Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

கிருபை–கிறிஸ்துவிலுள்ள அளவிடமுடியாத பரம ஐசுவரியங்கள்_1

Transcribed from a message spoken in January 2013 in Chennai

By *Milton Rajendram*

கிருபையின் வரையறை

புதிய ஏற்பாட்டில் “கிருபை” என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எல்லா நிருபங்களும் முடியும்போது ஏறக்குறைய “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களோடு இருப்பதாக” என்று முடிகிறது. “கிருபை” என்றால் தகுதி இல்லாத ஒருவனுக்குக் காட்டப்படுகின்ற தயவு, இரக்கம், அன்பு என்று நான் இரட்சிக்கப்பட்ட ஆரம்பத்தில் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒருவனுக்குத் தகுதி இல்லை. ஆனால், தகுதி இல்லாத அவனுக்குக் காண்பிக்கப்படுகிற அன்பிற்குப் பெயர் கிருபை என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். பிறகு கொஞ்சக்காலம் கழித்து, கிறிஸ்துவுக்குள் வளர்ந்துவந்தபோது, “கிறிஸ்துவில் தேவனை அனுபவித்து மகிழ்வதே கிருபை” என்று கேள்விப்பட்டேன். “கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின்மூலமாய் உண்டாயின” (யோவான் 1:17). ஆனால் தேவன் கடந்த காலங்களில், மாதங்களில், வருடங்களில் எனக்குக் கற்பித்த, என்னை ஆற்றின, என்னைத் தேற்றின, என்னை ஊக்குவித்த, என்னைத் திடப்படுத்தின ஒரு காரியம் என்னவென்றால் கிருபை என்பது கிறிஸ்துவிலுள்ள அளவிடமுடியாத பரம ஐசுவரியங்களே என்று புரிந்துகொண்டேன். தேவன் கிறிஸ்துவுக்குள் பரம வளங்களை, பரம ஐசுவரியங்களை, பரம செல்வங்களை வைத்திருக்கிறார். அளவிடமுடியாத, ஆராயமுடியாத, தீர்ந்துபோகாத பரம வளங்களை தேவன் அவருடைய குமாரனாகிய கிறிஸ்துவுக்குள் வைத்திருக்கிறார் அல்லது இந்த அளவிடமுடியாத, ஆராயமுடியாத, தீர்ந்துபோகாத பரம வளங்களெல்லாம் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவுக்குள் ஊனுருக்கொண்டிருக்கின்றன. இதைத்தான் புதிய ஏற்பாடு “கிருபை” என்றழைக்கிறது என்று நான் விசுவாசிக்கின்றேன்.

வேதத்தில் நாம் பல ஆராய்ச்சிகள் செய்யலாம். நம்முடைய வாழ்நாள் குறுகினது. தேவனுடைய மக்கள் பணத்தை எப்படிக் கையாளவேண்டும் என்று சிலர் ஆராய்ச்சிசெய்து புத்தகம் எழுதலாம். தேவனுடைய மக்கள் பலவீனத்திலும், சுகவீனத்திலும், நோயிலும் எப்படி சுகத்தையும், பலத்தையும் பெற்றுக்கொள்வது என்று ஒருவர் ஆராய்ச்சிசெய்து புத்தகம் எழுதலாம். வேதத்திலிருந்து பல கருத்துக்களையும், பல தலைப்புகளையும் எடுத்துக்கொண்டு நாம் ஆராய்ச்சிசெய்யலாம். ஆனால், அதைக்குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தலைப்புகளின் எண்ணிக்கைக்கு அளவில்லை. தேவனுடைய நித்திய திட்டத்திற்கும், குறிக்கோளுக்கும் ஒத்த தேவனுடைய இன்றியமையாத எண்ணத்தைப்பற்றி மட்டுமே நாம் நம்முடைய நேரத்தையும், எண்ணத்தையும், உழைப்பையும் செலவிட வேண்டுமேதவிர பிற காரியங்களுக்கு அல்ல. தேவனுடைய மக்கள் பணத்தை எப்படிக் கையாளவேண்டும் என்று வேதம் சொல்கிறது. சம்பாதிப்பதையெல்லாம் செலவழிக்கக்கூடாது என்றும், நம்முடைய வருவாய்க்குள் நாம் வாழ வேண்டும் என்று வேதாகமம் சொல்லுகிறது. இப்படி எளிமையான கருத்துக்கள் போதும். அதை அடிப்படையாகக்கொண்டு ஒரு பெரிய ஊழியத்தை உண்டாக்க வேண்டிய அவசியம் இல்லை.

சுகவீனத்தில் என்ன செய்ய வேண்டும்? அவர் கிருபை நமக்குப் போதும். பலவீனத்திலே அவருடைய பலம் பூரணமாய் விளங்கும். ஆனால், இந்தக் கிருபை என்கிற வார்த்தை வேதாகமத்தில் இருக்கிற பல தலைப்புகளில் ஒன்றல்ல. கிருபை என்பது தேவனுடைய குமாரனில் ஊனுருக்கொண்டுள்ள அளவிடமுடியாத பரம ஐசுவரியங்கள். எனவே, இது என்னுடைய வாழ்க்கையில் நான் வேதத்தை புரிந்துகொள்ள விரும்புகிற பல தலைப்புகளில் ஒரு சிறிய தலைப்பல்ல. இது மையமான ஒரு காரியம்.

கிருபை என்றால் என்ன? சகோதர சகோதரிகள் இதைப்பற்றி சிந்திக்க கொஞ்ச நேரம் செலவழிக்க வேண்டும் என்று நான் உங்களை வேண்டிக்கொள்கிறேன். ஏனென்றால், இது தேவனுடைய முக்கியமான எண்ணம் இல்லையா? கிருபை. கிருபையினால் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்று வேதம் சொல்கிறது. நான் பொதுவாக வேதாகமத்தை இப்படி ஆராய்ந்து பார்ப்பதில்லை. இப்பொழுது வேதத்தை ஆராய்ந்துபார்ப்பது மிகவும் எளிது. ஒரு Bible Softwareயை கணினியில் வைத்துக்கொண்டு ஒரு வார்த்தையைத் தட்டச்சு செய்தால் போதும். எல்லா வார்த்தைகளும் வந்துவிடும். முந்தைய நாட்களில் செய்ததுபோல் strong concordanceயைப் பயன்படுத்தி ஆராய்ச்சிசெய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்தப் புத்தகத்தைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்தப் புத்தகத்தை அவர் தயாரித்தபோது அவருக்குப் புத்தி கொஞ்சம் பேதலித்துவிட்டதாகச் சொல்லுகிறார்கள். ஆனாலும், புத்தி தெளிந்து அவர் மீண்டும் இந்த வேலையைத் தொடர்ந்து செய்து முடித்தார். வேதத்தில் எந்த வார்த்தையை எடுத்துக்கொண்டாலும் அதன் எல்லா referenceம் இங்கு கிடைக்கும்.

ஒரு வார்த்தை பல பொருள்

சில சமயங்களில் ஒரு வார்த்தைக்கு ஒரேவொரு அர்த்தம்தான் இருக்கும் என்று சொல்ல முடியாது. நித்திய ஜீவன் என்பது நாம் எதிர்காலத்தில் பெறப்போகிற ஒன்று என்ற நம்பிக்கையா அல்லது இன்றைக்கு நாம் பெற்றிருக்கிற உடைமை என்கிற உண்மையா? இதில் இரண்டு அம்சங்களும் உள்ளன. ஆனால், பொதுவாக இது எதிர்காலத்தில் நாம் பெறப்போகிற ஒன்று என்ற நம்பிக்கைதான் தேவனுடைய பிள்ளைகளுக்கு உண்டேதவிர, இது இன்றைக்கு நாம் பெற்றிருக்கிற சுதந்தரம், உடைமை, என்ற ஒரு வெளிச்சம் அவர்களுக்கு இல்லை. அதனால் அவர்கள் மிகவும் நட்டப்படுகிறார்கள். நாம் என்றைக்கு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறோமோ அன்றைக்கு தேவனுடைய ஜீவனில் நாம் பங்கடைகிறோம் என்பதுதான் தேவனுடைய எண்ணம். ஜீவனில் நாம் கிறிஸ்துவோடு இணைக்கப்படுவது தேவனுடைய திட்டத்தின் மையக்கருத்து. ஆனால், அதில் இன்னொரு அம்சமும் உண்டு. நித்திய ஜீவனில் நுழைவது என்ற இன்னொரு அம்சமும் இருக்கிறது.

கிருபை-இரக்கம், அன்பு, தயவைவிட அதிகம்

அதுபோல, நான் கிருபைக்கு இப்படியொரு விளக்கம் கொடுத்தாலும் வேறு சில அர்த்தங்களும் அதற்கு இருக்கும். நான் கிருபைக்கு இப்படி அர்த்தம் கொடுப்பதற்கான காரணத்தைச் சொல்லுகிறேன். யோவான் ஒன்றாம் அதிகாரத்தில் யோவான் இப்படிச் சொல்கிறார். “அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம் “ (யோவான் 1:16). கிருபையின்மேல் கிருபை குவிக்கப்பட்டது. அவருடைய பரிபூரணத்தினாலே, அவருடைய நிறைவிலிருந்து, நாம் கிருபையின்மேல் கிருபை பெற்றோம். கிருபையின்மேல் கிருபை பெற்றோம். நான் சொன்ன விளக்கம் இதற்கு அப்படியே பொருந்தும். கிருபை என்பது கிறிஸ்துவிலுள்ள அளந்துமுடியாத பரம வளங்கள் என்பது அப்படியே பொருந்தும். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஊனுருக்கொண்டு, ஒரு மனித வாழ்க்கை வாழ்ந்து, சிலுவை உயிர்த்தெழுதலின்வழியாகச் சென்று தம்முடைய இரட்சிப்பின் பணியை முடிக்கிறவரைக்கும் இந்தக் கிருபை மனிதர்களுக்கு இல்லை. தேவனிடத்தில் ஆராய்ந்துமுடியாத பரம வளங்கள் உண்டு. ஆனால், அது மனிதர்களுக்கு இல்லை. அது மனிதனுக்கு ஒரேவொரு நபர்மூலமாக, அந்த நபருடைய ஒரேவொரு வேலையின் மூலமாகத்தான் வர முடியும். அந்த நபர் கிறிஸ்து, அந்த வேலை சிலுவை. நீங்கள் நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நான் பெரிய ஞானியாகிவிட்டதாக எண்ணவில்லை. ஆனால், தேவனுடைய மக்கள் எல்லாரும் இதைக்குறித்து சிந்தித்துப் பார்த்தால் ஒருவேளை நாம் புரிந்துகொள்வோம்.

இன்னொரு வசனம், நமக்கு நன்றாகத் தெரிந்த வசனம். அது 2 கொரிந்தியர் 12ஆம் அதிகாரம் 8, 9, 10இல் நாம் வாசிக்கிறோம்: “இந்த முள் என்னைவிட்டு நீங்கும்படி நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன். அதற்கு அவர்: என் கிருபை உனக்குப் போதும், பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால் கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனத்தைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்.” சந்தோஷப்பட்டு களிகூருகிறேன். நாம் யோசித்துப்பார்க்க வேண்டும். சந்தோஷத்தை நாம் உருவாக்க முடியாது. அதாவது ஒருவனைப் பிடித்து வைத்துக்கொண்டு “நீ சந்தோஷப்பட்டு களிகூர வேண்டும்” என்றால் அவனிடமிருந்து “எப்படி சகோதரனே களிகூருவது?” என்ற பதில்தான் வரும். “என் கிருபை உனக்குப் போதும்” என்று சொன்னவுடனே பவுல் சொல்லுகிறார். “நான் சந்தோஷப்பட்டு களிகூருகிறேன். நான் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுகிறேன்,” என்று அவர் இயல்பாகக் கூறுகிறார்.

இப்பொழுது நான் மிகவும் வறுமையில் இருக்கிறேன். ஒருவர் வந்து ஒரு கோடி ரூபாயை என் கண்முன்னே வைத்து, “சகோதரனே, நீ இதை எடுத்துக்கொள். எப்பொழுது நீ இதை சம்பாதிக்கிறாயோ அப்பொழுது திரும்பக் கொடுத்தால் போதும். எந்தக் காலவரையறையும் இல்லை,” என்று சொல்லுகிறார் என்று வைத்துக்கொள்வோம். நான் வந்து வெறுமனே “நன்றி” சொல்வேனா அல்லது துள்ளிக்குதித்து கொண்டாடுவேனா? குதூகலிப்பேனா? என்ன செய்வேன்? வெறும் நன்றியோடு நிறுத்திக்கொள்வேனா? இப்பொழுது கோடி ரூபாயை நான் பெற்றுக்கொண்டுவிட்டேன் என்றால், “சகோதரனே, இப்பொழுது நீ என்ன செய்ய வேண்டும்? சந்தோஷமாய் இருக்க வேண்டும்,” என்று சொல்லி யாராவது என்னைச் சந்தோஷப்படுத்த வேண்டுமா அல்லது நான் இயல்பாகவே சந்தோஷப்பட்டுத் துள்ளிக்குதிப்பேனா?

“உன் பலவீனத்திலே என் கிருபை உனக்குப் போதும்,” என்பதை பவுல் கேட்டவுடனே “நான் எவ்வளவு மகிழ்ச்சியானேன்!” என்று கூறினாரா அல்லது “உண்மையாக நான் தேவனிடம் கேட்டது ஒன்று. ஆனால், அவர் எனக்கு என்னதான் கொடுத்தார்? வெறும் கிருபையைத்தான் கொடுத்தார். நான் கேட்டது சுகம். ஆனால், அவர் எனக்கு வெறும் கிருபையைத்தான் தந்தார்,” என்று சொன்னாரா? “நான் கேட்டது சுகம். ஆனால், தேவன் நீ கேட்பதுபோல் என்னால் இப்போதைக்கு முள்ளையெல்லாம் எடுக்க முடியாது. ஆனாலும், நீ விடாது மூன்றுமுறை கேட்டதினால் நான் இப்பொழுது உனக்கு என்ன தருகிறேன்? கிருபைதான்,” என்று கூறினாரா? நாம் சில சமயங்களில் சொல்வது போல், “இதற்குமேல் நாம் என்னதான் செய்ய முடியும்? ஜெபிக்கத்தான் முடியும்,” என்பதுபோல தேவனும், “இப்போதைக்கு உனக்குக் கிருபையைத்தான் கொடுக்கமுடியும்” என்று கூறினாரா?

“சொன்னது தேவனாயிற்றே. அதனால், இப்பொழுது என்னதான் செய்ய வேண்டியிருக்கிறது? ஸ்தோத்திரம் பண்ணித்தான் ஆகவேண்டும்!” என்று நிர்ப்பந்தத்தின்பேரில், வலுக்கட்டாயமாக, அவர் களிகூர்ந்தாரா? இல்லை. மாறாக, அவர் இயல்பாகவே களிகூர்ந்தார். இப்பொழுது நான் என்ன நினைக்கிறேன் என்றால் இயல்பாகவே களிகூருகிற அளவிற்கு அந்தக் கிருபை என்பது நாம் நினைப்பதுபோல தகுதி இல்லாதவனுக்குக் காட்டப்படுகிற அன்பு அல்லது இரக்கம் அல்லது தயவு அல்ல. அது அதைவிட மிக அதிகமானது. அது கிறிஸ்துவில் தேவனை அனுபவித்து மகிழ்வது என்பதல்ல. “அந்த முள்ளை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டேன். ஆனால், அவர் நான் கேட்டதைவிட அதிகமாகக் கொடுத்துவிட்டார். மூன்று வேளையென்ன! நீ சாகும்வரை நான் உனக்கு உணவுக்கு ஏற்பாடு செய்துவிட்டேன் என்கிறார்.” நன்றாகக் கவனிக்க வேண்டும். நான் உங்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்காக நான் இதை உங்களுக்குச் சொல்லவில்லை. பவுல் இயல்பாக மகிழ்ச்சி அடைந்தாரா? இதுதான் என்னுடைய கேள்வி. இயல்பாக மகிழ்ச்சி அடைய வேண்டும். தானாகவே மகிழ்ச்சி அடைந்தாரா?

வாழ்வின் சூழ்நிலைகள்-வசனங்கள்

நம் எல்லாருடைய வாழ்க்கையிலும் பல முக்கியமான வசனங்கள் இருக்கும். ஒவ்வொரு கால கட்டத்திற்கும் தேவன் வசனங்களைத் தந்திருப்பார். ஒரு சூழ்நிலை வழியாகப் போகும்போது, “அவர் மரித்தோரை உயிரோடெழுப்புகிற தேவன்” என்பதைப் பார்த்திருப்போம். இன்னொரு சூழ்நிலை வழியாகப் போகும்போது, “நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை நான் உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்மேல் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். அவைகள் தீமைக்கு அல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே” (எரே. 29:11) என்று சொல்லுவார். இப்படிப் பல வசனங்கள் நம் வாழ்க்கையில் இருக்கும். அதுபோல் என் வாழ்க்கையில் மிக முக்கியமான வசனங்கள் உண்டு. அதில் ஒன்று. “அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைப் பார்க்கிலும் அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர்” (சங். 4:7). இது என்னுடைய வசனம். சில வசனங்கள் நம்முடைய வசனங்களாக வேண்டும். இதை தாவீது எழுதினார். நானும் இதை எழுதி இருப்பேன். இதை தாவீது எழுதியிராவிட்டால் நான் எழுதியிருப்பேன். இது பெருமை அல்ல.

கிறிஸ்துவிலுள்ள ஆராயமுடியாத ஐசுவரியங்களே சுவிசேஷம்

யோவான் 1:17; 2 கொரிந்தியர் 12:9இன்படி கிருபை என்பது தேவனில் இருக்கும் ஆராய்ந்துமுடியாத ஐசுவரியங்கள். எபேசியர் 3:8இல் ‘கிறிஸ்துவின் அளவற்ற ஐசுவரியம்’ என்று சொல்லப்பட்டுள்ளது. அளவற்ற, ஆராயமுடியாத, தீர்ந்துபோகாத ஐசுவரியம். சுவிசேஷம் என்றாலே கிறிஸ்துவிலுள்ள ஆராய்ந்துமுடியாத, அளவிடமுடியாத, தீர்ந்துபோகாத ஐசுவரியங்கள். இவைகளைப் புறவினத்தாருக்கு கொடுப்பதுதான் சுவிசேஷம். ‘கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய கிருபை உன்னோடு இருப்பதாக’. ‘கிருபை உன் ஆவியோடு இருப்பதாக’. ‘கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியின் ஐக்கியமும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக’. இப்படியாக கிருபை எப்பொழுதும் இயேசுகிறிஸ்துவுடன்தான் தொடர்புபடுத்தப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் தேவனிடத்தில் கிருபை இல்லையா? அப்படியல்ல. தேவன் கிருபை உள்ளவர்தான். அளவில்லாத, ஆராய்ந்துமுடியாத, தீர்ந்துபோகாத ஐசுவரியங்கள், வளங்கள், செல்வங்கள் எல்லாம் தேவனிடத்தில்தான் இருக்கின்றன. ஆனால், அவருடைய குமாரன் ஊனுருக்கொள்ளாதவரை, அந்த நபருடைய வேலை முடியாதவரை, அது மனிதனுக்குக் கிடையாது.

தேவன் அவருடைய ஜீவனை நமக்குத் தந்திருக்கிறார். ஆமென் (1 யோவான் 5:1). ஆனால், அந்த ஜீவன் எப்பொழுதுமே யாருக்குள்தான் இருக்கும்? அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்குள்தான் இருக்கும். அவருடைய குமாரனுக்கு வெளியே ஜீவன் இல்லை. நாம் முதலாவது அவருடைய குமாரனை விசுவாசித்து ஜீவனைப் பெற்றுக்கொண்டோம். அத்தோடு காரியம் முடிந்துவிட்டதா? அந்த ஜீவனைப் பெற்றபிறகு அது நமக்குத் தேவையில்லையா? அப்படியல்ல. பிறகு அவருடைய குமாரனுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லையா? அப்படியல்ல ஒவ்வொரு நாளும் அவருடைய குமாரனை விசுவாசித்துத்தான் நாம் இந்த ஜீவனில் வாழ்கின்றோம். ஜீவன் என்பது ஒரு சூத்திரம் அல்ல. ஜீவன் என்பது ஒரு உயிருள்ள நபருடன் நமக்கு இருக்கிற உறவு. அந்த உறவின் தரம், அந்த உறவின் தன்மை, இன்றைக்கு எப்படி இருக்கிறதோ அந்த அளவுக்கு நாம் அந்த ஜீவனை அனுபவிக்கின்றோம். ஜீவனில் வாழ்கிறோம்.

தேவனுடைய நித்திய நோக்கம் தேவனுடைய மகிமை

தேவன் நம் வாழ்க்கையில் சூழ்நிலைகளையெல்லாம் அவருடைய நித்தியக் குறிக்கோள் நிறைவேற வேண்டும் என்பதற்காகவே அமைக்கின்றார். அவருடைய நித்தியக் குறிக்கோளில் நமக்கு ஒரு பங்கு இருக்கிறது. “நான் இல்லாவிட்டால் அவருடைய நித்திய குறிக்கோள் நிறைவேறாதா?” என்பது தவறான மனப்பாங்கு. தயவுசெய்து மிகவும் தாழ்மையாகிவிட வேண்டும். அந்த அளவுக்கு நாம் தாழ்மையுள்ளவர்கள் அல்ல. அவருடைய நித்தியக் குறிக்கோளிலே நம் ஒவ்வொருவருக்கும் ஒரு தீர்க்கமான பங்கு இருக்கிறது. “அந்தப் பங்கை நான் நிறைவேற்றாவிட்டால் ஒன்றும் கெட்டுப்போய்விடாது,” என்று நினைப்பது தவறு. அந்தப் பங்கை அந்த நபர்தான் நிறைவேற்றமுடியும். அந்தப் பங்கை அந்த நபர் மட்டும்தான் செய்ய முடியும். வேறு எந்த மனிதனும் அதைச் செய்ய முடியாது. இது நம்முடைய இருதயத்தின் ஆழத்தில் மிகவும் திட்டவட்டமாக எழுதப்பட வேண்டும்.

வாழ்க்கைச் சூழ்நிலைகள்

தேவன் தம் நித்திய தீர்மானத்தின்படி நம் வாழ்க்கைச் சூழ்நிலைகளை அமைக்கின்றார். யோவான் 9 மற்றும் 11ஆம் அதிகாரங்களில் நாம் இப்படி வாசிக்கின்றோம். “இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம்? இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ?” என்பதற்குக் கர்த்தருடைய பதில் என்னவென்று நமக்குத் தெரியும். “அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல. தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தான்.” யோவான் பதினொன்றில், “லாசருவினுடைய வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாக இருக்கிறது. தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார்,” என்று இயேசு கூறினார். யோவான் ஒன்பதில் மட்டுமல்ல, எல்லா மனிதர்களுக்கும், இந்த பிரபஞ்சத்தின் எல்லா சிருஷ்டிப்பிற்குப் பின்பும் ஒரேவொரு குறிக்கோள்தான் இருக்கிறது. அது தேவனுடைய மகிமை. தேவனுடைய மகிமையென்றால் என்ன? கிறிஸ்துவில் அனுபவித்து மகிழும் தேவனே கிருபை…கிறிஸ்துவில் வெளியரங்கமாகும் தேவனே மகிமை. இது நான் கற்றறிந்த ஒன்று. நாம் கற்றுக்கொண்ட எல்லாவற்றையும் விட்டுவிடத் தேவையில்லை. நலமானவைகளைப் பிடித்துக்கொள்கிறோம். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. குழந்தையைக் குளிக்க வைத்தபின் தண்ணீரோடு சேர்த்து குழந்தையையும் தூக்கியெறிந்துவிடாதே. இறைச்சியை எடுத்து விட்டு எலும்பை வீசிவிடு.

தேவனுடைய மகிமையென்பது அவருடைய குமாரனில் மறைந்திருக்கிற அளவிடமுடியாத பரம வளங்கள், பரம செல்வங்கள். ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் அவன் அனுபவிப்பதற்காக வெளியாகும்போது அல்லது அவன் அனுபவித்து வெளியரங்கமாகும்போது அது தேவனுடைய மகிமை. இயேசுகிறிஸ்து ஜீவனும் உயிர்த்தெழுதலுமாக இருக்கிறார். யோவான் 11இல் மட்டும் அல்ல. யோவான் 10, 9, 1. அதற்குமுன்பும் அவர் ஜீவனும், உயிர்த்தெழுதலுமாகத்தான் இருக்கிறார். அவர் பார்த்துக்கொண்டேயிருக்கிறார். அவர் உயிர்த்தெழுதலும் ஜீவனுமாக இருக்கிறார். ஆனால், இதை வெளிப்படுத்துவதற்கு, இதை வெளியரங்கமாக்குவதற்கு, இதை நிரூபிப்பதற்கு அவருக்கு ஒரு சூழ்நிலை வேண்டும், ஒரு நபர் வேண்டும், ஒரு குடும்பம் வேண்டும், ஒரு சம்பவம் வேண்டும், ஒரு தேவை வேண்டும், ஒரு நெருக்கம் வேண்டும். நம்முடைய பார்வையில் அது நெருக்கம். ஆனால் தேவனுடைய பார்வையில் அப்படியல்ல.

இஸ்ரவேல் மக்களுடைய பார்வையில் அவர்களுக்கு முன்னால் செங்கடல் இருக்கிறது. அவர்களுக் குப் பின்னால் பார்வோனுடைய சேனை இருக்கிறது. இது நெருக்கத்தினுடைய இலக்கணம். முன்னாலும் போக முடியாது, பின்னாலும் போக முடியாது. முன்னால் போனால் கடலில் விழுந்து சாக நேரிடும். பின்னால் போனால் பார்வோனின் சேனையின் கையில் அகப்பட்டு சாக நேரிடும். இது நெருக்கம். இது நம்முடைய பார்வை. ஆனால், தேவனுடைய பார்வையில் அது நெருக்கம் அல்ல. நம்முடைய பார்வையில் அது நெருக்கம் மட்டுமல்ல. முடிவே வந்துவிட்டது என்று கணித்து விடுவோம். அவ்வளவுதான். இதற்குமேல் இனி ஒன்றுமில்லை. போவதற்கோ அல்லது செய்வதற்கோ ஒன்றுமில்லை என்று தீர்மானித்துவிடுவோம். “உன் காரியங்களையெல்லாம் ஒழுங்கு செய்” என்று பேய் காதில் ஓதுவான்.

நான் தேவனிடத்தில் இப்படி ஜெபித்திருக்கின்றேன். “நான் குழியில் இறங்குவதினால் உமக்கு என்ன இலாபம்? புளுதி உம்மைத் துதித்து பாதாளம் உம்மைப் போற்றுமோ?” இது தாவீதினுடைய ஜெபம். என்ன புத்திசாலித்தனமாக ஜெபிக்கிறார் என்று பாருங்கள். “நான் குழியில் இறங்குவதினால் உமக்கு என்ன இலாபம் இருக்கிறது. குறைந்தபட்சம் நான் உயிரோடிருந்தால் சாகாமல் பிழைத்திருந்து உம்முடைய கிரியைகளைச் சொல்வேன். உம்மிடத்தில் வருவதற்குமுன்பு நான் ஒருவனையாவது இரட்சிப்புக்குள் கொண்டுவருவேனா இல்லையா?” அப்படி ஒரு பயன் இருக்கின்றவரை நாம் இந்தப் பூமியில் உயிரோடு இருக்கிறது மிகவும் அவசியம். பிசாசு வந்து காதில் ஓதுவான். “தேவன் உன் மீது அன்பு வைத்திருக்கிறாரா? அன்பு வைத்திருந்தால் இந்த சுகவீனம் உனக்கு வருவானேன்? அது இவ்வளவு நாள் இழுப்பானேன்!” என்றெல்லாம் பேசுவான். ஆதியாகமம் மூன்றாம் அதிகாரத்தில் எந்தப் பேய் ஏவாளிடத்தில் பேசினானோ அதே பேய்தான் இப்படிப் பேசுவான் என்பதை என்னால் இனங்காண முடிகிறது. நாம் அவனோடு அமர்ந்து பேசி அவனுடன் உறவை வளர்த்துக் கொள்ளக் கூடாது.

தேவனுடைய மகிமைக்கென்று அழைக்கப்பட்டவர்கள்

நாம் தேவனுடைய மகிமைக்கென்று அழைக்கப்பட்டவர்கள். இந்த வசனத்தை நீங்கள் தயவு செய்து நினைவில் கொள்ளுங்கள். எரேமியா 29:11, 12: ஒரு நம்பிக்கையும், எதிர்காலமும் உண்டு. தேவன் நம்பேரில் நினைத்திருக்கிற நினைவுகள் தீமைக்கல்ல. அவை சமாதானத்திற்கேற்ற நினைவுகளே. ஆனால், அந்த உயிர்த்தெழுதலுக்கும் இன்றைக்கு இருக்கிற நம்முடைய சூழ்நிலைக்கும் இடையில் ஒரு பெரிய இடைவெளி, எழுபது வருடங்கள், இருக்கலாம். அந்த இடைவெளிக்குப் பெயர் மரணம் அல்லது சிலுவை. தேவன் திடீரென்று பரலோகத்தில் இருந்து மகிமையை இறக்கிவிடுவதில்லை ஆயிரம் வாட்ஸ் விளக்கைப்போல. மகிமை எப்படி வரும்? ஆவியில் நிறைந்து அந்நிய பாiஷயில் ஜெபித்து “அல்லேலூயா! மகிமை!” என்றவுடனே மகிமை வந்துவிடுமா? நான் கிண்டல் செய்வதாக நீங்கள் நினைக்க வேண்டாம். நான் என்னுடைய அனுபவத்திலிருந்து கூறுகின்றேன். நான் இப்படிச் சத்தம் போட்டிருக்கின்றேன். காரணம் என்னை நடத்தினவர் இப்படி சத்தம் போட்டார். அதனால் நானும் இப்படிச் சத்தம் போட்டேன். அது தேவனுடைய வழி அல்ல. எப்போது மகிமையின் தேவன் இறங்குவார்? பிலிப்பியர் 4:19இல் நாம் இப்படி வாசிக்கின்றோம். அவர் தம்மடைய மகிமையின் ஐசுவரியங்களினால், செல்வங்களினால், வளங்களினால் உங்கள் குறைவுகளையெல்லாம் நிறைவாக்குவார். கர்த்தர் ஒரு சரியான வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார். அவர் பார்க்கிறார். லாசருவின் குடும்பத்தைத் தெரிந்துகொண்டார். ஏனென்றால் இந்தக் குடும்பம் இப்படிப்பட்ட நிலைமையைத் தாங்கும். யோவான் ஆறாம் அதிகாரத்தில் கர்த்தர் தம்மை எந்த அளவுக்கு வெளிப்படுத்த முடிந்தது என்றால் “நான் வானிலிருந்து இறங்கி வந்த அப்பம், ஜீவ அப்பம் நானே” என்று வெளிப்படுத்த முடிந்தது. யோவான் ஒன்பதாம் அதிகாரத்திலே, “நான் இந்த உலகத்திற்கு ஒளியாக இருக்கிறேன்.” அவ்வளவுதான் வெளிப்படுத்த முடிந்தது. அந்தச் சூழ்நிலையைப் பார்க்கிறார். “நான் ஜீவ அப்பம் என்பதை வெளியாக்குவதற்கு இது நல்ல சூழ்நிலை.

“ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமும்” (ரோமர் 8:6). ஆவியின்படி எண்ணுவது ஜீவனும் சமாதானமுமாகும். நாம் இரண்டு விதமாக யோசிக்கலாம்: “உன் ஆவியைப் பயன்படுத்து, உன் மனதைப் பயன்படுத்தாதே,” என்று நான் போதிக்கப்பட்டிருக்கிறேன். மனதைப் படைத்ததால் தேவன் ஏதோ தவறு செய்துவிட்டார் என்பதுபோல் மனதைப் பயன்படுத்தக்கூடாது என்று சொன்னார்கள். மனதைப் பயன்படுத்தக்கூடாதென்றால் தேவன் என்ன செய்திருக்க வேண்டும்? மனிதனுக்கு மனதையே கொடுத்திருக்கக் கூடாது. தேவன் மனதைக் கொடுத்திருக்கிறார். நாம் இப்பொழுது எப்படிப் பயன்படுத்த வேண்டும்? புதிதாக்கப்பட்ட மனம், ஆவிக்கேற்ற மனம். அது தேவனுடைய கைகளிலே மிகவும் வல்லமையான ஆயுதம். நாம் ஆவிக்குரிய மனதையுடையவர்களாகவும் இருக்கலாம். மாம்சத்திற்குரிய மனதையுடையவர்களாகவும் இருக்கலாம். “நாம் என்ன செய்யலாம்?” என்று தேவன் அந்திரேயாவிடம் கேட்கிறார். அதற்கு அவர் மாம்சப்பிரகாரமாக யோசித்துச் சொல்கிறார். “நம்மிடத் தில் ஒன்றுமில்லை, இத்தனை பணத்திற்கு வாங்கினாலும், ஒவ்வொருவருக்கும் கொஞ்சம் கொஞ்சமாய்க் கொடுத்தாலும் எல்லோரும் சாப்பிட முடியாதே.” அது அவனுடைய எண்ணம். அவனுக்கு இன்னும் என்ன தெரியவில்லையென்றால் நாம் கண்ணெதிரே பார்த்துக் கொண்டிருக்கிற இந்த நபர் வானிலிருந்து இறங்கி வந்த அப்பம். இந்த நபர் பார்வைக்கு சாதாரண மனிதனைப்போல், மாம்சத்திலும், இரத்தத்திலும் இருக்கிற மனிதனாகத் தென்படுகிறார். ஆனால், இவர் அப்படிப்பட்ட மனிதன் அல்ல. இந்த மனிதன் யார்? இவர் ஜீவ அப்பம். நான் பின்பற்றுகிற என் ஆண்டவர், என்னுடைய எஜமான், தோற்றத்தில் இவர் மனிதர். ஆனால், இவர் தேவன். தேவனுடைய அளவற்ற ஐசுவரியங்களெல்லாம் இவருக்குள் சரீரப்பிரகாரமாக வாசமாயிருக்கின்றன. (கொலோசெயர் 2:9, 10). இவர் தேவத்துவத்தின் பரிபூரணம் என்ற சிந்தனை அந்திரேயாவுக்கு இன்னும் எழவில்லை. எனவே “யோசிக்கக்கூடாது” என்று சொல்லும்போது “அந்திரேயாவைப்போல் யோசிக்கக்கூடாது” என்று பொருள். “யோசிக்கவேண்டும்” என்று சொல்லும்போது எப்படி யோசிக்க வேண்டும்? “இயேசு கிறிஸ்துவைப்போல்” யோசிக்க வேண்டும் என்று பொருள்.

பேதுரு அப்படி ஆவிக்கேற்றபடி யோசிக்கின்றார். ஒருநாள் இயேசுகிறிஸ்து, “மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள்,”என்றார்கள். அப்பொழுது அவர் “நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டார். புத்தகத்தில் படித்தது, மற்றவர்கள் சொன்னது, ஆடியோவில் கேட்டது, வீடியோவில் பார்த்தது, கூட்டங்களில் பேசியது.. எல்லாம் இருக்கட்டும். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? உன்னுடைய வாழ்க்கை அனுபவத்தில் நான் யார்? பேதுரு அவருடைய வாழ்க்கை அனுபவத்திலிருந்து சொல்லுகிறார். “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து.” அது ஒன்றுதான் பாறை. ஆடியோவில் கேட்டது, வீடியோவில் பார்த்தது, கேட்ட செய்தி, படித்த புத்தகம் இவையெல்லாம் பாறையல்ல. இவைகளெல்லாம் வாழ்க்கையின் புயல்களுக்கு முன்பாக தவிடுபொடியாகி விடும். “ஆ! சரியாகத் சிந்தித்தாய். இது மாம்சத்திலும் இரத்தத்திலும் நீ சிந்தித்தல்ல. இது பரலோகத்தில் இருக்கிற என்னுடைய பிதாவே உனக்கு வெளிப்படுத்தினதை நீ சிந்தித்தாய்.” வெளிப்படுத்தியதுகூட நேரே மின்னல்போல மனதில் வந்துவிடுவது கிடையாது அல்லது இன்றைக்கு Tabletறில் கையை வைத்து எழுதியவுடனே அது letter formatக்கு வந்துவிடுவதுபோல வந்துவிடாது. தேவன் நேராக வந்து மனதில் எழுதிவிடுவது கிடையாது. ஒரு வெளிச்சத்தைக் கொடுக்கிறார். சிந்தித்துப் பார்க்கிறோம். சிந்தித்துப் பார்க்கும்போது, “ஆ! என் கண்முன் நிற்கின்ற என் எஜமான், எல்லாவற்றையும் விட்டு நான் பின்பற்றுகிற இயேசு கிறிஸ்து, இவர் தேவனுடைய குமாரன்.” கர்த்தர் ஒரு சூழ்நிலைக்காகக் காத்திருக்கிறார். எல்லாருடைய சூழ்நிலைகளிலும் கை கழுவி விட்டுவிட்டு, “எப்படியோ பிழைத்துக்கொள்ளுங்கள்,” என்று தேவன் விட்டுவிடுவதில்லை. தேவன் மிக அற்புதமாக, நேர்த்தியாக நம்முடைய சூழ்நிலைகளை அமைக்கிறார். தேவன் நேரத்தைக் குறிக்கிறார். சரியான நேரத்துக்காக காத்திருக்கிறார். தம்முடைய பரம ஐசுவரியங்கள் சரியாக வெளிப்படுத்த வேண்டுமென்றால் இப்பொழுதுகூட லாசருவின் ஊருக்குப் போகக்கூடாது. எப்பொழுதுதான் போக வேண்டும். இன்னும் நான்கு நாட்களில் அவனுடைய விசுவாசமே அற்றுப் போய்விடுமே! இவன் இயேசு கிறிஸ்துவை விட்டு ஒருவேளைப் பின்மாறி விடுவானோ என்று தோன்றும். ஆனால் தேவன் பார்ப்பார். “இந்தக் குடும்பம் என்னை அறிந்த குடும்பம். இந்த ஆவிக்குரிய கல்விக்கு இவர்கள் பொருத்தமானவர்கள்.” ஏனென்றால், அவர்கள் இயேசு கிறிஸ்துவை பலமுறை போக்கும்வரத்துமாய் அறிந்தவர்கள். காலம் தாமதமாகிறது என்பதற்காகப் பதற வேண் டாம். யோவான் பதினொன்றாம் அதிகாரத்தினுடைய உச்சகட்டம் இதுதான். “நான் உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறேன்.” எல்லாவற்றிலும் வரிசையைப் பார்க்கக்கூடாது. “முதலில் அப்படியும், இரண்டாவது இப்படியும் சொல்லியிருக்கிறது. இதுதான் முதலாவது சொல்லப்பட்டிருக்கிறது. எனவே, அதுதான் முக்கியம்,” என்று பொதுவாக நான் ஆராய்ச்சி செய்வதில்லை. ஆனால் இந்த இடத்தில் அது முக்கியம். “நான் ஜீவனும் உயிர்த்தெழுதலுமாய் இருக்கிறேன்” என்று சொல்லாமல், “நான் உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்” என்று சொல்லுகிறார். “எவ்வளவோ பேருக்கு நான் ஜீவனாய் இருக்கிறேன்.” யோவான் சுவிசேஷமே ஜீவனின் சுவிசேஷம்தான். “ஆனால் இந்தச் சூழ்நிலையில் நான் யாராக இருக்கிறேன்? உயிர்த்தெழுதலாய் இருக்கிறேன்.” அவரிடத்திலே உள்ள பரம ஐசுவரியங்கள் என்பது ஜீவன், ஒளி, உணவு. இம்மைக்குரியது, பரத்திற்குரியது எல்லாம் அடங்கும்.

பரம தளத்தில் இருக்கும் பரம வளங்கள்

எனவே, அருமையான பரிசுத்தவான்களே, தேவனுடைய மக்களே, சகோதர சகோதரிகளே, தேவனுக்கு அருமையானவர்களே, நாம் இப்படி சொல்லிப் பார்க்க வேண்டும். நாம் தேவனுடைய மக்களுக்காக, அவர்களுடைய தேவைகளுக்காக, ஜெபிக்கிறோம் இல்லையா? அவர்களுக்காக மனதுருகுகிறோம் இல்லையா? “ஆண்டவரே, படிக்க வேண்டும், என் குடும்பம் இரட்சிப்புக்குள் வர வேண்டும்.” இப்படி மனதுருகும்போது நாம் என்ன நினைக்க வேண்டும்? நாம் பல காரியங்களை நோக்கிப் பார்க்கலாம். அப்பா அம்மாவை நோக்கிப் பார்க்கலாம். அண்ணன் தம்பியை நோக்கிப் பார்க்கலாம். ஆறுதலாக இருந்த சகோதரர்களை நோக்கிப் பார்க்கலாம். ஆனால், ஆண்டவரே, இந்தச் சூழ்நிலையில் உம்மை நோக்கிப் பார்க்கிறேன். உம்மை நோக்கிப் பார்த்த முகங்கள் பிரகாசமடைந்தன (சங். 34:5). சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும். கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடாது (சங். 34:10). இது என்னுடைய ஒன்றாம் வகுப்புப் பாடம். நாகூம் 2:12இல் இப்படி ஒரு வசனம் இருக்கிறது. “சிங்கம் தன் குட்டிகளுக்குத் தேவையானதைப் பீறி, தன் பெண் சிங்கங்களுக்கு வேண்டியதைத் தொண்டையைப் பிடித்துக் கொன்று, இரைகளினால் தன் கெபிகளையும், பீறி போட்டவைகளினால் தன் தாபரங்களையும் நிரப்பிற்று.” சிங்கக்குட்டிகளெல்லாம் பதட்டப்பட்டதாம். “தாய் இப்போதுதான் வேட்டைக்குப் போயிருக்கிறது. அது திரும்பி வருமோ வராதோ அல்லது வரும்போது வெறும் கையோடு வருமோ அல்லது எதையாவது கொண்டுவருமோ!” அப்படியல்ல.

நம்முடைய வாழ்க்கை தேவனுடைய நித்தியக் குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக அழைக்கப்பட்ட வாழ்க்கை. தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவிலே ஊனுருக்கொண்டுள்ள தேவனுடைய அளவிடமுடியாத, அளக்கமுடியாத பரம வளங்களால், செல்வங்களால், ஐசுவரியங்களினால் நாம் நிரப்பப்பட வேண்டும். அதனால்தான் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தைரியமாய் அவருடைய சீடர்களைப் பார்த்து சொல்ல முடிந்தது: முதலாவது தேவனுடைய ராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூட கொடுக்கப்படும். எப்படியாவது இவர்கள் மனதை மாற்றி தன்னைப் பின்பற்ற வேண்டுமென்பதற்காக அப்படிச் சொன்னாரா? அல்லது கொஞ்சம் வீராப்பாகப் பேசினால் தன்னைப் பின்பற்றுவார்களோ என்பதற்காக அப்படிப் பேசினாரா? இல்லை. முதலாவது இந்தப் பரம வளங்களெல்லாம் இந்தப் பூமிக்குரிய மண்டலத்தில் இல்லை. தேவன் தமக்குப் பிரியமானவர்களுக்கு அவர்கள் நித்திரையிலேயே தேவையானவைகளைக் கொடுத்து விடுகிறார் (சங். 127:3). இது பரம தளத்தில் இருக்கிறது. பூமிக்குரிய தளத்திலே இருந்து பார்க்கும்போது நாம் வெறுங்கையாய் இருப்பதுபோல் தோன்றலாம். ஒன்றுமில்லாதவர்கள்போல் தோன்றலாம். கையாலாகதவர்கள்போல் தோன்றலாம். ஆனால், நமக்குத் தெரிய வேண்டும். நம்முடைய கெபியிலே இரைகள் நிறைந்திருக்கின்றன. யூத ராஜ சிங்கமாகிய நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் மகிமையின் செல்வங்கள் பூரணமாக, முழுமையாக, நிறைவாக இருக்கின்றன.

ஆனால், அந்த விசுவாசம் என்பது சிலுவையின் வழி. ஆபிரகாமைத் தேவன் எவ்வளவோ ஆசீர்வதிக்கிறார். ஆனால், ஆபிரகாம் தன் முதல்படியை எடுத்துவைக்க அவன் எவ்வளவு பெரிய விலைக்கிரயம் கொடுக்க வேண்டியிருந்தது தெரியுமா? மகிமையின் தேவன் இன்றைக்கு நமக்குத் தோன்றி, “உன் வீட்டை விட்டுவிட்டு வா, உன் தகப்பன் வீட்டாரை, உன் இனத்தாரை விட்டுவிட்டு வா. நான் காண்பிக்கிற தேசத்துக்குப் போ,” என்றால் போவோமா? அது ஒருவேளை அமெரிக்கா, ஆஸ்திரேலியாவாக இல்லாமல் போகலாம். ஒருவேளை ஆப்பிரிக்காவாக இருக்கலாம். ஒரிசா, பீகார், உகண்டாவாக இருக்கலாம். அப்படிச் சொல்லும்போது, “ஒருவேளை என்னை முப்பது வயதில் இப்படி அழைத்திருந்தால் வந்திருப்பேன். இப்போது கூப்பிடுகிறாரே! இப்போது என் உடல் நிலை உமக்குத் தெரியும். என் குடும்பம் உமக்குத் தெரியும். என் பாரம் உமக்குத் தெரியும். என் பலவீனம் உமக்குத் தெரியும்.” ஆபிரகாமிற்கு தேவன் எல்ஷடாயாக இருந்தார். எல்ஷடாய் என்றால் என்ன? போதுமான தேவன். எழுத்தின்படி மொழிபெயர்ந்தால் பெரிய மடியுள்ள தேவன் என்று பொருள். பசுமாட்டின் மடிபோல. எல்லாவற்றிற்கும் போதுமான தேவன். திடீரென்று தேவன் எல்லாவற்றிற்கும் போதுமான தேவனாக மாறிவிடுவதில்லை. அவன் அந்த சிலுவையின் வழியிலே விசுவாசித்து நடந்தான்.

“நீங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு சிறையிருப்புக்குப் போங்கள்,” என்று தேவன் இஸ்ரவேல் மக்களிடம் செல்லுகிறார். உடனே இந்த மக்கள், “இது என்ன ஆண்டவரே! நீர் விடுதலை செய்வதென்றால் இப்பொழுதல்லவா விடுதலை செய்ய வேண்டும்?” அப்போது ஆண்டவர் “நான் விடுதலை செய்வேன். ஆனால், நான் விடுதலை பண்ணுகிற வழி மனிதர்கள் விடுதலை செய்கிறதைப்போல அல்ல. நீங்கள் அந்த சிறையிருப்புக்குப் போக வேண்டும். பின்பு நான் விடுவிப்பேன்,” என்று சொல்லுகிறார்.

எனவே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிறார்: முதலாவது தேவனுடைய ராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். அந்தத் தளத்தில் நாம் வாழ வேண்டும். இதை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்படி பிரயோகிப்பீர்கள் என்று எனக்குத் தெரியாது. பரிசுத்த ஆவியானவர் உங்களை நடத்துவார். வாழ்க்கையின் சூழ்நிலைகள் வழியாகப் போகும்போது தேவனோடு நாம் சரியாக இருக்க வேண்டும். தேவனுடைய மக்களோடு நாம் சரியாக இருக்க வேண்டும். நீதி என்பதின் பொருள் இதுதான். தேவனோடும், தேவனுடைய மக்களோடும் நாம் சரியாக இருக்க வேண்டும். அப்பொழுது இந்தப் பூமிக்குரியவைகள், அதாவது என்னத்தை உண்போம், என்னத்தை உடுப்போம், என்னத்தைக் குடிப்போம், என்ன வேலை பார்ப்போம், என்ன சட்டை போடுவோம், என்ன சைக்கிள் வாங்குவோம் போன்றவைகளெல்லாம் உங்களுக்குக்கூட கொடுக்கப்படும். ஆனால், இந்தப் பூமியிலே நாம் பெரிய ஐசுவரியவான்களாக வாழ வேண்டும் என்பதல்ல தேவனுடைய ஈடுபாடு. தேவனுடைய நித்தியக் குறிக்கோள் தம்முடைய மக்களுடையவாழ்க்கை மூலமாக அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து வெளிப்பட வேண்டும். அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து எவ்வளவு மகிமையானவர், எவ்வளவு அருமையானவர், எவ்வளவு போதுமானவர், எந்தச் சூழ்நிலையும், எந்தத் தேவையும் அவருக்கு மிஞ்சினதல்ல. குறிப்பாக ஆவிக்குரியது. அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து வெளியாக்கப்படுவதைப்போல மகிமையானது இந்த உலகத்தில் தேவனுக்கு வேறொன்றும் இல்லை. அதற்கென்று நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். அந்தப் பரம அழைப்பை நாம் பெற்றிருக்கின்றோம். நாம் எபிரெயரிலே பார்த்ததுபோல பரம அழைப்பிற்குப் பங்குள்ளவர்களாகிய சகோதரர்களே, நம்முடைய வாழ்வின் எல்லா நிலைகளிலும் சோர்ந்து போகாமல், தளர்ந்துபோகாமல், கிறிஸ்துவுக்குள் இருக்கிற இந்தப் பரமவளங்களைப் பெற்று, அனுபவித்து, அவரை வெளியாக்குகிற மக்களாக வாழ்வதற்குக் கிருபை அருள்வாராக. ஆமென்.