Unedited transcript of a message spoken in August 2015 in Chennai
By Sakaya Milton Rajendram
நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிற கருத்தை உங்கள் மனதிலே பதியவைப்பதற்காக எபிரேயர் 11:24முதல் 26வரையிலான மூன்று வசனங்களை நான் வாசிக்கிறேன். “விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து, அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு, இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்.”
இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து. இதுதான் தலைப்பு.
நாம் பல காரியங்களைப் பேசுவோம். வாரவாரம் நாம் ஒரு செய்தியைக் கேட்போம். ஒருவேளை நாம் அதைத் திரும்பிக்கேட்டால் அது நம் மனதில் பதியலாம். திரும்பிக்கேட்காவிட்டால் நம்முடைய மனதிலே ஒன்றும் பதியாது. குறைந்தபட்சம் “இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருத்தல்” என்ற ஒரு வாக்கியம், ஒரு சொற்றொடர், உங்கள் மனதிலே பதிய வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றி அதே எபிரேயர் 12:2 “அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்,” என்று வாசிக்கிறோம். “இனிவரும் சந்தோஷத்தின்பொருட்டு,” “தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு.” முதலாவது “இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருத்தல்” என்று படித்தோம். இரண்டாவது, “இனிவரும் சந்தோஷம்.” இனிவரும் பலன், இனிவரும் சந்தோஷம்.
மனிதர்கள் பொதுவாக “இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து” எதையும் செய்வதில்லை. நான் எடுத்துக்காட்டாக ஒன்று கேட்கிறேன். “நீங்கள் இன்றைக்கு ஒன்றைச் செய்தால், பத்து வருடம் கழித்து உங்கள் தலைமுறை மிகவும் ஆசீர்வாதமாக இருக்கும்,” என்றால் இன்று நம்மில் யாரவது இதைச் செய்வோமா? பத்துத் தலைமுறைகள் கழித்து உங்கள் தலைமுறை மிகவும் ஆசீர்வாதமாக இருக்கும் என்பதற்காக நாம் யாராவது எதையாவது செய்வோமா? ஒருவேளை நம்முடைய பிள்ளைகள் ஆசீர்வாதமாக இருக்கும் என்பதற்காக வேண்டுமானால் நாம் எதையாவது ஒன்றைச் செய்வோம். அதுகூடக் கடினம்தான். நம் பிள்ளைகளுக்காகச் செய்வோம் என்று வைத்துக்கொள்வோம். பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு ஆசீர்வாதமாக இருக்கும் என்பதற்காக நாம் ஏதாவது ஒன்றைச் செய்வோமா என்றால் அது மிகவும் கடினம்.
நான் இன்றைக்குச் செய்கிற ஒரு செயலினுடைய பலன் இனிவரும் தலைமுறைக்கு, இரண்டு தலைமுறைகள், மூன்று தலைமுறைகள் கழித்து, நன்மையாக இருக்காது அல்லது நான் இன்று செய்கிற இந்தச்செயல் இரண்டு தலைமுறைகள் கழித்து, மூன்று தலைமுறைகள் கழித்து தீமையைக் கொண்டுவரும் என்று தெரியவந்தால், அதற்கு அஞ்சி நான் அந்தச் செயலைச் செய்யாமல் இருப்பேனா என்றால் அதுவும் இல்லை. நன்மையாக இருந்தாலும் சரி, தீமையாக இருந்தாலும் சரி, மனிதனுடைய இயல்பு, மனிதனுடைய தன்மை, மனிதனுடைய குணம் என்னவென்றால் எனக்கு உடனடி பலன் வேண்டும். இனிவரும் பலனைப்பற்றி எனக்குக் கவலை இல்லை.
இதைப் பிரத்தியட்சமாகவே சொன்ன ஓர் அரசன் உண்டு. அவனுடைய பெயர் எசேக்கியா. அவன் ஒரு செயல் செய்தான். அதனுடைய விளைவு தீமை. அவன் சாவுக்கு ஏதுவாக வியாதிப்பட்டான். “நீ செத்து விடுவாய்,” என்று தீர்க்கத்தரிசி சொல்லியிருந்தார். அவன் கர்த்தரை நோக்கி ஜெபித்தான். கர்த்தர் அற்புதமாய் அவனைச் சுகமாக்கினார். அவனுடைய சுகம் எந்தளவிற்கு அற்புதம் என்றால், சுற்றியிருந்த நாடுகளுக்கெல்லாம் அது தெரியவந்தது. சாகக்கிடந்த எசேக்கியா இராஜா உயிர்பிழைத்து விட்டார். 14 ஆண்டுகள் அவருக்குக் கூட்டிக்கொடுக்கப்பட்டது. ஒரு அற்புதம் நடந்தால் போதுமே. உடனே மக்கள் எல்லோரும் அந்த இடத்தை நோக்கிப் படையெடுப்பார்கள். எசேக்கியாவைப் பார்ப்பதற்காக பாபிலோன் இராஜா தன்னுடைய தூதுவர்களை அனுப்பியிருந்தார். பாபிலோன் என்பது அப்போது வளர்ந்துகொண்டிருக்கிற ஒரு சாம்ராஜ்யம். Super power. Super power உடைய ஒரு இராஜா தன் தூதுவர்களை அனுப்பி விட்டார் என்றவுடனே எசேக்கியா கொண்டாடி விட்டான். தன்னுடைய தேசத்தையெல்லாம் அவர்களுக்குக் காண்பித்தான். தன் அரண்மனையைக் காண்பித்தான். தேவாலயத்தைக் காண்பித்தான். தேவாலயத்திலிருந்த எல்லா பொக்கிஷங்களையும், செல்வங்களையும் காண்பித்தான். தேவாலயம் என்பது super power உடைய இராஜாக்களுக்கும், இராஜா அனுப்புகின்ற தூதுவர்களுக்கும் காட்சிகாட்டுவதற்கான ஒரு இடம் அல்ல. அது தேவன் வாசம் பண்ணுகிற இடம். அது நொறுங்குண்ட இருதயம் உள்ளவர்களுக்கும், நறுங்குண்ட ஆவி உள்ளவர்களுக்குமான இடமேதவிர Super power இராஜாக்களுக்கும், மந்திரிகளுக்கும் உரிய இடமல்ல. “நீ பாபிலோன் இராஜா அனுப்பிய தூதுவர்களுக்கு எவைகளையெல்லாம் காண்பித்தாய்?” என்று கர்த்தர் ஏசாயாவை அனுப்பிக் கேட்கிறார். “நான் காண்பிக்காதது ஒன்றுமே இல்லை. யார் என்னுடைய நட்பை நாடி வருவது? சாதாரணமான ஊர் பெயர் தெரியாத ஒரு இராஜா அல்ல, Super power. அவருடைய தூதுவர்களை அனுப்பியிருக்கும்போது, என்னுடைய நாட்டிலே நான் காண்பிக்கக் கூடாத ஒன்றிருக்கிறதா? எல்லாவற்றையும் காண்பித்தேன்,” என்று அவன் சொல்கிறான். “நீ காண்பித்த எல்லாவற்றையும் கொள்ளையாடுவதற்காக, சூறையடிப்பதற்காக பாபிலோன் இராஜா படையெடுத்து வருவான். நீ காண்பித்த பொக்கிஷங்களை மட்டுமல்ல, உன்னுடைய பிள்ளைகளையும்கூட அவன் கொள்ளையடித்துக் கொண்டு போவான்,” என்று தீர்க்கத்தரிசி சொல்கிறான். எசேக்கியா அதிர்ச்சியடைந்து விடுகிறான். உடனே அவன், “அது என்னுடைய நாட்களிலே நடந்துவிடுமா அல்லது பிற்காலத்தில்தான் நடக்குமா?” என்று தீர்க்கத்தரியிடம் கேட்கிறான். “அது பிற்காலத்தில்தான் நடக்கும்,” என்று தீர்க்கத்தரிசி சொல்கிறார். “அப்படியானால் நான் நிம்மதியாக, சமாதானமாகச் சாவேனே. அது போதும்,” என்று எசேக்கியா சொல்லுகிறான்.
சிதேக்கியாவின் நாட்களிலே அந்தச் சூறையாடல் நடைபெறுகிறது. அவனுடைய சில பிள்ளைகளைக் பாபிலோன் ராஜா கொல்கிறான். “சிதேக்கியாவின் குமாரரை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டி, சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி, அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குகளைப் போட்டு, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.” இதற்கான வித்தை விதைத்தது யார்? எசேக்கியா. அவன் விதைத்தது மட்டுமல்ல; பெரிய நிம்மதி. என்ன நிம்மதி? “என்னுடைய காலத்திலே இந்தத் துன்பம் நடைபெறாது” என்ற நிம்மதி. யாருடைய காலத்திலே நடைபெறும்? “யாரோ என்னுடைய இரண்டாம் தலைமுறை, மூன்றாம் தலைமுறை, ஐந்தாம் தலைமுறை, பத்தாம் தலைமுறையில் நடந்தால் நடக்கட்டும்.” அவனுடைய தலைமுறை செய்த செயலின், அவன் விதைத்த விதையின் அறுவடையை அறுத்தார்கள். இவன் இனிவரும் பலன்மேல் நோக்கமாயிராத ஒரு மனிதன்.
மோசே, “இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்” (எபிரேயர் 11:26). மோசே தனக்கு என்ன கிடைக்கும் என்பதிலே நோக்கமாயிருக்கவில்லை. Looking to a Reward.
இனிவரும் பலன் என்ன? “எனக்கு பாபிலோன் இராஜாவுடைய உறவு கிடைத்தது. அவருடன் நான் selfie எடுத்துக்கொள்வேன். அவரும் நானும் ஒரே ஊஞ்சலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம்,” என்று எசேக்கியா ராஜா சொல்வார். ஊடகங்களிலெல்லாம் எசேக்கியா இராஜாவைப்பற்றியே பேச்சு. எவ்வளவு பெரிய வல்லரசின் பேரரசர்கள், வெளியுறவுத்துறை அமைச்சர்கள் எசேக்கியாவை வந்து பார்த்தார்கள் என்பதே விவாதம்.
மனிதர்கள் தங்களுடைய ஊனக் கண்களைக்கொண்டு மதிப்பிடுவது, பல சமயங்களில், மூடத்தனமாக இருக்கும். இந்த ஊடக வெளிச்சத்துக்குப்பின்னால் எசேக்கியா ஒரு மாபெரும் விதையை விதைத்திருக்கிறான். அந்த விதை வளர்ந்து அதன் அறுவடை எவ்வளவு கொடூரமாக இருக்கும் என்பதைப் பார்க்க வேண்டுமானால் எரேமியாவின் புத்தகத்தை வாசிக்க வேண்டும். “ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் ஜனமாகிய குமாரத்தி கொலையுண்ணக் கொடுத்தவர்கள் நிமித்தம் நான் இரவும்பகலும் அழுவேன்,” (எரேமியா 9:1) என்று எரேமியா புலம்புகிறார். “என்னால் அழுது முடியவில்லை. எருசலேமின் அலங்கோலத்தை, எருசலேமின் அவலக் காட்சியை, பார்க்கும் போது என்னால் அழுது தீரவில்லை,” என்று எரேமியா தன் புலம்பலிலே எழுதுகிறான். பிற்காலத்திலே பாபிலோன் இராஜா வந்து எருசலேமை அக்கினிக்கு இரையாக்கி, கொள்ளையடித்து, சூறையாடி, பெண்கள், பிள்ளைகள் எல்லாரையும் வெட்டி, குத்தி, கொன்று குவித்தான். இது ஓர் எளிய எண்ணம்.
கர்த்தர் ஆபிரகாமை அழைத்தார். “கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்,” (ஆதி. 12:1, 2) என்றார்.
“இனிவரும் பலன்மேல் நோக்கமாய் இருப்பது” என்பதோடு எப்போதும் இன்னொரு கருத்தும் சேரும். அது என்னவென்றால் என்னுடைய பலன் மட்டுமல்ல, பிறருடைய பலனும் அதில் அடங்கும். இந்த இரண்டு எண்ணங்களையும் நீங்கள் உங்கள் மனதிலே பதித்துக்கொள்ளுங்கள். ஒன்று, இப்போது கிடைக்கும் பலன் அல்ல, இனிவரும் பலன். பெலன் அல்ல பலன். இப்போது கிடைக்கும் உடனடிப் பலன் அல்ல, இனிவரும் பலன். இன்னொன்று நான் பெறும் பலன் அல்ல, மற்றவர்கள் பெறும் பலன். இந்த இரண்டுமே சேர்ந்துதான் போகும். மற்றவர்கள் பெறும் பலனும், இனிவரும் பலனும் ஒன்றொடொன்று சேர்ந்துதான் இருக்கும். நான் பெறும் பலனும், உடனடிப் பலனும் ஒன்றொடொன்று சேர்ந்துதான் இருக்கும். உடனடிப் பலன் என்றால் அது யார் பெறுகிற பலன்?. நான் பெறுகிற பலன். இனிவரும் பலன் என்றால் அது யார் பெறுகிற பலன்? அது நான் பெற மாட்டேன் அந்தப் பலனை பிறர் பெறுவார்கள். நான் மரம் நட்டேன்; நான் சாப்பிடமாட்டேன் அதின் பழத்தை. யார் சாப்பிடுவார்கள்? என்னுடைய பிள்ளைகள்கூட சாப்பிட மாட்டார்கள். என்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகள் சாப்பிடலாம். அவர்கள் சாப்பிடும்போது அதைக் கண்டு களிகூர்வதற்கு நான் இருக்க மாட்டேன்.
உயர்ந்த சமுதாயத்திற்கும், தாழ்ந்த சமுதாயத்திற்கும் உள்ள வேறுபாடு அது எப்படிப்பட்ட மனிதர்களால் நிறைந்திருக்கிறது என்பதைப் பொறுத்தது. இனிவரும் பலனைக் காண்கின்ற சில மனிதர்கள் உள்ள சமுதாயம் உயர்ந்த சமுதாயம். உடனடிப் பலனையே கருத்தாய்க்கொண்டு வாழ்கின்ற மனிதர்கள் நிறைந்த சமுதாயம் தாழ்ந்த சமுதாயம். உயர்ந்த சமுதாயத்திற்கும் தாழ்ந்த சமுதாயத்திற்கும் வேறுபாடு இதுதான். எசேக்கியா ஒரு தாழ்ந்த சமுதாயத்தை உருவாக்கினான்.
ஆபிரகாமை கர்த்தர் அழைத்தார். ஆபிரகாமின் அண்ணன் மகன் ஒருவன் இருந்தான். அவனுடைய பெயர் லோத்து. இந்த உலகத்தோடு பின்னிப்பிணைந்திருக்கிற ஒரு சமுதாயத்தை விட்டு கர்த்தர் நம்மை வேறு பிரித்திருக்கிறார். இதை நீங்கள் நன்றாய் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். நாம் பாவத்திலிருந்து மட்டும் இரட்சிக்கப்படவில்லை, நாம் இந்த உலகத்திலிருந்தும் மீட்கப்பட்டிருக்கிறோம். உலகத்திலிருந்தும் இரட்சிக்கப்படுகிறோம். இது சில கிறிஸ்தவர்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கும். “மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள்,” என்று (அப். 2:40) பேதுரு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கின்ற மக்களுக்குச் சொல்லுகிறார் Save yourself from the crooked generation. பிலிப்பியர் 2:15இல் அப்போஸ்தலனாகிய பவுல் “ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள், கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்க வேண்டும்,” என்று கூறுகிறார். இந்தச் சந்ததி அல்லது இந்தத் தலைமுறை. இந்த உலகத்திற்கு தேவனுடைய வார்த்தைக் கொடுக்கிற பெயர் என்ன? கோணலும் மாறுபாடுமான சந்ததி.
“நீங்கள் ரொம்ப Judgmental ஆகப் பேசுகிறீர்கள்,” என்று சிலர் சொல்லலாம். ஆணும் பெண்ணும் திருமணம் செய்தாலும் அது திருமணம்தான், ஆணும் ஆணும் கலந்துகொண்டாலும் அதற்குப் பெயர் திருமணம்தான் என்று மக்கள் சுதந்திரமாகப் பேச முடிகிறது. இது கோணலும் மாறுபாடுமுள்ள தலைமுறை இல்லையா? “இது சரி, இது தவறு; இது கிறிஸ்துவுக்கு ஒத்தது, இது கிறிஸ்துவுக்கு ஒவ்வாதது,” என்று திட்டவட்டமான கோடு போடுகிற அறிவு தேவனுடைய மக்களாகிய நமக்கு இருக்க வேண்டும். “இது கிறிஸ்துவுக்கு உரியது, இது கிறிஸ்துவுக்கு உரியதல்ல; இது கிறிஸ்துவுக்கு ஒத்தது, இது கிறிஸ்துவுக்கு ஒவ்வாதது; இது ஆவிக்குரியது, இது மாம்சத்துக்குரியது,” என்பதை இனம்பிரிக்கிற அறிவு தேவ மக்களுக்கு வேண்டும்.
தேவன் ஆபிரகாமை அழைத்தபோது அவனுடைய அண்ணன் மகன் லோத்து ஆபிரகாமோடுகூடப் போனான். இந்த உலகத்தை விட்டு வேறுபிரிக்கப்படுவது என்றால் என்ன பொருள் என்பதற்கு ஆபிரகாம் ஒரு உதாரணம். தேவன் ஆபிரகாமை அழைத்தபோது என்ன சொன்னார்? “நீ ஊர் என்கிற உன் ஊரில் இருந்துகொள். உன் மாமா, மச்சான், பெரியப்பா, பெரியம்மா, அத்தை, சித்தி, சித்தப்பா எல்லோரும்கூட இருப்பார்கள். அங்கு உட்கார்ந்து ஒரே தேவனை வழிபடு,” என்று சொன்னாரா? அப்படிச் சொல்லியிருந்தால் அவர் அவர்களோடு சேர்ந்து கல்லையும், மண்ணையும், மரத்தையும் வழிபட்டிருப்பார். ஆபிரகாம் மட்டும் தனியாக இருந்து என்ன செய்திருப்பார்? அவருக்குக் கோயில் இருக்காது. “நான் ஒரே தேவனை வழிபடுகிறேன்,” என்று சொல்லிக்கொண்டு வீட்டில் உட்கார்ந்திருப்பாரா?
ஆபிரகாமை அங்கு விட்டுவைத்தால் அந்தக் கூட்டத்தில் ஆபிரகாமால் ஒரே தேவனை வெளிப்படுத்த முடியாது. என்று தேவனுக்குத் தெரியும். “நீ இந்தக் கூட்டத்தைவிட்டே, Physical ஆக வெளியே வந்துவிட வேண்டும்.” நன்றாய்க் கவனிக்க வேண்டும். புதிய ஏற்பாட்டில் தேவன் இப்படி நம்மை Physical ஆக வெளிவரச் சொல்வதில்லை. ஆனால், உள்ளான விதத்தில் நாம் என்ன சமுதாயமாக இருந்ததோ அதைவிட்டு நாம் வெளியே வந்துவிட வேண்டும்.
ஒரு கிறிஸ்தவனைப் பொறுத்தவரை இயேசு கிறிஸ்துவே நம்முடைய நாடு, இயேசு கிறிஸ்துவே நம்முடைய ஜாதி, இயேசு கிறிஸ்துவே நம்முடைய மொழி. “இவர் இந்தியன், இவர் தமிழன், இவர் என் மாவட்டத்துக்காரர், இவர் என் மொழி பேசுகிறார்,” என்ற வட்டத்துக்குள் கிறிஸ்தவன் சிக்கிக்கொள்ளமாட்டான். அவன் இதைவிட்டு வெளியேறவேண்டும். “என் வீடு நீர், என் நாடு நீர், என் தேடலும் நீரே, என் சாய்வு நீர், என் ஓய்வு நீர், என் ஆய்வும், தீர்வும் நீரே” என்ற பாடல் வரிகளை நான் மிகவும் பாராட்டுகிறேன். “என்னுடைய மொழி நீர், என்னுடைய நாடு நீர், என்னுடைய ஜாதி நீர், கிறிஸ்து ஒருவரைத் தவிர எந்த Identity யையும் நான் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை.” உலகப்பிரகாரமான சங்கங்கள், பேரவைகள் எல்லாவற்றையும்விட்டு தேவனுடைய மக்களாகிய நாம் வெளியே வந்துவிட்டோம்.
ஆபிரகாம் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்ததுபோல லோத்து இந்த உலகத்தைவிட்டுப் பிரியவில்லை. ஆபிரகாமோடு அவன் பயணம் செய்து வருகிறான். ஆனாலும் இந்த உலகத்திலே அவனுடைய ஈடுபாடுகள் நிறைய இருந்தன.
ஒரு கட்டத்தில் ஆபிரகாமுடைய மேய்ப்பருக்கும், லோத்தினுடைய மேய்ப்பர்களுக்கும் இடையே தகராறு, சச்சரவு, வரும்போது, “ஆபிராம் லோத்தை நோக்கி: எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர். இந்தத் தேசமெல்லாம் உனக்குமுன் இருக்கிறது அல்லவா? நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம்; நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன் என்றான்.” “நாம் பிரிந்துகொள்வோம். Choice ஐ நான் முதலாவது உனக்கே தருகிறேன். நீ எந்த இடத்திற்குப் போக விரும்புகிறாயோ அதை நீ தேர்ந்தெடுத்துக்கொள். நான் அந்த இடத்திற்கு வரமாட்டேன். என் மேய்ப்பர்கள் வரமாட்டார்கள். என் ஆடுமாடுகள் வராது. நீ தெற்கே போனால் நான் வடக்கே போகிறேன். நீ வடக்கே போனால் நான் தெற்கே போகிறேன்,” என்றான். அப்பொழுது, ஒரு நல்ல வசனம். “அப்பொழுது லோத்து தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து: யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக் கண்டான். கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிக்கும்முன்னே, சோவாருக்குப் போம் வழிமட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப் போலவும் எகிப்துதேசத்தைப்போலவும் இருந்தது. அப்பொழுது லோத்து யோர்தானுக்கு அருகான சமபூமி முழுவதையும் தெரிந்துகொண்டு, கிழக்கே பிரயாணப்பட்டுப் போனான்; இப்படி அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்தார்கள்.” லோத்து, தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்து, யோர்தான் ஓடுகிற சமவெளி செழிப்பாக இருப்பதைப் பார்த்து, அவன் அவைகளைத் தெரிந்தெடுத்தான்.
“லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்தபின்பு, கர்த்தர் ஆபிராமை நோக்கி: உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார். நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுத்து, உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும். நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எம்மட்டோ, அம்மட்டும் நடந்து திரி; உனக்கு அதைத் தருவேன் என்றார்.”“தேவனைப் பின்பற்றுவதற்காக எப்போதெல்லாம் இந்தப் பூமியிலே நாம் ஒன்றை இழக்கிறோமோ, நட்டப்படுகிறோமோ, அப்போதெல்லாம் தேவன் அவருடைய இருதயத்தை நமக்குத் திறந்துகாண்பிப்பார், விவரித்துக்காண்பிப்பார்.
ஆபிரகாம் இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்தான். லோத்து உடனடியாக வரும் பலன்மேல் நோக்கமாயிருந்தான். ஆபிரகாம் ஒரு நாளும் “கன்னலும், தேனும், கனியும், இன்பாலும்” விளைகின்ற ஒரு பூமியிலே ஆபிரகாம் வாழவில்லை. அவன் கடைசிவரை கூடாரவாசியாக இருந்தான். நகரம் என்பது நிலையான ஒரு வீட்டைக் கட்டி அங்கு வாழ்வது. ஆபிரகாமுடைய வாழ்க்கை நிலையான நகரத்தில் ஒரு நிலையான வீட்டைக்கட்டி வாழ்ந்தது இல்லை. அவனுடைய வாழ்க்கை கூடாரத்தின் வாழ்க்கை, பலிபீடத்தின் வாழ்க்கை என்று எழுதியிருக்கின்றது. நகரம் என்றால் நமக்கு ஜாதி ஜனம் இருக்கும். ஒரு கஷ்டம் நஷ்டம் என்றால், உடனே மக்கள் ஓடி வருவார்கள். ஆனால் கூடாரம் என்றால் எங்கு போனாலும் நாம் அந்நியனாகவும், பரதேசியாகவும்தான் பார்க்கப் படுவோம். நகர வாழ்க்கை என்பது பாதுகாப்பான வாழ்க்கை. ஒரு அவசரத்திற்கு ஒரு ஆஸ்பத்திரிக்குப் போகலாம். பக்கத்திலே கடைகள் இருக்கும். Supermarket இருக்கும். கூடாரவாசிகளுடைய வாழ்க்கை அப்படிப்பட்ட ஜாதிஜனங்களுடைய ஆதரவும் இருக்காது.
“எனக்கிருக்கிறதே இரண்டு மூன்று சொந்தக்காரர்கள்; அவர்களைக்கூட நீங்கள் வெட்டிவிடச் சொல்லுவீர்கள் போலிருக்கிறது!” என்று நீங்கள் மனம் புண்பட்டுவிட வேண்டாம். நான் அதைச் சொல்லவில்லை. ஆனால் “இவன் வெட்டிவிடக்கூடிய ஆள்” என்று நம் சொந்தக்காரர்களுக்குத் தெரிய வேண்டும். “இவன் இதை இன்னும் வெட்டிவிடவில்லை; ஆனால் வெட்டிவிடுவதற்குத் தயாராக இருக்கிறான்,” என்று தெரிய வேண்டும்.
தேவன் வாக்குறுதி செய்த அந்தப் பெரிய தேசத்தை ஆபிரகாம் எப்பொழுது சுதந்தரித்துக் கொண்டான்? லோத்து உடனடியாகச் சுதந்தரித்துக்கொண்டான். The moment he chose. யோர்தான் பாய்ந்தோடுகிற சமவெளி எங்கும் பச்பை பசேல் என்றிருப்பதைத் தெரிந்துகொண்டான்.
“கர்த்தர் எங்களை ஆசீர்வதித்தார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். இதுவரை நாங்கள் பட்டபாடுகளுக்கெல்லாம் கர்த்தர் எங்களை ஆசீர்வதித்தார். என் பிள்ளை இப்போது BE படித்துவிட்டான். என் மகள் MBBS படித்துவிட்டாள். மருமகள் இந்த ஊரில் இருக்கிறாள், என் மருமகன் இந்த ஊரில் இருக்கிறான், இன்ன படித்திருக்கிறான். நான் வீடு கட்டிவிட்டேன். நான் பரதேசியாய் இந்தக் கையும் கோலுமாய் சென்னைக்கு வந்தேன். இப்போது இந்தப் பரிவாரத்தை உடையவன் ஆனேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா!” என்று லோத்து சாட்சிகொடுக்கிறார். இது ஒரு கிறிஸ்தவனுடைய சாட்சி என்று நினைக்காதீர்கள். இது லோத்து கொடுக்கிற சாட்சி. “நாங்கள் கர்த்தருக்காக கல்தேயரிலிருந்த ஊராகிய ஊரைவிட்டு வந்தோம். அங்கு நாங்கள் நல்ல வீட்டில் இருந்தோம். இங்கு நாங்கள் எப்போது பார்த்தாலும் நடந்து, கூடாரங்களில் வாசம் பண்ணினோம். கர்த்தர் எனக்கு ஒரு நிலையான நகரத்தையும், வீட்டையும், மனைவி பிள்ளைகளையும், மருமக்களையும் கொடுத்தார்,” என்பது லோத்தின் சாட்சி. இது ஆசீர்வாதமா? லோத்து நீதிமானா, அநீதிமானா? நீதிமான் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்கிறார். “நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்து,” என்று 2 பேதுரு 2:8இல் பேதுரு லோத்தைப்பற்றி எழுதுகிறார். சோதோம் கொமோரா நல்ல பட்டணங்கள் இல்லை. ஒழுக்கங்கெட்ட நகரங்கள். ஆனால், அந்த மக்களுடைய அநீதியான, ஒழுக்கமில்லாத வாழ்க்கையைப் பார்த்து, லோத்து தன்னுடைய இருதயத்திலே வாதிக்கப்பட்டார். ஆனால், உடனே தன்னுடைய மனைவி, மக்களிடத்தில், “நாம் இந்தப் பட்டணத்தில் வாழவே கூடாது. நாம் நம்முடைய சித்தப்பா ஆபிரகாமைவிட்டுப் பிரிந்து வந்தது தவறு. நாம் அவரோடுகூடச் சேர்ந்துப் பயணித்திருக்க வேண்டும். வாருங்கள், திரும்பிப் போவோம்,” என்று சொல்லவில்லை.
அதற்குக் காரணம் திருமதி லோத்து. இவர் அந்தக் குடும்பத்தில் மிகவும் பலமான ஆள். அவருக்கு சோதோம் கொமோராவில் நிறைய social circle உண்டாயிற்று. அதை விட்டுவிட்டு வருவதற்கு அவருக்கு மனமில்லை, இயலவில்லை. social circle என்றால் அவர்கள் பண்டிகை கொண்டாடுவார்கள். பண்டிகை கொண்டாடும்போது பக்கத்தில் உள்ளவர்கள் பண்டங்கள் பரிமாறிக்கொள்வார்கள். லோத்து மிகவும் வசதிபடைத்த மனிதன். அதனால் அவர்கள் குடும்பத்துக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள். ஆனால், லோத்துவுக்கு நண்பர்கள் இல்லை. திருமதி லோத்துவுக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள். பெரிய பெரிய பிறந்த நாள் விழாக்கள். அதற்கு திருமதி லோத்துவைக் கூப்பிட்டார்கள். அவர் உரையாற்றினார். இதெல்லாம் வேதாகமத்தில் எழுதியிருக்கிறதா என்று கேட்காதீர்கள். இதெல்லாம் என்னுடைய பரிசுத்த கற்பனை.
ஒன்று, லோத்துவின் மனைவி பெரிய தப்பெல்லாம் செய்ததாக எனக்குத் தெரியவில்லை. அவருடைய இருதயம் சோதோம் கொமோராவிலே நன்றாய் வேரூன்றிவிட்டது. ஒரு நாள் சோதோம் கொமோராவின் பாவம் வானம்வரை எட்டினபோது கர்த்தர் தம்முடைய தூதர்களை அனுப்பினார். மேற்பார்வையிட கர்த்தரே நேரடியாக வந்து விட்டார். இரண்டுதூதர்களும் இயேசு கிறிஸ்துவும் இறங்கி விட்டார்கள். யார் தூதர்கள், யார் கர்த்தர் என்று மூன்று பேரை ஆபிரகாமால் இனங்காண முடியவில்லை. ஒருவர் கர்த்தர், இரண்டுபேர் தூதர்கள். ஆபிரகாமுடைய வீட்டின் வழியாக, கூடாரம் வழியாகத்தான் அவர்கள் கடந்துபோகிறார்கள். ஆபிரகாம், “வந்து, கொஞ்சம் இளைப்பாறிவிட்டுப் போங்கள்,” என்று சொல்கிறார். இளைப்பாறுவதற்காக வருகிறார்கள். நல்ல உணவு சமைத்துக் கொடுக்கிறார். தான் என்ன நோக்கத்திற்காகக் கீழே இறங்கி வந்தாரோ, அந்த நோக்கத்தை ஆபிரகாமிடம் சொல்லாமல், கர்த்தரால் இருக்க முடியவில்லை. ஏனென்றால் ஆபிரகாம் கர்த்தர்மேல் கொண்ட அன்பினாலும் விசுவாசத்தினாலும் இந்த உலகத்தை உண்மையிலே துறந்து, இழந்து கர்த்தரை உத்தமமாகப் பின்பற்றுகிறான். அதனால் தான் எதற்காக வந்தேன் என்பதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ என்று சொல்லி, “நான் சோதோம் கொமோராவை அழித்துவிடுவதற்காக வந்திருக்கின்றேன்,” என்று சொல்லும்போது, ஆபிரகாம் கர்த்தரோடு பரிந்துபேசுகிறான். கர்த்தரோடு ஒரு பேரம் பேசி கடைசியில் “ஐந்து நீதிமான்கள் இருந்தால்” என்று வந்து நிற்கிறான். ஆபிரகாமுடைய கணக்கு எப்படிஇருந்திருக்கும்? லோத்து, லோத்துவினுடைய மனைவி, இரண்டு மகள்கள், அந்த மகள்களுக்குத் திருமணம் ஆகியிருந்தால் இரண்டு மருமகன்கள்.ஆக மொத்தம் ஆறு நீதிமான்களாவது அந்த ஊரில் இருப்பார்கள் என்பதுதான் அவருடைய கணக்கு.
ஒரு மனிதன் நீதிமான் அல்லது அவனுடைய பிள்ளைகள் நீதிமான்கள் என்பது அவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கைத் துணையைத் தெரிந்தெடுக்கிறார்கள் என்பதில் விளங்கும். நான் நீதிமான், என்னுடைய பிள்ளைகள் நீதிமான்கள், என்னுடைய மருமக்கள் அநீதிமான்கள், ஒழுக்கமற்றவர்கள் என்றால் நிச்சயமாக அவன் நீதிமான் இல்லை.
ஆனால், அங்கு ஆறு நீதிமான்கள் இல்லை. ஆகவே கர்த்தர் அக்கினியை இறக்கி சோதோம் கொமோராவை அழிக்கிறார். லோத்து இதைத் தன்னுடைய பிள்ளைகளிடம் சொல்லுகிறான். தன் மருமக்களிடம் சொல்லுகிறான். “கர்த்தர் நகரத்தை அழிக்கப்போகிறார், ஓடுவோம், வாருங்கள்,” என்று கூப்பிடுகிறான். அவர்கள் சிரிக்கிறார்கள், பரிகாசம் பண்ணுகிறார்கள், “ஓஹோ, ஹோ. கந்தகம் வரப்போகிறதா, நகரம் அழியப்போகிறதா? இந்த சென்னையே அழிந்துவிடப்போகிறதாம், நியூயார்க்கே அழிந்துவிடப்போகிறதாம், இவர் சொல்லிவிட்டார்!” என்று கிண்டல் செய்திருப்பார்கள். Unsinkable ship என்று ஒரு கப்பலுக்குப் பெயரிட்டார்கள். அந்தக் கப்பல் தன் முதல் பயணத்திலேயே மூழ்கியது. Unsinkable ship, Undestroyable cities, unreachable tower என்று மனிதர்கள் கட்டிக்கொண்டேப்போகலாம்.
கடைசியாக கர்த்தர் பலாத்காரமாக லோத்துவையும், அவனுடைய மனைவி மக்களையும் சோதோம் கொமோராவிலிருந்து வெளியே இழுத்துக்கொண்டுப் போகிறார். அப்போதும்கூட திருமதி லோத்துவால் ஓடிவர முடியவில்லை. அவள் ஓடிவந்தபோதும் அவளுடைய இருதயம் நகரத்தில்தான் இருக்கிறது. அவள் திரும்பிப் பார்க்கிறாள். திரும்பிப் பார்த்து அவள் உப்புத்தூண் ஆனாள் என்று எழுதியிருக்கிறது. நான் அதை நம்புகிறேன். அது எப்படி அவள் உப்புத்தூணானாள்? ஏதோவொரு தூணாக மாறிவிட்டாள். அவளால் அந்த இடத்தைவிட்டுப் போகமுடியவில்லை.
உடனடியாக வரும் பலன். இப்போது எனக்கு என்ன கிடைக்கும்? ஆபிரகாம் இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்தான். அவனுடைய வாழ்க்கை முழுவதும் அவன் அந்தப் பலனைப் பெறவில்லை. இதுதான் முக்கியமான காரியம்.
எபிரேயர் 11:8முதல் 16வரை நாம் வாசிப்போம். “விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான். விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போலச் சஞ்சரித்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்; ஏனெனில், தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான். விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள். ஆனபடியால், சரீரஞ்செத்தவனென்று எண்ணத்தகும் ஒருவனாலே, வானத்திலுள்ள பெருக்கமான நட்சத்திரங்களைப்போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப்போலவும், மிகுந்த ஜனங்கள் பிறந்தார்கள். இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள். இப்படி அறிக்கையிடுகிறவர்கள் சுயதேசத்தை நாடிப்போகிறோம் என்று தெரியப்படுத்துகிறார்கள். தாங்கள் விட்டுவந்த தேசத்தை நினைத்தார்களானால், அதற்குத் திரும்பிப்போவதற்கு அவர்களுக்குச் சமயங்கிடைத்திருக்குமே. அதையல்ல, அதிலும் மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்; ஆகையால் தேவன் அவர்களுடைய தேவனென்னப்பட வெட்கப்படுகிறதில்லை.”
இவர்களெல்லாரும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளை அடையவில்லை. இது என்ன விசுவாசம்? கர்த்தரிடத்தில் ஜெபம் பண்ணினால், “ஆண்டவரே நீர் வாக்குத்தத்தம் பண்ணினீர். ஆகையால், நீர் அதைத் தருவீர், தந்துவிட்டீர். அல்லேலூயா!” என்றுதானே ஜெபம் பண்ணவேண்டும். அவர் ஒரு வாக்குறுதி பண்ணினார். அதை அடையாமல் போகிற வாழ்க்கை தோற்றுப்போன வாழ்க்கை இல்லையா? தேவன் யாருடைய தேவன் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படவில்லை என்றால், ஆபிரகாமின் தேவன் என்று சொல்லிக்கொள்ள அவர் வெட்கப்படவில்லை.
நான் இப்படிச் சொல்ல விரும்பவில்லை. ஆனால் “நான் லோத்தினுடைய தேவன் என்று சொல்லிக்கொள்ள தேவன் ஒருவேளை வெட்கப்படலாம்,” என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், அவன் பரம தேசத்தை நாடவில்லை. இது நான் சொல்ல விரும்பின ஒரேவொரு குறிப்பு. உடன் வரும் பலன் அல்ல. தேவனுடைய மக்கள் இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருப்பவர்கள்.
நான் வாலிபர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். “நான் கர்த்தருக்காக பெரிய வேலையெல்லாம் செய்யவில்லை,” என்று சொல்லலாம். ஆனால், நீங்கள் இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருப்பவர்கள் என்றால், இன்றைக்கு உங்கள் வாழ்க்கையை நீங்கள் செப்பனிடுவீர்கள், பண்படுத்துவீர்கள். “நான் ஏன் என் வாழ்க்கையைப் பண்படுத்தவேண்டும்? கல்லூரிக்குப் போகிறேன், வேலைக்குப் போகிறேன். எங்களுடைய வாழ்க்கை 24X7 பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது. கல்லூரிக்குப் போக ஆரம்பித்துவிட்டால் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்படியே கொடராட்டினம் சுற்றுவதுப்போல கல்லூரி வாழ்க்கை சுற்றிவருகிறது,” என்று சொல்லலாம். “வேலைக்குப்போனபிறகு கொஞ்சம் நேரம் கிடைக்கும். அப்போது நான் என்னுடைய வாழ்க்கையைப் பண்படுத்துவேன்,” என்று நீங்கள் நினைக்கலாம். வேலைக்குப் போய்ப் பாருங்கள் அல்லது வேலைக்குப் போகிறவர்களைக் கேட்டுப்பாருங்கள். அப்போது “கல்லூரியில் படித்த நாட்களிலாவது கொஞ்சம் நேரம் கிடைத்தது. வேலைக்குப்போகும்போது நேரமே கிடைக்கவில்லை,” என்று சொல்வீர்கள். அப்புறம் திருமணம் செய்வீர்கள். திருமணம் செய்தவர்களிடம், “நேரம் கிடைக்கிறதா?” என்று கேட்டுப்பாருங்கள். “கல்லூரியில் படித்த நாட்கள்தான் பொன்னான நாட்கள். வேலைக்குப் போகிற நாளில் ஒரளவிற்குத்தான் பரலோகம். திருமணமானபிறகு நம்முடைய நேரம்கூட நமக்குச் சொந்தமில்லை. அவளுக்குப் பதில் சொல்ல வேண்டும், இவனுக்குப் பதில் சொல்ல வேண்டும், இன்னொரு ஆளுக்குப் பதில் சொல்ல வேண்டும்,” என்று சொல்வார்கள்.
எனவே, உங்கள் வாலிபம் தொடங்கி, உங்கள் வாழ்க்கையைப் பண்படுத்துங்கள். “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும். Guard your heart with all diligence, for from it issues forth springs of life” நீதிமொழிகள் 4:23. இருதயத்தைக் காத்துக்கொள்ளவில்லை என்றால் என்னவாகும்? இது அங்கும் இங்கும் நாம் செய்ய வேண்டிய செயலைப்பற்றிச் சொல்லவில்லை. “நீங்கள் அங்குபோய் கூட்டம் நடத்துங்கள், இங்கு போய் கூட்டம் நடத்துங்கள், அதைச் செய்யுங்கள், இதைச் சாதியுங்கள்,” என்று சொல்லவில்லை. ஆனால் இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருக்கிறவன் எதை பண்படுத்துவதில், பழக்குவிப்பதில் ஆரம்பிக்கிறான் என்றால், தன் இருதயத்தைக் காத்துக்கொள்வதில் ஆரம்பிக்கிறான்.
இருதயத்தைக் காத்துக்கொள்வது, இருதயத்தைப் பண்படுத்துவது என்றால் என்ன பொருள்? “எதை நாம் விரும்புகிறோம், எதை நாம் விரும்பவில்லை; எப்படி நம்முடைய நேரத்தைச் செலவிட விரும்புகிறோம்; எப்படிப்பட்ட நபர்களோடு நாம் நேரத்தைச் செலவிட விரும்புகிறோம்; என்னென்ன நடவடிக்கைகளுக்கு நம்முடைய நேரத்தைச் செலவிட விரும்புகிறோம்; துணிமணி உட்பட என்னென்ன பொருள்களை நாம் விரும்புகிறோம்” என்று எல்லா விதத்திலும் நம் இருதயத்தை நாம் காத்துக்கொள்ள வேண்டும். நான் தருகிற தரத்தை நீங்கள் பின்பற்ற வேண்டாம். ஆனாலும் நான் சொல்கிறேன். இரண்டு மூன்று துணிகள் இருந்தால் போதும். துவைத்துப்போட்டு நாம் வாழ்ந்துவிடலாம். நான் இதைச் சட்டமாகச் சொல்லவில்லை அல்லது“, மூன்று துணிமணிகளுக்குமேல் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று கர்த்தர் உரைக்கிறார்,” என்ற தொனியில் நான் சொல்லவில்லை. வேலைக்குப் போகிற ஆட்கள் குறைந்தது ஏழு வைத்துக்கொள்ளலாம். ஏனென்றால், வார இறுதியில் நீங்கள் துவைத்துக்கொள்ளலாம்.
ஆனால், படிக்கிற சகோதர சகோதரிகளுக்கு, இரண்டு மூன்று துணிகள் இருந்தால் அது போதும், நாம் துவைத்து வைத்துக்கொள்ளலாம். “இது முடியாது” என்று நீங்கள் நினைக்க வேண்டாம். உங்கள் இருதயத்தை நீங்கள் அப்படிப் பழக்குவியுங்கள், உங்கள் இருதயத்தை நீங்கள் அப்படிப் பண்படுத்துங்கள்.
ஒரு ரூபாய் இல்லையென்றால்கூட சந்தோஷம். எஸ்றாவைப்பற்றி ஒரு வார்த்தை எழுதியிருக்கிறது. நாம் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போனபின், அங்கே 70 வருடங்கள் அடிமை வாழ்க்கை வாழ்ந்தார்கள். ஆயினும், அங்கு பாபிலோனுடைய வசதிகள் அவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. 70 வருடங்களுக்குப்பின் “நாம் திரும்ப எருசலேமுக்குப் போவோம்,” என்று சொன்னபோது நிறையப்பேர் வர மறுத்துவிட்டார்கள். “இங்கே எல்லாம் சவுகரியமாக இருக்கிறது. வசதி வாய்ப்புகள் இருக்கின்றன. எருசலேமில் இப்போது என்ன இருக்கும்?. ஒன்றும் இருக்காது. அங்கு வெறும் குப்பைக்கூளங்களும், மண்மேடுகளும்தான் இருக்கும். அதனால் இங்கேயே வெளிநாட்டில் வாழும் யூதர்களாக வாழ்ந்துவிடுகிறோம்,” என்று சொன்னார்கள். ஆனால், ஒரு சில மக்கள் எருசலேமுக்குத் திரும்பினார்கள். தங்கள் எருசலேமுக்குத் திரும்பவேண்டியது அவசியம் என்று அவர்கள் நம்பினார்கள். திரும்பின மக்களேடு வந்தவர்தான் எஸ்றா.
தேவனுக்கு உகந்த ஒரு வாழ்க்கை எப்படி வாழவேண்டும் என்று எருசலேமுக்குத் திரும்பின மக்களுக்குத் தெரியவில்லை. ஏனென்றால் 70 வருடம் ஒரு கூட்டம் மக்கள் விக்கிரக ஆராதனை செய்கிற ஒரு நகரத்திலே, ஒரு நாட்டிலே, வாழ்ந்தால், அவர்களுக்குத் தேவனைப்பற்றி என்ன அறிவு இருக்கும்? ஒன்றும் பெரியதாய் இருக்காது. தேவனைப்பற்றி ஓர் இருதயம் இருந்தது; ஆனால், பெரிய அறிவு இல்லை. எஸ்றா அவர்களுக்குத் தேவனுடைய வார்த்தையைப் போதித்தார். எஸ்ராவைப்பற்றி என்ன எழுதியிருக்கிறது தெரியுமா? “கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்” (எஸ்றா 7:10).
உங்கள் இருதயத்தின் சாய்வுகளை நீங்கள் தயவுசெய்து regulate பண்ணுங்கள், சீர்பண்ணுங்கள். வேலைக்குப் போகும்போது அல்லது திருமணமானபிறகு அல்லது பிள்ளைகளைப் பெற்றபிறகு எப்படிப்பட்ட வாழ்க்கை வாழப்போகிறீர்கள் என்பது உங்களுடைய இளம் வயதிலேயே தீர்மானிக்கப்படுகிறது. உங்களுடைய எதிர்காலம் இன்று உங்களுடைய இருதயத்தின் சாய்வுகளை நீங்கள் எப்படிச் சீர்படுத்துகிறீர்கள் என்பதைப்பொறுத்தது.
என் வீடு நீர், என் நாடு நீர், என் தேடலும் நீரே; அடுத்தது, என் சாய்வு நீர், என் ஓய்வு நீர், என் ஆய்வும், தீர்வும் நீரே. என் சாய்வு நீர் என்றால் என் இருதயம் எப்போதும் உம்மை நோக்கிச் சாய்ந்திருக்கிறது என்று பொருள்.
எஸ்றா தன் இருதயத்தை என்றைக்குப் பக்குவப்படுத்தினார்? எல்லாரும் பாபிலோனிலிருந்து எருசலேமுக்குத் திரும்பினபிறகு இப்போது அவர்களுக்குத் தேவனுடைய வார்த்தையைப் போதிப்பதற்கு ஓர் ஆள் தேவைப்பட்டது. உடனே அவர் போனார். ஒரு concordance bible ஒன்று வாங்கினார். ஒரு நல்ல Mac book ஒன்று வாங்கினார். Search பண்ணி உடனே செய்திகள் எல்லாம் ஆயத்தம்பண்ண ஆரம்பித்துவிட்டார். அப்படியா? எங்கு பழக்கப்படுத்தியிருந்தான்? அவன் இருதயத்தை அவனுடைய இளம்வயது முதற்கொண்டு பக்குவப்படுத்தியிருந்தான். அங்கு இப்படி எழுதப்படவில்லை. For long years he has prepared his heart.
எஸ்றா அங்கு வரும்போது வயது நாற்பது அல்லது 50 இருக்கலாம். 50 வயதில் அவன் பெறுகிற பலனுக்காக அவன் எப்போது விதைக்க ஆரம்பித்திருந்தான்?. தேவனுடைய வார்த்தையை ஆராயவும், அதின்படிச் செய்யவும், அதைப் போதிக்கவும் எஸ்றா தன்னுடைய இருதயத்தை பக்குவப்படுத்தினான்.
நம்முடைய பிள்ளைகளை நாம் பக்குவப்படுத்த வேண்டும். நம்முடைய பிள்ளைகள் திடுதிடுப்பென்று தங்கள் இருதயங்களைப் பக்குவப்படுத்திவிடமாட்டார்கள். அவர்கள் எப்படிப்பட்ட மனிதர்களாக உருவாகப் போகிறார்கள் என்பதற்குரிய விதை இப்போதே விதைக்கப்படுகிறது?
அருமையான சகோதர சகோதரிகளே, பிலிப்பியர் இரண்டாம் அதிகாரத்தில் பவுல்சொல்கிற சில வசனங்களை மட்டும் நான் மேற்கோள் காட்டி முடித்துவிடுகிறேன். தீமோத்தேயுவைப்பற்றி அவர் சொல்கிறார். “அதேனென்றால், உங்கள் காரியங்களை உண்மையாய் விசாரிக்கிறதற்கு என்னைப்போல மனதுள்ளவன் அவனையன்றி வேறொருவனும் என்னிடத்திலில்லை.. மற்றவர்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள்.”
உடனடியாக வரும் பலன்மேல் நோக்கமாயிராமல் இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருப்பது எப்படி தேவனுடைய மக்களுடைய ஒரு குணமோ, அதுபோல எனக்குக் கிடைக்கும் பலன்மேல் நோக்கமாயிராமல் பிறருக்கு, மற்றவர்களுக்கு, கிடைக்கும் பலன்மேல் நோக்கமாயிருப்பது தேவனுடைய மக்களுடைய இன்னொரு குணம். எனக்கு என்ன கிடைக்கும்? “தனக்கு மிஞ்சித்தான் தானதருமம்,” என்று இந்த உலகம் சொல்லும். “நாளைக்குக் கிடைக்கும் பலாக் காயைவிட இன்றைக்குக் கிடைக்கும் கடலைக்காய் நல்லது,” என்று இந்த உலகம் சொல்லும். அதாவது இனிவரும் பலனைவிட உடனடியாக வரும் பலன் நல்லதாம். இன்று குலுக்கல் நாளை இலட்சாதிபதி எல்லாம் பழைய காலம்; இன்று குலுக்கல் இன்றே இலட்சாதிபதிதான் இப்போது கோஷம். நாளைக்குக் கிடைக்கும் பலாக் காயைவிட இன்றைக்குக் கிடைக்கும் களாக்காய் நல்லது என்பதுதான் இந்த உலகத்தின் எண்ணம். “இனிவரும் பலன்… 40 வயதில் என்ன பலன் கிடைக்கும், 80 வயதில் என்ன பலன் கிடைக்கும், என்னுடைய தலைமுறைகளுக்கு என்ன கிடைக்கும் என்பதைபற்றியெல்லாம் கவலைப்படக்கூடாது. இன்று கிடைக்கும் என்ன காய் வேண்டுமானாலும் நல்லது,” என்பது உலகத்தின் போக்கு. தேவமக்களுடைய இருதயம் விசாலமாக இருக்க வேண்டும். அதே பிலிப்பியர் இரண்டாம் அதிகாரத்தில் “அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக. கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது,” என்று பவுல் சொல்லுகிறார். பவுல் வாழ்ந்த காலத்திலேயே தேவனைச் சேவித்த, கிறிஸ்துவைச் சேவித்த மக்களிடையேகூட அப்படிப்பட்ட ஒரு இருதயத்தைக் காண்பது அரிதாக இருந்தது. அதனால்தான் தீமோத்தேயுவைப் பாராட்டவேண்டியிருந்தது. “மற்றவர்கள் கிறிஸ்துவுக்குரியவைகளை அல்ல, தங்களுக்கு உரியவைகளையே தேடுகிறார்கள்,” என்று இயேசு கிறிஸ்துவை அறியாத மக்களையோ, இயேசு கிறிஸ்துவை சேவிக்காத மக்களைப்பற்றியோ பவுல் எழுதவில்லை. இயேசு கிறிஸ்துவை அறிந்த, இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற, ஏன் இயேசு கிறிஸ்துவை சேவிக்கிற மக்களைப்பற்றி அவர் எழுதுகிறார். “அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்,” என்று எழுதுகிறார். இன்றைக்கும் தேவனுடைய மக்கள் பலருடைய தேவன் அவர்களுடைய வயிறு. வயிறு என்றால் சாப்பாட்டைச் சொல்லவில்லை. இந்த உலகத்திற்குரிய காரியங்கள். இந்தப் பூமிக்குரிய காரியங்கள். இங்கு அவர்கள் செல்வாக்காக இருக்க வேண்டும், இங்கு செழிப்பாக இருக்க வேண்டும். வயிற்றுக்குக் கிடைக்க வேண்டும். இங்கு கார் இருக்க வேண்டும், விசிறி இருக்க வேண்டும், ஏ.சி. இருக்க வேண்டும். இங்கு நமக்கு சொத்து சுதந்தரம் இருக்க வேண்டும். பாதுகாப்பு இருக்க வேண்டும். ஒரு நல்ல Social circle இருக்க வேண்டும். அந்தப் பேராசிரியர் என் மாமா, அந்த அதிகாரி என் அண்ணனோடுகூடப் படித்தவர். இப்படி network இருந்தால்தான் அவர்களுடைய மனதில் நிறைவு இருக்கும்.
நமக்கு எந்தப் பேராசிரியரையும் தெரியாது, எந்த முதல்வரையும் தெரியாது. எந்த சட்டமன்ற உறுப்பினரையும் தெரியாது, எந்தப் பாராளுமன்ற உறுப்பினரையும் தெரியாது, we are very powerless people. அல்லேலூயா, 1 கொரிந்தியர் 1ஆம் அதிகாரத்தின்படி எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார். மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார்.” நாம் அந்த categoryஐச் சேர்ந்தவர்கள். Praise the Lord. ஆகவே, நாம் நமக்குரியவைகளைப்பற்றியே அக்கறைப்படாமல் மற்றவர்களுக்குரியவைகளைப்பற்றி அக்கறைப்பட்டால் நம்முடைய வாழ்க்கை செழிப்பாக இருக்குமா?. தேவனுடைய கோட்பாடு நிச்சயமாக செழிப்பாக இருக்கும். எவன் நீர்ப்பாய்ச்சுகிறானோ, அவனுக்கு நீர்ப்பாய்ச்சப்படும். கொடுங்கள் அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும். தேவனைக் குறித்தும், தேவனுடைய காரியங்களைக்குறித்தும், தேவனுடைய மக்களைக்குறித்தும் நீங்கள் அக்கறையுள்ளவர்களாக இருங்கள். தேவன் உங்களைக்குறித்து அக்கறையுள்ளவராக இருப்பார். நான் இதை மந்திரம்போல சொல்லவில்லை. உங்கள் வாழ்க்கையிலே நீங்கள் இதை ருசித்துப் பாருங்கள்.
தேவனுடைய மக்களுக்கு உங்கள் இருதயங்களை நீங்கள் விசாலமாக்குங்கள். “அவர்களுடைய தேவை என்ன? ஒரு சிலருடைய தேவை என்ன? நான் அதற்காக என்ன செய்யலாம்? நான் எப்படி கைலாகு கொடுக்கலாம்?. என்னுடைய பங்கு என்ன?” என்று நீங்கள் சிந்தியுங்கள். தேவன் ஒரு நாளும் உங்களை வெட்கப்படுத்த மாட்டார். அதுபோல இன்றிலிருந்து ஐந்து வருடம், பத்து வருடம், இருபது வருடம் கழித்து தேவனுடைய மக்களுக்கு எது ஆசீர்வாதமாக இருக்கும், எது நன்மையாக இருக்கும், எது பயனுள்ளதாக இருக்கும் என்று பாருங்கள். இன்றைக்கு நாம் விதைப்போம்.
கடைசியாக இதைச் சொல்லி முடித்து விடுகிறேன். கலாத்தியர் ஆறாம் அதிகாரத்திலே உண்டு. மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான். நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்.” இன்றைக்கு அறுவைடையைக்குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஆனால் இன்றைக்கு என்ன விதைக்கிறோம் என்பதைக்குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவனுக்காக நாம் இன்று விதைக்கிறோம், தேவனுடைய மக்களுக்காக விதைக்கிறோம், நம்முடைய இருதயத்தை நாம் எப்படி சீர்படுத்துகிறோம்? நம்முடைய இருதயத்தை நாம் எப்படிப் பழக்குவிக்கிறோம்? தேவனுடைய மக்களுக்கு நாம் எந்தவிதத்திலே ஆசீர்வாதமாயிருக்கிறோம்? இன்றைக்குப் பெரிய ஆசீர்வாதமாக இல்லாமல் போகலாம், இன்றைக்கும் ஆசீர்வாதம்தான். கூட்டங்களுக்காக இந்த இடத்தைச் சுத்தம்செய்கிறோம். இருக்கைகளை ஆயத்தம்செய்கிறோம். ஆசீர்வாதம். தேவன் ஒரு நாளும் இதை அற்பாக எண்ணமாட்டார். இருக்கைகளைத் துடைப்பது ஆசீர்வாதம், தேவனுடைய மக்களுக்காக.
நான் அடிக்கடி சொல்லுவேன், தேவனுடைய மக்கள் கூடிவருகிற இடத்திலே நாம் முதலாவது எதற்கு அக்கறை செலுத்த வேண்டும்? கழிவறை, குப்பைபோடுகிற இடம். ஏனென்றால் அவர்கள் பரிசுத்தவான்கள். எல்லா மதிப்பிற்கும், எல்லா அன்பிற்கும், எல்லாக் கனத்திற்கும், எல்லா உபசரிப்புக்கும் உரியவர்கள். இன்றைக்கும் நாம் ஆசீர்வாதமாக இருக்க வேண்டும். ஐந்து வருடம், பத்து வருடம், ஐம்பது வருடம் கழித்தும் தேவனுடைய மக்களுக்கும், தேவனுக்கும், தேவனை அறியாதவர்களுக்கும் நாம் ஆசீர்வாதமாக இருக்க வேண்டும். பரிசுத்த ஆவியானவர் இந்த வார்த்தையை நம் இருதயத்திலே இருத்துவாராக.
உடனடியாக வரும் பலன் அல்ல, இனிவரும் பலன். இன்றைக்குத் தேவனுடைய மக்களுக்கு உடனடியாக வரும் பலனைக் காண்பித்து அவர்கள் கண்களை மயக்குவது சாத்தானுடைய பெரிய தந்திரம். மோசேயைவிட நாம் யாரும் பெரியவர்கள் அல்ல. அவன் எகிப்தின் இளவரசன். ஆனால் அவன் எகிப்தின் பொக்கிஷங்கள்மேல் சந்தோஷமாய் இராமல், இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து கிறிஸ்துவிநிமித்தம் வருகிற நிந்தையையே அவன் தெரிந்துகொண்டான். எனவே, இந்த உலகத்தைக்குறித்த ஒருநட்புக்காக அல்லது இந்த உலகத்திலே கிடைக்கிற ஒரு சின்ன இலாபத்திற்காக, சின்ன ஆதாயத்திற்காக, சின்ன அனுகூலத்திற்காக, சாத்தான் அதைக் காட்டுவான்.
மிக முக்கியமாக வாலிபர்கள். உடனடியாக வரும் பலன்மேல் நோக்கமாயிருந்து திருமணம்செய்யாதீர்கள். உண்மையிலேயே நாம் அமைக்கிற குடும்பம் தேவனுக்கும், தேவனுடைய மக்களுக்கும், தேவனை அறியாதவர்களுக்கும் கிறிஸ்துவை அருள்வதற்கும் அது ஒரு இல்லமாக இருக்குமா, அது ஒரு பாத்திரமாக இருக்குமா? அதை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் வாழ்க்கைத் துணைகளைத் தெரிந்தெடுங்கள். அது இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருப்பது. இந்த உலகத்திலே உடனடியாகக் கிடைக்கிற ஒரு ஆதாயத்தையும், அனுகூலத்தையும், இலாபத்தையும் கிறிஸ்துவிநிமித்தம் நாம் மறுப்போம். அதுபோல் எப்போதும் நான், என் படிப்பு, என் வேலை, என் மனைவி, என் கணவன், என் மக்கள், என் எதிர்காலம் என்றிருக்க வேண்டாம். அது நம்முடைய ஆசீர்வாதத்தைத் தடுத்துவிடும். நம்முடைய இருதயத்தை விசாலமாக்குவோம். தனக்கானவைகளை அல்ல பிறருக்கானவைகளை நாடுவோம். நாம் படிக்கிற படிப்பு, நாம் செய்கிற வேலை, நாம் கட்டுகிற வீடு, நாம் வாங்குகிற வாகனம் எல்லாற்றின்மேல் இந்தக் கேள்வி இருக்க வேண்டும். தேவனுடைய மக்களுக்கு இது ஆசீர்வாதமாக இருக்குமா? தேவனுடைய சுவிசேஷத்திற்கு இது ஆசீர்வாதமாக இருக்குமா?. இதை நாம் எப்போதும் கருத்தில்கொள்ள வேண்டும். இப்படி இனிவரும் பலனையும், தேவனுடைய மக்களுக்கும், பிறருக்கு வரும் பலனையும் எண்ணுகின்ற மக்கள் உண்மையாகவே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளிலே நடக்கின்றவர்கள். இதைக் குறித்து உங்களுக்கு சந்தேகம் இருக்கிறதா? இந்த உலகத்தின் பார்வையிலே அவர்கள் பெரிய ஞானிகள் அல்ல. இப்படியெல்லாம் வாழ்ந்தால் அவர்கள் எப்படி பெரியவர்களாக இருக்க முடியாது. அதைப்பற்றி அக்கறை எனக்கு கிஞ்சித்தேனும் இல்லை.
யோவான் ஸ்நானனைப்பற்றி தீர்க்கத்தரிசனம் உரைக்கும்போது, யோவான் ஸ்நானனுடைய அம்மா “அவன் தேவனுடைய பார்வையிலே பெரியவனாக இருப்பான். He will be great in the sight of the Lord,” என்று சொல்லுகிறார். யோவான் ஸ்நானன் இந்த உலகத்தின் பார்வையிலே பெரியவனா? காட்டு மனிதன். வெட்டுக்கிளியைத் தின்றுகொண்டு, காட்டுத் தேனை சாப்பிட்டுக்கொண்டு, ஏதோவொரு தோலை ஆடையாக உடுத்திக்கொண்டு, ’Ladies and gentlemen” என்று ரொம்ப அழகான ஒரு ஆங்கிலத்திலே பேசாமல், “விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் மனந்திரும்பவில்லையென்றால் எல்லாரும் சாவீர்கள்” என்று சொன்னால், “அடியுங்கள் அவனை,” என்று சொல்வார்கள். எப்படிச் சொல்லவேண்டும் என்றால் “Ladies and gentlemen, I would like to appeal to you that you have to mend your ways அப்படியாவது சொல்ல வேண்டும். அவர் உலகத்தின் பார்வையிலே பெரியவர் அல்ல. ஆனால் தேவனுடைய பார்வையிலே பெரியவர் அவர். ஆகவே பிறருக்குக் கிடைக்கும் பலன், இனிவரும் பலன் இவர்கள்மேல் நோக்கமாயிருக்கின்றவர்களை இந்த உலகம் பெரியவர் என்று கொண்டாடாது. ஆனால் இவர்கள் தேவனுடைய பார்வையிலே பெரியவர்கள். தேவன் இவர்களைக் கொண்டாடுவார். தேவன் இவர்களுடைய தேவன் என்று தம்மை அறிமுகப்படுத்திக்கொள்வார்.”நான் தீமோத்தேயுவின் தேவன். மோசேயின் தேவன், நான் ஆபிரகாமின் தேவன்” என்று சொல்லிக்கொள்வதில் தேவன் வெட்கப்படமாட்டார். இது நம்முடைய மாபெரும் வெகுமதியாக இருக்க வேண்டும். தேவன் இப்படிப்பட்ட இருதயத்தை நமக்குள் உருவாக்குவாராக. ஆமென்.