Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

இயேசுவே நற்செய்தி

Transcribed from a message spoken in November 8, 2015 in Chennai

By Milton Rajendram

நற்செய்தி ஒரு பொருளல்ல, ஒரு நபர்

நல்ல செய்தி என்பது என்ன? இந்த நற்செய்தியை எப்படி வர்ணிக்கலாம் என்றால் தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவே இந்த நற்செய்தி. தேவன் ஏதோவொரு தகவலைத் தரவில்லை. தேவன் தம் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையே நமக்கு நல்ல செய்தியாகக் கொடுத்திருக்கிறார். ஒருவேளை பிறந்தநாள் அன்றைக்கு நாம் ஒரு பரிசை அல்லது ஒரு கொடையை நமக்கு அன்பானவர்களுக்குக் கொடுக்கும்போது அது அவருக்கு ஒரு நற்செய்தி, ஒரு மகிழ்ச்சியான செய்தி. அதுபோல தேவன் இந்த மனிதகுலம் முழுவதற்கும் ஒரு நற்செய்தியை வழங்கியிருக்கிறார். அந்த நற்செய்தி ஒரு பொருளல்ல; அது ஒரு நபர். நற்செய்தி என்பது ஒரு சங்கதி அல்ல. நற்செய்தி என்பது ஒரு நபர். இந்த நபர் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே என்று கலாத்தியர் 1ஆம் அதிகாரம் 16ஆம் வசனம் கூறுகிறது. “அவருடைய குமாரனைப் புறவினத்தாரிடத்தில் சுவிசேஷமாய் (நற்செய்தியாய்) அறிவிப்பதற்குத் தேவன் என்னை ஏற்படுத்தினார்,” என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார். அப்போஸ்தலனாகிய பவுல் புறவினத்தாரிடத்தில் எதை நற்செய்தியாய் அறிவித்தார்? தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவையே நற்செய்தியாக அறிவித்தார். தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றிய ஒரு தகவலை, ஒரு சங்கதியை, ஓர் உபதேசத்தை, ஒரு போதனையை அவர் அறிவிக்கவில்லை. நற்செய்தி ஓர் உபதேசமோ, போதனையோ, சங்கதியோ, தகவலோ அல்லது ஓர் அமைப்புமுறையோ அல்ல. நற்செய்தி ஒரு நபர். இதை நம்முடைய இருதயத்தின் ஆழத்தில் நாம் எழுதிக்கொள்ள வேண்டும்.

அடையாளமா, ஞானமா அல்லது சிலுவையிலறையப்பட்ட கிறிஸ்துவா?

ஒரு முறையல்ல, 1 கொரிந்தியர் 1ஆம் அதிகாரம் 23ஆம் வசனத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் மீண்டும் கூறுகிறார். “யூதர்கள் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள். நாங்களோ கிறிஸ்துவை, சிலுவையிலறையப்பட்ட கிறிஸ்துவை, உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம். நாங்களோ சிலுவையிலறையுண்ட கிறிஸ்துவை உங்களுக்கு அறிவிக்கிறோம்”. ஆகவே, ஞானத்தைத் தேடுகிற கிரேக்கர்களுக்கு அது பைத்தியமாய்த் தோன்றுகிறது; அவர்கள் ஏமாற்றமடைகிறார்கள். வல்லமையான அடையாளங்களைத் தேடுகிற யூதர்களுக்கும் அது வல்லமையில்லாத சிலுவையிலறையப்பட்ட இரட்சகராக தோன்றுகிறது. ஆகவே, அவர்களும் ஏமாற்றமடைகிறார்கள். ஆனால், நம்முடைய நற்செய்தியில் எந்த மாற்றமும் இல்லை. மிகப் பெரிய ஞானிகளுக்கு அறிவிப்பதாக இருந்தாலும் சரி, மிக வல்லமை வாய்ந்தவர்களுக்கு அறிவிப்பதாக இருந்தாலும் சரி நாம் அறிவிப்பது ஒரு நபரை, கிறிஸ்துவை. எந்தக் கிறிஸ்துவை? சிலுவையிலறையப்பட்டு உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை நாம் அறிவிக்கிறோம். இவைகளையெல்லாம் நான் முன்னுரையாகச் சொல்கிறேன்.

கிறிஸ்துவே எல்லா மனிதர்களின் தேவை

நல்ல செய்தி என்பது என்ன? நற்செய்தி என்பதற்கு ஒரு வடமொழிச் சொல்தான் சுவிசேஷம். ஆகவே, நீங்கள் வேண்டுமானால் சுவிசேஷம் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தலாம். நான் நற்செய்தி என்கிற வார்த்தையைப் பயன்படுத்துகிறேன். இந்த நற்செய்தி என்ன? ஒரு மனிதனுக்கு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து என்ன செய்வார் அல்லது ஒரு மனிதனுக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினுடைய தேவை என்னவென்று முழு வேதாகமும், குறிப்பாக, முழு புதிய ஏற்பாடும் அதை விளக்குகிறது. ஏன் ஒரு மனிதனுக்கு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தேவை என்று புதிய ஏற்பாடு விளக்கமாகக் கூறுகிறது.

ஆனால், மிகச் சுருக்கமாக சொல்வதற்காக நான் ஒரு வசனத்தை மேற்கோள் காட்டுகிறேன். அப்போஸ்தலர் 9ஆம் அதிகாரம் 34ஆம் வசனத்திலே ஐநேயா என்கிற மனிதனைப் பார்த்து, “ஐனேயாவே, இயேசுகிறிஸ்து உன்னைக் குணமாக்குகிறார்,” என்று பேதுரு கூறுகிறார். அவன் எத்தனை வருடமாயப்; பக்கவாதமுள்ளவனாய்ப் படுத்திருந்தான்? எட்டு வருடம். எட்டு வருடமாய்ப் பக்கவாதமாய்த் தன் கட்டிலில் படுத்திருந்த ஒருவனைப் பார்த்து இயேசுகிறிஸ்துவின் சீடனாகிய பேதுரு, “ஐனேயாவே இயேசுகிறிஸ்து உன்னைக் குணமாக்குகிறார். நீ எழுந்து உன் படுக்கையை நீயே போட்டுக்கொள்,” என்று சொல்கிறார்.

முழு புதிய ஏற்பாடும் இதைத்தான் சொல்கிறது. இயேசுகிறிஸ்து ஒரு மனிதனைக் குணமாக்குகிறார். குணமாக்குகிறார் என்றால் நோய்வாய்பட்ட ஒரு மனிதனை நோயிலிருந்து குணமாக்குகிறார் என்பது மட்டுமல்ல பொருள். எல்லா மனிதர்களுடைய வாழ்க்கையும் பாவத்தினால் சின்னாபின்னமாக்கப்பட்ட, தாறுமாறாக்கப்பட்ட வாழ்க்கை. எந்த மனிதனும் இதற்கு விதிவிலக்கல்ல. மிக நாகரிகத்தோடும், பண்பாடோடும் காணப்படுகிற, தோற்றமளிக்கிற மனிதனும் இதற்கு விதிவிலக்கல்ல. “எல்லாரும் பாவம் செய்து தேவமகிமையற்றவர்களானார்கள்,” என்று ரோமர் 3ஆம் அதிகாரம் சொல்கிறது. மிக உயர்ந்த கல்வியும், மிக உயர்ந்த கலாச்சாரமும் உள்ள மனிதனும் இதற்கு விதிவிலக்கல்ல. அவனுடைய வாழ்க்கை பாவத்தினால் சின்னாபின்னமாக்கப்பட்டு, தாறுமாறாக்கப்பட்டு, உடைக்கப் பட்ட வாழ்க்கை. வேறு எந்த மனிதனும், எந்தக் குருவும், எந்த உபதேசமும் அப்படி சின்னாபின்னமாக்கப்பட்ட, தாறுமாறாக்கப்பட்ட, சிதைக்கப்பட்ட வாழ்க்கையை சீர்படுத்தவோ, செப்பனிடவோ, முழுமையாக்கவோ முடியாது. அவர்களெல்லாம் காரியத்துக்கு உதவாத வைத்தியர்கள் என்று வேதம் சொல்கிறது. “ஒரு மனிதனுடைய வாழ்க்கையை நான் சீராக்கிவிடுவேன், நான் செப்பனிட்டு விடுவேன், முழுமையாக்கிவிடுவேன்,” என்று பொய் சொல்லி மனிதர்களுடைய வாழ்க்கையை மேற்கொண்டு சீரழிக்கிறவர்கள் அதிகம்.

ஒரு நல்ல சம்பவம் வேதத்தில் உண்டு. 38 வருடமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு பெண் தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று வைத்தியர்களுக்குச் செலவழித்தபிறகும், சற்றாகிலும் குணமாகவில்லை. மேற்கொண்டு அவளுடைய நிலைமை மோசமானது என்று எழுதப்பட்டிருக்கிறது. ஏறக்குறைய எல்லாருடைய நிலைமையும் இதுதான். ஒரு மனிதன் தன்னை குரு அல்லது பெரிய ஆசாரியன் பெரிய போதகன் என்று சொல்லிக்கொண்டு, “நான் உங்களுடைய பிரச்சினைகளை யெல்லாம் தீர்த்துவிடுவேன்,” என்று அவன் பொய் கூறுகிறான். அவனை நம்பி சிலர் போகிறார்கள். அந்த மனிதர்களுடைய வாழ்க்கை முன்பு இருந்ததைவிட பின்பு படுமோசமாக மாறிவிடுகிறது. ஆனால், குரு அல்லது ஆசாரியன் அல்லது போதகன் என்கிற நிலைமையில் இருப்பவன் இந்த மக்களை வைத்து அவன் தன்னுடைய வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக்கொள்கிறான். தன்னுடைய வருவாயை அவன் வளர்த்துக்கொள்கிறான். எசேக்கியேல் 35ஆம் அதிகாரத்தின்படி இவர்களுக்கு கள்ள மேய்ப்பர்கள், போலி மேய்ப்பர்கள் என்று பெயர்.

sozo என்ற குணமாக்குதல்

ஆகவே, நல்ல செய்தி என்னவென்று கேட்டால் ஒரு மனிதனுடைய வாழ்க்கைக்குள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து வரும்போது சின்னாபின்னமாக்கப்பட்ட அவனுடைய எல்லாப் பகுதிகளையும் அவர் சீர்படுத்தி, செப்பனிட்டு ஒரு முழுமையான வாழ்க்கையாக மாற்றுகிறார். இந்த கிரேக்க வார்த்தையை sozo என்று நான் சொல்லியிருக்கிறேன். இயேசுகிறிஸ்து இரட்சிக்கிறார் என்றால் இயேசுகிறிஸ்து உன்னை sozo செய்கிறார். sozo என்கிற வார்த்தையினுடைய பொருள் குணமாக்குதல் என்பதும் உண்டு. இன்னொரு பக்கம் முழுமையாக்குவது என்று பொருள். உடைந்து, சிதறிக் கிடக்கின்ற ஒரு மனிதனுடைய பகுதிகளையெல்லாம் ஒன்று சேர்த்து, சீராக்கி, செப்பனிட்டு அவனுடைய வாழ்க்கையை முழுமையாக்குவது என்ற பொருள் அந்த sozo என்கிற வார்த்தையில் அடங்கியிருக்கிறது.

தன் வாழ்க்கையில் இயேசுகிறிஸ்துவுக்கு இடமளிக்கிற, அவரை ஏற்றுகொண்ட ஒரு மனிதனுடைய வாழ்க்கையை அவர் செப்பனிடுகிறார் முழுமையாக்குகிறார் என்பதற்கு நான் சாட்சி. இங்குள்ள தேவனுடைய மக்கள் பலர் அதற்கு சாட்சி. ஆமென். யாருடைய வாழ்க்கையையோ இயேசுகிறிஸ்து குணமாக்கினார், முழுமையாக்கினார் என்பதல்ல எங்களுடைய சாட்சி. என்னுடைய வாழ்க்கையை இயேசுகிறிஸ்து குணமாக்கினார், முழுமையாக்கினார் என்பது நம்முடைய சாட்சி.

ஆகவே, நாமெல்லாரும் நற்செய்தியை அறிவிக்கப் போவதற்கு முந்தி முதலாவது “என்னுடைய வாழ்க்கையிலே இயேசுகிறிஸ்து என்ன செய்தார்,” என்று நம்முடைய சாட்சியை நாம் சொல்ல முடிய வேண்டும். ஒரு நபரை நான் சந்திக்கும்போது இயேசுகிறிஸ்து, “என்னுடைய வாழ்க்கையிலே எப்படி வந்தார். நான் எப்படி இரட்சிக்கப்பட்டேன்,” என்று சொல்லத் தெரிந்திருக்க வேண்டும்.