Transcribed from a message spoken in August 2013 in Chennai
By Milton Rajendram
“வீரர்கள் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகிறார்கள்,” என்று நான் ஒரு சுவரிலே வாசித்தேன். இவர்கள் சொல்லுவதற்குமுன்பே, “பரிசுத்தவான்கள் மரிக்கும்போது அவர்கள் உடல்கள் புதைக்கப்படவில்லை, மாறாக விதைக்கப்படுகின்றன,” என்று பரிசுத்த பவுல் சொல்லிவிட்டார். “புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்கமாட்டாதே” (1 கொரி. 15:36). “கனவீனமுள்ளதாய் விதைக் கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும். ஜென்மசரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்” ( 43, 44).
வீரர்களைப்பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், பரிசுத்தவான்களைப்பற்றி நமக்குத் தெரியும். பரிசுத்தவான்களுடைய உடல்கள் அல்லது அவர்களுடைய வாழ்க்கைகள் புதைக்கப்படுவதில்லை; மாறாக, அவைகள் விதைக்கப்படுகின்றன என்பதற்குப் பவுல் நிரூபணம் தருகிறார். அது அழிவுள்ளதாக விதைக்கப்படுகிறது; ஆனால், ஆண்டவராகிய இயேசுவினுடைய வருகையிலே அது அழியாமையுள்ளதாக அறுவடைசெய்யப்படுகிறது. இயற்கையான உடல் விதைக்கப்படுகிறது; ஆனால், ஆவிக்குரிய மகிமையான உடல் அறுவடைசெய்யப்படுகிறது. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிற தேவனுடைய மக்களாகிய நமக்கும், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைத் தள்ளுகிற தேவனற்ற மக்களுக்குமுள்ள பெரிய வேறுபாடு இது. நாம் விதைப்பதில் நம்பிக்கை உள்ளவர்கள்.
தேவனுடைய மக்களுடைய வாழ்க்கை விதைக்கின்ற, அறுவடைசெய்கின்ற, ஒரு வாழ்க்கை. இந்த எண்ணம் வேதாகமம் முழுவதும் காணப்படுகிறது. பழைய ஏற்பாட்டில் காணப்படுகிறது. புதிய ஏற்பாட்டிலும் காணப்படுகிறது. இந்த உலகத்து மக்கள் விதைப்பதிலும், அறுவடை செய்வதிலும் நம்பிக்கை வைப்பதில்லை. “அவர்கள் விதைத்து, அறுவடை செய்வதால்தான் நாம் சாப்பிடுகிறோம். அப்படியிருக்க, அவர்களுக்கு அதில் நம்பிக்கை இல்லையென்று நீங்கள் எப்படிச் சொல்லுகிறீர்கள்,” என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், பொதுவாக உலகத்து மக்களுக்கு விதைப்பதிலும், அறுப்பதிலும் நம்பிக்கை இல்லை. தேவனுடைய மக்களாகிய நமக்கு விதைப்பதிலும், அறுவடை செய்வதிலும் நம்பிக்கை இருக்கிறது. “புசிப்போம், குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்லலாமே” (1 கொரி. 15:32) என்பதுதான் உலகத்து மக்களுடைய மனப்பாங்கு என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார். இதைத்தான் தமிழிலே “வெந்ததைத் தின்று விதி வந்தால் மாள்வோம்,” என்று சொல்வது வழக்கம். உலகத்து மக்கள் விதைப்பதிலும், அறுப்பதிலும் நம்பிக்கை வைப்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரை “புசிப்போம், குடிப்போம்; ஏனென்றால் நாம் நாளைக்குச் சாவோம். இன்றைக்கு நாம் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். இன்றைக்கு நாம் இன்பமாக இருக்கவேண்டும். ஏனென்றால் நாளைக்கு நாம் செத்துவிடுவோம்,” என்பதுதான் அவர்களுடைய மனப்பாங்கு. “இன்றைக்கு நாம் செய்கின்ற ஒன்று நாளைக்கு ஒரு விளைவைத் தரும். இன்றைக்கு நாம் செய்கிற ஒன்று விதைப்பது. அது நாளைக்கு ஒரு அறுவடையைத் தரும். அதை நானே அறுப்பேன் அல்லது என்னுடைய மக்கள் அறுப்பார்கள் அல்லது என்னுடைய அடுத்த தலைமுறை அறுக்கும் அல்லது பல தலைமுறைகள் அதை அறுக்கும்,” என்ற எண்ணம் அவர்களை ஆளுகைசெய்வதில்லை. “இதை நான் இப்போது செய்தால் இப்போது எனக்கு என்ன கிடைக்கும்?” என்று ஒரேவோர் எண்ணம்தான் அவர்களை அரசாளுகிறது.
எனவே, நாம் கேட்ட இந்த எண்ணத்தை மறுபடியும் சொல்ல விரும்புகிறேன். இன்றைக்கு என்னுடைய வாழ்க்கை அல்லது நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது கடந்த காலத்தில் நாம் எப்படி வாழ்ந்தோம் என்பதன் விளைவு. அதுபோல இன்றைக்கு நாம் எப்படி வாழ்கிறோம் என்பது நம்முடைய எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்பதைத் தீர்மானிக்கிற ஒரு செயல்.
இது சகோதரர் நீல் பக்மேன் பகிர்ந்துகொண்டபோது என்னுடைய மனதிலே மிகவும் ஆழமாகப் பதிந்த ஒன்று. பல வருடங்களுக்குமுன் அவர் இதைச் சொன்னார். இன்றைக்கு என்னுடைய வாழ்க்கையின் நிலை எப்படி இருக்கிறது என்பது திடுதிப்பென்று ஒருநாளிலே உருவானது அல்ல. கடந்த ஐந்து வருடங்கள், பத்து வருடங்கள், இருபது வருடங்கள், நாற்பது வருடங்கள் நான் விதைத்ததின் விளைவுகளை நான் இன்றைக்கு அறுவடை செய்கிறேன். அதுதான் இன்றைக்கு என்னுடைய வாழ்க்கையினுடைய நிலை. அது நன்மையோ தீமையோ, அது நேர்மறையானதோ எதிர்மறையானதோ, சரியோ தவறோ! காரியம் என்னவென்றால் இவைகளெல்லாம் ஒருநாளிலே உருவானது அல்ல. அதுபோல இன்றிலிருந்து ஐந்து வருடம், பத்து வருடம், இருபது வருடம், நாற்பது வருடம் கழித்து அல்லது எண்பது வருடம் கழித்து அல்லது ஒரு தலைமுறை, இரண்டு தலைமுறை, ஐந்து தலைமுறை, பத்து தலைமுறைகழித்து நம்முடைய வாழ்க்கையிலே இருக்கப்போகிற நன்மைகளையும் தீமைகளையும் இன்று நாம் வாழ்கிற வாழ்க்கைதான் தீர்மானிக்கும்.
இதுதான் நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிற எண்ணம். விதைப்பது, அறுப்பது என்று நான் சொல்லும்போது இதுதான் அதன் பொருள். நம்முடைய வாழ்க்கை, நம்முடைய ஒரு எண்ணம், நாம் பேசுகிற ஒரு சொல், நாம் செய்கிற ஒரு செயல், நம்முடைய ஒரு பழக்கம், நாம் வாழ்கிற ஒரு விதம், வெறுமனே இன்றைக்கு ஒரு நன்மையையோ தீமையையோ தருவது மட்டும் அல்ல. மாறாக பல ஆண்டுகள் அல்லது பல தலைமுறைகள் கழித்தும் அது நன்மைகளையும் தீமைகளையும் உருவாக்கும். இதையே அப்போஸ்தலனாகிய பவுல், “மோசம்போகாதிருங்கள் தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார். மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான். ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்திய ஜீவனை அறுப்பான்,” (கலா. 6:7, 8) என்று கூறுகிறார்.
மோசம்போகாதிருங்கள் என்றால் ஏமாற்றப்படாதிருங்கள் என்று பொருள். ஏனென்றால், “இன்றைக்கு நாம் செய்கிற காரியங்களுக்கு எதிர்காலத்திலே பெரிதாக விளைவுகள் இருக்கப்போவதில்லை. அப்படி விளைவு இருந்தாலுங்கூட அந்த விளைவுகளை நீ சந்திக்கப்போவதில்லை. உன்னுடைய மகனோ, பேரன் பேத்தியோ, அடுத்த தலைமுறையோதான் சந்திக்கும்,” என்று இந்த உலகம் சொல்லும்.
பழைய ஏற்பாட்டிலே இரண்டு அரசர்களைப்பற்றி சொல்லவேண்டும். ஒன்று தாவீது. இன்னொன்று எசேக்கியா. இரண்டுபேருமே தேவனுக்குப் பயந்து, தேவனுக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்த அரசர்கள். தாவீதும், எசேக்கியாவும் மிகவும் ஞானமுள்ள அரசர்கள். தங்கள் வாழ்க்கை, தங்கள் எண்ணங்கள், சொற்கள், செயல்கள் ஆகியவைகளுக்கெல்லாம் தங்கள் வாழ்நாளில் மட்டும் அல்ல, தங்கள் வாழ்நாள் முடிந்தபிறகும் விளைவுகள் உண்டு, பலனுண்டு, என்பதை இரண்டுபேருமே அறிந்திருந்தார்கள். ஆனால், தாவீதின் வாழ்க்கைக்கும், எசேக்கியாவின் வாழ்க்கைக்கும் ஒரு வேறுபாடு உண்டு.
தாவீது தேவனுக்காகப் பெரிய அளவிலே ஒரு ஆலயம் கட்டவேண்டுமென்று விரும்பினான். ஆனால், ஆலயம் கட்டுவதற்கு தேவன் தாவீதுக்கு அனுமதி தரவில்லை. இஸ்ரயேல் நாட்டின் அரசாட்சியிலே, மற்ற அரசர்களோடு ஒப்பிடும்போது, தாவீதுக்கு ஒத்த நல்ல அரசனை நாம் காண முடியவில்லை. ஆனால், அந்தத் தாவீதிடம், “நீ எனக்காக ஆலயம் கட்ட முடியாது,” என்று தேவன் சொன்னார். இதற்கு என்ன காரணம் என்று தேவன் சொன்னார். “நீ நிறைய இரத்தம் சிந்தியிருக்கிறாய். அதனால் நீ ஆலயம் கட்ட வேண்டாம்,” என்று தேவன் சொன்னபோது தாவீது மிகவும் மனம் துக்கப்படுகிறார். “ஆனால், உன்னுடைய மகன் நீ விரும்புகிற அந்தப் பெரிய அளவிலான ஆலயத்தைக் கட்டுவான்,” என்று சொன்னவுடனே தாவீது ஒன்றைச் செய்கிறான். தாவீது ஆலயம் கட்டவில்லையேதவிர, அந்த ஆலயத்தைக் கட்டுவதற்குரிய எல்லாக் கச்சாப்பொருட்களையும் சேகரித்து வைக்கிறான். அதற்குரிய மரங்கள், அதற்குரிய வெள்ளி, பொன், கற்கள், இரும்பு என்று ஆலயம் கட்டுவதற்கு என்னென்ன பொருட்கள் தேவையோ அவையெல்லாவற்றையும் அவன் சேகரித்து வைத்தான். தமிழிலே சவதரித்தான் என்று எழுதியிருக்கிறது. “ஆலயம் கட்டுவதற்குத்தான் நீர் அனுமதிக்கவில்லையேதவிர, ஆலயம் கட்டுவதற்குத் தேவையான பொருள்களைச் சேகரிப்பதைத் தடுக்கவில்லையே!” என்று தாவீது புரிந்துகொண்டார்.
ஆலயத்தைக்குறித்த திட்டத்தையும் தேவன் தாவீதுக்குத்தான் தருகிறார். தாவீது தன் வாழ்க்கையின் பெரும்பகுதியைப் போரிடுவதற்குத்தான் செவழித்தார். அந்தக் காலத்திலே ஒரு எதிரியோடு போரிட்டு அவனை வென்றபிறகு, கொள்ளைப்பொருட்களைக் கொண்டுவருவார்கள். அந்த நாட்டிலுள்ள பொன், வெள்ளி, இரும்பு, விலையேறப்பெற்ற பொருட்கள் ஆகியவைகளையெல்லாம் கொள்ளையடித்துக் கொண்டுவருவார்கள். அந்தப் பொருட்களெல்லாம் வெற்றிபெற்ற அரசனுக்குரியது. வெற்றிபெற்ற அரசன் அந்தக் கொள்ளைப்பொருட்களைப் போருக்குச் சென்ற போர்வீரர்களுக்கும் பகிர்ந்துகொடுப்பான். அதன் பெரும்பகுதி அரசனைச் சேரும். தாவீதின் வாழ்க்கையின் போர்களுக்கெல்லாம் ஒரேவொரு அர்த்தம்தான் உண்டு. அது என்ன? தேவனுக்கென்று ஓர் ஆலயத்தை கட்டுவது, அந்த ஆலயத்திற்குரிய பொருட்களைச் சேகரிப்பது.
முடிந்தால் சகோதரர் T. Austin Sparksனுடைய “The spoil of the battle”என்ற ஒரு சிறு செய்தியை நீங்கள் வாசியுங்கள். அவர் கொடுக்கிற பொருள் என்னவென்றால், தாவீது தன்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு போரிலும் வெற்றி பெற்றுக் கொண்டுவந்த கொள்ளைப்பொருட்களைக் கொண்டுதான் தேவனுக்கு ஆலயத்தைக் கட்டினான். அதுபோல, நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு போரிலும் நாம் தேவனுடைய பகைவனாகிய சாத்தானை வென்று, அதற்குரிய அளவிலே ஏதோவொரு விதத்திலே நாம் கிறிஸ்துவை கொள்ளைப்பொருளாகப் பெற்றுக்கொள்கிறோம். அதைக்கொண்டுதான் தேவனை வெளியாக்குகிற ஆலயத்தை நாம் கட்டமுடியும் என்று அவர் அதை மிக அழகாக விவரிக்கிறார்.
“இஸ்ரயேல் என்ற ஒரு நாட்டை உருவாக்கிவிட்டேன். பெரிய அரசனாக மாறிவிட்டேன்,” என்ற எண்ணத்தில் அவன் இருந்துவிடவில்லை. அதுவல்ல அவனுடைய நோக்கம். தேவனுக்கு ஒரு ஆலயம் கட்ட வேண்டும் என்பதில்தான் அவன் கண்ணுங்கருத்துமாக இருந்தான். “அந்த ஆலயத்தைக் கட்டுவதற்கு என்னால் முடியாது. ஆனால், அதற்குரிய வரைபடம் என்னிடம் இருக்கிறது. அதற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்று எனக்குத் தெரியும். அவைகளை என்னுடைய மகன் சேகரிக்க வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது. நானே அதைச் சேகரிக்க வேண்டும்,” என்ற நோக்கத்தில் அவன் வாழ்ந்தான். இது உண்மையிலேயே தாவீது விதைத்தது. அவன் தன் வாழ்நாளில் அந்த ஆலயத்தைக் காணவில்லை.
இவனைப்போன்ற இன்னொரு மனிதர் மோசே. எந்தப் பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசத்தை அடைவதற்காகத் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தாரோ, அந்தத் தேசத்துக்குள் மோசே நுழையவில்லை. மாறாக, தேவன் அவனுக்குக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்து, அவனை அழைத்துக்கொண்டுவந்த பாலும் தேனும் ஓடுகிற அந்தக் கானான் தேசத்தை பிஸ்காவின் கொடுமுடி என்கிற பெரிய உயரத்திலிருந்து, ஒரு தூர இடத்திலிருந்து, மட்டும்தான் பார்க்க முடிந்ததேதவிர, அந்த நாட்டிலே வாழ்கின்ற ஒரு பாக்கியமான வாழ்க்கை அவனுக்குக் கிடைக்கவில்லை. எந்தத் தேசத்தில், எந்தக் குறிக்கோளுக்காக, ஒரு மனிதன் நாற்பது வயதுமுதல் எண்பது வயதுவரை தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் செலவழிக்கிறானோ, அதை அவன் அனுபவிக்கவில்லை.
இந்த வாழ்க்கைக்கும், புசிப்போம் குடிப்போம் நாளைக்குச் சாவோம் என்ற எப்பிகூரிய தத்துவ ஞான வாழ்க்கைக்கும் இடையேயுள்ள வேறுபாட்டைப் பாருங்கள். “நான் கண்டாலும் காணாவிட்டாலும், நுழைந்தாலும் நுழையாவிட்டாலும் அந்தத் தேசத்தை நோக்கி நடப்பதுதான் என்னுடைய வாழ்க்கை,” என்பது மோசேயினுடைய வாழ்க்கை. “ஆலயத்தை நான் கட்டினாலும் கட்டாவிட்டாலும், அதைக் கட்டுகிற இலக்கை நோக்கி நடப்பதுதான் என் வாழ்க்கை,” என்பது தாவீதின் வாழ்க்கை. இவர்கள் ஒரு சாரார்.
இன்னொரு சாரார் எசேக்கியாபோன்றவர்கள். எசேக்கியாவும் தேவனுக்குப் பயந்து வாழ்ந்த ஒரு மனிதன்தான். தேவனைப்பற்றிய மிக நெருக்கமான அறிவு அவனுக்கு உண்டு. ஒருமுறை அவன் சாகும் தருவாயில் இருக்கும்போது, ஏறக்குறைய உயிர்த்தெழுதலுக்குச் சமமாகத் தன்னுடைய ஆயுளை நீட்டித்துப் பெற்றுக்கொள்கிறான். அதுபோன்ற ஒரு அற்புதத்தை நம்மில் பலர் பார்த்திருக்க மாட்டோம். எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தபோது, “நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குபடுத்தும். நீர் பிழைக்கமாட்டீர்; மரித்துப்போவீர்,” (2 இரா. 20:1) என்று ஏசாயா தீர்க்கதரிசியின்மூலமாகத் தேவன் சொல்லி அனுப்பினார். “அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திரும்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி: ஆ, கர்த்தாவே! நான் உமக்குமுன்பாக உண்மையும் மனஉத்தமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம் பண்ணினான். எசேக்கியா மிகவும் அழுதான். ஏசாயா பாதி முற்றத்தைவிட்டு அப்புறம் போகிறதற்கு முன்னே, கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி அவர் சொன்னது: உன் விண்ணப்பத்தைக் கேட்டேன். உன் கண்ணீரைக் கண்டேன். இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன். மூன்றாம் நாளிலே நீ ஆலயத்துக்குப் போவாய். உன் நாட்களோடே பதினைந்து வருடங்களைக் கூட்டுவேன்,” என்று சொன்னார் (வ.2-6). கர்த்தர் தாம் சொன்ன வார்த்தையின்படியே செய்வார் என்பதற்கு அடையாளமும் கொடுக்கிறார்.
தேவனுடைய அற்புதத்தை இந்த அளவுக்கு அனுபவித்தபிறகு, ஒருமுறை பாபிலோனிலிருந்து ஒரு சில அரசதூதுவர்கள் இந்த யூதா அரசனைப் பார்ப்பதற்காக வருகின்றார்கள். வந்த விருந்தினர்களை அவன் அழைத்துக்கொண்டுபோய், தேவாலயத்திலிருக்கிற பொக்கிஷங்கள்உட்பட எல்லாப் பொக்கிஷங்களையும் திறந்து காண்பிக்கிறான்.
தேவாலயத்தின் பொக்கிஷம் மக்களுக்குக் காட்சிகாட்டுவதற்காக அல்ல. தேவாலயம் தேவனுடைய மக்கள் சந்திப்பதற்கான, தேவனை ஆராதிப்பதற்கான, இடம். அங்கிருக்கின்ற பொருட்களெல்லாம் தேவன் எவ்வளவு பெரிய பணக்காரர் அல்லது என்னுடைய மதம் எவ்வளவு பணக்கார மதம் என்று காண்பிப்பதற்காக இல்லை.
அவன் அந்த நாட்டின் அரண்மனையிலுள்ள, தேவாலயத்திலுள்ள, எல்லாப் பொக்கிஷங்களையும் வந்தவர்களுக்குக் காண்பிக்கின்றான். அப்போது தேவன் தீர்க்கதரிசியை அனுப்புகிறார். ஏசாயா தீர்க்கதரிசி எசேக்கியாவிடம் வந்து, “அந்த மனிதர்கள் என்ன சொன்னார்கள்? எங்கேயிருந்து உம்மிடத்தில் வந்தார்கள்? உம்முடைய வீட்டில் என்னத்தைப் பார்த்தார்கள்?” என்று கேட்கிறார். அதற்கு அவன், “பாபிலோன் என்னும் தூர தேசத்திலிருந்து வந்தார்கள். என் வீட்டிலுள்ள எல்லாவற்றையும் பார்த்தார்கள். என் பொக்கிஷங்களில் நான் அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை.” என்று பதில் சொல்கிறான். “அப்பொழுது ஏசாயா எசேக்கியாவை நோக்கி: கர்த்தருடைய வார்த்தையைக் கேளும். இதோ நாட்கள் வரும்; அப்பொழுது உமது வீட்டில் உள்ளதிலும், உமது பிதாக்கள் இந்நாள் வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டு போகப்படும்,” (2 இரா. 20:16-17) என்று சொன்னார்.
“சாகப்போகிறாய்” என்று சொன்னவுடனே தரையில் விழுந்து சுவர்புறமாகத் திரும்பி முன்பு அழுததுபோல, இந்த முறை அவன் அழவில்லை. மாறாக அவன், “இது என்னுடைய காலத்தில் நடக்குமா அல்லது என்னுடைய பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் காலத்தில் நடக்குமா?” என்று கேட்கிறான். “உன்னுடைய காலத்தில் நடக்காது,” என்று அறிந்தவுடன், “நீர் சொன்ன கர்த்தருடைய வார்த்தை நல்லதுதான் என்று சொல்லி, என் நாட்களிலாவது சமாதானம் இருக்குமே!” (2 இரா. 20:19) என்று சொன்னான். பாபிலோனியர் வந்து எருசலேமை முற்றுகையிட்டு, அந்த அரசனைப் பிடித்து, அவனுடைய பிள்ளைகளுடைய கண்களைக் குத்தி குருடாக்கினான். அந்த எருசலேம் முற்றுகையிலே பல்லாயிரக்கணக்கான மக்கள் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போனது பழைய ஏற்பாட்டிலே மிக முக்கியமான நிகழ்ச்சி என்று நான் நினைக்கிறேன். அந்த அறுவடைக்கு வித்திட்டவன் எசேக்கியா.
தாவீதும் விதைக்கிறான்; அதை சாலொமோனும், அவனுடைய பல தலைமுறைகளும் அறுவடைசெய்கிறார்கள். அந்த அறுவடை “தேவாலயம்”. எசேக்கியாவும் விதைக்கிறான்; அதையும் பலதலை முறைகள் அறுவடை செய்கிறார்கள்.
ஆகவே, இது தெளிவாய்த் தெரிகிறது. நம்முடைய எண்ணங்களும், சொற்களும், செயல்களும் இன்று நம்மை மட்டும் பாதிப்பது இல்லை. நம்மையும், நம்மைச்சார்ந்தவர்களையும் பாதிக்கும். பல ஆண்டுகள் கழித்து அதன் நன்மையையோ, தீமையையோ அவர்கள் அறுப்பார்கள்.
அப்படியானால், தேவனுடைய மக்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும்? நம்முடைய வாழ்க்கை விதைக்கின்ற ஒரு வாழ்க்கையாக இருக்க வேண்டும். நம் வாழ்க்கை மிகக் கடினமா என்றால் கடினம்தான். விதைக்கின்ற வாழ்க்கை கடினம்தான். விதைக்கின்ற வாழ்க்கை ஒரு எளிய வாழ்க்கை அல்ல. அது எளிதானது என்றால் எல்லாருமே விதைக்கின்ற வாழ்க்கை வாழமுடியுமே! நாம் வாழ்கிறோம். ஆனால், பொதுவாக நாம் விதைக்கின்ற வாழ்க்கை வாழ்வது இல்லை. இந்தப் பூமியிலே ஒரு மாபெரும் விதைக்கின்ற வாழ்க்கை வாழ்ந்த ஒரு நபர் உண்டு. அவர் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து.
அது ஒரு திருவிழாக் காலம். இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்ட சில கிரேக்கர்கள் இயேசுவைப் பார்க்க வேண்டுமென்று விரும்பினார்கள். இயேசுவினுடைய சீடர்களாகிய அந்திரேயா, பிலிப்பு ஆகியோரைச் சந்தித்து, “ஐயா, நாங்கள் இயேசுவைக் காண விரும்புகிறோம்,” (யோவான் 12:21) என்று சொன்னார்கள். உடனே பிலிப்புவும் அந்திரேயாவும் இயேசுவினிடத்தில் வந்து, “கிரேக்கர்கள் உம்மைக் காண வந்திருக்கிறார்கள்,” என்று சொன்னார்கள். இதன் பொருள் என்னவென்றால், “உண்மையிலேயே நீர் எதற்காகப் பாடுபடுகிறீரோ, அது நிறைவேறுகிற நாட்கள் வந்துவிட்டன. இப்போது உம்முடைய புகழ் யூதேயாவிலும், கலிலேயாவிலும் மட்டுமல்ல. உம்முடைய புகழ் கிரேக்கர்கள் மத்தியிலேகூட பரவிவிட்டது,” என்பதுதான் அந்திரேயா, பிலிப்புவின் எண்ணம்.
உடனடி பயன்! உடனடி பலன்! இது மனிதனுடைய எண்ணம். பிலிப்பு, அந்திரேயாவினுடைய எண்ணமும் அதுதான். உடனடி பயன்! உடனடி பலன்! உடனடி நன்மை என்றால் நாம் மகிழ்ச்சியடைவோம். உடனடி தீமை என்றால் நாம் துக்கமடைவோம். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மனிதனுடைய எண்ணங்களை உடையவர் அல்ல.
பிலிப்புவும், அந்திரேயாவும் இயேசுவினிடத்தில் வந்து சொன்னவுடனே அவர், “மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன். கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும். செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும்” (யோவான் 12:24) என்றார். இந்த வசனத்திற்குப் பின்புலம் வேண்டும். ஏன், எப்போது, ஆண்டவராகிய இயேசு இந்த வார்த்தைகளைச் சொன்னார்? ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தம் சீடர்களுக்கு அந்தக் கோட்பாட்டைக் காண்பிக்கிறார். நாம் ஒரு கனியை, ஒரு பயனை, ஒரு அறுவடையை, பெறுவது உடனடியாக நிகழ்கிற ஒன்றல்ல. அது விதைக்கிற வாழ்க்கையின் பலன். தேவனுடைய சித்தத்தின்படி ஒரு விதைக்கிற வாழ்க்கை வாழ்ந்தால் அதன்மூலமாக ஒரு கனியும், ஒரு பலனும், ஒரு பயனும் விளையும். இதுதான் தேவனுடைய எண்ணம். மனிதர்களுடைய எண்ணம் அப்படியல்ல. உடனடியாக நன்மை கிடைத்தால் ஒன்றைச் செய்வதும், உடனடியாக தீமை கிடைத்தால் ஒன்றைச் செய்யாமலிருப்பதும்தான் மனிதனுடைய எண்ணம்.
நான் இரண்டு கேள்விகளைக் கேட்கிறேன். ஒன்று விதைக்கின்ற வாழ்க்கை என்றால் என்ன அல்லது விதைப்பது என்றால் என்ன? இதற்கு மிகத் துல்லியமான, சரியான, பதிலை நான் தரப்போவது இல்லை. விதைப்பது என்பது சிலுவையில் அறையப்படுகிற ஒரு வாழ்க்கை என்பது ஆவிக்குரிய தளத்தில் சரியான பதில். விதைக்கின்ற வாழ்க்கை சிலுவையில் அறையுண்ட, சிலுவையில் அறையப்படுகிற வாழ்க்கை. ஏனென்றால் அவர் தாம் சிலுவையில் அறையப்படுவதைப்பற்றியே, சிலுவையைப் பற்றியே யோவான் 12:24இல் பேசுகிறார். நடைமுறைக்குரிய தளத்தில் இது எப்படிச் செயல்படுகிறது?
நடைமுறைக்குரிய தளத்திலே நான் உங்களுக்கு ஒரு பதிலைச் சொல்ல விரும்புகிறேன். “சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில் போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள். அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாதிருந்தும் கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும். சோம்பேறியே, நீ எவ்வளவு நேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்? இன்னுங் கொஞ்சம் தூங்கட்டும், இன்னுங் கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ? உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும், உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலவும் வரும்” (நீதி. 6:6-11). நான் புரிந்துகொண்டதைச் சொல்கிறேன். அது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
முதலாவது, விதைப்பது அல்லது “விதைக்கின்ற வாழ்க்கை” என்றால் நீண்டகால நலனுக்காக, பலனுக்காக, கனிக்காக, விளைவுக்காக ஒன்றைச் செய்வது. பல சமயங்களில் அது ஒரு செயலாக இருக்காது. ஒரு பழக்கமாக இருக்கும். இன்றைக்கும் நான் அதைச் செய்ய வேண்டும். நாளைக்கும் அதைச் செய்ய வேண்டும். நாளை மறுநாளும் அதைச் செய்ய வேண்டும். அப்படியே ஒவ்வொரு நாளும், ஏழு நாளும், 365 நாட்களும், நான் அதைச் செய்தால், அதனுடைய நலனை, பலனை, கனியை, விளைவை நாம் அனுபவிப்போம்.
நீங்கள் ஒரு நல்ல ஆராய்ச்சியாளராக வரவேண்டுமென்றால் நான் ஒரு காரியத்தைச் சொல்கிறேன். ஐந்து வருடம் ஒரு பாடத்தை ஒவ்வொரு நாளும் படிப்பீர்களென்றால் அந்த ஐந்து வருடத்தின் முடிவிலே, அந்தத் துறையிலே நீங்கள் ஒரு ஆராய்ச்சியாளனாக, ஒரு வித்தகனாக, தேறினவனாக, மேதையாக, ஞானியாக மாறிவிடுவீர்கள்.
மைக்ரோசாப்ற்பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அதை உருவாக்கினவர் பில் கேட்ஸ். அவர் வாலிபனாக இருந்தபோது இப்போது இருப்பதுபோல ஆளுக்கொரு கணினியெல்லாம் இல்லை. அமெரிக்காவில் ஐந்து இடங்களில்தான் கணினி இருக்கும் அல்லது ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில்தான் கணினி இருக்கும். Windows M.S.DOS கூட இல்லாத காலம். அந்தக் காலத்திலே இந்த வாலிபருக்கு கணினியில் programme பண்ணுவதிலே மிகுந்த ஆர்வம். ஆனால் நாட்டிலேயே ஐந்து கம்ப்யூட்டர்தான் இருக்கும். அப்போது தமிழ்நாட்டிலேயே I.I.T. மெட்ராஸில் மட்டும்தான் கம்ப்யூட்டர் இருந்தது. அவர்கள் அந்தக் கணினியில் வேலை செய்ய வேண்டுமென்றால் இரவு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே கணினி அவர்களுக்குக் கிடைத்தது. ஒவ்வொரு நாளும் அந்த நேரத்தில் போய் வேலை செய்வாராம். அதைக் கற்றுக்கொள்ள வேண்டும். அதில் மாஸ்டர் பண்ண வேண்டும் என்ற வெறி. ஒரு மாநிலத்திலே ஒரேவோர் இடத்தில்தான் கம்ப்யூட்டர் இருக்கும் என்ற நிலை மாறி ஒவ்வொரு அலுவலகத்திலும் ஒரு கணினி வரலாம் என்கிற நிலை வந்தபோது programme எழுதுவதற்கு ஆட்கள் தேவை அல்லது pசழபசயஅஅந உற்பத்தி பண்ணுவதற்கு ஆட்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அப்படிப்பட்ட ஆட்கள் அன்றைக்கு அமெரிக்காவிலே இல்லை. Bill Gates ரெடியாக இருந்தார். அந்தத் தேவை வந்தபோது, அதற்குரிய ஞானமும், அறிவும், திறமையும், பின்புலமும் உள்ள ஆட்கள் வெகு வெகு சிலரே இருந்தார்கள். அதிலே ஒரு ஆள் இவர். எத்தனை இரவுகள்! எத்தனை வருடங்கள்! எப்போது இதற்குப் பலன் கிடைக்கும் என்று தெரியாது. அவர் எத்தனை வருடங்கள் இதைச் செய்திருப்பார்! பலன் எத்தனை வருடங்கள் கழித்துக் கிடைக்கிறது, பாருங்கள்! இன்றைக்கு அவர் நிழலிலே உட்கார்ந்து சாப்பிடுகிறார். ஆனால், நிழலிலே உட்கார்ந்து சாப்பிடுவதற்குமுன் எத்தனை வருடங்கள் வெயிலிலே விதைத்திருக்கிறார் என்பதை நாம் பார்க்க வேண்டும்.
முதலாவது, விதைப்பது என்றால் அது நீண்டகால நலன், பலன் அல்லது பயன் அல்லது கனி. இதற்காக அவன் ஒரு செயலை அல்லது ஒரு பழக்கத்தைத் தொடர்ந்துசெய்கிறான்.
இரண்டாவது, ஒரு செயலை அல்லது ஒரு பழக்கத்தை மனிதர்களுடைய கண்களுக்குத் தெரியாமல் அல்லது மனிதர்களுடைய கண்களைக் கவராத ஒன்றைத் தொடர்ந்து செய்வது. மறைவாக, அந்தரங்கமாக. நான் சொல்வது, நன்மைக்கு மட்டுமல்ல தீமைக்கும் பொருந்தும். விதைப்பது என்பது நீண்ட காலம் கழித்து வரப்போகிற ஒரு தீய பலன். ஒரு தீய கனி. அதற்காகவும் இன்றைக்கு செய்யும் ஒரு குறிப்பிட்ட செயலோ, பழக்கமோ இருக்குமென்றால் அதற்குரிய ஒரு தீய பலன், தீய கனி, தீய விளைவு இருக்கும்.
இரண்டாவது, மறைமுகமாக, அந்தரங்கமாக ஒன்றைச் செய்வது. மனிதர்களுடைய கண்களுக்கு அது புலப்படாது. இதற்குப் பலன் நன்மையா தீமையா என்கிற ஒரு அறிவு அவர்களுக்கு இல்லாமல் போகலாம். ஆனால், அவர்கள் அதைப் பொருட்படுத்தமாட்டார்கள். மனிதர்களுடைய கண்களுக்கு உடனே தீமை என்று புலப்படுகிறது என்றால் நாம் அதைச் செய்ய மாட்டோம். மனிதர்களுடைய கண்களுக்கு உடனே நன்மை என்று புலப்படுகிறது என்றால் அதை நாம் செய்வோம். இது மனிதர்களுடைய கண்களுக்கு மறைவாக நடைபெறுகிற ஒன்று.
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் 30 ஆண்டு வாழ்க்கை அப்படிப்பட்ட வாழ்க்கை. மனிதர்களுடைய கண்களுக்கு மறைவான ஒரு வாழ்க்கை. பொதுவாக நாம் நண்பர்களுக்காக ஒன்றைச் செய்வோம் அல்லது செய்யாமல் இருப்போம். பிள்ளைகளுக்காக அல்லது மனைவி மக்களுக்காக ஒன்றைச் செய்வோம் அல்லது செய்யாமல் இருப்போம். மனிதர்களுடைய பாராட்டு உடனடியாக கிடைக்குமென்றால் செய்வோம் அல்லது மனிதர்களுடைய கோபம் உடனடியாக கிடைக்குமென்றால் அல்லது அவர்களுடைய கண்களிலே மிகவும் இழிவானவர்களாய் மாறிவிடுவோமென்றால் நாம் செய்ய மாட்டோம். ஏனென்றால் மனிதர்களுடைய அபிப்பிராயம் ரொம்ப முக்கியம். மனிதர்களுடைய அபிப்பிராயம் நம்மை அடிமைப்படுத்திவிடும். அந்த அளவுக்கு அது வலுவுள்ளது.
மூன்றாவது, விதைத்து வாழ்கிற வாழ்க்கை என்பது ஒரு கிரயம் கொடுக்கிற வாழ்க்கை. “நீ எறும்பினிடத்தில் போய் ஞானத்தைக் கற்றுக்கொள்” (நீதி. 6:6).
பரிசுத்த வேதாகமம் எவ்வளவு மாபெரும் புத்தகம் தெரியுமா? இதுபோன்ற ஒரு உன்னத புத்தகத்தை யாரும் பார்க்க முடியாது. “நீங்கள் அவருடைய ஆவியினாலே உங்கள் உள்ளான மனிதனில் வல்லமையாய்ப் பலப்படவும்” (எபே. 3:16), “கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்” (எபே. 2:7), “அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்” (எபே. 1:3) என்று சொல்லுகிற எபேசியர் புத்தகமும் இந்த வேதத்திலே உண்டு. “நீ எறும்பினிடத்தில் போய் அதன் வழிகளைப் பார்த்துக் கற்றுக்கொள்,” என்று சொல்லுகிற நீதிமொழிகள் புத்தகமும் உண்டு.
நீதிமொழிகளிலே விதைப்பதைப்பற்றி நிறைய சொல்லப்பட்டிருக்கிறது. அது மழைகாலத்திற்கு வேண்டிய உணவை கோடைகாலத்திலே சேர்த்து வைக்கிறது. உடனே சேமிப்பதைப்பற்றித்தான் வேதாகமம் பேசுகிறது என்று நினைக்கக் கூடாது. நான் எதைச் சொல்லுகிறேன் என்றால் நாம் ஒரு நீண்டகால நலனை அல்லது கனியை அல்லது பலனை கருத்தில் வைப்போமானால், உடனடியாகக் கிடைக்கிற நன்மைக்காக இப்போது கிடைக்கிற உணவை இப்போதே சாப்பிட்டுத் தீர்த்துவிடமாட்டோம். உடனடி மகிழ்ச்சி, உடனடி இன்பம் என்பதுதான் இந்த உலகத்தினுடைய போக்கு.”புசிப்போம், குடிப்போம்; ஏனென்றால் நாளைக்குச் சாவோம்,” என்பதுதான் இந்த உலகத்தின் மனப்பாங்கு. “இன்றைக்கு எனக்கு உடனடியாக என்ன கிடைக்கும்?” என்றுதான் உலகம் எதிர்பார்க்கிறது.
“கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்” (சங். 126:5). இது ஓர் அற்புதமான வசனம். என் சிறு வயதிலே நான் ஒரு கதை வாசித்தேன்;. வெட்டுக்கிளி கதை. ஒரு வெட்டுக்கிளி கோடைகாலத்திலே துள்ளித் துள்ளி விளையாடிக்கொண்டிருந்தது. ஆனால், எறும்போ ஆகாரத்தைச் சேமித்தது. இரண்டு நபர்களை எடுத்துக்கொள்வோம். இருவரும் தங்கள் அறுபது வயதிலே அல்லது எண்பது வயதிலே எப்படி இருப்பார்கள் அல்லது அவர்களுடைய தலைமுறையையும் தாண்டி அவர்களுடைய அடுத்த தலைமுறை எப்படி இருக்கும் என்பது எதைப் பொறுத்தது தெரியுமா? இவர்களில் யார் வளமான, செழிப்பான, ஆசீர்வாதமான வாழ்க்கை வாழ்கின்றார்கள் என்பது இந்த இருவரில் இன்றைக்கு யார் அதிகமான கிரயம் கொடுத்து வாழ்கின்றார்கள் என்பதைப் பொறுத்தது.
“பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்துமுடியாதது. சோர்ந்து போகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப் பண்ணுகிறார். இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப் போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள். அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்,” (ஏசாயா 40:28-31). விதைக்கிற வாழ்க்கைக்கு இன்னொரு பெயர் காத்திருக்கிற வாழ்க்கை. சங்கீதம் முழுவதும் “நீ கர்த்தருக்குக் காத்திரு” என்ற வாக்கியம் அடிக்கடி வரும். உலகத்து மக்களைப் பொறுத்தவரை காத்திருப்பது என்கிற கருத்து இல்லை.
முன்பு ரயிலிலே பிரயாணம்பண்ணும்போது “இன்று குலுக்கல் நாளை லட்சாதிபதி” என்ற கோஷத்தை அடிக்கடி கேட்டிருப்போம். அது நகைச்சுவையாக இருந்தாலும் இந்த உலக மக்களுடைய மனப்பாங்கிற்கு அது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. உலக மக்களைப் பொறுத்தவரை காத்திருப்பது என்பது அந்நிய காரியம்.
நீண்டகாலப் பலன்; அந்தரங்க மறைமுகமான வாழ்க்கை; விலைக்கிரயம் செலுத்துகிற வாழ்க்கை; காத்திருப்பது இவைகளுக்கெல்லாம் இந்த உலகத்து மக்களுடைய எண்ணத்திலே இடமில்லை. ஆனால், தேவனுடைய எண்ணம் எப்பொழுதும் இதுதான்.
இன்னும் சொல்லப்போனால் விசுவாசத்தினுடைய ஆதாரமே அதுதான். விசுவாசத்தின் தகப்பனாகிய ஆபிரகாமுடைய வாழ்க்கை இப்படிப்பட்டதுதான். அவர்கள் தாங்கள் விசுவாசித்ததைத் தூரத்திலே கண்டு, அணைத்துக்கொண்டு அவைகளை அடையாமற்போனார்கள் என்று எழுதியிருக்கிறது. நீண்ட காலம் என்றால் அது என்னுடைய நாற்பது வயதாக இருக்கலாம். அறுபது வயதாக இருக்கலாம். எண்பது வயதாக இருக்கலாம். என்னுடைய மக்களாக இருக்கலாம். என்னுடைய மக்களுடைய மக்களாக இருக்கலாம். நானும், அவர்களும் இந்த நலனை நிச்சயமாக அடைவோம். நிழலிலே அமர்ந்து வாழ முடியும். அது அவனுடைய விசுவாசம்.
இரண்டாவது,** மக்களுடைய பார்வையிலே அவன் மிகவும் வெற்றிபெற்ற மனிதன் என்று சொல்ல முடியாது.** மூன்றாவது, அவன் ஒரு விலைக்கிரயம் செலுத்துகிறான். நான்காவது, காத்திருக்கிறான். ஏனென்றால், ஒருவன் விலைக்கிரயம் செலுத்தி இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை வாழும்போது அவனுடைய விசுவாசம் சோதிக்கப்படும், பரீட்சிக்கப்படும். உடனே விதைத்து, உடனே ஒரு பலன் கிடைக்கிறது என்றால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நாம் இன்றைக்கு விதைக்கிறோம். ஆனால், பல ஆண்டுகள் கழித்துத்தான் அந்தப் பலன் கிடைக்குமென்றால் நாம் விதைக்க மாட்டோம். ஆனால், தேவனுடைய கோட்பாடு என்னவென்றால் அது உடனடி பலனைத் தரப்போவதில்லை. நீண்ட நெடுங்காலப் பலனைத்தான் தரும். உடனடியாக மனிதர்களுடைய கவனத்தை ஈர்க்கப்போவதில்லை. மனிதர்களுடைய கண்களுக்கு இது மறைவாகவும், அந்தரமாகவும் இருக்கும். இதற்காக ஒரு விலைக்கிரயம் கொடுக்க வேண்டும். “எல்லாரும் அனுபவித்து மகிழும்போது நான் மட்டும் ஏன் சேகரித்து வைக்க வேண்டும்? எல்லாரும் கொஞ்சம் நீண்ட நேரம் தூங்கும்போது நான் மட்டும் ஏன் இந்தத் தூக்கத்தைவிட வேண்டியிருக்கிறது. எல்லாரும் ஞாயிற்றுக்கிழமை ஜாலியாக இருக்கும்போது நான் மட்டும் ஞாயிற்றுக்கிழமை தேவனுடைய மக்களோடு காத்துக்கொண்டிருக்கிறேன். இதற்கெல்லாம் என்ன பலன் கிடைக்கும்?” பலன் கிடைக்கும். பலன் இல்லை என்றால் நாம் ஏன் அதைச் செய்ய வேண்டும்? இதில் ஒரு பலன் இருக்கிறது. நீண்ட கால பலன் இருக்கிறது.
என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை என்னவென்றால் இந்தப் பூமியிலே எந்தக் கல்லூரியிலும், பல்கலைக்கழகத்திலும் நாம் கற்றுக்கொள்வதைவிட உண்மையாகவே தேவனை நேசிக்கிற, தேவனை அறிகிற பரிசுத்தவான்களுடைய ஐக்கியத்திலே நாம் அறிந்துகொள்வது மிக மிக ஆழ்ந்தது, மிக மிக உயர்ந்தது. “திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்துகொடுக்கக்கடவன்” (கலா. 6:6) என்று பவுல் சொல்கிறார். இந்த வசனத்தை நான் மேற்கோள் காட்டுவதே இல்லை.
விசுவாசம் என்பது நாம் தேவனுடைய கோட்பாட்டின்படி வாழும்போது, தேவன் நிச்சயமாக அதற்குரிய பலனைத் தருவார் என்பதே. “உலகத்து மக்கள் உடனடியாக அந்தப் பலனைப் பெற்று விடுகிறார்களே! நாமும் அதுபோல உடனடி பலனைப் பெற்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்!” என்று நினைக்கிறீர்களா? அவர்களுக்குக் கிடைப்பது இந்த உடனடி பலன் மட்டும்தான். நான் உங்களை ஏமாற்றவில்லை. என்னையும் நான் ஏமாற்றவில்லை. “நாம் மறுமையில் பெறப்போகிற பலனுக்காக இம்மையிலே நாமெல்லாரும் பட்டினியாயிருப்போம்,” என்று நான் சொல்லவில்லை. தேவன் இம்மையிலும், இன்றைக்கும், நமக்குப் போதுமான நன்மைகளைத் தருவார். நம்முடைய உறக்கத்திலே, நம்முடைய உணவிலே, நம்முடைய நேரத்திலே, நம்முடைய கேளிக்கைகளிலே இவை எல்லாவற்றிலேயும் நாம் விதைக்கும்போது தேவன் அதற்குரிய பலனைத் தருவார். அதை நாம் அனுபவிக்கும்போது அது நமக்கு இன்பமாக இருக்கும்.
“நெடுங்காலமாய்க் காத்திருத்தல் இருதயத்தை இளைக்கப்பண்ணும். விரும்பினது வரும்போதோ ஜீவ விருட்சம்போல் இருக்கும்” (நீதி. 13:12). நிச்சயமாக நம்முடைய விசுவாசம் பரிசோதிக்கப்படும். நம்முடைய விசுவாசம் பரீட்சிக்கப்படும். ஆனால் அதன் விளைவை, நலனை, அந்தப் பயனை, அந்தக் கனியை நாம் அனுபவிக்கும்போது அது ஜீவவிருட்சம்போல் இருக்கும். தேவன் அப்படிப்பட்ட ஒரு விசுவாசத்தையும், அப்படிப்பட்ட விசுவாசத்தினாலே விதைக்கிற வாழ்க்கையையும், நமக்கு அருள்வாராக, ஆமென்.