Transcribed from a message spoken in September 2011 in Chennai
By Milton Rajendram
தேவனுடைய மக்கள் என்ற முறையில் நம் நடை ஆவிக்குரிய நடையாக இருக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நாம் பரிசுத்த ஆவியின்படி நடக்கிறவர்களாக இருக்க வேண்டும். இதன் பொருள் என்றைக்காவது ஒரு நாள் அல்லது மிக முக்கியமான தருணங்களில் அல்லது மிக நெருக்கமான கட்டங்களில் அல்லது மிக முக்கியமான முடிவெடுக்கும்போது நாம் பரிசுத்த ஆவியின்படி நடக்க வேண்டும் என்பதல்ல. தேவனுடைய மக்களுடைய அனுதின நடை அல்லது அன்றாட நடை பரிசுத்த ஆவியின்படி வாழ்வதாகும். இதை கலாத்தியர் 5ஆம் அதிகாரத்தில் பார்க்கிறோம். இந்தச் சொற்றொடர் கலாத்தியர் 5 ஆம் அதிகாரத்தில் இரண்டு முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. “ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள். அப்போது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்,” என்றும், “நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும்கடவோம்,” என்றும் (கலா. 5:16, 25) வாசிக்கிறோம். “எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்,” என்று ரோமர் 8:13இல் வாசிக்கிறோம்.
தேவன் தம் பிள்ளைகள் எல்லாருக்கும் தம் பரிசுத்த ஆவியை அருளியிருக்கிறார். எவர்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறார்களோ, அவருடன் விசுவாச உறவை வைத்திருக்கிறார்களோ அல்லது தொடங்கியிருக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் தேவன் தம் பரிசுத்த ஆவியைக் கொடையாக அருளியிருக்கிறார். நம்மில் யாரும் பரிசுத்த ஆவி இல்லாதவர்கள் இல்லை. ஒவ்வொருவருக்குள்ளும் பரிசுத்த ஆவியானவர் தங்கி வாசம்பண்ணுகிறார். “நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்கள் என்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறார்,” என்றும் 1 கொரிந்தியர் 3:16இல் நாம் வாசிக்கிறோம். இதற்காக நாம் தேவனுக்கு நன்றி கூற வேண்டும். பரிசுத்த ஆவியானவர் நமக்குள் தங்கி வாசமாயிருப்பதால் நாம் தேவனுடைய ஆலயமாயிருக்கிறோம். தனிப்பட்ட விதத்திலும் நாம் தேவனுடைய ஆலயமாயிருக்கிறோம். கூட்டாகவும் நாம் தேவனுடைய ஆலயமாயிருக்கிறோம். இது ஒரு பக்கம்.
ஆனால், தேவனுடைய ஆவியானவரின்படி நடப்பது இன்னொரு பக்கம். தேவனுடைய ஆவியானவர் அல்லது பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாசம்பண்ணுவது ஒரு காரியம். ஆனால், பரிசுத்த ஆவியானவருக்கேற்றபடி நடப்பது அல்லது வாழ்வது வேறொரு காரியம். இந்த வேறுபாட்டைத் தெளிவுபடுத்துவதற்காக நாம் இரண்டு வார்த்தைகளைப் பயன்படுத்துவோம். ஒன்று-தேவனுடைய பிள்ளைகள், மற்றொன்று-தேவனுடைய குமாரர்கள்.
தேவனுடைய பிள்ளைகள் எல்லாருக்குள்ளும் பரிசுத்த ஆவியானவர் வாசம்பண்ணுகிறார். ஆனால், யாரெல்லாம் பரிசுத்த ஆவிக்கேற்றவாறு நடக்கின்றார்களோ அவர்கள் தேவனுடைய குமாரர்கள். நம் அனுதின வாழ்க்கை பரிசுத்த ஆவியானவருக்கேற்றவாறு இருக்க வேண்டும் என்பதே தேவனுடைய விருப்பம். அதுவே நம் வாழ்க்கையின் நிறைவு. உண்மையில் இதுவே தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிற வாழ்க்கை, நிறைவான வாழ்க்கை, கனி நிறைந்த வாழ்க்கை என்று நாம் சொல்ல முடியும். ரோமர் 8:14, கலாத்தியர் 5:16, 25 ஆகிய வசனங்கள் மிக முக்கியமானவைகளாகும்.
நாம் பல செய்திகளை ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கிறோம். இப்போது நாம் பேசிக்கொண்டிருக்கிற காரியமும் அப்படிப்பட்ட செய்திகளைப்போன்ற ஒரு சாதாரணமான செய்தி என்று நாம் நினைத்துவிடக்கூடாது. இந்த முழு வேதாகமத்திலும் நாம் ஒன்றிரண்டு கருத்துக்களை மட்டும் சாராம்சமாகச் சொல்ல வேண்டுமென்றால் ‘பரிசுத்த ஆவிக்கேற்றவாறு நடந்துகொள்ளுங்கள்’ என்பது அதில் மிக முக்கியமானதாகும். ஒவ்வொரு தனி மனிதனும் தன் வாழ்க்கையில் பரிசுத்த ஆவிக்கேற்றவாறு நடக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் பரிசுத்த ஆவிக்கேற்றவாறு நடக்க வேண்டும். சபையில் தேவனுடைய மக்கள் பரிசுத்த ஆவிக்கேற்றவாறு நடக்க வேண்டும். அப்போது நம் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும்.
முதலில் நான் ஆரம்பிக்கும்போது, “உங்கள் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு வேண்டுமா? என்று கேட்டிருந்தால் உடனே எல்லாருடைய காதுகளும் கூர்மையாகிவிடும். “நம் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வா?” ஆம், பரிசுத்த ஆவியின்படி நடந்தால் போதும். கலாத்தியர் 5இல் ‘பரிசுத்த ஆவி’ என்று எழுதப்படவில்லை. ‘ஆவிக்கேற்றபடி’ என்று எழுதியிருக்கிறது. அதை ‘ஆவிக்கேற்றபடி’ என்றும் சொல்லலாம் அல்லது ‘ஆவியானவருக்கேற்றபடி’ என்றும் சொல்லலாம்.
பரிசுத்த ஆவி வாசம்பண்ணுகிற தேவனுடைய பிள்ளைகள்கூட பல தருணங்களில், பெரும்பாலான தருணங்களில், பரிசுத்த ஆவிக்கேற்றபடி நடப்பதில்லை என்பது உண்மை. இது ஓர் அனுபவ உண்மை. இது நமக்குக் கொஞ்சம் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் தரக்கூடும். அது எப்படி? ஒருபுறம் பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாசம்பண்ணுகிறார் என்று சொல்லுகிறோம். ஆனால், நாம் பரிசுத்த ஆவியானவருக்கேற்றவாறு-முதலில் பல தருணங்களில் என்றும், பின்பு பெரும்பாலான தருணங்களில் என்றும் சொன்னேன்-நடப்பதில்லை. நாம் பரிசுத்த ஆவியில் அல்லது பரிசுத்த ஆவியின்படி அல்லது ஆவிக்கேற்றபடி நடப்பது இல்லை. இது சாத்தியமா? இது சாத்தியமே. பெரும்பாலான தருணங்களில் நாம் பரிசுத்த ஆவியின்படி நடப்பதோ, வாழ்வதோ இல்லை. உங்கள் அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள். இது அப்பட்டமான ஓர் அனுபவ உண்மை. இந்த உலகம் அல்லது மாம்சம் நம் வாழ்க்கையிலும், நம் நடையிலும் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது, அதைக் கட்டுப்படுத்துகிறது, ஆளுகை செய்கிறது. அனுதினமும் நாம் எப்படி நடக்கிறோம் அல்லது வாழ்கிறோம் என்பதை இந்த உலகமும், மாம்சமும்தான் கட்டுப்படுத்துகின்றன, அரசாட்சி செய்கின்றன. பெரும்பாலான தருணங்களில் நாம் பரிசுத்த ஆவிக்கேற்றவாறு நடப்பதில்லை.
இந்த உலகத்துக்கேற்றவாறு அல்லது மாம்சத்துக்கேற்றவாறு நடப்பதால் நம் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று நாம் நம்புகிறோம். இது ஒன்றும் புதிய சங்கதி இல்லை. இதே காரியத்தை வேறு வகையில் பல தடவைகளில் நாம் பேசியிருக்கிறோம். எனவே, இது புதிதல்ல. இந்த உலகத்துக்கேற்றவாறு அல்லது மாம்சத்துக்கேற்றவாறு நாம் நடந்தால் அல்லது வாழ்ந்தால் நம் பிரச்சினைகளெல்லாம் தீர்ந்துவிடும் என்று நாம் நம்புகிறோம். ஆனால், இந்த உலகத்துக்கேற்றவாறு அல்லது மாம்சத்துக்கேற்றவாறு நாம் நடந்தால் அல்லது வாழ்ந்தால் நம் பிரச்சினைகள் தீராது என்று தேவன் சொல்லுகிறார். அந்தச் சமயத்திற்குப் பிரச்சினை தீர்ந்ததுபோல் தோற்றமளிக்கலாம். ஆனால், அது அதிதீவிரத்தோடு இன்னொரு பிரச்சினையாக பல வருடங்கள் கழித்து வரும்.
ஆபிரகாம் சாராளின் சொல் கேட்டு ஆகாரை எடுத்துக்கொண்டபோது அவருடைய மிக முக்கியமான பிரச்சினையாகிய, அவனை அழுத்துகின்ற பிரச்சினையாகிய, பிள்ளை வேண்டும் என்ற பிரச்சினையைத் தீர்த்துவிட்டார். அவரைப் பொறுத்தவரை தீர்வு கிடைத்துவிட்டது. ஆனால், அவர் தீர்த்துவிட்டதாகக் கருதிய அந்தப் பிரச்சினையைவிட அவர் உருவாக்கிய பிரச்சினை இன்றளவும் தீர்க்கமுடியாமல் இருக்கிறது. அந்தப் பிரச்சினையை ஒவ்வொரு நாளும் இந்த உலகம் சந்தித்துக்கொண்டிருக்கிறது. இங்கிருந்து அங்கு ஏவுகணை ஏவுகிறார்கள். அங்கிருந்து இங்கு ஏவுகணை ஏவுகிறார்கள். இந்தப் பிரச்சினை வெறுமனே இரண்டு பேருக்கிடையே மட்டும் அல்ல. முழு உலகமே இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக்கொண்டிருக்கிறது. இது மிகப் பெரிய எடுத்துக்காட்டு.
நாம் நம் பிரச்சினையை உலகத்துக்கேற்றவாறு அல்லது மாம்சத்துக்கேற்றவாறு தீர்க்கும்போது இந்த அளவுக்குப் பின்விளைவுகள் இல்லாமல் போகலாம். ஆனால், நாம் ஏமாந்து போய்விடக் கூடாது. தேவன் உண்மையுள்ளவர். மாம்சத்துக்கேற்றவாறு, உலகத்துக்கேற்றவாறு பிரச்சினைகளைத் தீர்ப்பது உண்மையான தீர்வாகாது. பரிசுத்த ஆவியானவருக்கேற்ப நாம் நடப்பதும், வாழ்வதுமே நம் பிரச்சினைகளைத் தீர்க்கும் என்று தேவன் சொல்லும்போது தேவன் நம்பத்தக்கவர். ஆனால், அந்தத் தீர்வு உடனடியாக வராது. நம் பிரச்சினைகளுக்குத் தீர்வு உடனடியாக வராது. நம் பிரச்சினைகளுக்குத் தீர்வு உடனடியாக வர வேண்டும் என்று எதிர்பார்ப்பதுதான் மனிதனுடைய சுபாவம் அல்லது இயற்கை. காலம் என்ற ஒரு கூறு இருக்கிறது. பிரசங்கி 8ஆம் அதிகாரத்தை வாசியுங்கள். அந்த வசனத்தைப் பாருங்கள். மனிதனுடைய எல்லா இன்பங்களுக்கும் ஒரு சரியான நேரமும், வழிமுறையும் உண்டு. இந்த வசனத்திற்காக நான் தேவனுக்கு நன்றி சொல்லுகிறேன். சில சமயங்களில் தேவன் வசனத்தைத் தந்து பின் வெளிச்சத்தைத் தருகிறார். வேறு சில சமயங்களில் வெளிச்சத்தைத் தந்து பின் வேதத்திலிருந்து வசனத்தைக் காண்பிக்கிறார்.
தேவன் நமக்கு எந்த இன்பத்தையும் தர மறுப்பதில்லை. 1 தீமோத்தேயு 6ஆம் அதிகாரத்திலுள்ள இந்த வசனத்தை நாம் அடிக்கடி மேற்கோள் காட்டியிருக்கிறோம். “நாம் அனுபவிப்பதற்கு சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாகத் தருகிற ஜீவனுள்ள தேவன்.” இந்தப் பதம் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.? மனிதன் பெற்று அனுபவிக்கத்தக்க-இந்த உலகத்துக்குரிய இன்பம் உட்பட-எந்த இன்பத்தையும் தேவன் மறுப்பதில்லை. இது கொஞ்சம் ஆச்சரியமாகக்கூட இருக்கலாம். நாம் சுபிட்ச சுவிசேஷ ஆட்கள் இல்லை. அதாவது “இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்தை நீங்கள் பெற்றுக்கொண்டால் உங்களுக்குச் சுகம் கிடைக்கும், பணம் கிடைக்கும், செல்வம் கிடைக்கும்,” என்று ஒருவகையான சுபிட்ச சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது. ஆனால், இந்த உலகத்தின் இன்பங்களையும், நன்மைகளையும்கூட தேவன் தம் பிள்ளைகளுக்குப் பரிபூரணமாகவே கொடுக்கிறார் என்று 1 தீமோத்தேயு 6இல் அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார். ஆனால், அதற்கு ஒரு சரியான நேரமும், வழிமுறையும் உண்டு.
ஆபிரகாமுக்கு ஒரு பிள்ளையைக் கொடுக்க வேண்டும் என்பது தேவனுடைய சித்தம்தான், திட்டம் தான். ஆனால், தேவன் அதற்கு ஒரு நேரத்தையும், வழிமுறையையும் வைத்திருக்கிறார். அது என்ன நேரம், அது என்ன வழிமுறை? நேரம் ஆபிரகாமுக்கு 100 வயதாகும்போதா? வழிமுறை? பூமியில் பிள்ளைகளைப் பெற்றெடுப்பதற்கு இயற்கையான விதியின்படியும், வழிமுறையின்படியும் ஒருவனும் 100 வயதில் பிள்ளையைப் பெற்றெடுப்பதில்லை. எனவே, ஆபிரகாம் அப்படியொன்றும் தவறு செய்துவிடவில்லை. தேவன் பிள்ளை கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்.
எனவே, நமக்கு முன்பாக இருக்கும் கேள்வி என்ன? நாம் எப்படி நடக்க வேண்டும், வாழ வேண்டும்? இந்த உலகத்துக்கேற்றவாறா? மாம்சத்துக்கேற்றவாறா? இயற்கைக்கேற்றவாறா? அப்படி நடந்தால் உடனடியாக நம் பிரச்சினை தீர்ந்துவிடும். இன்னொரு பக்கம் பரிசுத்த ஆவியானவருக்கேற்றவாறு நாம் நடப்பது, வாழ்வது. ஆனால், அது நம் பிரச்சினையைத் தீர்ப்பதுபோல் தோன்றவில்லை. தேவன் நம்மை உற்சாகப்படுத்துகிறார். இது நம் சபை வாழ்க்கைக்கு அல்லது கிறிஸ்தவ வாழ்க்கைக்கு ஏதோவொரு அம்சத்துக்கு மட்டும் பொருந்தும் என்று நான் சொல்லவில்லை. தனிப்பட்ட வாழ்க்கை, கூட்டு வாழ்க்கை எல்லாவற்றுக்கும் தேவன் இந்த ஒரேவொரு விதியை, பிரமாணத்தைத்தான் கொடுக்கிறார். ‘ஆவியின்படி நடந்துகொள்ளுங்கள்’. வீடுகளில் எழுதிப்போடத்தக்க அற்புதமான வசனங்களில் இதுவும் ஒன்று. பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு எல்லாவற்றையும் திரட்டி 7 கடலைப் புகுத்தி, குறுகத்தரித்த ஒரு வசனம் என்றால் அது ‘ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள்’. ‘ஆவியானவருக்கேற்றவாறு நடந்துகொள்ளுங்கள்’.
“பிள்ளை எனக்குப் பிரச்சினை. வேலை எனக்குப் பிரச்சினை. சுகம் எனக்குப் பிரச்சினை. வேலை செய்யும் இடத்தில் எனக்குப் பிரச்சினை. இந்த நாடே எனக்குப் பிரச்சினைதான்.” இதற்கு என்ன தீர்வு? “ஆவியின்படி நடந்துகொள்ளுங்கள்.” “நடைமுறைக்குரிய விதத்தில் ஏதாவது சொல்லுங்கள்.” என் உடல்நலம் சரியில்லை, வேலையில்லை, பிள்ளைகளுடைய படிப்புக்கு நல்ல வழியில்லை, பிள்ளைகள் கீழ்படிவதில்லை, வேலைசெய்யும் இடத்தில் எப்போதும் ஒருவன் கழுத்தை நெரித்துக்கொண்டிருக்கிறான். இவை எல்லாவற்றுக்கும் நீங்கள் ஒரேவொரு தீர்வு சொல்லிவிடுவீர்களா? நீங்கள் அவ்வளவு பெரிய ஞானியா? வேதாகமத்தில் இலட்சம் வசனம் இருக்கும். நீங்கள் இந்த ஒரு வசனத்தைப் பிடித்துக்கொண்டு “ஆவிக்கேற்றவாறு நடந்துகொள்ளுங்கள்” என்று சொன்னால் எப்படி? அருமையான பரிசுத்தவான்களே, நீங்கள் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். ஏறக்குறைய பவுல் சொல்லுகிற “அன்பிலே நடந்துகொள்ளுங்கள். பரிசுத்தத்திலே நடந்துகொள்ளுங்கள். தாழ்மையிலே நடந்துகொள்ளுங்கள்,” என்கிற எல்லாவற்றையும் சுருக்கி ஆவிக்கேற்றவாறு நடந்து கொள்ளுங்கள் என்று சொல்லலாம். அதை இன்னும் பலவாறு சொல்லலாம். எப்போதும் “பரிசுத்த ஆவியில் நிரம்பியிருங்கள்” என்று சொல்லலாம். இரண்டும் ஒன்றுதான்.
திருவெளிப்பாட்டில் இரண்டு வசனங்களைப் பார்க்கிறோம். “கர்த்தருடைய நாளில் நான் ஆவிக்குள்ளானேன். அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காள சத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன். அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன். திரும்பினபோது மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன்,” என்று 1:10, 12, 14இலும், “உடனே ஆவிக்குள்ளானேன், அப்பொழுது இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது. அந்த சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார்,” என்று 4:2இலும் காண்கிறோம். அங்கு வீற்றிருந்தவர் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து. திருவெளிப்பாடு 1, 4ஆம் அதிகாரத்தில் யோவான் என்ன சொல்லுகிறார்? தான் ஆவிக்குள்ளானதாகவும், அப்போது தேவனுடைய சத்தத்தைக் கேட்டதாகவும், மனுஷகுமாரனுக்கொப்பானவரைப் பார்த்ததாகவும், வானங்களைப் பார்த்ததாகவும், சிங்காசனத்தைப் பார்த்ததாகவும் அவர் கூறுகிறார்.
David Pawson என்பவர் எழுதிய Unlocking the Bible என்ற புத்தகத்தில் கர்த்தருடைய நாளைப்பற்றிக் கூறுகிறார். கர்த்தருடைய நாளைப்பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கர்த்தருடைய நாள் என்பது வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிற்றுக்கிழமை என்று சிலரும், கர்த்தருடைய இரண்டாம் வருகை நாளென்று சிலரும் கூறுகிறார்கள். கர்த்தர் இரண்டாம் முறை திரும்பி வருகிற நாள்தான் கர்த்தருடைய நாள் என்று இறையியல் வல்லுநர்கள் வாதிக்கின்றார்கள், சாதிக்கின்றார்கள்.
ஒரு ரோமப் பேரரசன் தன் பேரரசு முழுவதற்கும் ஒரு கட்டளையிட்டான். அது என்னவென்றால் தன் மார்பளவு சிலையைச் செய்து, ‘பேரரசரே கர்த்தர்’ என்று சொல்லி பேரரசு முழுவதும் உள்ள எல்லா மக்களும் அவரைத் தெய்வமாகக் கொண்டாட வேண்டும் என்று ஒரு கட்டளை பிறப்பித்தான். இப்படிச் செய்வதற்கு அவன் ஒரு நாளையும் குறித்திருந்தான். வருடத்தில் ஒரு குறிப்பிட்ட நாளைக் குறித்து அந்த நாளில் குடிமக்கள் அனைவரும் அந்தந்த ஊர்களில் இருந்த அரசரின் மார்பளவு சிலைக்கு முன்பாகச் சென்று ‘அரசரே கர்த்தர்’ என்று சொல்ல வேண்டும். அந்த நாளுக்கு ரோமப் பேரரசு கொடுத்த பெயர் ‘கர்த்தருடைய நாள்’ ‘ஆண்டவரின் நாள்’. பேரரசரை ஆண்டவர் அல்லது கர்த்தர் என்று சொல்லுகிற நாள். இது தேவனுடைய பிள்ளைகளுக்கு, இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களுக்கு, கிறிஸ்துவின் சீடர்களுக்கு, மிகப்பெரிய சோதனையாக மாறிவிட்டது. ஏனென்றால், இயேசுவே கர்த்தர் என்பதைத்தவிர வேறு எந்த மனிதனும் கர்த்தர் என்று நாம் சொல்லமாட்டோம். இதை அவிசுவாசிகள் தேவனுடைய மக்களுக்கு எதிராகப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். “இந்தக் கிறிஸ்தவர்கள் ’பேரரசரே கர்த்தர்,” என்று சொல்ல மறுக்கிறார்கள். எனவே. இவர்கள் பேரரசருக்கும், பேரரசுக்கும் எதிரிகள்” என்று அவர்கள் சொன்னார்கள். அதனால் கிறிஸ்தவர்கள் கொடிய சித்திரவதை அனுபவிக்க ஆரம்பித்தார்கள். அந்த நாட்களில் நாம் வாழ்ந்திருந்தால் அழுகையோடும், கண்ணீரோடும்தான் வாழ்ந்திருப்போம். அல்லது போனால் போகிறது. சொல்லிவிட்டுப் போவோம் என்று நினைத்திருக்கலாம். இந்தச் சூழ்நிலையில் அவர்களை ஆற்றுவதற்காக, தேற்றுவதற்காக, ஊக்குவிப்பதற்காக யோவான் இதை எழுதுகிறார்.
துன்பங்களும், பாடுகளும், சித்திரவதைகளும் வரவிருக்கின்றன. “கர்த்தருடைய நாளில், பேரரசர் கர்த்தர் என்று சொல்லி கொண்டாடப்படுகிற இந்த நாளில் நான் ஆவிக்குள்ளானேன்.” இவ்வளவு பெரிய பிரச்சினையை நாம் எப்படித் தீர்ப்பது? தீர்க்க நம்மால் முடியுமா? முழுப் பேரரசும் தேவனுடைய மக்களுக்கு எதிராக இருக்கும்போது இதைத் தீர்க்க முடியுமா? முடியாது. நம்மால் தீர்க்க முடியாது. இயற்கையாக நம் மாம்சபலத்தினால், நம் அறிவினால், திறமையினால், செல்வாக்கினால், சாதுர்யத்தினால் அல்லது உலக முறைமையினால் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. தேவன் தம் மக்களுக்கு எப்போதும் ஒரு போக்கு, வழி, வைத்திருப்பார். எசேக்கியேலுக்கு வைத்திருந்த சுரங்கப்பாதையைப்போல, தேவன் தம் பிள்ளைகளுக்கு எப்போதும் ஓர் இரகசியப் பாதை வைத்திருப்பார். மனிதர்களைப் பொறுத்தவரை அந்த வழி இரகசிய வழி. ஆனால், நம்மைப் பொறுத்தவரை அந்த வழிக்குப் பெயர் என்ன? ஆவிக்குள்ளானேன். நாம் பரிசுத்த ஆவியினால் நிறைந்து ஆவியானவரின்படி இருப்பதும், வாழ்வதும், நடப்பதுமே அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு. அதுவே அந்த பிரச்சினையிலிருந்து நாம் விடுவிக்கப்படுவதற்கு வழி.
ஆவிக்குள்ளானபோது என்ன நடைபெற்றதென்றால் அவன் ஒன்றைப் பார்க்கிறான். “நான் தேவனுடைய சத்தத்தை, கர்த்தருடைய சத்தத்தை, கேட்டேன். நான் மனித குமாரனுக்கொப்பானவரைப் பார்த்தேன்.” யோவான் மனித குமாரனுக்கொப்பானவரைப் பார்த்தபோது அவர் எப்படி இருந்தார்? ரோமப்பேரரசில் நடுநடுங்கிக்கொண்டிருந்த இன்னொரு பிரஜையைப்போல் இருந்தாரா? அல்லது எந்தப் பேரரசரையும்விட மாபெரும் பேரரசராக அவர் காட்சியளித்தாரா? திருவெளிப்பாடு முதல் அதிகாரத்தை நீங்கள் வாசித்துப்பாருங்கள். எந்தப் பேரரசரும் அப்படித் தோற்றமளிக்க முடியாது. இயேசுகிறிஸ்து அப்படிப்பட்டவராகத் தோற்றம் அளிக்கிறார். அவரைப் பார்த்தபோது செத்தவனைப்போல் அவருடைய கால்களில் விழுந்ததாக அவர் சொல்லுகிறார்.
அதுபோல திருவெளிப்பாடு 4ஆம் அதிகாரம் 2ஆம் வசனத்திலும், “நான் ஆவிக்குள்ளானேன். வானங்களைப் பார்த்தேன். சிங்காசனத்தைப் பார்த்தேன்,” என்று கூறுகிறார். அங்கு யார் சிங்காசனத்தில் வீற்றிருப்பது? இராயனா இயேசுவா? நம்முடைய நோயா அல்லது இயேசு கிறிஸ்துவா? நம்முடைய பண நெருக்கமா அல்லது இயேசு கிறிஸ்துவா? நம்மை எதிர்க்கின்ற மனிதர்களா அல்லது இயேசு கிறிஸ்துவா? நிலம் இல்லை, கார் இல்லை, கணிணி இல்லை, வீடு இல்லை. இவைகளா அல்லது இயேசுகிறிஸ்துவா? நேற்று ஒரு சகோதரன் சொன்னார்: நான் ஒரு மடிக்கணிணி கேட்டேன்; அவர்கள் எனக்கு வாங்கித் தரமாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள் அவர்கள் என்னை மதிப்பதேயில்லை; நான் எதற்குமே தகுதியானவன் இல்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள். நான் சொன்னேன்: கணிணி வாங்கித் தரவில்லையா? ரொம்ப சந்தோஷம். ஏன்? உண்மையில் அது தேவையில்லை. எந்தப் பிரச்சினையும் அங்கு இல்லை. இல்லாத ஒரு பிரச்சினை இந்த சகோதரனுக்கு ஒரு பிரச்சினையாகத் தோன்றுகிறது.
ஆவிக்குள்ளானால், பரிசுத்த ஆவிக்குள் நிறைந்து இதே சூழ்நிலையைப் பார்த்தால், இதை நாம் கண்டுபிடித்துவிடுவோம். கணிணிக்கு அங்கு அவசியம் இல்லை. இராயனே கர்த்தர் என்று நாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சொல்லவில்லையென்றால் என்னவாகும்? கடைசியாகக் கொடுக்க வேண்டியது என்னவாக இருக்கும்? உயிர். பரவாயில்லை. இப்படிச் சொல்வது கொஞ்சம் கஷ்டம். அது ஒன்றும் போய்விடாது. பழைய ஏற்பாடு தொடங்கி தேவனுடைய பிள்ளைகள் எல்லாரும் மாகொடிய பிரச்சினையிலும், சிக்கலிலும், நெருக்கத்திலும் இருக்கும்போது தேவன் அவர்களுடைய பிரச்சினையையும், சிக்கலையும், நெருக்கத்தையும், தீர்த்துவிடவில்லை. எல்லாவற்றுக்கும் தேவன் ஒரேவொரு வழியைத்தான் சொல்வார். நாம் பரிசுத்த ஆவியில் நிரம்பியிருந்தால் தேவனுடைய வழி என்னவென்று நாம் காண்போம்.
ஏசாயா 6இல் நம் எல்லாருக்கும் தெரியும். உசியா ராஜா இறந்த வருடத்தில், “ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக் கண்டேன்,” என்று ஏசாயா கூறுகிறார். மறுபடியும் David Pawsonயை வாசிக்க வேண்டும். தீர்க்கதரிசியாக இருப்பது என்றால் ஒய்யாரமாகக் கூட்டத்தில் எழுந்து பேசுவதல்ல.
ஒரு மரத்தைக் குடைந்து எடுத்தபின் உசியா ராஜாவை உள்ளே வைத்து ஒரு மரத்தை அறுப்பதுபோல் அவனை அறுத்துக் கொன்றார்கள். ஏசாயா உசியாவின் உறவினன். இவனுக்கு மாமன் முறை. எனவே முதல் 6 அதிகாரங்களில் ஏசாயாவின் தீர்க்கதரிசனம் களைகட்டிப் பறக்கிறது. வெட்டுவெடுக்கென்று தீர்க்கதரிசனம் பேசுகின்றார். இப்போது உசியா ராஜா மரித்து விடுகிறார். அவருக்கு அதிர்ச்சியாக மாறிவிடுகிறது. இப்போது யாரை நம்பித்தான் தீர்க்கதரிசனம் சொல்லியாக வேண்டும்? தேவனை நம்பித்தான். அப்போது அவர் பார்க்கிறார். கர்த்தர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறார்.
எலிசாவின் வாழ்க்கையில் அவனுடைய வேலைக்காரன் சொல்கிறான். நம்மைச்சுற்றி எதிரியின் இராணுவம் சூழ்ந்திருக்கிறது. எனவே, இந்தமுறை நாம் தப்பிப்பதற்கு வழியில்லை. எலிசா சொல்கிறான். “கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும்,” என்றான். அவன் பார்த்தபோது அந்த இராணுவத்திற்குமுன் அக்கினிமயமான குதிரைகளும் இரதங்களும் நின்றுகொண்டிருந்தன.
தாவீது தன் அனுபவத்தைச் சொல்லுகிறான். சங்கீதம் 27 என்று நினைக்கிறேன். “எனக்கு விரோதமாக ஒரு பாளயமிறங்கினாலும், என் இருதயம் பயப்படாது. என்மேல் யுத்தம் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாயிருப்பேன். கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன். அதையே நாடுவேன். நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.” நமக்கு விரோதமாகப் பாளயம் இறங்கினால் என்ன செய்வோம்? கொதித்துப் போவோம், உடைந்துபோவோம், நொறுங்கிப்போவோம்.
எனவே அருமையான பரிசுத்தவான்களே, இன்னும் பல காரியங்களை நாம் சொல்லலாம். பவுல் கப்பல் பிரயாணத்தின்போது, கர்த்தர் அவனுக்குத் தோன்றி சொல்லுகிறார்? உயிர்ச்சேதம் ஒன்றும் வராது. நாம் நம் தேவனுடைய அரசாட்சியின்கீழ் இருக்கிறோம். நம் ‘கர்த்தர்’ இராயனுமல்ல அல்லது இராயனுக்கு ஒப்பான இந்த உலகத்தின் துன்பங்களும் அல்ல, இன்பங்களும் அல்ல. நம் மகா பேரரசர் நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து. அவர் நம் வாழ்க்கையில் இராஜரீகம் பண்ணுகிறார். “கர்த்தர் ராஜரீகம் பண்ணுகிறார். பூமி அமைதலாயிருப்பதாக” (ஆப. 2:20, சங். 97:1). ஆனால் பூமி மௌனமாயிருக்காது. “கர்த்தர் ராஜரீகம் பண்ணவில்லை. நாங்கள்தான் ராஜரீகம் பண்ணுகிறோம்,” என்பதுபோல் பூமி சொல்லும்.
சரி, நாம் பரிசுத்த ஆவிக்கேற்றபடி நடந்துகொள்கிறோம். ஆனால், என் நோய் நோயாகத்தான் இருக்கிறது. என் கடன் கடனாக இருக்கிறது. என் மக்கள் எனக்குத் தருகிற துன்பம் துன்பமாகவே இருக்கிறது. வழி என்ன? தேவன் ஏதாவது காலஅட்டவணை வைத்திருக்கிறாரா? தேவன் கால அட்டவணை வைத்திருக்கிறார். என்ன காலஅட்டவணை என்றால், அது 430 வருடமா அல்லது 470 வருடமா என்று தெரியாது. தேவன் பேரில் நம் விசுவாசமும், நம் நம்பிக்கையும், நம் அன்பும் என்றைக்கு ஒரு பக்குவம் பெருகிறதோ, தேவன் என்மேல் அன்பு வைத்திருக்கிறார். தேவன் நம்பத்தக்கவர். நான் விசுவாசிக்கிறவர் இன்னார் என்று நான் அறிவேன். என் வாழ்க்கையை நான் அவருக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறேன். இந்தப் பூமியில் மக்கள் எதையெல்லாம் பெற்று அனுபவிக்கிறார்களோ அதையெல்லாம் நானும் பெற்று அனுபவிக்க வேண்டும் என்பதல்ல. தேவனுடைய கால அட்டவணை என்ன?
ஆபிரகாம் 100 வயது என்று காலஅட்டவணை வைத்திருந்தாரா? 80 வயதில் அல்லது 90 வயதில் அவனுடைய பிரச்சினை தீர்ந்திருக்கலாமா? நான் என்ன நினைக்கிறேன் என்றால் அந்த நேரத்தில் ஆபிரகாம் தேவன்மேல் வைத்திருந்த விசுவாசம் கனிந்துவிட்டது. கனிந்து ஆபிரகாம் எந்த நிலையை எட்டியிருப்பான் என்றால் அவர் ‘இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைத்து மரித்தோரை உயிரோடெழுப்புகிற தேவன்’. சரி, ஒருவேளை மரித்தோரை உயிரோடெழுப்புகிற தேவன் என்கிற அளவுக்கு அவனுடைய விசுவாசம் கனியவில்லை. ஆனால், இல்லாதவைகளை இருக்கிற வைகளைப்போல் அழைக்கிற தேவன் என்கிற அளவுக்குக் கனிந்திருக்கலாம். ரோமர் 4ஆம் அதிகாரத்தை நீங்கள் பிறகு வாசித்துப்பாருங்கள். தேவன்மேல் நம் அன்பு அல்லது தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பின் அளவு எப்படிப்பட்டது? இவர் விசுவாசிக்கத்தக்கவர். எந்த மனிதனையும் விட இவர் நம்பத்தக்கவர் என்ற நிலையை நாம் எட்டும்போது கனி மரத்திலிருந்து விழக்கூடிய நிலையை எட்டிவிட்டது. அப்படி எட்டும்போது பார்த்தால் இஸ்ரவேல் மக்கள் 430 வருடம் எகிப்தில் செலவழித்திருந்தார்கள். அல்லது ஆபிரகாமின் வயது 100. எப்போது ஆண்டவரே இந்த நெருக்கத்திலிருந்து என்னை விடுவிப்பீர்? எப்போது விடுவிப்பார்? தேவன் என்ன செய்யச் சொல்லுகிறாரோ அதை மட்டுமே நான் செய்வேன். சுருக்குவழி எதையும் என் மாம்சத்துக்கேற்றவாறு, இயற்கைக்கேற்றவாறு அல்லது உலகத்துக்கேற்றவாறு எந்த வழியையும் நான் எடுக்க மாட்டேன். ஐயோ! நட்டங்கள், நட்டங்களுக்கு மேல் நட்டங்கள் வருமே, வரட்டும். இதற்கு விசுவாசம் வேண்டுமா வேண்டாமா? ரொம்ப விசுவாசம் வேண்டும். இந்த நிலையை எட்டும்போது அது தேவன் செயல்படுவதற்கு தேவன் நம்மை நம் நெருக்கங்களிலிருந்து விடுதலையாக்கி நம்மை விசாலமான இடத்திலே கொண்டுவந்து நிறுத்துவதற்கு அது காலம் கனிந்துவிட்டது.
தேவன் அதை எப்போதும் செய்கிறார். யாக்கோபை சிரச்சேதம் செய்வதற்கு தேவன் விட்டுவிடுகிறார். ஆனால், பேதுருவை முதல் காவலையும் இரண்டாம் காவலையும் மூன்றாம் காவலையும் கடந்து வெளியே கொண்டுவருகிறார். யாக்கோபு விசுவாசத்தினால் மரித்தார். பேதுருவும் விசுவாசத்தினால் பிழைத்தார். ஆனால், இரண்டு பேருடைய விசுவாசமும் ஒன்றுதான். இதை நீங்கள் நன்றாக யோசித்துப் பாருங்கள். உடனே பயந்துவிட வேண்டாம். ஐயோ! நான் யாக்கோபா! நான் பேதுரு போல் விசுவாசத்தினால் வாழ விரும்புகிறேன் என்றால் கர்த்தர் அப்படிச் செய்வார். ஆனால், ஒரு நாள் நாம் யாக்கோபுபோல் விசுவாசத்திற்கும் வருவோம். “ஆண்டவரே, நீர் இப்படி வளங்களைத் தந்தாலும் சரி, அப்படி வளங்களைத் தந்தாலும் சரி. நீர் இப்படி வாழ்க்கை அமைத்தாலும் சரி அப்படி அமைத்தாலும் சரி, நீர் நல்லவர். உம் அன்பு மாறாத அன்பு. நீர் விசுவாசிக்கத்தக்கவர். நீர் நம்பத்தக்கவர்,” என்று ஓர் உள்ளான மாற்றம் வரும்போது அப்படிப்பட்ட பாத்திரத்தைக்கொண்டு தேவன் தம்முடைய நாமத்தை மகிமைப்படுத்த முடியும்.
கடைசியாக ஒரு வார்த்தை சொல்ல வேண்டுமானால் இந்த வழிக்குப் பெயர் சிலுவையின் வழி. இன்னும் சொல்லியிருக்கிறோம். இந்த வழிக்குப் பெயர் உயிர்த்தெழுதலின் வழி. ஏன் தெரியுமா அந்த வழியை எடுப்பதற்கு நாம் தயங்குகிறோம்? விலை கொடுக்க வேண்டும். வேதனையாக இருக்கும், வலி இருக்கும். அது காரணம்தான். ஆனால், இன்னொரு முக்கியமான காரணம் உண்டு. அந்த உயிர்த்தெழுதல் எவ்வளவு மகிமையானது என்று நமக்குத் தெரியவில்லை. அந்த உயிர்த்தெழுதல் எவ்வளவு மகிமையானது என்று நமக்குத் தெரியுமென்றால் இந்தச் சிலுவையின் வழி வேதனையாக இருந்தாலும் அதை எடுப்பதற்கு நாம் ஆயத்தமாக இருப்போம். ஒவ்வொரு தாய்க்கும் தெரியும். ஒரு குழந்தையைச் சுமந்து பெற்றெடுப்பது வேதனையானது என்று தெரியும். ஆனால், தாய்மார்கள் மனமுவந்து அந்த வழிமுறையினூடாய்ச் செல்கிறார்கள். எதற்கு? ஏனென்றால், பிள்ளை பிறந்தது என்ற அந்த மகிழ்ச்சியிலே தன் வேதனையை அவள் மறந்து விடுகிறாள். அந்தப் பிள்ளையைப் பார்த்தவுடன் 9, 10 மாதம் பட்ட வேதனையெல்லாம் ஒன்றுமில்லாததுபோல் ஆகிவிடுகிறது. இது நிழலான எடுத்துக்காட்டு. சிலுவையின் வழி நாம் ஏன் தயங்குகிறோம்? பரிசுத்த ஆவிக்கேற்றவாறு நாம் நடப்பதற்கு. ஏன் மாம்சத்துக்கேற்ற வழி, உலகத்துக்கேற்ற வழி, இயற்கையான வழியை நாம் ஏன் எடுக்கிறோம்? அதன் முடிவு மகிமையாயிருக்கும். “நீ உத்தமனை நோக்கி செம்மையானவனைப் பார்த்திரு. அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம்” (சங். 37:37). நம் பாதை சிலுவையின் பாதையாகத் தோன்றினாலும் ஏற்ற காலம் வரும்போது தேவன்மேல் நம் விசுவாசம், நம்பிக்கை, அன்பு ஆகியவை கனியும்போது தேவன் நம்மை விடுதலையாக்குவார். மற்றவர்கள் அதைப்பார்த்து ஆச்சரியப்படுவார்கள் எப்படி இது நடந்ததென்று.