Transcribed from a message spoken in November 8, 2015 in Chennai
By Milton Rajendram
காலையிலே நாம் ஐந்து குறிப்புகளைப் பார்த்தோம். முதலாவது, நற்செய்தியை அறிவிப்பது நம் பொறுப்பு என்று பார்த்தோம்; அந்தப் பொறுப்பை நிறைவேற்றினால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அந்தப் பொறுப்பை நிறைவேற்றாவிட்டால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் அல்ல. தேவனுடைய மக்கள் தங்கள் பொறுப்பைக்குறித்து அக்கறையில்லாதவர்களாய் அல்லது நிர்விசாரமுள்ளவர்களாய்… ஒரு குடும்பம், ஒரு சமுதாயம், ஒரு நாடு ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறதா ஆசீர்வதிக்கப்பட வில்லையா என்பதற்கு இது ஓர் அடிப்படைக் காரணம். எந்த ஒரு குடும்பம், எந்த ஒரு சமுதாயம், எந்த ஒரு நாடு சிறுவயது தொடங்கி தன்னுடைய பிள்ளைகளுக்கு, “உனக்கு ஒரு பொறுப்பு இருக் கிறது. அந்தப் பொறுப்பை நீ நிறைவேற்ற வேண்டும்,” என்று கற்றுக்கொடுக்கிறதோ, என்று பயிற்றுவிக்கிறதோ, அந்தக் குடும்பம், அந்த நாடு, அந்த சமுதாயம் ஆசீர்வதிக்கப்பட்டதாக இருக்கும். பொறுப்புகளைப்பற்றி கவனமோ, அக்கறையோ இல்லாமல், நிர்விசாரமாக இருந்தால் அந்தக் குடும்பம், அந்த சமுதாயம், அந்த நாடு ஆசீர்வதிக்கப்படுவது இல்லை. எனவே, நாம் முதலாவது பார்த்தோம். நற்செய்தியை அறிவிக்கிற பொறுப்பை தேவன் நமக்கு வைத்திருக்கிறார். நாம் அதற்கு உண்மையுள்ளவா;களாக இருக்க வேண்டும்.
இரண்டாவது, நற்செய்தியை நாம் அன்பினால் அறிவிக்க வேண்டும். யார்மேல் கொண்ட அன்பினால்? ஆண்டவராகிய இயேசுவின்மேல் கொண்ட அன்பினாலா? அது மட்டுமா? அவர் யார்மேல் அன்புகூர்ந்தாரோ அவர்கள்மேல் நாமும் அன்புகூர்ந்து நற்செய்தியை அறிவிக்க வேண்டும். தேவனுடைய மந்தையைப்பற்றி பாடும்போது ‘அவர் மேய்ப்பர் நாம் ஆடுகள். அவர் நமக்கு நல்ல நன்மைகளையும், ஆசீர்வாதங்களையும் தந்தார்’ என்று பாடுவது வழக்கம். ஆனால், நாம் ஒரு பாடலை இயற்றும்போது, “அது மட்டுமல்ல; மந்தைக்காய் தம் இரத்தம் சிந்தும் அன்பின் சிகரம் கண்டோம். ஆகவே, நாங்கள் அவரை ஆராதிக்கிறோம் என்று நிறுத்துவதில்லை. ஆகவே, நாமும் அன்புகொண்டு சோதரர்க்காய் நம்மை நாமே ஊற்றுவோம்,” என்று பாடுவோம். “தேவனுடைய மந்தையைப்பற்றி பாடுகிற பாடலிலே இதற்கென்ன வேலை?” என்றால் இதற்குத்தான் அந்த வேலை. நற்செய்தியை அறிவிக்கிற பொறுப்பை தேவன் நமக்கு வழங்கியிருக்கிறார். நற்செய்தியை கர்த்தர்மேலும் மனிதர்கள்மேலும் கொண்ட அன்பினால் நாம் அறிவிக்க வேண்டும்.
மூன்றாவது, நாம் கேட்க வேண்டும். ஜெபம் என்பது போர் அல்லது ஜெபம் என்பது ஒரு போரிலே தேவனுடைய போராயுதங்களைப் பயன்படுத்துவது. ஜெபிக்காவிட்டால் தேவன் தந்த போராயுதங்களை நாம் பயன்படுத்துவது இல்லை. தேவன் தந்த போராயுதங்களைப் பயன்படுத்தாமல் சத்துருவோடு செய்கின்ற போரிலே நாம் வெற்றி பெறுவது சாத்தியம் இல்லை.
நான்காவது, தேடுவது. கேட்பது என்பது நாம் இருந்த இடத்தில் செய்யலாம். ஆனால் தேடுவது என்பது நாம் அந்த இடத்தைவிட்டு வெளியே போக வேண்டும். பேசுவதற்கு, சந்திப்பதற்கு, உறையாடுவதற்கு, கண்டுபிடிப்பதற்கு நாம் வெளியே போக வேண்டும். நடைமுறையில் நான் சொல்வேன். வாரத்திற்கு ஒருமுறை நற்செய்திக்காக வெளியே செல்லுங்கள்.
ஐந்தாவது, பார்த்தோம்; தட்ட வேண்டும். செயலற்ற ஒரு மந்தமான நிலைமையில் இருந்துகொண்டு, “யாராவது என்னைத் தேடிவந்து, எனக்குப் பிரச்சனை இருக்கிறது,” என்று சொன்னால் நான் ஜெபிப்பதில்லை. மும்முரமாக, தீவிரமாக முன்முயற்சி செய்து மக்களோடு இடைப்பட வேண்டும். மக்களோடு பேச வேண்டும்.
ஆறாவது, பார்த்தோம்; நாம் செய்ய வேண்டியது சத்தியத்தை முன்வைப்பதுதான். எதிர்மறையாகப் பேசுவதோ அல்லது வாக்குவாதம்செய்வதோ நம்முடைய வேலை அல்ல. சாந்தத்தோடும் வணக்கத்தோடும் சத்தியத்தை முன்வைக்க வேண்டும். நாம் இயேசுவோடு இருக்கின்ற மக்கள் என்றால் நாம் அறிவிக்கின்ற இந்த சத்தியத்திற்கு என்ன இருக்கும்? ஒரு பதிப்பு registration, ஒரு பாதிப்பு impact, ஜீவன் life, வல்லiமை power, வீரியம் effectiveness இருக்கும். ஒரு பதிப்பு, பாதிப்பு இருக்கும். எனவே, “வேதத்தைப்பற்றியோ அல்லது புதிய ஏற்பாட்டைப்பற்றியோ நான் தளபாடமாக இல்லை,” என்பதைப்பற்றி நாம் மிகவும் வருந்த வேண்டாம். தேவனுடைய வார்த்தையை வழங்குவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும். ஆனால், “தேவனுடைய வார்த்தையிலே வித்துவான் ஆனபிறகுதான் நான் நற்செய்தியை அறிவிப்பேன்,” என்றால் நாம் ஒருநாளும் நற்செய்தியை அறிவிக்கப் போவது இல்லை.
இன்னும் ஆறு குறிப்புகள் உள்ளன. இந்தக் குறிப்புகளெல்லாம் புத்தகத்திலிருந்து நான் படித்த குறிப்புகள் அல்ல. இதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். “12 குறிப்புகளை நீங்கள் எங்கிருந்து பெற்றீர்கள்?” என்றால் எங்கிருந்து பெற்றோம்? நம்முடைய நடைமுறை வாழ்க்கையிலும், அனுபவத்திலுமிருந்து நாம் சேகரித்த குறிப்புகள்.
அன்பினால் ஒரு மனிதனுக்கு நற்செய்தியை அறிவிக்கும்போது அந்த நற்செய்தியிலே வீரியம் உண்டு. கணக்கிற்காக அறிவிக்கும்போது அதிலே வீரியம் இல்லை. “என்னுடைய பொறுப்பு,” என்று எந்த சமுதாயம் அறிவிக்கிறதோ, அங்கு தேவன் அவர்களை நம்பி, நற்செய்திக்கென்று மனிதர்களை ஈர்க்கின்றார். நாம் ஜெபிக்கும்போது தேவன் மனிதர்களைச் சந்திக்கிறார். நாம் தேடிப் போகும்போதெல்லாம் தேவன் மனிதர்களைச் சந்திக்கிறார். நாம் முன்முயற்சி, முதல்முயற்சி எடுக்கும்போதெல்லாம் தேவன் சந்திக்கிறார். இது நம் வாழ்க்கை அனுபவத்திலே நாம் கற்றது. இவைகளிலே நாம் எப்பொழுதெல்லாம் தவறுகிறோமோ, தோற்றுப்போகிறோமோ அப்போதெல்லாம் தேவனுடைய ஆசீர்வாதத்தை நாம் காண்பதில்லை.
இன்னொரு ஆறு குறிப்புகளை நான் கூறுகிறேன். இதை 7, 8, 9, 10, 11, 12 என்று சொல்லாமல் இதையும் 1, 2, 3, 4, 5, 6 என்றே சொல்கிறேன்.
என்னுடைய முதல் குறிப்பு: நாம் எப்போதும் பரிசுத்த ஆவியினுடைய அசைவுக்கும், நடத்துதலுக்கும், இயக்கத்திற்கும் உணர்வுள்ளவர்களாய் இருக்க வேண்டும். நற்செய்தியை அறிவிப்பது என்பது இருளிலிருக்கிற ஒரு மனிதனைப் “பார்,” என்று சொல்வதற்குச் சமானம். அவன் எப்படிப் பார்ப்பான்? மின்சாரம் துண்டிக்கப்பட்ட ஒரு வீட்டிலே உள்ள மனிதனுக்கு ஒரு கடிதத்தைக் கொடுத்து, “இதை வாசி” என்று சொல்கிறீர்கள். அவன், “எனக்கு வாசிக்க முடியவில்லை,” என்று சொல்கிறான். நான், “முயற்சிசெய்,” என்று சொல்கிறேன். என்ன முயற்சிசெய்தாலும் எப்படி வாசிக்க முடியும்? அவனுக்கு என்ன தேவை? நீங்கள் தமிழில் கொடுக்காமல் ஆங்கிலத்தில் கொடுத்தால் அவன் வாசித்துவிடுவானா? ஆகவே, பரிசுத்த ஆவியானவர் ஒரு இருதயத்தை பிரகாசிக்காவிட்டால், இருதயத்தில் அவர் பிரகாசிக்காவிட்டால் அல்லது இருதயத்தைப் பிரகாசிக்கப் பண்ணாவிட்டால் அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை ஏற்றுக்கொள்வது என்பது சாத்தியம் இல்லை.
ஒரு இரகசியத்தை உங்களுக்குச் சொல்கிறேன். நான் நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்று பாரம் கொண்டுள்ளதைவிட இன்னொருவர் அதிகமாய்ப் பாரம் கொண்டுள்ளார். அவர் யார்? இயேசு கிறிஸ்து. பரிசுத்த ஆவியானவர். ஏதோ நாம் போய்த்தான் நற்செய்தியை அறிவிக்கிறோம் என்று நாம் நினைக்கக்கூடாது. நாம் போவதற்கு முந்தி யார் போயிருக்கிறார்? எப்போதுமே மனித வாழ்க்கையிலே நாம் நற்செய்தியைக் கொண்டுபோவதற்கு முந்தி பரிசுத்த ஆவியானவர் அங்கு நற்செய்தியைக் கொண்டுபோயிருப்பார்.
நான் கல்லூரியில் படித்தபோது என்னோடு கார்த்திகேயன் என்ற ஒரு நண்பர் படித்தார். கார்திகேயன் பால் சிலுவைராஜ். அவர் தூங்கப்போவதற்கு முந்தி, நன்றாகக் குளித்துவிட்டு, முகமெல்லாம் கழுவி குங்குமம் வைத்துக்கொண்டுதான் தூங்குவார். “எதற்கு கார்த்தி குங்குமம் வைத்துக்கொண்டு தூங்குகிறாய?” என்று எப்போதாவது நான் கேட்பேன். அதற்கு அவர், “அப்போதுதான் கனவிலே அழகாக வருவேன்,” என்று சொல்வார். அவருடைய கவலை கனவிலே எப்படி வர வேண்டும்? அழகாக வர வேண்டும்.
கல்லூரியிலே அரங்கத்திலே ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றால் எல்லாரும் மேடையை நோக்கி அமர்ந்திருப்பார்கள். ஆனால், இவர் கடைசி வரிசையில் உட்கார்ந்திருப்பார். இவர் கடைசி வரிசையில் உட்கார்ந்திருக்கிறார் என்றால் எல்லாரும் மேடையை நோக்கி அமரமாட்டார்கள். யாரைப் பார்த்து அமா;வார்கள்? இவரைப் பார்த்து அமர்வார்கள். ஏனென்றால், அவர் அப்படி ஒரு குரல் கொடுக்கிறவர். இவர் எங்கிருந்தாலும் அங்கு என்ன இருக்கும்? அவரைச்சுற்றி ஒரு பத்து பேர் இருப்பார்கள். நண்பர்களெல்லாம் இவரைக் “கட்டப்பஞ்சாயத்து” என்று அன்பாய் அழைப்பார்கள். ஏனென்றால், கட்டப்பஞ்சாயத்து பண்ணுவதுதான் அவருடைய தொழில். அப்படியென்றால் என்னவென்று கேட்டால் யாராவது “வடக்கே போக வேண்டும் என்று சொன்னால்” இவர் “அது ஏண்டா வடக்கே போக வேண்டும்? தெற்கிலே போனால் என்ன ஆகும்?” என்று அவர் சமரசம் செய்வார். “சரி, நண்பரே நாம் தெற்கில் போவோம்” என்று சொன்னால், “நான் சொன்னால் தெற்கில் போய்விடுவாயா?” என்பார்.
“கார்த்திகேயன் புதிய ஏற்பாடு படிக்கிறார்” என்று நான் ஒருநாள் கேள்விப்பட்டேன். இது நான் கல்லூரியில் என்னுடைய மூன்றாவது வருடம் படிக்கிறபோது நடந்தது. கார்த்திகேயன் எப்படி புதிய ஏற்பாடு படிக்க முடியும்? இதை நம்பவில்லை. ஆனால், உண்மை என்னவென்று கேட்டால் கார்த்திகேயன் புதிய ஏற்பாடு படிக்க ஆரம்பித்திருக்கிறார். எனக்குத் தெரிந்த எளிமையான வார்த்தைகளிலே, எளிமையான புரிந்துகொள்ளுதலின்படி நற்செய்தியை அறிவித்தோம். அவர் எங்களோடு prayer cellக்கு வர ஆரம்பித்தார். ஒரு மாதத்திலே அவராகவே முன்வந்து, “நான் ஞானஸ்நானம் எடுக்க விரும்புகிறேன்,” என்று சொன்னார். அவர் ஞானஸ்நானம் எடுத்தபிறகு அவருக்கு வந்த எதிர்ப்பை நீங்கள் பார்கள் வேண்டுமே! எங்களுக்கெல்லாம் எதிர்ப்பு இருக்காது. ஏனென்றால், நாங்களெல்லாம் ஏற்கெனவே “பக்திமான்கள்” என்று பெயர் பெற்றவர்கள். ஆனால் அவருக்கு அப்படி இல்லை. அவருடைய அறையை மக்கள் கடந்துபோகும்போதெல்லாம் அவரைக் கேலி பண்ணுவார்கள். “Father, forgive me father,” என்று கிண்டல் பண்ணுவார்கள். ஒருமுறை என்னுடைய ஏழாவது பருவம் நடக்கும்போது விடுதியில் பெரிய எழுத்துகளில் எழுதி சுவரில் ஒட்டிவிட்டார்கள். “இயேசுகிறிஸ்து இந்தக் கேள்வித்தாளை father கார்த்திகேயனுக்கு வெளிப்படுத்திவிட்டார். வேண்டும் என்கிறவர்கள் அவரை அணுகலாம்,” என்று ஒட்டிவிட்டார்கள். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
அவர் ஒரு Civil Engineer. இன்றைக்கு வாணியம்பாடியிலே முழுநேரமாக தேவனை சேவித்துக்கொணடிருக்கிறார். ஏறக்குறைய நூறு பரிசுத்தவான்கள் கூடிவருகிறார்கள். மகிழ்ச்சியான விஷயம் என்னவென்று கேட்டால் இந்த நூறு பேருமே இந்து பின்புலத்திலிருந்து வந்தவர்கள். பொதுவாக அவர் கிறிஸ்தவர்களை நாடிச் செல்வது இல்லை. ஒரு வருடமோ இரண்டு வருடமோ இன்ஜினியராக வேலை பார்த்தார். பின்பு அவர் அந்த வேலையை விட்டுவிட்டார். அவர் பெயர் இப்பொழுது பால்சிலுவைராஜ். ஒருமுறை அவரை நான் இங்கு வரவழைத்து, அவருடைய சாட்சியைப் பகிர்ந்துகொள்ளச் சொல்ல வேண்டும். நீங்கள் எல்லாரும் அவருடைய சாட்சியைக் கேட்க வேண்டும்.
நான் போய் சுவிசேஷம் சொன்னதாலா அல்லது பரிசுத்த ஆவியானவர் அந்த இருதயத்தை ஆயத்தப்படுத்தியிருந்தாரா? குருவி உட்காரப் பனம்பழம் விழுந்ததுபோல என்று சிலர் சொல்வார்கள். என்னமோ பனம்பழத்தைத் தட்டி இறக்கவில்லை. ஏற்கெனவே, பரிசுத்த ஆவியானர் அந்த மனிதனுடைய வாழ்க்கையிலே, அந்த இருதயத்திலே, செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். நாம் செய்யவேண்டியது ஒன்றேவொன்றுதான். பரிசுத்த ஆவியானவருடைய அசைவைப் பின்பற்ற வேண்டும். அவர் முன்செல்கிறார் என்றால் நாம் அவரை உத்தமமாய்ப் பின்பற்றி ஆண்டவருடைய வார்த்தையை அறிவிக்க வேண்டும். எல்லா சமயத்திலும் “அவர் இப்படிப் புதிய ஏற்பாட்டை வாசித்துக்கொண்டிருக்கிறார்,” என்பது நடைபெறாமல் போகலாம். ஆனால், எப்போதுமே பல்வேறு மனிதர்களுடைய வாழ்க்கையிலே தேவன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.
பழைய ஏற்பாட்டிலே ஒரு நிகழ்ச்சி உண்டு. ஒரு போருக்குப் போவதற்குமுன்பு தாவீது கர்த்தரிடம் ஜெபிக்கிறான். 1 நாளாகாமம் 14 ஆம் அதிகாரம் (15, 16 ஆம் வசனங்களிலே) அது எழுதியிருக்கிறது. கர்த்தர் சொல்கிறார். “நீ காத்திரு. நேரடியாய்ப் போய் போரிடாதே. முசுக்கட்டைச் செடிகளுக்குப் பின்பாகப் போய் போரிடு. முசுக்கட்டைகள் அசைகின்ற, சலசலக்கின்ற, சத்தம் கேட்கும்போது நீ போய் போரிடு. ஏனென்றால், அப்போது உனக்கு முன்பாக கர்த்தர் போயிருக்கிறார்.” அந்த வசனம் என்ன? “முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும் போது, யுத்தத்திற்குப் புறப்படு; பெலிஸ்தரின் பாளயத்தை முறிய அடிக்க, தேவன் உனக்கு முன்னே புறப்பட்டிருப்பார் என்றார்”. அந்த இரைச்சல் வேறு யாருடைய சத்தமுமல்ல. அது யாருடைய சத்தம்? உனக்கு முன்பாகத் தேவன் சென்றுவிட்டார்.
இது தேவனுடைய மக்களாகிய நம்மை மிகவும் தைரியப்படுத்த வேண்டும். என்னமோ நாம் சுவிசேஷம் சொல்லப் போகும்போது, நாம் நம்முடைய ஆயுதங்களையெல்லாம் கொண்டு எப்படியாவது அவர்களோடு பேசி, அவர்களைச் சமாளித்து, அவர்களை முறியடித்து, அவர்களை வென்று அவர்களை இயேசுகிறிஸ்துவுக்குள் பிடித்துவிட்டு வர வேண்டும் என்பதுபோல் நாம் செயல்பட வேண்டியதில்லை.
நன்றாகக் கவனிக்க வேண்டும். பரிசுத்த ஆவியானவர் முன்சென்றிருந்தாலும் நாம் என்னதான் செய்யவேண்டும்? “முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே இரைச்சலைக் கேட்கும்போது கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று நீ பாயை விரித்துப் படுத்துவிடலாம். ஏனென்றால் யாரே போய்விட்டார்? சண்டை போடுவதற்கு கர்த்தரே போய்விட்டார். இனிமேல் நான் என்ன செய்ய வேண்டும்? அல்லேலூயா. ஸ்தோத்திரம்,” என்பதல்ல. காத்தரே முன்சென்றாலும் நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் போரிட வேண்டும். ஆனால், கர்த்தர் முன்செல்லாவிட்டால் நாம் போரிடுவது வீண். கர்த்தர் நமக்கு முன்சென்றால் போரிடுவதில் நமக்கு வெற்றி உண்டு.
அப்போஸ்தலர் 8 ஆம் அதிகாரம் (28, 29 ஆம் வசனங்களிலே) பிலிப்பு ஒரு வனாந்தரவழியாக நடந்துபோகிறார். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர், “அங்கே, அதோ ஒரு இரதம் போகிறது பார். அந்த இரதத்தோடே நீ போய் சேர்ந்துகொள்,” என்று பேசுகிறார். பிலிப்பு இரதத்தோடு போய் சேர்ந்துகொள்கிறான். இவன் போய், “நான் மேலே ஏறி வரலாமா?” என்று கேட்கிறார். “வாரும்” என்று மந்திரி சொல்கிறார். ஏறிப் பார்த்தால் அந்த மனிதன் யார்? அவன் கந்தாகே நாட்டு ராஜ ஸ்திரீக்கு மந்திரி. எத்தியோப்பியாவிலுள்ள கந்தாகே என்ற நாட்டினுடைய ராணிக்கு இவன் மந்திரி. இவளுடைய எல்லாப் பொக்கிஷங்களுக்கும் இவன் தலைவன். அவன் எருசலேமுக்கு ஒரு பண்டிகைக்கு வந்துவிட்டு தன் நாட்டுக்குத் திரும்பிப்போய்க்கொண்டிருக்கிறான். ஊர் திரும்புகையிலே அவன் இரதத்திலே ஏசாயா புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கிறான். இதுதான் பரிசுத்த ஆவியானவருடைய வேலை. ஏற்கெனவே, பரிசுத்த ஆவியானவர் கந்தாகே மந்திரியை ஆயத்தம்பண்ணியிருக்கிறார். பிலிப்பு போய் நற்செய்தியை அறிவிக்கிறான். “நீ வாசித்துக்கொண்டிருக்கிறதின் பொருள் உமக்கு விளங்குகிறதா?” என்று இவன் கேட்கிறான். “யாராவது விளக்காவிட்டால் எனக்கு எப்படித் தெரியும்? தீர்க்கதரிசி தம்மைக்குறித்துப் பேசுகிறாரா அல்லது வேறு யாரையாவதுகுறித்து பேசுகிறாரா?” என்றதும், ஏசாயா 53ஆம் அதிகாரத்தின் அடிப்படையிலே அவர் இயேசுகிறிஸ்துவைப்பற்றி அறிவிக்கிறார். எந்த அளவுக்கு சுவிசேஷம் வேகமாய் அறிவிக்க முடியும் பாருங்கள். தண்ணீர் இருக்கிற இடத்தைக் கண்டபோது அந்த மந்திரி சொல்கிறான். “இதோ தண்ணீர் இருக்கிறதே. ஞானஸ்நானம் பெறுவதற்கு என்ன தடை?” “நீர் விசுவாசித்தால் தடையில்லை,” என்று பிலிப்பு சொல்கிறார். “நான் இயேசு தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கிறேன்,” என்ற பதில். இரண்டு பேரும் தண்ணீரிலே இறங்கினார்கள். அவர் ஞானஸ்நானம் பெற்றார். பரிசுத்த ஆவியானவர் பிலிப்புவை எடுத்துக்கொண்டு போய்விட்டார். கந்தாகே மந்திரி அவன் தன்னுடைய நாட்டுக்குப் போனான்.
ஆப்பிரிக்க நாட்டிலே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியைக் கொண்டுவந்த முதல் மனிதன். அல்லேலூயா! இந்த உலகமெங்கும் பரிசுத்த ஆவியானவர் வேலைசெய்து கொண்டிருக் கிறார். சென்னையில் வேலை செய்துகொண்டிருக்கிறாரா? “பிரதர், பரிசுத்த ஆவியானவர் இங்கெல்லாம் வேலை செய்ய முடியாது. இந்த நாட்டினுடைய அரசாங்கம் எப்படிப்பட்ட அரசாங்கம் தெரியுமா? இந்த நாட்டையெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது,” என்று அவருடைய கைகளைத் தடுப்பாரில்லை. “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய் சகல தேசங்களுக்கும் சுவிசேஷத்தை அறிவியுங்கள்,” என்று சொன்னார். “நான் கையாலாகாதவனாய் இருக்கிறேன். நீங்களெல்லாம் போய் நற்செய்தி அறிவித்து எப்படியாவது இரண்டு மூன்று ஆட்களைக் கொண்டுவாருங்கள்; நான் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவர். ஆகவே, நான் உங்களை அனுப்புகிறேன்,” என்று இயேசுகிறிஸ்து சொல்லவில்லை.
அதே அப்போஸ்தலர் 13ஆம் அதிகாரத்திலே பிலிப்பி பட்டணத்திலே பவுல் ஒரு நதிக்கரையிலே கூடிவந்து அங்குள்ள பெண்களுக்கு அவர் நற்செய்தியை அறிவிக்கிறார். எங்கு வாய்ப்பு கிடைத் தாலும் பரிசுத்த ஆவியானவர் செயல்படுகிறாரென்றால் நாம் கவனிக்க வேண்டும். திறந்த இருதயங்களை இனங்காண பழகிக்கொள்ள வேண்டும். திறந்த இருதயங்கள். எல்லாரிடமும் போய் முட்ட வேண்டிய அவசியமில்லை. “நான் பிராமணர்களுக்குத்தான் சுவிசேஷம் அறிவிப்பேன். நான் பிராமணர்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதில் கைதேர்ந்தவன்,” என்று நாம் போகவேண்டியதில்லை.
1 கொரிந்தியர் 1யை நீங்கள் வாசித்துப் பாருங்கள். “எப்படியெனில் சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பை;ப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகர் இல்லை; வல்லவர்கள் அநேகர் இல்லை; பிரபுக்கள் அநேகர் இல்லை; ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார். பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாயெண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும் தேவன் தெரிந்துகொண்டார்.” (வ. 26-28). அதனால் நாம் யாரைத் தேடிப் போக வேண்டும் என்றால் நோயிலிருப்பவர்கள், வறுமையிலிருப்பவர்கள், தள்ளப்பட்டவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள், கையாலாகாதவர்கள், வேறு எந்த மனிதனும் விசாரிக்காதவர்கள். இப்படிப்பட்ட மனிதர்களை நாம் தேடிப்போகலாமா? இப்படிப்பட்ட மனிதர்களைத்தான் என்ன செய்ய வேண்டும்? தேடிப்போக வேண்டும். ஏனென்றால், ஒரு மனிதனுடைய இருதயம் மென்மையாக இருக்கும். இந்த உலகத்திலே உண்ண உணவும், உடுக்க உடையும் நிறைய இருக்கும்போது கொழுத்திருப்பார்கள்; கேட்க மாட்டார்கள். அதற்காகப் பணக்காரர்களையும், படித்தவர்களையும் தேடிப்போகக்கூடாது என்று நான் சொல்லவில்லை.
இது நம்முடைய முதல் குறிப்பு. பரிசுத்த ஆவியானவருடைய நடத்துதலை, அசைவை, இயக்கத்தை நாம் பின்பற்ற வேண்டும். திறந்த இருதயங்களை இனங்காண நாம் பழகிக்கொள்ள வேண்டும். முறுக்கு மீசை வைத்திருக்கிறார் என்கிறதினாலே அவர் திறந்த இருதயமுள்ளவர் இல்லை என்று நீங்கள் கணக்குப் போட்டுவிடக் கூடாது. அந்தப் பெரிய அரிவாள் மீசைக்குப்பின்னால் ஒரு குழந்தையின் இருதயம் இருக்கும். அல்லேலூயா!
இரண்டாவது குறிப்பு: தொடர் கவனிப்பு. ‘இன்று குலுக்கல் நாளை இலட்சாதிபதி’ என்பது லாட்டரி டிக்கட்டில் மட்டும்தான் நடைபெறும். இந்த உலகத்திலே வேறு எந்த மதிப்புள்ள பொருளுக்கும் ‘இன்று குலுக்கல் நாளை இலட்சாதிபதி’ என்பது கிடையாது. ஒருவனுக்கு கல்வி வேண்டும் என்றால் பதினாறு வருடம் அவன் பள்ளிக்கூடத்திற்குப் போக வேண்டும். ஒரு விவசாயிக்கு அறுவடை வேண்டுமென்றால் அவன் ஆறு மாதங்கள் பயிரிட வேண்டும். மதிப்புள்ள எந்தப் பொருளுக்கும் நீண்ட காலமாகும். நீண்ட காலம் பொறுமையாய் உழைப்பதற்கு மனிதனுடைய சுபாவத்திலே என்ன இல்லை? குணம் இல்லை. இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவுடன் மந்திரத்தால் எல்லாம் நடந்து விட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். “நான் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டேன். அதுவரை நான் வறுமையில் இருந்தேன். இயேசுவை ஏற்றுக்கொண்ட அந்த நாள் தொடங்கி என்னுடைய வாழ்க்கையிலே வறுமை இல்லை. நான் பணக்காரன் ஆகிவிட்டேன்,” என்ற எண்ணம்.
அருமையானவர்களே, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வழிகளைப் பின்பற்றும்போது தேவனுடைய மக்கள் கண்டிப்பாக வறுமையில் வாழமாட்டார்கள். ஏனென்றால், இரகசியம் மிகச் சிறியது. அவர்கள் தங்கள் வருவாய்க்கு உட்பட்டு வாழ்வார்கள். கடினமாய் உழைப்பார்கள். நீதியாய் இருப்பார்கள். தங்கள் வருவாயில் ஒரு சிறு சேமிப்பு வைப்பார்கள். வருவாய் எவ்வளவு குறைந்ததாக இருந் தாலும் தேவையுள்ளவா;களுக்குப் பகிர்ந்துகொள்வார்கள். நான்கு குறிப்புகளைச் சொன்னேன். இதைச் செய்கிற எல்லா மனிதனையும் தேவன் ஆசீர்வதிப்பார். எழுதிவைத்துக் கொள்ளுங்கள். முதலாவது தசமபாகத்தைப்பற்றிச் சொல்லவில்லை. முதலில் எதைப்பற்றிச் சென்னேன்? வருவாய்க்கு உட்பட்டு வாழ்வார்கள். என்னுடைய வருவாய் ஐந்தாயிரம் ரூபாய்தான் என்றால் செங்கல்பட்டு தாண்டி 500 ரூபாய்க்கு குடிசை எடுத்துக்கொள்வேன். வருவாய் இவ்வளவு, கா;த்தர் எனக்கு அளந்தது இவ்வளவுதான், அதற்கு உட்பட்டு வாழ்வேன்.
தொடர் கவனிப்பு என்பது நாம் நற்செய்தியை அறிவிக்க ஆரம்பித்தபிறகு அவர்களுடைய வீட்டிற்குப்போவதை அல்லது நம்முடைய உறவை அவர்கள் நாடுகிறவரை விட்டுவிடக் கூடாது. Follow–up. ஓவ்வொரு வாரமும் அவர்களோடு நாம் தொடர்புகொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் தொடர்புகொள்ள வேண்டும். நான் வெகுவாக தவறியிருக்கிறேன். Hit and run என்ற பாணியில் “நான் ரயிலில் வரும்போது சுவிசேஷம் சொன்னேன். பஸ்ஸில் வரும்போதும் சுவிசேஷம் சொன்னேன்,” என்பதோடு நிறுத்திக்கொள்ளக்கூடாது. நல்லது. அதிலே ஒரு thrilling இருக்கும். “நான் சுவிசேஷம் சொல்வதை ரொம்ப அனுபவித்தேன். ஏன் என்று கேட்டால் பயமும், வெட்கமும் போவதற்காகத் தெருவிலே நின்றுகூட சுவிசேஷத்தை அறிவிக்கப் பழக வேண்டும். ஆனால் தெருவில் நின்று அறிவிப்பதினால் நிறையப்பேர் இரட்சிக்கப்படுவார்கள் என்று எந்த உத்தரவாதமும் இல்லை.
தேவன் நமக்கு ஒரு தொடர்பைத் தரும்போது நம்முடைய தொடர்பையும், உறவையும் அவர்கள் நாடுகின்றவரை, நம்மை அவர்கள் வரவேற்கிறவரை, நாம் அவர்களைச் சந்திப்பதையும், அவர்களோடு பேசுவதையும், அவர்களோடு உறவாடுவதையும் ஒருநாளும் விடக்கூடாது. இதில் மூன்று துணைக்குறிப்புகள் உள்ளன.
முதலாவது, காலத்தைப் பார்க்கக்கூடாது. “ரொம்ப சாதகமான, வசதியான காலச்சூழ்நிலை இருக்கும்போதுதான் நான் நற்செய்தியை அறிவிப்பேன்,” என்றால் நம் யாருக்குமே சாதகமான காலச்சூழல் வராது. உடல்நிலை சரியில்லாமல் போகும். குடும்பத்திலே ஒரு பிரச்சனை வரும். வேலையிடத்திலே ஒரு பிரச்சனை வரும். அப்படியானால் நாம் என்றைக்கு நற்செய்தியை அறிவிப்பது? 2 தீமோத்தேயு 4:2 நமக்கு தெரியும்: “சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணு.” பிரசங்கி 11ஆம் அதிகாரம் (4 ஆம் வசனம்) சொல்கிறது: “காற்றைக் கவனிக்கிறவன் விதைக்கமாட்டான். மேகங்களை நோக்குகிறவன் அறுக்கமாட்டான்.” விதைக்கும்போது, தூவுகிறபோது விதைகள் காற்றோடு போய்விடக் கூடாது என்ற பயத்தில் காற்றைப் பார்ப்பார்கள். அறுவடை செய்யும்போது மழை வந்துவிடக் கூடாது என்பதற்காக மேகத்தைப் பார்ப்பார்கள். காற்றையும் மேகத்தையும் பார்த்துக்கொண்டிருந்தால் நாம் விதைக்கவும் மாட் டோம், அறுக்கவும் மாட்டோம். இன்றைக்கு நாம் விதைக்காவிட்டால், அறுபது வயதில் நாம் அறுப்பதற்கு ஒன்றும் இருக்காது. நான் என் வாழ்க்கையை வீணாக்க விரும்பவில்லை. என் அறுபது வயதிலும், தேவனுக்காக உழைத்து, தேவனுடைய மக்களோடு தேவனுடைய பார்வையிலே அருமையான, மதிப்புள்ள, விலையேறப்பெற்ற ஒன்றிற்காகப் பாடுபட்டுக்கொண்டிருக்க விரும்புகிறேன். இன்றைக்கு “நான், என் மனைவி, என் மக்கள், அவர்களுடைய திருமணம், அவா;களுடைய வேலை,” என்று அவைகளிலேயே 24 மணி நேரமும் என்னுடைய மனம் இருக்கிறது என்றால் நற்செய்தி அறிவிப்பதை நாம் மறந்துவிடலாம். அப்போது நற்செய்தி அறிவிக்கிற நம் பொறுப்பை நாம் நிறைவேற்ற முடியாது.
நான் எச்சரிக்கையோடு சொல்கிறேன். ஏனென்றால், தேவனுடைய மக்களுடைய நேரத்தைக் களவாட நான் விரும்பவில்லை. நான் நேரத்தை எப்படிப் பராமரிக்கிறேன் என்று உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால், எப்போதுமே நாம் காலத்தையும், நேரத்தையும் பார்த்துக்கொண்டிருந்தால் நாம் ஒருநாளும் நற்செய்திப் பணியைச் செய்யமுடியாது. நற்செய்தி அறிவிப்பது என்பது ஒரு விவசாயி விதை விதைத்துப் பயிரிடுவதற்கு ஒப்பானது. ஒரே நாளிலே அது வளர்ந்துவிடுவது இல்லை. அதே பிரசங்கி எழுதின புத்தகத்திலே 11ஆம் அதிகாரம் (1, 6 ஆம் வசனங்களை) வாசியுங்கள். பிரசங்கி 11ஆம் அதிகாரம் (1 ஆம் வசனம்) “உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு. அநேக நாட்களுக்குப்பின்பு அதின் பலனைக் காண்பாய்.”
கல்லூரியில் என் roommate அசோக்குமார் என்று ஒரு நண்பர் இருந்தார். ஒரு நாளைக்கு அவரையும் கூட்டிக்கொண்டு வந்து தன் சாட்சியைச் சொல்ல வைக்கிறேன். முதல் வருடம் என்னுடைய roommate நான்குபேர் இருந்தோம். இரண்டாவது வருடம் நாங்கள் roommate மூன்றுபேர் இருந்தோம். மூன்றாவது வருடம் நாங்கள் roommate இரண்டுபேர் இருந்தோம். நான்காவது வருடம் கட்டாயமாகத் தனிஅறையில்தான் இருக்க வேண்டும். roommate கிடையாது. முதல் வருடம், இரண்டாவது வருடம், மூன்றாவது வருடம் ஆகிய மூன்று வருடங்களும் அசோக்குமார் என்னுடைய roommate. அவர் இந்து. நான் அவருக்கு நற்செய்தியை அறிவித்தது உண்டு. கடைசியில் அது வாக்குவாதமாக மாறும் அல்லது கேள்வியாக மாறும். எங்கே ஆரம்பித்து எங்கே முடிக்க வேண்டும் என்று தெரியாது. இரண்டு நிமிடம் சொல்வேன். ஐம்பது நிமிடம் சொல்வேன். இரண்டு மணி நேரம் சொல்வேன். என் நண்பன் Prayer cellக்கு வருவான். ஆனால், திருப்பரங்குன்றம் கோயிலுக்கு மக்கள் நடந்து செல்லும்போது அங்கேயும் போவான். அவர் இந்து மார்க்கத்தை சார்ந்தவர். நான் கல்லூரி வாழ்க்கை முடிகிறவரை அவர் இரட்சிக்கப்படவில்லை. Indian Engineering Services எழுதி இந்தியன் ரயில்வேயிலே அவர் உயர் அதிகாரியாக இருக்கிறார். அப்பொழுதுதான் அவர் இரட்சிக்கப்பட்டார். “உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு. அநேக நாட்களுக்குப்பின்பு அதின் பலனைக் காண்பாய்.”
நன்றாய்க் கவனிக்க வேண்டும். நாம் என்னவோ அறிவாளிகள், வல்லமையுள்ளவர்கள், ஞானிகள் என்பதினால் சுவிசேஷம் வேலை செய்வதில்லை. பரிசுத்த ஆவியானவர் ஒரு மனிதனுடைய வாழ்க்கையிலே ஏற்கெனவே வேலை செய்துகொண்டிருக்கிறார். நாம் அவரோடு இணைந்து வேலை செய்கிறோம். அவர் 99 சதவிகிதம் வேலையைச் செய்கிறார். ஒரே ஒரு சதவிகிதத்தை நம்முடைய கையிலே கொடுத்து அந்த வேலையைச் செய்யச் சொல்லுகிறார்.
பிரசங்கி 11ஆம் அதிகாரம் (6ஆம் வசனம்) “காலையிலே உன் விதையை விதை; மாலையிலே உன் கையை நெகிழவிடாதே; அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ என்றும், இரண்டும் சரியாய்ப் பயன்படுமோ என்றும் நீ அறியாயே.” இது நற்செய்திக்கு மட்டுமல்ல. வாழ்க்கையினுடைய எல்லா முயற்சிகளுக்கும் பொருந்தும். ஒருநாள் விதைத்துவிட்டுப் போய்விடக் கூடாது.
நான் இதில் தவறியிருக்கிறேன். கல்லூரிப் படிப்பை முடித்தபிறகு என் நண்பன் அசோக்குமாரை நான் தொடர்ச்சியாகத் தொடர்புகொண்டது கிடையாது. அதற்கும் அப்பாற்பட்டு தேவன் அவரை இரட்சிப்பிற்குள் கொண்டுவந்தார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!
நாம் தேவனோடு ஒத்துழைத்தால் தேவன் எவ்வளவு அற்புதமான கிரியைகளைச் செய்வார்! நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்போஸ்தலர் 16ஆம் அதிகாரம் (13ஆம் வசனம்). “ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாக ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த பெண்களுக்கு உபதேசித்தோம்.” ஆற்றினருகிலே வழக்கமாய் ஜெபம் பண்ணுகிற இடம். வழக்கமாய் என்றால் ஒருநாள் போய் நற்செய்தி அறிவித்துவிட்டு, அதோடு தங்கள் தொழில் முடிந்தது என்பதல்ல. பவுலும்கூட வழக்கமாயப் போய் நற்செய்தி அறிவிக்கிறார்.
லீதியாள் ஒன்றும் சாதாரணப் பெண் என்று நீங்கள் நினைத்துவிட வேண்டும். She is a business-woman. இரத்தாம்பரம் விற்கிறவள். “ஏதோ வாழ்க்கையிலே மிகவும் அடிபட்டு இருந்தாள். ஆதனால் வேறு வழியில்லாமல் பவுலினுடைய சுவிசேஷத்தைக் கேட்டு இரட்சிக்கப்பட்டாள்,” என்று நினைக்க வேண்டாம். “பிரதர், பலவீனமான ஆட்களையெல்லாம் நீங்கள் பிடித்துக்கொண்டு போய்விடுகிறீர்கள்.” அப்படியல்ல. அவள் தேவபக்தியுள்ளவள்; நீதி, பரிசுத்தம் இவைகளைப்பற்றி உணர்வுள்ளவள். ஆகவே, பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் லீதியாளுடைய இருதயத்தைத் திறந்தருளினார்.
அப்போஸ்தலர் 19ஆம் அதிகாரம் (9, 10 ஆம் வசனங்கள்) முக்கியமான வசனங்கள். “சிலர் கடினப்பட்டு அவிசுவாசிகளாகிக் கூட்டத்திற்குமுன்பாக இந்த மார்க்கத்தை நிந்தித்தபோது, அவன் அவர்களை விட்டு விலகி, சீஷரை அவர்களிலிருந்து பிரித்துக்கொண்டு, திறன்னு என்னும் ஒருவனுடைய வித்தியாசாலையிலே அநுதினமும் சம்பாஷித்துக்கொண்டுவந்தான்.” திறன்னு என்பவனுடைய பள்ளிக் கூடத்திலே சீடர்களை கூட்டிக்கொண்டுபோய் ஒவ்வொருநாளும், நாள்தோறும் அவன் உரையாடினான். அப்படி எத்தனை வருடம்? அடுத்த வசனம் சொல்கிறது. ஷஷஇரண்டு வருஷகாலம் இப்படி நடந்ததினாலே ஆசியாவில் குடியிருந்த யூதரும் கிரேக்கருமாகிய எல்லாரும் கர்த்தராகிய இயேசுவின் வசனத்தைக் கேட்டார்கள்.” இரண்டு வருடங்கள் இப்படி நடந்ததினாலே ஆசியாவில் ஏறக்குறைய எல்லாரும் கர்த்தருடைய நற்செய்தியைக் கேட்டார்கள். பவுலைவிட நாம் வல்லமையான ஆட்களா? இரண்டுவருடம் ஒவ்வொரு நாளும் அவன் நற்செய்தியைப்பற்றி உரையாடுகிறான்.
ஒருவருக்கு நற்செய்தி அறிவிக்க ஆரம்பித்துவிட்டால் வாரத்திற்கு ஒருநாளாவது நாம் உரையாட வேண்டும். அந்தக் காலத்திலே நேரடியாகச் சென்றுதான் உரையாட வேண்டும். ஆனால், இந்தக் காலத்திலே அப்படியில்லை. தொலைபேசி, கைபேசிமூலமாக எவ்வளவோ செய்ய முடியும்.
என்னுடைய மூன்றாவது குறிப்பு. ஒரு மனிதனுடைய வாழ்க்கையிலே அவன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு இடம்கொடுத்து, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போது அவனுடைய வாழ்க்கை செப்பனிடப்பட ஆரம்பிக்கும். ஆனபோதிலும், அவர்கள் எடுத்தவுடனே, “இயேசு கிறிஸ்துவை மையமாகக்கொண்டு, என் வாழ்க்கையைத் திருத்தி அமைத்துக்கொள்ள விரும்புகிறேன். அன்பும், நீதியும், பரிசுத்தமும், ஒளியும் நிறைந்த வாழ்க்கையாக மாற வேண்டும் என்று விரும்புகிறேன்,” என்று வரமாட்டார்கள். அவர்கள் வாழ்க்கையிலே ஒரு நெருக்கடி இருக்கும். ஒரு தற் போதைய தேவை இருக்கும். அது என்னவென்றால் ஒருவேளை உடலிலே ஒரு நோயினாலே வேத னைப்படுபவா;களாக இருக்கலாம். குடும்பத்திலே உறவுகளிலே ஒரு சிக்கல் இருக்கலாம். வறுமையினாலே அவர்கள் துன்பப்படலாம். இப்படி இந்த உடல் வாழ்க்கைக்குரிய இயற்கையான சில தேவைகள் அவர்களுக்கு இருக்கும். இந்தத் தேவைகளை இயேசுகிறிஸ்து சந்திப்பாரா, தீர்ப்பாரா, நிறைவுசெய்வாரா, மாட்டாரா? இதைப்பற்றி நாம் அக்கறை காண்பிக்க வேண்டுமா அல்லது அக்கறை காண்பிக்க வேண்டாமா?
நல்ல வேலையில்லாத ஒரு சகோதரியிடம் நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். “இயேசு கிறிஸ்து உங்களுக்கு நல்ல வேலை தருவாரா?” கண்டிப்பாக, நிச்சயமாக, தருவார். எந்த சந்தேகமும் இல்லை. “எப்படிச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டால் அவர் தம்மை அறியாத மக்களுக்கும் நன்மைகளைத் தருகிறார். அப்படியிருக்க தம் மக்களுக்கு நன்மைகளைத் தருவது அதிக நிச்சயம். “நான் உழைக்க மாட்டேன்” என்றால் அந்த ஆசீர்வாதம் இருக்காது. உழைப்பதற்கு ஆயத்தமாக இருந்தால் நிச்சயமாக ஆசீர்வதிப்பார். இயேசுகிறிஸ்துவுக்கு உன்னுடைய வாழ்க்கையிலும், இருதயத்திலும் இடம் கொடுத்திருந்தால் கர்த்தர் நிச்சயமாகத் தருவார்.
பரிசுத்த ஆவியானவருடைய கொடைகளை அல்லது பரிசுத்த ஆவியானவருடைய வல்லமையைச் சார்ந்து, நாம் அவர்களுக்கு நம்பிக்கையையும், விசுவாசத்தையும், தைரியத்தையும் ஊட்ட வேண்டும். “உன் வாழ்க்கை எந்த நிலைமையில் இருந்தாலும் சரி, அதைக் கர்த்தரால் செப்பனிட முடியும். உன்னுடைய நிலையிலிருந்து கர்த்தர் உன்னை விடுவிக்க முடியும்,” என்று நாம் அவர்களுக்குச் சொல்ல வேண்டும்.
ஆனால், அதே சமயத்திலே நற்செய்தி அறிவிக்க வேண்டும். நற்செய்தியை அறிவித்து, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் வருகின்ற பாவ மன்னிப்பையும், நித்திய ஜீவனையும் பெற்றுக்கொள்வதற்கு நாம் அவர்களை நடத்த வேண்டும். ஆனால், அவர்களுடைய உடனடி தேவை, தற்போதைய தேவை, உடல் வாழ்க்கைக்குரிய தேவை’ அவைகளையும் கர்த்தர் சந்திப்பார்’ என்று அவர்களுக்கு நம்பிக்கையையும், விசுவாசத்தையும் அளிக்க வேண்டும்.
இதிலே ரொம்ப எச்சரிக்கையாக இருக்க வேண்டும். “எனக்குக் குழந்தை இல்லை. இயேசுகிறிஸ்து குழந்தை தருவாரா? குழந்தை தந்தால் நாங்கள் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறோம்,” என்று ஒருவர் சொன்னாரல், அதுதான் அவருடைய உடனடித் தேவையென்றால், இதற்கு நாம் பதில் சொல்ல முடியாது. இந்த மாதிரி நாம் நற்செய்தி அறிவிக்கக்கூடாது. “இயேசு கிறிஸ்து உங்களுக் குக்குழந்தை தந்தால் நல்லது, நீங்கள் அவரை ஏற்றுக்கொள்ளுங்கள். ஆனால், அவர் உங்களுக்குக் குழந்தை தந்தாலும் சரி, தராவிட்டாலும் சரி இயேசுகிறிஸ்து உங்கள்மேல் அன்புகூர்ந்து, உங்களுக்காகத் தம் இரத்தத்தைத் சிந்தியிருக்கிறார். உங்கள் இருதயத்தின் வாஞ்சைகளையும், விருப்பங்களையும் கர்த்தர் நிறைவேற்றுவார்,” என்று சொல்லலாம்.
இந்த இடத்திலே கொஞ்சம் கவனத்தோடு நாம் நடந்துகொள்ள வேண்டும். இரண்டு அற்றங்களுக்குப் போய்விடக் கூடாது. ஒரு அற்றம் மக்களுடைய உடனடி தேவைகளைக்குறித்து அக்கறையில்லாதவர்களாய் நாம் இருக்கக்கூடாது. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை ஆயிரக்கணக்கான மக்கள் நாடி வந்தார்கள். ஒரு சிலர்தான் அவருடைய சீடராக மாறினார்கள். வந்த எல்லாரிடத்திலும் முதலில் இருந்தே கணக்குப்போட்டு, “நான் உன்னை சுகமாக்குகிறேன். ஆனால் நீ எனக்குச் சீடனாக இருப்பாயா?” என்று அவர் கேட்கவில்லை. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவால் முடியும் என்று ஒருவன் சொன்னால், இயேசு, “என்னால் குணமாக்க முடியும் என்று நீ விசுவாசிக்கிறாயா?” என்று கேட் கிறார். “விசுவாசிக்கிறேன், ஆண்டவரே” என்று சொன்னால், “நீ குணம் பெற்றாய்,” என்று சொல்லி குணப்படுத்துகிறார்.
ஐயாயிரம்பேர்களை அவர் அற்புதமாய்ப் போஷிக்கிறார். அடுத்தநாள் அந்த ஐயாயிரம்பேரிலே ஒரு நூறுபேர், “இவன் எப்படி தன் மாம்சத்தை நமக்குப் புசிக்கக்கொடுப்பான்,” என்று அவரோடு சண்டைக்கு வருகிறார்கள். சண்டை போட்டவர்களெல்லாம் ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்ட அப்பத்தை புசித்தவர்கள்தான்.
ஆகவே, ஒரு அற்றம், அவர்களுடைய உடனடித் தேவையைக்குறித்து அக்கறையில்லாமல் இருப்பது. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து அவர்களுடைய உடனடித் தேவையைக்குறித்து மிகவும் அக்கறையுள்ளவராய் இருந்தார். இன்னொரு அற்றம், கண்மூடித்தனமான வாக்குறுதிகளைக் கொடுப்பது. அவர்களுடைய இருதயத்தின் நிலைமை என்னவென்று அறிந்து, “ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து செய்வார் அல்லது செய்யமாட்டார்,” என்று அவருடைய பிரதிநிதிகள் என்ற முறையிலே நாம் வாக்குறுதி அளிக்க வேண்டும்.
நன்றாய்க் கவனிக்க வேண்டும். “மூன்றரை வருடங்கள் இந்த நாட்டிலே மழை பெய்யாது,” என்று எலியா சொல்கிறான். சொல்லிவிட்டு காட்டிற்குள் அவன் ஜெபிக்கப் போய்விடுகிறான். இரண்டுவிதமான தீர்க்கதரிசிகள் இருக்கிறார்கள். முதல் வகையான தீர்க்கதரிசி யாரென்றால் “மூன்றரை ஆண்டுகள் மழை பெய்யாது என்று அறிவி,” என்று கர்த்தர் அவனுக்குச் சொல்வார். அதைத் தொடர்ந்து. “மூன்றரை ஆண்டுகள் மழை பெய்யாது என்று கர்த்தர் சொல்லுகிறார்,” என்று அவன் சொல்வான். இது முதலாவது வகை தீர்க்கதரிசி. “அது ஒன்றுதானே தீரக்கதரிசி,” என்று நீங்கள் நினைக்கலாம். இல்லை, இல்லை.
இரண்டாவது வகை தீர்க்கதரிசி உண்டு. அது யாரென்று கேட்டால் “மூன்றரை ஆண்டுகள் மழை பெய்யாது,” என்று சொல்லிவிட்டு அவன் கர்த்தரிடம் போவான். போய், “மூன்றரை ஆண்டுகள் மழை பெய்யாது என்று இப்போது சொல்லிவிட்டேன். இப்போது நீர் என்ன செய்ய வேண்டும்? என்னுடைய வாக்கை நீர் அங்கீகரிக்க வேண்டும். இல்லையென்றால் நான் உம்முடைய தீர்க்கதரிசி இல்லை,” என்பான். “நீ சொன்னதை நான் அங்கீகரிக்கிறேன்,” என்று ஆண்டவர் சொல்வார்.
இதில் யார் தலைசிறந்த தீர்க்கதரிசி? இரண்டாவது வகை தீர்க்கதரிசி. ஆனால், அது ஒரு ஆபத்தான நிலைமை. கர்த்தர் சொல்லாத ஒன்றை அவன் சொல்லி அவன் கர்த்தருடைய நாமத்தைத் தூஷிக்க வைப்பான். அதே மாதிரி, கர்த்தர் அந்தத் தீர்க்கதரிசிக்கு எந்த அளவுக்குத் தம்மை ஒப்புவித்திருப்பார் என்றால் “நீ சொன்னால் நான் அதை அங்கீகரிக்கிறேன்,” என்பார்.
1 சாமுவேல் 3ஆம் அதிகாரம் (19ஆம் வசனம்) இப்படி எழுதியிருக்கிறது. “சாமுவேல் வளர்ந்தான். கர்த்தர் அவனுடனேகூட இருந்தார். அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்துபோக விடவில்லை.”
அந்த இரண்டாவது வகை தீர்க்கதரிசி எல்லாவற்றையும் கர்த்தருக்காக விற்றுப்போட்ட நிலையில் எலியாவைப்போல இருப்பான். “என்னைத்தவிர அவனுக்கு இந்த வாழ்க்கையிலே எந்த ஈடுபாடும் இல்லை. அவன் என் சார்பாக பேசினால் நான் அதை அங்கீகரிப்பேன்.” அங்கீகரித்தல் என்றால் என்ன? “நான் அந்த வார்த்தையைக் கீழே விழுந்துபோக விடமாட்டேன்,” என்று பொருள்.
ஒரு நாட்டின் தூதுவர்கள் இருக்கிறார்கள். நாட்டின் கருத்து என்னவோ அதைத்தான் அந்த தூதுவன் அடுத்த நாட்டிற்குச் சொல்ல வேண்டும். ஆனால், ஒருவேளை ஒரு நாடு ஒரு தூதுவனை எந்த அளவுக்கு மதிக்கிறதென்றால், அந்தத் தூதுவன் நாட்டின் சார்பாக ஒரு கருத்தைச் சொல்லிவிட்டு அவனுடைய பிரதமரிடம் வந்து, “இதுதான் நம் நாட்டினுடைய கருத்து என்று நான் சொல்லிவிட்டேன். இதை உம்முடைய கருத்தாக நீர் எடுத்துக் கொள்ளவேண்டும்,” என்று சொல்லுகிறான். இப்போது அந்தப் பிரதமர் அவனுடைய கருத்தை நாட்டின் கருத்தாக எடுத்துக்கொள்கிறார் என்றால் அந்தத் தூதுவர்மேல் பிரதம மந்திரிக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்!
அப்படிப்பட்ட நம்பிக்கைக்குரிய மக்களாய் நாம் வாழ்வோமென்றால், “உம்முடைய இருதயத்தைத்தவிர இடதுபுறம் வலதுபுறம் வழுவமாட்டேன்,” என்கிற வாழ்க்கை நாம் வாழ்வோமென்றால், நாம் இரண்டாம் வகையைச் சாரலாம். இரண்டாம் வகை தீர்க்கதரிசிகள் தேவனுடைய பார்வையிலே மிகவும் அருமையானவர்கள். அநேகர் இல்லை. ஆகவே நம்முடைய மூன்றாவது குறிப்பு. தேவனுடைய சார்பாய் “கர்த்தர் இதைச் செய்வார்;” என்று நாம் சொல்லலாம். பல வசனங்கள் உண்டு. அப்போஸ்தலர் 14ஆம் அதிகாரம் (3ஆம் வசனம்) “அவர் தமது கிருபையுள்ள வசனத்திற்குச் சாட்சியாக அடையாளங்களும் அற்புதங்களும் அவர்கள் கைகளால் செய்யப்படும்படி அநுக்கிரகம்பண்ணினார்.” எப்போதுமே தேவனுடைய மக்கள் தைரியமுள்ளவர்களாய்ப் பேசுகிறார்கள். குத்துமதிப்பாய் அல்ல, தோராமாய் அல்ல. நாம் நம்பலாம். “ஆண்டவரே, உம்முடைய வார்த்தையைச் சொல்லியிருக்கிறோம். இப்பொழுது உம்முடைய வார்த்தைக்கு சாட்சி பகர வேண்டும்.” தம்முடைய கிருபையுள்ள வசனத்திற்கு சாட்சியாக பவுலுடைய கைகளினாலே அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி அநுக்கிரகம்பண்ணினார்.
அதே அப்போஸ்தலர் 19ஆம் அதிகாரம் (11 ஆம் வசனம்) தேவன் பவுலுடைய கைகளினாலே பல விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார். எந்த அளவுக்குச் செய்தாரென்றால் அவருடைய கைக்குட்டையை யார்மேலாவது போட்டால் சுகமானார்களாம். உடனே மக்கள் அதை வியாபாரமாக்கிவிடுவார்கள். “ஆசீர்வதிக்கப்பட்ட கைக்குட்டை” வியாபாரம். அதே பவுல் கைக்குட்டையை மட்டுமல்ல, போர்வையைப் போட்டால்கூட எப்பாப்பிரோதீத்து சுகமாகவில்லை. அதையும் நீங்கள் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். “இது நான் பயன்படுத்தின போர்வை; தீமோத்தேயு, நீ என் துண்டை உன் வயிற்றில் கட்டிக்கொள். அப்போது உன் வயிற்றிலிருக்கிற பலவீனங்களெல்லாம் சரியாகிவிடும்,” என்றால் ஒன்றும் நடக்காது.
தேவன் அவருடைய நற்செய்தியை ஆதரிப்பதற்காக, அவருடைய வசனத்திற்கு சாட்சி பகருவாரேதவிர தேவனுடைய மக்கள் அற்புதங்களினால் வாழ்வதில்லை. எதனால் அவர்கள் வாழ வேண்டும்? கிறிஸ்துவால் அவர்கள் வாழ வேண்டும். இயேசுகிறிஸ்துவை அறியாத மக்களுக்கு அவர் உடல் வாழ்க்கைக்குரிய நன்மைகளைக் கண்கூடாகக் கொடுப்பார். இயேசுகிறிஸ்துவை அறிந்தபிறகு அவர் என்ன செய்வார் என்றால் அந்த உடல் வாழ்க்கைக்குரிய நன்மைகளும் எங்கு உள்ளன? கிறிஸ்துவில் உள்ளன. மறுமைக்குரிய நன்மைகள் மட்டுமல்ல. இம்மைக்குரிய நன்மைகளும் கிறிஸ்துவில் உள்ளன. வயிற்றில் பலவீனம் இருக்கலாம். வியாதி இருக்கலாம். எல்லா நிலையிலும் கிறிஸ்துவால் வாழ முடியும்.
நான்காவது குறிப்பு. நற்செய்தி அறிவித்தபிறகு நாம் அவர்களோடு ஓர் உறவை ஏற்படுத்த வேண்டும். என்னை நம்பாவிட்டால் நான் சொல்கிற நற்செய்தியையும் அவர்கள் நம்பமாட்டார்கள். என்மேல் மதிபபில்லாவிட்டால் நான் சொல்லும் நற்செய்திக்கும் மதிப்பு இருக்காது. என்மேல் அன்பில்லாவிட் டால் நான் கூறும் நற்செய்தியின்மேலும் அவர்களுக்கு அன்பு இருக்காது. ஆகவே, நாம் நற்செய்தியை எவர்களுக்கு அறிவிக்கிறோமோ அவர்களோடு ஒரு நல்ல உறவைக் கட்டியெழுப்ப வேண்டும்.
நல்ல உறவைக் கட்டியெழுப்புவதற்கு மிக எளிய வழிகளை நான் உங்களுக்குச் சொல்கிறேன். உங்கள் இல்லங்களை, உங்கள் வீடுகளை, அவர்களுக்குத் திறந்து கொடுங்கள். எதற்காக உங்கள் வீடுகளை நீங்கள் திறந்து கொடுக்க வேண்டும்? ஒருவேளை அவர்கள் தங்குவதற்குத் திறந்து கொடுக்க வேண்டும். மிக முக்கியமாக நீங்கள் உணவுக்கு அவர்களை அழையுங்கள்.
யோவான் 21ஆம் அதிகாரத்தை எத்தனை தடவை வாசிக்க வேண்டும் என்று சொன்னேன்? ஐந்து முறை வாசிக்க வேண்டும் என்று உங்களுக்கு ஒரு வீட்டுப்பாடம் கொடுத்தேன். அதில் சில வசனங்களை நாம் இப்பொழுதே வாசிக்கலாம். யோவான் 21ஆம் அதிகாரம் (3 ஆம் வசனம்) “சீமோன் பேதுரு மற்றவர்களை நோக்கி மீன்பிடிக்கப்போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படவேறினார்கள். அந்த இராத்திரியிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை.” அந்த இராத்திரியிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை. ஏன் என்று கேட்டால் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை ஏறக்குறைய மறுதலித்து விட்டு சீமோன்பேதுரு மீன்பிடிக்கப்பேகிறார். அவர் மற்றவர்களையும் இழுக்கிறார். மற்றவர்களும் அவனோடு சேர்ந்து மீன்பிடிக்கப் போகிறார்கள். அந்த இராத்திரியிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை.
மனித வாழ்க்கையிலே, இயேசுகிறிஸ்து இல்லாத வாழ்க்கையிலே, நிச்சயமாக இழப்புகள் உண்டு. 4ஆம் வசனம் மிகவும் அற்புதமான வசனம். “விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார்; அவரை இயேசு என்று சீஷர்கள் என்று அறியாதிருந்தார்கள்.” விடியற்காலமானபோது இயேசு கரையிலே நின்றார்.
நற்செய்தி அறிவிப்பதற்கு மக்களை நாம் தொடர்ந்துபோக வேண்டும். வேண்டாம் என்று சொன்னால்கூட நாம் நற்செய்தி அறிவிக்கப் போக வேண்டுமா, வேண்டாமா? “பிரதர், மதியாதார் வாசல் மிதியாதே என்று என்னுடைய தமிழ் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்,” என்றால் தமிழ் முன்னோர்கள் சொன்னதெல்லாம் வேதவாக்கு கிடையாது. மதியாதார் வாசல் மிதியாதே என்றால் இயேசுகிறிஸ்து இந்த உலகத்திற்குக் காலடி வைத்திருக்கவே கூடாது. யாரும் “வருக! வருக!” என்று பெரிய பலகை வைத்து, தோரணம் கட்டி இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார். அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் தேடிப் போனார். தேடி வந்தார். தொன்றுதொட்டு அப்படித்தான். ஆதாம் பாவம் பண்ணினபிறகு அவன் தேவனைத் தேடிப்போய், “நான் பாவம் செய்துவிட்டேன். எப்படிச் சரிசெய்வது?” என்று கேட்கவில்லை. “ஆதாமே! நீ எங்கே இருக்கிறாய்?” என்று தேவனே தேடி வந்தார்.
அதேபோல விடியற்காலமானபோது இயேசு கரையிலே நின்றார் என்றால் இயேசு அவர்களைத் தேடிப் போகிறார். நம்முடைய வீட்டிற்கு நாம் ஒரு விருந்தோம்பலுக்கு அழைத்தாலும் சரி; அவர்கள் வீட்டிற்குச் சென்றாலும் சரி; நாம் எப்போதுமே எப்படிச் செல்ல வேண்டும்? கைநிறைய ஆசீர்வாதத்தோடு செல்ல வேண்டும். அது என்ன பொருள் எனக்குத் தெரியாது. ரோமர் 15ஆம் அதிகாரத்திலே அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார். ’நான் உங்களிடத்தில் வரும்போது கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் சம்பூரண ஆசீர்வாதத்தோடே வருவேனென்று அறிந்திருக்கிறேன்” (வ.29). நான் எப்போதுமே அப்படி ஜெபித்துவிட்டுப் போவது உண்டு. தேவனுடைய மக்களை சந்திக்கப் போகும்போது, “ஆண்டவரே, கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் சம்பூரண ஆசீர்வாதத்தோடு நான் போக வேண்டும். இந்த உலகத்திற்குரிய மக்கள் செய்வதுபோல, சொல்வதுபோல வெறுமனே ‘சாப்பிட்டீர்களா, தூங்கினீர்களா, இந்தச் சட்டை எங்கே வாங்கினீர்கள், செருப்பு எங்கே வாங்கினீர்கள், வெங்காயம் விலை என்ன, தக்காளி விலை என்ன, கறிவேப்பிலை விலை என்ன, கொத்துமல்லி விலை என்ன, முந்தியெல்லாம் இலவசகமாகக் கொடுத்தார்கள். இப்போதெல்லாம் கொத்துமல்லிகூட பைசாக் கொடுத்துத்தான் வாங்க வேண்டும்’ என்று கேட்பதற்காகப் போகவில்லை,” என்று நான் ஜெபிப்பதுண்டு. இது கிறிஸ்துவின் சுவிசேஷத்தைச் சம்பூரண ஆசீர்வாதத்தோடே கொண்டுபோவது அல்ல.
அவர்களை நம்முடைய வீட்டிற்கு நாம் அழைக்க வேண்டும். இயேசுகிறிஸ்து, “உங்கள் வலையைப் படகுக்கு அப்பால் போடுங்கள்,” என்று சொல்கிறார். அவர்கள் போடுகிறார்கள். வலை கிழிந்து போகத்தக்கதாக மீன்கள் அகப்படுகின்றன. அப்போதுதான் இவர்களுக்குக் கண் திறக்கிறது. “இராத்திரி முழுவதும் நாம் பிரயாசப்பட்டும் ஒன்றும் கிடைக்கவில்லை. இந்த மனிதர் சொல்லி நாம் செய்தோம். வலை கிழிந்துபோகும்படி மீன் அகப்படுகிறது. அந்த மனிதர் யார்? இவர் இயேசுவாகத்தான் இருக்க வேண்டும்,” என்று அவர்களுக்குத் தெரிகிறது. இப்போது இயேசுகிறிஸ்து தன்னை யார் என்று காண்பிக்கவில்லை, நிரூபித்துவிட்டார். இதோடு கதை முடிந்துவிடவேண்டும் இல்லையா? முடியவில்லை. “அவர்கள் கரையிலே வந்திறங்கினபோது, கரிநெருப்புப் போட்டிருக்கிறதையும், அதின்மேல் மீன் வைத்திருக்கிறதையும், அப்பத்தையும் கண்டார்கள்” (வ. 9).
உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்து சமையல் செய்தார். அது அவருக்கு ரொம்ப முக்கியமான வேலையா? உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்து பரமேறி பிதாவின் வலதுபாரிசத்தில் உட்கார்ந்திருந்து நம்மை முற்றுமுடிய இரட்சிக்கிறதற்கு ஜெபம் பண்ணிக்கொண்டிருக்க வேண்டுமா அல்லது உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்து கடற்கரைக்கு வந்து கரிநெருப்புப் போட்டு மீன் சுட்டு அப்பத்தை வைத்து இந்த மாதிரி வேலையெல்லாம் செய்ய வேண்டுமா?
சமையல் பண்ணுகிறவன் எதைத்தான் பண்ண வேண்டும்? சமையல் பண்ண வேண்டும். மேலாளார் எதைத்தான் பண்ண வேண்டும்? மேலாண்மைதான் பண்ண வேண்டும். சமையல்காரன் மேலாண்மை பண்ணினால் அந்த நிறுவனம் செழிக்காது. ஆனால், அந்தக் குடும்பம் செழிக்கும். தேவனுடைய சபை என்பது ஒரு நிறுவனம் அல்ல. அது குடும்பம். அவன் தந்தையாக இருக்க வேண்டும். மேலாளராக இருக்க வேண்டும், கழிவறையைக் கழுவுகிறவனாக இருக்க வேண்டும், சமையல்காரனாக இருக்க வேண்டும், பாத்திரம் கழுவுகிறவனாக இருக்க வேண்டும். எல்லாமுமாக மாற வேண்டும். முன்னுதாரணம் யார்? ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து. நான் இயேசுகிறிஸ்துவாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என்று யோசித்துப்பார்த்தேன். “மீனை எண்ணிப்பார், 153. நான் யாரென்று தெரிகிறதா? ஒரே தடவையிலே வலை கிழிந்து போகும்படி 153 மீன்கள். நான் யார்?” என்றவுடனே எல்லாரும், “கர்த்தாவே, ஆண்டவரே,” என்று சொல்லி காலில் விழுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். “இனிமேல் மீன்பிடிக்கப் போவாயா, போவாயா?” என்று கேட்க, அவர்கள், “போகமாட் டோம், ஆண்டவரே,” என்று கதையை முடிப்போம். அதைவிட்டுவிட்டு இயேசுகிறிஸ்து உட்கார்ந்து கரிநெருப்புப்போட்டு மீன் சுட்டு அப்பத்தை வைத்து அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். அந்தக் காட்சியை கற்பனை பண்ணிப் பார்க்கிறேன்.
உணவு முக்கியம். எலியா களைத்துப்போய், “நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்; எனக்கு வாழ்க்கை வேண்டாம்,” என்று ஜெபித்துவிட்டுப் படுக்கிறான். கர்த்தர் தூதனை அனுப்பி அவனுக்குச் சூடான அப்பமும், தண்ணீரும் கொடுக்கிறார். அவன் எழுந்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் “இனிமேல் சுவிசேஷமே அறிவிக்கமாட்டேன்,” என்று நினைத்துப் படுத்துத் தூங்குகிறான். “இந்த மாதிரி ஆட்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கிறதால் பணமும் நேரமும் வீணாகும். உணர்ச்சிவசப்பட்டு நம்முடைய வாழ்க்கையிலே பணத்தையும் நேரத்தையும் வீணாக்கியிருக்கிறோம். அதிலே இதுவும் ஒன்று,” அவன் நினைத்திருக்கலாம், நாம் சில சமயம் நினைப்பதுபோல. இல்லை. மறுபடியும் தூதனை அனுப்பி, சூடான அப்பமும் தண்ணீரும் கொடுக்கிறார். இந்த இடத்திலே எலியா தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்கிறான். “நீ நடக்க வேண்டிய தூரம் நிறைய உண்டு.”
நற்செய்தி அறிவிக்கிறோம்; ஆனால், விருந்தோம்பல் இல்லையென்றால் அந்த நற்செய்திக்கு எந்த வீரியமும் இல்லை. நிரூபணம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து. (12, 13 ஆம் வசனங்கள்) “இயேசு அவர்களை நோக்கி: வாருங்கள், போஜனம் பண்ணுங்கள் என்றார்.” சுட்டது மட்டும் இல்லை. தானாக உணவைப் பரிமாறுவதல்ல. கரிநெருப்புப் போட்டு, மீன் சுட்டு, அப்பம் வைத்து “எல்லாரும் எடுத்துக்கொள்ளுங்கள்,” என்பதல்ல. “வாருங்கள், வந்து போஜனம் பண்ணுங்கள்.” இந்த மாதிரி அன்பின் வார்த்தைகளும், இனிய வார்த்தைகளும் நம்மால் பேச முடியாது; நாம் செய்யவும் மாட்டோம்.
அருமையான பரிசுத்தவான்களே, நாம் இதை மாற்றிக்கொள்ள வேண்டும். ஒரு வருடம் ஆகிறது ஆனால், என்னுடைய நற்செய்தியைக் கேட்டு ஒருவர்கூட ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின்பால் ஈர்க்கப்படவில்லையென்றால் அதில் பெரிய இரகசியம் ஒன்றும் இல்லை. நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை ஒரு நபரைக் கூப்பிட்டு உங்கள் வீட்டிலே நல்ல விருந்தோம்பல் செய்யுங்கள். எப்படியும் வாரத்திலே ஒருநாள் மீன்குழம்போ அல்லது கோழிக்கறியோ வைப்போம் இல்லையா? அந்த நாளிலே யாரைக் கூப்பிட்டுவிடுங்கள். நற்செய்தி அறிவிப்பதற்கு ஒரு அருமையான நபரை அல்லது ஒரு குடும்பத்தையோ நீங்கள் கூப்பிடுங்கள். அவர்கள் விருந்தோம்பலோடு நற்செய்தியைக் கேட்கட்டும்.
“வாருங்கள், வந்து புசியுங்கள்,” என்று சொன்னார். (13 ஆம் வசனம்) அப்பொழுது இயேசு அப்பத்தையும் மீனையும் எடுத்து அவர்களுக்குக் கொடுத்தார்.” நாம் இயேசுகிறிஸ்துவினிடத்திலே பெரிய பெரிய காரியங்களெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டாம். ஒருமுறை நான் சொன்னேன். அவர் உயிர்த் தெழுந்தபிறகு துணியை மடித்து வைத்துவிட்டுப் போனார். ஞாபகம் இருக்கிறதா? ஆறு பதினைந் திற்குப் பேருந்து வந்துவிடும் என்றால் போர்வையை மடித்து வைப்பது முக்கியமா அல்லது பேருந்தைப் பிடிப்பது முக்கியமா? என்ன பண்ணுவது?
தேவதூதர்களெல்லாம் அவரை வரவேற்று, கூட்டிக்கொண்டு போவதற்கு வந்துவிட்டார்கள். எத்தனை பேர் வந்திருப்பார்கள் என்று தெரியவில்லை. ஏனென்றால், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஒரு முறை, “நான் இப்பொழுது சொன்னால் 12 லேகியோன் தேவதூதர்கள் வருவார்கள்,” என்றார். 12 லேகியோன்கள் என்றால் எத்தனை பேர்? எழுபத்திரண்டாயிரம்பேர் வருவார்கள். ஒரேவொரு தூதனை நோக்கி, “நீ துணியை மடித்துவைத்துவிட்டு வா; நான் போய்க்கொண்டிருக்கிறேன். உனக்காக 72,000 தூதர்களைக் காத்திருக்கவைக்க முடியாது பார். நேரம் கழிந்தால் கவர்னர் பிலாத்து, ராஜா ஏரோது, பிரதான ஆசாரியன் காய்பா இவர்களெல்லாம் 72,000 பேரைவிட அதிகமான போர் வீரர்களை அனுப்பி வைத்தால் என்னுடைய யாத்திரை தடைபடும்,” என்பதல்ல. அவர் தம்முடைய எல்லாவற்றையும் மடித்துவைத்துவிட்டுப் போனார்.
உடனே நம் பெரிய செய்தி போர்வையை மடித்துவைப்பதைப்பற்றியது என்று நினைத்துவிட வேண்டாம். “பிரதர், உங்கள் சபையிலே இது பெரிய உபதேசமா? போர்வை மடித்துவைக்க வேண்டும்.” அப்படியல்ல. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவிடமிருந்து எளிய காரியங்களை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். சமைக்கிறார். “வந்து சாப்பிடு” என்று இனிய வார்த்தை. அதை அவர் பரிமாறுகிறார்.
“என்னிடம் பணம் இல்லை,” என்று நீங்கள் நினைக்கலாம். இல்லை. நற்செய்தி அறிவிக்க வேண்டுமென்றால் முதலில் பத்து ரூபாய் ஒதுக்கிவிட வேண்டும். அன்பு சகோதரா; பால் சூ என்று ஒருவர் ஃபின்லேன்ட்டில் இருக்கிறார். முதலாவது ஓசன்னா அங்கு போகும்போது, “:ஓசன்னா வருகிறான்; அவனை அழைத்துக்கொண்டுபோங்கள்,” என்று நான் சொல்லியிருந்தேன். பால் சூ இந்தியா வந்தபோது ஓசன்னா, துதி எல்லாம் சின்னப் பிள்ளைகள். “ஒரு இரவு உங்கள் வீட்டில் தங்க வைத்து விடுங்கள். அடுத்த நாள் அவன் போய் விடுவான்,” என்று சொல்லியிருந்தேன். ஓசன்னா ஒரு இரவுகூட அங்கே தங்கவில்லை. “என்னை நீங்கள் என் அறையிலே விட்டுவிடுங்கள்,” என்று போய்விட்டான். அப்பொழுது “குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒருமுறையாவது பால் சூவை நீ சந்திக்க வேண்டும்; அவரோடு ஐக்கியம் கொள்ள வேண்டும்,” என்று நான் அவனுக்குச் சொல்லியிருந்தேன். அவர்கள் ஐக்கியம் கொள்வார்கள். அதை நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஐக்கியங் கொள்ளும்போதெல்லாம் ஓசன்னாதான் எப்போதுமே பணம் செலுத்தவேண்டும் என்றும் சொல்லியிருந்தேன். சமீபத்தில் பால்சூ எனக்கு ஒரு செய்தி அனுப்பியிருந்தார். “Today Hosannah and I ate together; he paid for me. He is a rich guy now. God bless your son”. “இன்றைக்கு நானும் ஓசன்னாவும் சேர்ந்து சாப்பிட்டோம். அவன் எனக்காகப் பணம் கொடுத்தான். இப்பொழுது அவன் ஐசுவரியமுள்ளவனாயிருக்கிறான். தேவன் உங்கள் மகனை ஆசீர்வதிப்பார.” நல்லது. நாம் இந்த முன்மாதிரியைப் பின்பற்றுவோம். அவர் அறுபது வயதானவர். அதைப்பற்றி நமக்குக் கவலை இல்லை. “ஐயோ! நம் பணமெல்லாம் போகிறதே!” என்று நாம் தவிக்க வேண்டாம்.
அடுத்த வசனம் சொல்லுகிறது. “போஜனம்பண்ணினபின்பு”தான் அவர் கேள்வி கேட்கிறார். சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே கேள்வி கேட்பது இருக்கிறதே தயவுசெய்து தேவனுடைய மக்கள் ஒரு நாளும் அப்படிச் செய்ய வேண்டாம். நல்ல இளைப்பாறுதலோடு அவர் சாப்பிடட்டும். கணவனாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும் சரி, பிள்ளைகளாக இருந்தாலும் சரி இளைப்பாறுதலோடு சாப்பிடட்டும். என்னமோ சாப்பாடு கொடுக்கிறதே இவர்களைக் கேள்வி கேட்டு மடக்குவதற்காகத்தான் என்பதுபோல் அல்ல.
“நீ என்னை நேசிக்கிறாயா?” “இதை முதலிலே கேட்டிருந்தால் நான் சாப்பிட்டிருக்கக்கூடமாட்டேன்,” என்பதல்ல. இளைப்பாறினபிறகு நாம், “ஆம், ஆண்டவரே” என்று சொல்ல முடிகிறது. ### 6. நேரத்தையும், வாய்ப்பையும் பயன்படுத்துதல் என்னுடைய கடைசிக் குறிப்பு இது. ஐந்தாவது குறிப்பு. நம் நேரத்தையும் வாய்ப்புகளையும் ஒதுக்கி வைக்க வேண்டும். நற்செய்தியை நாம் அறிவிக்க வேண்டுமென்றால் நம் நேரம் குறைவு. கல்யாணத்திற்கு போகிறது, துக்கவீட்டிற்கு போகிறது, பிறந்தநாள் விழாவிற்கு போகிறது இதையெல்லாம் நீங்கள் குறைக்க வேண்டும். நீங்கள் கல்யாண வீட்டிற்குப் போங்கள். துக்க வீட்டிற்குப் போங்கள். பிறந்தநாள் வீட்டிற்குப் போங்கள். என்ன கண்ணோட்டத்தோடு போக வேண்டும் என்றால் “இங்கு யாருக்கு நாம் நற்செய்தியை அறிவிக்கலாம்!” என்ற கண்ணோட்டத்தோடு நாம் அங்கே போக வேண்டும். அல்லேலூயா! சில சமுதாயப் பண்பாடுகளுக்காக நாம் நண்பர்களுடைய, உறவினர்களுடைய திருமணங்களுக்குப் போய்த்தான் ஆக வேண்டும். ஆனாலும், ஜெபத்தோடு போக வேண்டும். “தேவையுள்ள ஒரு ஆத்துமா, தேவையுள்ள ஒரு மனிதன் இங்கு இருந்தால், என்னைத் தொடர்புபடுத்தும் ஆண்டவரே,” என்று நம்முடைய கண்கள் எப்போதும் நற்செய்திக்கான வாய்ப்பு களைத் தேட வேண்டும்.
“தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான்” (2 தீமோ. 2:4). இவ்வுலகத்திற்குரிய ஈடுபாடுகளில் எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு ஈடுபாடுகளை குறைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். என்னுடைய மாணவர்கள் சிலபேர் தங்களுடைய திருமணத்திற்கு என்னைக் கூப்பிடுவார்கள். நான் போவது உண்டு. ஆனால் இப்பொழுது ஒரு சட்டம் வைத்திருக்கிறேன். தாம்பரத்தில் இருந்தால் போவேன், இல்லையென்றால் “உனக்காக நான் ஜெபம் பண்ணிக்கொள்கிறேன். கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்,” என்பதோடு நிறுத்திக்கொள்வேன். இன்னும் கொஞ்சநாள் கழித்து அதுகூடச் செய்யமாட்டேன். “தேவன் உன்னை ஆசீர்வதிப்பார். என்னை மதித்து என்மேல் அன்புகூர்ந்து வந்ததற்காக நன்றி. ஆனால் என்னால் வரமுடியாது,” என்று சொல்கிற நிலைமையை நான் எட்ட வேண்டும். ஏனென்றால் பொறுப்புகள் அதிகமாக இருப்பதாக நான் உணர்கிறேன்.
அருமையான பரிசுத்தவான்களே! இதுவரை சொன்னதை நான் சுருக்கிச் சொல்கிறேன். முதலாவது, பரிசுத்த ஆவியானவருடைய நடத்துதலையும், இயக்கங்களையும், அசைவையும் நாம் பின்பற்றக் கற்றுக்கொள்ள வேண்டும். திறந்த இருதயங்கள், மென்மையான இருதயங்களை, ஆயத்தம்பண்ணப்பட்ட இருதயங்களை அடையாளங்காண நாம் பழகி;க்கொள்ள வேண்டும். இரண்டாவது, தொடர் கவனிப்பு. ஒருநாளிலே விதைத்தோம்; மறுநாளிலே முளைத்தது என்பதல்ல. தொடர்ந்து நாம் அவர்களோடு ஒவ்வொரு வாரமும் நடைமுறையில் ஒருவர் நற்செய்தியை கேட்க ஆயத்தமாயிருந்தால் அவர்ட்களோடு தொடர்புகொள்ள ஒவ்வொரு வாரமும் ஒரு நாளைக் குறித்துக்கொள்ளுங்கள். எதைப் பேசுவது? “தேவனுடைய அடித்தளத்தின்மேல் கட்டுதல்” என்ற புத்தகம் தயாராகிக்கொண்டிருக்கிறது. அதிலே 20 அதிகாரங்கள் இருக்கின்றன. 40 வாரத்திற்கு நீங்கள் அதைப்பற்றிப் பேசலாம். அது தவிர நீங்கள் ஜெபிக்கும்போது தேவன் உங்களுக்கு அவர்களுடைய நிலைமையைப் பற்றி சில வார்த்தைகளை சொல்வதற்கு அருளினால் அதைப்பற்றி நீங்கள் பேசுங்கள். பெரும்பாலும் வீணான கதைகளை பேசுவதைத் தவிருங்கள். நாம் நற்செய்தியைக்குறித்து அக்கறையோடு இருந்தால் போதும்; அவர்களுடைய வாழ்க்கைக்கு எல்லா பிரச்சினைகளை தீர்க்கும் தீர்வும் ஞானமும் நம்மிடத்தில் இல்லை. ஆகவே அவைகளைக் குறித்து பயபக்தியோடு சில வார்த்தைகளை நாம் சொல்லலாம். மூன்றாவது, அவர்களுடைய உடனடியான, தற்போதைய உடல் வாழ்க்கைக்குரிய தேவைகளைக்குறித்தும் அக்கறையுள்ளவர்களாய் இருக்க வேண்டும். நான்காவது, விருந்தோம்பல் அல்லது உபசரிப்பு. நம்முடைய வீடுகளைத் திறக்க வேண்டும். நம்முடைய உறவுகளைக் கட்டியெழுப்ப வேண்டும். அது இல்லாமல் நாம் நற்செய்தியை அறிவிக்க முடியாது. கடைசியாக, நாம் * நேரத்தையும் வாய்ப்பையும் உருவாக்கிக்கொள்ள வேண்டும். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.