Transcribed from a message spoken on November 9, 2014, in Chennai
By Milton Rajendram
மனித வாழ்க்கை மனிதர்கள் புரிந்துகொள்கிற அவர்களுடைய திறமைக்கு மிகவும் அப்பாற்பட்டது. எனக்குத் தெரிந்து மனித வாழ்க்கையைப் புரிந்துகொள்ள யோபு என்ற ஒரு மாபெரும் மனிதன் முயன்றான். யோபுவின் புத்தகம் கேள்விகளால் நிறைந்தது. அவன் மனித வாழ்க்கையின் துன்பங்களுக்கும், வருத்தங்களுக்கும், இழப்புகளுக்கும், போராட்டங்களுக்கும் பதிலையும், விடையையும், தீர்வையும் தேடினான். ஒருமுறை, “நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும்; அப்பொழுது நான் அவர் ஆசனத்துக்குமுன்பாக வந்து சேர்ந்து, என் நியாயத்தை அவருக்கு முன்பாக வரிசையாக வைத்து, காரியத்தை ரூபிக்கும் வார்த்தைகளால் என் வாயை நிரப்புவேன். அவருடைய மறுமொழிகளை நான் அறிந்து, அவர் எனக்குச் சொல்வதை நான் உணர்ந்துகொள்வேன்” (யோபு 23:3-5) என்று யோபு சொன்னார்.
இந்தப் புத்தகத்தில் யோபுவும், அவனுடைய மூன்று நண்பர்களும் மாறிமாறிப் பேசுகிறார்கள்; கடைசியில் தேவன் பேசுகிறார். நான் யோபுவின் நிலைமையில் இருந்து, யோபுவின் நண்பர்கள் பேசினதுபோல் என் நண்பர்கள் பேசினால் எடுத்தவுடனே, “நான் உங்களோடு பேச விரும்பவில்லை” என்று சொல்லி, அவர்களை விரட்டியிருப்பேன். ஆனால், யோபு சோர்ந்துபோகாமல் அவனுடைய நண்பர்கள் கேள்விகள் கேட்க, இவர் பதில் சொல்ல, அவர்கள் மீண்டும் பேச, இவர் மீண்டும் பதிலுரைக்க என்று யோபுவின் புத்தகம் 42 அதிகாரங்கள் போகிறது.
யோபுவின் பெரும்பாலான கேள்விகள் தேவனைப்பற்றியவை. அவனுடைய நண்பர்கள் தேவனைப்பற்றிய ஒரு கருத்தை, ஒரு புரிந்துகொள்ளுதலை, முன்வைக்கும்போது, அவர்களுடைய கருத்தை யோபுவால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. “தேவனுடைய இருதயம் இப்படிப்பட்டது; தேவனுடைய மனம் இப்படிப்பட்டது; தேவனுடைய எண்ணங்கள் இப்படிப்பட்டவை; தேவனுடைய வழிகள் இப்படிப்பட்டவை; ஒரு மனிதனுடைய வாழ்க்கையிலே இப்படி நடைபெறுகிறது என்றால் தேவன் அதை இன்னின்ன காரணங்களுக்காகச் செய்கிறார்,” என்று அவனுடைய நண்பர்கள் வாதிடுகிறார்கள். ஆனால், யோபு அவைகளை ஒத்துக்கொள்ளவில்லை.
பரிசுத்த வேதாகமத்திலே மிகத் தொன்மையான புத்தகம் யோபுவின் புத்தகம். வேதப் புத்தகங்களை நாம் கால அட்டவணையின்படி கிரமப்படுத்தினால், எழுதப்பட்ட புத்தகங்களிலே முதலாவது வைக்கப்படும் புத்தகம் யோபுவின் புத்தகமாகத்தான் இருக்கும். யோபுவினுடைய புத்தகத்திலே எபிரெய பண்பாட்டின் எந்தத் தாக்கத்தையோ, தேவனுடைய நியாயப்பிரமாணத்தையோ, திருச்சட்டத்தையோ, அவர்களுடைய மதச்சடங்குகளையோ, பழக்கவழக்கங்களையோ பார்க்க முடியாது.
யோபு பேச, யோபுவின் நண்பர்கள் பேச, கடைசியில் அவர்களுடைய வாக்குவாதங்கள் ஒரு முடிவுக்கு வரும்போது, யோபு, “என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன். இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது. ஆகையால், நான் என்னை அருவருத்து தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன்,” (யோபு 42:5, 6) என்று சொன்னார். “அவர் எங்கே இருக்கிறார் என்று சொல்லும். நான் அவரைப் பார்த்து சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்,” என்று சொன்ன யோபு, புத்தகத்தின் முடிவிற்கு வரும்போது, “என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன். இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது. ஆகையால், நான் என்னை அருவருத்து தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன்,” என்பதுதான் அவருடைய கூற்று.
தேவன் யோபுவை முகமுகமாக எதிர்கொள்கிறார். யோபு தேவனோடு பேசுகிறார்; அவர் பல கேள்விகளை அவரிடத்தில் கேட்கிறார். அதனுடைய விளைவு, “என்னுடைய கண்களால் நான் இப்பொழுது பார்ப்பதால், நான் மனந்திரும்பி தூளிலும் சாம்பலிலும் கிடந்து, நான் என்னைத் தாழ்த்துகிறேன்,” என்று அவர் சொல்கிறார்.
“என் செவிகளால் அவரைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்,” என்பது இரண்டாம்தரமான அறிவு. “தேவனைப்பற்றி அவர் இப்படிச் சொன்னார்; இவர் அப்படிச் சொன்னார். இந்தத் தத்துவ அறிஞர் இப்படிச் சொன்னார்; அந்தத் தத்துவ அறிஞர் அப்படிச் சொன்னார்,” என்பது இரண்டாம்தரமான அறிவு. “என் கண்களால் நான் அவரைக் காண்கிறேன்,” என்பது முதல்தரமான அறிவு. இது எந்த மனிதனும் இடைத்தரகராக இல்லாமல் தேவனைப்பற்றி அறிகிற அறிவு. ஒருவேளை மனிதர்கள், “யோபுபோன்ற மாபெரும் மனிதர்களுக்குத் தேவன் இரண்டாம்தரமான அறிவு கொடுக்காமல், முதல் தரமான அறிவைக் கொடுக்கலாம். நம்மைப்போன்ற சாமானியருக்கெல்லாம்கூட தேவன் முதல் தரமான அறிவைத் தருவாரா?” என்று கேட்கலாம். என்னைப் பொறுத்தவரை தேவனை அறிந்துகொள்வதற்கு ஒரேவொரு வழிதான் உண்டு. அது முதல்தரமான அறிவாகத்தான் இருக்கும்.
இரண்டாம்தரமான அறிவு, முதல்தரமான அறிவைப்பற்றி புதிய ஏற்பாட்டிலே ஒரு நல்ல சம்பவம் உண்டு. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மரித்து, கல்லறையிலே வைக்கப்பட்டபிறகு ஞாயிற்றுக்கிழமை காலையிலே அவருக்குத் தைலம் பூசுவதற்காக மரியாளும், அவளோடுகூட ஓரிரு சகோதரிகளும் கல்லறைக்குச் சென்றார்கள். அவர்கள் கல்லறைக்கு வந்து பார்த்தபோது, கல்லறையின் வாசலிலிருந்த கல் தள்ளப்பட்டிருந்தது. கல்லறைக்குள் சென்று பார்க்கிறார்கள். அங்கு ஒரு தேவதூதனைப் பார்க்கிறார்கள். இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்துவிட்டார் என்று அந்தத் தேவதூதன் அறிவிக்கின்றான். மரியாள் போய் அதை சீடர்களிடத்தில் அறிவிக்கிறாள். அதைக் கேள்விப்பட்ட பேதுருவும், யோவானும், “ஆ! கல்லறை திறந்திருக்கிறதா? கல்லறையில் இயேசு இல்லையா?” என்ற வியப்புடன் அவரைப் பார்ப்பதற்காகக் கல்லறைக்கு ஓடி வருகின்றார்கள். கல்லறையின் வாசல்வரை யோவான் ஓடி வருகின்றார். குனிந்து பார்க்கிறார். ஆனால், அவர் உள்ளே போகவில்லை. பேதுரு வழக்கம்போல அவர் முந்திச் செல்பவராதலால் கல்லறைக்கு உள்ளேபோய்ப் பார்க்கிறார். உண்மையிலேயே இயேசுகிறிஸ்துவினுடைய உடலை அங்கு காணவில்லை. “ஆம், கல்லறையிலே இயேசுவினுடைய உடல் இல்லை,” என்று கண்டவுடன் இரண்டுபேரும் திரும்பிப் போய்விடுகிறார்கள். அவர்கள் குதித்து “அல்லேலூயா! இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்துவிட்டார்,” என்றெல்லாம் பறைசாற்றவில்லை. இன்னும் சொல்லப்போனால் உண்மையாகவே இயேசுகிறிஸ்து கல்லறையிலும் இல்லை, அவருடைய உடலை யாரும் திருடிக்கொண்டு போய் “அவர் உயிர்த்தெழுந்துவிட்டார்” என்று பொய் வதந்தி பரப்பவுமில்லை. அப்படியானால் அவருக்கு என்னதான் நடந்திருக்கும்? அவர் உயிர்த்தெழும்பியிருப்பார் என்று அவர்கள் ஊகித்திருப்பார்கள். இது இரண்டாம்தரமான அறிவு. உண்மையாகவே இயேசுகிறிஸ்து உயிர்த்துவிட்டார் என்பதை அவர்களுக்கு உறுதிப்படுத்த ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஏறக்குறைய நாற்பது நாட்கள் எடுத்துக்கொண்டார். இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார் என்ற உண்மை அவர்களுடைய இருதயத்திலே ஆழ்ந்து பதிவதற்கு பொறுமையோடு நாற்பது நாட்கள் எடுத்துக்கொண்டார். திறந்த கல்லறையை அல்லது வெற்றுக்கல்லறையைப் பார்த்தவுடன் “இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்துவிட்டார்,” என்கின்ற முடிவுக்கு அவர்கள் வரவில்லை. “இயேசுவின் உடல் அங்கு இல்லை. இயேசு அங்கு இல்லை. எனவே, அவர் உயிர்த்தெழுந்துவிட்டார்,” என்று ஒருவேளை மனதிலே ஒரு logical deduction அவர்களுக்குத் தோன்றியிருக்கலாம். அப்படித் தோன்றியிருந்தால் அது இரண்டாம் தரமான அறிவு; இரண்டாம்பட்ச அல்லது இரண்டாம் தரமான அறிவுதான்.
ஆனால், மரியாள் கல்லறையினருகே வெளியே நின்று, அழுதுகொண்டிருந்தாள். அங்கு தோட்டக்காரர்போல் தோன்றுகிற ஒரு நபர் காணப்பட்டார். அவள் அவரை அணுகி “ஐயா, என் ஆண்டவருடைய உடலை நீர் எடுத்துக்கொண்டு போனதுண்டானால் அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும்; நான் போய் அவரை எடுத்துக்கொள்வேன்,” என்றாள். அப்போது தோட்டக்காரர்போல் தோன்றின அந்த மனிதர், “மரியாளே” என்று அழைக்கிறார். இந்தக் குரல் பரிச்சயமான குரல் என்பதால் “ஆ! இது இயேசுகிறிஸ்து,” என்று அவள் உடனே அடையாளம் கண்டுபிடித்துவிடுகிறாள். உடனே அவள் “ரபூனி” என்று ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை அழைக்கின்றாள். அப்பொழுது இயேசு, “நான் உயிர்த்தெழுந்துவிட்டேன் என்பதை நீ என் சகோதரரிடத்திற்குப் போய்; நான் என் பிதாவினிடத்திற்கும், உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும், உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று சொல்,” என்றார்.
மரியாள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை அறிந்துகொண்டது முதல் தரமான அறிவு, முதல் தரமான நேரடி அறிவு. அது மறைமுக அறிவு அல்ல. ஆனால், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்துவிட்டார் என்று பேதுருவும், யோவானும் பெற்ற அறிவு நேரடி அறிவு அல்ல, அது மறைமுக அறிவு.
“சகோதரரே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷம் மனுஷனுடைய யோசனையின்படியானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன். நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை, மனுஷனால் கற்றதுமில்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார்,” (கலாத்தியர் 1:11, 12) என்று அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுகிறார். “நான் இந்த சுவிசேஷத்தை, இந்த நற்செய்தியை, ஒரு மனிதனால் பெற்றதுமில்லை; ஒரு மனிதனிடத்தில் கற்றதுமில்லை; இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார்,” என்றவுடன் நாம் என்ன நினைப்போம். “ஆ! பவுலுடைய அனுபவமும், நம்முடைய அனுபவமும் ஒப்பிடத்தக்கதா? பவுலுடைய அனுபவம் எப்பேற்பட்டது? அவன் கிறிஸ்தவர்களைக் கட்டித் துன்புறுத்துவதற்காக எருசலேமிலிருந்து தமஸ்குவுக்குச் சென்ற வழியிலே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சூரியனைவிட பிரகாசமான ஒரு ஒளியாகத் தோன்றினார். அவனுடைய கண்கள் குருடாகி விட்டன. குதிரையிலிருந்து கீழே விழுந்தான். “சவுலே, சவுலே நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்?” என்று வானத்திலிருந்து உண்டான ஒரு சத்தத்தை அவன் கேட்டான். அந்த அனுபவம் எப்படி? சாதாரண மனிதர்களுடைய அனுபவம் எப்படி?” என்று நீங்கள் நினைக்கலாம். அப்படியல்ல. அளவிலே அது மாறுபடலாம். தன்மையிலே அது மாறுபடுவதில்லை.
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தான் சந்திக்கின்ற ஒவ்வொரு நபருக்கும், ஒவ்வொரு மனிதனுக்கும், ஒவ்வொரு மனுஷிக்கும், தன்னை வெளிப்படுத்துகிறார்.
யோபுவின் புத்தகத்தைப்போல வாழ்க்கையின் ஆழமான கேள்விகளை எழுப்புகின்ற இன்னொரு புத்தகம் பிரசங்கியின் புத்தகம். ஒரு பகுதியை நான் வாசிக்க விரும்புகிறேன். “வானத்தின்கீழ் மனுபுத்திரர் உயிரோடிருக்கும் நாளளவும் பெற்று அநுபவிக்கத்தக்கது இன்னதென்று அறியும்பொருட்டு, என் இருதயத்தை ஞானத்தால் தேற்றிக்கொண்டிருக்கும்போதே, நான் என் தேகத்தை மதுபானத்தால் சீராட்டிக் கொண்டிருக்கவும், மதியீனத்தைப் பற்றிக்கொண்டிருக்கவும் என் உள்ளத்தில் வகைதேடினேன். நான் பெரிய வேலைகளைச் செய்தேன்; எனக்காக வீடுகளைக் கட்டினேன், திராட்சத்தோட்டங்களை நாட்டினேன். எனக்காகத் தோட்டங்களையும், சிங்காரங்களையும் உண்டாக்கி, அவைகளில் சகலவகைக் கனி விருட்சங்களையும் நாட்டினேன். மரங்கள் பயிராகும் தோப்புக்கு நீர்பாய்ச்சுகிறதற்குக் குளங்களை உண்டுபண்ணினேன். வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும் சம்பாதித்தேன்; வீட்டிலும் வேலைக்காரர் பிறந்தார்கள்; எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் ஆடுமுதலான திரண்ட ஆஸ்திகள் எனக்கு இருந்தது. வெள்ளியையும், பொன்னையும், ராஜசம்பத்தையும் மாகாணங்களிலுள்ள பொருள்களையும் சேகரித்தேன்; சங்கீதக்காரரையும், சங்கீதக்காரிகளையும், மனுபுத்திரருக்கு இன்பமான பலவித வாத்தியங்களையும் சம்பாதித்தேன். எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் நான் பெரியவனும், திரவியசம்பன்னனுமானேன்; என் ஞானமும் என்னோடேகூட இருந்தது”. “எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் நான் பெரியவனும், திரவியசம்பன்னனுமானேன். என் ஞானம் என்னோடேகூட இருந்தது. என் கண்கள் இச்சித்தவைகளில் ஒன்றையும் நான் அவைகளுக்குத் தடைபண்ணவில்லை. என் இருதயத்துக்கு ஒரு சந்தோஷத்தையும் நான் வேண்டாமென்று விலக்கவில்லை. நான் செய்த முயற்சிகளிலெல்லாம் என் மனம் மகிழ்ச்சிகொண்டிருந்தது. இதுவே என் பிரயாசங்கள் எல்லாவற்றினாலும் எனக்கு வந்த பலன்” (பிரசங்கி 2:3-10).
இது எருசலேமிலே இஸ்ரயேலின் ராஜாவாகிய சாலொமோன் எழுதின புத்தகம் என்று நமக்குத் தெரியும். சாலொமோனைப்பற்றி கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல. இந்த உலகத்திலே எல்லா மனிதர்களும் தெரிந்து வைத்திருப்பார்கள். சாலொமோனுடைய ஞானம் பிரசித்திபெற்றது. அவனுடைய செல்வம்கூட பிரசித்திபெற்றது. சாலொமோனுடைய நாட்களிலே இஸ்ரயேலிலே வெள்ளி ஒரு பொருளாகக் கருதப்படவில்லை.
அதைப்போன்ற ஒரு கதையை நான் தமிழ்நாட்டிலே மட்டும்தான் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தக் காலத்திலே கோழி விரட்டுவதற்காக காதிலே போட்டிருந்த தங்கக் கம்மலை கழற்றி எறிந்து ஒரு பெண் கோழியை விரட்டினாளாம். அந்த அளவுக்குச் செல்வச் செழிப்பாம். அதுபோல சாலொமோனின் நாட்களிலே வெள்ளி ஒரு பொருளாகக் கருதப்படவில்லை என்று நாளாகமத்திலே நாம் வாசிக்கிறோம்.
இந்த நீண்ட பட்டியலை நீங்கள் பொறுமையாக வாசித்துப் பாருங்கள். ஏறக்குறைய அவன் வாழ்க்கை முழுவதையும் வைத்து ஒரு பரிசோதனையை நடத்துகிறான். ஒரு பரிசோதனை செய்வதற்கு என்னுடைய வாழ்க்கை முழுவதையும் நான் செலவுசெய்ய வேண்டுமென்றால் நான் அதைக்குறித்து ஆயிரம் மடங்கு எச்சரிக்கையாக இருப்பேன். ஒருவேளை இந்தப் பரிசோதனை ஒரு வாரம் போகும் அல்லது ஒரு மாதம் போகும் அல்லது ஒரு வருடம் போகும் அல்லது மூன்று வருடங்கள் போகும் என்றால் ஒருவேளை சோதித்துப்பார்ப்பதற்கு நான் தயாராக இருப்பேன். ஆனால், இந்தப் பரிசோதனை என்னுடைய வாழ்க்கையையே பலியாக்கும் என்றால் நான் இந்தப் பரிசோதனையில் ஈடுபட மாட்டேன்.
சாலொமோன் தன்னுடைய வாழ்க்கை முழுவதையும்கொண்டு பரிசோதனை செய்து பார்க்கின்றான். “வாழ்க்கையில் நிறைவான சந்தோஷத்தைப் பெறுவது எப்படி?” என்று சாலொமோனைப்போல் பரிசோதனை செய்து பார்த்த வேறொரு மனிதன் இல்லை. அவனுடைய மொழியிலேயே சொல்வதானால், வானத்தின்கீழே பூமியிலே வேறொரு மனிதன் வாழ்ந்ததில்லை. அவனுடைய பரிசோதனையினுடைய முடிவு என்ன?; “என் கைகள் செய்த சகல வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன்; இதோ எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது” (வ. 11).
நீங்கள் தொடர்ந்து முழுப் புத்தகத்தையும் வாசித்துப்பாருங்கள். பிரசங்கியின் புத்தகத்தைப் புரிந்துகொள்வது கடினமானதல்ல. பிரசங்கியினுடைய கூற்றுகளெல்லாவற்றையும் தேவனுடைய வாக்காக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏனென்றால், அந்தப் புத்தகம் ஒரு மனிதன் தன் வாழ்க்கையை ஒரு பரிசோதனைக்கூடமாகக் கருதி, அதில் பரிசோதனை நடத்தி, அதின் முடிவுரையை எழுதுகின்ற புத்தகம். அவன் அதில் தன் முடிவுரையை மட்டும் எழுதவில்லை. பரிசோதனை நடக்கும்போது தன் சில அனுபவங்களையும் எழுதுகிறான்.
“இந்த உலகத்திலே ஒரு நல்ல பெண்கூட இல்லை,” என்று அவன் எழுதுகிறான். உடனே “பைபிளில் சொல்லிவிட்டார்கள். இந்த உலகத்திலே ஒரு நல்ல பெண்கூட இல்லை,” என்ற முடிவுக்கு நாம் வந்து விடக்கூடாது. அது அவன் பரிசோதனை நடத்துகிறபோது எழுதுகிறான். முந்நூறு மனைவிகளையும், எழுநூறு மறுமனையாட்டிகளையும் வைத்திருக்கிறவன் வேறு என்ன எழுத முடியும்? அவன் பரிசோதனையினுடைய அற்றத்திற்குப் போய்விட்டான் என்றுதான் சொல்ல முடியும். “எல்லாம் மாயையும், மனதிற்குச் சஞ்சலமுமாயிருந்தது” என்பது அவனுடைய முடிவு. மாயை என்றால் வெறுமை என்று பொருள். அது தன் வாழ்க்கையின் முடிவிற்கு வரும்போது தன்னுடைய வாழ்க்கையைப்பற்றி அவன் கொடுக்கின்ற முடிவுரை. இது ஒரு மாயை.
“எது மாயை? நீ, உன் அண்ணன், தம்பி எல்லாரையும்விட இந்த நாட்டிற்கு அரசனானது மாயையா? முந்நூறு மனைவிகளையும், எழுநூறு வைப்பாட்டிகளையும் வைத்திருந்தது மாயையா? ஆயிரக்கணக்கான வேலைக்காரர்களையும், வேலைக்காரிகளையும் வைத்திருந்தது மாயையா? தோட்டங்களையும், துரவுகளையும், குளங்களையும், ஆடல்களையும், பாடல்களையும் ஒவ்வொரு நாளும் அனுபவித்தது மாயையா? நீ அறிவைப் பெருக்கினது மாயையா? எது மாயை?” அவனுடைய முடிவுரை, “எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது”.
பிரசங்கியிலிருந்து பல வசனங்களை மேற்கோள் காட்டலாம். ஆனால், என் கருத்தை மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன். “அவன் நாட்களெல்லாம் அலுப்புள்ளது, அவைகள் வருத்தமுள்ளது. இராத்திரியிலும் அவன் மனதுக்கு இளைப்பாறுதலில்லை; இதுவும் மாயையே” (வ. 23). என் இருதயத்தை மிகவும் தாக்கின ஒரு வார்த்தை என்னவென்றால் இராத்திரியிலும் அவன் மனதுக்கு இளைப்பாறுதலில்லை.
அவன் நடத்தின பரிசோதனை என்னவென்று நாம் வாசித்தோம். அவன் தன் அனுபவத்தைச் சொல்லும்போது, “இராத்திரியிலும் அவன் மனதுக்கு இளைப்பாறுதல் இல்லை,” என்று சொல்லுகிறான். பெரும்பாலும் மனிதர்கள் தூங்கும்போதாவது அவர்களுக்கு இளைப்பாறுதல் இருக்கும். ஆனால், அவன் தூங்கும்போதுகூட அவனுக்கு இளைப்பாறுதல் இல்லை.
இவனுடைய தகப்பனாகிய தாவீது தூக்கத்தைப்பற்றித் தன் அனுபவத்தைச் சொல்கிறான். “God provides His beloved in their sleep” என்று ஆங்கிலத்தில் இருக்கும். தமிழிலே “அவர் தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரையளிக்கிறார்,” என்று இருக்கும். “நீங்கள் அதிகாலையில் எழுந்து, நேரப்பட வேலையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா; அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்” (சங். 127:3). அவன் தகப்பனாகிய தாவீதின் வாழ்க்கையினுடைய தத்துவம் என்ன? மகனுடைய வாழ்க்கைத் தத்துவம் என்ன? “அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரையளிக்கிறார்”. அதன் பொருள் என்ன? தமக்குப் பிரியமானவர்கள் தூங்கும்போதே அவர்களுக்கு என்ன தேவையோ அந்தத் தேவைகளைத் தேவன் பூர்த்திசெய்கிறார் என்பது அதன் பொருள். இது மட்டுமல்ல. தூக்கத்தைக்குறித்து தாவீது இன்னும்கூட எழுதுகிறார். “சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன். கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்” (சங். 4:8).
சாலொமோனுடைய வாழ்க்கையோடு தாவீதினுடைய வாழ்க்கையை ஒப்பிடும்போடு தாவீதினுடைய வாழ்க்கை துன்பங்களாலும், போராட்டங்களாலும், அச்சுறுத்தல்களாலும் நிறைந்த ஒரு வாழ்க்கை. சவுல் அவனைக் கொலைசெய்யத் தேடியபோது அதற்குத் தப்பித்துக்கொள்ள அவன் ஓடி ஒளிந்ததே அவனுடைய வாழ்க்கையின் பெரும் பகுதியை எடுத்துக்கொண்டது. அவனுடைய மகனாகிய அப்சொலோம் அவனைக் கொலைசெய்யப் பின்தொடர்ந்தது அவனுடைய வாழ்க்கையின் இன்னொரு பெரும் பகுதியை எடுத்துக்கொண்டது. சிறுவயது முதற்கொண்டு அவனுடைய வாழ்க்கை துன்பமும், போராட்டங்களும், போர்களும் நிறைந்த வாழ்க்கை. “போர்களும், போராட்டங்களும், என்னைத் துன்புறுத்துகிறவர்களும், என்னைப் பின்தொடருகிறவர்களும், என்னைக் கொலைசெய்யத் தேடுகிறவர்களும் இருக்கும்போதுகூட நான் சுகமாய்ப் படுத்து நித்திரைசெய்கிறேன். கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறவர்,” என்று அவன் சொல்கிறான்.
இந்த மனிதர்களுடைய வாழ்க்கையெல்லாம் நமக்குத் திருஷ்டாந்தமாக, முன்னுதாரணமாக, எழுதப்பட்டிருக்கிறது. இந்த வாழ்க்கைகளெல்லாம் அற்பமான வாழ்க்கைகள் அல்ல. அவர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் வாழ்ந்து பார்த்து, அதனுடைய முடிவை எழுதியிருக்கின்றார்கள்.
சாலொமோன் தன் வாழ்க்கையை ஆரம்பிக்கும்போது, தன் தகப்பனாகிய தாவீதின் தேவனுக்கு ஒரு உத்தமமான வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறான். ஆனால், ஏசாயா 31இலே சொல்லப்பட்டிருப்பதுபோல, “எல்லா மனிதர்களும் கர்த்தரைத் தேடாமல், நம்பாமல், குதிரைகளைத் தேடுகிறார்கள், இரதங்களைத் தேடுகிறார்கள். எகிப்துக்கு போகிறார்கள்”. பெரிய ஆளாக இருக்க வேண்டுமென்றால் எகிப்தின் குதிரைகளைத் தேட வேண்டும்; படைவீரர்களைப் பெருக்க வேண்டும். செல்வத்தைப் பெருக்க வேண்டும்; மனைவிகளை, வைப்பாட்டிகளை, பெருக்க வேண்டும். அப்போதுதானே வாழ்க்கையின் முடிவுக்கு வரும்போது “என்னைப்போல் சம்பிரமமாய் சாப்பிடத்தக்க மனிதன் யார்?” என்று சொல்ல முடியும். ஆனால், “அவனுடைய மனதுக்கு இராத்திரியும் இளைப்பாறுதல் இல்லை”.
“அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார். உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார். ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான்” (சங். 3:11). இதுவும் தமிழிலே அவ்வளவு நன்றாக மொழிபெயர்க்கப்படவில்லை. ஆங்கிலத்தில், “He has put eternity in man’s heart” என்று இருக்கும். அவர் நித்தியத்தையும் மனிதனுடைய இருதயத்திலே வைத்திருக்கிறார். ஒருவேளை பிரசங்கியிலே சாலொமோன் ஒரு வெளிப்பாட்டை எழுதியிருக்கிறான் என்றால் இதுதான் மிக உயர்ந்த வெளிப்பாடு. ஆங்காங்கே பல்வேறு வெளிப்பாடுகளை சாலொமோன் எழுதுகிறார். ஆனால் மிக உயர்ந்த வெளிப்பாடு; “He has put eternity in man’s heart” என்பதுதான். தேவன் மனிதனைப் படைக்கும்போது, அவனை உண்டாக்கும்போது, அவனுடைய இருதயத்திலே நித்தியத்தை வைத்திருக்கிறார். அவனுடைய இருதயத்திலே நித்தியம் என்று ஒன்று இருப்பதினால் இந்த உலகத்திலே மனிதர்கள் எதையெல்லாம் மாபெரும் இன்பங்கள் அல்லது சொத்துக்கள் என்று கருதுகின்றார்களோ அவைகளைவைத்து அவன் இருதயத்தில் இருக்கின்ற அந்த நித்தியத்தை நிரப்ப முடியாது அல்லது நிறைவுசெய்ய முடியாது.
Blasie Pascal என்பவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஒரு French mathematician and Physicist. இவரைப்பற்றி நான் அடிக்கடி சொன்னதுண்டு. இவர் ஒரு ரோமன் கத்தோலிக்கராக இருந்தார். உண்மையிலேயே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைக் கண்டுகொண்ட ஒரு விஞ்ஞானி. பொதுவாக “இந்த விஞ்ஞானி இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார். அந்த விஞ்ஞானி இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்,” என்றெல்லாம் நான் பரவசப்பட்டுவிடுவது இல்லை. எந்த ஒரு விஞ்ஞானியும் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் இந்த இயேசுகிறிஸ்து ஈடுயிணையற்ற, ஒப்புயர்வில்லாத, தன்னிகரற்ற நபர். ஆனால், சிந்திக்கின்ற விஞ்ஞானிகள் சிலர் இயேசுகிறிஸ்துவைக் கண்டுகொண்டார்கள்.
Blasie Pascal research இல் ஒன்று “Pressure of Liquids or Gases”. “God has created a vacuum in every man’s heart; there is a vacuum in every man’s heart” என்று அவர் சொல்வதுண்டு. ஒவ்வொரு மனிதனுடைய இருதயத்திலும் தேவனால் உண்டாக்கப்பட்ட ஒரு வெற்றிடம் உள்ளது. இது பிரசங்கி 3:11யினுடைய Blasie Pascalலுடைய மொழிபெயர்ப்பு என்று நான் நினைக்கிறேன். He has put eternity in man’s heart. அந்த eternityயை இந்த உலகத்திலே எவை எவையெல்லாம் என்னைத் திருப்திசெய்யும் என்று நினைக்கிறேனோ அவைகளைவைத்து நிரப்ப முடியவில்லை. அவைகள் எல்லாவற்றையும் நான் கொண்டு போட்டாலும் என்னுடைய இருதயத்திலுள்ள அந்த நித்தியத்தை என்னால் திருப்தியாக்க முடியவில்லை என்பதும், Blasie Pascalலுடைய “There is a God shaped vacuum in every man’s heart தேவனால் உருவாக்கப்பட்ட ஒரு வெற்றிடம் உண்டு” என்பதும் ஒரே வாக்கியம்தான். இது உண்மை.
மனிதனுடைய நிலைமை என்னவென்பதை வேதம் அறிவிக்கிறதேதவிர, வேதம் வாதிடவில்லை. “இதுதான் மனிதனுடைய இருதயம்,” என்று வேதம் வாதிடவில்லை. யோபு என்கிற ஒரு மனிதன் வாதிட்டான். அந்த வாதத்தின் முடிவு என்னவென்று நாம் சொல்லியாயிற்று.
நற்செய்தியை நாம் அறிவிக்கின்றோம்; நற்செய்தியை நாம் வாதிடவில்லை. இதற்கு அர்த்தம் நாம் நற்செய்தியை ஒரு மூடநம்பிக்கையைப்போல் சொல்லவில்லை. கண்மூடிப்பழக்கமாக, “இயேசுவை நம்பு; உனக்குண்டு தெம்பு; இல்லையென்றால் வம்பு” என்கிற பாணியில் நாம் நற்செய்தியை அறிவிப்பது இல்லை. இதைச் சொல்வதற்கும் நான் பயப்பட மாட்டேன். இதை ஒரு கிராமத்தில் சொல்ல வேண்டியிருக்கிறது என்றால் நான் சொல்வேன். ஆனால், மிக யோசித்துச் சொல்வேன். “இல்லையென்றால் வம்பு” என்பதை நான் சொல்லமாட்டேன்.
நாம் வாழ்கின்ற காலங்களும், வாழ்கின்ற சூழ்நிலைகளும் மாறிக்கொண்டிருக்கின்றன என்பதை நாம் அறிவோம். ஆனால், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நேற்றும், இன்னும், என்றும் மாறாதவராயிருக்கிறார் (எபி. 13:8). தேவனுடைய மக்கள் இந்த 20 நூற்றாண்டுகளாக ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள். எல்லா நூற்றாண்டுகளிலும் அவர்களுக்கு சவால் விடப்பட்டிருக்கிறது. எல்லா நூற்றாண்டுகளும் துன்பத்தை அனுபவித்திருக்கின்றார்கள். சில நூற்றாண்டுகளிலும் அவர்களை நாஸ்திகர்கள் என்றுகூடத் துன்புறுத்தியிருக்கிறார்கள். ரோமப் பேரரசு கிறிஸ்தவர்களை கிறிஸ்தவ விசுவாசத்திற்காகத் துன்புறுத்தவில்லை. “இவர்கள் நாஸ்திகர்கள். ஏனென்றால், இவர்களுக்குக் கோவில் இல்லை. அப்படியே கோவில்கள்போல் ஏதாவது இருந்தாலும் அந்தக் கோவில்களில் தெய்வம் இல்லை. இவர்களுக்குப் பூசாரி இல்லை. இவர்கள் தெய்வ நம்பிக்கை அற்றவர்கள்,” என்று கி.பி. 65 தொடங்கி ஏறக்குறைய கி.பி. 4ஆம் நூற்றாண்டுவரை, கி.பி 4 ஆம் நூற்றாண்டிலே காண்ஸ்டென்டைன் ரோமப் பேரரசனாக வருகின்றவரை, தேவனுடைய மக்கள் தங்கள் விசுவாசத்திற்காகச் செலுத்தின் கிரயம் மிகப் பெரிது! எரிக்கப்பட்ட தேவனுடைய மக்கள், சிந்தப்பட்ட தேவனுடைய மக்களுடைய இரத்தம், கிழிக்கப்பட்ட தேவனுடைய மக்களுடைய உடல்களின் எண்ணிக்கை எண்ணிக்கையிலடங்காது.
மனிதனுடைய இருதயத்திலே நித்தியம் என்ற ஒன்றை தேவன் வைத்திருக்கிறார். அதைத் தேவன் ஒருவர்தான் திருப்திசெய்ய முடியுமேதவிர வேறு எவரும் திருப்திசெய்ய முடியாது. இதுதான் என் முதல் குறிப்பு.
இந்த உலகத்திலே ஒரு மிகச் சிறப்பான மதம் உருவாக்கப்பட்டது என்றால் அது யூதமதம். தேவன் யூதமதத்தை உண்டாக்கவில்லை. தேவன் நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார். நாளடைவிலே யூதர்கள் அதை யூதமதமாக வடிவமைத்துக்கொண்டார்கள். மனிதர்களைப் பரவசப்படுத்துகிற, பிரமிக்கவைக்கின்ற, மகிழ்விக்கின்ற, களிப்பூட்டுகின்ற எல்லா அம்சங்களும் அடங்கிய மதம் யூதமதம். உங்களுக்குக் கோவில் வேண்டுமா? ஜெபஆலயங்கள் வேண்டுமா? பாடல் வேண்டுமா? ஆடல் வேண்டுமா? திருவிழாக்கள் வேண்டுமா? பலிசெலுத்துதல் வேண்டுமா? நியாயப்பிரமாணம் வேண்டுமா? நீதி வேண்டுமா? இந்த மதத்தில் எல்லாம் உண்டு.
ஒருநாள் இயேசுகிறிஸ்துவைச் சந்தித்த ஒரு வாலிபன், “நல்ல போதகரே! நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். அதற்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, “விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக. களவு செய்யாதிருப்பாயக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக…” என்று அவர் பதில்சொல்லும்போது அவன், “இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் நான் கைக்கொண்டுவருகிறேன்” என்றான். இது ஒரு typical யூதன். “என்னிடத்தில் என்ன குறை உண்டு? What do I still lack?” யூத மதத்தில் பிறந்து வளர்க்கப்பட்ட எந்த மனிதனுடைய மனப்பாங்கும் அதுதான். “இன்னும் என்னிடத்தில் என்ன குறை உண்டு? வாரத்திற்கு இரண்டுமுறை உபவாசிக்கிறேன். என் சம்பாத்தியம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுக்கிறேன். நான் இந்தப் பாவியைப்போன்றவன் அல்ல,” என்பதுதான் அவர்களுடைய மனப்பாங்கு.
யோவான் 7ஆம் அதிகாரம் இது. எருசலேமிலே யூதர்களின் ஒரு நீண்ட பண்டிகை நடக்கின்றது. பண்டிகை அல்லது திருவிழா என்பது மனிதர்களுடைய மத sentimentsயைத் திருப்திசெய்கின்ற ஒன்று. எல்லா மனிதர்களுக்கும் religious sentiments உண்டு. அது அவர்களுக்குத் திருப்தியாக வேண்டும்.
மதத்தின் பெயராலே எப்படிப்பட்ட அட்டூழியத்தையும் செய்ய முடியும்! Blasie Pascalலின் இன்னொரு அருமையான கூற்று இது. “Men never do evil so willingly and so thoroughly as when they do it out of religious conviction.” “மனிதர்கள் தீங்குகள் செய்வார்கள்; ஆனால், மதத்தின் பெயரால் தீங்கு செய்வதைப்போல முழு இருதயத்தோடும், முழு மகிழ்ச்சியோடும் அவர்கள் வேறு எந்தக் காரணத்திற்காகவும் தீங்கு செய்வதில்லை”.
பண்டிகையின் கடைசி நாளிலே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து எழுந்துநின்று பேசுகிறார். பொதுவாக பண்டிகை என்றால் பல நாட்கள் நடைபெறும். எந்த மதமாக இருந்தாலும் சரி திருவிழாவின் கடைசி நாள் என்றால் the atmosphere should be charged. தேர் என்ன? ரதம் என்ன? சப்பரம் என்ன? அந்த ஆண்டவர், இந்த ஆண்டவர் என்ன? அவர்களுடைய ஆட்டம் என்ன? பாட்டம் என்ன? கூத்து என்ன? கொடைராட்டினம் என்ன? இவர்களுடைய திருவிழா இப்படி இருக்குமா என்று எனக்குத் தெரியாது. ஆனால், அவர்கள் திருப்தியாக இருக்க வேண்டும். கடவுளுக்கு கடவுள் ஆயிற்று. கொண்டாட்டத்திற்கு கொடைராட்டினம் ஆயிற்று.
“பண்டிகையின் கடைசி நாளாகிய பிரதான நாளிலே இயேசு எழுந்து, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ அவன் உள்ளத்திலிந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக் குறித்து இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்த ஆவி இன்னும் அருளப்படவில்லை” (யோவான் 7:37-39). “நீ யார் என்று உன்னை நினைத்துக்கொண்டு ஒரு பெரிய claim வைக்கிறாய்?” என்று யூதத் தலைவர்கள், யூத மதக்குருக்கள், வேதபாரகர்கள், பரிசேயர்கள், ஆசாரியர்கள், பிரதான ஆசாரியர் எல்லாரும் கேட்கிறார்கள்.
தாகமாயிருந்தால் என்றால் “நான் நிறைவாய் இருக்கிறேன் என்று உன் இருதயத்தைத் தொட்டு சொல். Be honest. உன்னுடைய மதமோ அல்லது இந்த உலகத்திலே சாலொமோனைப்போல எவைகளெல்லாம் உன்னைப் பெரிய ஆள் என்ற எண்ணத்தை தருமோ அவைகளெல்லாம் உண்மையிலேயே உன்னைத் திருப்தியாக்கினது உண்டு என்று உன் இருதயத்தைத் தொட்டுச் சொல்,” என்று பொருள். தாகமாயிருந்தால் என்றால் “இவையெல்லாம் எனக்கு உண்டு. ஆனால் ஏதோ ஓர் ஆழ்ந்த பகுதியிலே (வேதாகமம் அதை மனிதனுடைய ஆவி என்று அழைக்கின்றது) மனிதனுடைய ஒரு ஆழ்ந்த பகுதியிலே இளைப்பாறுதலில்லை. அவனுக்கு அங்கு அமைதலோ, சமாதானமோ, இளைப்பாறுதலோ இல்லை,” என்று பொருள்.
“ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வரக்கடவன்,” என்று ஆண்டவராகிய இயேசு சொல்கிறார் உன்னுடைய எல்லாப் பண்டிகைகளுக்குப்பிறகும், உன்னுடைய கோலாகலங்கள், குதூகலங்கள், கொண்டாட்டங்கள் எல்லாம் அடங்கினபிறகும் உனக்குத் தாகம் இருக்கிறது. தாகம் இருந்தால் என்ன செய்ய வேண்டும்? ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மதத்தைக் கொடுக்கவில்லை. வாழும் கலையைக் கற்றுக்கொடுக்கவில்லை. இன்றைய குருக்களைப்போல நான் உங்களுக்கு ஒரு யுக்தியைச் சொல்லிக் கொடுக்கப்போவதில்லை. “அனைத்திற்கும் ஆசைப்படு” என்று ஒரு குரு சொல்கிறார். என்னமோ மனிதனுக்கு ஆசைப்படத் தெரியாது என்பதுபோலவும், இவர் சொல்லிக்கொடுத்தால்தான் மனிதனுக்கு ஆசைப்படத் தெரியும் என்பதுபோலவும் சொல்லுகிறார். “அனைத்திற்கும் ஆசைப்படு” என்று சின்னப் பிள்ளைக்குக்கூட நாம் சொல்லிக்கொடுக்கத் தேவையில்லை. இவர் பெரிய குருவாம்!
ஆனால், என்னுடைய குருவாகிய இயேசு “நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மனித குமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை,” (மத். 8:20) என்று சொன்னார். (“ஒருவன் என்னைப் பின்பற்றிவர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்”( (மத். 18:24). சிலுலையில்லாத இயேசுகிறிஸ்துவை இந்த உலகம்தான் கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும்.
“என்னிடத்தில் வந்து பானம்பண்ணக்கடவன். என்னை விசுவாசிக்கிறவனுடைய உள்ளத்திலிருந்து ஜீவத் தண்ணீருள்ள நதிகள் புறப்பட்டு ஓடும்.” யோபுவை நூறு தடவை வாசிக்க வேண்டுமென்றால் யோவான் எழுதின் நற்செய்தியையும் நூறுதடவை வாசிக்க வேண்டும். “எல்லாவற்றையும் நூறு தடவை வாசிக்க வேண்டுமென்றால் வேலை இல்லாமல் அல்லது வேலையைவிட்டுவிட்டுத்தான் நூறு தடவை வாசிக்க முடியும்,” என்று ஒருவேளை சிலர் நினைக்கலாம். இல்லை, இல்லை, இல்லை. செய்தித்தாள் படிக்கிற நேரம், Youtube இலே அந்தப் பாட்டு, இந்த ஜோக் கேட்கின்ற நேரம் ஆகியவைகளையெல்லாம் எடுத்துவிட்டால் யோவான் எழுதின நற்செய்தியை நூறு தடவை வாசிக்கலாம். நீங்கள் யோவான் எழுதின நற்செய்தியை நூறு தடவை வாசித்தால் இயேசுகிறிஸ்துவை அப்படியே தத்துருபமாய்ப் பார்ப்பீர்கள். அந்த நற்செய்தியை நூறு தடவை வாசித்தவர்களைக் கேட்டுப்பாருங்கள்.
சில மாதாந்தரப் பத்திரிகைகளில் குழந்தைகளுக்கென்று சில பக்கங்களை ஒதுக்கியிருப்பார்கள். அதில் கன்னாபின்னாவென்று கிறுக்கியிருப்பார்கள். ஆனால், “நீங்கள் கொஞ்ச நேரம் இந்தப் படத்தை உற்றுப்பாருங்கள். அப்போது நீங்கள் ஒரு மாளிகையைக் காண்பீர்கள்,” என்று எழுதியிருப்பார்கள். உற்றுப் பார்த்தால் அப்படித் தெரியும்.
உண்மையிலேயே யோவான் எழுதின நற்செய்தியை நாம் உற்றுப்படித்தால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எப்படிப்பட்ட நபர் என்பதைப் பரிசுத்த ஆவியானவர் நமக்குக் காண்பிப்பார். இயேசுகிறிஸ்து தம் வார்த்தைகளிலே சொற்சிலம்பம் பண்ணவில்லை. அவர் நேரடியாய்ச் சொன்னார். “நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறேன். என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:7). அதன் பொருள் என்னவென்றால் மனிதர்களுக்குப் புலப்படும் வண்ணம் இம்மையிலும் சரி, மறுமையிலும் சரி, தேவன் இயேசுகிறிஸ்துவில் மட்டுமே வெளிப்பட்டார். “You are very dogmatic”என்று எந்த மனிதர்கள் சொன்னாலும் சரி, இது உண்மை. நான் ரோமன் கத்தோலிக்கனாய்ப் பிறந்து வளர்க்கப்பட்டவன். அதனால் கோயிலின் உள்ளே மேற்புறத்தில் பார்த்தால் வெள்ளைத் தாடியோடு பிதா இருப்பார், குமாரன் ஞானஸ்நானம் பெறுகிற காட்சி இருக்கும், ஒரு புறாவானவர் வரையப்பட்டிருப்பார். ரோமன் கத்தோலிக்க கோயில்களில் அப்படித்தான் இருக்குமா என்று எனக்குத் தெரியாது. எங்கள் ஊர் தேவாலயத்தில் அப்படி இருக்கும்.
நான் இயேசுகிறிஸ்துவை அறிந்தபிறகுகூட அந்தக் கற்பனையிலிருந்து நான் விடுவிக்கப்படுவதற்கு பல ஆண்டுகள் ஆயிற்று. பிதா என்றாலே எனக்கு எங்கள் ஊர் தேவாலயத்தில் பார்த்த அந்த வெள்ளைத் தாடி வைத்தவர்தான் நினைவுக்கு வருவார். சிறுவயது முதற்தொடங்கி நாம் எதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோமோ அது நம்முடைய மனதைவிட்டு அகன்றுபோவதற்கு கொஞ்சக் காலங்கள் ஆகலாம். ஆனால், உண்மை தெரியும்.
“நானே வாசல்” (யோவான் 10:7) என்று அவர் சாதிக்கின்றார். லாசரு இறந்தபோது (“நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்,”* (யோவான் 1125, 26) என்றார்.
ஆண்டவராகிய இயேசு, “நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்கே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் செல்லுகிறேன்,” (யோவான் 6:53) என்று சொன்னார். அவருடைய சீடர்களில் அநேகர் அதைக் கேட்டபோது, “ஓ! இவன் எப்படி தன்னுடைய மாம்சத்தைப் புசிக்கக் கொடுத்து, தன்னுடைய இரத்தத்தைப் பானம்பண்ணக் கொடுப்பான்? இது பின்பற்றுவதற்கு மிகவும் கடினமான உபதேசம்,” என்றார்கள். அதுமுதற்கொண்டு அவருடைய சீடர்கள் அவரைப் பின்பற்றாமல் பின்வாங்கிப் போனார்கள் (யோவான் 6:66). என்று எழுதியிருக்கிறது. எஞ்சியிருப்பவர்களைப் பார்த்து, “நீங்கள் போய்விடமாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன்,” என்று சொல்லாமல் “நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களா?” என்று கேட்கிறார். இது என்ன கேள்வி? இருக்கிறவர்களையாவது நாம் தக்கவைத்துக்கொள்ள வேண்டாமா? “நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களா?” இது ஒரு fine management skill என்று யாராவது சொல்வார்களா? பேதுரு, “ஆண்டவரே, யாரிடம் போவோம்? வாழ்வுதரும் வார்த்தைகள் உம்மிடம் அன்றோ உள்ளன,” என்று பதிலளிக்கிறார். இது ரோமன் கத்தோலிக்க மொழிபெயர்ப்பு. “நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே”.
மனிதனுடைய எல்லாப் பிரச்சனைகளுக்கும், சிக்கல்களுக்கும் தீர்வாக ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து வெறும் யுக்தியையோ, வேறு எதையுமோ கொடுக்கவில்லை. அவர் தம்மையே மனிதனுடைய எல்லாத் தேவைகளையும் நிரப்பீடு செய்யும் தீர்வாக வழங்கினார்.
பொலிகார்ப் என்ற பரிசுத்தவானைப்பற்றி சமீபத்தில் படித்துக்கொண்டிருந்தேன். அவருடைய எண்பத்தாறு வயதிலே அவரைக் கொலைசெய்வதற்காக ரோமப் போர்ச்சேவகர்கள் அனுப்பப்படுகிறார்கள். அவர் தன்னை ஒப்புக்கொடுப்பதற்குத் தயாராகத்தான் இருக்கிறார். ஆனால் சகோதரர்கள், “இல்லை, இல்லை. நீங்கள் தப்பித்துப்போங்கள், தப்பித்துப்போங்கள்,” என்றதால் அவர் பலமுறை தப்பித்துத் தப்பித்துப் போகிறார். ஆனால், ரோமப் போர்வீரர்கள் அவரைப் பின்தொடர்கிறார்கள். அவர் ஒரு வயலிலே தங்கியிருக்கும்போது ரோமப் போர்வீரர்கள் அவரைப் பிடித்துவிடுகிறார்கள். பிடித்தவுடன் அங்கிருக்கிற சகோதரரிடத்திலே, “வந்தவர்களுக்கெல்லாம் நல்ல ஒரு விருந்து சமையுங்கள்,” என்று சொல்லுகிறார். போர்வீரர்களிடம், “எனக்கு ஒரு மணி நேரம் தர முடியுமா?” என்று அனுமதி கேட்டபின், அந்த ஒரு மணி நேரத்திலே அவர் ஜெபிக்கிறார். அதன்பிறகு அந்தப் போர்வீரர்கள் அவரை நீதிபதியிடம் கூட்டிச்செல்கிறார்கள். இந்த எண்பத்தாறு வயதான, பக்தியுள்ள மனிதனைப் பார்க்கும்போது நீதிபதியின் மனம் இளகிவிடும் என்று நினைக்கிறீர்களா? நீதிபதி பொலிகார்ப்பைப் பார்த்து, “இராயனே கர்த்தர் என்று சொன்னால் உமக்கு விடுதலை” என்று சொன்னார். அதற்கு “இயேசுவே கர்த்தர்” என்பதுதான் அவருடைய பதில். “அறுபது வருடங்கள் என்னுடைய எஜமானாகிய இயேசுவை நான் சேவித்துக்கொண்டிருக்கிறேன். ஒருமுறை கூட அவர் உண்மையில்லாதவராக இருக்கவில்லை. நான் எப்படி அவரை உண்மையற்றவர் என்று மறுதலிக்க முடியும்?” என்று சொன்னார். அவரைக் கட்டி, எரித்தார்கள். நெருப்பு அவரைத் தொடவில்லை. அதனால் அவரைக் குத்திக் கொலைசெய்தார்கள்.
இன்று மக்கள் ஆயிரக்கணக்கான கடவுள்களை வைத்திருக்கிறார்கள். இயேசுவையும் ஒரு கடவுளாக வைத்துக்கொள்வதில் அவர்களுக்கு ஆட்சேபனை இல்லை. அப்படிப்பட்டவர்கள், “இயேசுவேதான் கடவுள் என்று கிறிஸ்தவர்கள் சொல்வதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்,” என்கிறார்கள். இருக்கின்ற பல கடவுள்களுக்குள் இயேசுவும் ஒரு கடவுள்; என்று சொல்வதில் எந்த நற்செய்தியும் இல்லை.
“என்னை விசுவாசிக்கிறவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் புறப்பட்டு ஓடும். தன்னை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற பரிசுத்த ஆவியைக்குறித்து அவர் இப்படிச் சொன்னார்”. “ஞானஸ்நானத்தைக் கொடுக்கும்படி கிறிஸ்து என்னை அனுப்பவில்லை; சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவே அனுப்பினார்; கிறிஸ்துவின் சிலுவை வீணாய்ப்போகாதபடிக்கு, சாதுரிய ஞானம் இல்லாமல் பிரசங்கிக்கவே என்னை அனுப்பினார்” (1 கொரி. 1:17). எனவே, “சுவிசேஷத்தை சாதுரிய ஞானத்தோடு சொல்ல வேண்டும். நல்ல தமிழ் பேச வேண்டும். நல்ல ஆங்கிலம் பேச வேண்டும். கொஞ்சம் நகைச்சுவையோடு பேச வேண்டும். வரலாற்று உண்மைகள் நிறைய தெரிய வேண்டும். அறிவியல் நிறைய தெரிய வேண்டும். சரித்திர பூர்வமாக, விஞ்ஞான பூர்வமாக இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்று நிரூபிக்க வேண்டும்” என்றெல்லாம் கவலைப்படாதீர்கள். முடிந்தால் நிரூபியுங்கள். நிரூபிக்க முடியாவிட்டால் கவலைப்பட வேண்டாம்.
“சாதுரிய ஞானம் இல்லாமல் நற்செய்தி அறிவிக்கவே அவர் என்னை அனுப்பினார்”. தொடர்ந்து வாசிப்போம். “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது. இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவ பெலனாயிருக்கிறது” (வ. 18). “யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள். கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள். நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்” (வ. 22). அடையாளங்களைக் கேட்கிற யூதர்களுடைய தினவுக்கு நாம் பதிலளிக்க முடியாது; ஞானத்தைத் தேடுகிற கிரேக்கர்களுடைய தினவுக்கு நாம் பதிலளிக்க முடியாது. ஆனால், நாங்களோ கிறிஸ்துவை, சிலுவையிலறையப்பட்ட அவரையே, பிரசங்கிக்கிறோம். “அவர் யூதருக்கு இடறலாயும், கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருக்கிறார்”. (வ. 23). “ஆகிலும் யூதரானாலும் கிரேக்கரானாலும் எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாயிருக்கிறார்” (வ. 24). என்னே அற்புதமான கூற்று! எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ, எவர்கள் அவரை ஏற்றுக்கொள்கிறார்களோ, அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும், தேவ ஞானமுமாயிருக்கிறார்.
மனிதர்கள் தேடுவது சாதாரண பெலன். ஆனால், இயேசுகிறிஸ்து தேவபெலனாயிருக்கிறார். கிரேக்கர்கள் தேடுவது சாதாரண ஞானம், மனித ஞானம். ஆனால், இயேசுகிறிஸ்துவோ தேவஞானமாயிருக்கிறார். “இந்தப்படி தேவனுடைய பைத்தியம் என்னப்படுவது மனிதனுடைய ஞானத்திலும் அதிக ஞானமாயிருக்கிறது. தேவனுடைய பலவீனம் என்னப்படுவது மனுஷனுடைய பலத்திலும் அதிக பலமாயிருக்கிறது. எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள். மாம்சத்தின்படி ஞானிகள் அநேகர் இல்லை, வல்லவர்கள் அநேகர் இல்லை, பிரபுக்கள் அநேகர் இல்லை. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார். பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும் தேவன் தெரிந்துகொண்டார். மாம்சமான எவனும் தேவனுக்குமுன்பாக பெருமை பாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார். அந்தப்படி. நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டிருக்கிறீர்கள். எழுதியிருக்கிறபடி, மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக் குறித்தே மேன்மைபாராட்டத்தக்கதாக அவரே தேவனால் நமக்கு ஞானமும், நீதியும், பரிசுத்தமும் மீட்புமானார்”. என்னுடைய கடைசி கூற்றாக இது இருக்கும். “God has made Him the wisdom: righteousness, sanctification and redemption”. தேவன் இயேசுகிறிஸ்துவை ஞானமாய் நமக்கு அருளியிருக்கிறார். அவரே தேவனால் நமக்கு ஞானமும், நீதியும், பரிசுத்தமும், மீட்புமானார். சரியான மொழிபெயர்ப்பல்ல. நீதியும், பரிசுத்தமும், மீட்புமானார். இது தேவனுடைய ஞானம். இயேசுகிறிஸ்துவை தேவன் நமக்கு நீதியாக மாற்றியிருக்கிறார். நாம் பாவமான மனிதர்கள். நாம் பாவிகள் என்று ஆண்டவராகிய இயேசு சொன்னார். “நீங்கள் பாவிகள்” என்று நாம் யாரையும் சொல்லவேண்டிய அவசியமில்லை.
மனிதனுடைய இலக்கு, தேவன் மனிதனை உண்டாக்கினது அவன் பாவியாக இருக்கவேண்டும் என்பதற்காக அல்ல. அவன் தேவனை வெளிப்படுத்துவதற்கான பாத்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். இயேசுகிறிஸ்து நம்முடைய நீதியாக இருக்கிறார். நம்முடைய தன்மையும், குணமும் நமக்குத் தெரியும். நம்முடைய சொந்த முயற்சிகளினாலோ, எத்தனங்களினாலோ, பிரயத்தனங்களினாலோ நாம் நம்மைப் பரிசுத்தமாக்க முடியாது என்று தெரியும். பல மனிதர்கள் அப்படிப்பட்ட உபாயங்களை கைக்கொண்டு தோற்றுப்போயிருக்கின்றார்கள். ஒவ்வொரு நாளும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நம்முடைய பரிசுத்தமாகுதலாக இருக்கிறார். இறுதியாக இயேசுகிறிஸ்து நம்முடைய மீட்பாக இருப்பார். ஒருநாளிலே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இந்தப் பூமிக்கு வருவார். அப்பொழுது பாவத்தின் ஆதிக்கத்திலிருந்து மட்டும் அல்ல, பாவச் சூழலிருந்தும் நம்மை அவர் விடுவிப்பார் என்று நம்பியிருக்கிறோம்.
நான் பகிர்ந்துகொண்டதை சுருக்கமாகச் சொல்கிறேன். 1. முதலாவது, மனிதனுடைய வாழ்க்கையில் தேவன் மட்டுமே நிறைவு செய்யக்கூடிய ஒரு ஆழ்ந்த தேவை அவனுக்குள் உள்ளது. அதை மனிதன் இந்த உலகத்திலே படைக்கப்பட்ட எவைகளைக்கொண்டும் திருப்திப்படுத்த முடியாது. 2. இரண்டாவது, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மட்டுமே அந்த மனிதனுடைய ஆழ்ந்த தேவையைப் பூர்த்திசெய்கிற நபராகத் தன்னைப் பிரகடனம்பண்ணினார், பறைசாற்றினார். மனிதனுடைய எந்த அமைப்புமுறைகளும் அல்லது தத்துவ அமைப்புமுறைகளும் மனிதனுடைய அந்த ஆழ்ந்த தேவையை ஒருநாளும் பூர்த்திசெய்ய முடியாது. இயேசுகிறிஸ்து மட்டுமே மனிதனுடைய ஆழ்ந்த தேவையை, உள்ளார்ந்த தேவையை, பூர்த்திசெய்ய முடியும். “நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள். இன்னொரு மதத்தைச் சேர்ந்தவர்கள் அப்படிச் சொல்லலாம். இன்னொரு மதத்தவர்கள் அப்படிச் சொல்லலாம்,” என்று சிலர் நினைக்கலாம். மனிதர்களுடைய மனச்சாட்சிக்கு முறையிடுவதைத்தவிர வேறு எந்தக் கருவியையும் என்னால் பயன்படுத்த முடியாது. 3. மூன்றாவது, பவுலுடைய கூற்று: அன்றுமுதல் இன்றுவரை மனிதர்கள் ஞானத்தைத் தேடலாம். அடையாளத்தைத் தேடலாம். ஆனால், நாங்களோ கிறிஸ்துவை, அதுவும் இழிவாக, தாழ்வாக, கேவலமாக சிலுவையிலறையப்பட்ட கிறிஸ்துவை, பிரசங்கிக்கிறோம். இவர் மனிதர்களுடைய எந்த ஞானத்தையும்விட மிக உயர்ந்த ஞானமாகவும், மனிதர்களுடைய எந்தப் பலத்தைவிட மிக உயர்ந்த பலமாகவும் இருக்கிறார். இவரை தேவன் நம்முடைய நீதியாக, பரிசுத்தமாக, மீட்பாக வழங்கியிருக்கிறார். உண்மையாகவே தங்களுடைய இருதயத்தின் ஆழத்தில் தங்களுடைய வாழ்க்கையில் பல்வேறு பகுதிகளில் தீர்வு இல்லை என்று காண்கிற, ஒப்புக்கொள்கிற மக்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அதற்குப் பதிலையும், விடையையும், தீர்வையும், விடுதலையையும் பெறுவார்கள், ஆமென்.