Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

இயேசு கிறி‍ஸ்துவின் மையநிலையும், முதன்மைநிலையும்

Unedited transcript of a message spoken in September, 2014 in Chennai 

By Milton Rajendram

சில வசனங்களை நாம் வாசிப்போம். முதலாவது நான் வசனங்களைச் சொல்லிவிடுகிறேன். நீங்கள் குறித்துக்கொள்ளுங்கள். நேரம் குறைவாக இருப்பதால், இந்த வசனங்களுக்கெல்லாம் விளக்கவுரை, interpret‍ationம், கொடுக்க முடியாது. விளக்கவுரை கொடுப்பதல்ல என் நோக்கம். இந்த வசனங்களெல்லாம் புதிய ஏற்பாட்டிலே மிக முக்கியமான வசனங்கள். ஆகவே, இவைகளைக் குறித்துக்கொள்வோம். கலாத்தியர் 1:16; கலாத்தியர் 2:20, எபேசியர் 3:17, கலாத்தியர் 4:19, பிலிப்பியர் 1:20, கடைசியாக 1 கொரிந்தியர் 3:16முதல் 18வரையிலான வசனங்கள்.

நான் இப்போது பகிர்ந்துகொள்ளப்போகிற காரியம் The centrality, and Supremacy of the Lord Jesus Christ. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மையநிலையும், உயர்ந்தநிலையும், உன்னதநிலையும் என்ற ஒரு புத்தகத்தின் அடிப்படையில் நான் இதைப் பகிர்ந்துகொள்கிற‍ேன். இதற்கு அர்த்தம் எல்லாச் செய்திகளும் புத்தகங்களின் அடிப்படையில் கொடுக்க வேண்டும் என்பதல்ல. இன்னும் சொல்லப்போனால், நாம் படிக்கின்ற புத்தகங்களையெல்லாம் நாம் பேசவேண்டும் என்ற அவசியம்கூட இல்லை. ஆனால், இந்தப் புத்தகம் மிகச் சிறப்பான ஒரு புத்தகம். நாற்பது பக்கங்கள்தான் இருக்கும். ஆனால், புதிய ஏற்பாட்டில் தேவன் தம்முடைய பிள்ளைகளோடு எப்படி இடைப்படுகிறார் அல்லது பரிசுத்த ஆவியானவர் தம்முடைய மக்களை எப்படி நடத்துகிறார் என்பதற்கு இதுபோன்ற ஒரு ‍தெள்ளத்தெளிவான விளக்கத்தை நான் தேவனுடைய மக்கள் பலரிடமிருந்து பெற்றதில்லை. அதன் அடிப்படையில் நான் இந்தக் குறிப்புக்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.

  1. ஒன்றாவது, கிறிஸ்து நமக்குள் வெளிப்படுத்தப்படுதல் - இது கலாத்தியர் 1:16;
  2. இரண்டாவது, கிறிஸ்து நம்மில் வாழ்தல் - இது கலாத்தியர் 2:20;
  3. மூன்றாவது, கிறிஸ்து தம் வீட்டை நம் இருதயத்தில் அமைத்தல் அல்லது கட்டுதல் - இது எபேசியர் 3:17;
  4. நான்காவது, கிறிஸ்து நமக்குள் உருவாக்கப்படுதல் - இது கலாத்தியர் 4:19;
  5. ஐந்தாவது, கிறிஸ்து நம்மில் மகிமைப்படுதல் - பிலிப்பியர் 1:20.

இந்தப் பகிர்ந்துகொள்ளுதலை அந்தப் புத்தகத்திற்கு ஒரு முன்னுரையாகக்கூட அல்லது அந்தப் புத்தகத்தின் சுருக்கமாகக்கூட நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். இதனால் நீங்கள் உற்சாகப்படுத்தப்பட்டு நீங்கள் இந்தப் புத்தகத்தைப் படிப்பீர்கள் என்றால் அது மிகவும் நல்லது. பல்லாயிரக்கணக்கான ஆவிக்குரிய புத்தகங்கள் இந்த உலகத்தில் உள்ளன. எல்லாவற்றையும் படிக்க வேண்டும் என்று தேவன் தம்முடைய மக்களிடத்தில் எதிர்பார்க்கவில்லை. ஒரு சில புத்தகங்களைத் தெரிந்தெடுத்து நாம் படிப்பது நல்லது, அவசியம். அதில் இது ஒன்று என்று நான் நினைக்கின்றேன்.

இந்தப் பிரபஞ்சத்திலே ஒரு கூட்டம் மனிதர்களிடத்தில் தம்முடைய குமாரனாகிய கிறிஸ்துவை உருவாக்குவதுதான் தேவனுடைய பிரதான நோக்கம், தேவனுடைய முதன்மையான நோக்கம், தேவனுடைய தலையாய நோக்கம், தேவனுடைய ஒரே நோக்கம். இந்த யுகம் முடிவடைகிறபோது, இந்த யுகத்திலே கிறிஸ்துவைத்தவிர வேறொன்றையும் தேவன் விட்டுவைப்பதில்லை; கிறிஸ்துவைத்தவிர வேறு எல்லாவற்றையும் அவர் குப்பையென்று எரித்துவிடுகிறார். அடுத்த யுகம் அல்லது நித்தியம் என்று ஒன்றிருக்கிறது. அடுத்த யுகத்திற்குள் போவது, கிறிஸ்துவாக மட்டுமே இருக்கும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையிலே, எது கிறிஸ்துவாகவே இருக்கிறதோ அதுவும் அல்லது யாருக்குள் கிறிஸ்து உருவாக்கப்பட்டிருக்கிறாரோ அவர்களு‍ம் மட்டுமே அந்த யுகத்திற்குள் இருப்பார்களேதவிர கிறிஸ்துவல்லாத மற்றெல்லாம் சுட்டெரிக்கப்படும் என்பதற்கு ஆதாரமாக 1 கொரிந்தியர் 3:11, 12, 13ஆம் வசனங்களை நாம் சொல்லலாம். “போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது,” என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார். இயேசு கிறிஸ்துவே தேவ மக்களுடைய அஸ்திபாரம், அடித்தளம், Foundation என்று அவர் கூறுகிறார். 1 கொரிந்தியர் 3:10திலிருந்து 15வரை நீங்கள் வாசிக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவே தேவ மக்களுடைய அஸ்திபாரம், அடித்தளம், Foundation என்றால், அவர்களுடைய வாழ்க்கை முடிவடையும்போது, அவர்களுடைய வாழ்க்கையிலிருந்து வெளிப்படுவதும், அதனுடைய Super structure, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவாகத்தான் இருக்க வேண்டும். அதைச் சொல்லும்போது பவுல், “ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால், அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும். அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான். ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினது போலிருக்கும்,” என்று சொல்லுகிறார். Quality Control - QC ஒன்று உண்டு. அதன் தரம் பரிசோதிக்கப்படும். அது அக்கினியினால் சோதிக்கப்படும் என்றால் நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையாக இருந்தாலும் சரி அல்லது நம் கிறிஸ்தவ ஊழியமாக இருந்தாலும் சரி அல்லது நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்குச் செய்கிற ஒரு சேவையோ, பணிவிடையோ எதுவாக இருந்தாலும் சரி, அது நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்காக பாடுவதோ, பிரசங்கம்பண்ணுவதோ, கட்டிடம் காட்டுவதோ, பல ஊர்களுக்குப் பயணம் செய்வதோ, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்காக வெளிநாட்டுக்குப் போய் வேதாகமக் கல்லூரியில் இறையியல் படிப்பதோ, எதுவாக இருந்தாலும் சரி, இவைகளெல்லாம் எத்தன்மையுள்ளது என்று ஒரு நாளிலே பரிசோதிக்கப்படும். “இவைகளையெல்லாம் நான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்காகச் செய்கிறேன் என்று,” நாம் மனிதர்களுக்குமுன் சொல்லலாம். ஆனால், அதன் உண்மையான இயற்கை ‍என்ன, உண்மையான பண்பு என்ன, உண்மையான தன்மை என்ன என்று தேவனுடைய கண்களுக்குமுன்பாக ஒரு நாள் பரிசோதிக்கப்படும்.

“அவருடைய கண்கள் அக்கினியாக இருந்தன” என்று திருவெளிப்பாடு ஒன்றாம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். அல்லது எபிரேயர் நான்காம் அதிகாரத்திலே வாசிப்பதுபோல் ’’மனிதர்களுடைய இருதயத்தின் யோசனைகளும், உள்நோக்கங்களும் வெளியரங்கமாகும்.” 

மனித வாழ்க்கை

தேவன் நமக்கு ஒரு வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறார். எல்லா மனிதர்களுடைய வாழ்க்கையில் நடப்பதுபோல நம் வாழ்க்கையிலும் பல சம்பவங்கள் நிகழ்கின்றன. இந்த உலகத்தில் நாம் அல்லது நம்முடைய உறவினர்கள், பெற்றோர்கள், நண்பர்கள் பல நன்மைகளை அனுபவிப்பதற்காக நாம் இந்த உலகத்திலே வாழ்கின்றோம், உழைக்கிறோம். அதைத் தேவன் விரும்புகின்றார். இது தேவனுடைய திட்டத்திற்கு முரண்பாடானது அல்ல. நம்முடைய நன்மைக்காகவும், நம்மைச் சார்ந்தவர்களுடைய நன்மைக்காகவும் நாம் உழைப்பது, அதை நாம் நாடித் தேடுவது தேவனுக்கு அது ஒத்தது. தேவனே அதை அனுமதித்திருக்கிறார். ஆதாமையும், ஏவாளையும் படைத்து, தேவன் அவர்களை ஏதேன் தோட்டத்திலே வைத்தபோது, அவர்கள் நிலத்தைப் பண்படுத்தவும், காக்கவும் அந்தத் தோட்டத்திலே வைத்தார் என்று எழுதியிருக்கிறது. அது ஒரு நல்ல கருத்து. ஆனால், அது நாம் நம் கண்களால் காண்கிற அல்லது உலகத்தில் அனுபவித்து மகிழ்கிற ஒரு நன்மை. அதற்குப்பின்பாக தேவன் ஒரு நிலைவரமான, நித்தியமான ஒருக்காலும் தேய்ந்துபோகாத, மங்கிப்போகாத இன்னொரு நன்மையை உருவாக்கிக்கொண்டிருக்கிறார். நாம் கண்களால் காண்கிற ஒரு நன்மை உண்டு. ஆனால், நம்முடைய கண்களுக்குப் புலப்படாத ஒரு மாபெரும் நன்மை உண்டு. அது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.

நான் இப்படிச் சொல்லும்போது தேவனுடைய மக்கள் இரண்டுவிதமான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்றோ அல்லது வாழ வேண்டும் என்றோ சொல்லவில்லை. ஒன்று இந்த உலகத்தில் ஒரு வாழ்க்கை; இன்னொன்று ஆவிக்குரிய வாழ்க்கை என்று நான் சொல்லவில்லை. ஞாயிற்றுக் கிழமை வாழ்வது ஆவிக்குரிய வாழ்க்கை, மீதி ஆறு நாட்கள் வாழ்வது இந்த உலகத்துக்குரிய வாழ்க்கை அல்லது காலையில் ஒரு அரை மணிநேரம், அல்லது ஒரு மணிநேரம் வாழ்வது ஆவிக்குரிய வாழ்க்கை, மீதி நேரம் வாழ்வது இந்த உலகத்துக்குரிய வாழ்க்கை என்று compartmentalize பண்ணப்பட்ட ஒரு வாழ்க்கையை தேவனுடைய மக்கள் வாழ்வதில்லை. இந்த உலகத்திலே வாழ்கின்ற 24 மணி நேரங்களும், 7 நாட்களும் அல்லது 365 நாட்களும் ஒரே வாழ்க்கையைத்தான் வாழ்கிறோம்.

கிறிஸ்து பெருகுதல்

இந்த உலகத்திலே ஒரு நன்மையைப் பெறுவதற்காக தேவன் நமக்கு என்ன பொறுப்புக்களைக் கொடுத்திருக்கிறாரோ, அதை நாம் நிறைவேற்றுகிறோம். அதே வேளையில், திரைக்குப்பின், மறைவிலே தேவன் ஒன்றை மிக மும்முரமாக, மிக முனைப்பாக, ஒரு நாள்கூட விடாமல், ஒரு கணம்கூட விடாமல் செய்துகொண்டிருக்கிறார். அது அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நமக்குள் உருவாக்குவது. தேவனுடைய இருதயத்தை மகிழ்விக்கிற, குதூகலம் கொள்ளச்செய்கிற ஒன்றேவொன்றுதான் உண்டு. அது என்னவென்றால் தம்முடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் நடைபெறுகிற ஒரு சம்பவம், ஒரு நிகழ்ச்சி, ஒரு சூழ்நிலையின்மூலமாக கிறிஸ்துவின் ஒரு சிறிதளவாவது அவர்களுக்குள் பெருகும்போது, அது பிதாவாகிய தேவனுடைய இருதயத்தை மகிழச்செய்கிறது. ஒ‍ருவேள, “இவர் என் நேசகுமாரன், இவரில் நான் பிரியமாய் இருக்கிறேன்,” என்கிற சத்தத்தை நீங்கள் கேட்காமல் போகலாம்.

யோர்தானில்தான் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்று எருசலேமுக்கு திருத்தலப் பயணம் போகின்ற மக்களுடைய sentimentsயையும், மூட நம்பிக்கைகளையும், மூடப்பழக்கவழக்கங்களையும் பயன்படுத்தி, ஒருவேளை அவர்கள் ஞானஸ்நானம் எடுக்கும்போது சிலர் சில புறாக்களைக்கூட பறக்கவிடலாம். ஏனென்றால், இயேசு ஞானஸ்நானம் எடுத்தபோது பரிசுத்த ஆவியானவர் புறா வடிவத்திலே இறங்கி வந்தாரே!

“தம்முடைய குமாரனை நான் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கும்பொருட்டாக, அவரை எனக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்தது,” என்று அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்தியர் 1:16இல் கூறுகிறார். தேவன் தம்முடைய குமாரனை எனக்குள் அல்லது என்னில் வெளிப்படுத்தப் பிரியமாய் இருந்தார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே சுவிசேஷம் அல்லது நற்செய்தி. ’’தம்முடைய குமாரனை நான் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கும்பொருட்டாக, அவரை எனக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்தபோது, உடனே நான் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் யோசனைபண்ணாமலும், எனக்கு முன்னே அப்போஸ்தலரானவர்களிடத்திலே எருசலேமுக்குப் போகாமலும்; அரபிதேசத்திற்குப் புறப்பட்டுப்போனேன்,” என்று கலாதியார் 1:16, 17இல் அவர் கூறுகிறார்.

மனிதர்கள் தேவனற்றவர்களாக இருந்தார்கள்; ஆனால், இன்று தேவன் தம்முடைய குமாரனை நமக்குக் கொடையாகக் கொடுத்திருக்கிறார் என்பதுதான் சுவிசேஷம், நற்செய்தி, மகிழ்ச்சியான செய்தி.

ஒரு மோட்டார் சைக்கிள் கிடைக்கிறது அல்லது ஒரு மடிக்கணினி கிடைக்கிறது அல்லது ஒரு போன் கிடைக்கிறது . இன்று மக்கள் ஒரு போனுக்குச் செலுத்துகிற அந்தக் கவனத்தைப் பார்க்கும்போது, “ஏ! அப்பா இவைகளெல்லாம் அவர்களைப் பரவசப்படுத்துகிறது என்றால், இவை எல்லாவற்றையும்விட, தேவன் தம்முடைய குமாரனை நமக்குக் ‍கொடையாகக் கொடுத்திருக்கிறார் என்பது நம்மைப் பரவசப்படுத்த வேண்டும்,” என்ற எண்ணம் எனக்குள் அதிகமாக எழுகிறது.

2 கொரிந்தியர் 9ஆம் அதிகாரம் கடைசி வசனத்திலே, “தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்,” என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார், thanks to be God for His indescribable Gift. தேவன் அருளிய சொல்லிமு‍டியாத ஈவுக்காய், கொடைக்காய் அவருக்கு ஸ்தோத்திரம். Indescribable என்றால் சொல்லிமுடியாத, வார்த்தைகளால் வருணிக்கமுடியாத, சித்திரிக்கமுடியாத, சொல்லிமாளாத ஒரு கொடையை ‍பிதாவாகிய தேவன் நமக்குக் கொடுத்திருக்கிறார். அது அவருடைய குமாரனாகிய கிறிஸ்து. இந்த மனித வாழ்க்கைக்கும், வரவிருக்கிற வாழ்க்கைக்கும் மனிதர்களாகிய நமக்கு என்ன தேவையோ அவையெல்லாவற்றையும் தேவன் தம்முடைய குமாரனில் வைத்திருக்கிறார் என்பதை மட்டும் காண நம்முடைய கண்கள் திறக்கப்படும் என்றால், அப்போஸ்தலனாகிய பவுல் பரவசப்பட்டதுபோல நாமும் பரவசப்படுவோம். பரவசம் என்றால் excited. தேவன் அவருடைய குமாரனை என்னில் வெளிப்படுத்தினார். யாரோவொருவர் நம்மைப் பயமுறுத்தியோ அல்லது அறிவுபூர்வமாக நாம் தர்க்கம்பண்ணியோ நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோடு ஒரு உறவுக்கு வரவில்லை. இதை நாம் நன்றாய் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். பிதாவானவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்துவதின்மூலம்தான் எந்தவொரு மனிதனும் அவரை அறியமுடியுமேதவிர வேறெந்த வழியிலும் அவரை அறிய முடியாது. வேறு வழி இல்லை. இதை இயேசுவே மத்தேயு 11ஆம் அதிகாரத்திலே, “பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்,” என்றார். பிதா எவனுக்கு வெளிப்படுத்தச் சித்தமாய் இருக்கிறாரோ அவன் மட்டும்தான் குமாரனை அறிய முடியும். ஒருவேளை நாம் ஒரு செய்தியின்மூலமாக அல்லது ஒருவர் நற்செய்தியை அறிவித்ததின்மூலமாக நாம் இயேசு கிறிஸ்துவைக் கண்டிருக்கலாம். ஆனால் அதுப் புறம்பானது. உள்ளானது ஒன்று உண்டு, அது என்னவென்றால், “உண்மையாகவே இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து; இவர் மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன் என்பதை தேவன் எனக்கு வெளிப்படுத்தினார்,” என்பது தேவ பிள்ளைகளின் சாட்சியாக இருக்க வேண்டும். ஆம், இயேசு கிறிஸ்துவை இரட்சகராக விசுவாசிக்கிற, ஏற்றுக்கொண்ட அவருடைய பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் தேவன் இதை வெளிப்படுத்தியிருக்கின்றார். Praise the Lord. அது ஒருவேளை dramaticஆக இல்லாமல் இருக்கலாம்.

“இந்த இயேசு கிறிஸ்துவைப்பற்றி உனக்கு எல்லாம் தெரியுமா?” என்று கேட்டால், “எல்லாம் தெரியாது” என்பதுதான் நம் பதில். “மற்ற மதங்களைப்பற்றி நீங்கள் ஆராய்ச்சி செய்திருக்கிறீர்களா?” என்று கேட்டால், அதற்கும் “இல்லை; ஆராய்ச்சி செய்வதற்கான உத்தேசமும் எனக்கு இல்லை” என்பதுதான் நம் பதில். “ஆனால் இந்த இயேசு கிறிஸ்துவை நான் சந்தித்திருக்கிறேன்.இவர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து. இந்த மனிதன் தேவனுடைய குமாரன் இ்ல்லை என்றால், இந்தப் பிரபங்சத்தில் தேவன் என்று ஒருவர் இல்லை என்று நான் சொல்லுவேன்.” ஒரு நாளிலே தேவன் அவருடைய குமாரனாகிய கிறிஸ்துவை நமக்குள் வெளிப்படுத்தினார். நாம் அவ‍ரோடு இணைக்கப்பட்டோம் என்று புதிய ஏற்பாடு சொல்கிறது. யோவான் 15ஆம் அதிகாரத்தில் இருக்கிறது, “கர்த்தரரோடு இணைந்திருக்கிறவன் அவரோடுகூட ஒரே ஆவியாய் இருக்கிறான்,” என்று 1 கொரிந்தியர் 6ம் அதிகாரம் 17ம் வசனம் சொல்கிறது. ஒரு நாளிலே நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டோம். நாம் என்று அவரை விசுவாசித்தோமோ, அன்று நாம் இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டோம் அல்லது இயேசு கிறிஸ்துவின் ஜீவனை நாம் பெற்றுக்கொண்டோம் என்று புதிய ஏற்பாடு விலாவாரியாகச் சொல்கிறது. நாம் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்த நாளிலே தேவனுடைய ஜீவனை நாம் பெற்றுக்கொண்டோம் என்று விளக்கமாகச் சொல்கிறது.

ஆனால், அது தேவன் நமக்குள் தம்முடைய வேலையைத் தொடங்கின முதல் நாள். அன்றுமுதல் நம்முடைய வாழ்க்கையின் முடிவுவரை அல்லது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினுடைய வருகைவரை, தேவன் தம்முடைய மக்களாகிய நமக்குள் ஒரு வேலையைத் தொடர்ந்து நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற எல்லாரும் தேவனுடைய மக்கள்; அவர்களுக்குள் கிறிஸ்து இருக்கிறார். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. உண்மையாக‍வே அவர்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களா என்று சில சமயங்களில் எண்ணத் தோன்றும். அவகளுடைய வாழ்க்கையோ அல்லது குணமோ அல்லது ஒழுக்கமோ - அவர்கள் உண்மையாகவே இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் என்கின்ற ஒரு impressionயை நமக்கு ஏற்படுத்தாது. ஆனால், அவர்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தார்கள் என்றால், அவர்களுக்குள் கிறிஸ்து ஜீவனாக வந்திருக்கிறார் என்று வேதம் சொல்கிறது. நமக்கு அவர்களைப் பிடித்தாலும் சரி, பிடிக்காவிட்டாலும் சரி. அவர்கள் பயன்படுத்துகிற மொழி, அவர்கள் அடிக்கின்ற நகைச்சுவைகள் ஆகியவைகளையெல்லாம் பார்க்கும்போது, உண்மையிலேயே அவர்கள் தேவனுடைய மக்களா என்பதுபோல் தோன்றலாம். ஆனாலும், அவர்கள் தேவனுடைய மக்கள்தான்.

இரண்டாவது, “கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்,” என்று கலாத்தியர் 2:20இல் பவுல் கூறுகிறார். “கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையில் அறையப்பட்டேன்; ஆயினும் வாழ்கிறேன். ஆனால் நானல்ல, கிறிஸ்துவே என்னில் வாழ்கிறார். இப்போது நான் மாம்சத்தில் அல்லது என்னுடைய உடலில் வாழ்கிற இந்த வாழ்க்கையோ என்மேல் அன்பு கூர்ந்து, எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே நான் வாழ்கிறேன்.” இது தேவனுடைய மக்களுக்கு மிகப் பரிச்சயமான வசனம். “நானல்ல, கிறிஸ்துவே.” 

சில சமயங்களில் பரிச்சயம் மிகவும் அபத்தானது. “ஓ! கலாத்தியர் 2:20தானே! இது எனக்குத் தெரிந்த வசனம்தானே!” என்ற பரிச்சயம் அதிலுள்ள வல்லமையை, அந்தச் சத்தியத்தை, பிடுங்கி எடுத்துவிடுகிறது.

ஆகவே, இரண்டாவது குறிப்பாக நான் சொல்வது, கிறிஸ்து நமக்குள் வாழ்வது. கிறிஸ்து நமக்குள் வெளிப்படுத்தப்பட்டிருப்பது ஒரு காரியம்; கிறிஸ்து நமக்குள் வாழ்வது இன்னொரு காரியம். அவர்கள் தேவனுடைய மக்களாக இருக்கலாம், கிறிஸ்து அவர்களுக்குள் இருக்கிறார். ஆனால், “கிறிஸ்து அவர்களில் வாழ்கிறாரா?” என்பது தேவனுடைய மக்கள் பலரைப் பொறுத்தவரை ஒரு கேள்விக்குரிய காரியம். கிறிஸ்து அவர்களுக்குள் இருப்பது எளிமையாக இருக்கும்போது, கிறிஸ்து அவர்களுக்குள் வாழ்வது ஏன் கடினமாக இருக்கிறது? கலாத்தியர் 2:20இல் பதில் இருக்கிறது. “ஏனென்றால் நானல்ல கிறிஸ்துவே.” கிறிஸ்து நம்மில் வாழவேண்டும் என்றால் நான் வாழ்வது என்பது கிறுக்கித்தள்ளப்படுகிறது. அதை எந்த நபராலும் அவ்வளவு எளிமையாக ஒத்துக்கொள்ள முடியாது. என்னுடைய எண்ணங்கள், என்னுடைய உணர்ச்சிகள், என்னுடைய தெரிந்தெடுப்புக்கள், என்னுடைய தீர்மானங்கள், என்னுடைய சுவைகள், என்னுடைய முன்னுரிமைகள், என்னுடைய சாய்மானங்கள் என்று வாழ்வதுதான் நம் எல்லாருக்கும் மிகவும் இயல்பாகவும், இன்பமாகவும் இருக்குமேதவி‍ர வேறொருவருடைய எண்ணங்கள், ‍வேறொருவருடைய உணர்ச்சிகள், வேறொருவருடைய தெரிந்தெடுப்புக்கள், வேறொருவருடைய சுவைகள், வேறொருவருடைய முன்னுரிமைகள், வேறொருவருடைய சாய்மானங்கள், வேறொருவருடைய ஆசைகள் இவைகளின்படி வாழ்வது ஒரு மனிதனுக்கு மிகக் கொடுமையான துன்பம். அந்த வேறொருவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவாகக்கூட இருந்தாலும்கூட.

இதை விளக்குவது கடினமானதல்ல. “ஆ! எப்படி என்னுடைய இயற்கையான மனிதனின்படி வாழாமல், என்னில் இருக்கிற இன்னொரு நபரால் வாழ்வது!” என்பது உண்மையாகவே ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவர் சிலுவையைப் பிரயோகிக்காவிட்டால் அது நடைபெறாது. சிலுவை என்றவுடனே தேவனுடைய மக்கள் எல்லாரும் கதிகலங்கி விடுவார்கள். “ஆண்டவரே, இந்தச் சிலுவை எனக்கு நேரிடக்கூடாது. இது மற்றவர்களுக்கு நேரிட்டால் பரவாயில்லை,” என்று நினைக்கத் தொடங்கிவிடுவார்கள். நீங்கள் சிலுவையைக் குறித்துப் பயப்படுகிற மக்களாக இருந்தால் நான் உற்சாகப்படுத்த விரும்புகிறேன். சிலுவை என்பது மகிமையான ஒன்று. “ஆ! சிலுவை என்பது மகிமையான ஒன்று என்று கவிதை நயத்திற்காக நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள். நீங்கள் ஏமாற்றுகிறீர்கள்.” என்று நீங்கள் சொல்லக்கூடும். “உண்மையிலே சிலுவை என்பது ஒரு motorcycle வேகமாகப் போவதுபோல அல்லது ஒரு நல்ல இசையைக் கேட்பதுபோல அல்லது ஒரு நல்ல உணவை உண்பதுபோல இனிமையானது அல்ல என்று எனக்குத் தெரியும்,” என்று நீங்கள் சொல்லக்கூடும். நான் சொல்வதை நீங்கள் நம்புங்கள். சிலுவை என்பது மகிமையான ஒன்று. நல்ல உணவை நான் விரும்புகிற‍ேன். நல்ல இசையை நானும் விரும்புகிறேன். நல்ல நம் நண்பர்களோடு சேர்ந்து விளையாடுவதை நான் விரும்புகிறேன். இவைகளெல்லாம் இன்பமானவை என்றால், சிலுவை இதைவிட மிக இன்பமானது. ஆனால், ஆனால், இது மிகப் பெரிய ’ஆனால்“.

“அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்,” என்று எபிரேயர் 12:3இல் வாசிக்கிறோம். இந்த வசனத்தை நீங்கள் உங்கள் இருதயத்திலே எழுதிக்கொள்ள வேண்டும்.