Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

விசுவாசத்தின் வேலைக்காரர்கள்

Transcribed from a message spoken in July 2013 in Chennai

By Milton Rajendram

தேவனுக்கு மனிதர்கள் தேவை

தம் நோக்கத்தை இந்தப் பூமியில் நிறைவேற்றுவதற்கு தேவனுக்கு மக்கள் தேவை. தேவன் இந்தப் பூமியைக்குறித்த எந்தத் திட்டமோ, நோக்கமோ இல்லாமல் அப்படியே விட்டுவிடவில்லை. “என்ன வேண்டுமானாலும் நடந்து கொள்ளட்டும்,” என்று தேவன் விட்டுவிடுவதில்லை. ஒருவேளை நம் பக்கத்து வீட்டில் பிரச்சினைகள் என்றால், “அது அவர்களுடைய வீடு, என்ன வேண்டுமானாலும் நடந்து கொள்ளட்டும்,” என்று நாம் தலையிடாமல் இருக்கலாம். தேவன் அதுபோல, “என்ன வேண்டுமானாலும் நடந்துகொள்ளட்டும்,” என்று இந்தப் பூமியை விட்டுவிடுவாரா? நாம் அவருடைய சிருஷ்டிகள். அவர் வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவர். அவர் இந்தப் பூமியை ஒரு குறிக்கோளுடன் உண்டாக்கியிருக்கிறார். ஆனால், இந்தப் பூமியில் அவருடைய திட்டத்தையும், விருப்பத்தையும் நிறைவேற்ற அவருக்கு மக்கள் தேவை. ஏனென்றால், அவரே நேரடியாக அவருடைய திட்டத்தையும், விருப்பத்தையும் நிறைவேற்ற முடியாது. இது ஓர் அடிப்படை கோட்பாடு. தேவன் சர்வவல்லவர். ஆயினும், இந்தப் பூமியில் அவரோடு ஒத்துழைக்கிற மக்களைக்கொண்டுதான் அவர் தம் திட்டத்தை நிறைவேற்றுவாரேதவிர மனிதர்களே இல்லாமல் அல்லது மனிதர்களுடைய ஒத்துழைப்போ அல்லது உறவோ இல்லாமல் அவரே நேரடியாக இந்தப் பூமியில் ஒன்றும் செய்வதில்லை. ஒருவேளை அவருடைய பங்கு 99.99ஆக இருந்தாலும் மீதி 00.01 பங்கைச் செய்வதற்கு மனிதர்கள் வேண்டும். தேவன் ஏன் இப்படி ஒரு கோட்பாட்டை வைத்திருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. அவர் நினைத்தால் எல்லாவற்றையும் நேரடியாகச் செய்துவிடலாம். ஆனால், மனிதர்களுடைய உறவையும், ஒத்துழைப்பையும், அவர்களுடன் உடன் வேலை செய்வதையும் அவர் எப்போதுமே விரும்புகிறார். மனிதனுக்கு அவர் ஒரு பங்கை வைத்திருக்கிறார். அவ்வளவு பெரிய ஏதேன் தோட்டத்தை உண்டாக்கின தேவனுக்கு அதைப் பண்படுத்துவதற்கு ஒரு மனிதன் தேவையா? அவ்வளவு அற்புதமாக வானங்களையும், பூமியையும், சிருஷ்டிப்புக்களையும் உண்டாக்கின தேவனால் அந்தத் தோட்டத்தை பண்படுத்த மட்டும் முடியாமல் போய்விட்டதா? “நிலம் பண்படுவதாக” என்று சொன்னால் பண்படுத்தப்பட்டிருக்காதா? ஆனால், அப்படி அல்ல. பண்படுத்துகிற பணியை அவர் எப்போதுமே மனிதனுக்குக் கொடுத்தார்.

விசுவாசிகளுக்கும், அவிசுவாசிகளுக்கும் வித்தியாசம்

நாம் இந்தப் பூமியில் என்ன செய்துகொண்டிருக்கிறோம்? படிக்கிறோம், வேலை தேடுகிறோம், வேலை பார்க்கிறோம், இன்னும் பல காரியங்களைச் செய்கிறோம். எல்லா மனிதர்களும் இந்தப் பூமியில் எதை நாடித்தேடி உழைக்கின்றார்களோ அவைகளுக்காகவே நாமும் நாடித்தேடி உழைக்கிறோம். ஏதாவது வேறுபாடு இருக்கிறதா? வேறுபாடு இருக்க வேண்டுமா? தேவனுடைய மக்களுக்கும் தேவனை அறியாத மக்களுக்கும் ஏதாவது வேறுபாடு இருக்க வேண்டுமா? இருக்க வேண்டும். ஆனால் சராசரியாகப் பார்த்தால் தேவனை அறியாத மக்கள் எவைகளால் இயக்கப்படுகிறார்களோ அதே காரியங்களால்தான் தேவனை அறிந்த மக்களும் இயக்கப்படுகிறார்கள். அவர்கள் எதற்காக மகிழ்ச்சி அடைகிறார்களோ அதே காரியங்களுக்காகத்தான் நாமும் மகிழ்ச்சியடைகிறோம். அவர்கள் எதற்காகத் துக்கப்படுகிறார்களோ அதே காரியங்களுக்காகத்தான் நாமும் துக்கப்படுகிறோம். “இல்லை ஒரு காரியம் இருக்கிறது. இது தேவனை அறியாத மக்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதில்லை. ஆனால், தேவனுடைய மக்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இதோ! இன்னொரு காரியம் இருக்கிறது. இது தேவனை அறியாத மக்களுக்குத் துக்கத்தை தருவதில்லை. ஆனால், தேவனுடைய மக்களுக்குத் துக்கத்தை தருகிறது!” என்பதுபோல் நம்மை வேறுபிரித்துக் காண்பிக்கிற காரியங்கள் உண்டா? உண்டு. ஆனால், அவைகள் மங்கி, மறைந்துகொண்டே போகின்றன.

நாம் இந்தப் பூமியில் தேவனுடைய விருப்பம், நோக்கம், நித்திய திட்டம் நிறைவேற அவருடன் உடன் வேலைபார்க்கிற, உடன் இயங்குகிற மக்கள். நாம் சாதாரண மக்கள் அல்ல. நாம் நம்மைச் சாதாரண மக்கள் என்று நினைத்துக்கொள்ளலாம். ஒருவேளை நாம் அதைத் தாழ்மையாகவும் நினைக்கலாம். ஆனால், ஏதோ ஒரு காரணத்திற்காக நாம் நம்மைச் சாதாரண மனிதர்கள் என்று நினைப்போம் என்றால், ஒரு படியில் சாத்தான் போரில் ஒரு சின்ன வெற்றி பெற்றுவிட்டான் என்று பொருள். ஏனென்றால், தேவனுடைய முழுத் திட்டத்திலும் நம்முடைய முக்கியத்துவம் என்னவென்று நமக்குத் தெரியவில்லை! பெரிய போர்க்களத்தில் கடைசிப் போர்வீரனுக்குக்கூட ஒரு பங்கு உண்டு. “நானெல்லாம் பெரிய ஜெனரலா?” என்று அவன் நினைத்தால் அந்த அளவுக்கு எதிரி ஓரளவுக்கு வெற்றியைப் பெற்றுவிட்டான் என்று பொருள். இப்படி ஒவ்வொரு போர்வீரனையும் நினைக்க வைத்துவிட்டாலே போதும். அப்போது ஜெனரல் மட்டும் என்ன செய்துவிடுவார்? “தேவனுடைய நித்திய நோக்கம் இந்தப் பூமியில் நிறைவேறுவதில் எனக்கு ஒரு பங்கு உண்டு,” என்பதை மழுங்கடிப்பது சாத்தானுடைய யுக்திகளில் ஒன்றாகும். அப்படி மழுங்கடித்துவிட்டால் நாம் என்ன செய்வோம்? படிப்போம்…வேலை தேடுவோம், வேலை பார்ப்போம், நல்ல வேலை பார்ப்போம், மாப்பிள்ளை தேடுவோம், பெண் தேடுவோம், நிலம் தேடுவோம், வீடு தேடுவோம், நல்ல நாட்டைத் தேடுவோம், அதாவது தேவனற்ற மக்கள் எவைகளையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்களோ அப்படியே அவைகளையே நாமும் செய்துகொண்டிருக்கிறோம். தேவனுடைய சித்தம் நம் வாழ்க்கையில் நிறைவேறாது. அது தேவனுக்கு நட்டம். சாத்தானுக்குப் பெரிய இலாபம். அவன் மகிழ்வான். “ஆ! இவன்மூலமாக அல்லது இவள்மூலமாக இரட்சிப்பின் அதிபதியாகிய இயேசு கிறிஸ்து எனக்குப் பெரிய தோல்வியை ஏற்படுத்தியிருப்பார். நல்ல காலம்! இவர்கள் தங்களை அவ்வளவு முக்கியமாகக் கருதவில்லை,” என்று கூத்தாடுவான். “நான் பள்ளிக்குப் போவேன், கல்லூரிக்குப் போவேன், ஒரு வேலை பார்ப்பேன், ஒரு தப்புத்தண்டா செய்யமாட்டேன். அதனால் தேவன் என்ன ஆசீர்வதிப்பார்,” என்று ஒருவனை நினைக்க வைத்துவிட்டால் சாத்தான் என்ன நினைப்பான் தெரியுமா? “அப்பாடா! ஒரு போர்வீரனை நாம் முடக்கிவிட்டோம். இப்படி ஒவ்வொரு போர்வீரனையும் முடக்கிவிட்டால் போதும். அதன்பின் இரட்சிப்பின் அதிபதியாகிய இயேசு கிறிஸ்துவின் படையில் இருக்கும் எல்லாப் போர்வீரர்களும் முடமானவர்களாகத்தான் இருப்பார்கள். அந்த இரட்சிப்பின் அதிபதியால் அப்புறம் ஒன்றும் செய்ய முடியாது.” ஆம், நம்முடைய கர்த்தருக்கு ஒரு பெரிய சேனை இருக்கும். ஆனால், அந்த சேனையில் இருக்கும் எல்லாரும் முடமானவர்களாகத்தான் இருப்பார்கள். இது உண்மை.

கர்த்தருடைய வேலையாட்கள்

நீ முழு நேரமும் கர்த்தருக்காக வேலைசெய்வதாக வைத்துக்கொள்வோம். அப்போது நீ எப்படி வாழ்வாய்? இயேசுகிறிஸ்து தந்தால் நீ சாப்பிடுவாய். இயேசுகிறிஸ்து தராவிட்டால் உனக்கு உணவில்லை. நாம் எப்படி வாழ்வோம்? இந்தப் பூமியில் எனக்குப் படிப்பு என்று ஒன்று இல்லை என்று வைத்துக்கொள்வோம். மண்வெட்டி எடுத்துத் தோண்டுவதற்கு எனக்கு வலிமையும் இல்லை. ஆனால், நான் இயேசுகிறிஸ்துவுக்கு வேலைக்காரன். அப்படியானால் காலையில் நாம் எழுந்திருக்கும் விதம் எப்படி இருக்கும்? நாம் ஜெபிக்கின்ற விதம் எப்படி இருக்கும்? அவர் எந்தப் பணிகளை நமக்குக் கட்டளை யிடுகிறாரோ அந்தப் பணிகளை நாம் செய்துமுடிக்கிற விதம் எப்படி இருக்கும்? இயேசுகிறிஸ்து நம்மைச் சம்பளத்திற்கு வேலைக்கு அமர்த்தியிருக்கிறார் என்றால் வேலை தருவாரா தரமாட்டாரா? சம்பளம் கொடுத்து வேலைக்கு வைக்கிற எந்த எஜமானாவது வேலை தராமல் இருப்பானா? வேலை வாங்காமல் இருப்பானா? இரண்டு மடங்கு வேலை வாங்குவான். ஆனால், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய நம் அபிப்பிராயம் என்னவென்று கேட்டால் அவர் நம்மிடத்தில் வேலை வாங்கமாட்டார். நாம் செய்கிற வேலையெல்லாம் voluntary வேலை என்று நினைக்கிறோம். அப்படியென்றால் என்ன பொருள்? இஷ்டப்பட்டால் நீங்கள் செய்யலாம். இஷ்டம் இல்லையென்றால் நீங்கள் செய்ய வேண்டாம். ஏனென்றால், நாம் அவருக்குச் செய்கிற வேலை என்ன வேலை? voluntary வேலை. அவர் நமக்குச் சம்பளம் கொடுத்து ஒன்றும் வேலைக்கு அமர்த்தவில்லை. கிடைத்தவரை இலாபம் என்று அவர் நினைத்துக்கொள்வார் என்ற எண்ணங்களைச் சாத்தான் நம் மனங்களில் புகுத்திவிடுவான். நாளடைவில் அவைகள் நம்முடைய எண்ணங்கள் என்றுகூட நாம் நினைத்துக்கொள்வோம்.

ஒரு கணப்பொழுதில் நாம் வேலைசெய்கிற, பணம் சம்பாதிக்கிற, சிந்திக்கிற ஆற்றலையெல்லாம் இழந்து எந்தத் திறமையும் இல்லாத மனிதர்களாக மாறிவிட முடியும். உபாகமத்தில் ஒரு வசனம் உண்டு: “என் சாமர்த்தியமும், என் கைப்பலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து, உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக. அவரே உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்” (உபா. 8:17-18). நாம் படிக்கலாம், வேலைபார்க்கலாம். ஆனால், நம் உள்ளான மனதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். நாம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வேலையாட்கள். படிப்பதை அவர் எனக்கு வேலையாகக் கொடுத்திருக்கிறார். எனவே, நான் அதை வேலையாகச் செய்கிறேன். வேலை பார்ப்பதை அவர் எனக்கு வேலையாகத் தந்திருக்கிறார். எனவே, நான் அதை வேலையாகச் செய்கிறேன். அந்த வேலைக்குப்பதிலாக இந்த வேலைக்குப் போக வேண்டும் என்று சொன்னால் நான் அதைச் செய்வேன். இவ்வளவு பணம் போதாது. நீ இன்னும் அதைவிட அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்று சென்னால் நான் அதைச் செய்கிறேன். இவ்வளவு சம்பாதிக்க வேண்டாம். நீ அதைவிடக் குறைவாகச் சம்பாதித்தால் போதும் என்று சொன்னால் நான் அந்த வேலையைச் செய்கிறேன். குறைவான பணம் உள்ள வேலையையும் செய்ய வேண்டாம். பணம் நான் நேரடியாகத் தருகிறேன் என்றால் நாம் அதையும் செய்ய வேண்டும். இது மிகவும் அதிர்ச்சியாகவும், பயமாகவும் இருக்கும். “இப்படியெல்லாம் இயேசுகிறிஸ்து செய்வாரென்றால் அவரைப் பின்பற்றாமலிருப்பது நல்லது,” என்று தோன்றலாம். பணம் இல்லையென்றால் வாழ்க்கையை எப்படி அனுபவிக்க முடியும்?

விசுவாசம்

இதற்குத் தேவையானது விசுவாசம். “ஓ அப்படியா? விசுவாசமா? இது வர இருபது அல்லது நாற்பது வருடங்கள் ஆகுமே! இந்த விசுவாசத்தைத் தேவன் எல்லாருக்கும் கொடுப்பதில்லையே!” என்று நாம் நினைக்கலாம். தன் மகன் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது படிப்புக்குத் தேவையான பணத்தை அந்தத் தகப்பன் எப்படியாவது உயிரைக் கொடுத்தாவது தருவார் என்று அவருடைய மகன் நம்புவானா நம்பமாட்டானா? அல்லது 20 வருடம் கழித்துத்தான் நம்புவானா? நீங்கள் நம்புகிறீர்கள். அவர் அவ்வளவு நல்ல தகப்பன். எனவே, விசுவாசம் என்பது தேவன் என்றோ ஒருநாள் தரப்போகிற ஒன்றல்ல. நம்முடைய பரம தகப்பன்மேல், அவருடைய குணத்தின்மேல் நாம் வைத்திருக்கிற அசைக்க முடியாத நம்பிக்கை. ஒருவேளை அவரை நம்பி நீங்கள் உங்கள் மகளைக் கல்லூரியில் சேர்த்து விடுகிறீர்கள். நடுவில், பாதியில் அவர் பணம் அனுப்புவதை நிறுத்திவிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். என்ன செய்வீர்கள்?

தேவனுக்காக வாழ்வதற்கு நமக்கு விசுவாசம் வேண்டும். தேவனுக்காக உழைப்பதற்கு, வேலை செய்வதற்கு, நமக்கு விசுவாசம் வேண்டும். கிறிஸ்தவ வாழ்க்கையின் முதல்படியே எங்குதான் ஆரம்பிக்கிறது? விசுவாசம். எப்படி நாம் நம் பாவமன்னிப்பையும், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவிடமிருந்து நித்திய ஜீவனையும் பெற்றுக்கொள்கிறோம்? அவர் எல்லாவற்றையும் செய்துமுடித்துவிட்டார். ஆனால், நாம் எப்படிப் பெற்றுக்கொள்கிறோம்? அவரை விசுவாசிப்பதின்மூலமாக. அவர்மேல் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ அவன் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்கிறான். ரோமருக்கு எழுதிய நிருபத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் இப்படிக் கூறுகிறார்: விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் அல்லது வாழ்வான். கிறிஸ்தவ வாழ்க்கையின் முதல்படி ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின்மேல் நாம் வைக்கிற விசுவாசம். விசுவாசத்தை இன்னொரு தமிழ் மொழியாக்கம் ‘பற்றுறுதி’ என்று கூறுகிறது. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று நாம் ஒருநாள் கண்டு, அவரை விசுவாசித்தோம், நம்பினோம், உறுதியாய்ப் பற்றிக்கொள்ளுகிறோம். அதன் விளைவாக நம் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. நாம் தேவனுடைய ஜீவனில் பங்குபெறுகிறோம். அன்று தொடங்கி சிறிய காரியமாக இருந்தாலும் சரி, பெரிய காரியமாக இருந்தாலும் சரி, நாம் இயேசுகிறிஸ்துவிடமிருந்து ஏதாவது ஒன்றைப் பெற வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி விசுவாசம். அவர் பாவங்களை மன்னித்துவிட்டார் என்று நாம் விசுவாசிக்கின்றோம். தேவனுடைய வார்த்தையின் அடிப்படையில் தேவன் தம் நித்திய ஜீவனை வழங்கியிருக்கிறார் என்று நாம் விசுவாசிக்கின்றோம். அவருடைய வார்த்தையின் அடிப்படையில். பரிசுத்த ஆவியை நம்மில் தங்குமாறு அவர் தந்திருக்கிறார் என்று நாம் விசுவாசிக்கின்றோம். அவருடைய வார்த்தையின் அடிப்படையில் கண்கூடாக ஏதோவொன்றைக் காட்டியபிறகு நாம் அதை விசுவாசிப்பதில்லை. 1 பேதுரு முதல் அதிகாரத்தில் இருக்கிறது. “அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள். இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்திருக்கிறீர்கள்.” இதுதான் விசுவாசம்.

விசுவாசம் பரீட்சிக்கப்படும்

இந்த விசுவாசம் பரீட்சிக்கப்படும் என்றுகூட எழுதியிருக்கிறது. 1 பேதுரு விசுவாசத்தின் பரீட்சையைப்பற்றி நிறைய எழுதியிருக்கிறது. யாக்கோபு 1ஆம் அதிகாரத்திலும் இந்த விசுவாசத்தைப்பற்றி எழுதியிருக்கிறது. நம் விசுவாசம் பரீட்சிக்கப்படும். நம் விசுவாசம் பரீட்சிக்கப்பட வேண்டும். விசுவாசம் என்பது கற்பனையல்ல. என்னிடத்தில் ஒன்று இல்லை. அது இருப்பதுபோல் நான் கற்பனை செய்துகொள்வேன். இதற்குப் பெயர் என்னது? விசுவாசம். அப்படியல்ல. விசுவாசம் என்பது தேவனைப் பொறுத்தவரை இது உண்மை. அவருடைய பரம தளத்தைப் பொறுத்தவரை, ஆவிக்குரிய தளத்தைப் பொறுத்தவரை இதுதான் நிஜம். ஆனால், நம் புலன்களுக்கு உட்பட்ட இந்தத் தளத்தில், இந்த மண்டலத்தில், இன்னும் நிஜமாகவில்லை அல்லது அது உண்மைபோல் தெரியவில்லை. எனவே, ஒரு போராட்டம் வரும். நான் என் புலன்களால், என் கண்களால் பார்ப்பது, என் காதுகளால் நான் கேட்பது, இதன்படி பார்த்தால் தேவன் ஒன்றும் பெரிய வேலைசெய்வதுபோல் தோன்றவில்லை. ஆனால், அவருடைய வார்த்தையின்படி இவைகள்தான் உண்மை. எனவே இந்த ஆவிக்குரிய தளத்திற்கும் மண்டலத்திற்கும், நம் புலன்களால் நாம் சஞ்சரிக்கிற இந்தத் தளத்திற்கும் ஒரு பெரிய போராட்டம் இருக்கும்.

ஆபகூக் என்ற புத்தகத்தில் 3 அதிகாரங்கள் மட்டுமே இருக்கின்றன. ரோமருக்கு எழுதிய நிருபத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் மேற்கோள் காட்டுகிற விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்கிற வசனம் பழைய ஏற்பாட்டின் ஒரு புத்தகத்திலிருந்த மேற்கோள் காட்டப்படுகிறது. அது ஆபகூக்கின் புத்தகம். ஆபகூக் ஏறக்குறைய எரேமியா வாழ்ந்த காலத்தில் வாழ்கிறார். அந்த நாட்களில் பாபிலோனியர் வந்து இஸ்ரயேலர்மேல் படையெடுத்து, எருசலேமைத் தரைமட்டமாக்கி, இஸ்ரயேல் மக்களைக் கைதிகளாகப் பிடித்துக்கொண்டு போகிறார்கள். எருசலேம் சின்னாபின்னமாக்கப்பட்டு, தரைமட்டமாக்கப்பட்டு, சாம்பலாகிக் கிடக்கின்றது. அப்போது, ஆபகூக்குக்கு ஒரு பெரிய கேள்வி வருகிறது. “அந்தக் கல்தேயர்கள் அதாவது பாபிலோனியர்கள் தீயவர்கள், பாவியான மனிதர்கள், அவர்களுக்கு நீர் வெற்றி கொடுக்கின்றீர். ஆனால், இஸ்ரயேல் மக்களுக்குள் எவ்வளவு நீதிமான்கள் இருக்கிறார்கள். எங்களை இப்படி நடத்துகிறீரே?” எனவே, ஆபகூக்குக்கு ஒரு பெரிய கேள்வி எழுகிறது. ஆபகூக் தேவனோடு நெருங்கி வாழ்ந்த ஒரு மனிதன். “தீயவர்கள் எப்படி இப்படி சுபிட்சமடைகிறார்கள். நல்லவர்கள் ஏன் இப்படித் தோற்றுப்போகிறார்கள்? பாடுபடுகிறார்கள்” என்ற கேள்வி வருகிறது. ஆபகூக் முதல் அதிகாரத்தில் அவர் கேள்வி எழுப்புகிறார். அதற்கு இரண்டாம் அதிகாரத்தில் தேவன் பதில் கொடுக்கின்றார். மூன்றாம் அதிகாரத்தில் ஒரு பாடலோடு அந்தப் புத்தகம் முடிவடைகிறது. அந்தப் பாடல் எப்படி இருக்கும் என்றால், “அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சைச் செடிகளில் பழம் உண்டாகாமற் போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற் போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும் நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன். என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன். ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன். அவர் என் கால்களை மான்கால்களைப் போலாக்கி உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்.” அந்த ஆபகூக்கிலே இன்னொரு வசனம் இருக்கிறது. 2 ஆம் அதிகாரம். தம் வல்லமை மறைவாக வேலைசெய்துகொண்டிருப்பதாக தேவன் சொல்லுகிறார். ஆனால், பார்க்கிற இந்தக் கண்ணுக்குட்பட்ட மண்டலத்தில் ஆபகூக் எதைத்தான் பார்க்கிறார்? அத்திமரத்தில் பழம் இல்லை, ஒலிவமரம் துளிர்விடவில்லை, திராட்சைச் செடிகளில் பழம் இல்லை, வயல்களில் தானியம் இல்லை, தொழுவத்தில் மாடுகள் இல்லை. அவன் பார்ப்பதெல்லாம் அப்படித்தான் இருக்கிறது. ஆனால், “நன்மை நடந்தாலும் சரி, தீமை நடந்தாலும் சரி, நான் என் நடுநிலை வழுவாமல் அப்படியே சந்நியாசியைப்போல் இருப்பேன்,” என்று அவர் இருக்கவில்லை. “குளுகுளு வசதியான வீட்டில் வாழ்ந்தாலும் சரி அல்லது எனக்கு சாட்டை அடி கொடு;த்தாலும் சரி, நான் ஒரேமாதிரி புன்முறுவலோடு இருப்பேன்.” இது சந்நியாசம். ஆபகூக் அப்படி சொல்லுகிறாரா? அவர் விவரிக்கிற சூழலில் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? “அத்திமரம் துளிர்விடாமல் போனால் போகட்டும்; கிடையில் ஒரு ஆடாவது இருந்தால் பரவாயில்லை. திராட்சைச் செடி பலன் கொடாமல் போனால் போகட்டும்; ஒலிவ மரத்தில் ஒன்றிரண்டு காய்கனிகள் இருந்தாலாவது பரவாயில்லை. ஆடுகளெல்லாம் முதலற்றுப் போனால் போகட்டும்; ஒன்றிரண்டு மாடுகள் இருந்தால் பரவாயில்லை. அது இல்லாவிட்டால் இதில் மகிழ்ச்சியைப் பெற்றுவிடலாம்; இது இல்லாவிட்டால் அதில் மகிழ்ச்சியைப் பெற்றுவிடலாம். எல்லாமே போய்விட்டால் எப்படி? மகிழ்ச்சியாக இருக்க முடியுமா?” எந்த அடிப்படையில் தான் மகிழ்ச்சியாயிருப்பதாக ஆபகூக் சொல்லுகிறார்?

தேவன் மறைவாக வேலை செய்துகொண்டிருக்கிறார் என்ற விசுவாசம். அவர் வேலைசெய்து கொண்டிருப்பதின் விளைவு நம் கண்களுக்குப் புலனாகவில்லை. தேவன் எப்போதுமே அப்படித்தான் வேலை செய்வார். தேவன் செய்கிற வேலையெல்லாம் மனிதனுடைய கண்களுக்குப் புலனாகிவிட்டால் எல்லா மனிதர்களும் தேவன்மேல் விசுவாசமாயிருப்பார்கள். அவருடைய கோட்பாடுகளின் விளைவு எதிர்மறையான விளைவாக இருந்தாலும் சரி. நேர்மறையான விளைவாக இருந்தாலும் சரி. உடனடியாக அது வேலைக்கு வந்துவிடுவதில்லை. பாவம் செய்கிற ஆத்துமா சாகும். இப்படிப்பட்டவன் உடனே செத்துப்போனால் எவன் பாவம் செய்வதற்குத் துணிவான்? அதுபோல நீதிமானுடைய முடிவு சமாதானம். உடனடியாக சமாதானம் என்றால் எல்லாரும்தான் நீதிமானாக இருப்பார்களே? தேவன்பேரில் உள்ள விசுவாசம் பரீட்சிக்கப்படும்.

விசுவாசம் சிலுவைக்கு நேராக நடத்தும்

இன்னும் சொல்லப்போனால் விசுவாசம் நம்மை எங்கு கொண்டுபோகும் என்றால் விசுவாசம் நேராக உயிர்த்தெழுதலுக்குக் கொண்டுபோகாது. விசுவாசம் முதலாவது சிலுவை மரணத்துக்குக் கொண்டு போகும். அதன்வழியாக விசுவாசம் நம்மை உயிர்த்தெழுதலுக்கு நடத்தும். விசுவாசத்தின் விளைவாக படியின்மேல்படி, சுபிட்சத்தின்மேல் சுபிட்சம் வரும் என்று நாம் நினைத்தால், இது இருளின்மேல் இருள், மரணத்தின்மேல் மரணம் என்று போய், கடைசியில் சிலுவை மரணத்திற்குக் கொண்டு செல்கிறதே என்பது நம் அனுபவமாக இருக்கும்.

ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான். “உன் புத்திரனும், உன் ஏக சுதனும், உன் நேச குமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு” என்று சொன்னபோது ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான். எனவே, விசுவாசம் என்பது உடனடியாக வெற்றியின்மேல் வெற்றியைத் தருவதில்லை. விசுவாசம் என்பது முதலாவது நம்மைப் பரீட்சிக்கிறது.

“எனக்கு ஒரு கார் வேண்டும் என்று விசுவாசத்தோடு ஜெபம் பண்ணினேன். கர்த்தர் உடனே எனக்குக் கார் கொடுத்துவிட்டார்,” என்பது என் புரிந்துகொள்ளுதலின்படி விசுவாசம் இல்லை. மாறாக ’என்னிடத்தில் 100 ரூபாய் இருந்தது. நான் அதை ஒரு சட்டை வாங்குவதற்காக வைத்திருந்தேன். ஆனால், தேவன் பேசினார். இந்த 100 ரூபாயில் 50 ரூபாய் அந்தச் சகோதரனுக்குத் தேவைப்படுகிறது. நான் அந்த 50 ரூபாயைக் கொடுத்தேன். என்னால் சட்டை வாங்க முடியவில்லை. பத்துவருடம் நான் விருப்பப்பட்ட அந்தச் சட்டையை வாங்கமுடியவில்லை. 10 வருடம் கழித்து அதன் விலை எங்கோ போய் விட்டது. ஒருநாள் தேவன் அந்தச் சட்டையை எனக்குக் கொடுத்தார்.” இது 10 வருடம் கழித்து வருகிற விசுவாசத்தின் கனி. அது மூன்று நாட்களிலும் வரலாம். மூன்று நாள் என்பது விசுவாசத்தோடு அந்த மரணத்தில் தரித்திருப்பது. “ஐயோ! முட்டாள்தனமாக அந்த 50 ரூபாயைக் கொடுத்துவிட்டேனே!” என்று புலம்பக்கூடாது. எந்த ஒரு கிரயமும் இல்லாமல் “விசுவாசத்தினால் நான் இதைப் பெற்றேன். அதைப்பெற்றேன், அதைச் சாதித்தேன் இதைச் சாதித்தேன்,” என்றால் அது விசுவாசம் அல்ல. விசுவாசம் நம்மைத் தேவனுக்காக ஒரு விலை செலுத்த அல்லது ஒரு கிரயம் செலுத்த அல்லது ஏதோவொன்றை இழக்க அனுமதிக்கும். நான் அந்த வேலையை விரும்பலாம். தேவன் இந்த வேலையைத் தரலாம். நாம் அந்தப் படிப்பை விரும்பலாம். தேவன் இந்தப் படிப்பைத் தரலாம். மேலோட்டமாகப் பார்த்தால் நாம் தோல்வியடைந்துவிட்டோம்.

ஆபகூக் சொல்லுகிற அந்த ஆறு காரியங்களை ஒரு மனிதன் சொல்வான் என்றால் அவன் வெற்றி பெற்ற மனிதனா? ஆபகூக் வெற்றிபெற்ற மனிதனா? அப்போதும் அவன் ஜெபிக்கிறான். தேவன் அவனுக்கு ஒரேவொரு பதில்தான் கொடுக்கிறார். விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான். “நான் இதைச் செய்கிறேன்” என்று தேவன் சொன்னால் தேவன் அதைச் செய்வார். “ஆண்டவரே, நான் பார்ப்பதெல்லாம், கேட்பதெல்லாம் நீர் சொன்னதற்கு முரணாக இருக்கிறதே!” என்று சொன்னாலும் ஆபகூக் செய்ததுபோல் அல்லது ஆபிரகாம் செய்ததுபோல் அல்லது மோசே செய்ததுபோல் (மோசே என்ன செய்கிறார்? பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து, அநித்தியமான பாவ சந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்) இவன் விசுவாசத்தினால் என்ன பெற்றான்? விசுவாசத்தினால் அவன் இழந்தான். அவன் என்ன இழந்தான்? எகிப்தின் இளவரசன் என்ற பதவியை இழந்தான். எனவே ‘விசுவாசிகள்’ என்றால் உன் விசுவாசம் எதை இழக்கச் செய்தது? இதன் பொருள் வேண்டுமென்று போய் இழப்பதல்ல. ஆனால், தேவன் ‘இதைச்செய்’ என்று சொல்வார் அல்லது ‘செய்யாதே’ என்று சொல்வார். அப்போது பயமாக இருக்கும். “ஆண்டவரே நான் அதைச் செய்தாலும் சரி அல்லது செய்யாவிட்டாலும் சரி. அதை இழந்து விடுவேனே!” ஆனால், ஒன்று தெளிவாக இருக்கும். அது என்னவென்றால் ஒன்று தேவன் இதை விரும்புகிறார் அல்லது அதை விரும்பவில்லை. தேவன் இதை விரும்புகிறார் என்று நான் அடியெடுத்து வைக்கும்போது அல்லது தேவன் அதை விரும்பவில்லை என்று நாம் அதை விடும்போது உடனடி பதில் இழப்பாகக்கூட இருக்கலாம். “அவர் தமக்குமுன் வைத்திருந்த (எபி. 12:2, 3) சந்தோஷத்தின் பொருட்டு அவமானத்தை எண்ணாமல் சிலுவையைச் சகித்து தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.”

தேவனுக்காக வாழ்வதென்றால் அவமானம் வரும். நான் இப்படிச் சொல்ல முடியும். இந்த அனுபவங்களையெல்லாம் நாம் பெறாமல் நான் தேவனைச் சேவிக்கிறேன் என்று சொல்வது மிகவும் ஆபத்தானது.

அவமானம் மனிதர்களால் ஒருமுறை இரண்டுமுறை அல்ல, சாகும்வரை ஒன்றன்பின் ஒன்றாக நாம் அவமானப்படுவதற்கு நம் இருதயத்தை நாம் பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும். ஏசாயா 50ஆம் அதிகாரம் 6ஆம் வசனம். “அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும் தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக்கொடுத்தேன். அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்க வில்லை.” இதையெல்லாம் நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். இது ஆண்டவராகிய இயேசுவின் வெற்றிப்பாதையா? மனிதர்களுடைய வெற்றி சீக்கிரம் கடந்து போய்விடும். அவர்கள் ஒருநாள் தங்கள் துணிகளையெல்லாம் விரித்து, ஒலிவ மரக்கிளைகளையெல்லாம் போட்டு “தேவனுடைய நாமத்தினாலே வருகிறவர் வாழ்க! வாழ்க! என்று போற்றுவார்கள், பாராட்டுவார்கள். அடுத்த நாள் “அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்” என்று கூப்பாடு போடுவார்கள். அல்லது அது தவறு என்று சொன்னாலும் அவர்கள் ஒளிந்துகொள்வார்கள். தேவனுடைய வேலைக்காரனின் அனுபவம் என்ன தெரியுமா? “அடிக்க என் முதுகை நான் மறைக்கவில்லை. என் தாடைகளைப் பிடுங்குகிறவர்களுக்கு அதை நான் ஒப்புக்கொடுத்தேன். உமிழ்நீருக்கு என் முகத்தை நான் மறைக்கவில்லை,” என்பதுதான் அவனுடைய அனுபவமாக இருக்க வேண்டும். “ஆண்டவரே என் வாழ்நாள் முழுவதும் இந்த மனிதர்களுடைய அடிகள், தாடைகளைப் பிடுங்குதல், உமிழ்நீர் ஆகியவைகளை நியமித்திருக்கிறீர் என்றால் இயேசுவே நீர் சொன்னதுபோல், என் பிதா ஆயத்தம் பண்ணின பாத்திரத்தில் பானம் பண்ணாதிருப்பேனோ?” என்பதுதான் நம் வாழ்க்கை.

மக்கள் சவால் விடுவார்கள்: நீ தேவனுடைய குமாரனானால் கீழே இறங்கி வா, உன்னை நிரூபி. எந்த மனிதர்களுக்கும் நான் நல்லவன் என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் செய்தது சரி என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் செய்தது தவறு என்றும் இதற்கு அர்த்தம் நாம் மனிதர்களை மதிப்பதில்லை என்பதல்ல. விசுவாசம் என்பது “அவர் வையப்படும்போது பதில் வையாமலும் பாடுபடும்போது பயமுறுத்தாமலும் நியாயமாய்த் தீர்ப்புசெய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.” அவருடைய நீதி எடுபட்டுப்போனது. அவர் மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாக சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போல் மௌனமாயிருந்தார். தேவன் அவருடைய நேரத்தில் நம்மை உயர்த்துவார். உயர்த்தாவிட்டாலும் பரவாயில்லை.

சிலுவைக்குப்பின் உயிர்த்தெழுதல்

யோபு சொன்னதுபோல் அவர் நம்மைக் கொன்றுபோட்டாலும் அவர்மேல் நாம் நம்பிக்கையாயிருப்போம். இது ரொம்ப எதிர்மறையாகப் பேசுவதுபோல் தோன்றலாம். அப்படியல்ல. மனிதர்களால் நம்ப முடியாத உயிர்த்தெழுதல் என்ற ஒன்றை தேவன் வைத்திருக்கிறார். அவர் என்னைக் கொன்றுபோட்டாலும் நான் அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன் என்றால் என்ன அர்த்தம்? கொன்றுபோட்டபிறகு யோபுவின் கதை முடிந்துவிட்டது என்பதல்ல. யோபு சொல்வார், “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும் கடைசி நாளில் அவர் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிவேன்.” விசுவாசம் என்பது தேவனுடைய உயிர்த்தெழுதலுக்கு ஒத்தது. என் படிப்பு எப்படி இருந்தாலும் பரவாயில்லை, என் வேலை எப்படி இருந்தாலும் பரவாயில்லை. என் வருவாய் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. தேவன் இதைச் செய்யச் சொல்லுகிறார். இது தேவனுடைய சித்தம் என்று சொல்லும்போது ஆபகூக்கின் பாடல் நம்முடைய பாடலாக இருக்க வேண்டும். இவைகளெல்லாம் வெறும் அறிவாக இல்லாமல் வாழ்க்கையில் சோதிக்கப்பட வேண்டும். நாம் விசுவாசித்தால் மட்டும்தான் இந்த உலகத்தில் வாழ முடியும். தேவன் என்ன செய்யச் சொல்லுகிறார் என்ற உறுதிப்பாடு நமக்கு இருந்தால் அது வெற்றியாய்த் தோன்றினாலும் சரி, தோல்வியாய்த் தோன்றினாலும் சரி, நாம் அதைச் செய்ய வேண்டும். பெரும்பாலும் தேவன் இதைச் செய்ய சொல்லுகிறார் அல்லது இந்தப் பாதையில் நடக்கச் சொல்லுகிறார் என்றால் எடுத்தவுடனே அது மகிழ்ச்சியையோ, இன்பத்தையோ தராது. மாறாக துன்பத்தையும், வேதனையையும் அனுபவிக்க வேண்டியிருக்கும். ஆனால், தேவன் நடத்தியிருக்கிறார் என்ற உறுதி நமக்கு இருக்குமென்றால் ஆபிரகாம் உயிர்த்தெழுதலை அனுபவித்ததுபோல அல்லது மோசே உயிர்த்தெழுதலை அனுபவித்ததுபோல அல்லது ஆபகூக் உயிர்த்தெழுதலை அனுபவித்ததைப்போல “என் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்,” என்று உறுதியாகச் சொல்ல முடியும். வேறு என்ன பண்ண முடியும் என்பதல்ல. கண்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்; காதுகளுக்குக் கேட்காமல் இருக்கலாம். ஆனால், தேவன் திரைக்குப்பின்னால் வேலை செய்துகொண்டிருக்கிறார். அவர் என் கால்களை மான்களின் கால்களைப் போலாக்குவார். உயர்ந்த இடங்களில் என்னைக் கொண்டுபோய்விடுவார். இப்படிப்பட்ட வெற்றித் தொனியோடு ஆபகூக் தன் புத்தகத்தை முடிக்கிறார். அது மிகக் கடினம். ஏனென்றால் சுற்றிப்பார்க்கும்போது அங்கு தரைமட்டமாக்கப்பட்ட எருசலேம்.

எனவே, நம் தனிப்பட்ட வாழ்க்கையானாலும் சரி, கூட்டு வாழ்க்கையானாலும் சரி, நாம் தேவனுக்குப் பயனுள்ளவர்களாக இருக்க வேண்டுமென்றால் ஒரேவொரு வழிதான் உண்டு. அது விசுவாசம். நம்மிடம் இருக்கும் ஜீவன் உயிர்த்தெழுந்த ஜீவன் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். எத்தனையோ தடவை சொல்லியிருக்கிறோம். ஆனால், சூழ்நிலையைப் பார்க்கும்போது நாம் சோர்ந்துபோவோம். “உண்மையிலேயே என்னில் இருக்கும் ஜீவன் உயிர்த்தெழுந்த ஜீவன்தானா?” என்ற கேள்வி எழலாம். இப்படி தேவனைப்பற்றிய நம் எல்லா அறிவும் சோதிக்கப்படும். சோதனையின் வழி சிலுவை மரணத்தினுடாய்ச் சென்று உயிர்த்தெழுதலில் முடியும். ஆகவேதான் யாக்கோபு சொல்லுகிறார்: சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான். மக்கள் சொல்வார்கள்: இதைப் படிக்கவில்லையா? அதைச் செய்யவில்லையா? முதலீடு செய்யவில்லையா? பங்கு வாங்கவில்லையா? மக்கள் இப்படி நிச்சயமாகக் கேட்பார்கள். இது தவறு இல்லை. ஆனால், ஒன்று தெரியும். இது என் அழைப்பு இல்லை. “அதை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?” கண்டுபிடித்துவிடலாம். முழு இருதயத்தோடும் நீங்கள் கர்த்தரைப் பின்பற்றினால் நீங்கள் இதைக் கண்டுபிடித்துவிடுவீர்கள். எனவே, நம்முடைய விசுவாசம் சோதிக்கப்படும். சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான். ஆனால், உடனடியாகப் பலன் கிடைக்க வேண்டும் என்பதுதான் உலகத்தின் வழி. “இப்போது இதைச்செய், அதன் பலனை உடனடியாகப் பார்,” என்று உலகம் சொல்லும். எனவேதான் வேதம் சொல்லுகிறது: உன் விசுவாசம் பொன்னைவிட விலையேறப்பெற்றது. தேவன் ஒருவனிடத்தில் அப்படிப்பட்ட விசுவாசத்தைக் காண்பாரென்றால் எவ்வளவாய் மகிழ்வார். அப்படிப்பட்ட பற்றுறுதி…தேவனுடைய பரிசுத்தவான்கள் எல்லாரும் அப்படிப்பட்ட வெற்றி பெற வேண்டுமென்றால் அதற்கு ஒரேவொரு வழிதான் உண்டு. தேவன் நடத்துகிற பாதையிலே அல்லது தேவனுடைய கோட்பாடுகளைப் பின்பற்றி விசுவாசத்தோடு நடக்க வேண்டும். விசுவாசம் முதலாவது நம்மை சிலுவை மரணத்துக்கு இட்டுச் செல்லும். ஆனால், கடைசியில் அது தேவனுடைய உயிர்த்தெழுதலில் நம்மைப் பங்குபெறச் செய்யும்.