Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

நற்செய்தியை அறிவிக்கும் மக்களுடைய வாழ்க்கை (பாகம் 01)

Transcribed from a message spoken in November 8, 2015 in Chennai

By Milton Rajendram

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து, “நீங்கள் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்” (அப். 1:8) என்று சொன்னார். நாம் நற்செய்தி ஊழியத்தை நிறைவேற்ற வேண்டுமானால் நம் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் அல்லது அதன் முக்கியத்துவம் என்னவென்று ஒருசில குறிப்புகளை நான் இப்போது உங்களுக்குச் சொல்லுகிறேன்.

1. நற்செய்தியை அறிவிப்பது நம் பொறுப்பு

முதலாவது, நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவிப்பது நம் பொறுப்பு. 1 கொரிந்தியர் 9ஆம் அதிகாரம் 16, 17 ஆம் வசனங்களிலே அப்போஸ்தலனாகிய பவுல் இப்படிச் சொல்கிறார். “சுவிசேஷத்தை நான் பிரசங்கித்து வந்தும் மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை. அது என்மேல் விழுந்த கடமையாயிருக் கிறது. சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால் எனக்கு ஐயோ.” “அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; அது என் பொறுப்பாக இருக்கிறது; நற்செய்தியை நான் அறிவிக்காவிட்டால் எனக்கு ஐயோ!” 

எல்லாக் குடும்பங்களிலும் பிள்ளைகள் இருக்கின்றார்கள். பிள்ளைகள் தங்கள் பெற்றோருடைய அன்பையும், ஆதரவையும், எல்லா வளங்களையும் அனுபவித்து மகிழ்கிறார்கள். வளரும்போது அந்தப் பிள்ளைகள் குடும்பத்திலே பொறுப்புகளை எடுக்கின்றார்கள். “என்னுடைய பிள்ளை கடைசிவரை எந்தப் பொறுப்யையும் எடுக்க வேண்டாம். என்னுடைய அன்பையும், ஆதரவையும், வளங்களையும் அனுபவித்துக்கொண்டே இருந்தால் போதும்,” என்று சொல்கின்ற பெற்றோர்கள் யாராவது இருந்தால் நீங்கள் கைகளை உயர்த்துங்கள். “இல்லை, என்னுடைய அன்பு, ஆதரவு, வளங்களையெல்லாம் என் பிள்ளை பெற்று அனுபவித்துமகிழ வேண்டும். ஆனால், என்னுடைய பிள்ளை பொறுப்புகளைச் சுமப்பதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும்,” என்று விரும்புகின்ற பெற்றோர்கள் கைகளை உயா;த்துங்கள். அதை விரும்பாத பெற்றோர்களே இல்லை.

தேவனுடைய வீட்டிலே அல்லது தேவனுடைய சில பொறுப்புகளை ஒரு சிலர் சுமப்பார்கள் என்று நாம் நினைக்கிறோம். “நாம் சுமக்க வேண்டியதில்லை. ஏனென்றால், நாங்கள் ரொம்பப் பெரிய ஆள் கிடை யாது. நாங்கள் ரொம்ப சின்ன ஆட்கள்,” என்று நாம் நினைக்கிறோம். இப்படிச் சொல்வதும், நினைப்பதும் ரொம்பத் தாழ்மைபோலத் தோன்றலாம். ஆனால், இது தாழ்மை அல்ல. இது ஒரு ஏமாற்று வேலை. நீங்கள் ஏமாற்றவில்லை. தேவனுடைய பகைவனாகிய சாத்தான் தேவனுடைய பிள்ளைகளை ஏமாற்றுவதற்காக அவன் செய்கின்ற ஒன்று. “நீ எல்லாம் ரொம்பப் பெரிய ஆள் கிடையாது. உனக்கு அப்படிப்பட்ட பொறுப்புகளெல்லாம் இல்லை. இந்தப் பொறுப்புகள் எல்லாம் அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள், மேய்ப்பர்கள், போதகர்கள் இவர்கள் நிறைவேற்றுவார்கள். நீ செய்வதற்கு ஒன்றுமில்லை,” என்று சாத்தான் சொல்வான்.

உண்மையுள்ள வேலைக்காரர்

நற்செய்தயை அறிவிப்பது நம்முடைய பொறுப்பு. மத்தேயு 24ஆம் அதிகாரம் 45, 46ஆம் வசனங்களிலே நாம் வாசிக்கின்றோம். “எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் யாவன்? எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரனே பாக்கியவான்.” ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நம்மை ஊழியக்காரர்களாக, வேலைக்காரர்களாக, பணிவிடைக்காரர்களாக நியமித்து, நம்முடைய கைகளிலே ஒரு பொறுப்பைக் கொடுத்திருக்கிறார். அவருடைய மற்ற வேலையாட்களுக்கு ஏற்ற காலத்திலே உணவைக் கொடுக்கிற பொறுப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார். தேவன் கொடுத்த அந்தப் பொறுப்பை நிறைவேற்றுகிற உண்மையும் விவேகமுமுள்ள வேலைக்காரன் யாவன்? எஜமானாகிய இயேசுகிறிஸ்து வரும்போது, அவர் கொடுத்த பொறுப்பிலே உண்மையும் விவேகமுமாயிருக்கிற மனிதன் பாக்கியவான் என்று கருதப்படுவான்.

இந்த உலகத்தில் யாரைப் பாக்கியவான் என்று நினைக்கிறார்கள்? நல்ல படிப்பு இருக்கிறது, வேலை இருக்கிறது, வருவாய் இருக்கிறது, வீடு இருக்கிறது, வாசல் இருக்கிறது, பிள்ளைகள் இருக்கின்றார்கள். உடனே இவர் யார்? “இவர் பாக்கியவான்” என்று சொல்லிவிடுவார்கள். “யார் பாக்கியவான், யார் பாக்கியவான் இல்லை,” என்பது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து, நம்முடைய எஜமானர், நம் முடைய ஆண்டவர், நம்முடைய முதலாளி திரும்பிவரும்போது புலப்படும். அவர் நமக்குக் கொடுத்த பொறுப்பை உண்மையோடும் விவேகத்தோடும் நாம் நிறைவேற்றினால் நாம் உண்மையிலேயே பாக்கியவான்களாக இருப்போம். நாம் உண்மையற்றவர்களாக, விவேகமற்றவர்களாக இருந்தால் நாம் பாக்கியவான்களாய்க் காணப்படமாட்டோம். இதை நம்முடைய மனதிலே இருத்திக்கொள்ள வேண்டும். என்றைக்கு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நம்மை இரட்சித்தாரோ அன்று தொடங்கி அவருடைய நற்செய்தியைப் பிறருக்கு அறிவிக்கின்ற, பகிர்ந்துகொள்கின்ற பொறுப்பு நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

என்னால் இப்படிக்கூட சாட்சிகூற முடியும். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை சந்தித்த நாட்களிலே நாம் பகிர்ந்துகொண்ட நற்செய்தி மிகவும் வீரியமுள்ளதாக இருந்தது. அன்று நாம் உண்மையுள்ளவர்களாக இருந்தோம். காலம் செல்லச்செல்ல நம்முடைய உண்மை குறைந்துவிடுகிறது. ஏன் என்று கேட்டால் இந்த வாழ்க்கையினுடைய மற்றப் பொறுப்புகள் எல்லாம் நம்மை நெருக்குகின்றன. “லௌகீகக் கவலைகளினாலும், பெருந்திண்டியின் மயக்கத்தினாலும் உங்கள் இருதயங்கள் பாரமடையாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.” ”என்னுடைய உடல்நலம் சரியில்லை. என் மனைவியைப் பார்க்க வேண்டும். என் வேலையிலே அழுத்தம் இருக்கிறது. என் பிள்ளைகளுக்கு நான் பாடுபார்க்க வேண்டும்,” என்பதுபோன்ற காரியங்களில் மூழ்கிவிடுவதால், நாம் ஆண்டவராகிய இயேசுவைச் சந்தித்த நாளிலே இருந்த அந்த உண்மையும் விவேகமும் நம்மிடத்திலே குறைந்துவிடுகிறது. இது முதலாவது.

எந்த மனிதனும் நம்மேல் பொறுப்பைச் சுமத்துவதில்லை. எந்த மனிதனையும் பிரியப்படுத்துவதற்காக நாம் நற்செய்தியை அறிவிப்பதில்லை. ஒரேவொருவரைப் பிரியப்படுத்துவதற்காக நாம் நற்செய்தியை அறிவிக்கிறோம். என்மேல் அன்புகூர்ந்து, எனக்காகத் தம்மையே தந்த என் ஆண்டவரைப் பிரியப்படுத்துவதற்காக மட்டுமே அந்தப் பொறுப்பை நிறைவேற்றுகிறேன்.

2. நற்செய்தியை அறிவிப்பதற்கு அன்பே காரணம்

இரண்டாவது, நம்முடைய கர்த்தராகிய இயேசுவின்மேலும், அவர் யாருக்காக உயிரை விட்டாரோ அந்த மனிதர்கள்மேலும் கொண்ட அன்பினால் நாம் நற்செய்தியை அறிவிக்கிறோம். நற்செய்தியை அறிவிப்பது ஒரு தொழில் அல்ல. “இந்தத் தொழிலே மற்ற போட்டியாளா;களைவிட நான் அதிகம் சம்பாதிக்க வேண்டும்,” என்பதற்காக நான் நற்செய்தியை அறிவிக்கவில்லை. பிலிப்பியர் 1ஆம் அதிகாரத்திலே அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார். “சிலர் பொறாமையினாலும், விரோதத்தினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள்.” நாம் ஒருநாளும் வஞ்சகத்தினால், பொறாமையினால் நற்செய்தியை அறிவிக்கக் கூடாது அல்லது “இந்த உலகத்திலே ஏதோவொன்றை இலாபமாகச் சம்பாதித்தால் அவனைப் பெரியவன் என்று கருதுகிறார்கள். இப்பொழுது நான் இயேசுவை ஏற்றுக்கொண்டிருக்கிறேன். இங்கு எத்தனை ஆட்களை நான் பிடிக்கிறேனோ அந்த அளவுக்கு என்னைப் பெரிய ஆளாகக் கருதுவார்கள். ஆகவே, நான் நற்செய்தியை அறிவிக்கிறேன்,” என்பது வஞ்சகத்தினால் நற்செய்தியை அறிவிப்பது. நாம் நற்செய்தியை அறிவிப்பதற்கு ஒரே காரணம் நாம் நம் ஆண்டவராகிய இயேசுவின்மேல் கொண்ட அன்பு. அவர்யார்மேல் அன்புகொண்டு தம் உயிரையே ஈந்தாரோ அந்த மக்கள்மேல் நாமும் அன்புகூர்ந்து நற்செய்தியை அறிவிக்க வேண்டும்.

யோவான் 21ஆம் அதிகாரம் 15ஆம் வசனத்தை நான் இப்பொழுது உங்களுக்குச் சொல்கிறேன். முழு யோவான் 21ஆம் அதிகாரத்தை குறைந்தது ஐந்துமுறை வாசியுங்கள். ஐந்துமுறை வாசித்தாலும் போதாது. யோவான் 21ஆம் அதிகாரத்திலே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்தபிறகு ஒரு கடற்கரையிலே தம் சீடர்களைச் சந்திக்கிறார். 15ஆம் வசனத்திலே அவர் பேதுருவைப் பார்த்து, “யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்கள் எல்லாரிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?” என்று கேட்கிறார். பேதுரு, “ஆம் ஆண்டவரே நான் உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர்,” என்று சொல்கிறார். உடனே ஆண்டவர், “அப்படியென்றால் என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக,” என்றார். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ரொம்ப sentimental ஆன அன்பை எதிர்பார்க்கிறவர் அல்ல.

அவர் இந்தப் பூமியிலே வாழ்ந்த காலத்திலே யோவான் பேதுரு யாக்கோபு இவர்களையெல்லாம் பார்த்து, “Brothers do you know how much I love you?” என்று சொல்வதெல்லாம் இல்லை. ஆண்டவ ராகிய இயேசு தம் அன்பை “Dear brothers I love you. Dear sisters I love you” என்று சொல்லிக் காண்பிக்கவில்லை. அவர் தம் அன்பை எப்படிக் காண்பித்தார்? “ஒருவன் தன் சிநேகிதனுக்காக உயிரைக் கொடுப்பதைவிட உயர்ந்த அன்பு இல்லை.” ”நான் உங்கள்மேல் அன்பாயிருக்கிறேன்,” என்று அவர் தம் அன்பை சொல்லிக் காண்பிக்கவில்லை. அன்பினால் அவர் தம்மை ஈந்தார், தம்மைப் பலியாக்கினார், தமக்குரியவைகள் எல்லாவற்றையும் பலியாக்கினார். ஆகவே, “:நீ என்மேல் அன்பாயிருக்கிறாயா?” “ஆம், ஆண்டவரே நான் உம்மை நேசிக்கிறேன்.” ”அப்படியென்றால் ஒவ்வொரு நாள் காலையில் நீ எழுந்தவுடன் என்ன சொல்ல வேண்டும்? ஆண்டவரே நான் உம்மை நேசிக்கிறேன்,” என்று சொல்ல வேண்டும் என்று சொன்னாரா? அப்படிச் சொல்வதில் எந்தத் தவறும் இல்லை.

ஆனால், “ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன்,” என்று பேதுரு சொன்னதுபோல நாமும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவினிடத்தில் சொல்வோமென்றால் அவருடைய மாறுத்தரம் என்னவாக இருக்கும்? “என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக. நீ என்மேல் அன்பு வைத்திருப்பது உண்மையானால் என்னுடைய அன்பின் இருதயத்தின் ஒரு நிழலாவது உன்னுடைய இருதயத்திலே உண்டாயிருக்கும். நான் எப்படி மனிதர்கள்மேல் அன்புவைத்து என்னுடைய உயிரையே தந்தேனோ அதுபோல நீயும் அன்புகூர்ந்து மனிதர்களுக்காக உன் உயிரை தர வேண்டும். அவர்களை நீ மேய்ப்பாய்,” என்று சொல்வார்.

நன்றாய்க் கவனிக்க வேண்டும். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மனிதர்கள்மேல் அன்புகூர்ந்ததுபோல் நாம் மனிதர்கள்மேல் அன்புகூர்வது இல்லை. நம்முடைய அன்பு மிகவும் பழுதுள்ளது. ஆனால், நாம் மற்றவர்கள்மேல் காண்பிக்கின்ற அன்பு அதே தன்மையுள்ளது. தன்மையில் வேறுபாடு இல்லை. அளவில் வேறுபாடு இருக்கிறது. அதே தெய்வீக அன்போடு நாம் மனிதர்களிடத்தில் அன்புகூர வேண்டும். எல்லா மனிதர்களிடத்திலும் நாம் அன்புகூர வேண்டும். இந்த உலகத்திலே மிகக் கொடிய மனிதன் ஒருவன் இருப்பானென்றால் அவனுக்கும் தேவனுடைய அன்பைக் காண்பிக்கிறதற்கு அவன் பாத்திரன்.

நீங்கள் பதில் சொல்ல வேண்டாம். நான் ஒரு கேள்வி கேட்கிறேன். உங்கள் மனதிலே நீங்கள் பதில் சொல்லுங்கள். உங்கள் வாழ்க்கையில் இதுவரை சந்தித்த மிகக் கொடிய, மிகத் தீய, மிகக் கடூரமான மனிதன் யார்? பதில் சொல்லாதீர்கள். மனதிற்குள்ளே பதில் சொல்லுங்கள். அதாவது “இவனையெல்லாம் கொலை பண்ணனும்” என்று எப்படியாவது யாரையாவதுபற்றி யோசித்திருப்பீர்கள். நான் யோசித்தது உண்டு. உண்மை. “இவனெல்லாம் கையிலே கிடைத்தால் கண்டம் துண்டமாக வெட்டணும்,” என்று நம் வாழ்க்கையில் ஏதோவொரு கட்டத்தில், ஏதோவொரு மனிதனைப்பற்றி நினைக்காத மனிதர்களே இல்லை.

அந்த மனிதன் தேவனுடைய அன்பிற்கு உரியவனா? அவன் நம்முடைய அன்பிற்குரியவனா? எந்த மனிதனும் தேவனுடைய அன்பிற்குப் புறம்பானவன் அல்ல. எந்தப் பாவமும் ஒரு மனிதனை தேவனுடைய அன்பிற்குப் புறம்பாகத் தள்ளுவது இல்லை. “பிரதர், இந்தப் பாவம் செய்தவனைக்கூட மீட்டுக்கொள்வார். ஆனால் இதற்குமேலே ஒருவன் பாவம் செய்துவிட்டான் என்று வைத்திருப்போமே அவனை தேவன் அன்புகூர்ந்து மீட்க முடியாது,” என்று எந்தப் பாவத்தையும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சொல்லவில்லை. சிலர், “தேவன் அன்புகூரலாம். நாம் ஒன்றும் இயேசுநாதர் இல்லை பிரதர்,” என்று சொல்வார்கள். இது ரொம்ப தாழ்மையா? தங்களுடைய சுயத்தை இறுக்கமாக காத்துக்கொள்வதற்கு மனிதர்கள் கொடுக்கிற ஒரு சாக்குப்போக்குதான், “நான் ஒன்றும் இயேசு அல்ல,” என்று சொல்வதின் பொருள். அதாவது நான் என்னை ஆளுகைசெய்ய விரும்புகிறேன்.

தேவன் அப்படி அன்புகூருவாரென்றால் நாமும் அப்படியே அன்புகூர வேண்டும். 1 யோவான் 3ஆம் அதிகாரம் 16ஆம் வசனமும், யோவான் 3ஆம் அதிகாரம் 16ஆம் வசனமும் நம்மெல்லாருக்கும் தெரியும். “தேவன் தம் ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” என்பதைத் தெரியாத இரட்சிக்கப்பட்ட தேவனுடைய மக்கள் இருப்பது அரிது. 1 யோவான் 3:16 தெரியுமா? “அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்.” அன்பு இன்னதென்று இந்தப் பூமியிலே நான் எப்படி அறிவது? இயேசு எனக்காக, கொடிய மனிதனாகிய எனக்காக, அன்புகூர்ந்ததாலே அன்பு இன்னதென்று நான் அறிந்திருக்கிறேன். நான் அன்புகூரத்தக்க மனிதனல்ல. என் உள்ளான நிலை என்னவென்று உங்களுக்குத் தெரிந்தால் நீங்கள் என்மேல் அன்புகூர மாட்டீர்கள்; என்னை மதிக்கமாட்டீர்கள். இப்படிப்பட்ட மனிதன்மேல் அவர் அன்புகூர்ந்து தம்மையே பலியாக்கினதினாலே அன்பு என்றால் என்று நான் அறிந்திருக்கிறோம். இந்த உலகத்திலே நாம் வேறு எதன் மூலமாகவும் அன்பு என்ற ஒன்றை அறிய முடியாது.

அந்த வசனத்தைத் தொடர்ந்து வாசிப்போம். “நாமும் சகோதரருக்காக ஜீவனைக் கொடுக்க கடனாளிகளாயிருக்கிறோம்.” உடனே, “சகோதரருக்காகத்தான் ஜீவனைக் கொடுக்க வேண்டும். மற்ற மனிதர்களுக்காக ஜீவனைக் கொடுக்க வேண்டாம்,” என்று சொல்லாதீர்கள். இயேசுகிறிஸ்து சகோதரர்களுக்காக ஜீவனைக் கொடுக்கவில்லை. மனிதர்களுக்காக, பாவ மனிதனுக்காக, நன்றியறியாத துரோகியான மனிதனுக்காக, தீய மனிதனுக்காக ஜீவனைக் கொடுத்தார். 2 கொரிந்தியர் 5ஆம் அதிகாரம் 14ஆம் வசனத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார்: “கிறிஸ்துவனுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது.” ஆகவே, என்னுடைய இரண்டவாது குறிப்பு: நாம் ஏன் நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்றால் ஆண்டவராகிய இயேசுவின்மேலும் மனிதர்கள்மேலும் கொண்ட அன்பினால் நாம் நற்செய்தியை அறிவிக்க வேண்டும். ஒரு மனிதன்மேல் அன்பு இல்லை என்றால், ஒரு குடும்பத்தின்மேல் அன்பு இல்லை என்றால், நாம் அவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க முடியாது. தொழில்ரீதியாக, தொழில் முறையில் வேண்டுமானால் நாம் நற்செய்தியை அறிவிப்போம். ஒருவேளை நாம் முழுநேர வேலைக்காரர் என்று வைத்துக்கொள்வோமே. என்னுடைய தொழில் என்னோடு கூடிவருகிற மக்களுடைய எண்ணிக்கையைச் சார்ந்திருக்கிறது என்றால் நான் போய் so-called நற்செய்தியை அறிவிப்பேன். அதுவல்ல. ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் தேவனுடைய ஆசீர்வாதத்தைக் கொண்டுவருவதற்காக நாம் உயிரையும் கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.

தாவீதின் அனுபவம்

இது உங்களுக்குத் தெரியும். தாவீது கோலியாத்தோடு போரிடச் செல்வதற்கு முந்தி இராஜாவாகிய சவுல் தாவீதைப் பார்த்து, “நீ இளைஞன். அவனோ தன் சிறு வயதுமுதல் யுத்தவீரன். நீயோ ஆடுகளை மேய்க்கிற சாதாரணமான வாலிபன். அவன் பல போர்களங்களைக் கண்ட, பல வெற்றிகளைக் கண்ட அனுபவசாலியான வீரன். நீயோ பார்த்தால் சிறுபிள்ளைபோல் இருக்கிறாய், இளம் வாலிபன்,” என்று சொன்னான். அப்போது தாவீது தன்னுடைய வாழ்க்கைக் குறிப்பை அவனுக்குச் சொல்லுகிறான். “நீங்கள் கோலியாத்தினுடைய resume பார்த்தீர்கள். என்னுடைய C.Vயை நான் சொல்கிறேன்,” என்கிற பாணியில் தாவீது சவுலைப் பார்த்து, “உம்முடைய அடியான் என் தகப்பனுடைய ஆடுகளை மேய்த் துக்கொண்டிருந்தபோது ஒருவிசை ஒரு சிங்கமும் ஒருவிசை ஒரு கரடியும் வந்து, மந்தையிலிருக்கிற ஒரு ஆட்டைப் பிடித்துக்கொண்டது. உம்முடைய அடியானாகிய நான் என் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது அந்தச் சிங்கமும் கரடியும் வந்தபோது நான் பார்த்தேன்: யார் முக்கியம்? நாம் முக்கியமா? ஆடு முக்கியமா? உயிர் முக்கியமா? ஆடு முக்கியமா? என்னுடைய உயிர்தானே முக்கியம். என்னுடைய வீடு முக்கியம். என்னுடைய மனைவி முக்கியம். என்னுடைய பிள்ளைகள் முக்கியம். என்னுடைய வேலை முக்கியம். என்னுடைய எதிர்காலம் முக்கியம். எனவே, ஒரே ஓட்டமாய் ஓடிவிட்டேன். தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போயிற்று. என் உயிருக்கு வந்தது, ஒரு ஆட்டுக் குட்டியோடு போயிற்று. நான் போய் என் அப்பாவிடம் சொன்னேன். என் அப்பா என்னைப் பார்த்து ‘நீ ரொம்ப புத்திசாலி பிள்ளையப்பா. இந்தமாதிரி அடுத்த தடவை சிங்கம் கரடி வந்தால் ஒரே ஓட்டமாக ஓடி வீட்டுக்கு வந்துவிடு’ என்று பாராட்டினார்,” என்று சொல்லவில்லை. மாறாக, “நான் என்ன செய்தேன் தெரியுமா? நான் அதைத் தொடர்ந்துபோய், அதை அடித்து, அதை அதின் வாய்க்குத் தப்புவித்தேன். அது என்மேல் பாய்ந்தபோது நான் அதின் தாடியைப் பிடித்து, அதை அடித்துக் கொன்றுபோட்டேன். அந்தச் சிங்கத்தையும் அந்தக் கரடியையும் உம்முடைய அடியானாகிய நான் கொன்றேன். நான் அதைத் தொடா;ந்து போனேன். அது என்னைத் தொடர்ந்து வரவில்லை. நான் அதைத் தொடர்ந்து போய் அதை அடித்து அதை அதின் வாய்க்கு தப்புவித்தேன். அது என்மேல் பாய்ந்தபோது நான் அதின் தாடியை பிடித்து அதை அடித்து கொன்று போட்டேன்,” என்று சொன்னான். தாவீது ரொம்ப சின்ன பையனாக இருக்கிறானே என்பதுதான் சவுலின் கணிப்பு. வெறுமனே பீற்றுவதற்காக அல்ல. மாறாக, சவுலுடைய இருதயத்தைத திடப்படுத்துவதற்காக தாவீது சொல்கிறான். “நான் அதைத் தொடா;ந்து போய் அந்த ஆட்டுக்குட்டியைக் காப்பாற்றி, சிங்கத்தின் தாடையை நான் கிழித்துப்போட் டேன்,” என்று சொல்கிறான்.

வெற்றி வருமா? நாம் அதைக் கிழிப்போமா அல்லது அது நம்மைக் கிழிக்குமா என்று நமக்குத் தெரியாது. ஆனால் உண்மையிலேயே நற்செய்தி அறிவிக்கின்ற ஒரு மனிதனுடைய இருதயம் எப்படி இருக்க வேண்டுமென்றால் “என்னவானாலும் சரி; இந்த மனிதனை, இந்த மனுஷியை, இந்தக் குடும்பத்தை சிங்கத்தினுடைய வாயிலிருந்து, பேயினுடைய வாயிலிருந்து, நாங்கள் மீட்போம்,” என்கிற அன்பின் இருதயம் இருந்தால்தான் நாம் நற்செய்தி அறிவிக்க முடியும்.

நான் இப்பொழுது மேலும் மூன்று குறிப்புகளைச் சுருக்கமாகச் சொல்லுகிறேன். ஞாபகத்தில் நீங்கள் வசதியாய் வைத்துக்கொள்வதற்காக இந்த மூன்று குறிப்புகளை நான் இப்படிச் சொல்கிறேன். கேட்பது, தேடுவது, தட்டுவது.

3. கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள்

ஏற்கெனவே நான் இரண்டு குறிப்புகளைச் சொன்னேன். முதல் இரண்டு குறிப்புகள் என்ன? 1. முதலாவது குறிப்பு, தேவன் நமக்குப் பொறுப்பைக் கொடுத்திருக்கிறார். நற்செய்தியை அறிவிப்பது முதல்நாள் தொடங்கி நம்முடைய பொறுப்பு. 2. இரண்டாவது, கர்த்தர்மேலும் மனிதர்கள்மேலும் கொண்ட அன்பினால் நாம் நற்செய்தியை அறிவிப்பது. 3. மூன்றாவது கேட்பது.  4. நான்காவது தேடுவது.  5. ஐந்தாவது தட்டுவது.  ஒரு வசனத்தின் அடிப்படையிலே இந்த மூன்று வார்த்தைகள் வருகின்றன. கேளுங்கள் தரப்படும்; அப்படித் தரப்படாவிட்டால் தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்É;அப்படிக் கண்டடையாவிட்டால், தட்டுங்கள் திறக்கப்படும்.

3. கேளுங்கள்-ஜெபம்

நன்றாய்க் கவனிக்க வேண்டும். நாம் தேவனுடைய மக்களாக இருப்பதால் நாம் கடுமையாக உழைக்க வேண்டியது இல்லை என்ற ஒரு பொய்யான கருத்து தேவனுடைய மக்களுக்கு உண்டு. நாம் உழைக்க வேண்டாம், ஜெபித்தால் போதும், கர்த்தர் எல்லாவற்றையும் செய்துவிடுவார் என்று தேவனுடைய மக்கள் பலர் சொல்வதுண்டு. “எப்படி பிரதர் தேர்வில் வெற்றிபெறுவது?” என்று கேட்டால், “ஜெபம் பண்ணுங்கள் பிரதர், தர்ச்சிபெற்றுவிடுவோம்,” என்பார்கள். “பிரதர், எப்படி ஒரு நல்ல வேலை கிடைக்கும்?” என்று கேட்டால், “ஜெபம் பண்ணுங்கள் பிரதர் நல்ல வேலை கிடைக்கும்,” என்பார்கள். ஜெபத்தை கடினமான உழைப்பிற்கு ஒரு பதிலீடாக, ஒரு மாற்றீடாக, பயன்படுத்துகின்ற பொய்க்கருத்து தேவனுடைய மக்களுக்கு உண்டு.

ஏன் ஜெபிக்க வேண்டும் என்பதற்கான சாரணத்தைச் சொல்கிறேன். தேவனை அறியாத மனிதர்கள் தேவனுடைய பகைவனாகிய சாத்தானின் பிடியில் அவனுடைய சிறைச்சாலையில் கட்டுண்டிருக்கிறார்கள் என்று வேதம் சொல்கிறது. அவர்கள் ரொம்ப படித்திருப்பார்கள். ரொம்ப நாகரிகமான, பண்பாடுள்ள மனிதர்களாக இருப்பார்கள். ஆனால், அவர்கள் சாத்தானுடைய கைதிகள். உடனே, நீங்கள் போய் அவா;கள் முகத்தை பார்த்து, “நீங்கள் சாத்தானுடைய கைதிகள்,” என்று சொல்லக்கூடாது. உங்கள் வார்த்தை கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேற்றப்பட்டதாயும் இருக்க வேண்டும். உண்மை நிலைமை நமக்குத் தெரிய வேண்டும்.

ஒரு மனிதன் சாகப் போகிறான் என்றால், “தம்பி நான் உண்மையைச் சொல்கிறேன். நீ சாகப்போகிறாய்,” என்று சொல்கிறவன் நல்ல மருத்துவர் அல்ல. அதை எப்படிச் சொல்ல வேண்டுமோ அப்படிச் சொல்ல வேண்டும்.

மனிதனின் நிலைமை

மனிதனுடைய நிலைமை என்னவென்றால் அவர்கள் சாத்தானால் சிறைப்பிடிக்கப்பட்டு அவனால் கட்டுண்ட கைதிகளாக இருக்கிறார்கள், சிறைக்கைதிகள். 2 தீமோத்தேயு 2ஆம் அதிகாரம் 25, 26 ஆம் வசனங்கள் கூறுகின்றன. “பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கம் தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும் சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்க வேண்டும்.” மனிதர்களுடைய நிலைமை என்ன? அவர்கள் பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் வலையில் பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மயக்கத்திலிருக்கிறார்கள்.

2 கொரிந்தியர் 4ஆம் அதிகாரம் 2-4 வசனங்கள். அவர்களுடைய இருதயங்கள் குருடாக்கப்பட்டிருக்கின்றன; ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினுடைய ஒளி அவா;களுடைய இருதயங்களில் பிரகாசமாய் இராதபடிக்கு இந்த உலகத்தின் அதிபதியானவன் அல்லது இந்த உலகத்தின் தேவன், இந்தப் பிரபஞ்சத்தின் தேவன், அவர்கள் இருதயங்களைக் குருடாக்கியிருக்கிறான்; அவர்களுடைய மனம் இருளடைந்திருக்கிறது; அவர்களுடைய இருதயங்கள் கடினப்பட்டிருக்கின்றன. இது எபேசியர் 4ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம்.

நாம் என்ன வேலை செய்ய முற்படுகிறோம் என்பது நமக்குத் தெரிய வேண்டும். நாம் செய்ய முற்படுகிற, செய்யப்போகிற வேலையினுடைய கனபரிமாணங்கள் தெரியாமல் நாம் அதில் ஈடுபடும்போது அரையுங்குறையுமாக நாம் அதிலிருந்து பின்வாங்கிவிடுவோம். “ஓ! எவ்வளவு பெரிய வேலை! எவ்வளவு கஷ்டமான வேலை! இவ்வளவு போராட்டம் நிறைந்த வேலை என்றால் நான் இதில் ஈடுபட் டிருக்கவே மாட்டேன். நான் என்ன நினைத்தேன் என்றால், சும்மா போய் அந்த கம்பை வைத்தவுடனே அந்தப் பழம் பொலபொலவென்று விழுந்துவிடும் என்று நினைத்தேன்,” என்று சொல்லத் தோன்றும்.

ஒரு மனிதனுக்கு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியைக் கொண்டுபோகும்போது, அவனுடைய வாழ்க்கைக்குள் கிறிஸ்துவைக் கொண்டுபோகும்போது பிசாசானவன் ஒரு பெரிய அரண் சுவரையே கட்டியிருப்பான். ஆகவேதான் போர் சூழ்கையில் களத்தினில் காலூன்றி நின்றிட என்ற பாடலை நாம் பாடினோம். நற்செய்தியைக் கொண்டுபோய்ப் பாருங்கள். தேவனுடைய பகைவனாகிய சாத்தான் உங்களைச் சுற்றிலும் போர் மூளச் செய்வான். நீங்கள் போர்க்களத்தில் நிற்க வேண்டியிருக்கும். உங்கள் வேலையை மாற்றுவான். பிள்ளைகளுக்கு உடல்நலம் இல்லாமல் போகும் அல்லது உங்கள் வேலையே போகலாம். “பிரதர் , என்ன பிரதர்? நீங்கள் சொல்வது ரொம்ப நல்ல செய்தியாக இல்லையே!” என்று நீங்கள் அதிர்ச்சியடையலாம். நற்செய்தியை அறிவிக்கும்போது, ஒரு மனிதனை சாத்தானுடைய கண்ணியிலிருந்து, வலையிலிருந்து, மயக்கத்திலிருந்து, இருளிலிருந்து கொண்டுவருவது என்பது ஒரு போர். இதை நீங்கள் நன்றாக உணர்ந்துகொள்ள வேண்டும்.

நம் போராயுதங்கள்

இந்தப் போரிலே அவனுடைய ஆயுதங்களோடு ஒப்பிடத்தக்க வல்லமையுள்ள ஆயுதங்கள் இயற்கையாக நம்மிடத்தில் இல்லை. அவனுடைய ஆயுதங்களுக்கு ஈடுகொடுக்கிற இயற்கையான ஆயுதங்கள் நம்மிடத்தில் இல்லை. நற்செய்தி அறிவிக்கும்போது அவர்கள் வாதிடுவார்கள். பல கேள்விகள் கேட்பார்கள்: உலகத்தைப் படைப்பதற்குமுன்பு கடவுள் என்ன செய்துகொண்டிருந்தார். மனிதன்தான் அந்த மரத்தின் கனியைச் சாப்பிடுவான் என்று தெரியுமே; அப்படியிருக்க அவர் ஏன் அந்த மரத்தைப் படைத் தார்? இயேசுகிறிஸ்து தேவனை ‘பிதாவே’ என்று ஏன் அழைக்கிறார்? இயேசுகிறி;ஸ்து தன்னைத் தேவன் என்று ஒருபோதும் சொல்லவில்லையே; அப்படியிருக்க நீங்கள் ஏன் அவரைத் தேவன் என்று சொல்லுகிறீர்கள்? இப்படிப் பல கேள்விகள் கேட்பார்கள். யாராவது பெரிய ஞானிபோல் இந்தக் கேள்விகளைக் கேட்டால் நான் சொல்லமாட்டேன். ஆனால், அவர்கள் இப்படிக் கேள்வி கேட்கும்போது, “இந்தக் கேள்விகளெல்லாம் எங்களுக்குப் புதிதானவைகள் அல்ல,” என்று மனதிற்குள் நினைத்துகொள்வேன். அவர்கள் தங்கள் கேள்விக் கணைகளைத் தொடுக்கும்போது, “ஆ! எதிரி வீழ்ந்துவிட்டான்,” என்று அவர்கள் நினைப்பார்கள். இந்தக் கேள்விக் கணைகளுக்கு நாம் எப்படி ஈடு கொடுப்பது? “கடவுள் உலகத்தைப் படைத்தார் என்றால் கடவுளை யார் படைத்தது?” என்ற கேள்வியில் தொடங்கி “எப்படி இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்தார்? எப்படி இயேசுகிறிஸ்து ஒரு கன்னியினிடத்தில் உருவானார்?” என்று அவர்கள் கேள்விகளைக் காரசாரமாய் கேட்பார்கள். இந்தக் கேள்விகள் ஒன்றும் தேவனுடைய மக்களுக்குப் புதிதல்ல.

2 கொரிந்தியர் 10ஆம் அதிகாரம் 3-5 வசனங்களிலே அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார். “நாங்கள் மாம்சத்திலே வாழ்ந்தாலும் மாம்சத்தின்படி போர்புரிகிறவர்கள் அல்ல. எங்கள் போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல் அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது.” தேவன் நம்மை நிராயுதபாணிகளாக அல்லது இயற்கையான ஆயுதங்களைத் தரித்து பேயோடு போர் புரிவதற்கு நம்மை அனுப்புவதில்லை.

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரியவில்லை என்று நீங்கள் ஒருநாளும் மனம் சோர்ந்துவிட வேண்டாம். இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் கொடுத்தவுடனே அவர்களுடைய வாழ்க்கை நல்ல வாழ்க்கையாக மாறிவிடுமா? ஒரு கற்பனை செய்வோம். அவர்கள் கேட்கிற பத்துக் கேள்விகளுக்கும் நான் துல்லியமான பதில் கொடுக்கிறேன் என்று வைத்துக்கொள்வோம். உடனே அவர்கள் மனந்திரும்பி அவர்களுடைய வாழ்க்கை ஒரு நீதியான, அன்பான, பரிசுத்தமான, ஒளிமயமான வாழ்க்கையாக மாறி விடுமா? பத்துக் கேள்விகளுக்குப் பதில் கொடுத்தால் அவர்என்ன செய்வார்? பதினோராவது கேள்வியைக் கேட்பார்.

முழங்கால் ஜெபம்

நன்றாய்க் கவனிக்க வேண்டும். நற்செய்தியை அறிவிப்பதற்கு முந்தி யார் யாருக்கு நற்செய்தியை அறிவிக்க வேண்டுமென்று விரும்புகிறோமோ அவர்களுக்காகத் தொடர்ந்து நாம் ஜெபிக்க வேண்டும். இது நடைமுறைக்குரியது. நான் சொல்வேன். என்னுடைய அனுபவத்தில் நான் கல்லூரியில் படித்தபோது என்னுடைய விடுதியில் இருந்த ஐம்பது அறுபது பேர்களுக்காக ஏறக்குறைய ஒவ்வொரு வாரமும் நான் ஜெபித்தேன். ஒவ்வொருவருடைய பெயரையும் சொல்லி ஜெபம் பண்ணுகிற ஜெபத்தைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். முழங்காலில் நின்றுகொண்டு அறுபதுபேருடைய பெயர்களையும் சொல்லி அப்படியே அறை எண் 1றிலிருந்து அறை எண் 40வரைக்கும் கற்பனை செய்து ஒவ்வொருவராக ஒவ்வொரு அறையிலும் இருக்கிற மூன்று பேரையும் பெயர் சொல்லி, “ஆண்டவரே, கார்த்திகேயனை இரட்சியும். ஆண்டவரே, செல்வராஜை இரட்சியும். ஆண்டவரே, இவனை இரட்சியும், அவனை இரட்சியும்,” என்று ஜெபித்திருக்கிறேன். இது ஒரு வாரம் அல்ல. இந்த வாரமும் இதே அறுபது பேரை சொல்லி ஜெபம்பண்ணுவது. அடுத்த வாரமும் அதே அறுபது பேர். இது போர் அடிக்குமா அடிக்காதா? ரொம்பப் போர் அடிக்கும்.

“ஜெபிப்பது ரொம்ப இன்பமயமான பணி,” என்று சில பேர் சொல்வார்கள். “ரொம்பப் போர் அடிக்கிற பணி,” என்று சில பேர் சொல்வார்கள். அது எனக்கு தெரியாது. ஆனால், ஒன்று தெரியும். ஜெபிப்பது என்பது ஒரு “போர்”. ஜெபிப்பது இன்பமானதும்கூட. ஆனால், நாம் சமநிலை தவறக்கூடாது.

நிச்சயமாக நாம் சீராக, முறையாக, ஒழுங்கும் கிரமுமாக இவர்களுடைய இரட்சிப்புக்காக, இவர்கள் நற்செய்திக்குக் கீழ்ப்படிய வேண்டும், நற்செய்தியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஜெபித்தால் நிச்சயமாக தேவனுடைய பகைவனாகிய சாத்தான் முறியடிக்கப்படுவான். ஆகவேதான் பாடல் சொல்கிறது.

பகைவன் முறிந்தோடிட, சிறை உடைந்திட  கட்டுண்டோர் விடுபட்டிட, ஜெபிக்க கற்பியும். 

நம்முடைய போராயுதம் அவர்களுடைய தளத்திலிருந்து அவர்களோடு வாக்குவாதம் செய்வதல்ல. அவர்களோடு தர்க்கம் செய்வதல்ல. முதலாவது நம்முடைய போர் எங்கிருக்கிறது? ஜெபத்தில் இருக்கிறது. நான் இன்னும் ஒன்று சொல்வேன். தயவுசெய்து முடிந்தால் நீங்கள் முழங்கால்படியிட்டு ஜெபியுங்கள். நவீன கிறிஸ்தவர்கள் முழங்கால்படியிட்டு ஜெபிப்பதை ஒரு பொருட்டாய்க் கருதுவதில்லை. நடந்துகொண்டு ஜெபிப்பார்கள், நின்றுகொண்டு ஜெபிப்பார்கள், படுத்துக்கொண்டுகூட ஜெபிப்பார்கள். ஏனென்றால், “வேதாகமத்தில் ஒன்றும் இப்படி சட்டதிட்டம் இல்லை,” என்று அவர்கள் சொல்வார்கள். சட்ட திட்டம் எல்லாம் இல்லை என்று நானும் ஒத்துக்கொள்கிறேன். முழங்கால்படியிட்டு ஜெபித்தாக வேண்டும் என்று நியாயப்பிரமாணம் கொடுக்கவில்லை. ஆனால், ஒன்று எனக்குத் தெரியும். ஒரு மனிதன் முழங்காலில் நின்று தேவனை நோக்கிக் கூப்பிடுகிற அந்தக் கூப்பிடுதல் தேவனுடைய பார்வையிலே விலையேறப்பெற்றது. நான் சொல்கிறேன். ஒருவேளை முழங்கால்படியிடுகிற பயிற்சி இல்லையென்றால் தயவுசெய்து முழங்கால்படியிட்டு உங்கள் காரியங்களுக்காக நீங்கள் ஜெபியுங்கள்.

நான் இரண்டு வசனங்களை மேற்கோள்காட்ட முடியும். “நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்துவினுடைய பிதாவைநோக்கி முழங்கால்படியிட்டு ஜெபிக்கிறேன்” (எபே. 3:15) என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார். அதுபோல, அவர்கள் எபேசுவிலிருந்து புறப்பட்டுப்போகையில் “கடற்கரையிலே முழங்கால்படியிட்டு ஜெபித்தார்கள்” (அப். 21:5) என்றும் வாசிக்கிறோம்.

ஆகவே, “நீங்கள் எப்படி ஜெபிக்க வேண்டும்? முழங்கால்படியிட்டு ஜெபிக்க வேண்டும். முழங்கால்படியிடாத ஜெபம் எல்லாம் ஜெபமல்ல,” என்று நான் சொல்ல மாட்டேன். நின்றுகொண்டு ஜெபியுங்கள்; நடந்துகொண்டு ஜெபியுங்கள்; படுத்துக்கொண்டுகூட ஜெபியுங்கள். ஆனால், காரியம் மிகவும் தீவிரமானதென்றால் எப்படி ஜெபிக்க வேண்டும்? “ஆண்டவரே, இந்தப் பூமியிலே நான் சார்ந்துகொள்வதற்கு வேறு ஆயுதங்கள் இல்லை; வேறு வளங்கள் என்னிடத்தில் இல்லை. நீர் செய்தால் உண்டு. நீர் செய்யவில்லை என்றால் இல்லை. அப்படிப்பட்ட ஒரு நெருக்கமான, நிர்ப்பந்தமான நிலைக்கு நான் வந்திருக் கிறேன். நீர் செய்யவில்லை என்றால் என்னுடைய கதி அதோகதி. ஆனால், நீர் செய்வீர்,” என்பது முழங்கால்படியிட்டு ஜெபிக்கிற ஜெபம்.

கூட்டு ஜெபம்

தேவைப்பட்டால் கூடி ஜெபியுங்கள். மத்தேயு 18ஆம் அதிகாரம் 18-20ஆம் வசனங்களிலே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சொல்கிறார். “பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும். பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” அதற்குப்பிறகு, “அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக்குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்திலிருக்கிற என் பிதாவினால் அது உங்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்கு சொல்கிறேன்,” என்று சொன்னார்.

நன்றாய்க் கவனிக்க வேண்டும். தேவனுடைய மக்கள் ஒருமனப்பட்டு கூடி, “நாங்கள் இதைக் கட்டுகிறோம்,” என்று சொன்னால் பரலோகத்திலே ஆண்டவர் “ஆமென்” என்று சொல்கிறார். ஒன்று தெரியுமா? நாம் ஜெபிக்கிற ஜெபங்களுக்கு நாம் ‘ஆமென்’ சொல்கிறோமோ இல்லையோ, ஆனால் பரலோகத்திலிருந்து பிதாவின் வலதுபாரிசத்திலிருந்து ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து என்ன சொல்கிறார்? “இவன் என்ன ஜெபம் பண்ணுகிறான்! இவனுக்குப் போய் ‘ஆமென்’ சொல்ல வேண்டியிருக்குது!” என்று அவர் சொல்லவில்லை.

தேவனுடைய மக்கள் ஜெபிக்கும்போது உங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து “ஆமென்” என்று சொல்லுங்கள். “ஆண்டவரே, நாங்கள் இந்தக் கட்டுகளை அவிழ்க்கிறோம்,” என்று சொல்லும்போதும் அவர் என்ன செய்வார்? “ஆமென்” சொல்வார். தேவனுடைய மக்கள் ஒருமனப்பட்டு கட்டுவதற்காகவும், கட்டுகளை அவிழ்ப்பதற்காகவும் தேவன் காத்துக்கொண்டிருக்கிறார். நன்றாய்க் கவனிக்க வேண்டும். தேவனுடைய வார்த்தையை உதாசீனம் பண்ணக்கூடாது.

ஒருவேளை அது கணவன் மனைவியாக இருந்தால்கூட போதும். முக்கியமாக, கணவன்மார்களுக்குச் சொல்லுகிறேன். என்னமோ நம்முடைய மனைவிமார்கள் அந்த அளவுக்கு வீரியமுள்ள போர்வீராங்கனை இல்லை என்பது போலவும், நீங்கள் தனியாகப் போய் முழங்கால்போட்டு “நான் மட்டும் போர்க்களத்தில் நின்று ஜெபம் பண்ணுகிறேன்,” என்று ஜெபம் பண்ணவேண்டாம். உங்கள் மனைவியை உடன் போராளியாக நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள. எவ்வளவு காரியங்களை உங்கள் மனைவியோடு பகிர்ந்துகொள்ள முடியுமோ அவ்வளவு காரியங்களை, ஆவிக்குரிய காரியங்கள் உட்பட, எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளுங்கள். இல்லையென்றால் இந்தப் பெரிய போர்க்களத்திலே வெல்ல முடியாது. இரண்டுபேர் ஒருமனப்பட்டு ஜெபிக்கிற ஜெபம் தேவனுடைய பார்வையிலே விலையேறப் பெற்றது.

பல வேளைகளில் நாம் தேவனுடைய சித்தத்தைக் கண்டுபிடிக்கிற விதமே எப்படியென்றால் என்னுடைய சகோதரனுக்கும் அப்படிப்பட்ட ஒரு பாரம் இருக்கிறதா என்பதை நான் உறுதிசெய்ய வேண்டும். என்னுடைய சகோதரர்களுக்கு அப்படிப்பட்ட ஒரு பாரம் இல்லை என்றால் இது இன்னும் தேவனுடைய எண்ணமாக மாறவில்லை என்று நான் பெரும்பாலும் கணிப்பேன். நம்முடைய வாழ்க்கை துணைக்கும் அப்படி ஒரு எண்ணம் வர வேண்டும். “ஓ! இவருடைய இரட்சிப்புக்காக ஜெபிக்க வேண்டும,” என்ற பாரம் வர வேண்டும்.

4. தேடுங்கள்

நான்காவது தேடுவது. போன வாரம் நான் எசேக்கியேல் 35ஆம் அதிகாரத்தை மேற்கோள் காட்டினேன். யார் யாருக்கு நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறீர்களோ அவர்களுடைய பெயர்களை ஒரு நோட்டுப்புத்தகத்தில் எழுதி அவர்களுக்காக முறையாக ஜெபியுங்கள். ஒவ்வொரு வாரமும் அல்லது ஒவ்வொரு நாளும் ஜெபியுங்கள். முதலாவது நீங்கள் நூறு பேருக்காக ஜெபம் பண்ணுவீர்கள்.

ஒன்று சொல்கிறேன். நான் நடைமுறைபடுத்தாத எதையும் உங்களுக்குச் சொல்லவில்லை. “இவர் என்ன அவர் பாட்டுக்கு நூறுபேர் என்று சொல்விவிட்டுப் போகிறார். நூறு பேருக்கு ஜெபம் பண்ணனும் என்றால் எவ்வளவு அறுவையாக இருக்கும் தெரியுமா?” என்று நீங்கள் நினைக்கலாம். போர்க்களம் ரொம்ப சுவாரசியமாக இருக்குமா அல்லது அறுவையாக இருக்குமா? நீங்கள் நூறு பேருக்காக ஜெபியுங்கள். நீங்கள் ஜெபிக்கவில்லை. பரிசுத்த ஆவியானவரே உங்களில் ஜெபிக்கிறார். அப்படி ஜெபிக்கும்போது ஆறு மாதத்திற்குள் என்ன ஆகும் என்றால் ஒருசிலரைக் குறித்த பாரம் உங்களிடத்திலே வலுப்பெறும் அல்லது நீங்கள் ஜெபிக்கிற இந்த ஐம்பது பேரிலே ஒருசிலரை சந்திக்கிற ஒரு வாய்ப்பை தேவன் ஏற்படுத்துவார்.

நன்றாய்க் கவனியுங்கள். இந்த உலகத்திலே நற்செய்தியைக் கேட்பதற்கு ஆட்களே இல்லை என்கிற சூழல் இன்னும் வரவில்லை. அப்படி வந்துவிட்டது என்றால் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து என்ன பண்ணியிருப்பார்? இனிமேல் நற்செய்தி அறிவிப்பதற்கு யாருமே இல்லை என்று இந்த உலகத்திற்கு மீண்டும் வந்திருப்பார். ஆனால் நாம் பார்க்கிற ஆட்களெல்லாம் “இதோ! நான் நற்செய்தியைக் கேட்பதற்கு ஆயத்தமாய் இருக்கிறேன்,” என்பதுபோல் காணப்படமாட்டார்கள். மனிதன் முகத்தைப் பார்க்கிறான். கர்த்தரோ இருதயங்களை பார்க்கிறார்.

எண்ணிக்கை

தேடுவது என்றால் என்ன? லூக்கா 15ஆம் அதிகாரத்திலே மூன்று தேடுதல்கள் உள்ளன. முதலாவது நூறு ஆடுகளில் ஒரு ஆடு காணாமல் போய்விடுகிறது. அதைத் தேடுகிறான் மேய்ப்பன். இரண்டாவது பத்து வெள்ளிக்காசுகளில் ஒரு வெள்ளிக்காசு காணாமல் போகிறது. அதைத் தேடுகிறாள் அந்தப் பெண். மூன்றாவது, இரண்டு மகன்களில் ஒரு மகன் தொலைந்து போகிறான். அதைத் தேடுகிறான் அந்தத் தகப்பன். நூறு பேரில் ஆரம்பித்து, பத்துப்பேருக்கு வந்து, கடைசியில் எத்தனை பேரில் வந்து நிற்கும். அதனால் குறைந்தது வருடத்திற்கு ஒரு ஆளையாவது நாம் நம்முடைய பிதாவினிடத்திலே திருப்பிக்கொண்டு வந்துவிட முடியும். ஆனால், எங்கே ஆரம்பிக்க வேண்டும்? நூறு பேரையும் தேட வேண்டும். ஒரு ஆடு காணாமல் போயிற்று.

நீங்கள் உல்லாசப் பயணம் போயிருப்பீர்கள், இல்லையா? 100 பேர் போயிருக்கிறீர்கள். எண்ணத் தொடங்கும்போது 99 பேர் இருக்கிறார்கள், 100வது ஆள் இல்லை. என்ன பண்ணுவீர்கள்? “யாரப்பா காணாமல் போனது?” என்று கேட்டால் காணாமல் போன ஆடு தானாக முன்வந்து, “நான்தான் காணாமல் போய்விட்டேன்,” என்று சொல்லுமா? என்ன செய்ய வேண்டும்? எப்படித் தேடுவீர்கள்? ஒரு ஆள், ஒரு எண்ணிக்கைக் குறைந்து போயிற்று? நீங்கள் என்ன பண்ணுவீர்கள்? பெயர் வாசிக்க வேண்டும். பெயர்ப்பட்டியலைக் கொண்டுவந்து ஒவ்வொருவர் பெயராக வாசிக்க வேண்டும். அந்த ஆள் அங்கு இருந்தால், “உள்ளேன்” என்று சொல்வார். பதில் வரவில்லையென்றால் அவர் அங்கு இல்லை என்று பொருள். காணாமல்போன நபர் யார் என்று தெரிந்துகொள்ளலாம்.

நாம் நூறு பேரைச் சொல்லி ஜெபிப்பது எதற்காக? எந்த ஆடு இதில் காணாமல் போயிற்று, எந்த ஆட்டின்மேல் தேவன் தம் மனதை வைக்கிறார் என்று அப்போது நமக்குத் தெரிய வரும். நம்முடைய இருதயத்தில் எண்ணங்கள் உருவாகும். வாழ்க்கைச் சூழ்நிலைகள் உருவாகும். அது பத்தாகக் குறையும். மூன்று மாதங்கள் கழித்து, நீங்கள் பத்துப்பேருக்காக ஜெபம் பண்ணுவீர்கள். ஆறு மாதம் கழித்து நீங்கள் எத்தனை பேருக்காக ஜெபம் பண்ணுவீர்கள்? இரண்டு பேர் “இப்போது நாங்கள் பத்துப்பேரை இரட்சிப்புக்குள் கொண்டுவரப் போகிறோம்,” என்று அந்த சமயத்திலே முயற்சி செய்யக்கூடாது. ஆனால் பத்து பேரையும் சந்திக்க வேண்டும்.

சுருக்கமாக

ஒரு வாக்கியத்திலும் நற்செய்தி சொல்லலாம். ஓராயிரம் வாக்கியங்களிலும் நற்செய்தி சொல்லலாம். என்னுடைய Ph.D guide எனக்குச் சொல்வார். “உன்னுடைய Ph.Dயைப் பற்றி ஒரு மணி நேரம் பேசுவதற்கும் நீ ரெடியாக இருக்க வேண்டும். பத்து நிமிடம் பேசுவதற்கும் நீ தயார் செய்து வைத்திருக்கணும். 3 நிமிடம் பேசுவதற்கும் நீ ரெடியாக இருக்கணும். 1 நிமிடம் உன்னுடைய Ph.D வேலை என்ன என்று யாராவது கேட்டால் சொல்வதற்கும் நீ தயாராக இருக்கணும்.” ஆகவே நற்செய்தியை 1 மணி நேரம் சொல்வதற்கும் நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும். 10 நிமிடங்கள் சொல்வதற்கும் நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும். 3 நிமிடத்தில் சொல்வதற்கும் நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும். ஒரே ஒரு வாக்கியத்தில் சொல்வதற்கும் நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும். “இயேசுகிறிஸ்து உங்கள்மேல் அன்பாயிருக்கிறார்,” என்று சொல்வது எவ்வளவு தூரம் வீரியமுள்ளது என்று விதைக்கும் போது நமக்குத் தெரியாது.

ஆறுதலாக

ஆகவே, நாம் தேட வேண்டும். தேட வேண்டும் என்றால் அதிலே ஜெபிப்பது அடங்கும். வாய்ப்புகளை உருவாக்கி நாம் அவரிடத்தில் பேச வேண்டும். சுருக்கமாக. ஆண்டவருடைய வார்த்தையைத்தான் பேச வேண்டும் என்று இல்லை. தேடுகிற நாட்களிலே அவர்களுடைய இருதயங்களுக்கு சில ஆறுதலான சொற்களை நாம் பேச வேண்டும். அவர்களுடைய வாழ்க்கைச் சூழ்நிலைக்கு என்ன தேவையோ அதை நாம் சொல்ல வேண்டும். அவர்களுடைய இருதயம் எப்படிப்பட்டது என்பது அதன்மூலமாய் நமக்கு வெளிப்படும். அவர்களை நாம் சந்திக்க வேண்டும். ### வெளியே போய்த் தேட வேண்டும் தேடுவது என்பது வீட்டிலேயே இருந்துகொண்டு செய்கிற காரியம் இல்லை. தேடுவதில் ஒரு பகுதி ஜெபிப்பது. இதை நாம் வீட்டில் இருந்து செய்யலாம். பேசுவது அதில் இன்னொரு பகுதி. அதையும்கூட நாம் வீட்டிலிருந்து செய்யலாம். ஆனால், சந்திப்பது வெளியே போய்த்தான் செய்ய வேண்டும். தேவனுடைய மக்கள் அறிவிக்காததற்கு அல்லது அறிவிக்க முடியாததற்கு ஒரு காரணம் அவர்கள் வீட்டை விட்டு வெளியே போவது இல்லை. வாரத்தில் ஒருநாள் வீட்டை விட்டு வெளியே போயே ஆவது என்று நீங்கள் கங்கணம் கட்டிக்கொள்ளுங்கள். நம்முடைய சகோதர சகோதரிகளைப் பார்ப்பதற்காக அல்ல. “இதுவரை இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியைப் பெறாத ஒருவர் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியைப் பெற்று அவருடைய வாழ்க்கை ஆசீர்வதிக்கப்படுவதற்காக தேடி நான் போவேன். வெளியே சென்று வாரத்திற்கு ஒருமுறை ஒரு நபரை நான் பார்ப்பேன்,” என்று தீர்மானியுங்கள்.

தோல்வியடைவதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நன்றாய்க் கவனிக்க வேண்டும். ஆண்டவர் மட்டும் நூறு ஆடுகளில் எந்த ஆடு காணாமல் போயிற்று என்று வெளிச்சம் அடித்து காட்டிவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். அப்படி ஆண்டவர் காட்டுவதில்லை. நூறு ஆடுகளின் பெயரைச் சொல்லி அழைத்துதான் எந்த ஆடு காணாமல் போயிற்று என்று கண்டுபிடிக்க முடியும். ஏன்? அது தேவன் நம் முடைய அன்பை சோதிக்கின்ற அல்லது நமக்குள் தேவனுடைய அன்பை உருவாக்குகின்ற ஒரு வழி. நல்லவர்களை நாம் நேசிப்போம். கெட்டவர்களை நாம் நேசிப்போமா? தயவுசெய்து “நாம் நேசிப்போம்” என்று சொல்ல வேண்டாம். என்னைப்போல பண்பாடுள்ளவர்களைத்தான் நான் நேசிப்பேன். என்னுடைய பண்பாட்டிற்கு முரணான பண்பாட்டை உடையவனை நான் நேசிக்க மாட்டேன். யாராவது சத்தம் போட்டு பேசினால்கூட எனக்கு அவர்களோடு நண்பனாக இருக்க ரொம்பக் கஷ்டமாக இருக்கும். ஆனால் அவர்கள் இரட்சிப்புக்கு ஏற்ற பாத்திரமாக இருக்கலாம். ஆகவே, தேவனுடைய அன்பு நம்முடைய இருதயங்களில் உருவாவதற்காக அப்படி நம்மைத் தேடச் செய்வார். நம்முடைய பிள்ளைகள் தொலைந்துபோனால் நாம்; எப்படித் தேடுவோமோ அப்படி… நோட்டீஸ் அடித்து ஒட்டுவோம். காவல் நிலையத்தில் புகார் கொடுப்போம். தெருத்தெருவாய்கூட தேடுவதற்கு நாம் ஆயத்தமாக இருப்போம்.

5. தட்டுங்கள்

ஐந்தாவது தட்டுவது. 1. முதலாவது கேட்பது, 2. இரண்டாவது தேடுவது, கேட்பது இருந்த இடத்திலிருந்து கேட்கலாம். அங்குதான் நாம் நம்முடைய போர்க்களத்திலே வெற்றி பெறுவோமா அல்லது தோல்வி பெறுவோமா என்று தீர்மானிக்கப்படுகிறது. எங்கு தீர்மானிக்கப்படுகிறது? நம்முடைய முழங்காலில் நாம் கேட்கிறதில் தீர்மானிக்கப்படுகிறது. இரண்டாவது வெளியே சென்று தேட வேண்டும். மூன்றாவது தட்ட வேண்டும்.

தட்டுவது என்பது கொஞ்சம் நாகரீகம் குறைந்த செயலாகத் தோன்றலாம். “நாம் மற்றவர்களுடைய வாழ்க்கையில் என்ன செய்யக் கூடாது? ரொம்ப மூக்கை நுழைக்கக் கூடாது. அவர்களாக நற்செய்திபற்றி சொல்லுங்கள் என்று கேட்டால் நாம் சொல்ல வேண்டும்,00 என்றால் நாம் ஒருவருக்கும் ஒருநாளும் நற்செய்தியைச் சொல்ல மாட்டோம். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து அறையிலே உட்கார்ந்துகொண்டு,”யார் யாருக்கெல்லாம் இரட்சிப்பு தேவையோ அவர்களெல்லாம் என்னை வந்து சந்திக்க வேண்டும்” என்று சொன்னாரா? அல்லது அவர் தேடித்தேடிப் போய் நற்செய்தியை மற்றவர்களுக்கு வழங்கினாரா? புதிய ஏற்பாட்டை ஒருமுறை சாதாரணமாய் வாசித்தால்கூட தெரிந்துவிடும். அவர் தேடிப் போய் வழங்கினார்.

அவரைத் தேடி சிலர் வந்தார்கள். சக்கேயு இயேசுகிறிஸ்துவைத் தேடி வந்தானா? இயேசுகிறிஸ்து சக்கேயுவைத் தேடிப் போனாரா? சக்கேயுதான் இயேசுகிறிஸ்துவைத் தேடிப்போனான். இல்லை. சக்கேயு அங்கு காத்திருக்கிறான் என்று தெரியும். ஆகவே, இயேசுகிறிஸ்து தேடிப்போனார். தேடிப்போகாவிட் டால் நம்மில் யாரும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைச் சந்தித்திருக்க மாட்டோம்.

கல்லூரி வாழ்க்கை

நான் கல்லூரியில் படித்தபோது, முதல் வருடத்தில் நற்செய்தி அறிவிப்பதற்காக ஜோஷி என்ற ஒரு நண்பர் வந்தார். எல்லாக் கல்லூரிகளிலும் இந்த மாதிரி ஜெபக் குழுக்கள் நடைபெறும். சாயங்காலமானால் ஒரு ஐந்தரை மணிக்கு ஒரு அரைமணி நேரம் அல்லது 45 நிமிடம் அவர்கள் பைபிளில் இருந்து ஏதாவது பேசுவார்கள். ஜோஷி எதைப்பற்றி சொல்வார் தெரியுமா? 1 இராஜாக்கள்லிருந்து “நான் இந்த ராஜாவைப்பற்றி சொல்லப்போகிறேன்,” என்று ஆரம்பித்து ஒரு மாதம் முழுவதும் இராஜாக்களைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார். அந்த ராஜா யார் என்றே எனக்குத் தெரியாது. சில சமயங்களில் என்னுடைய நண்பர்கள் “ஜோஷி வருகிறார்” என்று சொல்வார்கள். உடனே நான் போய் ஒளிந்துகொள்வேன். ஆனாலும் ஜோஷி தேடி வந்துகொண்டே இருந்தார். ஜோஷி ஒரு தலைசிறந்த பேச்சாளன் இல்லை. சாமர்த்தியமாக பேசக்கூடத் தெரியாது. ஒரு நட்புறவை உருவாக்கக்கூட ஜோஷிக்குத் தெரியாது. ஆனால் ஒன்று செய்தார். அது என்னவென்று கேட்டால் ஒவ்வொரு நாளும் சாயங்காலமும் அவர் தேடி வருவார். ஒருமுறை ஒருவன் அந்த prayer cellக்குவந்துவிட்டால் அவனை தேடி “A40 சகாய மில்டன் என்று ஒருவன் இருக்கிறான்” என்று அவர் தேடி வருவார். ஜோஷிக்குத் தப்பி ஒளிந்த பலர் இன்றைக்கு இரட்சிக்கப்பட்டுவிட்டோம்.

ஜாண்சன் என்று ஒருவர் இருந்தார். அவர் நான்காவது வருடம்வரை இரட்சிக்கப்படவில்லை. அவர் தன்னுடைய பைபிளில் முதல் பக்கத்திலே ஜான்சன் சாமுவேல் என்று எழுதியிருப்பார். என்னிடம் சொல்வார். “மில்டன், நியாயத்தீர்ப்பு அன்றைக்கு கர்த்தர் ‘சாமுவேல்’ என்று கூப்பிடுவாரில்லையா? நான் போய் ‘நான்தான் சாமுவேல்’ என்று இயேசுநாதரிடம் சொல்லிவிடுவேன். அவர் என்னை உள்ளே விட்டு விடுவார். என்னப்பா வாழ்க்கையை நீங்கள் அனுபவிக்க விடமாட்டேன் என்கிறீர்கள்,” என்று அவர் சொல்வார். ஆனால் இன்றைக்கு அவர் இரட்சிக்கப்பட்டு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கு பணிவிடை செய்கிறார்.

தேடிப்போகிற எந்த மனிதனும் வெட்கப்படுவதில்லை, அவன் விதைக்கிற விதைகள் என்றைக்கும் வீணாவதில்லை. தட்டுவது என்றால் நாம் பேச வேண்டும். அவர்களுடைய இருதயம் எனக்குத் தெரியாது. அவர்களுடைய இருதயத்தை என்ன ஸ்கேன் எடுத்தா பார்க்க முடியும்? பார்க்க முடியாது. நம்பிக்கையோடு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியை நாம் அறிவிக்க வேண்டும். சில முக்கியமான குறிப்புகளை இந்த இடத்திலே நான் தருகிறேன்.

தட்டுதல்-எதிர்மறையாகப் பேச வேண்டாம்

முதலாவது நாம் எதிர்மறையாக எதையும் சொல்ல வேண்டாம். அவர்கள் இந்துக்களாக இருக்கலாம். இஸ்லாமியராக இருக்கலாம். ரோமன் கத்தோலிக்கர்களாக இருக்கலாம். புரொட்டஸ்டாண்டாக இருக்கலாம். பெந்தெகொஸ்தேகாரர்களாக இருக்கலாம். எதிர்மறையாக நாம் தொடங்கக்கூடாது. எதிர்மறையாக என்றால் “நீங்கள் கும்பிடுகிற சிலை பேய்,” என்றால் அவன் அதோடு காரியத்தைக் கெடுத்தான் என்று அர்த்தம். ஒரு சிலை என்பது சாதாரண மண் என்பது உண்மைதான். நான் சொல்வேன். “நீங்கள் அதை எடுத்துவிட வேண்டும்” என்றுகூடச் சொல்ல வேண்டாம். நீங்கள் இயேசுகிறிஸ்து என்கிற அற்புத நபரை அவர்களுக்கு முன்பாக வையுங்கள். எதிர்மறையாகச் சொல்ல வேண்டாம்.

ரோமன் கத்தோலிக்கர்களிடத்தில் போய், “நீங்கள் மாதாவைக் கும்பிடுகிறீர்கள். அது விக்கிரக ஆராதனை,” என்று எதிர்மறையாகச் சொல்ல வேண்டாம். கடவுளுக்குத் தாய் இல்லை. அவர் நாம் இந்த ஆறு இலட்சணமந்திரத்தில் படிப்பதுபோல சர்வேசுரன் தாமாக இருக்கிறார். அவரை எந்தத் தாயும் பிறப்பித்ததில்லை. ஆனால் ரோமன் கத்தோலிக்கர்கள் இயேசுவின் தாயாகிய மரியாளை எப்படி வர்ணிப்பார்கள். தேவமாதா, தேவனுடைய தாய் என்று சொல்வார்கள். இது சரியா? தவறா? தவறு. ஆனால் ரோமன் கத்தோலிக்க மனிதர்களைச் சந்திக்கும்போது, “நீங்கள் மரியாளை தேவனுடைய தாயார் என்று சொல்கிறீர்கள், அது தவறு,” என்று நீங்கள் ஆரம்பிக்காதீர்கள். “இல்லை, நான் சொல்வது உண்மைதானே!” நீங்கள் உண்மையெல்லாம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நீங்கள் இயேசு கிறிஸ்துவைப்பற்றிய உண்மையைச் சொல்லுங்கள். இந்த உண்மையின் வெளிச்சத்தில் பொய்களெல்லாம் தானாகவே மறைந்துவிடும்.

இந்துக்களுக்கு “நீங்கள் இந்த தவறு செய்கிறீர்கள்”, முகமதியர்களுக்கு “நீங்கள் இந்தத் தவறு செய்கிறீர்கள்”, ரோமன் கத்தோலிக்கர்களிடத்தில் “நீங்கள் இந்த தவறு செய்கிறீர்கள்”, பெந்தெகொஸ்தேகாரர்களிடத்தில் “நீங்கள் இந்த தவறு செய்கிறீர்கள்”, என்று ஒருநாளும் எதிர்மறையில் அணுகாதீர்கள். எப்போதுமே நேர்மறையில் அணுகுங்கள். பரிசுத்த ஆவியானவர் இருதயங்களைத் தொடுவார்.

சகோதரி சாட்சி கொடுக்க முடியும். சகோதரர்கள் அவர்களுக்குப் பலநாட்கள் நற்செய்தியை அறிவித்தபோதும் அவர்கள் வீட்டிலே இருந்த நிறைய படங்களைப் பார்த்து, “நீங்கள் இந்தப் படத்தைத் தூக்குங்கள். அந்தப் படத்தைத் தூக்குங்கள்,” என்று சொல்லவில்லை. போனவுடனே நமக்கு ரொம்ப வைராக்கியம் வந்துவிடும். “என்ன இவர்கள் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் இன்னும் இந்தப் படத்தை வைத்திருக்கிறார்களே!” என்று. நாம் வேதனையின் காரணமாக “படத்தைப் போட்டு உடையுங்கள்,” என்று சொல்லக்கூடாது. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து எவ்வளவு அற்புதமான நபர் என்பதைப் பார்க்கும்போது இவைகளெல்லாம் பொருளற்றவைகளும், அர்த்தமற்றவைகளும், பொய்களும், புனைகதைகளும், மூடநம்பிக்கைகளும், கனவுகளுமாய் மாறிவிடும்.

சாந்தத்தோடும், வணக்கத்தோடும் பேசுங்கள்

இரண்டாவது, வணக்கத்தோடு பேசுங்கள். 1 பேதுரு 3ஆம் அதிகாரம் 14, 15ஆம் வசனங்களிலே அப்போஸ்தலனாகிய பேதுரு சொல்கிறார் “உங்களிடத்தில் இருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவு சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.” பதில் தெரியவில்லை என்றால் கொதித்து பதில் சொல்லக்கூடாது. நம்முடைய நம்பிக்கையைக் குறித்து விசாரித்துக்கேட்கிற யாவருக்கும் நாம் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் மறுவுத்தரவு சொல்ல வேண்டும். தேவனுடைய மக்கள் இதைக் கற்றுக்கொள்ள வேண்டும். சிலபேரை நான் பார்த்திருக்கிறேன். பொதுவான கூட்டம் போட்டு அந்த இடத்திலே இந்துக்களைத் திட்டுவார்கள், அடி வாங்குவார்கள். அதன்பின், “நாங்கள் கர்த்தருக்காக அடிபட்டோம்,” என்று சொல்வார்கள். கர்த்தருக்காக அடிபடவில்லை. நுணலும் தன் வாயால் கெடும். எதைப் பேசக்கூடாதோ, எப்படிப் பேசக்கூடாதோ அதைப் பேசி, அப்படிப் பேசி நீங்கள் அடிவாங்கினீர்கள். “இயேசுகிறிஸ்துவை நேர்மறையாக நான் அறிவித்தேன், என்னை அடித்தார்கள்,” என்றால் அது தேவனுக்கு மகிமை. “நீ என்ன குற்றம் செய்தாய்?” என்று விசாரிக்கும்போது, “இயேசுகிறிஸ்துவை இரட்சகர் என்று அறிவித் தேன். அவராலேயல்லாமல் வேறு ஒருவராலும் இரட்சிப்பு இல்லை. வானத்தின்கீழே பூமியிலே மனுஷன் இரட்சிக்கப்படும்படிக்கு இயேசு என்ற நபரைத்தவிர, இயேசு என்கிற நாமம் என்பதன் பொருள் இயேசு என்ற நபரைத்தவிர வேறு ஒன்று நமக்கு அருளப்படவில்லை என்கிற உண்மையை நான் அறிவித்தேன்,” என்று வணக்கத்தோடு அறிவிக்க வேண்டும்.

வாக்குவாதம் செய்ய வேண்டாம். “கடவுளை யார் படைத்தது? எப்படி ஒரு கன்னியினிடத்தில் பிள்ளை உருவாக முடியும்?”போன்ற கேள்விகளுக்குள் நுழைய வேண்டாம். அவர் தேவன். வாக்குவாதங்களை ஊக்குவிக்க வேண்டாம். கேள்விகள் நியாயமான கேள்விகள் என்றால், உங்களுக்குப் பதில் தெரிந்தால் பதில் சொல்லுங்கள். பதில் தெரியவில்லை என்றால் குறித்துக்கொள்ளுங்கள். குறித்துக்கொண்டு பதிலைத் தேடி கண்டுபிடியுங்கள். இரண்டு மூன்று சகோதரர்களிடம் நீங்கள் விசாரித்துப் பாருங்கள். அடுத்தமுறை அவர்களைச் சந்திக்கும்போது அவர்கள் கேட்ட கேள்விக்கு நேர்த்தியாகப் பதிலைக் கொடுங்கள். வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக சத்தியத்தை முன்வையுங்கள். இது உண்மை. நாம் நற்செய்தியை வாக்குவாதம் செய்வதற்காக கர்த்தர் நம்மை அனுப்பவில்லை. நற்செய்தியை அறிவிப்பதற்காக கர்த்தர் நம்மை அனுப்புகிறார்.

அப்போஸ்தலர் 17ஆம் அதிகாரம் (22, 23 ஆகிய வசனங்களிலே) அப்போஸ்தலனாகிய பவுல் அத்தேனே பட்டணத்தாருக்கு நற்செய்தியை அறிவிக்கிறார். நீங்கள் திறந்து காண்பிக்கும் வாக்கியங்களை வாசித்திருக்கிறீர்களா? அதற்கு முன்பு அத்தேனே பட்டணத்தை பவுல் சுற்றி வருகிறார். பற்பல தேவர்களும் தேவதைகளும் அவர்களுக்குரிய கோயில்களும் அங்கு காணப்படுகின்றன. அதில் ஒரு வழிபாட்டு இடத்திலே அறியப்படாத தேவனுக்கு என்று ஒரு கோவில். பெயர் வைக்கமுடியாத நேரத்திலே அத்தேனே பட்டணத்ததார் ஒரு பெயர் வைத்துவிட்டார்கள் “அறியப்படாத தேவனுக்கு.” “எல்லாக் கடவுள்களுக்கும் பெயர் வைத்துவிட்டோம். நமக்குத் தெரியாத ஒரு கடவுள் இருந்துவிட்டால் என்ன செய்வது? அவர் கோபப்பட்டுவிடக்கூடாதே!” என்பதற்காக அவருக்கும் ஒரு கோவில். பவுல் சொல்கிறார், “:அத்தேனே பட்டணத்தாரே நான் உங்கள் பட்டணத்தைச் சுற்றி வருகிறபோது நீங்கள் மிகுந்த தேவபக்தியுள்ளவர்கள் என்று காண்கிறேன். ஏன் என்று கேட்டால் அறியப்படாத தேவனுக்கு என்றுகூட ஒரு ஆராதனை ஸ்தலத்தை நீங்கள் வைத்திருக்கிறீர்கள். நீங்கள் அறியப்படாத தேவன் என்று சொல்கிற அந்த தேவனையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.” இதுதான் நேர்மறையாக நற்செய்தியை அறிவிப்பது. எதிர்மறையாக நாம் ஒருநாளும் அணுகக்கூடாது.

6. சத்தியத்தை அறிவிக்க வேண்டும்

ஆறாவது சத்தியத்தை நாம் அறிவிக்க வேண்டும். சத்தியம் என்றால் என்ன? தேவனுடைய திட்டம் என்ன? பாவமன்னிப்பு, நித்திய ஜீவன், இயேசுவின் சாயலுக்கு ஒத்த சாயலாகுதல். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நம் பாவங்களுக்காக இரத்தம் சிந்தினார். அவர் உயிர்த்தெழுந்ததினாலே நாம் தேவனுடைய ஜீவனைப் பெற்றிருக்கிறோம். நாம் மனந்திரும்பி ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டும். இவைகளை நாம் எல்லாரும் சொல்ல முடியுமா, சொல்ல முடியாதா? சொல்ல முடியும். இதை நாம் அறிவித்தால் போதுமானது. நம்மில் யாரும் இயேசுகிறிஸ்துவைப்பற்றி ஆதியோடந்தமாக வாக்குவாதம்பண்ணி இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவில்லை. இயேசுகிறிஸ்துவைப்பற்றி யாரோ வாக்குவாதம் பண்ணி நம்மை வெல்லவில்லை. அவர்கள் சத்தியத்தை அறிவித்தார்கள். நாம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டோம்.

தைரியமாக அறிவிக்க வேண்டும்

நாம் அறிவிக்கும்போது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினுடைய பிரதிநிதிகள் என்ற முறையில் நாம் அறிவிப்போம். நாம் யார்? ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் பிரதிநிதிகள் அல்லது தூதுவர்கள். 2 கொரிந்தியர் 5ஆம் அதிகாரம் (20 ஆம் வசனத்திலே) “நாம் கிறிஸ்துவின் ஸ்தானாதிபதிகள்” என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார். “நாம் கிறிஸ்துவின் ஸ்தானாதிபதிகள்” என்றால் நாம் கிறிஸ்துவினுடைய பிரதிநிதிகள். நாம் எப்படி அறிவிக்க வேண்டும் என்று போட்டிருக்கிறது என்றால் தைரியமாய் அறிவிக்க வேண்டும். நாம் சொல்வது உண்மை. நீதிமன்றத்திலே போய் பொய்ச்சாட்சி சொல்கிறவனுக்குக்கூட வக்கீல் நன்றாக பயிற்சி கொடுப்பான். நாம் பொய்யைச் சாதிக்கவில்லை. நாம் மெய்யைச் சொல்கிறோம். ஆகவே, நாம் எப்படிப் பேச வேண்டும்? தைரியமாய்ப் பேச வேண்டும். ஒரேவொரு வசனத்தை வாசியுங்கள். அப்போஸ்தலர் 4ஆம் அதிகாரம் (13 ஆம் வசனம்) இவர்கள் பேதுருவையும் யோவானையும் பிடித்துகொண்டு போய் ஆலோசனை சங்கத்தார்முன் நிறுத்தினார்கள். ஆலோசனை சங்கம் என்பது யூதர்களுடைய பாராளுமன்றம் அல்லது நாடாளுமன்றம். அங்கு கொண்டு போய் யோவானையும் பேதுருவையும் நிறுத்துகிறார்கள். யோவானும் பேதுருவும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு அவர்கள் படிப்பறியாதவர்கள் என்றும் uneducated, unlearned பேதைமையுள்ளவர்கள் என்றும் common ignorant men. அறிந்துகொண்டார்கள்” என்று சொல்லப்பட்டடிருக்கிறது.

நான் கடவுளாக இருந்து, என்னுடைய நற்செய்தியை கிரேக்க உலகத்திற்குக் கொண்டுபோக வேண்டுமென்றால் அல்லது இந்த உலகத்திற்குக் கொண்டுபோக வேண்டுமென்றால் பேதுரு யோவான்போன்ற ஆட்களை நான் தோ;ந்தெடுக்க மாட்டேன். பேசுவதற்கு தைரியமாகப் பறைசாற்ற வேண்டும். ஒரு இளநிலைக் கல்வி கற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்திலோ தமிழிலோ ஒரு சொல்வாக்கு இருக்க வேண்டும். ஆனால், தேவன் தெரிந்தெடுத்த பாத்திரங்களைப் பாருங்கள். “அவர்கள் படிப்பறியாதவர்கள், பேதைமையுள்ளவர்கள்.” 

ஆகவே, நாம் நற்செய்தி அறிவிப்பதற்கு நம்முடைய தகுதி என்ன? “பிரதர், நற்செய்தி அறிவிப்பது என்னவென்று மூன்று வருடமாவது ஒரு கல்லூரியில் படித்தால்தான் நற்செய்தியை அறிவிப்பேன்,” என்பதல்ல. “அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்கள் என்றும் கண்டு ஆச்சரியப்பட் டார்கள்.” இப்போதுதான் நீங்கள் கவனிக்க வேண்டும். பிறகு எப்படி அவர்கள் தைரியமாய்ப் பேசினார்கள்? “அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்று அறிந்துகொண்டார்கள்.” ஆங்கிலத்தில் “They recognized they had been with Jesus”.

இயேசுவுடன் வாழ்கிற மனிதன்

ஒரு மனிதன் இயேசுவுடன் இருக்கிற, இயேசுவுடன் வாழ்கிற, மனிதன் என்றால் அவன் அறிவிக்கிற நற்செய்தியிலே ஜீவனும், வல்லமையும், வீரியமும் உண்டு. அவன் படிப்பறிவுள்ளவன், கல்விமான், ஞானி என்பதினால் இல்லை. “இந்த மனிதன் இயேசுவுடனே வாழ்கிற மனிதன். இவன் அறிவிக்கிற நற் செய்தியிலே ஜீவன் உண்டு. இவன் அறிவிக்கிற நற்செய்தியில் வல்லமை உண்டு. இவன் அறிவிக்கிற நற்செய்தியில் வீரியம் உண்டு.” நம்முடைய எதிரிகளும் அதை இணங்காண்பார்கள்.

நான் சுருக்கிச் சொல்கிறேன். 1. முதலாவது, நற்செய்தியை அறிவிப்பது நம்முடைய பொறுப்பு.  அந்தப் பொறுப்பை நிறைவேற்றுகின்ற உண்மையுள்ள வேலையாட்களாய் தேவன் நம்மைக் கண்டால் நாம் பாக்கியவான்கள். “அது என்னுடைய பொறுப்பில்லை” என்று உதாசீனம்பண்ணுகிற வேலையாட்களாய் நம்மைப் பார்ப்பார் என்றால் நாம் பாக்கியவான்கள் இல்லை. கடவுளுடைய பிள்ளைகளை என்னுடைய சொந்த வேலைக்காகப் பயன்படுத்தக் கூடாது. நான் ரொம்ப எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். எனக்கு ஒரு Agenda இருக்கிறது. அதை நிறைவேற்றுவதற்காக “நீங்கள் எல்லாரும் போய் நற்செய்தியை அறிவியுங்கள்,” என்று நான் சொல்லுகிறவன் அல்ல. தேவனுடைய வீட்டிலே தேவனுடைய மக்கள் எல்லாருக்கும் அவர் அந்தப் பொறுப்பைக் கொடுத்திருக்கிறார். நீங்கள் அந்தப் பொறுப்பை நிறைவேற்றினால் நீங்கள் பாக்கியவான் என்று கருதுவார். அந்தப் பொறுப்பை நீங்களும் நானும் நிறைவேற்றாவிட்டால் அதற்கும் என்ன உண்டு? பொறுப்பை நிறைவேற்றாவிட்டால் தேவன் “போனால் போகட்டும் விடு,” என்று விட்டுவிடுவாரா அல்லது வேறு ஏதாவது விளைவுகள் உண்டா? நன்றாய்க் கவனிக்க வேண்டும். சம்பளம் கொடுக்கிற எந்த மனிதனாவது பொறுப்பை நிறைவேற்றினால் “நல்லது” என்றும் பொறுப்பை நிறைவேற்றாவிட்டால் “பரவாயில்லை, போனால் போகட்டும், விடு” என்றும் சொல்வானா? ஆனால், தேவனைப்பற்றிய நம்முடைய கருத்து என்ன? பொறுப்பை நிறைவேற்றினால் நம்மை ஆசீர்வதிப்பார். பொறுப்பை நிறைவேற்றாவிட்டால் “அவர் கண்டுகொள்ளமாட்டார்; அவர் அன்புள்ள தேவன்தானே!” என்று நாம் நினைக்கிறோம். அவர் அன்புள்ள தேவன் மட்டுமல்ல. அவர் நீதியுள்ள முதலாளி. பெற்றோர்களே நீதியுள்ளவர்கள்தான். 2. இரண்டாவது நாம் பார்த்தோம்; தேவன்மேலும் தேவன் அன்புகூருகிற மனிதர்கள்மேலும் அன்புகூர்ந்து நாம் நற்செய்தியை அறிவிக்க வேண்டும். 3. மூன்றாவது, மனிதர்கள் பிசாசானவனால் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே, நாம் தெய்வீக பலமுள்ள போராயுதங்களைக் கொண்டு நாம் போராட வேண்டும். நாம் கேட்பதுதான் நம்முடைய போராட்டம். தேவனுக்குமுன்பாக நாம் கேட்பது ஜெபிப்பதுதான் நம்முடைய போரிடுதல். 4. நான்காவது, நாம் தேட வேண்டும். போரிட்டுவிட்டு நாம் அங்கேயே அமர்ந்திருப்பது அல்ல. நாம் வெளியே சென்று தேட வேண்டும். ஆறுமாதம் தேடலாம். ஒன்பதுமாதம் தேடலாம். பன்னிரெண்டு மாதம் தேடலாம். இந்தத் தேடலின் முடிவிலே நிச்சயமாக ஒருசில ஆடுகளை மீட்கச் செய்வார். 5. ஐந்தாவது, தட்டுவது. தட்டுவது என்பது தேடுவதைவிட சற்று வலுகட்டாயமாக சொல்வது. பேச வேண்டும். அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பேச வேண்டும். நாம் முதல் முயற்சி எடுக்க வேண்டும். நாம் முனைப்பு எடுக்க வேண்டும். அவர்கள் கேட்கட்டும் என்று காத்திருப்பதில்லை. 6. ஆறாவது, நாம் சத்தியத்தை அறிவிக்க வேண்டும். அது நம்முடைய கல்வியையோ நம்முடைய திறமையையோ பொறுத்தது அல்ல. நாம் ஆண்டவராகிய இயேசுவோடு வாழ்கிற மக்கள் என்றால் நாம் சத்தியத்தை அறிவிக்கும்போது அது அவர்களிடத்தில் ஒரு பதிப்பையும், பாதிப்பையும், ஒரு தாக்கத்தையும், ஒரு வீரியத்தையும் ஏற்படுத்தும். நாம் இதைக்குறித்து சிந்தனை செய்வோம். தேவன் நம்மை ஆசீர்வதிப்பார். நாம் ஜெபிப்போம்.