Transcribed from a message spoken in January 2013 in Chennai
By Milton Rajendram
வேத வாசிப்பு : 1 கொரி. 15:10; பிலி. 4:11-13, 19; 2 கொரி. 12:10; ரோமர் 5:15, 17
கிருபையென்றால் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவில் உள்ள தேவனுடைய அளவற்ற பரம செல்வங்கள் அல்லது வளங்கள் என்று நாம் பார்த்தோம். தேவனிடத்திலே அளவற்ற செல்வங்களும், வளங்களும் உள்ளன. பிரதானமாக, தேவனுடைய செல்வங்களும் வளங்களும் ஆவிக்குரியவை அல்லது பரத்திற்குரியவை. இந்த ஆவிக்குரிய, பரத்திற்குரிய எல்லா செல்வங்களையும், வளங்களையும் பெற்று, அனுபவித்து, காண்பிக்க வேண்டும் என்பதற்காக தேவன் ஒரு மனிதனை உண்டாக்கினார்.
இந்தப் பூமியிலே நாம் தேவனுடைய மக்களாக வாழ்வது தேவனுடைய இந்த அளவற்ற செல்வங்களையும், வளங்களையும் அனுபவிப்பதற்காகவே, காண்பிப்பதற்காகவே. இதன் மூலமாக நம்முடைய பிதாவானவர் எவ்வளவு பெரிய செல்வந்தர் அல்லது வளம் நிறைந்தவர் என்பதை இந்த உலகம் காணும். நம்முடைய வாழ்க்கையின் எல்லா நிலைமைக்கும் போதுமானது மட்டும் அல்ல, போதுமானதற்கும் மிஞ்சின செல்வங்களும், வளங்களும் அவரிடத்தில் உள்ளன என்று ரோமர் ஆறாம் அதிகாரத்திலே நாம் பார்த்தோம்.
நம்முடைய தேவைக்கு போதுமான செல்வமும், வளமும் மட்டும் அல்ல; நம்முடைய தேவையைப் பூர்த்திசெய்தபின், அதற்கு மிஞ்சியும் இருப்பதுதான் தேவனுடைய செல்வங்களும் வளங்களும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஐயாயிரம் பேரை போஷித்தபோது அவர்கள் திருப்தியாய் சாப்பிட்டார்கள் என்பது மட்டும் அல்ல. அவர்கள் சாப்பிட்டபின் பன்னிரன்டு கூடைகள் நிறைய மீதியெடுத்தார்கள். ஐயாயிரம் பேர் திருப்தியாய் சாப்பிட்டார்கள் என்றால் அது போதுமானது. ஆனால், பன்னிரன்டு கூடைகள் நிறைய மீதியெடுத்தார்கள் என்றால் அது போதுமானதற்கும் மிஞ்சினது. தேவனுடைய செல்வங்களும், வளங்களும் நம்முடைய தேவைகளுக்குப் போதுமானது மட்டும் அல்ல. அது போதுமானதற்கும் மிஞ்சினது. தமிழில் இதற்குமேல் ஒரு வார்த்தை இல்லை.
தேவன் மனிதனை அல்லது மனித இனத்தைப் படைத்தது தேவனுடைய மக்களாகிய நம்மை இரட்சித்தது, இப்படி அவருடைய செல்வங்களையும் வளங்களையும் பெற்று, அனுபவித்து, காண்பிப்பதற்காகவே. அதுதான் சாட்சி. நம்முடைய தேவன் எப்படிப்பட்டவர் என்பதைக் காண்பிப்பதுதான் சாட்சி. அதற்கென்று நாம் அழைக்கப்பட்டிருக்கின்றோம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நாம் விசிவாசிப்பது, அவர் நம்முடைய பாவங்களை மன்னித்தது, அவர் தம்முடைய தெய்வீக ஜீவனைத் தந்தது, அவருடைய பரிசுத்த ஆவி நமக்குள் வாசம்பண்ணுவது, நம்முடைய வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவர் நடத்துவது…எல்லாவற்றையும் இந்த ஒன்றே ஒன்றுக்காகத்தான் செய்கிறார்.
தேவன் தம்முடைய இந்த அளவற்ற செல்வங்களையும், வளங்களையும் அவருடைய குமாரனில் மட்டுமே வைத்திருக்கிறார். அவருடைய குமாரனில் அவைகளெல்லாம் ஊனுருக்கொண்டிருக்கின்றன என்று கொலோசெயர் 1:19; 2:3, 9இல் நாம் வாசிக்கின்றோம். தேவனுடைய அளவற்ற செல்வங்களையும், வளங்களையும் அவர் மனிதனுக்குக் கொடுக்க வேண்டுமென்று திட்டமும், குறிக்கோளும் வைத்திருக்கிறார்.
ஆனால், தேவன் தம்முடைய அளவற்ற செல்வங்களையும், வளங்களையும் மனிதனுக்குக் கொடுக்கின்ற வழி…நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. அதைத்தான் யோவான் 1:16, 17இல், “அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம். எப்படியெனில் நியாப்பிரமாணம் மோசேயின்மூலமாய் கொடுக்கப்பட்டது; கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின்மூலமாய் உண்டாயின,” என்று கூறுகிறார். இயேசு கிறிஸ்து யோவான் 1:51இல் நாத்தான்வேலிடத்தில் இப்படிச் சொல்லுகிறார்: தேவதூதர்கள் மனித குமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள்.” இது உண்மை. அது என்னவென்றால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பரத்தையும் பூமியையும் அல்லது மனிதனையும் பரத்தையும் இணைக்கிற ஏணியாக இருக்கிறார். பரத்திலுள்ள தேவனுடைய அளவற்ற செல்வங்களையும் வளங்களையும் இவர் மனிதனுக்காகக் கொண்டுவருகிறார். மனிதன் தேவனிடத்தில் இருக்கிற அந்த அளவற்ற செல்வங்களையும், வளங்களையும் அனுபவிப்பதற்கு வழியாக அவர் இருக்கிறார்.
##இயேசுவே மெய்ப்பொருள் யோவான் 14:6 நமக்கு மிகவும் பரிச்சயமான வசனம்: “நானே வழியும், சத்தியமும், ஜிவனுமாயிருக்கிறேன்.” இதிலே சத்தியம் என்பதற்கு ‘எல்லா ஆசீர்வாதங்கள், நன்மைகள், செல்வங்கள், வளங்கள் ஆகியவைகளின் நிஜமாக, மெய்ப்பொருளாக, நான் இருக்கிறேன்’ என்று பொருள்.
மனிதர்கள் இந்தப் பூமியிலே பெற்று, அனுபவிக்கிற எல்லா நன்மைகள், செல்வங்கள், வளங்களுடைய நிஜம் அல்லது மெய்ப்பொருள் யார்தான்? ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துதான். மனிதர்கள் பெற்று, அனுபவிக்கிற நன்மைகளும், செல்வங்களும், வளங்களும் நிழல். இந்த நிழல் எதைச் சுட்டிகாட்டுகிறது அல்லது எதை நோக்கி அந்த அம்புக்குறி காட்டுகிறதென்றால் நாம் பெற்று அனுபவிக்கிற ஒவ்வொரு நிழலுக்கும் ஒத்த ஒரு மெய்ப்பொருள் அல்லது மெய்யான நன்மை எங்கு இருக்கிறது? அது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் இருக்கிறது.
இது இந்த முழு வேதாகமும் காண்பிக்கின்ற மாபெரும் உண்மை. முதல் மனிதனுக்கு முன்பாக தேவன் வைத்திருந்த மாபெரும் ஆசீர்வாதம் என்னவென்று கேட்டால் மனிதன் பெற்று அனுபவிக்கிற எல்லா நன்மைகளும் நிழல்; இந்த ஒவ்வொரு நிழலான நன்மைக்கும் ஒத்த ஒரு மெய்யான நன்மை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் உண்டு என்பது மாபெரும் உண்மை.
நாம் பாடுகின்ற ‘ஆதி தொடக்கம் ஆதி பிதாக்கள்’ என்ற பாடலிலே வருகிற ‘ஏதேன் தோப்பில் நாட்டிய ஜீவிய தருவே, மீட்டவருக்கு உயிரை ஈயும் விண்ணவரின் இன்ப உருவே’ எனும் வரிகளில் அந்த ஏதேன் தோப்பில் நாட்டப்பட்டிருந்த ஜீவ தரு அல்லது ஜீவ மரம் எதைக் குறிக்கின்றது அல்லது எதை அடையாளப்படுத்துகிறது? மனிதன் பெற்று அனுபவிப்பதற்கென்று தேவன் ஏராளமான ஆயிரமாயிரமான நன்மைகளைக் கொடுத்தார். ஆனால், அந்த எல்லா நன்மைகளும் நிழல்தான்; அந்த எல்லா நிழலான நன்மைகளுக்கும் ஒத்த மெய்யான நன்மை அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிலே ஊனுருக்கொன்டிருக்கின்றது. (பொதுவாக நாம் பேசுகிற எல்லாவற்றையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாவிட்டாலும் சாராம்சத்தை மட்டுமாவது நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்;).
சாராம்சம் என்ன? 1. “ஒன்று, மனிதன் அனுபவிக்கின்ற எல்லா நன்மைகளும் நிழல்தான். 2. இரண்டு, இந்த நிழலான நன்மை ஒவ்வொன்றிற்கும் ஒத்த மெய்யான, நிஜமான அல்லது உண்மையான நன்மை உண்டு. 3. மூன்று, இந்த மெய்யான நன்மைகளும் ஒட்டுமொத்தமாக யாரிடம்தான் உள்ளது? அது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில்தான் உள்ளது.” இதுதான் சாராம்சம்.
நம்முடைய தேவைகள் எத்தனையோ உண்டு! பணத் தேவைகள், சுகம் வேண்டும், பொருளாதாரத் தேவைகள், வேலை வேண்டும், படிப்பு வேண்டும், போக்குவரத்துத் தேவைகள், உணவு, உடை, உறைவிடம், இப்படி பல்லாயிரம் தேவைகள் உண்டு. அந்த தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக மனிதர்கள் மிக வேகமாகவும், அங்கும் இங்கும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுகிறார்கள். இவ்வாறாக தங்களுடைய தேவையை நிறைவுசெய்வதற்கு மனிதர்கள் எதைவேண்டுமானாலும் செய்வார்கள். ஒருபுறம், இதுபோன்று செயல்படுவது, இன்னொருபுறம் மாம்சத்திற்கு உரியது; திருடுவது, கொள்ளையடிப்பது, இச்சிப்பது, இன்னொருவருக்குச் சொந்தமான பொருளை பலவந்தமாக எடுத்துக்கொள்வது என்று எல்லைமீறி செயல்படுவது.
நாம் இரண்டு வசனங்களை வாசித்தோம்: 2 கொரி. 12:10; பிலி. 4:11-13, 19. இந்த வசனங்களின்மூலமாய் பவுல் என்ன சொல்கிறாரென்றால் “நான் மனரம்மியமாய் இருக்கக் கற்றுக்கொண்டேன், நான் திருப்தியாய் இருக்கக் கற்றுக்கொண்டேன். அதாவது நான் திருப்தியாய் இருக்கிறேன்,” என்று சொல்லுகிறார்.
நாம் பல சூழ்நிலைகள் வழியாய்க் கடந்துபோகின்றோம். நம்முடைய வாழ்க்கைச் சூழ்நிலை Kaleidoscopeஇல் வளையல்கள் மாறுவதுபோல் மாறுகிறது. சில சமயங்களில் பட்டினியாய் இருக்கிறது, சில சமயங்களிலே பரிபூரணமாய் இருக்கிறது, சில சமயங்களில் உயர்வான சூழ்நிலை இருக்கிறது, சில சமயங்களில் தாழ்வான சூழ்நிலை இருக்கிறது, நண்பர்கள் நம்மை நினைத்துப்பார்க்கின்ற சூழ்நிலை இருக்கின்றது, நினைத்துப்பார்க்காத, மறந்த சூழ்நிலை இருக்கின்றது. நண்பர்கள் என்று நான் சொல்லும்போது கணவனாக இருக்கலாம், மனைவியாக இருக்கலாம், பிள்ளைகளாக இருக்கலாம், பெற்றோர்களாக இருக்கலாம், சகோதர சகோதரிகளாக இருக்கலாம். “இந்தச் சூழ்நிலையிலே என்னுடைய கணவன் என்னை நினைத்துப்பார்க்கவில்லையே! யாரும் என்னை நினைத்துப்பார்க்கவில்லையே!” என்பதுபோன்ற சூழ்நிலைகள் வரலாம்.
That is very practical அல்லது பெற்றோர்கள், “நான் எவ்வளவு தியாகம்பண்ணுகிறேன் என்று என்னுடைய பிள்ளைகள் நினைத்துப்பார்க்க வேண்டும் அல்லது இன்றைக்கு இல்லாவிட்டாலும் இன் னும் முப்பது வருடம் கழித்து, நான் எவ்வளவு தியாகம் செய்திருக்கின்றேன் என்பதை அவர்கள் நினைத்துப்பார்ப்பார்கள்,” என்பதுபோன்ற சூழ்நிலைகள் நம்முடைய மனதிலே ஓடும்.
ஆனால், இதுபோன்ற எல்லாச் சூழ்நிலைகள் வழியாகப் போகும்போது பவுலினுடைய சாட்சி: “நான் திருப்தியாய் இருக்கக் கற்றுக்கொண்டேன்.” இதனுடைய இரகசியம் என்ன? எப்படி திருப்தியாக இருக்க முடியும்? பரிபூரணமாக இருக்கும்போது திருப்தியாய் இருக்கலாம், பட்டினியாய் இருக்கும் போது எப்படி திருப்தியாக இருக்க முடியும்? உயர்வாக இருக்கும்போது திருப்தியாக இருக்கலாம். தாழ்வாக இருக்கும்போது எப்படி திருப்தியாக இருக்க முடியும்? நம்முடைய அன்பிற்குரியவர்கள் நம்மை நினைத்துப் பார்க்கும்போது நாம் திருப்தியாய் இருக்கலாம். நாம் யார்மேல் அன்பு கூர்ந்தோமோ, எவர்களுக்காகத் தியாகம்செய்தோமோ அவர்களால் மறக்கப்படும்போது எப்படி நாம் திருப்தியாக இருப்பது? அல்லது 2 கொரிந்தியர் 12:10இல் சொல்லப்படுவதுபோல “பலவீனங்களி லும், நிந்தைகளிலும், அவமானங்களிலும், அடிஉதைகளிலும் நான் திருப்தியாய் இருக்கப் பிரியப்படுகிறேன் என்பதல்ல. நான் மனநிறைவோடு இருக்கின்றேன்,” என்று அவர் சொல்லுகிறார்.
இது மனித முயற்சியினாலே சாத்தியமில்லை. ஒரு நோயினாலே நான் அவதிப்படும்போது, வருந்தும்போது, வேதனைப்படும்போது நான் சகித்துக்கொள்ளலாம்; கண்ணீரோடு, அழுகையோடு; ஆனால், திருப்தியாய் இருக்க முடியாது. ஆனால், இந்த மனிதன் சகித்துக்கொள்ளவில்லை, திருப்தியாக இருக்கின்றார். அவர் திருப்தியாக இருக்கிறாரென்றால் நாம் ஒன்றேவொன்றுதான் சொல்ல முடியும். ஏதோ ஒரு “இரகசியம்” இருக்கிறது. இப்பொழுது கண்டிப்பாக இந்த வார்த்தையை பயன்படுத்தித்தான் ஆக வேண்டியிருக்கிறது. ஒரு இரகசியம் இருக்கின்றது. என்ன இரகசியம்?
சிலர் பொறுப்பில் இருப்பதினால், தங்கள் பிள்ளைகளுக்குமுன்பாக நம்முடைய கண்ணீரையும், அழுகையையும், வருத்தத்தையும், வேதனையையும் காட்டவேண்டாம் என்பதற்காக கல்லைப்போல் இருப்பார்கள். அதுவல்ல உண்மையிலேயே நான் திருப்தியாய் இருக்கிறேன் என்பது. கர்த்தருக்கு நன்றி.
அதை பவுலே இரகசியம் என்று சொல்லிவிடுகிறார். அந்த இரகசியத்தை நான் கற்றுக்கொண்டேன். அப்படியென்றால் அவருக்கும் முதலில் தெரியவில்லை. இந்தச் சூழ்நிலையில் எப்படி நாம் வாழ்வது? சமாளிப்பதல்ல நம்முடைய மறுபதில் (response). நம் பிரதியுத்தரம் எப்படி இருக்க வேண்டும் என்று அவருக்கும் கேள்வி இருந்திருக்கின்றது. நாளடைவில் அல்லது தன்னுடைய அனுபவங்கள் மூலமாக கர்த்தர் வெளிப்படுத்தினதின்மூலமாக எப்படி வாழ்வது என்ற அந்த கேள்விக்கு அவர் பதில் கண்டுகொண்டார். அதனால்தான் அவர் என்ன சொல்லுகிறார்: “நான் கற்றுக்கொண்டேன். அந்த இரகசியத்தை நான் கற்றுக்கொண்டேன்.” அந்த இரகசியம் என்னவென்று பிலிப்பியர் 4:13, 19 வசனங்களில்; இருக்கின்றது. தேவன் தம்முடைய மகிமையின் செல்வங்களினால் அதாவது கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய மகிமையான செல்வங்கள் உள்ளனவென்று கண்டுகொண்டார். இந்தப் பதில் நம்மை பரவசமாக்குவதுபோல் இல்லை. இது என்ன? நான் பட்டினியாய் இருக்கும்போது, தாழ்வாக இருக்கும்போது, என்னுடைய நண்பர்களால் மறக்கப்பட்டிருக்கும்போது, “கிறிஸ்து இயேசுவுக்குள் உள்ள தேவனுடைய மகிமையான செல்வங்களால் வாழ முடியும்.”
மனிதனுடைய எந்தத் தேவையையும் பூர்த்திசெய்ய முடியாத ஒரு நிலையில் தேவன் இல்லை. மனிதனுடைய எப்படிப்பட்ட ஆழமான, உயரமான, கொடுமையான தேவை இருந்தாலும் அதைப் பூர்த்திசெய்கின்ற செல்வம் தேவனிடத்தில் உண்டு. அதை கிறிஸ்து இயேசுவுக்குள்தான் வைத்திருக்கின்றார். கிறிஸ்துதான் பரத்திலிருந்து எல்லாவற்றையும் மனிதர்களிடத்தில் கொண்டுவருகின்ற ஏணி. மனிதனைத் தேவனோடு இணைக்கின்ற பாலம். அதை நாம் எப்படிப் பெற்றுக்கொள்வது? இதுதான் நம்முடைய கேள்வி.
“என்னுடைய உடலில் இந்த ஒரு வலி மட்டும் இல்லையென்றால் நான் கர்த்தருக்கு எவ்வளவோ ஊழியம் செய்வேன்,” என்கின்ற 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் எத்தனையோபேர் இருப்பார்கள். “நான் செய்யவேண்டிய அந்தக் கடமையை மட்டும் செய்துவிட்டால் போதும். அதன்பிறகு நான் free ஆகி விடுவேன்,” என்று சொல்வார்கள். நான் ஒரு முடிவுறையைக் கொடுக்க விரும்புகின்றேன். இது நமக்கு முன்பாக வைக்கப்படுகிற ஒரு சோதனை. எதனால் நாம் வாழ முடியும்? கிறிஸ்து இயேசுவுக்குள் உள்ள அளவற்ற செல்வங்களினால் நாம் வாழ முடியுமா? முடியாதா? இதுதான் நமக்கு முன்பாக இருக்கின்ற கேள்வி. வாழ முடியும் என்றால் தேவன் மகிழ்கின்றார். வாழ முடியவில்லையென்றால் அதற்குப் பெயர்தான் பாவம். இந்த உலக வழக்கில் சொல்வதுபோல் மனிதர்கள் செய்கின்ற பல்வேறு “தப்பு தண்டா”தான் பாவம் என்று நாம் பொதுவாக நினைக்கின்றோம். அது பாவம்தான். ஆனால், கிறிஸ்து இயேசுவுக்;குள் உள்ள கிருயையினால் வாழ முடியாது என்பதுதான் பாவம்.
முதல் மனிதனுக்கு வைக்கப்பட்ட உண்மையான பரீட்சை இதுதான். அவனுடைய பரீட்சை மூன்று வாக்கியங்களில் வருணிக்கப்பட்டிருக்கின்றது. அறிவு மரத்தினுடைய கனியைப் பார்த்து மனிதன் ‘பார்வைக்கு இன்பம், புசிப்புக்கு நலம், அறிவைத் தெளிவிக்கக்கூடியது’ என்று மூன்று காரியங்களைச் சொல்லுகிறான். மனிதன் என்று சொல்லும்போது ஆதாம் ஏவாள் இரண்டு பேரையும் சேர்த்துத்தான் குறிப்பிடுகின்றேன். ஏதேன் தோட்டத்திலே பெற்று அனுபவிப்பதற்கு வைத்திருந்த எல்லா நன்மைகளும் போதாது, இன்னொரு நன்மை இருக்கிறது என்று அந்த முதல் மனிதன் யோசிக்கிறான்.
“தேவன் நமக்குத் தந்திருக்கின்ற நன்மைகள் போதாது. இதற்கு அப்பாற்பட்டு ஒரு நன்மை இருக்கிறது, நமக்குத் தந்த இன்பங்கள் போதாது. நாம் இன்புறுகிறதற்கு இன்னொரு இன்பம் இருக்கிறது,” என்று யோசித்தான். அது உண்மைதான். இதுபோன்ற புலப்படுகின்ற எல்லா நன்மைகளுக்கும் ஒத்த மெய்யான நன்மை அல்லது புலப்படாத நன்மைகளை தேவன் வைத்திருக்கிறார். மனிதன் இந்த மெய்யான, புலப்படாத நன்மையைத் தேட வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். ஆனால், அவன் “இல்லை, இன்னும் புலப்படுகிற அந்த நன்மை எனக்கு வேண்டும்,” என்கிறான்.
அது பார்வைக்கு இன்பமானது. இது முதல் தவறு. இரண்டாவது, புலப்படுகிற இந்த நன்மைகளை அனுபவிப்பதற்கு உயிர் வேண்டும். உயிர் என்ற ஒன்று இருந்தால்தான் புலப்படுகிற இந்த நன்மைகளை அனுபவிக்க முடியும். எனவே, இந்த உயிரை நாம் எப்படியாவது தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தான். ஏனென்றால் மெய், வாய், கண், மூக்கு, செவி என்று எல்லாப் புலன்களாலும் பெற்று அனுபவிக்கிற புலப்படுகிற நன்மை என்ற ஒன்றை அவன் அறிந்து கொண்டான்.
ஒரு தமிழ் கவிஞர் இப்படிப் பாடியிருக்கிறார்: எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா! ஓ இறைவா! எங்கள் இறைவா! இவர் ஒன்றும் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற கவிஞர் அல்ல.
ஆதாமும் ஏறக்குறைய இதே கவிதையைப் பாடியிருப்பான் என்று நான் நினைக்கிறேன். ஆனால், கோடி இன்பம் யார்தான் அல்லது யாரிடம்தான் இருக்கிறதென்றால் அது ஆண்டவாரகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில்தான் இருக்கிறது. ஆகவே, இந்த உயிரைத் தக்கவைத்துக்கொள்ள மனிதன் என்ன வேண்டுமானாலும் செய்வான்.
உண்மையிலேயே இந்த உயிர்கூட என்னதான்? ஒரு நிழல்தான் இதற்கு ஒத்த ஒரு மெய்யான உயிரைத் தேவன் வைத்திருக்கிறார். அது நித்திய ஜீவன். இந்த நித்திய ஜீவனை மனிதன் பறிக்க முடியாது. யார் கொடுக்க முடியும்? தேவன்தான் கொடுக்க முடியும். இதனுடைய எல்லாவற்றின்மூலமாக ஆதாம் இவைகளைப் புரிந்துகொள்ளவேண்டுமென்றும், புரிந்துகொள்வதன்மூலமாக தான் அனுபவிக்கின்ற இன்பத்தின் அளவைப் பெருக்கிக்கொள்ள விரும்பினான். அதுதான் அறிவைத் தெளிவிக்கிறது என்று கூறினான். தேவனை நாம் அறிந்துகொள்ள வேண்டும் என்றும், புரிந்துகொள்ள வேண்டும் என்று ஒன்றை வைத்திருக்கிறார்.
எரேமியா 9:23, 24இல், “ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்;ட வேண்டாம்; பராக்கிரமன் தன் பாரக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்ட வேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்ட வேண்டாம்; மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்,” என்று நாம் வாசிக்கிறோம்.
தேவனுடைய திட்டம் என்னவென்று கேட்டால் தேவனை நாம் அறிந்துகொள்ள வேண்டும்; அவரை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான். தேவனை நாம் எப்படி அறிந்துகொள்ள முடியும்? புரிந்துகொள்ள முடியும்? அதற்கு அவர் தம்முடைய ஜீவனை நமக்குத் தருகின்றார். யோவான் 17:3இல் “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்,” என்று நாம் வாசிக்கின்றோம். தேவனை அறிந்துகொள்வதற்கு யாருடைய ஜீவன் வேண்டும்? தேவனுடைய ஜீவன் வேண்டும். இது தேவனுடைய திட்டம். தேவனுடைய ஜீவன் இருக்கும்போதுதான் கிறிஸ்துவுக்குள் உள்ள அளவற்ற செல்வங்களையும், வளங்களையும் இங்கு நாம் அனுவவிக்க முடியும்.
இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு நாம் பிராணவாயுவை அனுபவிப்பது. நிலத்தில் இருக்கும்போது நாம் பிராணவாயுவை அனுபவிக்கிறேம்; மீன்களும் இந்த பிராணவாயுவைத்தான் அனுபவிக்கின்றன, சுகமாக வாழ்கின்றன. ஆனால், எங்கே இருக்கிற பிராணவாயுவை? தண்ணீரில் இருக்கிற பிராணவாயுவை. மனித உயிரை வைத்து நாம் இந்த நிலத்தில் இருக்கிற பிராணவாயுவை அனுபவிக்கிறோம். மீன் உயிரை வைத்து அது தண்ணீரில் இருக்கிற பிராணவாயுவை அனுபவிக்கிறது. அது வேறொரு உயிர். அதுபோல தேவனுடைய உயிரை வைத்து, தேவனுடைய ஜீவனைக் கொண்டுதான் கிறிஸ்துவுக்குள் இருக்கிற அந்தப் பரம, அளவற்ற மகிமையையும், செல்வங்களையும், வளங்களையும் நாம் அனுபவிக்க முடியும், அதை நாம் காண முடியும், அதை நாம் அனுபவிக்க முடியும், அது நம்முடைய வாழ்க்கையின் ஒரு பங்காக மாறும், அதை நாம் காண்பிக்க முடியும். இது தேவனுடைய திட்டம்.
ஆனால், ஆதாம் எல்லாவற்றிற்கும் எதிர்மாறாகப் போகிறான். “இல்லை. நான் இந்த உலகத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த உயிரைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். இங்கு இருக்கிற இன்பங்களையெல்லாம் எப்படியாவது பெற வேண்டுமென்று,” என்று எதிர்த்திசையில் போகிறான்.
தேவனோ, “இது நன்மையல்ல, நான் என்னுடைய ஜீவனையே உனக்காக வைத்திருக்கிறேன்,” என்கிறார். தேவன் நமக்குள் அவருடைய ஜீவனைக் கொடுத்திருக்கிறார். அதன்மூலம் கிறிஸ்துவுக்குள் இருக்கிற அளவற்ற, மகிமையான செல்வங்களையும், வளங்களையும் நாம் பெற்று அனுபவிக்க முடியும். வழி என்னவென்று கேட்டால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் நாம் வைத்திருக்கிற விசுவாசம்தான். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிறார்: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்,”; என்று. நான் “சத்தியம்” என்று சொல்வதற்கு அர்த்தம் என்னவென்று கேட்டால்.
ஏமாந்து போய்விடாதீர்கள். எல்லா நிழலான நன்மைகளுடைய மெய் இந்த உலகத்தில் வேறு எங்கோ இருக்கிறதென்று ஏமாந்துபோய்விடாதே. ஆதாம் ஏமாந்துபோனான். இந்த அறிவுமரத்தைப் பிடித்தால் போதும்; வேறு ஏதோ ஒரு வழியில் இந்த நன்மைகளைப் பிடித்துக்கொள்ளலாம் என்பது மதியீனம். இரண்டாவது, அவர் சொல்லுகிறார்: அந்த நன்மைகளைப் பார்ப்பதற்குரிய “ஜீவன்” வேண்டும். அதுவும் நான்தான். கிறிஸ்துவில் இருக்கிற மகிமையின் செல்வங்களையும், வளங்களையும் பார்ப்பதற்கு ஜீவனும் யார்தான்? கிறிஸ்துதான். அதைக் காண்பதற்கு, பெறுவதற்கு, அனுபவிப்பதற்கு, உடைமையாக்கிக்கொள்வதற்கு, காண்பிப்பதற்கு உரிய வழியும் யார்தான்? ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துதான். நாம் விசுவாசித்திருக்கிற, தொடர்புக்கு வந்திருக்கிற, நாம் உறவு கொண் டிருக்கிற, நாம் பெற்றிருக்கிற கிறிஸ்து மகா அற்புதமானவர். நாம் இன்னும் அவரை அனுபவிக்க வேண்டிய அளவுக்கு அனுபவிக்கவில்லையென்று சொல்லவிரும்பவில்லை.
சாலொமோனுடைய மகிமையைப்பற்றிக் கேள்விப்பட்ட சேபா ராணி சொல்லும்போது, “நான் அவருடைய மகிமையைப்பற்றிக் கேள்விப்பட்டபொழுது நம்பவில்லை. இப்படிப்பட்ட மகிமையான ஒரு ராஜாவிற்கு இப்படிப்பட்ட மகிமையெல்லாம் இருக்க முடியுமாயென்று! ஆனால், வந்து பார்த்த பிறகுதான் தெரிகிறது. நான் இங்கு இருப்பதில் பாதியைக்கூட கேள்விப்பட்டவில்லையென்று!”
இப்பொழுது கிறிஸ்துவுக்குள் இவ்வளவு இருக்கிறது என்று கேள்விப்படும்போது நம்மால் நம்ப முடியாது. எனக்கு உடலில் வலி இருக்கிறது! எனக்கு வாழ்க்கையினுடைய தேவைகள் எவ்வளவோ இருக்கிறது! அதற்கெல்லாம் இந்தக் கிறிஸ்து போதுமானவரா என்று நம்பமுடியவில்லை. ஆனால், உண்மையிலேயே அதை அனுபவிக்கும்போது நாம் சொல்லுவோம்: இந்தக் கிறிஸ்துவுக்;குள் இருப்பதில் பாதியைக்கூட கேள்விப்படவில்லை, கால் பகுதியைக்கூட அல்ல, நூற்றில் ஒன்றைக் கூட நாம் கேள்விப்படவில்லையென்று. நம்முடைய வாழ்கையினுடைய நோக்கம் அதுதான்