Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

மறைவான கிறிஸ்து

Transcribed from a message spoken in November 2013 in Chennai

By Milton Rajendram

“ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டால், “ஓரளவுக்குத் தெரியும். ஆனால், பெருவாரியாகத் தெரியாது,” என்றுதான் பதில் சொல்ல வேண்டும். யோவான் ஸ்நானன் இயேசு கிறிஸ்துவைப்பற்றி, “நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார்,” (யோவான் 1:26) என்று சொன்னார். அன்று இஸ்ரயேல் மக்கள் நடுவிலே இயேசு எப்படி ஒரு அறியப்படாத நபராக நின்றுகொண்டிருந்தாரோ, அதுபோல இன்று அவர் தேவனுடைய மக்களுக்கிடையேயும், மக்கள் நடுவிலேயும், பெரும்பாலான அளவுக்கு அறியப்படாதவராகவே இருக்கிறார். நம்மைப் பொறுத்தவரையில், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து அறியப்படாதவராகவே இருக்கிறார். தேவனுடைய மக்கள் என்று நான் வேறு யாரையோ சொல்லவில்லை; இங்கு இருக்கிற நம்மையே நான் குறிப்பிடுகிறேன்.

பரிசுத்த ஆவியானவரின் பிரதானமான வேலை

தேவன் பரிசுத்த ஆவியானவரை நமக்குத் தந்திருப்பதற்கு முதன்மையான நோக்கம், பிரதானமான நோக்கம், இயேசுகிறிஸ்துவை அவருடைய எல்லா மகிமையிலும் அவர் எப்படிப்பட்டவர் என்று ஒவ்வொரு நாளும் நமக்குக் காண்பிப்பதற்காகவே. குறிப்பாக நம்முடைய வாழ்க்கைச் சூழ்நிலைகளிலே இயேசு கிறிஸ்து என்னவாக இருக்கிறார், எப்படிப்பட்டவராக இருக்கிறார், என்பதைக் காண்பிப்பதுதான் பரிசுத்த ஆவியானவருடைய பிரதானமான வேலை என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொன்னார். “அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்” (யோவான் 16:14). `பரிசுத்த ஆவியானவர் இயேசுகிறிஸ்துவை மகிமைப்படுத்துவார். அந்த வாக்கியத்தின் பொருள் என்னவென்றால் இயேசுகிறிஸ்து எவ்வளவு அருமையானவர், மேன்மையானவர், மையமானவர், முதன்மையானவர் என்பதைப் பரிசுத்த ஆவியானவர் நம்முடைய வாழ்க்கைச் சூழ்நிலைவழியாக எடுத்துக்காட்டுவார்.

“சேபாவின் ராணி சாலொமோனுடைய சகல ஞானத்தையும், அவன் கட்டின அரண்மனையையும், அவன் பந்தியின் போஜனபதார்த்தங்களையும், அவன் ஊழியக்காரரின் வீடுகளையும், அவன் உத்தியோகஸ்தரின் வரிசையையும், அவர்கள் வஸ்திரங்களையும், அவனுடைய பானபாத்திரக்காரரையும், அவன் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும் நடைமண்டபத்தையும் கண்டபோது அவள் ஆச்சரியத்தால் பிரமைகொண்டு, ராஜாவை நோக்கி: உம்முடைய வர்த்தமானங்களையும் உம்முடைய ஞானத்தையும்குறித்து நான் என் தேசத்தில் கேட்ட செய்தி மெய்யாயிற்று. நான் வந்து அதை என் கண்களால் காணுமட்டும் அந்த வார்த்தைகளை நான் நம்பவில்லை. இவைகளில் பாதியாகிலும் எனக்கு அறிவிக்கப் படவில்லை என்று காண்கிறேன். நான் கேள்விப்பட்ட பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் உம்முடைய ஞானமும், செல்வமும் அதிகமாயிருக்கிறது,” (1 இரா. 10:5-7) என்று சொன்னாள்.

அதுபோல, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து எவ்வளவு அருமையானவர், எவ்வளவு மேன்மையானவர், எவ்வளவு மகத்தானவர் என்பதை ஒரு சிறிதளவு நாம் தெரிந்திருக்கிறோம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முகமுகமாய்ச் சந்திக்கிற அந்த மகிமையான நாளிலே நாமும், “ஆண்டவரே, நான் உம்மைப்பற்றிக் கேள்விப்பட்டதும், உம்மைப்பற்றி அறிந்ததும், உண்மையிலேயே உம்முடைய மகத்துவத்தின் பாதி இல்லை, கால் அளவுகூட இல்லை,” என்று சொல்ல நேரிடும். நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து அந்த அளவுக்கு மகத்துவமானவர், மிகப் பெரியவர். ஒருபக்கம் நாம் அவரை அறிந்திருக்கிறோம்; இன்னொரு பக்கம் நாம் அவரை அறியவில்லை.

மறைவான கிறிஸ்துவின் மகத்துவங்கள்

புரிந்துகொள்வதற்காக மூன்று குறிப்புகளைச் சொல்கிறேன். வேதத்தில் எல்லாவற்றையும் நாம் குறிப்பு குறிப்பாகக் கற்றுக்கொள்வதில்லை. வாழ்க்கையில் நாம் ஒரு புயல்வழியாகச் செல்கிறோம், வெள்ளத்தின் வழியாகச் செல்கிறோம். அப்போது நாம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைக் கற்றுக்கொள்கிறோம். “உண்மையிலேயே இயேசுகிறிஸ்து யார்? அவர் எவ்வளவு போதுமானவர், எவ்வளவு நிறைவானவர், எவ்வளவு திருப்தியானவர். இந்த நிலைமைக்கும் இந்தச் சூழ்நிலைக்கும் போதுமானவர்,” என்பதை நாம் வாழ்க்கையின் புயலிலும், வெள்ளத்திலும், அலைகள் நம்மேல் மோதும்போதும் நாம் கற்றுக்கொள்கிறோம். அப்படிக் கற்றுக்கொள்ளும்போது நாம் குறிப்பு குறிப்பாகக் கற்றுக்கொள்வதில்லை. ஆனால், விளங்குவதற்காக நான் அப்படிச் சொல்கிறேன். மூன்று காரியங்களைப்பற்றிச் சொல்கிறேன்.

  1. முதலாவது, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவன் நாம் ஆராய்ந்தறியமுடியாத வளங்களையும், செல்வங்களையும், ஆதாரங்களையும் வைத்திருக்கிறார். இயேசுகிறிஸ்துவில் இருக்கின்ற இந்தச் செல்வங்களால், வளங்களால், ஆதாரங்களால் மட்டுமே தேவனுடைய பிள்ளைகள் வாழ வேண்டும் என்பது தேவனுடைய திட்டம். 
  2. இரண்டாவது, இந்தத் திட்டத்தையும், குறிக்கோளையும், நோக்கத்தையும், நம்முடைய வாழ்க்கையில் நிறைவேற்றுவதற்கென்றே தேவன் நம்முடைய வாழ்க்கையிலே நம்மைச் சிறுமைப்படுத்தி, நம்மை வருத்தத்திற்குள்ளாக்குகிறார் (உபா. 8:3).
  3. மூன்றாவது, தேவன் நம்மை அப்படிச் சிறுமைப்படுத்தி வருத்தத்திற்குள்ளாக்கி குறைச்சலிலும், நெருக்கத்திலும் நம்மைக் கொண்டுவருவதின் நோக்கம், இயேசுகிறிஸ்துவிலுள்ள செல்வத்தையும், வளத்தையும், ஆதாரத்தையும் கேள்வி அறிவினால் பெறுவதற்காக அல்ல, மாறாக நாம் அனுபவித்து மகிழ்வதற்காகவே. 

1. கிறிஸ்துவில் ஆராய்ந்தறியமுடியாத ஐசுவரியங்கள்

நான் இதைச் சற்று விளக்க விரும்புகிறேன். பிதாவாகிய தேவன் மனிதனுக்குத் தரவேண்டிய எல்லா வளங்களையும், செல்வங்களையும், ஆதாரங்களையும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவில் வைத்திருக்கிறார் என்பதற்குப் பல வசனங்கள் புதிய ஏற்பாட்டில் ஆதாரங்களாக இருக்கின்றன. “நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டிருக்கிறீர்கள். மேன்மை பாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மை பாராட்டத்தக்கதாக, அவரே தேவனால் நமக்கு ஞானமும், நீதியும், பரிசுத்தமும், மீட்புமானார்” (1 கொரி. 30, 31). தேவன் நம்மைக் கிறிஸ்து இயேசுவில் வைத்திருக்கிறார். அது நாம் செய்கின்ற ஒன்று அல்ல. தேவனே நம்மைக் கிறிஸ்து இயேசுவில் வைத்திருக்கிறார். இந்த இயேசு கிறிஸ்துவைத் தேவன் நமக்கு ஞானமாகவும், நீதியாகவும், பரிசுத்தமாகவும், மீட்புமாகவும் மாற்றியிருக்கிறார் என்று வசனம் சொல்கிறது. “அவருக்குள் ஞானம், அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது” (கொலோ. 2:3). “தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது” (கொலோ. 2:9). இது இந்த முழு வேதாகமத்திலும் மிக மகா உன்னதமான ஒரு உண்மை.

நியூட்டன், ஐன்ஸ்டின்போன்ற அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்ததையெல்லாம் இந்த உண்மையோடு ஒப்பிடும்போது அது ஒரு விதியே அல்ல. இந்த மனுக்குலம் கண்டுபிடித்த எல்லாவற்றையும் இதோடு ஒப்பிடும்போது அவை கண்டுபிடிப்பே இல்லை. எது பெரிய கண்டுபிடிப்பு? தேவத்துவத்தின் நிறைவெல்லாம் மனித உருவில், ஊனுருவில், கிறிஸ்து இயேசுவிலே வாசமாயிருக்கிறது என்பது மிக உன்னதமான உண்மை, மிக உயர்ந்த கண்டுபிடிப்பு.

மனித வாழ்க்கைக்கு என்ன நிறைவு வேண்டும் என்பதைத் தேவன் திட்டமிட்டிருக்கிறார். தேவன் மனிதனைப் படைத்தார், மனிதனை வடிவமைத்தார். எனவே, மனிதனுடைய வாழ்க்கைக்கு என்னென்ன தேவை என்பது தேவனுக்குத் தெரியும். அந்த எல்லா நிறைவையும் அவர் ஊனுருவில், மனித உருவில், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவில் வைத்தார். இந்த முழு வேதாகமமும், ஆதியாகமம்முதல் திருவெளிப்பாடுவரை, இந்த இயேசு கிறிஸ்துக்குள் இருக்கின்ற நிறைவு என்ன, போதுமானதன்மை என்ன, செல்வங்கள் என்ன, வளங்கள் என்ன, என்று இந்த மாபெரும் நபரை நமக்கு விவரித்து காண்பிக்கிறது. “ஆகையால், போஜனத்தையும் பானத்தையும்குறித்தாவது, பண்டிகை நாளையும், மாதப் பிறப்பையும், ஓய்வுநாட்களையும்குறித்தாவது ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக. இவைகளெல்லாம் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது. அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது” (கொலோ. 2:16, 17). இவைகளெல்லாம் புதிய ஏற்பாட்டிலே மிக முக்கியமான வசனங்கள்.

அவைகளெல்லாம் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது. அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது. போஜனத்தின் பொருள் கிறிஸ்து. பானத்தின் பொருள் கிறிஸ்து. பண்டிகை நாளின் பொருள் கிறிஸ்து. மாதப்பிறப்பின் பொருள் கிறிஸ்து. ஓய்வுநாளின் பொருள் கிறிஸ்து. பழைய ஏற்பாட்டிலே அல்லது சிருஷ்டிக்கப்பட்ட நன்மை எல்லாவற்றின் பொருள் கிறிஸ்து. அல்லேலூயா! இப்படி ஒரு எதிரொலி நம் இருதயத்திலே வரவேண்டும். இது நான் முதலாவது சொல்ல விரும்புவது.

இயேசு கிறிஸ்துவே அல்பா ஓமெகா, தொடக்கம் முடிவு, முதல் கடைசி

தேவன் கிறிஸ்துவில் அவருடைய எல்லா நிறைவையும், செல்வங்களையும், வளங்களையும், ஆதாரங்களையும் வைத்திருக்கிறார். இந்தக் கிறிஸ்து மகா உன்னதமானவர், மிக அருமையானவர், மிகப் போதுமானவர், மிகத் திருப்தியானவர். அதனால்தான் திருவெளிப்பாட்டிலே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, “நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாய் இருக்கிறேன்” என்றும் (வெளி. 1:8), “நான் முந்தினரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்,” (வெளி. 1:17) என்றும் சொல்லுகிறார். அவர் அல்பாவும் ஒமேகாவும், அதற்கு இடையிலுள்ள எல்லா எழுத்துக்களுமாய் இருக்கிறார். அவர் தொடக்கமும் முடிவும், அதற்கு நடுவில் உள்ள எல்லாமுமாய் இருக்கிறார். அவர் ஆரம்பமும் கடைசியும், அதற்கு நடுவில் உள்ள எல்லாமுமாய் இருக்கிறார். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கு வெளியே மனித வாழ்க்கைக்கு எதுவும் இல்லை.

இந்த சிருஷ்டிக்கப்பட்ட உலகத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் அவர்கள் ஆராய்ந்துமுடிக்கவில்லை. இன்னும் அவர்கள் எல்லாத் தாவரங்களையும் ஆராய்ந்து முடிக்கவில்லை எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் மனுக்குலம் ஆராய்ந்துகொண்டிருக்கிறது. சிருஷ்டிக்கப்பட்ட இந்த உலகத்தை ஆராய்ந்து முடிக்க முடியாது என்றால் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை, சிருஷ்டிகரை, நாம் ஆராய்ந்து முடிக்க முடியுமா? முடியாது. இயேசுகிறிஸ்துவை ஆராய்ந்து அறிவதற்கு நித்தியம் போதாது. இது நம் மனதிற்கு மிகவும் அப்பாற்பட்டது. “நான் கிறிஸ்துவின் அளவற்ற (ஆராய்ந்தறிய முடியாத) ஐசுவரியத்தைப் புறவினத்தாரிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கிறேன்” (எபே. 3:8) என்று பவுல் சொல்லுகிறார். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினுடைய ஐசுவரியம் அறியமுடியாதவை, அளவிடமுடியாதவை, தீர்ந்துபோகாதவை, ஆராயமுடியாதவை.

புனித அகுஸ்தின் சொன்னதுபோல, நாம் கடற்கரை ஓரத்தில் ஒதுங்குகிற கிளிஞ்சல்களைப் பொறுக்குகின்ற சிறுவர்களைப்போல, இயேசுகிறிஸ்து என்கிற மாபெரும் சமுத்திரக் கரையோரம் ஒதுங்குகிற சில கிளிஞ்சல்களைப் பொறுக்கிச் சாட்சிகளாகச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். இந்த இயேசு கிறிஸ்து ஆராய்ந்துமுடியாதவர், தீர்ந்துபோகாதவர்.

நான் சிறுவனாக இருந்தபோது, “அதோ! கடல் அங்கேதான் முடிகிறது!” என்று நினைத்தேன். “அதோ! ஒரு வட்டம் தெரிகிறது இல்லையா? அந்த அற்றம்வரைப் போய்விட்டால் கடலுக்குக்கீழே விழுந்துவிடுவோமோ!” என்று ஒருவகையான பயம் இருந்தது. இயேசுகிறிஸ்துவுக்கு ஒரு வட்டம் இருப்பதுபோல் தோன்றலாம். அவருக்குத் தொடுவானம் என்று ஒன்று இல்லை. இது ஒன்றாவது.

2. இயேசு கிறிஸ்துவிலுள்ள செல்வங்களால் நாம் வாழ்வது தேவனுடைய நோக்கம்

இரண்டாவது, “உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்தி வந்த எல்லா வழியையும் நினைப்பாயாக. அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனிதன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாத மன்னாவினால் உன்னைப் போஷித்தார்” (உபா. 8:2, 3). தேவன் தம்முடைய மக்களைச் சிறுமைப்படுத்தி பசியினால் வருத்தினார். பேய் அவர்களைச் சிறுமைப்படுத்தினான் என்று வேதம் சொல்லவில்லை. தேவனாகிய கர்த்தர் அவர்களைச் சிறுமைப்படுத்தினார்.

உபாகமம் 8ஆம் அதிகாரம் முழுவதையும் நீங்கள் வாசித்துப்பாருங்கள். அந்தத் தேசத்தைப்பற்றிச் சொல்லும்போது, “உங்களைப் பாலும் தேனும் ஓடுகிற தேசத்திற்குக் கொண்டுப்போகப்போகிறேன்,” என்று சொல்கிறார். “நீங்கள் கட்டாத வசதியான பெரிய பட்டணங்களையும், நீ நிரப்பாத சகல நல்ல வஸ்துக்களாலும் நிரம்பிய வீடுகளையும், நீ வெட்டாமல் வெட்டப்பட்டிருக்கிற துரவுகளையும், நீ நடாத திராட்சத்தோட்டங்களையும், ஒலிவத் தோப்புகளையும் அவர் உனக்குக் கொடுப்பார்,” (உபா. 6:9, 10) என்று சொன்னார். கட்டாத வீடு, நடாத தோட்டம், வெட்டாத கிணறு.

“இவைகளையெல்லாம் அவர் நேராகத் தரவேண்டியதுதானே! அதற்கு நடுவிலே எதற்கு எங்களைச் சிறுமைப்படுத்தி, பசியினால் வருத்த வேண்டும்?” என்றால், அப்படிப்பட்ட ஒரு நிலைமைக்கு உன்னைக் கொண்டுபோகும்போது நீ என்ன நினைப்பாய் தெரியுமா? “நான் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா? என் சாமார்த்தியமும், என் கைப்பெலனும் இதைச் சம்பாதித்தது என்று உன் இருதயத்திலே நீ சொல்லிக்கொள்வாய். அப்படி நீ சொல்லிக்கொள்ளாதிருப்பாயாக. உன் சாமார்த்தியமும் உன் கைப்பெலனும் இதைச் சம்பாதிக்கவில்லை” (உபா. 8:17). நாம் இன்னும் அவரை அறியவேண்டியபிரகாரமாக அறியவில்லை.

கிறிஸ்துவால் வாழ்தல்

இயேசுகிறிஸ்வுதுக்குள் சகலமும் வாசமாயிருக்கிறதென்று நாம் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், “அதை நான் ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை, மனுஷனால் கற்றதுமில்லை. இயேசு கிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார்,” (கலா. 1:12) என்று பவுல் கூறுகிறார். இயேசுவைப்பற்றி நமக்கு ஒரு கற்றறிவு, ஒரு பெற்றறிவு, இருக்கலாம். ஒருவன் வாழ்க்கையில் போராட்டங்கள்வழியாகப் போகும்போது இந்த இரண்டும் கைகொடுக்காது. அப்போது, இயேசுகிறிஸ்து எவ்வளவு நிறைவானவர், போதுமானவர், திருப்தியானவர் என்று ஜெபிக்கமாட்டோம். “ஆண்டவரே, என் பிதாக்களைப்பார்க்கிலும் நான் நல்லவன் இல்லை. என் அப்பாவை எடுத்துக்கொண்டதுபோல என்னையும் எடுத்துக்கொள்ளும். என் மூதாதையரை எடுத்துக்கொண்டதுபோல என்னையும் எடுத்துக்கொள்ளும்,” என்றுதான் ஜெபிக்கத்தோன்றும்.

ஆனால், அப்பொழுது நாம் உபாகமம் 8:3யை நினைவுகூற வேண்டும். ஏன் அவர் எங்களைச் சிறுமைப்படுத்த வேண்டும்? ஏன் எங்களைப் பசியினால் வருத்துகிறார்? இந்த வலியும், வேதனையும், நோவும் எதற்காக? பதில் உபாகமம் 8:3இல் இருக்கிறது. எதற்காக அப்படிப்பட்ட சூழ்நிலைகளையும், பாதைகளையும், வழிகளையும் நம்முடைய வாழ்க்கையிலே உருவாக்குகிறார் என்று அந்த வசனம் சொல்கிறது.

நாம் ஒன்றைக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தப் பூமியிலே நாம் கிறிஸ்துவால் வாழ முடியும். இது என் வாழ்க்கையினுடைய thesis. கிறிஸ்துவால் இந்தப் பூமியிலே வாழ முடியும். வாழ முடியும் என்பது மட்டுமல்ல. கிறிஸ்துவைக்கொண்டு மட்டுமே வாழ வேண்டும் என்பதுதான் தேவனுடைய நோக்கம். இதற்கென்றே தேவன் நம்மை நெருக்குகின்றார். கிறிஸ்துவால் மட்டுமே நாம் வாழ வேண்டும். கிறிஸ்துவல்லாத இன்னொன்றைக் கொண்டு நாம் வாழ்ந்துகொண்டிருப்போமென்றால் அந்த இன்னொன்றை தேவன் நம்முடைய வாழ்க்கையிலிருந்து களைவார். “களைவதற்கு நான்தானா கிடைத்தேன்? வேறு யாரும் கிடைக்கவில்லையா?” என்றால் “தகப்பன் சிட்சியாத புத்திரன் உண்டோ?” (எபி. 12:7) தேவன் அந்த ஆவிக்குரிய கல்வியை அவருடைய பிள்ளைகளாகிய நம் எல்லாருக்குள்ளும் வைத்திருக்கிறார்.

“நாம் இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிறோம், கிறிஸ்துவால் வாழ்கிறோம்,” என்பதின் பொருள் என்ன? தேவனை அறியாத மக்கள் கோயிலுக்குப் போய்த் தேங்காய் உடைத்து, ஊதுபத்தி கொளுத்தி, கற்பூரம், பழம் ஆகியவைகளைப் படைத்து, “நான் நன்றாக இருக்க வேண்டும். என் மனைவி மக்கள் நன்றாக இருக்க வேண்டும். என் மக்களெல்லாம் நன்றாகப் படிக்க வேண்டும். என் பிள்ளைகளுக்கெல்லாம் கல்யாணம் நடக்க வேண்டும்,” என்று வேண்டுகிறார்கள். கிறிஸ்தவர்களும், “நான் நன்றாக இருக்க வேண்டும். என் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும். என் மனைவி மக்கள் நன்றாக இருக்க வேண்டும். சுகமாக இருக்க வேண்டும். பிள்ளைகளுக்கெல்லாம் நல்ல படிப்பு வேண்டும். ஏற்ற காலத்திலே கல்யாணம் நடக்க வேண்டும். நல்ல வீடு கட்ட வேண்டும்,” என்று ஜெபித்தால் வழிபாட்டுப் பொருட்கள்தான் மாறுபட்டிருக்கிறதேதவிர ஏறெடுக்கிற ஜெபத்தில் எந்த மாற்றமும் இல்லை. அப்படியானால் நம்முடைய உடல்நலத்தைக்குறித்தும், மனைவி மக்களுடைய சுகத்தைக்குறித்தும், நலவாழ்வைக்குறித்தும் அவருக்கு ஈடுபாடு இல்லையா என்றால் ஈடுபாடு இருக்கிறது. அவர் நம்முடைய தந்தையாக இருக்கிறார். இவைகளெல்லாம் நமக்கு வேண்டியவைகள் என்று நம் பரம பிதா அறிந்திருக்கிறார். அவர் அவைகளைத் தருவதற்குச் சித்தங்கொண்டிருக்கிறார். ஆனால், காரியம் அதுவல்ல.

இவைகள் குறைவுபடும்போது, ஒரு உலகத்து மனிதன் அல்லது தேவனை அறியாத மனிதன், “இதோடு வாழ்க்கை முடிந்தது,” என்று சொல்வான். எனவே, தேவனுக்கு ஒவ்வாத ஒரு வழியிலே அவன் இவைகளைத் தேடுவான். ஆனால், தேவனுடைய மக்களாகிய நாம், “இல்லை, உலகத்து மனிதனைப் பொறுத்தவரை இது முடிந்தது. ஆனால், தேவனுடைய மக்களைப்பொறுத்தவரை அது முடிவல்ல. கிறிஸ்துவால் வாழ முடியும் என்கிற நிரூபணத்திற்காக தேவன் இந்தச் சூழ்நிலைகளை என்னுடைய வாழ்க்கையிலே வைக்கிறார்,” என்று உறுதியாக விசுவாசிப்பான், அறிந்துகொள்வான்.

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து, “நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல,” (யோவான் 17:14, 16) என்று இரண்டுமுறை சொல்கிறார். நீ உலகத்தானா அல்லது உலகத்தைச் சார்ந்தவன் இல்லையா? உலகத்தைச் சார்ந்தவன் இல்லை. யார் சொன்னது? இயேசுகிறிஸ்துவே சொன்னார். உண்மையிலேயே உன்னுடைய நிலை என்ன என்று நீ சொல்ல முடியாது. இயேசுகிறிஸ்துதான் சொல்ல முடியும், சொல்ல வேண்டும். நீங்கள் உலகத்தாரல்ல என்று அவர் சொல்கிறார்.

“நான் உலகத்தானல்ல” என்பதன் பொருள் என்ன? “நகை அணிய மாட்டோம். பொட்டு வைக்க மாட் டோம்,” என்று ஒரு பட்டியல் வைத்துக்கொண்டு வாழ்ந்தால்; உலகத்தானல்ல என்று தீர்மானித்து விடலாமா? உலகத்தானல்ல என்றால் என்ன பொருள்? “இந்த உலகத்திலுள்ள மக்கள் எவைகளால் வாழ்கிறார்களோ அவைகளால் நாம் வாழவில்லை,” என்பதுதான் அதன் பொருள். “கிறிஸ்துவுடனே கூடச் சிலுவையிலறையப்பட்டேன். ஆயினும், பிழைத்திருக்கிறேன். இனி நானல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார். நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்” (கலா. 2:20). “இனி நான் அல்ல, கிறிஸ்துவே என்னில் வாழ்கிறார்,” என்பது நினைவுக்கு வரும். அதற்குபின் வருகிற பகுதியில்தான் இரகசியம் இருக்கிறது. “நான் இப்பொழுது வாழ்கிற வாழ்க்கையை என்னைக்கொண்டு நான் வாழவில்லை அல்லது இந்த உலகத்திலுள்ள வளங்களைக்கொண்டு நான் வாழவில்லை. என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே வாழ்கிறேன். வாழ முடியும்,” என்பதுதான் பின்பகுதியின் பொருள்.

கர்த்தரை நம்புகிறவன் வாழ்வான்

சில புதிய ஏற்பாட்டுப் பகுதிகளை நாம் வாசிக்கும்போது அதற்கு ஒத்த பழைய ஏற்பாட்டுப் பகுதிகளும் உண்டு. “மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டத்தக்கதாக, அவரே (இயேசு கிறிஸ்துவே) தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்” (1 கொரி. 1:30, 31). இதற்கு ஒத்த வசனம் பழைய ஏற்பாட்டில் எரேமியா 17ஆம் அதிகாரத்தில் இருக்கிறது. “மனிதன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாய்க்கொண்டு, கர்த்தரைவிட்டு விலகுகிற இருதயமுள்ள மனிதன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்… கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாய்க்கொண்டிருக்கிற மனிதன் பாக்கியவான். அவன் தண்ணீரண்டையில் நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாய்த் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத் தாழ்ச்சியான வருடத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனி கொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்,” (எரே. 17:5-8). கோடைகாலத்திலே அவன் வறட்சியைக் காணமாட்டான். அவனுடைய வேர் மறைவாக ஒரு ஆற்றருகே போயிருப்பதால் கோடைகாலத்திலே வெயிலிலே வறட்சியிலே அவன் வறண்டுபோகமாட்டான்.

உன்னத அரியணை என் ஊற்று, உள்ளில் சுரக்கும், உயிரும் தழைக்கும்; வறட்சியோ, வேனிலோ, மறைப்பில் நீர் பாய்ச்சும் கிருபை. (பொங்கி வழியும் தேவ கிருபை)

நீதிமான் விசுவாசத்தால் வாழ்வான்

புதிய ஏற்பாட்டிலே மிக முக்கியமான ஒரு வசனம் “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” (ரோமர் 1:7). இந்த வசனம் பழைய ஏற்பாட்டிலே இருக்கிறதா? அருமையான பரிசுத்தவான்களே! நாம் இயேசுவை அறியவேண்டியபிரகாரம் இன்னும் அறியவில்லை. “இதோ, அகங்காரியாயிருக்கிறானே, அவனுடைய ஆத்துமா அவனுக்குள் செம்மையானதல்ல. தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” (ஆபகூக் 2:4). விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்றால் விசுவாசத்தினாலே நீதிமான் வாழ்வான்.

சிறுமைப்பட்டு, வருத்தப்பட்டு, வருத்தமும் நெருக்கமும் உள்ள நாட்களிலே நாம் எப்படி வாழ முடியும்? உலகத்தின்படி, இயற்கை உலகத்தின் நியதிகளின்படி, வாழ்வதற்கென்று வழியேயில்லை. இவனைப் பாம்பு கடித்துவிட்டது. இவன் எப்படி வாழ முடியும்? பாம்பு கடித்தவன் சாவான். அது இயற்கை உலகத்தின் நியதி, விதி. ஒருவன் இறைச்சி சாப்பிட்டால் நன்றாகச் செழிப்பாக இருப்பான். மரக்கறி சாப்பிட்டால் கொஞ்சம் சுமாராகத்தான் இருப்பான். ஆனால் இறைச்சி சாப்பிட்டவர்களைப்பார்க்கிலும் மரக்கறி சாப்பிட்டவர்கள் ரொம்ப செழிப்பாக இருந்தார்கள் (தானி. 1:15) இது இயற்கை விதிக்கு அப்பாற்பட்டது. (நான் மரக்கறி மட்டுமே சாப்பிடுவதை ஆதரிக்கிறேன் என்று நினைக்க வேண்டாம்.)

இந்தச் சூழ்நிலைகளில் உலகத்தின் விதிகளின்படி வாழ்வதற்கு எந்த நம்பிக்கையும் இல்லை. நம்புகிறதற்கு ஒன்றும் இல்லை. ஏதும் இல்லை. ஆனால், தேவன் ஒரு உபாயம் வைத்திருக்கிறார். அது என்ன உபாயம்? இந்தச் சூழ்நிலையிலே என்ன வழி வைத்திருக்கிறார்? பதில் ஆபகூக் சொல்கிறான்: “விசுவாசத்தினாலே நீதிமான் வாழ்வான்”.

இந்த விசுவாசத்தினுடைய பொருள் என்ன? “சந்தேகமில்லாத நம்பிக்கை, பற்றுறுதி, அசைக்கமுடியாத பிடிப்பு,” என்று அகராதியிலிருந்து எடுத்துச் சொல்லலாம். இந்த மொழிபெயர்ப்புகளுக்காகத் தேவனுக்கு நன்றி. ஆனால், உண்மையிலேயே விசுவாசம் என்றால் என்ன? “இயேசுகிறிஸ்து இப்படிப்பட்ட நபர்,” என்று நாம் அவர்மேல் வைத்திருக்கிற சந்தேமில்லாத நம்பிக்கைதான் விசுவாசம். “விசுவாசம்” என்பது ஏதோவொரு கற்பனை அல்ல.

“நான் ஒரு பெரிய கோடீஸ்வரனாகிவிட்டேன் என்று விசுவாசிக்கிறேன். நான் ஒரு பெரிய வீடு கட்டுவேன் என்று விசுவாசிக்கிறேன்,” என்று பலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதுவல்ல விசுவாசம். இயேசுகிறிஸ்து எப்படிப்பட்ட நபர் என்று இந்த வேதம் நமக்கு எடுத்துக் காண்பிக்கிறதோ, அவர் உண்மையாகவே அப்படிப்பட்ட நபர்தான் என்ற அசையாத நம்பிக்கைதான், பற்றுறுதிதான், விசுவாசம். நாம் குறைச்சலிலும், நெருக்கத்திலும், சிறுமையிலும், வருத்தத்திலும் இருக்கும்போது இந்தக் குறைவுக்கும், நெருக்கத்திற்கும், சிறுமைக்கும், வருத்தத்திற்கும் போதுமான நிரப்பீடு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவில் இருக்கிறது; அவரே இதை நிறைவுசெய்கிற நிரப்பீடு; இவைகளை ஈடுகட்டுவதற்குப் போதுமான, தேவையான நிறைவான நிரப்பீடு இயேசுகிறிஸ்துவினிடத்தில் இருக்கிறது என்பதை நாம் உறுதியாகப் பற்றிக்கொள்வதற்குப் பெயர்தான் விசுவாசம்

“அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டு மந்தைகள் முதலற்றுப் போனாலும், தொழுவத்திலே மாடுகள் இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன். என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்” (ஆபகூக் 3:17). எல்லாமே எதிர்மறையாக இருக்கிறது. அது இல்லாமற்போனாலும், இது இல்லாமற்போனாலும், அது துளிர்த்துப் பூப்பூத்துக் காய்க்காமற்போனாலும் என்று படிப்படியாக இருக்கிறது. ஒன்று துளிர்க்கவே இல்லை; இன்னொன்று பூத்தது, ஆனால் காய்க்கவில்லை; இன்னொன்று காய்த்தது, ஆனால், உதிர்ந்துபோயிற்று. எல்லா நிலையிலுமே தோல்விமேல் தோல்விமேல் தோல்வி. ஆபகூக் நேர்மறையாகப் பேசுகிறார்: இவையெல்லாமே அறவே இல்லாமற்போனாலும் கர்த்தருக்குள் நான் மகிழ்ச்சியாயிருப்பேன். 

நாம் ஏன் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருக்க வேண்டும்? வேதாகமம் அப்படிச் சொல்கிறது என்பதற்காகவா? “உண்மையில் நான் மகிழ்ச்சியாக இல்லை. என்ன செய்வது? என்னுடைய பொறுப்பு நான் மகிழ்ச்சியாக இருப்பதுபோல காட்டவேண்டும். என்னுடைய மனைவிக்கு நான் மகிழ்ச்சியாக இருப்பதுபோல காட்டவில்லையென்றால் அவர்கள் மனம் நொந்துபோய்விடுவார்கள். என்னுடைய மாணவர்களுக்குமுன்பாக நான் மகிழ்ச்சியாக இருப்பதுபோல காட்டவில்லையென்றால் அவர்கள் என்மேல் மரியாதை வைக்கமாட்டார்கள். என்னுடைய பிள்ளைகளுக்குமுன்பாக நான் மகிழ்ச்சியாக இருப்பதைக் காட்டவில்லையென்றால் அவர்களும் இளைத்துப்போவார்கள்,” என்பதற்காக மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? இது பொய்ச்சாட்சி. அப்படி நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. உண்மையிலேயே ஒரு புதையல் கண்டுபிடித்தவன் எவ்வளவு மகிழ்ச்சியாயிருப்பானோ அப்படிப்பட்ட ஒரு மகிழ்ச்சி இல்லையென்றால், நாம் பொய்யான ஒரு மகிழ்ச்சியைப் புனைந்து இந்த உலகத்திற்குக் காட்டவேண்டிய அவசியம் இல்லை. அது அலுவலகத்தில் ஒரு வரவேற்பாளர் சிரிக்கிற சிரிப்பைப் போன்றது. “உங்களுக்கு என்ன வேண்டும்? சொல்லுங்கள். நான் உங்களுக்கு உதவ ஆயத்தமாயிருக்கிறேன்,” என்று ஒரு அசட்டுச் சிரிப்போடு கேட்பார்கள் இல்லையா? அது அவர்களுடைய தொழில். எனவே, தொழில்ரீதியாக சிரித்துத்தான் ஆக வேண்டும்? “நான் உங்களுக்கு ஏதாவது உதவி செய்யலாமா?” என்று கேட்டுத்தான் ஆக வேண்டும். அப்படியல்ல.

உண்மையில் நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன். எதற்காக? எதுவுமே இல்லாவிட்டாலும் எப்படி கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருக்க முடியும்? “ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன். அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்” (ஆபகூக் 3:19). “அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, என் உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்” (2 சாமு. 22:34).

குறைச்சல், வருத்தம், சிறுமை என்றால் இதைவிடவா மோசமாகப் போய்விட முடியும்? துளிர்க்கவில்லை, துளிர்த்தது காய்க்கவில்லை; காய்த்தது, நிலைக்கவில்லை; மாடுகளும் ஈனவில்லை; ஈன்ற மாடுகள் தக்கவைக்கவில்லை. ஆனாலும், “ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்” என்று அவன் சொல்கிறான்.

மறைவான மன்னா

அவரால் நாம் வாழ முடியும். அப்படியானால், நாம் துக்கமாயிருப்போம் என்று அர்த்தமா? அப்படியல்ல. வெளிப்படுத்தின விசேஷத்திலே பெர்கமு சபைக்குச் சொல்லும்போது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, “ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக் கொடுப்பேன்,” (வெளி. 2:17) என்று சொல்லுகிறார்.

கிறிஸ்தவனைப்பொறுத்தவரை மறைவான மன்னா என்று ஒன்று இருக்கிறது. “நீங்களும் உங்கள் பிதாக்களும் அறியாத மன்னாவினால் உங்களைப் போஷித்தார்.” இது ரொம்பப் பரம்புதிரான உணவு. இந்த மன்னா கொத்துமல்லி அளவு தேனிலிட்ட பணியாரம்போல் சுவையாக இருந்ததாம். ஆனால், பரத்திலிருந்தே வந்த உணவாக இருந்தாலும் 40 ஆண்டுகள் அதே உணவைச் சாப்பிட முடியுமா? ஒரு மாற்றம் வேண்டாமா? தினமும் இட்லிதானா? பழைய குழம்புதானா? “தூதர்களின் அப்பத்தை மனிதன் சாப்பிட்டான்” (சங். 78:25). தேவதூதர்கள் சாப்பிடுகிற அப்பத்தைத் தேவன் மனிதர்களுக்குக் கொடுக்கிறார் என்று சொல்லுகிறது. இது ரொம்ப விநோதமான உணவு. தூதர்கள் என்ன சாப்பிடப் போகிறார்கள். தூதர்கள் சாப்பிடுகிற அப்பத்தைத் தேவன் தம் மக்களுக்குத் தருவதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார். மக்கள் அப்பம் சாப்பிட்டுத் திருப்தியானபின்பு, “ஜீவ அப்பம் நானே. என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான். என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்” (யோவான் 6:35) என்றும், “நான் வானத்திலிருந்து வந்த அப்பம்|”(யோவான் 6:41) என்றும், “ஜீவ அப்பம் நானே. நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம். உண்மையாகவே வானத்திலிருந்து இறங்கி வந்து மனிதர்களுக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பம் நானே. நானே வானத்திலிருந்து இறங்கி வந்த மெய்யான உணவு. என்னைப் புசிக்கிறவன் சாகமாட்டான். செத்தாலும் அவனை நான் உயிரோடு எழுப்புவேன்,” என்று ஆண்டவராகிய இயேசு மீண்டும் மீண்டும் சொல்கிறார். இதை அவர் திருவெளிப்பாட்டில், “நான் அவனுக்கு ஒரு மறைவான மன்னாவைக் கொடுப்பேன்,” என்று சொல்கிறார்.

எனவே, எப்படிப்பட்ட வருத்தமோ, எப்படிப்பட்ட சிறுமையோ, எப்படிப்பட்ட குறைவோ, எப்படிப்பட்ட நெருக்கமோ இருந்தாலும், “ஆண்டவரே, உம்முடைய மக்களுக்கு மறைவான மன்னாவை நீர் வைத்திருப்பதாகச் சொன்னீரே. தேவதூதனுக்குரிய உணவை நீர் வாக்களித்தீரே. அந்த உணவைக்கொண்டு நீர் எங்களைப் போஷியும்,” என்று தேவனிடத்தில் நாம் முறையிட வேண்டும். நாற்பது வருடங்களாக அவர்கள் இயற்கையான உணவைச் சாப்பிடவில்லை. ஆனால், அவர்கள் செத்துப்போகவுமில்லை. இது ஒரு முரண்பாடு. இயற்கையான உணவு இல்லையென்றால் மனிதர்கள் மரித்துப்போக வேண்டும். அவர்கள் இயற்கையான உணவையும் சாப்பிடவில்லை. ஆனால், அவர்கள் மரித்துப்போகவுமில்லை. அதுபோல, “இந்த நாற்பது வருடமும் உன்மேல் இருந்த வஸ்திரம் பழையதாய் போகவுமில்லை. உன் கால் வீங்கவுமில்லை” (உபா. 8:4) என்றும், அதே அனுபவத்தைச் சங்கீதங்களிலே சங்கீதக்காரன் “அவர்கள் கோத்திரங்களில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருந்ததில்லை,” (சங். 105:37) என்றும் சொல்லுகிறான்.

அருமையான தேவனுடைய மக்களே, நான் சொல்வதினுடைய பாரத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். கிறிஸ்துவால் இந்த உலகத்திலே வாழ முடியும். எனவே, இந்த உலகம் எவைகளையெல்லாம் மகிழ்ச்சி, சந்தோஷம், என்று சொல்கிறதோ அவைகளுக்குப்பின்னால் நாம் தலைதெறிக்க ஓட வேண்டிய அவசியம் இல்லை. “இவைகளெல்லாம் இல்லாவிட்டால் உங்களுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியும், சந்தோஷமும், இன்பமும் குறைந்துவிடும், குறுகிவிடும்,” என்று இந்த உலகம் அச்சுறுத்தும்போது நாம் உடனே கிரங்கிவிட வேண்டிய அவசியமில்லை. “இது இருந்தால்தான் நம்முடைய மணவாழ்க்கை மகிழ்ச்சியாக, சிறப்பாக, இருக்கும். தினமும் பிரியாணி சாப்பிட்டால்தான் மகிழ்ச்சியும், இன்பமும் இருக்கும்” என்று இந்த உலகம் சொல்வதை ஒருநாளும் நம்பவேண்டியதில்லை.

ஆ! தேவன் தம் மக்களுக்கு ஒரு மறைவான மன்னாவை வைத்திருக்கிறார். இந்த வார்த்தைகள் நம்மை உற்சாகப்படுத்த வேண்டும். உடல்நலம் இல்லாமல் இருக்கலாம் அல்லது குறைவாக இருக்கலாம். வேலை இல்லாமல் இருக்கலாம் அல்லது நல்ல வேலை இல்லாமல் இருக்கலாம். சோர்ந்து போகவே கூடாது. பேய் வந்து “அவ்வளவுதான்” என்று சொல்லுவான். இல்லவே இல்லை. கிறிஸ்துவால் நாம் வாழ முடியும். “அவர்கள் முதிர்வயதிலும் கனிதந்து புஷ்டியும் பசுமையுமாய் இருப்பார்கள்,” (சங். 92:15) என்ற வசனம் நமக்கு நிறைவேறும்.

மறைவான தண்ணீர்

பழைய ஏற்பாட்டிலே எசேக்கியா என்று ஒரு அரசன் இருந்தான். அசீரிய ராஜாவாகிய சனகெரிப் படையெடுத்து வந்துகொண்டிருந்தான். “நாங்கள் வருகிற வழியிலே படையெடுத்த எந்த நாட்டையும் அந்த நாட்டின் கடவுள் காப்பாற்றவில்லை. கர்த்தர் நம்மைக் காப்பாற்றுவார் என்று பொய் சொல்லி எசேக்கியா உங்களை ஏமாற்றப் பார்ப்பான். பொய்க்கு மயங்காதீர்கள். அவன் சொல்வதை நம்பாதீர்கள்,” என்று சொல்கிறான். ஆனால், ஏசாயா ஆமோஸ்போன்ற தீர்க்கதரிசிகள் அவனை உற்சாகப்படுத்துகிறார்கள். கர்த்தர் அவனைக் காப்பாற்றுகிறார். சனகரிப் தன்னுடைய நாட்டிற்குத் திரும்பி ஓடுகிறான். திரும்பிப்போனபிறகு அவனுடைய ஒரு மகன் அவனை ஒரு கோயிலில் வைத்துக் கொலை செய்துவிடுகிறான். அது அந்தப் பிரதேசமெங்கும் பிரசித்தமானபடியால் எசேக்கியா மிகவும் பிரபலமாகிவிட்டார்.

எசேக்கியா அப்போது ஒரு காரியம் செய்கிறான். இப்போது சனகெரிப் வந்தான். இதன்பின் இன்னொரு எதிரி படையெடுத்து வருவான். எருசலேமுக்கு வெளியே கீகோன் என்று ஒரு குளம் அல்லது சுனை இருக்கிறது. அதிலே ஒரு பெரிய கிணறு இருக்கிறது. அதற்கு ஒரு தடுப்பணை கட்டி, ஒரு சுரங்க நீர்க்கால்வழியாக அந்தத் தண்ணீரை அவன் எருசலேமுக்குக் கொண்டுவந்தான் என்று அவனைப்பற்றி எழுதியிருக்கிறது. “அவன் ஒரு குளத்தையும், சாலகத்தையும் உண்டாக்கினதினாலே தண்ணீரை நகரத்திற்குள் வரப்பண்ணினான்” (2 இரா. 20:20). எசேக்கியா செய்தது ஒரு அற்புதமான கட்டமைப்பு. எருசலேமுக்கு வெளியே இருக்கிற கீகோன் என்கிற வற்றாத கிணற்றிலிருந்து, தண்ணீர் சுரந்து வருகிற கிணற்றிலிருந்து, அவன் ஒரு சுரங்க நீர்க்கால் conduit கட்டி எருசலேமுக்கு அந்த தண்ணீரைக் கொண்டுவந்தான். எதற்காகவென்றால் எதிரி படையெடுத்து வரும்போது, எருசலேமைச் சுற்றியிருக்கிற எல்லாக் கிணறுகளையும் மூடிவிட்டால் இந்த மக்கள் சோர்ந்து களைத்துச் சரணடைந்துவிடுவார்கள் என்று அவர்கள் நினைப்பார்கள். ஆனால், கீகோன் என்ற ஒன்று மறைவாக இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியவே தெரியாது. அதிலிருந்து மனிதர்களுடைய கண்களுக்குப் புலப்படாதவண்ணம், மிகவும் மறைவாக, எருசலேமுக்குள் வற்றாத நீரூற்று வந்துகொண்டிருக்கிறது. எந்தக் காலத்திலும் இந்தக் கீகோன் வற்றாது. எதிரி பல ஆண்டுகள் முற்றுகையிட்டாலும் எருசலேமில் தண்ணீர் இல்லை என்று ஒருநாளும் சரணடையாது. 2 நாளாகமத்திலும் இதைப்பற்றி எழுதியிருக்கிறது.

இதுபோல, கர்த்தரோடு நமக்கு ஒரு மறைவான, சுரங்க நீர்க்கால் இருக்கிறது. “இந்த மக்களை இப்படிப்பட்ட நெருக்கத்திற்குள்ளும், சிறுமைக்குள்ளும், வருத்தத்திற்குள்ளும் கொண்டுபோனால் இவர்கள் இயேசுகிறிஸ்துவை விட்டுவிட்டு இந்த உலகத்தின் வழிகளைப் பின்பற்றி வாழ்வார்கள்,” என்று பகைவன் நினைக்கலாம். ஆனால், ஒருநாளும் அப்படிச் செய்யவேண்டிய அவசியமில்லை. இந்த உலகம் அறியாத, சத்துரு அறியாத, ஒரு நீர்க்கால் நமக்கு உண்டு. நாம் அறியாத விதத்திலே பரிசுத்த ஆவியானவர் நம்மைப் போஷிப்பார்; நமக்கு நீர்ப்பாய்ச்சுவார்; நம்மைத் தாங்குவார்; நம்மை ஆதரிப்பார்.

உன்னத அரியணை என் ஊற்று, உள்ளில் சுரக்கும், உயிரும் தழைக்கும்; வறட்சியோ, வேனிலோ, மறைப்பில் நீர் பாய்ச்சும் கிருபை.

என்ற வரிகளை நான் உணர்ந்து எழுதினேன். உள்ளில் சுரக்கும் என்றால் அந்த நீர் சுரப்பதை மனிதர்கள் பார்க்க முடியாது என்று பொருள்.

அருமையான பரிசுத்தவான்களே, 1. கிறிஸ்துவுக்குள் தேவன் எல்லா வளங்களையும் வைத்திருக்கிறார். 2. நம்முடைய எல்லாச் சிறுமைப்படுத்தல்களுக்கும், வருத்தத்திற்கும் தேவன் ஒரேவொரு குறிக்கோள் வைத்திருக்கிறார். அந்தச் சிறுமையிலும், அந்த வருத்தத்திலும் கிறிஸ்துவால் வாழ முடியும். ** 3. வெறுமனே பெற்றறிவையும், கற்றறிவையும்வைத்து நாம் சமாளிக்க முடியாது. மனிதர்களுடைய கண்களுக்குப் புலப்படாத விதத்திலே அந்த வளத்தை, மறைவான மன்னாவை, அந்த மறைவான சுரங்கத்தின் வழியாக நீர்க்காலை, தேவன் நமக்குத் தருவார். **

ஒருநாளிலே நாம் புதிய எருசலேம் என்ற நிலையை எட்டும்போது, புதிய எருசலேம் என்ற நகரத்தை அடையும்போது, அங்கு ஆலயம் இல்லை; தேவனும் ஆட்டுக்குட்டியானவருமே ஆலயம். அங்கு சூரியனும் சந்திரனும் வெளிச்சம் தருவதற்கு இருக்காது; ஆட்டுக்குட்டியானவரே அதற்கு வெளிச்சம். இது ஒரு பட்டியலினுடைய ஆரம்பந்தான். ஆலயம் இருக்காது; கிறிஸ்துவே ஆலயம். ஒளி இருக்காது; கிறிஸ்துவே ஒளி. உணவு இருக்காது; கிறிஸ்துவே உணவு. தண்ணீர் இருக்காது; கிறிஸ்துவே தண்ணீர். திடுதிப்பென்று நாம் இந்தக் கிறிஸ்துவால் வாழவில்லை. இன்றைக்கும் நாம் கிறிஸ்துவை நம்முடைய தண்ணீராய், கிறிஸ்துவை நம்முடைய உணவாய், கிறிஸ்துவை நம்முடைய ஒளியாய், கிறிஸ்துவை நம்முடைய ஆலயமாய், கிறிஸ்துவை நம்முடைய எல்லாமுமாய்க்கொண்டு வாழ வேண்டும்.

“இந்தக் கிணற்றை எங்களுக்குத் தந்த நம்முடைய பிதாவாகிய யாக்கோபைப்பார்க்கிலும் நீர் பெரியவரோ? அவரும் அவர் பிள்ளைகளும், அவர் மிருகஜீவன்களும் இதில் குடித்ததுண்டே,” என்று (யோவான் 4:12) சமாரியப் பெண் கேட்டாள். ஆண்டவராகிய இயேசு, “நான் இதைவிட பெரிய கிணறு. நீ சொல்லுகிற இந்தக் கிணறு ஒருநாள் வற்றிப்போகும். ஆனால், நான் சொல்லுகிற இந்தக் கிணறு ஒருநாளும் வற்றாது,” என்றார் (யோவான் 4:14).

அருமையான பரிசுத்த சகோதரர்களே, இதுவரை உங்களுடைய வாழ்க்கையில் இப்படிப்பட்ட குறைவும், வருத்தமும் வரவில்லை என்றால் உங்கள் இருதயங்களை நீங்கள் தயார்படுத்திக்கொள்ளுங்கள். அப்படிப்பட்ட குறைவும், குறைச்சலும், வருத்தமும் வரும். பயப்படாதீர்கள். “ஆண்டவரே, சிலுவையே எனக்கு வேண்டாம்,” என்று கதறாதீர்கள். “இந்தக் கசப்பான பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் என்னைவிட்டு நீங்கும்படிச் செய்யும்,” என்று நாம் பயந்து வாழவேண்டிய அவசியம் இல்லை. நாம் நம்முடைய பிதாவினுடைய பரமரிப்பின்கீழும், இறையாண்மையின்கீழும் வாழ்கிறோம். அவருடைய சித்தமின்றி, அவருடைய விருப்பமின்றி, எந்தக் கசப்பான பாத்திரத்தையும் அவர் கட்டாயப்படுத்தி, “குடிக்கிறாயா அல்லது நான் குடிக்க வைக்கட்டுமா?” என்று சொல்லப்போவதே இல்லை. இல்லை. நம்முடைய பிதா கசப்பான ஒரு பாத்திரத்தை நமக்குமுன்பாக நீட்டும்போது அதற்குரிய உயிர்த்தெழுந்த வல்லமையையும் நமக்கு வைத்திருப்பார். எனவே, அந்த விசுவாசத்தை நாம் இப்பொழுதே பயின்றுகொள்ள வேண்டும். எசேக்கியா அரசன் என்றைக்கோ ஒரு எதிரி சண்டைபோட வருகிறான் என்பதற்காக இன்றைக்கு இந்தச் சுரங்க நீர்க்காலைக் கட்டிவைத்ததுபோல வாழ்க்கையில் பின்னால் வரப்போகிற வருத்தங்களுக்கும், குறைச்சல்களுக்கும், பாடுகளுக்கும், நெருக்கங்களுக்கும் இன்றைக்கே நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து வாழ்கிற வாழ்க்கையை நாம் பயில வேண்டும். அப்பொழுது உண்மையிலேயே நாம் அந்தக் கடைசி நாட்களை எட்டும்போது அல்லது புதிய எருசலேம் என்ற நிலைமைக்கு வரும்போது தேவன் நம்மைக்குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவார். நாமும் மகிழ்ச்சியடைவோம். நாங்கள் சாதாரண மனிதர்கள் அல்ல. நாங்கள் கிறிஸ்துவால் வாழ்கிற மனிதர்கள். நாங்கள் இந்த உலகத்திலே வாழ்ந்தாலும் இந்த உலகத்து வளங்களைக்கொண்டு வாழ்கின்ற மக்கள் அல்ல; கிறிஸ்துவால் வாழ்கிற மக்கள். அவரைக்கொண்டு வாழ முடியும்.

கிறிஸ்தவன் என்பவன் யார்? கிறிஸ்துவால் வாழ்பவன். அல்லேலூயா! முன்பெல்லாம், “கிறிஸ்தவன் என்பவன் கிறிஸ்து +அவன் அல்லது கிறிஸ்துவோடு வாழ்பவன் அல்லது கிறிஸ்துவை வாழ்பவன்,” என்று சொல்வார்கள். அதிலே கூடுதலாகவோ குறைவாகவோ ஓரளவுக்கு உண்மையிருக்கலாம் ஆனால், என்னைப்பொறுத்தவரை ஒன்று மிகத் தெளிவு. கிறிஸ்தவன் என்பவன் கிறிஸ்துவால் வாழ்வான். நாம் அப்படிப்பட்ட மக்களாய் வாழ்வதற்குத் தேவன் நம்மேல் கிருபை அருளுவாராக. ஆமென்.