Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

தலைமைத்துவம்

Transcribed from a message spoken in April 2012 in Chennai

By Milton Rajendram

ஏதோவொரு விதத்தில் நாம் தலைமைத்துவப் பொறுப்பை எடுக்கிறோம்.

குடும்பம்

ஒரு குடும்பம் என்றால் அங்கு தலைமைத்துவம் இருக்கிறது. குடும்பத்தில் ஒருவர் அல்லது இருவர் தலைமைத்துவத்தை எடுக்கிறார்கள். ஒன்று, கணவன் தலைமைத்துவத்தை எடுக்கிறான் அல்லது கணவனும், மனைவியும் சேர்ந்து பிள்ளைகளுக்குத் தலைமைத்துவத்தைக் கொடுக்கிறார்கள். இது மிகச் சிறிய எடுத்துக்காட்டு, ஆனால் பலமான எடுத்துக்காட்டு. ஏனென்றால், ஒரு குடும்பத்தில் நல்ல தலைமைத்துவம் இல்லையென்றால் அந்தக் குடும்பம் ஆசீர்வாதமான குடும்பமாக இருக்க முடியாது. ஒருவேளை அந்தப் பெற்றோர்கள் வலுவான தலைமைத்துவத்தைக் கொடுக்கவில்லையென்றால் அந்தப் பிள்ளைகள் எப்படி இருப்பார்கள்? “அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வளரட்டும்; என்ன வேண்டுமானாலும் யோசிக்கட்டும்; என்ன வேண்டுமானாலும் பேசட்டும்; எங்கு வேண்டுமானாலும் போகட்டும்; எதை வேண்டுமானாலும் செய்யட்டும் அல்லது எதைச் செய்யாமல் போனாலும் போகட்டும்” என்று இருந்தால் எப்படி இருக்கும்? பெற்றோர்கள் இப்படி தங்கள் தலைமைத்துவத்தைச் செயல்படுத்தவில்லையென்றால் அந்தப் பிள்ளைகளுடைய எதிர்காலம் எப்படி இருக்கும்? அவர்கள் ஆசீர்வாதமானவர்களாகவோ, பயனுள்ளவர்களாகவோ இருப்பார்களா?

தேவனுடைய சபை

குறிப்பாக, தேவனுடைய மக்கள் மத்தியில் தலைமைத்துவம் இருக்க வேண்டும். ஒரு சிலர் தலைவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் இதைப் பேசவில்லை. ஒரு சிலர் தலைவர்களாக இருக்க விரும்புகிறார்கள் என்பதல்ல நம்முடைய பிரச்சினை. யாரும் தலைவர்களாக இருக்க விரும்பவில்லை என்பதுதான் நம்முடைய பிரச்சினை. சிலரிடையே பிரச்சினை என்னவென்றால் சிலர் தலைவர்களாக இருக்க விரும்புவார்கள்; மிகவும் ஆசைப்படுவார்கள். நம்மிடையே பிரச்சினை என்னவென்றால் யாரும் தலைவராக இருக்க விரும்பவில்லை. குறிப்பிட்ட ஒரு திசையில் நாம் நடப்போம் என்று சொல்லும்போது நாம் தலைமைத்துவத்தை எடுக்கின்றோம். அதைச் சொல்வதற்கு நாம் முன்வருவதில்லை. காரணம். ஒருவேளை “இந்தத் திசையில் நடக்கலாம்” என்று நான் சொல்லி ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் கழித்து, அந்தத் திசையின் முடிவு அடைபட்டுவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். மோசே இஸ்ரயேல் மக்களை நடத்தினதுபோல, பார்த்தால் கடைசியில் செங்கடலில் வந்து முடிந்துவிடுகிறது. “ஓ! எங்களைச் சாகடிப்பதற்காகவா இந்தத் திசையில் கொண்டுவந்தீர்!” “இதற்காகத்தான் நான் முதலிலேயே சொன்னேன். இந்தத் தலைமைத்துவமெல்லாம் வேண்டாம் என்று! எல்லாரும் கிறிஸ்துவாகிய தலையின்கீழ் இருந்துவிடுவோம்”. இப்படி ஒருவிதமாக நாம் ஆவிக்குரிய விதமாகக்கூடச் சொல்லலாம். ஆனால், அது அப்படி அல்ல. குடும்பத்தில் தேவன் தலைமைத்துவத்தை வைத்திருக்கிறார். தேவனுடைய சபையில், தேவனுடைய வீட்டில், அவர் தலைமைத்துவத்தை வைத்திருக்கிறார்.

தவறான தலைமைத்துவம்

தவறான தலைமைத்துவத்தைப்பற்றியும் நான் சொல்ல வேண்டும். இந்த உலகத்தில் தலைமைத துவத்தை மக்கள் எப்படித் தவறாகப் பயன்படுத்துகிறார்களோ அப்படி நாம் தலைமைத்துவத்தைத் தேவனுடைய மக்களிடையே பயன்படுத்தக்கூடாது. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இப்படிச் சொன்னார்: “இந்த உலகத்து ராஜாக்கள் தங்கள் மக்களை இறுமாப்பாய் ஆளுகைசெய்கிறார்கள்”. அதாவது தங்கள் சுயஇலாபத்திற்காகத் தலைமைத்துவத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்று சொன்னார். தலைமைத்துவத்தின் கடைசித் தோலை உரித்துப்பார்த்தால் மிக உள்ளாக என்ன இருக்கிறது என்று தெரியும். அங்கு அவர்களுடைய சுயஇலாபம் ஒளிந்திருப்பது தெரியும். சுயஇலாபம் எங்கோ ஓர் இடத்தில் ஒளிந்துகொண்டிருக்கும். தேவன் இதை அங்கீகரிக்கமாட்டார்.

தவறான தலைமைத்துவத்திற்கு தேவனுடைய மாறுத்தாரம் எப்படி இருக்கும்? What is God’s reaction to wrong kind of leadership? தலைமைத்துவம் என்று வந்தாலே சிக்கல்கள் உண்டு. எனவே, தலைமைத்துவம் வேண்டாம் என்று சொல்வதுபோல், மந்தைக்கு நல்ல மாதிரிகளைக் காண்பிக்க வேண்டும். முன்மாதிரிகளாக கண்காணிப்புச் செய்யவேண்டும். தலைமைத்துவம் என்றால் இரண்டு அல்லது மூன்றுபேரிடம், “அவர் எப்படி நடக்கிறாரோ, செயல்படுகிறாரோ அப்படி நடங்கள், செயல்படுங்கள்,” என்று சொல்லும்வண்ணம் நாம் வாழும்போது நாம் எதைக் கொடுக்கிறோம்? தலைமைத்துவத்தைக் கொடுக்கிறோம்.

ஜனங்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல் இருக்கக் கண்டு, அவர் அவர்கள்மேல் மனதுருகினார். நம்முடைய சொந்தப் பிள்ளைகளானாலும் சரி, தேவனுடைய பிள்ளைகளானாலும் சரி. அவர்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகள்தான். ஏதோ சபை என்று அழைக்கப்படுகிற ஓர் இடத்துக்குப் போவதால் அவர்கள் மேய்ப்பன் உள்ள ஆடுகள் இல்லை. தீய மேய்ப்பர்களைப்பற்றி எசேக்கியேலில் ஒரு முழு அதிகாரமே உண்டு. “என் மக்கள்மேல் நான் அமர்த்தின மேய்ப்பர்கள் தீய மேய்ப்பர்களாக இருக்கிறார்கள்.”

அங்கீகரிக்கப்படும் தலைமைத்துவம்

ஆனால், தேவனுடைய பாரம் என்னவென்றால் நாம் எல்லோரும் தேவனுக்கேற்ற மேய்ப்பர்களாக அல்லது தலைமைத்துவம் எடுப்பவர்களாக மாற வேண்டும். எடுத்துக்காட்டாக ஒரு சகோதரனை எடுத்துக்கொள்வோம். அவர் ஒரு சிக்கலில் அல்லது ஒரு பிரச்சினையில் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். “நீங்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவால் உங்கள் நெருக்கத்திலிருந்து உங்களை விடுதலையாக்க முடியும்,” என்று நாம் அவரிடம் தைரியமாகச் சொல்லலாம். நாம் அப்படிச் சொல்லி ஒருவேளை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து அவரை விடுவிக்கவில்லையென்றால் என்னவாகும்? ஒன்றும் ஆகாது. தேவன் அவர்களை விடுவிப்பார்.

“இயேசு கிறிஸ்து எங்களை முதலாவது விடுவிக்கட்டும். தேவன் எனக்கு இதைச் செய்தால் நான் அவரை விசுவாசிப்பேன்,” என்று சிலர் சொல்வார்கள். அதை நீங்கள் ஒருநாளும் ஒத்துக்கொள்ளாதீர்கள். அவர் தேவன், அவர் ஆண்டவர். தம்மேல் மக்கள் விசுவாசம் வைக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். தம்மை விசுவாசிக்கிறவர்களை அவர் கனம்பண்ணுகிறார். வியாபாரம் செய்வதுபோல், “இந்தச் சரக்கை எப்படியாவது விற்றாக வேண்டும். எனவே, நீங்கள் காசு கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. சரக்கை எடுத்துக்கொண்டு போங்கள். காசு வரும்போது கொடுங்கள். உங்களுக்கு நான் உதவி செய்கிறேன். உங்களுக்கு எப்போது வசதிப்படுமோ அப்போது நீங்கள் விசுவாசியுங்கள்,” என்று தேவன் சொல்வதில்லை. அவர் அப்படிச் செய்யமாட்டார். அவர் ஆண்டவர்; அவர் ராஜாதி ராஜா.

இப்படிச் செய்யும்போது நாம் தலைமைத்துவத்தை எடுக்கிறோம். பல சமயங்களில் அவிசுவாசிகள் மத்தியில்கூட நாம் தலைமைத்துவத்தை எடுக்க வேண்டும். பொதுவாக, நாம் ஒதுங்கிக்கொள்வோம். ஆனால், தேவன் நம்மை நடத்தும்போது நாம் தலைமைத்துவத்தை எடுக்க வேண்டும்.

தலைமைத்துவம் நல்ல தலைமைத்துவமாக அல்லது தேவன் அங்கீகரிக்கின்ற தலைமைத்துவமாக அல்லது தேவனுடைய பிரிதிநிதித்துவத் தலைமைத்துவமாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? தேவன் நம்மை நம்பி தம்மை ஒப்படைக்கிற தலைமைத்துவமாக இருப்பதற்கு மூன்று காரியங்கள் அடிப்படையானவைகளாகத் தோன்றுகின்றன.

நான் தலைவன் என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால், அதில் முக்கியம் என்னவென்றால் தேவன் அந்தத் தலைமைத்துவத்தை அங்கீகரிப்பாரா? அதன்பின் இருப்பாரா? தேவன் அந்த மனிதனை நம்பி, தம்மை அவனிடம் ஒப்படைப்பாரா?

உக்கிராணக்காரன்

அந்தத் தலைமைத்துவத்திற்கு புதிய ஏற்பாட்டில் உக்கிராணத்துவம் என்ற ஒரு பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. உக்கிராணக்காரன் என்றால் ஓர் எஜமான் தன் வளங்களையும், பொருட்களையும் நம்பி ஒப்படைப்பதற்கு அவன் பாதுகாப்பானவன் என்று பொருள். “என் பொருளை இவன் கையில் கொடுப்பதற்கு இவன் பாதுகாப்பானவனா? இவனை நம்பி என் பொருளை இவன் கைவசம் கொடுக்கலாமா?” என்று எஜமான் பார்ப்பார். 100 ரூபாயை இவன் கையில் கொடுப்பதற்கு இவன் பாதுகாப்பானவனா? நாம் எப்படிப் பார்ப்போம்? முதலில் 10 ரூபாய் கொடுத்துப் பார்ப்போம். அவன் அந்த 10 ரூபாயைச் சரியாகச் செலவழிக்கவில்லையென்றால் அவனை நம்பி யாரும் 100 ரூபாய் கொடுக்கமாட்டார்கள். ஓர் அலுவலக வேலை என்று வைத்துக்கொள்வோம். 100 ரூபாய் கொடுத்தனுப்புகிறோம். திரும்பிவந்தபின் கணக்குக் கேட்டால், “டீ சாப்பிட்டேன், அதை வாங்கினேன், இதை வாங்கினேன், 100 ரூபாய் காலியாகிவிட்டது” என்று சொன்னால் அவனுடைய குணத்தை அறிந்துகொள்ளலாம். மாறாக “டீ குடித்தது 5 ரூபாய், மத்தியானச் சாப்பாடு 27 ரூபாய், மீதி 68 ரூபாய்,” என்று கணக்குக் கொடுத்தால், அவனை நம்பி நம் வளங்களைக் கொடுக்கலாம். அவன் பாதுகாப்பானவன், ஓர் எஜமான் தன் வளங்களையும், பொருட்களையும் நம்பி ஒப்படைப்பதற்கு அவன் பாதுகாப்பானவன். தேவன் தன் எல்லையில்லா வளங்களையும், ஆதாரங்களையும், வல்லமையையும் நம்பி ஒப்படைப்பதற்கு நாம் பாதுகாப்பானவர்களா?

ஒரு அணு ஆயுதத்தை ஒரு மனிதனிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அந்த மனிதன் பாதுகாப்பானவனா என்று பார்ப்பார்கள். இல்லையா? அவன் அதிகமாகக் கோபப்படுகிற மனிதன் என்று வைத்துக்கொள்வோம். கொஞ்சம் கோபம் வந்தால் போதும். உடனே, அவர் துப்பாக்கியை எடுத்துச் சுட்டுவிடுகிறான் என்று வைத்துக்கொள்வோம். அவனை நம்பி யாராவது ஒரு அணு ஆயுதத்தை அவன் கையில் ஒப்புக்கொடுப்பார்களா? ஒப்படைப்பார்களா? மாட்டார்கள்.

“ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில்” என்று நாம் ஜெபிக்கின்றோம் அல்லது பல காரியங்களை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் நாம் செய்கின்றோம். “ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் இதைத் தடுக்கின்றேன் அல்லது கட்டவிழ்க்கின்றேன்,” என்று சொல்லும்போது அதன் அர்த்தம் என்னவென்று கேட்டால் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் பிரதிநிதியாக அல்லது சார்பாக நான் இதைச் செய்கின்றேன். இப்படி நான் சொல்லும்போது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து “ஆம், ஆம், ஆம். நான்தான் அவனை இதைச் செய்யச்சொன்னேன்,” என்று அவர் நம்மை ஆதரிக்க அல்லது தாங்க முடியுமா? “அவன் தன் சொந்தக் காரியத்தை அல்லது வேலையைச் செய்யவில்லை. நான் என்ன செய்யச் சொன்னேனோ அதைத்தான் அவன் செய்கிறான். நான் என்ன விரும்புகிறேனோ அதைத்தான் அவன் செய்கிறான்,” என்று தேவன் அங்கீகரித்து, தேவன் தம்மை ஒப்படைக்கிற தலைமைத்துவத்தைப்போன்ற ஆசீர்வாதமான தலைமைத்துவம் வேறொன்றில்லை.

நான் தலைமைத்துவத்தைப்பற்றி விலாவாரியாகச் சொல்லப்போவதில்லை. மோசே தொடங்கி, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து, பவுல் வழியாக அவர்கள் எப்பேர்ப்பட்ட தலைவர்களாக இருந்தார்கள் என்று ஒருவேளை தேவன் நமக்கு நேரத்தைத் தரும்போது ஒரு நாளில் அல்லது பல வாரங்களில் நாம் பார்க்கலாம். ஆனால், அவர்கள் யாரும் இந்த உலகத்துத் தலைவர்களைப்போல் செயல்படவில்லை. உண்மையில் தேவனுடைய மக்கள் மத்தியில் தலைமைத்துவம் எப்படிச் செயல்பட வேண்டுமென்றால் தேவன் தம் மக்களுக்கு என்ன செய்ய விரும்புகிறாரோ அதை அறிந்து தேவனுடைய ஆசீர்வாதங்களை அவர்களிடத்தில் கொண்டுவர வேண்டும். அதுதான் தலைமைத்துவத்தின் முறை

அடிப்படையான மூன்று காரியங்கள்

மூன்று காரியங்கள் மிகவும் அடிப்படையானவை. முதலாவது தரிசனம் தேவை. இரண்டாவது பரிசுத்த ஆவியானவர் தேவை. மூன்றாவது குணம் தேவை.

இதைப்பற்றி நாம் அதிகம் பேசமுடியாது. ஆனால், முக்கியமான குறிப்புகளை மட்டும் நான் அடிக்கோடிட்டுக் காண்பிக்கிறேன். தேவன் அங்கீகரிக்கின்ற அல்லது ஒப்படைக்கின்ற வல்லமையான தலைமைத்துவம் வேண்டுமென்றால் அல்லது தேவனுடைய விருப்பத்தை அப்படியே ஒரு கூட்டம் மக்கள் மத்தியிலே நிறைவேற்றுகிற தலைமைத்துவம் வேண்டுமென்றால் இந்த மூன்றும் அவசியம். முதலாவது, அந்தத் தலைமைத்துவத்திற்குத் தரிசனம் வேண்டும். இரண்டாவது, அந்தத் தலைமைத்துவம் அல்லது தலைவன் பரிசுத்த ஆவியினால் நிரம்பினவனாக இருக்க வேண்டும். மூன்றாவது, அந்தத் தலைவனுக்கு நல்ல திடமான குணம் வேண்டும்.

1, தரிசனம் அல்லது நித்திய நோக்கம்

தரிசனம் என்றால் என்ன? தேவன் எதை நோக்கிச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்கிற பார்வை, அறிவு, இருந்தால்தான் உண்மையிலேயே நாம் தேவனுக்கு ஏற்ற அல்லது தேவன் அங்கீகரிக்கின்ற தலைமைத்துவமாக, தலைவனாக, இருக்க முடியும். தேவனுடைய இலக்கு என்ன? தேவனுடைய குறிக்கோள் என்ன? தேவனுடைய நோக்கம் என்ன? தேவன் இந்தப் பூமியில் தம் எல்லாக் காரியங்களையும் தன் நோக்கமும், குறிக்கோளும், இலக்கும், நிறைவேறுவதற்காக மட்டும்தான் செய்துகொண்டிருக்கிறார். எல்லாவற்றையும்-பெரிய காரியங்கள் சிறிய காரியங்கள்-அதற்காக மட்டும்தான் செய்துகொண்டிருக்கிறார் என்று எபேசியர் 1ஆம் அதிகாரம் 11ஆம் வசனம் கூறுகிறது. தேவனுக்கு ஒரு திட்டம் உண்டு. தேவனுக்கு ஒரு நோக்கமும், குறிக்கோளும் உண்டு. இந்தப் பூமியில் தேவன் எதைச் செய்தாலும் அதற்கு ஒரு நோக்கம் உண்டு. அது நம் வாழ்க்கையில் சிறிய காரியங்களாகக்கூட இருக்கலாம்.

எதற்காக நீங்கள் ஒரு பொறியியல் கல்லூரியில் படிக்கிறீர்கள் என்றால் “நான் ஒரு பொறியாளராக வேண்டும் அல்லது நிறைய சம்பாதிக்க வேண்டும்” என்பதுதான் என்றால் நீங்கள் இன்னும் தேவனுடைய திட்டத்தை, நோக்கத்தை, குறிக்கோளைக் காணவில்லை. ஒரு குறிப்பிட்ட கல்லூரியில் படிப்பதற்கும், தேவனுடைய திட்டத்திற்கும், நோக்கத்திற்கும், குறிக்கோளுக்கும் என்ன தொடர்பு? நீங்கள் எதைச் செய்தாலும்-புசித்தாலும் குடித்தாலும்-தேவனுடைய மகிமைக்கென்றே செய்யுங்கள். நாம் செய்கிற தவறு என்னவென்றால் “இதுபோன்ற காரியங்களில் தேவனுக்கு அப்படியொன்றும் பெரிய ஈடுபாடு இல்லை அல்லது நான் இந்தக் கல்லூரியிலோ அல்லது அந்த கல்லூரியிலோ எந்தக் கல்லூரியில் படித்தால் என்னவென்று நினைக்கிறோம். இதில் தேவனுக்கு அப்படி என்ன பெரிய அக்கறை இருக்கப்போகிறது? இதற்கும் தேவனுடைய திட்டத்திற்கும், குறிக்கோளுக்கும், நோக்கத்திற்கும் என்ன தொடர்பு? தேவன் எவ்வளவு பெரியவர். அவர் பெரிய காரியங்களைக்குறித்துத்தான் அக்கறையும், கரிசனையும் கொண்டவராக இருப்பாரேதவிர இதில் என்ன இருக்கப்போகிறது? நான் எந்தக் கல்லூரியில் படிக்கிறேன்? நான் என்ன பாடம் படிக்கிறேன்? நான் என்ன உடை உடுத்துகிறேன். இவைகளிலெல்லாம் தேவனுக்கு அக்கறையோ, கரிசனையோ இல்லை,” என்று நம்மை நினைக்கவைப்பது சாத்தானின் தந்திரம்.

எல்லாவற்றையும் தேவன் தம் நித்தியக் குறிக்கோளுக்காகத்தான் செய்கிறார். அவருடைய நித்தியக் குறிக்கோள் என்ன? காலங்கள் நிறைவேறும்போது சகலமும் கிறிஸ்துவுக்குள் கூட்டிச் சேர்க்கப்பட வேண்டும் என்பது அவருடைய நித்தியக் குறிக்கோள். இது உங்களுக்கு அவ்வளவு சுவையுள்ளதாகத் தோன்றாது. அவருடைய குறிக்கோள் என்னவென்று கேட்டால், “நீங்கள் ஆபிரகாமைப்போல் கடற்கரை மணலத்தனையாய்ப் பெருகுவீர்கள். வானத்து நட்சத்திரங்களைப்போல் பெருகுவீர்கள். தேசத்தின் நீளம் அகலம் எம்மட்டோ அம்மட்டும் நீங்கள் நடந்துதிரிவீர்கள். நான் அதை உங்களுக்குச் சொந்தமாக்கித் தருவேன்,” என்று நான் சொல்லியிருந்தால் நீங்கள் பரவசமடைந்திருப்பீர்கள். “ஆ! அப்படியா? தேவன் எனக்கு இவ்வளவு நல்ல குறிக்கோளை வைத்திருக்கிறாரே!” என்று நீங்கள் பரவசமடைந்திருப்பீர்கள். ஆனால், புதிய ஏற்பாட்டில் எங்கோ ஒரு மூலையில் உள்ள ஒரு வசனம் இது. பூமியில் உள்ள பொருட்கள், பரலோகத்தில் உள்ள பொருட்கள் ஆகிய எல்லாப் பொருட்களும் கிறிஸ்து இயேசுவுக்குள் கூட்டிச் சேர்க்கப்படவேண்டும் என்பதே அவருடைய நித்திய திட்டமும், நோக்கமும், குறிக்கோளுமாக இருக்கிறது. தேவன் இன்றைக்கு இந்தப் பூமியில் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்றால் இறுதி முடிவு எல்லாப் பொருட்களும், குறிப்பாக எல்லா மனிதர்களும், கிறிஸ்து இயேசுவுக்குள் கூட்டிச்சேர்க்கப்பட வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் கூட்டிச்சேர்க்கப்படுதல்

கிறிஸ்து இயேசுவுக்குள் கூட்டிச்சேர்க்கப்படுவதென்றால் என்ன? கூட்டிச்சேர்க்கப்படாவிட்டால் என்ன? என்ன நட்டம் ஏற்பட்டுவிடும்?

ஒரு சின்ன எடுத்துக்காட்டு நான் சொல்லுகிறேன். அப்போது இது நன்றாக விளங்கும். தண்ணீர்… இதில் 2 ஹைடிரஜன் அணுக்களும் 1 ஆக்சிஜன் அணுவும் இருக்கிறது. 2 ஹைடிரஜன் அணுக் களும் 1 ஆக்சிஜன் அணுவும் கூட்டிச்சேர்க்கப்பட்டால் தண்ணீர் இருக்கும். வெறும் ஆக்சிஜனைக் குடிக்க முடியாது. வெறும் ஹைடிரஜனையும் குடிக்க முடியாது. ஆனால், 2 ஹைடிரஜன் அணுவும் 1 ஆக்சிஜன் அணுவும் கூட்டிச்சேர்க்கப்பட்டால் அங்கு என்ன உருவாகிறது? தண்ணீர் உருவாகிறது. தண்ணீர் இல்லையென்றால் இந்தப் பூமிக்கோளத்தில் என்ன இருக்கும்? ஒன்றும் இருக்காது. மரணம்தான் இருக்கும். இங்கு ஜீவன் இருக்காது. இந்தக் கோட்பாடு இந்தப் பிரபஞ்சம் எங்கும் இருக்கிறது. “நான் கூட்டிச்சேர்க்கப்படவிரும்பவில்லை,” என்று ஆக்சிஜன் அணுக்கள் சொல்லுகின்றன: “நீங்கள் வைக்கிற இடத்தில் என்னால் இருக்கமுடியாது. ஹைடிரஜன் அணுக்களோடு என்னால் ஒத்துப்போக முடியாது.” அதுபோல ஹைடிரஜன் அணுக்கள் சொல்லுகின்றன: “எங்களால் ஆக்சிஜன் அணுக்களோடு இசைந்து ஒத்துப்போக முடியாது. என் இஷ்டம்போல் பறந்துகொண்டேயிருப்பேன். நான் ரொம்ப லேசான காற்று.” இப்படி என்றால் அங்கு ஜீவன் இருக்காது.

கொலோசெயர் 1:14ஆம் வசனம்: “அவர் எல்லாவற்றுக்கும் முந்தினவர், அவருக்குள் சகலமும் நிலைநிற்கிறது அல்லது சேர்த்து தாங்கிப்பிடிக்கப்பட்டிருக்கிறது.” நீங்கள் யோசித்துப்பார்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக சூரிய மண்டலத்தை எடுத்துக்கொள்வோம். சூரியனும், 9 கோள்களும், துணைக் கோள்களும் அந்தரத்தில் மிதந்துகொண்டிருக்கின்றன, தொங்கிக்கொண்டிருக்கின்றன. எவ்வளவு ஆச்சரியமாயிருக்கிறது! எப்படி? அதினதின் இடத்தில் அவை செல்லுகின்றன; சேர்த்துத் தாங்கிப்பிடிக்கப்பட்டிருக்கின்றன. அங்கு கை ஒன்றும் இருந்தமாதிரி தெரியவில்லையே! கை இல்லை. ஆனால், எபிரெயர் முதல் அதிகாரம் 2, 3ஆம் வசனங்கள் இப்படிச் சொல்லுகின்றன: “அவருடைய வல்லமையின் வார்த்தையினாலே இவைகளையெல்லாம் சேர்த்துத் தாங்கிப்பிடித்துக்கொண்டிருக்கிறார். சேர்த்துத் தாங்கிப்பிடித்திருக்கிறார்.” அதுபோல கிறிஸ்துவுக்குள்தான் எல்லாவற்றையும் சேர்த்துத் தாங்கிப்பிடிக்க முடியும். எதை எதோடு சேர்த்துத் தாங்கிப்பிடித்தால் நமக்கு இலாபம்?

கிறிஸ்து என்ற மண்டலம்

நாம் கிறிஸ்துவுக்கு வெளியே தேவனற்றவர்களாக இருந்தோம். முன்பு கிறிஸ்துவுக்கு வெளியே. இப்போது உள்ளே. கிறிஸ்து என்ற மண்டலம், அவருக்குள் நாம் வந்திருக்கிறோம். இந்த மண்டலம் ரொம்ப முக்கியமா? ரொம்ப முக்கியம். இந்தப் பூமியைச்சுற்றி காற்று மண்டலம் இருக்கிறது. எனவே, உயிர்கள் வாழ முடிகின்றன. இந்தப் பூமிக்கு வெளியே உயிர் வாழ முடியுமா? நிலாவுக்குப்போய் உயிர்வாழ முடியுமா? இந்தக் காற்று மண்டலத்துக்கு வெளியே வாழ முடியுமா? வாழ முடியாது. ஏன் வாழ முடியாது? அங்கு சுவாசிக்க காற்று இல்லை. எனவே, இந்தப் பூமி மண்டலம் என்பது ஆசீர்வாதமானது இல்லையா? உயிர்கள் பிழைக்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு மண்டலத்தை உருவாக்கியிருக்கிறார். இவைகளெல்லாம் தற்செயலாக நடந்ததில்லை. பிராணவாயு என்ற ஒரு மண்டலம் இருக்க வேண்டும். அங்கு தண்ணீர் இருக்க வேண்டும். அங்கு உயிர்கள் பிழைக்கின்றன, தழைக்கும். எவ்வளவு இன்பமான வாழ்க்கை இல்லையா? யோசித்துப் பாருங்கள். கோடி கோடியான இன்பங்களைத் தேவன் மனிதனுக்கு வைத்திருக்கிறார். நல்ல உணவு, நல்ல காற்று. யாரோ ஒருவர் இப்படிச் சொன்னார்: இந்தப் பூமி ஒரு சில அடிகள் சூரியனுக்குப் பக்கத்தில் போயிருந்தால் சூடு தாங்காமல் இங்கு எந்த உயிர்களும் வாழ முடியாது, கருகிவிடும்; ஒரு சில அடிகள் கொஞ்சம் தள்ளிப்போயிருந்தால் குளிரில் உயிர்களெல்லாம் விறைத்துப்போகும். உயிர்கள் பிழைக்குமாறும், தழைக்குமாறும் தேவன் எல்லாவற்றையும் நேர்த்தியான தொலைவில் இந்தப் பூமிக் கோளத்தை வைத்திருக்கிறார். அதுபோல, கிறிஸ்து என்கிற மண்டலத்தில், கிறிஸ்துவுக்கு வெளியே இல்லாத ஆசீர்வாதங்களை கிறிஸ்து என்ற மண்டலத்தில் வைத்திருக்கிறார். அது அவருடைய அன்பின் குமாரனுடைய இராஜ்ஜியம்.

தேவன் நம்மை கிறிஸ்து இல்லாத ஒரு மண்டலத்திலிருந்து கிறிஸ்து என்ற மண்டலத்திற்குக் கொண்டுவந்திருக்கிறார். அது எளிமையான காரியம் இல்லை. அதற்காக அவர் செய்த வேலை என்னவென்று தெரியுமா? அவருடைய மரணம், உயிர்த்தெழுதல்மூலமாகத்தான் நாம் தேவனற்ற மண்டலத்திலிருந்து கிறிஸ்துவின் மண்டலத்திற்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறோம். நமக்கு அது இலவசம். ஆனால், அதற்காக தம் ஒரேபேறான குமாரனை விலைக்கிரயமாகக் கொடுக்கவேண்டியிருந்தது.

கிறிஸ்து முதன்மையான இடத்திற்கு வரவேண்டும்

தேவனுடைய நோக்கம் என்னவென்று கேட்டால் கிறிஸ்து முதன்மையான இடத்திற்கு வரவேண்டும், முந்தினவராக இருக்க வேண்டும். நாம் கிறிஸ்துவின் மண்டலத்திற்கு வந்துவிட்டோம். ஆனால், இப்போது நம் வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளையும் எடுத்துக்கொண்டால் கிறிஸ்து முதன்மையான இடத்தைப் பெற்றுவிட்டாரா? உன்னுடைய எண்ணங்கள், உணர்ச்சிகள், தீர்மானங்கள், படிப்பு, வேலை, சம்பாத்தியம், எதிர்காலத் திட்டம் எல்லாவற்றிலும் கிறிஸ்து அவருக்குரிய முதன்மையான இடத்தைப் பெற்றுவிட்டாரா? “ஒரு காரியம் அவருக்கு இரண்டாவது இடத்தைத்தான் கொடுக்கும் என்றால் நான் அதைச் செய்ய மாட்டேன், அதை யோசிக்க மாட்டேன், விரும்ப மாட்டேன், அதைத்தள்ளிவிடுவேன்,” என்று சொல்லுகிற நிலைமைக்கு நாம் வந்துவிட்டோமா? இல்லை. வரவில்லை. அது உண்மைதான். இது படிப்படியாக நடக்கிற ஒரு வழிமுறை.

ரொம்பக் காலமாக அதை யார்தான் பிடித்துவைத்திருக்கிறது? சாத்தான் என்று சொல்லாதீர்கள்: நாம்தான் பிடித்து வைத்திருக்கிறோம். ஆனால், சாத்தான் என்று சொன்னால் அந்தப் பதிலும் சரிதான். அவன் தந்திரக்காரன். அவன் என்ன செய்வான் என்றால், “உன் வாழ்க்கையில் எனக்கு ஒன்றும் நீ முதல் இடம் தர வேண்டாம். நீயே அந்த முதல் இடத்தை வைத்துக்கொள்,” என்று சொல்லிவிட்டு உண்மையில் நம்மை அப்படி ஆட்டிவைப்பது யார்தான்? சாத்தான். நம்முடையபேரில் அவன் சொத்தை விலைக்கு வாங்கிவிடுவான். ஆனால், உண்மையில் சொத்தை அனுபவிப்பது யார்? அவன்தான். நமக்குப் பெயர் பினாமி. நாம்தான் முதல் இடம் வகித்திருப்போம். ஆனால், முதல் மனிதனுக்குச் சொன்ன ஆலோசனையைப்போல்தான் இருக்கும்: “தேவனுக்கு ஒன்றும் முதல் இடம் கொடுக்க வேண்டாம். நீ முதல் இடத்தை எடுத்துக்கொள்,” என்று சொன்னான். நாம் முதல் இடத்தை எடுத்துக்கொண்டவுடன் அடுத்த கணம் அங்கு யார் இருப்பான்? சாத்தான் இருப்பான். எனவே, “உலகத்துக்குமுன்பாக நீதான் முதல்,” என்று நம்மைக் காட்டுவான். ஆனால், திரைக்குப்பின் முதல் இடத்தை யார்தான் எடுத்திருப்பான்? சாத்தான். தேவனுடைய நித்தியக் குறிக்கோள் என்னவென்று கேட்டால் கிறிஸ்துவானவர் அவருக்குரிய முதன்மை இடத்துக்கு வர வேண்டும். முதலாவது அது தேவனுடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் நடைபெற வேண்டும். இறுதியில் இந்த முழுப் பிரபஞ்சத்திற்கும் கிறிஸ்துவானவர் முதன்மையான இடத்தைப் பெறுவார். அவருக்குள் சகலமும் கூட்டிச் சேர்த்துத் தாங்கிப்பிடித்திருக்கிறது.

நேர்த்தியான உறவு

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோடு நமக்கு உறவு இருக்கிறது. ஆனால், அந்த உறவு இசைவான உறவு என்று நம்மால் சொல்ல முடியாது. பல காரியங்களில் இயேசுகிறிஸ்துவுக்கும் நமக்கும் உள்ள உறவு பிசகின உறவாக இருக்கும். இயேசு கிறிஸ்துவோடு நமக்கு உறவு இருக்கிறது. ஆனால், அது இசைவான உறவு இல்லை, பிசகின உறவு. அவருக்குக் கொடுக்கப்பட வேண்டிய இடம் பல வேளைகளில் அவருக்குக் கொடுக்கப்படுவதில்லை. அது என்ன கொடுக்கவேண்டிய இடம்? நம் எண்ணங்கள், உணர்ச்சிகள், ஆசைகள், விருப்பங்கள், விருப்பு வெறுப்புகள், ஆசாபாசங்கள், திட்டங்கள், தீர்மானங்கள், நோக்கங்கள், திசைகள் இவை எல்லாவற்றிலும் நாம் கிறிஸ்துவுடன் சரியான இடத்திலும், நிலையிலும் இருக்க வேண்டும்.

நல்ல எடுத்துக்காட்டு இதுதான். சூரிய மண்டலத்தில் சூரியன் நடுவில் இருக்கிறது. மற்ற கோள்களெல்லாம் தன்தன் பாதையில் சுற்றிவந்துகொண்டிருக்கின்றன. அவைகள் தங்கள் இடத்திலும், நிலையிலும் இருக்கின்றன. ஆனால், பல சமயங்களில் நாம் சரியான இடத்திலும், நிலையிலும் இருப்பதில்லை. இந்தத் தரிசனம் நமக்கு வேண்டும். ஏனென்றால் நமக்குள் இருக்கிற கிறிஸ்துவின் அளவு குறைவாக இருக்கிறது. எனவே, கிறிஸ்துவோடு நமக்குள்ள உறவில் நாம் சரியான இடத்திலும், சரியான நிலையிலும் இருப்பதில்லை. உறவு இருக்கிறதா என்றால் உறவு இருக்கிறது. ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் உறவு இருக்கலாம். ஆனால், அந்த உறவில் அவர்கள் சரியான இடத்திலும், நிலையிலும் இருக்கிறார்களா என்றால் எப்போதும் இருப்பதில்லை. நம் உறவில் நாம் எப்படி சரியான இடத்திலும், சரியான நிலையிலும் இருப்பது என்று அவர்களுக்கே தெரியவில்லை. பெற்றோர்கள் பிள்ளைகள் உறவு, சகோதர சகோதரிகளுக்கிடையிலான உறவு. எப்போதும் நாம் இந்த உறவில் சரியான இடத்திலும், நிலையிலும் இருப்பதில்லை. அதற்குக் காரணம் என்னவென்றால் நம்மில் இருக்கும் குறைவான கிறிஸ்து. நம்மில் இருக்கும் கிறிஸ்துவின் அளவு பெருகும்போது நாம் சரியான இடத்திலும், நிலையிலும் இருப்போம். அப்போது அங்கு ஆசீர்வாதம் இருக்கும்.

2 ஹைடிரஜன் அணுவும் 1 ஆக்சிஜன் அணுவும் தன்தன் இடத்திலும், நிலையிலும் இருக்கும்போது அது கட்டப்பட்டிருக்கின்றன. அது ஆசீர்வாதம். அதுபோல நாம் கிறிஸ்துவுடனான உறவில் சரியான இடத்திலும், சரியான நிலையிலும் இருக்கும்போது அது ஆசீர்வாதம். தொடர்ந்து நாம் இடத்தையும், நிலையையும் சரிசெய்து கொண்டேயிருக்க வேண்டும். ஒரு பக்கம், தேவன் நம்மை அவரோடு ஒப்புரவாக்கியிருக்கிறார். ஆனால், இன்னொரு பக்கம் அவர் நம்மை அவரோடு தொடர்ந்து ஒப்புரவாக்கிக்கொண்டேயிருக்கிறார். அதன் அர்த்தம் என்னவென்று கேட்டால் எந்த அளவுக்குக் கிறிஸ்துவின் அளவு நமக்குள் பெருகுகிறதோ அந்த அளவுக்கு நாம் நேர்த்தியான நிலையிலும், இடத்திலும் இருப்போம். அந்த அளவுக்கு மட்டுமே நாம் தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெற முடியும். இந்தத் தரிசனம் நமக்கு இருக்க வேண்டும். நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்றால் கிறிஸ்துவின் அளவு நமக்குள் பெருகுகிற வேலையைச் செய்துகொண்டிருக்கிறோம். கிறிஸ்துவின் அளவு தேவனுடைய பிள்ளைகளுக்குள் பெருகுகிற வேலையை நாம் செய்துகொண்டிருக்கிறோம். கிறிஸ்துவின் அளவு பெருகும்போது தேவனுடனான நம் உறவு நேர்த்தியானதாக இருக்கும். அது மட்டும் அல்ல. மற்றவர்களுடன் உள்ள உறவுகூட நேர்த்தியானதாகத்தான் இருக்கும். மற்றொன்றும் சொல்ல முடியும். ஒன்பது கோள்களில் எந்தக் கோளும், “எனக்கு சூரியனுடன் சரியான இடமும், பாதையும், உறவு இருக்கிறது. மற்ற கோள்களுடன் எனக்குச் சரியான உறவு இல்லை, தகராறு இருக்கிறது,” என்று சொல்ல முடியாது. மத்தியில் இருக்கிற சூரியனோடு எனக்குச் சரியான உறவு இருக்கிறதா என்பதைச் சரிபார்ப்பதற்கு என்ன செய்தால் போதும்? முன்னால் இருக்கிற கோளையும், பின்னால் சுற்றிவருகிற கோளையும் சரி பார்த்தால் போதும். தூரத்தில் இருக்கிற சூரியனைச் சரிபார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், பல சமயங்களில் நாம் சூரியனைத்தான் சரி பார்க்க வேண்டும் என்று சொல்வோம். ஏன் என்று கேட்டால் அதை யாராலும் செக்பண்ண முடியாது. அம்மாவுக்கும் பிள்ளைக்கும் எப்படிப்பட்ட உறவு இருக்கிறது என்பதை எளிதாக செக்பண்ணி விடலாம். இயேசு கிறிஸ்துவோடு உள்ள உறவு என்ன? இதை யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் செக்பண்ண முடியாது.

2. திடமான குணம்

நல்ல தலைமைத்துவம் வேண்டுமென்றால், தேவன் அங்கீகரிக்கின்ற, தேவன் வல்லமையாய்ப் பயன்படுத்துகின்ற தலைமைத்துவம் வேண்டுமென்றால்.. ஏன் தலைவன் என்று சொல்லாமல் தலைமைத்துவம் என்று சொல்லுகிறேன். தலைவன் என்றால் ஒருவன். தலைமைத்துவம் என்றால் அது பன்மையில் இருக்கலாம். இந்தப் பன்மைக்குள்ளும் நாம் ஒளிந்துகொள்ளக்கூடாது. அப்படியென்றால் என்ன அர்த்தம்? தலைமைத்துவம் என்று ஒரு மங்கலான எண்ணத்தைச் சொல்லிவிட்டு நான் ஒருவனே தலைவனாக இருக்கக்கூடாது. நான்குபேர் தலைமைத்துவத்தைக் கொடுக்கிறார்கள் என்றால் அதன் தலைமைத்துவத்தின் தரம் எப்படி இருக்கும்? அதனுடைய வீரியம்? அதில் தேவனுடைய ஆசீர்வாதம் இருக்கும். தனிப்பட்ட அங்கங்களின் நிலைமை என்னவோ அதுதான் அந்தக் கூட்டுத் தலைமைத்துவத்தின் நிலைமையும்கூட. பயனுள்ள பாத்திரம்

இரண்டாவது, குணம். நீங்கள் 2 கொரிந்தியர் புத்தகம் முழுவதையும் வாசியுங்கள். ஆ! தீமோத்தேயுவில் மூப்பனைப்பற்றியும், உதவிக்காரரைப்பற்றியும் எழுதியிருக்கிறது. அவர்களுடைய குணம் எப்படி இருக்க வேண்டும்? பல காரியங்களை நான் சொல்ல விரும்பவில்லை. 2 தீமோத்தேயு 3இல் அந்த எஜமான் பயன்படுத்தக்கூடிய பாத்திரம். “ஒருவன் இவைகளைவிட்டுத் தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால் எஜமான் பயன்படுத்தக்கூடிய கனத்துக்குரிய பாத்திரமாக இருப்பான்.” குணம் என்பது அவ்வப்போது நம்மிடத்தில் காணப்படுகிற சில நல்ல காரியங்கள் அல்ல. குணம் என்பது நமக்குள் திடமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. உருவாக்கப்பட்டதுதான் குணம்.

தேநீர் இனிப்பானது அல்ல. அதில் சர்க்கரை போடுவதால் இனிக்கிறது. ஆனால், கரும்பு இயல்பாகவே இனிக்கிறது. அது அதன் நிலையான சுபாவம். கடையில் இருக்கிற எல்லா இனிப்புப் பண்டங்களும் இனிப்பாகத்தான் இருக்கும். அது குணம் என்று சொல்ல முடியாது. அது இனிப்பு சேர்க்கப்பட்டது, இயற்கையானது என்று சொல்ல முடியாது.

பரம தளம்

குணம் என்பது அவனுக்குள் கட்டி அமைக்கப்பட்டது. இந்தக் குணத்தில் நான் ஒன்றேயொன்றை மட்டும்தான் அடிக்கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். அது என்னவென்று கேட்டால் நல்ல தலைமைத்துவம் இயற்கையான தளத்தில் வாழவோ, செயல்படவோ கூடாது. அது பரம தளத்தில், உன்னத தளத்தில்தான் செயல்படும். அது என்ன இயற்கையான தளத்தில் நல்ல தலைமைத்துவம் செயல்படக்கூடாது. இயற்கையாக இருக்க வேண்டாமா? மாறாக உன்னத தளத்தில், பரம தளத்தில் அது செயல்படும்.

இயேசு கிறிஸ்துதான் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. அவருடைய சகோதரர்கள், “திருவிழாவிற்கு, பண்டிகைக்கு, நீர் போகவில்லையா?” என்று கேட்டார்கள். அவர், “நான் போகவில்லை,” என்றார். பிறகு, அவர்கள் போனபின்பு இவரும் அங்கே போனார். இயற்கையான தளத்தின்படி பார்த்தால் இவர் முன்னுக்குப்பின் முரணாகச் செயல்படுவதுபோல் தோன்றுகிறது. “போகமாட்டேன் என்றார். ஆனால், இவர் நமக்குமுன் பண்டிகைக்கு வந்திருக்கிறார்.”

ஓர் இடத்தில் அவரைக் கொலைசெய்யத் தேடுகிறார்கள். எனவே, அவர் வேறொரு இடத்துக்குப் போகிறார். போனபிறகு “நாம் மறுபடியும் அந்த ஊருக்குப் போவோம்,” என்கிறார். தோமாவுக்குக் கொஞ்சம் எரிச்சல் வருவதுபோல் தோன்றுகிறது. “இப்போதுதானே உம்மைக் கொலைசெய்வதற்குத் தேடினார்கள். மறுபடியும் அந்த ஊருக்குப் போகலாம் என்று சொல்லுகிறீரே?” அவர் பதில் சொல்லுகிறார்: “பகலுக்கு 12 மணி நேரம் இல்லையா?” அவர் இயற்கையான தளத்தில் செயல்படவில்லை. “என் பிதா செய்யக் காண்கிறது எதுவோ அதை மட்டுமே நான் செய்கிறேன்,” என்பது மட்டுமே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவன் குணமாக இருந்தது.

இயற்கையான தளத்தில் வெறுமனே மனிதர்களை அல்லது சம்பவங்களைப் பார்த்து அவர் மகிழ்ச்சி அடைந்துவிடவும் இல்லை. அவர் சோர்ந்துபோய் விடவும் இல்லை. யோவான் 2ஆம் அதிகாரம் கடைசி வசனம். மனிதர்கள் உள்ளத்தில் என்ன இருக்கும் என்று அவருக்குத் தெரிந்திருந்தபடியால் மனிதர்களுக்கு அவர் இணங்கவில்லை அல்லது ஒப்புக்கொடுக்கவில்லை. மக்கள் அவரைப் பிடித்துக்கொண்டுபோய் ராஜாவாக்க வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள். “அப்படியா சரி, ராஜாவாகி விடுவோம்,” என்று அவர் எண்ணவில்லை. மனிதர்கள் அவரை மிகவும் மன்றாடினார்கள். “ஆ! தேவனுடைய சித்தம் நிறைவேறிவிட்டது. மக்களெல்லாம் என்னை மேசியா என்று ஏற்றுக்கொண்டார்கள்!” என்று அவர் நினைத்துவிடவில்லை.

அதுபோல மனிதர்கள்மூலமாக, பாவிகள்மூலமாக அவர் துன்பத்தை அனுபவித்ததுபோல் வேறு யாரும் அனுபவிக்கவில்லை. அவருடைய அடைமொழியே “அவர் துக்கம் நிறைந்தவரும் பாடு அனுபவித்தவருமாயிருந்தார்” (ஏசாயா 53). அதன் பொருள் அவர் எப்போதும் அழுதுகொண்டிருந்தார் என்பதல்ல. இந்த உலகத்தில் வாழ்கிற எந்த மனிதனுக்கும் ஏற்படுகிற துக்கத்தைவிட, பாடுகளைவிட, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஏற்பட்ட பாடுகள் அதிகம். அவர் அவைகளை இயற்கையான தளத்தில் பார்க்கவில்லை. அவருடைய பாடுகளின், துக்கங்களின் உச்சகட்டம் எது? சிலுவை அல்லது சிலுவைக்குமுன் கெத்செமனே. “பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கக்கடவது.” நீக்கும்படி ஜெபிக்கின்றார். அவர் இயற்கையான சம்பவங்களையும், நிகழ்ச்சிகளையும், மனிதர்களையும் பார்க்கவில்லை. இயற்கைக்குப் பின்னால் இருந்தவைகளைப் பார்த்தார். இயற்கையாக பணம் இருக்கிறது அல்லது இல்லை. இயற்கையாக சுகம் இருக்கிறது அல்லது இல்லை என்பதைப் பார்க்கவில்லை. இதற்குப்பின்னால் தேவனுடைய கரம். தேவனுடைய பாத்திரம். “இது பிதா கொடுத்த பாத்திரமா அல்லது சாத்தானுடைய தடையா?” என்று பின்னால் இருக்கிறதை அவர் பார்க்கிறார்.

இயற்கையான தளம்

பிரதான ஆசாரியர்களின் ஆட்கள் அவரைப் பிடிக்க வரும்போது பேதுரு தன் வாளை எடுத்து வேலைக்காரன் மல்குசின் காதை வெட்டுகிறான். இயேசு கிறிஸ்து பேதுருவின் உற்சாகத்தைப் பாராட்டியிருக்க வேண்டும். “ஒரு காதையா வெட்டியிருக்கிறாய். இன்னொரு காதையும் வெட்டி விடு,” என்று சொல்லியிருக்கலாம். எனக்கு ஒரு துன்பம் வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது அருகில் இருக்கும் சகோதரன் அமைதியாக இருக்கிறான். அப்போது நான் சொல்லுகிறேன்: “எனக்கு ஒரு துன்பம் வரும்போது நீங்கள் தட்டிக் கேட்கவேயில்லையே! வாளை எடுத்து ஒரு சுழற்று சுழற்றியிருந்தால் எப்படி இருந்திருக்கும்?” பேதுரு வாளை எடுத்ததும் இயற்கையான தளத்தில்தான். அவனுடைய உற்சாகமும் இயற்கையான தளத்தில்தான். வேலைக்காரியின்முன் அவரை மறுதலித்ததும் இயற்கையான தளத்தில்தான். அவனுடைய சோர்வும் இயற்கையான தளத்தில்தான்.

இரண்டு தலைவர்களைப் பார்க்கிறோம். பேதுருவும் ஒரு விதத்தில் தலைவன்தான். மற்ற பதினோருபேரும் பேதுரு என்ன சொன்னாலும் கேட்கத் தயாராக இருந்தார்கள். அவர்களையெல்லாம் இழுத்துக்கொண்டு போகிற வல்லமை பேதுருவுக்கு இருந்தது. பேதுருவும் ஒரு தலைவர்தான். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் தலைவர்தான். ஒரு தலைவர் இயற்கையான தளத்தில் பார்க்கிறார். “ஐயோ! நம் ஆண்டவரைப் பிடித்துக்கொண்டுபோக வந்துவிட்டார்கள். 2 வாள்கள் இருக்கின்றன போதுமா, ஆண்டவரே?” “போதும்” என்றார். எதற்காக ஆண்டவர் அப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை. இவனுக்கு இப்போது வாளைக்குறித்து வியாக்கியானம் எல்லாம் கொடுக்க வேண்டாம். சரி, எடுத்துக்கொள்ளட்டும் என்று விட்டுவிட்டார்போலும்! அவர் பார்ப்பது: “இயற்கையான தளத்தில் என்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். எனக்குச் சாவு வந்துவிடப் போகிறது. எனவே வாளை எடுத்துச் சண்டைபோட வேண்டும்.” ஆண்டவர் சொல்லுகிறார்: “நிறுத்து.” இதைச் செய்ய வேண்டாம் என்பதோடு மட்டும் அல்ல. “உன் வாளை உறையில் போடு.”

அது மட்டும் அல்ல. மல்குசின் காதைத் தொட்டுக் குணமாக்குகிறார். இயேசுகிறிஸ்துவைப் பிடித்துக் கொண்டுபோகிற கூட்டத்திலே மல்குஸ் ஒரு ஆளா இல்லையா? மல்குஸ் ரொம்ப நல்லவனா? “நான் இயேசுகிறிஸ்துவைப் பிடிக்க வரவில்லை. என் எஜமான் காய்பா என்னை அனுப்பிவைத்தார். எனக்கும் இயேசுகிறிஸ்துமேல் ஓர் உயர்ந்த அபிப்பிராயம்தான்,” என்று சொன்னானா? மற்றவர்களெல்லாம் “பிடிங்க, பிடிங்க” என்று சொன்னபோது அவனும் “பிடிங்க, பிடிங்க” என்றுதான் சொல்லியிருப்பான். உடனே இயேசுகிறிஸ்து, “நீ போட்ட கோஷத்திற்கு பலனைப் பார்த்தாயா?” என்று சொன்னாரா? இது இயற்கையான தளம்.

சிபிஎம் பாஸ்டர் ஜெபம் பண்ணினார். அப்போது, அவனை அடிக்க வந்தவன் செத்துப்போனான். அது நடந்தது. ஒருவன் சொல்லுகிறான்: “நீ முழு இரவு ஜெபத்தில் சத்தம் போட்டால் உன்னை வெட்டிப் போடுவேன்.” பாஸ்டர் சொல்லுகிறார். “நீ நாளைக்கு உயிரோடு இருந்தால்தானே!” இதை கெத்செமனேயில் என் ஆண்டவருடைய ஆவியாக என்னால் பார்க்க முடியவில்லை. என் ஆண்டவருடைய ஆவி என்னவென்று கேட்டால் சீடர்கள் சொல்லுகிறார்கள்: “சொல்லும் ஆண்டவரே, வானத்திலிருந்து அக்கினியை இறக்கி விடுவோம். இந்தக் கிராமத்தார் நம்மை ஏற்றுக்கொள்ளவில்லை.” அவருடைய பதில் என்ன? “நீங்கள் இன்ன ஆவியை உடையவர்களென்று உங்களுக்குத் தெரியாதா?” நம்மை ஏற்றுக்கொள்ளவில்லையா? இன்னொன்றும் சொல்லுகிறார். என்னைச் சுற்றி 72000 வாள் உருவின தேவதூதர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். 72000 வாள் உருவின தேவதூதர்கள். உன்னைச்சுற்றி இப்படி தூதர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். உன்னைப்பிடிக்க 100 பேர் வந்திருக்கிறார்கள். இப்போது உன்னைக் காத்துக்கொள்ள நீ வாளை உருவுவாயா? 72000 தூதர்களைப் பார்க்கிற மனிதன் தன் வாளையோ அல்லது சாதாரண மாம்ச மனிதனின் வாளையோ நம்புவானா? “பேதுரு, விடாதே விடாதே வாளை உருவு,” என்று என்னை வாளை உருவச் சொல்லுவாரா? “இதோ, இதுதான் உன் உதவி தேவைப்படும் நேரம்” என்று சொல்வாரா? பேதுருவைப் பார்க்கும்போது ஒரு முட்டாளைப் பார்ப்பதுபோல் பார்ப்பார். பேதுரு நீ என்ன செய்ய முயற்சிக்கிறாய்?” அவர்கள் இயற்கையான தளத்தில் செயல்பட்டார்கள். ஆனால், அவர் இயற்கையான தளத்தில் செயல்படவில்லை. “இந்த 100 பேர் எனக்கு என்ன செய்து விடப் போகிறார்கள்? அவர்கள் என்னைக் கொலைசெய்து விடுவார்களா? என் பிதா தந்த பாத்திரத்தில் நான் பானம் பண்ணாதிருப்பேனோ?” இது பிதா தந்த பாத்திரம் என்றால் 100 உருவின வாள்கள் நமக்கு உதவ முடியாது. பிதாவின் வழி மரணத்தினூடாய்ச் சென்று உயிர்த்தெழுதலில் வருவதுதான் என்றால் பேதுரு எப்போதும் அந்த வழியை short circuit பண்ண முயன்றார். முன்பே அவர் சொல்லுகிறார். “ஏன் நீர் இவ்வாறு சிலுவையைப்பற்றியெல்லாம் பேசுகிறீர்? நீர்தான் ராஜாவாக வருவீர் என்று பெரிய திட்டமே வைத்திருக்கிறோம்.” கடைசிவரை சிலுவை வழி பேதுருவுக்கு ஒரு promising வழியாகத் தோன்றவில்லை. அதற்கு முந்தியே தம் உயிரைப் பாதுகாப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்தார்.

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பேதுருமூலமாக சாத்தான் வேலைசெய்வதையும் பார்த்தார். அது மல்குசாக இருந்தாலும் சரி. அவர் தம்மைப் பிடிக்கவந்த ரோமப் போர்ச்சேவகர்களைக் குறித்தெல்லாம் மிக மனம் நொந்திருப்பாரோ? நான் நினைக்கிறேன். தன்னை சிலுவையில் அறைய கடைசியாகத் தீர்ப்பு வழங்கிய பிலாத்துவின்மேல் இயேசுகிறிஸ்து மனம் நொந்திருப்பார் என்று நினைக்கிறீர்களா? “என்னை உம்மிடம் கையளித்தவனுக்கு அதிகத் தீர்ப்பு உண்டு,” என்றார். அவர் பிலாத்துவையும் பார்க்கவில்லை. காய்பாவையும் பார்க்கவில்லை. அவருடைய மாமனார் அன்னாவையும் பார்க்கவில்லை. வாளோடு வந்து நிற்கிற ரோமப் போர்வீரர்களையும் பார்க்கவில்லை. அவர்களுக்கு ஆதரவாக நிற்கிற தேவாலயத்து காவலர்களையும் பார்க்கவில்லை. மல்குசையும் பார்க்கவில்லை.

அவர் ஒன்றேவொன்றைத்தான் பார்த்தார். எதைப் பார்த்தார்? “இது பிதா தந்த பாத்திரம்.” இப்போது பரம தளம் அல்லது பரம மண்டலம் என்றால் என்னவென்று புரிகிறதா? உன்னத தளம் என்றால் என்ன? “அவர் தனக்குமுன்பாக வைத்திருக்கிற சந்தோஷத்தின்பொருட்டு அவமானத்தை ஒரு பொருட்டாக எண்ணாமல்..” இதைக் கொஞ்சம் தாண்டினால் போதும் 3 நாட்கள். அந்தப் பக்கம் என்ன இருக்கிறது? உயிர்த்தெழுதல். அது இந்த இயற்கையான தளத்தில் வாழ்கிறவர்கள் அறியாத ஒன்று. உன்னத தளத்தில் வாழ்கிறவர்கள் மட்டுமே அறிந்த ஒன்று உயிர்த்தெழுதல். கெத்செமனே தோட்டத்தில் அவன் கோஷம் போட்டான் அல்லவா? ஒழிக ஒழிக! அந்தச் சிறிய மனிதர்களுக்கு அந்தப் பரம தளத்தின் வளங்கள் தெரியாது. இயற்கையான தளத்தில் வாழ்ந்தால் என்ன சொல்வோம்: “மல்குஸ் வாளைக் கொண்டு வந்தான். அன்னா என்னை விட்டுவிட்டான். காய்பா கையளித்தான். ரோமப் போர்வீரர்கள் என்னைப் பிடித்தார்கள். எனக்கு யாரும் உதவி செய்யவில்லையே. 11 பேர் ஓடிவிட்டார்களே. நீயும் ஓடப் போகிறாயே!” யூதாசை நண்பன் என்றார். மற்ற 11 பேரையும் பார்த்து “எனக்கு நேரிட்ட சோதனையில் என்னோடுகூட நின்றவர்கள் நீங்களே,” என்றார்.

எதிர்மறையாகவே அவர் பார்க்கவில்லை. இயேசுகிறிஸ்து எதிர்மறையாகப் பார்க்க வேண்டும் என்றால் அந்த இடத்தில் அவர் எப்படிக் பார்த்திருக்கலாம்? “யூதாஸ் என்னைக் காட்டிக் கொடுத்தான். என் நெருங்கிய நண்பர்கள் பலவீனர்களாகப் போனார்கள். பிலாத்து முதுகெலும்பு இல்லாதவன். மல்குஸ் கூட்டத்தோடு கோஷம் போட வந்தான். அன்னா! அவன் ஒரு அரசியல்வாதி. காய்பா! பிரதான ஆசாரியனுடைய நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு ஒரு பாவியைப்போல் செயல்படுகிறான்.” அவர் எதையும் பார்க்கவில்லை. இவர்கள் பார்க்கமுடியாத ஒன்றை அவர் பார்த்தார். “ஓ! என் பிதா தந்த பாத்திரம்.” அந்தப் பாத்திரத்தில் இது மட்டும் இல்லை. அந்தப் பாத்திரத்தைத் தொடர்ந்து தாவீது பார்த்த அந்தப் பாத்திரமும் வருகிறது. “என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.” பிதா எப்போதும் கசப்பான பாத்திரத்தைத் தருகிறார் என்றல்ல. காடி நிறைந்த பாத்திரத்தை மட்டும் தருவதில்லை. நம் பாத்திரம் நிரம்பி வழியும். வாட்ச்மேன் நீயின் ஒரு செய்தியை நீங்கள் வாசிக்க வேண்டும். Mind mingled with God. இதுவரை வாசிக்கவில்லையென்றால் இன்றைக்கு வாசியுங்கள். அவர் சிலுவையில் தொங்கும்போது கசப்பான காடியையும் திராட்சரசத்தையும் கலந்து அதை ஸ்பாஞ்சில் தோய்த்து அவருக்குக் கொடுத்தார்கள். அவர் அதை இலேசாக ருசி பார்த்துவிட்டு வாங்க மறுத்துவிட்டார். காடியும் திராட்சரசமும் ஏன் கலந்துகொடுக்கிறார்கள் என்றால் அது வலி நிவாரணி. இயேசு கிறிஸ்து அப்படிப்பட்ட வலி நிவாரணியை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் தேவ கோபாக்கினையின் மண்டியைக்கூடக் குடித்தார். இதைத்தான் தேவன் எனக்குத் தந்திருக்கிறார்.

3. பரிசுத்த ஆவி

பவுல் சொல்லுகிறார்: “நாங்கள் மாம்சத்தில் வாழ்ந்தாலும் மாம்சத்தின்படி போர்புரிவதில்லை. எங்கள் போராயுதங்கள் இந்த மாம்சத்துக்குரியவைகள் இல்லை.” வெறுமனே இயற்கையான இந்தத் தளத்திலேயே நாம் வாழ்ந்தால் நாம் தேவனுடைய வேலைக்காரர்களாக இருப்பதற்குத் தகுதியடையவர்கள் அல்ல. முதலாவது, தரிசனம் வேண்டும். இரண்டாவது, குணம் உருவாக்கப்பட வேண்டும். மூன்றாவது பரிசுத்த ஆவியில் நிறைந்திருக்க வேண்டும்.

ஸ்தேவானைப்பற்றி எழுதியிருக்கிறது. “அவன் பரிசுத்த ஆவியினாலும், ஞானத்தினாலும், வல்லமையினாலும் நிறைந்தவனாய் இருந்தான்,” என்று எழுதப்பட்டிருக்கிறது. எபேசியர் 5இல் இப்படி ஒரு வசனம் உண்டு: மதுபான வெறிகொள்ளாமல் நீங்கள் ஆவியில் நிறைந்திருங்கள். Be filled with the Spirit என்பது சரியான மொழிபெயர்ப்பு. ஆவியினால் நிறைந்துகொண்டேயிருங்கள், நிரம்பிக்கொண்டேயிருங்கள். நல்ல தலைமைத்துவம் அல்லது தேவனுடைய வேலைக்காரன் பரிசுத்த ஆவியில் நிரம்பியிருக்க வேண்டும்.

திருவெளிப்பாட்டில் ‘ஆவிக்குள்ளானேன்’

திருவெளிப்பாட்டில் நான்கு இடங்களில் “நான் ஆவிக்குள்ளானேன்” என்று இருக்கிறது. முதலாவது “கர்த்தருடைய நாளில் நான் ஆவிக்குள்ளானேன்” என்று சொன்னபோது அவன் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் சத்தத்தைக் கேட்டான். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைக் கண்டான். நாம் உண்மையில் பரிசுத்த ஆவியில் இருக்கும்போது வெறுமனே பத்மு தீவையும், நம்மை நாடு கடத்தினவனையும் பார்க்கமாட்டோம். எப்படி என் வாழ்க்கை தோல்வியில் முடிவடைகிறது என்பதைப் பார்க்கமாட்டோம். யாரைப் பார்ப்போம்? இயேசு கிறிஸ்துவைப் பார்ப்போம்.

இரண்டாவது “நான் ஆவிக்குள்ளானேன். அப்போது வானங்கள் திறக்கப்பட்டிருப்பதையும் சிங்காசனங்கள் வைக்கப்பட்டிருப்பதையும் பார்த்தேன்.” பரிசுத்த ஆவியில் இருக்கும்போது நாம் எதைப் பார்ப்போம்? சிங்காசனத்தைப் பார்ப்போம். அது என்ன சிங்காசனம்? இந்தப் பிரபஞ்சத்தை ஆளுகை செய்வது இந்த உலக ராஜாக்களோ அல்லது காரியங்களோ இல்லை. இந்தப் பிரபஞ்சத்தை ஆளுகைசெய்வது யார்? இயேசுகிறிஸ்து. பரம சிங்காசனம்.

மூன்றாவது, “நான் ஆவிக்குள்ளானேன். நான் மகா பாபிலோனைப் பார்த்தேன்.” உண்மையில் நாம் பரிசுத்த ஆவியில் இருக்கும்போதுதான் தேவனுக்கு விரோதமான உண்மை சொரூபத்தைப் பார்க்க முடியும்.

கடைசியில், “அவர் என்னை ஆவியிலே கொண்டுபோய்… உயரே தேவனிடத்திலிருந்து இறங்கி வருகிறதுமான புதிய எருசலேமைக் கண்டான்.” நாம் பரிசுத்த ஆவியில் இருந்தால் தேவன் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று பார்ப்போம். அதன்படி நாமும் செய்வோம்.

ஆவியில் நிரம்ப வழி

பரிசுத்த ஆவியில் நிரம்பியிருப்பதற்கு நான் ஒரு வழியைச் சொல்லுகிறேன். உத்தமமான ஜெபம். எபேசியர் 6ஆம் அதிகாரத்தில் இப்படி இருக்கிறது. எந்தச் சமயத்திலும் எல்லாப் பரிசுத்தவான்களுக்காகவும் ஆவியில் ஜெபம் பண்ணி விழித்துக்கொண்டிருங்கள். பரிசுத்த ஆவியில் நாம் நிரம்பியிருக்கும்போது நாம் விழித்திருப்போம். வகுப்பறையில் இருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். இப்போது பரிசுத்த ஆவியில் எப்படி விழித்திருப்பது? நம் ஜெபத்தில் நாம் உண்மையுள்ளவர்களாக இருந்தால், தேவன் நமக்கு அளந்த அளவின்படி நான் உண்மையுள்ளவர்களாக இருந்தால், பரிசுத்த ஆவியானவர் நம்மை alert பண்ணுவார். எப்படி? ஒரு காரியத்திற்காக ஜெபிக்க வேண்டும் என்று நான் புத்தகத்தில் எழுதி வைத்திருக்கிறேன். நாம் ஒரு வேலை செய்துகொண்டிருப்போம். திடீ ரென்று அந்தக் காரியத்தைப்பற்றிய ஓர் எண்ணத்தைத் தேவன் கொடுப்பார். இது உங்கள் அனுபவமா? உடனே நாம் என்ன பண்ணுவோம்? அந்தக் காரியத்திற்காக ஜெபம் பண்ணுவோம். இந்த எண்ணத்தைக் கொடுப்பது யார்? அதையும் தாண்டிப்போய் ஒரு குறிப்பிட்ட காரியத்துக்காக ஜெபம் பண்ணச் சொல்லுவார். இதை தேவன் உணர்த்துகிறாரா? அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அந்த நேரத்தில் அந்த எண்ணம் ரொம்ப பலமாக வந்து நிற்கும். நம் ஜெபத்தில் நாம் உண்மையுள்ளவர்களாக இருந்தால் பரிசுத்த ஆவியானவர் நம்மை நிரப்புவார்.

நான் மூன்று காரியங்களைச் சொன்னேன். தேவன் அங்கீகரிக்கின்ற தலைமைத்துவம் அல்லது நாம் தேவனுடைய வேலைக்காரர்களாக இருக்க வேண்டும் என்றால், முதலாவது, தரிசனம் வேண்டும். தேவனுடைய குறிக்கோள் என்ன? இரண்டாவது, குணம். குணத்தின் முக்கியமான அம்சம் என்ன? இயற்கையான தளத்தில் செயல்படாமல் பரம தளத்தில், உன்னத தளத்தில் வாழ்வது. மூன்றாவது, பரிசுத்த ஆவியில் நிரம்பியிருக்க வேண்டும். தேவனுடைய வேலைக்காரராக நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்குத் தலைமைத்துவம் கொடுக்கவேண்டும் என்றால், எதிர்காலத்தில் இரண்டு பேருக்குப் பயனுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் நீங்கள் இன்றைக்கு அவர்களுக்குத் தலைமைத்துவம் கொடுக்க வேண்டும். வாலிபர்களே, கூடப்படிக்கின்றவர்களை எண்ணிப்பாருங்கள். அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. “சினிமாவுக்குப் போகலாம், சுற்றலாம், ஜாலியாக இருக்கலாம்,” என்கிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையை வீணாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தலைமைத்துவம் கொடுக்க வேண்டும் என்றால் நமக்கு ஒரு எண்ணம் வரும். இது என்ன எண்ணம்? தலைமைத்துவத்தின் எண்ணம். நல்ல தலைமைத்துவம் கொடுக்க வேண்டும் என்றால் நாம் ஜெபிக்க வேண்டும். “ஆண்டவரே, நீர் அங்கீகரிக்கின்ற, நீர் நம்பி உம் காரியங்களை ஒப்படைக்கின்ற உம்முடைய வேலைக்காரனாக, உக்கிராணக்காரனாக, தலைவனாக இருக்க நான் விரும்புகிறேன். எனக்குக் கிருபை தாரும்.” அவர் செய்வாரா, செய்யமாட்டாரா? நிச்சயமாகச் செய்வார். இதற்காக நாம் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும். அப்போது அவர் நம் குடும்பங்களை ஆசீர்வதிப்பார். சபையை ஆசீர்வதிப்பார்.