்திரனை சிட்சிக்கிறதுபோல உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிட்சிக்கிறார் என்று நீ உன் இருதயத்தில் அறிந்துகொள்வாயாக” (உபா. 8: 2-5). உன் இருதயத்திலுள்ளதை நான் அறியும்படிக்கு அல்ல; உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கு.
நான் இதுவரை கிறிஸ்துவால் வாழ்கின்றேனா அல்லது கிறிஸ்து அல்லாத ஒன்றைப் பற்றிக்கொண்டு, அதை என்னுடைய ஆதாரமாக, செல்வமாக, வளமாக, வைத்துக்கொண்டு வாழ்கிறேனா என்பதை நமக்குத் தெரியப்படுத்துவதில் தேவன் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார். தேவனுடைய மக்கள் பல்வேறு அம்சங்களில் கிறிஸ்துவால் வாழவில்லை. நாம் கிறிஸ்துவால் வாழவில்லை. இந்தப் பூமிக்குரிய ஒரு ஆதாரத்தால், இந்தப் பூமிக்குரிய ஒரு செல்வத்தால், இந்தப் பூமிக்குரிய ஒரு வளத்தால், சுயத்தால், ஒரு இயற்கையான பலத்தால் நாம் வாழ்கின்றோம். உபாகமத்தில் தொடர்ந்து “உன்னுடைய பின்னாட்களில் உனக்கு நன்மைசெய்யும்பொருட்டு, உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைச் சோதித்து, கொள்ளிவாய்ச் சர்ப்பங்களும் தேள்களும், தண்ணீரில்லாத வறட்சியுமுள்ள பயங்கரமான பெரிய வனாந்தரவழியாய் உன்னை அழைத்துவந்தவரும், உனக்காகப் பாறையான கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணினவரும், உன் பிதாக்கள் அறியாத மன்னாவினால் வனாந்தரத்திலே உன்னைப் போஷித்துவந்தவருமான உன் தேவனாகிய கர்த்தரை நீ மறவாமலும், என் சாமர்த்தியமும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்திலே சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து, உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக. அவரே உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்” (உபா. 8:15, 16, 127, 18) என்று வாசிக்கிறோம். நான் ஐசுவரியத்தைப்பற்றியோ அல்லது இந்த உலகத்திலே ஐசுவரியவானாக, செல்வந்தனாக, பணக்காரனாக இருப்பதைப்பற்றியோ பேசவில்லை.
நம்முடைய பரிசுத்தம், நம்முடைய அன்பு, நம்முடைய நீதி, நம்முடைய வெளிச்சம், நம்முடைய பொறுமை, நம்முடைய சாந்தம் இவைகளையெல்லாம்பற்றிகூட நமக்கு மிகவும் உயர்ந்த அபிப்பிராயம் உண்டு. “நான் அன்புள்ளவன், நான் பரிசுத்தமுள்ளவன், நான் நீதியுள்ளவன், நான் நல்லவன், நான் தாழ்மையுள்ளவன், நான் பொறுமையுள்ளவன், குறைந்தபட்சம் என்னைச் சுற்றியிருக்கிறவர்களையெல்லாம்விட நான் பரவாயில்லை, குறைந்தபட்சம் எங்கள் கூட்டத்திலே நான் கடைசியான ஆள் கிடை யாது,” என்று நினைக்கக்கூடிய நிறையப்பேர் இருக்கிறார்கள். “என் கால்களை இயேசுகிறிஸ்து கழுவும் அளவிற்கு நான் உயர்ந்தவன் அல்ல. ஆனால் பிறனுடைய கால்களைக் கழுவும் அளவுக்கு நான் தாழ்ந்தவனும் அல்ல. அதனால் வேறே யாராவது தண்ணீர் எடுத்துக்கொண்டுவந்து கால்களைக் கழுவட்டும்,” என்று எண்ணுகிற மக்கள்தான் அதிகம்.
உபாகமம் 8ஆம் அதிகாரத்திலே அவர் பதிலளிக்கிறார். உன்னைச் சிறுமைப்படுத்தி…உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைச் சிறுமைப்படுத்தி என்கிற வார்த்தை அடிக்கடி வருகிறது. உன்னைச் சிறுமைப்படுத்தி என்றால் உனக்குக் குறைச்சலை உண்டாக்கி என்று பொருள். குறைச்சல் உண்டாகும்போது நமக்கு வருத்தம் வரும். உணவு குறைவுபடும்போது வருத்தம் வரும். சுவையான உணவு ஒரு வாரம் கிடைக்கவில்லையென்றால் ஒரு வருத்தம் வந்துவிடும், முகம் வாடிப்போகும். எகிப்திலே சாப்பிட்ட வெங்காயங்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும் இறைச்சியையும் நினைத்துப்பார்க்க ஆரம்பித்துவிடுவோம். “ஒவ்வொரு நாளும் மன்னா! காலையில் மன்னா, மதியம் மன்னா, மாலையில் மன்னா, அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!” என்று யார் சொல்வார்கள்? குறைந்தபட்சம் மன்னாவிலே chocolate flavor, vanilla flavor, pista flavour என்று அப்படியாவது இருக்கக் கூடாதா?
இயேசுகிறிஸ்து! அதே மன்னா! அது தேனிலிட்ட பணியாரம் போலிருந்தது. என்னதான் தேனிலிட்ட பணியாரம் என்றால்கூட ஒவ்வொரு நாளும் மூன்று வேளை, ஏழு நாட்கள், 365 நாட்கள், 39 வருடம் சாப்பிட்டார்கள். நாம் ரொம்ப நல்லவர்கள் என்று நினைத்துக்கொண்டு இஸ்ரயேல் மக்களை ரொம்பக் கடினமாய் நியாயந்தீர்க்காதீர்கள். 39 வருடங்கள் ஏன்? 39 நாட்கள் ஒரே சுவையுள்ள உணவைக் கொடுத்துப்பார்ப்போம். வீடு மகிழ்ச்சியினால் நிறைந்திருக்குமா? இட்லியை ஒரு வாரத்துக்குச் சாப்பிட்டுப் பாருங்கள். அதற்குப்பின் இஸ்ரயேல் மக்களைப்பற்றிப் பேசுங்கள்.
அருமையான பரிசுத்தவான்களே! சிறுமை அல்லது குறைச்சல் ஏற்படும்போது நம்முடைய வாழ்க்கையில் வருத்தங்கள் வரும். சிலர் வருத்தங்களைத் தாங்கிக்கொண்டிருப்பார்கள். சிலர் வருத்தங்களைத் தாங்கிக்கொண்டிருக்க முடியாது. “கொள்ளிவாய்ச்சர்ப்பங்களும் தேள்களுமுள்ள வறட்சியான வனாந்தரவழியாய் நான் உங்களை நடத்தினேன்”. அதுபோல ஒரு விரக்தியிலே வாழ்ந்த ஒரு மனித கூட்டம், ஒரு மக்கள் கூட்டம் மனித வரலாற்றிலே இருந்ததில்லை. எவ்வளவு பெரிய படைக்கு எவ்வளவு பெரிய logistics வேண்டும் என்று நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். இவர்களுக்குப் பத்து நாள்கள் சாப்பாடு வேண்டும் என்றால் எவ்வளவு சாப்பாடு வேண்டும்? எத்தனை கேலன் தண்ணீர் வேண்டும்? எங்கிருந்து வந்தது இவர்களுக்குத் தண்ணீர்? இவர்களுக்குப் பின்னால் டேங்கர் லாரியா போயிற்று? டேங்கர் லாரி போகவில்லை. போகுமிடமெல்லாம் ஒரு பாலைவனச்சோலை இருந்ததா? எங்கெல்லாம் கேம்ப் அடித்தார்களோ அங்கெல்லாம் ஒரு குளம் அல்லது ஒரு ஏரி அல்லது ஒரு ஆறு இருந்ததாக வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா? எங்கிருந்து அவர்களுக்குத் தண்ணீர் வந்தது? ஒரேவொரு பதில்தான் உள்ளது. இவர்கள் எங்கெல்லாம் கேம்ப் அடித்தார்களோ அங்கெல்லாம் ஒரு கன்மலை இருந்தது. இந்த ஆச்சரியமான கன்மலை அங்கு இதற்கு முன்பு இல்லை. இவர்கள் கேம்ப் அடித்தவுடன் அந்த இடத்திலே அந்தக் கன்மலை இருந்தது. இது மந்திரம் இல்லை. இதுதான் உண்மை. “அவர்கள் தங்களோடுகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்,” (1 கொரி. 10:4) என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார். ஆவிக்குரிய அல்லது தெய்வீகமான ஒரு கன்மலையின் தண்ணீரை அவர்கள் குடித்தார்கள். அந்தக் கன்மலை கிறிஸ்துவே. அவர்கள் ஒவ்வொரு நாளும் உண்ட உணவு கிறிஸ்துவே. அவர்கள் ஒவ்வொரு நாளும் குடித்த தண்ணீர் கிறிஸ்துவே. ஒவ்வொரு நாளும் அவர்களை மேகஸ்தம்பத்திலும், அக்கினி ஸ்தம்பத்திலும் நடத்தினது கிறிஸ்துவே.
“இந்த நாற்பது வருஷமும் உன்மேலிருந்த வஸ்திரம்; பழையதாய்ப் போகவுமில்லை. உன் கால் வீங்கவுமில்லை” (உபா. 8:4). நீங்கள் 39 வருடங்கள் நடந்தபிறகும் உங்கள் துணிமனிகள் பழையதாகவும் இல்லை, உங்கள் மிதியடிகள் தேயவுமில்லை என்றால் அது எப்படிப்பட்ட மிதியடி, எப்படிப்பட்ட உடை? கிறிஸ்து அவர்களுடைய சுகமாக இருந்தார். கிறிஸ்து அவர்களுடைய நலமாக இருந்தார். கிறிஸ்து அவர்களுடைய உணவாக இருந்தார். கிறிஸ்து அவர்களுடைய தண்ணீராக இருந்தார். கிறிஸ்து அவர்களுடைய எல்லாமுமாக இருந்தார். ஆனால் அது கிறிஸ்துதான் என்று அவர்களுக்குத் தெரியாது. “அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தினேன்,” (உபா. 8:3) என்று சொல்லுகிறார். அதற்குக் காரணம் என்ன? “மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல. கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு” (உபா. 8:3).
“நல்ல உணவினால் வாழ்கிறோம், தண்ணீரினால் வாழ்கிறோம், நல்ல காற்றினால் வாழ்கிறோம், நல்ல ஓய்வினால் வாழ்கிறோம், நல்ல உடல்நலத்தினால் வாழ்கிறோம்,” என்று நீ நினைக்கிறாய். உடல் நலம் இல்லாதவர்களுக்கு நான் ஒரு இரகசியத்தைச் சொல்கிறேன். நீங்கள் 80 வருடம் வாழ முடியும். அது எப்படியென்றால் “மனிதனுடைய ஆயுசு நாட்கள் எழுபது வருடம். பெலத்தின் மிகுதியால் 80 வருடம்,” என்று (சங். 90:10) வேதம் சொல்லுகிறது. ஒருவேளை விசுவாசத்தினால் 100, 120 வருடங்கள்கூட வாழலாம். ஆனால், பவுலைப்போல “தேகத்தைவிட்டுப் பிரிந்து கர்த்தரோடுகூட இருக்க ஆசைப்படுகிறேன்,” என்று இருப்பவர்களும் உண்டு. ஆனால், “நான் சரீரத்திலே இருப்பதினால் உங்களுக்கு மிகுந்த பலன் உண்டு,” (பிலி. 1:23) என்று இருப்பவர்களும் உண்டு. நீங்கள் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்களோ அதைப்பொறுத்து நீங்கள் 80 வருடமோ கூடவோ குறைத்தோ எடுத்துக்கொள்ளலாம். “இயேசுகிறிஸ்து உன்னைச் சுகமாக்குகிறார். ஐநேயாவே! எழுந்திரு!” என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் “இயேசுகிறிஸ்து உங்களுக்குச் சுகமாக இருப்பார்” என்று தேவனுடைய வார்த்தையின் ஆதாரத்திலிருந்து என்னால் உங்களுக்குச் சொல்ல முடியும். இரண்டுக்கும் வேறுபாடு உண்டா? இரண்டுக்கும் வேறுபாடு உண்டு.
சகோதரன் A.B. Simpsonபற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சிறுவயது முதற்கொண்டு அவருக்கு இருதய நோய் இருந்ததாம். அதனால் அவர் கொஞ்சத் தூரம் நடக்கக்கூட முடியாதாம். வாலிபனாயிருக்கும்போது இளைப்படைந்துவிடுவாராம். அவர் இயேசுகிறிஸ்துவினால் தெய்வீக சுகம் பெறவில்லை. ஆனால் இயேசுகிறிஸ்துவைத் தெய்வீக சுகமாகவே அவர் பெற்றுக்கொண்டார். எந்தக் களைப்புமில்லாமல் மலைகளிலே நடப்பாராம். 80 வயதிற்குமேல் வாழ்ந்தார். வாலிபனாய் இருக்கும்போதே “செத்துவிடுவான்” என்று சொன்னார்கள். “நான் தெய்வீக சுகம் பெற்றுவிட்டேன்,” என்று அவர் ஒருநாளும் சொல்லவில்லை. ஆனால், “கிறிஸ்துவை என்னுடைய சுகமாகப் பெற்றுக்கொண்டேன்,” என்று சொன்னார். Not I but Christ be honoured, loved, exalted என்ற பாடலை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இன்னொரு பாடல். Once it was a blessing, now it is the Lord. ரொம்ப அருமையான பாடல்.
ஆகவே, மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல. இந்த உலக வாழ்க்கையிலே ஒரு மனித வாழ்க்கைக்கு என்னென்ன நன்மைகளெல்லாம் வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்களோ, அந்த நன்மைகளை அவர்கள் ஆசையாய் நாடித் தேடி ஓடுகின்றார்கள். அந்த நன்மை எங்காவது கிடைக்கும் என்ற ஒரு சுவரொட்டியை அல்லது ஒரு விளம்பரத்தைப் பார்த்துவிட்டால் போதும். மக்கள் திரளான கூட்டமாய் “அந்த நன்மை எனக்கு வேண்டும்,” என்று அங்கே போய் நிற்பார்கள். ஆனால், தேவன் தொடர்ந்து அவர்கள் வாழ்க்கையிலே சிறுமைகளையும், வருத்தங்களையும், குறைச்சல்களையும், நெருக்கங்களையும் ஏற்படுத்திக்கொண்டே இருப்பார். தேள்களும், கொள்ளிவாய்ச் சர்ப்பங்களும், வறட்சியும் பாழுமான வனாந்திரவழியாய் தேவன் அவர்களை நடத்துவார். “எதற்கு எனக்கு மட்டும் இப்படி இருக்கிறது?” என்ற கேள்விக்குப் பதில்: மனிதன் அப்பத்தினால் மாத்திரமல்ல; தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உணர்த்தும்படிக்கு நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்.
“ஆண்டவரே! பூமியிலே நான் வாழ்வதற்கு அப்பம் தேவையில்லை. நீரே என் தேவை,” என்று என்றைக்கு நாம் ஒரு முடிவுக்கு வரப்போகிறோம்? தேவனுடைய வார்த்தை தேவை. தேவனுடைய வார்த்தை என்பது கிறிஸ்துவுக்கு அடையாளம். தேவனுடைய வார்த்தை என்றால் தேவன் இந்த வார்த்தையைப் பேசுகிறார் என்பதல்ல. தேவனுடைய வார்த்தை கிறிஸ்து. அப்பத்தினால் அல்ல. கிறிஸ்துவினால் வாழ முடியும் என்பதைத் உணர்த்துவதற்காக தேவன் இப்படிப்பட்ட சூழ்நிலைகளை அனுமதித்திருக்கிறார். கிறிஸ்து நம்முடைய பரிசுத்தம், கிறிஸ்து நம்முடைய நீதி, கிறிஸ்து நம்முடைய அன்பு, கிறிஸ்து நம்முடைய வெளிச்சம், கிறிஸ்து நம்முடைய தாழ்மை, கிறிஸ்து நம்முடைய பொறுமை, கிறிஸ்து நம்முடைய சகிப்புத்தன்மை.
He giveth more grace என்ற பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். மிக அற்புதமான பாடல். இதை மொழி பெயர்க்க வேண்டுமென்று ஆசைபட்டுக்கொண்டிருந்தேன். இதை மொழிபெயர்க்க முடியாது என்று நினைத்தேன். மிகச் சிறிய சிறிய வார்த்தைகள். அருமையான பாடல்.
*உம் அன்பின் எல்லையை, அருளின் அளவை*
*ஆற்றலின் வரம்பைக் கண்டவர் யார்?*
*இயேசுவில் முடிவில்லா உம் செல்வங்களை*
*ஈகின்றீர், ஈகின்றீர், மேலும் ஈகின்றீர்.*
இந்த மன்னா வானத்திலிருந்து ஒவ்வொருநாளும் பெய்ததாம். உண்மையிலேயே கிறிஸ்துவால் வாழ்வதென்றால் என்னவென்று நான் விளக்க விரும்புகிறேன். ஒவ்வொரு நாள் காலையிலும் இஸ்ரயேல் மக்கள் போய் இந்த மன்னாவை சேகரிக்க வேண்டும். இந்த மன்னா மழைபோல சடசடசடசட வென்று பொழியதில்லை. அவர்கள் வீட்டு முன்னால் குடத்தை வைத்தால் போதும். அதற்குப்பிறகு நேராக வந்து குடத்தை வீட்டிற்குள் எடுத்து வருவதில்லை. மக்களுக்கு அற்புதம் நடக்க வேண்டும்; “அந்த இடத்தில் கை வைத்து ஜெபிக்க வேண்டும் என்று சொன்னார்கள். ஜெபித்தேன். அப்புறம் போய் நான் ஸ்கேன் எடுத்துப் பார்த்தேன். அங்கு கட்டியே இல்லை. அல்லேலூயா! ஒருவர் என்னிடத்தில் நீங்கள் கூட்டத்திற்கு வாருங்கள் என்று கேட்டார். 10 நிமிடம் சாட்சி கொடுங்கள் என்று கூப்பிட்டார்,” என்பதுதான் இப்படிப்பட்டவர்களுடைய சாட்சி. நீங்கள் 10 நிமிடம் அல்ல, 24 மணி நேரமும் சாட்சியாக வாழுங்கள்.
என்ன சாட்சி கொடுக்க வேண்டும்? “அந்த இடத்தில் கை வைத்து ஜெபம் பண்ணினேன். அந்தக் கட்டி காணாமல் போயிற்று,” என்பது நம்முடைய சாட்சியா? இந்த மன்னா காலையிலே ஒரு பனிபோல பெய்திருக்கும். அவர்கள் போய் இந்த மன்னாவைச் சேகரிக்க வேண்டும். இது இயற்கையான உணவா அல்லது பரத்திற்குரிய உணவா? அது என்ன பரத்திற்குரிய உணவு? பரத்திற்குரிய என்றால் என்ன? இது பூமிக்குரிய இயற்கையான உணவு இல்லை என்பதற்கு நீங்கள் என்ன நிரூபணம் கொடுக்கிறீர்கள்? நான் கொடுக்கிறேன் நிரூபணம். ஒவ்வொரு நாளும் அந்தந்த நாளுக்குரியதைத்தான் சேகரிக்க வேண்டும். அடுத்த நாள், இரண்டாம் நாளுக்குரியதை சேகரித்து வைத்தால் அது பூத்துப் போகும். “அது உண்மைதானே பிரதர். ஒரு நாள் குழம்பை அடுத்த நாள் வைத்தால் கெட்டுப்போகிறதே. அதுபோல இன்றைக்குச் சேகரித்திருக்கிற மன்னாவை அடுத்த நாள் வைத்தால் கெட்டுப்போகிறது. இதில் இயற்கைக்குப் புறம்பானது என்ன இருக்கிறது?” என்று ஒருவேளை நீங்கள் நினைக்கலாம். காரியம் அங்கே இல்லை. ஆனால், ஆறாவது நாள் சேகரிக்கும்போது மட்டும் ஆறாவது நாளைக்கும் ஏழாவது நாளைக்கும் சேர்த்துச் சேகரிக்கலாம். ஏழாவது நாள் சேகரிக்கக்கூடாது. இது என்னே அற்புதம் பாருங்கள். இந்தக் குழம்பு ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன்வரை மூடி வைத்தால் கெட்டுப்போகும். வெள்ளிக்கிழமை இரவு மூடிவைத்தால் கெட்டுப்போகாது. அப்படிதானே அர்த்தம். இது இயற்கையான உணவா? பரத்திற்குரியதா? இது பரத்திற்குரியது. தூதர்கள் சாப்பிட்ட அப்பத்தை மனிதன் சாப்பிட்டான் (சங். 78:25) என்று மன்னாவைப்பற்றி எழுதியிருக்கிறது.
மன்னா ஒரு இயற்கையான உணவு அல்ல. தேவனுடைய ஆசீர்வாதங்களெல்லாம் பகட்டாக நம்முடைய கண்ணைப்பறிக்கிற விதத்திலே வரும் என்று நாம் எதிர்பார்க்கக் கூடாது. பனி எப்படி நம் கண்களுக்குப் புலப்படாமல் மெல்லப் பெய்கிறதோ, அதுபோல தேவன் கிறிஸ்துவை நம்முடைய கண்களுக்குப் புலப்படாவண்ணம் பனியைப்போல் பெய்யப் பண்ணுவார். பெய்வதுபோலவும் இருக்கும், பெய்யாதது போலவும் இருக்கும். ஆனால், கிறிஸ்து நம்முடைய வாழ்க்கையிலே இருக்கின்றார். ஆகவேதான் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஐந்து அப்பம் இரண்டு மீன்களைக்கொண்டு ஐயாயிரம் பேரைப் போஷித்தபிறகு. மக்கள் அவரைத் தேடி வருகிறார்கள். அப்போது அவர் அவர்களைப் பார்த்து, “நீங்கள் இந்த அற்புதத்தினுடைய பொருள் என்னவென்பதைக் கண்டதால் என்னைத் தேடி வரவில்லை. மாறாக நேற்று உங்களுக்குச் சாப்பாடு கிடைத்தது என்பதற்காகவும், இன்றைக்கும் சாப்பாடு வேண்டும் என்பதற்காகவும் நீங்கள் வந்திருக்கிறீர்கள்,” என்ற பொருளில்தான் “நீங்கள் அற்புதங்களைக் (அற்புதத்தின் பொருளை) கண்டதினால் அல்ல, நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்களென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (யோவான் 6:26).
ஒருவேளை நான் ஒரு ஊழியக்காரனாக இருந்து மக்கள் நேற்று என்னுடைய கூட்டத்திற்கு வந்து இன்றைக்கும் அவர்கள் இந்தக் கூட்டத்திற்கு வந்தார்களென்றால், “அருமையான தேவ ஜனமே! உங்கள் எல்லாரையும் நான் அன்போடு வரவேற்கிறேன்,” என்று ரொம்ப சந்தோஷப்படுவேன். ஆனால், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பேசுகிறபோதே ஆட்களை அடித்துத் துரத்துகிற மாதிரி பேசுகிறார். “நீங்கள் அடையாளத்தைக் கண்டதினால் வரவில்லை. மாறாக உணவைக் கண்டதால் வருகிறீர்கள்.” என்ன அடையாளம்? அடையாளம் என்னவென்றால் “நானே உண்மையான உணவு. மன்னா ஒரு நிழல். ஆனால் நான் உண்மையான மன்னா. நானே வானத்திலிருந்திறங்கி வந்த மெய்யான மன்னா. என்னைப் புசிக்கிறவன் என்னாலே பிழைப்பான், என்னால் வாழ முடியும்.” இஸ்ரயேல் மக்கள் கிறிஸ்துவைப் புசித்தார்கள்; குறைந்தபட்சம் கிறிஸ்துவின் நிழலை அவர்கள் புசித்தார்கள் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். நாமோ கிறிஸ்துவாகிய மெய்ப்பொருளாலே வாழுமாறு அழைக்கப்பட்டிருக்கிறோம்.
ஒரு நல்ல ரோமன் கத்தோலிக்கப் பாடல் உண்டு.
*நானே வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவு.*
*இதை யாராவது உண்டால் அவன் என்றுமே வாழ்வான்*
நம்முடைய இரண்டாவது குறிப்பு. வாழ்வின் எல்லா வருத்தங்களுக்கும், குறைச்சல்களுக்கும் தேவன் ஒன்றேவொன்றை வைக்கிறார். தேவனுடைய மக்கள் கிறிஸ்துவால் வாழ வேண்டும். சிலர் நன்மைகளிலிருந்து மட்டுமல்ல. நன்மைகளை இழப்பதிலிருந்தும் கற்றுக்கொள்கிறார்கள். இது மிகவும் வருத்தமாக இருக்கும். தேவன் ஒரு நன்மையைத் தருவதுபோல் தந்துவிட்டு, நம் வாழ்க்கையிலிருந்து அதை எடுத்தும் கொள்கிறார். ஆபிரகாம் விசுவாசித்தான். தன் ஒரே மகனைப் பலியாய்த் தந்தான். “என் கிருபை உனக்குப் போதும்” (2 கொரி. 12:9) என்ற வசனம் நமக்குத் தெரியும். “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலன் உண்டு” (பிலி. 4:13) என்ற வசனமும் நமக்குத் தெரியும்.
இந்த இரண்டு வசனங்களுக்கும் ஒரு சின்ன பின்புலத்தை நான் கொடுக்க விரும்புகிறேன். பவுலுடைய உடலிலே அவனை வருத்துகின்ற ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது. “எதை வேண்டுமானாலும் பொறுத்துக்கொள்ளலாம். ஆனால், உடலிலே ஒரு நோய் வந்துவிட்டால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியாது,” என்று சிலர் சொல்வார்கள். அது அவனைக் குட்டுகின்ற சாத்தானுடைய தூதனாயிருந்தது. “அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன்” (2 கொரி. 12:8). “ஆண்டவரே, இந்த வேதனையை என்னால் பொறுக்க முடியவில்லை. இந்த முள்ளை என் உடலிலிருந்து நீக்கிவிடும்,” என்று பவுல் ஜெபித்தார். கர்த்தர் முள்ளை நீக்கவில்லை, எடுக்கவில்லை.
“துரோப்பீமுவை மிலேத்துவில் வியாதிப்பட்டவனாக விட்டுவந்தேன்” (2 தீமோ. 4:20) என்று பவுல் எழுதுகிறார். அவர் துரோப்பீமுவின்மேல் கைவைத்து, “இயேசுவின் நாமத்தினாலே சுகமாகு,” என்று சொல்லியிருக்கக் கூடாதா? “நீ இனி தண்ணீர் மாத்திரம் குடியாமல், உன் வயிற்றிற்காகவும், உனக்கு அடிக்கடி நேரிடுகிற பலவீனங்களுக்காகவும் கொஞ்சம் திராட்சரசமும் கூட்டிக்கொள்,” (1 தீமோ. 5:23) என்று பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதுகிறார். “நல்லா ஜெபம் பண்ணுங்கள், தீமோத்தேயு,” என்று சொல்வதற்குப்பதிலாக “தண்ணீரோடேகூடத் திராட்சரசம் சேர்த்துக்கொள்” என்று ஏன் சொல்ல வேண்டும்? இது விசுவாசத்தினாலே கொடுக்கிற அறிவுரையா?
“இந்த முள்ளை என்னாலே தாங்க முடியவில்லை, ஆண்டவரே!” என்று நான் ஜெபிக்கிறேன். “ஆண்டவரே, இந்தச் சூழ்நிலையில் என்னால் வாழ முடியாது. என் சூழ்நிலையை மாற்றிப்போடும்,” என்று நான் ஜெபிக்கிறேன். ஆண்டவரோ, “மகனே, உன் கண்ணீரைக் கண்டேன். உன் ஜெபத்தைக் கேட்டேன். உன்னுடைய முள்ளை உன்னிலிருந்து எடுத்துப்போட்டேன். சமாதானத்தோடே போ!” என்று சொல்லாமல் “என் கிருபை உனக்குப் போதும்” என்று சொல்லுகிறார்.
“அவன் வெளியே வந்து நின்று, தன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் தொழுது, தன் கையினால் அந்த இடத்தைத் தடவி, இவ்விதமாய் என்னைச் சுகமாக்குவான்; என்று எனக்குள் நினைத்திருந்தேன். நான் ஸ்நானம்பண்ணிச் சுத்தமாகிறதற்கு இஸ்ரயேலின் தண்ணீர்கள் எல்லாவற்றைப்பார்க்கிலும் தமஸ்குவின் நதிகளாகிய ஆப்னாவும் பர்பாரும் நல்லதல்லவோ! போய் யோர்தானிலே ஏழுமுறை குளி என்று சொல்லிவிட்டார். எங்கள் நாட்டிலே நதிகளே இல்லையா?” (2 இரா. 5:11,12) என்ற பாணியில் எலிசாவைப் பார்க்க வந்த நாகமான் என்ற புறவினத்தான் சொன்னான். நாகமான் பெரிய படைத் தளபதி, அமைச்சா். தீர்க்கதரிசியாகிய எலிசா வீட்டிற்கு வெளியே வந்து அவனை வரவேற்கக்கூட இல்லை. அவர் தன்னுடைய வேலைக்காரனை அனுப்பி அவனைப் போய் யோர்தானிலே ஏழுதரம் ஸ்நானம்பண்ணச் சொன்னார்.
அதுபோல பவுலை நோக்கி, “என் கிருபை உனக்குப் போதும்” என்று சொன்னார். இது என்ன கிருபை? ஒரு விளக்கம் கொடுக்கிறார். “பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்.” நீங்கள் இப்படி ஒரு ஜெபம் பண்ணினபிறகு, தேவன் உங்களுக்கு இப்படி ஒரு பதில் கொடுத்தால் நீங்கள் மகிழ்ச்சியோடே வீடு திரும்புவீர்களா அல்லது வருத்தத்தோடே வீடு திரும்புவீர்களா? வருத்தத்தோடு வீடு திரும்புவீர்கள். யாராவது மகிழ்ச்சியோடு வீடு திரும்புவீர்களா? எனக்கு ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதன் என்றால் அந்த முள்ளுடைய வேதனை எவ்வளவு கொடுமையாக இருக்கிறது? கர்த்தரோ, “என் கிருபை உனக்குப் போதும். பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்,” என்று பதில் சொன்னார். “அவர் என் ஜெபத்துக்கு அப்படிப் பதில் சொன்னாரல்லவா? அதனால் என் வாழ்க்கையில் அந்த நாளைப்போல மகிழ்ச்சியான நாள் வேறொன்றும் இல்லை,” என்று யாராவது சொல்வீர்களா? ஆனால், பவுலோ, “ஆகையால் கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மை பாராட்டுவேன்,” (2 கொரி. 12:9) என்று அவர் சொல்லுகிறார்.
இது வெறுமனே சந்தோஷப்படுதல் அல்ல. Exult. Not just rejoice, but exult. என்னைப் பொறுத்தவரை ஒருவன் எப்போது exult பண்ண முடியும் என்றால், நான் ஒருவரிடம் பத்துரூபாய் கேட்டேன். அவரோ கோடி ரூபாய் உனக்காக நான் தயார் செய்து வைத்திருக்கிறேன். நீ வெறும் பத்து ரூபாய் கேட்கிறாய்? என்று சொல்லி எனக்குக் கோடி ரூபாய் தந்தால் I come home exulting. இப்போது நான் வீடு திரும்பும்போது எப்படி வருவேன்? பத்து ரூபாய் கேட்டுப் போனேன். அவர் எனக்குக் கோடி ரூபாய் கொடுத்தார். இதுதான் exultation. சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து என் பலவீனங்களைக்குறித்து நான் மேன்மை பாராட்டுவேன். எதற்காக? கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி that the power of Christ may tabernacle over me.
அருமையான சகோதர, சகோதரிகளே! நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். இந்தக் கிருபையை தேவனுடைய மக்கள் தவற விடுகிறார்கள். கிறிஸ்துவின் கிருபை நம்முடைய வாழ்க்கையின் எல்லா இல்லாமைகளுக்கும், இயலாமைகளுக்கும், நம்முடைய வருத்தங்களுக்கும், நம்முடைய நெருக்கங்களுக்கும், குறைச்சல்களுக்கும், வேதனைகளுக்கும் போதுமானதென்றால், நிறைவானதென்றால், இந்த கிருபை என்னவென்று நாம் தேவனிடத்தில் விசாரிக்க வேண்டும். அந்தக் கிருபை கிறிஸ்துவே. ஆகவே தான் பவுல், “நான் பொருளாதார நெருக்கடியில் இருந்தேன். நீங்கள் என்னைப்பற்றி விசாரிப்பதற்கு மனமலர்ந்தபடியினால் நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். ஆனாலும், எந்த நிலைமையிலிருந்தாலும் நான் மனரம்மியமாயிருக்கும் இரகசியத்தைக் கற்றுக்கொண்டேன். என் குறைச்சலினால் நான் அப்படிச் சொல்கிறதில்லை. குறைச்சல் எனக்கு ஒரு பொருட்டல்ல,” (பிலி. 4:10, 11) என்று கூறுகிறார். பிலிப்பியர் 4:10-19யை நீங்கள் நன்றாய் வாசித்துப்பாருங்கள். “என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்கிறதில்லை. ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கும், திருப்தியாயிருக்கும், இரகசியத்தை நான் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும். வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும். எவ்விடத்திலும், எல்லாவற்றிலும், எப்போதும் எல்லாச் சூழ்நிலையிலும் திருப்தியாயிருக்கவும், பட்டினியாயிருக்கவும், குறைவுபடவும் நான் போதிக்கப்பட்டேன் (வ. 12). என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு”(வ. 13). எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலன் என்றால் என்ன பொருள்? ஒரு முள் இருக்கும்போது கிறிஸ்துவால் வாழ்கின்ற பெலன் எனக்கு உண்டு. என்னைப்பற்றி யாரும் நினைக்காததினால் நான் பொருளாதார நெருக்கடியில் இருக்கும்போது, குறைவுபடும்போது, கிறிஸ்துவால் வாழ்கிற பெலன் எனக்கு உண்டு என்று நீங்கள் ஆயிரம் காரியங்கள் அடங்கிய ஒரு பட்டியலை நீங்கள் வைத்துக்கொள்ளலாம்.
எல்லாச் சிறுமையிலும், எல்லா வருத்தத்திலும் தேள்களும், கொள்ளிவாய்ச் சர்ப்பங்களும், வறட்சியும் வனாந்தரமுமான பாதையிலே நாம் நடக்க நேர்ந்தாலும், “இதோ பார்! கிறிஸ்துவால் வாழ முடியும் என்பதற்கு என்னுடைய மகன் ஒரு சாட்சி,” என்ற ஒன்றேவொன்றைத் தேவன் நம்முடைய வாழ்க்கையிலே செய்துவிடுகிறார்.
எனவே குறைச்சல்களும், சிறுமைகளும், வருத்தங்களும், இல்லாமைகளும் வரும்போது நாம் கலங்கிவிட வேண்டாம். கிறிஸ்துவை உருவாக்குவதற்கு இதைத்தவிர வேறு வழி ஒன்றும் இல்லை. ஒரு mental academic knowledge வைத்து கிறிஸ்துவை நமக்குள் உருவாக்கிவிட முடியாது.
கிறிஸ்துவை நமக்குப் போதுமான நிறைவாக வழங்குவதே தேவனுடைய ஏற்பாடு. நாம் முதலாவது குறிப்பைப் பார்த்தோம். கிறிஸ்து எல்லா நன்மைகளின் நிழல்களுக்கு மெய்ப்பொருளாக இருக்கிறார். பழைய ஏற்பாட்டிலே தேவனுடைய மக்கள் தேவனுடைய நன்மைகளின் நிழல்களை மட்டுமே அனுபவித்தார்கள். ஆனால், புதிய ஏற்பாட்டில் நாம் அந்த நன்மைகளின் நிழல்களை அல்ல; அந்த நன்மைகளின் மெப்ப்பொருளாகவே கிறிஸ்துவை நாம் பெற்றிருக்கிறோம்.
இரண்டாவது, கிறிஸ்துவை நன்மையாக, நன்மையின் மெய்ய்பொருளாகக் கொண்டு வாழ முடியும் என்பதற்காக நாம் தேவனுடைய மக்களாக அழைக்கப்பட்டிருக்கிறோம். அதற்கென்று தேவன் நம்முடைய வாழ்க்கையின் சூழ்நிலைகளை அமைக்கிறார். நாம் பாவம் செய்வதற்கெல்லாம் கர்த்தர் நம்மைத் தண்டிக்க வேண்டுமென்றால் ஒவ்வொரு நாளும் நாம் தண்டனையின்கீழ்தான் வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும். நம் வாழ்க்கையின் எல்லா நெருக்கங்களும், வருத்தங்களும், இல்லாமைகளும் கிறிஸ்துவை அந்தத் தேவைக்கு நிரப்பீடாகக் காண்பிப்பதற்காக தேவனால் ஏற்பாடு செய்யப்படுகிறது. நம்முடைய வாழ்க்கையின் எல்லாச் சூழ்நிலைகளும், எல்லா இல்லாமைகளும் கிறிஸ்து அந்தச் சூழ்நிலைக்கு, அந்த இல்லாமைக்குப் போதுமானவர் என்பதை நிரூபித்து கிறிஸ்துவை நமக்குள் உருவாக்குவதற்காக தேவன் அந்த வேலையைச் செய்கிறார். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை வாழ விசுவாசத்தைத் தேவன் தருகிறார். ஆமென்.