Transcribed from a message spoken in December 13, 2015 in Chennai
By Milton Rajendram
நீங்கள் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்று ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சொன்னார். தேவனுடைய மக்களாகிய நாம், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிற நாம், இந்த உலகத்திலே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்குச் சாட்சிகளாக வாழுமாறு அழைக்கப்பட்டிருக்கிறோம். அப்போஸ்தலர்கள் எப்போதெல்லாம் நற்செய்தி அறிவித்தார்களோ அப்போதெல்லாம், “நாங்கள் அவருடைய உயிர்த்தெழுதலுக்குச் சாட்சிகளாயிருக்கிறோம்,” என்று சொல்கிறார்கள். “தேவன் யார்? தேவனுடைய குணம் என்ன? தேவனுடைய வல்லமை என்ன? தேவனுடைய வழிகள் என்ன?” என்பதை இந்த உலகத்து மக்கள் பார்க்க வேண்டுமென்றால் அவர்கள் தேவனுடைய மக்கள்மூலமாகத்தான் பார்க்க முடியும். தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக தேவனுடைய மக்களாகிய நாம் இந்த உலகத்திலே வாழ்கிறோம்.
புதிய ஏற்பாட்டிலே, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிற நாம் மட்டுமல்ல; பழைய ஏற்பாட்டிலே, இஸ்ரயேல் மக்களைக்கூடத் தேவன் அந்த நோக்கத்திற்காகத்தான் அழைத்தார். அவர்கள் தேவனுக்குச் சாட்சிகளாக இருக்க வேண்டும்; அவர்களைச் சுற்றியிருக்கிற நாடுகளுக்கு தேவனுடைய மக்கள் சாட்சிகளாய் இருக்க வேண்டும்.
இதை நாம் நம் மனதிலே நன்றாகப் பதித்திக்கொள்ள வேண்டும். இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கின்ற, தேவனுடைய பரிசுத்தவான்களுடைய வாழ்க்கையின் நோக்கம் என்னவென்றால் நாம் வாழ்கிற சுற்றுச்சசூழலிலே–அது நம்முடைய குடும்பமாக இருக்கலாம், நம்முடைய நண்பர்களாக இருக்கலாம் அல்லது நம்மோடு உடன்வேலைபார்ப்பவர்களாக இருக்கலாம், உலகமாக இருக்கலாம்–நம்முடைய வாழ்க்கையின் மூலமாக, நம்மூலமாக ஒரு சிறிதளவிற்காவது அவர்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைக் காண வேண்டும். இதுதான் முழு வேதாகமத்தின், குறிப்பாக புதிய ஏற்பாட்டின், சாராம்சம். தேவனுடைய மக்கள்மூலமாக தேவன் ஓரளவிற்காவது வெளிப்பட வேண்டும். அதை இந்த உலகம் காண வேண்டும். இந்த உலகம் தேவனுடைய மக்கள்மூலமாகக் கிறிஸ்துவை காணவில்லையென்றால் தேவனுடைய மக்கள் இந்த உலகத்தில் வாழ்கின்ற வாழ்க்கைக்குப் பொருள் இல்லை; அவர்களுடைய இருப்புக்கு எந்த நியாயமும் இல்லை.
சங்கீதத்திலே தாவீது இப்படியொரு வாக்கியத்தைச் சொல்கிறார். “நான் குழியில் இறங்குகையில் என் இரத்தத்தால் என்ன இலாபம் உண்டு? புழுதி உம்மைத் துதித்து, உமது சத்தியத்தை அறிவிக்குமோ?” (சங். 30:9). “மரணத்தில் உம்மை நினைவுகூர்வதில்லை; பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்” (சங். 6:5). “நான் சாவாமல் பிழைத்திருந்து உம்முடைய புண்ணியங்களை, கிரியைகளை, அறிவிப்பேன்” (சங். 118:17). அதன் அர்த்தம் என்னவென்றால் தேவனுடைய மக்கள் இந்தப் பூமியிலே வாழ்வதற்குக் காரணம், அவர்களுடைய இருப்புக்கு நியாயம், அவர்கள் கர்த்தருக்குப் பிரதிநிதிகளாகவும், சாட்சிகளாகவும் இருப்பார்கள்.
ஆகவே, இதைப்பற்றிய ஒரு தெளிவை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். நாம் விசுவாசிக்கிற நற்செய்தி என்ன? நாம் வாழ்கிற நற்செய்தி என்ன? நாம் அறிவிக்கிற நற்செய்தி என்ன? இவைகளைப்பற்றியெல்லாம் மீண்டும் மீண்டும் சிந்தித்து நாம் ஒரு தெளிவைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
1.** நாம் ஒரு நற்செய்தியை விசுவாசித்திருக்கிறோம். **இந்த உலகத்து மக்களுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு? அவர்களுக்கு நற்செய்தி என்று ஒன்று இல்லை. ஆனால் தேவனுடைய மக்களாகிய நமக்கு நற்செய்தி, மகிழ்ச்சியான செய்தி, மங்களமான செய்தி என்று ஒன்று உண்டு. அல்லேலூயா! நாம் மனமார சிரிக்கலாம். ஏனென்றால் நமக்கு ஒரு நற்செய்தி உண்டு. இந்த முழு உலகத்திலும் எவ்வளவோ நற்செய்திகள் இருக்கலாம். ஆனால் இந்த நற்செய்திக்கு ஈடானது வேறொன்றில்லை.
இந்த நற்செய்தியால் நாம் வாழ முடியும். இந்த நற்செய்தி வெறுமனே செய்தித்தாளிலே வருகின்ற செய்தி போன்றதல்ல. இந்த நற்செய்தியால் நாம் வாழ முடியும். மனித வாழ்வின் எல்லாத் தேவைகள், குறைச்சல்கள், நெருக்கங்கள், சிக்கல்கள், குழப்பங்கள் ஆகியவைகளின் நடுவிலே இந்த நற்செய்தியால் தேவனுடைய மக்கள் ஒரு வெற்றிகரமான வாழ்க்கை வாழ முடியும். ஆமென்!
மூன்றாவது நாம் விசுவாசிக்கிற, நாம் வாழ்கிற அந்த நற்செய்தியைத்தான் நாம் மற்றவர்களுக்கு அறிவிக்கிறோம். நான் விசுவாசிக்காத ஒரு நற்செய்தியை நான் மற்றவர்களுக்கு அறிவிக்க முடியாது. முடியுமா? தண்ணீரில் நீந்தமுடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லையென்றால் யாரையாவது “தண்ணீரில் குதி” என்று நான் சொல்வேனா? சொல்லமாட்டேன். தண்ணீரில் நீந்தமுடியும் என்பது மட்டுமல்ல; நான் நீந்தியிருக்கிறேன் என்ற அனுபவ அறிவு, உற்றறிவு இல்லையென்றால் நான் இன்னொருவனை “நீ தண்ணீரில் குதித்தால் நீயும் நீந்தலாம்” என்று சொல்ல முடியுமா? செத்துப்போவான். அவனுடைய வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்துவிடும்.
இந்த முழு புதிய ஏற்பாடும் நாம் விசுவாசிப்பதற்கு, நாம் வாழ்வதற்கு, நாம் மற்றவர்களுக்கு அறிவிப்பதற்கு என்று இப்படிப்பட்ட ஒரு நற்செய்தியை நமக்கு அறிவிக்கிறது.
புதிய ஏற்பாடு ஒரு சட்டப்புத்தகம் அல்ல. பழைய ஏற்பாட்டிலே பத்துக் கட்டளைகளும், அதை மையமாய்க்கொண்டு வேறுசில கட்டளைகளும் உண்டு. அது ஒரு சட்டப்புத்தகம். அதுபோல, புதிய ஏற்பாடு இன்னொரு திருத்தி எழுதப்பட்ட சட்டப்புத்தகம் என்று தேவனுடைய மக்கள் சிலர் நினைக்கின்றார்கள். அது தவறு. புதிய ஏற்பாடு ஒரு சட்டப்புத்தகம் அல்ல. பழைய ஏற்பாடு வேண்டுமானால் சட்டப்புத்தகம் என்று சொல்லலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரை சட்டப்புத்தகத்திற்கு அப்பால் காரியங்கள் உள்ளன. புதிய ஏற்பாடு நிச்சயமாக ஒரு சட்டப்புத்தகம் அல்ல.
நான் இன்று, இப்போது பகிர்ந்துகொள்கிற சில காரியங்களை உங்கள் வாழ்க்கைக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதற்காகதான் பகிர்ந்துகொள்கிறோம். அது மட்டுமல்ல. நீங்கள் மற்றவர்களுக்கு அறிவிப்பதற்கும் அது பயனுள்ளதாக இருக்கும். இந்த இரண்டு குறிப்புகளோடு நான் பகிர்ந்துகொள்கிறேன்.
பொதுவாக நாம் விசுவாசிக்கிற நற்செய்தி என்னவென்று நமக்குத் தெரிய வேண்டும். நான் மற்றவர்களுக்கு நற்செய்தியை எப்படி அறிவிப்பது? என்ன நற்செய்தியை நான் மற்றவர்களுக்கு வழங்குகிறேன் என்பதைப்பற்றியும் நமக்குத் தெளிவு வேண்டும். நற்செய்தியை பல கோணங்களிலே நாம் வழங்கலாம். ஆனால், சுருக்கமாக நற்செய்தி என்றால் என்னவென்று நமக்குச் சொல்லத் தெரிய வேண்டும். நற்செய்தி புதிய ஏற்பாட்டில் மட்டுமல்ல, தேவன் மனிதனைப் படைத்தது முதற்கொண்டு அந்த நற்செய்தியை நாம் பார்க்க முடியும்.
கலாத்தியர் 1ஆம் அதிகாரத்திலே அப்போஸ்தலனாகிய, “நான் புறவினத்தாரிடத்தில் அறிவிக்கிற நற்செய்தியை எருசலேமிருக்கிற அப்போஸ்தலர்களுக்கு விவரித்துக் காண்பித்தேன்,” என்று சொல்லுகிறார். உண்மையிலேயே அவர், “நற்செய்தியை விவரித்துக் காண்பித்தேன்,” என்று சொல்லும்போது இந்த முழு வேதாகமத்திலும் தேவனுடைய குறிக்கோள் என்ன? தேவனுடைய நோக்கம் என்ன? தேவனுடைய திட்டம் என்ன? என்பதைத்தான் அவர் விவரித்துக் காண்பிக்கிறார். தேவனுடைய நித்திய நோக்கம், நித்தியத் திட்டம். இதற்குப் புதிய ஏற்பாட்டில் பயன்படுத்தப்படுகிற வார்த்தை நற்செய்தி. தேவ னுடைய மக்கள் சிலர், “நற்செய்தி என்றால் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கும்போது நாம் பாவமன்னிப்பைப் பெற்றுவிடுகிறோம். அதுதானே நற்செய்தி. அதற்குப்பிறகு நாம் கேள்விப்படுவதெல்லாம் ஆழமான செய்தி,” என்று தவறாக நினைப்பதுண்டு. இது தவறு. முழு வேதாகமும், முழு புதிய ஏற்பாடும் நற்செய்தி. நாம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினால் பெறுகிற பாவ மன்னிப்பு நற்செய்தியின் ஒரு பகுதி; மிக அருமையான ஒரு பகுதி.
நாம் விசுவாசிக்கிற நற்செய்தி என்ன? என்ன நற்செய்தியை நாம் வாழ்கிறோம்? நாம் அறிவிக்கிற நற்செய்தி என்ன? இவைகளையெல்லாம் கேள்விப்படுவதினால் உடனே நாம் இவைகளைப் பெற்றுக்கொண்டோம் என்று நினைத்துவிடக் கூடாது. நாம் எதைக் கேள்விப்படுகிறோமோ அதை நாம் சிந்தித்துப் பாரர்க்க வேண்டும்; படித்துப்பார்க்க வேண்டும். அதை நம்முடைய வாழ்க்கையிலே நாம் பிரயோகிக்க முயற்சிசெய்ய வேண்டும். அப்பொழுதுதான் அது நம்முடையதாகும். நீங்கள் நன்றாய்ப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு செய்தியைக் கேட்டவுடன் தேவனுடைய மக்களுக்கு ஒரு இன்பமும், ஒரு திருப்தியும் வருவது உண்டு. அந்த செய்தியை வைத்து அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது பெரிய கேள்விக்குறி. அந்த நிலைமையிலே தேவனுடைய மக்கள் வாழ்வார்களென்றால் அவா;களுடைய வாழ்க்கை மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று சொல்ல முடியாது.
என்னுடைய வாழ்க்கையிலே சில சிக்கல்கள் உள்ளன; தேவைகள் உள்ளன; பிரச்சினைகள் உள்ளன; குறைச்சல்கள் உள்ளன. இவைகளுக்கு ஒரு தீர்வு வேண்டும் என்பதற்காக நான் இயேசுகிறிஸ்துவிடம் வருகிறேன். இந்தத் தளத்திலேயே தேவனுடைய மக்கள் வாழ்வார்களென்றால் அவர்கள் ஆசீர்வாதத்தைப் பெற முடியும். ஆனால், ஆசீர்வாதமாக இருக்க முடியாது. ஆதியாகமம் 12ஆம் அதிகாரத்திலே ஆபிரகாமை தேவன் அழைத்தபோது “நான் உன்னை ஆசீர்வதிப்பேன்” என்பது முதல் பகுதிதான். “நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்” அல்லது “உன்னை ஆசீர்வாதமாக மாற்றுவேன்” என்பதுதான் இரண்டாவது பகுதி. “நீ பிறருக்கு ஆசீர்வாதமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆசீர்வதிக்கிறேன்”. ஆனால் விழுந்துபோன மனிதனுடைய சுயநலம் தேவனுடைய காரியங்களில்கூட நுழைந்துவிடும். “நீர் என்னை ஆசீர்வதியும்,” என்று கேட்போம். நாம் பிறருக்கு ஆசீர்வாதமாக இருப்பதைப் பிறகு பார்க்கலாம் என்று விட்டுவிடுவோம். ஆகவே, வெறுமனே கேள்விப்படுவதோடு நாம் நின்றுவிட்டால் நம் வாழ்க்கையில் ஆசீர்வாதம் இருக்கும். ஆனால், நாம் பிறருக்கு ஆசீர்வாதமாக இருக்கிறோமா என்பது பெரிய கேள்விக்குறி. பிறருக்கு ஆசீர்வாதமாக இருக்க மாட்டோம் என்று என்னால் ஏறக்குறைய சொல்ல முடியும் தேவனுடைய மக்கள் தொன்றுதொட்டு செய்து வருகின்ற தவறு அது. தங்களுக்கு நன்மைகள் வேண்டும். ஆனால், தங்கள்மூலமாய், தங்களைச்சுற்றி வாழ்கின்ற குடும்பங்களுக்கும், சமுதாயத்துக்கும், நாடுகளுக்கும் தேவனுடைய நன்மைகளும், ஆசீர்வாதங்களும் போகின்றதா என்கிற அக்கறையில்லாமல் தேவனுடைய மக்கள் வாழ்கிறார்கள், இருக்கிறார்கள்.
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியைப்பற்றி மூன்று மிக முக்கியமான காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன். “நாம் விசுவாசிக்கின்ற, நாம் வாழ்கின்ற, நாம் அறிவிக்கின்ற நற்செய்தி என்ன?” என்று நீங்கள் யாரோடாவது பகிர்ந்துகொள்ள விரும்பினாலும் சரி அல்லது “நான் உண்மையிலேயே எந்த நற்செய்தியினால் வாழ்கிறேன்,” என்று நீங்கள் உங்களை யோசித்துப் பார்க்க விரும்பினாலும் சரி.
முதலாவது, மனிதர்கள் படைக்கப்பட்ட உயிரால் வாழாமல் படைக்கப்படாத ஜீவனால் வாழ வேண்டும். படைக்கப்பட்ட உயிரல்ல. படைக்கப்படாத ஒரு ஜீவனை அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது தேவனுடைய நற்செய்தியின் மிக முக்கியமான ஒரு பங்கு. மனிதர்கள் படைக்கப்பட்ட உயிரை அல்ல படைக்கப்படாத ஒரு ஜீவனைப் பெற வேண்டும், பங்குற வேண்டும், பங்குபெற வேண்டும் என்பது தேவனுடைய நற்செய்தி.
இரண்டாவது, மனிதர்கள் படைக்கப்பட்ட வளங்களால் அல்ல, படைக்கப்படாத வளங்களால் வாழ வேண்டும் என்பது தேவனுடைய நற்செய்தி. இதைக்குறித்து தேவனுடைய மக்கள் எல்லாருக்கும் ஓரளவுக்குக் கொஞ்சம் அறிவும், அனுபவமும் வாழ்க்கையிலே உண்டு. படைக்கப்பட்ட வளங்களால் அல்ல, படைக்கப்படாத வளங்களால் மனிதர்கள் வாழ வேண்டும் என்பது தேவனுடைய நற்செய்தி.
மூன்றாவது, படைக்கப்பட்ட பொருட்களையோ, பிரபஞ்சத்தையோ, உலகத்தையோ அல்ல, படைத்தவரை நாம் அறிந்துகொள்ள வேண்டும் என்பது தேவனுடைய நற்செய்தி.
நான் மூன்று காரியங்களைச் சொன்னேன். முதலாவது, படைக்கப்பட்ட உயிரை அல்ல, படைக்கப்படாத ஒரு ஜீவனை மனிதர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். இரண்டாவது, மனிதர்கள் படைக்கப்பட்ட வளங்களால் அல்ல, படைக்கப்படாத வளங்களால் வாழ வேண்டும். மூன்றாவது, படைக்கப்பட்ட இந்தப் பிரபஞ்சத்தை அல்ல, படைத்த தேவனையே அறிந்துகொள்ள வேண்டும்.
இந்த மூன்றும் தேவனுடைய நற்செய்தியில் அடங்கியுள்ளன. இதை தேவனுடைய வார்த்தையிலிருந்தும், வாழ்க்கையிலிருந்தும் எடுத்துக்காட்ட வேண்டும் அல்லது நிரூபிக்க வேண்டும். “இயேசுவை நம்பு. உனக்குண்டு தெம்பு. இல்லையென்றால் வம்பு” என்றும் தேவனுடைய நற்செய்தியைச் சொல்லலாம். இப்பொழுது நான் சொன்னதுபோலவும் தேவனுடைய நற்செய்தியைச் சொல்லலாம். நீங்கள் சொல்வதையெல்லாம் படித்தவர்கள் புரிந்துகொள்ளலாம்; படைக்கப்பட்ட உயிரை அல்ல, படைக்கப்படாத ஜீவனைப் பெற்றுக்கொள்ள வேண்டும். படைக்கப்பட்ட வளங்களால் அல்ல, படைக்கப்படாத வளங்களால் வாழ வேண்டும். படைக்கப்பட்ட பிரபஞ்சத்தை அல்ல, படைத்த தேவனை நாம் அறிய வேண்டும். இதுதான் தேவனுடைய நற்செய்தி என்பதைப் படித்தவர்கள் புரிந்துகொள்ளலாம். படிக்காதவர்கள் புரிந்துகொள்ளமுடியாது. அவர்களுக்கு ‘இயேசுவை நம்பு. உனக்குண்டு தெம்பு’ என்றுதான் சொல்ல வேண்டும் அல்லது ‘இயேசுவிடம் வா; உன் பாவங்களை மன்னிப்பார் அல்லது இயேசுவிடம் வா; உனக்குப் பரலோகம் கிடைக்கும்’ என்றுதான் சொல்ல வேண்டும்,” என்று ஒருவேளை நீங்கள் நினைக்கலாம். இது உண்மையில்லையா? அது உண்மைதான். அது உண்மையில்லை என்று நாம் சொல்லவில்லை.
ஆனால், இந்த உலகத்திற்குமுன்பாக தேவனுடைய மக்கள் சாட்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய நோக்கம் அல்லது தேவனுடைய நோக்கம். தேவனுடைய மக்களாகிய நம்மை மனிதர்கள் சந்திக்கும்போது அவர்கள் தேவனை அல்லது கிறிஸ்துவைச் சந்திக்க வேண்டும். இது இன்றைக்கு நடைபெறவில்லை. காரணம் என்ன? இந்த உலகம் நம்மிலே தேவனைச் சந்திக்கிறதா, சந்திக்கவில்லையா என்பது நாம் நற்செய்தி என்று எதை விசுவாசிக்கிறோம், நற்செய்தி என்று எதினால் வாழ்கிறோம் அல்லது நாம் எந்த நற்செய்தியை அறிவிக்கிறோம் என்பதைப் பொறுத்திருக்கிறது.
ஆதியாகமம் 1ஆம் அதிகாரம் (26, 27 ஆம் வசனங்கள்) இப்படிச் சொல்கின்றன. ’தேவன் நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனிதனை உண்டாக்குவோமாக. அவர்கள்…ஆளக்கடவர்கள்,” என்றார். தேவன் தமது சாயலாக மனிதனைப் படைத்தார் என்றும், அவனைத் தமது சாயலாகவே படைத்தார் என்றும் இந்த இரண்டு வசனங்கள் கூறுகின்றன. தேவன் மனிதனை எதற்காப் படைத்தார் என்று இந்த இரண்டு வசனங்கள் கூறுகின்றன. தேவன் என்ன நோக்கத்திற்காக மனிதனைப் படைத்தார் என்று ஆதியாகமம் 1ஆம் அதிகாரம் (26, 27 ஆம் வசனங்கள்) கூறுகின்றன. அவா;கள் ஆள வேண்டும் என்ற நோக்கத்திற்காகப் படைத்தார். அது மட்டும்தான் வெளிப்படையான நோக்கமாகச் சொல்லப்பட்டிருக் கிறது. ஆளக்கடவர்கள், தேவன் படைத்த இந்த உலகத்தை அவர்கள் ஆளக்கடவர்கள்.
“வானங்கள் கர்த்தருடையவைகள். பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்” (சங். 115:16) என்று எழுதியிருக்கிறது. எனவே, இந்தப் பூமியை, இந்த பூமியிலே படைக்கப்பட்ட எல்லாவற்றையும் தேவன் மனிதனுடைய ஆளுகைக்கு ஒப்புவித்தார். மனிதன் ஆளுகிறவனாக இருக்க வேண்டும் அல்லது மனிதர்களெல்லாம் சோ;ந்து ஆளுவதற்கு அவர்களை உண்டாக்கினார்.
அப்படி ஓர் ஆளுகையைச் செலுத்துவதற்கு மனிதன் ஒரு குறிப்பிட்ட விதமான படைப்பாக, உயிரியாக, இருக்க வேண்டும். படைக்கப்பட்ட எல்லா சிருஷ்டிகளும் இந்த உலகத்தை ஆளுகை செய்துவிட முடியாது. சிங்கம் ஆளுகை செய்ய முடியாது. சிங்கம் இந்த உலகத்தை ஆள முடியாது. தேவதூதர்கள்கூட “இந்த உலகத்தை ஆளுகை செய்யக்கடவர்கள்,” என்று சொல்லவில்லை. உலகத்தை ஆளக்கடவர்கள் என்று மனிதனைக்குறித்து மட்டும்தான் சொன்னார். நாம் இதைப்பற்றி நன்றாய்ச் சிந்தித்துப்பார்க்க வேண்டும். ஆளக்கூடிய விதத்திலே தேவன் மனிதனைப் படைத்தார். அது எப்படி என்று அதே ஆதியாகமம் 1:26 சொல்கிறது. “தேவன் நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனிதனை உண்டாக்குவோமாக,” என்று சொன்னார்.
ஆகவே, நாம் புரிந்துகொள்வதற்காக இரண்டு நோக்கங்களுக்காக தேவன் மனிதனை உண்டாக்கினார் என்று சொல்லலாம். தேவன் மனிதனை அவருடைய சாயலில் உண்டாக்கினார்; ஆளுகை செய்வதற்காக அப்படி உண்டாக்கினார்.
புதிய ஏற்பாட்டிலே தேவனுடைய நற்செய்தி என்வென்று ரோமர் 8 ஆம் அதிகாரம் (28, 29 ஆம் வசனங்கள்) கூறுகிறது. இந்தக் குறிக்கோளுக்காகத்தான், அதாவது “தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராய் இருக்கும்பொருட்டு தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருக்கும்படி முன்குறித்திருக்கிறார்,” என்று ரோமர் 8:29 கூறுகிறது. தேவன் நம்மை முன்னறிந்திருக்கிறார், முன்குறித்திருக்கிறார். குறிப்பிட்ட நோக்கத்திற்காக அல்லது குறிக்கோளுக்காக அவர் நம்மில் ஒரு குறி, ஓர் அடையாளம், போட்டிருக்கிறார். இந்த உலகத்தோற்றத்திற்குமுந்தியே அல்லது தாயின் கருவில் உருவாகும்முந்தியே அவர் நம்மேல் குறி ஒன்றைப் போட்டு வைத்திருக்கிறார். அந்தக் குறி என்னவென்றால் “இவனை நான் குறித்திருக்கிறேன்”. எதற்காக? தேவனுடைய குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருக்க வேண்டும் என்பதற்காகக் குறி ஒன்றைப் போட்டு வைத்துவிட்டுப் போயிருக்கிறார். ஏற்ற காலத்திலே நம்மை அழைத்தார், நீதிமான்களாக்கினார், மகிமைப்படுத்தியுமிருக்கிறார் என்று ரோமர் 8ஆம் அதிகாரம் (30ஆம் வசனம்) கூறுகிறது.
தேவனுடைய நற்செய்தியினுடைய நோக்கம் என்ன? தேவனுடைய முதற்பேறான குமாரன் யார்? இயேசு கிறிஸ்து. முதற்பேறு என்றால் முதல் மகன். தேவனுடைய முதல் மகன் இயேசுகிறிஸ்து. நாம் தேவனுடைய பல மகன்கள் என்று எபிரெயர் 2ஆம் அதிகாரத்திலே வாசிக்கிறோம். இந்தப் பல மகன்களை அவர் எதற்காக முன்குறித்திருக்கிறார்? முதல்மகனுடைய சாயலுக்கு ஒத்தசாயலாக அவர்களை ஆக்க வேண்டும் என்பது தேவனுடைய குறிக்கோள். நாம் எங்கே முதல் மகனுடைய சாயலுக்கு ஒத்தசாயலாக மாறுவோம்? இந்தப் பூமிக்குரிய வாழ்க்கையிலா அல்லது நாம் மரித்து பரலோகத்துக்குப் போனபிறகா? “இங்கெல்லாம் இயேசுகிறிஸ்துவினுடைய சாயலுக்கு ஒத்தசாயலாக்க முடியாது. தேவன் எதையாவது செய்யவேண்டுமானால் நாம் பரலோகத்துக்குப் போனபிறகுதான் செய்ய முடியும். இந்தப் பூமியிலே அவராலே ஒன்றும் செய்ய முடியாது,” என்று நினைக்கிறீர்களா? (நகைச்சுவையாக சொல்கிறேன். அவரை ஏதாவது செய்ய விட்டுவிடுவோமா என்ன?) அல்லது “சாத்தான் என்கிற எதிரி இருக்கிறான். அவன் தேவனுடைய பகைவன். தேவனுடைய திட்டத்தையும் நோக்கத்தையும் இந்தப் பூமியிலே அவன் நிறைவேற்ற விடமாட்டான்,” என்று நினைக்கிறீர்களா? அப்படி எண்ணினால் அது தவறு. தேவன் தம் திட்டத்தைப் பரலோகத்திலே ஆரம்பிப்பதில்லை. தம் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அவர் இங்கு ஆரம்பிக்கிறார்.
நீங்கள் இப்போது இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். தேவன் மனிதனை அவருடைய சாயலாகப் படைத்தார் என்று ஆதியாகமத்திலே வாசிக்கிறோம். நம்மை இயேசுகிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக்க வேண்டும், ஒத்தசாயலாக்க வேண்டும். இதுதான் தேவனுடைய நற்செய்தியின் குறிக்கோள் என்று புதிய ஏற்பாட்டிலே வாசிக்கிறோம். ஆதாம் பாவம் செய்து வீழ்ச்சியடைந்தபோது, வீழ்ந்துபோனபோது, அவன் தேவனுடைய சாயலை இழந்துவிட்டான். இப்போது இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியின்மூலமாய் மீண்டும் அந்த சாயலுக்கு ஒப்பாக்கப்படுகிறோம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அந்த சாயலும் இந்த சாயலும் ஒன்றா அல்லது வெவ்வேறா? ஆதாம் தேவனுடைய சாயலிலே சிருஷ்டிக்கப்பட்டான் என்ற அந்த தேவனுடைய சாயலும், நாம் இயேசுகிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக்கப்படுகிறோம் என்ற இந்த சாயலும் ஒன்றா வெவ்வேறா? அந்த சாயல் வேறு; இந்த சாயல் வேறு. இதைக் குறித்து நீங்கள் யோசித்திருக்கிறீர்களா?
தேவன் ஆதாமைத் தம் சாயலில் படைத்தார். படைத்துவிட்டு தோட்டத்திலே கனிதரும் சகலவிதமான விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவ விருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க அறிவு விருட்சத்தையும் வைத்தார். ஆதியாகமம் 2ஆம் அதிகாரத்தில், ’தேவன் பூமியின் மண்ணினாலே மனிதனை உண்டாக்கி தம்முடைய ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார். மனிதன் ஜீவாத்துமாவானான்,” (வ.7) என்று எழுதியிருக்கிறது. தேவனோடு மிகுந்த நெருங்கிய தொடர்புடையவனாக மனிதன் இருக்கிறான். தேவனுடைய சாயலிலே உண்டாக்கப்படுகிறான். வேறு எந்த உயிருக்கும் தனிப்பட்ட விதத்திலே மண் எடுத்து உண்டாக்கவில்லை. தேவன் பூமியின் மண்ணினாலே மனிதனை உண்டாக்குகிறார். வேறு எந்த உயிருக்கும் தேவன் ஜீவ சுவாசத்தை ஊதவில்லை. ஜலம் திரளான உயிர்களைப் பிறப்பிக்கக்கடவது என்றார். அது பிறப்பித்தது. அவ்வளவுதான். இப்படி தேவனோடு நெருங்கிய தொடர்புடையவன் மனிதன். தேவன் மனிதனை அவருடைய சாயலிலே படைத்தார். தேவன் தம் ஜீவ சுவாசத்தை அவனுடைய நாசியிலே ஊதினார்; மனிதன் ஜீவாத்துமாவானான். ஆனால், தேவன் மனி தனைப் படைத்தபோது அவன் மனித ஜீவனைப் பெற்றுக்கொண்டான்.
மனித ஜீவனே மிக வல்லமையும், ஆற்றலும் வாய்ந்தது. மனித ஜீவன் எவ்வளவு வல்லமையும், ஆற்றலும் வாய்ந்தது என்பதற்கு ஒரேவோர் எடுத்துக்காட்டு நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். எல்லா மிருக ஜீவன்களையும் தேவன் ஆதாமினிடத்தில் கொண்டுவந்தார். அவன் அவைகளுக்கு என்ன பேரிட்டானோ அதுதான் அவர்களுக்குப் பெயராயிற்று. மனிதனுடைய ஆற்றலும், வல்லமையும் எவ்வளவு பெரியதென்றால் பல்லாயிரக்கணக்கான உயிரினங்களைத் தேவன் ஆதாமுக்குமுன்பாக கொண்டுவந்திருப்பார். எல்லாவற்றிற்கும் அவன் பெயரிட்டான். ஒரு குழந்தைக்குப் பெயர் வைப்பதற்கே நாம் திண்டாடிவிடுவோம். அவன் எல்லா உயிர்களுக்கும் பெயர் வைக்கிறான். பெயர் வைத்துவிட்டு, “சரி, இப்போது அந்த உயிரியை பெயரிட்டு அழை,” என்றால் ஆதாம், “ஐயையோ நான் மறந்துவிட்டேனே!” என்று சொல்வானா அல்லது அப்படியே துல்லியமாகப் பெயரிட்டு அழைப்பானா? துல்லியமாகப் பெயரிட்டு அழைத்திருப்பான். அப்படியானால் எவ்வளவு ஞாபக சக்தி உண்டு?
ஆதாம் எப்படிப் பெயரிட்டிருப்பான்? 1, 2, 3, 4, அதன்பின் 1அ, 1 ஆ, 1இ, 1ஈ, 2அ, 2ஆ, 2இ, 2ஈ, 3அ, 3ஆ, 3இ, 3ஈ, என்று பெயரிட்டிருப்பானா அல்லது ஒவ்வொரு உயிரிக்கும் அதனதின் குணத்தின்படி அல்லது தன்மையின்படி பெயரிட்டிருப்பானா? இதையெல்லாம் நீங்கள் யோசித்துப் பார்க்க வேண் டும். மனித ஜீவன் மிகவும் வல்லமையும், ஆற்றலும் மிக்கது.
ஆனால், மனித ஜீவனுக்கு அப்பாற்பட்டு தேவனுடைய ஜீவன் என்று ஒன்று இருந்தது. தோட்டத்தின் நடுவிலே இருந்த ஜீவ விருட்சம் தேவனுடைய ஜீவனுக்கு அடையாளம். திருவெளிப்பாடு கடைசி அதிகாரத்தில் இதே ஜீவ விருட்சத்தைப் பார்க்கிறோம். ஜீவ விருட்சம் நதியின் இருகரையிலும் இருந்தது. தம் ஜீவனை மனிதன் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது தேவனுடைய நோக்கம். தேவனுடைய ஜீவனை மனிதன் பெற்றுக்கொள்ள வேண்டும் அல்லது தேவனுடைய ஜீவனில் மனிதன் பங்குபெற வேண்டும் என்பது தேவனுடைய நோக்கம். தேவன் மனிதனைப் படைத்தபோதே இதுதான் நோக்கம்.
புதிய ஏற்பாட்டிலே அந்த நோக்கம் இன்னும் தெள்ளத்தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. யோவான் 20ஆம் அதிகாரம், “இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்திய ஜீவனை அடையும்படியாகவும் இவைகள் எழுதப்பட்டிருக்கிறது,” என்று வசனம் 31 கூறுகிறது. 20 அதிகாரங்களிலே யோவான் தன் நற்செய்தியை எழுதுகிறார். எழுதிவிட்டு யோவான் 20ஆம் அதிகாரம் கடைசி வசனம் யோவான் எழுதின சுவிசேஷத்தின் முடிவுரை. நீங்கள் ஒரு பெரிய புத்தகம் எழுதினால் அந்தப் புத்தகத்திற்கு முடிவுரை எழுதுவீர்கள். “இயேசு அநேக அற்புதங்களைச் செய்தார். நான் அவைகளைப்பற்றி எழுதியிருக்கிறேன். ஆனால், நான் இவைகளையெல்லாம் எழுதியிருப்பதின் நோக்கம் என்ன? இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்பதை நீங்கள் விசுவாசிக்க வேண்டும். விசுவாசித்து அல்லது விசுவாசித்தால் என்ன நடக்கும், நடைபெறும் அல்லது என்ன நீங்கள் அடைவீர்கள்? நித்திய ஜீவனை அடைவீர்கள்,” என்று யோவான் எழுதுகிறார். நீங்கள் இந்த வசனத்தை வாசிக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். “இயேசு தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்று விசுவாசித்தால் நீங்கள் எதை அடைவீர்கள்?” என்று நான் ஒரு கேள்வி கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள். “இயேசு தேவனுடைய குமாரன் என்று விசுவாசித்தால் நாம் பாவ மன்னிப்பை அடைகிறோம், இரட்சிப்பை அடைகிறோம், ஆசீர்வாதத்தை அடைகிறோம், பரலோகத்தை அடைகிறோம்,” என்று சொல்லலாம். இந்தப் பதில்களெல்லாம் தவறல்ல. இயேசுவை விசுவாசிக்கும்போது நாம் ஆசீர்வாதத்தை பெறுகிறோம், உண்மைதான். இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று விசுவாசிக்கும்போது நம்முடைய வாழ்க்கை மாறுகிறது. நாம் மரண இருளிலிருந்து ஒளிக்கு வருகிறோம். கட்டுண்டவர்கள் விடுதலையாக்கப்படுகிறார்கள். நொறுங்குண்டவர்கள் காயங்கட்டப்படுகிறார்கள். இவையெல்லாம் நடைபெறுகிறது உண்மைதான். ஆனால், யோவானைப்பொறுத்தவரை, “நான் இதை எழுதியிருப்பதின் நோக்கம் என்னவென்றால் இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று விசுவாசிக்கும்போது நாம் நித்திய ஜீவனை அடைகிறோம்.”
எங்கேயோ ஒரு வசனத்தைப் பிடுங்கி எடுத்து, தோண்டி எடுத்து ஒரு உபதேசத்தை, ஒரு போதனையை உண்டுபண்ணுகிற தவறை தேவனுடைய மக்கள் அடிக்கடி செய்வதுண்டு. ஆகையால் இன்னொரு வசனத்தை நான் மேற்கோள் காட்டுகிறேன். 1 யோவான் 5ஆம் அதிகாரம் 11, 12, 13ஆம் வசனங்களிலே யோவான் தன் கடிதத்திற்கு ஒரு முடிவுரையைத் தருகிறார். அந்த முடிவுரை என்னவென்றால், “தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார். அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறது என்பதே அந்த சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன். தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவனுடைய குமாரன்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவனுடைய குமாரன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதுகிறேன்.”
அந்த இரண்டு வசனங்களை நீங்கள் பார்க்க வேண்டும். தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார் (வ. 11); உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டு (வ. 13). நித்திய ஜீவன் என்பதற்கு ஓர் எதிர்கால அம்சமும் உண்டு. நிகழ்கால அம்சமும் உண்டு.
நம்முடைய மனம் தெளிவாக இல்லையென்றால் நித்திய ஜீவன் நிகழ்காலம் என்று விசுவாசிக்கிற ஒரு சபையும், நித்தியஜீவன் எதிர்காலம் என்று விசுவாசிக்கிற இன்னொரு சபையும் உண்டாகும். அவர்கள் இரண்டுபேரும் சகோதரர்களாக இருந்திருப்பார்கள். இதை முன்னிட்டு அவர்கள் ஒருவரையொருவர் எதிரிகளாகப் பார்ப்பார்கள். இரண்டுபேரும் சேர்ந்து இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டிருப்பார்கள், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியம் செய்திருப்பார்கள், பணிவிடை செய்திருப்பார்கள். ஆனால் இப்போது கருத்து வேறுபாடு வந்துவிட்டது. நித்திய ஜீவன் எதிர்கால நம்பிக்கை என்பது ஒருவருடைய உபதேசம். இல்லை, நித்தியஜீவன் நிகழ்கால உடைமை என்பது இன்னொரு சகோதரனுடைய உபதேசம். அதனால் இருவேறு சபைகள். இதுதான் தேவனுடைய மக்களிடையே காணப்படுகிற பரிதாப மான சூழ்நிலை.
நித்தியஜீவன் நிகழ்கால உடைமையும் எதிர்கால நம்பிக்கையும் ஆகும். அல்லேலூயா! நித்தியஜீவன் உங்களுக்கு உண்டு. You have eternal life. God has given us eternal life and this life is in His Son. He who has the Son has the life. He who does not have the Son of God does not have life. தன் நிரூபத்தின் முடிவுரையாக யோவான் எழுதுவது: உங்களுக்கு நித்தியஜீவன் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் தேவனுடைய குமாரன்மேல் விசுவாசமாயிருக்கிறீர்கள். தேவனுடைய குமாரன்மேல் விசுவாசமாயிருநது நித்தியஜீவன் இல்லாமல் போகிற வாய்ப்பு இல்லை. நித்தியஜீவன் என்பது தேவனுடைய ஜீவனே. இதற்கு நான் எந்தக் காரணகாரியங்களும் தரவில்லை. நித்தியமான ஜீவன்; தொடக்கமும் முடிவும் இல்லாத ஜீவன் என்பது தேவனுடைய ஜீவன் மட்டுமே. ஆகவே, புதிய ஏற்பாடு நித்திய ஜீவன் என்கிற சொல்லைப் பயன்படுத்தும்போதெல்லாம் அது தேவனுடைய ஜீவன் என்பதைக் குறிக்கிறது. நாம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கும்போது, அவர்மேல் அன்புகூரும்போது, அவரைப் பற்றிக்கொள்ளும்போது, அவரைச் சார்ந்துகொள்ளும்போது, அவருக்கு நம்மை ஒப்புவிக்கும்போது, அவருக்கு நம்மைக் கையளிக்கும்போது, அவர் நம்முடைய ஆத்தும நேசராக மாறும்போது அவரிடமிருந்து நாம் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்கிறோம். இயேசுகிறிஸ்துவை விசுவாசியாதவர்களுக்கு நித்திய ஜீவன் இல்லை. இதை நான் எதிர்மறையாகச் சொல்கிறேன். நேர்மறையாகச் சொல்வதானால், இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று விசுவாசிக்கும்போது நாம் தேவனுடைய ஜீவனைப் பெற்றுக்கொள்கிறோம். இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று விசுவாசிக்காதவர்களுக்கு நித்திய ஜீவன் இல்லை.
குமாரனை உடையவன் ஜீவனை உடையவன். தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். தேவனுடைய குமாரனை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. அவரை விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்காதபோது அவர்களுக்குத் தேவனுடைய ஜீவன் இல்லை. இறுதி நியாயத்தீர்ப்பு எந்த அடிப்படையில் இருக்குமென்றால் தேவனுடைய ஜீவனைப் பெற்றவர்களா, பெறாதவா;களா? அவர்களுக்குள் தேவனுடைய ஜீவன் இருக்கிறதென்றால் அவர்கள் நித்தியத்தில் தேவனுடன் வாழ்வார்கள். தேவனுடைய ஜீவன் இல்லையென்றால் அவர்கள் நித்தியத்தில் வாழ்வதில்லை. நாம் ஏற்கெனவே நித்தியத்தில் வாழ ஆரம்பித்துவிட்டோம். என்றைக்கு நாம் நித்திய ஜீவனைப் பெற்றுகொள்டோமோ அன்றுமுதல் நாம் நித்தியத்திலே வாழ ஆரம்பித்துவிட்டோம். நடுவிலே ஒரு காலகட்டத்தில் நம் வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது. அவ்வளவுதான்.
மிக முக்கியமான ஒரு கேள்வியைக் கேட்கப்போகிறேன். தேவன் முதல் மனிதனைப் படைத்தபோது தேவனுடைய சாயலில், பூமியின் மண்ணினாலே, ஜீவ சுவாசத்தை ஊதி…மூன்று காரியங்களைச் சொன்னேன். தேவனுடைய சாயலில், தேவனுடைய ரூபத்தில், பூமியின் மண்ணினாலே தனிப்பட்ட விதத்திலே தம் ஜீவ சுவாசத்தை ஊதி…முதல் மனிதனைப் படைத்தபோது, உண்டாக்கினபோது, அவன் தேவனுடைய ஜீவனைப் பெற்றுகொண்டானா அல்லது மனித ஜீவன் மட்டுமே உடையவனாக இருந்தானா? தேவனுடைய ஜீவன் அவனுக்குள் இல்லை. ஆதாம் பாவம் செய்தபோது தேவனுடைய ஜீவனை இழந்தான் என்று சொல்வது சரியா, தவறா? தவறு. அவன் இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால், அவன் ஏற்கெனவே அதைப் பெற்றுக்கொள்ளவில்லை. ஆதாம் பாவம் செய்தபோது தேவனுடைய ஜீவனைப் பெற்றுக்கொள்கிற வாய்ப்பை இழந்துவிட்டான். அவனுக்குள் இருந்த தேவனுடைய ஜீவனை அவன் இழந்துபோகவில்லை.
ஆதாமுக்குள் தேவனுடைய ஜீவன் இருக்கவில்லை. மனித ஜீவன் மட்டுமே இருந்தது. ஆதாமுக்குள் இருந்த அல்லது ஆதாம் பெற்றிருந்த மனித ஜீவன் மிக வல்லமையும், மிக ஆற்றலும், மிக அறிவும் வாய்ந்த ஒரு ஜீவன். ஆனால், தேவனுடைய திட்டம் என்னவென்றால் கூடுதலாக, இந்த மனித ஜீவ னுக்கு கூடுதலாக, அவன் தேவனுடைய ஜீவனைப் பெற்றுக்கொள்ள வேண்டும். தேவனுடைய இந்த ஆசையைப் பிரதிபலிப்பதற்காகத்தான் தோட்டத்தின் நடுவிலே ஜீவ விருட்சம் இருந்தது. மனிதன் வீழ்ந்துபோனபோது ஜீவவிருட்சத்துக்கு போகும் வழியை தேவன் அடைத்துப்போட்டார் என்று எழுதியிருக்கிறது.. கவிதைகளில்தான் போகும் என்பது போம் என்றாகும். தமிழில் இதற்கு இடைகுறை விகாரம் என்று பெயர். ஆனால் proseயிலேகூட அப்படி எழுதியிருக்கிறது. ஜீவவிருட்சத்துக்கு போம் வழியை காவல் வைத்து… இனிமேல் ஜீவ விருட்சத்திற்கு மனிதனுக்கு வழி இல்லை. தேவன்மேல் அவன் நம்பிக்கை கொள்ளாததினால் அல்லது தேவனுடைய குமாரன்மேல் நம்பிக்கை வைக்க, விசுவாசிக்க, அன்புகூர, தன்னை ஒப்புவிக்க, தன்னைக் கையளிக்க, அவர்மேல் சார்ந்துகொள்ள அவன் மறுத்ததால் தேவனுடைய ஜீவனுக்குப் போகும் வழியை தேவன் மறுத்துவிட்டார். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து, தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து, இந்தப் பூமிக்கு வருகிறவரைக்கும் தேவனுடைய ஜீவனை மனிதர்கள் பெறுகிற வாய்ப்பு மனிதர்களுக்கு இல்லை.
நான் மூன்று காரியங்கள் சொல்வதாகச் சொன்னேன். ஆனால், ஒரேவொரு காரியத்தைத்தான் சொன்னேன். படைத்த ஜீவனை அல்ல, படைக்கப்படாத ஜீவனை மனிதன் பெற வேண்டும். மனிதன் பாவம் செய்வதற்கு முதல் காரணம் உயிரைப்பற்றிய அச்சம். உயிரைத் தக்கவைத்துகொள்வதற்காக, உயிரைப் பாதுகாப்பதற்காக, உயிரை ஓம்பி வளர்ப்பதற்காக மனிதர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள், யாரை வேண்டுமானாலும் கொலை செய்வார்கள், என்ன பாவம் வேண்டுமானாலும் செய்வார்கள். அந்த நேரத்தில் நட்பு பறந்துவிடும். “என் நட்பு பறக்காது” என்று நீங்கள் சொல்லலாம். நீங்கள் இப்படிச் சொல்வீர்களென்றால் உங்களைப்போன்ற ஒரு மனிதன் வாழ்ந்தான். “யார் உம்மைக் கைவிட்டுப் போனாலும் நான் உம்மைக் கைவிட்டுப் போகமாட்டேன். உம்மோடுகூட காவலுக்கும் மரணத்திற்கும் வருவதற்கும் நான் ஆயத்தமாயிருக்கிறேன்,” என்று சொன்ன நம் நண்பர், நம் மூத்த சகோதரர் பேதுரு இருக்கிறார்.
இந்த உலகத்திலே மலிந்துகிடக்கிற பாவத்திற்கு உயிரைப்பற்றிய பயம் முதல் காரணம்; உயிர் போய்விடுமோ என்பது முதல் காரணம். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து, “பயப்படாதிருங்கள், உங்கள் உயிர் போய்விடாது,” என்று சொன்னார். “இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? அவைகளில் ஒன்றாகிலும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல் தரையிலே விழுவது இல்லை. ஆகையால் பயப்படாதிருங்கள். உங்கள் தலையிலுள்ள முடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. உங்கள் சரீரத்தை மட்டும் கொல்ல வல்லவர்;களுக்கு நீங்கள் பயப்படாதிருங்கள். அவர்கள் ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்கள் அல்ல. உங்கள் சரீரத்தை மட்டும் கொல்ல வல்லவர்களுக்கு நீங்கள் பயப்படாதிருங்கள்.”
தேவனுடைய மக்களாகிய நாம் படைக்கப்பட்ட அந்த மனித உயிரால் வாழ்வது அல்ல, படைக்கப்படாத ஒரு ஜீவனால் நாம் வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். அது தேவனுடைய திட்டம்.
தொன்றுதொட்டு மனிதர்களுக்கு ஓர் ஆசை உண்டு.immortality, என்றென்றும் சாவாமல் வாழ்வது. தமிழ்நாட்டில் சித்தர்கள் என்று ஒரு வகையினர் வாழ்ந்தார்கள். அவர்கள் ரொம்ப சுவாரஸ்யமான ஆட்கள். அவர்கள் பாடல்களை நீங்கள் படித்துப்பார்க்க வேண்டும். படித்துப்பார்த்தால் உங்களுக்கு ஒன்றும் விளங்காது. இன்னும் சொல்லப்போனால் படிக்கிற ஒவ்வொருவனும் அவனவனுக்குத் தோன்றின கருத்தைச் சொல்லிக்கொள்ளலாம். ஏறக்குறைய நம் வெளிப்படுத்தின விசேஷம் மாதிரி. ஒரு twilight language. ஒரு கருகலான மொழியில்தான் அந்தப் பாடலை எழுதுவாரர்கள். இது அர்த்தமா அல்லது அது அர்த்தமா என்று கண்டுபிடிக்க முடியாது. அவர்களுடைய ஒரு தேட்டம் முடிவில்லாத வாழ்க்கை வாழ வேண்டும்.
மனிதனுக்காக தேவனுடைய ஏற்பாடு வெறுமனே முடிவில்லாத ஒரு வாழ்க்கை வாழ்வதல்ல. தேவனுடைய ஜீவனில் நாம் பங்குபெறலாம். நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தேவனுடைய ஜீவனில் நாம் பங்குபெறலாம் என்கிற வாய்ப்பு மனிதனுக்கு உண்டு. இது நம்மைப் படைத்த தேவனுடைய மகா உன்னதமான திட்டம். வெறுமனே இந்த மனித ஜீவனால் அவன் வாழ வேண்டிய அவசியமில்லை. தேவனுடைய ஜீவனில் பங்குபெற்று, தேவனுடைய ஜீவனைப் பெற்று, இந்த ஜீவனால் வாழ்கிற ஓர் அற்புத வாழ்க்கைக்குள் அவனைக் கொண்டுவர வேண்டும்.
மனிதனை அவர் பூமிக்குரிய ஒரு மண்டலத்திலே வைத்தார். ஏனென்றால், அவன் பூமியின் மண்ணினாலே உண்டாக்கப்பட்டவன். எனவே, அவன் பூமியின் மண்டலத்தில்தான் வாழ முடியும். தேவன் பரத்திற்குரிய மண்டலத்தில் இருக்கிறார். மண்டலம் என்றால் realm அல்லது sphere. தேவன் பரத்திற்குரிய மண்டலத்தில், பரத்திற்குரிய தளத்தில், இருக்கின்றார். மனிதன் பூமிக்குரிய மண்டலத்தில் இருக்கிறான். ஆனால், மற்ற எந்த உயிரிகளுக்கும் இல்லாத, ஜீவராசிகளுக்கும் இல்லாத, படைக்கப்பட்ட எந்த உயிர்களுக்கும் இல்லாத ஒரு மாபெரும் குறிக்கோளையும், திட்டத்தையும் தேவன் மனிதனுக்காக வைத்திருந்தார். இவன் பூமியின் மண்டலத்தில் அல்ல. தேவன் வாழ்கிற, தேவன் ஆள்கிற பரத்திற்குரிய மண்டலத்திலே இவன் வாழ வேண்டும் என்பது தேவனுடைய திட்டமும், தேவனுடைய குறிக்கோளுமாகும்.
மனிதன் ஒரு விசேஷமான சிருஷ்டிப்பு. அவன் இருப்பது பூமிக்குரிய மண்டலம். ஆனால், அவன் வாழ்வது பரத்திற்குரிய மண்டலம். இதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நான் சித்தர்போல் பேசுவதாக நினைக்க வேண்டாம். இப்படியெல்லாம் புதிய ஏற்பாட்டில் இருக்கிறதா என்று நீங்கள் நினைக்கலாம். நான் இதற்கு ஆதாரங்கள் காட்டுகிறேன். ஆனால், எப்படி ஒரு சாதாரண மனிதன், பூமியின் மண்ணினாலே உண்டாக்கப்பட்டவன், பூமிக்குரிய மண்டலத்திலே வாழ்வதை விட்டுவிட்டு பரத்திற்குரிய மண்டலத்திலும் வாழ முடியும்? புதிய ஏற்பாடு எங்கெல்லாம் தேவனுடைய இராஜ்ஜியம் அல்லது பரலோக இராஜ்ஜியம் என்று கூறுகிறதோ நீங்கள் அதை தேவன் வாழ்கிற மண்டலம் அல்லது தேவன் ஆட்சிசெய்கிற மண்டலம் அல்லது பரலோக மண்டலம் என்று மொழிபெயா;த்துக்கொண்டால் அதில் எந்தப் பிழையும் இருக்காது. மனிதனுக்கு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து அறிவித்த முதல் வாக்கியம் என்ன? “மனந்திரும்புங்கள், பரலோக இராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது.” பரலோக இராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது என்றால் “இதோ வரப்போகிறது! இதோ வரப்போகிறது! இதோ வரப்போகிறது!” என்று அறிவிக்கவில்லை. பரலோக இராஜ்ஜியம் வந்தாயிற்று. The kingdom of heaven is at hand, near.
முதல் மனிதனுக்கான தேவனுடைய திட்டமும், குறிக்கோளும் அதுதான். இவன் வெறுமனே ஒரு பூமிக்குரிய ஒரு இராஜ்ஜியத்தில் வாழ்வதல்ல. இவன் தேவனுடைய இராஜ்ஜியத்தில், பரலோக இராஜ்ஜியத்தில் வாழ வேண்டும் என்பது தேவனுடைய திட்டம். எப்படி தேவனுடைய இராஜ்ஜியத்தில், பரலோக இராஜ்ஜியத்தில் வாழ முடியும்? தேவனுடைய ஜீவன் இல்லாமல் தேவனுடைய இராஜ்ஜியத்தில் வாழ முடியாது.
நாயின் இராஜ்ஜியத்தில் நிறங்கள் இல்லை என்று சொல்லுகிறார்கள். எல்லாம் கருப்பு, வெள்ளை, சாம்பல் நிறங்கள்தான். “ஓ! இந்த ரோஜா எவ்வளவு சிவப்பாக இருக்கிறது! இந்த சூரிய உதயம் எவ்வளவு மஞ்சளாக இருக்கிறது! இந்த வயல்கள் எவ்வளவு பச்சையாக இருக்கிறது! இந்த வானங்கள் எவ்வளவு நீலமாக இருக்கிறது!” என்றால் நாயின் உலகத்தில், நாயின் இராஜ்ஜியத்தில் அவைகளெல்லாம் பொருளற்றவைகள். அதுபோல, தேவனுடைய ஜீவன் இல்லாதவரை தேவனுடைய இராஜ்ஜியத்தின் காரியங்களெல்லாம் மனிதனுக்குப் பொருளற்றவைகள்.
ஆகையால்தான் தன்னை விசாரிக்க வந்த நிக்கொதேமு என்ற யூதத் தலைவனிடத்தில் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து, “நீ மறுபடியும் பிறவாவிட்டால், தேவனுடைய ஜீவனைப் பெறாவிட்டால் தேவனுடைய இராஜ்ஜியத்தில் நுழைய முடியாது, தேவனுடைய இராஜ்ஜியத்தைக் காணமாட்டாய்,” (யோவான் 3) என்று சொன்னார். காணமாட்டாய் என்றால் “தேவனுடைய இராஜ்ஜியத்திலுள்ள காரியங்கள் உனக்கு எந்த அர்த்தமோ, பொருளோ, அருமையோ நிறைந்ததாகத் தென்படாது,” என்று பொருள்.
இன்று நான் வலியுறுத்திச் சொன்ன காரியத்தின் சுருக்கம் என்னவென்றால் நாம் விசுவாசிக்கிற நற்செய்தி என்ன, எந்த நற்செய்தியால் நாம் வாழ்கிறோம், எந்த நற்செய்தியை நாம் அறிவிக்கிறோம் என்பதைப்பற்றி நாம் நன்கு சிந்தித்துப் பார்த்து, அதைப்பற்றிய ஒரு தெளிந்த அறிவுள்ளவர்களாய் இருக்க வேண்டும். தேவனுடைய நற்செய்தியில் இந்த மூன்றும் அடங்கும். முதலாவது, படைக்கப்பட்ட உயிரை அல்ல, படைக்கப்படாத ஜீவனில் நாம் பங்குபெற வேண்டும். இரண்டாவது, படைக்கப்பட்ட வளங்களால் அல்ல, படைக்கப்படாத வளங்களால் நாம் வாழ வேண்டும். மூன்றாவது, படைக்கப்பட்ட பிரபஞ்சத்தை அல்ல, படைத்த தேவனை நாம் அனுபவித்து அறிய வேண்டும் என்பது தேவனுடைய நற்செய்தியில் அடங்கும்.
இதில் முதலாவது குறிப்பை மட்டும் நாம் பார்த்தோம். தேவன் மனிதனை அவருடைய சாயலில் உண்டாக்கினார். அவருடைய சுவாசத்தை அவன் நாசியில் ஊதி அவனை ஜீவாத்துமாவாக்கினார். ஆனாலும், படைக்கப்பட்ட மனிதனுக்கு மனித ஜீவன்தான் உண்டேதவிர தேவனுடைய ஜீவன் இல்லை. அவன் பெற்றுக்கொண்ட மனித ஜீவன் மிக உயா;ந்தது, மிக வல்லமையுள்ளது, மிக ஆற்றல்மிக்கது. அதனுடைய சாத்திய நிலை மிகவும் அதிகம். ஆனபோதிலும், அது மனித ஜீவன்தானேதவிர தேவனுடைய ஜீவன் இல்லை. தேவனுடைய சாயல் உண்டு என்பதற்கு அர்த்தம் அவன் தேவனுடைய ஜீவனைப் பெற்றிருந்தான் என்பது அல்ல. தேவசாயல் உண்டு என்பதற்கு அர்த்தம் என்னவென்று கேட்டால் தேவனுடைய ஜீவனைப் பெற்றுக்கொள்ளும் வண்ணம் தேவன் மனிதனைப் படைத்திருந்தார். மற்ற எந்த சிருஷ்டியும், எந்த உயிரிகளும் தேவனுடைய ஜீவனைப் பெற்றுக்கொள்ளும் விதத்தில் உருவாக்கப்படவில்லை. மனிதன் மட்டுமே தேவனுடைய ஜீவனைப் பெற்றுக்கொள்ளும் விதத்தில் உண்டாக்கப்பட்டிருந்தான்.
மனிதன் தேவனுடைய ஜீவனைப் பெற வேண்டும், தேவனுடைய ஜீவனில் பங்குபெற வேண்டும் என்ற தேவனுடைய எண்ணத்தை பழைய ஏற்பாட்டில் ஜீவ விருட்சத்தின்மூலமாய்ப் பார்க்கிறோம். புதிய ஏற்பாட்டில் திருவெளிப்பாட்டில் கடைசி அதிகாரத்தில் பார்க்கிறோம். அது தவிர நடுவில் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை நாம் ஏன் விசுவாசிக்க வேண்டும் என்று யோவான் முடிவுரையாய்ச் சொல்லும்போது தேவனுடைய ஜீவனை அல்லது நித்திய ஜீவனைப் பெறுவதற்காக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டும் என்று சொல்கிறார்.
ஆகவே, எங்கோ ஒன்றிரண்டு வசனங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக பொறுக்கி, சம்பந்தம் சம்பந்தமில்லாத சில வசனங்களை தொடர்புபடுத்திக் கோர்த்து ஓர் உபதேசத்தை, ஒரு போதனையை நாம் உண்டாக்கவில்லை. இது தேவனுடைய திட்டத்தின், தேவனுடைய நோக்கத்தின் மைய எண்ணம். மனிதனுக்கு தேவனுடைய ஜீவனைக் கொடுக்க வேண்டும். மனிதன் தேவனுடைய ஜீவனைப் பெற வேண்டும். நான் பயன்படுத்தின வார்த்தைகளையெல்லாம் நீங்கள் கவனிக்க வேண்டும். மனிதனுக்கு தேவனுடைய ஜீவனைக் கொடுக்க வேண்டும். மனிதன் தேவனுடைய ஜீவனைப் பெற வேண்டும். இன்னொன்றைப் பயன்படுத்துவோம். மனிதன் தேவனுடைய ஜீவனில் பங்குபெற வேண்டும். இது தேவனுடைய எண்ணம். காரணம் என்னவென்று கேட்டால் மனிதனுக்காக தேவனுடைய நோக்கம் அவன் வெறுமனே ஒரு பூமிக்குரிய மண்டலத்தில் வாழ்வது அல்ல. தேவன் வாழ்கிற, தேவன் ஆளுகை செய்கிற பரம மண்டலத்தில், பரம தளத்தில் மனிதன் வாழ வேண்டும் என்கிற ஒரு சிறப்பான, special calling, ஒரு சிறப்பான அழைப்போடு தேவன் மனிதனை அழைத்திருக்கிறார். அடுத்த இரண்டு குறிப்புகளை படைக்கப்பட்ட வளங்களால் அல்ல, படைக்கப்படாத வளங்களால் மனிதன் வாழ வேண்டும். இறுதியாக, வெறுமனே படைக்கப்பட்ட இந்த உலகத்தையும் பிரபஞ்சத்தையும் அல்ல படைத்த தேவனை மனிதன் அறிய வேண்டும். தேவனுடைய நடைமுறை விளைவுகள் என்ன என்பதை நாம் அடுத்த வாரத்தில் பார்த்து முடிக்கலாம். ஜெபிப்போம்.