Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

இயேசு கிறிஸ்து—நித்திய ஜீவன் பாய்ந்தோடுகிற பாத்திரம்

Transcribed from a message spoken in August 9, 2015 in Chennai

By Milton Rajendram

பரிசுத்த ஆவியானவரின் வேலை–கிறிஸ்துவின் குணத்துக்கு ஒத்தகுணமாக்குதல்

அருமையான பரிசுத்தவான்களே, நான் ஒரு பாரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். தேவனுடைய மக்களுடைய குணம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினுடைய குணத்துக்கு ஒத்த குணமாய் மாற வேண்டும். இது தேவனுடைய நோக்கத்தின் நடைமுறைச் செயலாக்கம். தேவனுடைய மக்களுடைய குணம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினுடைய குணத்துக்கு ஒத்த குணமாக மாற்றப்பட வேண்டும். பரிசுத்த ஆவியானவருக்குக் கீழ்ப்படிகின்ற தேவ மக்களுடைய குணத்தை, ஒவ்வொரு நாளும், படிப்படியாக, ஒரு படியிலிருந்து மறு படிக்கு அவர் நிச்சயமாக இயேசுகிறிஸ்துவுக்கு ஒத்த குணமுள்ளவர்களாக மாற்றுவார். ஏனென்றால், இது பரிசுத்த ஆவியானவருடைய தரிசனம். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பரிசுத்த ஆவியானவரை நமக்கு அருளியிருப்பது, பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாசமாயிருப்பது, எதற்காகவென்றால் இயேசுகிறிஸ்துவை ஒவ்வொருநாளும் நமக்குக் காண்பித்து அவருடைய அந்தத் தரத்திற்கு, அந்த அளவுகோலுக்கு, ஒத்த அளவாக நாம் மாறுவதற்காக. எனவே, பரிசுத்த ஆவியானவருக்குக் கீழ்ப்படிந்து வாழ்கின்ற எல்லாருடைய வாழ்க்கையிலும், தேவன் தம்முடைய திட்டத்தையும், தம்முடைய நோக்கத்தையும் நிறைவேற்றுவார்.

தேவனுடைய மக்கள் எல்லாரையும் நான் மிகவும் பாராட்டுகிறேன். நீங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் வைத்திருக்கின்ற அன்பு, அவர்மேல் வைத்திருக்கின்ற விசுவாசம், அவர்மேல் வைத்திருக்கிற பற்றுறுதி, அவருடைய அடிச்சுவடுகளில் நடக்கின்ற வாழ்க்கை, இவையெல்லாம் தேவனுடைய பார்வையிலே மிக அருமையானது, விலையேறப்பெற்றது. இவைகளைக்குறித்து தேவன் மிகவும் மகிழ்ச்சியடைகிறார். உண்மையாகவே நீங்கள் தேவனுடைய அன்புக்கும், பிரியத்துக்கும் உரிய அருமையானவர்கள். நான் உங்கள் இருதயங்களைத் தொடுவதற்காக இதைப் பொய்யாகச் சொல்லவில்லை. உண்மையிலேயே நீங்கள் தேவனுடைய பார்வையிலே மிகவும் அருமையானவர்கள். தேவன் தம்முடைய மக்களைக்குறித்து எப்போதும் மகிழ்ச்சியடைகிறார். நம்முடைய பாடல் புத்தகத்தினுடைய பின்பகுதியிலே ஒன்று எழுதியிருக்கிறது. நீங்கள் அதைப் பார்த்திருக்கிறீர்களா? அவர் தம்முடைய மக்களைப்பற்றி எப்போதும் பாடுகிறார். தேவன் தம்முடைய மக்களைப் பற்றி விசிலடித்துப் பாடுகிறார் என்று சொன்னால்கூட மிகையாகாது. God rejoices in His people.

நாம் வளரவேண்டிய காரியங்கள் பல உள்ளன. நம்முடைய இருதயம் மிகவும் தாழ்மையும், திறந்த இருதயமுமாக இருக்க வேண்டும். “ஆண்டவரே, உம்மைப்போல் ஆவேனாக இரட்சகா,” என்கிற பாடலை நாம் அடிக்கடி பாடுவது உண்டு. ஆனால், எப்படிப் பாட வேண்டும் என்றால், “ஆண்டவரே, உம்மைப்போல் ஆகாத பகுதிகள் என்னுடைய வாழ்க்கையிலும், என்னுடைய குணத்திலும், என்னுடைய உள்ளான கட்டமைப்பிலும் பல கோடி உண்டு. பல என்னுடைய கண்ணுக்கு எட்டுவதில்லை. சில என்னுடைய கண்ணுக்கு எட்டுகிறது. ஆனால் கண்ணுக்கு எட்டுகிற காரியங்கள்கூட நான் உம்மைப்போல் மாறுவதற்குத் தேவையான கீழ்ப்படிதலும், பணிவும், சிலுவையின் வழி நடப்பதும் என்னுடைய வாழ்க்கையிலே குறைவுபடுகிறது என்பது உண்மை. எனவே, என்னை உம்மைப்போல் மாற்றும்,” என்ற நோக்கத்தோடு பாட வேண்டும்.

பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவை நமக்குக் காண்பிக்கிறார்

தேவனுடைய மக்கள் எப்போதுமே குற்ற உணர்ச்சியிலே வாழ வேண்டும் என்பது தேவனுடைய நோக்கம் அல்ல. கிறிஸ்தவ மார்க்கம் அல்லது பரிசுத்த ஆவியினால் நடத்தப்படுகிற ஒரு வாழ்க்கை என்பது “தம் மக்களை எப்போதும் குற்றப்படுத்தி, குற்றப்படுத்தி அவர்களைக் குற்ற உணர்ச்சியிலே வைத்திருந்தால்தான் என்னுடைய வியாபாரம் நடக்கும்,” என்பது தேவனுடைய நோக்கமும் அல்ல. முன்னுதாரணங்களாக வாழ்கின்ற அல்லது நடத்துகின்ற நம்முடைய நோக்கமும் அல்ல. ஒரு பக்கம் தேவனுடைய மக்கள் குற்ற உணர்ச்சி உள்ளவர்களாக இருக்க வேண்டாம். ஆனால், இன்னொரு பக்கம் தேவனுடைய மக்கள் எப்போதுமே, “ஆ! என்னிடத்தில் என்ன குறை உண்டு?” என்று ஒரு ஆணவத்திலும், இறுமாப்பிலும், பெருமிதத்திலும் வாழக்கூடாது. “ஆண்டவரே, என்னைத் தராசில் வைத்து நிறுத்தீர் என்றால் நான் குறைவுள்ளவனாகக் காணப்படுவேன். ஆனாலும், உம்முடைய பார்வையிலே நான் அருமையானவன்.” நம்முடைய பிள்ளைகளை நாம் தராசிலே வைத்தால் அவர்களைக் குறைவுள்ளவர்களாகக் காணுவோம். ஆனால், நம்முடைய பிள்ளைகள் நம்முடைய பார்வையிலே அருமையானவர்கள். இந்த சமநிலையை நாம் தவறவிட்டுவிடக் கூடாது.

நாம் தேவனுடைய பார்வையிலே, ஒருபக்கம், அருமையானவர்கள். இன்னொரு பக்கம் “மெனே, மெனே, தெக்கேல் உப்பாசீன்.” “தராசிலே வைத்துப் பார்க்கும்போது குறைவுள்ளவனாகக் காணப்பட்டாய். உன்னுடைய இராஜ்ஜியம் உன்னைவிட்டு எடுபடும்,” என்று அந்த இடத்தில் கடினமான விதத்தில் தேவன் தம்முடைய பிள்ளைகளைத் தீர்க்கின்றாரா? தீர்க்கின்றார். நம்முடைய குணம் மாற வேண்டும் என்பதற்காக நம்முடைய குணத்திலே “இந்தக் குறை உண்டு. அந்தக் குறை உண்டு,” என்று ஏதோ தலைமையாசிரியர்போலவோ, வழக்கறிஞர்போலவோ, நீதிபதிபோலவோ எப்போதும் செய்துகொண்டிருப்பதில்லை. எப்போதெல்லாம் தேவனுடைய மக்களுடைய குணமும், அவர்களுடைய வாழ்க்கையும் குறைவுள்ளதாய்க் காணப்படுகிறதோ, அப்போதெல்லாம் தேவன் என்ன செய்வார் என்றால் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை அவர்களுடைய கண்களுக்குமுன்பாகப் பிரத்தியட்சமாய்க் காண்பிப்பார். இயேசுகிறிஸ்துவை அவருடைய எல்லா மகிமையிலும், எல்லா மகத்துவத்திலும், எல்லா மேன்மையிலும் அவருடைய பிள்ளைகளுக்குமுன்பாக வைப்பதுதான் தேவன் தம்முடைய பிள்ளைகளைச் சரிசெய்கிற வழிமுறை. தேவன் தம்முடைய பிள்ளைகளை திருத்துகிற, சரிசெய்கிற, கடிந்துகொள்கிற வழி என்ன? ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை அவர்களுடைய கண்களுக்குமுன்பாக வைப்பது. இது உங்களுக்கு அவ்வளவு வீரியமாகத் தோன்றாமல் போகலாம். “ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை என்னுடைய கண்களுக்குமுன்பாக வைத்தால், உடனே நான் சரிசெய்யப்பட்டு விடுவேனா? நாங்கள் எப்படிப்பட்ட ஆட்கள்? பிரம்பைக் கையாண்டால்கூட எங்களை அவ்வளவு சீக்கிரத்தில் சரிசெய்ய முடியாது. நாங்கள் துடைத்துவிட்டுப்போட்டு போகிற ஆட்கள்,” என்று ஒருவேளை சிலர் நினைக்கலாம். ஆனால், உண்மையிலேயே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை ஒரு மனிதன் தரிசிக்கும்போது அவனுடைய குணம், குணம் மட்டுமல்ல அவனுடைய ஆள்தத்துவத்தின், அவனுடைய நபரின், மிக உள்ளான பகுதி தொடப்படும்.

“அவன் இப்படிச் சொன்னவுடனே சேவல் கூவிற்று; அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப் பார்த்தார். சேவல் கூவுகிறதற்குமுன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வசனத்தை உடனே பேதுரு நினைவுகூர்ந்து, வெளியேபோய் மனங்கசந்து அழுதான்” (லூக்கா 22:61-62). உண்மையாகவே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து செய்த மாபெரும் பிரசங்கம் என்னவென்றால் அவர் திரும்பி பேதுருவைப் பார்த்தார். நாம் ஒரு மணிநேரம் பிரசங்கம் பண்ணினாலும் ஒரு சொட்டுக் கண்ணீர் கண்ணிலிருந்து வருவதில்லை.

நீங்கள் இதைச் சிந்தித்துப்பாருங்கள். இயேசு கிறிஸ்து பார்த்ததுபோல் நம்மால் பார்க்க முடியாது. நம்முடைய பார்வையிலே அனல் பறக்கும் அல்லது நம்முடைய பார்வையிலே குறைவு இருக்கும். இது எளிதானதே அல்ல. சிலபர் இயேசுகிறிஸ்துவைப்போல நடிக்க முயற்சிசெய்வதுண்டு. “இயேசு பார்த்ததுபோல், இயேசு பேசினதுபோல், இயேசு நடந்ததுபோல் நான் பார்க்க, பேச, நடக்க முயற்சி செய்கிறேன்,” என்று சிலர் சொல்வதுண்டு. வெறுமனே அது வெறும் பார்வையோ, பேச்சோ, நடத்தையோ அல்ல, அது புறம்பேயிருந்து வருவதில்லை. அது உள்ளான கட்டமைப்பிலிருந்து வருகிறது. உள்ளான கட்டமைப்பு எப்படியிருக்கிறதோ அப்படித்தான் பார்வையும், பேச்சும், நடத்தையும் இருக்கும். உள்ளான கட்டமைப்பிலே எந்த மாற்றமும் இல்லாதபோது புறம்பான பார்வையிலும், பேச்சிலும், செயலிலும் cosmeticஆக ஏதோ அந்தச் சமயத்திலே, “கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பிரதர்,” என்பதுபோல வேண்டுமானால் ஏதோ சொல்லலாம். மற்றப்படி அல்ல. “லேடீஸ் and ஜென்டில்மேன்,” என்று சொல்வதுபோல் அல்லது ஒரு வரவேற்பாளர், “நான் உங்களுக்கு உதவிசெய்யலாமா?” என்பதுபோல் சொல்லுகிற காரியம் இல்லை. நமக்கு உதவி செய்யவில்லை என்றால் அவருடைய இருதயம் வெடித்துவிடும் என்பதுபோல அவர்கள் உதவிசெய்வது இல்லை. கொடுக்கிற சம்பளத்திற்காக “நான் உங்களுக்கு உதவலாமா?” என்று சொல்வது உண்டு.

ஆகவே, ஆண்டவராகிய இயேசு என்ற நபரை நாம் இன்னும் அறிய வேண்டியவண்ணம் அறிய வேண்டும். “இதைத்தான் நீங்கள் கடந்த பத்து ஆண்டுகள் சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே!” என்று நீங்கள் சொல்லலாம். “நீங்கள் அறியாத ஒருவர் உங்கள் நடுவிலே நின்றுகொண்டிருக்கிறார்,” என்று யோவான் ஸ்நானன் இயேசுவைப்பற்றி கூறினது இன்றும் பொருந்தும். “அவரை எப்படி நாங்கள் அறியவில்லை என்று சொல்ல முடியும்?” என்று நாம் கேட்கலாம். “இயேசுவவைப்பற்றி நமக்குத் தெரியுமே.” “இயேசுவைப்பற்றி சொல்லுங்க,” என்றால் ஒரு பத்து நிமிடமாவது சொல்ல முடியுமா, முடியாதா? சொல்ல முடியும். ஆனால், உண்மை என்னவென்று கேட்டால் நாம் இயேசுவை அறிய வேண்டியவண்ணம் நாம் அறியவில்லை. “தேவனில் அன்புகூருகிறவனெவனோ அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான்” ( 1 கொரி. 8:3).

மூன்று காரியங்களை நான் உங்களுக்குச் சொல்கிறேன். முதலாவது காரியம். ஜீவன் பாய்ந்தோடுகிற ஒரு பாத்திரம் அல்லது ஜீவன் பாய்ந்தோடுகிற பாத்திரம் எப்படி இருக்க வேண்டும்? அல்லது ஜீவன் பாய்ந்தோடுவதற்கு பாத்திரம் தேவை. இந்த ஒரேவொரு எண்ணத்தை நான் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

நீங்கள் எல்லாரும் பேசுவதை ஒப்பிடும்போது நிறைய நேரம் பேசுவதால் அதற்கு ஒரு தலைப்புக் கொடுப்பது உண்டு. தலைப்பு ஜீவன் பாய்ந்தோட ஒரு பாத்திரம் வேண்டும். முதலாவது ஜீவன் பாய்ந்தோடுகிற பாத்திரம் கிறிஸ்து. இரண்டாவது, அந்த ஜீவனைப் பெறுவதற்கு நாம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின்மேல் அன்புகூர வேண்டும். மூன்றாவது, அந்த ஜீவன் பாய்ந்தோடுகிற பாத்திரமாக நாமும் மாற வேண்டும். தேவனுடைய ஜீவனை மனிதன் பெற வேண்டும்.

  1. முதலாவது, தேவன் தம்முடைய ஜீவனைத் தம்முடைய மக்களுக்குத் தரவேண்டும் என்று விரும்புகிறார். ஆனால், ஜீவன் என்பது ஒரு நபரில்தான் இருக்க முடியும், இல்லையா? மனித உயிர், மனித ஜீவன், மனிதர்களிடம்தான் இருக்க முடியும். தாவர ஜீவன் தாவரத்திடம்தான் இருக்க முடியும். அதுபோல தேவனுடைய ஜீவன் ஒரு நபரிடம்தான் இருக்க முடியும். தேவனிடம்தான் இருக்க முடியும். ஆனால், தேவன் தம்முடைய ஜீவனை மனிதனுக்குக் கொடுக்க வேண்டும்; மனிதன் தேவனுடைய இந்த ஜீவனைப் பெற வேண்டும். தன்னுடைய ஜீவனை மனிதனோடு பகிர்ந்துகொள்ள வேண்டும், மனிதன் தேவனுடைய ஜீவனில் பங்குபெற வேண்டும் என்பது தேவனுடைய நோக்கம், தேவனுடைய திட்டம். நாம் வெறுமனே நல்ல மனிதர்களாக வாழ வேண்டும் என்பதல்ல தேவனுடைய திட்டமும், நோக்கமும். தேவன் தம்முடைய ஜீவனை மனிதனோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறார். ஆனால், தேவன் எப்படி தன்னுடைய ஜீவனை ஒரு மனிதனோடு, மனித இனத்தோடு, பகிர்ந்துகொள்ள முடியும்? அது எப்படியென்றால், ஒரு தாவர ஜீவனை மனிதனோடு பகிர்ந்துகொள்ள முடியுமா அல்லது வேறொரு விலங்கினத்தின் ஜீவனை மனிதனோடு பகிர்ந்துகொள்ள முடியுமா? முடியாது. தேவனுக்கும், மனிதனுக்கும் ஒரு மாபெரும் இடைவெளி உள்ளது. ஆகவே தேவனுடைய ஜீவனை என்ன செய்தாலும் ஒரு மனிதனுக்குள், மனிதனுக்குக் கொடுக்க முடியாது, மனிதனோடு பகிர்ந்துகொள்ள முடியாது. தேவனே மனிதனாக இருந்தால்தவிர வேறொரு மனிதனுக்குள் தேவன் தம்முடைய ஜீவனை வைக்க முடியவே முடியாது.

தேவனும் மனிதனுமாகிய இயேசு

ஆதியிலேயே தேவன் இப்படிப்பட்ட ஒரு எண்ணமும், நோக்கமும், குறிக்கோளும் கொண்டவராக இருந்தார். தேவன்தாமே ஊனுருவாகி மனிதனாக வெளிப்பட வேண்டும். அப்போது தேவனுடைய ஜீவனை ஒரு மனிதனில் வைக்க முடியும். தேவனுடைய ஜீவனை எந்த மனிதனிலும் வைக்க முடியாது. தேவனே மனிதனாக இருந்தால் அப்படிப்பட்ட மனிதனில் மட்டும்தான் தேவனுடைய ஜீவனை வைக்க முடியும். அப்படிப்பட்ட நபர் உண்டா என்றால் நபர் உண்டு. ஒரேவொரு நபர் உண்டு. அவர் யார்? ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து. ஆகவேதான், வேதம் சொல்கிறது. “ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது” (யோவான் 1:1). “அவருக்குள் ஜீவன் இருந்தது. அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது” (யோவான் 1:4). தேவனுடைய ஜீவன் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் இருந்தது என்று வாசிக்கிறோம். “தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார். அந்த ஜீவன் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவில் இருக்கிறது என்பதே சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன். தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். உங்களுக்கு ஜீவன் உண்டென்று அறியவும்…” (1 யோவான் 5:11-13). தேவன் தம்முடைய ஜீவனை வேறு எங்கும் வைக்க முடியாது அல்லது வேறு எவரிலும் வைக்க முடியாது. தேவன் தம்முடைய ஜீவனை ஒரேவொரு நபரில்தான் வைக்க முடியும். அது யாரென்றால் தேவனும், மனிதனுமான ஒரு நபர். இப்படிப்பட்ட ஒரு விந்தையான ஒரு நபர், அற்புதமான நபர், வியத்தகு நபர், தன்னிகரற்ற நபர், ஒப்பற்ற நபர், ஈடுயிணையில்லாத நபர், அவர் தேவனும் மனிதனுமானவர், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து.

நீங்கள் புரிந்துகொள்ளுமாறு ஓர் எடுத்துக்காட்டு கூறுகிறேன். ஒரு மனிதனிடம் போய், “மனிதனுடைய வாழ்க்கைக்குத் தேவையான எல்லா வளங்களும், செல்வங்களும் எங்கே இருக்கின்றன?” என்றால்,. “எல்லாம் மண்ணிலேதான் இருக்கிறது,” என்பார். கார்போஹைட்ரெய்டு வேண்டும். இரும்புச்சத்து வேண்டும். சுண்ணாம்புச் சத்து வேண்டும். மாக்னீசியம் வேண்டும். பொட்டாசியம் வேண்டும். வைட்டமின்கள் வேண்டும். கால்சியம் வேண்டும். எல்லாமே எங்கேதான் இருக்கிறது? இந்த மண்ணிலேதான் இருக்கிறது. ஆனால், மண்ணிலே இருந்து மனிதன் இந்த எல்லாச் சத்தையும் அனுபவிக்க முடியுமா? முடியாது. ஆனால் கடவுள் ரொம்ப ஞானமுள்ளவர். என்ன செய்தார் என்றால் இந்த ஒவ்வொரு சத்தையும் மனிதன் அனுபவிக்கிறதற்கு ஒவ்வொரு விதமான தாவரங்களை உண் டாக்கியிருக்கிறார். கத்திரிக்காய் உண்டாக்கியிருக்கிறார். ஏன் என்று கேட்டால் அது மண்ணிலிருக்கிற இரும்புச்சத்தை மனுஷன் சாப்பிடுகிறமாதிரி எடுத்துக்கொடுத்துவிடும். வாழைப்பழத்திலேகூட ஒரு சத்து இருக்கிறது. பொட்டாசியம், மண்ணிலே பொட்டாசியம் இருக்கிறது. நேராக பொட்டாசியத்தைச் சாப்பிட முடியுமா? முடியாது. வாழைப்பழம் அந்த பொட்டாசியத்தை மனிதன் அனுபவித்து மகிழச் செய்கிறது.

இயேசு கிறிஸ்து ஜீவமரம்

அதுபோல மனிதனுக்குத் தேவையான எல்லா வளங்களும், எல்லா செல்வங்களும், தேவனிடம் உள்ளன. இவைகள் வெறுமனே பூமிக்குரிய வளங்கள் அல்ல இவைகள் பரத்திற்குரிய வளங்கள். வெறுமனே ஒரு காலத்திற்குரியவைகளல்ல, நித்தியமானவைகள். இயற்கையானவைகள் அல்ல. ஆவிக்குரியவைகள். இதற்குப் பெயர் தேவனுடைய நிறைவு. மனித வாழ்க்கைக்கு, இம்மைக்கும், மறுமைக்கும் தேவையான எல்லா செல்வங்களும், எல்லா வளங்களும் தேவனிடம் உள்ளன.

எப்படி எல்லா வளங்களும் இந்த மண்ணிலே உண்டோ, ஆனால் இதை மனிதன் அனுபவிக்க முடியாது. கோடிக்கணக்கான மனிதனுக்குத் தேவையான எல்லா வளங்களும், செல்வங்களும் இந்த மண்ணில் உண்டு. ஆனால் ஒரு உயிர் இந்தப் பூமியிலே தழைக்க முடியாது. தாவர ஜீவன் என்ன செய்யுமென்றால் இந்த எல்லா வளங்களையும் எடுத்துத் தன்மயமாக்கி, அதிலிருந்து மனிதன் அனுபவிப்பதற்காக அதை வெளிப்படுத்துகிறது.

அதுபோல ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் இருக்கிற தேவனுடைய ஜீவன் தேவனிடமுள்ள எல்லா வளங்களையும், எல்லா செல்வங்களையும், எல்லா ஊட்டச்சத்துக்களையும் எடுத்து, மனிதன் அனுபவிக்கும் வண்ணம் அதை வெளிப்படுத்துகிறது. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஒரு பெயர் ஜீவதரு, ஜீவ விருட்சம் அல்லது ஜீவ மரம். ஆதியிலேயே தேவன் மனிதனைப் படைத்தபோது அதில் ஒரு ஜீவவிருட்சத்தையும் வைத்திருந்தார். உடனே, ஜீவவிருட்சம் என்றால் இயேசு கிறிஸ்து ஒரு மரம் என்று கற்பனை செய்துகொள்ளக் கூடாது. நான் உங்களுக்கு உதாரணம் சொன்னேன். தாவரம் மண்ணிலுள்ள எல்லா சத்துக்களையும், செல்வங்களையும், வளங்களையும் எடுத்து மனிதன் அனுபவிப்பதற்கு கொடுக்கிறது.

அதேபோல, அந்த விதத்தில்தான் இயேசுகிறிஸ்து ஜீவவிருட்சமாக இருக்கிறார், அவர் விருட்சத்தைப் போன்றவர், ஒரு தருவைப் போன்றவர். எப்படி மரத்திற்கு ஒரு ஜீவன் உண்டோ, அதேபோல இந்த மரத்திற்கும் ஒரு ஜீவன் உண்டு. சாதாரண ஜீவன் இல்லை. இது தேவனுடைய ஜீவன், நித்திய ஜீவன். ஜீவன் என்றால் இதுதான். ஜீவன் என்று உரைத்தால் அது இயேசுகிறிஸ்துவிலுள்ள ஜீவன், நித்திய ஜீவன், தேவனுடைய ஜீவன். எதற்காக இந்த ஜீவன்? தேவனிடமுள்ள எல்லா செல்வங்களையும், வளங்களையும், சத்துக்களையும் ஆராய்ந்து அறியமுடியாத, தீர்ந்துபோகாத அளவற்ற ஐசுவரியங்களையும் (எபேசியர் 3:8) மனிதன் அனுபவிக்க வேண்டும் என்பதையே தேவனுடைய இந்த ஜீவன் வெளிப்படுத்துகிறது. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து அப்படிப்பட்ட ஒரு பாத்திரம், ஜீவன் பாய்ந்தோடுகிற பாத்திரம்.

எலுமிச்சை மரம் வைட்டமின் சி பாய்ந்தோடுகிற பாத்திரம். கத்தரிக்காய்ச் செடி இரும்புச்சத்து பாய்ந்தோடுகிற பாத்திரம். ஆனால், இயேசுகிறிஸ்து இப்படி ஒன்றிரண்டு சத்துக்கள் அல்ல. ஓ! அவர் தேவனுடைய அளவற்ற செல்வங்களும், வளங்களும், சத்துக்களும் பாய்ந்தோடுகிற பாத்திரம். அவர் ஜீவபாத்திரம்.

தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற வேண்டும் என்று பலர் பல வழிமுறைகளை, பக்தி, யுக்தி, சக்தி, மந்திரம், யந்திரம், தந்திரம் போன்ற உபாயங்களைகளெல்லாம் அவர்கள் முயற்சிபண்ணுகின்றார்கள். ஆனால், தேவனுடைய வழிமுறை ஒரு நபர்.

நான் வலியுறுத்த விரும்புகிற ஒரு காரியத்தைச் சொல்லுகிறேன். தேவன் தம் ஜீவனை இயேசு கிறிஸ்துவில் வைத்தார். நாம் அந்த ஜீவனை இயேசுகிறிஸ்துவில் பெற்றுக்கொண்டு தேவனுடைய வளங்களை, செல்வங்களை, ஊட்டச்சத்துக்களை, ஐசுவரியங்களையெல்லாம் அனுபவித்துமகிழ்ந்து கொள்ளலாம். “இதிலே என்ன இருக்கிறது? இது பெரிய காரியமாகவே இல்லையே!” என்று நீங்கள் நினைக்கலாம். அதுவல்ல காரியம்.

1. இயேசு கிறிஸ்து செலுத்திய விலை

தேவனுடைய ஜீவனை மனிதன் இப்படி அனுபவிக்குமாறு கொண்டுவருவதற்காக, அவர் நமக்குத் தேவனுடைய ஜீவனைக் கொடையாக, இலவசமாக, தருகிறார். ஆனால், அந்தப் பாத்திரம் ஒரு மாபெரும் விலையைச் செலுத்தவேண்டியிருந்தது. இதுதான் நான் செய்தியின்மூலமாய் வலியுறுத்த விரும்புகிற காரியம். ஜீவன் பாய்ந்தோடுகிற பாத்திரம் ஒரு மாபெரும் கிரயம், விலை, செலுத்த வேண்டியிருந்தது. “தேவன் திடுதிப்பென்று தம்முடைய ஜீவனை இயேசுகிறிஸ்துவில் வைத்துவிட்டார்; நாமெல்லாம் அந்த ஜீவனைப் பெற்றுக்கொண்டோம்,” என்பதுபோல் அது நடக்கவில்லை.

“நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும், சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனிதனைத் தேடினேன்; ஒருவனையும் காணேன்” (எசே. 22:30). திருவெளிப்பாடு 5ஆம் அதிகாரத்தில் இப்படி ஒரு சம்பவம் இருக்கிறது. நான் 5ஆம் அதிகாரம் முழுவதையும் சுருக்கிச் சொல்கிறேன். திருவெளிப்பாடு 5யினுடைய முழு சாராம்சம் என்னவென்றால், சிங்காசத்தில் உட்கார்ந்திருக்கிறவர் கைகளிலே ஒரு புத்தகம் இருக்கிறது. ஆனால், அந்தப் புத்தகத்தைத் திறப்பதற்கும், அதிலுள்ளதை வாசிப்பதற்கும் அருகதையுள்ளவன், தகுதியுள்ளவன், பாத்திரவான், ஒருவனும் இல்லை. அதைப் பார்த்தபோது யோவான் அழுகிறார். அழும்போது ஒரு தேவதூதன், “நீ அழாதே, இந்தப் புத்தகத்தை திறப்பதற்கும், அதிலுள்ளதை எடுத்துச்சொல்வதற்கும் ஒருவர் உண்டு, யூதா கோத்திரத்தின் சிங்கம், தாவீதின் வேர், உண்டு,” என்று சொல்லுகிறார். ஆ! யார் அங்கே? அங்கே சிங்கம் இருக்கும் என்று பார்த்தால் ஆட்:டுக்குட்டியைப்போல ஒருவர் அங்கு நிற்கிறார். இவைகளெல்லாம் சித்திரங்கள். தூதன் சிங்கம் என்று சொல்லுகிறான்; ஆனால், யோவான் அங்கு சிங்கத்தைப் பார்க்கவில்லை. அங்கு ஆட்டுக்குட்டியின் தோற்றமுடைய அல்லது அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டியை ஒத்த ஒரு நபர் இருக்கிறார். இவர்தான் அந்த நபர். இவருக்குத் தகுதி உண்டு. இந்த நபர் நேரே போகிறார். போய் சிங்காசத்தில் உட்கார்ந்திருக்கிறவருடைய கைகளில் இருக்கிற அந்தப் புத்தகத்தைப் பெறுகிறார். அவர் அந்தப் புத்தகத்தைப் பெற்றவுடனே, இந்த தூதனும், மூப்பர்களும் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து, அவரைத் தொழுதுகொள்கிறார்கள். “ஆ! இவருக்குத் துதியும், கனமும், மகிமையும், ஸ்தோத்திரமும் உண்டாவதாக,” என்று மகா சத்தமிட்டுச் சொன்னார்கள்.

இந்த முழு பூமியிலும், இந்த முழு பிரபஞ்சத்திலும் தேவன் தம்முடைய ஜீவனை வைப்பதற்குத் தகுதியுள்ள ஒரு பாத்திரம், ஒரு நபர், இல்லை. எனவே, யோவானைப்போல நாமும் அழக்கூடியவர்கள். “ஓ! தேவனுடைய கைகளிலிருக்கிற இந்த ஜீவனைப் பெறுவதற்கு வழியில்லையே!” என்று நாம் அழ வேண்டும்.

ஒரு மனிதன் தன்னுடைய பிரயத்தனத்தினால் ஒரு நல்ல வாழ்க்கை வாழ முயற்சிசெய்வது என்பது ஒரு குரங்கு மனிதனைப்போல ஒரு நேர்த்தியான வாழ்க்கை வாழ முயற்சிசெய்வதற்குச் சமானமானது. என்னதான் ஒரு குரங்கைப் பார்க்கும்போது அது ஒரு மனிதனைப்போல காட்சியளித்தாலும், அது ஒரு மனிதனுடைய ஜீவனை உடையதல்ல; ஆகவே, அது ஒரு மனிதனுடைய வாழ்க்கை வாழ முடியாது. எந்தப் பக்தியினாலாவது, யுக்தியினாலாவது, சக்தியினாலாவது, தந்திரத்தினாலாவது, மந்திரத்தினாலாவது, யந்திரத்தினாலாவது (திருமந்திரத்தில் இந்த மூன்று வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. மந்திரம். தந்திரம், யந்திரம். எனவே நான் இதைக் குறிப்பிடுகிறேன்). இது சாத்தியமாகாது.

இயேசுவின் மனுவுருவாதல்

ஒரு நபர்தான் தேவனுடைய வழி. இந்த நபர் செலுத்தின கிரயம் என்ன? ஒரு மனிதனாய் உருவெடுப்பது, ஊனுருக்கொள்வது என்பது இந்த நபர் செலுத்தின் முதல் கிரயம். “அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும் தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனித சாயலானார்” (பிலி. 2:6-7). ஊனுரு, மாம்சமாதல், மனித உருவாதல், என்று தீர்மானிக்கும்போது மாபெரும் கிரயத்தைச் செலுத்துகிறார். ஏனென்றால், தேவனே ஊனுருவிலே, மனித உருவிலே, வெளிப்படும்போதுகூட இந்த உலகம் அவரை ஏற்றுக்கொள்ளாது. “அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார்; அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை” (யோவான் 1:11). அந்த ஒளி இந்த உலகத்திலே பிரகாசித்தது; ஆனால், உலகமோ அவரைப் புரிந்துகொள்ளவில்லை. “நீ யார் ஐயா கடவுள்? ஏன் இவர் கடவுள் இல்லையா? அவர் கடவுள் இல்லையா? நாங்கள் இப்படி கற்பனைசெய்துகொண்டிருக்கிறோமே! அது கடவுள் இல்லையா? ஏன் நீர் ஒருமுறைதான் வருவீரா? இரண்டுமுறை வர மாட்டீரா? மூன்று முறை வரமாட்டீரா?” என்று மனிதர்கள் அவரை எதிர்த்தார்கள், “மனிதர்கள் முரட்டுத்தனம் செய்வார்கள், கலகம் செய்வார்கள், கல்லெறிவார்கள். சிலுவையிலறைவார்கள், இவன் பொய்யன் என்பார்கள்; இவன் எத்தன் என்பார்கள்; இவன் கலகக்காரன் என்பார்கள்,” என்பது தெரிந்தும் தேவாதி தேவன், கர்த்தாதி கர்த்தர், இராஜாதி இராஜா, ஒருவரும் சேரக்கூடாத ஒளியிலே வாசம்பண்ணுகிறவரும், ஒருவராய் சாவாமையுள்ளவரும், ஒருவரும் கண்டிராதவரும், ஒருவரும் காணக்கூடாதவருமாயிருக்கிறவர் (1 தீமோ. 6:16) (பவுல் என்னமோ உணர்ச்சிவசப்பட்டு பேசிவிடுகிறதில்லை. உண்மையிலேயே பரிசுத்த ஆவியிலிருக்கும்போது இப்படிப்பட்ட வார்த்தைகள் வெளிவரும், வெள்ளம்போல வெளிவரும்) மனுவுருவாதல், ஊனுருவாதல் என்பது அவர் செலுத்தின பெரிய கிரயம்.

பவுலின் வார்த்தைகளிலே, அவர் தம்மைத்தாமே வெறுமையாக்கினார். இயேசுகிறிஸ்து சிலுவைக்குக்கூடப் போகவேண்டியதில்லை. அவர் மனுஉருவானார் என்பதே அவர் செலுத்தின கிரயம்தான். ஒரு சகோதரன் இப்படிச் சொன்னார:. ஒருவேளை முப்பத்துமூன்றரை ஆண்டுகள் ஒரு நாய்க்கூண்டிலே வாழ வேண்டும் என்றால் நம்மில் யார் அந்தப் படியை எடுப்போம்? ஒரு நாயின் உயிரோடு, நாய்களோடு நாயாக, ஒரு நாய்க்கூண்டிலே வாழ வேண்டுமென்றால் எந்தவொரு மனிதன் அந்தப் படியை எடுப்பான்? தன்னை வெறுமையாக்குகிற அந்தப் படியை ஒரு மனிதனும் எடுக்க மாட்டான். மனுவுருவாதல், ஊனுருவாதல், என்ற அந்தப் படியை தேவன் எடுத்தார். இது ஆதியிலே மனிதனை சிருஷ்டிக்கும்போதே தேவனுடைய எண்ணம். ஆதியிலே இந்த வார்த்தை இருந்தது. மனுவுருவாதல், ஊனுருவாதல், என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தி அல்ல, உலகத் தோற்றத்துக்கு முந்தியே தேவனுடைய எண்ணம் அது, தேவனுடைய வாஞ்சை அது. வெறுமையாக்குதல், நாய்களோடு ஒரு நாயாக வாழ்வது என்பது நமக்கொன்றும் வாஞ்சையாக இருக்காது. அதை வலுக்கட்டாயமாக வேண்டுமென்றால் செய்வோமேதவிர மனவிருப்பமுடன் செய்யமாட்டோம்.

“இன்று இரவு மருத்துவமனையில் இந்த நோயாளியை இராத்திரியெல்லாம் பார்த்துக்கொள்ளுங்கள்,” என்றால் யாராவது வாஞ்சையோடு போவோமா? உண்மையிலேயே பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவர்கள் அதைச் செய்வார்கள். இதுதான் பரிசுத்த ஆவியினால் நிறைவது. அந்நிய பாஷை பேசுவதல்ல. ஏனென்றால், அதற்கு எந்த விலைக்கிரயம் செலுத்தவேண்டிய அவசியமில்லை.

சிலுவை மரணம்

மனிதரூபமாய்க் காணப்பட்டு… அடுத்தபடி என்ன? இது முதல் படி. அடுத்த படி என்ன? “மனிதரூபமாய்க் காணப்பட்டு மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி…” முப்பத்துமூன்றரை ஆண்டுகள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பிதாவுக்குக் கீழ்ப்படிந்த வாழ்க்கை வாழ்ந்தார். “சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி தம்மைத்தாமே தாழ்த்தினார்.” 

எபிரெயர் கடிதத்தை நீங்கள் தொடர்ந்து வாசிக்க வேண்டும். “அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்” (எபி. 2:18). “நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடிய பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லா விதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும்,, பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்” ( எபி. 4:15). “அவர் மாம்சத்திலிருந்த நாட்களிலே தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டாயிருந்த பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டார்” (எபி. 5:7). ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மாம்சத்தில் வாழ்ந்த நாட்களிலே பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும் ஜெபம் பண்ணினார். வீடு வேண்டும், கார் வேண்டும், படிப்பு வேண்டும், வேலை வேண்டும், பெண் வேண்டும், ஆண் வேண்டும், பிள்ளை வேண்டும் என்பதற்காக அல்ல. மரணத்திலிருந்து தம்மை இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி அவர் விண்ணப்பம் பண்ணினார். எந்த மரணம்? சிலுவையிலா? அந்த மரணம் அல்ல. “பிதாவே, உமக்கும் எனக்கும் இருக்கிற அந்த ஒருமை, ஒன்றாக உள்ள அந்த உறவு, இந்த உறவிலே ஒருநாளும் விரிசல் வரக்கூடாது”. அதுதான் மரணம். இந்த மரணத்திலிருந்து தம்மை இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி அவர் ஜெபித்தார். “அவர் குமாரனாயிருந்தும் பட்ட பாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்” (எபி. 5:8). இவைகளெல்லாம் வேதத்திலே ரொம்பத் தெளிவாக எழுதப்பட்டிருக்கின்றன.

ஆகவே, அவர் செலுத்தின கிரயம், தன்னுடைய வாழ்க்கையின் எல்லாச் சூழ்நிலைக்கும் அவர் பிதாவுக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தார். பிதாவினுடைய ஈடுபாடு ஒன்றே அவருடைய ஈடுபாடாய் இருந்தது. தன்னுடைய ஈடுபாடு அவருடைய ஈடுபாடாய் இருக்கிவில்லை.

அருமையான பரிசுத்தவான்களே! அதற்காக நம்முடைய வாழ்க்கையிலே நம்முடைய பொறுப்புகளை நிறைவேற்றக் கூடாது என்று நான் சொல்லவில்லை. நான் நம்முடைய வாழ்க்கையின் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கும், சுயத்தை மையமாய்க்கொண்டு சுயமாய் வாழ்வதற்குமிடையே பெரிய வேறுபாடு உண்டு. பார்வைக்கு, காட்சிக்கு, இரண்டும் ஒன்றுபோல் தோன்றலாம். ஆனால், உள்ளான தன்மையிலே இரண்டும் ஒன்று அல்ல. நம்முடைய பொறுப்புகளை நிறைவேற்றுவது வேறு; நம்மை மட்டுமே, நான், என், எனது என்பதை மட்டுமே, மையமாய்வைத்து வாழ்கிற வாழ்க்கை வேறு. தேவனுடைய மக்கள் நான், என், எனது என்பதை மையமாய் வைத்து வாழக்கூடாது. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து அப்படி வாழவில்லை. அவர் செலுத்தின கிரயம் அது.

இரண்டாவது படி, கீழ்ப்படிந்தார். மூன்றாவது படி, சிலுவையின் மரணபரியந்தம், சாதாரண மரணம் அல்ல. சிலுவையின் மரணபரியந்தம் கீழ்ப்படிந்தார். மரணமே நேரிடுவதாயிருந்தாலும.;.., ஆயிரம் ரூபாய், பத்தாயிரம் ரூபாய், ஒரு லட்சம், பத்து லட்சம் போய்விடுமென்றால் அந்த நட்டத்தை நம்மால் பொறுக்க முடியாது. இதுவரை என்னுடைய வாழ்க்கையிலே சம்பாதித்த எல்லாப் பணமும் போய்விடுகிறது. இயேசுகிறிஸ்துவுக்கு நான் கீழ்ப்படிவதற்காக இதுவரை நான் சம்பாதித்த எல்லாவற்றையும் இழக்க வேண்டியிருக்கும் என்று வைத்துக்கொள்வோமே. நம்மில் எத்தனைபேர் அதற்கு முன்வருவோம்? இது முடியுமா? முடியும்.

“நீ;ங்கள் ரொம்ப romanticஆக பேசுகிறீர்கள். அப்படியெல்லாம் தேவன் நமக்குப் பரீட்சை வைக்கமாட்டார்,” என்று ஒருவேளை நீங்கள் சொல்லலாம். ஏன் வைக்க மாட்டார்? “உன்னுடைய ஒரே குமாரனை, ஏக புத்திரனை, நீ நேசிக்கிற புத்திரனை நீ பலியிடு,” என்று சொன்ன தேவன்தானே நம் தேவன்! விசுவாசத்தின் பரீட்சை என்பது நம் ஒவ்வொருவரும் நம்முடைய மோரியா மலைவழியாய் இன்றோ நாளைக்கோ நாம் கடந்து போவோம். இன்றைக்கு, நவீன கிறிஸ்தவ சுவிசேஷம் மோரியா மலை இல்லாத ஒரு பாதையைத் தெரிந்தெடுத்துக்கொண்டிருக்கிறது. “நீங்கள் எதுவுமே பலியாக்க வேண்டாம். எல்லாவற்றையும் இயேசுகிறிஸ்து செய்து முடித்துவிட்டார். நீங்கள் அப்படியே ஜாலியாக வந்துவிட்டுப் போகவேண்டியதுதான்,” என்ற மலிவான நற்செய்தி இன்று அறிவிக்கப்படுவது துர்ப்பாக்கியம்.

முதலாவது ஜீவன் பாய்ந்தோடுகிற பாத்திரம் என்பது ஜீவன் இலவசம். ஆனால் ஜீவன் பாய்ந்தோடுகிற அந்தப் பாத்திரம் இலவசமானது அல்ல. அது உண்மையிலேயே தேவனுடைய உளைக்களத்திலே மிதிக்கப்பட்டது. “சிலுவையின் மரணபரியந்தம் தம்மைத் தாழ்த்தினார். ஆகையால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தினார். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் சொந்த வார்த்தைகளில் சொல்வதானால், ”மனிதகுமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும். தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான். இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான்” (யோவான் 12:23-25) என்றால்”உண்மையிலேயே தேவனுடைய ஜீவனை ஒரு சிலருக்கு அல்ல; இந்த உலகம் முழுவதற்கும், ஒரு புதிய மனித இனத்துக்குள்ளே, தேவனுடைய இந்த ஜீவனை நான் கொண்டுபோக வேண்டுமென்றால் முதல் கோதுமை மணியாக, புதிய மனித இனத்தின் முதல் மனிதனாக, மாதிரி மனிதனாக, முன்னுதாரண மனிதனாக, நான் நிலத்தில் விழுந்து சாக வேண்டும்,” என்று பொருள். “நான் முழுக வேண்டிய ஒரு ஸ்நானம் உண்டு. அது நிறைவேறுமளவும் எவ்வளவாய் நான் நெருக்கப்படுகிறேன்,” (லூக்கா 12:50) என்று தன் மரணத்தைக்குறித்து இயேசு பேசுகிறார்.

2. இயேசுவின்மேல் அன்பு

என்னுடைய இரண்டாவது குறிப்பு. ஆகவே, தேவன் மனிதனிடத்தில் கோருவது: நான் இனிமேல் நல்லவனாக வாழ்வேன் என்பதல்ல. தேவனுடைய ஜீவன் பாய்ந்தோடுவதற்காக மனிதனாகி, மரித்து, உயிர்த்தெழுந்த ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து என்ற நபரின்மேல் அன்பாயிருக்க வேண்டுமென்கிற ஒரே நிபந்தனையை இந்த மனுக்குலத்திற்கு முன்பாக அவர் வைக்கிறார். “இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்திய ஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது,” (யோவான் 20:31) என்று சொல்லிவிட்டு ஆண்டவராகிய இயேசு பேதுருவினிடத்திலே கேட்கிற கேள்வி, “யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாக நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா? யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னில் அன்பாயிருக்கிறாயா? யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா?” 

இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பது என்பது அவரை நேசிப்பது, அவர்மேல் அன்புகூருவது, அவர்மேல் பற்றுறுதியாயிருப்பது, அவரைப் புகழ்வது, அவரை பாராட்டுவது, அவரைப் போற்றுவது அவருக்கு ஈடுயிணையில்லை. நான் ஒரேவொரு பகுதியை வாசிக்க விரும்புகிறேன். கணவன் மனைவிக்கு இடையேயுள்ள உறவைப்பற்றிச் சொல்லும்போது, “கணவர்களே உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள். மனைவிகளே உங்கள் கணவர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள், பணிந்திருங்கள்,” என்று சொல்லும்போது அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்றுamplified versionயில் இப்படிச் சொல்லியிருக்கிறது. நான் கணவன் மனைவியைப்பற்றி மட்டும் பேசவில்லை. இயேசுகிறிஸ்து நம்மேல் அன்புகூர்ந்தார். நாம் அவருக்குப் பணிந்து, கீழ்ப்படிந்து வாழ வேண்டும் என்பதன் பொருள் என்ன? “However each man among you (without exception) is to love his wife as his very own self (with behavior worthy of respect and esteem, always seeking the best for her with an attitude of loving kindness) and the wife (must see to it) that she respects and delights in her husband that she notices him, regards him, honour him, preserves him, venerates him and esteems him and that she praises him and loves and admires him exceedingly”.

இயேசுகிறிஸ்து நம்மை அவரில் ஒரு பகுதியைப்போல நேசித்தார், நேசிக்கிறார். அதேபோல நாம் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். கீழப்படிதல் என்பதற்கு 12 ஆங்கில வார்த்தைகளை வைத்து இந்த மொழிபெயர்ப்பிலே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. முடிந்தால் இதை நீங்கள் பின்தொடருங்கள். இல்லாவிட்டால் மனப்பாடம் செய்துகொள்ளுங்கள். மனைவிமார்களெல்லாம் இனிமேல் உங்கள் கணவன்மார்களை நாளையிலிருந்து “I praise you, exceedingly admire you” என்று சொல்லச் சொன்னாரா? இல்லை. ஆனால் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பது என்றால் நம்மைப் பொறுத்தவரை ஆண்டவராகிய இயேசுவை நான் விசுவாசிக்கிறேன். ஆனால் அவரைவிட ஒருசில நபரையும் அதிகமாக நான் விசுவாசிக்கிறேன். ரோமன் கத்தோலிக்கர்கள் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்பாக மரியாளை நம்புவார்கள், விசுவாசிப்பார்கள், போற்றுவார்கள். அது உண்மையிலேயே சத்துருவாகிய சாத்தானுடைய வஞ்சகம். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஒத்த நபர், நம்முடைய அன்புக்கும், நாம் பாராட்டுவதற்கும், நாம் போற்றுவதற்கும், நாம் புகழ்வதற்கும் நம்முடைய இருதயத்தையெல்லாம் கொடுப்பதற்கும், நம்முடைய வாழ்க்கையையெல்லாம் அர்ப்பணிப்பதற்கும் வேறு ஒரு நபர் வானத்தின்கீழே பூமியிலே இல்லை. அப்போஸ்தலனாகிய பேதுரு இயேசுகிறிஸ்துவைப்பற்றிச் சொல்லும்போது, “அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை. நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும் மனிதர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை,” (அப். 4:12) என்கிறார். இதன் பொருட்டு என்னுடைய நண்பர்கள் பகைவர்களாக மாறினாலும் அதற்காக நான் ஒன்றும் செய்ய முடியாது. இது உண்மை. வானத்தின்கீழே, பூமியிலே மனிதர்களுக்குள்ளே நாம் இரட்சிக்கப்படுவதற்கு அவருடைய பெயரேயல்லாமல், இயேசு என்கிற பெயரின்றி, அவருக்கு ஒப்பிடத்தக்கவர், அவருக்கு இணையானவர், அவருடைய மகிமையிலே சிறிது பங்குபோடக்கூடியவர் என்று இதுவரை உயிர்வாழ்ந்து முடித்த நபரும் இல்லை; உயிர் வாழ்கின்ற நபரும் இல்லை; உயிர் வாழப்போகிற நபரும் இல்லை. அவர் ஒப்பற்றவர். இது என்னுடைய இரண்டாவது குறிப்பு.

முதல் குறிப்பு, ஜீவன் பாய்ந்தோடுகிற பாத்திரமாக இருப்பதற்கு அவர் விலைக்கிரயம், மாபெரும் விலைக்கிரயம் செலுத்தினார். இரண்டாவது குறிப்பு, தேவனுடைய கோரிக்கை என்னவென்றால் இந்த நபர்மேல் நம்முடைய முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும், முழு பலத்தோடும் அன்புகூருவது. மூன்றாவது ஒரு குறிப்பு உண்டு. நம்மூலமாய் ஜீவன் பாய்ந்தோடுகிற பாத்திரங்களாக நாம் மாறுவது. தேவன்தாமே நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை இப்படி நாம் காண்பதற்கும், போற்றுவதற்கும், பாராட்டுவதற்கும் நம்முடைய எல்லா அன்புக்கும் உரியவராய் இருப்பதற்கும் நம்முடைய மனக்கண்களைத் திறந்தருள்வராக, இது நம்முடைய வாழ்க்கையிலே ஒரு தத்துவமாக, நம்முடைய அன்றாட வாழ்வு அனுபவமாக ருசிக்கின்ற, அனுபவிக்கின்ற, நாம் துய்க்கின்ற பேரின்பமாய் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நமக்கு இருப்பாராக ஆமென்.