Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

நற்செய்தி

Transcribed from a message spoken on June 12, 2016, in Chennai

By Milton Rajendram

நற்செய்தி அறிவித்தல்

இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியை நம்முடைய பெற்றோர்களுக்கு, உடன்பிறந்தவர்களுக்கு, உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு, அண்டை வீட்டாருக்கு, உடன் வேலைபார்ப்பவர்களுக்கு அறிவிப்பதைப்பற்றிய பாரத்தை சகோதர சகோதரிகள் பகிர்ந்துகொண்டார்கள். இயேசுகிறிஸ்துவை ஒரு மனிதனுடைய வாழ்க்கைக்குள் கொண்டுபோவதைப்போல ஒரு மாபெரும் வேலை இந்த மனித வாழ்க்கையிலே வேறொன்றும் இல்லை. இயேசுகிறிஸ்துவை ஒரு மனிதனுடைய, ஒரு குடும்பத்தினுடைய, வாழ்க்கைக்குள் கொண்டுபோவதைப்போல ஒரு மாபெரும் அற்புதமான, உன்னதமான, பணி இந்த மனித வாழ்க்கையிலே வேறொன்றும் இல்லை.

ஆனால், அதற்கு தேவனுடைய பகைவனாகிய சாத்தான் எதிர்த்து நிற்பான். நமக்கு ஒரு பகைவன் உண்டு என்று தெரியும். ஆகவே, அதற்குத் தடைகளும், எதிர்ப்புகளும் ஏற்படும்போது நாம் அதை விநோதமாகக் கருதுவதில்லை. இந்தத் தடைகளும், எதிர்ப்புகளும், பகையும் நாம் மேற்கொள்ளக்கூடிய, வெல்லக்கூடிய ஒன்று.

1. நற்செய்தி அறிவிப்பதில் முறையான ஜெபம்

முதலாவது, இயேசுவின் நற்செய்தியை மற்றவர்களுக்குக் கொடுப்பது, பிரதானமாக, மனிதனுடைய பணி அல்ல; அது தேவனுடைய பணி. தேவன் வேலையாள்; நாம் உடன்வேலையாட்கள். God is the worker. We are only co-workers. இயேசுவின் நற்செய்தியை ஒருவனுக்குக் கொடுக்க நம்முடைய இருதயம் துடிப்பதைவிட தேவனுடைய இருதயம் பலமடங்கு துடிக்கிறது. தேவனுடைய வேலையை எந்த மனிதனும், சாத்தானுடைய எந்த வேலையும், எதிர்த்து நிற்க முடியாது.

ஆகவே, நாம் “பரிதாபமான ஆட்கள்” என்றோ அல்லது “எப்படி இந்த வேலையைச் செய்து முடிக்கப்போகிறோமோ!” என்றோ நினைக்க வேண்டாம். தேவன் இதைச் செய்கிறார். ஆகவே, ஜெபிப்பதே நாம் அவரோடு உடன்-வேலைசெய்கிற, ஒத்துழைக்கிற, முக்கியமான வழியாகும். ஜெபிப்பது என்பது கையாலாகாத மக்களுடைய வேலை இல்லை. சில சமயங்களில் மக்கள், “என்ன செய்ய முடியும்? ஜெபிக்கத்தான் முடியும்,” என்று சொல்வார்கள். ஜெபிப்பது என்பது கையாலாகாதவர்கள் செய்கிற வேலை என்பதுபோல “அதைவிட வேறு வல்லமையான வேலை எதுவும் என்னால் செய்ய முடியாது. ஆகவே, கடைசியிலே வேறு வழி இல்லாமல் என்னதான் செய்ய வேண்டியிருக்கிறது? ஜெபிக்க வேண்டியதுதான். I cannot do anything powerful. Therefore I do very useless thing like prayer”என்று மக்கள் நினைக்கிறார்கள்.

நம்மால் அதைவிட சக்திவாய்ந்த, வல்லமையான, ஒரு வேலை செய்ய முடிந்தாலும் நாம் செய்யக்கூடிய மிக சக்திவாய்ந்த, மிக பலம்வாய்ந்த, மிக ஆற்றல்மிக்க வேலை ஜெபிப்பதுதான். ஒரு மனிதன் முழங்காலில் நின்று தேவனுக்குமுன்பாக தன் இருதயத்தை ஊற்றுவதைப்போல ஒரு மாபெரும் வல்லமையுள்ள செயல் இந்தப் பிரபஞ்சத்திலே வேறொன்றும் இல்லை. மனிதர்களுடைய பார்வையிலே முழங்காலில் நின்று ஜெபிப்பது என்பது வல்லமையில்லாத ஒரு செயல். அவர்களுடைய பார்வையில் அதைப்போன்ற வல்லமையற்ற செயல் வேறொன்றும் இல்லை. ஆனால், தேவனுடைய பார்வையில் அவருக்குமுன்பாக முழங்கால்படியிட்டு, தன்னுடைய இருதயத்தை ஊற்றி ஜெபிப்பதைப் போன்ற ஒரு வல்லமையுள்ள செயல் வேறொன்றும் இல்லை.

ஆகவே, யாருக்கு நாம் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்று பாரப்படுகிறோமோ அவர்களுக்காகச் சீராக, முறையாக, இடைவிடாமல் ஜெபிப்பதுதான் நாம் முறையாகச் செய்யவேண்டிய முதல் காரியம். இப்போது நான் அதைச் செய்வதில்லை. ஆனால், நான் வாலிபனாக இருந்தபோது செய்திருக்கிறேன். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது என்னுடைய விடுதியில் தங்கியிருந்த எல்லாருக்காகவும் ஜெபித்தேன். ஏறக்குறைய எழுபது பேர் அந்த விடுதியில் தங்கியிருந்தார்கள். வாரத்தில் ஒரு முறையாவது அந்த எழுபதுபேருடைய பெயரையும் சொல்லி நான் ஜெபித்ததுண்டு. அப்படி ஜெபிப்பது போரடிக்கும். எனவே? சிலசமயங்களில், கடமைக்கென்று ஜெபித்ததுண்டு. என்னுடைய உண்மையான உணர்ச்சியை நான் சொல்லிவிடுகிறேன். ரொம்ப இன்பமாக இருந்ததினால் நான் ஜெபிக்கவில்லை. என்னமோ இந்த எழுபது பேருடைய பொறுப்பாளி நான்தான் என்பதுபோல் எழுபதுபேர் பெயரையும் சொல்லிச்சொல்லி, அறை எண் 1 தொடங்கி, அறை எண் 35 வரை எல்லாருடைய பெயரையும் சொல்லிச்சொல்லி ஜெபிப்பது உண்டு. ஒன்றைக் கவனிக்க வேண்டும். தேவன் பலரை அவர் பக்கமாக ஈர்த்துக்கொண்டிருக்கிறார்.

ஆகவே, முதலாவது நாம் செய்ய வேண்டிய காரியம். நம்முடைய அக்காவுக்காகவோ அல்லது மாமனார், மாமியாருக்காகவோ, பெற்றோர்களுக்காகவோ, அப்பாவுக்காகவோ நாம் பாரம் கொண்டால் அவர்களுக்காகச் சீராக, முறையாக, இடைவிடாமல் சோர்ந்துபோகாமல் ஜெபிக்க வேண்டும். அதன் பொருள் என்னவென்றால் ஏதோ ஒரு வருடம் ஜெபித்துவிட்டு விட்டுவிடுவது இல்லை. சிலருடைய இரட்சிப்புக்காக, அவர்கள் ஆண்டவராகிய இயேசுவை அறிகிறவரை, பெற்றுக்கொள்கிறவரை, அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும்.

2. நற்செய்தி அறிவிப்பதில் முறையான நேரம்

இரண்டாவது, அவர்களுக்காக முறையாக நாம் நேரத்தைச் செலவிடுவது. நாம் இயேசுவின் நற்செய்தியை அறிவிப்பது என்று தீர்மானித்துவிட்டால் மாதத்திற்கு ஒருமுறையாவது போய் அவரைச் சந்தித்து ஒருமணிநேரமாவது அவரோடு செலவழிக்க வேண்டும். அப்படியானால் வருடத்திலே பன்னிரெண்டு முறை அவரோடு செலவழிக்கலாம் அல்லது 2 மாதத்திற்கு ஒருமுறை போய்ப் பார்த்துவந்தால் வருடத்தில் ஆறுமுறை அவரோடு செலவழிக்கலாம். ஒரு குடும்பம் தேவனுடைய வார்த்தையைக் கேட்பதற்கு ஆயத்தமாயிருக்கிறது என்றால் நீங்கள் தொடர்ந்து சீராக, முறையாக, அந்தக் குடும்பத்தைச் சந்திக்க வேண்டும். குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் . போய்விடுங்கள். எத்தனை மணிநேரம் செலவிடுவீர்கள் என்றும் சொல்லிவிடுங்கள். குறிப்பிட்ட நேரத்திற்குக் கிளம்புங்கள். சாப்பிடுவதற்கு நேரம் இருக்காது என்று நினைத்தால் “சாப்பிடுவதற்கு எனக்கு நேரம் இருக்காது,” என்றும் சொல்லிவிடுங்கள். ஏனென்றால், நாம் போவது அவர்களுக்கு சிரமமாக இருக்கக்கூடாது. நாம் அவர்களுடைய வீட்டுக்குப் போனபிறகு நமக்குச் சோறு பொங்குவதற்காக அவர்கள் நேரம் செலவழிக்கக் கூடாது. மாறாக தேவனுடைய வார்த்தையைக் கேட்பதற்கு நேரம் செலவிட வேண்டும். பொதுவாக நாம் அப்படிச் செய்வது இல்லை. நம் வேலையினுடைய பொறுப்புகள், குடும்பத்தினுடைய பொறுப்புகள் நம்மை மூழ்கடித்துவிடுவதால் நாம் அப்படிச் சீராகச் செய்வதில்லை.

“ஏதோ ஒரு நாளில் நாம் தேவனுடைய வார்த்தையைச் சொன்னோம். அவர்கள் இரட்சிக்கப்பட்டார்கள்,” என்பது மிகவும் அரிதாகத்தான் நடைபெறும். “நாங்கள் வழக்கம்போல் ஆற்றங்கரையிலே கூடி ஜெபித்தோம்” (அப். 16:13) என்று அப்போஸ்தலர் நடபடிகளில் வாசிக்கிறோம். வழக்கம்போல் என்றால் ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொரு வாரமும் அல்லது ஒவ்வொரு மாதமும் அல்லது மாதத்தில் இரண்டுமுறை அவர்கள் தேவனுடைய வார்த்தையைப் பேசினார்கள், பேசினார்கள், பேசினார்கள். மனிதர்களுடைய இருதயங்கள் இந்த உலகத்தாலும், மாம்சத்தாலும், பாவத்தாலும், சாத்தானாலும் இருளடைந்திருப்பதால் தேவனுடைய ஒளி அவ்வளவு சீக்கிரத்தில் ஊடுருவுவது இல்லை. பலமுறை தேவனுடைய வார்த்தையை அறிவிக்கும்போது அவர்களுடைய இருதயங்கள் பிரகாசமாகின்றன. இது இரண்டாவது.

முதலாவது, முறையாக ஜெபிக்க வேண்டும். இரண்டாவது, முறையாகச் சந்தித்து தேவனுடைய வார்த்தையைச் சொல்ல வேண்டும். ஒருவேளை நேரடியாக அடிக்கடிச் சந்திக்க முடியாவிட்டால், ஒரு வேளை மாதத்திற்கு ஒருமுறை நேரடியாகச் சந்தித்தால், வாரத்திற்கு ஒருமுறை அவர்களோடு தொலைபேசியில் பேசலாம். உண்மையாகவே நீங்கள் அறிவிக்கின்ற ஆண்டவராகிய இயேசுவின் நற்செய்தியைக்கொண்டு அவர் இரட்சிப்பார்.

இரட்சிப்பு என்பது மதமாற்றம் அல்ல. இரட்சிப்பு என்பது அவர்கள் வாழ்க்கையில் அவர்கள் பெறுகின்ற நன்மையை, ஆசீர்வாதத்தை, மகிழ்ச்சியை, சமாதானத்தை, இளைப்பாறுதலை, வெற்றியை அது நிறைவாக்கும். இதுதான் இரட்சிப்பு.

3. நற்செய்தி அறிவிப்பதில் நம்பிக்கையோடு செலவழித்தல்

மூன்றாவது, நம்பிக்கையோடும், பொறுமையோடும், நீடிய சாந்தத்தோடும் நாம் இந்த வேலையைச் செய்ய வேண்டும். இவைகளுக்காக நாம் நேரத்தையும், பணத்தையும், உழைப்பையும் செலவிட வேண்டும். நன்றாய்க் கவனிக்க வேண்டும். அவர்களுடைய நேரத்தையோ, பணத்தையோ, உழைப்பைபோ நாம் பெறக்கூடாது. சுவிசேஷத்தைச் செலவில்லாமல் ஸ்தாபிப்பது. சுவிசேஷத்தை அறிவித்துவிட்டு, ஜெபம் பண்ணிவிட்டு அவர்களிடத்தில் நாம் காணிக்கை வாங்கக்கூடாது. சுவிசேஷத்தை அறிவித்துவிட்டு அவர்கள் விருந்து கொடுக்கிறார்கள் என்றால் அவர்கள் விருந்தைப் பெறக்கூடாது. சுவிசேஷத்தை அறிவித்துவிட்டு ஒருவேளை நம்முடைய போக்குவரத்திற்குப் பணம் கொடுக்கிறார்கள் என்றால் போக்குவரத்துக்கு ஒரு பைசாவைக்கூடப் பெறக் கூடாது. அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டபிறகு, இயேசுவை ஏற்றுக்கொண்டு ஞானஸ்நானம் பெற்றபிறகு வேண்டுமானால் நாம் அவர்களிடத்தில் இவைகளைப் பெறலாமேதவிர, அவர்கள் இயேசுவுக்குத் தங்களை ஒப்புக்கொடுக்கின்றவரை அவர்களிடத்தில் எதையும் பெறக்கூடாது. இதற்குப் பெயர் ‘நற்செய்தியை செலவில்லாமல் கொடுப்பது’. “கிறிஸ்துவின் சுவிசேஷத்தைச் செலவில்லாமல் ஸ்தாபிப்பதே எனக்குப் பலன்” என்று (1 கொரிந்தியர் 9:18) பவுல் கூறுகிறார். நாம் நம்முடைய நேரத்தைச் செலவிட வேண்டும். நாம் நம்முடைய உழைப்பைச் செலவிட வேண்டும். நாம் நம்முடைய பணத்தைச் செலவிட வேண்டும். நாம் விருந்து உபசரணை செய்ய வேண்டும்.

இதைச் செய்யும்போது, “இப்படி நாம் நம்முடைய பணத்தையும், நேரத்தையும், உழைப்பையும் செலவிடுகிறோமே! இவர்கள் இயேசுகிறிஸ்துவை அறியாமல் போய்விட்டால்!” என்ற எண்ணம் ஒருவேளை நமக்கு வரலாம். இப்படிப்பட்ட நம்பிக்கையின்மைக்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. நாம் ஒன்றும் நட்டப்பட்டுவிடமாட்டோம். நம்பிக்கையோடு நாம் அவர்களுக்காக நூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் செலவழித்தாலும் பரவாயில்லை. அவர்களுக்காக ஒரு மணி நேரமோ, ஒரு நாளோ செலவழித்தாலும் பரவாயில்லை. இது மூன்றாவது. செலவிடுவோம், நம்பிக்கையோடு செலவிடுவோம். நாம் செலவிட்டதற்கு பலன் கிடைக்கவில்லையென்றாலும் கவலைப்பட வேண்டாம். தேவன் அநீதியுள்ளவர் அல்ல. நீங்கள் என்ன செலவிடுகிறீர்களோ அதற்குப் பிரதிபலனாக பல்லாயிரம் மடங்கு அவர் திருப்பிக் கொடுப்பார். இது பொய் இல்லை. உண்மை. உங்களை ஆற்றுவதற்காக “பரலோகத்திலே அவர் உங்களுக்குக் கொடுப்பார்” என்று நான் சொல்லவில்லை. பரலோகத்திலே பணத்தைப் பெற்று நாம் என்ன செய்யப் போகிறோம்? இயேசுகிறிஸ்துவின் நற்செய்திக்காக நீங்கள் செலவிடுகிற ஒரு ரூபாய்க்கு அவர் இந்தப் பூமியிலே உங்களுக்குப் பலன் தருவார். ஒருவேளை நீங்கள் எதிர்பார்க்கிற நேரத்தில், எதிர்பார்க்கிற விதத்தில் அவர் தராமல்போகலாம். என்னுடைய வாழ்க்கை முடிந்துவிடும். ஒருவேளை என்னுடைய பிள்ளைகளுக்குத் தேவை இருக்கும். நான் அன்று இயேசுகிறிஸ்துவுக்காகச் செலவழித்த ஒரு ரூபாய்க்கு அவர் திருப்பிக்கொடுக்கிற நேரம் அப்போது வரும். என்னுடைய பிள்ளைகளுக்குக் கொடுப்பார். அதைப் பார்ப்பதற்கு ஒருவேளை நான் இருக்க மாட்டேன்.

பரிசுத்த வேதாகமம் முழுவதும் நீங்கள் வாசித்துப்பார்த்தால் அப்படி இருக்கும். யோனத்தான் செய்த நன்மைக்கு அவனுடைய பிள்ளையாகிய மேவிபோசேத் தாவீதினிடத்தில் நன்மையை அனுபவித்தான். அதைப் பார்ப்பதற்கு யோனத்தான் இருக்கவில்லை.

ஆனால், உலகம் அப்படிப் பொறுமையோடு காத்திருக்காது. நான் அடிக்கடி இந்த நகைச்சுவை வாக்கியத்தைத் பயன்படுத்துவதுண்டு. அவர்களைப் பொறுத்தவரை, “இன்று குலுக்கல், நாளை லட்சாதிபதி”. அதைக்கூட அவர்கள் இப்போது ஒப்புக்கொள்ளமாட்டார்கள். “இன்று லட்சாதிபதி, நாளை குலுக்கல்,” என்று சொன்னாலும் சொல்வார்கள். இது மூன்றாவது.

  1. முதலாவது, முறையாக ஜெபிப்பது.
  2. இரண்டாவது, முறையாக சந்திப்பது.
  3. மூன்றாவது, நம்பிக்கை யோடு செலவிடுவது.

தேவனுடைய மக்களாகிய நாம் இதைச் செய்தால் நம்முடைய பெற்றோர்கள், உடன்பிறந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள், அண்டைவீட்டார்கள் பலர் இரட்சிக்கப்படுவார்கள்.

ஒரு எச்சரிப்பையும் சொல்லி விடுகிறேன். இதற்காக நாம் அவர்களை எப்பொழுதும் பிரியப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்கு நற்செய்தி அறிவிக்கிறோம் என்பதற்காக அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் நாம் போக வேண்டிய அவசியம் இல்லை. எல்லைக் கோட்டை நாம் வரைய வேண்டும். இதுவரை நாம் செல்லலாம். இதற்கு மிஞ்சி நாம் செல்லக்கூடாது. அப்படிச் செல்லாததால் அவர்கள் நற்செய்தியைக் கேட்கமாட்டார்கள் என்றால் அப்படியே ஆகட்டும்.

குடும்பங்களில் நடைபெறும் வைபவங்களை நாம் நற்செய்திக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். நம் கலாச்சாரத்திலே நம் குடும்பங்களிலே வைபவங்கள் வந்துகொண்டே இருக்கும். சில வைபவங்களை நற்செய்தி அறிவிப்பதற்கு நாம் பயன்படுத்தலாம். ஆனால், அந்த வைபவத்திலே தேவனுக்கு எதிரான காரியங்கள் நடைபெறுகிறது என்றால் நாம் அந்த வைபவத்திலே கலந்துகொள்ளவேண்டிய அவசியமில்லை. நற்செய்தி அறிவிப்பதற்கு எப்பொழுதுமே ஒரு பெரிய குழு, கூட்டம், வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரேவொரு குடும்பம் போதும், ஒரேவொரு நபர் போதும். இந்த எச்சரிப்பை உங்கள் மனதிலே வைத்துக்கொள்ளுங்கள்.

இன்னும்கூட ஒன்றை நான் சொல்வேன். குடும்பமாய்ப் போய் நற்செய்தியை அறிவிப்பது நல்லது. ஏனென்றால் நீங்கள் பேசாமல் விடுவதை சகோதரி பேசுவார்கள். அவர்கள் பேசாமல் விடுவதை நீங்கள் பேசுவீர்கள். நீங்கள் செய்யாமல் விடுவதை அவர்கள் செய்வார்கள். அவர்கள் செய்யாமல் விடுவதை நீங்கள் செய்யலாம். ஒருவேளை இன்னொரு குடும்பத்தையோ அல்லது இன்னொரு சகோதரனையோ அல்லது சகோதரியையோ கூட்டிக்கொண்டு போனால் அது இன்னும் நல்லது. ஒரு வேளை பொறுப்புள்ள ஒரு சகோதரனோ, சகோதரியோகூடப் போகலாம். இவர் சொன்னால் பெரிய வல்லமையான காரியம் நடைபெறுமா என்று சந்தேகப்படாதீர்கள். வல்லமையான காரியம் நடைபெறும்.

ஆசாரியத்துவ வேலை

ஆகவே, தேவன் உண்மையிலேயே நம்முடைய இந்த முயற்சிகளை ஆசீர்வதிப்பார். நன்றாய்க் கவனிக்க வேண்டும். இது இயேசுகிறிஸ்துவுக்கு நாம் செய்கின்ற நேரடிப் பணிவிடை. We are serving the Lord Jesus Christ himself directly. நம்;முடைய ஆசாரியத்துவத்தை நாம் நிறைவேற்றுகிறோம். நம்முடைய ஆசாரியத்துவ வேலை என்ன? ஆசாரியன் என்பவன் தேவனை மனிதனிடத்திற்கும், மனிதனைத் தேவனிடத்திற்கும் இட்டுச்செல்பவன். நாம் நற்செய்தியை அறிவிக்கும்போது தேவனுடைய ஆசாரிய வேலையை நாம் செய்கிறோம். எந்த மனிதனுக்கும் நாம் பணிவிடை செய்யவில்லை. தேவனுக்கு, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கே நாம் பணிவிடை செய்கிறோம். ஆகவே, நற்செய்தி அறிவிக்கிற வாய்ப்புகளை நாம் தேட வேண்டும். வாய்ப்புகள் நம்மைக் கடந்துபோகும்போது வாய்ப்புகளை நாம் பயன்படுத்த வேண்டும். அது ஒரு நிமிடமாக இருக்கலாம், பத்து நிமிடமாக இருக்கலாம், ஒரு மணி நேரமாக இருக்கலாம், அரை நாளாக இருக்கலாம். நீங்கள் கர்த்தருக்குள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து அவருடைய கிரியைகளிலே பெருகுகிறவர்களாய் இருப்பீர்களாக.

இயேசுவின் நற்செய்தி என்றால் என்ன

இதே நற்செய்தியைப்பற்றிய ஒருசில காரியங்களை நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். என்னுடைய ஒரு பாரம் உண்மையிலேயே நற்செய்தியை அறிவிப்பதற்குரிய ஒரு சில பிரசுரங்களை நாம் எழுத வேண்டும். இயேசுகிறிஸ்துவின் நற்செய்தி என்றால் என்னவென்பதை நாம் ஒன்றோ, இரண்டோ, மூன்றோ, நான்கோ, ஐந்து அணுகுமுறைகளிலே எழுத வேண்டும். பேசுவது நல்லது. ஆனால், பேசிவிட்டு அவர்கள் வாசிப்பதற்கு ஒன்றைக்கொடுப்பது அதைவிட வீரியமுள்ளதாக இருக்கும். நாம் ஒரு பத்து நிமிடம் பேசினால் ஒரு நிமிடம் பேசுவதுதான் அவர்கள் இருதயத்திலே தங்கும். ஒன்பது நிமிடம் பேசியது ஒருவேளை மறந்து போய்விடலாம். வாசிப்பதற்கு நாம் ஒன்றைக் கொடுக்கும்போது அவர்கள் அதை திரும்பத்திரும்ப வாசிப்பார்கள். ஆகவே, தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் நான்கு, ஐந்து பிரசுரங்களை எழுதுவதற்கு முயற்சி செய்வோம்.

எப்படி நற்செய்தி அறிவிக்க வேண்டும்

அது மட்டுமல்ல. இயேசுவின் நற்செய்தியை நாம் எப்படி அவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதைப் பற்றிக்கூட நாம் சிந்திக்க வேண்டும். பயிற்சி வேண்டும். அந்தப் பயிற்சி நாம் ஒருவருக்கொருவர் கொடுத்துக்கொள்வதுதான். நாம் ஒருவருக்கொருவர் பேசி பல பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, நற்செய்தி அறிவிக்கும்போது யாருக்கு நாம் நற்செய்தி அறிவிக்கிறோமோ அவர்கள் மனதைப் புண்படுத்தாமல் இருப்பதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும். அநாவசியமாக மனதைப் புண்படுத்தக் கூடாது. “நீங்கள் கும்பிடுவது பேய்,” என்று ஒருநாளும் சொல்ல வேண்டாம். அந்த அணுகுமுறை தவறு. நற்செய்தியை அறிவிப்பதற்கு நமக்கு ஒரு குறிப்புரை வேண்டும். நீங்கள் எல்லாருமே முயற்சி செய்ய வேண்டும். ஒரு வீட்டுப்பாடம் தருகிறேன். நீங்கள் இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியை யாருக்காவது சொல்ல வேண்டுமென்றால் என்னென்ன காரியங்களைச் சொல்வீர்கள் என்று ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து குறிப்புகளை நீங்கள் ஒரேவொரு தாளிலே எழுத வேண்டும். இந்தப் பயிற்சியை நீங்கள் செய்யுங்கள். இதைச் செய்தீர்களென்றால் அடுத்த வாரக் கூடுகை ஒரு workshopஆக மாறிவிடும். பத்து பேர் “நான் குறித்துக்கொண்டு வந்த ஐந்து குறிப்புகளாவன” என்று ஒவ்வொருவரும் ஒரு இரண்டு நிமிடம் அல்லது மூன்று நிமிடம் சொன்னால் அதிலிருந்து நாம் “இது ஒரு நல்ல அனுகுமுறை, அது நல்ல அனுகுமுறை. இதிலே இப்படிப்பட்ட சில நேர்மறையான காரியங்கள் உள்ளன. எதிர்மறையான காரியங்கள் உள்ளன,” என்று நாம் ஒரு நல்ல குறிப்புரைக்கு வரலாம்.

கேட்கின்றவர்கள் யார் என்பதைப் பொறுத்தது

நான் அடிக்கடி பயன்படுத்துகிற ஒரு குறிப்புரையை உங்களுக்கு சொல்கிறேன். நற்செய்தியைப் பல கோணங்களிலிருந்து நாம் அறிவிக்கலாம். அப்போஸ்தல நடபடிகளிலே பல தடவைகள் நற்செய்தியை அறிவிக்கின்றார்கள், பல கோணங்களிலே அறிவிக்கின்றார்கள். பார்வையாளர்கள் யார், கேட்கின்றவர்கள் யார் என்பதைப்பொறுத்து நாம் நற்செய்தியை அறிவிக்க வேண்டும். அவர் யூதர்களுக்கு ஒருவிதமாக நற்செய்தி அறிவிக்கின்றார். யூதமார்க்கத்தமைந்த தேவபக்தியுள்ளவர்களுக்கு இன்னொரு விதமாக நற்செய்தி அறிவிக்கின்றார்.

அப்போஸ்தலர் 17ஆம் அதிகாரத்திலே அத்தேனே பட்டணத்தாருக்கு அப்போஸ்தலனாகிய பவுல் நற்செய்தி அறிவிக்கின்ற குறிப்புரை கொடுக்கப்பட்டிருக்கிறது. யூதர்களுடைய வேதாகம் அறவே தெரியாத புறவினத்தாருக்கு, அத்தேனே பட்டணத்திலிருந்த தத்துவஞானிகளுக்கு பவுல் நற்செய்தியை அறிவிக்கின்றார். Paul is preaching the Gospel to the philosophers, who is gathered in the Areopagus of Athens. They don’t know the Bible. They don’t have the Bible. அவர்களிடம் பேசும்போது அப்போஸ்தலனாகிய பவுல் வேதாகமத்திலிருந்து சரமாரியாக வசனத்தை மேற்கோள் காட்டவில்லை. யூதர்களுடைய சிற்றாலயத்திற்கு, ஜெபஆலயத்திற்கு, போகும்போது வேதாகமத்திலிருந்து சரமாரியாக மேற்கோள் காட்டுகின்றார். ஆனால், அத்தேனே பட்டணத்திலே மார்ஸ் மேடையிலே தத்துவ ஞானிகளுக்கு ஆண்டவராகிய இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கும்போது அப்படி வேதத்திலிருந்து சரமாரியாக மேற்கோள்களை காட்டவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கு நற்செய்தியைச் சொல்ல ஆரம்பிக்கும் போது, “அத்தேனே பட்டணத்தாரே, நீங்கள் மிகுந்த தேவபக்தியுள்ளவர்கள் என்று நான் காண்கின்றேன்,” என்று அவர்களைப் பாராட்டுவதுபோல ஒரு வார்த்தை சொல்கிறார், பாராட்டுகிறார். “ஏனென்றால், உங்கள் பட்டணத்தை நாங்கள் சுற்றிப்பார்க்கும்போது பல பலிபீடங்கள் இருந்தன. அங்கே ஒரு பலிபீடத்திலே அறியப்படாத தேவனுக்கு என்றுகூட ஒரு பலிபீடத்தை நீங்கள் எழுப்பியிருக்கிறீர்கள்”. அதை பவுல் நேர்மறையான விதத்திலே பயன்படுத்துகிறார். “எனவே நீங்கள் பயபக்திக்குரியவர்கள், மதரீதியானவர்கள், அறியப்படாத தேவனுக்கு என்று நீங்கள் எழுதியிருக்கிற அந்த பலிபீடம் தேவனைத் தேடுகிற ஒரு இருதயம் உங்களுக்கு உண்டு என்பதைக் காண்பிக்கிறது,” என்று சொல்கிறார். அடுத்தபடியாக இரண்டு கிரேக்க கவிஞர்களிடமிருந்து ஒவ்வொரு வரியை எடுத்துப் பயன்படுத்துகின்றார். “நாம் அவருக்குள் இருக்கிறோம், பிழைக்கிறோம், அசைகிறோம் என்று ஒரு புலவர் சொல்லியிருக்கிறார். நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம் என்று இன்னொரு புலவர் சொல்லியிருக்கிறார்,” என்று அவர்களுடைய புலவர்களை மேற்கோள் காட்டுகிறார். நீங்கள் ஒரு நல்ல விளக்கமுள்ள வேதாகமத்தை வாசித்துப்பார்த்தால் அந்த கிரேக்கக் கவிஞர்களுடைய பெயர் என்னவென்றும், கிரேக்கத்திலே அவர்கள் எடுத்தாள்கின்ற அல்லது மேற்கோள் காட்டுகின்ற கவிதை வரிகள் என்னவென்றும் எழுதியிருக்கும். அந்தக் குறிப்புரையை அவர்கள் அங்கு எழுதியிருப்பார்கள். ஆகவே, நாம் எப்படி சுவிசேஷத்தை, நற்செய்தியை, வழங்குகிறோம் என்பது யாருக்கு என்பதைப் பொறுத்தது.

இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். நாம் பெரிய பண்டிதர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒருபக்கம் நாம் நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். இன்னொரு பக்கம் எதுவும் இல்லையென்றால் நாம் நம்முடைய அனுபவத்தைச் சொன்னால் போதும். “இயேசு என்னுடைய வாழ்க்கையிலே என்ன செய்தார்,” என்று சொன்னால்கூட போதும். தேவையுள்ள மக்களுக்கு அதுவே அவர்கள் தேவையைப் பூர்த்திசெய்யும். ஆனால், அதற்கு அர்த்தம் எந்த ஆயத்தமுமே இல்லாமல் எப்போது பார்த்தாலும் “இயேசு எனக்கு என்ன செய்தார்” என்று சொல்வதோடு நாம் நிறுத்திவிடக் கூடாது. நாம் நம்முடைய நம்பிக்கையை எல்லா விதத்திலும் மிக நேர்த்தியாக நாம் அவர்களுக்கு அறிவிக்க வேண்டும். எனவே, நான் அடிக்கடி பயன்படுத்துகிற ஒரு அணுகுமுறையை உங்களுக்குச் சொல்கிறேன்.

மனித இருதயத்தில் தேவனைத் தேடும் வேட்கை

முதலாவது குறிப்பு, எல்லா மனிதர்களுடைய இருதயத்திலும் தேவனைத் தேடுகிற ஒரு வேட்கை, ஒரு வாஞ்சை, ஒரு பசி தாகம் உள்ளது. In the hearts of all men, there is a hunger and a thirst, a longing for God. நற்செய்தி அறிவிக்கும்போது வேதத்தைத் திறந்து அதை வாசித்துக் காட்ட வேண்டும். “He has made all things beautiful in its time. Also He has put eternity in the hearts of men”. “மனுபுத்திரர் பாடுபடும்படி தேவன் அவர்களுக்கு நியமித்த தொல்லையைக் கண்டேன். அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார். (உலகத்தை அல்ல) நித்தியத்தையும் மனிதனுடைய உள்ளத்திலே வைத்திருக்கிறார்” (பிரசங்கி 3:10, 11). ஒரு பக்கம், ஒரு மனிதனுடைய வாழ்க்கையிலே நன்மைகளும், தீமைகளும் சேர்ந்து நடப்பதுபோல் தோன்றுகின்றன. ஆனால் எல்லாவற்றையும் சேர்த்து, தொகுத்துப் பார்க்கும்போது உண்மையிலேயே அவர் அழகாகச் செய்து முடிக்கிறார். மனித வாழ்க்கை மரணத்தோடு முடிகின்ற ஒரு வாழ்க்கை அல்ல. மரணம் ஒரு மனிதனுடைய முடிவு அல்ல. அவர் நித்தியத்தை மனிதனுடைய இருதயத்திலே வைத்திருக்கிறார் என்று தேவனுடைய வார்த்தை கூறுகிறது. He has put eternity into the heart of man.

“புசிப்போம், குடிப்போம், விதி வந்தால் சாவோம். Let us eat, drink and be merry; for tomorrow we shall die” என்பது எப்பிகூரியன் தத்துவம். “ஜாலியாக இருப்போம்” என்று சொல்லுகிறவர்கள் பழைய எப்பிகூரியன் தத்துவவாதிகளுடைய அவதாரங்கள்தான். “ஜாலியாக இருக்க வேண்டும்” என்பது கல்லூரிகளிலே அடிக்கடி கேட்கிற வார்த்தை. வாழ்க்கையே அழிந்தால்கூட பரவாயில்லை, படிப்பு என்னவானாலும் பரவாயில்லை; ஆனால், ஜாலியாக இருக்க வேண்டும் என்பது அவர்களுடைய கேட்பாடு.

ஒரு தமிழ் கவிதை உண்டு. அந்தக் கவிதை வர்ணிக்கிற அந்தக் காட்சியை நான் சொல்கிறேன். ஒருவனை ஒரு யானை துரத்திக்கொண்டு வரும்போது, அதற்குத் தப்பிப்பதற்காக ஒரு ஆலமரத்தின் விழுதைப் பிடித்துக்கொள்கிறான். அந்த ஆலமரத்தின் விழுதைப் பிடித்துத் தொங்கும்போது கீழே பார்த்தால் அங்கே ஒரு பெரிய பாதாளக் கிணறு; கிணற்றிலே தண்ணீர் இல்லை. அதற்குள் ஒரு பாம்பு இருக்கிறது. மேலே பார்த்தால் ஒரு எலி அந்த விழுதைக் கொஞ்சம்கொஞ்சமாகக் கடித்துக் கொண்டே இருக்கிறது. யானை துரத்துகிறது, கீழே பாதாளக்கிணற்றுக்குள் ஒரு பாம்பு, மேலே எலி விழுதை கடித்துக்கொண்டு இருக்கிறது. அந்த சமயத்திலே ஒரு தேன்கூட்டிலிருந்து கொஞ்சம் சொட்டு சொட்டாகத் தேன் விழுந்துகொண்டிருக்கிறதாம். அது அவன் நாக்கிலே விழுந்தவுடனே அவன் அதை மிகவும் சுவைக்க ஆரம்பித்துவிடுகிறான். ஆ! என்ன அருமையான வாழ்க்கை இது! இதுதான் எப்பிகூரியன் தத்துவவாதிகளுடைய ஜாலி. மனித வாழ்க்கை அப்படிப்பட்டது.

1. மனிதனுடைய ஆவி தேவனுக்காக உண்டாக்கப்பட்டது

Blasie Pascal என்ற French Mathematician and physicist இப்படிச் சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு மனிதனிலும், மனிதனுடைய இருதயத்திலும், தேவனால் உண்டாக்கப்பட்ட ஒரு வெற்றிடம் இருக்கிறது. தேவன் ஒருவரே அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியும். இந்த உலகத்திலே அவன் காண்கிற எந்தப் பொருளைக்கொண்டும் அவன் திருப்திசெய்ய, நிறைவுசெய்ய முயன்றாலும் அவனுக்குத் திருப்தியோ, நிறைவோ ஏற்படாது.

வேதாகமத்திலே பிரசங்கி என்கிற ஒரு புத்தகம் இருக்கிறது. அதைப் படித்து முடிக்க 30 நிமிடங்கள்தான் ஆகும். சாலொமோன் என்கின்ற ஒரு அரசன் தன்னுடைய வாழ்க்கை அனுபவத்தைச் சுருக்கமாக எழுதியிருக்கிறான். உலகத்திலே 300 மனைவிகளும், 700 மறுமனையாட்டிகளும் வைத்திருந்த ஒருவன், “சூரியனுக்குக்கீழே, பூமியிலே எல்லாமுமே மாயை,” என்று சொல்கிறான். இது என்னுடைய முதல் குறிப்புதான்.

மனிதனுக்குள் மிக உள்ளான ஒரு பகுதி உள்ளது. அந்தப் பகுதியை வேதாகமம் ஆவி என்று அழைக்கிறது. “வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, மனிதனுடைய ஆவியை அவனுக்குள் உண்டாக்குகிற கர்த்தர் சொல்கிறதாவது. God who has spread the heavens, laid the foundation of the earth, formed a spirit in the man” (சகரி. 12:1). பெரிய வானங்களை உண்டாக்கினவர், பூமிக்கு அடித்தளமிட்டவர், மனிதனுக்குள் ஒரு ஆவியை உண்டாக்கியிருக்கிறார். “மனிதனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது. அது உள்ளத்தில் உள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்து பார்க்கிறது” (நீதி 20:27). The spirit of man is the lamp of Jehovah, lamp of the Lord.. மிக முக்கியமான வசனம். மனிதனுக்குள் மிக உள்ளான ஒரு பகுதி இருக்கிறது. அந்த உள்ளான பகுதி, மிக உள்ளான பகுதி. நம்முடைய மனதைவிட சற்று உள்ளான, சற்று ஆழமான பகுதி.

பரிசுத்த ஆவியானவர் மனசாட்சியா என்றால் பரிசுத்த ஆவியானவர் மனசாட்சி இல்லை. ஆனால் பரிசுத்த ஆவியானவர் மனசாட்சியைத் தொடுகிறவர். மனதின்படி நாம் வாதப்பிரதிவாதம் செய்து “இது சரி” என்று சொன்னபிறகும் மனசாட்சி “இல்லை, இது தவறு” என்று எழுந்து நிற்கும். உடனே நாம் மனதைப் பயன்படுத்தி நம் வாதப்பிரதிவாதங்களை வைப்போம். அது கொஞ்சம் அமர்ந்ததுபோல தோன்றும். ஆனால் அது அமராது. “இப்பொழுது நீ செய்தது தவறு” என்று மறுபடியும் அது எழுந்து நிற்கும். பரிசுத்த ஆவியானவர் மனசாட்சி இல்லை. ஆனால் பரிசுத்த ஆவியானவர் மிக விரைவாகத் தொடுகிற மனிதனுடைய பகுதி, அவனுடைய மனசாட்சி. உடனே மனசாட்சிதான் வாழ்க்கையின் அளவு கோல் என்று கருதிவிடக் கூடாது. இது என்னுடைய முதலாவது குறிப்பு. மனிதனுக்கு ஒரு உள்ளான பகுதி உண்டு. அது அவனுடைய ஆவி. அது வெற்றிடமாக உள்ளது. அந்த வெற்றிடம் தேவனுக் காகவே உண்டாக்கப்பட்டிருக்கிறது. தேவனால் மட்டுமே அந்த வெற்றிடம் நிரப்பப்பட முடியும். அதுவரை ஒரு மனிதனுடைய வாழ்க்கையிலே அவன் நாடுகின்ற எல்லாம் கிடைத்தாலும்…நல்ல படிப்பு, வேலை, வருவாய், கணவன், மனைவி, பிள்ளைகள், வீடு, வாசல், போக்கு, வரத்து, நண்பர்கள், உறவினர்கள், பதவி, செல்வாக்கு…எல்லாம் இருந்தாலும் அவனுடைய இருதயத்திலே அந்த வெறுமை தங்கியிருக்கும்.

2. தேவன் தான் அன்புகூருவதற்காக மனிதனை உண்டாக்கினார்

என்னுடைய இரண்டாவது குறிப்பு. தேவன் எதற்காக மனிதனை உண்டாக்கினார் என்றால் தேவன் அன்புகூருவதற்கென்று மனிதனை உண்டாக்கினார். மனிதனிடத்திலிருந்து தேவன் அன்பையும் எதிர்பார்க்கிறார். இதை ஒரு கூற்றாக நான் வைக்கின்றேன். தேவன் அன்புகூர்வதற்கென்றே மனிதனை உண்டாக்கினார். “நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்” (1 யோவான் 3:1). “அன்பில்லாதவன் தேவனை அறியான். தேவன் அன்பாகவே இருக்கிறார்” (1 யோவான் 4:8). தேவன் அன்பாகவே இருக்கிறார் என்று சொல்லிக்கொண்டு ஒரு குகையிலே இருந்துவிட்டால் அந்த அன்பு வெளிப்படாது. தேவன் தம்முடைய அன்பைக் காண்பிப்பதற்கு, அன்பைச் செலுத்துவதற்கு அவருக்கு ஒரு உயிரி தேவைப்பட்டது. அந்த உயிரிதான் மனிதன். தம்முடைய அன்பைப் புரிந்துகொள்ளும் வண்ணமாக அவர் தம் சாயலிலே மனிதனை உண்டாக்கினார். தாம் படைத்த எல்லா உயிர்களையும் தேவன் அன்புகூர்கிறார். ஆனால், அந்த உயிரிகளெல்லாம் தேவன்மேல் திருப்பி அன்புகூர்வதில்லை. ஆனால், தேவனுக்கு மறுபதிலாக அன்புகூர்வதற்கென்று அவர் மனிதனை உண்டாக்கினார்.

முதல் குறிப்பு, மனிதனுக்குள் ஒரு வெற்றிடம் உள்ளது. அது தேவனுக்காக உண்டாக்கப்பட்டது. இரண்டாவது குறிப்பு, தேவன் அன்புகூர்வதற்கென்று மனிதனை உண்டாக்கினார். மனிதன் திரும்ப அன்புகூரவேண்டுமென்று அவர் விரும்புகிறார். இந்த அன்பின்கீழ் மனிதன் வருகிறவரை மனிதனுக்கு அந்த வெற்றிடம் நிறைவு பெறாது. தேவனுடைய அன்பில் ஒரு மனிதன் நிறைவுபெறுகிறவரை அல்லது தன்னுடைய அன்புக்குரியவர், அன்புகூரத்தக்கவர் தேவன் ஒருவரே என்கிற நிலைமைக்கு தேவன் வருகிறவரை அவனுடைய வாழ்க்கையில் நிறைவு இருக்காது.

3. இயேசுவே தேவனுடைய மனிதஉருவம்

மூன்றாவது குறிப்பு, இந்தத் தேவனை எப்படி அறிவது? கோடிக்கணக்கான கற்பனைகளும், கதைகளும், பொய்களும், புரட்டுகளும் மலிந்துகிடக்கின்ற மனித வரலாறு. இந்தியாவிலே முந்நூற்று முப்பத்து முக்கோடி தேவர்கள் உண்டு என்று சொல்கிறார்கள். வீட்டுக்கு ஒரு கடவுள் வைத்துக்கொள்ளலாம். ஆளுக்கு ஒரு கடவுள்கூட வைத்துக்கொள்ளலாம். “தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகம் உண்டானது முதற்கொண்டு தெளிவாய்க் காணப்படும் …அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனிதர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்” (ரோமர் 1:19-23). “தேவனை எனக்குத் தெரியாது” என்று எந்த மனிதனும் போக்குச் சொல்ல முடியாது. தேவன் தம்மை மறை முகமாவாவது வெளிப்படுத்தியிருக்கிறார்.

அப்போஸ்தலர் நடபடிகள் 17இல் அப்போஸ்தலனாகிய பவுல் அத்தேனே பட்டணத்தில் பேசுகிற செய்தியை நீங்கள் வீட்டுப்பாடமாய்ப் படிக்க வேண்டும். “உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களிலே, ஆலயங்களிலே, அவர் வாசம்பண்ணுகிறது இல்லை. எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல மனிதர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை” (அப். 17: 24, 25). தொன்றுதொட்டு மனித வரலாற்றிலே மனிதர்கள் கடவுளுக்கென்று ஒரு கோவிலைக் கட்டிவிடுவார்கள்.

அவர் வானங்களையும், பூமியையும் உண்டாக்கினவர். கைகளினால் கட்டப்பட்ட கோவில்களிலே வாசமாயிரார் என்று பவுல் சொல்கிறார். மனிதனை உண்டாக்கினவர் தமக்கு ஏதாவது ஒன்று வேண்டும் என்பதுபோல் மனிதனுடைய கைகளினாலே பணிவிடை கொள்கிறதும் இல்லை. அதாவது “கடவுளுக்கு நான் காணிக்கை கொடுக்கிறேன், பலி கொடுக்கிறேன். மாடு கொடுக்கிறேன், தேங்காய் கொடுக்கிறேன், ஊதுபத்தி கொடுக்கிறேன், பழம் கொடுக்கிறேன்,” என்று மனிதன் கொடுக்கிற எதையும் அவர் பெற்றுக்கொள்கிறதில்லை. அவர் ஒரு கோவிலில் வாழ்வதும் இல்லை மனிதனுடைய கைகளினால் அவர் பணிவிடையை பெற்றுக்கொள்வதும் இல்லை. இதை அத்தேனேயாவிலுள்ள சிந்தனையாளர்களுக்குப் பவுல் சொல்லுகிறார். நீ கடவுளுக்கு எதையுமே வழங்க முடியாது. ஒரு தேங்காய்கூட கடவுளுடைய கைகள் விரும்புவதில்லை, நாடுவதில்லை. எந்த மதமாக இருந்தாலும் சரி. கடவுளுக்குக் கொடுப்பதற்தென்று எதையாவது கொண்டுபோவார்கள். ஒன்றே ஒன்றை நீர் விரும்புகிறீர். “பலியை நீர் விரும்புகிறதில்லை. விரும்பினால் செலுத்துவேன். தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல. தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நறுங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்” (சங். 51:16, 17).

இயேசுவே தேவனின் வெளியாக்கம்

அப்படியானால் தேவனை அறிந்துகொள்வது எப்படி? தேவனுக்கு வடிவம் இல்லை. “தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை. பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்,” (யோவான் 1:18). இந்த முழு மனித வரலாற்றிலும் தேவன் ஒரேவொரு உருவத்தில்தான் தம்மை வெளிப்படுத்தியிருக்கிறார். There is only one icon for God, Jesus Christ of Nazereth. நம்முடைய நற்செய்தியினுடைய மையம் இதுதான். தேவன் தம்மை ஒரேவொரு உருவத்தில், வடிவத்தில்தான் வெளிப்படுத்தியிருக்கிறார். அது நசரேயனாகிய இயேசுகிறிஸ்து. இயேசுகிறிஸ்துவுக்கு வெளியே தேவன் ஒரு உருவத்தில், வடிவத்தில், வெளிப்பட்டது இல்லை. இயேசுகிறிஸ்து மனித உருவில் வந்த தேவன் என்ற இந்த ஒரு வாக்கியம்தான் இந்த உலக வரலாற்றின் எல்லா சர்ச்சைகளினுடைய குவிமையம். இவருக்கு வெளியே ஒரு சிலையிலேயோ, ஒரு படத்திலேயோ, ஒரு சித்திரத்திலேயோ, ஒரு உருவத்திலேயோ தேவன் இருந்தது இல்லை. இயேசுகிறிஸ்து என்று ஒரு சிலை வைத்துக்கொண்டால் கூட அது சிலைவழிபாடுதான். சிலைவழிபாட்டை தேவன் அருவருக்கிறார் என்று வேதம் சொல்கிறது. அவர் ஏன் சிலைவழிபாட்டை வெறுக்க வேண்டும்? வெறுக்காமல் “நீங்கள் செய்ய வேண்டாம்” என்று சொல்லியிருந்தால் நன்றாக இருக்குமே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அப்படி இல்லை. The bible teaches very categorically that idol worship is an abomination to God.

நான் பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு விரிவுரையாளர் இருந்தார். மனிதர்களால் கடவுளை நேரடியாக நெருங்க முடியாததால் தொடக்கூடிய, புலனாகக்கூடிய ஒன்று வேண்டும் என்பதற்காக மக்கள் சிலைகளை வைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை விளக்குவதற்காக அவர் ஓர் உவமை சொன்னார். “கட்டடம் கட்டும்போது எப்படி சாரம் போடுகிறார்களோ, அதுபோல கடவுளை அடைவதற்கு மனிதர்கள் சிலைவழிபாடு செய்கிறார்கள். கடவுளை அடைந்தபிறகு சிலைவழிபாடு அவசியம் இல்லை. வீடு கட்டி முடித்தபிறகு எப்படி சாரத்தை அகற்றிவிடுகிறார்களோ, அதுபோல கடவுளை அறிந்தபிறகு சிலைவழிபாடு அவசியம் இல்லை,” என்று அவர் சொன்னார். இது கேட்பதற்கு மிகவும் சுவையாகத் தோன்றும். “சரி, சிலை வழிபாடு கடவுள் இல்லை. ஒருமுறை கடவுளிடம் வந்த பிறகு, கடவுளை அறிந்தபிறகு, கடவுளை அனுபவித்தபிறகு சிலைவழிபாடு தேவையில்லை; சிலை வழிபாட்டை நாம் கைவிட்டுவிடலாம்,” என்று சொல்வது பொய்.

நாம் வேதாகமத்தை தேவனுடைய வார்த்தை என்று கருதுகிறோம். இந்த முழு வேதாகமத்திலும் எங்கேயுமே, “கடவுளை அறிகிறவரை, அனுபவிக்கிறவரை ஒரு சிலையை வழிபடலாம் அல்லது ஒரு படத்தை வழிபடலாம்” என்று இல்லை. “அவர் (இயேசு கிறிஸ்து) அதரிசனமான தேவனுடைய தற்சுரூபம்” என்று கொலோசெயர் 1:15 கூறுகிறது. “இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருக்கிறார்,” எபிரேயர் 1:1-3ஆம் வசனங்கள் மீண்டும் அதையே கூறுகின்றன. “He is the radiance and efflugence of His glory and the exact impress of His substance”. ஒருமுறை பிலிப்பு இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நீர் பிதா அடிக்கடி பிதா என்று சொல்லுகிறீர். பிதாவை எங்களுக்குக் காண்பியும். அது போதும்,” என்று கேட்கிறார். அதற்கு இயேசுகிறிஸ்து, “பிலிப்புவே இவ்வளவு காலம் நான் உங்களோடுகூட இருந்தும், நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான். அப்படியிருக்க பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? நீ கேட்கிற கேள்வி பொருளற்றது” என்ற தொனியில் பதில் சொல்லுகிறார் (யோவான் 14:9). The question is redundant. That is an irrelevant question. இயேசுகிறிஸ்துவுக்குப் பிறகு யார் என்ற கேள்வி எழுவதற்கு அவர் விடவில்லை. அவர் அல்பாவும், ஓமெகாவுமாய் இருக்கிறார் (திரு. 22:13). “பூர்வ காலங்களில் பங்குபங்காகவும், வகைவகையாகவும் தீர்க்கதரிசிகள்மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன் இந்தக் கடைசி நாட்களில் குமாரன்மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்” (எபி. 1:1-3).

தேவனை மாம்சத்திலும் சரீரத்திலும் வெளிப்படுத்தினால், அதன் வெளியாக்கம் இயேசுகிறிஸ்து. மனித உருவிலே தேவன் எப்படி வெளிப்பட முடியுமோ அது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து. இது ஆச்சரியமானது. “இவர் சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினால் தாங்குகிறார்,” என்றும் அதே எபிரேயர் 1ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். இந்த முழுப் பிரபஞ்சத்திலும் ஒரேவொரு இரகசியம் இருக்கிறது. அது என்னவென்றால் “எப்படி தேவன் மாம்சத்திலும் இரத்தத்திலும் மனிதனாக வாழ முடியும்? அப்படி தேவன் இந்தப் பூமியிலே மனிதனாக மாம்சத்திலும் இரத்தத்திலும் முப்பத்துமூன்றரை ஆண்டுகள் வாழ்ந்தால் அந்த சமயத்திலே பரலோகம் காலியாகவா இருந்தது? Who was managing the universe?” என்பதுபோன்ற கேள்விகளெல்லாம் முளைக்கும். இந்தக் கேள்விகளுக்கு வேதம் கொடுக்கின்ற பதில். இது ஒரு இரகசியம். “அன்றியும் தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக் கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்” (1 தீPமோ. 3:17). இது ஏன் மரம இரகசியம்? ஏனென்றால், இது நம்முடைய நினைவுக்கும், எண்ணத்திற்கும், கற்பனைக்கும், காரண காரியங்களுக்கும் அப்பாற்பட்டது. எந்த மனிதனும் யோசித்து, “தேவன் எப்படி இந்தப் பூமியிலே ஒரு மனிதனாக வாழ முடியும்?” என்பதை நிரூபிக்க முடியாது. இது என்னுடைய மூன்றாவது குறிப்பு.

ஆகவே இயேசுகிறிஸ்துவுக்கு வெளியே ஒரு படமோ, ஒரு சிலையோ அல்லது ஒரு சிலுவையோ கூட வைத்துக்கொள்வதை வேதம் அனுமதிக்கவில்லை. படமோ, சிலையோ வைத்துக்கொள்வது இல்லை. மரத்திலே ஒரு சிலுவை செய்து வைத்துக் கொள்ளலாமா? ஆராதனைக்கோ, தொழுகைக்கோ நடுவில் அந்தச் சிலுவையை பார்த்தவுடனே நெஞ்சம் நெகிழ்வதற்கு ஒன்றும் இல்லை.

நான் ஒரு ரோமன் கத்தோலிக்கன். மரபு, மரபாக இப்படிப்பட்ட பழக்கவழக்கங்களினால் நான் வளர்ந்ததினால் ஒரு சிலுவையைப் பார்த்தவுடனே என்னுடைய நெஞ்சம் நெகிழும். ஆனால் அது உண்மையாயிருக்க வேண்டிய அவசியமில்லை.

4. தேவன் மனிதனானதின் நோக்கம்

தம் இரத்தத்தினால் மனிதனுடைய பாவங்களை மன்னிக்க

நான்காவது குறிப்பு, தேவன் ஏன் மனிதனாக இந்தப் பூமியிலே வெளிப்பட்டார் என்றால் மனிதனுக்கு இரண்டு சிக்கல்கள் உண்டு. முதல் சிக்கல், மனிதனுடைய பாவங்களுக்குத் தீர்வு என்ன? “என் பாவங்களைப்பற்றி கடவுள் மிகவும் கோபமாக இருப்பார். என்னுடைய பாவங்களுக்காக நான் நரகத்திற்குப் போக வேண்டியிருக்கும்,” என்ற கோட்பாடு எல்லா மதங்களிலும் உண்டு. அதிலே ஓரளவிற்கு உண்மை இருக்கிறது. “ஆகவே, என்னுடைய பாவங்களுக்கு எப்படியாவது நான் பரிகாரம் செய்தாக வேண்டும், அதனால் கடவுளை எப்படியாவது நான் பிரியப்படுத்தியாக வேண்டும்; இல்லையென்றால் எனக்கு விமோசனம் இல்லை,” என்ற எண்ணம் எல்லா மனிதக் கலாசாரங்களிலும் இழையோடுகிறது. ஒரு கோழியை அறுப்பது, முடியாவிட்டால் ஒரு எலுமிச்சைப் பழத்தையாவது அறுத்து அதில் குங்குமம் தடவுவது என்பதெல்லாம் “பாவங்களுக்காக உயிர்பலியிட வேண்டும்,” என்கிற எண்ணம் மனிதனுக்கு தோன்றியிருக்கிறது என்பதையே காட்டுகிறது.

“இரத்தம் சிந்துதலில்லாமல் பாவமன்னிப்பு உண்டாகாது” (எபி. 9:22). அந்த இரத்தம் மாசற்ற இரத்தமாக இருக்க வேண்டும். மாசற்றவர் தேவன் ஒருவரே. இரத்தம் மனிதனுக்கு மட்டும்தான் உண்டு. ஆகவே, மாசற்ற இரத்தம் சிந்தப்பட வேண்டுமென்றால் தேவனும் மனிதனுமான ஒரு நபர், தம் இரத்தத்தைச் சிந்த வேண்டும். ஆகவே, தேவன் மனிதனாகி இயேசுகிறிஸ்துவில் அவர் சிலுவையில் மரித்து அல்லது சிலுவையில் அறையுண்டு தம் இரத்தத்தைச் சிந்தினார். அதன்மூலமாக நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கின்றன. கவனமாகக் கேளுங்கள். இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சிந்தப்பட்டதினால் நம்முடைய எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டன. எல்லா மனிதருடைய பாவங்களும் ஆண்டவராகிய இயேசுவின் இரத்தத்தினாலே மன்னிக்கப்பட்டிருக்கின்றன. இந்த உண்மை எல்லா மனிதர்களுக்குமுன்பாக வைக்கப்படுகிறது. யார் இதை ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. யார் அதைத் தள்ளிவிடுகிறார்களோ அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதில்லை.

யோவான் எழுதின நற்செய்தியின் பெரிய தர்க்கம் என்ன? மனிதர்கள் இயேசுகிறிஸ்துவைத் தேவனுடைய குமாரன் அல்லது மனித உருவில் வந்த தேவன் என்று ஏற்றுக்கொள்கிறார்களா, இல்லையா என்பதுதான் அந்த நற்செய்தியின் தர்க்கம். இதுதான் தேவனுடைய வழி. மனிதர்கள் பாவமன்னிப்புக்கென்று வேறொன்றும் செய்யவேண்டிய அவசியம் இல்லை. “இயேசுகிறிஸ்து சிலுவையிலே செய்து முடித்தது போதாது அல்லது நிறைவானது இல்லை, முழுமையானது இல்லை; என்னுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு நான் இன்னொன்றையும் செய்ய வேண்டும்; கூடுதலாக ஒன்றைச் செய்ய வேண்டும்,” என்று நினைப்பதால்தான் மக்கள் கூடுதலாக எங்காவது சென்று மொட்டையடிக்க வேண்டும் அல்லது நதிகளிலே குளிக்க வேண்டும் அல்லது தேர் இழுக்க வேண்டும் அல்லது செருப்புப் போடாமல் எங்காவது நடந்து போக வேண்டும். அதன்மூலமாக தங்கள் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நினைக்கிறார்கள். இப்படிச் செய்வது இயேசுகிறிஸ்துவினுடைய பலி போதுமானதல்ல என்று தேவனிடத்தில் சொல்வதற்குச் சமானம்.

நீங்கள் ஏசாயா 53யை வாசியுங்கள். “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அவர் நொறுக்கப்பட்டார்…கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்…அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்தார்,” என்று அந்த அதிகாரம் முழுவதும் இருக்கும். மனிதனுடைய பாவங்களுக்குப் போதுமான பலியை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து செலுத்திவிட்டார்.

  1. முதலாவது, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஆவியிலே ஒரு வெற்றிடம் இருக்கிறது. அது தேவனுக்காக உண்டாக்கப்பட்டது.
  2. இரண்டாவது, தேவன் அன்புகூர்வதற்காக மனிதனை உண்டாக்கினார். மனிதன் தேவனை அன்புகூர வேண்டுமென்று அவர் விரும்புகிறார்.
  3. மூன்றாவது, தேவனை அறிவதற்கு மனித வரலாற்றிலே ஒரேவொரு வழிதான் உண்டு. அது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து. மீதி எல்லாம் மனிதனுடைய கற்பனையும், கதையும், பொய்யும், புரட்டுமே.
  4. நான்காவது, ஏன் தேவன் மனிதனாக வெளிப்பட்டார் என்றால் மனிதர்களுடைய பாவங்கள் என்கிற பிரச்சினையைத் தீர்ப்பதற்கு குற்றமில்லாத இரத்தம் சிந்தப்பட வேண்டும். குற்றமில்லாதவர் தேவன். Only God is sinless. But only man has blood. Therefore a person who is both God and man should shed his blood. Such a person is Lord Jesus Christ.

5. மனிதனுடைய தன்மையை மாற்ற தம் ஜீவனை வழங்குவதற்காக

கடைசியாக ஐந்தாவது, மனிதனுடைய சிக்கல் அவனுடைய பாவங்கள் மட்டுமல்ல. பாவம் என்கிற அவனுடைய தன்மை. வேப்பமரத்திலுள்ள எல்லா வேப்பம்பழங்களையும், வேப்பம்காய்களையும் நறுக்கிவிட்டால் அது நல்ல மரமாக மாறிவிடுமா? அதனுடைய வேர் வேப்பமரத்தின் வேர். அதனுடைய ஊற்று, தோற்றுவாய், அதனுடைய தன்மை வேப்பமரம். ஆகவே அதிலிருந்து வருகிற கனிகள் கசப்பாக இருக்கும். ஆகவே, மனிதன் தன்னுடைய பழக்க வழக்கங்களை, சில மதப் பழக்கவழக்கங்களை மேற்கொள்வதன்மூலம் தன்னை மாற்றிக்கொள்ளலாம் என்று நினைப்பது வேப்பமரம் வெளியே தன்னுடைய காய்களையும், கனிகளையும், பூக்களையும் நறுக்குவதன்மூலம் தன்னை மாற்றிக்கொள்ளலாம் என்று கற்பனைசெய்வதற்கு ஒப்பானது. இது முடியாது. இதற்குத் தீர்வு அந்த மரத்தினுடைய தன்மை மாற்றப்பட வேண்டும்.

ஆண்டவராகிய இயேசுவின் நற்செய்தி பாவங்களை மன்னிப்பது மட்டுமல்ல. மனிதனுடைய தன்மையை அது மாற்றுகிறது. ஒரேவொரு வசனத்தை நான் மேற்கோள்காட்ட விரும்புகிறேன். “தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார். அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறது என்பதே அந்தச் சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன். தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும் தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும் தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதுகிறேன்” (1 யோவான் 5:11-13). ரோமர் 7ஆம் அதிகாரத்திலே பவுல் இந்தப் பிரச்சினையை வருணிக்கிறார். மனிதனுடைய இயல்பால், தன்மையால் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய முடியாது. எனவே, தான் ஒரு நிர்ப்பந்தமான மனிதன் என்று பவுல் கூறுகிறார். தன்னுடைய பிரச்சினையை “எப்படியெனில் நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை. நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன்,” (ரோமர் 7:11) என்று பவுல் சொல்லுகிறார். மனிதனுடைய பாவம் என்கிற பிரச்சினையை அவர் நினைக்கும்போது இப்படிச் சொல்கிறார். “நான் செய்கிறதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. எதைச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறேனோ அதை என்னால் செய்ய முடியவில்லை. எதை நான் செய்யக்கூடாது என்று விரும்புகிறேனோ அதை நான் செய்கிறேன்”. இதுதான் மனிதனுடைய நிர்ப்பந்தமான நிலைமை.

இதற்குத் தேவனுடைய தீர்வு என்ன? தேவன் மனிதனுடைய தன்மையை மாற்றுகிறார். தேவன் மனிதனுக்கு ஒரு புதிய ஜீவனைத் தருகிறார். தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார். அந்த ஜீவன் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவில் இருக்கிறது. தேவனுடைய குமாரனை உடையவன் ஜீவனை உடையவன். தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். ஆகவே, நாம் எதற்காகக் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டும்? நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்காக. நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வதால் குணம் மாற்றப்படுகிறது. இது பொய்யல்ல அல்லது ஒரு கற்பனை அல்ல. ஒருவன் இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கும்போது எந்த மனிதனும் செய்யமுடியாத, எந்த மதமும் செய்யமுடியாத, எந்தத் தத்துவஅமைப்புமுறையும் செய்யமுடியாத அவனுடைய அடிப்படைக் குணத்தை மாற்றவல்ல ஜீவனை, நித்திய ஜீவனை, தெய்வீக ஜீவனை, தேவனுடைய ஜீவனையே அவனுக்குள் உட்செலுத்துவதன்மூலமாக தேவன் செய்தார். இதுதான் நம்முடைய நற்செய்தி.

அதற்குப்பின்பு அவன் பாவமே செய்யமாட்டான் என்று நான் சொல்லவில்லை. ஆனால், அந்தப் புதிய தன்மையைப் பெற்ற நாள் தொடங்கி ஒவ்வொரு நாளும் படிப்படியாக, மெல்லமெல்ல, மெல்ல மெல்ல பரிசுத்த ஆவியானவர் நம்முடைய குணத்தை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் குணத்திற்கு ஒப்பாக்குகிற வேலையைச் செய்கிறார். அது ஒரு செயல்முறை. அது ஒரு நாளிலே முடிந்துவிடுவதில்லை. மனித வாழ்க்கையின் எல்லாச் சூழ்நிலைகளும், எல்லா சந்தர்ப்பங்களும் தேவன் எதற்காகக் கொடுக்கிறாரென்றால் நம்முடைய வாழ்க்கையிலே, நம்முடைய குணத்தை ஆண்டவராகிய இயேசுவின் குணத்திற்கு ஒப்பாக்குவதற்காகவே. அப்படி ஒப்பாக்குவது ஏன் சாத்தியம் என்றால் இயேசுகிறிஸ்துவின் தன்மை நமக்குள் இருப்பதால், இயேசுகிறிஸ்துவினுடைய குணத்தை உருவாக்குவது சாத்தியம். இயேசுகிறிஸ்துவின் தன்மை நமக்குள் இல்லையென்றால் இயேசுகிறிஸ்துவினுடைய குணத்தை உருவாக்குவதும், ஒப்பாக்குவதும் சாத்தியம் இல்லை. ஒரு குரங்கிற்கு விமானத்தை எப்படி ஓட்டுவது என்று கற்றுக்கொடுக்க முடியாது. ஆனால் எப்படி விமானத்தை ஓட்டுவது என்று மனிதக் குழந்தைக்குக் கற்றுக்கொடுக்க முடியும். இன்றைக்கு முடியாது ஆனால் நாளைக்கு முடியும். There is a great possibility, great potentiality because there is a new life. A monkey, it doesn’t have the possibility or potentiality, because its life is different. நீங்கள் தேவனுடைய ஜீவனை, கிறிஸ்துவின் ஜீவனைப் பெற்றுக்கொண்டதால் அங்கே மிகப் பெரிய சாத்தியம் உண்டு. ஆகவே, நாம் பரிசுத்த ஆவியானவரின் தொடர்ச்சியான வேலையின்மூலமாக தேவனுடைய குணத்திற்கும், கிறிஸ்துவின் சாயலுக்கும் ஒப்பாக மாற்றப்படுவோம்.

நான் சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். என்னுடைய Gospel outline இது. இதுதான் ஒரேவொரு outline இல்லை. 1. ஒன்று, மனிதனுக்கு ஒரு ஆவி உண்டு. அந்த ஆவி தேவனுக்காக உண்டாக்கப்பட்டது. தேவனைப் பெற்றுக்கொள்ளும்வரை இந்த ஆவி வெறுமையாக இருக்கும். அந்த வெறுமையை இந்த உலகத்திலே வேறு எதைக்கொண்டும் நிரப்ப முடியாது. 

  1. இரண்டாவது, தேவன் அன்புகூர்வதற்காக மனிதனை உண்டாக்கினார். அந்த அன்பைப் பெற்றுக்கொள்ளும்வரை அந்த அன்பு நிரப்பப்படாது. 

  2. மூன்று, தேவன் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவில் மட்டுமே உருக்கொண்டார், வடிவம் கொண்டார். இயேசுகிறிஸ்துவைத்தவிர வேறு உருவம், வடிவம் இல்லை. மனிதனுடைய கைகளினால் செய்யப்படுகிற சிலைகளை, சித்திரங்களை, படங்களைத் தேவன் எதிர்க்கிறார். அவைகளை அவர் வெறுக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

  3. நான்காவது, ஏன் தேவன் மனிதனானார்? மனிதனுடைய பாவங்கள் என்கின்ற பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தேவன் மனிதனாகி தம் இரத்தத்தைச் சிந்தினார். நம் பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டிருக்கின்றன. நம் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு கூடுதலாக நாம் ஒன்றும் செய்யவேண்டிய அவசியம் இல்லை. இயேசுகிறிஸ்துவின்மேல் நம்முடைய நம்பிக்கையை, விசுவாசத்தை வைக்கும்போது தேவன் நம்முடைய பாவங்களை மன்னிக்கிறார்.

  4. ஐந்தாவது, கடைசியாக அதைவிட ஆழமானது ஒரு மனிதனுடைய தன்மை. அந்தத் தன்மையை மாற்ற எந்த மதத்தாலும், எந்த மனிதனாலும், எந்தத் தத்துவஅமைப்புமுறையாலும் முடியாது. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஒருவரே தேவனுடைய உயிரை, தேவனுடைய ஜீவனை, நமக்குள் தருவதன்மூலம் நம் தன்மையை மாற்றுகிறார். இன்னும் கடைசியாக, அந்தத் தன்மையை, தேவனுடைய தன்மையை, நாம் பெற்றிருப்பதால் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் குணத்திற்கு ஒத்த குணமுள்ளவர்களாக்க பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு நாளும் நம்முடைய வாழ்க்கையிலே செயல்பட முடிகிறது. இதுதான் இயேசுகிறிஸ்துவினுடைய நற்செய்தி என்பதாகும்.

நீங்கள் நற்செய்தியை அறிவிக்கும்போது இந்தக் குறிப்புரையைப் பயன்படுத்த முயற்சிசெய்யுங்கள். இதுபோல பல குறிப்புரைகளை நாம் உருவாக்கவேண்டியிருக்கிறது. இது ஒரு குறிப்புரை. குறைந்தது 5, 6 குறிப்புரைகளை நாம் வைத்துக்கொள்ள வேண்டும். சமயத்திற்கும், சந்தர்ப்பத்திற்கும், சூழ்நிலைக்கும், கேட்பவர்களுடைய நிலைமைக்கும் தக்கவாறு இந்தக் குறிப்புரையை நாம் பயன்படுத்த வேண்டும். சில சமயத்திலே கேட்பவர் மிகவும் உடல் வியாதியாக இருக்கிறாரென்றால் ஒரேவொரு குறிப்புரையைப் பயன்படுத்தினால் போதும். “நீங்கள் இயேசுகிறிஸ்துமூலமாய்ப் பாவமன்னிப்பைப் பெற்றுக் கொண்டு, அவரை இரட்சராக ஏற்றுக்கொண்டால் உங்களைச் சுகமாக்குவார்,” என்றால்கூட போதும்.

இன்றைக்கு நாம் கேட்ட வசனங்களைச் சிந்தித்து பாருங்கள், ஆராய்ந்து பாருங்கள், தியானித்துப் பாருங்கள். நற்செய்தி அறிவிக்கும்போது இப்படிப்பட்ட ஒரு குறிப்புரையை, இந்த வசனங்களை, பயன்படுத்திப் பாருங்கள். அதிலும் நம்முடைய அனுபவங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வதின்மூலம் எப்படி நாம் எளிமையாகவும், புரிந்துகொள்ளும் விதமாகவும், வீரியமாகவும் அறிவிக்க முடியும் என்று இன்னும் கொஞ்சம் நம்மை செம்மைப்படுத்திக் கொள்ளலாம்.