Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

கிறிஸ்து முதன்மையான நிலைக்கு வரவேண்டும்

Transcribed and edited for clarity from a message spoken in January 2013 in Chennai

By Milton Rajendram

நம் வாழ்வின் இரு சூழ்நிலைகள்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நம் வாழ்க்கையில் நமக்கு எல்லாமுமாக ஆக்க வேண்டும் என்பது பிதாவாகிய தேவனின் திட்டம். நம் வாழ்வின் சூழ்நிலைகளை நாம் இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று, இல்லாத ஒரு சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். மற்றொன்று, இருக்கிற ஒரு சூழ்நிலை; ஆனால், அதை இழக்கவேண்டிய அல்லது விடவேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். உலக மக்களின் துன்பங்களைக்கூட நாம் இப்படிப் பிரித்துவிடலாம். இல்லாத நிலை அல்லது இருந்தும் அதை இழந்துவிடுவோமோ என்கிற நிலை. இந்த இரண்டும் நமக்கு மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும், துக்கத்தையும் கொண்டுவரும்.

சூழ்நிலை எதுவாக இருந்தாலும் சரி, நம் வாழ்க்கையில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அவருக்கு உரிய இடத்திற்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான் நம் பிதாவின் நோக்கமாகும். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நாம் இதுவரை அறியாத ஓர் அம்சத்தில் நம் வாழ்க்கைக்குள் கொண்டுவர வேண்டும் அல்லது கிறிஸ்துவைக்கொண்டு நம்மை நிரப்ப வேண்டும் என்பதுதான் தேவனுடைய திட்டம். இதை கிறிஸ்து நமக்குள் பெருகுவது அல்லது கிறிஸ்துவின் சாயலாய் நாம் மாறுவது என்றும் நாம் சொல்லலாம். எனவே, நாம் எந்தவொரு சூழ்நிலையில் இருந்தாலும் சரி, அந்தச் சூழ்நிலையில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நம் கண்களுக்குமுன்பாகக் கொண்டுவைப்பது அல்லது ஆண்டவராகிய இயேசுவை நமக்கு வெளிப்படுத்துவதுதான் பரிசுத்த ஆவியானவர் செய்கிற முதல் காரியம்.

பரிசுத்த ஆவியானவரின் முதன்மையான வேலை

கிறிஸ்து நமக்குள் இருக்கிறார்; இது உண்மை. நாம் என்றைக்கு ஆண்டவராகிய இயேசுவின்மேல் விசுவாசம் வைத்தோமோ, அன்றைக்கு கிறிஸ்துவோடு நாம் ஒன்றாக இணைந்தோம். கிறிஸ்து நமக்குள் இருக்கிறார். இது தேவனுடைய மக்கள் எல்லாருடைய சுதந்தரம். இதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், நமக்குள் வாழ்கின்ற, வாசம்பண்ணுகிற, கிறிஸ்து யார், அவர் எப்படிப்பட்டவர், அவருக்குள் இருக்கின்ற ஐசுவரியம் என்னவென்று பல வேளைகளில் நமக்குத் தெரியாது. இப்படிக்கூட சொல்லலாம்: நமக்குள் இருக்கின்ற கிறிஸ்து யார் என்பதை நாம் பெருவாரியான அளவுக்கு அறியாதவர்களாகவே இருக்கிறோம். உண்மை என்னவென்றால் பெருவாரியான அளவுக்கு நமக்குக் கிறிஸ்துவைத் தெரியாது. “கிறிஸ்துவை ஓரளவுக்குத்தான் தெரியும்” என்றுதான் நம்மால் சொல்ல முடியும். தேவன் அவருடைய கொடையாகிய கிறிஸ்துவை நமக்குக் கொடுத்திருந்தும்கூட, கிறிஸ்துவைக் கொடையாகப் பெற்ற மக்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டுமோ அல்லது எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டுமோ அப்படிப்பட்டவர்களாக பல வேளைகளில் நாம் இல்லை அல்லது அப்படிப்பட்ட வாழ்க்கை நாம் பல வேளைகளில் வாழ்வதில்லை.

எனவே, நம் எல்லா நிலைமைகளிலும், எல்லாச் சூழ்நிலைகளிலும் பரிசுத்த ஆவியானவர் செய்கிற ஒரே காரியம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நமக்கு வெளிப்படுத்துவது அல்லது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நமக்கு முன்பாக வைப்பது. இதுதான் பரிசுத்த ஆவியானவரின் முதன்மையான வேலை. எனவே, “பிதாவே, பரிசுத்த ஆவியினால் உம் குமாரனாகிய கிறிஸ்து எவ்வளவு மகத்தானவர், எவ்வளவு மேன்மையானவர், எவ்வளவு போதுமானவர், நிறைவானவர், எவ்வளவு ஐசுவரியசம்பன்னர் என்பதை நான் காண்பதற்கு என் கண்களைத் திறந்தருள்வீராக,” என்பது எல்லாச் சூழ்நிலைகளிலும் நம் ஜெபமாக இருக்க வேண்டும்.

பரிசுத்த ஆவியானவருக்கு நம் மறுமொழி

கிறிஸ்துவைக் காண்பித்தபிறகு, அதற்கு ஒரு மாறுத்தரம் பரிசுத்த ஆவியானவர் நம்மிடம் எதிர்பார்ப்பார். ஒருவர் ஒரு கேள்வி கேட்டால் அதற்கு ஒரு பதில் நம்மிடத்திலிருந்து வரும். ஒருவர் ஒரு உண்மையைப் பிரகடனப்படுத்தினால் நம்மிடத்திலிருந்து ஒரு பதில் வராமல் போகாது. நம் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் நம் இருதயத்திலிருந்து அதற்கு ஒரு பதில் வருகிறது. நிகழ்ச்சியின் அளவு பெரிதாக இருக்கும்போது, நம்மிடத்திலிருந்து வருகிற பதிலும் பெரிதாக இருக்கும். அதுபோல, பரிசுத்த ஆவியானவர் இயேசு கிறிஸ்துவை நமக்குக் காண்பிக்கும்போது நம்முடைய இருதயத்திலிருந்து ஒரு மாறுத்தரம் அல்லது பதில் வரும். ஒரு பதிலை அவர் எதிர்பார்ப்பார். “இதற்கு உன் பதில் என்ன?” என்று தேவன் கேட்பார். பல சமயங்களில் அவர் கோருகின்ற பதிலை நாம் அவருக்குக் கொடுப்பதில்லை. ஆனால், பரிசுத்த ஆவியானவர் இயேசு கிறிஸ்துவை நமக்கு வெளிப்படுத்தி, நமக்குக் காண்பிக்கும்போது, அவர் வேண்டுகின்ற, அவர் கோருகின்ற, பதிலை நாம் கொடுப்போமென்றால், அந்தச் சூழ்நிலையை அது மாற்றிவிடும். அந்தச் சூழ்நிலையில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்குப் போதுமானவராக மாறுவார். அந்தச் சூழ்நிலையில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம் வாழ்க்கையில் எந்த இடத்துக்கு வரவேண்டுமோ அந்த இடத்துக்கு அவர் வருவார். இயேசு கிறிஸ்து மகிமைப்படுவார் அல்லது இயேசு கிறிஸ்து நம் வாழ்க்கையில் பெருகுவார்.

நம் வாழ்க்கையில் முரண்பாடுகள்

இது எதற்காகவென்றால் தேவனுக்குமுன்பாக நாம் ஒரு நிலையில் நின்றுகொண்டிருக்கிறோம். தேவனுக்கும் நமக்குமிடையே ஓர் உறவு இருக்கிறது, ஒரு பந்தம் இருக்கிறது. ஆனால், பல சமயங்களிலே, ஓர் உறவு இருந்தாலுங்கூட, பல அம்சங்களிலே, பல காரியங்களிலே தேவனுக்குமுன்பாக நாம் நிற்கிற நிலையில் பல முரண்பாடுகள் இருக்கின்றன.

நாம் தேவனுடைய பிள்ளைகள். ஆனால், தேவனுக்கு முன்பாக நாம் நிற்கிற நிலையில் நமக்கு முரண்பாடுகள் அல்லது ஒவ்வாமைகள் இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் என்றைக்கு நாம் ஆண்டவ ராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டோமோ அன்றைக்கு நாம் தேவனோடுள்ள நம் உறவை, நம் நிலையை, சரிசெய்யத் தொடங்கினோம். நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகை வரையில் அல்லது நம் வாழ்க்கையின் இறுதிவரை தேவனுக்குமுன்பாக நாம் நிற்கிற நிலையை நாம் சரிசெய்துகொண்டே போகிறோம். எந்தெந்த காரியங்களிலெல்லாம் நாம் தேவனுக்கு முன்பாக நம்மைச் சரிசெய்துகொள்கிறோமோ அப்போதெல்லாம் தேவன் நம் சூழ்நிலையை மாற்றுவார். ஒவ்வொரு சூழ்நிலைக்கும் பின்னால் தேவனுக்குமுன்பாக நாம் நிற்கிற நிலையிலே ஒரு முரண்பாடு இருக்கும், ஒரு மாறுபாடு இருக்கும், ஒரு ஒவ்வாமை இருக்கும். அதைச் சரிசெய்யும்போது, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம் வாழ்க்கையில் பெருகுகிறார். அப்போது நம் சூழ்நிலை மாறுகிறது.

பிரச்சினைகளுக்குத் தீர்வு

நாம் பிரச்சினை என்று சொல்கிறோம் இல்லையா? நெருக்கம், வேதனை, உபத்திரவம், வலி, கண்ணீர், கதறுதல் என்று நாம் சொல்கிறோம் இல்லையா? அது மாறுகிறது. இந்த உவமை ஒருவேளை உபயோகமாக இருக்கலாம். ஒரு சுரமானியைச் சரியான விதத்தில் இசைவடையச் செய்துவிட்டோம் என்றால், ஒரு துண்டுத்தாளை அதில் வைத்தால் அது பறக்கும். தேவனுக்கும் நமக்கும் உறவு இருக்கிறது. ஆனால் அதில் ஒத்ததிர்வு இல்லை. தேவனுக்கும் நமக்குமிடையே உறவு இருந்தபோதும் அதில் பல ஒவ்வாமைகளும், முரண்பாடுகளும், மாறுபாடுகளும் இருக்கின்றன.

இதைச் சொல்லாமல், “உங்களுக்குப் பிரச்சினை இருக்கிறதா? உடல்நலம் சரியில்லையா? ஜெபம் பண்ணுவோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சுகமடைவாயாக,” என்று ஜெபிக்கிறோம்; உடனே சுகமாகிவிடுகிறது, மகிழ்ச்சியோடு போய்விடுகிறீர்கள். உங்கள் பிரச்சினை தீரவில்லை. நாளைக்கும் உடல் நலம் சரியில்லாமல் போகும்; இன்றிருப்பதைவிட மோசமாக உடல்நலம் சரியில்லாமல் போகலாம். உங்களுக்குப் பணம் இல்லையா. சரி, எல்லாரும் இன்று உதவி செய்வோம். அப்படிச் செய்யும்போது பணப் பிரச்சினை இன்றைக்குத் தீர்ந்துவிடும். ஆனால், தேவனோடு நீங்கள் நிற்கிற நிலையிலே முரண்பாடு இருந்து கொண்டிருந்தால் இன்றைக்கு இருக்கிற பணப் பிரச்சினையைவிட அடுத்த வருடம் அல்லது இன்னும் 10 வருடம் கழித்து வருகிற பணப் பிரச்சினை இதைவிட மோசமாக இருக்கும்.

பணம் பிரச்சினையா அல்லது தேவனோடு நிற்கிற நிலையில் முரண்பாடு இருப்பது பிரச்சினையா? தேவனுக்கும் நமக்கும் உறவிருக்கும். ஆனால், அந்த உறவில் இருக்கும் ஒவ்வாமைகளையும், முரண்பாடுகளையும் நாம் சரிசெய்யவில்லையென்றால், நம் வாழ்க்கையில் பிரச்சினைகள் தீர்வதில்லை. தற்காலிகமாகத் தீரலாம். “நிரந்தரத் தீர்வு என்ன?” என்று நாம் தேவனிடத்தில் விசாரிக்க வேண்டும். “என் வாழ்க்கையில் உம் குமாரனாகிய இயேசு கிறிஸ்து வரவேண்டிய இடத்திற்கு வந்திருக்கிறாரா? அவர் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறாரா? என்னில் நிரப்பவேண்டிய இடத்தை நிரப்பிவிட்டாரா? அல்லது அவர் வரவேண்டிய இடத்திற்கு வருவதற்கு முரண்பாடுகள் இருக்கிறதா? அவர் நிரப்ப வேண்டியவைகளை நிரப்புவதற்கு மாறுபாடுகள் இருக்கிறதா?” என்று நாம் தேவனிடம் விசாரிக்க வேண்டும்.

இயேசுவை அறியாதிருந்தார்கள்

மூன்று பகுதிகளைப் பாருங்கள். லூக்கா 24ஆம் அதிகாரம். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மரித்து உயிர்த்துவிட்டார். இரண்டு சீடர்கள் எருசலேமிலிருந்து எம்மாவுக்கு நடந்துபோகிறார்கள். அப்போது இயேசு அவர்களோடு நடந்துபோகிறார். ஆனால், அவர்கள் இயேசுவை அறியாதிருந்தார்கள் என்று எழுதியிருக்கிறது. அப்போது இயேசு அவர்களை நோக்கி, “நீங்கள் துக்கமுகமாயிருக்கிறதென்ன?” என்று கேட்கிறார். அவர்கள் ஒருபாடு சொல்லித்தீர்க்கிறார்கள்.

யோவான் 20ஆம் அதிகாரம். மரியாள் இயேசு கிறிஸ்துவின் கல்லறைக்கு வருகிறாள். இயேசுவை அங்கு காணவில்லை. எனவே, அவள் அழுதுகொண்டிருக்கிறாள். அப்போது தேவதூதன் அவளிடம், “ஸ்திரீயே, நீ ஏன் அழுகிறாய்?” என்று கேட்கிறார். அதற்கு அவள், “என் ஆண்டவரை யாரோ எடுத்துக்கொண்டுபோய்விட்டார்கள். அவரை வைத்த இடம் தெரியவில்லை,” என்று சொல்லுகிறாள். இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பிப் பார்க்கிறாள். அங்கு இயேசு நிற்கிறார். ஆனால், அவள் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள். இயேசு அவளை நோக்கி, “ஸ்திரீயே, ஏன் அழுகிறாய். யாரைத் தேடுகிறாய்?” என்றார். அவள் அவரைத் தோட்டக்காரர் என்று எண்ணி, “ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும். நான் போய் அவரை எடுத்துக்கொள்வேன்,” என்றாள். அப்போது இயேசு கிறிஸ்து, “மரியாளே” என்று அழைக்கும்போது அவளுடைய கண்கள் திறக்கின்றன.

அதுபோல், யோவான் 21ஆம் அதிகாரம். பேதுரு சொல்கிறார்: “இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து விட்டார். ஆனாலும், உண்மையில் அவருக்கு என்ன நேரிட்டது என்று தெரியவில்லை. எனவே, நான் மீன்பிடிக்கப்போகிறேன்,” என்ற தொனியில் பேதுரு சொன்னார். அவருடைய மற்ற நண்பர்களும், “நாங்களும் கூடவருகிறோம்,” என்றார்கள். அந்த இராத்திரியில் அவர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. விடியற்காலமே இயேசுகிறிஸ்து கரையில் நின்றுகொண்டிருந்தார். ஆனால், சீடர்கள் அவர் யாரென்று அறியவில்லை. இயேசு கிறிஸ்து கேட்கிறார்: “பிள்ளைகளே, சாப்பிடுவதற்கு உங்களிடம் ஏதாவது இருக்கிறதா?” அவர்களுக்கு அவர் யார் என்று தெரியவில்லை.

துக்கம், அழுகை, ஏமாற்றம்

இது ஒன்றும் புதிய சம்பவம் இல்லை. நம் வாழ்க்கையில் துக்கம், அழுகை, ஏமாற்றம், போன்றவைகள் நூதனமானவைகள் அல்ல. இன்னும் சொல்லப்போனால், “என் வாழ்க்கையே துக்கமும், அழுகையும், ஏமாற்றமும் நிறைந்ததாகத்தான் இருக்கிறது,” என்று பலர் சாட்சி சொல்வார்கள். வாழ்க்கையில் ஏமாற்றம் இருக்கும். “இது கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். இது நடக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அது நடக்கவில்லை, கிடைக்கவில்லை.”

“இவர் இஸ்ரயேலை மீட்டு இரட்சிப்பார் என்று நாங்கள் நம்பியிருந்தோம். எங்கள் நம்பிக்கையெல்லாம் போயிற்று,” என்பது எம்மாவுக்கு நடந்துபோன சீடர்களின் துக்கம். “என் ஆண்டவருடைய உடலைக் காணவில்லை. அவருக்கு என்ன நேரிட்டதோ? அவர் மரித்தாரா உயிர்த்தாரா என்று தெரியவில்லை,” என்பது மரியாளின் அழுகை. “வாழ்க்கையில் நஷ்டப்பட்டுவிட்டோம்” என்பது பேதுரு மற்றும் அவருடைய நண்பர்களின் ஏமாற்றம். பேதுரு ஓர் இடத்தில் இப்படிச் சொல்லுகிறார்: “நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றினோமே, எல்லாவற்றையும் விட்டுவிட்டு இவர் பின்னால் சென்றோமே. இந்த வாழ்க்கையில் எவ்வளவு நஷ்டப்பட்டுவிட்டோம்,” என்ற ஏமாற்றம்.

இயேசு தேடி வருகிறார்

திசை தெரியவில்லைÉ என்ன செய்வது, எங்கு போவது என்று குழப்பமும், இருளுமாக இருக்கிறது. இந்தச் சூழ்நிலைகளிலெல்லாம் நீங்கள் நன்றாகக் கவனிக்க வேண்டும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவர்களைத் தேடிப்போகிறார். எம்மாவுக்கு நடந்துபோய்க்கொண்டிருந்த சீடர்களுடன் இயேசுதாமே அவர்களோடு நடந்துபோனார். இது அவருடைய அன்பைக் காட்டுகிறது. இயேசு கிறிஸ்து மரியாளைத் தேடி வருகிறார். அதுபோல விடியற்காலையிலேயே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பேதுருவையும் அவருடைய நண்பர்களையும் தேடி வருகிறார். இன்னும் பல இடங்கள் இருக்கின்றன. ஆனால், இந்த மூன்று சம்பவங்களிலுமே, அவர்கள் இயேசு கிறிஸ்துவை அறியாதிருந்தார்கள். அவர் யாரென்று அவர்களுக்குத் தெரியவில்லை.

இல்லாத ஒரு சூழ்நிலையில் இருக்கிறோம். இல்லாத ஒரு சூழ்நிலை என்றால் பொருளாதாரம் இல்லாமல் இருக்கலாம். ஆரோக்கியம் இல்லாமல் இருக்கலாம். உதவுவதற்கு மனிதர்கள் இல்லாமல் இருக்கலாம் அல்லது சூழ்நிலை இன்னொரு விதமாகக்கூட இருக்கலாம். அதாவது பொருளாதாரம் இருக்கிறது. ஆனால் அதை இப்போது இழந்துபோகக்கூடிய நிலை வருகிறது. மனிதர்களுடைய உதவி, ஆதரவு இருக்கிறது. அதை இப்போது இழந்து போகக்கூடிய சூழ்நிலை வருகிறது. “ஒரு குறிப்பிட்ட வகையில் நான் நடந்தால், நான் சில மனிதர்களுடைய ஆதரவையும், நட்பையும் இழக்க நேரிடலாம்,” என்றால் நம்மில் எத்தனைபேர் அப்படி நடப்போம்? நூறு தடவை நாம் யோசித்துப் பார்ப்போம். ஒருவேளை ஒரு பெரிய பணக்காரர் என் சொந்தக்காரராக இருக்கிறார் அல்லது நண்பராக இருக்கிறார். ஆனால், தேவன் என்னை ஒரு குறிப்பிட்ட பாதையில் நடக்கச் சொல்லுகிறார் அல்லது நடக்கக்கூடாதென்று சொல்லுகிறார். இப்போது அந்த நண்பருடைய அல்லது உறவினருடைய ஆதரவை இழந்துவிடுவோம் என்று வைத்துக்கொள்வோம். இந்த மாதிரி சூழ்நிலையில் பரிசுத்த ஆவியானவர் என்ன செய்வாரென்றால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அவர்களுக்குக் காண்பிப்பார். ஆனால், நாம் அவரைப் பார்க்கத் தவறிவிடுவோம். ஏன் தெரியுமா? நம் சூழ்நிலையின் துக்கம், அழுகை, ஏமாற்றங்கள் ஆகியவைகளை விட்டு நம் கண்களை எடுக்க முடியாது. ஒரு நெருக்கத்தில் இருக்கிறோம். இப்போது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே விடியற்காலையில் கடற்கரையில நின்றதுபோல் நம்முன் வந்து நின்றாலும் நம்மால் அவரைப் பார்க்கமுடியாது. ஏனென்றால், “இப்போது நீ இதைத் தருகிறாயா அல்லது வீட்டை ஜப்தி செய்யட்டுமா?” என்று கேட்கிறவன் நம் கண்களை நிறைப்பானா அல்லது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நாம் பார்ப்போமா?

மனிதன் இரும்பு போன்றவன் என்று நாம் நினைக்கிறோம் இல்லையா? ஒரு நோய் அவனை மண்ணாக்கிவிடும். “இவர்களுடைய மனம் எவ்வளவு கூர்மையாய் இருக்கிறது! எவ்வளவு திடமாக இருக்கிறார்கள்! அசையாமல் இருக்கிறார்கள்!” என்று நாம் நினைப்போம். அப்படி நினைக்கிற ஆட்களெல்லாம் உண்மையில் மண்ணாகிவிடுவார்கள். இன்றைக்கு மிகவும் தைரியமாகப் பேசுகிற ஆட்களெல்லாம் நாளைக்கு, “நான் மண்ணும் குப்பையுமாக இருக்கிறேன்,” என்று சொல்லும் அளவுக்கு ஒரு நோய் அவர்களை மாற்றிவிடுகிறது. செத்துவிடுகிற பயத்தைவிட அந்த நோயின் வலியைப் பார்க்கும்போது ‘இதைவிட செத்துவிடுவது மேல்’ என்ற எண்ணம் மேலோங்கும்போது இயேசு கிறிஸ்து நம்முன்னால் வந்து நின்றால் நம்மால் அவரைப் பார்க்க முடியாது. ஆனால், உண்மை என்னவென்று கேட்டால் நம் எல்லாச் சூழ்நிலைகளிலும் பரிசுத்த ஆவியானவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நமக்கு முன்பாகக் கொண்டுவைக்கிறார்.

இயேசு கிறிஸ்து நம் முன்மாதிரி

தேவனுடைய பரிபூரணமான முன்மாதிரியாகிய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நாம் எல்லாரும் போகிற சூழ்நிலையைவிட மிகக் கொடிய சூழ்நிலைக்குள்ளாய்ச் சென்றார். நாம் மரணத்தை வெவ்வேறு நிலைகளில் அனுபவித்திருக்கிறோம். மரணம் என்றால் இறுதி மரணம் அல்ல. ஒரு நோய் என்பது மரணத்தின் ஒரு சூழ்நிலை. “இந்தக் கடனில் இதுவரை நம் வாழ்வில் பெற்றிருந்த எல்லாவற்றையும் நாம் இழந்து விடுவோம்” என்பது மரணத்தின் சூழ்நிலை. இவைகளெல்லாம் மரணத்தின் சூழ்நிலைகள். ஆனால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மரணத்தின் ஒரேவோர் அம்சத்தினூடாகச் செல்லவில்லை. அவர் மரணத்திற்குள்ளேயே சென்றார்.

அப்போஸ்தலர் நடபடிகள் 2ஆம் அதிகாரத்தில் நீங்கள் அதை வாசிக்கவேண்டும். இந்தப் பகுதியை வாசிப்போம். “கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன். நான் அசைக்கப்படாதபடிக்கு அவர் என் வலது பாரிசத்திலே இருக்கிறார்.” தாவீதின் சங்கீதத்திலிருந்து பேதுரு இதை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்குப் பொருத்துகிறார். இது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிதாவை நோக்கிச் சொல்வது. “கர்த்தரை எப்பொழுதும் எனக்குமுன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்.” ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு பிதாவானவர் என்ன ஆதாரங்களை, வளங்களை, என்ன ஆதரவைத் தந்தாரோ, அதே ஆதாரங்களை, அதே ஆதரவை அவர் நமக்கும் அருள்கிறார். பிதாவானவர் தம் குமாரனுக்கு என்ன கொடுத்தார்? அவருடைய மரணத்திற்கு ஒத்த சூழ்நிலையிலே “கர்த்தரை எனக்குமுன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்.” அதுபோல பரிசுத்த ஆவியானவர் மரணத்திற்கு ஒத்த சூழ்நிலையிலேயே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நமக்கு முன்பாக நிறுத்துவார். ஆனால், நாம் அவரை நிறுத்தி நோக்குவதில்லை. ஏனென்றால், நம் சூழ்நிலைகள் கொடூரமாக உள்ளன. “கர்த்தரை எப்பொழுதும் எனக்குமுன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன். அவர் என் வலது பாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை. அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது. என் நாவு களிகூர்ந்தது. என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும். என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர். உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர்.”

இது ஜெபம் இல்லையா? “என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர். உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர்,” என்று அவர் யாரிடம் பேசுகிறார்? பிதாவிடம் பேசுகிறார். எங்கு அல்லது எப்போது இயேசுகிறிஸ்து இப்படி பிதாவிடம் பேசினார்? கண்டிப்பாக கெத்செமனேயில் சிலுவைக்குக்குப் போவதற்குமுன் பிதாவிடம் ஜெபிக்கிறார். ஒருவேளை அந்த ஜெபத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம் நம்பிக்கையை இப்படி அறிக்கையிட்டிருக்கலாம். சில ஜெபங்களை நாம் ஒரு தடவை செய்துவிட்டு நிறுத்துவதில்லை. சிலுவை மரணத்திற்கு முன்பு அவர் இப்படி ஜெபித்திருக்கலாம். சிலுவையில் இயேசு இப்படி ஜெபித்திருக்கலாம். “தேவரீர், என் மாம்சம் அழிவைக் காணவொட்டீர். என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர். உம் பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர். என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்.” கல்லறையில் வைத்தால் மாம்சத்தின் கதி, விதி என்ன? அழிவு, ஆனால் இயேசுகிறிஸ்து சொல்கிறார்: “என் மாம்சம் அழிவைக் காணவொட்டீர்.”

மரணத்திற்கு முந்திவரை நாம் எல்லோரும் ஜெபிப்போம். இதை நாம் எல்லாரும் செய்வோம். மரணத்திற்குப்பிறகு நாம் யாரும் ஜெபிக்க முடியாது. மரணம் என்பது முற்றுப்புள்ளி. மரணம் என்றால் முடிவு வந்துவிட்டது என்று பொருள். இதன் பொருள் என்னவென்றால், ஒரு சூழ்நிலையில் நம்பிக்கை என்று ஒன்று இருக்கும்வரை நாம் ஜெபிப்போம். சில சமயங்களில் நம்பிக்கை இருக்காது. அந்தச் சூழ்நிலை கைதாண்டிப் போய்விடும். இனிமேல் செய்வதற்கு ஒன்றும் இல்லை. இந்தச் சமயத்தில் நாம் ஜெபிப்பதை நிறுத்திவிடுவோம். நாம் மரணத்தின் ஒரு சில அம்சங்களைத்தான் அனுபவிக்கிறோம். ஆனால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மரணத்தினூடாய்ச் செல்லும்போதுகூட அவரால் இப்படி ஜெபிக்க முடிகிறது. “என் மாம்சம் நம்பிக்கையோடே தங்கியிருக்கும். என் இருதயம் மகிழ்ந்தது. என் நாவு களிகூர்ந்தது. ஜீவ மார்க்கங்களை எனக்குத் தெரியப்படுத்தினீர். உம்முடைய சந்நிதானத்தில் என்னை சந்தோஷத்தினால் நிரப்புவீர்.” இதுபோல் நம்மால் ஜெபிக்க முடியவில்லை. ஒரு சூழ்நிலை மரணச் சூழ்நிலைபோல் வந்துவிட்டதென்றால் இதுபோல் நம்மால் ஜெபிக்க முடிவதில்லை. ஆனால், இப்படிப்பட்ட சூழ்நிலையை தேவன் ஏன் அமைக்கிறார் அல்லது அனுமதிக்கிறார் என்றால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அந்தச் சூழ்நிலைக்குள் கொண்டுவருவதற்காக.

பிதாக்கள் அறியாதிருந்த மன்னா

“நான் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தினேன்.” எதற்காக உன்னைச் சிறுமைப்படுத்தி, பசியினால் வருத்தினேன் என்றால், “மனிதன் அப்பத்தினால் மட்டும் அல்ல கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னை போஷித்தேன்” (உபா. 8:3).

இந்த வசனம் நமக்கு மிகவும் பரிச்சயமானது. சில சமயங்களில் இந்தப் பரிச்சயம் தேவனுடைய பேசுதலைக் கேட்பதைத் தடுத்துவிடும். “இந்த வசனமா! ஓ அது எனக்குத் தெரியுமே!” என்று சொல்வோம். அது நமக்குத் தெரியாது.

தேவன் இந்த இரண்டுவிதமான சூழ்நிலைகளை நம் வாழ்க்கையில் ஏன் அமைக்கிறார்? ஒருவேளை பொருளாதாரம் அல்லது சுகம் என்கிற ஆதாரம், மனிதர்களுடைய ஆதரவு என்கிற ஆதாரம் வற்றிப்போகலாம். ஆனால், மனிதன் இவைகளால் வாழ்வதில்லை. இவைகள் இருந்தால்தான் வாழ முடியும், இவைகள் இல்லாவிட்டால் நம் வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்துவிட்டது என்று நாம் நினைக்கிறோம். ஆனால், நீங்களும், உங்கள் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் தேவன் உங்களைப் போஷிப்பார். நாமும், நம் சகோதர சகோதரிகளும் அறியாத ஒரு கிறிஸ்து நமக்குள்ளே இருக்கிறார். இவர் புதிய கிறிஸ்து இல்லை. நாம் ஏற்கெனவே பெற்றிருக்கிற கிறிஸ்துதான். ஆனால், ஒருவிதத்தில் நடைமுறையில் சொல்வதாக இருந்தால், நாமும் நம் சகோதர சகோதரிகளும், நம் முன்னோடிகளும் அறியாத கிறிஸ்து.

நமக்குக் கிறிஸ்துவைத் தெரியும். ஆனால், இந்தச் சூழ்நிலையிலே அவர் நமக்குப் போதுமானவரா, நிறைவானவரா? எனக்கு இது குறைவுபடுகிறது. ஆனால் அவர் இதை நிறைவாக்க வல்லவர் என்று எனக்குத் தெரியுமா என்றால் எனக்குத் தெரியாது. இப்படி நாம் கிறிஸ்துவை அறியும்போதுதான் கிறிஸ்து நம் வாழ்க்கையில் பெருக முடியும். இதில் இரண்டு ஆதாயங்கள் உண்டு. நம்மைப் பொறுத்தவரை நம் சூழ்நிலை மாறுகிறது. ஆனால், தேவனைப் பொறுத்தவரை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம் வாழ்க்கையில் பெருகுகிறார். அவருக்குரிய இடத்திற்கு வருகிறார். நம்மைப் பொறுத்தவரை நம் சூழ்நிலை மாறி நாம் விசாலமான இடத்திற்கு வந்துவிட்டோம் என்பது நம்முடைய நோக்கமாக, குறிக்கோளாக இருக்கக்கூடாது. எது நம் குறிக்கோளாக, நோக்கமாக இருக்க வேண்டும் என்றால், “ஆ! எந்த ஆதாரமும் இல்லாமல் போனாலும் பரவாயில்லை. கிறிஸ்து என்ற ஆதாரத்தைவிட அருமையானது, மேன்மையானது ஒன்றில்லை என்பதை இப்போது நான் அறிந்துகொண்டேன்.” இதுதான் நம் நோக்கமாக, குறிக்கோளாக இருக்க வேண்டும்.

இயற்கையான தளமா அல்லது பரம தளமா

இரண்டு மனிதர்களின் வாழ்க்கையை நான் எடுத்துக்காட்டாகச் சொல்ல விரும்புகிறேன். ஒன்று ஆபிரகாம். இன்னொன்று பவுல். ஆபிரகாமின் வாழ்க்கையை ரத்தினச் சுருக்கமாகச் சொல்லுகிற ஒரு வசனத்தை ரோமர் 4ஆம் அதிகாரத்திலும், எபிரெயர் 11ஆம் அதிகாரத்திலும் வாசிக்கலாம். ரோமர் 4இல், தேவன் இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைத்து மரித்தோரை உயிரோடு எழுப்புகிற தேவன் என்று ஆபிரகாம் கற்றுக்கொண்டார். ஆபிரகாம் தேவனை இரண்டு அம்சங்களில் அறிந்துகொண்டான். முதலாவது, “அவர் இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவர்.” இது ஓர் அம்சம். இன்னொரு அம்சம், “இவர் மரித்தோரை உயிரோடெழுப்புகிறவர்.” பவுலும் அவரை அப்படி அறிந்துகொண்டார். “இவர் இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவர்.” இன்னொன்று “இவர் மரித்தோரை உயிரோடெழுப்புகிறவர்.”

“தேவன் இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவர்” என்று ஆபிரகாம் எப்போது, எப்படி அறிந்துகொண்டார் என்றால் அறிவுபூர்வமான தகவல் அல்ல. எங்கோ படித்து, அல்லது கேள்விப்பட்டு தெரிந்துகொண்டதல்ல. அவர் தன் வாழ்க்கையின் அனுபவத்தில், நடைமுறையில் தெரிந்துகொண்டார். நடைமுறையில் அவருக்குத் தெரியும். தேவன் இல்லாதவைகளை இருக்கிறவைகளையும் போல் அழைக்கிறவர். எப்படி? அவருக்கு 100 வயதானபோது அல்லது அவருடைய மனைவிக்கு 90 வயதானபோது இந்த இயற்கையான தளத்தில் அல்லது சரீரப்பிரகாரமாகப் பிள்ளையைப் பெற்றெடுப்பதற்கு வழி இல்லை, வாய்ப்பில்லை. இயற்கை விதிகளின்படி 100 வயதான மனிதன் அல்லது 90 வயதான பெண் பிள்ளையைப் பெற்றெடுக்க முடியாது. ஆனால், அவன் 100 வயதானபோது தேவன் ஆபிரகாமுக்கு ஈசாக்கைக் கொடுத்தார். இவர் எப்படிப்பட்ட தேவன் என்று ஆபிரகாம் அறிந்துகொண் டார். “இவர் இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவர்.”

இது இயற்கையான தளமா அல்லது பரம தளமா? பரம தளம் இந்த இயற்கையான தளத்திற்குள் நுழைந்துவிடுகிறது. ஈசாக்கு சாதாரணக் குழந்தைதான். தேவனுடைய இடைப்படுதல்களெல்லாம் அப்படித்தான் இருக்கும். முன்னோர்கள் சாப்பிட்ட மன்னா பரம தளத்தில் இருந்த உணவா அல்லது இயற்கையான தளத்தில் இருந்த உணவா? ஒரு காகம் எலியாவுக்கு இறைச்சி கொண்டுகொடுத்ததே! அது பரம தளத்தில் இருந்த உணவா அல்லது இயற்கையான தளத்தில் இருந்த உணவா? “பிள்ளைகளே, சாப்பிடுவதற்கு உங்களிடம் ஏதாவது உண்டா?” என்று இயேசு கிறிஸ்து சீடர்களிடம் கேட்டார். அவர்கள் “இல்லை” என்று சொன்னார்கள். “இப்போது நீங்கள் போய் மறுபடியும் வலையைப் போடுங்கள்” என்று இயேசு சொன்னார். வலை கிழிந்துபோகும் அளவுக்கு மீன் அகப்பட்டது. மீன் கிடைத்தவுடன் பரிசுத்த ஆவியானவர் யோவானுக்கு உணர்த்திவிட்டார்: “இவர் கர்த்தர். இதுவரை நாம் தேடியபோது மீன் கிடைக்கவில்லை. இப்போது மீன் கிடைத்தது.” இது பரம தளத்தில் கிடைத்த மீனா அல்லது இயற்கையான தளத்தில் கிடைத்த மீனா? அவர்கள் கரைக்கு வந்தபோது கரிநெருப்பு போட் டிருக்கிறதையும் அதில் மீனும் அப்பமும் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். இயேசு கிறிஸ்து ஆயத்தம்பண்ணியிருந்த இந்த மீனும் அப்பமும் இயற்கையான தளத்தில் இருந்து வந்ததா அல்லது பரம தளத்தில் இருந்து வந்ததா? இது ஒரு முக்கியமான பாடம். இயேசு கிறிஸ்து யாரிடமும் மீன் வாங்கவில்லை. ஆனால், அப்பமும் மீனும் சுட்டுக்கொண்டிருந்தார். 2 மீனையும் 5 அப்பங்களையும் ஆசீர்வதித்து 5000 பேரை போஷித்தார் இல்லையா? அது பரம தளத்தில் இருந்து வந்ததா அல்லது இயற்கையான தளத்தில் இருந்து வந்ததா? அந்தப் பையனுடைய கையிலிருந்து அவர் பெற்றது இயற்கையான உணவுதானா? இயற்கையான உணவுதான்.

பணம் இல்லை என்பதால் அல்லது பணம் இருந்துவிட்டால் அது தேவனுடைய ஆசீர்வாதம் என்று நினைக்கிறோம். எது ஆசீர்வாதம்? பரம தளத்திலிருந்து இயற்கையான தளத்திற்குள் தேவன் நுழைந்து விடுகிறார். இப்படிச் சொல்லலாம். இயற்கையான தளத்தை உடைத்துக்கொண்டு பரம தளத்திலிருந்து தேவன் ஒன்றைக் கொண்டுவருகிறார். இதை யாருக்குச் செய்வார் என்றால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற மக்களுக்குச் செய்வார். சாப்பிடுவதற்கு மன்னா என்னிடத்தில் இல்லை. ஆனால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எனக்கு மன்னாவாக இருக்கிறார் என்பதை விசுவாசிக்க முடியுமா என்று ஒரு சவாலை பிதாவானவர் நமக்குமுன்பாக வைப்பார். விசுவாசிக்க முடியுமா என்பதுதான் பெரிய கேள்வியாக இருக்கும். விசுவாசிக்க முடியும் என்றால் இயேசு கிறிஸ்து இயற்கையான தளத்தை உடைத்துக்கொண்டு பரம தளத்திலிருந்து ஒன்றைக் கொண்டுவருவார். அப்போது நாம் அதை அனுபவிப்போம். அதனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து திட்டவட்டமாகச் சொன்னார். “உங்கள் பிதாக்கள் புசித்தது மன்னா இல்லை. என்னைப் புசித்தார்கள்.” 1 கொரிந்தியர் 10இல் பவுல் சொல்லுகிறார். “உங்கள் பிதாக்கள் குடித்தது அந்தப் பாறையிலிருந்து வந்த தண்ணீரை அல்ல. அவர்களோடு கூடச்சென்ற ஞானக்கன்மலையாகிய கிறிஸ்துவையே அவர்கள் குடித்தார்கள்.” இது மிக முக்கியமான பாடம். குறைவுபடும்போது, பிலிப்பியர் 4இல் பவுல் இப்படிக் கூறுகிறார். “நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாய் இருக்கக் கற்றுக்கொண்டேன்–மனரம்மியமாய் இருப்பதற்கான அந்த இரகசியத்தைக் கற்றுக்கொண்டேன்.”

மன்னா இல்லை, பொருளாதாரம் இல்லை அல்லது சுகம் என்கிற ஆதாரம் இல்லை, மனிதர்களின் ஆதரவு என்கிற ஆதாரம் இல்லை. எப்படி இந்தச் சூழ்நிலை வழியாகக் கடந்துபோக முடியும்? இந்தச் சூழ்நிலை எதற்காகவென்றால் இந்த இயேசு கிறிஸ்துவை நாம் அறியாத ஓர் அம்சத்தில் நம் வாழ்க்கைக்குள் கொண்டுவர தேவன் தீர்மானித்துள்ளார். இந்த விசுவாசம் நமக்குக் குலையக்கூடாது. என் மாம்சமும் நம்பிக்கையோடு தங்கியிருக்கும். மனிதர்களெல்லாம், “அவர்களுக்கு இப்படித்தான் நடந்தது. இவர்களுக்கு இப்படித்தான் நடந்தது. அதனால் உங்களுக்கும் இப்படித்தான் நடக்கும்,” என்று பயமுறுத்துவார்கள். “கர்த்தர் என் வலது பாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படேன்.” இதை எப்போது சொல்ல வேண்டும் என்று சொன்னால் பிழைப்புக்கு வழியில்லாமல் அலையும்போது சொல்ல வேண்டும். “கர்த்தர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறார். ஆகவே, நான் அசைக்கப்படுவதில்லை.” தேவன் நமக்கு என்ன வேலை கொடுத்தாலும் அதை உத்தமமாய்ச் செய்யவேண்டும்É மகிழ்ச்சியோடு செய்ய வேண்டும்.

நம்முடைய சூழ்நிலையின் இன்னொரு பக்கத்தைச் சொல்லுகிறேன். ஒரு நோய் வந்துவிட்டதென்றால் அதோடு நம் கதை முடிந்துவிட்டது என்று நினைக்கக்கூடாது. “போதும் கர்த்தாவே போதும்” என்று புலம்பக்கூடாது. “என்னை எடுத்துக்கொள்ளும். என் பிதாக்களைப்பார்க்கிலும் நான் நல்லவன் இல்லை. என் உடலில் என் வலியை என்னால் தாங்கமுடியவில்லை.” உண்மைதான். “ஆண்டவரே நான் உம்மை என் கண்களுக்கு முன்பாக நிறுத்தி நோக்கியிருக்கிறேன். நீர் என் வலது பாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை. என் இருதயம் மகிழ்ந்தது. என் நாவு களிகூர்ந்தது. என் மாம்சம் நம்பிக்கையோடு தங்கியிருக்கும். தேவரீர், உம் பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர். ஜீவ மார்க்கங்களை எனக்குத் தெரியப்படுத்துவீர்.” எப்படி இது ஆகும்? “தெரியப்படுத்துவீர்” எப்படித் தெரியப்படுத்துவார்? அது எனக்குத் தெரியாது. அவர் பரம தளத்தை உடைத்துக்கொண்டு எப்படி இயற்கையான தளத்துக்குள் வந்து ஒரு பெரிய காரியத்தைச் செய்யப்போகிறார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று எனக்குத் தெரியும். அவரை விசுவாசிக்கிற மக்கள் எல்லாருக்கும் தேவனுடைய வழி இதுதான்? இதைக் கற்றுக்கொடுப்பதற்குத் தேவன் மிகவும் பிரயாசப்படுகிறார்.

ஆனால், தேவனுடைய மக்கள் எப்போதும் முறுமுறுத்தார்கள். “ஓ! எங்களுக்குச் சாப்பாடு இல்லை. ஓ! எங்களுக்குத் தண்ணீர் இல்லை. ஓ! எங்களுக்கு இறைச்சி இல்லை. ஓ! எங்களுக்கு மக்கள் ஆதரவு இல்;லை. மற்றவர்கள் எங்களை அடித்தால் செத்துப்போவோம். நாங்களும் செத்துப்போவோம். எங்கள் பிள்ளைகளும் செத்துப்போவார்கள். இதற்குப்பதிலாக நாங்கள் எகிப்திலேயே இருந்திருக்கலாம்.” இப்படிச் சொல்வதற்கு நமக்கு நிறைய இருக்கும். “கத்தோலிக்க மக்களிடையே இருந்திருக்கலாம் அல்லது ஜாதி ஜனங்களோடு இருந்திருக்கலாம். 10 அண்ணன் தம்பி இருந்திருப்பார்கள் உதவி செய்ய. இப்போது யாரும் இல்லை.” இது தொன்றுதொட்டு சாத்தானின் தந்திரம். “என் மக்கள் என்னை விசுவாசிக்கமாட்டார்களா?” என்று தேவன் காத்துக்கொண்டிருப்பார். நாம் தண்ணீர் வேண்டும் என்று கதறுவதற்குமுன்பாக அவர் ஞானக் கன்மலையாக நமக்குமுன் நின்று கொண்டிருப்பார். “அவர்கள் தங்கள் நம்பிக்கையை, விசுவாசத்தை என்மேல் வைக்கமாட்டார்களா?” என்பதே அவருடைய வாஞ்சை.

கிறிஸ்துவுக்குள் எல்லாம் இருக்கிறது

ஆபிரகாம் இன்னொரு பாடத்தைக் கற்றுக்கொண்டார். அவர் ‘இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவர்’ மட்டும் அல்ல. என்ன இல்லாவிட்டாலும் அவர் கிறிஸ்துவைக்கொண்டு இருக்கிறதாக அதை மாற்றுவார். கிறிஸ்துவுக்குள் எல்லாம் இருக்கிறது. கிறிஸ்துவுக்கு வெளியே ஒன்றும் இல்லை. நமக்குத் தருவதற்கு கிறிஸ்துவுக்கு வெளியே தேவன் ஒன்றையும் வைத்திருக்கவில்லை. மனிதனுக்கு எவைகளையெல்லாம் கொடுக்க வேண்டும் என்று தேவன் தீர்மானித்திருக்கிறாரோ அவைகளையெல்லாம் அவர் கிறிஸ்துவுக்குள் வைத்துவிட்டார். இதை நான் மீண்டும் சொல்ல விரும்புகிறேன். தேவன் எல்லாவற்றையும் கிறிஸ்துவுக்குள் வைத்துவிட்டார். கிறிஸ்துவுக்கு வெளியே ஒன்றும் இல்லை. அவர் அல்பாவும் ஓமேகாவுமாக இருக்கிறார் என்பதின் அர்த்தம் என்னவென்று கேட்டால் அல்பாவுக்கு முந்தி ஒரு எழுத்தும் இல்லை. ஓமேகாவுக்கு பிந்தி ஒரு எழுத்தும் இல்லை. தேவன் மனிதனுக்குத் தரவேண்டிய எல்லாவற்றையும் கிறிஸ்துவுக்குள் வைத்திருக்கிறார். இவர் நிறைவானவர்.

அடுத்தபடி என்ன செய்வார் என்றால்; நம்மிடம் ஒரு ஆதாரம் இருக்கும். அதை அவர் கிரயமாகச் செலுத்தச் சொல்வார். விலையாகக் கொடுக்கச் சொல்வார். ஈசாக்கைப் பெறுவதற்கு ஆபிரகாம் விசுவாசிக்க வேண்டியிருந்தது. ஈசாக்கைக் கொடுப்பதற்கு ஆபிரகாம் அதைவிட அதிகமாக விசுவாசிக்க வேண்டியிருந்தது. ஈசாக்கைப் பெறுவதற்கு நமக்கிருந்த விசுவாசம் ஈசாக்கைக் கொடுப்பதற்கு நமக்கு இருக்காது. வீட்டைக் கட்டுவதற்கு நமக்கு இருக்கும் விசுவாசம் வீட்டை விற்பதற்கு இருக்காது. வீட் டைக் கட்டுவதற்கும் நமக்கு விசுவாசம் வேண்டும். வீட்டை விற்பதற்கும் நமக்கு விசுவாசம் வேண்டும். இழப்பதற்கு என்றால் பலிபீடத்தில் வைப்பதற்கு, கிறிஸ்துவே காரியம். ஒருவேளை நாம் வீட்டைப் பலிபீடத்தில் வைத்து, உண்மையிலேயே தேவன் எடுத்துக்கொண்டால், அக்கினியை அனுப்பி சர்வாங்க தகனபலியைச் சுட்டெரித்ததுபோல.

பலிபீடத்தில் கிடத்துதல்

தகனபலி என்றால் அதை பலிபீடத்தில் வைத்தபின் நாம் அதை மறந்து வீட்டுக்கு போய்விடலாம். மற்ற பலிகளில், பலியிடுகிறவனுக்கு பலியிட்டவைகளில் ஒரு பங்கு உண்டு. ஆசாரியனுக்கு ஒரு பங்கு உண்டு. ஆனால், சர்வாங்க தகனபலியில் அப்படி இல்லை. அது ஒருவனுக்கும் கிடையாது. அதை வைத்தால் அது ஒருவனுக்கும் இல்லை. வானத்திலிருந்து அக்கினி வருகிறது. பலி காணாமல் போய் விடுகிறது. நம்முடைய படிப்பு, நம்முடைய பட்டம் எல்லாம். பட்டம் பெறுவதற்கு விசுவாசம் வேண்டும். அதைப் பலிபீடத்தில் வைப்பதற்கு அதைவிட அதிக விசுவாசம் வேண்டும். வீட்டைக் கட்டுவதற்கு விசுவாசம் வேண்டும். அதைப் பலிபீடத்தில் வைப்பதற்கு விசுவாசம் வேண்டும். வேலையைப் பெறுவதற்கு விசுவாசம் வேண்டும். வேலை கிடைத்தபிறகு அதைப் பலிபீடத்தில் வைப்பதற்கு அதைவிட அதிக விசுவாசம் வேண்டும். சகோதரர்களை, நண்பர்களை, பெறுவதற்கு விசுவாசம் வேண்டும். கிடைத்த நண்பர்களை, சகோதரர்களை, உறவினர்களை விடுவதற்கு அதைவிட அதிக விசுவாசம் வேண்டும். சில சூழ்நிலைகள் எப்படி இருக்கும் என்றால் தேவனோடு நம் நிலை, பரிசுத்த ஆவியானவர் இதைத் தொடர்ந்து சரிசெய்துகொண்டேயிருப்பார். ஒரு காரியம். அது பாவமாக இருக்காது. நம் இயற்கையான ஆதாரங்களை வைத்து, இயற்கையான பலத்தை வைத்து, இயற்கையான ஞானத்தை வைத்து, இயற்கையான சாமர்த்தியங்களை, சாதுரியங்களைவைத்து, இயற்கையான உறவுகளைவைத்து வாழ்ந்துகொண்டிருப்போம்.

இயற்கையான பேச்சுத் திறமையையும் தேவன் பலிபீடத்துக்குக் கொண்டுவருவார். இயற்கையான அமைதியையும் தேவன் பலிபீடத்துக்குக்; கொண்டுவருவார். ஒருநாள் நம் இயற்கையான ஆதாரம், இயற்கையான வளங்கள், இயற்கையான ஞானம், இயற்கையான பலம், இயற்கையான கட்டமைப்பு, இயற்கையான சாமர்த்தியம், இயற்கையான மனிதன், எல்லாவற்றையும் நாம் ஒரு வழியில் நடந்து கொண்டிருக்கும்போது ஒரு வாசலைக் கொண்டுவருவார். “இயற்கையான எதுவும் இதைக் கடந்து அந்தப் பக்கம் போகமுடியாது,” என்று அவர் சொல்வார். ஆனால், நாம் “நான் கஷ்டப்பட்டு முனைவர் பட்டம் வாங்கியிருக்கிறேனே. இயற்கையான எதையும் கொண்டு அந்தப் பக்கம் போகமுடியாது என்று நீர் எப்படிச் சொல்ல முடியும்? நான் எப்படிப் பிழைப்பேன்? இயற்கையான என் முனைவர் பட்டத்தைக் கொண்டுதான் நான் பிழைத்துக்கொண்டிருக்கிறேன்,” என்று சொல்வோம். தேவன் சொல்வார், “இதுவரை வரலாம். இதை மிஞ்சி உன் இயற்கையான எதுவும் போக முடியாது.” தேவன் இதை சரிசெய்துகொண்டே வருவார். தேவன் இயற்கையான நம் எல்லாவற்றையும் ஒரே நாளில் வடிகட்டிவிட மாட்டார். பல வாசல்களை வைப்பார். வாசல் 1, வாசல் 2, வாசல் 3, வாசல் 4, வாசல் 5. ஒவ்வொரு வாசலிலும் தேவன் இயற்கையான ஏதோவொன்றை வடிகட்டி வெளியேற்றிவிடுவார்.

எருசலேமைச் சுற்றிலும் பல வாசல்கள் இருந்ததாம். ஓரு வாசலின் பெயர் ஊசிவாசல். ஆண்டவர் சொல்லுகிறார். ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்ஜியத்தில் நுழைவதைவிட ஒட்டகமானது ஊசியின் காதில் நுழைவது எளிது. அது என்ன ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது? பல வாசல்கள் இருந்தன. அதில் ஒரு வாசலின் பெயர் ஊசி வாசல். ஏனென்றால், அது ஊசியின் வடிவத்தில் இருக்குமாம். வியாபாரிகள் தங்கள் சரக்குகளை ஒட்டகங்கள்மேல் வைத்துக்கொண்டு வரும்போது ஆட்கள் ஊசி வாசல் வழியாகப் போகலாம். ஆனால், ஒட்டகம் வேறு வாசல் வழியாகத்தான் போகவேண்டும். விமான நிலையத்தில் செய்கிறார்கள் இல்லையா? ஆள் போவதற்கு ஒரு வழி, சரக்குகள் போவதற்கு வேறு வழி. வியாபாரி ஊசி வாசல் வழியாக நுழையலாம். ஆனால் உன் ஒட்டகமும், சரக்கும் வேறு வாசல் வழியாகத்தான் வரவேண்டும். ஏனென்றால் அங்கு ஒருவேளை வரிசெலுத்த வேண்டியிருக்கலாம். ஊசி வாசல் வழியாக ஒட்டகம் போகவே முடியாது. ஊசி வாசல்வழியாக ஒருவேளை ஒட்டகம் நுழைந்தாலும், ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்ஜியத்தில் நுழையமுடியாது.

அதுபோல, நாம் இப்படி வைத்துக்கொள்வோமே. தேவன் நமக்குப் பல வாசல்களை வைப்பார். இந்த வாசலைத் தாண்டி இந்த இயற்கையான மனிதன் போக முடியாது என்று தேவன் சொல்வார். இயற்கையான ஆதாரங்களை வைத்து, “இதை நான் விட்டுவிட்டு வாழ முடியாது. வீடில்லாமல், மோட்டார் சைக்கிள் இல்லாமல், கார் இல்லாமல், இந்த நண்பன் இல்லாமல் என்னால் இருக்க முடியாது அல்லது இது இல்லாமல் இருக்க முடியாது. அது இல்லாமல் இருக்க முடியாது,” என்று சொல்லியோ சொல்லாமலோ வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ வைத்திருக்கிற எல்லாவற்றையும் தேவன் இந்த வாசலுக்குக் கொண்டுவருவார். இந்த வாசலுக்கு ‘சிலுவை’ என்று பெயர். இதன்வழியாக அனுப்பினால் இது இயற்கையான எல்லாவற்றையும் வடிகட்டி வெளியே தள்ளிவிடும். கிறிஸ்து மட்டும்தான் இந்த வாசலைத் தாண்டி அங்கு செல்ல முடியும்.

இந்தக் கிறிஸ்துவால் வாழ முடியுமா? ஈசாக்கைப் பலிபீடத்தில் வைத்தார் என்கிறோம். பலிபீடம், சிலுவை, வாசல் எல்லாம் ஒரே அர்த்தம்தான். நம்முடைய வாழ்க்கையில் ஒரு அனுபவத்தைக் கொண்டு வருவார். “இது வேண்டாம், நான் உனக்குப் போதுமானவர். இந்த இயற்கையான ஆதாரத்தை, ஞானத்தை, பலத்தை நீ நம்பவேண்டிய அவசியம் இல்லை.” நாம் சொல்லலாம். “ஆண்டவரே நீர் நடத்துகிறவர், நான் உம்மை விசுவாசிக்கிறேன். இல்லாததிலிருந்து ஓர் ஈசாக்கை அழைத்த தேவன் மரித்தோரிலிருந்து நீர் எழுப்பவும் வல்லவர். நீர் உண்மையுள்ளவர்.” எபிரெயர் 11ஆம் அதிகாரத்தை நீங்கள் வாசித்துப்பாருங்கள். அவர் ஈசாக்கை மரித்தோரிலிருந்து பாவனையாகத் திரும்பப் பெற்றுக்கொண்டார் என்று எழுதியிருக்கிறது.

தேவன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை இப்படி அனுபவிப்பதற்குக் கொண்டுவருவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? ஒன்றும் செய்ய வேண்டாம். பரிசுத்த ஆவியானவர் தேடி வந்து கிறிஸ்துவை நமக்குக் காண்பிப்பார். கொஞ்சம் நம் கண்களை அவருக்கு நேராகத் திருப்பி அவரை நோக்கிப் பார்க்க வேண்டும். கடன்காரனைவிட, மரணத்தைவிட, கல்லறையைவிட, நம் துக்கத்தைவிட, அழுகையைவிட, ஏமாற்றங்களைவிட, சோர்வைவிட, இயேசு கிறிஸ்து மகா பெரியவர், மேன்மையுள்ளவர், அவ்வளவு மகத்துவமானவர், இவர் கடைசி எதிரியாகிய மரணத்தை முறியடித்தவர். நாம் அனுபவிக்கின்ற மரணச் சூழ்நிலைகளெல்லாம் அவருடைய அனுபவத்தோடு ஒப்பிடத்தக்கவை அல்ல. அவர் தேவனுடைய வாயிலிருந்து வருகிற வார்த்தையினாலேயே வாழ்ந்தவர். எனவே, இயற்கையான இந்த ஆதாரங்களெல்லாம் அவருடைய நாமத்தினாலே கழிந்துபோகும் என்றால் அவைகள் போகட்டும். என்றும் தேவனோடுள்ள நம் உறவை நாம் சரிசெய்துகொள்ள வேண்டும். பயப்படவேண்டாம். இயேசு கிறிஸ்து நம் வாழ்க்கையில் நாம் கண்டுபிடித்த எல்லாக் கண்டுபிடிப்புகளையும்விட, பொக்கிஷங்களையும்விட, மகத்தான கண்டுபிடிப்பு, மகத்தான பொக்கிஷம். அவரை விசுவாசிக்கும்போது அவர் எப்படிப்பட்டவர் என்று விசுவாசித்தோமோ அதைவிட அவர் பல கோடிமடங்கு பெரியவராயிருக்கிறார். அவர் இப்படிப்பட்டவர், அவரால் இவ்வளவு செய்ய முடியும் என்று நாம் விசுவாசித்திருப்போம். ஆனால், அவர் அதைவிட பல கோடி மடங்கு பெரியவராக நமக்கு தம்மைக் காண்பிப்பார், நிரூபிப்பார். அப்படிப்பட்ட மக்களாக நாம் வாழ வேண்டும். இந்த மக்களோடு தொடர்புக்கு வருபவர்கள் பார்ப்பார்கள். “ஆ! இந்த மக்கள் இயற்கையான வளங்கள் வற்றிப்போனதால் அழுது துக்கத்தில் ஏமாற்றத்தோடு வாழ்வதில்லை அல்லது இயற்கையான ஓர் ஆதாரத்தை விடுவதற்காக இவர்கள் பயந்தவர்களும் அல்ல.” நாம் அறியாத ஒரு தளத்திலிருந்து ஆண்டவர் நமக்குப் போதுமான வளங்களையும், ஆதாரங்களையும், ஞானத்தையும், அறிவையும், பலத்தையும் எப்போதும் தருவார். அவரை விசுவாசிக்க வேண்டும். இதற்கு ஜீவனுள்ள சாட்சிகளாய் தேவன் நம்மை மாற்ற வேண்டும். தேவன் நம்மைப் பலப்படுத்துவார். நாம் ஜெபிக்க வேண்டும். “ஆண்டவரே இந்த அளவுக்கு நான் உம்மோடுள்ள உறவை சரிசெய்து கொள்ள விரும்புகிறேன். எந்த நிலைமையில் எதை சரிசெய்துகொள்ள வேண்டும் என்றாலும் நான் அதற்கு ஆயத்தமாக இருக்கிறேன் ஆண்டவரே. ஏனென்றால், ஈடுகட்டுவதற்கு நீர் போதுமானவர்.” இவ்வாறு அவர்மேலுள்ள நம்பிக்கையையும் விசுவாசத்தையும் நாம் அவரிடம் சொல்லவேண்டும். அப்போது நாம் அவருடைய ஜீவனுள்ள சாட்சிகளாக இருப்போம். நாம் வெறுமனே பேசுகிற ஆட்களாக இருக்க மாட்டோம். மக்கள் நம்மைச் சந்திக்கும்போது அவர்கள் பரத்துக்குரிய ஏதோவொன்றை நம்மில் பார்ப் பார்கள். சந்திப்பார்கள். “இவர்கள் இன்னும் வாசலுக்கு இந்தப் பக்கம் வாழ்கிற மக்கள் இல்லை. இவர்கள் உயிர்த்தெழுந்த தளத்தில் வாழ்கிறவர்கள் அல்லது உயிர்த்தெழுந்த தளத்தைப்பற்றி ஒரு சுவையாவது இவர்களுக்குத் தெரியும்,” என்று மக்கள் உணர்வார்கள். தேவன் இந்த வார்த்தைகளை ஒவ்வொருவருடைய இருதயத்திலும் எழுதி அனுபவமாக்க வேண்டும் என்பதே என் ஜெபம்.