Transcribed from a message spoken in November 29, 2015, in Chennai
By Milton Rajendram
தேவனுடைய மக்கள் கூடிவாழ்கின்றார்கள், கூடிவருகின்றார்கள்; கூடிவரும்போது தேவனுடைய மக்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்குக் கிறிஸ்துவைப்பற்றி, கிறிஸ்துவைப் பின்பற்றி அவர்கள் வாழ்கின்ற வாழ்க்கைக்குப் பயனுள்ள ஒன்றை நாம் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ள வேண்டும். வேதத்திலிருந்து பல சுவாரசியமான காரியங்களை நாம் பேசலாம். வேதத்திலிருந்து பேசுவதால் மட்டுமே எல்லாக் காரியங்களும் தேவனுக்கேற்றவைகளாக அல்லது ஆவிக்குரியவைகளாக இருக்கும் என்று சொல்ல முடியாது. தேவனுடைய மக்கள் கிறிஸ்துவால் வாழ்வதற்கு, கிறிஸ்துவைப் பின்பற்றி வாழ்வதற்கு, ஒரு கனி நிறைந்த வாழ்க்கை வாழ்வதற்கு என்ன அவசியமோ அவைகளை நாம் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளலாம்.
இதற்காக நாம் எல்லாரும் பயிற்சிசெய்கிறோம், முயற்சிசெய்கிறோம். சகோதரர்கள் தொடர்ந்து பயிற்சி செய்வதால், நாம் தேவனுடைய பார்வையிலே ஒரு விலையேறப்பெற்ற வாழ்க்கை, மதிப்புள்ள வாழ்க்கை, கனியுள்ள வாழ்க்கை வாழ்வதற்கு என்ன தேவையோ, அவைகளைத் தேவன் தம் மக்கள்மூலமாய்ப் போதிப்பார் என்று நான் நம்புகிறேன். ஒருவேளை இங்கு யாரும் Bachelor of Theology அல்லது Master of Theology படிப்பவர்கள் அல்ல. யாரும் 6 வருடங்களோ அல்லது 3 வருடங்களோ அல்லது தங்கள் முழு வாழ்க்கையையும் செலவழித்து நம்முடைய வாழ்க்கையிலே ஆராய்ச்சி செய்கிறவர்கள் அல்ல. ஆனாலும், அப்படி ஒரு formal education இல்லாதபோதும், தேவனுடைய மக்கள் போதுமான அளவுக்கு தேவனுடைய வார்த்தையிலே பிரயாசப்படுவதால், பரிசுத்த ஆவியானவர் நமக்குத் தேவையான பயனுள்ள காரியங்களைக்; கற்றுத்தருவார் என்பது என்னுடைய நம்பிக்கை. ஆனால், இதற்கு தேவனுடைய மக்கள் தேவனுடைய வார்த்தையிலே பிரயாசப்பட வேண்டும். தேவனுடைய வார்த்தையிலே போதுமான அளவுக்குப் பிரயாசம் இல்லை என்றால் வெற்றுப் பேச்சுதான் பேச முடியும். ஆனால், நான் தேவனுடைய பிள்ளைகள் எல்லாரையும்பற்றி மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நாம் உண்மையிலேயே போதுமான அளவுக்குப் பிரயாசப்படுகிறோம். இன்னும் அதிகமாக நாம் பிரயாசப்படவேண்டியது அதிக அவசியமாயிருக்கிறது.
தீமோத்தேயுவுக்கு பவுல் எழுதுகின்ற கடிதம் தன்னுடைய வாழ்க்கையில் கடைசிக் கட்டத்தில் எழுதுகின்ற கடிதம் என்று போன வாரத்திலே பார்த்தோம். ஆகவே, அது ஒரு மிக முக்கியமான ஒரு கடிதம். தேவனால் வல்லமையாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கை முடிவடையும்போது அவர் எவைகளை முக்கியமான காரியங்களாகக் கருதி மற்றவர்களுக்குக் கடத்திவிட் டுப் போக விரும்புகிறார் என்பதை தீமோத்தேயுவுக்கு எழுதின இரண்டு கடிதங்களிலும், தீத்துவுக்கு எழுதின கடிதத்திலும் பார்க்கிறோம். பல முக்கியமான எண்ணங்கள் உண்டு. ஆனால் நான் இன்றைக்கு ஒரேவொரு எண்ணத்தை மட்டும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 2 தீமோத்தேயு 2ஆம் அதிகாரம் 20-22ஆம் வசனங்களை நாம் போன வாரமும் வாசித்தோம். இப்பொழுதும் வாசிக்கலாம். “ஒரு பெரிய வீட்டிலே பொன்னும், வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல் மரமும், மண்ணுமான பாத்திரங்களும் உண்டு. அவைகளில் சில கனத்திற்கும், சில கனவீனத்திற்குமானவைகள். ஆகையால், ஒருவன் இவைகளை விட்டு தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால் அவன் பரிசுத்தமாக்கப்பட்ட தும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியையும் செய்ய ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்திற்குரிய பாத்திரமாயிருப்பான். அன்றியும், பாலியத்திற்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு”.
இந்த மூன்று வசனங்களிலே தீமோத்தேயுவுக்கு பவுல் கொடுக்கின்ற அறிவுரை. நீ ஒரு கனத்திற்குரிய பாத்திரமாக இருக்க வேண்டும். தேவன் இந்தப் பூமியிலே செயல்பட விரும்புகிறார். தேவன் இந்தப் பூமியிலே தம்மை வெளிப்படுத்த, வெளிக்காண்பிக்க, வெளியாக்க விரும்புகிறார். ஆனால், தேவன் நேரடியாக அப்படிச் செய்வதில்லை. தேவன் இந்தப் பூமியிலே செயல்படுவதற்கும், தம்மை வெளிக்காண்பிப்பதற்கும், வெளியாக்குவதற்கும் அவருக்குப் பாத்திரங்கள் தேவை. மனிதன் என்ற பாத்திரம் இல்லாமல் தேவன் நேரடியாக இந்த உலகத்திலே செயல்படுவது இல்லை. இது தேவனுடைய நித்திய கோட்பாடு. தேவன் சர்வவல்லமையுள்ளவர். ஆனாலும், மனிதனால் மட்டுப்படுத்தப் பட அவர் தம்மை உட்படுத்தியிருக்கிறார். ஆகவே, தேவனுடைய தேடுதல் எப்போதும் அவர் பயன்படுத்தத்தக்க பாத்திரம்.
இந்த 21ஆம் வசனத்தில், ஒருவன் இவைகளை விட்டுத் தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால் முதலாவது, அவன் பரிசுத்தமாக்கப்பட்டவன். இரண்டாவது, எஜமானுக்கு உபயோகமானவன். மூன்றாவது, எந்த நற்கிரியைக்கும், எந்த நற்செயலுக்கும் ஆயத்தமாக்கப்பட்டவன். நான்காவது, கனத்திற்குரிய பாத்திரம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எனவே, கனத்திற்குரிய பாத்திரம் என்றால் யார்? முதலாவது, அவன் பரிசுத்தமாக்கப்பட்டவன். இரண்டாவது, எஜமான் பயன்படுத்தத்தக்க அல்லது எஜமானுக்கு உபயோகமானவன். மூன்றாவது, எந்த நற்செயலுக்கும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்ட வன், தகுதியானவன். இன்று அப்படிப்பட்ட பாத்திரங்கள் பல இல்லை. அப்படிப்பட்ட பாத்திரங்கள் ரெடிமேடாக வந்துவிடுவதில்லை. அப்படிப்பட்ட பாத்திரங்களை உருவாக்க வேண்டியுள்ளது.
நான் ஒரேவொரு கேள்வி கேட்கிறேன். இப்படிப்பட்ட பாத்திரங்களை தேவன் உருவாக்குவாரா அல்லது நாம் உருவாக்க வேண்டுமா? தேவன் அப்படிப்பட்ட பாத்திரங்களை உருவாக்குவாரா அல்லது நாம் அப்படிப்பட்ட பாத்திரங்களாக உருவாக வேண்டுமா? உருவாக்குவார் என்று சிலர் சொல்கிறீர்கள். நாம் உருவாக வேண்டும் என்று சிலர் சொல்கிறீர்கள். நாம் இப்படிப்பட்ட கனத்திற்குரிய பாத்திரங்களாக உருவாக வேண்டும் என்பவர்கள் தயவுசெய்து உங்கள் கைகளை உயர்த்துங்கள். இல்லை, தேவன் உருவாக்குவார் என்பவர்கள் கைகளை உயர்த்துங்கள்.
தேவன் உருவாக்குவதில்லை. நாம் உருவாக வேண்டும். தேவன் உருவாக்குவார் என்பது ஒரு பக்தி நிறைந்த தாழ்மையான வாக்குபோல் தென்படலாம். தேவன் நம்மைக் கனத்திற்குரிய பாத்திரமாக உருவாக்கி, நம்மை உபயோகிப்பதில், பயன்படுத்துவதில் அவருக்கு எந்தத் தடையும் இல்லை. நாம் அப்படிப்பட்ட பரிசுத்தமாக்கப்பட்ட, எந்த நற்கிரியைக்கும், எந்த நற்செயலுக்கும் தகுதியான ஆயத்தமாக்கப்பட்ட பாத்திரங்களாக இருந்தால் தேவன் நம்மைப் பயன்படுத்துவதில் அவருக்கு எந்தத் தடையும் இல்லை. அந்த வாக்கியம், ஒருவன் இவைகளைவிட்டுத் தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால் என்று சொல்கிறது. சுத்திகரிக்க வேண்டியது யார்?
நான் பேசுவது மிகவும் முக்கியமான காரியம். ஏனென்றால், தேவனுடைய நற்செய்தியினுடைய மையமே எபேசியர் 2ஆம் அதிகாரத்திலே “நாம் நம்முடைய கிரியைகளினால் இரட்சிக்கப்படாமல் விசுவாசத்தைக்கொண்டு கிருபையினால் இரட்சிக்கப்பட்டோம். இது உங்களால் உண்டானதல்ல. இது தேவனுடைய ஈவு”. இது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினுடைய நற்செய்தியின் மையம். எபே சியர் 2ஆம் அதிகாரம் 6, 7 வசனங்களிலே வாசிக்கிறோம். “நீங்கள் கிரியையினால் இரட்சிக்கப்படாமல், கிருபையினால் இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானதல்ல. இது தேவனுடைய ஈவு”. “ஆகையால் நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை. நாம் தேவனுடைய கிருபையினால் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காரியம் இப்படியிருக்கும்போது, ‘நாம் நம்மைச் சுத்திகரித்துக்கொண்டால் இப்படிப்பட்ட கனத்திற்குரிய ஒரு பாத்திரமாக உருவாவோம்’ என்று நீங்கள் எப்படிச் சொல்லலாம்? ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கிறதே!” என்று ஒருவேளை நீங்கள் சொல்லக்கூடும்.
இதைக்குறித்துத் தியானிக்கும்போது நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாம் எல்லாரும் பெரிய வேதவிற்பன்னர்கள்போல நம் மனதிற்கு வந்ததைப் பேசக்கூடாது. ரொம்ப ஆராய்ந்து, ரொம்ப ஆழ்ந்து சிந்தித்து, ரொம்பத் தெள்ளத்தெளிவாகப் படித்து, நமக்குமுன்பு பல பரிசுத்தவான்கள் ஞானமுள்ளவர்கள் நடந்திருக்கிறார்கள். அவர்கள் இதை எப்படிப் புரிந்துகொண்டார்கள்; அவர்கள் வாழ்க்கை எப்படி இருந்தது என்றெல்லாம் சீர்தூக்கிப்பார்த்து, நிதானித்து நாம் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
கிருபையை நாம் சம்பாதிக்க முடியாது. இரட்சிப்பைப்பற்றிச் சொல்லும்போது இரட்சிப்பு தேவனுடைய ஈவு. ஆகவே, தேவன் எனக்குக் கிருபையை கொடுத்தார் அல்லது இரட்சிப்பை கொடுத்தார் என்பது நான் சம்பாதிப்பது இல்லை. கிருபை என்பது சம்பாதிக்கப்படுவதில்லை. இது தெளிவு. எந்த ஒரு மனிதனும் தேவனிடத்தில் போய் கிருபையைச் சம்பாதிக்க முடியாது. “நான் இதைச் செய்தேன் அல்லது அதை செய்யவில்லை. ஆகவே, எனக்குக் கிருபை தாரும்,” என்று சம்பாதிக்க அல்லது கோரிக்கை செய்ய முடியாது. அது தெளிவு. “நான் நல்லவன், அவன் கெட்டவன். எனவே, அவனுக்குக் குறைவான கிருபையும், எனக்கு நிறைவான கிருபையும் தாரும்,” என்று சொல்ல முடியாது. “அவர் 10 ரூபாய் காணிக்கை போட்டார். நான் 10,000 ரூபாய் காணிக்கை போட்டேன். எனக்கு நிறைவான கிருபை தாரும்,” என்று சொல்ல முடியாது. கிருபையைச் சம்பாதி;க்க முடியாது. இது இந்தக் கடிதத்திலே தெள்ளத் தெளிவாக எழுதியிருக்கிறது.
ஆனால், கிருபையைக் கண்டடைய வேண்டும். எபிரெயர் 4ஆம் அதிகாரம் 16ஆம் வசனத்திலே “ஆகையால் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ் செய்யும் கிருபையை அடையவும், கண்டடையவும் தைரியமாய்க் கிருபாசனத்தண்டையில் சேரக்கடவோம்,” என்று இப்படி எழுதியிருக்கிறது. இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ் செய்யும் கிருபையைக் கண்டடையவும் அல்லது அடையவும் தைரியமாய் கிருபாசனத்தண்டையில் சேரக்கடவோம். கிருபாசனத்தண்டையிலே சேராவிட்டால் கிருபையைக் கண்டடைய முடியாது. கிருபாசனத்தண்டையில் சேர்ந்ததினால் ஒருவன், “நான் கிருபையைச் சம்பாதித்தேன்,” என்று சொல்ல முடியாது. இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை நாம் நன்றாய்ப் புரிந்துகொள்ள வேண்டும். கிருபையைச் சம்பாதிக்க முடியாது. ஆனால் கிருபையை கண்டடைய வேண்டும்.
ஓர் எடுத்துக்காட்டு கூறுகிறேன். தண்ணீர் மேட்டிலிருந்து பள்ளத்திற்குத்தான் பாய்ந்தோடும். ஒரு பாத்திரம் தண்ணீரைப் பெறவேண்டுமென்றால் அந்தப் பாத்திரம் மேட்டில் இருக்கவேண்டுமா, பள்ளத்தில் இருக்க வேண்டுமா? பள்ளத்தில் இருக்க வேண்டும். பள்ளத்தில் இருந்தால்தான் பாய்ந்தோடிக் கொண்டிருக்கிற தண்ணீரை அந்தப் பாத்திரம் கண்டடைய முடியும், பெற்றுக்கொள்ள முடியும். அப்படி இருப்பதால் பாத்திரம், “நான் தண்ணீரைச் சம்பாதித்தேன்,” என்று எப்படிச் சொல்ல முடியும்? சொல்ல முடியுமா? “நான் இருக்க வேண்டிய இடத்தில், தாழ்மையான பள்ளமான ஒரு இடத்தில் இருப்பதால் நான் தண்ணீரைச் சம்பாதித்தேன்,” என்று ஒரு பாத்திரம் சொல்ல முடியாது. ஆனால், தண்ணீரைப் பெற வேண்டுமென்றால் அது ஒரு தாழ்வான, பள்ளமான இடத்திலே இருக்க வேண்டும்.
யாக்கோபு 4ஆம் அதிகாரம் 7ஆம் வசனத்திலே யாக்கோபு கூறுகிறார். “அவர் மிகுந்த கிருபையை அளிக்கிறாரே. தேவன் மிகுந்த கிருபையை அளிக்கிறாரே. தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்,” என்று தொடர்ந்து சொல்கிறார். 1 பேதுரு 5ஆம் அதிகாரத்தில் பேதுரு அதைச் சொல்கிறார். “தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்”.
கிறிஸ்துவிலுள்ள பரம வளங்கள் தேவனுடைய மக்களுக்குக் கிடைக்கும் வண்ணம் உள்ளதுதான் கிருபை. இதை நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். “கிருபை” என்பது தகுதியில்லாதவனுக்குப் பாராட்டப்படுகின்ற இரக்கம் என்று ஒரு வரையறை சொல்வார்கள். தகுதியில்லாதவர்களுக்குப் பாராட்டப்படுகின்ற அன்பு அல்லது இரக்கத்திற்கு பெயர்தான் கிருபை என்று சொல்வார்கள். அது உண்மைதான். ஆனால், அதைவிட முக்கியமானது “கிருபை” என்பது கிறிஸ்துவிலுள்ள தேவனுடைய பரம வளங்கள், அளவில்லாத பரம வளங்கள் தேவனுடைய மக்களுக்கு கிடைப்பதுதான் கிருபை. ஆகையால்தான் யோவான் 1ஆம் அதிகாரத் திலே “நியாயப்பிரமாணம் மோசேயின்மூலமாய்க் கொடுக்கப்பட்டது. கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின்மூலமாய் உண்டாயின,” (வ. 17) என்று வாசிக்கிறோம். ஆகையால்தான் 2 கொரிந்தியர் 12ஆம் அதிகாரம் 9ஆம் வசனத்திலே, “என் கிருபை உனக்குப் போதும். பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்,” என்று தேவன் சொல்கிறார். அதனால்தான் அப்போஸ்தலனாகிய பவுல், “நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்’,* (1 கொரி. 15:10) “What I am is by the grace of God” என்று சொல்லுகிறார். இதே தீமோத்தேயுவுக்குப் பவுல் எழுதும்போது 2 தீமோத்தேயு 2ஆம் அதிகாரம் 1ஆம் வசனத்திலே, “ஆகையால் என் குமாரனே, நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு”* (வ.1) என்று எழுதுகிறார்.
கிருபை என்பது வெறுமனே தகுதியில்லாதவனுக்குப் பாராட்டப்படுகின்ற இரக்கம் என்றால் பலப்படுவதற்கு ஒன்றுமில்லை. தீமோத்தேயு ரொம்ப பலசாலிபோல் தெரியவில்லை. இந்த இரண்டு கடிதங்களையும் நீங்கள் வாசித்துப் பார்த்தீர்களென்றால் தீத்துவுக்கு பவுல் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு எழுதவில்லை. ஆனால், தீமோத்தேயுவுக்கு எழுதும்போது, “கண்ணீரை நான் நினைவுகூறுகிறேன் (2 தீமோ. 1:3). உன் வயிற்றில் ஏற்படுகின்ற பலவீனங்களுக்காக இதைச் செய் ,”(1 தீமோ. 5:23) என்றும், கொரிந்தியருக்கு எழுதும்போது, “தீமோத்தேயு உங்களிடத்தில் வந்தால் பயப்படாதிருக்கப் பாருங்கள் ,”(1 கொரி. 16:10) என்றும் எழுதுகிறார். இதையெல்லாம் வாசிக்கும்போது தீமோத்தேயு பவுலைப்போன்ற ஆள்போல் தோன்றவில்லை. பவுலுடைய ஆள்தத்துவம் வேறு; தீமோத்தேயுவினுடைய ஆள்தத்துவம் வேறு. தீமோத்தேயு ஒரு ஆவிக்குரிய அசுரர்போல காட்சியளிக்கவில்லை. ஆனால் தீமோத்தேயுவும் பலவானாய் இருக்க முடியும். அதைத்தான் 2 தீமோத்தேயு 2ஆம் அதிகாரம் 1ஆம் வசனம் காட்டுகிறது.
எப்படிப் பலவானாய் இருக்க முடியும்? “கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையிலே பலப்படு”. நாம் எவ்வளவு பலவீனர்களாய் இருந்தாலும், ஒன்றுமில்லாதவர்களாய் இருந்தாலும், நம்முடைய பின்னணி என்னவாக இருந்தாலும், நம்முடைய இன்றைய நிலை என்னவாக இருந்தாலும், நம்முடைய குடும்பச் சூழ்நிலை என்னவாக இருந்தாலும், நம்முடைய பொருளாதார நிலைமை என்னவாக இருந்தாலும், நம்முடைய உடல் எப்படி இருந்தாலும், நம்முடைய எதிர்காலம் எப்படிக் காட்சியளித்தாலும், நம்முடைய நாடு எப்படி இருந்தாலும் சரி. பொதுவாக மக்கள் தங்கள் பின்னணியைக்குறித்து குறை சொல்வார்கள் அல்லது தங்கள் உடல்நிலையைக் குறை சொல்வார்கள் அல்லது தங்கள் குடும்பத்தைக் குறை சொல்வார்கள். ஏதாவது ஒன்றைக் குறை சொல்வார்கள். நாட்டைக் குறை சொல்வார்கள். “சின்ன வயதிலே என்னை ஒரு நல்ல பள்ளிக்கூடத்திலே சேர்த்திருந்தால், நான் இப்பொழுது பெரிய ஆளாக ஆகியிருப்பேன்,” என்று சொல்லுகின்ற பிள்ளைகள் சிலர் உண்டு. எல்லாக் குறைபாடுகளும், குறைச்சல்களும் தீமோத்தேயுவுக்கு இருந்தன. அது பவுலுடைய வார்த்தைகள். “ஆ! இந்தக் குறைச்சல்கள், இந்த குறைபாடுகள்! இதற்கெல்லாம் மிஞ்சி, இதை ஈடுகட்டுகிற, நிறைவுசெய்கிற ஒன்று கிறிஸ்து இயேசுவில் உள்ளது. அது கிருபை. இந்தக் கிருபையிலே நீ பலசாலியாக இருக்கலாம். கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு”.
தேவனுடைய பிள்ளைகள் எல்லாருக்கும் இந்தக் கிருபை கிடைக்கிறது. இன்றைக்குத்தான் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறவர்களுக்கும் இந்தக் கிருபை கிடைக்கிறது.
ஆகவே, நான் இன்றைக்கு வலியுறுத்த விரும்புகிற காரியம் என்னவென்றால், இந்தக் கிருபையை நாம் பெறுவதற்கு அல்லது இந்தக் கிருபையைக் கண்டடைவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? கிருபை இலவசம்தான். ஆனால், கிருபையைப் பெறுகிற, கிருபையைக் கண்டடைகிற ஒரு ஸ்தானத்திலே, ஒரு இடத்திலே, ஒரு நிலைமையிலே நாம் இருக்க வேண்டும். அதற்கு யாக்கோபு 4:6யை யும், 1 பேதுரு 5:5யையும்; நான் மேற்கோள் காட்டினேன். “தேவன் தாழ்மையுள்ளவர்களுக்குக் கிருபை அளிக்கிறார். பெருமையுள்ளவர்களுக்கோ எதிர்த்து நிற்கிறார்”. நாம் தேவனுடைய கிருபையைத் தவறவிடுகின்ற வாய்ப்பு உண்டு. நாம் தேவனுடைய மக்களாக இருக்கலாம். நாம் பாவ மன்னிப்பைப் பெற்றிருக்கிறோம். பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசம்பண்ணுகிறார். ஆனால் நாம் தேவனுடைய கிருபையைத் தவறவிடுகிறோம். இப்படிக் கிருபையினால் வாழாமல் போகிற வாய்ப்பு உண்டு. பல்லாயிரம் தேவனுடைய மக்கள் இப்படிப்பட்ட அபரிமிதமான, உதாரத்துவமான, தாராளமான தேவனுடைய கிருபையை தவறவிடுகிறார்கள். ஏனென்றால், அவருடைய கிருபையைப் பெறத்தக்க, கண்டடையத்தக்க ஒரு இடத்தில், ஒரு ஸ்தானத்தில், நிலைமையில் அவர்கள் இல்லை. நாமும் அப்படி இருக்கலாம்.
ஆகவேதான், 1 தீமோத்தேயு 4ஆம் அதிகாரம் 7, 8ஆம் வசனங்களிலே அப்போஸ்தலனாகிய பவுல் இந்தக் கிருபையை கண்டடைவதற்கு, கிருபையைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தீமோத்தேயுவுக்குச் சொல்கிறார். “சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு நீ விலகு. தேவபக்திக்கேதுவாக பயிற்சிபண்ணு”. “Exercise, train, yourself for the purpose of Godliness.” “தேவபக்திக்கு ஏதுவாக நீ பயிற்சிபண்ணு”. “தேவபக்திக்கு ஏதுவாக சிட்சைக்கு உன்னை உட்படுத்து”. “Discipline” “Exercise” “Train”. எந்த கிரேக்க வார்த்தையிலிருந்து “gymnastics”அல்லது “gymnasium”என்ற ஆங்கில வார்த்தைகளெல்லாம் வருகிறதோ அதே கிரேக்க வார்த்தைதான் இங்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அது உடற்பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படவில்லை. ஆவிக்குரிய தேவபக்திக்கான பயிற்சிக்கு பவுல் அதைப் பயன்படுத்துகிறார். அடுத்ததாக, “சரீரபயிற்சி அற்ப பிரயோஜனமுள்ளது. தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும், இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது” என்றும், அதைத் தொடர்ந்து, “உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், விசுவாசத்திலும், கற்பிலும் விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு” என்று சொல்லுகிறார். கிருபையைப் பெறவேண்டும் என்றால் 1 தீமோத்தேயு 4ஆம் அதிகாரம் 7, 8ஆம் வசனங்களின்படி நாம் என்ன செய்ய வேண்டும்? முயற்சி இல்லை. அதுதான் நான் ஏற்கெனவே சொல்லிவிட்டேனே. தயவுசெய்து முயற்சி என்கிற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம். “பயிற்சி”, “Exercise yourself unto Godliness”, “Train yourself unto Godliness”, “Discipline yourself unto Godliness”. தேவபக்திக்கேதுவாக பயிற்சிசெய்யுங்கள். தேவபக்திக்கேதுவான சிட்சைக்கு உங்களை உட்படுத்துங்கள். தேவபக்திக்கு ஏதுவான சிட்சையை நீங்கள் எண்ணிக்கொள்ளுங்கள்.
ஆகவே, தேவனுடைய மக்கள் கிருபையைப் பெற வேண்டும். எப்போதும் கிருபையினால் வாழ வேண்டுமென்றால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? ஆவிக்குரிய பயிற்சிகளில் நாம் தொடர்ந்து ஈடுபட வேண்டும். சில ஆவிக்குரிய பயிற்சிகள் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கைக்குரியவை. சில ஆவிக்குரிய பயிற்சிகள் நம்முடைய கூட்டு வாழ்க்கைக்குரியவை. இப்படிப்பட்ட ஆவிக்குரிய பயிற்சிகளில் நாம் நம்மைத் தொடர்ந்து ஈடுபடுத்த வேண்டும். ஆவிக்குரிய பயிற்சிகளுக்கு நம்மை உட்படுத்த வேண்டும். ஆவிக்குரிய சிட்சைக்கு நம்மை உட்படுத்த வேண்டும். அப்பொழுது நாம் தேவபக்தியை அடைவோம். தேவபக்தி அல்லது Godliness என்பது நாம் கிருபையினால் அடைவதல்ல. நம்முடைய சொந்த பக்தியினாலாவது, சொந்த சக்தியினாலாவது, யுக்தியினாலாவது நாம் அதைப் பெறவில்லை. பிறந்ததுமுதல் சப்பாணியாய் இருந்த ஒருவனைக் குணமாக்கும்போது “நாங்கள் எங்கள் சொந்த பக்தியினாலாவது, எங்கள் சக்தியினாலாவது இந்த முடவனை நடக்கச் செய்தோம் என்று நீங்கள் எண்ணக்கூடாது,” (அப். 3:12) என்று பேதுரு சொல்கிறார்.
இந்த ஆவிக்குரிய பயிற்சிகள் என்றால் என்ன அல்லது ஆவிக்குரிய பயிற்சிகள் யாவை என்பதைப்பற்றி இன்றைக்கு நான் மிகச் சுருக்கமாகக் கோடிட்டுக்காட்ட விரும்புகிறேன். நாம் முற்றுமுடிய பேசுவதற்கு இன்று சமயம் போதாது. தேவனுடைய மக்களிடத்திலே இந்த ஆவிக்குரிய பயிற்சிகள் மிகக் குறைவாகக் காணப்படுகிறது. தேவன் நமக்கு அவர் ஜீவனைக் கொடுத்திருக்கிறார். கிறிஸ்து நம் ஜீவனாக இருக்கிறார். இந்தக் கிறிஸ்துவில் இம்மைக்கும் மறுமைக்கும் உரிய எல்லாப் பரம வளங்களும் உள்ளன. இம்மைக்கு என்றால் இந்த உலக வாழ்க்கைக்கு, மறுமைக்கு என்றால் அன்பு, நீதி, பரிசுத்தம், ஒளி, பொறுமை, சாந்தம், தைரியம் என்று மனித வாழ்க்கைக்குரிய, மனிதனுக்குத் தேவையான எல்லா வளங்களும் கிறிஸ்துவில் உள்ளன. அந்தக் கிறிஸ்து நம்மில் ஜீவனாக இருக்கிறார். ஆனாலும், தேவனுடைய மக்கள் பலருடைய வாழ்க்கையிலே அது உண்மை இல்லை. இதை நாம் பார்த்திருக்கிறோமா, இல்லையா? கிறிஸ்துவுக்குள் தேவனுடைய ஆராய்ந்துமுடியாத, தீர்ந்துபோகாத வளங்கள் உள்ளன என்று எபேசியர் 3ஆம் அதிகாரம் 8ஆம் வசனத்திலே வாசிக்கிறோம். ஆனாலும் தேவனுடைய மக்கள் பலரைப் பொறுத்தவரை, நாம் உட்பட, பல வேளைகளிலே இது உண்மை இல்லை. இந்த உண்மையை நாம் எதிர்கொள்ள வேண்டும். பூனை கண்ணை மூடிவிட்டால் உலகம் இருண்டுவிட்டது என்று கற்பனை செய்துகொள்ளுமாம். அதுபோல நாம் கண்ணை மூடிக்கொண்டு ஒரு பொய்யான உலகத்திலே வாழக்கூடாது. நம்முடைய உண்மையான நிலை என்ன என்பதை நாம் எதிர்கொள்ள வேண்டும்É உற்று நோக்க வேண்டும்.
இந்தப் பயிற்சிகள் மிகவும் எளிமையாக இருக்குமா, கடுமையாக இருக்குமா? சிட்சைகள் எளிமையாக இருக்குமா, கடுமையாக இருக்குமா? உண்மை என்னவென்று கேட்டால் தேவபக்தி அல்லது நம்முடைய வாழ்க்கையிலே பரிசுத்த ஆவியில் நடப்பது, இயேசுகிறிஸ்துவின் அடிச்சுவடுகளில் நடப்பது, சத்தியத்தில் நடப்பது, இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றி நடப்பது என்பது ஒரு கடுமையான வாழ்க்கை. இயேசுகிறிஸ்துவைப்போல் வாழ்வது எளிமையான வாழ்க்கை என்று யாருமே இந்த உலகத்திலே சொல்லமாட்டார்கள். இந்த உலகத்திலே 99 சதவிகிதம்பேர் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாததற்கு காரணம் அவர் உண்மையானவரா அல்லது பொய்யானவரா என்பதல்ல. “அவர் வாழ்ந்ததுபோல் வாழ்வது கடினம். யார் இவைகளை ஏற்றுக்கொள்வான்?” என்பதுதான் காரணம். இதைச் சொல்ல முடியாததால்தான் அவர்கள் பூசி மொழுகி, “எங்களிடத்திலெல்லாம் கடவுள் இல்லையா? எங்கள் திருக்குறளில் நல்ல வழிகள் இல்லையா? எங்கள் கன்பூசியஸ் நல்ல வழிகள் சொல்லவில்லையா? எங்கள் புத்தர் நல்ல வழிகள் சொல்லவில்லையா? எங்கள் சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில் எல்லாம் நல்ல வழிகள் சொல்லவில்லையா?” என்று சொல்வார்கள்.
நெம்புகோல், அதாவது இலகு இயந்திரம் என்று அறிவியலில் நீங்கள் வாசித்திருப்பீர்கள். இல்லையா? ஒரு கல்லைப் புரட்டுவது கொஞ்சம் கடினமானது. ஆனால் ஒரு நெம்புகோலை வைத்து, ஒரு கடப்பாறையை வைத்துப் புரட்டுவது, ஒரு சின்னக் கல்லை வைத்தால் அந்தக் கல்லைப் புரட்டுவது எளிதாக இருக்கும். அதுதான் இலகுஇயந்திரத்தினுடைய வேலை. அதுபோல தேவபக்தியாய் வாழ்வது கடினம். ஆனால், தேவன் அதற்காக வகுத்திருக்கிற வழிமுறைதான் ஆவிக்குரிய பயிற்சிகள். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மத்தேயு 11ஆம் அதிகாரத்திலே “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன். என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது” (வ. 29-30) என்று சொன்னார்.
ஆண்டவர் பொய் சொல்லி யாரையாவது டபாய்க்கிறார் என்று நினைக்கிறீர்களா? “உண்மையிலேயே அவர் சுமை ரொம்ப பாரமாக இருக்கும். அவருடைய நுகம் கழுத்தை அழுத்தும். ஆனால் அவர்பக்கம் நம்மை ஈர்ப்பதற்காக அவர் இந்தமாதிரி பேசுகிறார்,” என்று யாராவது நினைக்கிறீர்களா? அவரைவிட உண்மையுள்ள மனிதன் இந்தப் பூமியிலே வாழ்ந்தது இல்லை. “என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கும்,” என்று சொன்னால் அவர் சொன்னதுதான்.
உண்மையிலேயே ஆவிக்குரிய பயிற்சிகளில் நம்மை ஈடுபடுத்தி வாழ்கிற வாழ்க்கை கடினமாக இருக்குமா அல்லது ஆவிக்குரிய பயிற்சிகளில் நம்மை உட்படுத்தாமல் வாழ்கிற வாழ்க்கை கடினமாக இருக்குமா? கேள்வியை அப்படிக் கேட்போம். ஆவிக்குரிய பயிற்சிகளில் நம்மை ஈடுபடுத்தினால் வருகிற கடினத்தைவிட ஆவிக்குரிய பயிற்சிகளில் நம்மை ஈடுபடுத்தாமல் வாழ்கிற வாழ்க்கை இருக்கிறதில்லையா? அந்த வாழ்க்கையில் வருகிற துன்பங்களும், வருத்தங்களும், கவலைகளும், கண்ணீர்களும், சிக்கல்களும், குழப்பங்களும் பல கோடிமடங்கு அதிகமாகும். ஆகவே, ஆவிக்குரிய பயிற்சிகள் மெதுவானவைகள், இலகுவானவைகள். ஆனாலும், தொடக்கத்தில் அது கடுமையானதுபோல் தோன்றும். எபிரெயர் 12ஆம் அதிகாரம் (11ஆம் வசனம்) நாம் அடிக்கடி மேற்கோள் காட்டியிருக்கிறோம். “எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும். ஆகிலும், அதில் பழகினவர்களுக்கு அது பிற்காலத்தில் நீதியாகிய சமாதான பல னைத் தரும்”. இது மிக முக்கியமான வசனம். “எந்தச் சிட்சையும், எந்த ஆவிக்குரிய பயிற்சியும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும். ஆகிலும், பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்”.
ஆவிக்குரிய பயிற்சிகளெல்லாம் மிக எளிமையானது என்று சொல்லி நான் உங்களை ஏமாற்ற விரும்பவில்லை. அது கொஞ்சம் கடுமையானது என்பதற்கு நான் வேதத்திலிருந்து ஒரு பகுதியை வாசிக்க விரும்புகிறேன். 1 கொரிந்தியர் 9ஆம் அதிகாரம் (24-27 வசனங்கள்). “பந்தயச்சாலையில் ஓடுகிறவர்கள் எல்லாரும் ஓடுவார்கள். ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள். பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள். நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம். ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன். ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன். மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்”.
ஆவிக்குரிய பயிற்சியை ஒப்பிடும்போது பவுல் ஒரு உதாரணத்தைச் சொல்கிறார். பந்தயச்சாலையில் ஓடுகிற யாவரும் எல்லாவற்றிலும் இச்சையடக்கமாயிருப்பார்கள். 24 மணி நேரமும் இச்சையடக்கமாயிருப்பார்கள். காலையில் எழுந்திருப்பது, உடற்பயிற்சி செய்வது, அவர்களுடைய உணவு அளவு, உணவு இடைவேளை, தூக்கம் என்று எல்லாவற்றிலும் அவர்கள் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள். நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறுவதற்காக அப்படிச் செய்கிறோம். மற்றவர்களுக்குப் பிரசங்கிக்கிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்”.
ஆவிக்குரிய பயிற்சி ரொம்ப இலகுவானதா? ரொம்பக் கடுமையானதா? கொஞ்சம் கடுமையானது. அதை நாம் எதிர்கொள்ள வேண்டும். இதற்கும் கிருபைக்கும் என்ன தொடர்பு? “நான் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தேன். இனிமேல் கிருபையினால், கிருபையினால் அப்படி இயேசுகிறிஸ்துவின் சாயலாய் நான் மாறிவிடுவேன்,” என்று நான் சொல்கிறேனா? இதையா நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
நாம் தேவனுடைய ஜீவனைப் பெறுகிறோம். அதனால் நாம் இயேசுகிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்த சாயலாக மாறிவிடுவோமா? நாம் என்ன செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி அது ஒரு பொருட்டில்லையா? பவுல் மிகவும் தெளிவாய்ச் சொல்கிறார். “நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன். ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்”. ஆகாயத்தை அடிக்கிற சிலம்பம்பண்ணுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? boxing in the air. எதிரிகள் யாரும் இருக்க மாட்டார்கள். சும்மா ஒரு கம்பை வைத்து அப்படியே சுழற்றிக்கொண்டேயிருப்பார்கள். ஒரு கம்பை வைத்துக்கொண்டு திருவிழாக்களிலே வேடிக்கைக் காட்டிக்கொண்டிருப்பார்கள். உண்மையிலேயே எதிரிகளை இவர்களால் மேற்கொள்ள முடியுமா என்று தெரியாது. ஆனால், நல்ல ஒரு விளையாட்டாக இருக்கும்.
“தேவனுடைய மக்களாகிய நாம் தேவனுடைய ஜீவனைப் பெற்றிருக்கிறோம்;. பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார். நான் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிறேன். ஆகவே, நான் ஒவ்வொரு நாளும் இயேசுகிறிஸ்துவைப்போல் மறுசாயல், மறுஉருவாவேன்,” என்பது பல வேளைகளிலே ஆகாயத்திலே அடிக்கிறவனாக சிலம்பம்பண்ணுவதாக மாறலாம்.
இதுவரை நான் இரண்டு குறிப்புகளைச் சொன்னேன். முதலாவது, ஒரு பாத்திரமாக உருவாவது நம்முடைய பொறுப்பு. நாம் சுத்திகரிப்பதைப் பொறுத்து நாம் அப்படிப்பட்ட பாத்திரமாக உருவாகிறோம். இரண்டாவது, கிருபையை நாம் கண்டடைவதற்கு ஆவிக்குரிய பயிற்சிகள் நமக்கு அவசியம்.
ஒரு பக்கம், ஆவிக்குரிய பயிற்சிகள் இலகுவானவைகள். ஆனால், இன்னொரு பக்கம் ஆவிக்குரிய பயிற்சிகள் கடினமானைவைகள்தான். நம்முடைய வாழ்க்கையில் நாம் பல சோதனைகளைச் சந்திக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் வாழ்க்கையில் 24 மணி நேரமும், இயேசுகிறிஸ்துவால் வாழ்வது, பரிசுத்த ஆவியினால் வாழ்வது என்பது தண்ணீரில் நடப்பதற்குச் சமானம். எப்படி இயேசு கிறிஸ்து தண்ணீரில் நடந்தாரோ? நாம் தண்ணீரில் நடக்கவில்லை. பரிசுத்த ஆவியில் நடப்பது என்பது இந்த உலகத்து மக்கள் வாழ்வதுபோல இருக்கிற ஒரு வாழ்க்கை அல்ல. நம்முடைய வாழ்க்கையிலே நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான சோதனைகளை நாம் சந்திக்கிறோம். சில சோதனைகள் எளிய சோதனைகள். சில சோதனைகள் கடினமான, கடுமையான சோதனைகள். சோதனைகள் வரும்போது நாம் பல வேளைகளிலே நாம் தோற்றுவிடுகிறோம். என்னுடைய அனுபவம் அது. அதற்குக் காரணம் உண்டு.
நம்மிடத்தில் தேவனுடைய ஜீவன் இருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார். தேவனுடைய வார்த்தையை அவ்வப்போது வாசிக்கிறோம். ஆனால் சோதனை வரும்போது தோற்றுவிடுகிறோம். இதற்குக் காரணம் என்ன? என்ன குறைபாடு? என்ன குறைவுபடுகிறது? ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கெத்செமனேயிலே, “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான். மாம்சமோ பலவீனமுள்ளது,” (மத். 26:11) என்று தம்முடைய சீடர்களுக்குச் சொன்னார். அவர்கள் தூங்கிவிட்டார்கள். ஏனென்றால், இயேசு கிறிஸ்துதான், “ஆவி உற்சாகமுள்ளதுதான். மாம்சம் பலவீனமுள்ளது. ஆதலால் நீங்கள் எல்லாரும் தூங்குவீர்கள் என்று அவர் சொல்லிவிட்டாரே!” என்று அவர்கள் நினைத்தார்களோ! அவர் தீர்க்கதரிசனம் சொல்லிவிட்டுப் போனாரா அல்லது “ஆவி உற்சாகமுள்ளதுதான். மாம்சம் பலவீனமுள்ளது. ஆகையால் இதை எதிர்கொள்வதற்கு நீங்கள் சோதனைக்குட்படாதபடி விழித்திருந்து ஜெபம்பண்ண வேண்டும்,” என்று சொன்னாரா? நான் சொல்வது உங்களுக்கு விளங்குகிறதா? “நீங்கள் சோதனைக்குட்படாதபடி விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஆனால் என்ன பண்ணுவது? ஆவி உற்சாகமுள்ளதுதான். மாம்சமோ பலவீனமுள்ளது. நான் சொன்னால்கூட தூங்கத்தான் செய்வீர்கள்!” என்று அவர் சொல்லி விட்டுப்போனாரா? அல்லது, “இல்லை, நண்பர்களே! ஒரு சோதனை வரப்போகிறது! இன்னும் கொஞ்ச நேரத்திலே உங்களுடைய ஆவி எனக்கு உத்தமமாய் இருக்க வேண்டுமென்று உற்சாகமாக இருக்கும். ஆனால், உங்கள் மாம்சம், இவனை நான் அறியேன் என்று பலவீனத்தில் சொல்லும். நம்மைக் கொன்றுவிடுவார்களோ என்று அந்த சோதனையில் வீழ்ந்துவிடக் கூடாது. ஆகையால் விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்,” என்று சொன்னாரா? “மாம்சமோ பலவீனமுள்ளது; அதனால் நீங்கள் தூங்கிவிடுவீர்கள்,” என்பதற்காக அவர் சொல்லவில்லை. சோதனைகள் வரும்போது, நம்முடைய மாம்சம் பலவீனமுள்ளதாக இருக்கிறது. ஆவியிலே உற்சாகம் இருக்கிறது. ஆனாலும், நாம் வீழ்ந்துவிடுகிறோம். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தெளிவாகச் சொல்கிறார். “நீங்கள் சோதனைக்குட்படாதபடி விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்”. ஜெபம் ஆவிக்குரிய பயிற்சிகளில் மிக முக்கியமான ஒன்று.
“டெமாஸ்தனீஸ்” என்ற ஒரு சிறந்த பேச்சாளனைக்குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்களும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் திக்குவாய் உள்ளவர். இவர் தலைசிறந்த பேச்சாளானாக, சொற்பொழிவாளனாக, வரவேண்டுமென்று விரும்பினார். நன்றாகப் பேசுகிறவர்களுக்கே கூட்டத்தைப் பார்த்தால் பேச்சு வராது. திக்குவாயனுக்குக் கூட்டத்தைப் பார்த்தால் பேச்சு வருமா? வராது. கூழாங்கல்லை வாயில் போட்டுக்கொண்டு கடற்கரையில் நின்றுகொண்டு அலைகளின் சத்தத்தைவிடத் தன்னுடைய சத்தம் அதிகமாக வருமளவிற்கு சத்தம்போட்டுப் பேசுவாராம். இது உண்மை. கதையல்ல. கூழாங்கல்லை வாயிலே வைத்துக்கொண்டு பேசமுடியுமா? அவர் கண்டுபிடித்தது. பிறகு பேச்சாளனனுக்குப் பேசுவதற்குப் பொருள் வேண்டுமில்லையா? வாயைத் திறந்து திறந்து மூடினால் போதாது. பேசுவதற்குரிய ஒரு பொருளடக்கம் வேண்டும். சில ஞானம், அறிவு வேண்டும். அவைகளை வைத்துத்தான் பேச வேண்டும். ஆகையால் அவர் என்ன செய்தாராம், ஒருசில மாதங்கள் தன்னை ஓர் அறையிலே அடைத்துக்கொண்டு, புரூடீஸியஸ் என்ற இன்னொரு கிரேக்க ஞானி எழுதிய புத்தகத்தை பத்து முறையோ, பதினேழு முறையோ திரும்பத்திரும்ப எழுதினாராம். திரும்பத்திரும்ப பத்து முறை, பதினேழு முறை எழுதினால் பேசுவதற்குரிய சரக்கு இருக்குமா இருக்காதா? இருக்கும். பல மாதங்கள் தன்னை ஓர் அறையிலே அடைத்துக்கொண்டாலும் அந்த சோதனையை தாங்க முடியுமா? சோதனைகள் வருமில்லையா? “வேண்டாம். இப்படிக் கஷ்டப்பட்டு ஒரு பேச்சாளனாக மாற வேண்டுமா? வெளியே போய்விடலாம்,” என்கிற சோதனை வந்துவிடக்கூடாது என்பதற்காக தன்னுடைய தலையிலே பாதியை மொட்டையடித்துக் கொண்டாராம். தலையிலே பாதியை மொட்டையடித்துக் கொண்டால் வெளியே போகமுடியாது இல்லையா? முடி நன்றாக வளர்ந்தபிறகுதானே வெளியே போக முடியும். வெளியே போக முடியாது. அறையிலே அடைத்தாயிற்று. இனிமேல் என்ன செய்ய வேண்டும்? புரூடீஸியஸினுடைய புத்தகத்தைப் பதினேழு தடவை எழுத வேண்டியதுதான்.
இதைத்தான் அப்போஸ்தலனாகிய பவுல் 1 கொரிந்தியர் 9இல் சொல்கிறார். ஒருவன் இந்தப் பூமியிலே ஒன்றைச் சாதிப்பதற்காக எப்படிப்பட்ட பயிற்சிக்கு, சிட்சைக்கு, தன்னை ஒப்படைக்கிறான், உட்படுத்துகிறான்? எரேமியா 12ஆம் அதிகாரம் (5 ஆம் வசனம்) நமக்குத் தெரியும். “நீ காலாட்களோடே ஓடும்போதே உன்னை இளைக்கப்பண்ணினார்களானால், குதிரைகளோடே எப்படிச் சேர்ந்து ஓடுவாய்? சமாதானமுள்ள தேசத்திலேயே நீ அடைக்கலம் தேடினால், யோர்தான் பிரவாகித்து வரும்போது நீ என்ன செய்வாய்;?” நீ காலாட்களோடே ஓடும்போதே உன்னை இளைக்கப்பண்ணினார்களென்றால் குதிரைகளோடே எப்படி சேர்ந்து ஓடுவாய்? அதனுடைய அர்த்தம் என்னவென்று கேட்டால் சாதாரண நாட்களிலே நாம் ஆவிக்குரிய பயிற்சிகளில் ஈடுபடவில்லையென்றால் அல்லது ஆவிக்குரிய பயிற்சிகளுக்கு நம்மை உட்படுத்தவில்லை என்றால் சோதனைகாலம் வரும்போது நம்மால் தாக்குப் பிடிக்க முடியாது.
நான் இன்னும் ஆவிக்குரிய பயிற்சி என்றால் என்ன என்ற கருத்திற்கே வரவில்லை. ஜெபம் என்ற ஒன்றை மட்டும் குறிப்பிட்டேன். இந்த ஆவிக்குரிய பயிற்சிகள் என்ற வார்த்தையை நான் குறிப்பிட்டதாலே ஒன்றை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். ஆவிக்குரிய பயிற்சிகள் என்பது 24 மணி நேரமும், 7 நாட்களும் செய்யத்தக்கவைகள். நம்முடைய நிலைமைக்கு ஏற்றதுபோல ஆவிக்குரிய பயிற்சிகளில் நாம் ஈடுபட வேண்டும்.
இந்த ஆவிக்குரிய பயிற்சிகளை தனிப்பட்ட வாழ்வின் பயிற்சிகள், கூட்டு வாழ்வின் பயிற்சிகள் என ஏற்கெனவே நாம் இரண்டாகப் பிரித்துக்கொள்ளலாம். எடுத்துக்காட்டுகளாக நான் சில பயிற்சிகளைச் சொல்கிறேன். ஒன்று, தனிமை. இயேசுகிறிஸ்து ஐந்து அப்பம், இரண்டு மீன்களை ஆசீர்வதித்து ஐயாயிரம் பேருக்குக் கொடுத்தபின், அவர் மக்களை வழியனுப்பிவிட்டு, சீடர்களை துரிதமாக அக்கரைக்குப் போகச்சொன்னபின், சாயங்காலமானபோது அவர் மலையிலே தனிமையாக இருந்தார். சாயங்காலமானபோது இயேசு தனிமையிலே இருந்தார். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நாற்பது நாட்கள் தனிமையில் இருந்தார். அப்போஸ்தலனாகிய பவுல் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைச் சந்தித்தபிறகு அரபு தேசத்திற்குப் போய் தனித்திருந்தார். எத்தனை ஆண்டுகள் என்று தெரியவில்லை. அது ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக இருக்கலாம் (கலா. 1:18). இதைப்பற்றி நாம் தர்க்கம்பண்ணப் போவதில்லை. ஆனால், தேவனுடைய மக்கள் எல்லாரும் ஒரு வருடத்தில் பல நாட்கள் தனிமையில் இருக்கின்றார்கள். ஒரு வாரத்தில் ஒரு நாள் தனிமையில் இருக்கின்றார்கள். ஒரு நாளில், சில மணி நேரங்கள் தனிமையில் இருக்கின்றார்கள். இந்த உலகத்தோடுள்ள எல்லா தொடர்புகளையும் துண்டித்துவிட்டு நீங்கள் என்ன செய்கின்றீர்கள்? “நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவன் என்று அறிந்துகொள்ளுங்கள். ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன். பூமியிலே உயர்ந்திருப்பேன்” (சங். 46:10). “Be still and know that I am God”. ஒவ்வொரு நாளும், ஒரு குறிப்பிட்ட வேளை யாவது தேவனுடைய மக்களாகிய நாம் தனித்திருக்க வேண்டும். ஒரு பதினைந்து நிமிடம் அல்லது ஒரு அரைமணி நேரம் அல்லது ஒரு 1 மணி நேரம் அமைதி. அமைதியாக இருப்பது. யாரோடும் பேசாமல், யாரும் பேசிக் கேட்காமல் மௌனமாக இருப்பது ஒரு பயிற்சி.
ஜெபம் ஒரு பயிற்சி. தேவனை ஆராதிப்பது ஒரு பயிற்சி. தேவனுடைய வார்த்தையை வாசிப்பது ஒரு பயிற்சி. தேவனுடைய வார்த்தையை, ஒரு வாக்கியத்தை, மனப்பாடம் செய்வது ஒரு பயிற்சி. மனப்பாடம் செய்வதை ஒப்பிப்பது ஒரு பயிற்சி. தேவனுடைய வார்த்தையை ஆராய்ந்து படிப்பது ஒரு பயிற்சி. நம்முடைய பொருளாதாரத்தை தேவனுக்கென்று, தேவனுடைய வேலைக்கென்று, ஒதுக்கிவைப்பது ஒரு பயிற்சி. நாம் எப்படிப்பட்ட வேலைசெய்பவர்களானாலும் சரி, வேலையில்லாதவர்களானாலும் சரி, ‘என்னுடைய வேலையே இன்றைக்கோ, நாளைக்கோ என்றிருக்கிறது’ என்று சொல்பவர்களாக இருந்தாலும் சரி. அப்போதும்கூட தேவனுக்கென்று ஒரு பங்கை ஒதுக்கிவைக்க வேண்டும் என்று நான் சொல்வேன்.
நாம் தசமபாகத்தைப் போதிக்கிறவர்கள் அல்ல. ஆனால் பரிசேயர், வேதபாரகர் இவர்களுடைய நீதியிலும் உங்களுடைய நீதி அதிகமாயிராவிட்டால் நீங்கள் தேவனுடைய இராஜ்ஜியத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று ஆண்டவராகிய இயேசு சொன்னார். பரிசேயர்கள், வேதபாரகர்கள் தசமபாகம் கொடுத்தார்கள். ஆனால் நம்முடைய நீதி அதைவிட அதிகமாக இருக்க வேண்டும். நான் பொருளாசையிலிருந்து விடுபட விரும்புகிறேன்.
ஒருவேளை ஒருவனுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்து ஒரேவொரு தவறைச் செய்யச் சொல்கிறார்கள். நான் இந்த சோதனையிலே வெல்வேனா, தோற்பேனா என்பது எதைப் பொறுத்தது? இன்றைக்கு நான் என் பொருளாதாரத்திலே ஒரு பங்கை தேவனுக்கென்று, தேவனுடைய வேலைக்கென்று, ஒதுக்கிவைக்கிற பழக்கம், பயிற்சி, உள்ளவனா, இல்லையா என்பதைப் பொறுத்திருக்கிறது. அப்படிப்பட்ட பயிற்சி இல்லையென்றால் ஒரு கோடி ரூபாய் வரும்போது என்னமோ பெரிய கதாநாயகன்போல, “எனக்கு வீடு நிறைய வெள்ளி, பொன் கொடுத்தாலும் சரி, நான் வந்து அவர்களைச் சபிக்க மாட்டேன்,” என்று சொன்ன பிலேயாமைப்போல, “நீர் எனக்கு இந்தப் பூமியையே கொடுத்தாலும், இந்த வேலையைச் செய்யமாட்டேன்,” என்று வாய்ச்சொல்லில் வீரனாக இருக்கலாம். ஆனாலும் பிலேயாம் என்ன சொன்னான்? “இந்த இராத்திரி தங்கும். நான் கடவுளிடத்தில் மறுபடியும் விசாரித்துப் பார்க்கிறேன்,” என்று நாம் சொல்கிற மக்களாக இருப்போம்.
நன்றாய்க் கவனிக்க வேண்டும். “இந்தப் பயிற்சிகளையெல்லாம் நான் அடுத்த வருடம் ஆரம்பிக்கிறேன்,” என்று சொல்ல வேண்டாம். இந்தப் பயிற்சிகளையெல்லாம் நாம் இன்றைக்கே செய்ய முடியும்.
தேவனுடைய மக்களாகிய நாம் கூடிவந்து ஒருவருக்கொருவர் ஐக்கியம் கொள்வது ஒரு பயிற்சி. ஒரு பாடலைப் பாடுவது ஒரு ஆவிக்குரிய பயிற்சி. ஒரு பாடலைப் பாடிவிட்டு ஒரு வாக்கியம் தேவனை ஆராதிப்பது, தேவனைத் துதிப்பது ஒரு பயிற்சி. அப்படி நீங்கள் தேவனுடைய மக்களோடு சேர்ந்து ஒரு வாக்கியம் சொல்லி தேவனைத் துதித்து எத்தனை வாரங்கள் ஆயிற்று? யோசித்துப்பாருங்கள். பாடலைப் பாடுவதற்குக் காரணம் என்னவென்றால் குறைந்தபட்சம் ஒரு வாக்கியமாவது என்னை அந்தப் பாடல் தொட வேண்டும். 1 தீமோத்தேயு 6ஆம் அதிகாரத்திலே அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லும்போது, “நீ அநேக சாட்சிகளுக்குமுன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனாக இருக்கிறாய்”என்று சொல்லுகிறார். “இயேசுகிறிஸ்துவைப்பற்றி நாம் பல ஆயிரம் பேருக்குமுன்பாய் வெட்கப்படமாட்டோம்,” என்று சொல்லுகிறோம். இங்கேயே வெட்கப்படுகிற நாம் எப்படிப் பல்லாயிரம்பேருக்கு முன்பாக வெட்கப்படாமல் இருப்போம்? நீங்கள் புதிய வாக்கியத்தை ஜோடித்துகூட நீங்கள் துதிக்க வேண்டாம். பாடல் பாடும்போது, அந்தப் பாடலிலே பன்னிரெண்டு வரிகள் அல்லது பதினாறு வரிகள் வருகிறதென்றால் ஒரு வரி என்னைத் தொடவில்லையா? அந்த ஒரு வரி எனக்கு ஏற்றதாக இல்லையா? எடுத்துக்காட்டாக ஒரு பாடல் வரிகள் இவ்வாறு வருகின்றன:
ஞாலமதிலே அவர்க்கிணை நண்பர் யாருளர், பாரும் நம் உயிரை மீட்கவே அவர் தன்னுயிர் விட்டார்.
அந்த ஒரு வரி என்னைத் தொடுகிறது. நான் புதிதாக ஒன்றும் சொல்லவில்லை. “ஆண்டவரே, இந்த ஞாலத்திலே உம்மைப்போல நண்பர்கள் வேறு யாருளர்? என்னுயிரை மீட்க உம் உயிரையே விட்டீரே! உமக்கு நன்றி!” என்று சொல்வது ஒரு பயிற்சி. நீங்கள் இந்தப் பயிற்சிகளை உதாசினம் செய்தால் அதற்கேற்ற அளவு கிருபையை நீங்கள் இழந்துவிடுவீர்கள்.
தயவுசெய்து நீங்கள் மனம் புண்படாதீர்கள். நான் ஒரு மாபெரும் இரகசியத்தை உங்களுக்குச் சொல்கிறேன். வாரத்தில் ஒருநாள் உங்கள் கைபேசியை தனிமைக்காக சுவிட்ச் ஆஃப் செய்து வையுங்கள். மொபைல்போன் இல்லாத நாட்களில் நாம் வாழ்ந்தோம். போன் இருந்தபோதுகூட ஒரு குறிப்பிட்ட நேரத்தில்தான் நம்மைத் தொடர்புகொள்ள முடிந்தது. வேலைபார்க்கும்போது தொடர்பு கொள்ள முடியாது. ஒன்பது மணியிலிருந்து ஐந்து மணிவரை சகோதரர்களாகவே இருந்தாலும்கூட கொஞ்சம் பயத்தோடும் நடுக்கத்தோடும் போன் பண்ணுங்கள். அவசரம் என்றால் மட்டும் நீங்கள் போன் பண்ண வேண்டும். ஏனென்றால், அவர்கள் ஒரு வேலை பார்க்கின்றவர்கள். வேலை பார்க்கிற இடத்திலே “எப்பொழுதும் இவர்கள் ஃபோனும் கையுமாக இருப்பார்கள்,” என்கிற துர்ச்சாட்சி தேவனுடைய மக்களுக்கு இருக்கக் கூடாது. “ஒன்பதிலிருந்து ஐந்து மணிவரை நான் உனக்கு வேலைசெய்வேன்,” என்று நாம் ஒருவருக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறோம். ரொம்ப அவசரமான செய்தி என்றால் சுருக்கமாகச் சொல்லி முடிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வீட்டிற்கு வந்தபிறகு நாம் பேசலாம்.
தனிமை என்கிற ஆவிக்குரிய பயிற்சி இந்த உலகத்திலே மிகவும் அரிது. தனிமை ஒரு மனிதனை வலுப்படுத்தும். தேவனோடு ஒரு மனிதன் தனிமையில் இருந்தால் அவனை வலுப்படுத்தும். இந்து ஞானிகள் ப.த.வி. என்று சொல்லியிருக்கிறார்கள். பசித்திரு, தனித்திரு, விழித்திரு.
உபவாசம் ஒரு பயிற்சி. ஏறக்குறைய உபவாசம் என்கிற ஆவிக்குரிய பயிற்சியை நாம் இழந்தே விட்டோம். தனியாகவும் உபவாசிக்க வேண்டும். கூட்டாகவும் உபவாசிக்க வேண்டும். கிருபையைப் பெறுவதற்கு உபவாசிக்க வேண்டுமா? ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மறுரூபமலையிலிருந்து இறங்கிவரும்போது சீடர்கள் பிசாசைத் துரத்துவதற்கு முயற்சி செய்கின்றார்கள். பிசாசு போகவில்லை. “நாங்கள் துரத்தினோம். அவைகள் ஏன் போகவில்லை?” என்று தனிமையிலே அவர்கள் அவரை விசாரிக்கின்றார்கள். “இந்த வகைப் பிசாசுகள் ஜெபத்தினாலும், உபவாசத்தினாலுமேயன்றி வேறொன்றினாலும் போகாது,” என்று சொல்கிறார். நாம் எப்போதாவது பிசாசைத் துரத்தியிருக்கிறோமா? தேடித்தேடிப் போய் நாம் பிசாசைக் கண்டுபிடித்து நான் துரத்தச் சொல்லவில்லை. நம்மைத் தேடிவருகிற பிசாசையாவது நம்மால் துரத்தமுடியுமா? “பிரதர், இதுவரை எந்த வகைப் பிசாசுகளும் என்னைத் தேடிவந்தவில்லை,” என்று நீங்கள் சொன்னால், என் பதில், “கர்த்தர் ரொம்ப நல்லவர். எதாவது பிசாசு என் மகனிடம் போனால் அவனால் ஒன்றும் செய்ய முடியாது. அவன் பதறிப் போய்விடுவான். அதனால் அவனை விட்டுவிடுவோம்,” என்று அவர் யாரையும் அனுப்பி வைக்கிறதில்லை.
விழிப்பு ஒரு ஆவிக்குரிய பயிற்சி. விழிப்பதென்றால் கண் விழிப்பது. லூக்காவிலே எழுதியிருக்கிறது. இயேசு இராமுழுதும் தேவனோடு ஜெபித்தார். அவரால் பகலிலே ஜெபிக்க முடியாதா? இராமுழுவதும் தேவனோடு ஜெபிக்க வேண்டிய அத்தியாவசம் இருந்ததா?
எனவே, நாம் இந்தப் பயிற்சிகளையெல்லாம் உதாசீனம் பண்ணிக்கொண்டிருக்கிறோம். நன்றாய்க் கவனிக்க வேண்டும். “பிரதர், இந்தப் பயிற்சிகளையெல்லாம் செய்கிற நிறையப்பேர் நாடகமாடுகிறார்கள், வேடதாரிகள், மாயக்காரர்கள். மனிதர்களின் பார்வைக்கு அவர்கள் உபவாசிக்கிறார்கள். மனிதர்களின் பார்வைக்கு அவர்கள் நீண்ட ஜெபம் பண்ணுகிறார்கள் என்று அவர் சொன்னார். அதனால் இவைகள் தேவையில்லை,” என்று நீங்கள் நினைத்தால், நான் ஒன்று கேட்கிறேன். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அப்படிச் சொல்லிவிட்டு அவர் ஜெபம் பண்ணாமல் இருந்தாரா? உபவாசிக்காமல் இருந்தாரா? நாடகமாடுகிற வேடதாரிகளுடைய ஜெபத்திற்குப் பதில் ஜெபிக்காமல் இருப்பதில்லை, உண்மையான ஜெபம். வேடதாரிகளுடைய உபவாசத்திற்குப் பதில் உபவாசிக்காமல் இருப்பதில்லை, உண்மையான உபவாசம். நீங்கள் அந்தப் பயிற்சிகளையெல்லாம்பற்றி யோசித்துப் பாருங்கள்.
இந்த ஆவிக்குரிய பயிற்சிகளைப்பற்றி வருகின்ற நாட்களிலே இன்னும் சற்று விவரமாக நாம் பேசு வோம். ஏனென்றால் தேவனுடைய மக்கள் எல்லாரும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினுடைய ஜீவனும், குணமும், வல்லமையும் உள்ள மக்களாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒரு சோதனை, ஒரு தேவை, ஒரு நெருக்கடி என்று வருகிறபோது இயேசுகிறிஸ்துவை வழங்க நம்மால் முடியாது. நாம் கிருபைகளைப் பெறுவதற்குத் தேவன் நமக்குப் பல பயிற்சிகளைக் கொடுத்திருக்கிறார்.
சுருக்கமாக நான் சொல்லி முடித்துவிடுகிறேன். இது தீமோத்தேயுவினுடைய பாரம் என்று சொல்லவில்லை. ஆனால், கனத்திற்குரிய பாத்திரங்களாக நாம் உருவாக வேண்டுமென்றால் ஆவிக்குரிய பயிற்சிகள் நமக்கு அவசியம். தேவனுடைய கிருபை ஏராளமாக இருக்கிறது. கிருபையை நாம் சம்பாதிக்க முடியாது. ஆனால், நாம் கிருபையைக் கண்டடைய வேண்டுமென்றால் இப்படிப்பட்ட ஆவிக்குரிய பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். ஆவிக்குரிய பயிற்சிகளுக்கு உட்படுத்த வேண்டும். ஆவிக்குரிய பயிற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். அது நமக்குக் கிருபையைத் தரும். நம்மூலமாக பலருக்குக் கிருபைகளை கொண்டுபோகும்.
இந்த ஆவிக்குரிய பயிற்சிகளைச் செய்வதற்கு நாம் திட்டமிட வேண்டும். நீங்கள் பத்து நிமிடம் ஜெபிப்பீர்களா? இருபது நிமிடம் ஜெபிப்பீர்களா? முப்பது நிமிடம் ஜெபிப்பீர்களா? 1 மணி நேரம் தனிமையில் இருப்பீர்களா? இரண்டு மணி நேரம் தனிமையில் இருப்பீர்களா? 1 வாரத்திற்கு ஒரு முறையா, 1 மாதத்திற்கு இருமுறையா என்பதை யாரும் சொல்வதில்லை. ஆனால் நாம் திட்டமிட வேண்டும்.
ஒரு சில ஆவிக்குரிய பயிற்சிகளை உதாரணமாகச் சொன்னேன். 1. தனிமை. 2. மௌனம். 3. ஜெபம். 4. உபவாசம். 5. தேவனுடைய வார்த்தையை வாசிப்பது. 6. தேவனுடைய வார்த்தையைத் தியானிப்பது. 7. தேவனுடைய வார்த்தையை மனப்பாடம் செய்வது. தேவனுடைய வார்த்தையை நீங்கள் மனப்பாடம் செய்து எத்தனை நாட்கள் ஆயிற்று. ஒரு நாளைக்கு ஒரு வசனம் மனப்பாடம் பண்ணி எவ்வளவு நாட்கள் ஆயிற்று? சங்கீதக்காரன் தாவீது “நான் பாவம் செய்யாதபடிக்கு உம்முடைய வசனத்தை என் இருதயத்திலே ஒளித்து வைத்தேன். “I have hidden your word in my heart that I may not sin,” என்று சொல்கிறான். நீங்கள் ஒவ்வொரு நாளும் தேவனுடைய வசனம் ஒன்றை ஒளித்துவைத்துப் பாருங்கள். நம்முடைய இருதயத்திலே ஒளித்து வைத்து என்றால் நீங்கள் மனப்பாடம் செய்யும்போது அந்த வசனத்தை என்ன செய்கிறீர்கள்? “we have hidden the word in our heart”. காலையில் எழுந்து ஒரு வசனத்தை நீங்கள் மனப்பாடம் செய்து உங்கள் இருதயத்தை நிறையுங்கள். அந்த வசனத்தை மத்தியானமோ, சாயங்காலமோ அல்லது இராத்திரியோ உங்களுக்கு நீங்களே ஒப்பித்துப் பாருங்கள். இந்த எளிய ஆவிக்குரிய பயிற்சிகளில் நீங்கள் ஈடுபடுங்கள். தேவனுடைய கிருபைகளை நீங்கள் தாராளமாய்ப் பெறுவீர்கள்.
ஒரு டெமஸ்தனீஸ் அல்லது இந்தப் பந்தயச்சாலையிலே ஓடுகிறவன் இப்படிப்பட்ட பயிற்சிகளுக்குத் தன்னை உட்படுத்தி வெற்றிபெறுகிறானென்றால் தேவனுடைய மக்கள் இதைவிட மகிமையான ஆவிக்குரிய வெற்றிகளைப் பெற முடியும். நம்முடைய வாழ்க்கைக்குக் கிருபைகளை மட்டுமல்ல, நாம் வாழ்கின்ற கொடிய காலங்களில் 2 தீமோத்தேயு 3ஆம் அதிகாரம் 1ஆம் வசனத்தில் வாசித்ததுபோல “கடைசி நாட்களிலே கொடிய காலங்கள் வரும்”. கொடிய காலங்கள் வரும் என்று கைகளைக் கட்டிக்கொண்டு இருப்பதா? “கொடிய காலங்கள், கொடிய காலங்கள் நம்மால், எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. நாங்கள் அமைதியாக இருப்போம். கொடிய காலங்கள்”. அதையா தேவன் விரும்புகிறார்? கொடிய காலங்கள் வரும். “ஆனால், நீயோ தேவனுடைய மனிதனே, மனத் தெளிவுள்ளவனாயிரு”. கையாலாகாதவனாக நாம் வாழ்வதில்லை. காலங்கள் எவ்வளவு கொடிய காலங்களாக இருந்தாலும் சரி. தேவனுடைய மக்களாகிய நம்மால் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை வழங்க முடியும். இதைக்குறித்து நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இதைக் குறித்து நீங்கள் தேவனிடத்தில் விசாரியுங்கள்.
2 தீமோத்தேயு 5ஆம் அதிகாரத்திலே 4, 5, 6ஆம் வசனங்களிலே, “மல்யுத்தம் பண்ணுகிற எவனும் சட்டத்தின்படி மல்யுத்தம் பண்ணாவிட்டால் அவன் முடிசூட்டப்படான். பிரயாசப்பட்டுப் பயிரிடுகிறவன் பலனிலே முந்திப் பங்கடைய வேண்டும்”. “என் மகனே, நான் சொல்லுகிறவைகளை நீ சிந்தித்துக் கொள். கர்த்தர் உனக்குப் புத்தியைத் தந்தருளுவார்”. நாம் வாழ்கின்ற காலங்கள் கொடிய காலங்கள். ஆனால் தேவன் நம்மைக் கனத்திற்குரிய பாத்திரமாக உருவாக்க விரும்புகிறார். நாம் இந்த தேவபக்திக்கேதுவாக செய்கின்ற பயிற்சிகளைச் செய்கிறவர்களாக இருந்தால் தேவன் நம்மை இந்தக் கொடிய இருளான காலங்களில் கனத்திற்குரிய, மகிமையான பாத்திரங்களாகப் பயன்படுத்துவார். ஆமென்.
ஜெபிப்பது ஒரு பயிற்சி. இரண்டு மணி நேரம் கூடினபிறகு ஜெபித்தவர்களே ஜெபித்துவிட்டுப் போவதுபோல ஒரு துர்பாக்கியமான நிலைமை வேறு எதுவுமே இல்லை. நீங்கள் கவனியுங்கள். ஜெபித்தவர்களே ஜெபித்தால் அவர்கள் கிருபைகளைப் பெறுவார்கள். ஜெபிக்காதவர்கள் நீங்கள் கிருபைகளை இழப்பீர்கள். இதை நான் துணிந்து சொல்ல வேண்டியிருக்கிறது. ஏன் என்று கேட்டால் நீங்கள் எதையாவது இழந்துவிடுவீர்கள் அல்லது எதாவது நீங்கள் நட்டப்படுவீர்கள் என்று சொன்னாலே மக்கள் மனம் புண்படுவார்கள். புண்படுகிறமாதிரி எதையுமே சொல்லிவிடக் கூடாது. நீங்கள் ஒரு வாக்கியம் சொல்லி ஜெபிக்கும்போது நீங்கள் கிருபையைப் பெறுவது மட்டுமல்ல, மற்றவர்களுக்கு கிருபையைக் கொடுக்கின்றீர்கள். செயலிழந்த, செயலற்ற நிலைமையிலே வாழ்வதால் நேர்மறையாக தேவனுடைய மக்கள் தோற்றுப்போவார்கள். ஜெபிக்காமல் இருப்பது நேர்மறையாக ஒரு செயலிழந்த நிலை. “பந்திக்காக ஜெபிப்போம்” என்று சொன்னவுடன் ஒரு நான்கு ஐந்து பேர் ஜெபிக்கவில்லையென்றால் தேவனுடைய குடும்பம் ஒரு நேர்மறையான செயலிழந்த, செயலற்ற ஒரு குடும்பம். அவர்கள் கிருபையைப் பெறவும் மாட்டார்கள். பிறருக்கு அவர்கள் கிருபையைத் தரவும் மாட்டார்கள். “ஜீவனைப் பார்க்கிலும் உம்முடைய கிருபை மேலானது” என்கிற ஒரு அறிவு நமக்கு இருக்குமென்றால் நாம் முந்திக்கொள்வோம். நாம் பயிற்சி செய்வோம். இந்தக் கடைசி வாக்கியத்தை முடிக்கிறேன்.
2 தீமோத்தேயு 1ஆம் அதிகாரம் 6ஆம் வசனம்: “நான் உன்மேல் என் கைகளை வைத்ததினால் உனக்குண்டான தேவவரத்தை அனல்மூட்டி எழுப்பும்படி ஜாக்கிரதையாயிரு”. ஒரு வார்த்தை சொல்லி ‘ஆமென்’ என்று சொல்லும்போது அல்லது ஒரு வாக்கியம் சொல்லி ஜெபிக்கும்போது நாம் அந்த தேவனுடைய வரத்தை அனல்மூட்டி எழுப்புகிறோம். இல்லையென்றால் அந்த வரங்களெல்லாம் அணைந்துபோகும். நமக்கும் சரி, பிறருக்கும் சரி, தேவனுக்கும் சரி.
நாம் ஒரு கனத்திற்குரிய ஆசீர்வாதத்தின் பாத்திரங்களாக இருப்போம். எனவே அருமையான பரிசுத்தவான்களே, கவனமாய் இருங்கள், எச்சரிக்கையாய் இருங்கள், சிரத்தையோடு இருங்கள். செயலற்றவர்களாக நாம் இருக்கக் கூடாது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும், தனிப்பட்ட வாழ்க்கையிலும், கூட்டு வாழ்க்கையிலும், எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நாம் இந்த ஆவிக்குரிய பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு மும்முரமாக இருப்போம். ஆமென்.