Transcribed from a message spoken in November 22, 2015 in Chennai
By Milton Rajendram
இந்த நாளிலே ஒரு முக்கியமான பாரத்தை, எண்ணத்தை, நான் சுருக்கமாக உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 2 தீமோத்தேயு 3ஆம் அதிகாரம் முதல் வசனத்திலே அப்போஸ்தலனாகிய பவுல், “கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வரும் என்று அறிவாயாக,” என்று எழுதுகிறார். நாம் வாழ்கின்ற நாட்கள் கொடிய காலங்கள் என்று பவுல் சொல்லுகிறார். இந்த இருளான உலகத்திலே, பூமியிலே தம் மக்கள், தம் பரிசுத்தவான்கள், ஒளியைப்போல் பிரகாசிப்பதற்காக, சுடர்விடுவதற்காக, ஒளி வீசுவதற்காக தேவன் அவர்களை வைத்திருக்கிறார். நாம் இந்தப் பூமியிலே தேவனுடைய மக்களாக வாழ்வதற்கும், தேவனுடைய மக்களாலான சமுதாயமாக இருப்பதற்கும் ஒரு குறிக்கோள் உண்டு. பிலிப்பியர் 2ஆம் அதிகாரம் அந்தக் குறிக்கோளைப்பற்றிப் பேசுகிறது. இந்த இருளான உலகத்திலே தேவன் எப்படிப்பட்டவர் அல்லது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து எப்படிப்பட்டவர் என்று காண்பிப்பதற்காக அவர் தேவனுடைய மக்களாகிய நம்மை வைத்திருக்கிறார்.
தேவனுடைய பிரதிநிதிகளாக ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைக் காண்பிப்பது மிக கனமான ஒரு அழைப்பு. கிறிஸ்தவ வாழ்க்கை அல்லது சபை வாழ்க்கை என்பது ஒரு விளையாட்டல்ல. அது தேவன் நம்மை நம்பி நம்மிடம் ஒப்புவித்திருக்கிற ஒரு கனமான பொறுப்பு.
நம் வாழ்நாளிலே, நம் வாழ்க்கையிலே, நாம் கிறிஸ்துவால் வாழ்வதும், கிறிஸ்துவை வழங்குவதும் நம்முடைய இரண்டு கண்கள். இந்த இரண்டையும் குறித்து நாம் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டும். எந்த இரண்டு? கிறிஸ்துவால் வாழ்வது. கிறிஸ்துவை வழங்குவது. புரிந்துகொள்வதற்காக இதை இரண்டு குறிப்புகளாகச் சொன்னபோதிலும் இந்த இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். “நான் கிறிஸ்துவால் வாழ்கிறேன்” என்று சொல்லுகிற ஒரு மனிதன் கிறிஸ்துவை வழங்காமல் இருக்க முடியாது. “நான் கிறிஸ்துவை வழங்குகிறேன்” என்று சொல்லுகிற ஒரு மனிதன் கிறிஸ்துவால் வாழவில்லையென்றால் அது பொய்; அவன் வெறுமையை வழங்குகிறான். இதை நாம் நன்றாய்ப் புரிந்துகொள்ள வேண்டும். சிலர் “நாங்கள் கிறிஸ்துவை வாழ்வதைக்குறித்துத்தான் வலியுறுத்துவோம்” என்று சொல்வார்கள். வேறு சிலர் “நாங்கள் கிறிஸ்துவை வழங்குவதைக்குறித்துத்தான், கிறிஸ்துவைப் பரிமாறுவதைக்குறித்துத்தான், கிறிஸ்துவை மற்றவர்களுடைய வாழ்க்கைக்குள் கொண்டுவருவதைக்குறித்துத்தான் நாங்கள் வலியுறுத்துவோம்” என்று சொல்வார்கள். இரண்டுமே சமநிலையானது அல்ல. இரண்டும் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றது. ஒன்றையொன்று பொறுத்திருக்கின்றது. கிறிஸ்துவை வாழாமல் கிறிஸ்துவை எப்படி வழங்கமுடியும்? கிறிஸ்துவை இப்படி வழங்காமல் “நான் கிறிஸ்துவால் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்” என்று எப்படிச் சொல்ல முடியும்? கிறிஸ்துவினுடைய அளவு எனக்குள் பெருகுகிறதென்றால் நிச்சயமாக கிறிஸ்து குறைவுபடுகிற மனிதர்களுடைய வாழ்க்கைகளுக்கும் நான் கிறிஸ்துவை வழங்குவேன். ஆகவே, இரண்டும் வெவ்வேறானதல்ல. ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்ற தெளிவு நமக்கு இருக்க வேண்டும். கிறிஸ்துவால் வாழ வேண்டும். கிறிஸ்துவை வழங்க வேண்டும்.
“இந்த நாளிலே எந்த எண்ணத்தை, எந்த பாரத்தை, பகிர்நதுகொள்ள வேண்டும் என்று எப்படித் தீர்மானிக்கிறீர்கள்?” என்ற ஒரு கேள்வியை நீங்கள் கேட்கலாம். இதைக்குறித்து நாம் பொறுமையாய்ப் பேசலாம். ஆனால், இது ஒன்றும் விந்தையான ஒரு கலை அல்ல. ஒருசிலர்தான் இந்தக் கலையிலே தேர்ச்சி பெறுவார்கள். மற்றவர்கள் இந்தக் கலையிலே தேர்ச்சிபெற மாட்டார்கள்,” என்பதல்ல. தேவனுடைய மக்களைக்குறித்த ஒரு எண்ணமும், அக்கறையும், கரிசனையும், பாரமும் நமக்கு இருந்தால், இந்த நாளிலே தனிப்பட்ட விதத்திலோ, கூட்டாகவோ அவர்களோடு என்ன பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதைக்குறித்த ஒரு வெளிச்சம் நமக்கு இருக்கும்.
இது 1 தீமோத்தேயு, 2 தீமோத்தேயு ஆகிய கடிதங்களிலே அப்போஸ்தலனாகிய பவுலுடைய எண்ணம் அல்லது பாரம். இதை சுருக்கமாக நான் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். தீமோத்தேயுவுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதின கடிதங்கள் ஏறக்குறைய அவருடைய கடைசி கடிதங்கள். தீமோத்தேயுவுக்கு எழுதின இரண்டாவது கடிதம்தான் கடைசிக் கடிதம். முதலாவது கடிதம்கூட ஏறக்குறைய அவர் தன்னுடைய கடைசி நாட்களில் எழுதின கடிதம்தான். பவுல்தான் இந்தப் பூமியைவிட்டு வெளியேறுகிற காலம் வந்துவிட்டது என்று அறிந்தபிறகு அவர் எழுதுகிற கடிதம் 2 தீமோத்தேயு. “நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப்போகிறேன்; நான் தேகத்தைவிட்டுப் பிரியும் காலம் வந்தது,” என்று தன்னுடைய முடிவை அப்போஸ்தலனாகிய பவுல் காண்கிறார்.
ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையிலே எதற்காக உழைத்தானோ, எதற்காகப் போராடினானோ, எதற்காகத் தன்னுடைய வாழ்க்கையையே பானபலியாக ஊற்றினானோ, ஏறக்குறைய அது அவனுடைய கண்களுக்குமுன்பாகவே உடைந்துபோய்கொண்டிருக்கிறது; எதைக் கட்டியெழுப்புவதற்காக ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையையே அர்ப்பணித்தானோ, அவன் கட்டியெழுப்பினது அவன் கண்களுக்குமுன்பாக இல்பொருளாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்ழ்நிலையிலே எந்த மனிதனும் விரக்தியையும், தோல்வி உணர்ச்சியையும் அடைவான். எதற்காகத் தன்னுடைய முழு வாழ்க்கையையும் பானபலியாக்கினேனோ அது இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால், அப்போஸ்தலனாகிய பவுல் அப்படிப்பட்ட சோர்வு, அப்படிப்பட்ட தொய்வு, அப்படிப்பட்ட விரக்தி, அவைகளுக்குள் அவன் போகவில்லை. மாறாக, “நான் இந்த உலகத்தைவிட்டுப் போனபிறகும்கூட தேவன் மாறாதவராகத் தம்முடைய பணியை எல்லாக் காலங்களிலும், எல்லா யுகங்களிலும் செய்து கொண்டிருப்பார்,” என்று அவர் கூறுகிறார்.
யோசுவா முதலாம் அதிகாரத்திலே, “நான் மோசேயோடுகூட இருந்ததுபோல உன்னோடும் இருப்பேன்” (யோசுவா 1:5) என்று கர்த்தர் யோசுவாவினிடத்தில் சொல்கிறார். மோசே இருந்தார். மோசே இருக்கவில்லை. யோசுவா இருக்கிறார். யோசுவா இல்லாமல் போவார். கர்த்தர் இருந்தார், இருக்கிறார், இருப்பார். பவுல் இருக்கிறார், இல்லாமல் போகப் போகிறார். ஆனால், தேவன் தம் பணியை எல்லாக் காலங்களிலும் நிறைவேற்றிக்கொண்டிருப்பார். நம்முடைய காலம் உட்பட இந்தக் காலகட்டத்திலும் தேவன் தம் பணியை மும்முரமாகவும், தீவிரமாகவும் செய்துகொண்டிருக்கிறார்.
ஒன்றைக் கவனிக்க வேண்டும். தேவன் ஏதோ கையாலாகதவர்போல, “என்னுடைய பிள்ளைகள் என்னை ஒழுங்காகப் புரிந்துகொள்ளவில்லை. என்னுடைய பிள்ளைகள் அவர்களுடைய வாழ்க்கையையும், வாழ்க்கையின் பிரச்சினைகளையும் குறித்துதான் இரவும் பகலும் சிந்தையாயிருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையிலே நான் என்ன செய்வது!” என்று தேவன் கையாலாகாதவர்போல பதறிக்கொண்டிருக்கவில்லை. தேவன் தீவிரமாக, மும்முரமாக நாம் வாழ்கின்ற காலத்திலும் வேலை செய்துகொண்டிருக்கிறார்.
ஆகவே, விசுவாசத்தில் தன்னுடைய உத்தம குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு பவுல் தன்னுடைய கடைசி வார்த்தைகளை எழுதுகிறார். இந்த உலகத்தைவிட்டுப் போவதற்குமுந்தி இந்த மனிதன் என்னுடைய இருதயத்திலே எதைப் பதிக்க விரும்புகிறான் என்பதை நீங்கள் பெறும்வரைக்கும் நீங்கள் இந்தப் புத்தகத்தைப் பலமுறை வாசிக்க வேண்டும்.
அருமையான சகோதர சகோதரிகளே, ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். பல சமயங்களில் நாம் கேட்கின்ற வார்த்தைகளெல்லாம் நம்முடைய இருதயத்திலே பதிவதில்லை. ஏனென்றால், நம்முடைய இருதயம் பல்வேறு காரியங்களாலே நிறைந்திருக்கிறது. எனவே, தேவனிடத்தில் ஜெபிக்க வேண்டும். “ஆண்டவரே, கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வரும் என்று சொன்னீரே! அந்தக் கொடிய காலங்களிலே தேவனுடைய மக்களாகிய எங்களிடத்திலே எதை எதிர்பார்க்கிறீர்?” என்று நாம் தேவனை விசாரிக்க வேண்டும்.
உலகமயமாக்கப்பட்ட அல்லது வணிகமயமாக்கப்பட்ட ஒரு கிறிஸ்தவம் உண்டு. அந்தக் கிறிஸ்தவத்திலே மனிதர்களுடைய தேவைகளும், பிரச்சினைகளும்தான் மைய இடத்தை வகிக்கும். அவர்களுடைய தேவைகளைப் பூர்த்திசெய்வதும், பிரச்சினைகளைத் தீர்ப்பதும்தான் அந்தக் கிறிஸ்தவத்திலே முதலிடம் பெறும். அதற்கு நான் கொடுக்கிற பெயர் வணிகமயமாக்கப்பட்ட கிறிஸ்தவம். நாம் கவனமற்று இருப்போமென்றால் நாமும் வணிகமயமாக்கப்படுவோம். என்னமோ நாம் ஒன்றும் insulated அல்லது exemption வாங்கினவர்கள் அல்ல. நாமும் இன்னும் மாம்சத்தில் வாழ்கின்ற மனிதர்கள்தான்.
எனவே, அந்த இரண்டு கடிதங்கள்மூலமாக இந்த முதிய மனிதனாகிய பவுல் எதைத் தன்னுடைய இளைய மகனாகிய தீமோத்தேயுவுக்கு வலியுறுத்த விரும்புகிறார், எதை நம்முடைய மனதில் பதிக்க விரும்புகிறார் என்பதைக்குறித்து தயவுசெய்து நீங்கள் பயிற்சிபண்ண வேண்டும். தீமோத்தேயு ஒரு வாலிபன் என்று எழுதியிருக்கிறது. எவ்வளவு வயது என்று என்னால் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஆனால், அவன் வாலிபன்தான். “உன் இளவயதைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு…” என்று அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுகிறார். அப்படியென்றால் தீமோத்தேயு ஒரு வாலிபன். “ஓ! இவன் என்ன சொல்லிவிடப் போகிறான்!” என்று மற்றவர்கள் அசட்டைபண்ண முடியும்.
நிறைய வாலிப சகோதரர்கள் இருக்கின்றீர்கள், படிக்கின்றீர்கள், வேலைபார்க்கின்றீர்கள். நீங்கள் வாழ்கின்ற இந்தக் காலகட்டத்திலே தேவனுடைய திட்டத்தை நிறைவேற்றுவதைப்பற்றிய பெரிய பொறுப்பு ஒன்றும் உங்களுக்கு இல்லை என்று நீங்கள் நினைக்கலாம். காலை எட்டு மணிக்கு நீங்கள் போகிறீர்கள். ஒருவேளை மாலை எட்டுமணிக்கு நீங்கள் வரலாம். இதிலே “நமக்கென்ன பெரிய பொறுப்பு இருக்கிறது!” என்று நீங்கள் நினைக்கலாம் அல்லது நீங்கள் உங்களைப் பெரிய திறமைசாலிகள்போல் நினைக்காமல் போகலாம்; நிறைய கொடைபெற்றவர்கள்போல நினைக்காமல் போகலாம். “என்னால் ஒன்றும் செய்ய முடியாது,” என்று நினைக்கலாம்.
நாம் வாழ்கின்ற காலத்திலே ஒரு பதிப்பையும், ஒரு தாக்கத்தையும் உண்டுபண்ண முடியுமா? “என்னால் ஒரு பதிப்பு, ஒரு தாக்கம் உண்டுபண்ண முடியும்,” என்று நினைக்கின்றவர்கள் கைகளை உயர்த்தலாம். நாம் ஒரு பதிப்பையும், ஒரு தாக்கத்தையும் நாம் வாழ்கின்ற யுகத்திலும், இடத்திலும் ஏற்படுத்த முடியும்.
சில குறிப்புகளை நான் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். 1 தீமோத்தேயு 4:12இல், “நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு,” என்று பவுல் தீமோத்தேயுவுக்குக் கூறுகிறார். இந்த ஒரு வார்த்தையை உங்கள் மனதில் இருத்திக்கொள்ளுங்கள். நீங்கள் எப்படிப்பட்ட இளவயதுள்ளவர்களாய் இருந்தாலும் சரி, உங்களுடைய திறமையும், உங்களுடைய ஞானமும், உங்களுடைய குணமும் இன்றைக்கு எப்படிப்பட்டதாய் இருந்தாலும் சரி, தேவன் உங்களுக்கும், எனக்கும் கொடுத்திருக்கிற அழைப்பு என்ன? “மாதிரியாயிரு”. எது செய்ய முடிந்தாலும் முடியாவிட்டாலும் ஒன்றை நாம் செய்ய வேண்டும். நாம் வாழ்கின்ற யுகத்திலே மனிதர்களுக்கு நாம் ஒரு மாதிரியாக இருக்க வேண்டும்.
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பூரணமான முன்மாதிரி. அவருடைய அடிச்சுவடுகளில் வாழ்கின்ற நாம் ஜீவனில் அவரோடு ஒன்றாக இருக்கின்ற நாம், நாம் வாழ்கின்ற யுகத்தில், காலகட்டத்தில், முன்மாதிரியான மனிதர்களாக வாழுமாறு அழைக்கப்பட்டிருக்கிறோம். 2 தீமோத்தேயு 2ஆம் அதிகாரம் 20, 21, 22ஆம் வசனங்களை வாசிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். *“ஒரு பெரிய வீட்டிலே பொன்னும், வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல் மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு. அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள். ஆகையால் ஒருவன் இவைகளைவிட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால் அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்.”
“மாதிரியாயிரு”, “கனத்திற்குரிய பாத்திரமாயிரு”. தேவனுடைய மக்கள் எல்லாரும் கனத்திற்குரியவர்களாக மாறுவார்கள் என்ற உத்தரவாதம் இல்லை. தேவனுடைய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களும் உண்டு. மரமும் மண்ணுமான பாத்திரங்களும் உண்டு. இதிலே நான் ஆச்சரியப்படவோ, அதிர்ச்சியடையவோ இல்லை. தேவனுடைய வீட்டிலே மண்ணும் மரமுமான பாத்திரங்கள் இருக்கலாமா? இருக்கலாம். சில பாத்திரங்களைத் தேவன் கனமான வேலைகளுக்குப் பயன்படுத்துகிறார், சில பாத்திரங்களை கனம் குறைந்த வேலைகளுக்குப் பயன்படுத்துகிறார்.
தேவனுடைய இரக்கம் எப்படிப்பட்டதென்றால் கனவீனமான பாத்திரங்களைக்கூட தேவன் பயன்படுத்துகிறார். பண ஆசை பிடித்த ஒரு மனிதனை இரட்சிப்பின் நற்செய்தியை அறிவிப்பதற்கு தேவன் பயன்படுத்த முடியுமா, முடியாதா? முடியும். அது எப்படி? இவ்வளவு பண ஆசையுள்ள ஒரு மனிதனை இரட்சிப்பின் நற்செய்தியை அறிவிப்பதற்கு தேவன் பயன்படுத்தலாம் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். அது தேவனுடைய இரக்கம்.
ஆனால், அழைப்பு என்னவென்று கேட்டால் ஒருவன் இவைகளைவிட்டு, தன்னைச் சுத்திகரித்துக் கொண்டால்… எவைகளைவிட்டு? நீங்கள் அதற்கு முந்தியும் பிந்தியும் இருக்கிற வசனங்களை வாசித்துப் பாருங்கள். 2 தீமோத்தேயு 2ஆம் அதிகாரம் 21ஆம் வசனம்: “ஒருவன் இவைகளைவிட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால்…”. சுத்திகரிப்பது யாருடைய பொறுப்பு? “நீ தீழ்ப்பானதை உன்னை விட்டு அகற்று. அப்பொழுது நீ எனக்கு வாய்போலிருப்பாய்”. தீழ்ப்பு என்றால் தீமை.”Remove what is evil from your mouth. Then you shall be unto me as my mouth”. இவையெல்லாவற்றையும்விட்டு, நீ சுத்திகரித்துக்கொண்டால் எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதும், பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு பிரயோஜனமுள்ளதுமான கனத்துக்குரிய பாத்திரமாக இருப்பாய்.
எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்ட பாத்திரங்கள். தேவன் பல நற்கிரியைகளை, நற்செயல்களை இந்த உலகத்திலே செய்ய விரும்புகிறார். பவுலைக்கொண்டு, பேதுருவைகொண்டு, யோவானைக்கொண்டெல்லாம் தேவன் செய்தாரென்றால் அதேபோன்ற நற்கிரியைகளை அல்லது வல்லமையுள்ள கிரியைகளை தேவன் இன்றைக்கும் செய்ய விரும்புகிறார். ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒருநாளும் மனிதனுடைய ஒருங்கிணைப்பு இல்லாமல் தேவன் இந்தப் பூமியிலே செயல்படுவது இல்லை. தேவன் இந்தப் பூமியிலே மனிதனால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறார். உண்மையா, பொய்யா? உண்மை. தேவனை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்று நாம் நினைக்கலாம். “தேவனே, நீர் சகலத்தையும் செய்ய வல்லவர். நீர் செய்ய நினைத்த காரியம் தடைபடாது,” என்பதை நான் அறிவேன். ஆனால், அவருடைய காரியம் தடைபடும். தேவனுடைய மக்களால் தேவன் செய்ய நினைத்த காரியம் ஒரு காலகட்டத்திற்குத் தடைபடலாம். அவருடைய இருதயத்தோடு ஒன்றாய் இணைந்த, ஒத்துழைக்கின்ற, மக்களை தேவன் பெறும்போதுதான் பல நற்கிரியைகளை, தாம் விரும்பின இந்த நற்கிரியைகளை, தேவனால் செய்ய முடியுமேதவிர… நம்மைக்கொண்டு நற்கிரியைகளைச் செய்வதற்குத் தேவனுக்கு எந்தச் சிரமமும் இல்லை. ஆனால், சிரமம் எங்கே இருக்கிறது என்றால் நாம் நம்மைச் சுத்திகரிப்பதிலே இருக்கிறது.
சுத்திகரித்தல் என்ற ஒரு காரியம் உண்டு. தேவன் எப்படிப்பட்ட சுத்திகரிப்பைச் செய்யவேண்டுமென்று விரும்புகிறார் என்பதை நாம் ஆராய்ந்துபார்க்க வேண்டும். நான் என்னை ஆராய்ந்துபார்க்கிறேன். தேவன் உண்மையிலே ஒரு நற்கிரியையைச் செய்ய வேண்டும் என்று விரும்பகிறார். ஆனால், நான் அதற்கு ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற பாத்திரமாக இருக்கிறேனா என்பதைக் கவனிக்க வேண்டும். பிரசங்கம் பண்ணுவதால் ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற பாத்திரங்கள் என்று நாம் முடிவு கட்டிவிடக் கூடாது. தேவனுடைய வார்த்தையைப் பகிர்ந்துகொடுப்பது நம்முடைய பங்கு. உடனே, நாம் ஆயத்தமாக்கப்பட்ட பாத்திரங்கள் என்று பொருளல்ல. ஆயத்தமாக்கப்படாத பாத்திரங்கள்கூட தேவனுடைய வார்த்தையைப் பகிர்ந்துகொடுப்பார்களா? பகிர்ந்துகொடுப்பார்கள்.
நான்கு காரியங்களை உங்களோடு நான் சொல்ல விரும்புகிறேன். நான் புரிந்துகொண்ட நடைமுறைக்குரிய நான்கு காரியங்கள். வெறுமனே ஒரு அரைமணிநேரம் செய்தியைக் கேட்டுவிட்டு நம்முடைய வாழ்க்கையிலே ஒரு மாற்றத்தை உண்டுபண்ணவில்லையென்றால் அது உண்மையிலே மிகவும் துக்ககரமானது. வாராவாரம், மாதாமாதம், வருடாவருடம் பல வருடங்களாக நாம் செய்திகளைக் கேட்கிறோம். ஆனால், கேட்கிற செய்திகளின் அளவிற்கு நம்முடைய வாழ்க்கையிலே நாம் அப்படி ஒன்றும் கனத்திற்குரிய பாத்திரங்களாக மாறிவிடவில்லை என்பது ரொம்ப துக்ககரமான உண்மை. அதற்குக் காரணம் இருக்கிறது. ஏனென்றால், நாம் வாழ்கின்ற சூழல் அப்படிப்பட்டது. உலகத்தின் சூழலை மட்டும் நான் சொல்லவில்லை. தேவனுடைய மக்களுடைய சூழலும் அப்படித்தான் இருக்கிறது.
நான் முதலாவது சொன்ன 2 தீமோத்தேயு 3ஆம் அதிகாரம் 1முதல் 5வரையிலான வசனங்களிலே தேவனுடைய மக்களைப்பற்றி எழுதியிருக்கிறது. “மனிதர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மார்களுக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்கையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்…”. ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். இது எல்லாமே இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத மக்களைப்பற்றி சொல்லியிருக்கிறது என்று நாம் ஒரு முடிவுக்கு வந்துவிடக் கூடாது. இது ஓரளவுக்கு யாரிடையேயும் காணப்படும்? தேவனுடைய மக்களிடையேயும் ஓரளவுக்குக் காணப்படும். தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும் Not lovers of God, but lovers of themselves. மனிதர்களுக்கு இருக்கிற கண்ணிகளிலே ஒரு மாபெரும் கண்ணி தேவன்மேல் அவர்கள் அன்புகூருகிறவர்களாயிராமல் யார்மேல் அன்புகூருவார்கள்? தங்கள்மேல், தங்கள் காரியங்கள்மேல், தங்கள் இன்பங்கள்மேல் அதிகமாக அன்புகூருகிறவர்களாக இருப்பார்கள்.
தொடர்ந்து வாசிப்போம். “தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்.” அவர்கள் தேவபக்தியில்லாதவர்களாய் இருக்கமாட்டார்கள். “தேவபக்தியின் வேடத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்”. “They will have the form of godliness but they deny its power”. இது அவிசுவாசிகளைப்பற்றிச் சொல்லுகிறதா அல்லது ஏறக்குறைய விசுவாசிகளைப்பற்றிச் சொல்லுகிறதா? ஏறக்குறைய விசவாசிகள் They have the form of godliness. தேவபக்தியின் ஒரு தோற்றம் அங்கு காணப்படுகிறது. ஆனால், தேவபக்தியின் வல்லமை, தேவபக்தியின் பெலன், அங்கு காணப்படவில்லை. இது நமக்கும் பொருந்தலாம். தேவபக்தியின் தோற்றம் காணப்படுகிறது. ஆனால், தேவபக்தியின் வல்லமை, தேவபக்தியின் பெலன், தேவபக்தியினால் உண்டாகிற ஒரு பதிப்பு, ஒரு தாக்கம், வீரியம், அந்த மக்களிடையே இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையிலே நாம் வாழ்வதால் அந்த சூழ்நிலையைவிட்டு மேலே எழும்புவது, அந்தச் சூழ்நிலைக்கு அப்பாற்பட்டு ஒரு வாழ்க்கையை வாழ்வது ஒரு பெரிய சவாலாக இருக்கிறது. இதை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
முதலாவது, தீமோத்தேயு என்றால் இளைய சகோதர சகோதரிகளுக்குச் சொல்வது. தேவனுடைய வார்த்தையில் போதுமான அளவில் உங்கள் மனதைச் செலவிடுங்கள். இது முதலாவது குறிப்பு. 2 தீமோத்தேயு 3ஆம் அதிகாரம் 15, 16, 17ஆம் வசனங்களை வாசிப்போம். “கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்னும் உனக்குத் தெரியும்”.
பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்“. பரிசுத்த வேத எழுத்துக்களை எந்த அளவுக்கு சிறுவயதிலிருந்து அல்லது இளவயதிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோமோ அந்த அளவுக்கு அது நல்லது. நம்முடைய பிள்ளைகளுக்கெல்லாம் வசனங்களை நாம் சொல்லிக்கொடுக்கிறோம். நல்லது. மிக முக்கியமாக வசனங்களின்படி வாழ்வதற்கு உங்கள் வீடுகளிலே நீங்கள் போதியுங்கள். வசனங்களை எப்படிப் பிரயோகிக்க வேண்டும் என்று வீடுகளில் நீங்கள் போதியுங்கள். அதற்குரிய ஞானத்தைத் தேவன் தருமாறு தேவனிடத்தில் ஜெபிக்க வேண்டும்.
தொடர்ந்து வாசிப்போம். “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையும் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி…” 2 தீமோத்தேயு 2ஆம் அதிகாரம் 21 ஆம் வசனம்: “ஒருவன் இவைகளைவிட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்”. எந்த நற்கிரியையையும், all good works. சுத்திகரிப்பது மட்டுமல்ல.
தேவனுடைய மக்களாகிய நீங்கள் செய்ய வேண்டிய ஒரு காரியம். தேவனுடைய வார்த்தையிலே போதுமான அளவுக்கு உங்கள் மனதைச் செலுத்துங்கள். போதுமான அளவுக்கு உங்கள் மனதைச் செலவிடுங்கள். அது எந்த நற்கிரியையையும் செய்ய உங்களைத் தகுதியுள்ளவர்களாக்கும், தேறினவர்களாக மாற்றும்.
இந்த தீமோத்தேயு உண்மையிலேயே தேவனுடைய பணியைத் தொடர்ந்துசெய்வதற்கு, அதற்குத் தேவையான தேர்ச்சியைப் பெறுவதற்கு, அவன் அப்படிப்பட்ட ஒரு தேறின மனிதனாக இருப்பதற்கு தேவனுடைய வார்த்தை அவனுக்குத் தேவைப்படுகிறது என்பதை பவுல் நினைக்கிறார். ஏனென்றால், “அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிக்கிறது” (2 தீமோ. 3:17). தேவனுடைய வார்த்தை நமக்கு கற்பிக்கும்; தேவனுடைய வார்த்தை நம்மைக் கடிந்துகொள்ளும்; தேவனுடைய வார்த்தை எங்கு நம்மைக் கடிந்துகொள்ளுகிறதோ அங்கு நம்மை எப்படித் திருத்தவேண்டுமென்று சொல்லும். தேவனுடைய வார்த்தை நம்மை நீதியான வாழ்க்கை எப்படி வாழ்வது என்பதைப் பழக்குவிக்கும்.
சங்கீதம் 119யைப் பொறுமையாய் வாசித்துப் பாருங்கள். பொறுமையாய் வாசியுங்கள். அதிலே பல வசனங்களை வாசிக்கும்போது உங்கள் இருதயங்கள் நெகிழும். “உம்முடைய சாட்சிகள் (வேதம்) என் தியானமாயிருக்கிறபடியால் எனக்குப் போதித்தவர்கள் எல்லாரிலும் அறிவுள்ளவனாயிருக்கிறேன்,” (சங். 119:98) என்று தாவீது சொல்கிறான். “எனக்குப் போதித்தவர்களைவிட நான் ஞானமுள்ளவனானேன். அதற்கு ஒரு காரணம் உம்முடைய வேதம்”. “அநேகமாயிரம் பொன் வெள்ளியைப்பார்க்கிலும் நீர் விளம்பின வேதமே எனக்கு நலம்” (சங். 119:72). “மிகுந்த கொள்ளையுடைமையைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறதுபோல, நான் உமது வார்த்தையில் மகிழுகிறேன்” (சங். 119:162). ஒருவன் நூறு கோடி ரூபாய் லாட்டரி அடித்தால் எவ்வளவு மகிழ்வானோ அவ்வளவு அதிகமாக தேவனுடைய வார்த்தை அவன் மகிழ்ச்சியடைகிறான்.
சங்கீதம் 119யின் பல வசனங்களை மேற்கோள்காட்ட எனக்கு சமயமில்லை. ஆனால் தயவுசெய்து அதை நீங்கள் வாசியுங்கள். வேதத்திலும் மிக நீண்ட அதிகாரம் சங்கீதம் 119. ஒரேவொரு வசனத்தை மட்டும் மேற்கோள் காட்டுகிறேன். 9ஆம் வசனம்: “வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே”.
ஒருவன் கனத்திற்குரிய பாத்திரமாக வளர்வதற்கும், மாறுவதற்கும் தேவையான எல்லா ஞானமும் எல்லாப் படிப்பினையும் தேவனுடைய வார்த்தையில் உள்ளது. “உமது வசனங்களைத் தியானிக்கும்படி, குறித்த ஜாமங்களுக்குமுன்னே என் கண்கள் விழித்துக்கொள்ளும்” (சங். 119:148) என்று தாவீது சொல்கிறான். “எனக்கு ஒரு ஞானத்தைத் தந்துவிடமாட்டீரா?” சிலரைப் பார்க்கும்போது உங்களுக்கு அப்படி ஒரு உணர்வு வருவதுண்டா? “எப்படி இவர்கள் நம்மைவிட ஞானமுள்ளவர்களாக இருக்கிறார்கள்? ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையிலே எப்படி சரியாக புரிந்து துல்லியமான முடிவெடுக்கிறார்கள். எப்படி அவர்கள் அஞ்சாமல் இந்தப் பாதையிலே நடக்கிறார்கள்? அதேபோல் நான் என்னுடைய வாழ்க்கையின் எல்லாச் சூழ்நிலைகளிலும் சரியான முடிவு, துல்லியமான முடிவு, எடுக்க விரும்புகிறேன். அஞ்சாமல் தேவனுடைய பாதையில் நடக்க விரும்புகிறேன்,” என்கிற ஒரு வாஞ்சை, ஒரு கதறுதல் உங்களுக்கு எப்பொழுதாவது ஏற்பட்டிருக்கிறதா? எனக்கு ஏற்பட்டிருக்கிறது.
அதுபோல நம்மைச் சந்திக்கிறவர்களுக்குக்கூட அப்படிப்பட்ட உணர்ச்சிகள் பொங்க வேண்டும். “ஆ! எப்படி இந்தச் சகோதரர்கள் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைகளிலே சரியான, துல்லியமான முடிவெடுக்கிறார்கள். எந்தவித அச்சமுமின்றி தேவனுடைய வழியிலே நடக்கின்றார்கள். ஆசீர்வாதத்தைப் பெறுகின்றார்கள். அதேபோல் நான் தேவனுடைய வழியிலே நடக்க விரும்புகிறேன்,” என்று நம்மைப் பார்க்கிறவர்களும் அப்படி inspire ஆக வேண்டும். நாம் எப்படி inspire ஆகிறோமோ அதேபோல் அவர்களும் inspire ஆக வேண்டும். அப்படிப்பட்ட ஞானத்தையும் குணத்தையும் உண்டாக்க வல்லது தேவனுடைய வார்த்தை.
ஒரு கேள்வியை நீங்கள் கேட்டுக்கொள்ளுங்கள். “தேவனுடைய வார்த்தையிலே நான் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும், ஒவ்வெரு மாதமும் எந்த அளவுக்கு என்னுடைய மனதைச் செலவிடுகிறேன்”. ஒன்றைக் கவனிக்க வேண்டும். மந்திரம் ஓதுவதுபோல் தேவனுடைய வார்த்தையை வாசிப்போமென்றால் அப்படிப்பட்ட ஞானத்தையும், குணத்தையும், எந்த நற்கிரியையும் செய்யத்தக்க தகுதியும் நமக்குள் உண்டாக்காது. ஒரு மனிதன் தேவனுடைய வார்த்தையிலே மூழ்க வேண்டும். அதே 2 தீமோத்தேயு 2ஆம் அதிகாரம் 15-16ஆம் வசனங்கள்: “நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும், சத்திய வசனத்தை நிதானாமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்குமுன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு”. படிக்காதவன் எப்படி நிதானமாய்ப் பகுத்துப் போதிக்க முடியும்? நான் படிக்கும்போது எப்படி நிதானமாயும், பகுத்தும், படிக்க வேண்டும்?
இரண்டாவது காரியம், தேவனுடைய கொடைகள். முதலாவது காரியம், தேவனுடைய வார்த்தை. தேவனுடைய வார்த்தைக்குப் போதுமான அளவிற்கு நம்முடைய மனதை நாம் செலவிட வேண்டும். அப்போது நாம் அப்படிப்பட்ட மனிதர்களாக, கனத்திற்குரிய பாத்திரங்களாக, உருவாவோம். கனத்திற்குரிய பாத்திரமாக நாம் உருவாவதற்குச் செய்யவேண்டியது, தேவனுடைய கொடைகளைக் குறித்து நாம் எல்லாக் கவனத்தோடும் ஒவ்வொரு நாளும் நாம் வளர்க்க வேண்டும். 2 தீமோத்தேயு 1ஆம் அதிகாரம் 6, 7 ஆம் வசனங்கள் வாசிக்க வேண்டும்: “இதினிமித்தமாக நான் உன்மேல் என் கைகளை வைத்ததினால் உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல்மூட்டி எழுப்பிவிடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன்”. தேவன் ஒரு வரத்தை, ஒரு கொடையை, தேவனுடைய மக்கள் எல்லாருக்கும் அருளியிருக்கிறார். தேவன் ஒரு கொடையைக்கூட தனக்கு அருளவில்லை என்று தேவனுடைய பிள்ளைகள் யாருமே சொல்ல முடியாது. சிலருக்கு அவர் ஐந்து தாலந்துகளைக் கொடுக்கலாம். சிலருக்கு அவர் மூன்று தாலந்துகளைக் கொடுக்கலாம். ஆனால் “ஒரு தாலந்தும் கொடுக்காமல் என்னை வெறுங்கையாய் விட்டுவிட்டார்,” என்று தேவனைப்பற்றி எந்த மனிதனும் புகார் சொல்ல முடியாது.
ஆனால், அந்த ஒரு தாலந்தை வளர்த்து, இரண்டாக மாற்றுவது, நான்காக மாற்றுவது, எட்டாக மாற்றுவது நம்மைச் சார்ந்தது. அதுதான் 1 தீமோத்தேயுவிலே வாசிக்கிறோம். “நீ பெற்ற அந்த வரத்தை அனல்மூட்டி எழுப்பும்படி ஜாக்கிரதையாயிரு”. ஆங்கிலத்தில் நன்றாக இருக்கும். “Fan into flame the gift of God which is in you”. தேவன் கொடையைத்தான் தருவார். அதை அனல்மூட்டி எழுப்புவது நம்முடைய பொறுப்பு. என்றைக்காவது ஒருநாள் அனல்மூட்டி எழுப்பினால் அது அனல் மூளாது. ஓவ்வொரு நாளும்… ஒவ்வொரு நாளும்… ஒவ்வொரு நாளும். 14ஆம் வசனம்: “உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக்கொள்”. தேவன் நம்மை நம்பி ஒரு நற்பொருளைக் கொடுத்திருக்கிறார். 2 தீமோத்தேயு 1ஆம் அதிகாரம் 7ஆம் வசனத்தை நீங்கள் வாசிக்க வேண்டும்: “தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல் பலமும், அன்பும், தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்”.
1 தீமோத்தேயு 4ஆம் அதிகாரம் 7, 8 ஆம் வசனங்களில் நான் சொன்ன காரியம் இதுதான். ஒவ்வொரு நாளும் நாம் பயிற்சி செய்ய வேண்டும். “Exercise yourself unto Godliness”. “Train yourself unto Godliness”. தேவனுடைய மக்கள் “Train yourself to be Godly”. அதற்கு அடுத்ததாக “சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது. தேவ பக்தியோ இம்மைக்கும், இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தம் உள்ளதாகையால் எல்லாவற்றிலும் மிகுந்த பலனுள்ளது”. ஆகவே தேவபக்திக்கேதுவாக “To be Godly”, “To become Godly”, ஒவ்வொரு நாளும் முயற்சிபண்ணு” என்று தமிழில் இருக்கும். அது அவ்வளவு நேர்த்தியானதல்ல. அதற்கு பெயர் முயற்சி அல்ல. பயிற்சிசெய்ய வேண்டும். உடலை வளர்ப்பதற்கு அவர்கள் ஒவ்வொரு நாளும் பயிற்சி செய்கிறார்கள். கடவுள் நல்ல உடலைக் கொடுத்துவிட்டார் என்று மனிதர்கள் அப்படியே இருந்துவிடுவது இல்லை. அவர்கள் உடற்பயிற்சிக் கூடத்திற்குப் போய் ஒவ்வொரு நாளும் அந்த உடலைப் பேணுகிறார்கள்.
தேவன் ஒரு ஆவிக்குரிய deposit நற்பொருள் கொடுத்திருக்கிறார். ஆவிக்குரிய வரத்தை, ஆவிக்குரிய கொடையை, கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் நாம் அதைப் பயிற்சிசெய்து வளர்க்க வேண்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஆவிக்குரிய கொடை என்றால் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? பரிசுத்த ஆவியின் கொடைகள் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், நாம் மிகப் பிரதானமாக சொல்வது நாம் பெற்றிருக்கிற மாபெரும் கொடை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே. “ஓ! நான் யார்மேலாவது கைவைத்தால் பிசாசு ஓடும் என்கிற கொடையைக் கொடுத்திருக்கிறார் என்றால் நான் ஒவ்வொருநாளும் யாரையாவது கண்டுபிடித்து பிசாசை விரட்டிக்கொண்டிருப்பேனே!” என்று ஒருவேளை நீங்கள் நினைக்கலாம். அப்படியல்ல. அதுவும் நல்ல கொடை.
நாம் பெற்றிருக்கிற ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து, நமக்குள் இருக்கிற கிறிஸ்து, எவ்வளவு மாபெரும் கொடை என்பதை நாம் அறிவது இல்லை. அருமையான பரிசுத்தவான்களே, நமக்குள் இருக்கிற கிறிஸ்து எவ்வளவு மாnரும் கொடை என்பதை நாம் அறிவோமென்றால் அந்தக் கொடையினால் ஒவ்வொருநாளும் வாழ்வோம். அந்தக் கொடையை ஒவ்வொரு நாளும் வளர்ப்போம். ஒவ்வொரு நாளும் பெருக்குவோம்.
2 தீமோத்தேயு 2ஆம் அதிகாரம் 1ஆம் வசனத்தில், “என் மகனே, நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு” என்று பவுல் சொல்கிறார். தீமோத்தேயு கொஞ்சம் பயந்த சுபாவம் உள்ளவர் என்று 1 கொரிந்தியர் 16ஆம் அதிகாரம் 10, 11ஆம் வசனங்களிலே வாசிக்கிறோம். “தீமோத்தேயு உங்களிடத்திற்கு வந்தானேயாகில், அவன் உங்களிடத்தில் பயமில்லாதிருக்கப் பாருங்கள். என்னைப்போல அவனும் கர்த்தருடைய கிரியையை நடப்பிக்கிறானே,” என்று பவுல் கொரிந்தியர்களுக்கு எழுதுகிறார்.
இந்த வசனத்தை நீங்கள் யோசித்துப்பாருங்கள். ஒரு தந்தையினுடைய உள்ளத்தோடு அவர் எழுதுகிறார். “தீமோத்தேயு உங்களிடத்திற்கு வந்தால் அவன் பயப்படாதிருக்கப் பாருங்கள்.” நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? தீமோத்தேயு இறங்கினவுடனே அப்படியே வாட்டசாட்டமாக இருப்பார். “Ladies and gentlemen” என்று பேசினவுடனே மக்களெல்லாரும் அப்படியே spellbound ஆக நின்று கேட்கிற ஒரு மகா பெரிய personality உள்ளவராக இருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? பவுலுக்கே அப்படி ஒரு personality இருந்ததாக வேதாகமத்தில் அவர் எழுதவில்லை. “அவனுடைய நிருபங்கள் பார யோசனையும், பலமுமுள்ளவைகள்; சரீரத்தின் தோற்றமோ பலவீனமும், வசனம் அற்பமுமாயிருக்கிறதென்கிறார்களே” (2 கொரி. 10:10). Very weighty.
ஆகவே, இப்படிப்பட்ட ஒரு பயந்த குணமுள்ளவன் அடுத்த தலைமுறையிலே தேவனுக்காக எதைச் சாதித்துவிடப் போகிறான்? தீமோத்தேயுவைவிட நாம் ஒன்றும் பயந்தவர்களல்ல. தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல் பலமும், அன்பும், தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார். “என் மகனே தெளிந்த புத்தியுள்ளவனாயிரு; தீங்கநுபவி,” என்று அவர் எழுதுகிறார். எதற்கு தெளிந்த புத்தி தேவை? ஒன்றிரண்டு தீங்கை வைத்துவிட்டால் போதும். You will be thrown out of gear. இது இரண்டாவது குறிப்பு.
மூன்றாவது குறிப்பு, தேவன்மேல் நம்பிக்கையாயிருப்பது. முதலாவது நான் சொன்னேன். தேவனுடைய வார்த்தைக்கு நம்முடைய மனதை போதுமான அளவிற்கு நாம் செலவிடுவது. இரண்டாவது, தேவனுடைய கொடைகளை நாள்தோறும் வளர்ப்பது. மூன்றாவது, தேவன்மேல் நம்பிக்கையாயிருப்பது. அதைச் சொல்லி முடித்துவிடுகிறேன்.
வாழ்கின்ற காலங்கள் எப்படிப்பட்டதென்றால் மனிதர்கள் தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராய் இருப்பார்கள். பவுல் வாழ்ந்த காலத்திலேயே அவ்வளவு சுகபோகங்களென்றால் நாம் வாழ்கின்ற இந்த காலத்திலே சொல்லவே வேண்டாம். உணவை எடுத்துக்கொள்ளுங்கள். நூறு வருடத்திற்கு முன்பு வீட்டிலே சாப்பிடுவதைத்தவிர வெளியே என்ன சாப்பாடு கிடைக்கும்? இப்பொழுது வீடடிலே சாப்பிடுவதைத்தவிர வெளியே என்ன சாப்பாடு கிடைக்கும்? வெளியே கிடைக்கின்ற இந்த சாப்பாட்டு வகைகளைப் பார்த்தால் சிலபேருக்கு வீட்டில் சாப்பிடுவதே பிடிக்கவில்லை. “ஒவ்வொரு நாளும் காலையில் இட்லி, தோசைதானா?” என்று சலித்துக்கொள்கிறார்கள். ஒவ்வொரு நாள் காலையில் கஞ்சி கிடைத்தாலே கர்த்தரைத் துதித்த காலங்கள் உண்டு. அதற்காக இன்னும் துதிக்கின்ற மனிதர்கள் உண்டு என்று நான் துணிந்து சொல்வேன்.
தேவனைவிட்டு நம்மைப் பிரித்து, இந்த உலகத்திலே நம்மைச் சிக்கவைப்பதற்கு போதுமான சுகபோகங்கள் இந்தப் பூமியிலே உண்டு. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து லூக்கா 21ஆம் அதிகாரத்திலே தம்முடைய பிள்ளைகளை இப்படி எச்சரித்தார். கர்த்தர் வரும்போது மக்களுடைய நிலைமை எப்படி இருக்கும் என்பதைப்பற்றி அவர் எச்சரித்தார். “உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும், வெறியினாலும், லௌகீகக் கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்” (வ. 34).
ஒரு பக்கம் பெருந்திண்டியும், வெறியும்; இன்னொரு பக்கம், லௌகீகக் கவலைகள். இந்த உலகம் இரண்டு காரியங்களைச் செய்யும். ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள், ஐசுவரியவான்களாக இருக்கிறவர்கள். ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்களுக்கு உலகக் கவலைகள் உண்டு. ஐசுவரியவான்களாக இருக்கிறவர்களுக்கு பெருந்திண்டியும், வெறியும் உண்டு. 1 தீமோத்தேயு 6ஆம் அதிகாரத்திலே பவுல் இந்த இரண்டையும்பற்றி எச்சரிக்கிறார். ஒருபக்கம் ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள். இன்னொரு கூட்டம், ஐசுவரியவான்களாக இருக்கிறவர்கள். வேலை இல்லாதபோது வேலை வேண்டுமென்று தவித்து கவலைப்படுவோம். வேலை வந்தபிறகு அந்த வேலையிலே திளைத்து நாம் மகிழ்வோம். இரண்டு ஆபத்துகளும் தீமோத்தேயுவின் நாட்களிலும், பவுலின் நாட்களிலும் உள்ளதால் நம்முடைய நாட்களிலும் அது பல ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கிறது.
அருமையான தேவனுடைய பிள்ளைகளே! நாம் எச்சரிக்கப்பட வேண்டும். “இவ்வுலகத்தில் ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்கு சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கின்ற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும்…அவர்களுக்குக் கட்டளையிடு” (1 தீமோ. 6:17). படிப்பு, வேலை, வருவாய் இவைகளின்மேல், இந்தப் பூமி தருகின்ற சுகபோகங்கள்மேல், அவர்கள் நம்பிக்கை வைக்க வேண்டாம். அது அவர்கள் வாழ்க்கையிலே பெரிய திருப்தியைத் தருமென்று அவர்கள் நினைக்கின்றார்கள். அது பொய், அது மாயை.
கிறிஸ்தவர்கள் உட்பட மனிதர்கள் தேவனைவிட்டு ஏன் பிரிந்துபோகிறார்கள் அல்லது அவர்கள் தேவனுக்கு ஏன் மைய இடம் தரவில்லை? ஒன்று அச்சம். இன்னொன்று இச்சை. எதைப்பற்றிய அச்சம் என்றால் “இந்தப் பூமியிலே இந்த சுகபோகங்கள், இந்த நன்மைகள், இந்த இன்பங்கள் எல்லாம் நமக்கு கிடைக்காமல் போய்விடுமோ!” என்கிற அச்சம் மனிதர்களை வாட்டி வதைக்கும். “இந்தப் பணம் நமக்கு இல்லாமல் போய்விடுமோ?” அல்லது “இந்தப் பொருள் நமக்கு இல்லாமல் போய்விடுமோ?” அல்லது “இது இல்லாமல் போய்விடுமோ? அது கிடைக்காமல் போய்விடுமோ?” என்கிற அச்சம் மனிதர்களைப் பிடித்து உலுக்குகிறது. இதற்குப் பெயர் லௌகீகக் கவலைகள்.
இன்னொன்று இச்சை. தேவன் நமக்கு நன்மைகளைக் கொடுக்கின்றார். ஆனால், என்னமோ இந்த நன்மைகளும், இன்பங்களும் நம்மைத் திருப்திப்படுத்திவிடுமென்ற அளவுகடந்த ஆசையினால் அந்த நன்மைகளையும், இன்பங்களையும் பின்தொடர்வது.
இந்த இரண்டும் மனிதர்களைத் தேவனிடமிருந்து பிரிக்கின்றன. 2 தீமோத்தேயு 2ஆம் அதிகாரம் 2, 3, 4 வசனங்களில் அப்போஸ்தலனாகிய பவுல் சொல்வதை வாசியுங்கள்: “அநேக சாட்சிகளுக்குமுன்பாக நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி. நீயும் இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவி”. என்ன மாதிரி ஆசீர்வாதம் பாருங்கள்! யாராவது நம்மிடம் வந்து “ஜெபம் பண்ணுங்கள்” என்று வரும்போது “அருமையான மகனே! நீ இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாகத் தீங்கநுபவிப்பாயாக” என்பது நல்ல ஆசீர்வாதமா?
அடுத்த தலைமுறைக்கு தேவனுடைய வார்த்தை: நீயும் கிறிஸ்துஇயேசுவுக்கு நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவி. இதற்கு “ஆமென்” என்று சொல்பவர்கள், “நான் தீங்கநுபவிக்க விரும்புகிறேன், தீங்கநுபவிப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்,” என்று சொல்பவர்கள் கைகளை உயர்த்துவோம்.
தொடர்ஓட்டப் பந்தயத்தில் முதலாவது ஓடுகிறவன் ஓடி முடித்ததும், கையில் இருக்கும் அந்தக் கம்பை அங்கு காத்திருக்கும் அடுத்த ஆளிடம் கொடுக்க வேண்டும். பவுல் தன்னுடைய கம்பை தீமோத்தேயுவினிடத்தில் கொடுக்கிறார். அதில் “கிறிஸ்து இயேசுவுக்கு நல்ல போர்ச்சேவகனாய் நான் தீங்கநுபவித்தேன். தொடர்ந்து நீயும் தீங்கநுபவி. ஏனென்றால், உன்னுடைய தலைமுறையிலே மக்கள் சுகபோகப்பிரியராய் இருப்பார்கள். தீங்கநுபவிப்பதற்கு யாரும் முன்வரமாட்டார்கள்,” என்பதும் அடங்கும்.
அடுத்ததாக மூன்று உவமைகளைச் சொல்கிறார். “தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும் தன்னைச் சேவகம் எழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாய் இருக்கும்படி பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான்”. தயவுசெய்து நிதானியுங்கள். தன்னைச் சேவகம் பண்ண எழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாய் இருக்கும்படி பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான். இந்த உலகத்திலே நம்முடைய ஈடுபாடுகளை எந்த அளவுக்குக் குறைக்க முடியுமோ அந்த அளவுக்குக் குறைக்க வேண்டும். 1 கொரிந்தியர் 7ஆம் அதிகாரத்திலே பவுல் சொல்கிறார். “இவ்வுலகத்தை அநுபவிக்கிறவர்கள் அதைத் தகாதவிதமாய் அநுபவியாதவர்கள்போலவும் இருக்க வேண்டும்” (வ. 31).
கைபேசியை வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் கைபேசி இல்லாதவர்கள்போல் வாழுங்கள். இராணுவத்தில் பணிபுரிகிறவன் ஓயாமல் கைபேசியை வைத்திருந்தான் என்று வைத்துக்கொள்வோமே. அவனுடைய உயரஅதிகாரி என்ன செய்வான்? Dismiss. “நீ கைபேசி கடை வைத்துக்கொள்ள வேண்டியதுதான்,” என்று சொல்வார்.
அருமையான சகோதர சகோதரிகளே, இந்த உலகத்திலே நாம் மூழ்குவதைக்குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த உலகத்து மக்கள் எப்படியாவது இந்த உலகத்தை அனுபவித்துத் தீர்க்க வேண்டும் என்று குறியாக இருக்கிறார்கள்.
இன்னொரு இடத்தில் வாசித்தேன். Amusements. 2 தீமோத்தேயு 1இல் கொடிய காலங்கள் வரும் என்று பவுல் எழுதியிருப்பதை வாசித்தோம் அல்லவா? Amusement என்கிற வார்த்தை இருக்கிறது. Amusement என்றால் என்ன? மக்கள் நூதனமான ஆடியோ ஒன்றைக் காட்டுவார்கள். ஒரு நூதமான poster ஒன்றைக் காட்டுவார்கள். அதை ஒரு மணி நேரத்திற்குப் பார்த்துக் கிளுகிளுத்துக் கொண்டிருக்கலாம். அதற்குப்பிறகு நூதனமான வீடியோ ஒன்றைக் காட்டுவார்கள். இவைகளில் சிக்கிக் கொள்கிறவன் தண்டிலே சேவகம்பண்ணுகிறவனுக்கு ஏற்றவனாய் இருக்க முடியாது. 1 தீமோத்தேயு 6ஆம் அதிகாரத்தை நீங்கள் பொறுமையாய் வாசித்துப்பாருங்கள்.
அருமையான பரிசுத்தவான்களே, தேவன் இந்தப் பூமியிலே மனித வாழ்க்கைக்குத் தேவையான எல்லா நன்மைகளையும் தருவதாக வாக்குறுதி செய்திருக்கிறார். அதைத்தான் நான் சொன்னேன். நாம் அநுபவிக்கிறதற்கு சகலவித நன்மைகளையும் சம்பூரணமாய்த் தருகிற தேவன். ஆனால், “நாம் அதிலே மூழ்க வேண்டும், அமிழ வேண்டும்,” என்று உலகம் சொல்லும். ஆனால் பவுல், “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். நீயோ, தேவனுடைய மனிதனே, இவைகளை விட்டோடி, நீதியையும், தேவபக்தியையும், விசுவாசத்தையும், அன்பையும், பொறுமையையும், சாந்த குணத்தையும் அடையும்படி நாடு…போதுமென்கிற மனதுடனேகூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்” (1 தீமோ. 6:6-11). அதற்கு அர்த்தம் நம்முடைய தொழிலிலே நாம் உண்மையற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதல்ல. அப்படி நான் சொல்லவில்லை. ஆனால் இந்தப் பூமியிலே நன்மைகளைப் பெறுவதற்கு நாம் தேவனை நம்பியிருக்கிறோம். அல்லேலூயா! “For He gives to His beloved even in his sleep”. “தேவன் தமக்குப் பிரியமானவர்கள் தூங்கும்போதே அவர்களுடைய தேவைகளைப் பூர்த்திசெய்துவிடுகிறார்,” (சங். 127:2) என்று ஒரு வசனம் இருக்கிறது. தமிழிலே “அவரே தமக்குப் பிரியமானவருக்கு நித்திரையளிக்கிறார்” என்று இருக்கும். ஆனால் “கர்த்தர் தமக்குப் பிரியமானவர்களுக்கு அவர்கள் தூங்கும்போதேகூட அவர்கள் தேவைகளைப் பூர்த்திசெய்கிறார்”.
வாலிபனாக இருந்தபோது நான் இப்படிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆதாமுக்கு தேவன் ஒரு பெண் பார்க்க வேண்டும் என்று சொல்லும்போது முதலாவது அவர் ஆதாமை என்ன செய்தார்? தூங்க வைத்து விட்டார். அவனை விழிக்க வைத்திருந்தார் என்று வைத்திருப்போமே. அவன் மரம் மரமாகத் தேடியிருப்பான். “இந்த மரத்திற்குப்பின் பெண் இருக்கிறாளா? அந்த மரத்திற்குப்பின் பெண் இருக்கிறாளா?” என்று தேடியிருப்பான். சோர்ந்திருப்பான். அதனால் கர்த்தர் செய்கிற முதல் வேலை என்ன? இவனைத் தூங்கவைத்துவிட வேண்டும். சிறுவயதிலே கேட்ட சில பிரசங்கமெல்லாம் நம்முடைய நெஞ்சைவிட்டு அகல்வதில்லை. உடனே “நாம் படுத்துத் தூங்க வேண்டும்” என்று நான் சொல்வதாக நீங்கள் அப்படியே எழுத்தின்படி இந்த வார்த்தைகளை எடுத்துக்கொள்ளமாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். அதனுடைய சாராம்சம் என்னவென்று கேட்டால் தேவன்மேல் நம்பிக்கையாயிருக்க நாம் சிறுவயதுமுதல் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தக் கிளுகிளு ஆடியோ, போஸ்டர், கிளுகிளு என்றால் amusing. இந்த amusing. ஆடியோ, வீடியோ, போஸ்டர், amusing message என்று நம்முடைய நேரத்தை வீணாக்கக் கூடாது. இவைகளின்மூலமாய் நாம் நன்மைகளையும், இன்பத்தையும், திருப்தியையும் பெறுவோம் என்று நினைக்க வேண்டாம்.
அருமையான பரிசுத்தவான்களே, ஒரேவொரு சிந்தனையைத்தான் தந்தேன். அது என்னவென்று கேட்டால் கடைசிக்காலங்களிலே ஆண்டவராகிய இயேசுவால் வாழ்கின்ற, அவரை வழங்குகின்ற ஒரு கூட்டம் மக்களாக இருக்க தேவன் நம்மை அழைத்திருக்கிறார். எது குறைவுபடுகிறது அல்லது எது குறைவுபடும் என்பதை பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதின இரண்டு கடிதங்களிலே காட்டியிருக்கிறார். ஒன்று, தேவனுடைய வார்த்தையிலே அவர்கள் போதுமான அளவிற்கு தங்கள் மனதைச் செலவிடமாட்டார்கள். நீ செலவிடு. இரண்டு, தேவனின் மாபெரும் கொடையாகிய கிறிஸ்துவை நாள்தோறும் வளர்ப்பதைப்பற்றி அவர்கள் கவலைப்படமாட்டார்கள். நீ நாள்தோறும் அந்தக் கிறிஸ்துவால் வாழ்வதைக்குறித்து, கிறிஸ்துவினுடைய அன்பு, நீதி, விசுவாசம், நடத்தை, சொல் எல்லாம் வளர்வதற்கு ஒவ்வொரு நாளும் பயிற்சிபண்ணு. மூன்றாவது, அவர்கள் தங்கள் நன்மைகளுக்கும், இன்பங்களுக்கு தேவன் போதுமானவரல்ல என்று நினைப்பார்கள். இந்த உலகத்தில் எப்படியாவது மூழ்கி, அமிழ்ந்து, திளைத்து இதிலிருந்து நன்மைகளையும், இன்பங்களையும், வெற்றிகளையும் பெறவேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி இருக்காது. தேவன் போதுமான, நிறைவான நன்மைகளையும், இன்பங்களையும் தம் பிள்ளைகளுக்கு வைத்திருக்கிறார். தீமோத்தேயுவுக்குச் சொன்ன வார்த்தைகளை நான் மறுபடியும் சொல்கிறேன். “என் மகனே, நீ இவைகளைச் சிந்தித்துக்கொள். கர்த்தர் உனக்குப் புத்தியைத் தந்தருள்வார்”. 2 தீமோத்தேயு 2ஆம் அதிகாரத்திலே அந்த மூன்று உவமைகளையும்பற்றி சொன்னபிறகு சொல்கிறார். “நான் சொல்லுகிறவைகளைச் சிந்தித்துக்கொள். கர்த்தர் எல்லாக் காரியங்களிலும் உனக்குப் புத்தியைத் தந்தருளுவார்”. நான் சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டேன். நீ இவைகளைச் சிந்திக்க வேண்டும். Reflect on what I say. The Lord will give you insight. நான் சொல்லுகிறவைகளைக்குறித்து நீ தொடர்ந்து சிந்தி. ஒரு ஆழ்ந்த புரிந்துகொள்ளுதலை தேவன் உங்களுக்குத் தந்தருளுவார். ஆமென்.