Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

ஆசாரியனுடைய பணிவிடை

Transcribed from a message spoken in February 2014 in Chennai

By Milton Rajendram

“நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினார்” (வெளி. 1:6). “நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரிகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்” (1 பேதுரு 2:9).

ஆவிக்குரிய பயணம்

நம் வாழ்க்கை ஓர் ஆவிக்குரிய பயணம். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நம் ஆவிக்குரிய பயணத்தின் தொடக்கமாக இருக்கிறார். அவரே நம் ஆவிக்குரிய பயணத்தின் வழியாக இருக்கிறார். நம் பயணத்தின் இலக்கும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே. ஒரு பக்கம், நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பெற்றிருக்கிறோம். இன்னொரு பக்கம், இந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முற்றுமுடிய பெற வேண்டும், சம்பாதிக்க வேண்டும், ஆதாயம்பண்ண வேண்டும் என்பதற்காக நாம் ஆசையாய் முன்னோக்கிச் செல்கிறோம்.

ஒவ்வொரு நாளும் நாம் மனிதத் திறமைக்கும், மனித அறிவுக்கும், மனிதத் திராணிக்கும் அப்பாற்பட்ட பல்வேறு சூழ்நிலைகள் வழியாகக் கடந்துபோகிறோம். ஆனால், அந்த எல்லாச் சூழ்நிலைகளுக்கும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து போதுமானவராயிருக்கிறார். சிலர், விசுவாசத்தினால், சாகக்கொடுத்த தங்கள் பிள்ளைகளை உயிரோடெழுந்திருக்கப்பெற்றார்கள். வேறுசிலர், விசுவாசத்தினால், அதைவிட சிறப்பான, மேன்மையான உயிர்த்தெழுதலை அடையும்படிக்கு விடுதலைபெறச் சம்மதியாமல், துன்பப்படுவதற்குத் தங்களை ஒப்புக்கொடுத்தார்கள் (எபி. 11:35).

இந்த ஆவிக்குரிய பயணத்திலே நாம் முன்னோ பின்னோ செல்கிறோம். ஒரு பக்கம், இது நம் தனிப் பயணம்; இன்னொரு பக்கம், இது கூட்டான பயணம். நாம் நம் தனிப் பயணத்தின் வாயிலாகக் கற்றுக்கொள்கிறோம்; கூட்டான பயணத்தின் வாயிலாகவும் கற்றுக்கொள்கிறோம். நாம் ஒருவரோடொருவர் சேர்ந்து பயணம் செய்வதால் நாம் மற்றவர்களிடமிருந்தும் கற்றுக்கொள்கிறோம்.

கிறிஸ்துவே இலக்கு

நம் விசுவாசத்தைத் தொடங்குகிறவரும் பூரணப்படுத்துகிறவருமாகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவாகிய நம் இலக்கை நாம் முற்றுமுடிய அடைய வேண்டும் (எபி. 12:1). நாம் அடைந்தாயிற்று என்று எண்ணுகிறதில்லை (பிலி. 3:12). அடைய வேண்டும் என்கிற பேரார்வத்தோடும், வாஞ்சையோடும், கதறுதலோடும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கி நாம் நடக்கிறோம், வாழ்கிறோம். நம் வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளையும் அதற்கேற்றாற்போல் அமைத்துக்கொள்ளவும், சரிசெய்துகொள்ளவும், ஒப்புரவாக்கிக்கொள்ளவும் நாம் முயற்சி செய்கிறோம். நாம் இதைப் பயத்தோடும், நடுக்கத்தோடும் செய்கிறோம்.

நாம் கிறிஸ்துவால் நிறைந்த மக்களாக இருக்க வேண்டும். உண்மையிலேயே, கிறிஸ்துவை நாம் ஒரேவொரு நாளில் ஆதாயம்பண்ணிக்கொள்வதில்லை. கிறிஸ்துவை 24 மணி நேரமும் சிறிய பெரிய எல்லாக் காரியங்களிலும் நம் சொற்களிலும், செயல்களிலும், நடை உடை பாவனைகளிலும், மனப்பாங்குகளிலும் ஆதாயம்பண்ணுகிறோம். ஒரு குறிப்பிட்ட சம்பவம் நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதில் நம் மனப்பாங்கு என்ன? இவை எல்லாவற்றின்மூலமாகவும் நாம் கிறிஸ்துவைச் சம்பாதிக்கிறோம். கிறிஸ்து நமக்குள் பெருகுகிறார். அப்படிப்பட்ட கிறிஸ்துவைக்கொண்டுதான் நம் கூட்டுவாழ்க்கை கட்டியெழுப்பப்பட முடியும்.

தரிசனம்

நமக்கு ஒரு தரிசனம் உண்டு. இந்த உலகம் என்று ஒன்று இருக்கும்வரை, இந்த யுகம் என்று ஒன்று இருக்கும்வரை, நாம் விட்டுச்செல்கிற கிறிஸ்து அங்கு இருப்பார். “என் சம்பத்தை நான் சேர்க்கும் நாளிலே அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். தேவனுக்கு ஊழியஞ் செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதிருக்கிறவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைத் திரும்பவும் காண்பீர்கள்” (மல்கியா 3:18). நாம் இன்றைக்குப் பரிமாறுகிற கிறிஸ்து பல தலைமுறைகள் கழித்தும் பரவி, விரிந்து, வியாபித்திருக்கும்போது அதிலே நமக்கு ஒரு பங்கு இருக்கும்.

நம் தலையாய பொறுப்பு–ஆசாரிய சேவை

ஒரு பக்கம், நம் வாழ்க்கையில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை சம்பாதித்துக்கொண்டிருக்கிறோம். உண்மையாகவே நம் வாழ்க்கையின் பெரிய சம்பாத்தியம், சொத்து, பொக்கிஷம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே.

இந்த இயேசுகிறிஸ்துவை மனிதர்கள் எல்லாரிடத்திலும் நாம் கொண்டுபோக வேண்டும். தேவன் தம்மை நேரடியாக மனிதர்களிடத்தில் கொண்டுபோவதில்லை; மற்ற மனிதர்கள்மூலமாகவே தேவன் தம்மை மனிதர்களிடத்தில் கொண்டுபோகிறார். இது ஒரு மாறாத கோட்பாடு. தேவனுடைய யுக்தி, உபாயம், எந்திரம் மனிதனே. தேவனிடத்தில் வேறு எந்த யுக்தியோ, உபாயமோ, எந்திரமோ, தந்திரமோ, மந்திரமோ இல்லை. தேவனுடைய எந்திரம், மந்திரம், தந்திரம் எல்லாம் மனிதனே. எனவே, தேவனுடைய மக்களாகிய நாம் மற்ற மனிதர்களிடத்தில் தேவனைக் கொண்டுபோகிற மக்களாக மாற வேண்டும். நம் வாழ்க்கையை மட்டும் நாம் பார்த்துக்கொண்டிருந்தால் தேவனை மனிதர்களிடத்தில் கொண்டுபோவது சாத்தியம் இல்லை. நம்மைச் சுற்றி நம்மோடு தொடர்புள்ள மக்களைக்குறித்து நாம் அக்கறையும், கரிசனையும் உள்ளவர்களாக இருக்க வேண்டும். நம் இருதயம் விசாலமாக வேண்டும். நம் இருதயத்தில் அதற்கு இடம் இருக்க வேண்டும்.

இரண்டு குறிப்பான காரியங்களைச் சொல்ல விரும்புகிறேன். பழைய எற்பாட்டின்படியும் சரி, புதிய ஏற்பாட்டின்படியும் சரி, ஆசாரியனுடைய வேலை என்னவென்றால் தேவனும் மனிதனும் சந்திப்பதற்கு அவன் ஒரு தளமாக மாறுகிறான். பழைய ஏற்பாட்டில், தேவனை மனிதர்களிடத்தில் கொண்டுவருவதும், மனிதனைத் தேவனிடத்தில் கொண்டுபோவதும்தான் ஆசாரியனுடைய வேலை. இது மிகவும் ஆழமான கருத்து.

தேவனற்ற வாழ்க்கையின் நிலை

“தேவனை ஏன் மனிதனிடத்தில் கொண்டுபோக வேண்டும்? அது மிகவும் அவசியமா?” என்று கேட்டால், ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் தேவன் வராவிட்டால் அவனுடைய வாழ்க்கை ஒரு வெற்று வாழ்க்கையாகும். அவனுடைய வாழ்க்கை வெறுமையாக, சூன்யமாக, இல்பொருளாக முடிந்து விடும். தேவனுக்கு முன்பாக அதில் எந்த மதிப்பும், அருமையான எதுவும், தேவனுக்கு மகிழ்ச்சியையும், களிப்பையும், உவகையையும் தரக்கூடிய எதுவும் இல்லை.

“அதில் தேவனுக்குத்தானே மகிழ்ச்சியும், களிப்பும் இருக்காது? இந்த வாழ்க்கை வாழ்ந்த மனிதனுக்கு மகிழ்;ச்சியும், களிப்பும், உவகையும், இன்பமும் இருக்கும் இல்லையா?” என்றால் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் தேவனுக்கு மகிழ்ச்சியும், களிப்பும், ஆனந்தமும், பேரானந்தமும் இல்லையென்றால் அந்த மனிதனுக்கும் இதில் ஒன்றுமே இருக்காது.

சாலொமோன் வாழ்க்கையின் எல்லைக்கு வந்தவன். அவன் இந்த வாழ்க்கையின் எல்லையை விவரிக்கப் பயன்படுத்துகிற ஒரேவொரு வார்த்தை “மாயை, மாயை, மாயை.” அந்த வெறுமை அவனுடைய இருதயத்தைக் கவ்விப்பிடிக்கிறது. அவன் தன் வாழ்க்கையின் எல்லைக்கு வரும்போது தன் வாழ்க்கையில் தான் இதுவரை பெற்று அனுபவித்த எல்லா இன்பங்களும் ஒன்றும் இல்லாததுபோல் ஆகிவிடுகிறது. தனக்குக் காத்திருப்பது வெறுமையும், சூன்யமும், இல்பொருளும், மாயையும் மட்டுமே என்று அவனுக்குத் தெரிகிறது.

எனவே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நாம் ஆதாயம்பண்ணிக்கொள்வது மட்டுமல்ல, அவரை மற்ற மனிதர்களுக்கு வழங்குவதும் நம் வாழ்க்கையின் இலக்காக இருக்க வேண்டும். தேவனை மற்றவர்களுக்குப் பரிமாறுவது, கொண்டுபோவது.

தேவன் இல்லாத ஒரு மனிதனுடைய வாழ்க்கை வெறுமையாக முடிவடையும். “வெறுமையைத்தவிர தனக்காகக் காத்திருப்பது, வைக்கப்பட்டிருப்பது வேறொன்றும் இல்லை,” என்ற உணர்வு வரும்போது அவனுடைய இருதயம் செத்துவிடும். அதுபோல தேவனுடைய இருதயமும் துன்புறும். “இந்த மனிதன் எவ்வளவு அருமையான பாத்திரம்! அருமையான படைப்பு! இவன்மூலமாக எவ்வளவு கிறிஸ்துவைப் பெருக்கியிருக்கலாம்! எவ்வளவு கிறிஸ்து இவன்மூலமாகப் பாய்ந்தோடியிருக்கலாம்! இவனுக்குள்ளும், இவன்மூலமாகவும் எவ்வளவு கிறிஸ்து உருவாகியிருக்கலாம்! அவ்வளவும் வீணானதே!” என்பதைப் பார்க்கும்போது தேவனுடைய இருதயம் துக்கப்படும்.

தேவனை மனிதர்களிடத்தில் கொண்டுபோவதற்கும். மனிதர்களைத் தேவனிடத்தில் கொண்டுவருவதற்கும் பல சமயங்களிலே தேவன் மனிதனைத்தான் கருவியாக, வாய்க்காலாக, பயன்படுத்துகிறார்.

தேவனின் மூன்று படிகள்

தேவன் மூன்று படிகளில் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் வருகிறார். முதல்படி தேவன் அந்த மனிதனுடைய வாழ்க்கையில் குறுக்கும் நெடுக்குமாக நடக்கிறார். நாம் போகின்ற வருகின்ற எல்லா வழிகளிலும் தேவன் நமக்காகக் காத்திருந்தார். வாழ்க்கையின் பல்வேறு சந்திப்புகளில் காத்திருந்தார். ஆனால், நாமோ அவரைக் கண்டும் காணாதவர்கள்போல் சென்றோம். ஒன்று நாம் நம் கண்களை மூடிக்கொள்வோம் அல்லது காதுகளைத் திருப்பிக்கொள்வோம் அல்லது இருதயத்தை அடைத்துக்கொள்வோம். ஒரு தாய் தன் பிள்ளைகளின் துணியைச் சுண்டி இழுப்பதுபோல், தேவன் நம்மைப் பிடித்து இலேசாக இழுப்பதுபோல் இருக்கும். ஆனால் நாமோ யாரும் நம்மை இழுக்கவில்லை அல்லது அது ஒன்றும் இல்லை என்று போய்விடுவோம்.

இரண்டாவது படி, அந்த மனிதனுடைய இருதயத்தில் ஒரு பதில், ஒரு மறுமொழி, மாறுத்தரம், வராதா என்று தேவன் காத்திருக்கிறார். அந்த மனிதனுடைய இருதயத்தில் ஒரு பதில் வந்தவுடனே தேவன் மூன்றாவது படியை எடுக்கிறார். அப்போதுதான் தேவன் அந்த மனிதனுடைய வாழ்க்கைக்குள் வந்து கிரியைசெய்கிறார்.

முதல்படி, தேவன் எல்லா மனிதர்களுக்கும் வாய்ப்பு கொடுக்காமல் விடுவதே இல்லை. “தேவன் எனக்கு வாய்ப்புத் தரவில்லை,” என்று ஒரு மனிதனும் தேவன்மேல் குற்றஞ்சாட்ட முடியாது. அமேஸான் காடுகளில் வாழ்ந்துகொண்டிருக்கிற, நாம் காட்டுமிராண்டி என்று கருதுகிற, மனிதனுக்கும் தேவன் வாய்ப்பு கொடுக்கிறார். தேவன் இலேசாக இழுப்பார், தொடுவார். ஒரு மீனைத் தூண்டில் போட்டுப் பிடிப்பதுபோல், எல்லா மனிதர்களையும் தேவன் கொஞ்சம் இழுத்துப் பார்க்கிறார். ஒரு முறை இருமுறை அல்ல, பலமுறைகள் அப்படித் தூண்டிலை இழுப்பதுபோல் தேவன் இழுக்கிறார்.

இளைய மகன் பிதாவினிடத்தில் திரும்பி வருவது மூன்று படிகளில் நடக்கிறது. முதலாவது படி, அந்தப் பிதாவின் அன்பின் உள்ளம் ஒவ்வொரு நாளும் தன் மகனுக்காக ஏங்குகிறது. தன் மகனின் வரவை நோக்கி அது அந்த வீதிகளைப் பார்க்கிறது.

ஒருநாள் அந்த மகனுக்குத் தான் இருந்த தேசத்திலே பிதாவின் வீட்டைப்பற்றிய எண்ணம் உதித்தது. அது இரண்டாவது படி. “நான் என் தகப்பனிடத்திற்குப் போவேன்.” முதல் படி, அந்தத் தகப்பன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது ஏதோ ஒரு மண்டலத்தில் அந்த மகனுடைய இருதயத்தில் போய் எட்டிற்று. அந்தத் தகப்பனுடைய இருதயத்தின் அன்பின் எதிர்பார்ப்பு, அன்பின் நோக்கம், பொறுமையின் நோக்கம், மன்னிப்பின் நோக்கம், அந்த மகனுடைய இருதயத்தில் ஏதோ ஒரு மண்டலத்திலே போய் எட்டிற்று. இந்த முதல் படியின் விளைவுதான் இரண்டாவது படி. அவனுடைய இருதயத்தில் ஒரு மாறுத்தரம், ஒரு மறுமொழி, ஒரு பிரதியுத்தரம் வந்தது. மூன்றாவது படி, அவன் நடந்து வருகிறான். அவனுடைய தந்தை ஓடிப்போய் அவனைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு சேர்த்துக்கொள்கிறான். எப்போதுமே முதலும் பிதாவின் படிதான், கடைசியும் பிதாவின் படிதான். இது நம் வாழ்க்கையில் நடைபெற்றது. இப்போது நம்மைச் சுற்றி இருக்கிற பல மனிதர்களின் வாழ்க்கையில் நடைபெற வேண்டும்.

இது ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் ஒருமுறை நடப்பதல்ல. இது ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நடைபெற வேண்டும். ஒருநாள் நம் மனதை ஆண்டவராக இயேசுகிறிஸ்துவினிடத்தில் திருப்பினோம். ஆனால், பல்வேறு காரியங்களில் நாம் அவருக்கு ஒத்தவர்கள் அல்ல. எனவே, தொடர்ந்து பல்வேறு காரியங்களிலே தேவன் நம் வாழ்க்கையில் நம்மை இழுக்கிறார். நம் இருதயத்திலே ஒரு மாறுத்தரம் வருகிறது. பின்பு அவர் அதை நம் வாழ்க்கையில் முழுமையாக நடப்பிக்கிறார். இது நம் வாழ்க்கையில் கடைசிவரை நடந்து கொண்டிருக்கிற ஒன்று.

ஆசாரியர்கள்

தேவன் இதை மனிதர்கள்மூலமாகச் செய்கிறார். நாமெல்லாரும் இதைக்குறித்து சாட்சி கொடுக்க முடியும். நம் இரட்சிப்பிலே அல்லது நம் வாழ்க்கையிலே ஆண்டவராகிய இயேசுவை நாம் ஒருபடி அதிகமாகப் பின்பற்றுவதற்கு ஏதோ ஒரு மனிதனை அவர் ஒரு பாத்திரமாகப் பயன்படுத்தியிருப்பார். இப்போது அது நம் வேலை. இப்போது தேவன் நம்மை அப்படிப்பட்ட பாத்திரங்களாக, வாய்க்கால்களாக, சரியான வார்த்தை ஆசாரியர்களாக, பயன்படுத்த விரும்புகிறார். நாமெல்லாரும் ஆசாரியர்கள் (வெளி. 1:6; 1 பேதுரு 2:9). தேவனுடைய மக்கள் எல்லாரும் ஆசாரியர்கள். ஆசாரியன் என்பதின் பொருள் என்னவென்றால் தேவன் ஒரு மனிதனைச் சந்திப்பதற்கு நம்மைப் பயன்படுத்த முடிய வேண்டும். ஒரு மனிதன் தேவனைச் சந்திப்பதற்கு நாம் ஒரு “சந்திக்கும் இடமாக” இருக்க வேண்டும். தேவனுடைய மக்களாகிய நாமெல்லாரும் தனிப்பட்ட விதத்திலும், கூட்டாகவும் அப்படி இருக்க வேண்டும்.

ஆனால், இன்றைக்கு பல்வேறு தருணங்களில், பரிசுத்த ஆவியானவர் நோவாவின் பேழையிலிருந்து எடுத்து விடப்பட்ட புறாவைப்போல கால்பதித்து இளைப்பாற இடம் இல்லாததால் மீண்டும் பேழைக்கே திரும்பிப் போய்விடுகிறார். ஒரு மனிதனைச் சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால், அவர் சந்திப்பிற்கு அவருக்குக் கால்பதிக்க ஒரு தளம் வேண்டும். அவருடைய தளம் நிலமோ, நிறுவனமோ அல்ல. தேவன் விரும்புகிற தளம் பரம தளம், நித்திய தளம், ஆவிக்குரிய தளம். கிறிஸ்துவுக்குரிய, நித்தியத்துக்குரிய, ஆவிக்குரிய, பரம தளம் இல்லையென்றால் மற்ற தளங்களால், இடங்களால், நிறுவனங்களால் தேவனுக்கு எந்தப் பயனும் இல்லை.

நிறுவனமோ, தேவாலயமோ, இணைய தளங்களோ மனிதன் தேவனைச் சந்திப்பதற்கு ஏற்ற தளமாக இல்லை. அது 46 ஆண்டுகளாக கட்டப்பட்ட தேவாலயமாக இருந்தாலும் சரி, புறம்பாக எவ்வளவு வசீகரமாக, கவர்ச்சிகரமாக இருந்தாலும் சரி. “இதில் எனக்கு எந்த ஈடுபாடும் இல்லை,” என்று தேவன் அதில் ஒரு பலகையைத் தொங்கவிட்டுவிடுவார்.

எனவே, நம் வாழ்க்கை தேவனும் மனிதனும் சந்திக்கிற இடமாக இருக்க வேண்டும். மிக முக்கியமாக அதற்கு ஒரு சேவை, ஒரு பணிவிடை, அவசியம். தேவன் ஒரு மனிதனைச் சந்திப்பதற்கு நாம் ஒரு தளமாக இருக்க வேண்டும்.

இரண்டு அற்றங்கள்

நாமெல்லாரும் நம் வாழ்க்கையைக் குறித்து மட்டும் கவலைப்பட்டுக்கொண்டிருந்தால் தேவனும் மனிதனும் சந்திக்கிற ஒரு தளமாக, ஒரு ஆசாரியனுடைய வேலையை நாம் செய்ய முடியாது. முதலாவது இதற்கு ஒரு பணிவிடை அவசியம்.

நாம் இரண்டு அற்றங்களுக்குப் போய்விடக்கூடாது. முதலாவது நாம் நம் மனைவி மக்களுக்கும், பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் ஆசாரியனாக இருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு ஊருக்கெல்லாம் ஆசாரியனாக மாறிவிடக்கூடாது. அவர்களுடைய வாழ்க்கையில் எவ்வளவோ போராட்டங்கள், நெருக்கங்கள், வருத்தங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு நற்செய்தியைக் கொண்டுபோவது நம் பொறுப்பு. அவர்களுக்கு நாம் தேவனைக் கொண்டுபோக வேண்டும். ஆனால், “என் குடும்பத்துக்கு மட்டும் நான் ஆசாரியனாக இருப்பேன்,” என்பது ஓர் அற்றம். “என் குடும்பத்தைப்பற்றி எனக்குக் கவலையில்லை. நான் ஊருக்கெல்லாம் ஆசாரியனாக இருப்பேன்,” என்பது இன்னொரு அற்றம். இரண்டுமே அற்றங்கள்தான்.

நம் இருதயத்தை விசாலமாக்கினோம் என்றால் தேவன் நம் பொறுப்புகளை அதிகரிப்பார். எந்த அளவுக்கு நாம் நம் இருதயத்தை விசாலமாக்குகிறோமோ அந்த அளவுக்குப் பொறுப்புகளைத் தருவதற்கு, பல மக்கள் தேவனைச் சந்திப்பதற்கு, தேவன் நம்மைப் பாத்திரமாக, தளமாகப் பயன்படுத்துவதற்கு விரும்புகிறார். “இவர்கள் தங்கள் படிப்பு, தங்கள் குடும்பம், தங்கள் வேலை ஆகியவைகளை மட்டும் பார்த்துக்கொள்வார்கள். இவைகளில் நாம் கிறிஸ்துவை வாழ்ந்தால் போதும் என்று சொல்வார்கள். உண்மையாகவே தேவன் இல்லாததால் பரிதாபமான வாழ்க்கை வாழ்கின்ற, நெருக்கத்திலும் போராட்டத்திலும் நம்பிக்கையற்று வாழ்கின்ற மக்களுக்கு இவர்களால் எந்தப் பயனும் இல்லை,” என்பது தேவனுக்குமுன்பாக நம்மைக்குறித்த குற்றச்சாட்டாக இருக்கக்கூடாது. மாறாக, “உண்மையாகவே இவர்களுடைய பலம் மிகவும் குறுகியதாக இருந்தபோதும், இவர்கள் தங்கள் இருதயத்தைத் திறந்தார்கள், இருதயத்தை விசாலமாக்கினார்கள்,” என்பது நம்மைக்குறித்த சாட்சியாக இருக்க வேண்டும்.

தேவனுடைய வழி

நம் இருதயத்தை நாம் விசாலமாக்க வேண்டும். “எனக்கே ஆயிரம் பிரச்சினைகள். இதில் என் இருதயத்தை நான் எப்படி விசாலமாக்க முடியும்?” என்று நினைக்கவோ, சொல்லவோ கூடாது. நம் பிரச்சினைகள் தீர்ந்தபிறகுதான் நம் இருதயத்தை விசாலமாக்க வேண்டும் என்றால் ஒருநாளும் நம் இருதயத்தை நாம் விசாலமாக்க முடியாது. நம் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தேவன் வைத்திருக்கிற ஒரு வழி ஒருவேளை நம் இருதயத்தை விசாலமாக்குவதாகத்தான் இருக்கலாம். இதற்கு யோபுவின் புத்தகம் கடைசி அதிகாரம் சாட்சி; “நானே வியாதியோடு இருக்கிறேன். நான் எப்படி என் நண்பர்களுக்காக ஜெபிப்பது?” ஆபிரகாமும் சாட்சி; “எனக்கே பிள்ளையில்லை. நான் எப்படி பிள்ளை இல்லாதவர்களுக்காக ஜெபிப்பது?” “நானே இப்படிப்பட்ட பலவீனமான பாத்திரம். பலவீனமான மற்றவர்களுக்கு நான் எப்படி ஜெபிக்க முடியும்?” என்றால் அது தேவனுடைய வழிகளாக இருக்கலாம்.

தேவனை ஒரு மனிதனிடத்தில் கொண்டு போவதென்றால் ஒரு போராட்டம், எதிர்ப்பு உண்டு. ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் தேவன் வந்தாலொழிய அவனுக்குத் தீர்வோ, விடையோ, பதிலோ, விடுதலையோ இல்லை என்கிற நிலைமையில் ஒரு மனிதன் இருக்கிறான். கோடாகோடி மக்கள் இந்த நிலைமையில் இருக்கிறார்கள். இவர்களுக்குத் தேவனைக் கொண்டுபோவது சுலபமான காரியம் அல்ல. இது பெரிய போராட்டம். தேவனுடைய மக்கள் போரிட வேண்டும் என்பதை நிரூபிப்பதற்காக எழுதப்பட்ட புத்தகம் யோசுவாவின் புத்தகம். தேவனுடைய மக்களுக்குப் போராட்டம் உண்டு என்று யோசுவாவின் புத்தகம் காண்பிக்கிறது.

இஸ்ரயேலின் முதல் இரண்டு கோத்திரங்களுக்கு யோர்தானுக்கு அப்புறத்தில் நிலத்தைப் பிரித்துக் கொடுத்தபிறகு, “யுத்தஞ் செய்யத்தக்கவர்களாகிய நீங்கள் எல்லாரும் இஸ்ரயேல் புத்திரரான உங்கள் சகோதரருக்கு முன்னே ஆயுதபாணிகளாக நடந்துபோங்கள். உங்கள் மனைவிகளும் உங்கள் பிள்ளைகளும் உங்கள் ஆடுமாடுகளும் மாத்திரம் உங்களுக்குக் கொடுத்த உங்கள் பட்டணங்களில் இருக்கட்டும். ஆனாலும், கர்த்தர் உங்களை இளைப்பாறப்பண்ணி, யோர்தானுக்கு அப்புறத்திலே உங்கள் தேவனாகிய கர்த்தர் கொடுக்கிற தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுமட்டும், நீங்கள் யுத்தம் செய்யவேண்டும்,”என்று மோசே கூறினார். இந்தப் போராட்டம் மனிதர்கள்மூலமாக, சூழ்நிலைகள்மூலமாக, நம் உடல்நலத்தின்மூலமாக வரலாம். ஆனால், இவை எல்லாவற்றிற்குப்பின்பும் நம் போராட்டம் “மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல; துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம்; உண்டு” (எபேசியர் 6:12). ஒரு மனிதனுக்குத் தேவனைக் கொண்டுபோக வேண்டும் என்றால் தேவனுடைய பகைவனாகிய சாத்தான் அவனுடைய எல்லா சேனைகளோடும் எதிர்த்து நிற்பான். ஒரு மனிதனுடைய வாழ்க்கைக்குள் கிறிஸ்து வருவதற்குப் போராட்டம் உண்டு.

செர்கியுபவுல் என்ற அதிபதி ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு ஆயத்தமாக இருந்தான். ஆனால் மாயவித்தைக்காரனாகிய எலிமா என்பவன் எதிர்த்துநின்றான். அப்போது பவுல் அவனைக் கடிந்துகொண்டார். உடனே அவன் பார்வை இழந்தான் (அப். 13:6-14).

போராட்டத்தில் வெற்றி

இந்தப் பெரிய போராட்டத்திலே நாம் வெற்றிபெறுவதற்குரிய ஆயுதம் அல்லது படைபலம் நம்மிடத்தில் இருக்கிறது. எப்படி வெற்றிபெற முடியும்? நாம் இரண்டு காரியங்களைச் செய்ய வேண்டும். தேவனை ஒரு மனிதனிடத்திற்கு கொண்டுபோக வேண்டும் என்றால் இன்னொரு மனிதன் அதற்காக ஜெபிக்க வேண்டும். ஒரு மனிதன் தேவனைச் சந்திக்கவேண்டும் என்றால் இன்னொரு மனிதன் தேவனுடைய வார்த்தையைத் தன் வாழ்க்கையின்மூலமாகவும், தன் வார்த்தையின்மூலமாகவும் அவனுக்குச் சொல்லவேண்டும். இந்த இரண்டும் இருக்குமென்றால் நாம் மனிதர்களுடைய வாழ்க்கையிலே இயேசுவைக் கொண்டுசெல்ல முடியும். அவர்கள் ஒரு தீர்வைப் பெறுவார்கள், ஒரு விடுதலையைப் பெறுவார்கள், ஒரு பதிலைப் பெறுவார்கள். தேவனை மனிதனிடம் கொண்டுபோக வேண்டும் என்றால் இன்னொரு மனிதன் அதற்காக ஜெபிக்க வேண்டும். அதுபோல ஒரு மனிதனைத் தேவனிடத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்றால் இன்னொரு மனிதன் தேவனுடைய வார்த்தையை அவனுக்குச் சொல்ல வேண்டும்.

அதனால்தான், “நாங்களோ ஜெபம் பண்ணுவதிலும் தேவ வசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம். நாங்கள் தேவ வசனத்தைப் போதியாமல் பந்திவிசாரணை செய்வது தகுதியல்ல,” (அப். 6:2-4) என்று பேதுரு சொல்லுகிறார். நாம் ஜெபிப்பதினால் தேவன் ஒரு மனிதனைத் தொடுகிறார். நாம் ஜெபிக்காவிட்டால் தேவன் அந்த மனிதனைத் தொடமுடியாது. தேவனுடைய மக்கள் ஜெபிக்காததால் தொடப்பட வேண்டிய பல மனிதர்கள் இன்னும் தொடப்படவில்லை.

இன்னொரு மனிதனுடைய வாழ்க்கையைப் பாதிக்கக்கூடிய வல்லமையைத் தேவன் நமக்குக் கொடுத்திருக்கிறார்; நேரடியாக இல்லை. எப்படி ஜீவன் குமாரனில் இருக்கிறதோ, அதுபோல அந்த வல்லமையும் குமாரனில்தான் இருக்கிறது. நாம் ஜெபிக்கும்போது தேவன் ஒரு மனிதனுடைய ஆவியைத் தொடுகிறார். நாம் ஜெபிக்கும்போது அந்த மனிதனைச் சுற்றியிருக்கிற எல்லா மனிதர்களுடைய ஆவியையும் நாம் தொட முடியும். “ஆண்டவரே, அவர்களுடைய சூழ்நிலையை மாற்றும்,” என்று நாம் ஜெபிக்கும்போது அவனைச் சுற்றியிருக்கிற எல்லா மனிதர்களையும் தொட்டு அவர்களுடைய எண்ணங்கள், உணர்ச்சிகள், தீர்மானங்கள் எல்லாவற்றையும் தொடுகிறார். நாம் ஜெபிக்காததால் பல மனிதர்கள் இன்னும் தொடப்படவில்லை. நாம் யோசுவாவின் காலத்தில் இருந்தால் என்ன செய்வோமோ அதை இந்தக் காலத்தில் செய்ய வேண்டும் என்றால் ஒன்றேயொன்றுதான் செய்ய வேண்டும். குறிப்பிட்ட காரியங்களுக்காகவும், குறிப்பிட்ட மனிதர்களின் மாற்றங்களுக்காகவும், திட்டவட்டமான தீர்க்கமான மாற்றங்களுக்காக ஜெபிக்க வேண்டும். ஒரேவொரு மாற்றம்தான் தேவை. கிறிஸ்து அவர்களுடைய வாழ்க்கைக்குள் போக வேண்டும்.
## மறைவான கிருபை ஒருவர் உடல்நலம் இல்லாமல் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்; நாம் ஜெபிக்கிறோம். நாம் ஜெபிப்பதால் அந்த சகோதரன் அல்லது சகோதரியின் வாழ்க்கைக்குள் கிறிஸ்துவை ஜீவனாக, உயிர்த்தெழுதலாகக் கொண்டுபோக முடியும். அவர்கள் நீண்ட காலம் தேவனோடு நடந்தவர்கள் என்றால் அவர்கள் மேலான உயிர்த்தெழுதலை அடையும்படி தேவன் அவர்களை வேறொரு பாதையில் நடத்தலாம். அவர்கள் உண்மையிலேயே பலவீனமாக இருந்தாலும் நம் ஜெபங்களைக் கேட்டு அந்தப் பலவீனங்களையெல்லாம் அற்புதமாக மாற்றிவிடவில்லையென்றாலும் தேவன் இன்னொன்றைக் கொடுப்பார்; மறைவான மன்னா. கிருபை என்பது மறைவானது; மன்னா மழை பெய்வதுபோல் கொட்டுவதில்லை. இஸ்ரயேல் மக்கள் தங்கள் பாத்திரங்களையெல்லாம் வெளியே கொண்டு வைத்தவுடன் மன்னா அதற்குள் பெய்யவில்லை. மன்னாவை அவர்கள் சேகரிக்க வேண்டியிருந்தது. அவர்கள் கண்களுக்குப் புலப்படும் வண்ணமோ அல்லது காதுகளால் கேட்கும் வண்ணமோ மன்னா வரவில்லை. கைகளை நீட்டியவுடன் மன்னா கைகளில் விழவில்லை. ஆனாலும் மன்னா வந்தது. அது நம் கண்களுக்குப் புலப்படாமல் இருக்கலாம். ஆனாலும், தேவன் மறைவான வல்லமையையும், உயிர்த்தெழுதலையும், ஜீவனையும் தம் மக்களுக்குக் கொடுத்துக்கொண்டிருக்கிறார். இது வேதம். நம் விசுவாசம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றியிருக்கிறது. அவர் சொல்லவில்லையென்றால் நாம் நம்பவேண்டியதில்லை. அவர் சொன்னார். தேவனுடைய மக்கள் அதை அனுபவித்தார்கள். “என் கிருபை உனக்குப் போதும். பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால் கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக் குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மை பாராட்டுவேன். அந்தப்படி, நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன். ஆகையால், கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்” (2 கொரி. 12:9, 10) என்பது பவுலின் சாட்சி.

பவுலின் கைக்குட்டையைத் தொட்டவர்கள் சுகமடைந்தார்கள் என்று எழுதியிருக்கிறது. முதல் மாடியில் பவுல் பிரசங்கித்துக்கொண்டிருந்தபோது ஜன்னலில் உட்கார்ந்திருந்த ஐத்திகு என்ற வாலிபன் கீழே விழுந்து மரித்து விடுகிறான். பவுல் இறங்கிப்போய் அவனை அணைத்துக் கொள்கிறான். அவன் உயிர் பெறுகிறான். மக்கள் எல்லாரும் ஆறுதல் அடைந்தார்கள். விரியன் பாம்பு அனலுறைத்து பவுலின் கையைக் கவ்விக்கொண்டது. அவன் அதை உதறிப்போட்டு ஒன்றும் நடக்காதவன்போல் இருந்தான்.

ஆனால், இப்படிப்பட்ட பவுல் “துரோப்பீமுவை மிலேத்துவில் வியாதிப்பட்டவனாக” விட்டுச்சென்றார் (2 தீமோ. 4:20). “எப்பாப்பிரோதீத்து மரணத்துக்குச் சமீபமாக இருந்தது மெய்தான்,” (பிலி. 2:27) என்று கூறுகிறார். “நீ இனிமேல் தண்ணீர் மாத்திரம் குடியாமல், உன் வயிற்றிற்காகவும், உனக்கு அடிக்கடி நேரிடுகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சை ரசமும் சேர்த்துக்கொள்,” (1 தீமோ. 5:23) என்று பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதுகிறார்.

இதெல்லாம் தோல்விகள் இல்லையா? இவர்களுக்கெல்லாம் தேவன் போதுமானவராக இருந்தார். இது மறைவான மன்னா; மறைவான கிருபை. இதை நாம் விசுவாசிக்க வேண்டும். அற்புதமாக, அப்பட்டமாக, புறம்பாக தேவன் ஒன்றும் செய்யாதவர்போல் தோன்றலாம். ஆனால் நாம் நம் ஓட்டத்தை முடிப்போம்.

எனவே, ஜெபிக்கும்போது நாம் சோர்ந்துபோகக் கூடாது. “ஜெபிக்கிறேன், ஜெபிக்கிறேன். அவனுடைய வாழ்க்கையில் தேவன் போகவில்லையே!” என்று சலித்துக்கொள்ளக்கூடாது. நாம் ஒரு நாளும் விடக்கூடாது. தேவனுடைய மக்களாகிய நாம் எந்த அளவுக்கு நம் இருதயத்தை ஒருமுகப்படுத்தி, “ஆண்டவரே இந்த மனிதனுடைய வாழ்க்கைக்குள் நீர் போக வேண்டும்,” என்று ஜெபிக்கிறோமோ அந்த அளவுக்கு தேவன் வல்லமையோடு அவனுடைய ஆவியைத் தொடுவார். ஒரு மனிதனுடைய ஆவியைத் தொட்டபிறகு அவன் இடது பக்கம் வலது பக்கம் போக முடியாது. தேவனுடைய தொடுதல் மிகவும் மென்மையாக இருக்கும். ஆனால், அந்த மனிதன் சிறைப்படுத்தப்பட்டு விடுவான். அவனுடைய புத்திக்கூர்மை, அவனுடைய உணர்ச்சிக் கொந்தளிப்பு, அவனுடைய திட சித்தம் ஆகியவைகளெல்லாம் ஒரு நிமிடத்தில் மாயமாய்ப் போய்விடும். அவன் ஒரு குழந்தையைப் போல், “நான் இரட்சிக்கப்பட என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்பான். “ஆண்டவன்மாரே, நான் இரட்சிக்கப்பட என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டவர் ஒரு சிறைச்சாலையின் அதிகாரி, ஒரு காவல்துறை அதிகாரி, என்று உங்களுக்கு தெரியுமா? தேவன் ஒரு மனிதனுடைய ஆவியைத் தொட முடியும். அது நம்மைப் பொறுத்தது.

இரண்டாவது படிதான் நாம் தேவனுடைய வசனத்தை ஒரு மனிதனுக்குக் கொடுப்பது. தேவனை ஒரு மனிதனிடத்திற்குக் கொண்டுபோவதற்கு நாம் வழிவகுக்கவில்லையென்றால் ஒரு மனிதனைத் தேவனிடத்தில் கொண்டுவருவது கடினம். என்னதான் நாம் வசனத்தை விளக்கிச் சொன்னாலும் அது அவனுக்கு ஜீவனாகப் போகாது; அது அவனுக்கு மரணமாக இருக்கும்; அவன் இருளிலிருந்து வெளிச்சத்துக்கு வரமாட்டான்.

கிறிஸ்துவை சம்பாதிப்பது, ஆதாயம்பண்ணுவது, கிறிஸ்து நமக்குள் உருவாக்கப்படுவது, கிறிஸ்துவின் அளவு நமக்குள் பெருகுவது இன்றியமையாதது. நாம் சம்பாதித்த, இலாபம் பண்ணின, உருவாக்கப்பட்ட, பெருகியிருக்கிற, கிறிஸ்துவை நாம் மற்றவர்களுக்குக் கொண்டுபோக வேண்டும். இதற்குப் பணிவிடை அவசியம். ஆசாரியனுடைய பணிவிடை. நம் இருதயத்தை விசாலமாக்கி, “ஆண்டவரே, இன்னும் பல மனிதர்களுக்கு கிறிஸ்துவில் தேவனைக் கொண்டுபோவதற்கு நான் ஒரு பாத்திரமாக, ஒரு வாய்க்காலாக, என் ஆசாரியனுடைய பணிவிடையைச் செய்ய விரும்புகிறேன்,” என்பது நம் இருதயத்தின் வாஞ்சையாக இருக்க வேண்டும். நாம் கொண்டுபோகாததால் இன்னும் பலருடைய வாழ்க்கை தேவனற்ற வாழ்க்கையாக இருக்கிறது.

நாம் இந்த இரண்டு பணிவிடைகளையும் செய்ய வேண்டும். ஜெபம் என்கிற பணிவிடை, தேவனுடைய வார்த்தையை அவர்களுக்கு அறிவிக்கிற பணிவிடை. இது ஒரே நாளில் நடைபெறுவதில்லை. யோர்தானைக் கடந்தவுடன் ஒரே நாளில் அவர்கள் கானான் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளவில்லை. அது ஒரு நீண்டகாலப் போராட்டம். தேவன் நமக்கு யோசுவாவின் ஆவியை, காலேபின் ஆவியை, தருவாராக. தேவனற்ற பல மனிதர்களுடைய வாழ்க்கைக்குள் தேவனைக் கொண்டுபோகிற ஆசாரியர்களாக, போர்வீரர்களாக, தேவன் நம்மைப் பயன்படுத்த விரும்புகிறார். இதற்கு நிச்சயமாக நாம் ஒரு விலைக்கிரயம் செலுத்த வேண்டும். ஆனால், தேவனுக்காகச் செலுத்தப்படுகிற எல்லா விலைக்கிரயத்துக்கும் தேவன் நமக்குக் கைமாறும், வெகுமதியும் தருவார். எனவே, “ஆண்டவரே ஒரு மனிதனை என் வாழ்க்கையில் குறுக்கிட வைக்கிறீர் என்றால் இவனுக்கு நான் தேவனைக் கொண்டுபோக உதவும்,” என்பது நம் கதறுதலாக இருக்க வேண்டும். அப்போது, உண்மையாகவே கர்த்தருடைய வருகையின் நாளிலே நம் மகிழ்ச்சி மிக அதிகமாக இருக்கும். “ஆ! இவ்வளவு கிறிஸ்துவை நான் பல்வேறு மனிதர்களுக்குள் கொண்டுபோயிருக்கிறேன்,” என்பது நம் மிகப்பெரிய மகிழ்ச்சியாக, மிகப்பெரிய ஆனந்தமாக, மிகப்பெரிய அக்களிப்பாக, மிகப்பெரிய ஆர்ப்பரிப்பாக இருக்கும். ஆமென்.