Transcribed from a message spoken in November 2012 in Chennai
By Milton Rajendram
“ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச்சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவைநோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்” (எபி 12:1)
சதுரங்கம் விளையாடும்போது நல்ல விளையாட்டுவீரன் ஒரு நகர்த்துதலைக்கூட வீணாக நகர்த்தமாட்டான். அவன் ஓர் இலக்கை நோக்கிக் காய்களை நகர்த்துகிறான். ஆனால், சாமான்யமானவன், சாதாரணமானவன், அப்படிச் செய்யமாட்டான். எனக்கு சதுரங்க விளையாட்டின் விதிகள் தெரியும். சதுரங்க விளையாட்டின் விதிகளை எல்லாரும் அரைமணி நேரத்தில் கற்றுக்கொள்ளலாம். தலைசிறந்த விளையாட்டுவீரன் காய்களை விதிகளின்படிதான் நகர்த்துவான் என்று எல்லாருக்குந் தெரியும். ஆனால், அவன் எதை நோக்கிக் காய்களை நகர்த்துகிறான் என்பதைப் புரிந்துகொள்வது சற்று கடினம். இந்த மாதிரி ஒரு முடிவு வருவதற்காகத்தான் அவன் காய்களை இப்படி நகர்த்தியிருக்கிறான் என்று விளையாட்டு முடியும்போதுதான் தெரிகிறது. ஒருவேளை எந்தக் காயை அடுத்தபடியாக நகர்த்துவது என்று நமக்குத் தெரிந்திருக்கக்கூடும். ஆனால், நல்ல விளையாட்டு வீரன் அடுத்த ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என்று நகர்த்துதல்களை, அதாவது ஒரு வியூகத்தையே, தன் மனதில் வைத்திருப்பான்.
தேவன் தலைசிறந்த சதுரங்கவீரனைவிட தலைசிறந்தவர். நம் வாழ்க்கையில் நடக்கிற எந்தச் சம்பவத்தையும் தேவன் வீணாக்குவதில்லை என்று நான் விசுவாசிக்கிறேன். சிறிய அல்லது பெரிய சம்பவங்கள், நம் வாழ்க்கையில் குறுக்கிடுகிற என்று சொல்லமாட்டேன், இடைப்படுகிற நபர்கள், நமக்கு நேரிடுகிற காரியங்கள், நமக்குக் கிடைக்கிற பொருட்கள் அல்லது நமக்குக் கிடைக்காத பொருட்கள் இப்படி சிறிய பெரிய எல்லாவற்றிலும் அதற்குப் பின்புறத்தில் நம் பிதா அல்லது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து காய்களை நகர்த்துகிறார். இதற்கு ஆதாரம் ரோமர் 8:28-29. சில சமயங்களில் சாத்தான் நம் வாழ்க்கையில் குறுக்கிடுகிறான் என்று நாம் சொல்லலாம். ஆனால், சாத்தானே குறுக்கிடும்போதுகூட தேவனுடைய filteringக்குப்பிறகுதான் அவன் நம் வாழ்க்கையில் குறுக்கிட முடியும், இல்லையென்றால் குறுக்கிட முடியாது.
இயேசுகிறிஸ்துவை நோக்கிப்பார்ப்பது என்றால் என்ன? என்னுடைய புரிந்துகொள்ளுதலின்படி நம்முடைய வாழ்க்கையின் எல்லாச் சூழ்நிலைகளிலும் தேவனுடைய கரம் இருக்கிறது. இதற்குப் பின்னால் தேவன் ஏதோவொன்றை என்மேல் அல்லது என் கூட்டு வாழ்க்கையிலே செய்துகொண்டிருக்கிறார். இதை உணர்ந்துகொள்வதுதான் இயேசுகிறிஸ்துவைப் பார்ப்பது. பல சமயங்களில் நாம் இயேசு கிறிஸ்துவைப் பார்ப்பதில்லை. ஏனென்றால், நாம் பார்க்கிற சூழ்நிலை நம்மை அதிகமாகத் தாக்குகிறது. பொருட்கள், மனிதர்கள், சம்பவங்கள் நம்மைத் தாக்கும். ஒருவேளை ஒரு நகவெட்டி காணாமல் போய்விட்டால் அது நம்மை எவ்வளவு தாக்கும் தெரியுமா? உங்களுக்குத் தெரியாவிட்டால் என்னைக் கேளுங்கள், நான் சொல்லுகிறேன். காலையில் அலுவலகத்துக்குச் செல்கிறவர்கள் ஒரு பேனாவைக் காணாவிட்டால் அது அவர்களை எவ்வளவாய்த் தாக்கும் என்று தெரியுமா? “இங்கேதானே வைத்தேன். எங்கே போய்விட்டது!” இது ஓர் எடுத்துக்காட்டு. அதாவது அந்தச் சூழ்நிலையைவிட்டு நம்மைப் பிடுங்கி வெளியே எடுத்துப் பார்க்கும்போது, “ஒரு நகவெட்டிக்காகவும், ஒரு பேனாவுக்காகவுமா நாம் இப்படி react பண்ணினேன்?” என்று தோன்றும். ஆனால், அந்தச் சமயத்தில் என்னுடைய வாழ்க்கையின் அச்சாணி என்ன? அந்த பேனாதான். “எத்தனை வாங்கி வைத்தாலும் காணாமல் போய்விடுகிறது. எப்படித்தான் காணாமல் போகுமோ?” இப்போது நாம் அந்தச் சூழ்நிலையைவிட்டு வெளியே வந்து பார்க்கும்போது அது நமக்கு ரொம்ப வேடிக்கையாக இருக்கும். அந்தச் சூழ்நிலையில் நாம் பின்னிப் பிணைந்திருக்கும்போது அது வேடிக்கை இல்லை. ஒரு பேனாவில் ஆரம்பித்து ஒரு சண்டையே நடைபெறலாம். உறவுகள்கூட முறியலாம். பழுதுபார்க்க முடியாத அளவுக்குக்கூட உறவுகள் முறிந்தாலும் முறியக்கூடும். தெரியவில்லை.
எபிரெயர் 12:1-2 மிகவும் அருமையான வசனம்: “பாரமான யாவற்றையும், நம்மைச்சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற (முழுமையாக்குகிறவருமாயிருக்கிற) இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே (எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு) ஓடக்கடவோம்.” பொதுவாக, பாவங்களை நம்மைவிட்டுத் தூரம்போட வேண்டும் என்று நமக்குத் தெரியும். ஆனால், எதைக்கூடத் தள்ளிவிட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது? பாரமான யாவற்றையும் தள்ளிவிட வேண்டும். எவ்வளவோ விஷயங்களைப் பாவங்கள் என்று சொல்லமுடியாது. எடுத்துக்காட்டாக நாம் ஒரு விஷயத்தால் அளவுக்கு அதிகமாக ஆக்கிரமிக்கப்பட்டுவிடுகிறோம். அது படிப்பாக இருக்கக்கூடும். வேலையாக இருக்கக்கூடும். பணமாக இருக்கக்கூடும். பொழுதுபோக்காக இருக்கக்கூடும். அது செய்தித்தாளாக இருக்கக்கூடும். இப்படி சிறிய காரியம் தொடங்கி பெரிய காரியம்வரை பல காரியங்கள் நம்மை ஆக்கிரமிக்கக்கூடும். இவைகளைப் பாவங்கள் என்று சொல்ல முடியாது. மாறாக இவைகள் பாரங்கள். காலையில் எழுந்ததும் செய்தித்தாள் படிப்பது பாவமா? பாவமா? இல்லை. சாதாரண செய்தித்தாளைத்தான் படிக்கிறோம். அது பாரம். “நல்ல காலம், அதைப் பாவம் என்று சொல்லாமல் போனீர்கள். காலையில் அதைப் படித்தால்தான் கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது. இப்போது அதையும் கெடுத்துவிட்டீர்களா?” அது பாவம் இல்லை. பாரம்தான். ஆனால் விஷயம் என்னவென்றால் பாவங்கள் நம்மேல் என்ன தாக்கத்தை ஏற்படுத்தமுடியுமோ அதே தாக்கத்தை பாரங்களாலும் நம்மேல் ஏற்படுத்த முடியும். இது உண்மையிலே புதிய ஏற்பாடு. பாவம் இல்லை. பாரம்தான்.
ஆனால், இயேசுவை நோக்கி ஓடுகிற ஓட்டத்தில் அந்தப் பாரங்களோடு நாம் பின்னிப் பிணைந்திருப்போம். பேனா ஒரு பாரம் அல்லது நகவெட்டி ஒரு பாரம். நான் புரிந்துகொள்ளுகிறபடி, நம் எல்லாச் சூழ்நிலைகளிலும் தேவன் ஒரு குறிப்பிட்ட காயை நகர்த்துகிறார் என்பதை நம் கண்கள் காண வேண்டும். முழு வேதாகமத்திலும் நாம் இதைப் பார்க்கலாம்.
சிலர் சூழ்நிலைகளில் தேவனைப் பார்த்தார்கள் அல்லது சிலர் வெறும் மனிதர்களை மட்டும்தான் பார்த்தார்கள். பிலேயாம் கழுதையை மட்டும்தான் பார்த்தான். ஒத்துழைக்காத கழுதையைப் பார்த்தான். ஆனால், அந்தக் கழுதைக்குப்பின் யார் இருந்தார்? தேவன். உருவின பட்டயத்தோடு கர்த்தருடைய தூதன் நின்றுகொண்டிருந்தான். கழுதை கர்த்தருடைய தூதனைப் பார்த்தது. ஆனால், தீர்க்கதரிசியால் பார்க்கமுடியவில்லை. ஏனென்றால், Preoccupation. எங்கே? பாலாக்கிடம் அடிவாங்கும்போது எப்படி இருக்கும்? ஆள் உயர மாலை…அவர் எவ்வளவு கொடுப்பார்? ஐந்து ரூபாய்… பத்து ரூபாய்…ஐந்து இலட்சம், பத்து இலட்சம். எவ்வளவு கொடுப்பார்? ஒருவனுக்கு ஒரு பொருள்மேல் ஆசை, தீவிர ஆசை, அடக்கமுடியாத ஆசை, வந்துவிட்டால் கர்த்தரே உருவின பட்டயத்தோடு எதிரே நேரே வந்து நின்றாலும்…கழுதை பேசுகிறது. “நான் என்றைக்காவது உன்னோடு ஒத்துழைக்காமல் போயிருக்கிறேனா? நான் இன்றைக்கு ஒத்துழைக்கவில்லையென்றால் நீ யோசிக்க வேண்டாமா? என்ன காரணம்?” கழுதை பயங்கர புத்திசாலித்தனமாகப் பேசுகிறது.
கானான் தேசத்தில் முதல் யுத்தத்தைச் செய்வதற்கு யோசுவா ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறார். அங்கு கர்த்தர் வந்து நிற்கிறார், உருவின பட்டயத்தோடு. சேனைகளின் அதிபதியாக வந்து நிற்கிறார். அப்போது யோசுவாவின் கேள்வி: “நீர் எங்களுடைய பக்கமா, எதிராளியின் பக்கமா?” கர்த்தர் என்ன சொன்னார்? “நான் உன் பக்கமும் இல்லை, எதிரியின் பக்கமும் இல்லை. நான் ஏன் வந்திருக்கிறேன் தெரியுமா? நீர் யார் பக்கம் என்று கேட்பதற்கு வந்திருக்கிறேன்.” அவரைப் பொறுத்தவரை சண்டை போடுவது யார்? யோசுவாதான் படைத்தளபதி. அதனால் யாரைப் பார்த்தாலும், “நீ எங்கள் பக்கமா அல்லது எதிரியின் பக்கமா?” என்றுதான் கேட்கத்தோன்றும். ஆனால், யுத்தம் யாருடையது? கர்த்தருடையது. அதனால், “நான் உன் பக்கமும் இல்லை, எதிரியின் பக்கமும் இல்லை.” அவருடைய மனதை இப்போது என்ன ஆக்கிரமித்திருக்கிறது? சண்டை. எப்படியாவது இப்போது நம்முடைய எதிரியாகிய கானானியரை முறியடிக்க வேண்டும். அதனால் இப்போது யாரைப் பார்த்தாலும் அவர் இந்தப் பார்வையில்தான் பார்ப்பார். “இவன் யார் பக்கம்? என் பக்கமா? அல்லது அவனுடைய பக்கமா?” கர்த்தர் இந்த மாதிரியெல்லாம் கேட்டால் பதில் சொல்ல மாட்டார். அவர் அமைதியாகப் போய்விடுவார். இவருக்கு இன்னும் ஆவிக்குரிய கண்கள் திறக்கப்படவில்லை. நாம் எல்லாருமே யாருடைய பக்கம்? கர்த்தருடைய பக்கம்.
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மரித்து அடக்கம் பண்ணப்பட்டபிறகு, வாரத்தின் முதல் நாளில் மரியாள் கல்லறைக்கு வருகிறாள். அங்கு கர்த்தர் நிற்கிறார். ஆனால், அவள் அவரைத் தோட்டக்காரன் என்று எண்ணுகிறாள். பரிமள தைலம் பூசலாம் என்று கல்லறைக்கு வருகிறாள். ஆனால், கல்லறை காலியாக இருப்பதைப் பார்த்துத் துக்கமடைகிறாள். அந்தத் துக்கம் தாங்கமுடியாத நேரத்தில் கர்த்தரே வந்து பக்கத்தில் நின்றால்கூட அவரை நாம் தோட்டக்காரர் என்றுதான் எண்ணுவோம். இது வேடிக்கையாக இருக்கிறது இல்லையா? கர்த்தர் இப்போது மகிமையின் கர்த்தர். உயிர்த்தெழுந்த கர்த்தரை நாம் தோட்டக்காரர் என்று தவறாக எண்ணிவிடுகிறோம், எண்ணத் தோன்றுகிறது. ஏதோ தோட்டக்காரர் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருக்கிறார். நம் வாழ்க்கையில் பல சமயங்களில் கர்த்தர் நமக்குத் தோட்டக்காரராகத்தான் தென்படுகிறார் என்று நான் நினைக்கிறேன். “மரியாளே” என்று அவர் கூப்பிட்டவுடன், இந்தக் குரலை எங்கோ கேட்டதுபோல் இருக்கிறதே என்று அவள் உணர்கிறாள்.
இது தேவனுடைய இரக்கம். நம்முடைய குடும்பமோ அல்லது நம்முடைய வேலைத்தளமோ அல்லது நம்முடைய சபை வாழ்க்கையோ அல்லது நாம் இலாபமடைகிற பொருட்கள் அல்லது நாம் நஷ்டமடைகிற பொருட்கள் அல்லது சம்பவங்கள், மனிதர்கள்-மிகவும் முக்கியமாக மனிதர்கள்-எல்லாவற்றிற்கும் பின்னால் என் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட விதத்தில் குறைவுபடுகிற கிறிஸ்துவை அவர் எனக்கு வழங்க விரும்புகிறார். இது புதிய ஏற்பாட்டின் அடித்தளமான, ஆதாரமான, அசைக்க முடியாத உண்மை. என் வாழ்க்கையில் இயேசுகிறிஸ்து எந்த விதத்தில் குறைவுபடுகிறார் என்பதை மனிதர்களால் எந்த விதத்திலும் கண்டுபிடிக்கவே முடியாது. microscope, telescope வைத்து எந்த scopeவைத்தும் அவர்களால் கண்டுபிடிக்கவே முடியாது. என் வாழ்க்கையில் இயேசு கிறிஸ்து ஒரேவொரு அம்சத்தில் மட்டும் இல்லை. ஓராயிரம் அம்சத்தில் குறைவுபடுகிறார் என்பதை அவர்களால் கண்டுபிடிக்கவே முடியாது. அதனுடைய பலாபலனை, உராய்வுகளை, உரசல்களை அவர்கள் அனுபவிப்பார்கள். வேதனைப்படுவார்கள், கஷ்டப்படுவார்கள். ஆனால், அதை அவர்களால் பழுதுபார்க்க முடியாது. ஏனென்றால், அதைப் பழுதுபார்க்கத் தேவையான உபகரணம் எந்த மனிதனிடமும் இல்லை. அதைப் பரிசுத்த ஆவியானவர் மட்டும்தான் கண்டுபிடிக்க முடியும். நம்முடைய எக்ஸ்ரே, ஸ்கேன்-ஓர் ஆளைக் கல்லறைக்குள் தள்ளுவதுபோல உள்ளே தள்ளினால் போதும், அரை மணி நேரத்தில் அவனை எல்லாக் கோணங்களிலும் அக்குவேறு ஆணிவேராகப் படம்பிடித்து வெளியே தள்ளிவிடலாம். பரிசுத்த ஆவியானவர் இதையெல்லாம்விட பயங்கரமான ஸ்கேன். அவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்துவிட்டு “இங்கு இந்த இடத்தில் இயேசுகிறிஸ்து பயங்கரமாகக் குறைவுபடுகிறார். இங்கு சிவப்பு அணுக்கள் அதிகமாகக் குறைவுபடுகின்றன. இங்கு சுண்ணாம்புச் சத்து குறைவுபடுகின்றது.” மருத்துவத்தை எண்ணிப்பார்த்தால் பயங்கரமாக இருக்கிறது.
எப்படி இவ்வளவு இலட்சக்கணக்கான குறைபாடுகள்! அதை நிவிர்த்திசெய்வதற்கு ஏற்ற சூழ்நிலையைத் தேவன் உண்டாக்குகிறார். பொதுவாக நாம் சம்பவங்களைப் பார்ப்போம். மனிதர்களைப் பார்ப்போம், பொருட்களைப் பார்ப்போம் அல்லது தீவிரமான தற்பரிசோதனையில்கூட இறங்கிவிடுவோம். எதற்காக இவைகள் இப்படி நடைபெறுகின்றன? நான்கூட யோசித்தேன். இந்தத் தற்பரிசோதனையெல்லாம் உதவாது. தேவன் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக நம்முடைய வாழ்க்கையில் அதை அனுமதித்திருக்கிறார் அல்லது அமைத்திருக்கிறார். அதை நாம் ஆராய்ச்சியெல்லாம் செய்ய வேண்டாம். “இதை எப்படித் தீர்ப்பது? இந்தக் காரியத்தை தீர்த்துக்கட்டினாலொழிய அடுத்த காரியத்தில் காலெடுத்து வைக்க முடியாது” என்ற நிலையில் நாம் இருந்தால் நாம் ஏற்கனவே சிக்கிக்கொண்டோம் என்று பொருள். ஒரு மனிதனைப்பற்றி அல்லது மனுஷியைப்பற்றி கட்டுப்பாட்டை இழந்து நம் எண்ணங்கள் அலைமோதிக்கொண்டேயிருந்தால்–சில சமயம் அன்பினால் அலைமோதும் சில சமயம் வெறுப்பினால் அலைமோதும்-அவனை நான் எந்த அளவுக்கு வெறுக்கிறேன் என்றால் நான் அவனுக்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். எந்த ஒரு பொருளோ அல்லது சம்பவமோ “இப்படி நடந்துவிட்டதே, இப்படி நடந்துவிட்டதே. அவன் இப்படி செய்துவிட்டானே, இப்படி செய்துவிட்டானே, இப்படிப் பேசிவிட்டானே!” இப்படி இது நம் மனதை சிக்கவைத்துவிட்டதென்றால் நாம் மாட்டிக்கொண்டோம் என்று பொருள். அவன் அப்படிச் செய்தது, அவள் அப்படிப் பேசியது, அல்லது அந்தப் பொருளை நான் இழந்தது அல்லது அந்தப் பொருளை நான் பெற்றது அல்லது நான் அந்தப் பொருளைப் பெறத் தவறியது, தாமதமானது எல்லாவற்றிலுமிருந்து நாம் இயேசுகிறிஸ்துவை நோக்கிப் பார்க்க வேண்டும். அவர் விசுவாசத்தைத் தொடங்குகிறவர் மட்டும் இல்லை. அவர் விசுவாசத்தைப் பூரணப்படுத்துகிறவருமாவார்.
அது மிகவும் நல்ல வசனம். பொறுமையோடே நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில்… பொறுமையோடே…எபிரெயர் 12:1-13ஆம் வசனங்கள்வரை ஒரே தலைப்பைப்பற்றியே பேசுகின்றன. தேவன் சிட்சிக்கிறார் என்று அங்கு எழுதப்பட்டிருக்கிறது. எந்தச் சூழ்நிலையையும் பார்த்து நீ சோர்ந்து போகாதே. அது தேவனுடைய சிட்சை. சிட்சை என்றால் என்ன பொருள்? சிட்சை என்பது கண்டிப்பதல்ல, அது கற்பித்தல். நம்மைப் பொறுத்தவரை ஒரு மாணவனிடம் ஓர் ஆசிரியர் பேசுவதுதான் கல்வி. ஆனால், இதுவல்ல கல்வி. இப்போதிருக்கிற பள்ளிமுறை வருவதற்குமுன் கல்வி கற்பிக்கப்படவில்லையா என்ன? பள்ளிகள், கல்லூரிகள் கட்டி, வகுப்பறைகளை ஏற்படுத்தி ஆசிரியர்களை நியமித்து அவர்கள் மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பதற்குமுன் கற்பிக்கப்படவில்லையா என்ன? பல நூற்றாண்டுகளாகக் கல்வி கற்பிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.
தேவன் நமக்குக் கற்பிக்கிறார். மிக முக்கியமாக சூழ்நிலைகள்மூலமாக, பரிசுத்த ஆவியானவர் நமக்குக் கற்பிக்கிறார். இன்னொரு ஆறுதலான வசனம் இருக்கிறது. தகப்பன் சிட்சியாத புத்திரன் உண்டோ? சரியாகப் பிறக்காத பிள்ளையாக இருந்தால் தகப்பன் சிட்சிக்கமாட்டான். “சரியாகப் பிறந்த பிள்ளையாக இருந்தால் தகப்பன் நிச்சயமாக சிட்சிப்பான். எந்த சிட்சையும் தற்காலத்தில் வேதனையாகக் காணப்படும். தற்காலத்தில் அது மகிழ்ச்சியாக, சந்தோஷமாக, காணப்படாமல் துக்கமாகக் காணப்படும். ஆகிலும், பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.” அப்படியானால் எந்தப் பயிற்சியும், எந்தக் கல்வியும், எப்படி இருக்காது? அதை எவ்வளவுதான் நாம் விரும்பினாலும்… “சரி இன்றைக்குக் காலையில் நான் உனக்குக் கற்பிக்கப்போகிறேன், வா,” என்று தேவன் கற்பிப்பதில்லை.
கல்வி கற்பதைப்பற்றி ஓர் ஆராய்ச்சி செய்தார்களாம். பிள்ளைகள் பள்ளிக்குப் போகிறார்கள், வருகிறார்கள் இல்லையா? அந்த நேரத்தில் பிள்ளைகள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிற நேரம் எது தெரியுமா? மணி அடித்து, வாசலைத் திறந்ததும் பிள்ளைகளெல்லாம் ஓடுகிறார்கள் இல்லையா? அப்போதுதான் பிள்ளைகள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்களாம். இன்னும் அதிர்ச்சி வரவில்லையா? ஆசிரியர்கள் எப்போது தெரியுமா சந்தோஷமாக இருக்கிறார்களாம்? அந்த மணி அடிக்கும் போதுதான் ஆசிரியர்களும் சந்தோஷமாக இருக்கிறார்களாம். முதல்வர் எப்போது சந்தோஷமாக இருக்கிறாராம் தெரியுமா? அவரும் மணி அடிக்கும்போதுதான் சந்தோஷமாக இருக்கிறாராம். அப்படியானால் ஏன் பள்ளிக்குச் செல்ல வேண்டும்? இது M.Phil. ஆராய்ச்சியினுடைய முடிவு.
கூட்டம் முடிந்தபிறகுதான் விடுதலையோடு இருப்பதாக உணர்ந்தால் கூட்டத்தை மாற்றுவோம். கூட்டம் முடிந்தபிறகு 12 மணிக்குத்தான் மனம்விட்டுப் பேசமுடியும் என்றால் கூட்டத்தை மாற்றுவோம். அப்படியானால் கூட்டம் எதற்கு? இது உண்மையிலே துக்கமாக இருக்கிறது. எந்த சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாகக் காணப்படாமல் துக்கமாகக் காணப்படும். பயிற்சியென்றால் அதில் கொஞ்சம் துக்கம், வேதனை, பாடு இருக்கும். ஆகிலும், அதில் பழகினவர்களுக்கு பிற்காலத்தில் அது நீதியாகிய சமாதான பலனைத் தரும். இது மிகவும் முக்கியம்.
தேவன் நம்மை நேசிப்பதால் நம் வாழ்க்கையில் ஒவ்வொரு மூலையிலும் நாம் தேவனுடைய கரத்தைப் பார்க்க முடியும். இப்போது நம் கண்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. பெரிய விவரங்களிலிருந்து சிறிய விவரங்கள்வரை. ஒரு பெரிய விஷயத்தில் எந்த விவரத்தையும் சின்ன விவரம் என்று சொல்ல முடியாது. ஒரு விண்கோளை விண்ணில் செலுத்துகிறார்கள். அதில் எந்த விவரமும் சிறியது என்று சொல்ல முடியாது. அமெரிக்காவிலிருந்து அனுப்பிய ஒரு விண்கலத்தில் சில foam சிதறிவிழுந்தன. அது மேலே போகும்போது அவர்கள் அதைப் பார்த்திருக்கிறார்கள். ஏனோதானோவென்று விட்டுவிட்டார்கள். என்ன நடந்தது? பூமிக்குத் திரும்பும்போது அது வெடித்துச் சிதறியது.
ஒரு பெரிய காரியத்தில் ஈடுபடும்போது, எந்த விவரமும் சிறியது என்று விட்டுவிடக்கூடாது. மிகப் பெரிய காரியம் என்ன? ஒரு கூட்டம் மக்களுக்குள் கிறிஸ்துவை உருவாக்குவதே. இந்த முழுப் பிரபஞ்சத்தில் மிகப்பெரிய காரியம் என்ன? ஒரு விண்கலத்தை விண்வெளியில் செலுத்துவது இல்லை. ஒரு கூட்டம் மக்களுக்குள் கிறிஸ்துவை உருவாக்குவதுதான் இந்தப் பிரபஞ்சத்தில் மிகப் பெரிய காரியம். இதில் எந்த விவரமும் சிறிய விவரம் கிடையாது. நம் வாழ்க்கையில் காலையிலிருந்து மாலைவரை நிறைய காரியங்கள் நடைபெறுகின்றன. இவைகளில் நாம் தேவனுடைய கரத்தைப் பார்க்க வேண்டும். வீட்டில் தேவனுடைய கரத்தைப் பார்க்க வேண்டும். சாலையில் தேவனுடைய கரத்தைப் பார்க்க வேண்டும். இன்றுவரை காலையில் சாலையில் செல்லும்போது குறுக்கே பாய்கிற மிதிவண்டிக்காரனை அல்லது வேறொரு இருசக்கர வாகன ஓட்டியை அல்லது லாரிக்காரனை மனதுக்குள் திட்டாமல் செல்கிற நாட்கள் மிகவும் குறைவு. திட்டியபிறகு நான் பாவ அறிக்கை செய்கிறேன். நீங்கள் இப்படிச் செய்கிறீர்களா என்று எனக்குத் தெரியாது. திட்டும்போது கடினமாகவே திட்டுகிறேன். நான் திட்டுவதற்குப் பயன்படுத்துகிற வார்த்தைகளை வெளியே சொன்னால் யாருமே என்னை விசுவாசி என்றுகூட நினைக்கமாட்டார்கள். மனதுக்குள் அப்படிப்பட்ட கோபமும், எரிச்சலும் வருகின்றன. என்ன பரிதாபமான நிலைமையில் நான் இருக்கிறேன். ஒவ்வொரு மிதிவண்டிக்காரனையும், மோட்டார் சைக்கிள் ஓட்டுபவனையும், லாரிக்காரரையும் நாம் பிலேயாமின் கழுதையாகத்தான் பார்க்க வேண்டும். இதைத்தவிர பரிசுத்த ஆவியானவர் மறுசாயலாக்குதல் என்ற பெரிய காரியத்தை நம் வாழ்க்கையில் நடப்பிக்க வேறு வழியில்லை. அப்போது நாம் சமாதானத்தோடு இருப்போம். எப்பேர்ப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் சரி. நாம் பணிந்தடங்குவோம். பணிந்தடங்கவில்லையென்றால் ஒருவகையான பதட்டம் இருக்கும்.
என் வாழ்க்கையின் எல்லா விவரங்களையும் தேவன் அனுமதிக்கிறார் என்பது மட்டும் இல்லை, அவரே அமைக்கிறார். அனுமதிக்கிறார் என்றால் என்ன பொருள்? வேறு யாரோ ஒழுங்குசெய்வது போலவும், தேவன் கையைக் கட்டி இருந்துகொண்டு, “சரி நடக்கிறது நடக்கட்டும்” என்று இருந்து விடுகிறார் என்பது போலாகும். அப்படியில்லை. தேவன் தம் பிள்ளைகள்மேலுள்ள கட்டுப்பாட்டை இயற்கைக்கோ அல்லது சாத்தானுக்கோ கொடுப்பதில்லை. ஒவ்வொன்றையும் அளந்து செய்கிறார்.
1 கொரிந்தியர் 10:13: “உங்கள் திராணிக்குமேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குகிறார்.” தப்பித்துக்கொள்வதற்கான போக்கை அவர் உண்டாக்குவார். ஆனால், அவர் அவசரமாகத் தப்பித்துக்கொள்வதற்கான போக்கை உண்டாக்கமாட்டார். ஒரு சூழ்நிலையை அமைப்பார். எந்த அளவு சூடு, எவ்வளவு நேரம் இருந்தால் இந்தக் கேக்கைப் பதமாகச் சுடமுடியும் என்று அவருக்குத் தெரியும். “இந்தச் சூடு அதிகம். அல்லது ஓர் அவசரப் போக்கில் emergency exitஇல் தள்ளிவிட்டு விடுங்கள்,” என்று தேவன் செய்வதில்லை. தேவன் எல்லாவற்றையும் சரியாக அளந்துசெய்கிறார். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஆறுமணி நேரம் சிலுவையில் பாடநுபவிப்பதற்குப்பதிலாக, ஆறுமடங்கு துன்பத்தை அதிகமாக்கி ஆறுமணி நேரத்தை ஒரு மணி நேரமாகக் குறைத்திருந்தால் எவ்வளவு நலமாக இருந்திருக்கும் என்று நான் யோசித்துப்பார்ப்ப துண்டு. இப்படி நீங்கள் யோசிக்கிறீர்களா என்று எனக்குத் தெரியாது.
சில சமயங்களில் வெளிநாட்டுக்குப் போகும்போது குடும்பத்தை விட்டு இருப்பது பயங்கரமாக இருக்கும். ஐயையோ எவ்வளவு பெரிய துன்பமாக இருக்கும். துன்பத்தைக் கூட்டி கால அளவைக் குறைத்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். சீக்கிரம் வீட்டுக்கு போய்விடலாம். தேவன் அப்படிச் செய்வதில்லை. அவர் எல்லாவற்றையும் அளக்கிறார். ஒரு குறிப்பிட்ட மனிதனை அப்பமாகச் சுட எவ்வளவு சூடு வேண்டும், எவ்வளவு காலம் தேவைப்படும் என்று அவர் அளந்து பார்க்கிறார். Micro oven இல் செட் பண்ணுவதுபோல் செட் பண்ண வேண்டும். நாம் எல்லோரும் அடுப்பில்தான் இருக்கிறோம். ஆனால் அவர் Micro oven யைப் பயன்படுத்துவதில்லை. அது மனிதர்கள் பயன்படுத்துகிற குறுக்கு வழி. சீக்கிரமாக மறுசாயலாவதற்கு என்ன வழி? மூன்றுநாள் கூட்டம் நடத்துவோம். எல்லோரையும் மூன்று நாட்கள் Micro oven இல் வெளியே எடுக்கிற காரியம் இல்லை இது. இது பாப்கார்ன் செய்கிற வேலை இல்லை. உள்ளே தள்ளி வெளியே எடுத்தால் பாப்கார்ன். தேவன் இப்படிச் செய்வதில்லை. தேவன் சாதாரணமான வழிகளைப் பயன்படுத்துகிறார்.
எல்லாச் சூழ்நிலைகளிலும் நாம் இயேசு கிறிஸ்துவைப் பார்ப்போம். இயேசுகிறிஸ்துவைப் பார்ப்போம் என்பதற்கு இன்னொரு பொருள் இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் அவர் எப்படி வாழ்ந்தாரோ அப்படி வாழ்வதற்கு மட்டும்தான் எனக்கு உரிமை இருக்கிறது. “அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்தார் என்று எழுதப்பட்டிருக்கிறது” (எபி. 12:2). “அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்,” என்று 3ஆம் வசனம் கூறுகிறது. நம்முடைய சமையலறையில், படுக்கையறையில், வீட்டின் எல்லா இடத்திலும் நாம் எழுதிப்போடலாம். “Consider Him.” இந்தச் சூழ்நிலையில் இயேசுகிறிஸ்து எப்படி நடந்திருப்பார். எனக்குள் இயேசுகிறிஸ்து இருக்கிறார். அவர் எனக்குள் வாழ விரும்புகிறார். அவரை நாம் வாழவிடும்போது தான் நமக்குப் பலம் தேவை. நம்மை வாழ்வதற்கு நமக்குப் பலம் தேவையில்லை. ஆமென்.