Unedited transcript of a message spoken in August 2016 in Chennai
By Sakaya Milton Rajendram
தேவனுடைய மக்களாகிய நாம் ஆசையாய்ப் பின்தொடரவேண்டிய பரமகாரியங்கள் இருக்கின்றன. நம்முடைய வாழ்க்கையில் நாம் ஏதோவொன்றை ஆசையாய்ப் பின்தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறோம். எல்லா மனிதர்களும் ஏதோவொன்றை ஆசையாய்ப் பின்தொடர்கின்றார்கள். பல்வேறு காரியங்களை நாம் செய்யலாம். ஆனால், அவைகளின் மத்தியில் ஆசையாய்ப் பின்தொடர்கிற ஒன்றுண்டு. எதை நாம் ஆசையாய்ப் பின்தொடர்கின்றோமோ, அதைப் பெறும்போது அது நமக்குப் பெரிய திருப்தியைத் தரும். நாம் ஆசையாய்ப் பின்தொடர்வதை நாம் பெறாதபோது நம்முடைய வாழ்க்கையில் திருப்தியில்லாமல் அது ஒரு வெறுமையான வாழ்க்கையாக மாறிவிடும்.
தேவனுடைய மக்களாகிய நாம் எவைகளை ஆசையாய்ப் பின்பற்ற வேண்டும்? நாம் ஆசையாய்ப் பின்பற்றுகின்றவைகள் பரமகாரியங்கள் heavenly things. நாம் ஏதோவொன்றை ஆசையாய்ப் பின்பற்ற வேண்டுமென்றால், அதின்மேல் நாம் ஒருமுகமாகவும், முழு இருதயத்தோடும் இருக்க வேண்டும். ஒருமுகம் இல்லாத, focus இல்லாத அல்லது முழு இருதயம் whole heartedness இல்லாத ஒன்றை நாம் ஆசையாய்ப் பின்பற்ற மாட்டோம். எதன்மேல் நம்முடைய focusம் whole heartednessம் இருக்கிறதோ அதைத்தான் நாம் ஆசையாய்ப் பின்பற்றுவோம். வற்புறுத்தி யாரும் நம்மை எதையும் ஆசையாய்ப் பின்பற்ற வைக்க முடியாது. அப்படியொரு focus ஒருமுகம் இல்லையென்றால் அல்லது whole heartedness முழு இருதயம் இல்லையென்றால் நாம் அதை ஆசையாய்ப் பின்பற்றவும் மாட்டோம், அதை நாம் பெறவும் மாட்டோம்.
“இதை நான் பின்பற்றவும் அல்லது பெறவும் விரும்புகிறேன்,” என்று நாம் சொல்லும்போதுகூட நம்முடைய கவனத்தைத் திசைதிருப்புவதற்குப் பல்வேறு காரியங்கள் நம்முடைய வாழ்க்கையில் உண்டு, நம்முடைய வாழ்க்கையில் நிகழும். “நாம் ஆசையாய்ப் பின்தொடர வேண்டிய பரமகாரியம் இதுவா அல்லது அதுவா?” என்பதுபோன்ற ஒரு குழப்பம் நம்முடைய வாழ்க்கையிலே நேரிடும். ஒரு பரம காரியத்தைப் பின்பற்றுவதற்குப்பதிலாக பரமகாரியத்தைப்போலத் தோன்றுகிற ஒரு போலியான காரியத்தை நாம் பின்பற்றுகிற சாத்தியக்கூறும், வாய்ப்பும் இருக்கிறது. ஆகவே, தேவனுடைய மக்கள், “இது உண்மையாகவே பரமகாரியமா அல்லது பரமகாரியத்தைப்போல தோன்றுகிற,காட்சியளிக்கிற, ஒரு போலியான காரியமா?” என்பதை இனங்காண வேண்டும், பகுத்துணர வேண்டும், வேறுபிரித்துப் பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் நம்முடைய வாழ்க்கை முழுவதும் பரமகாரியத்தைப்போலத் தோற்றமளிக்கிற, காட்சியளிக்கிற, ஒன்றை நாம் பின்பற்றிக்கொண்டே போவோம். ஆனால், முடிவில் அது வெறுமையாகப் போய்விடும்.
“பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே,” என்று எபிரேயர் 3:1 கூறுகிறது. தேவன் நம்மை ஒரு பரம அழைப்போடு அழைத்திருக்கிறார். தேவன் நம்மை அழைத்திருக்கிறார். அது இந்தப் பூமியிலே ஏதோவொரு இலக்கை நாம் எட்டவேண்டும் என்கிற அழைப்பல்ல. பரத்திற்குரிய ஓர் இலக்கை நாம் எட்டவேண்டும் என்பது தேவனுடைய அழைப்பு. நாமெல்லாரும் அழைக்கப்பட்டவர்கள். “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்,” என்று பிலிப்பியர் 3:14இல் பவுல் கூறுகிறார். இதை “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளாகிய இலக்கை நோக்கி ஆசையாய்ப் பின்தொடர்கிறேன்,” என்று மொழிபெயர்த்தால் நன்றாக இருக்கும். I pursue.
தேவனுடைய மக்களாகிய நாமெல்லாரும் ஒர் இலக்கை நோக்கி ஓட வேண்டும், ஓர் இலக்கை எட்டவேண்டும் என்பதற்காக தேவன் நம்மை அழைத்திருக்கிறார். நம்முடைய வாழ்க்கையில் நாம் எட்ட வேண்டிய, போய்ச் சேரவேண்டிய, ஓர் இலக்கு இருக்கிறது. அந்த இலக்கை நாம் எட்டும்போது, தேவன் ஒரு பெரிய வெகுமதியை நமக்குத் தருகிறார். தமிழிலே பந்தயப்பொருள் என்றிருப்பது வெகுமதி அல்லது prize. உலகத்திற்குரிய வெற்றியை அல்லது உலகத்திற்குரிய ஒரு நன்மையைப் பெறுவதற்குத் தேவனுடைய மக்களும்கூட எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பார்கள். “நீங்கள் தேவனுக்காக இதைச் செய்தால், தேவன் உலகத்துக்குரிய, இந்தப் பூமிக்குரிய இப்படிப்பட்ட நன்மையை உங்களுக்குத் தருவார்,” என்று சொன்னால் அதை அவர்கள் மிகவும் ஆசையாய்ப் பின்தொடர்வார்கள். தேவன் நமக்கு ஒரு மாபெரும் வெகுமதியை வைத்திருக்கிறார். ஒருவேளை அந்த வெகுமதியின் ஓர் அம்சம் இந்த உலகத்திலும் நாம் சில நன்மைகளை அனுபவிப்போம். ஆனால், அந்த வெகுமதி வெறுமனே இந்த உலகத்திற்குரியது அல்ல. தேவனுடைய மக்களுக்கு இது மிகவும் அதிருப்தியைத் தரும்.
பொதுவாக மனிதர்கள் உடனடியாக ஒரு நன்மையைப் பெறும்போது அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள். காலந்தாழ்த்தி வருகிற நன்மையைக்குறித்து அவர்கள் மகிழ்ச்சி அடையமாட்டார்கள். உடனடியாக வருகிற தீமையைக்குறித்து அவர்கள் பயப்படுவார்கள். காலந்தாழ்த்தி வரப்போகிறத் தீமையைக்குறித்து அவர்கள் பயப்படமாட்டார்கள். அடுத்த தலைமுறையிலே வருகிற தீமையைக்குறித்து அவர்கள், ஒருவிதத்திலே இளைப்பாறுதல்கூட அடைவார்கள். “அப்பா! நல்ல காலம். அது என்னுடைய நாட்களிலாவது நடைபெறாது. என்னுடையப் பிள்ளைகள்தான் அதை அனுபவிப்பார்கள்,” என்று சொன்ன மனிதன் யார்? எசேக்கியா.
தேவன் நம்மை அழைத்திருக்கிறார். ஓர் இலக்கை நாம் எட்ட வேண்டும். அந்த இலக்கை எட்டினால் தேவன் ஒரு வெகுமதியைத் தருவார். “ஓ ! என்றைக்கோ தேவன் தரப்போகிற வெகுமதிக்காக நான் இப்படியெல்லாம் என்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டுமா!” என்று ஒருவேளை நீங்கள் கேட்கலாம். ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். என்றைக்கோ தேவன் தருகிற வெகுமதியினுடைய முன்சுவையை நாம் இன்றைக்கும் அனுபவிக்கலாம். ஆனால், “இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்?”என்று எபிரேயர் 2:4 கூறுகிறது. இரட்சிப்பு எவ்வளவு விலையேறப்பெற்றது! கவலையற்றிருந்தால் அல்லது அலட்சியம் செய்தால் அல்லது அசட்டை செய்தால்…தேவன் இப்படிப்பட்ட ஓர் அழைப்பு, ஓர் இலக்கு, ஓர் வெகுமதி வைத்திருக்கிறார். இந்த வார்த்தைகளையெல்லாம் நன்றாய்க் குறித்துக்கொள்ள வேண்டும். அழைப்பு, இலக்கு, வெகுமதி…தேவனுடைய மக்கள் அதைத் தவறவிடுகிற வாய்ப்பு உள்ளது. எபிரேயர் 4:1 அப்படி கூறுகிறது. “ஆனபடியினாலே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாகக் காணப்படாதபடிக்குப் பயந்திருக்கக்கடவோம்.” இப்படிப்பட்ட ஓர் இளைப்பாறுதல் உண்டு. என்றைக்கு நாம் அந்த இலக்கை எட்டி அந்த வெகுமதியைப் பெறுகிறோமோ அப்போது நமக்குக் கிடைப்பதுதான் இளைப்பாறுதல். ஒலிம்பிக் பந்தயத்தில் ஒரு வெகுமதியைப் பெறவேண்டும் என்பதற்காக பந்தய வீரர்கள் ஐந்து வருடங்கள் பயிற்சிசெய்து பிரயாசப்படுகிறார்கள். அவர்கள் அந்த இலக்கை எட்டி அந்த வெகுமதியைப் பெறும்போது அவர்களுக்குக் கிடைக்கிற அந்த நிலமைக்கு, அந்த உணர்ச்சிக்குப் பெயர்தான் இளைப்பாறுதல், நிறைவு, அல்லது திருப்தி. அதை அடைபவர்கள்தான் அந்த உணர்ச்சி எப்படி இருக்கிறது என்பதை வர்ணிக்க முடியும். ஒருவேளை அந்த உணர்ச்சி எவ்வளவு காலம் இருக்கும் என்று தெரியாது. “When I reached the top, it was not as exciting as it appeared to be” என்று ஒருவன் சொன்னான். நான் உச்சக்கட்டத்தை எட்டும்போது அது முதலில் எப்படிப் பரவசமாகத் தோன்றினதோ அந்தளவிற்கு அது ஒன்றும் பரவசமாகத் தோன்றவில்லை.
அவர்கள் அந்த வெகுமதியைப் பெறும்போது, ஒரு இளைப்பாறுதலைப் பெறுவார்கள். ஆனால் அந்த இளைப்பாறுதல் அதிக நாளைக்குத் தங்கியிருக்காது.
தேவனுடைய மக்களுக்குத் தேவன் அப்படிப்பட்ட ஒரு இலக்கையும், வெகுமதியையும் வைத்திருக்கிறார். ஆனால், தேவனுடைய மக்கள் பலர் அந்த இலக்கை எட்டாமல், வெகுமதியைப் பெறாமல் தவறவிடுகிற வாய்ப்பு உண்டு என்று எபிரேயர் 4:1 கூறுகிறது. அப்படி நீங்கள் யாரும் அந்த இலக்கை எட்டாமல், வெகுமதியைப் பெறாமல், தவறவிட்டுவிடக்கூடாது என்று அந்த எபிரேயர் நிருபத்தின் ஆசிரியர் எச்சரிக்கிறார்.
இப்படி நாம் ஆசையாய்ப் பின்பற்ற வேண்டிய அந்த இலக்கும், வெகுமதியும் என்ன என்பதைத் தெளிவுபடுத்துவதற்கு, நான்கு குறிப்புக்களை நான் உங்களுக்குச் சொல்கிறேன். முதலாவது, தேவனுடைய வார்த்தையை அறிந்த நம் எல்லாருக்கும் தெரியும், கிறிஸ்து. நம்முடைய இறுதி வெகுமதி ஒரு பொருள் அல்ல, ஒரு நபர். நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நம்முடைய பெரிய வெகுமதியாக நாம் பெறுவோம். ஆனால் நாம் இலக்கை எட்டி, வெகுமதியைப் பெறுவதற்கு முந்தியேகூட, ஒவ்வொரு நாளும் நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையிலே நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நாம் ஆதாயம்பண்ணிக் கொண்டிருக்கிறோம் என்று வேதம் கூறுகிறது. தேவனுடைய மக்கள் எல்லாருக்கும், குறிப்பாக வாலிப பருவத்தில் உள்ள தேவனுடைய மக்களுக்கு, இந்த இலக்கை எட்டுவதற்குப் பல தடைகள் உண்டு. நான் ஒரு கடையிலே 1000 ரூபாய் நோட்டைப் பார்த்தேன். 1000 ரூபாய், 500 ரூபாயைப்போல அப்படியே அச்சடித்து வைத்திருக்கிறார்கள். ஒரு அசல் 1000 ரூபாயையும், அந்தப் போலி 1000 ரூபாயையும் பார்த்தால் ஏறக்குறைய அப்படியே இருக்கிறது. இதில் எது அசல், எது போலி என்று நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்று சொன்னால் நம்மில் நிறையப்பேர் கஷ்டப்படுவோம். எது அசல், எது போலி என்று தெரியாது. போலி பார்ப்பதற்கு ரொம்ப அழகாக இருக்கிறது. In fact, போலி அசலைவிட பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது.
நாம் கிறிஸ்துவை ஆசையாய்ப் பின்பற்றுவதற்கு தேவனுடைய எதிரியாகிய சாத்தான், அதற்கு அருகிலேயே இன்னொரு போலியை வைப்பான். நம்முடைய வாழ்க்கையிலே ஒரு அமைப்பு அவசியம். கண்டிப்பாக. ஆனால், கிறிஸ்துவுக்கு இணையாக ஒரு அமைப்பை வைத்து தேவனுடைய மக்களுடைய கவனத்தைத் திசைத்திருப்புவது எதிரியினுடைய ஒரு வேலை.
முதலாவது கிறிஸ்துவும் அமைப்பும். ஒவ்வொன்றிலும் சில உபகுறிப்புக்களைச் சொல்வேன். இது பெரிய குறிப்பில் மூன்று உபகுறிப்புக்கள்.
1.1 முதல் உபகுறிப்பு இயேசு கிறிஸ்துவின்மேல் அன்புகூர்வது, 1.2 இரண்டாவது கிறிஸ்துவை அறிவது அல்லது கிறிஸ்து எல்லாமுமாவது. 1.3 மூன்றாவது கிறிஸ்து வெளியாவது
முதல் குறிப்பு கிறிஸ்துவில் அன்புகூர்வது, இரண்டாவது கிறிஸ்துவை அறிவது அல்லது கிறிஸ்து எல்லாமுமாவது, மூன்றாவது கிறிஸ்து வெளியாவது. Loving Christ, Knowing Christ or Christ becoming our all, expressing Christ. சரி இப்போது இந்த மூன்று உபகுறிப்புக்களையும்பற்றி சில எண்ணங்களைத்தான் சொல்லப்போகிறேன்.
கிறிஸ்தவ நம்பிக்கை என்பது ஒரு அமைப்பு முறையல்ல. கிறிஸ்தவ நம்பிக்கை என்பது வாழ்கின்ற ஒரு நபரோடு நமக்குள்ள உறவு. இதை நாம் ஓங்கிப் பறைசாற்ற வேண்டும். கிறிஸ்தவ நம்பிக்கை என்பது ஒரு தத்துவ அமைப்புமுறை அல்ல. Christian Faith or Christian gospel is not a philosophical system. Christian gospel is a relationship with a Living Person Jesus Christ. ஒரு philosophical system, ஒரு தத்துவ அமைப்புமுறையிலே பல techniques இருக்கும், பல tools இருக்கும், பல strategy இருக்கும்.
இந்த உலகத்திலே பல குருக்கள் எழுகின்றார்கள். வாழும்கலை, The Life engineering. எதையுமே engineering என்றுதான் சொல்ல வேண்டும். சாப்பிடுவது food engineering என்று சொல்ல வேண்டும், relationshipஐ relationship engineering என்று சொல்ல வேண்டும். எதை வேண்டுமானாலும் engineering என்று சொல்ல வேண்டும்.
ஆகவே, இப்படிக் குருக்கள் என்று எழும்புகின்றவர்கள், வாழும்கலை, how to live the stress-free life. அழுத்தமில்லாத ஒரு வாழ்க்கை வாழ்வது எப்படி? நண்பர்களை வெல்வது எப்படி? உங்களைச் செல்வந்தர்களாக்க மற்றவர்களை வேலை செய்ய வைப்பது எப்படி? இப்படியெல்லாம் குருக்கள் பல யுக்திகளையும், உபாயங்களையும், தந்திரங்களையும் அவர்கள் மக்களுக்குக் கற்றுத் தருவார்கள். ஆனால் கிறிஸ்தவ நம்பிக்கை, கிறிஸ்தவ நற்செய்தி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்கின்ற உயிர்வாழும் நபரோடு நம்மை ஒரு உறவுக்குள் கொண்டுவந்திருக்கிறது. பாவ மன்னிப்பு, பாவத்திலிருந்து விடுதலை, இந்த மனித வாழ்க்கையை நேர்த்தியாக வாழ்வது, இவை எல்லாமும் ஆண்டவராகிய இயேசு என்ற நபரோடு நமக்குள்ள உறவைப் பொறுத்திருக்கிறது. அந்த நபரோடு நமக்குள்ள உறவு எப்படிப்பட்டது என்பதைக் காட்ட நான் சில வசனங்களை உங்களுக்கு ஆதாரமாகத் தருகிறேன். கலாத்தியர் 2:20, எபேசியர் 6:24, 1 கொரிந்தியர் 16:22.
கலாத்தியர் 2:20, “கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.” முழு கலாத்தியர் புத்தகத்திலும் நியாயப்பிரமாணத்தினுடைய நிலை என்ன என்பதைப்பற்றி வாக்குவாதம் எழுகிறது. கிறிஸ்தவ நம்பிக்கையில், கிறிஸ்தவ வாழ்க்கையில், நியாயப்பிரமாணம் அல்லது சட்டம், திருச்சட்டத்தினுடைய நிலை என்ன என்பதைப்பற்றிய கேள்விக்கு பவுல் பதில் கூறுகிறார். அவருடைய பதில் என்ன? காரியம் நியாயப்பிரமாணத்தைப்பற்றியது அல்ல, “என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக் கொடுத்த தேவனுடைய குமாரன்மேல் என்னுடைய நம்பிக்கையும், என்னுடைய அன்பும் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது,” என்று பதில் சொல்லுகிறார். பல கேள்விகளை நாம் எழுப்புவோம். “இதைச் செய்யலாமா, அதைச் செய்யலாமா.” கிறிஸ்தவ வாழ்க்கையில் மக்கள் ஆயிரக்கணக்கான கேள்விகளை எழுப்புவார்கள். “இப்படி உடுத்தலாமா, அப்படி உடுத்தலாமா? இப்படிப் பேசலாமா, அப்படிப் பேசலாமா? இதை வாங்கலாமா, அதை விற்கலாமா?” என்கிற எல்லாக் கேள்விகளுக்கும் நான் தருகிற முதல் பதில் “என்னில் அன்புகூர்ந்த தேவனுடைய குமாரனோடு என்னுடைய உறவை அது எப்படித் தீர்மானிக்கிறது?” இந்தச் சிந்தனையோ, இந்தச் சொல்லோ, இந்தச் செயலோ, இந்த மனப்பாங்கோ, இந்த நடவடிக்கையோ, என்னில் அன்புகூர்ந்த தேவனுடைய குமாரனோடுள்ள உறவை எப்படி அது பாதிக்கிறது. அந்த உறவை அது கட்டியெழுப்புகிறதா அல்லது அந்த உறவை அது உடைக்கிறதா என்பதுதான் கேள்வி. எபேசியர் 6:24 “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அழியாத அன்புடனே அன்புகூருகிற யாவரோடும் கிருபை உண்டாயிருப்பதாக. ஆமென்,” என்று கூறுகிறது. கிறிஸ்தவ வாழ்க்கையினுடைய மையம் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்திலே நாம் கூர்கின்ற அழியாத அன்புடனே நாம் கூர்கிற அன்பு. “சகோதரரே நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையினுடைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் இது தீர்வைத் தருமா?” என்றால், இது மையமாக இருந்தால், தீர்வுகளை நாம் கண்டுபிடிப்பது சுலபமாக இருக்கும். நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் அழியாத அன்புகூர்வது நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் மையமாக இல்லை என்றால், இந்த நபரோடு எனக்கு ஒரு அன்பின் உறவு இல்லையென்றால் பிரச்சினை. இவர் எங்கேயோ இருக்கிறார் என்பதல்ல, அவர் இன்றைக்கு உயிர் வாழ்கிற நபர், என்னோடு தொடர்புகொள்கிற ஒரு நபர், என்னோடு கலந்துறவாடுகிற ஒரு நபர். இந்த நபரோடு என்னுடைய உறவு எப்படி இருக்கிறது என்பதைப்பற்றிய உணர்வு இருந்தால், எல்லாப் பிரச்சினைகளுக்கும், சிக்கல்களுக்கும் தீர்வுகளைக் கண்டுப்பிடிப்பது எளிதாக இருக்கும். “ஒருவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அன்புகூராமற்போனால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன், கர்த்தர் வருகிறார்,” (1 கொரிந்தியர் 16:22) இது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் அன்புகூராதவர்களைப்பற்றி எதிர்மறையாகப் பேசுகிறது. ஆகவே கிறிஸ்தவ நம்பிக்கை என்பது உங்களுடைய உபதேசம் என்ன, உங்களுடைய பழக்கம் என்ன என்பதல்ல. “உங்களுடைய உபதேசம் என்ன, உங்களுடைய பழக்கம் என்ன, உங்களுடைய வழக்கங்கள் என்ன என்ற கேள்விகளெல்லாம் பொருளற்றவை,” என்று நான் சொல்லவில்லை. ஆனால் இந்த மையமான காரியத்தை நாம் விட்டுவிட்டால், “உங்களுடைய உபதேசம் என்ன? உங்களுடைய பழக்கங்கள் என்ன? உங்களுடைய மற்ற காரியங்கள் என்ன?” என்பவைகளெல்லாம் வெறுமனே பயனற்றவைகளாகத்தான் இருக்கும்.
இரண்டாவது குறிப்பு கிறிஸ்துவை அறிவது அல்லது கிறிஸ்து எல்லாமுமாவது. கொலோசெயருக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதின முழுப் புத்தகமும் இதைப்பற்றிப் பேசுகிறது. கொலோசெயர்கள் கிறிஸ்துவுக்கு ஒப்பாக, ஈடாக, இணையாக ஒரு அமைப்பு முறையை உருவாக்கத் தொடங்கிவிட்டார்கள்.
ஒரு அமைப்புமுறைதான் கிறிஸ்தவ வாழ்க்கை என்று தேவனுடைய பெரும்பாலான மக்கள் தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த அமைப்புமுறைக்கு ஒத்து வாழும்போது அவர்கள் அதைக் கிறிஸ்தவ வாழ்க்கை என்று நினைக்கின்றார்கள். அந்த அமைப்புமுறையோடு அவர்கள் ஒத்து வாழவில்லை என்றால் அது கிறிஸ்தவ வாழ்க்கை இல்லை என்று நினைக்கின்றார்கள். “அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது. அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்,” என்று கொலோசெயர் 1:17, 18ஆம் வசனங்கள் கூறுகின்றன. கிறிஸ்து எல்லாவற்றிற்கும் முதலாக இருக்க வேண்டும். கிறிஸ்து முதன்மையாக இருக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், கிறிஸ்து மையமாக இருக்க வேண்டும், கிறிஸ்து தலையாக இருக்க வேண்டும். நன்றாய்க் கவனிக்க வேண்டும்.
தேவனுடைய மக்கள் எல்லாருடைய வாழ்க்கையிலும் கிறிஸ்து இருக்கிறார். ஆனால், கிறிஸ்து முதன்மையும், மையமும், தலையுமான இடத்திற்கு இன்னும் வரவில்லை. அதற்கு ஒரு கடும் போராட்டமே இருக்கிறது. “என்னுடைய வாழ்க்கையிலே கிறிஸ்து இருக்கிறார்,” என்று தேவனுடைய மக்கள் மிக எளிமையாகத் திருப்தியாகி விடுகிறார்கள். அந்த வாலிபன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் கேட்டதுபோல, “What is wrong with me? என்னிடத்தில் என்ன தவறு உண்டு? என்னிடத்தில் இன்னும் என்ன குறையுண்டு?” என்று கேட்டதுபோல, நாமும் ஒரு நீண்ட பட்டியலைச் சொல்லி, “என்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கையிலே நான் இப்படியிருக்கிறேன், அப்படியிருக்கிறேன், இதைச் செய்கிறேன், அதைச் செய்கிறேன்; என்னிடத்தில் இன்னும் என்ன குறை உண்டு?” என்று கேட்போம். ஒருவேளை நாம் மற்றவர்களிடத்தில் அப்படிக் கேட்காமல் இருக்கலாம்; ஆனால், இந்த மனப்பாங்கு தேவனுடைய மக்களிடத்தில் பரவலாகக் காணப்படுகிறது.
கிறிஸ்து என்னுடைய வாழ்க்கையில் முதன்மையும், மையமும், தலையுமான இடத்திற்கு வரவேண்டும் என்பது பிதாவினுடைய நோக்கம். ஆனால், பல சமயங்களில், கிறிஸ்துவோடுகூட பல்வேறு காரியங்களை நாம் முக்கியத்துவப்படுத்துகின்றோம். கொலோசெயர் 2:8, 18இல் தலையைப் பற்றிக்கொள்ளாத கொலோசெயர்களுடைய நிலையைப்பற்றி பவுல் பேசுகிறார். “லெளகீக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல” (வசனம் 8). It is not according to Christ. தமிழில் அதன் அர்த்தம் கொஞ்சம் தெளிவாக இல்லை. நம்முடைய வாழ்க்கையில் கிறிஸ்து இருக்கிறார். ஆனால் வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளும், கிறிஸ்துவுக்கு ஏற்றவாறு இல்லை. தேவனுடைய நோக்கம், நாம் எந்த இயேசு கிறிஸ்துவினிடத்தில் அன்புகூர்கிறோமோ, அவரை நாம் நம்முடைய அனுபவ வாழ்க்கையில் அறிந்து, நம்முடைய அனுபவத்தில் அவர் நமக்கு எல்லாமுமாக மாறவேண்டும். நம்முடைய வாழ்க்கை அனுபவத்தில் அவர் நமக்கு எல்லாமுமாக மாறவேண்டும். அப்பொழுது கிறிஸ்து அவருக்குரிய தலையும், முதன்மையும், மையமுமான இடத்துக்கு வருகிறார்.
மூன்றாவது கிறிஸ்துவை வெளியாக்குவது. தேவனுடைய மக்களுடைய அழைப்பு, நாம் கிறிஸ்துவின்மேல் அன்புகூர்வது, கிறிஸ்துவை அனுபவத்தில் அறிவது, இதன்மூலமாக ஒருகூட்டம் மக்கள்மூலமாக கிறிஸ்து இந்த உலகத்திலே வெளியாக்கப்பட வேண்டும். ஆனால், பல வேளைகளிலே தேவனுடைய மக்கள்மூலமாக கிறிஸ்து வெளியாக்கப்படுவது இல்லை. நம்மூலமாக கிறிஸ்து வெளியாக்கப்படுவதில்லை. எப்போதுமே கிறிஸ்துவை நாம் மையப்படுத்துவதற்கு அல்லது முதன்மைப்படுத்துவதற்கு எதிராக சாத்தான் செய்கின்ற சில வேலைகள் உண்டு.
மத்தேயு 17ஆம் அதிகாரத்தை நீங்கள் குறித்துக்கொள்ளுங்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து யோவானையும், யாக்கோபையும், பேதுருவையும் கூட்டிக்கொண்டுபோய் ஒரு மலையின்மேல் மறுரூபமாகிறார். “அப்பொழுது மோசேயும், எலியாவும் அவரோடே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள். அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்குச் சித்தமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான்.” “அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.”
பேதுரு பேசிக்கொண்டிருக்கும்போதே வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. இது எப்படியிருக்கிறது என்றால், பேதுரு பேசுவது ஏறக்குறைய ஒரு உளறலைப்போல இருக்கிறது. ஆகவே, அவன் பேசும்போது தேவன் குறிக்கிட்டுத் தடுத்து வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, நீ பேசுவதை நிறுத்து, அதிலே அதிகமான பொருள் இல்லை. இவரே என்னுடைய நேசகுமாரன், இவரில் நான் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்வதுபோல் இருக்கிறது, என்று ஒரு சகோதரன் சொல்கிறார்.
இயேசுவுக்கு ஒரு கூடாரம், கூடவே எலியாவுக்கும் ஒரு கூடாரம், மோசேக்கும் ஒரு கூடாரம். இயேசுவுக்கு ஒரு கூடாரம் இல்லையென்றால், ’இது இயேசுவுக்குரியது இல்லை. இந்த இடத்திலே, இந்த அமைப்பிலே, கிறிஸ்து இல்லை,” என்பதை நாம் வெளிப்படையாகத் தெரிந்துகொள்வோம். ஆனால், தேவனுடைய எதிரி அப்படிச் செய்யமாட்டான். முதலாவது கிறிஸ்துவுக்கு ஒரு கூடாரத்தைச் செய்துவிடுவோம். ஆனால், அவருக்கு மைய இடமும், முதன்மை இடமும் கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக இன்னொரு கூடாரம் எலியாவுக்கும், இன்னொரு கூடாரம் மோசேக்கும் எழுப்பிவிடுவோம். தேவன் இதை அங்கீகரிக்கவில்லை. இதுதான் அமைப்புமுறை. கிறிஸ்து கூட்டல் இன்னும் வேறு பல காரியங்கள். “நாங்கள் கிறிஸ்துவை விடவில்லையே! எங்களிடம் கிறிஸ்து இருக்கிறாரே!” என்று சொல்லலாம். உண்மைதான். தேவ மக்கள் கிறிஸ்துவையும் வைத்துக்கொள்வார்கள், கிறிஸ்துவோடுகூட வேறு சில கூடாரங்களையும் வைத்துக்கொள்வார்கள். எலியாவினுடைய அல்லது மோசேயின் கூடாரத்தை நீங்கள் தொட்டுப்பாருங்கள். அவர்கள் துடித்துப்போய்விடுவார்கள்.
“இயேசுவே சொன்னாலும்கூட நான் என்னுடைய CSI சபையை அல்லது ரோமன் கத்தோலிக்க சபையை விட்டு வெளியே போகமாட்டேன்,” என்று ஒரு சகோதரன் சொன்னார். “நான் CSI சபையைவிட்டு, ரோமன் கத்தோலிக்க சபையைவிட்டு வெளியே போகமாட்டேன்,” என்று சொல்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், “இயேசுவே சொன்னாலும் நான் இதைவிட்டு வெளியே போகமாட்டேன்,” என்று சொன்ன வார்த்தையை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. “இயேசுவே சொன்னால்கூட நான் எலியாவின் கூடாரத்தையும், மோசேயின் கூடாரத்தையும் தகர்க்க மாட்டேன்,” என்பதுதான் இவர்களுடைய நிலைப்பாடு.
இன்னொரு எடுத்துக்காட்டு பழைய ஏற்பாட்டில் பார்க்கிறோம். எண்ணாகமம் 21:8, 9. இஸ்ரயேல் மக்கள் வனாந்தரத்திலே சர்ப்பத்தினால் கடிக்கப்பட்டு சாகின்றார்கள். அவர்கள் மோசேயினிடத்தில் போய் முறையிடும்போது, மோசேயும் தேவனிடத்தில் கேட்டு ஒரு உபாயத்தைச் செய்கிறார். “அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஒரு கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை; கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் என்றார். அப்படியே மோசே ஒரு வெண்கலச் சர்ப்பத்தை உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவைத்தான்; சர்ப்பம் ஒருவனைக் கடித்தபோது, அவன் அந்த வெண்கலச் சர்ப்பத்தை நோக்கிப்பார்த்துப் பிழைப்பான்.” யோவான் 3:14, 15இல், “சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்,” என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்மை அந்த வெண்கல சர்ப்பத்திற்கு ஒப்பிட்டுச் சொல்கிறார். அந்த வெண்கலச் சர்ப்பம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மக்களின் பாவத்தைச் சுமக்கிற காரியத்திற்கு ஒரு படமாக இருக்கிறது. ஆனால், நாளடைவில் இஸ்ரயேல் மக்கள் அந்த வெண்கல சர்ப்பத்தை வழிபட ஆரம்பித்தார்கள். அதற்கு ஒரு பலிபீடம் கட்டி, பலி செலுத்தி, அதற்கு என்ன பெயர் என்று தெரியுமா? நிகுஸ்தான் (2 இராஜா. 18:4).
வெண்கலச் சர்ப்பத்தை தேவன் நல்ல நோக்கத்தோடு கொடுக்கிறார். ஆனால், அதை ஒரு அமைப்புமுறையாக்கிவிட வேண்டும் என்பதுதான் மனிதனுடைய சுபாவம். தேவன் தந்ததைவைத்து ஒரு அமைப்புமுறையை உண்டாக்கி, அதற்கு ஒரு பலிபீடம் கட்டி, பலியிட்டு, அதைக் கடவுளாக கும்பிட்டார்கள். அதற்குப் பெயர் நிகுஸ்தான். நிகுஸ்தான் கோயில். எசேக்கியா இராஜா “தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே பண்ணியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப்போட்டான்; அந்நாட்கள்மட்டும் இஸ்ரவேல் புத்திரர் அதற்குத் தூபங்காட்டி வந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான் என்று பேரிட்டான்” (2 இராஜாக்கள் 18:3, 4). அவன் அந்தக் கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கினான். எல்லா உயர்ந்த மேடைகளையும் இடிக்கும்போது, இஸ்ரயேல் மக்கள் கும்பிட்டுக்கொண்டிருந்த நிகுஸ்தான் வெண்கலச் சர்ப்பத்தின் கோயிலையும் இடித்தான். இது முதல் குறிப்பு.
கிறிஸ்துவும் அமைப்புமுறையும். தேவனுடைய மக்களாகிய நாம் கிறிஸ்துவை விடவில்லை. ஆனால் கிறிஸ்துவுக்கு நாம் இன்னும் கொடுக்க வேண்டிய மைய இடம், முதன்மை இடம் அல்லது தலையினுடைய இடம் நாம் கொடுக்காமல் இன்னும் பல கூடாரங்களும், பல நிகுஸ்தான்களும் நம்முடைய வாழ்க்கையிலே இருக்கலாம். அவைகளை நாம் இனங்கண்டு, எசேக்கியா இராஜா செய்ததுபோல அந்த மேடைகளையெல்லாம் நாம் தகர்க்க வேண்டும்.
இரண்டாவது குறிப்புக்குப் போவோம். ஆவியானவரும் சத்தியமும், இதில் நான் மூன்று உபகுறிப்புக்களைச் சொல்கிறேன்.
2.1 முதல் உபகுறிப்பு: கிறிஸ்துவை வெளிப்படுத்துவது, 2.2 இரண்டாவது கிறிஸ்துவை மெய்யாக்குவது, 2.3 மூன்றாவது கிறிஸ்துவை உருவாக்குவது.
கிறிஸ்துவை வெளிப்படுத்துவது, கிறிஸ்துவை மெய்யாக்குவது, கிறிஸ்துவை உருவாக்குவது.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நாம் எப்படி அறிவது? தேவனுடைய வார்த்தை, சத்தியத்தின் மூலமாகத்தான் நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அறிய முடியும். நான் சிறுவனாக இருந்தபோது, சில பத்திரிகைகளில் ஒரு படம் வரும். அந்தப் படத்தைப் பார்க்கும்போது ஒன்றும் புரியாது. அது என்ன படம் என்று உடனே தெரியாது. ஏதோ அங்கும் இங்கும் கிறுக்கி வைத்ததுபோலிருக்கும். அதில் ஒன்றுமே இருக்காது. ஆனால், “கொஞ்ச நேரம் நீங்கள் ஊன்றிப் பார்த்தால் நீங்கள் இங்கே ஒரு மாளிகையையும், மாளிகையின் நடுவிலே ஒரு சிங்கத்தையும் பார்ப்பீர்கள்,” என்று எழுதியிருப்பார்கள். கொஞ்ச நேரம் நம்முடைய கண்ணினுடைய focus ஐ நாம் adjust பண்ணி ஊன்றிப் பார்த்தால் அது ஒரு மூன்று பரிமாணம் Three dimension உள்ள ஒரு மாளிகையும், அந்த மாளிகையின் நடுவிலே ஒரு சிங்கம் இருப்பதும் தெரியும். வேதாகமம் அப்படிப்பட்ட புத்தகம் என்று நான் சொல்லவில்லை. ஆனாலும், ஊன்றிப் பார்த்தால்தான் இந்தப் புத்தகத்திலே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பார்க்க முடியும். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒரு மலையிலே ஜார்ஜ் வாஷிங்டனுடைய உருவத்தை செதுக்கியிருக்கின்றார்கள். அந்த மலையில் அமெரிக்க ஐக்கிய நாடுகளுடைய constitution அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியிருக்கிறார்கள். மலையருகே நின்று வாசித்தால் அரசியல் அமைப்புச் சட்டம் தெரியும். தூரத்தில் போய்ப் பார்த்தால் அதில் ஜார்ஜ் வாஷிங்டனுடைய முகம் தெரியும். இது உண்மை. நீங்கள் அந்தப் படத்தைப் பார்த்துக்கொள்ளலாம். அதுபோல வேதாகமத்தை ஒருவிதமாகப் பார்த்தால் அதில் கறுப்பு வெள்ளை எழுத்துக்கள், சத்தியங்கள், தெரியும். நான் தூரத்தில் போய்ப் பார்க்கச் சொல்லவில்லை. ஆனால் வேறொரு விதமாகப் பார்த்தால், வேதாகமத்தின் பக்கங்களிலே கிறிஸ்து தென்படுவார். ஆனால், தேவனுடைய மக்கள் எல்லாருக்கும் வேதாகமத்தின் பக்கங்களில் கிறிஸ்து தென்படுவதில்லை.
சத்தியம் என்ற பெயரில் மக்கள் ஏதோவொரு விதத்தில் ஓர் அறிவைப் பெறுகிறார்கள். அந்த அறிவின் அடிப்படையிலே அவர்கள் சண்டைபோடுவார்கள், போராடுவார்கள், தேவனுடைய பிற மக்களோடு உறவாடமாட்டார்கள். “நீ அந்நிய பாஷை பேசுவாயா?” என்று ஒரு ஆவிக்குரிய சகோதரன் என்னிடத்தில் கேட்டார். நான் அப்படி, இப்படி என்று கொஞ்சம் பதில் சொல்லிப்பார்த்தேன். அவர் என்னை விடவில்லை. “ஆம் அல்லது இல்லை என்று பதில் சொல்ளுங்கள்,” என்றார். நான், “பேசி ரொம்ப நாளாயிற்று,” என்று சொன்னேன். அவர் அத்தோடு என்னுடனான உறவை அறுத்துக்கொண்டார். நான் அதை “சரி, தவறு, நல்லது, கெட்டது, பயனுள்ளது, பயனற்றது,” என்றெல்லாம் சொல்லவில்லை. “பேசி வெகு நாளாயிற்று,” என்று சொன்னதினால், “நீ பரிசுத்த ஆவியையே மறுதலித்தவன். உன்னோடு எந்த உறவையும் நான் வைத்துக்கொள்ள விரும்பவில்லை,” என்று சொன்னார். இப்போது காலங்கள் உருண்டோடிவிட்டன. அவர் மறுவுருவாகிவிட்டார். இப்போது அவர் அதைப்பற்றி நினைப்பதில்லை.
வேதாகமத்தின் பக்கங்களில் நாம் கிறிஸ்துவைக் காணவேண்டும். அதைப் பரிசுத்த ஆவியானவர் மட்டுமே காண்பிக்க முடியும். அப்படிப்பட்ட ஒரு இருதயம் வேண்டும். “இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர்; அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்” (சங்கீதம் 51:6). வேதத்தை ஆராய்ந்துபடிப்பதற்கு அப்படிப்பட்ட ஒரு இருதயப் பயிற்சி, ஒரு heart exercise, இல்லையென்றால் வேதாகமத்தின் பக்கங்களிலிருந்து நாம் வெறுமனே கேள்விகளையும், பதில்களையும்தான் நாம் பெறுவோமேதவிர கிறிஸ்துவைப் பெற முடியாது. லூக்கா 24:27, யோவான் 5:39, 40 ஆகிய வசனங்களைப் பாருங்கள். “வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை.” ““வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்,” என்று எழுதியிருக்கிறது. இது “நீங்கள் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்க்கிறீர்கள்,” என்று இருக்க வேண்டும். இது ஆண்டவராகிய இயேசு யூதர்களிடம் சொன்ன வார்த்தைகள். “மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.” ஆம், உயிர்த்தெழுந்த இயேசு வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளைத் தம் சீடர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.
இரண்டாவது குறிப்பு, பரிசுத்த ஆவியானவருடைய இன்னொரு வேலை, கிறிஸ்துவை நம்முடைய அனுபவ வாழ்க்கையிலே மெய்யாக்குவது. இதை நாம் வலியுறுத்திச் சொல்ல வேண்டும். வாழ்க்கைச் சூழ்நிலைகளிலே நாம் கிறிஸ்துவால் வாழ்கிறோமா என்பதுதான் காரியம். வேதப்பக்கங்களிலிருந்து வாக்குவாதம்பண்ணுவது காரியம் இல்லை. இதற்கு அர்த்தம் “சத்தியத்தை நாம் தாறுமாறாக, ஏனோதானோவென்று பயன்படுத்தலாம், அல்லது புரிந்துகொள்ளலாம்,” என்று நான் சொல்லவில்லை. ஆனால் உயிருள்ள சத்தியம், உயிர்த்துடிப்புள்ள சத்தியம், என்னவென்றால் ஒரு வாழ்க்கைச் சூழ்நிலையிலே வாழ்வதற்கு வேறு வழியில்லை. ஆனால் கிறிஸ்துவை நான் அறிந்ததால், கிறிஸ்து இந்தச் சூழ்நிலைக்குப் போதுமானவர் என்று கண்டதால் வாழ்வதுதான் சத்தியம். யோவான் 16:13, 14ஆ வசனங்களிலே ஆண்டவர் இப்படிச் சொல்கிறார், “சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்.” பரிசுத்த ஆவியானவர் சத்தியத்தைக்கொண்டு செய்கிற ஒரு வேலை என்னவென்றால் கிறிஸ்துவை நமக்கு நம்முடைய அனுபவத்தில் மெய்யாக்குகிறார்.
கிறிஸ்துவைப்பற்றி எழுதப்பட்ட உண்மைகள் பல உண்டு. ஆனால், எழுதப்பட்ட உண்மைகளில் எவ்வளவு என்னுடைய வாழ்க்கையிலே உண்மையாயிருக்கிறது என்பதைப் பரிசுத்த ஆவியானவர் செய்கிறார்.
மூன்றாவது குறிப்பு, கிறிஸ்துவை உருவாக்குவது. 2 கொரிந்தியர் 3:17, 18 நமக்குத் தெரியும். நாம் அந்த வேதப் பக்கங்களில் நம்முடைய வாழ்க்கைச் சூழ்நிலையில் வாசிக்கும்போது, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்தசாயலாக ஆவியானவர் நம்மை மறுவுருவாக்குகிறார். மகிமையின் ஒரு படியிலிருந்து இன்னொரு படிக்குச் சிறிது சிறிதாக, சிறிது சிறிதாக பரிசுத்த ஆவியானவர் சத்தியத்தைக்கொண்டு மறுவுருவாக்குகிறார் என்று 2கொரிந்தியர் 3ஆம் அதிகாரம் முழுவதும் சொல்லுகிறது. இந்த வேதத்தை நாம் நம்முடைய வாழ்க்கைச் சூழலிலே வாசிக்கும்போது, ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு மாதமும் சிறிதளவாவது நம்முடைய குணம் கிறிஸ்துவின் குணத்திற்கு ஒத்ததாக மாற்றப்படுகிறது.
இதற்கு நான் ஒரு போலியைச் சொல்லுகிறேன். எப்படிச் சத்தியத்தைப் போலியாகப் பயன்படுத்தலாம் என்பதற்கு நான் ஒரேவொரு எடுத்துக்காட்டுத் தருகிறேன். இது யோசுவா ஆறாம் அதிகாரத்தில் உள்ளது. இஸ்ரேயேல் மக்களுக்குத் தேவன் கட்டளையிடுகிறார். “யுத்தபுருஷராகிய நீங்கள் அனைவரும் பட்டணத்தைச் சூழ்ந்து ஒருதரம் சுற்றிவாருங்கள்; இப்படி ஆறுநாள் செய்யக்கடவீர்கள். ஏழு ஆசாரியர் பெட்டிக்கு முன்பாக ஏழு கொம்பு எக்காளங்களைப் பிடித்துக்கொண்டு போகவேண்டும்; ஏழாம் நாளில் பட்டணத்தை ஏழுதரம் சுற்றிவரக்கடவர்கள்; ஆசாரியர் எக்காளங்களை ஊதவேண்டும். அவர்கள் அந்தக் கொம்புகளினால் நெடுந்தொனி இடும்போதும், நீங்கள் எக்காள சத்தத்தைக் கேட்கும்போதும், ஜனங்கள் எல்லாரும் மகா ஆரவாரத்தோடே ஆர்ப்பரிக்கக்கடவர்கள்; அப்பொழுது பட்டணத்தின் அலங்கம் இடிந்துவிழும்; உடனே ஜனங்கள் அவரவர் தங்களுக்கு நேராக ஏறக்கடவர்கள் என்றார்.” எவ்வளவு எளிமையான உபாயம்! அவர்கள் தங்களுடைய கத்தியினாலோ, இரத்தம் சிந்தியோ எரிகோவை வெல்லவில்லை. தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை அவர்கள் சுமந்து சுற்றி வந்ததால் எரிகோவை அவர்கள் வென்றார்கள். உடன்படிக்கைப் பெட்டியை ஆசாரியர்கள்கூடத் தொடமுடியாது. இரண்டு கோல்களில்தான் அவர்கள் சுமக்க வேண்டும். உடன்படிக்கைப் பெட்டி அவ்வளவு பரிசுத்தமானது!
இப்போது 1 சாமுவேல் நான்காம் அதிகாரத்துக்கு வருவோம். பெலிஸ்தரோடு இஸ்ரயேல் மக்கள் போரிட்டு ஒரு போரிலே ஒரு 4000 பேர் செத்துப்போகின்றார்கள். ஆகவே, இஸ்ரயேலருடைய மூப்பர்கள் கூடிவந்து ஆலோசனை பண்ணுகிறார்கள். “அடுத்த நாள் போருக்கு நாம் போனால் போதாது; எப்படி நம்முடைய முன்னோர்கள் உடன்படிக்கைப் பெட்டியை சுமந்துகொண்டு போர்க்களத்துக்குப்போய் எரிகோவை முறியடித்தார்களோ அதுபோல நாளைக்கு நாம் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்துகொண்டு, போர்க்களத்துக்குப் போவோம்; ஏனென்றால் நாம் இந்தமுறை வெல்வோம்,” என்று முடிவுசெய்கிறார்கள். உடன்படிக்கைப் பெட்டி வந்ததால் உடன்படிக்கைப் பெட்டியோடு அதைப் பாதுகாக்கின்ற ஆசாரியர்கள் இரண்டுபேர், ஏலியினுடைய குமாரர்களாகிய ஓப்னியும், பினெகாசும் வருகின்றார்கள். முதல் நாளிலே 4000பேர் செத்தார்கள். உடன்படிக்கைப் பெட்டிபோனபோது போர்களத்திலே பெரிய ஆராவாரம் உண்டாயிற்று. “தேவன் பாளயத்தில் வந்தார் என்று சொல்லப்பட்டபடியினால், பெலிஸ்தர் பயந்து, ஐயோ, நமக்கு மோசம் வந்தது; இதற்குமுன் ஒருபோதும் இப்படி நடக்கவில்லையே. ஐயோ, அந்த மகத்துவமான தேவர்களின் கைக்கு நம்மைத் தப்புவிப்பவர் யார்? எகிப்தியரைச் சகலவித வாதைகளினாலும் வனாந்தரத்திலே அடித்த தேவர்கள் இவர்கள்தானே!” என்று ஆரவாரத்தைக் கேட்டுப் பெலிஸ்தரே கொஞ்சம் நடுங்கி விடுகிறாரகள். ஆனால் அந்த நாளிலே 30000 இஸ்ரயேலர் செத்தார்கள் என்று எழுதியிருக்கிறது. யோசுவாவினுடைய புத்தகத்திலே இப்படி நடந்ததாக எழுதி வைத்திருக்கிறதே. உடன்படிக்கைப் பெட்டியை நாம் இப்படி சுமந்துகொண்டு, அப்படிச் சுற்றிப்போனால் நமக்கு வெற்றி கிடைக்கும் என்பதுதான் போலி. இப்படித்தான் தேவனுடைய பெரும்பாலான மக்கள் வேதத்திலிருந்து சத்தியத்தைப் பெறுகின்றார்கள். இப்படியொன்று இருக்கிறது. உடன்படிக்கைப் பெட்டியிலே வல்லமை இருக்கிறதா இல்லையா? உடன்படிக்கைப் பெட்டியின் வல்லமை அதைச் சுமக்கிற தேவனுடைய மக்களிடமிருந்து வருகிறது. உடன்படிக்கைப் பெட்டி ஒரு உண்மையைக் குறிக்கின்ற நிழல். எந்த அளவிற்கு இந்த மக்களிடையே இயேசு கிறிஸ்துவினுடைய சாட்சி விளங்குகிறது, எந்த அளவிற்கு இயேசு கிறிஸ்துவினுடைய குணம் அவர்களுக்குள் உருவாக்கப்பட்டிருக்கிறது, எந்த அளவிற்கு அவர்கள் வாழ்க்கையில் இயேசு கிறிஸ்துவால் வாழ்கிறார்கள், எந்த அளவிற்கு இயேசு கிறிஸ்துவினுடைய சாட்சி இவர்களிடத்தில் இருக்கிறது என்பதுதான் உடன்படிக்கைப் பெட்டியேதவிர, பெட்டி ஒரு காரியம் இல்லை.
ஆகவே ஆவியானவரும், சத்தியமும். ஆவியானவர் இல்லாத ஒரு சத்தியம் உண்டு. அந்த சத்தியம் நம்மை உயிர்ப்பிக்காது அல்லது பரம காரியங்களை நாம் பெறுவதற்கு உதவி செய்யாது.
மூன்றாவது பெரிய குறிப்பு, சபையும் நிறுவனமும். இதில் மூன்று உபகுறிப்புகள்,
3.1 முதல் உபகுறிப்பு கிறிஸ்துவை மையமாய்க்கொண்டு உறவாடுதல், உறவாடல். 3.2 இரண்டாவது கிறிஸ்துவைப் பகிர்வது, 3.3 மூன்றாவது கிறிஸ்துவின் பிரசன்னம்.
என்னுடைய நண்பரான ஒரு பாஸ்டர், “கூடு கட்டினால் புறாக்கள் வரும்” என்று சொன்னார். அதனுடைய பொருள், “தேவனுடைய மக்கள் கூடிவர வேண்டும் என்றால், நீங்கள் ஒரு சபைக் கட்டிடத்தை கட்டவேண்டும். முக்கியமான சாலையில் ஒரு சபைக் கட்டிடத்தைக் கட்டி, குளுகுளு வசதிசெய்து, soul - stirring music, Inspiring messages, contemporary fellowship என நீங்கள் விளம்பரம் செய்தீர்கள் என்றால் கண்டிப்பாக தேவனுடைய மக்கள் கூடுவார்கள்,” “நீங்கள் நினைப்பதுபோல நடந்தால், இதுபோல நீங்கள் 50பேர்தான் இருப்பீர்கள்,” என்று தேவனுடைய மக்கள் என்னை எச்சரிக்கவும் செய்திருக்கிறார்கள். உடனே நாம் வீறுகொண்டு, “நாங்கள் 50பேர்களே இருந்துகொள்கிறோம்,” என்று நாம் சொல்வதுமில்லை அல்லது நாம் ஒருவேளை “பிரதான சாலையில் நிலம் வாங்கி பெரிய கட்டிடம் கட்டுவோம்,” என்று சொல்வதும் இல்லை. நல்ல கட்டிடம், Air-conditioned Hall, Inspiring music, Soul - stirring messages, contemporary fellowship இவைகளைப்பற்றி தேவனுடைய வார்த்தை என்ன கூறுகிறது என்று நான் சிந்தித்துப் பார்க்கிறேன். 25 வருடங்களுக்கு முன்பு நான் A.W.Tozerயைப் படித்தபோது இந்த Soul - stirring music, inspiring messagesபற்றி அவர் என்ன சொன்னாரோ அதை மீண்டும் 25 வருடங்கள் கழித்து படித்துப்பார்க்கிறேன். அன்றைக்கு அது எப்படிப் பசுமையாக இருந்ததோ, அதேபோல் இன்றைக்கும் அது எனக்குப் பசுமையாக இருக்கிறது. முன்பு அவர்கள் திரையரங்குகளில் பாடினார்கள். இப்போது அவர்கள் பரிசுத்த ஸ்தலத்தில் பாடுகிறார்கள். அவர்களுடைய மாம்சத்திலே எந்த வேறுபாடும் இல்லை. முந்தி அந்த மாம்சம் திரைப்பட அரங்கில் வேலை செய்தது அல்லது நாடக அரங்கில் வேலை செய்தது. இப்போது அந்த மாம்சம் பரிசுத்த ஸ்தலத்தில் வேலை செய்கிறது. வேலை செய்தது என்னமோ மாம்சம்தான். இடம்தான் மாற்றமே தவிர, அதனுடைய source, அதனுடைய தோற்றுவாய், ஊற்று, மூலம் அதில் எந்த மாற்றமும் இல்லை என்பது A.W. Tozerரின் கருத்து. நான் அந்தக் கருத்தோடு ஒத்துப்போகிறேன்.
உண்மையாக சபை என்பது தேவனுடைய மக்களிடையேயுள்ள உறவாடல். இதை மக்கள் ஒரு நிறுவனமாக மாற்றிவிட்டார்கள். இந்த உலகத்திலே Corporates இருக்கிறார்கள். corporates என்றால் என்ன? தொழிலதிபர்கள் ஒரு வெற்றிகரமான Multinational company நடத்துவதுபோல தேவனுடைய மக்கள் சபையை ஒரு நிறுவனமான நடத்தி வெற்றிபெறத் துடிக்கிறார்கள். தேவ மக்கள் வெற்றிபெறக்கூடாது என்று நான் சொல்லவில்லை. ஆனால், சபை என்பது தேவ மக்களுடைய குடும்பம். தேவனுடைய மக்கள் எப்படி உறவாடுகிறார்கள் என்பதுதான் அது சபையா, இல்லையா என்பதை நிர்ணயிக்கிறது. எண்ணிக்கைகள் நிர்ணயிக்கவில்லை. எண்ணிக்கையை நான் குறைத்து மதிப்பிடவில்லை. தேவன் இந்த உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகின்ற அறிவையடையவும் வேண்டும் என்று விரும்புகிறார். ஆகவே எண்ணிக்கையைப்பற்றி நான் குறைத்துச் சொல்லவில்லை. எண்ணிக்கையைக்குறித்து நான் கவலையற்றவனாகவும் இருக்கவில்லை. ஆனால், எண்ணிக்கை ஒரு அளவுகோல் அல்ல.
எபேசியர் இரண்டாம் அதிகாரம் இப்படிச் சொல்கிறது. “எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி, பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.” தேவன் எப்படி யூதர்களையும், புறவினத்தார்களையும் ஒன்றாக்கினார் என்றால் பகையாக அவர்களுக்கு நடுவிலே இருக்கிற நடுச்சுவரை சிலுவையினாலே தகர்த்தார். தகர்த்து உறவாடமுடியாத இரண்டு சாரார்களை உறவுப்படுத்தினார் என்று எபேசியர் இரண்டாம் அதிகாரத்திலே வாசிக்கிறோம். இரண்டு மனிதர்களால், தேவனுடைய மக்களாக இருந்தால்கூட, உறவாடுவதற்கு நமக்கு நடுவிலே பகையாக நடுச்சுவர்கள் உண்டு. கணவன் மனைவியாக இருந்தால்கூட நடுச்சுவர்கள் உண்டு. சகோதரர்கள் நடுவிலே நடுச்சுவர்கள் உண்டு. மூத்தவர்கள் இளையவர்கள் நடுவிலே நடுச்சுவர்கள் உண்டு. நாம் கவனிக்காமல் போய்விட்டால் நாளடைவிலே அவைகள் பகையாக மாறிவிடும். முதலாவது ஆரம்பக்கட்டத்திலே நாம் இந்த நடுச்சுவர்களைப் பொறுத்துக்கொள்வோம், சகித்துக்கொள்வோம், பல்லைக் கடித்துக்கொள்வோம், பிறகு அது வெறுப்பாக, கசப்பாக, கோபமாக, பகையாக மாறிவிடும். நானும் மையம், என்னுடைய சகோதரனும் மையம் என்றால் உறவாட முடியாது. இந்த உலகத்திலே மக்கள் உறவாடுவதற்கும், தேவனுடைய மக்கள் உறவாடுவதற்கும் பெரிய வேறுபாடு உண்டு. அதென்னவென்றால் தேவனுடைய மக்கள் உறவாடுகையிலே கிறிஸ்துவை மையமாக வைக்கிறோம். அது எளிமையான காரியம் இல்லை. சொல்வதற்கு மிக எளிமையானது. நம்முடைய எல்லா உறவாடல்களிலேயும் கிறிஸ்துவை மையமாகவைத்து உறவாடும்போது, சிலுவை நம்மேல் பிரயோகிக்கப்படும்.
இரண்டாவது குறிப்பு கிறிஸ்துவைப் பகிர்வது. சபை என்பது ஒருவருக்கொருவர் நாம் கிறிஸ்துவைப் பகிர்வது அல்லது கிறிஸ்துவைப் பொதுவாக்குவது. நம்முடைய எல்லா இடைப்பாடுகள், எல்லாக் கொடுக்கல் வாங்கல்களில், எல்லாப் போக்குவரத்துக்களிலே நாம் கிறிஸ்துவைப் பகிர்கிறோம்.
முதல் இரண்டு குறிப்புக்களிலே சொன்னோம். முதலாவது குறிப்பு, கிறிஸ்துவும் அமைப்பும், இரண்டாவது குறிப்பு ஆவியானவரும் சத்தியமும், மூன்றாவது குறிப்பு சபையாகிய நிறுவனம்.
ஏன் நாம் சபையாக வாழ்கின்றோம் என்றால் தனியாக, ஒரு தீவாக அல்லது ஒரு குகையிலே வாழும்போது நாம் கிறிஸ்துவை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ள முடியாது. கிறிஸ்துவை நாம் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளும்போது மட்டுமே நாம் பெரிய அளவிலே கிறிஸ்துவைக் காணமுடியும், வாழ முடியும், அவர் நமக்குள்ளே உருவாக்கப்பட முடியும். யோவான் 13:35இல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.” நாம் தேவனுடைய மக்கள் என்று இந்த உலகம் எப்படி அறிந்துகொள்ளும்? நான் எதிர்மறையாகப் பல காரியங்களைச் சொல்லலாம். நம்முடைய சபையின் பெயரை வைத்து அறிந்துகொள்வார்களா? நம்முடைய உபதேசங்களைவைத்து அறிந்துகொள்வார்களா? நம்முடைய பழக்கவழக்கங்களைவைத்து அறிந்துகொள்வார்களா? தேவனுடைய மக்களாகிய நாம் ஒருவருக்கொருவர் எப்படி அன்புக்கூர்ந்து வாழ்கிறோம் என்பதைவைத்து இந்த உலகம் அறிந்துகொள்ளும். “நாம் இயேசு கிறிஸ்துவின் சீடர்களா இல்லையா?” என்று வெளிப்படுத்தின விசேஷம் 2:4, 5இல் எபேசுவில் உள்ள சபைக்குக் கூறும்போது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, “ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு. ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்,” என்று அளவுகோல் அன்பு என்று சொல்லுகிறார். “ஆதி அன்பு என்பது அவர்கள் தேவனிடத்தில் எப்படி அன்பு வைத்திருந்தார்கள் என்பதை மட்டும்தான் குறிக்கும்,” என்று சிலர் சொல்லவார்கள். அது அப்படியல்ல. அது ஆண்டவராகிய இயேசுவினிடத்தில் வைத்த அன்பையும் குறிக்கும், நாம் ஒருவர்மேல் ஒருவர் வைத்திருக்கிற அன்பையும் குறிக்கும். ஆரம்ப நாட்களிலே தேவனுடைய மக்கள் ஒருவரோடொருவர் அன்பாய் இருப்பார்கள். ஐந்து வருடம், பத்து வருடம் எல்லாரும் சேர்ந்து வாழ்ந்தால் நம்முடைய குறைபாடெல்லாம் வெளிவந்து விடும். அப்போது நாம் ஒருவர்மேல் ஒருவர் அன்புகூர முடியுமா என்பதுதான் கேள்வி. புதிதாக இருக்கும்போது நாம் அன்புகூருவோம். ஐந்து வருடம் என்னோடு நீங்கள் பழகினால் என்னுடைய குறைபாடுகள், என்னுடைய பலவீனங்கள், அம்பலமாகிவிடும். அதன்பிறகு நாம் ஒருவரோடொருவர் அன்புகூர்ந்து, உண்மையாகவே நாம் தேவனுடைய ஒரு குடும்பமாக வாழ முடியுமா என்பதுதான் அது சபையா, நிறுவனமா என்பதைத் தீர்மானிக்கிறது. பத்து வருடங்கள் கழித்து நாம் கூட்டாக வாழவேண்டும் என்றால், சபையை நிறுவனமாக்கினால் நாம் கூட்டாக வாழலாம். “நிறுவனத்திலே இவர் தலைவர், இவர்கள் உபதலைவர்கள், இது நிறுவனத்தினுடைய சட்டமைப்பு, Constitution, இதை மீறுகிறவர்கள் நன்மையைப் பெற மாட்டார்கள், இதற்கு ஒத்து வருகின்றவர்கள் நன்மையைப் பெறுவார்கள்,” என்றால் அது எல்லாரையும் ஒன்றாகக் காத்துக்கொள்ளுமா? காத்துக்கொள்ளும். நிறுவனம் இல்லாமல் தேவனுடைய மக்கள் பகிர்ந்துகொண்டு வாழமுடியுமா என்பது ஒரு சவால்; ஆனால் முடியும். ### 3.3 கிறிஸ்துவின் பிரசன்னம் மூன்றாவது குறிப்பு கிறிஸ்துவின் பிரசன்னம். எசேக்கியேல் கடைசி அதிகாரம் கடைசி வசனம். 48ம் அதிகாரம் கடைசி வசனம் கூறுகிறது. “அந்நாள்முதல் நகரம் யேகோவா ஷம்மா என்னும் பெயர்பெறும்.” அந்த நகரத்திலே தேவனுடைய பிரசன்னம் இருக்கும். அது யோகோவா ஷம்மா என்று வழங்கப்படும். 1கொரிந்தியர் 14:24, 25. இந்த வாக்கியங்கள் என்ன சொல்கிறது என்றால் உங்களுடைய சபையும், உங்களுடைய கூடுகைகளும் உண்மையிலேயே சபையா என்பதை எது வகையறுக்கிறது என்றால் உங்களிடையே வருகின்ற கல்லாதவர்கள் அல்லது புதியவர்களுடைய இருதயத்தின் யோசனைகள் வெளியரங்கமாகும். உண்மையாகவே தேவன் உங்கள் நடுவிலே இருக்கிறார் என்று சொல்லி, அவர்கள் முகங்குப்புற விழுந்து, தேவனைப் பணிந்துகொள்வார்கள். “அவிசுவாசியொருவன் அல்லது கல்லாதவனொருவன், உள்ளே பிரவேசித்தால், அவன் எல்லாராலும் உணர்த்துவிக்கப்பட்டும், எல்லாராலும் நிதானிக்கப்பட்டும் இருப்பான்.. அவனுடைய இருதயத்தின் அந்தரங்கங்களும் வெளியரங்கமாகும்; அவன்முகங்குப்புற விழுந்து, தேவனைப்பணிந்துகொண்டு, தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறாரென்று அறிக்கையிடுவான்.” அதுதான் சபையினுடைய வரையறை. சபையினுடைய இலட்சணம் என்றுகூடச் சொல்லலாம். நம்மிடையே வருகின்றவர்கள், நம்மிடையே தொடர்புகொள்கின்றவர்கள் ஏதோவொருவிதத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினுடைய பிரசன்னத்தைக் காணவேண்டும். நாம் பேசுகின்றோம், தீர்க்கத்தரிசனம் பேசுகின்றோம். தீர்க்கத்தரிசனம் என்றால், “மகனே நீ கலங்காதே, உன்னுடைய இருதயத்திலே ஒரு கவலையிருக்கிறது. இந்த வாரத்திலே கர்த்தர் அந்தக் கவலையைத் தீர்ப்பார்,” என்று சிலர் வரப்போகிற காரியத்தை உரைப்பார்கள். சிலர் ஒரு புத்தகத்திலிருந்துப் படித்து, “இதுதான் தீர்க்கத்தரிசனம்,” என்று சொல்வார்கள். இரண்டுமே தீர்க்கத்தரிசனம் இல்லை. கல்லாதவர் ஒருவன், புதியவன் ஒருவன் வரும்போது இந்த இடத்திலே தேவன் இருக்கிறார் என்று அவன் சொல்ல வேண்டும்.
மூன்றாவது குறிப்பிலே ஒரு போலியைச் சொல்லுகிறேன். அந்த 1 சாமுவேல் 4ஆம் அதிகாரத்திலே இஸ்ரயேல் மக்கள் தோற்றுப்போனது மட்டுமல்ல, அவர்களுடைய உடன்படிக்கைப் பெட்டியை பெலிஸ்தர்கள் பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள். கொஞ்ச நாட்கள் கழித்துத் திருப்பிக் கொடுத்தார்கள். ஆனால் அந்தப் பெட்டி சீலோவிலே இருந்த கர்த்தருடையக் கூடாரத்திற்குப் போகவில்லை. ஒரு வீட்டிலேயே தங்கிவிட்டது. கூடாரம் சீலோவிலே இருந்தது. கூடாரத்திலே மக்கள் தொடர்ந்து பலியிட்டுக் கொண்டிருந்தார்கள், வழிபட்டுக்கொண்டிருந்தார்கள். அது நம்முடைய பழக்க வழக்கம். உடன்படிக்கைப் பெட்டியிருந்தால்தான் அதற்குப் பெயர் கர்த்தருடைய கூடாரம். ஆனால் உடன்படிக்கைப் பெட்டி இல்லாவிட்டாலும்கூட, நம்முடைய பழக்கவழக்கத்தின் காரணமாக, நாம் அதைத் தொடர்ந்து செய்துகொண்டிருப்போம்.
நான் ஒரு ரோமன் கத்தோலிக்கனாக இருந்து ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டவன். நான் இயேசுவை விசுவாசிக்காத நாட்களிலும்கூட ஞாயிற்றுக்கிழமைகள் என்றால் அந்தக் கோயிலுக்குப் போகவேண்டும். பூசைக்குப் போகவேண்டும். தாமதமாகப் போனாலும் சரி, உள்ளே போனாலும் சரி, அந்தப் பூசைக்குப் போகவேண்டும். காரணம் என்ன?, அது நம்முடைய சீலோ. அதிலே உண்மை இருந்தாலும் சரி, உண்மையில்லாவிட்டாலும் சரி, உயிர்த்துடிப்பு இருந்தாலும் சரி, உயிர்த்துடிப்பு இல்லாவிட்டாலும் சரி அது நம்முடைய பழக்க வழக்கம். அதை யாராவதுத் தொட்டுவிட்டால் போதும், நாம் சிலிர்த்து எழுந்து விடுவோம். அங்கு உடன்படிக்கைப் பெட்டிதான் இல்லையே? எதற்காக நீ அந்தக் கூடாரத்திற்குப் போய் வழிபடுகிறாய்?. அது எனக்குத் தெரியாது, ஞாயிற்றுக்கிழமையானால் அல்லது இது என்னுடைய முன்னோர்கள், என்னுடைய பெற்றோர்கள் வழிபட்டு வந்த கூடாரம். அதனால் அது வெற்றுக்கூடாரமாக இருந்தாலும் சரி அல்லது பெட்டி இருக்கிற கூடாரமாக இருந்தாலும் சரி நாங்கள் அங்கு போய் வழிபட்டே ஆவோம். ஆகவே, இது ஒரு போலியாக மாறிவிடும்.
நான்காவதும் கடைசியாக, ஊழியமும் தொழிலும். தேவனுடைய மக்கள் ஊழியம் என்பதை ஒரு தொழில்முறைப்படுத்தி, Professional ஆகச் செய்கின்றார்கள். பாடுவதற்கு professional singers, தேவனுடைய வார்த்தையைப் பேசுவதற்கு Professional Speakers. அதற்குப் பெயர் seekers friendly Churches. அவர்கள் பேசும்போது அல்லது அவர்கள் பாடும்போது அந்த Auditorium full ஆக இருட்டாக இருக்கிறது. இவர்கள்மேல் மட்டும் ஒளிவெள்ளம் விழுகிறது. எழும்பூரில் ஓர் ஊழியக்காரர் இருக்கிறாராம். அவரைத் தனியாக சந்திக்கப்போகும்போது அவருடைய அறையில் இருக்கும் விளக்கு ஒளி அவர்மேல் மட்டும்தான் விழுமாம். முந்தைய காலத்திலே வங்கிக்குப் போகும்போது அந்த banker உயர்ந்த நாற்காலியில் உட்கார்ந்து இருப்பாராம். கடன் வாங்க வந்திருப்பவர் கீழே ஒரு நாற்காலியில் இருப்பாராம். கடன் கொடுப்பவர் மேலேயிருப்பார். கடன் வாங்குபவர் கீழே இருப்பார். இந்த அமைப்பு அங்கு வந்திருக்கிறவனுக்கு எப்படிப்பட்ட உணர்வை ஏற்படுத்திவிடும். “நான் தாழ்ந்தவன், மேலேயிருக்கிறவர் உயர்ந்தவர்.” மக்கள் அதை விரும்புகிறார்கள். அவர்கள் பணத்தைக் கையாளுகிற விதம், கூட்டத்தைக் கையாளுகிற விதம் It is Completely Professional. இதைக்குறித்து நான் நன்மையோ தீமையோ சொல்லவில்லை. நான் இந்த வழியில் நடப்பதில்லை. இது எவ்வளவு பெரிய வெற்றியுள்ள ஊழியம் பாருங்கள்.
இரண்டே குறிப்புக்களில் சொல்லுகிறேன். முதலாவது சிலுவை உயிர்த்தெழுதல்மூலமாக விளைவதே ஊழியம், இரண்டாவது கிறிஸ்துவைப் பரிமாறுவதே ஊழியம். இந்த உலகத்திலே தேவனுடைய மக்களாக இருந்தாலும், தேவனற்ற மக்களாக இருந்தாலும் சரி, கிறிஸ்து அவர்களுடைய வாழ்க்கையிலே இல்லாததால் அல்லது கிறிஸ்து அவர்களுடைய வாழ்க்கையிலே குறைவுபடுவதால், வாழ்க்கையிலே பல சிக்கல்கள், பல பிரச்சினைகள், பல தாறுமாறுகள், இருள், மரணம் சூழ்ந்திருக்கிறது. தேவனற்ற மக்களுக்கும் சரி, தேவனுடைய மக்களுக்கும்கூட சரி. தேவனற்ற மக்களுக்குக் கிறிஸ்து இல்லை. தேவனுடைய மக்களுக்கு கிறிஸ்து இருக்க வேண்டிய இடத்திலே இல்லை. அவருடைய மைய, முதன்மை, தலை என்கிற இடத்திற்கு அவர்கள் அவரை விடுவதில்லை. கிறிஸ்துவைத்தவிர பல்வேறு கூடாரங்கள் உள்ளன. ஆனால், “எங்களிடத்திலே என்ன குறைகள் உண்டு? கிறிஸ்துவுக்கும் ஒரு கூடாரம் இருக்கிறதே!” என்று அவர்கள் சொல்கிறார்கள். ஊழியம் என்பது கிறிஸ்து இல்லாத, கிறிஸ்து குறைவுபடுகிற ஒரு மனிதனுடைய வாழ்க்கைக்குள் கிறிஸ்துவைக் கொண்டுசென்று அந்த மனிதனுடைய வாழ்க்கையைச் செப்பனிடுவது, சீர்படுத்துவது, ஆசீர்வதிப்பது. அதுதான் ஊழியம்.
நான் கற்றுக்கொண்டது அதற்கு நல்ல உதாரணம், ஆதியாகமத்திலே மெல்கிசேதேக் என்கின்ற கதாபாத்திரம். போர்க்களத்திலிருந்து போரிட்டு, சோர்ந்து, களைத்து வருகின்ற ஆபிரகாமை அவன் வழியிலே சந்தித்து, அப்பமும், திராட்சை ரசமும் கொடுத்து, “வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தராலே நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்,” என்று அவனை ஆசீர்வதிக்கிறான். ஆசீர்வதித்துவிட்டு அவனை, ஆற்றிவிட்டு அவன் அந்த இடத்திலிருந்து மறைந்து போகிறான். அவன் தோன்றினான், ஆசீர்வதித்தான், மறைந்தான். வெறுமனே தோன்றுவதும் மறைவதும் அல்ல ஊழியம். தோன்றி ஆசீர்வதித்துவிட்டு மறைய வேண்டும். ஆசீர்வதிப்பதற்கு நம்மிடத்தில் ஒன்றிருக்க வேண்டும். மற்றவர்களை ஆசீர்வதிப்பதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை என்றால் ஊழியம் செய்வதற்கு ஒன்றுமில்லை. எப்படி இப்படி கிறிஸ்துவைப் பரிமாறுவது சாத்தியம். பாடுவதோ, பேசுவதோ அல்லது ஜெபமோ ஆயிரம் தடவை ஜெபித்தால் ஒரு பத்து வசனங்களைக் கோர்த்து ஜெபிப்பது மிகவும் சர்வசாதரணமாக, சரளமாக வந்துவிடும். சில பாஸ்டர்கள் ஜெபிப்பதை நான் கேட்டிருக்கிறேன். “ஆண்டவரே, வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்பாழ்களை முறித்து ஒளிப்பிடங்களிலிருக்கிற புதையல்களையும், அந்தகாரத்திலிருக்கிற பொக்கிஷங்களையும் தருவேன் என்று வாக்குறுதி அளித்தீரே, நீர் செய்வீராக, அப்பத்தையும், தண்ணீரையும் ஆசீர்வதிப்பேன், வியாதியை உன்னிலிருந்து நீக்குவேன், கர்ப்பம் விழுகிறதும், மலடும் உன்னுடய தேசத்திலிருப்பதில்லை என்று சொன்னீரே! ஆசீர்வதிப்பீராக” என்று ஒரு பத்து வசனங்களை அடுக்கு மொழியாக நாம் அடுக்கி, பேசினால் கேட்பவர்கள் ரொம்ப பிரமித்து விடுவார்கள். கொஞ்சம் ஆறுதலாகக்கூட இருக்கும். அது மட்டுமல்ல, சில சமயங்களில் கர்த்தர் ஆசீர்வதிக்கவும் செய்வார். ஜெபித்த ஜெபத்தினால் அல்ல, அந்த நிர்ப்பந்தமான மனிதனுடைய நிலையைக் கண்டு இரங்கி கர்த்தர் ஆசீர்வதிப்பார். ஆனால், நான் ஜெபித்த ஜெபத்தினால்தான் கர்த்தர் ஆசீர்வதித்தார் என்று நான் மார்தட்டிக்கொள்கிறேன்.
கடைசியாக ஒரேவொரு உதாரணத்தைச் சொல்கிறேன். எண்ணாகமம் 17:8. யார் கர்த்தருடைய ஆசாரியன் என்பதைக்குறித்த ஒரு சச்சரவு இஸ்ரயேல் கோத்திரத்திலே வருகிறது. “நீ இஸ்ரவேல் புத்திரரோடே பேசி, அவர்கள் பிதாக்களின் வம்சங்களாகிய ஒவ்வொரு வம்சத்தினுடைய பிரபுவினிடத்தில், ஒவ்வொரு கோலாகப் பன்னிரண்டு கோலை வாங்கி, அவனவன் கோலில் அவனவன் பேரை எழுதுவாயாக. லேவியினுடைய கோலின்மேல் ஆரோனின் பேரை எழுதக்கடவாய்; அவர்களுடைய பிதாக்களின் ஒவ்வொரு வம்சத்தலைவனுக்காகவும் ஒவ்வொரு கோல் இருக்கவேண்டும். அவைகளை ஆசரிப்புக் கூடாரத்திலே நான் உங்களைச் சந்திக்கும் ஸ்தானமாகிய சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைக்கக்கடவாய். அப்பொழுது நான் தெரிந்துகொள்ளுகிறவனுடைய கோல் துளிர்க்கும்; இப்படி இஸ்ரவேல் புத்திரர் உங்களுக்கு விரோதமாய் முறுமுறுக்கிற அவர்கள் முறுமுறுப்பை என்னைவிட்டு ஒழியப்பண்ணுவேன் என்றார்.” ஒவ்வொரு கோத்திரத்திலும் ஒரு தலைவனை எடுத்து, கோத்திரத்தின் சார்பாக காய்ந்த ஒருகோல், ஒரு மரத்துண்டு, எடுத்து தேவனுடைய சமுகத்திலே இரவு வைக்க வேண்டும். காலையில் போய் நீ பார்க்க வேண்டும். யாருடைய காய்ந்துபோன கோல் துளிர்த்திருக்கிறதோ அவன்தான் நான் எனக்கு ஊழியம் செய்வதற்கு தெரிந்துகொண்ட ஆசாரியன் என்று. 12 கோல்களையும் வைத்தார்கள். லேவிக் கோத்திரத்து ஆரோனுடையக் கோல் மட்டும் துளிர்த்திருந்தது. எப்பொழுது நம்மிடத்தில் மற்றவர்களுக்குக் கொடுப்பதற்கு கிறிஸ்து இருப்பார் என்றால் நம் அனுபவ வாழ்க்கையில் சிலுவை உயிர்த்தெழுதலை அனுபவித்திருக்க வேண்டும். அனுபவித்திருக்க வேண்டும் என்றால் எப்போதோ வருடத்திற்கு ஒருமுறையல்ல, நம்முடைய வாழ்க்கை சிலுவை, உயிர்த்தெழுதலின் வாழ்க்கையாக இருக்க வேண்டும். எல்லாச் சூழ்நிலைகளிலும் தேவன் அனுமதிக்கின்ற சிலுவையை மனமார ஏற்றுக்கொண்டு, உயிர்த்தெழுதலால் வாழ முடியும் என்ற விசுவாசத்தோடு நாம் வாழவேண்டும். அப்போது நம்முடைய கோல்கள் துளிர்த்திருக்கும், பிறருக்குக் கொடுப்பதற்கென்று நம்மிடத்தில் கிறிஸ்து இருப்பார். இது ஒரு தொழில் அல்ல. நான் இத்துடன் என்னுடைய இந்த வார்த்தைகளை முடித்துக்கொள்கிறேன்.