Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

மனித வாழ்வின் நோக்கம்

Transcribed from a message spoken in January 1, 2015 in Chennai, India

By Milton Rajendram

“நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்” (சங்கீதம் 90:12).

தேவ மக்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், பயனுள்ளதாகவும், கனிநிறைந்ததாகவும் மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்று நான் கணிக்கின்ற, நிதானிக்கின்ற, தீர்க்கின்ற சில காரியங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

விசாலமான இருதயம்

நாம் நற்செய்தியைக் கொண்டுபோக வேண்டும். தேவையுள்ள மக்களுக்காக நாம் நம் இருதயத்தைத் திறப்பது, உண்மையிலேயே, ஒரு பெரிய சவால். நாம், நம்முடைய குடும்பம், நம்முடைய வேலை, நம்முடைய தேவைகள் ஆகியவைகளைத்தவிர நம்முடைய வாழ்க்கையில் குறுக்கிடுகிற பல மக்களுக்குத் தேவைகள் உண்டு. அந்தத் தேவைகளை நிறைவுசெய்வதற்கு, பூர்த்திசெய்வதற்கு, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து விரும்புகிறார்’ அப்படிப் பூர்த்திசெய்ய அவரால் முடியும் என்பது நம்முடைய மனதிலே உதிப்பதில்லை. எனவே, தேவனுடைய மக்களாகிய நாம் நம்முடைய இருதயங்களைக் கொஞ்சம் விசாலமாக்க வேண்டும். நம் இருதயம் விசாலமானால் மற்றவர்களுக்காகச் செலவிட நமக்கு நேரம் கிடைக்கும், உழைப்பு கிடைக்கும், பணம் கிடைக்கும், வீடு கிடைக்கும். “என்னுடைய மனைவி, மக்கள், வேலைக்காக மட்டும் அல்ல; ஆண்டவரே, என்னுடைய வாழ்க்கையிலே தேவையுள்ள மக்கள் குறுக்கிடுவார்கள் என்றால், அவர்களுடைய தேவையைக் கவனிப்பாரின்றி அவர்கள் வாழ்க்கை போய்விடக் கூடாதே!” என்பது நம் இருதயத்தின் ஜெபமாக, வேண்டுதலாக, கதறுதலாக இருக்க வேண்டும். நம்முடைய வாரழ்க்கையில் குறுக்கிடுகிற பல மக்கள் தங்கள் இருதயத்தின் கதறுதலைச் சொல்லாமல் நமக்குமுன்பாகப் போக்கும்வரத்துமாக இருக்கிறார்கள். அவர்களை நாம் “எண்ணாமல் போனோம்” (ஏசாயா 53:3). “எங்கள் இருதயத்தில் அப்படிப்பட்ட இறுக்கத்தோடும், அழுத்தத்தோடும், நெருக்கத்தோடும், அமுக்கத்தோடும், நம்பிக்கையின்றியும், தவிப்போடும், கதறுதலோடும் நாங்கள் போக்கும்வரத்துமாக இருந்தோம். ஆனால், எங்களைக்குறித்து எண்ணுவார் இல்லை,” என்று கதறிக்கொண்டிருக்கிறவர்கள் அநேகம்.

“ஆண்டவரே, இன்றைக்கு தேவையுள்ள மக்கள் என் வாழ்க்கையில் குறுக்கிடுவார்கள் என்றால், அவர்களைச் சந்திப்பேனென்றால், அவர்களைப்பற்றிய ஓர் உணர்வை எனக்குத் தாரும். ஆண்டவரே, அவர்களுக்காகக் கொஞ்சம் நேரத்தையும், பணத்தையும், எண்ணத்தையும், உழைப்பையும் செலவிடுவதற்கு எனக்கு நீர் உணர்த்தும்,” என்று நான் பல வருடங்களாக ஜெபித்திருக்கிறேன்.

அருமையான சகோதர சகோதரிகளே, அதற்குரிய பலனைத் தேவனுடைய கைகளிலிருந்து நீங்கள் பெறுவீர்கள். “என் சம்பத்தை நான் சேர்க்கும் நாளிலே அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் …அப்பொழுது நீங்கள் தேவனுக்கு ஊழியஞ்செய்கிறவனுக்கும், அவருக்கு ஊழியஞ் செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைத் திரும்பவும் காண்பீர்கள்,” (மல்கியா 3:18, 19) என்று தேவன் சொல்லுகிறார்.

தேவையுள்ள சிலரை நாம் படிக்கின்ற இடத்தில், வேலைபார்க்கின்ற இடத்தில், பயணம் செய்கின்ற இடத்தில் நாம் சந்திப்போம். இயேசு நம்மூலமாக அவர்களுக்குப் பணிவிடைசெய்ய விரும்புகிறார். அவர்களுடைய தேவை என்னவாகவும் இருக்கலாம். அவர்களுடைய நிலைமை என்னவாகவும் இருக்கலாம். ஆனால், நம்மூலமாக ஏதோவொரு விதத்திலே அவர்களுக்குப் பணிவிடை செய்து, அவர்கள் தேவைகளைப் பூர்த்திசெய்ய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து விரும்புகிறார்.

பணிவிடையும், வெகுமதியும்

ஒரு மனிதன் வளர்வதற்கு இப்படிப்பட்ட விசாலமான இருதயமும், இயேசு கிறிஸ்துவின் சார்பாக, இயேசுகிறிஸ்துவின் பிரதிநிதியாக, அவர்களுக்கு அடிமையாக சேவிக்கிற ஒரு சேவையும், பணிவிடையும் நம் வாழ்க்கையில் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட பணிவிடை இல்லையென்றால், நம்முடைய எஜமானும், தலைவரும், இரட்சகருமாகிய இயேசுவின் சார்பாக, இயேசுவின் பிரதிநிதியாக, மற்றவர்களுக்குச் செய்கிற பணிவிடை இல்லையென்றால், உண்மையிலேயே நம்முடைய வாழ்க்கை யின் வளர்த்தியும், ஆசீர்வாதங்களும் மிகவும் மட்டுப்பட்டதாக இருக்கும்.

நான் இதை சட்டத்தின்படி மட்டும் சொல்லவில்லை. என் அனுபவத்திலிருந்து சொல்லுகிறேன். இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து மகிழ்ந்தது. “ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்,” (யோவான் 12:26) என்று ஆண்டவராகிய இயேசு கூறினார். “ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்காக அல்லது அவருடைய சார்பாக மற்றவர்களுக்குப் பணிவிடை செய்வதற்கு, அவர்களுடைய தேவையைப் பூர்த்திசெய்வதற்கு நான் என் நேரத்தைச் செலவிட்டேன்; என் வீட்டைத் திறந்தேன்; என் மனதைத் திறந்தேன்; அதனால், நான் நட்டப்பட்டேன்,” என்று ஒருவன் சொல்வதற்கு அவர் விடவே மாட்டார். அவர்களுடைய தேவைகள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அவை ஆவிக்குரிய தேவைகளாகவோ, உலகத்துக்குரிய தேவைகளாகவோ, உடலுக்குரிய தேவைகளாகவோ, பொருளாதாரத் தேவைகளாகவோ, சமூகத் தேவைகளாகவோ, உணர்ச்சித் தேவைகளாகவோ இருக்கலாம். “வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்” (லூக். 10:7É 1 தீமோ. 5:18).

இந்த உலகத்து எஜமான்கள் தன் வேலையாட்களுக்கு மாதந்தோறும் சம்பளம் தருவதற்கு உண்மையுள்ளவர்களாயிருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது பரம எஜமானாகிய நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்மைச் சேவிக்கின்ற, தமக்குப் பணிவிடை செய்கின்ற தம் மக்களுக்குச் சம்பளம் தர ஒருபோதும் தவறமாட்டார். “கூலிக்காரனுடைய கூலி விடியற்காலம்மட்டும் உன்னிடத்தில் இருக்கலாகாது,” (லேவியராகமம் 19:13) என்று சொன்ன தேவன் எவ்வளவு உண்மையுள்ளவர் என்பதை நினைக்கும்போது என் உள்ளம் நெகிழ்ந்துவிடுகிறது. உன் வேலைக்காரனுடைய கூலி உன் வீட்டிலே தங்கக்கூடாது என்று தம் மக்களுக்குப் போதிக்கிற நம் தலைவர் தம்மைச் சேவிக்கிற தம்முடைய வேலைக்காரர்களுக்கு ஒருநாளும் காலம் தாழ்த்தியோ அல்லது காலத்துக்குமுந்தியோ கூலியைத் தருவதில்லை.

இந்த உலகத்தில் சிலர் நாள்கூலி கொடுக்கின்றார்களர்; சிலர் வாரக்கூலி கொடுக்கிறார்கள்; சிலர் மாதக்கூலி பெறுகிறார்கள். ஆனால், நம்முடைய தலைவர்நாட்கூலியோ, வாரக்கூலியோ, மாதக் கூலியோ, வருடக்கூலியோ தருவதில்லை. எந்தக் கணத்தில் எனக்குத் தேவையோ அந்தக் கணத்தில் அவர்தருவார். “ஏற்ற சமயத்தில் சகாயம் செய்கிற கிருபையை” (எபி.4:16) அவர் அருள்கின்றார். காலம் தவறாது நமக்கு உதவிக்கரம் நீட்டுவதில் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வல்லுநராக இருக்கிறார்.

தேவையானது ஒன்றே

நாம் சாமர்த்தியசாலிகள் இல்லை. நான் அறிவித்த நற்செய்தியைக் கேட்டு சிலர் இரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள்; சிலர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டபின், “நான் சொன்னதைக் கேட்டு இவர்கள் இரட்சிக்கப்படும் அளவுக்கு நான் அப்படி என்ன சொல்லிவிட்டேன்!” என்று நான் அதிசயப்பட்டதுண்டு. நாம் எவ்வளவு மேதாவித்தனமாக ஆண்டவருடைய வார்த்தையைச் சொல்லுகிறோம் என்பதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். எந்த மனிதனுடைய பிரச்சினையையும் தீர்ப்பதற்கு இன்னொரு மனிதனுக்கு ஞானமும் இல்லை, திறமையும் இல்லை, வல்லமையும் இல்லை. ஒரு மனிதனுடைய பிரச்சினையை, சிக்கலை, தீர்ப்பதற்கு அல்லது ஒருவனுடைய குறைவை நிறைவுசெய்வதற்கு எந்த ஒரு மனிதனுக்கும் ஞானமோ, திறமையே, வல்லமையோ இல்லை.

ஏதாவது உதவி கிடைக்குமா என்று தன்னை நோக்கிப்பார்த்த ஒரு பிறவிச் சப்பாணியிடம், “வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை. என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன். நசரேனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே எழுந்து நட,” என்று பேதுரு சொன்னார் (அப். 3:5). நம்மிடத்தில் உள்ளது ஒன்றேவொன்றுதான் அல்லது ஒரேவொருவர்தான். அவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. நாம் இந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஒரு மனிதனுக்கு அறிமுகப்படுத்த முடியும். அறிமுகப்படுத்தினால் போதும். அந்த மனிதனுடைய தேவைகளையும், பிரச்சினைகளையும் அவர் பார்த்துக்கொள்வார். “அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார் என்று இயேசு கிறிஸ்துவுக்கு நான் சாட்சி கொடுத்தேன். ஆனால், நான் சொன்ன வார்த்தையை அவர் காப்பாற்றவில்லை; அவர் பார்த்துக்கொள்ளவில்லை,” என்று ஒருவனும் ஒருபோதும் சொல்ல முடியாது. அவர் ஒரு நாளும் கைவிடுவதில்லை. அவர் நம்பத்தக்க இரட்சகர்.

சுவிசேஷம்

நற்செய்தி என்று நான் நினைப்பதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். சிலருக்கு அது நேரடியாகப் பயனுள்ளதாக இருக்கும். சிலருக்கு மறைமுகமாகப் பயனுள்ளதாக இருக்கும். மறைமுகமாக என்றால் உண்மையிலேயே நற்செய்தி என்று நாம் மற்றவர்களுக்கு என்ன அறிவிக்க வேண்டும் என்ற வகையில் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

கிறிஸ்தவன்

கிறிஸ்தவர்களாகிய நாம் தேவனுடைய மக்கள். ஒருவன் கிறிஸ்தவனாக வாழ்கிறான் என்பதின் பொருள் என்னவென்றால் அவன் கிறிஸ்துவை அறிந்து, கிறிஸ்துவை அனுபவித்து, கிறிஸ்துவால் வாழ்ந்து, கிறிஸ்து அவனுக்குள் உருவாக்கப்பட்டு, பிறருக்குக் கிறிஸ்துவை வழங்கி, கிறிஸ்துவைக் காண்பிக்கிறவன். இவன்தான் கிறிஸ்தவன். நான் ஆறு வினைச்சொற்களைப் பயன்படுத்துகிறேன். ஒவ்வொன்றையும் நான் பொருளோடும், கனத்தோடும் பயன்படுத்துகிறேன்.

  1. ஒன்று கிறிஸ்துவை அறிந்து,
  2. இரண்டு கிறிஸ்துவை அனுபவித்து,
  3. மூன்று கிறிஸ்துவால் வாழ்ந்து,
  4. நான்கு கிறிஸ்து அவனுக்குள் உருவாக்கப்பட்டு,
  5. ஐந்து கிறிஸ்துவை மற்றவர்களுக்கு வழங்கி,
  6. ஆறு கிறிஸ்துவை அவன் வெளியாக்குகிறான். இதுதான் கிறிஸ்தவனாக இருப்பதின் பொருள்.

1. மனித வாழ்க்கை

மனித வாழ்க்கை மிக அருமையானது. மனிதன் தேவனால் உண்டாக்கப்பட்ட மிக உயர்ந்த பாத்திரம். இந்த உலகத்தில் மனிதனைப்போன்ற அல்லது மனிதனைவிட உயர்ந்த பாத்திரம் இந்தப் பிரபஞ்சத்தில் வேறொன்றும் இல்லை. ஆனால், துரதிருஷ்டவசமாக, பல மனிதர்கள் இந்த வாழ்க்கையைச் சின்னாபின்னமாக்கிவிடுகிறார்கள், சீர்குலைத்துவிடுகிறார்கள் அல்லது சிதைத்துவிடுகிறார்கள்.

ஒரு சித்தர் பாடல் உண்டு.

நந்தவனத்தில் ஓர் ஆண்டி- அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டி வந்தான் ஒரு தோண்டி- அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி.

ஓர் ஆண்டி நாலாறு மாதமாய் (பத்து மாதமாய்) குயவனை (கடவுளை) வேண்டி அதன் பயனாகக் கொண்டுவந்தான் ஒரு தோண்டி. தோண்டி என்றால் மண்பாத்திரம். மனித வாழ்க்கை ஒரு மண் கலத்தைப்போன்றது. இது மிக விலையேறப்பெற்ற மண்கலம். ஆனால், இந்த மனித வாழ்க்கை கிடைத்த சந்தோஷத்திலே மனிதன் அதைக் கூத்தாடிக்கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி. சிலர் பதினைந்து வயதிலே போட்டுடைத்துவிடுவார்கள். சிலர் இருபது வயதில் போட்டுடைப்பார்கள். வேறு சிலர் சாகிறவரை கூத்தாடிக்கூத்தாடிப் போட்டுடைப்பார்கள். இந்த மனித வாழ்க்கை அவர்களுக்குக் கிடைத்தவுடன் அவர்கள் ஆடுகிற கூத்து இருக்கிறதே!

மனிதர்கள் தங்கள் மதியீனத்தினாலே இந்த மனித வாழ்க்கை என்ற அற்புதமான தோண்டியை அல்லது மண்கலத்தைப் போட்டு உடைக்கிறார்கள். ஒரு சிறு குழந்தையிடம் ஒரு பலூனையும், ஒரு கோடி ரூபாய்க்கு எழுதப்பட்ட ஒரு காசோலையையும் கொடுப்போம். ஒரு கலர் தாளையும், ஒரு கோடி ரூபாய் எழுதப்பட்ட ஒரு காசோலையையும் அந்தக் குழந்தைக்குக் கொடுப்போம். அந்தக் குழந்தை கலர் தாளைத்தான் தெரிந்துகொள்ளும். ஒரு கோடி ரூபாய் எழுதப்பட்ட காசோலை கவர்ச்சியாக இருக்காது. ஒரு கோடி ரூபாயின் மதிப்பு என்னவென்று தெரியாது. ஒருவேளை அதைப் பார்த்து, “என்ன இது! ஒன்றுமேயில்லை. எல்லாம் முட்டை முட்டையாக இருக்கிறது!” என்றுகூடச் சொல்லலாம். அந்தக் குழந்தையைப் பொறுத்தவரை அந்தக் காசோலைக்கு எந்த மதிப்பும் இல்லை. அதுபோல, “இந்த வாழ்க்கையை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம்? இந்தக் கூத்தாடலாமா, அந்தக் கூத்தாடலாமா, இப்படிப் பாடலாமா, அப்படி ஆடலாமா?” என்பதுதான் மனிதர்களைப் பொறுத்தவரை மிக அருமையானது என்று அவர்கள் கருதுகிறார்கள்.

முதல் நூற்றாண்டில் எப்பிக்கூரியன் என்று ஒருவகையான தத்துவஞானிகள் வாழ்ந்தார்கள். எப்பிக்கூரியருடைய கூட்டாளிகள் இன்று நம்மிடையே வாழந்துகொண்டிருக்கிறார்கள். “புசிப்போம், குடிப்போம், நாளைக்குச் சாவோம்,” என்பதுதான் அவர்களுடைய தத்துவம். “Eat, drink and make merry. For tomorrow we shall die.” இதுதான் அவர்களுடைய தத்துவம். தத்துவஞானிகள் எங்கேயோ இருக்கிறார்கள் என்று நினைத்துவிட வேண்டாம். இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவனையும் பொறுத்தவரை அவன் தத்துவஞானிதான். இங்கு தத்துவஞானிகள் என்று சொல்லாத ஆட்களே கிடையாது. நாம் எல்லாருமே தத்துவஞானிகள்தான்.

ஆனால், தேவனுடைய மக்களுக்கு ஒரேவொரு தத்துவம்தான் உண்டு. அது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. “Our philosophy is Christ” என்று கொலோசெயர் இரண்டாம் அதிகாரத்தில் பவுல் இதை அப்பட்டமாக எழுதியிருக்கிறார். நம்முடைய தத்துவம் ஒருவிதமான சிந்தனை அமைப்புமுறை அல்ல. நம்முடைய தத்துவம் ஒரு நபர். இந்த உலகத்து மக்கள் வாழ்வதற்குத் தங்களுக்குப் பல்வேறு தத்துவங்களை வைத்திருக்கிறார்கள். “நல்ல மகிழ்ச்சியாக இருக்க வேண்டுங்க. அதுதான் என் வாழ்க்கையின் ஒரேவொரு நோக்கம்” என்று சொல்லக்கூடிய தத்துவஞானிகள் இருக்கிறார்கள்.

நமக்கு ஒரு தத்துவம் உண்டு. அந்தத் தத்துவம் என்ன? கிறிஸ்துவை அறிந்து, கிறிஸ்துவை அனுபவித்து, கிறிஸ்துவால் வாழ்ந்து, கிறிஸ்து நமக்குள் உருவாக்கப்பட்டு, கிறிஸ்துவை சில மனிதர்களுக்குள்ளாவது வழங்கி, கிறிஸ்துவை நாம் வெளியாக்க வேண்டும் என்பது நம்முடைய தத்துவம்.

ஆகவே, என்னுடைய முதல் குறிப்பு மனிதர்கள் தங்கள் கைகளில் கொடுக்கப்பட்ட இந்த மனித வாழ்க்கையைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கிவிடுகிறார்கள். அது எவ்வளவு மதிப்புக்குரியது. தேவன் அதை எப்பேர்ப்பட்ட நோக்கத்திற்காக, குறிக்கோளுக்காக, உண்டாக்கினார் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. அது ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய காசோலை என்று அவர்கள் கருதுவதில்லை, மதிப்பதில்லை. மாறாக, அதை அவர்கள் ஒரு கலர் தாளைப்போல் கருதுகிறார்கள், பயன்படுத்துகிறார்கள்.

2. மனந்திரும்புதல்

“மனிதனுடைய மதியீனம் அவன் வழியைத் தாறுமாறாக்கும். என்றாலும் அவன் மனம் கர்த்தருக்கு விரோதமாய்த் தாங்கலடையும்” (நீதிமொழிகள் 19:3). நம் கையிலே கொடுக்கப்பட்ட மனித வாழ்க்கையை நம்முடைய அறிவின்படியும், நம்முடைய வழிகளின்படியும் நாம் செலவிட்டு, நாம் அதைத் தாறுமாறாக்கிவிடுகிறோம். தாறுமாறாக்கினபின்பு, “கடவுள் எனக்கு ஏன் இப்படிச் செய்தார்?” என்று மனிதர்கள் கேள்வி கேட்பார்கள். கடவுளைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி, “என்னுடைய வாழ்க்கை இப்படி இருப்பதற்குக் காரணம் நீர்தான்,” என்று நேரடியாகவே குற்றஞ்சாட்டுவார்கள். இது ஒன்றும் புதிய சிந்தனையோட்டம் அல்ல. முதல் மனிதனாகிய ஆதாம், தேவன் விலக்கின மரத்தின் கனியைச் சாப்பிட்டபோது தேவன் அவனை நேருக்குநேர் சந்தித்து, “ஆதாமே, நான் விலக்கின அந்த மரத்தின் கனியை நீ ஏன் சாப்பிட்டாய்?” என்று கேட்டார். அவன் தன் பாவத்தை ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக, “நீர் தந்த பெண்தான் அந்தக் கனியை எனக்குத் தந்து, என்னைச் சாப்பிடச் சொன்னாள்,” என்று ஆணவமாகப் பதில் சொன்னான். தன்னுடைய குற்றத்தில் தேவனுக்குப் பெரிய பங்கு உண்டு என்று அவர்மேல் குற்றஞ்சுமத்தினான். அவன் சொன்னதின் பொருள் என்னவென்றால், “நான் ஒன்றும் செய்யவில்லை. நீர் கொடுத்த பெண்தான் அதைச் செய்தாள்,” என்று சொன்னான். இது தொன்றுதொட்டு வருகிற எண்ண ஓட்டம்.

மனிதனைப் பொறுத்தவரை தாழ்மை என்பது ஓர் அபூர்வமான பண்டம். “நான் செய்தது தவறு,” என்று சொல்லுகிற மனிதர்கள் வெகு சிலர். நாம் யாருக்கு விரோதமாகவாவது பாவம் அல்லது தவறு செய்துவிட்டோம் என்றால், “நான் செய்தது தவறு; என்னை மன்னியுங்கள்,” என்று சொல்லுகிற மனிதர்கள் வெகு சிலர். பொதுவாக நாம் மன்னிப்புக் கேட்கும்போதுகூட மிகவும் கெம்பீரமாகக் கேட்போம். “நான் செய்தது தவறாக இருந்தால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்,” என்று நாசுக்காக மன்னிப்புக் கேட்போம். இருந்தால் என்ற ஒன்றைச் சேர்த்து நம்முடைய குற்றத்தைப் பூசிமெழுகப் பார்ப்போம். “நான் செய்தது தவறு,” என்று அப்பட்டமாக ஒப்புக்கொள்ள மனம் வராது. தேவனுக்குமுன்பாக அல்லது மற்ற மனிதர்களுக்குமுன்பாக நம்மைத் தாழ்த்தி, “நான் வாழ்ந்தது பாவமான வாழ்க்கை. என்னுடைய மதியீனத்தினால், என்னுடைய கட்டுங்கடங்காத இச்சைகளினால் என்னுடைய வாழ்க்கையை நான் பாழ்படுத்தினேன், சின்னாபின்னமாக்கினேன், சிதைத்தேன்,” என்று சொல்லுகிற மனிதர்கள் மிகக் குறைவு. வேதம் அதைக் கோருகிறது. ஆண்டவராகிய இயேசு அதைக் கோருகிறார். இதற்குப் பெயர் மனந்திரும்புதல்.

எனவே, முதல் குறிப்பு, மனித வாழ்க்கை மிக அருமையானது. இரண்டாவது குறிப்பு, அந்த வாழ்க்கையை நாம் சிதைத்துச் சின்னாபின்னமாக்குவதால் மனிதனுக்கு மனந்திரும்புதல் தேவை. “ஆண்டவரே, என்னுடைய வாழ்க்கையை நான் பாழ்படுத்தினேன். என்னை மன்னியும்,” என்று மனிதன் மனந்திரும்ப வேண்டும்.

3. இயேசு தரும் பரிபூரண ஜீவன்

மூன்றாவது, நம்முடைய வாழ்க்கை எந்த நிலையிலிருந்தாலும், அந்த வாழ்க்கையைச் செப்பனிட்டு, நமக்கும் தேவனுக்கும் மகிழ்ச்சியும், கனியும், மகிமையும் நிறைந்த வாழ்க்கையாக மாற்ற ஒரேவொரு நபரால் முடியும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவால். அந்த வாழ்க்கை எந்த நிலையிருந்தாலும் சரி. அவரைப்போல் கைதேர்ந்த வல்லுநர், நிபுணர் வேறொருவரும் இல்லை.

“அன்றியும் அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்” (ரோமர் 8:28). நம்முடைய வாழ்க்கையில் பல்லாயிரம் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வீழ்ச்சிகள், தோல்விகள், குழப்பங்கள், சிக்கல்கள், இருள் என எவ்வளவோ காரியங்கள் நடைபெறுகின்றன. நமக்கு நாம் நட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறோம்; மற்றவர்களுக்கும் நட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறோம். இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையைச் செப்பனிட, சீர்செய்ய முடியுமா? முடியும். ஆனால், “இந்த வாழ்க்கையைச் செப்பனிட முடியாது. நீ ரொம்ப தூரம் வந்துவிட்டாய். அதனால் உன் வாழ்க்கையைச் செப்பனிட முடியாது,” என்பது தேவனுடைய பகைவனாகிய சாத்தானின் கூற்றாக இருக்கும். மனிதனுடைய மனதிலே அவன் அப்படிப்பட்ட எண்ணங்களை விதைப்பான். “இந்த வாழ்க்கையை உன்னால் செப்பனிடவே முடியாது,” என்று அவன் சாதிப்பான்.

ஆனால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, “திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும் அது பரிபூரணப்படவும் வந்தேன்” (யோவான் 10:10) என்று சொன்னார். அவருடைய இந்த வார்த்தையை உங்கள் இருதயத்தில் நீங்கள் எழுதிக்கொள்ளுங்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து “நான் எதற்காக இந்த உலகத்திற்கு வந்தேன்” என்று தான் இந்த உலகத்திற்கு வந்த நோக்கத்தை எடுத்துரைக்கிறார்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தேவன்; அவர் மனிதனானார். ஆகவே, அவர் ஒப்புயர்வற்ற, ஈடுயிணையற்ற, தன்னிகரற்ற, நபர். இந்த மனித வரலாற்றிலே இந்தப் பிரபஞ்சத்திலே இயேசு கிறிஸ்து என்ற நபருக்கு ஒப்பு வேறு எந்த நபரும் இல்லை. ஏனென்றால், அவர் தேவனாகவும் மனிதனாகவும் இருக்கின்றார். இந்தப் பூமியிலே அவரைப்போல் வேறொரு நபர் வாழ்ந்ததுமில்லை; வாழப்போவதுமில்லை.

“நான் கடவுள்” என்று பல மனிதர்கள் பொய்யாய்ச் சொல்லலாம். ஆனால், மரித்து, மரணத்தை வென்று, உயிர்த்தெழுந்த ஒரேவொரு நபர்தான் உண்டு. அவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. இது வரலாற்று உண்மை. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்று நிரூபித்துவிட்டால் அவர் கடவுள் இல்லையென்று நிரூபித்துவிடலாம் என்று எத்தனித்த மனிதர்கள் எத்தனையோபேர் உண்டு. அப்படி எத்தனித்த ஒரு மனிதன் தன் ஆராய்ச்சியின் முடிவிலே, “இல்லை, வரலாற்றுப் பூர்வமாக இயேசு கிறிஸ்து உண்மையாகவே மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார் என்பதை நான் கண்டுபிடித்தேன்,” என்று அவன் எழுதுகிறான். அவன் எழுதின அந்தப் புத்தகத்தின் பெயர் Who turned the stones (கல்லைப் புரட்டினது யார்);. இயேசு கிறிஸ்து தேவன். அவர் இந்த உலகத்திற்கு மனிதனாக வந்தார். எதற்காக வந்தார் என்று அவர் சொல்லுகிறார். தேவனுடைய பகைவனாகிய சாத்தான் மனிதனுடைய வாழ்க்கையைத் திருடுகிறான், அழிக்கிறான், கொல்லுகிறான். மனிதனுடைய மனதில் தன் எண்ணங்களை விதைத்து, சில விருப்பங்களை விதைத்து, பிறகு அந்த விருப்பங்களைக் கட்டுக்கடங்காத இச்சைகளாக மாற்றி, மனிதர்களுடைய வாழ்க்கையைத் திருடுவது அவனுடைய செயல். மனிதர்கள் மனமுவந்து தங்கள் வாழ்க்கையைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கிறார்கள்.

சாத்தான் வரும்போது, நாம் சினிமாக்களில் பார்ப்பதுபோல, கருப்பு அங்கி அணிந்துகொண்டு, இரண்டு கொம்புகளோடு, ஒரு வாலை வைத்துக்கொண்டு வரமாட்டான். அவன் நல்ல ஆங்கிலம் பேசுவான்; அழகாக இருப்பான்; வாட்டசாட்டமாக இருப்பான்; பார்ப்பதற்கு வசீகரம் உள்ளவனாக இருப்பான்; அவனுடைய தத்துவங்கள் கேட்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும். ஏமாந்துவிட வேண்டாம். சாத்தான் மிக நளினமாக வந்து மனிதர்களின் வாழ்க்கையைத் திருடுவான். அந்த வாழ்க்கையின்மேல் ஒரு கை வைத்தபிறகு, மனிதர்களுடைய வாழ்க்கையை அவன் அழிப்பான்; பிறகு, அவன் கொலைசெய்துவிடுவான். தேவனுடைய பகைவனால் இப்படித் திருடப்பட்டு, அழிக்கப் பட்டு, கொல்லப்பட்ட வாழ்க்கைகள் கோடாகோடி உண்டு.

என்னுடன் வேலைபார்க்கிற ஒருவர் சமீபத்தில் எனக்கு ஒரு புத்தகம் கொடுத்தார். அந்தப் புத்தகத்தின் பெயர், அனைத்தையும் அனுபவி. ஆச்சரியப்பட்டுப்போனேன்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இப்படிப்பட்ட வாழ்க்கையைச் சரிசெய்து, கொல்லப்பட்ட வாழ்க்கைகளைச் சரிசெய்து, அந்த மனிதர்களுக்கு ஜீவனைக் கொடுக்க வந்தார். சாதாரண ஜீவன் அல்ல, எப்படிப்பட்ட ஜீவன்? தெய்வீக ஜீவன், தேவனுடைய ஜீவன். அந்த ஜீவனைப் பரிபூரணமாகக் கொடுக்க வந்தார். தம்மால் இப்படிச் செய்ய முடியும் என்று அவர் சொன்னார். இந்த வசனம் Living Bibleலில் இப்படி மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது: “The thief comes to steel, kill and destroy but my purpose is to give you life and life in all its fullness.”

நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது இந்த வசனத்தை நான் Living Bibleலில் வாசித்தேன். இந்த வசனம் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஜீவன் தர வந்தார்? எப்படிப்பட்ட ஜீவன். அதன் நிறைவான எல்லா அம்சங்களிலும் தர வந்தார். இந்த வசனத்தை வாசித்தவுடன் நான் மெய் மறந்துபோனேன். “எவ்வளவு அழகாக இருக்கிறது!” என்று மலைத்துப்போனேன். எனக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் இந்த வசனத்தைச் சொன்னேன். உண்மையாகவே வாழ்க்கையை அதன் முழுமையில், அதன் நிறைவில், அதன் பரிபூரணத்தில் அனுபவிக்க வேண்டுமென்றால் மனிதன் ஒரேவொரு நபரிடத்தில்தான் வரமுடியும். அவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. எந்த நிலைமையில் வந்தாலும் அவர் ஒரு மனிதனைக் கடிந்துகொள்வதில்லை.

“கொஞ்சம் முந்தி வந்திருந்தால் உன் வாழ்க்கையை நான் செப்பனிட்டிருப்பேன், சீர்செய்திருப்பேன். நீ ஒரு வருடம் காலதாமதமாக வந்துவிட்டாய். அதனால் உன் வாழ்க்கையை என்னால் சரி செய்ய முடியாது,” என்று அவர் ஒருவனிடமும் ஒருபோதும் சொல்வதில்லை.

“கர்த்தர் வானத்திலிருந்து நோக்கிப்பார்த்து எல்லா மனுபுத்திரரையும் காண்கிறார். அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் வனைகிறார்,” (சங்கீதம் 33:14, 15) என்று வாசிக்கிறோம். “He looks down from heaven and fashions the hearts of men.” அவர் மனிதர்களுடைய இருதயங்களை வனைகிறார்.

ஒரு மனிதன் தன் வாழ்க்கையை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுக்கும்போது, அவனோடு தொடர்புடைய எல்லா மனிதர்களுடைய இருதயங்களையும் அவர் உருவாக்கி, வனைகிறார். அதற்கு ஒத்த இன்னொரு வசனம் உண்டு. “ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப்போலிருக்கிறது. அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்” (நீதிமொழிகள் 21:1). அவர் தமக்கு விருப்பமான இடங்களில், விருப்பமான திசைகளிலெல்லாம் மனிதர்களுடைய இரு தயங்களைத் திருப்புகிறார். மனிதர்களுடைய இருதயங்களை அவர் வனைகிறார், திருப்புகிறார்.

ஒரு மனிதன் தன் வாழ்க்கையை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுக்கும்போது, அவர் அவனுடைய வாழ்க்கையை முழுமையான, பரிபூரணமான, நிறைவான வாழ்க்கையாக மாற்றுவார். உங்களோடு தொடர்புடைய எல்லா மனிதர்களுடைய இருதயங்களையும் அவர் மாற்றுவார். கணவனுடைய இருதயத்தை, மனைவியின் இருதயத்தை, நண்பனின் இருதயத்தை, எதிரிகளுடைய இருதயத்தை நாம் மாற்றமுடியுமா? கத்தி முனையில் இருதயங்களை மாற்ற முடியுமா? பலவந்தம் செய்து மாற்றமுடியுமா?

தேவன் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரை நோக்கிப்பார்த்து அவர்களுடைய இருதயங்களை வனைகிறார் என்று வேதம் சொல்லுகிறது. நம்மோடு தொடர்புடைய எல்லா மனிதர்கள்மேலும் ஒரேவொரு நபருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. அவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.

நான் வாலிபனாக இருந்தபோது பாரத் பொறியியல் கல்லூரியில் வேலைபார்த்தேன். அந்தக் கல்லூரி முதல்வர் மிகவும் வயதானவர். நான் மிகவும் இளைஞன். அவரைப் பார்க்கும்போது, ஒவ்வொரு நாளும் அவருக்கு “Good Morning” சொல்வேன். அவர் முறைத்துக்கொண்டு போவார். எப்போதும் மிகவும் விறைப்பாகவே இருப்பார். “இவர் என்ன இவ்வளவு விறைப்பாக இருக்கிறார். இவருக்கெல்லாம் ஏன் Good Morning சொல்ல வேண்டும்? நாளடைவில் இவருக்கு Good Morning சொல்வதை நிறுத்திவிடவேண்டியதுதான்,” என்றுகூட நான் நினைத்ததுண்டு. ஆனால், நம்முடைய அதிகாரிகளை நாம் கனம்பண்ண வேண்டும் என்பதற்காக நான் தொடர்ந்து Good Morning சொன்னேன். பல வாரங்கள், பல மாதங்கள் இப்படிச் சென்றன. கொஞ்ச நாள் கழித்து நான் Good Morning சொல்லும்போது அவர் “ம்…ம்…ம்…ம்..” என்று சொன்னார். இன்னும் சில மாதங்கள் சென்றன. அதன்பின் அவரும் Good Morning சொல்ல ஆரம்பித்தார். அதன்பின் பல மாதங்கள் கழித்து புன்முறுவலோடு Good Morning சொன்னார். இன்னும் சில மாதங்கள் சென்றபின் அவர் தன் பிரச்சினைகளை மனந்திறந்து என்னிடம் சொல்ல ஆரம்பித்தார்.

மற்றவர்கள் தங்கள் பிரச்சினைகளை என்னிடம் சொல்லும்போது எனக்குக் கொஞ்சம் பயமாக இருக்கும். என்ன பயம் என்றால் நான் எப்படி இவர்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்று. ஆனால், நாம் ஏறக்குறைய அந்திரேயா, பிலிப்பு ஆகியவர்களைப்போன்றவர்கள். “ஆண்டவரே உம்மைப்பார்க்க வேண்டும் என்று சில கிரேக்கர்கள் வந்திருக்கிறார்கள். நீர் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்துகொள்ளும்,” என்று சொல்லிவிட்டு நின்றுகொள்ளலாம். நாம் பிரச்சினைகளைத் தீர்க்கிறவர்கள் அல்ல. ஆனால், எல்லா மனிதர்களின் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்கிற இரட்சகரை நமக்குத் தெரியும். அவர் “முற்றுமுடிய இரட்சிக்க வல்லமையுள்ளவர்” (எபி. 7:25). Savior to the uttermost. அரையும் குறையுமாக ஒரு மனிதனுடைய வாழ்க்கையை அவர் செப்பனிட்டு விடுவதில்லை. அவர் முற்றிலுமாக, முழுமையாக, பரிபூரணமாக, நிறைவாக இரட்சிக்க, செப்பனிட, சீர்செய்ய வல்லவார். “உங்களிடத்தில் நற்கிரியையைத் தொடங்கினவர் இயேசு கிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவார் என்று நான் நம்பியிருக்கிறேன்” (பிலி. 1:5) என்று பவுல் குறிப்பிடுகிறார். அவர் முடிவுவரை நடத்துகிறவர்.

எனவே, நம்முடைய வாழ்க்கையை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கைகளில் கொடுக்கும்போது, அது எந்த நிலையிலிருந்தாலும் அதைச் செப்பனிடவும், சீர்ப்படுத்தவும், முழுமையாக்கவும் அவரால் முடியும். நம்மோடு தொடர்புடைய எல்லா மனிதர்களுடைய இருதயங்களையும் அவர் சீர்ப்படுத்துகிறார்.

4, வாழ்வின் மாபெரும் சாதனை

இந்த வாழ்க்கையின் மாபெரும் சாதனை என்ன? ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சாயலை (குணத்தை) அணிந்துகொள்வதுதான் மனித வாழ்க்கையின் குறிக்கோள். இந்த மனித வாழ்க்கை ஒரு நல்ல பாத்திரம் என்று சொன்னேன். இந்தப் பாத்திரத்தின் நோக்கம் என்ன? இந்தப் பாத்திரத்தில் இயேசு கிறிஸ்து வாழ்ந்து, அவரை நமக்குள் உருவாக்கி, அவருடைய சாயலை (அவருடைய குணத்தை) நமக்குள் உருவாக்கி, நம்மூலம் அவர் வெளிப்பட வேண்டும் என்று அவர் திட்டம் கொண்டிருக்கிறார்; குறிக்கோள் கொண்டிருக்கிறார். இதுதான் ஒரு மனித வாழ்க்கையின் நோக்கம். மனிதன் ஒரு சாதாரணப் பாத்திரம் இல்லை. இந்தப் பாத்திரத்தில் தேவன் வாழ்ந்து, தேவன் வெளிப்பட விரும்புகிறார்.

நம்முடைய குணத்தை, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற மக்களுடைய குணத்தை, ஒருநாள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு முற்றிலும் ஒத்தகுணமாக அவர் மாற்றுவார். இது ஒரு மாபெரும் சாதனையா என்று நீங்கள் நினைக்கலாம். ஆ! வாழ்க்கையின் முடிவுக்கு வரும்போது நாம் எவ்வளவு பணம் சம்பாதித்தோம், எவ்வளவு நிலம் வாங்கினோம், எத்தனை வீடு கட்டினோம், என்னென்ன வாகனங்கள் வைத்திருந்தோம் என்பதெல்லாம் ஒரு சாதனையாக இருக்காது. ஆனால், இயேசு கிறிஸ்துவின் சாயலும், இயேசு கிறிஸ்துவின் குணமும் நமக்குள் எந்த அளவுக்கு உருவாயிற்று என்பதும், இந்த இயேசு கிறிஸ்துவை நாம் எத்தனை மனிதர்களுக்கு வழங்கி, அவர்களை இருளிலும், மரணத்திலுமிருந்து விடுவித்தோம் என்பதும், எந்த அளவுக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மூலம் வெளியானார் என்பதுமே நம் வாழ்க்கையின் மகிழ்ச்சியாக இருக்கும்.

சங்கீதத்தில் ஒருவசனம் உண்டு. “நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்” (சங்கீதம் 17:15). இந்த வாழ்க்கையின் முடிவுக்கு நாம் வரும்போது அல்லது இந்த வாழ்க்கையைக் கடந்து நாம் நித்தியத்துக்குள் காலடி எடுத்து வைக்கும்போது, நம்மைத் திருப்தியாக்குவது ஒன்றேவொன்றாகத்தான் இருக்கும். அது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சாயல் (குணம்). இந்த வார்த்தைகள் நம்மை ஊக்குவிப்பதாக. சுருக்கமாகச் சொல்லுகிறேன். 1. ஒன்று, மனித வாழ்க்கை தேவன் கொடுத்த ஒரு மாபெரும் கொடை. மனிதன் தேவனுடைய மிக உயர்ந்த படைப்பு. தேவன் அவனை ஒரு பாத்திரமாகப் படைத்திருக்கிறார். 2. இரண்டாவது சொன்னேன்: ஆனால், மனிதர்கள் தங்கள் இச்சைகளினாலே மனித வாழ்க்கையை அழித்து அல்லது சிதைத்து அதைச் சின்னாபின்னமாக்கிக்கொள்ளுகிறார்கள். 3. மூன்றாவது சொன்னேன்: ஒரு மனித வாழ்க்கை எவ்வளவு சிதைத்துச் சின்னாபின்னமாக்கப்பட்டிருந்தாலும் அந்த வாழ்க்கையைச் செப்பனிடவும், சீர்படுத்தவும், மகிமையாக மாற்றவும்–வெறுமனே முறிந்த எலும்புக்குக் கட்டுப்போடுவது மட்டும் அல்ல–அதை முறியாத எலும்புபோல் மாற்றுகிற நிலைமைக்கு நம்முடைய வாழ்க்கையைக் கொண்டுவரவும் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவால் முடியும். அப்படி அவருடைய கைகளிலே கொடுக்கப்பட்ட வாழ்க்கையை அவர் ஒரு பரிபூரணமான வாழ்க்கையாக மாற்றுகிறார். நம்முடைய வாழ்க்கையின் சூழ்நிலைகளை அவர் மாற்றுகிறார். நம்முடைய வாழ்க்கையில் தொடர்புடைய மக்களுடைய இருதயங்களை அவர் மாற்றுகிறார். 4. கடைசியாகச் சொன்னது, உண்மையிலேயே ஒரு மனித வாழ்க்கையின் திருப்தி, நிறைவு என்னவாக இருக்குமென்றால் எந்த அளவுக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் குணம் நமக்குள் உருவாக்கப்பட்டது. எந்த அளவுக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நம்மில் பிறர் சந்தித்தார்கள். எந்த அளவுக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மூலம் வெளியானார் என்பதுதான் காரியம். இதுதான் இந்த வாழ்க்கையின் எல்லைக்கு, முடிவுக்கு, நாம் வரும்போது அல்லது இந்த வாழ்க்கையைவிட்டு நாம் கடந்துபோகும்போது நம்முடைய மாபெரும் திருப்தியாக இருக்கும்.

எனவே, நடைமுறைக்காகச் சொல்லுகிறேன். உங்கள் வாழ்க்கையை நீங்கள் தைரியமாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கைகளில் அர்ப்பணிக்கலாம். “இயேசுவே, நீர் என்னுடைய வாழ்க்கையின் மையமாக இரும். என் வாழ்க்கையின் இரட்சகராக நீர் இரும். என் வாழ்க்கையில் நீர் தலைவராக இரும்,” என்று எந்தவிதத் தயக்கமுமின்றி அவரிடம் நம் வாழ்க்கையை ஒப்புக்கொடுக்கலாம். அவரிடம் ஒப்புக்கொடுத்த ஒரு வாழ்க்கையைக்கூட அவர் மகிமையான வாழ்க்கையாக மாற்றாமல் விட்டதில்லை. அப்படிப்பட்ட மகிமையான வாழ்க்கை நம் அனுபவமாக மாறுவதாக. ஆமென்.