Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

கிறிஸ்துவிலே ஒரு பரம அமைப்புமுறை

Transcribed from a message spoken on October 18, 2015, in Chennai

By Milton Rajendram

கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருத்தல்

கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பதற்கு புறம்பான எல்லாச் சூழ்நிலைகளும் நமக்கு அநுகூலமாகவும், சாதகமாகவும் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. புறம்பான எல்லாச் சூழ்நிலைகளும் நமக்கு சாதகமாகவும், அநுகூலமாகவும் இருந்தால்தான் நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்றால் நாம் ஒருநாளும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. சிலர் மகிழ்ச்சியாக இருப்பதற்காக, இளைப்பாறுவதற்காக, கடற்கரைக்குப் போவார்கள். சிலர் நல்ல பூங்காக்களுக்குப் போவார்கள். “கடற்கரைக்கோ, பூங்காவுக்கோ போகவேண்டாம்,” என்று நான் சொல்லவில்லை. நாம் இந்தப் பூமியிலே வாழ்கிறோம்; மனிதர்களாக இருக்கிறாம். எனவே, புறம்பான சூழ்நிலைகள் நம்மைப் பாதிக்கின்றன. ஓர் இதமான கடற்கரை அல்லது பூங்கா நமக்குள் ஒரு நேர்மறையான தாக்கத்தை உண்டுபண்ணுகிறது. எதிர்மறையான ஒரு சூழ்நிலை எதிர்மறையான தாக்கத்தை உண்டுபண்ணுகிறது. ஆனால், சிலர் கிறிஸ்துவுக்குள் போவார்கள். “நாமெல்லாரும் கிறிஸ்துவுக்குள்தான் இருக்கிறோம்,” என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், கடற்கரைக்குப் போவது எப்படி ஒரு இளைப்பாறுதலைத் தருகிறதோ, பூங்காவுக்குப் போவது எப்படி ஒரு இளைப்பாறுதலைத் தருகிறதோ, அதுபோல் கிறிஸ்துவுக்குள் போவது அதைவிடப் பலமடங்கு இளைப்பாறுதலைத் தருகிறது. உடனே நீங்கள், “இது கொஞ்சம் அதிகம் ஆவிக்குரியதாக இருக்கிறது,” என்று நினைக்கலாம். ஆனால், உண்மையாகவே தேவனுடைய பரிசுத்தவான்கள் இவையெல்லாவற்றையும் கடந்து கிறிஸ்துவில் வாழப் பழகியிருக்கிறார்கள். அதற்கு அப்போஸ் தலனாகிய பவுல் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

ஆகவே, எந்த நிலைமையிலும் மனரம்மியமாயிருக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். அதைப் பரிசுத்த ஆவியானவர் கற்றுக்கொடுப்பார். புறம்பான சூழ்நிலைகளைப் பொறுத்தல்ல, எந்த நிலையிலும் நம்முடைய மனமகிழ்ச்சியையும், நம்முடைய மனரம்மியத்தையும் காத்துக்கொள்வதற்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டும். யாரும் அதைப் பிறந்தபோதே கற்றுக்கொண்டு வரவில்லை. சிலருடைய பிறவிக்குணம் எப்பொழுதுமே மகிழ்ச்சியாக இருப்பது. சிலருடைய பிறவிக்குணம் எப்பொழுதுமே சோகமாயிப்பது. அப்படியல்ல. நாமெல்லாரும் அதை நம்முடைய வாழ்க்கையிலே பரிசுத்த ஆவியானவர் நமக்குக் கற்றுக்கொடுக்கிறபடி நாம் கற்றுக்கொள்கிறோம்.

கூடிவருவதும், வாழ்வதும் கற்றுக்கொள்வதற்காக

நாம் கூடிவாழ்வதும், கூடிவருவதும் அதற்காகத்தான். கிறிஸ்துவுக்குள் நாம் வாழ்வது, தனிப்பட்ட விதத்தில் வாழ்வது எப்படி, குடும்பமாக வாழ்வது எப்படி, சபையாக வாழ்வது எப்படி, நம்முடைய வாழ்க்கை எப்படி மிகவும் கனிநிறைந்த, பயனுள்ள, பொருளுள்ள ஒரு வாழ்க்கையாக மாறுவது என்பதைக் கற்றுக்கொள்வதற்காகவும், ஒருவருக்கொருவர் கற்றுக்கொடுப்பதற்காகவும்தான் நாம் கூடிவாழ்கிறோம், கூடிவருகிறோம். நாம் கூடிவருவதின் பயன் இன்னும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போக வேண்டும் என்பதிலே நான் மிகவும் அக்கறையுள்ளவனாக இருக்கிறேன். அதைப்பற்றி நான் அடிக்கடி சிந்திக்கிறேன். நம்முடைய கூடுகையும், நாம் கூடிவரும்போது நாம் என்ன செய்கிறோம் என்பதும் தேவ மக்களுடைய வாழ்க்கையில் ஓர் உயர்வைக் கொண்டுவரவேண்டும்.

“உங்கள் வறுமையை மாற்றி ஒரு பணக்காரனாக மாறுவதற்கு வழி என்ன என்பதை நாங்கள் ஆறு வாரங்களிலே சொல்லிக்கொடுக்கப்போகிறோம்,” என்று யாராவது சொன்னால் மக்கள் அதற்குப் பணம் கட்டிப் படிக்கப்போவார்களா, மாட்டார்களா? “உங்கள் வறுமையை மாற்றி எப்படி ஒரு பணக்காரனாக மாறுவது என்பதை நாங்கள் ஆறே வாரங்களிலே சொல்லித் தருகிறோம். ஞாயிற்றுக்கிழமைதோறும் நீங்கள் 3 மணி நேரம் எங்களோடு செலவிடுங்கள். ஆறு வாரங்கள் அப்படிச் செலவிட்டால், நாங்கள் கற்றுக்கொடுத்துவிடுவோம்,” என்றால் மக்கள் போவார்கள். “ஆறு வாரங்கள் வாருங்கள்; எப்படி ஒரு இரால் பண்ணை வைப்பது என்று நாங்கள் கற்றுக்கொடுக்கப்போகிறாம். அதற்குப்பிறகு நீங்கள் இரால் பண்ணை வைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்,” என்று யாராவது விளம்பரம் செய்தால் மக்கள் அதை படிக்கப்போவார்களா, போகமாட்டார்களா? போவார்கள். “பணக்காரனாவது எப்படி அல்லது ஒரு சுய தொழில்முயற்சி செய்வது எப்படி அல்லது நல்ல ஆரோக்கியமான உணவுகளைச் சமைப்பது எப்படி,” என்று யாராவது ஆறு வாரம் பயிற்சி கொடுத்தால் போவார்களா, போகமாட்டார்களா? போவார்கள். இவைகளெல்லாம் இந்த உலகத்தில் நடக்கின்றன; நல்லது. வாழ்க்கையிலே ஓர் உயர்வைக் கொண்டுவருவதற்காக பல்வேறு காரியங்களைக் கற்றுக்கொடுக்கிறார்கள். கற்றுக்கொள்வதற்கு மக்கள் மனமுவந்து ஆசையாய்ப் போகின்றார்கள்.

இவையெல்லாவற்றையும்விட தேவனுடைய மக்களாகிய நாம் கூடிவரும்போது அதிகமான ஆவிககுரிய ஞானத்தையும், ஆவிக்குரிய அறிவையும், ஆவிக்குரிய கல்வியையும், ஆவிக்குரிய ஆழ்ந்த அறிவையும் நாம் பெற்றுக்கொள்கிறோம். பெற்றுக்கொள்வதற்காகத்தான் நாம் கூடிவாழ்கிறோம், கூடிவருகிறோம். தேவனுடைய மக்களாகிய நாம் பொழுதுபோக்குவதற்காக ஞாயிற்றுக்கிழமைகளில் கூடி வருவதில்லை.

கற்றுக்கொள்ளுதலும், கற்றுக்கொடுப்பதும்

இந்தப் பொறுப்பு நாம் தேவனுடைய மக்களாலான ஒரு சமுதாயம் என்ற முறையிலே நம் எல்லாருக்கும் இருக்கிறதா அல்லது யாராவது ஒரு சிலருக்கு மட்டும்தான் இருக்கிறதா? எல்லாருக்கும் இருக்கிறது. ஒரேவொருவருக்குத்தான் அந்தப் பொறுப்பு இருக்கிறது என்ற அமைப்புமுறையிலே நாம் நம்பிக்கை வைக்கக்கூடாது. அந்த ஒரு நபர் கற்றுக்கொண்டு, நமக்குக் கற்றுத்தருவார்; நாமெல்லாரும் கற்றுக்கொண்டே இருப்போம் என்பதல்ல. நாம் எல்லாரும் கற்றுக்கொண்டவைகளை ஒருவருக்கொருவர் நாம் கற்றுக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் தேவ மக்களுடைய சமுதாயம் ஓர் உயாந்த சமுதாயமாக மாறும்.

உலகத்திலேகூட ஒரு குறிப்பிட்ட மக்கள் சமுதாயம் உயர்வு அடையும் என்றால் அவர்கள் கற்றுக்கொண்டதை ஒருவருக்கொருவர் கற்றுக்கொடுக்கிறார்கள். மிக முக்கியமாக ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு அவர்கள் கடத்துகிறார்கள். அப்படிப்பட்ட மக்கள் சமுதாயம் இந்த உலகத்திலே மிகவும் உயர்ந்த, வலுவான, செழிப்பான, அறிவுள்ள ஒரு சமுதாயமாக இருக்கும். நான் எந்தவொரு சமுதாய அமைப்புமுறை அல்லது வரவாற்று அமைப்புமுறைபற்றிச் சொல்கிறேன் என்று ஞானமுள்ளவன் சிந்திக்கவேண்டும்.

ஆகவே, நாம் கூடிவரும்போதெல்லாம் தேவனுடைய மக்களோடு பகிர்ந்துகொள்வதற்கு, கற்றுக்கொடுப்பதற்கு, நாம் கற்றுக்கொண்டதைப் பகிர்ந்துகொள்வதற்கு நாம் எப்போதும் பிரயாசப்பட வேண்டும். கற்றுக்கொள்ளவும் பிரயாசப்படவேண்டும்; கற்றுக்கொண்டதைப் பகிர்ந்துகொள்ளவும் பிரயாசப்பட வேண்டும்.

வரப்போகிற நாட்களிலே God’s Foundation என்ற ஒரு புத்தகத்தை அச்சிடுவதற்கு நாம் ஆசைப்படுகிறோம். மிகச் சிறிய ஒரு புத்தகம். மொழிபெயர்த்து முடிந்தபிறகு நாம் அதை அச்சிட வேண்டுமென்று விரும்புகிறோம். அது வேதாகமத்திலிருந்து அல்லது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி அல்லது தேவனுடைய நித்திய நோக்கத்தைப்பற்றிய ஒரு சுருக்கமான புத்தகம். நாமெல்லாரும் அதைப் படித்து, அதிலுள்ள சத்தியங்களைப் பேசக் கற்றுக்கொள்வது இயேசு கிறிஸ்துவினுடைய நற்செய்தியை அறிவப்பதற்கு நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். என்னைப் பொறுத்தவரை தேவனுடைய நித்திய நோக்கம், தேவனுடைய நித்திய திட்டத்தைப்பற்றி அதிலுள்ள அடிப்படை சத்தியங்களை நாம் ஒவ்வொருவரும் பேசுவதற்குப் பழகிக்கொள்வது மிகவும் அவசியம். வெறுமனே அது நல்லதென்று நான் சொல்ல மாட்டேன். அது அவசியம். நல்லது என்று சொல்லும்போது அது கொஞ்சம் மிருதுவான ஒரு வாய்ப்பைத் தருகிறது. “நீங்கள் பழகிக்கொள்ளலாம் அல்லது பழகிக்கொள்ளாமல் விடலாம்” என்ற தொனி அதில் இருக்கிறது. ஆனால், அவசியம் என்று சொல்லும் போது “நீங்கள் பழக வேண்டும்” என்று நான் வற்புறுத்துகிறேன். அதுதான் என்னுடைய எல்லை. நீங்கள் அதைப் பழக வேண்டும் என்று வற்புறுத்துகிறேன். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.

தேவனுடைய வார்த்தையில் உழைத்தல்

தேவனுடைய மக்களாகிய நாம் எல்லாரும் தேவனுடைய வார்த்தையை வாசிக்கிறோம். அதனால் நாம் பல காரியங்களைக் கற்றுக்கொள்கிறோம். ஆனால், சில காரியங்களை யாராவது ஒருவர் எடுத்துச் சொல்லும்போது நாம் கற்றுக்கொள்வது மிகவும் எளிது. நாம் அதை படித்துக் கற்றுக்கொள்ள முடியாது என்பதால் அல்ல. அதனால்தான் தொன்றுதொட்டு தேவனுடைய மக்களிடையே தேவனுடைய வார்த்தையைப் பரிமாறுவது என்பது மிக முக்கியமான காரியமாக இருக்கிறது. நான் இதை அடிக்கடி வலியுறுத்த விரும்புகிறேன். நாம் கூடிவரும்போதெல்லாம் நம்முடைய குடும்ப காரியங்களைப் பகிர்ந்து கொள்கிறோம், உணவைப் பகிர்ந்துகொள்கிறோம். அதுமட்டுமல்ல. நிச்சயமாக தேவனுடைய மக்கள் கூடிவரும்போது அங்கே எதை பகிர்ந்துகொண்டிருக்க வேண்டும்? எல்லாக் காலத்திலும் தேவனுடைய வார்த்தையைப் பகிர்ந்துகொள்வது என்பது நம்மிடையே இருக்கிறது. தேவனுடைய வார்த்தையை நாம் பகிர்ந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், தேவனுடைய வார்த்தை நம்முடைய வாழ்க்கைக்கு விளக்காக, வெளிச்சமாக இருக்கிறது. இந்தப் பூமியிலே வேறு எந்த மனிதரிடமிருந்தும் பெறமுடியாத ஞானத்தையும், அறிவையும் அது நமக்கு தருகிறது. எனவே அதற்காக நாம் எப்போதும் பிரயாசப்பட வேண்டும். தேவனுடைய வார்த்தையிலே பிரயாசப்படுவதற்கு தேவனுடைய மக்களாகிய நாம் எப் போதுமே நேரம் செலவிட வேண்டும். பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதும்போது, “நன்றாய் விசாரிக்கின்ற மூப்பர்களை குறிப்பாக திருவசனத்திலே பிரயாசப்படுகிறவர்களை இரட்டிப்பான கனத்திற்குரியவர்களாக கருது,” என்று சொல்கிறார். திருவசனத்திலே பிரயாசப்படுங்கள். பிரயாசம் என்பது சாதாரண முயற்சியல்ல. உண்மையிலேயே அது பிரயாசம்.

நான் இன்றைக்குப் பகிர்ந்துகொள்ள விரும்புகிற காரியம், கிறிஸ்துவிலே ஒரு பரம அமைப்பு, ஒரு பரம அமைப்புமுறை உள்ளது. சில வார்த்தைகள் கொஞ்சம் கடினமான வார்த்தைகளாக இருக்கலாம். நான் அதைப்பற்றி ரொம்ப சிந்திப்பது உண்டு. இப்படிப்பட்ட கடினமான வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்த வேண்டுமா என்று ரொம்ப சிந்தித்தபிறகுதான் “இல்லை, இந்த வார்த்தைகளை நாம் தவிர்க்கமுடியாது,” என்று நினைக்கும்போதுதான் இப்படிப்பட்ட வார்த்தைகளை அறிமுகப்படுத்துகிறேன். கிறிஸ்துவிலே ஒரு பரம அமைப்பு உண்டு. கிறிஸ்துவிலே இந்தப் பரம அமைப்பை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.

சில உண்மைகளை நான் உங்களுக்குச் சுருக்கமாய்ச் சொல்லிவிடுகிறேன். நம்மில் பலருக்கு இந்த உண்மைகள் தெரிந்திருக்கும். ஆனால், இந்த உண்மைகள் ஆழமானவைகள்! நம்முடைய வாழ்க்கையைத் தேவனுக்குமுன்பாக மிகவும் மதிப்புள்ள, பொருளுள்ள வாழ்க்கையாக மாற்றுவதற்கு இந்த உண்மைகள் மிகவும் அடிப்படையானவைகள்.

கிறிஸ்துவில்

  1. முதலாவது, தேவனுடைய மக்களாகிய நாம் கிறிஸ்துவில் உள்ளோம். பலருக்கு இது ரொம்ப பரவசத்தைத் தராது. “என்னமோ நாம் அமெரிக்காவில் உள்ளோம். ஐரோப்பாவில் உள்ளோம் என்பதுபோல நாமெல்லாரும் கிறிஸ்துவில் உள்ளோம் என்று ரொம்ப பரவசத்தோடு சொல்கிறீர்களே!” என்று சிலர் நினைக்கலாம். இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிற தேவனுடைய மக்களாகிய நாம் கிறிஸ்துவில் உள்ளோம்.

  2. இரண்டாவது, இந்தக் கிறிஸ்துவில் வளங்கள், செல்வங்கள், நிரப்பீடுகள் உள்ளன. இது நமக்கு ஒரு பரிச்சயமான உண்மை. இந்த உண்மையை நாம் அடிக்கடி வலியுறுத்தியிருக்கிறோம். கிறிஸ்துவில் பரம வளங்களும், செல்வங்களும், நிரப்பீடும் உள்ளன.

  3. மூன்றாவது, இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிற தேவனுடைய மக்களாகிய நாம் கிறிஸ்துவில் கட்டியெழுப்பப்பட வேண்டும். “கிறிஸ்துவில்”. இந்த வார்த்தைகளுக்கெல்லாம் என்ன பொருள் என்று நான் சொல்கிறேன். கிறிஸ்துவில் நாம் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

  4. நான்காவது, கடைசியாக, கிறிஸ்துவில் உள்ள இந்த அமைப்புக்கும், உலகத்திலே உள்ள ஒரு அமைப்புமுறைக்கும் வேறுபாடு உள்ளது. அந்த வேறுபாட்டை நாம் சுட்டிக்காட்ட வேண்டும். அந்த வேறுபாட்டை நாம் நன்றாய் உணர்ந்துகொள்ள வேண்டும். கிறிஸ்துவில் நான் கட்டியெழுப்புகிற அல்லது கிறிஸ்துவில் பரிசுத்த ஆவியானவர் கட்டியெழுப்புகிற இந்த அமைப்புக்கும், இந்த உலகத்திலுள்ள அமைப்புக்கும் மிகப் பெரிய வேறுபாடு.

நான்கு குறிப்புகள் சொன்னேன். 1. முதலாவது, கிறிஸ்துவை விசுவாசிக்கிற தேவனுடைய மக்களாகிய நாம் கிறிஸ்துவில் உள்ளோம்.  2. இரண்டாவது, கிறிஸ்துவில் பரம வளங்களும், செல்வங்களும், நிரப்பீடும் உள்ளன. 3. மூன்றாவது, கிறிஸ்துவில் நாம் கட்டியெழுப்பப்படுகிறோம், கட்டியெழுப்பப்பட வேண்டும். 4. நான்காவது, அப்படி நாம் கட்டியெழுப்புகிற கிறிஸ்துவில் உள்ள அமைப்புக்கும், இந்த உலகத்திலுள்ள அமைப்புக்கும் மிகக் கடுமையான வேறுபாடு உண்டு. 

“என்னுடைய நிலைமைக்கும், இதற்கும் என்ன தொடர்பு?” என்று நீங்கள் நினைக்கலாம். இது நம்முடைய நிலைமைக்கு எவ்வளவு பயனுள்ளது என்பதை நான் ரொம்ப சீக்கிரமாய் உங்களுக்குச் சுருக்கமாய் விளக்கிக்காட்ட விரும்புகிறேன்.

1. நாம் கிறிஸ்துவில் உள்ளோம்

முதலாவது, நாம் கிறிஸ்துவை விசுவாசிக்கும்போது பாவமன்னிப்பைப் பெறுகிறோம். இதை கிறிஸ்த வர்கள் எல்லாரும் அறிவார்கள். மனிதர்கள் பாவ மன்னிப்புப் பெற வேண்டுமென்றால் அவர்கள் கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டும். எபேசியர் 1:7, கொலோசெயர் 1:14. இன்னும் எபிரெயரில் “இரத்தம் சிந்துதலில்லாமல் பாவ மன்னிப்பு உண்டாகாது” என்று உண்டு. மனிதர்களுடைய பாவ மன்னிப்புக்காக இரத்தத்தைச் சிந்தினவர் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மட்டுமே. ஆதலால், இயேசுகிறிஸ்துவை நாம் விசுவாசிக்கும்போது தேவன் நம்முடைய பாவங்கள் எல்லாவற்றையும் மன்னிக்கிறார்.

பாவ மன்னிப்புக்காக இந்த உலகத்திலே மனிதர்கள் பல மதங்களை, சமயங்களை, தத்துவங்களை ஏற்படுத்திக்கொண்டு “எப்படியாவது பாவ மன்னிப்பு கிடைத்துவிடாதா?” என்று அங்கும் இங்கும் அலைகிறார்கள். ஆனால், தேவன் பாவ மன்னிப்பை இலவசமாய்த் தருகிறார். மனிதர்களாகிய நமக்கு அது இலவசம். ஆனால், தேவன் ஒரு மாபெரும் விலைக்கிரயத்தைக் கொடுத்தார். தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையே விலைக்கிரயமாய்க் கொடுத்தார். தேவனுடைய மக்களிடையே, “நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கின்றன. ஆகையால், நாம் செத்தபிறகு பரலோகத்திற்கு போய் விடுவோம்,” என்ற ஒரு எண்ணம் பரவலாக உண்டு. “நாம் மரித்தபிறகு பரலோகத்தில் இருக்க வேண்டும். யுகாயுகமாய் பரலோகத்தில் இருக்க வேண்டும்,” என்பதைப்பற்றி தேவனுடைய மக்களுக்கு ரொம்ப அக்கறையுண்டு. ஏதோ பரலோகத்திலே எண்ணிக்கை குறைவாக இருக்கிறது; அதனால் பரலோகத்திலே எண்ணிக்கை கூடவேண்டும் என்பதற்காக தேவன் மனிதர்களை உருவாக்கினதுபோல நாம் அப்படி எண்ணக்கூடாது. தேவனுடைய நோக்கம் ஒரு கூட்டம் மக்களை பரலோகத்தில் கொண்டுபோய் விடுவதல்ல. பரலோகத்திலே ஏற்கெனவே நிறைய தேவதூதர்கள் இருக்கிறார்கள்.

இடப்பெயர்ச்சி-ஆதாமிலிருந்து கிறிஸ்துவில்

நான் இப்போது சொல்வதைக் கவனியுங்கள். தேவனுடைய நோக்கம் என்னவென்றால் நம்முடைய பாவங்களை மன்னித்து, இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கடத்திக் கொண்டுபோய்விட வேண்டும். கொலோசெயர் 1:12,13 வசனங்களை நான் சொல்கிறேன். “ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும், இருளின் அதிகாரத்தினின்னு நம்மை விடுதலையாக்கி தமது அன்பின் குமாரனுடைய இராஜ்ஜியத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்”. தேவன் ஒன்று செய்தார். தேவன் என்ன செய்தார் என்றால் இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி தமது அன்பின் குமாரனுடைய இராஜ்ஜியத்திற்கு நம்மை உட்படுத்தியிருக்கிறார் என்று இந்த வசனம் சொல்கிறது. ஆங்கிலத்திலே “translated” என்ற வார்த்தை நன்றாக இருக்கும். He has translated us from the kingdom of darkness into the kingdom of His son of His love. இதை ஆங்கிலத்திலே வாசிக்கும்போது தெளிவாக விளங்குகிறது. தமிழிலே அவ்வளவு தெளிவாக விளங்கவில்லை. “தேவன் நம்மை ஒரு இடப்பெயர்ச்சி செய்துவிட்டார். “Transferred”என்றும் இருக்கும், “Translated”என்றும் இருக்கும். தேவன் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிற நம்மை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடப்பெயர்ச்சி செய்துவிட்டார்; இடம்மாற்றி விட்டார். முன்பு நாம் ஓரிடத்தில் இருந்தோம். ஆதாமில் இருந்தோம் என்று வைத்துக்கொள்வோம். இப்பொழுது நம்மை எந்த இடத்திற்கு அவர் மாற்றிவிட்டார்? அந்த இடத்திற்கு என்ன பெயர்? “கிறிஸ்து” என்று பெயர். “கிறிஸ்து” ஒரு இடமா? “கிறிஸ்து” ஒரு நபர். நாம் முன்பு இருந்தது ஆதாமில். இப்போது நாம் இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கும்போது அவர் நம்மை இடப்பெயர்ச்சி செய்து கிறிஸ்துவில் கொண்டு வந்துவிட்டார். நாம் இப்போது எங்கிருக்கிறோம்? கிறிஸ்துவில் இருக்கிறோம்.

கிறிஸ்துவில் என்கிற வார்த்தை புதிய ஏற்பாட்டிலே எத்தனை தடவை வருகிறதென்று உங்களால் முடிந்தால் நீங்கள் எண்ணிச் சொல்லுங்கள். பொதுவாக தேவனுடைய பிள்ளைகள் அந்தப் பதத்தை வாசிக்கும்போது அதை ஒரு பெரிய காரியமாகப் பொருட்படுத்துவது இல்லை. ஆனால் உண்மையி லேயே நல்ல வெளிச்சமுள்ள பரிசுத்தவான்கள் சொல்வார்கள். அந்த “கிறிஸ்துவில்” என்ற ஒரேவொரு வேற்றுமை உருபில் மாபெரும் விடுதலை இருக்கிறது. நாம் இப்பொழுது ஆதாமில் இல்லை. நாம் இப்போது கிறிஸ்துவில் இருக்கிறோம். தமிழிலே “கிறிஸ்துவுக்குள்” என்கிற ஒரு சொற்றொடர் பயன்படுத்தப்படும். ஆனால் அதை எளிமையாக்குகிறேன். “கிறிஸ்துவில்” இருக்கிறோம்.

கிறிஸ்து ஒரு நாடு, இராஜ்ஜியம், சூழல், மண்டலம், தளம்

ஏறக்குறைய கிறிஸ்து ஒரு நாடு. முன்பு நாம் எகிப்து என்கிற ஒரு நாட்டில் இருந்தோம். ஆனால், தேவனுடைய இலக்கு அவருடைய பிள்ளைகளை கானான் என்கிற பாலும் தேனும் ஓடுகிற நல்ல நாட்டிற்குள் கொண்டுவருவது. அதேபோல “கிறிஸ்து” ஒரு நாடு என்று சொல்லலாம். “கிறிஸ்து” ஒரு இராஜ்ஜியம் என்று சொல்லலாம். தேவன் நம்மை இடப்பெயர்ச்சி செய்து “கிறிஸ்து” என்ற நாட்டிற்குள், “கிறிஸ்து” என்கிற இராஜ்ஜியத்திற்குள், “கிறிஸ்து” என்கிற மண்டலத்திற்குள், “கிறிஸ்து” என்கிற தளத்திற்குள், “கிறிஸ்து” என்கிற சூழலுக்குள் கொண்டுவந்திருக்கிறார் என்று நாம் சொல்லலாம்.

நான் முதலாவது, நகைச்சுவையாக சொன்னதுபோல சிலர் கடற்கரைக்கு, சிலர் பூங்காவிற்குப் போய் இளைப்பாறுதலை நாடுகிறார்கள். “கிறிஸ்து எப்பேர்ப்பட்ட ஒரு நாடு! எப்பேர்ப்பட்ட ஒரு இராஜ்ஜியம்! எப்பேர்ப்பட்ட ஒரு மண்டலம்! எப்பேர்ப்பட்ட ஒரு தளம்! எப்பேர்ப்பட்ட ஒரு சூழல்!” என்று நாம் அறிந்துகொண்டால் மிகவும் மகிழ்ச்சியடைவோம். இப்போது நாம் கிறிஸ்துவில் இருக்கிறோம் என்ற ஓர் உண்மையை நான் சொன்னேன்.

இப்போது நான் இன்னொரு கேள்வி கேட்கிறேன்? நாம் கிறிஸ்துவில் இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? நாம் கிறிஸ்துவுக்குள் வர முடியாது. தேவன்தான் நம்மைக் கிறிஸ்துவுக்குள் கொண்டுவந்து, கிறிஸ்துவுக்குள் வைக்க முடியுமேதவிர மனிதன் தன்னுடைய முயற்சியினால் கிறிஸ்துவுக்குள் வர முடியாது. “கிறிஸ்து” என்கிற இந்தத் தளத்திற்குள், மண்டலத்திற்குள், இராஜ்ஜியத்திற்குள், நாட்டுக்குள், சூழலுக்குள் அல்லது இன்னொன்று சொல்லலாம் இந்த அமைப்புமுறைக்குள் நாமாக வர முடியாது.

“Christ is a system” என்று ஒரு சகோதரன் சொல்கிறார்.

நன்றாய்க் கவனிக்க வேண்டும். அழகாய் இருக்கிறது என்பதற்காக சில சொற்களையெல்லாம் பயன்படுத்தக் கூடாது. அவசியம் என்றால் மட்டும்தான் ஒரு சொல்லைப் பயன்படுத்த வேண்டும். ஸ்டைலாக இருக்கிறது என்பதற்காக ஒரு வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது.

“அந்தப்படி நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டிருக்கிறீர்கள்” (1 கொரி. 1:30). யாராலே? தேவனாலே நீங்கள் கிறிஸ்துவுக்குள் உள்ளீர்கள். யார் நம்மைக் கிறிஸ்து இயேசுவில் வைத்தது? தேவன் நம்மைக் கிறிஸ்து இயேசுவில் வைத்தார். நாம் விசுவாசிக்கும்போது அது நமக்கு உண்மையாக மாறிவிடும். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இந்தப் பூமிக்கு மனிதனாக வந்து, மரித்து, உயிர்த் தெழுந்து, பரமேறி, சிங்காசனத்தில் வீற்றிருக்கும்போது நாம் கிறிஸ்துவில் இருந்தோம்.

ஒரு சகோதரன் இப்படி ஒரு உவமையைச் சொல்வார். இந்தப் புத்தகத்திற்குள் நான் இன்னொரு பொருளை வைத்து இந்தப் புத்தக்தை நான் ஒரு சகோதரனிடத்தில் கொடுத்தால் உள்ளே இருக்கிற பொருளும் அந்த சகோதரனிடம் போய்விடும். இந்தப் பொருள் அங்கிருந்து இன்னொரு சகோதரனுக்குப் போனால் உள்ளே இருக்கிற அந்தப் பொருளும் அந்தச் சகோதரனிடம் போய்விடுவிடுகிறது. அந்தப் பொருள் இந்த புத்தகத்தில் இருப்பதால் இந்தப் புத்தகத்திற்கு என்ன அனுபவம் நேரிடுகிறதோ அந்த அனுபவம் அந்தப் பொருளுக்கும் நேரிடுகிறது?

அதுபோல தேவன் நம்மைக் கிறிஸ்துவில் வைத்திருக்கிறார். ஆகவே, கிறிஸ்துவினுடைய அனுபவங்களெல்லாம் நம்முடைய அனுபவங்களாய் மாறும். இது என்னுடைய முதலாவது ரொம்ப எளிமையான குறிப்பு. கிறிஸ்துவில் உள்ளோம். கொலோசெயர் 2:6ஆம் வசனம் இப்படிச் சொல்லுகிறது. “நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே அவரில் வேர்கொண்டவர்களாகவும், அவரில் கட்டப்பட்டவர்களாகவும், அவரில் நடந்துகொள்ளுங்கள்”. நான் சின்னச்சின்ன திருத்தங்கள் செய்தேன். “அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொள்ளுங்கள்,” என்று இருப்பதை நான் எளிமைப்படுத்தியிருக்கிறேன்.

தேவன் நம்மை “கிறிஸ்து” என்கிற நாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டார். கிறிஸ்து என்கிற மண்டலத்திற்குள், தளத்திற்குள், சூழலுக்குள் கொண்டுவந்துவிட்டார். இப்பொழுது அவர் கேட்கிறார். “நான் உங்களை ஒரு புதிய நாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டேன். நீங்கள் அந்த நாட்டிலே என்ன வேர்கொள்ள வேண்டும். இந்த நாட்டிலே, இந்த மண்டலத்திலே, நீங்கள் கட்டப்பட வேண்டும். நீங்கள் இந்த நாட்டிலே நடமாட வேண்டும்”. “நடந்துகொள்ளுங்கள்” என்றால் நீங்கள் இந்த நாட்டிற்கு வெளியே போய் நடமாடக் கூடாது என்று பொருள்.

ரோட்டை எங்கு வேண்டுமானாலும் தாண்டிச் செல்கிற இந்தியர்கள் அமெரிக்கா போனால் எப்படிக் கடந்துபோவார்கள் தெரியுமா? சரியாக சாலைவிதிகளை மதித்து நடப்பார்கள், கடப்பார்கள். எங்கு வேண்டுமானாலும் துப்புகிற இந்தியர்கள், சிங்கப்பூர் போனால் எங்கு வேண்டுமானாலும் துப்ப மாட்டார்கள். அதே ஆள்தான். இந்த ஆளை இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு இடப்பெயர்ச்சி செய்தால், அங்கு அவர் நடமாடுகிற விதம் வேறு. இதே ஆளை இங்கிருந்து சிங்கப்பூருக்கு இடப்பெயர்ச்சி செய்தால் அங்கு அவர் நடமாடுகிற விதம் வேறு. இங்கிருந்து அவரை ஸ்விட்சர்லாந்திற்கு இடப் பெயர்ச்சி செய்தால் அங்கு அவர் நடமாடுகிற விதம் வேறு. அவருடைய நடை, உடை, பாவனைகள் எல்லாமே மாறிவிடுகிறது. சாதாரண, புறம்பான ஒரு மண்டலத்திலே, ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு இடப்பெயர்ச்சி செய்வது ஒரு மனிதனை அவ்வளவு மாற்றுகிறது. அப்படி அந்த நாட்டிற்கு இசைந்தவாறு நடமாடுவதற்கு அவ்வளவு அழுத்தமாக இல்லையாம். இன்னும் சொல்லப்போனால் அது அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

நீங்கள் கிறிஸ்துவில் இருக்கிறீர்கள். தேவன் நம்மைக் கிறிஸ்துவுக்குள் இடப்பெயர்ச்சி செய்துவிட்டார். ஆகவே, நீங்கள் இப்பொழுது கிறிஸ்துவில் இருக்கிறீர்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டும்? கிறிஸ்துவிலேயே நீங்கள் நடமாட வேண்டும். உண்மையிலேயே இதுதான் ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கை. ஒரு நாடு ஒரு மனிதன்மேல் செலுத்துகிற ஆதிக்கத்தைவிட நாம் இப்பொழுதிருக்கிற இந்த கிறிஸ்து இருக்கிறார் இல்லையா? “கிறிஸ்து” என்கிற மண்டலம், தளம், சூழல், நாடு, இராஜ்ஜியம். அவர் நம்மேல் செலுத்துகிற ஆதிக்கம் மிகவும் வலுவானதாக இருக்கும். ஏனென்றால், ஒரு நாடு செலுத்துகிற ஆதிக்கம் புறம்பானது. ஆனால், கிறிஸ்து செலுத்துகிற ஆதிக்கம் உள்ளானது. எந்த நாட்டிற்குப் போகும்போதும் நம்முடைய உள்ளான ஜீவனையோ, சுபாவத்தையோ அது மாற்றிவிடுவது இல்லை. ஆனால், கிறிஸ்து என்கிற நாட்டிற்குள் வரும்போது தேவன் நம்முடைய உள்ளான ஜீவனையும், சுபாவத்தையும் மாற்றிவிடுகிறார். சிங்கப்பூருக்கு போகும்போது யாரும் சிங்கப்பூருடைய ஜீவனை வைத்துவிடுவது இல்லை. நம்முடைய ஜீவன் யாருடைய ஜீவன்தான்? நம்முடைய சுபாவம், நம்முடைய கட்டமைப்பு, நம்முடைய பண்பாடெல்லாம் யாருடையதுதான்? கொஞ்சம் வலுக்கட்டாயமாகத்தான் கண்ட இடத்திலே துப்பாமல் இருக்க முடிகிறது. கொஞ்சம் வலுக்கட்டாயமாகதான் கண்ட இடத்திலே குப்பையைப் போடாமல் இருக்க முடிகிறது.

இடப்பெயர்ச்சியின்போது தேவனுடைய ஜீவனையும், சுபாவத்தையும் தருகிறார்

ஆனால், தேவன் நம்மை கிறிஸ்துவுக்குள் இடப்பெயர்ச்சி செய்தபோது இன்னொன்றையும் செய்துவிடுகிறார். சொல்லப்போனால் கிறிஸ்துவினுடைய ஜீவனையும், சுபாவத்தையும் தந்த பிறகுதான் “கிறிஸ்துவில்” இடப்பெயர்ச்சி செய்கிறார். இன்னும் சொல்லப்போனால் அவர் கிறிஸ்துவுக்குள் நம்மைக் கொண்டுவந்துவிட்டார் என்பதின் பொருள் என்னவென்றால் உண்மையிலேயே நாம் புதுப் படைப்பாக இருக்கிறோம் அல்லது நாம் ஒரு புதுப் படைப்புக்குள், ஒரு புது சிருஷ்டிக்குள் வந்துவிட்டோம் என்று 2 கொரிந்தியர் 5:17 சொல்லுகிறது. “ஒருவன் கிறிஸ்துவில் இருந்தால் புதுப் படைப்பாயிருக்கிறான். எல்லாம் புதிதாயின, பழையவைகள் எல்லாம் ஒழிந்துபோயின”. ரொம்ப அற்புதமான ஒரு வசனம்.

ஆனால், என்னிடத்திலே ஒரு திருத்தம் உண்டு. ஒருவன் கிறிஸ்துவில் இருந்தால் அவன் மட்டும் புதிய படைப்பாக மாறிவிடுவது இல்லை. அவன் எங்கு கொண்டுவரப்பட்டிருக்கிறான் என்றால் ஒரு புதிய படைப்புக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறான். அவனுடைய உலகம் ஒரு புதிய உலகம். இது கவிதை நயமாகவோ அல்லது இலக்கிய நயமாகவோ சொல்லப்படவில்லை. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் 1ஆம் தேதி “நான் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறேன்,” என்று சொல்வது இலக்கிய நயத்திற்காக அல்லது கவிதை நயத்திற்காக இருக்கலாம். ஆனால், “ஒருவன் கிறிஸ்துவை விசுவாசிக்கும்போது அவனுடைய உலகமும், அவனுடைய படைப்பும், புதிய உலகமாக, புதிய படைப்பாக மாறிவிடுகிறது” என்று சொல்லது கவிதை நயத்திற்காக இல்லை. உண்மையாகவே நாம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கும்போது நாம் ஓர் உலகத்திலிருந்து இன்னொரு உலகத்திற்கு வந்துவிடுகிறோம். ஒரு படைப்பிலிருந்து ஒரு புதிய படைப்பிற்கு வந்துவிடுகிறோம். எப்படி? “பழையவைகள் ஒழிந்துபோயின. எல்லாம் புதிதாயின”. புதிய ஜீவன், புதிய சுபாவம், புதிய பிரமாணம், புதிய உடன்படிக்கை என்று அனைத்தும் புதிதாயிருக்கிறது.

இதை நான் அடுத்த வாரமோ அல்லது பல வாரங்கள் கழித்தோ மீண்டும் உங்களிடத்தில் கேட்டுப் பார்க்க விரும்புகிறேன். தேவனுடைய மக்களாகிய நாம் எங்கிருக்கிறோம்? கிறிஸ்துவில் இருக்கிறோம். கிறிஸ்து என்பவர் ஒரு நபர் மட்டும் இல்லை. அவர் நபர். கிறிஸ்து ஒரு நபர். ஆனால், அதற்கும் மேலாக கிறிஸ்து ஒரு நாடாக, ஒரு மண்டலமாக, ஒரு சூழலாக, ஒரு அமைப்புமுறையாக இருக்கிறார்.

தண்ணீருக்குள்ளே பிராணவாயு இருக்கிறது. நிலத்திலேயும் பிராணவாயு இருக்கிறது. தண்ணீருக்குள்ளிருக்கும் பிராணவாயுவை நாம் அனுபவிப்பதற்கு அதற்குரிய ஒரு கட்டமைப்பு வேண்டும். நிலத்திலிருக்கிற பிராணவாயுவை அனுபவிப்பதற்கு அதற்குரிய கட்டமைப்பு வேண்டும். தேவன் நம்மை கிறிஸ்துவுக்குள் கொண்டுவந்திருக்கிறார் என்றால் அவர் நம்முடைய கட்டமைப்பையே மாற்றிவிட்டார். நம்முடைய பழைய கட்டமைப்பு இல்லை.

2. கிறிஸ்துவில் பரம வளங்கள், செல்வங்கள், நிரப்பீடு உள்ளன

இரண்டாவதாக, இந்தக் கிறிஸ்துவில் பரம வளங்களும், செல்வங்களும், நிரப்பீடும் உள்ளன. இதைப்பற்றி நான் பலமுறை சொல்லியிருப்பதால், இதைப்பற்றி மறுபடியும் சொல்ல வேண்டியதில்லை. எதற்காக தேவன் நம்மை கிறிஸ்துவில் கொண்டுவந்திருக்கிறார் என்றால் இது தேவனுடைய திட்டம், தேவனுடைய நோக்கம். இந்தக் கிறிஸ்துவில் ஆராய்ந்துமுடியாத, அளவிடமுடியாத, தீர்ந்துபோகாத பரம வளங்கள், செல்வங்கள், நிரப்பீடு எல்லாவற்றையும் தேவன் வைத்திருக்கிறார். அதே கொலோசெயர் 2:3இல் வாசிக்கிறோம். “அவருக்குள் ஞானம், அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது”. அதே மாதிரி 1 கொரிந்தியர் 1:31 இல் வாசிக்கிறோம். “அந்தப்படி அவரே, கிறிஸ்துவே, தேவனால் நமக்கு ஞானமும், நீதியும், பரிசுத்தமும், மீட்புமானார்”. “தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது” (கொலேசெயர் 2:9, 10). இது புதிய ஏற்பாட்டிலுள்ள ஒரு மாபெரும் உண்மை. கிறிஸ்து சாதாரண ஒரு நபர் அல்ல. அவர் தேவனுடைய ஞானம். அவர் நம்முடைய நீதி. அவர் நம்முடைய பரிசுத்தம். அவர் நம்முடைய மீட்பு. இன்னும் மனிதனுக்கு என்னென்ன தேவைப்படுகின்றனவோ இம்மைக்கும், மறுமைக்கும் உரிய எல்லா வளங்களும், செல்வங்களும், நிரப்பீடும் அவருக்குள் உள்ளன. இது ஒரு இரகசியம். பிலிப்பியர் 4:13 ஆம் வசனத்திலே பவுல் சொல்வதுபோல “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு”. அதற்கு முந்தி 10, 11ஆம் வசனங்களிலே சொல்வதுபோல “எந்த நிலைமையிலும் மனரம்மியாமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்”. தமிழில் இரகசியம் என்ற வார்த்தை இல்லை. ஆங்கிலத்தில் “எந்த நிலையிலும் நான் மகிழ்ச்சியாயும், மனரம்மியமாயும் வாழ்வதற்குரிய இரகசியத்தைக் கற்றுக்கொண்டேன்” என்று இருக்கும். கிறிஸ்துவுக்குள் எல்லா வளங்களும் இருக்கின்றன. ஆனால் எல்லாரும் அந்த வளங்களாலும், அந்த செல்வங்களாலும், அந்த நிரப்பீட்டி னாலும் வாழ்ந்துவிடுவது இல்லை. ஆனால் வாழ முடியுமா? வாழ முடியும்.

ஒவ்வொரு குறிப்புக்கும் ஒரு ஜெபம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். “ஆண்டவரே! நீர் என்னைக் கிறிஸ்துவில் வைத்திருப்பதற்காக நன்றி. நான் ஆதாமிலோ, பழைய இனத்திலோ இல்லை. நான் புதிய இனத்திலே இருக்கிறேன்”. புதிய இனம், அந்தப் புதிய இனத்திற்கு பெயர் “கிறிஸ்து”. நான் அங்கு இருக்கிறேன். இந்தப் பூமியிலே இதைவிட ஒரு உயர்ந்த நன்மையும், ஆசீர்வாதமும் வேறு எதுவும் இருக்க முடியாது.

இரண்டாவது, “ஆண்டவரே, இந்தக் கிறிஸ்துவிலுள்ள வளங்களையும், செல்வங்களையும், நிரப்பீட்டை யும் அனுபவமாக்குவதற்கும், அனுபவிப்பதற்கும் அந்த இரகசியத்தை உம்முடைய பரிசுத்த ஆவியினாலே கற்றுத்தாரும்,” என்று நாம் ஜெபிக்க வேண்டும்.

மனிதர்களுக்கு வளங்களைப்பற்றிய இச்சைகளும், அச்சங்களும் உண்டு. இந்தப் பூமியிலே பல்லாயிரம் ஆண்டுகளாக பெட்ரோலியம் இருக்கிறது. இன்னும் எவ்வளவோ தாதுப்பொருட்கள் இந்தப் பூமியிலே இருக்கின்றன. ஆனால், இப்போதுதான், இந்தக் கடந்த நூற்றாண்டில்தான், பெட்ரோலியத்தைக் கண்டு பிடித்து அதை அவர்கள் அனுபவிக்கிறார்கள். இல்லையா? இத்தனை ஆயிரம் ஆண்டுகள் அந்தப் பெட்ரோலியம் அங்கேதான் இருந்தது.

அதுபோல கிறிஸ்துவுக்குள், பெட்ரோலியம் அல்ல, இதுபோன்ற பலகோடி மடங்கு வளங்கள் உள்ளன. ஆனால், தேவனுடைய மக்கள் அந்த வளங்களை அறியவில்லை. அவர்களைப் பொறுத்தவரை இயேசு கிறிஸ்து பாவங்களை மன்னிப்பார். இந்த உலகத்திலே ஒரு வேலையைத் தருவார். பணம் தருவார் என்பதுபோன்ற சில நன்மைகளுக்காகத்தான் அவர்கள் இயேசுகிறிஸ்துவினிடத்தில் வருகிறார்கள். ஏனென்றால், அவர்கள் பொய்க் கடவுளர்களிடமும், புனை கடவுள்களிடம் போகும்போது எதற்காகத்தான் போகிறார்கள்? இப்படிப்பட்ட நன்மைகளுக்காகத்தான் போகிறார்கள். பொய்க் கடவுள் வழிபாடு அல்லது புனை கடவுள் வழிபாடு அல்லது போலிக் கடவுள் வழிபாடு. Worshipping false Gods. அவர்களிடம் எதற்காகப் போகிறார்கள்? இந்த உலகத்திலே ஒரு நன்மை வேண்டும் என்பதற்காக. பொய்க் கடவுள் வழிபாடு எந்த அளவுக்கு வலுவாக இருக்குமென்றால் “இந்த ஊருக்குப் போனால் குழந்தை பிறக்காதவர்களுக்கும் குழந்தை பிறந்துவிடும் அப்படி என்கிற special ஊர்கள் எல்லாம் உண்டு. தெரியுமா?; பொய் கடவுள் வழிபாடு. புனை கடவுள் வழிபாடு, போலி கடவுள் வழிபாடு இந்த உலகத்திலே ஒரு நன்மையை மட்டும் தேடும்.

கிறிஸ்துவிலுள்ள அந்த வளங்களும், செல்வங்களும், நிரப்பீடும் இம்மைக்குரிய வாழ்க்கைக்கு மட்டுமல்ல, மறுமைக்குரிய வாழ்க்கைக்கும் போதுமானது. “தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும், இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது” (1 தீமோத்தேயு 4:8). முக்கியமான வசனம். “சரீரமுயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது. தேவபக்தியோ எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது”. “கிறிஸ்துவை விசுவாசித்ததினால் இந்தப் பூமியிலே நாங்கள் ரொம்ப தரித்திரராக இருந்தோம்,” என்று யாரும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இதை நான் எச்சரிக்கையோடு சொல்கிறேன். ஆனால், தேவைப்பட்டால் கிறிஸ்துவுக்காக நாம் நம்மைத் தரித்திரராக்கிக்கொள்ள வேண்டும் என்றுதான் 2 கொரிந்தியர் 8:9ஆம் வசனம் நமக்கு முன்னுதாரணம் வைக்கிறது. “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே. அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே”. இது நமக்கு முன்னுதாரணம். தேவன் நம்மைத் தரித்திரராகும்படி கட்டளையிடுவதில்லை. தேவனுடைய மக்களுக்காக, தேவனுடைய நற்செய்திக்காக, நம்மை யாராக மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்? அல்லது 2 கொரிந்தியர் 12ஆம் அதிகாரத்திலே பவுல் சொல்கிறதின் பொருள் என்ன? “உங்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும், செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன்” என்பதினுடைய பொருள் என்ன?

இது இரண்டாவது குறிப்பு. கிறிஸ்துவுக்குள் எல்லா வளங்களும் உள்ளன. ஆனால், தேவனுடைய மக்கள் அதைக் கண்டுபிடிக்கவில்லை. அது உண்மை. நாம் எதின்மேல் நம் கண்ணைப் பதிக்கிறோமோ அதைத்தான் நாம் பெறுவோம். மண்ணின்மேல் கண்ணை வைத்தால் மண்ணைப் பெறுவோம். விண்ணின்மேல் கண்ணை வைத்தால் விண்ணைப் பெறுவோம். இது உண்மை. உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ உங்கள் இருதயமும் அங்கே இருக்கும். இந்தப் பூமியிலே ஒரு வீடு வேண்டுமென்றால், அதுதான் பொக்கிஷம் என்று கருதினால், உங்கள் இருதயம் அங்குதான் இருக்கும். அது கிடைத்தவுடனே “கர்த்தர் எங்களை ஆசீர்வதித்துவிட்டார்,” என்று சொல்வார்கள்.

கார்களில்; “என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும்” என்று வசனம் எழுதிப் போட்டிருப்பார்கள். அதை நான் ஒத்துக்கொள்ளவே மாட்டேன். தேவன் தம் பிள்ளைகள் எல்லாரையும் பாதுகாக்கிறார். ஆனால், அந்த வசனம் எதற்குரியதென்றால் கர்த்தருக்காக, கிறிஸ்துவுக்காக, அவருடைய நற்செய்திக்காக எல்லாவற்றையும் இழந்து மோசேயைப்போல ஒரு மனிதன் எல்லாவற்றையும் இழந்துவிட்டு தன்னால் சுமக்க முடியாத ஒரு சுமையைத் தன் தோள்மேல் போட்டுக்கொண்டு தேவனிடத்தில் கதறுகிறான் இல்லையா? “நீர் எனக்கு முன்பாய்ச் செல்லாவிட்டால் இந்தப் பொறுப்பு, இந்தச் சுமை, இந்தப் பாடுகள், இந்த வேலைகள் இதையெல்லாம் என்னால் செய்ய முடியாது, ஆண்டவரே,” என்று அவன் கதறும்போது, அழும்போது, அவனுக்குத் தேவன் கொடுகிற ஆறுதல் என்ன? “கவலைப்படாதே; என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும். நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன். உன்னால் சுமக்க முடியாத பொறுப்புதான். ஆனால், நீ கவலைப்படாதே,” என்பது தேவன் அவனுக்குச் சொன்னது. சென்னை ரோட்டிலே விபத்துகள் நடக்காமல் இருப்பதற்கு கர்த்தர் இந்த வாக்குகளைக் கொடுத்திருக்கிறார் என்பதுபோல் பயன்படுத்துவதை என்னால் ஒருநாளும் ஒத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் காரை ஓட்டிக்கொண்டு பரிசுத்த ஆவியானவர் சொல்கிற இடத்திற்கு மட்டும்தான் போகிறேனா? அப்படி ஒரு மனிதன் பரிசுத்த ஆவியினால் ஆளப்படுவான் என்றால், “கர்த்தர் சொல்லாமல் ஒரு இடத்திற்கு நான் போகமாட்டேன். நீர் சொன்னால் போவேன். சொல்லாவிட்டால் போவதில்லை,” என்பதுபோல் நடப்பான் என்றால், அப்படி நடக்கிற ஆளென்றால் அவன் தன் காரிலே அந்த வசனத்தை எழுதிப்போட்டுக்கொள்ளலாம். நான் அந்த நிலையை எட்டவில்லை. ஆகவே, இந்த வசனத்தை காரிலே எழுதிப்போட மாட்டேன். என்னுடைய காரிலே; “Obey traffic rules” என்று எழுதிப்போடுவேன். “போக்குவரத்து விதிகளுக்குக் கீழ்ப்படிவோம். மகிழ்ச்சியோடு வாழ்வோம்”.

இச்சைகள் உண்டு. என்ன இச்சைகள் என்றால் சில நாடுகளிலே பெட்ரோலியம் இருக்கும். ஆனால் அவர்கள் அதைத் தொட மாட்டார்கள். ஏனென்றால், “அடுத்த தலைமுறைக்கு, அடுத்தடுத்த தலை முறைக்கு, அடுத்தடுத்த தலைமுறைக்கு எங்கள் நாட்டிலேயே உள்ள பெட்ரோலியம் வேண்டும்;. ஆத னால் நாங்கள் வேறே நாட்டிலிருந்து பெட்ரோல் எடுத்துக்கொள்வோம்,” என்பது இச்சை. தேவன் நமக்குப் போதுமான வளங்களை வைத்திருக்கிறார். ஆனால், மனிதன் தன்னுடைய இச்சையினால் பாவம் செய்கிறான்.

அதுபோல, இது கிடைக்காமல் போய்விட்டால், அது கிடைக்காமல் போய்விட்டால் என்ற அச்சங்கள் உண்டு. ஆனால், கிறிஸ்துவுக்குள் போதுமான, நிறைவான வளங்கள் உண்டென்று தேவனுடைய வார்த்தை நமக்குத் தெள்ளத்தெளிவாகக் கூறுகிறது.

பழைய ஏற்பாட்டிலே அதேபோல ஒரு அருமையான, ஒரு powerful ஆன உதாரணத்தைத் தேவன் வைத்திருக்கிறார். அந்த நாளுக்கு எவ்வளவு மன்னா தேவையோ அதைமட்டும் சேகரித்தால் போதும் என்பது எதைக் காட்டுகிறது என்றால் கிறிஸ்துவுக்குள் தேவன் நமக்குத் தந்துள்ள பரம வளங்களையும், செல்வங்களையும்பற்றி நாம் இச்சை கொண்டோ அல்லது அச்சத்தோடோ வாழ வேண்டிய அவசியமில்லை. அச்சத்தினாலே இன்னொரு நாளைக்குச் சேர்த்து வாரிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. இச்சையினாலே நாம் இன்றைக்குப் பலமடங்கு சேர்த்துக்கொண்டிருக்கிறோம். நாம் கிறிஸ்து என்கிற ஒரு நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறோம். இந்த நாட்டிலே இம்மைக்கும், மறுமைக்கும் போதுமான, நிறைவான வளங்கள் உள்ளன என்று 1 தீமோத்தேயு 4:8ஆம் வசனத்திலே வாசிக்கிறோம். அற்புதமான வசனம். அதனால் நாம் இம்மையிலேயே கண் வைக்கக்கூடாது. இம்மைக்கும் மறுமைக்கும் என்று வசனம் சொல்கிறது. நம்முடைய கண் எதிலே இருக்கக் கூடாது. இம்மையிலே இருக்கக் கூடாது.

3. கிறிஸ்துவில் நாம் கட்டப்படுதல்

மூன்றாவது, இந்த கிறிஸ்துவுக்குள் நாம் கட்டப்பட வேண்டும். என்னுடைய பாரத்தினுடைய மையக் கருத்திற்கு நான் வருகிறேன். நாம் கட்டியெழுப்பப்பட வேண்டும். 1 கொரிந்தியர் 3ஆம் அதிகாரம் கட்டியெழுப்பப்படுவதைப்பற்றிப் பேசுகிறது. கிறிஸ்துவுக்குள் உள்ள வளங்கள் எல்லாவற்றையும் தேவனுடைய மக்கள் அனுபவமாக்க வேண்டும், அனுபவிக்க வேண்டும்.

கவிதைக்காக நான் அடுக்குமொழி சொல்ல மாட்டேன். அனுபவமாக்குவது என்றால் “To Experience”. அனுபவிப்பது என்றால் “To enjoy”. பழைய காலத்திலே “வுழ நதெழல” என்பதை அனுபவித்துமகிழ்வது என்று மொழிபெயர்த்தது உண்டு. ஆனால், இந்த நாட்களிலே சுருக்கமாக்குவதற்காக “To experience” என்றால் அனுபவமாக்குவது, “To enjoy” என்றால் அனுபவிப்பது என்று மாற்றிக்கொண்டோம்.

கிறிஸ்துவோடும், பிற அவயவங்களோடும்

கிறிஸ்துவிலுள்ள இந்த வளங்களையும், செல்வங்களையும் நாம் அனுபவமாக்க வேண்டும். ஆனபவிக்க வேண்டுமென்றால் நாம் கிறிஸ்துவோடும், ஒருவரோடொருவரோடும் கட்டியெழுப்பப்பட வேண்டும். நான் சொன்னதை நன்றாகக் கவனித்தீர்களா? நாம் கிறிஸ்துவோடு கட்டியெழுப்பப்பட வேண்டும். ஒருவரோடொருவரோடும் கட்டியெழுப்பப்பட வேண்டும். இது என்ன புதிதான ஒரு கருத்து. தேவனிடத்தில் ஜெபிக்க வேண்டும். “தேவனே என்னை உம்மோடு கட்டியெழுப்பும். தேவனுடைய மக்களோடு, கிறிஸ்துவில் உள்ள யாவரோடும் அல்லது கிறிஸ்துவில் ஒருவரோடொருவரோடும் என்னைக் கட்டியெழுப்பும்,” என்று நாம் ஜெபிக்க வேண்டும்.

புதிய ஏற்பாட்டிலே இன்னொரு பயிற்சியை நான் உங்களுக்குத் தருகிறேன். புதிய ஏற்பாட்டில் “one another” என்கிற பதம் எத்தனை தடவைகள் வருகிறதென்று நீங்கள் கண்டுபிடியுங்கள்.

கிறிஸ்து எல்லாரிலும், எல்லாமுமாயிருக்கிறார்

கிறிஸ்துவை மையமாகவும், சுற்றுவட்டமாகவும் கொண்டு நாம் கட்டியெழுப்பப்பட வேண்டும். மையம் கிறிஸ்து, சுற்றுவட்டமும் கிறிஸ்துதான். மையம்முதல் சுற்றுவட்டம்வரையுள்ள நம்முடைய வாழ்க்கை, நாம் கிறிஸ்துவோடு கொண்டுள்ள அந்த உறவு, சரியாக இருக்க வேண்டும். இதனுடைய பொருள் என்னவென்று நான் சொல்கிறேனே. “அந்தப் புதிய மனிதனிலே கிரேக்கனென்றுமில்லை, யூதனென்றுமில்லை. விருத்தசேதனமுள்ளவனென்றுமில்லை, விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை. புறவினத்தானென்றுமில்லை, புறதேசத்தானென்றுமில்லை. அடிமையென்றுமில்லை. சுயாதீனனென்றுமில்லை. கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்” (கொலோசெயர் 3:11). கிறிஸ்துவிலே, இந்தப் புதிய மனிதனிலே, கிரேக்கனென்றுமில்லை, யூதனென்றுமில்லை. விருத்தசேதனமுள்ளவனென்றுமில்லை, விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை.

நம் தமிழ் வேதாகமத்தில் புறதேசத்தான், புறஜாதியான் என்று இருக்கும். நம் ஊரிலே ஜாதி என்பது பயங்கரமான வார்த்தை. தமிழ் வேதாகமம் அந்தப் பொருளில் சொல்லவில்லை. அதைச் சரியாகச் சொல்வதானால் “புறவினத்தானென்றுமில்லை, புறதேசத்தானென்றுமில்லை; அடிமையென்றுமில்லை, சுயாதீனனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்”. கிறிஸ்து எல்லாரிலும் இருக்கிறார்; எல்லாமுமாய் இருக்கிறார்.

இன்றைக்குக் கிறிஸ்து ஒரு சில காரியங்களாக இருக்கிறார். ஆனால், எப்படியிருக்க வேண்டும்? எல்லாமுமாக இருக்க வேண்டும். எல்லாமுமாக இருப்பதற்கு அவர் தகுதியும், நிறைவான தன்மையும், போதுமான தன்மையும் உள்ளவரா?

நான் பெட்ரோலியத்தை வைத்து யோசித்துப் பார்க்கிறேன். இவ்வளவு வளங்கள் இருக்க நம்முடைய முன்னோர்கள் சாதாரண ஆமணக்கு எண்ணையில் விளக்கு வைத்துக்கொண்டு எவ்வளவு நூற்றாண்டுகள் வாழ்ந்திருக்கிறார்கள் இல்லையா? தேவனுடைய மக்கள் அதுபோலவே இன்னும் வாழ்கிறோமோ! கிறிஸ்துவில் இவ்வளவு வளங்கள் இருக்கும்போது நாம் ஆமணக்கு எண்ணெயிலே விளக்குவைத்து வாழ்வதுபோல வாழ்கிறோம்.

ஆனால், இந்த வளங்களை அனுபவிக்க வேண்டுமென்றால் கிறிஸ்துவோடுள்ள உறவை நாம் எப் போதும் சரிப்படுத்த வேண்டும். ஒருவரோடொருவர் உள்ள உறவையும் நாம் சரிப்படுத்த வேண்டும். நீங்கள் இதற்காக ஜெபியுங்கள். ஒருவரோடொருவர் உள்ள உறவைப்பற்றி அவர் ஏன் சொல்கிறார்? புதிய ஏற்பாடு இதை மிகவும் வலியுறுத்திப் பேசுகிறது. குறிப்பாக எபேசியருக்கு எழுதின கடிதம், கொலோசெயருக்கு எழுதின கடிதங்களிலே கிறிஸ்து தலை என்கிற முறையிலே அவரோடுள்ள உறவை நாம் சரிப்படுத்த வேண்டும். மற்ற உறுப்புகளோடு, கிறிஸ்துவின் சரீரத்திலுள்ள மற்ற உறுப்புகளோடு, மற்ற பகுதிகளோடு, மற்ற அவயவங்களோடுள்ள உறவையும் நாம் சரிப்படுத்த வேண்டும். வேதத்திலே பல வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

சேர்ந்து வாழ்தல்

நாம் சேர்ந்து வாழ வேண்டும் என்று அழைக்கப்பட்டிருக்கிறோம். Together என்கிற வார்த்தை புதிய ஏற்பாட்டிலே எத்தனை தடவை வருகிறது என்று பாருங்கள். “One another”, “Together”, “In Christ” என்கிற வார்த்தைகளெல்லாம் ரொம்ப முக்கியமான பதங்கள். இந்த “Together” அல்லது “One another” என்பது கூட்டு வாழ்க்கையைக் குறிக்கிற வார்த்தை. தேவனுடைய மக்களாகிய நாம் சேர்ந்து வாழுமாறு அழைக்கப்பட்டிருக்கிறோம். சில காரியங்களைத் தனியாகச் செய்ய முடியாது. சேர்ந்துதான் செய்ய முடியும். பிள்ளைகளை ஒரு தகப்பனோ அல்லது ஒரு தாயோ தனியாக வளர்க்க முடியுமா? அதனுடைய முடிவு “disaster” ஆக இருக்கும். இந்த பெரிய மேசையை ஒரு ஆள் தனியாக தூக்க முடியுமா? இதுபோல கிறிஸ்துவுக்குள்ளான ஒரு வாழ்க்கை நாம் சேர்ந்துதான் வாழ முடியும்.

பகிர்ந்து வாழ்தல்

அதுபோல பகிர்ந்துகொள்கிற வாழ்க்கை. எல்லாவற்றையும் அவர்கள் பொதுவாய் வைத்து அனுபவித்தார்கள். உடனே எல்லாரும் கொண்டு வாருங்கள். உங்கள் செயின், நகை, கம்மல் எல்லாவற்றையும் கழற்றி போட்டுவிட்டுப் போய்விடுங்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால், பகிர்ந்துகொள்கிற வாழ்க்கை தேவனுடைய மக்களுக்கு வேண்டும். நன்றாய்க் கவனிக்க வேண்டும். பகிர்ந்துகொள்ளாத வாழ்க்கை கிறிஸ்துவின் வளங்களை நமக்குள் கொண்டுவராது.

பரிமாறி வாழ்தல்

பேசுகிற ஒரு கொடை ஒருவனுக்கு இல்லையென்றால் அவனை வற்புறுத்தி “நீ, பேசித்தான் ஆக வேண்டும்,” என்று கட்டாயப்படுத்த முடியுமா? எடுத்துக்காட்டுக்கு சொல்கிறேன். அப்படிச் சொல்லக் கூடாது. கொடைகளிலே வேறுபாடு உண்டா, இல்லையா? உண்டு. ஒரு சகோதரனுக்கோ, ஒரு சகோதரிக்கோ ஒரு கொடை இல்லாதபோது வலுக்கட்டாயமாக பாடித்தான் ஆக வேண்டும், பேசித்தான் ஆக வேண்டும் என்று சொல்வது தவறு. ஆனால், இன்னொரு பக்கம், நாம் பயிற்சி செய்யும்போதுதான், பழகும்போதுதான் கொடை இருக்கிறதா இல்லையா என்பதும் தெரியவரும். ஒரு குழந்தை பாடுவதற்கு வாய்ப்பு உருவாக்கி கொடுக்க வேண்டும். அப்போதுதான் பாடுகிற கொடை இருக்கிறதா என்று தெரிய வரும். “எனக்கு சைக்கிள் ஓட்டுகிற கொடை இல்லை,” என்று எல்லாப் பிள்ளைகளும் சொல்வார்கள். சைக்கிளில் உட்கார வைக்க வேண்டும். “எனக்கு நீந்துகிற கொடை இல்லை,” என்று எல்லாரும் சொல்வார்கள். நாம் என்ன செய்ய வேண்டும்? தண்ணீருக்குள் தள்ளிவிட வேண்டும்.

பகிர்ந்துகொள்வது நம்முடைய வாழ்க்கையினுடைய ஒரு பகுதியாக இருக்க வேண்டும். “என்னுடைய கொடை இவ்வளவுதான் இருக்கிறது, என்னுடைய வளர்த்தி இவ்வளவுதான் இருக்கிறது,” என்று சொன்னாலும் சரி, எவ்வளவு கொடை இருந்தாலும் சரி, வளர்த்தி இருந்தாலும் சரி வேலை கொடுக்கலாமா, கொடுக்கக் கூடாதா? கொடுக்க வேண்டும். அவரவர்களுடைய வளர்த்திற்கு தங்கள் பொறுப்பையும், இன்னும் சொல்லப்போனால் உங்கள் பொறுப்பை மட்டுமல்ல. பிறருடைய பொறுப்பையும் கொஞ்சம் சேர்த்து வாழ வேண்டும். பணிவிடை செய்ய வேண்டும்; பகிர்ந்து வாழ வேண்டும்; ஒருவருக்கொருவர் பரிமாற வேண்டும்.

கிறிஸ்துவினுடைய செல்வங்கள் இருக்கிறது இல்லையா? அதெல்லாம் நம்முடைய வாழ்க்கையிலே நம்மைப்போல அனுபவித்தவர்கள் வேறு யாரும் இருக்கக் கூடாது. அல்லேலூயா! நான் அனுபவித்தேன் என்பதற்கு ஒரே நிரூபணம் என்ன? வழங்குவதுதான் நிரூபணம். நான் அனுபவிக்கிறேன். ஆனால் மற்றவர்கள் கிறிஸ்துவின் வளங்களை என்மூலமாய் அனுபவிப்பது இல்லையென்றால் அவன் சொல்வது பொய்.

சுமந்து வாழ்தல்

“ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்,” என்று பவுல் கூறுகிறார் (கலாத்தியர் 6:2). சுமக்க வேண்டும். ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து என்பதின் பொருள் என்னவென்று கேட்டால் கூடி வாழும்போது கண்டிப்பாகக் குறைகள் இருக்கும். தயவு செய்து உங்களிடையே போர்டு எழுதி வைத்துக்கொள்ளுங்கள். ஒருவரோடொருவர் உள்ள உறவை நாம் சரிசெய்துகொள்ள வேண்டும் என்பதற்காக சகோதர சகோதரிகளெல்லாம் அப்படியே தேவ தூதர்கள் என்று எண்ணிவிட வேண்டாம். நம்முடைய சகோதர சகோதரிகளெல்லாம் தேவதூதர்கள் இல்லை. எலியாவைப்பற்றிச் சொல்லும்போது “அவன் பாடுள்ள மனிதன்” என்று சொல்லியிருக்கிறது. அவ்வளவு பெரிய எலியாவையே “பாடுள்ள மனிதன்” என்று சொல்லும்போது நம்மைபற்றி என்ன சொல்வார்? மகா பாடுள்ள மனிதர்கள் இவர்கள்! ஒருவர் குறையை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள். ஒருவர் தவறை ஒருவர் சகித்துக்கொள்ளுங்கள். “நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எவ்விதத்திலும் குற்றமாயிருக்கிறது. அப்படிச் செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக்கொள்ளுகிறதில்லை? ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளுகிறதில்லை? நீங்களே அநியாயஞ் செய்கிறீர்கள், நஷ்டப்படுத்துகிறீர்கள்; சகோதரருக்கும் அப்படிச் செய்கிறீர்களே!” (1 கொரிந்தியர் 6:7, 8). ஒரு சகோதரன் எனக்கு நட்டப்படுத்தினால் நான் என்ன செய்ய வேண்டும்? ஒரு சகோதரனோ, சகோதரியோ-அது என்னுடைய கணவனாகவோ, மனைவியாகவோ, பிள்ளைகளாகவோ இருக்கலாம். அவர்களும் நம்முடைய சகோதர சகோதரிகள்தான்-நட்டப்படுத்தினால் நாம் என்ன செய்ய வேண்டும் என்று 1 கொரிந்தியர் 6ஆம் அதிகாரம் கூறுகிறது. 1 கொரிந்தியர் 6 என்ன சொல்கிறது? ஒரு சகோதரன் உனக்கு நட்டப்படுத்தினால், உனக்கு இழப்பு ஏற்படுத்தினால் நீ என்ன செய்ய வேண்டும்? சகித்துக்கொள்ள வேண்டும். முழு புதிய ஏற்பாட்டின் வெளிச்சத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று நான் கேட்கவில்லை. 1 கொரிந்தியர் 6 சொல்கிறது: உங்களில் சிறியவர்கள் யாரும் இல்லையா? உங்களில் சிறியவர்கள் உங்கள் வழக்குகளை தீர்த்துவிடுவார்கள். எப்படி வழக்கைத் தீர்ப்பார்? ரொம்ப எளிது. “பிரதர், சகித்துக்கொள்ளுங்கள்,” என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார். அது சரியான தீர்ப்பா, இல்லையா? சரியான தீர்ப்பு. நீங்கள், “பிரதர், உங்கள் பின்புலத்தைச் சொல்லுங்கள். யார் முதலில் பேசினது? ஓ! அவர்தான் முதலில் பேசினார்,” என்கிற பாணியில் நாம் வழக்கை விசாரிக்க ஆரம்பித்தால் நாம் கட்டியெழுப்பப்பட முடியாது. “எனக்கு அவர் நட்டத்தை உண்டுபண்ணிவிட்டார்,” என்று சொன்னால் சகோதரர்கள் “சகித்துக்கொள்ளுங்கள்” என்று சொல்ல வேண்டும். “நான் நட்டப்படுத்தினேன்,” என்று யாருமே சொல்ல மாட்டோம்.

ஆகவே, அருமையான சகோதரர்களே! கிறிஸ்துவோடும், ஒருவரோடொருவரோடும் உள்ள உறவை நாம் சரிசெய்துகொள்ள வேண்டும். சரிசெய்துகொள்ள வேண்டும் என்று நான் சொன்ன வார்த்தையைக் கவனிக்க வேண்டும். 

1. ஒன்று, சேர்ந்து வாழ வேண்டும். 

2. இரண்டு, பகிர்ந்துகொள்ள வேண்டும். 

3. மூன்று, பரிமாற வேண்டும். 

4. நான்கு, சுமக்க வேண்டும். சுமப்பது என்றால் என்னுடைய பொறுப்பை மட்டுமல்ல. என்னுடைய சகோதரர்கள் தங்கள் பொறுப்பிலே தவறுகிறார்கள். என்ன செய்ய வேண்டும்? நடைமுறைக்குரிய எடுத்துக்காட்டு ஒன்று சொல்லுகிறேன். ஒருவர் கழிவறைக்குப் போய்விட்டு தண்ணீர் ஊற்றாமல் போய்விடுகிறார். நாம் என்ன செய்ய வேண்டும்? அப்படியே அந்தக் கழிவறையைவிட்டு வெளியே வந்து இரண்டுபேரைக் கூப்பிட்டு, “இங்கே பாருங்கள்; இவர் என்ன பண்ணியிருக்கிறார்?” என்று சொல்ல வேண்டுமா அல்லது நான் அதைக் கழுவி, பினாயில் ஊற்றி, டெட்டால் ஊற்றி, நன்றாகத் துடைத்து, காய வைத்து பின்னால் வருகிற சகோதரருக்கு அவர் எந்தக் குற்றமுமே செய்யாதவர்போல செய்துவிட்டுப்போக வேண்டுமா?

4. கிறிஸ்து ஒரு பரம அமைப்புமுறை

அருமையான பரிசுத்தவான்ளே! நான்காவது, கிறிஸ்து ஒரு மாபெரும் அமைப்புமுறை, ஒரு பரம அமைப்புமுறை. தேவனுடைய மக்களாகிய நாம் கூடிவாழும்போது சட்டதிட்டங்கள் போட்டு எல்லாரையும் இருத்திவிடலாம். பல ஏற்பாடுகள், பல அமைப்புமுறைகள் எல்லாம் செய்தால் ரொம்பப் பெரிய, கிறிஸ்துவினுடைய வளம் நிறைந்த நல்ல சபையாக மாறிவிடுவோமா? அதற்காக நம்மிடத்தில் ஏற்பாடுகளோ, அமைப்புமுறையோ இருக்கக்கூடாது என்று சொல்கிறோமா? இல்லை.

நான் கடைசியாகச் சொன்னேன். கிறிஸ்துவுக்குள்ளான அமைப்புமுறைக்கும், உலகத்து அமைப்பு முறைக்கும் வேறுபாடு இருக்கிறது. கிறிஸ்துவுக்குள் ஓர் அமைப்பு இருக்கிறதா? இருக்கிறது. நிறைய சொல்வேன். ஆனால், சுருக்கமாய்ச் சொல்கிறேன். எல்லா அமைப்பினுடைய மையத்திலும், உள்ஆழத் திலும் ஜீவன் இருக்க வேண்டும். ஜீவன் இருக்கிறதா இல்லையா என்று எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்று நீங்கள் கேட்கலாம். அதையும் நாம் நம்மிடத்தில் இருக்கிற நம்முடைய ஆவியினால் முகர்ந்து பார்த்து, கண்டுபிடிக்க வேண்டும்; விளைவுகளைப் பார்த்து நாம் கண்டுபிடிக்க வேண்டும், அவ்வளவு தான். அந்த நதி ஓடும் இடமெல்லாம் உயிர்கள் பிழைக்கும் என்று எசேக்கியேலிலே நாம் வாசிக்கிறோம். தேவனுடைய மக்களாகிய நாம் கிறிஸ்துவோடும், ஒருவரோடொருவரோடும் கூடி வாழும் போது நம்மோடு தொடர்புக்கு வருகிறவர்கள் அல்லது எல்லாருமே ஜீவனை அனுபவிக்க வேண்டும். இங்கு பரிசுத்த ஆவியானவருடைய ஆளுகை இருக்கிறதென்றால் மக்கள் ஜீவனை அனுபவிக்க வேண்டும். இங்கு கிறிஸ்து தலையாக இருக்கிறார் என்றால் மக்கள் ஜீவனை அனுபவிக்க வேண்டும். உண்மையிலேயே இங்கு எல்லாரும் சிலுவையின் வழியில் நடக்கிறார்கள் என்றால் மக்கள் ஜீவனை அனுபவிக்க வேண்டும்.

நான் மூன்று காரியங்கள் சொன்னேன். 1. ஒன்று, கிறிஸ்துவைத் தலையாகக்கொண்டு வாழ்கிறார்கள். 2. இரண்டு, பரிசுத்த ஆவியின் ஆளுகையின்கீழ் இருக்கின்றார்கள். 3. மூன்று, சிலுவையின் வழியில் நடக்கின்றார்கள். இந்தக் காரியங்களையெல்லாம் விவரமாய் இன்னொருமுறை பேசலாம். ஆனால் நான் சொல்ல வேண்டிய குறிப்பைச் சொல்லிவிட்டேன்.

தேவனுடைய மக்களாகிய நாம் கிறிஸ்துவோடும், ஒருவரோடொருவரோடும் ஒரு நேர்த்தியான உறவு கொண்டு, நேர்த்தியாக அமைக்கப்படும்போது உண்மையிலேயே நாம் தேவனுடைய வளங்களை, கிறிஸ்துவிலுள்ள தேவனுடைய வளங்களை நாம் அனுபவிப்போம்.

ஆசரிப்புக்கூடாரம்

இந்த நாளிலே நான் ஒன்றை யோசித்தேன். பழைய ஏற்பாட்டிலே ஆசரிப்புக்கூடாரம் என்று ஒன்று உண்டு. அந்த ஆசரிப்புக்கூடாரம் கிறிஸ்துவுக்கு ஒரு அடையாளம், கிறிஸ்துவுக்கு ஒரு நிழல், கிறிஸ்துவுக்கு ஒரு சித்திரம். தம்முடைய நன்மைகளையும், ஆசீர்வாதங்களையும் இந்தக் கிறிஸ்துவில் வைத்து, தம்முடைய பிள்ளைகள் எல்லாரும் கிறிஸ்துவின்மூலமாய் அவைகளைப் பெற வேண்டும், அனுபவிக்க வேண்டும் என்பதுதான் தேவனுடைய எண்ணம். இந்தக் கிறிஸ்து ஒருகூட்டம் மனிதர்களாகிய தேவனுடைய மக்களுக்குள் உருவாகி, தேவனுடைய மக்களுக்குள் இருந்து பலருக்குள் உருவாகி, கிறிஸ்து வெளிப்பட வேண்டும். இந்தக் கிறிஸ்துவை முதலில் வெளிப்படுத்த வேண்டும். இந்தக் கிறிஸ்துவை ஒரு கூட்டம் மக்கள் கண்டுகொள்ள வேண்டும். இந்தக் கிறிஸ்துவால் வாழ வேண்டும். இந்தக் கிறிஸ்து அவர்களுக்குள் உருவாக்கப்பட வேண்டும். கிறிஸ்துவை அவர்கள் மற்றவர்களுக்கு வழங்க வேண்டும். கிறிஸ்து அவர்கள்மூலமாய் பலருக்கு வெளியாக்கப்பட வேண்டும் என்பதுதான் ஆசரிப்புக்கூடாரம்.

இந்த ஆசரிப்புக்கூடாரத்தை எப்படிக் கட்டுவது என்ற துல்லியமான கையேடு பழைய ஏற்பாட்டில் இருக்கிறதா, இல்லையா? மலையிலே ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டுவது எப்படி என்கிற ஒரு கையேட்டை தேவன் மோசேக்குக் கொடுத்துவிட்டார். எனக்கு ஒரு எண்ணம் வந்தது. இந்தக் கையேட்டை, மோசேயினுடைய கையேட்டை, எடுத்துக்கொண்டுபோய் பெலிஸ்தர்கள்கூட அந்த ஆசரிப்புக்கூடாரத்தைக் கட்ட முடியுமா, முடியாதா? அக்கேசியா மரத்தைப் பயன்படுத்த வேண்டும். நீல நிற நூலைப் பயன்படுத்த வேண்டும். இந்தவிதமான பட்டு நூலைப் பயன்படுத்த வேண்டும். சிவப்பு நூல் இவ்வளவு நீளத்தில் இருக்க வேண்டும். வெள்ளி முட்டு இருக்க வேண்டும். பொன் கிண்ணம் இருக்க வேண்டும் என்பதுபோன்ற எல்லா விவரங்களும் கையேட்டில் இருக்கின்றன. ஒரு பெலிஸ்தர் கையிலே இந்தக் கையேடு கிடைத்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம். “அதில் சொல்லப்பட்டுள்ளபடி செய்தால் கடவுள் நம்மோடுகூட இருப்பார். அப்போது கடவுளுடைய வளங்களையெல்லாம் நாம் அனுபவிக்கலாம்” என்று சொல்லி இந்த கையேட்டை வைத்து பெலிஸ்தர்கள் ஒரு ஆசரிப்புக்கூடாரத்தைக் கட்ட முடியுமா, முடியாதா? முடியும். தேவன் இருப்பாரா, இல்லையா என்பது அடுத்த கேள்வி. முதல் கேள்வி: அப்படி ஒரு ஆசரிப்புக்கூடாரத்தைக் கட்டியெழுப்ப முடியுமா, முடியாதா? முடியும். பெலிஸ்தர்கள் போய் ஆசரிப்புக்கூடாரத்தை கட்டினவுடனே தேவன் மயங்கி, “இது மோசே கட்டின ஆசரிப்புக்கூடாரமா அல்லது பெலிஸ்தர் கட்டின ஆசரிப்புக்கூடாரமா என்று வித்தியாசமே தெரியவில்லையே!” என்று தவறான ஆசரிப்புக்கூடாரத்திலே வந்து தங்கிவிட மாட்டார். தேவன் தங்க மாட்டார்.

இரண்டாவது, அகோலியா, பெசலெயேல் ஆகிய இரண்டு பேருக்கும் ஆசரிப்புக்கூடாரத்தைக் கட்டுவதற்கு தேவன் ஞானத்தைக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறது இல்லையா? ஒருவன் பெயர் பெசலெயேல், இன்னொருவர் அகோலியாப். எல்லாவிதமான சித்திர வேலைப்பாடும் செய்வதற்கு தேவன் இரண்டுபேரையும் ஞானத்தினாலும், ஆவியினாலும் நிறைத்தார். பெலிஸ்தரிலேயும் அந்த மாதிரி ஞானமும், அறிவுமுள்ள ஒருவர் இருந்தார் என்று வைத்துக்கொள்வோம். ஏறக்குறைய பெசலெயேலுக்கு சமமான ஒருவன். அவனும் அப்படியே செய்துவிடுகிறான் என்று வைத்துக்கொள்வோம்.

எவ்வளவு ஒழுங்குமுறைகளையும், அமைப்புமுறைகளையும், ஏற்பாடுகளையும் செய்கிறார்கள். இல்லையா? எல்லாம் அதினதின் இடத்திலே இருக்கும். பலகைகளெல்லாம் ஒன்றோடொன்று இசைந்து நிற்க வேண்டும். எவ்வளவு நெருக்கமான, துல்லியமான ஏற்பாடுகளைச் செய்கிறார்?

கிறிஸ்துவுக்குள் ஏற்பாடு அவசியம். ஒன்றேவொன்றைச் சொல்லிவிடுகிறேன். அந்த ஆசரிப்புக்கூடாரத்தின் மையத்திலே புலப்படுகிற பொருள் என்ன இருந்தது? உடன்படிக்கைப்பெட்டி இருந்தது. மகா பரிசுத்த ஸ்தலம் இருளாக இருக்கும். அங்கே வெளிச்சமே இருக்காது. எந்த விளக்கும் கிடையாது. ஆனால், அங்கே ஒரேவொரு விளக்கு இருக்கும். தேவனே அங்கு விளக்காக இருப்பார். முழு இருளாக மாற்றிவிட்டு அங்கே வந்து வெளிச்சமாக இருக்க வேண்டுமென்றால் தேவனே வந்து தங்கினால் தான் அங்கு வெளிச்சம் இருக்கும். மற்றபடி வெளிச்சத்தை நம்மால் உற்பத்திபண்ண முடியாது. வசனத்தைப் பேசலாம். மடக்கி மடக்கி வசனத்தைப் பேசலாம். ஆனால் பரிசுத்த ஆவியானவர் உள்ளாக ஒளிராவிட்டால், பிரகாசிக்காவிட்டால், அங்கு எந்த வெளிச்சமும் இருக்காது.

அந்த உடன்படிக்கைப்பெட்டிக்குள் மூன்று பொருட்கள் இருந்தன. மன்னா, ஆரோனுடைய துளிர்த்த கோல், பத்துக் கட்டளைகள் எழுதப்பட்ட கற்பலகைகள். இதைப் பெலிஸ்தர்கள் செய்ய முடியுமா? பெலிஸ்தர்கள் மன்னாவைப் பொற்பாத்திரத்தில் வைக்க முடியுமா? வைக்க முடியும். வைத்தால் அந்த உணவு என்ன ஆகிவிடும்? மனிதர்கள் செய்கிற எல்லா உணவும் என்ன ஆகிவிடும்? அழிந்துபோய் விடும். அதைப் பெலிஸ்தர்கள் செய்ய முடியாது. வறண்டு காய்ந்த ஒரு கம்பு பூ பூத்து, கனி கொடுத்தது; அப்படி ஒரு கம்பை உங்களால் செய்ய முடியுமா? செய்ய முடியாது. பொற்பாத்திரத்தில் மன்னா வைக்க வேண்டும் என்று கையேடு சொல்லுகிறது. ஆனால், மன்னா வைத்தால் அடுத்த நாளே பெட்டியிலே என்ன வர ஆரம்பித்துவிடும்? பத்துக் கட்டளைகள் எழுதின கற்பலகைகள் வைத்துவிட வேண்டும். கற்பலகைகளில் யார் எழுதுவது? அதை எழுதியது யார்? தேவனே எழுதினார். “நாங்கள் ஒரு சபை செய்துவிட்டோம். மூப்பர்கள் இருக்கிறார்கள். உதவிக்காரர்கள் இருக்கிறார்கள். ஆராதனை ஒழுங்குமுறையெல்லாம் இருக்கிறது. அதற்குப்பிறகு கூட்டங்கள் இருக்கிறது. எல்லாம் சரியாக, perfect ஆக ஒழுங்கு பண்ணியாயிற்று,” என்பது பெலிஸ்தர்கள் வந்து, “எல்லாம் கடவுள் கொடுத்த கையேட்டின்படி கட்டியாயிற்று,” என்று சொல்வதற்கு அடையாளம்.

ஜீவனும், ஆசீர்வாதமும் தேவனுடைய மக்கள் எந்த அளவுக்கு கிறிஸ்துவோடும் ஒருவரோடொருவரோடும் உள்ள உறவிலே நேர்த்தியாக இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. கிறிஸ்து அங்கு தலை யாக இருக்கிறாரா? பரிசுத்த ஆவியினுடைய ஆளுகையின்கீழ் தேவனுடைய மக்கள் அங்கு வாழ்கிறார் களா? ஒருவரோடொருவர் உள்ள உறவிலே சிலுவையின்வழியில் அவர்கள் நடக்கிறார்களா? நன்றாகக் கவனிக்க வேண்டும். ஒருவரோடொருவர் உள்ள உறவு என்றால் இதெல்லாம் நாம் ஒருவரோடொருவர் எப்படித்தான் நேர்த்தியான உறவுகொண்டு பகிர்ந்துகொள்ள முடியும்? சேர்ந்துவாழ வேண்டும், பரிமாற முடியும், சுமக்க முடியும், பொறுக்க முடியும். கிறிஸ்துவின் தலையின்கீழ் வாழ்ந்தால்தான் அது முடியும். பரிசுத்த ஆவியானவரின் ஆளுகையின்கீழ் இருந்தால்தான் அது நடக்கும். சிலுவையின் வழியை நாம் மனமுவந்து ஏற்றுக்கொண்டால்தான் அது முடியும். சகித்துக்கொள்ளுங்கள் என்று யாராவது சொன்னால்;, “நான் மீசையை முறுக்குவேன். நான்தான் சகிக்கணுமா? சகித்துக்கொள்ளுங்கள்; என்று ஏன் அவனுக்குச் சொல்லக்கூடாது. எத்தனை தடவை நான் சகிக்கிறது? அவனுக்கு ஏன் ஒரு தடவைகூட சகியுங்கள் என்று சொல்லமாட்டேன் என்கிறீர்கள்,” என்ற கேள்விளெல்லாம் வருமா, வராதா? ஆனால், இந்தக் கேள்விகள் சிலுவையின் வழியாக உள்ளேபோய் வெளியே வருமா? இந்தக் கேள்விகளெல்லாம், “நான்தான் சகிக்க வேண்டுமா? ஏன் அவர்கள் சகிக்கக் கூடாது? எத்தனை தடவை நான் சகிக்கிறது?” என்ற கேள்விகளெல்லாம் சிலுவையைத்தாண்டி போகுமா? போகாது. சிலுவை ஒரு மாபெரும் “filter”. அந்த “filter” இந்தக் கேள்விகளையெல்லாம் வடிகட்டி வெளியே அனுப்பிவிடும். இயற்கையான இதனுடைய நுணுக்கமான, ஆழமான, ஆணித்தரமான கேள்விகளெல்லாம் சிலுவையின்வழியாகப் போக வேண்டும். அது இயற்கையான மனிதனுக்கு மிகவும் துன்பமாக இருக்கும். சகிக்க முடியாது.

அருமையான சகோதர, சகோதரிகளே! கிறிஸ்துவிலுள்ள பரம அமைப்புமுறை என்று நான் நான்கு குறிப்புகளைச் சொன்னேன். 

1. முதலாவது, விசுவாசிகள் கிறிஸ்துவில் உள்ளோம்.  

2. இரண்டாவது, கிறிஸ்துவில் பரம வளங்களும், செல்வங்களும், நிரப்பீடும் உள்ளன. 

3. மூன்றாவது, இந்த கிறிஸ்துவில் நாம் கட்டியெழுப்பப்பட வேண்டும். 

4. நான்காவது, கிறிஸ்துவில் கட்டியெழுப்பப்படுகிற இந்த அமைப்புமுறை, உலக அமைப்புமுறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. 

நாம் இன்றைக்கு என்ன செய்துகொண்டிருக்கிறோம்? உலகலாவிய சபைகளுக்கும், நமக்கும் என்ன வேறுபாடு? நாம் ஒன்றும் உயர்வானவர்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால், நாம் எதை வேறுபடுத்திக் காண்பிக்கிறோம், வேறுபடுகின்ற காரியங்கள் என்ன என்பதை நாம் துல்லியமான வார்த்தைகள் வடிவில் கொடுக்க வேண்டும். தேவனுடைய மக்களாகிய நாம் கிறிஸ்துவிலுள்ள இந்த செல்வங்களின் நிஜத்தில், செல்வங்களின் மெய்ப்பொருளில், மெய்மையில் வாழ்வதற்கு தேவன் நமக்கு அவருடைய பரிசுத்த ஆவியினால் உணர்த்துவாராக, வழிநடத்துவாராக, போதுமான கிருபை தருவாராக.