Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள் 2

Transcribed from a message spoken in July, 2014 in Chennai

By Milton Rajendram

“ஸ்திரீகள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப் பெற்றார்கள்; வேறு சிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடையும்படிக்கு, விடுதலை பெறச் சம்மதியாமல் வாதிக்கப்பட்டார்கள். வேறு சிலர் நிந்தைகளையும், அடிகளையும், கட்டுகளையும், காவலையும் அநுபவித்தார்கள். கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சை பார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள். உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை. அவர்கள் வனாந்தரங்களிலேயும், மலைகளிலேயும், குகைகளிலேயும், பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள். இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள். அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றைத் தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருக்கிறார்” (எபி. 11:35-40).

“இவர்களெல்லாரும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு விசுவாசத்தோடே மரித்தார்கள்” (எபி.11:13). “தாங்கள் விட்டுவந்த தேசத்தை நினைத்தார்களானால், அதற்குத் திரும்பிப்போவதற்கு அவர்களுக்குச் சமயங் கிடைத்திருக்குமே. அதையல்ல, அதிலும் மேன்மையான பரம தேசத்தையே விரும்பினார்கள். ஆகையால், தேவன் அவர்களுடைய தேவனென்னப்பட வெட்கப்படுவதில்லை. அவர்களுக்கு ஒரு நகரத்ததை ஆயத்தப்படுத்தினாரே” (எபி. 11:25-16).

ஆவிக்குரிய வாழ்க்கை, இயற்கையான வாழ்க்கை

தேவனுடைய மக்கள் ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்வதற்காக அழைக்கப்பட்டிருக்கிறார்கள். தேவனுடைய மக்கள் இயற்கையான வாழ்க்கை அல்ல, மாறாக ஆவிக்குரிய வாழ்க்கை வாழுமாறு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இயற்கையான வாழ்க்கை என்பது நம்முடைய புலன்களால் அனுபவித்து நம்முடைய புலன்களின்படி வாழ்கின்ற வாழ்க்கை. ஆவிக்குரிய வாழ்க்கை என்பது விசுவாசத்தினால் வாழ்கின்ற வாழ்க்கை. ஒரு மனிதனுடைய தீர்மானங்களும், முடிவுகளும், இலக்குகளும், திசைகளும், வேகங்களும் அவனுக்கு எது புலப்படுகிறதோ அல்லது மற்றவர்களுக்கு எது புலப்படுகிறதோ அதை அடிப்படையாகவைத்து மட்டுமே எடுக்கப்படுகிறது என்றால் அவனுடைய வாழ்க்கை இயற்கையான வாழ்க்கை. ஆனால், ஆவிக்குரிய வாழ்க்கையென்பது புலப்படுகிறவைகளை அடிப்படையாகக்கொண்ட வாழ்க்கையல்ல. அது விசுவாசத்தினால் வாழ்கிற வாழ்க்கை. நாம் இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளைப் புரிந்துகொள்வோம் என்றால் தேவனுடைய மக்களுடைய வாழ்க்கை மிகவும் ஆசீர்வாதமான, இன்பமான, கனிநிறைந்த வாழ்க்கையாக இருக்கும்.

இயற்கையான வாழ்க்கை புலன்களின் அடிப்படையில் வாழ்கிற வாழ்க்கை. ஆவிக்குரிய வாழ்க்கை விசுவாசத்தினால் வாழ்கிற வாழ்க்கை. தேவனுடைய மக்கள் இயற்கையான வாழ்க்கையல்ல, மாறாக ஆவிக்குரிய வாழ்க்கை வாழுமாறு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இவைகளுக்குக் கொஞ்சம் விளக்கம் தேவை. புலன்களின் அடிப்படையில் வாழ்கிற இயற்கையான வாழ்க்கை என்றால் என்னவென்றும், விசுவாசத்தினால் வாழ்கிற ஆவிக்குரிய வாழ்க்கை என்றால் என்னவென்றும் நமக்குச் சற்று விளக்கம் தேவை. இது ஆழ்ந்த சத்தியம்போல் தோன்றலாம். ஆனால், இது அப்படியொன்றும் ஆழமானது அல்ல; மிக எளிமையானதுதான். நாமெல்லாரும் இதைப் புரிந்துகொள்ள முடியும். அதுமட்டுமல்ல, இது மிகவும் நடைமுறைக்குரியது, நடைமுறைக்கேற்றது. என்றைக்கோ ஒருநாள் நாம் வாழ்கிற வாழ்க்கையைப்பற்றி நாம் பேசவில்லை. மாறாக, இன்றைக்கு, இந்த நாட்களிலே வாழ்கிற வாழ்க்கையைப்பற்றி நாம் பேசுகிறோம்.

எபிரெயர் 11ஆம் அதிகாரம்! தேவனுடைய மக்கள் பொதுவாக வேதத்தை வாசிக்கும்போது ஒவ்வொரு அதிகாரத்திற்கும் ஒரு தலைப்புக் கொடுத்தால் அதிலே திருப்தியடைந்து விடுவார்கள். 1 கொரிந்தியர் 13 அன்பைப்பற்றிய அதிகாரம். எபிரெயர் 13 விசவாசத்தைப்பற்றிய அதிகாரம். 2 தெசலோனிக்கேயர் அவருடைய வருகையைப்பற்றிய அதிகாரம். 1 கொரிந்தியர் 15 உயிர்த்தெழுதலைப்பற்றிய அதிகாரம். உடனே “எல்லாம் தெரிந்துபோயிற்று” என்று நினைப்பார்கள்! இவ்வளவு சொன்னா போதாதா! 1 கொரிந்தியர் 15 உயிர்த்தெழுதலைப்பற்றி, 2 தெசலோனிக்கேயர் 2 கர்த்தருடைய இரண்டாம் வருகையைப்பற்றி, 1 கொரிந்தியர் 13 அன்பைப்பற்றி, எபிரெயர் 11 விசுவாசத்தைப்பற்றி. இன்னும் வேதாகமத்தில் தெரிந்துகொள்வதற்கு என்ன இருக்கிறது? இதற்காகக் கர்த்தருக்கு ஸ்தோத்திரம். தேவனுடைய மக்களை நான் பாராட்டுகிறேன். இந்த அளவுக்காவது பரிச்சயம் இருக்குமென்றால் இதை நான் அற்பமாகக் கருதவில்லை. இந்தப் பரிச்சயம்கூட இல்லாத தேவனுடைய மக்கள் உண்டு. ஆகவே, சில தேவனுடைய மக்களைப் பார்க்கும்போது இந்த அளவுக்குப் பரிச்சயம் இருக்குமென்றால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அதற்காகக் கர்த்தரை நான் துதிக்கிறேன். ஆனால் இந்தப் புத்தக அறிவு நம்மை நம்முடைய வாழ்க்கையில் அதிக தூரத்திற்கு இட்டுச் செல்லாது.

விசுவாசம்

எபிரெயர் 11 விசுவாசத்தைப்பற்றியது என்பதல்ல, விசுவாசம் என்றால் என்ன? “அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளை அடையவில்லை,” (வ. 13, 39) என்று இரண்டு தடவைகள் எபிரெயர் 11ஆம் அதிகாரத்தில் இருக்கிறது.

விசுவாசத்தைப்பற்றிய சில போதனைகளை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். “விசுவாசம் என்பது நான் பெறப்போகிறேன் என்பதல்ல, நான் பெற்றுவிட்டேன். ஆண்டவரே, எனக்கு ஒரு கார் வேண்டும் என்று ஜெபிக்க வேண்டும். ஒருநாள், ஒரு வாரம் ஜெபித்தபிறகு, இனிமேல் கார் தாரும் ஆண்டவரே என்று ஜெபிக்கக்கூடாது. அது விசுவாசக்குறையைக் காண்பிக்கிறது. அதற்குப்பதிலாக, ஆண்டவரே, நீர் காரைத் தந்ததற்காக ஸ்தோத்திரம் என்று சொல்ல வேண்டுமாம். இன்னும் சொல்லப்போனால், காரைப்பற்றி ஒரு நல்ல பத்திரிக்கையில் வாசித்து, ஆண்டவரே இத்தனை CC காரரைக் கொடுத்ததற்காக ஸ்தோத்திரம். அதில் இப்படிப்பட்ட வசதிகள் இருப்பதற்காக ஸ்தோத்திரம்,” என்பதுதான் விசுவாசம் என்று மக்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். இப்படி மாம்ச இச்சையை நிறைவேற்ற விசுவாசத்தைத் தவறாகப் பயன்படுத்துகிற மதிகெட்ட தேவனுடைய மக்கள் உண்டு. இந்தப் பூமியிலே.

கொஞ்சம் யோசித்தேன். எதற்குத் தெரியுமா? இப்படிப்பட்ட மக்களைக் குறிக்க என்ன வார்த்தை பயன்படுத்தலாம் என்று யோசித்தேன். வழிமாறின தேவனுடைய மக்கள் என்று சொல்வதா என்பதை நிதானிக்கிறதுக்கு அந்த 10 வினாடிகள் எடுத்துக்கொண்டேன். அவர்கள் வழிமாறின தேவனுடைய மக்கள் மட்டுமல்ல, அவர்கள் மதிகெட்ட தேவனுடைய மக்கள். ஓ! தேவனுடைய மக்களை மதிகெட்டவர்கள் என்று சொல்லலாமா? எடுத்ததற்கெல்லாம் தேவனுடைய மக்களை மதிகெட்டவர்கள் என்று சொல்லக்கூடாது. ஆனால், சில சமயங்களில் அது தேவனுடைய மனதிற்கு முற்றிலும் முரணானது என்பதை வலியுறுத்துவதற்காக இப்படிப்பட்ட கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தலாம். மதிகேடரே என்று ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சில சமயங்களில் கூப்பிடுகிறார். ஆனால், எப்போதும் தன்னுடைய சீடர்களை மதிகேடரே என்று கூப்பிடவில்லை. என்னுடைய சிநேகிதரே என்றும் அவர்களை அழைக்கிறார். அதனால் பொதுவாக தேவனுடைய மக்களை நாம் எப்படித்தான் பார்க்க வேண்டும்? சிநேகிதரே என்றுதான் பார்க்க வேண்டும். சில சமயங்களில் எப்படிப் பார்க்க வேண்டும்? மதிகேடரே என்று பார்க்கவேண்டும். ஏனென்றால் நாமும் அப்படி இருக்கிறோம்.

நாம் முதலாவது வாசித்த பகுதி அவர்கள் விசுவாசத்தினால் பெற்ற வெற்றிகளைப்பற்றி சொல்லவில்லை. அவர்கள் விசுவாசத்தினால் தங்கள் பிள்ளைகளைச் சாகக் கொடுத்தார்கள். இது என்ன? விசுவாசத்தினால் தங்கள் பிள்ளைகளைச் சாகக்கொடுத்தார்கள்? ஒருவேளை சிபிஎம்காரர்களிடத்தில் கேட்டால், “அதாங்க டாக்டர்கிட்ட போகாம பிள்ளைகளைச் சாகக்கொடுக்கிறது தான் விசுவாசத்தினால் சாகக் கொடுக்கிறது,” என்று சொல்லுவார்கள். இந்த மாதிரி தேவனுடைய வார்த்தையைத் துஷ்பிரயோகம் பண்ணுகிற தேவனுடைய மக்களைப் பார்க்கும்போது மனம் மிகவும் வெந்துபோகிறது.

உலகத்தின் வழி, தேவனுடைய வழி.

காரியம் என்னவென்று கேட்டால், உலகத்தின் வழி என்று ஒன்று உண்டு, தேவனுடைய வழி என்று ஒன்று உண்டு. இவைகள் ஒன்றுக்கொன்று முரணானவைகள். உலகம் சில காரியங்களை நன்மைகள் என்றும், செல்வங்கள் என்றும், வெற்றி என்றும், சாதனை என்றும் கொண்டாடுகிறது. ஆனால், இவைகளெல்லாம் நன்மைகள், செல்வங்கள், வெற்றிகள், சாதனைகள் என்று தேவன் அங்கீகரிப்பதோ, கொண்டாடுவதோ இல்லை. இதைக் குறித்து தேவனுடைய மக்களாகிய நாம் மிகவும் திட்ட வட்டமாக இருக்க வேண்டும்.

உலகம்

உலகம் என்று சொல்லும்போது அது எங்கோ இருக்கிறது என்று கருத வேண்டாம். நம் உடன்பிறந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள், உடன்வேலைபார்ப்பவர்கள், அண்டை அயலகத்தார் இவர்களையெல்லாம் கொண்டதுதான் உலகம். அவர்களுடைய சிந்தனை ஓட்டங்கள், எண்ணச் சூழல்கள், அவர்கள் யோசிக்கும் விதம், எவைகளை அவர்கள் மிகவும் அருமையானதாகக் கருதுகிறார்கள், இவைகள் எல்லாவற்றாலும் ஆனதுதான் உலகம் என்பதை நாம் இனங்காண வேண்டும்.

எனவே, இந்த உலகத்தில் ஏதோவொன்றை நன்மை, செல்வம், வெற்றி, சாதனை என்று கருதுவதால் தேவனுடைய மக்களாகிய நாமும் அதையே நன்மை, செல்வம், வெற்றி, சாதனை என்று நம்முடைய மனதை அதின்மேல் பதித்து ஓடக்கூடாது. “அந்தத் துன்மார்க்க உளையிலே அவர்களோடேகூட நீங்கள் விழாமலிருக்கிறதனாலே அவர்கள் ஆச்சரியப்பட்டு, உங்களைத் தூஷிக்கிறார்கள்,” (1 பேதுரு 4:4) என்று பேதுரு கூறுகிறார். “அவர்கள் எவைகளிலே மிகவும் ஆவலாய்ப் போய்க் குதிக்கின்றார்களோ, ஈடுபடுகின்றார்களோ அவைகளிலே நீங்கள் ஆவலாய் ஈடுபடுவதில்லை. எனவே, அவர்களுக்கு உங்களைப் பிடிக்காது,” என்று சொல்லுகிறார். “நாம் போகிற வழியிலே இவர்கள் விழுவதில்லையே! அந்த துன்மார்க்க உளையிலே!” என்று ஆச்சரியப்படுகிறார்கள். உளையென்றால் சேறு, சகதி. நீங்கள் விழமாட்டேன் என்கிறீர்களே என்பதை அவர்கள் பார்க்கும் போது ஆச்சரியப்பட்டு..முதலில் ஆச்சரியப்படுவார்கள்; பிறகு கேலிபண்ணுவார்கள்; பிறகு பயமுறுத்துவார்கள். அப்படி படிப்படியாய்ப் போகும். “ஆச்சரியமாக இருக்குதப்பா! எங்களுக்கு ஓ! இவர்களெல்லாம் பெரிய சுத்தவான்கள் போலிருக்குது! நீயெல்லாம் பெரிய சுத்தவானாடா?” என்று படிப்படியாக அவர்களுடைய பதில் மாறும்.

“அதைக்குறித்து நீங்கள் கவலைப்படாதிருங்கள்,” என்று பேதுரு நம்மை ஆற்றுகிறார். அப்படியென்றால், இந்த உலகத்திலே தேவனுடைய மக்களுக்கு நன்மைகளும், செல்வங்களும், இல்லவே இல்லையா? உண்டு.

உலக நன்மைகள்

தேவன் நமக்கு நல்ல உடல்நலத்தையும், உணவையும், உறைவிடத்தையும் அல்லது வாழ்க்கையிலே மனிதர்கள் பெற்று அனுபவிக்கத்தக்க நன்மைகளைத் தராமல் விடுவதில்லை. தருவதாக நமக்கு ஒரு வாக்குறுதி அளித்திருக்கிறார். 1 தீமோத்தேயு 6ஆம் அதிகாரத்திலுள்ள வசனத்தை நாம் அடிக்கடி மேற்கோள் காட்டுவதுண்டு. “நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்” (1 தீமோ. 6:17). ஆனால், இந்த வாக்குறுதியைப் பிடித்துக் கொண்டு, “தேவன் நம்மை மனிதர்களாகப் படைத்ததும், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை நாம் அறிவதற்கு ஒரு நாள் நம்மை அழைத்ததும் எதற்காக என்றால் இந்தப் பூமியிலே நன்மையென்று என்ன இருக்கிறதோ அவைகளையெல்லாம் அனுபவித்துத் தீர்த்துவிட வேண்டும் என்பதற்காகத்தான் தேவன் நம்மை அழைத்தார்,” என்றால் அது மதியீனம். அது incidential.

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மத்தேயு 6ம் அதிகாரத்தில் இப்படிச் சொல்லுகிறர். நாம் வாசிக்கிறோம். “இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள். இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். ஆனால், உங்கள் இருதயம் அதை நாடுவதிலும் தேடுவதிலும் போக வேண்டாம். உங்களுடைய இருதயம் முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியைத் தேடுவதிலும் மட்டுமே அமைந்திருக்கட்டும். இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.” கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. நான் அவிசுவாசத்தினால் பேசுவதாக நினைக்க வேண்டாம். இந்தப் பூமிக்குரிய நன்மைகளையும், செல்வங்களையும், வெற்றிகளையும் நமக்குத் தருவதை நம்முடைய பிதாவானவருடைய பொறுப்பில் விட்டுவிடலாம். நம்முடைய இருதயமோ எப்பொழுதும் எதில் மட்டும் இருக்கட்டும்? தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியைத் தேடுவதிலும் அல்லது நாம் சொன்னதுபோல ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்வதிலும் இருக்கட்டும். இயற்கையான வாழ்க்கையல்ல. மாறாக ஆவியின்படி வாழ்கிற வாழ்க்கை.

ஆவிக்குரிய வாழ்க்கை

ஆவிக்குரிய வாழ்க்கையென்றால் மக்கள் என்ன நினைக்கிறார்கள்? வேதாகமம் வாசிக்கிறது, ஜெபிப்பது, சபைக்கூட்டத்துக்குப் போவது, உபவாசம் இருப்பது, முழு இரவு ஜெபத்துக்குப் போவது, தசமபாகம் கொடுப்பது, காணிக்கை கொடுப்பது, Church கட்டும்போது donation கொடுப்பது… இதை நாம் சொல்லவில்லை. ஆவியின்படி வாழ்கிற வாழ்க்கையைத்தான் ஆவிக்குரிய வாழ்க்கை என்று சொல்லுகிறேன். இந்தக் காரியத்தை நாம் தெளிவுபடுத்திவிட்டோம். இன்னும் சொல்லப் போனால், எங்கெல்லாம் “இப்படி ஒரு ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்ந்தால் அல்லது ஆவியின்படி வாழ்ந்தால் அதன் விளைவாக பூமிக்குரிய நன்மைகளையும், செல்வங்களையும், ஆசீர்வாதங்களையும் தேவன் தருவார்,” என்று முடிக்கிறார்களோ அது ஒரு தவறான எண்ணம். நீங்கள் தசமபாகம் கொடுத்துப் பாருங்கள். உங்கள் பிள்ளைகளெல்லாம் நல்ல வேலைபார்க்கும்!” என்று ஒரு மனிதன் பிரசங்கம் பண்ணுவானானால் அவனுக்கு தேவனைப்பற்றிய அறிவு கடுகளவுகூட இல்லை. நீங்கள் தசமபாகம் கொடுக்காவிட்டாலும் உங்கள் பிள்ளைகளுக்குத் தேவனால் நல்ல வேலை தரமுடியும். “பைபிளில் அப்படியொரு வாக்குறுதி இருக்கிறதே!” என்று மக்கள் சொல்லலாம். மல்கியா 3:10இல் இருக்கிறது: பண்டகசாலையிலே ஆகாரம் உண்டாயிருக்கும்படி உங்கள் தசமபாகங்களையெல்லாம் என்னுடைய பண்டகசாலையிலே கொண்டு வந்து சேருங்கள். அப்பொழுது வானத்தின் பலகணிகளைத் திறந்து இடங்கொள்ளாமல் போகுமட்டும் உங்களுக்கு ஆசீர்வாதத்தை வருஷிக்க மாட்டேனோ என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 

போதுமான அளவுக்கு இந்தக் கிறிஸ்தவ உலகத்தை நாம் பார்த்திருக்கிறோம். அவர்கள் தேவனுடைய வார்த்தையை எப்படிக் கையாளுகிறார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். அதன் உந்து நோக்கம் தேவனுடைய மகிமையோ, தேவனுடைய நித்திய நோக்கமோ, தேவனுடைய நித்திய குறிக்கோளோ, தேவனுடைய மக்களுடைய நித்திய ஆசீர்வாதங்களோ இல்லை. மாறாக சில மனிதர்களுடைய agenda என்பதை நாம் அறிந்ததினால் தேவனுடைய வார்த்தையை எப்படி வேண்டுமென்றாலும் கையாளும்போது நாம் குருட்டுத்தனமாக ஏற்றுக்கொள்வதில்லை.

கிறிஸ்துவே தேவனுடைய நோக்கம்

தேவனுடைய பார்வையிலே நன்மை என்பது ஒன்றேவொன்றுதான். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இந்தப் பிரபஞ்சத்தில் வெளியாக்கப்படுவது. இந்தப் பிரபஞ்சத்தில் வெளியாக்கப்படுவதென்றால் நான் நானாக இருப்பேன். எங்கேயோயிருந்து hologramபோல இயேசுகிறிஸ்து வெளியாக்கப்படுவதில்லை. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை வெளியாக்குவதற்கென்று தேவன் வடிவமைத்த, உருவாக்கிய, பாத்திரம் மனிதன் மட்டுமே. மனிதனுக்கு பல நன்மைகளையும், இன்பங்களையும் தேவன் அமைத்திருக்கலாம். ஆனால், மனிதனுடைய முதன்மையான, நித்தியமான நன்மை, அவன் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை வெளியாக்குகிற ஒரு பாத்திரம். கிறிஸ்துவை எந்த அளவுக்கு ஒரு மனிதன் அல்லது ஒரு கூட்டம் மனிதர்கள் வெளியாக்குகிறார்களோ அந்த அளவுக்கு அவர்கள் உண்மையிலே தங்கள் மனித வாழ்க்கையிலே மாபெரும் நன்மையைப் பெற்றிருக்கிறார்கள்.

அது மனிதர்களுக்கு மட்டுமல்ல நன்மை, அது தேவனுக்கும் பெரிய நன்மை. இதை ரோமருக்கு எழுதின கடிதம் 8ஆம் அதிகாரம் 28, 29, 30ஆம் வசனங்களின் அடிப்படையில் சொல்லுகிறோம். தேவனுடைய பார்வையில் நன்மை என்று ஒன்றே ஒன்றுதான் உண்டு. அது கிறிஸ்து மனிதன்மூலமாய் அல்லது மனிதர்கள்மூலமாய் வெளியாக்கப்படுவது.

இது அழிந்துபோகாத நன்மை. வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது, வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது, கொடுத்தாலும் குறையாது, காவலுக்கோ மிக எளிது. கவிஞன் இந்த வரிகளை இயேசுகிறிஸ்துவைப்பற்றி எழுதவில்லை! அவன் கல்வியைப்பற்றி எழுதுகிறான். வெள்ளத்தால் போகாது… காவலுக்கோ மிக எளிது. ஆனால், நான் கல்வியைப் பெரிய ஆசீர்வாதமாகக் கருதவில்லை. உண்மையான கல்வி, உண்மையான நன்மை, உண்மையான செல்வம் கிறிஸ்து.

இந்தக் கிறிஸ்து ஒரு மனிதன்மூலமாக வெளியாக்கப்பட வேண்டும் என்றவுடனே அது ஒரு பெரிய இறையியலாக மாறிவிடுகிறது. ஒரு சகோதரி ஒருமுறை என்னிடம் கேட்டார்: “நீங்கள் பேசினதை ஒருமணிநேரம் கேட்டபிறகு, ஓகே! இவர்களுடைய போதனை கிறிஸ்துபோலிருக்கிறது. அது நல்ல போதனைதான். ஏனென்றால், இவர்கள் எப்போதும் கிறிஸ்து, கிறிஸ்து என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் இவர்களுடைய சிறப்பு உபதேசம் என்ன? கிறிஸ்து! Christology?|| என்று சொன்னார்கள்.

கிறிஸ்து என்றைக்கோ ஒருநாள் நம்மூலமாய் வெளியாக்கப்படுவதில்லை. இன்று நாம் ஆவியின்படி வாழும்போது கிறிஸ்து நம்மூலமாய் வெளியாக்கப்படுகிறார், நமக்குள் உருவாக்கப்படுகிறார். மிக மிக முக்கியமானது, கிறிஸ்து நம்மூலமாய் மற்றவர்களுக்குள் வழங்கப்பட வேண்டும்.

சில குழுக்களை நான் பார்த்திருக்கின்றேன். “நாம் இயேசுகிறிஸ்துவைப்போல வாழணும் பிரதர். எப்போதும், நான் இதில் இயேசு கிறிஸ்துவைப் போலிருக்கிறேனா? அதில் இயேசுகிறிஸ்துவைப் போலிருக்கிறேனா? அந்தத் தொனியில் இயேசுகிறிஸ்துவைப் போலிருக்கிறேனா? நடையில் இயேசு கிறிஸ்துவைப் போலிருக்கிறேனா?” என்று ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பார்கள். ஆனால் துன்பப்பட்டுக்கொண்டிருக்கிற மனிதர்கள் பலகோடி மக்கள் இருப்பார்கள். அவர்களுக்கு எப்படி இயேசு கிறிஸ்துவை வழங்குவது, அவர்களை விடுவிப்பது எப்படி என்கிற எண்ணமே அவர்களுக்கு இருக்காது. இது ஒரு போலியான இயேசுகிறிஸ்துவின் சாயல். இதை ஒத்துக்கொள்ளுகிறீர்களா?

அப் 10:38இல் வாசிப்பதுபோல, “அவர் நன்மை செய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.” அவர் மூலையில் உட்கார்ந்து யோகா பண்ணிக்கொண்டு, “இதில் எப்படிப் பரிசுத்தமாய் இருப்பது? அதில் எப்படிப் பரிசுத்தமாயிருப்பது?” என்று சொல்லிக்கொண்டிருக்கவில்லை.

உண்மையாகவே இயேசுகிறிஸ்து ஒரு மனிதனுக்குள் உருவாக்கப்படுகிறார் என்றால் அவன் தேவையிலும், குறைச்சலிலும், போராட்டங்களிலும், நெருக்கங்களிலும், பாடுகளிலும், துன்பங்களிலும் இருக்கிற மற்ற மனிதர்களுக்கு எப்படிக் கிறிஸ்துவை வழங்கி அவர்களை விடுவிப்பது என்கிற இருதயம் அவனுக்கு இருக்க வேண்டும். அது இயேசுவை அறியாத மக்களாகவும் இருக்கலாம். இயேசுவை அறிந்தவர்களாகவும் இருக்கலாம். காலத்தைப் பார்த்தால் கிறிஸ்தவர்களுக்கு அதிகமான சுவிசேஷம் தேவைப்படுகிறது.

எபிரெயர் 6ஆம் அதிகாரத்தில் உள்ளதுபோல, காலத்தைப் பார்த்தால் போதகர்களாக இருக்க வேண்டிய கிறிஸ்தவர்களுக்குத்தான் அதிகமான நற்செய்தி சொல்ல வேண்டியிருக்கிறது. எத்தனைக் கூட்டம் வைத்தாலும் அதில் 99 விழுக்காடு கிறிஸ்தவர்கள்தான். நான் சொல்வேன். அந்தக் கூட்டங்களை நிறுத்துவோமாக. இவ்வளவு கோடிக்கணக்கான, லட்சகணக்கான ரூபாயை செலவழித்து கிறிஸ்தவர்களுக்கே நாம் சுவிசேஷம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

கிறிஸ்து நம்மூலம் வெளியாக்கப்படுதல்

நான் இதுவரைப் பகிர்ந்துகொண்டதின் சாராம்சம்: நன்மை என்று ஒன்று இருக்கிறதென்றால் அது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மனிதனுக்குள் உருவாக்கப்படுவதும், மனிதர்கள்மூலமாய் வெளியாக்கப்படுவதுதான். அதிலே இரண்டு காரியங்கள் அடங்கும். ஒன்று, கிறிஸ்து நமக்குள் உருவாக்கப்படுவது. இரண்டு, கிறிஸ்து நம்மூலமாய் மற்றவர்களுக்குள் வழங்கப்படுவது. கிறிஸ்துவை நான் வழங்குகிறேன். ஆனால் என்னுடைய வாழ்க்கையில் உருவாக்கப்பட்ட கிறிஸ்துவை என்னைச் சுற்றியிருப்பவர்கள் பார்க்கவில்லை. என்னுடைய மனைவி, மக்கள் எனக்குள் உருவாக்கப்பட்ட கிறிஸ்துவைப் பார்க்கவில்லை. ஆனால், நான் ஊரெல்லாம் போய் கிறிஸ்துவை வழங்குகிறேன் என்றால், அது ஒரு முரண்பாடு. கிறிஸ்து எனக்குள் நிறைய உருவாகிவிட்டார். ஆனால், தேவையுள்ள ஒருவருக்கேனும் கிறிஸ்துவை வழங்கவில்லை, விடுவிக்கவில்லை என்றால் அதுவும் ஒரு முரண்பாடு. நான் கிறிஸ்துவை எனக்குள்ளே வைத்துக்கொண்டிருக்கிறேன். அவர் நமக்குள்ளே வைக்கக்கூடிய கிறிஸ்து அல்ல. இயற்கையான வாழ்க்கையென்றால் என்ன, ஆவிக்குரிய வாழ்க்கையென்றால் என்னவென்று வேறுபிரித்துக்காட்டுவதற்காக நான் சில காரியங்களை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

இயேசுவால் வாழ்தல்

முதலாவது, ஆவிக்குரிய வாழ்க்கையென்பது கிறிஸ்து போதுமானவர், கிறிஸ்து நிறைவானவர் என்ற அடிப்படையில் வாழ்கிற வாழ்க்கை. இது மிகவும் தெளிவு. இந்தப் பிரபஞ்சத்திலே மனிதனுடைய எல்லாத் தேவைகளுக்கும் பிதாவானவர் ஒரேவொரு provision தான் தந்திருக்கிறார். ஒரேவொரு provision ஒரேவொரு வழங்கீடு, ஒரேவொரு நிரப்பீடுதான் வைத்திருக்கிறார். அது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து. இதைக் கேட்பதற்கு உங்களுக்கு ஏதோ ஒரு நடைமுறைக்கு உரியது இல்லாதது போலத் தோன்றலாம். ஆனால், இது மிகவும் நடைமுறைக்குரியது. மனிதர்களுடைய தேவை என்னவாகயிருந்தாலும் சரி, அது சிறிய தேவையாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, இந்த உடலுக்குரியதாக இருந்தாலும் சரி அல்லது ஆவிக்குரியதாக இருந்தாலும் சரி, இம்மைக்குரியதாகயிருந்தாலும் சரி, நித்தியத்துக்குரியதாக இருந்தாலும் சரி அவையெல்லாவற்றையும் பிதாவானவர் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவில் வைத்திருக்கிறார். ஒரு மனிதன் இயேசு கிறிஸ்துவால் வாழமுடியும் என்பதை விசுவாசித்து வாழும்போது பிதாவானவர் மகிழ்ச்சியடைகிறார்.

பிசாசின் நோக்கம்

இயேசுகிறிஸ்துவால் வாழ முடியாது அல்லது இந்த மனித வாழ்க்கைக்கு இயேசுகிறிஸ்து போதுமானவர் அல்ல என்பதை நிருபிப்பதற்காக அதை நிரூபிக்க முடியாது தேவனுடைய பகைவனாகிய சாத்தான் இந்த உலகத்திலே சுற்றித்திரிகிறான். தேவன், “இயேசுகிறிஸ்துவால் வாழ முடியும். இதை இந்த மனிதர்கள் விசுவாசிக்கமாட்டார்களா?” என்பது பிதாவின் ஏக்கம். இந்த மாபெரும் உண்மை பிதாவின் நோக்கம். “ஆ! இயேசுகிறிஸ்துவால் வாழ முடியாது அல்லது மனித வாழ்க்கையின் எல்லாத் தேவைகளுக்கும் இயேசுகிறிஸ்து போதுமானவரல்ல,” என்பதை எப்படியாவது சாதிக்க வேண்டும், நிரூபிக்க வேண்டும் என்பது தேவனுடைய பகைவனாகிய, எதிரியாகிய, பிசாசின் நோக்கம். அது படிப்பாக இருந்தாலும் சரி, வேலையாக இருந்தாலும் சரி, வாழ்க்கைத் துணையாகிய கணவன் மனைவியாக இருந்தாலும் சரி, பணமாயிருந்தாலும் சரி, உடல்நலமாயிருந்தாலும் சரி.. இதில் கூடுதல் குறைச்சல் இருக்கலாம். உடனே கிடைக்கலாம் அல்லது பிந்தி கிடைக்கலாம். இதில் நான் இன்னொன்றையும் சோ;த்துக்கொள்கிறேன். ஒருவேளை கிடைக்காமலும் போகலாம்.

நான் அவிவிசுவாசத்தினால் இப்படிப் பேசுவதாக நினைக்க வேண்டாம். ‘கிடைக்கும’ என்று சொன்னால் ரொம்ப சீக்கிரமாக நாம் 500 பேராக மாறிவிடலாம். நன்றாகக் கவனியுங்கள். பேச்சு சாதூியமும், கொஞ்சம் நேர்மறையாகவும் பேசத் தெரிந்தால் போதும்: “இதோ பார், கிறிஸ்தவனைப்போல இந்த உலகத்திலே பணக்காரன் வேறு எவனும் இருக்க முடியாது.” இப்படி வாரந்தோறும் பேசிப் பார்ப்போம்; ஒரு அழகான இசையைப் போட்டுப் பார்ப்போம். நாம் சீக்கிரம் 500 அல்ல 1000 மாக மாறிவிடலாம். அப்புறம் நாம்தான் Mega Church.

Mega Church கட்டக்கூடிய கொடையும், கிருபையும், திறமையும், ஞானமும் வாய்ந்த ஒரேவொரு மனிதர், நபர், இந்தப் பூமியிலே வாழ்ந்தார். ஆனால், அவர் நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனித குமாரனுக்கோ—Mega church வேண்டாம்–தலைசாய்க்கக்கூட இடம் இல்லை,” என்று அவர் சொன்னார். அவருடைய வழியிலே நாம் நடப்போமாக.

உடனே சிலர், “இயேசுகிறிஸ்து கல்யாணம்கூடத்தான் பண்ணல..” என்பார்கள். ஓ! தேவனுடைய பிள்ளைகளோடு நாம் பேசுகிறோம் இல்லையா? அதனால் இதுபோன்ற கேள்வி, எதிர்கேள்வியெல்லாம் கேட்கும்போது திக்குமுக்காடிவிடுகிறோம். பேதுருவோ, யோவானோ, பவுலோ Mega church வைத்ததாக எனக்குத் தோன்றவில்லை. புதிய ஏற்பாட்டை நானும் மாற்றிமாற்றி வாசித்துப் பார்க்கிறேன், சிந்தித்துப்பார்க்கிறேன். இந்தக் கோணத்தில், அந்த கோணத்தில், பார்க்கிறேன். ஏதாவது தவறவிட்டுவிடுகிறேனோ என்று பார்க்கிறேன். ஆனால், என்னால் பார்க்கமுடியவில்லை.

1. கிறிஸ்துவே ஜீவ விருட்சம்

முதலாவது குறிப்பு, கிறிஸ்து போதுமானவர். ஆதியாகமம் 2ஆம் அதிகாரத்திலே நாம் பார்க்கிற ஜீவ விருட்சம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைக் குறிக்கின்ற ஓர் அடையாளம். மனிதனுடைய வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் இந்த ஜீவ விருட்சத்தில், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவில், உண்டு. அந்த ஜீவ விருட்சத்திற்கு வெளியே மனிதனுடைய வாழ்க்கைக்குத் தேவையான எதையும் பிதாவானவர் வைக்கவில்லை. நன்மை தீமை அறியத்தக்க மரம் உட்பட. ஜீவ விருட்சத்தினால் பெறுகிற அறிவு ஒன்று உண்டு. நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தினால் பெறுகிற ஒரு அறிவுமுண்டு. என்னவோ ஜீவவிருட்சத்தில் சாப்பிடுகிறவனெல்லாம் முட்டாள் என்று நினைக்க வேண்டாம். அவர்களெல்லாம் பேதைகள்போல, பார்வையில்லாத குருடர்கள்போல இருட்டில் தடவித்திரிகிறார்கள் என்று நினைக்க வேண்டாம்; அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று நினைக்க வேண்டாம்.

1 கொரிந்தியர் 2ஆம் அதிகாரத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறான்: இந்த உலகத்துப் பிரபுக்களுக்குத் தெரியாத ஒரு ஞானம் உண்டு. அந்த ஞானத்தை நாங்கள் பேசுகிறோம். உலகத்துப் பிரபுக்கள் யார்? இந்த உலகத்தினுடைய குருக்கள், சாமியார்கள், தத்துவஞானிகள், விஞ்ஞானிகள்–இவர்களுக்கெல்லாம் தெரியாத ஒரு ஞானம் உண்டு. தேவஞானத்தை நாங்கள் பேசுகிறோம். சொன்னால் அந்த உலகத்து ஞானிகளுக்கு விளங்காது. இது மிக உயர்ந்த ஞானம்.

2. கிறிஸ்துவுக்கேற்ற பிரமாணங்கள்

இரண்டாவது குறிப்பு, கிறிஸ்து போதுமானவர், கிறிஸ்து நிறைவானவர் என்பதின் பொருள் என்னவென்றால் கிறிஸ்துவுக்கேற்ற அல்லது கிறிஸ்துவுக்குஒத்த விதிகள், வழிகள், கோட்பாடுகள், பிரமாணங்கள் என்று உண்டு. தேவனுடைய மக்கள் அதன்படி வாழ்வதுதான் கிறிஸ்து போதுமானவர், நிறைவானவர் என்று நாம் விசுவாசித்து வாழ்கிற வாழ்க்கை.

ஒரு எடுத்துக்காட்டு சொல்லுகிறேன். தேவனுடைய மக்களுக்குப் பணம் வேண்டும் என்று கர்த்தருக்குத் தெரியும். இயேசுகிறிஸ்து வரி செலுத்தினார். அவரிடத்தில் வரி கேட்க வந்தவர்களிடத்தில், “இதோ, பார்! நான் இந்த வரிகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டவன். இந்த மண்டலத்திலே நான் வாழ்வது கிடையாது. இந்த மண்டலத்திலே வாழ்கிற Business ஆட்களிடம்தான் வரி கேட்க வேண்டும். நான் இந்த உலகத்தைத் துறந்தவன். என்னிடம் வரி கேட்காதே,” என்று அவர் சொல்லவில்லை. ஆனால், இப்படிச் சொல்கிற ஆட்கள் உண்டு. சாமியார்கள், சந்நியாசிகள் இவர்களெல்லாம் வருமான வரி கட்டமாட்டார்கள். இவர்கள் இந்த உலகத்து சட்டத்திட்டங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்களாம். ஏனென்றால், இவர்கள் எப்போதுமே மேகங்களுக்குமேல்தான் வாழ்கிறார்களாம். இவர்களுடைய கால் பூமியிலே பதியவே பதியாது. இதில் எல்லா சாமியார்களும் அடங்குவார்கள்: முஸ்லிம் சாமியார், இந்து சாமியார், கிறிஸ்தவ சாமியார், புத்த சாமியார். சாமியார் என்று பலகையை மாட்டிவிட்டால் அவ்வளவுதான்.

ஆனால், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து வரி செலுத்தினார். நாமும் வரி செலுத்த வேண்டும். ஆனால், வரி செலுத்துவதற்குப் பணம் வந்த வழி மிகவும் அற்புதமான வழி. பேதுருவிடம் சொல்கிறார்: நீ ஒரு தூண்டிலைப் போடு, மீன் கிடைக்கும். மீன் வாயிலே ஒரு நாணயம் இருக்கும். அதை எடுத்துக்கொண்டுபோய் வரியைச் செலுத்து. என்ன இது? வரி செலுத்த வேண்டும் என்று தீர்மானித்தபிறகு நேராக யூதாசிடம், “எவ்வளவு இருக்கு பாரு? வரி வசூலிக்கிற ஆயக்காரன் வரி கேட்கிறான். அவனுக்கு எவ்வளவு வரி வேண்டுமோ, அதைக் கொடுத்து விட்டுப்போ,” என்று சொல்லியிருக்க வேண்டியதுதானே!

காரியம் என்னவென்று கேட்டால் நமக்கு உலகத்தினுடைய தேவைகள் உண்டு. பணம் வேண்டும். ஆனால், இந்த உலகத்து மக்கள் அதை எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். அதைச் சம்பாதிப்பதற்கு உலகம் ஒரு வழி வைத்திருக்கும். ஆனால், தேவன் தம்முடைய மக்களுக்கு ஒரு வழியை வைத்திருப்பார். அந்த வழி வேலை செய்யும். அது மிக எளிய வழியாக இருக்கும். நம்முடைய வருவாய் எவ்வளவோ அந்த வருவாய்க்கு உட்பட்டுத்தான் நாம் வசதிகளை அமைத்துக் கொள்ள வேண்டும். அந்த வருவாய்க்கு மிஞ்சி ஒருநாளும் வசதிகளை நாம் அமைத்துக்கொள்ளக் கூடாது. ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துகிற கடனேயல்லாமல் மற்றொன்றிலும் கடன்படாதிருங்கள். இது உண்மையிலே விசுவாசியினுடைய வாழ்க்கை.

Madras Christian Collegeஇல் Dr.V.J.Philip என்று ஒரு Principal இருந்தார். அவருடைய பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க வரும்போது எல்லாரும் கேட்டார்களாம்: குறைந்தபட்சம் ஒரு காராவது வாங்கக்கூடாதா? அவர் கார் வாங்கவில்லை. அவர் முதல்வராக இருந்தபோதும் அவருடைய சொத்து ஒரு சைக்கிள் மட்டும்தான். அவர் தேவனுடைய மனிதன். கல்லூரியில் முதல்வருக்கென்று கார் உண்டு. அவர் அதைப் பயன்படுத்தவில்லை. அவர் சொன்னார்: நாம் ஒரு காரை வைத்திருப்போம் என்றால் என்னுடைய பெண்ணைக் கேட்டு வருகின்ற அந்தப் பையன் மற்ற காரியங்களை என்னிடத்தில் எதிர்பார்க்க ஆரம்பித்துவிடுவான். ஆகவே, என்னிடத்தில் இருப்பது சைக்கிள்தான். இது அவனுக்கு நன்றாகத் தெரியட்டும். தெரிந்து, அவன் என்னுடைய பெண்ணை மணமுடிக்க விரும்பினால் மணம் முடிக்கட்டும். இல்லாவிட்டால் மிகவும் சாமாதானமான வாழ்க்கை. என்னே மனப்பாங்கு!

இரண்டாவது இயற்கையான வாழ்க்கை அல்லது ஆவிக்குரிய வாழ்க்கை என்பது 2 கொரிந்தியர் 4ஆம் அதிகாரத்தில் 10-11 வரையுள்ள வசனங்களை நாம் வாசிக்கலாம். “எப்படியெனில் இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்படிக்கு, இயேசுவின் மரணத்தை எங்கள் சரீரத்திலே சுமந்துதிரிகிறோம். எப்படியெனில் சாவுக்கினமான எங்கள் மாம்சத்திலே இயேசுவினுடைய ஜீவனும் விளங்கும்படிக்கு உயிரோடிருக்கிற நாங்கள் எப்பொழுதும் இயேசுவினிமித்தம் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம்.” இதில் நீங்கள் அமிழ்ந்து போங்கள். பரிசுத்த ஆவியானவர் வெளிச்சத்தைத் தருவார்.

சிலுவை வழி உயிர்த்தெழுதலின் வழி

இயற்கையான வழி மரணத்தினூடாய்ச் சென்று ஜீவனைப் பெறுவதை ஒருநாளும் ஒத்துக்கொள்ளாது. வானங்கள், வானாதி வானங்களுக்கெல்லாம் ராஜாவாய் இருக்கிறவர் சென்ற பாதை இது. இது ஆவிக்குரிய வழி. சிலுவையினூடாய்ச் சென்று, மரித்து, உயிர்த்தெழுதலில் வந்து, வானங்களுக்கு மேலாய் ஏறி, எல்லாவற்றையும் தம் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி ஆண்டவரும் கிறிஸ்துவுமாய் மாற்றுகிற வழியே ஆவிக்குரிய வழி. ஆனால், இயற்கையான வழி என்னவென்றால், “என்னைத் தாழ விழுந்து பணிந்துகொள், இப்பொழுது நான் உனக்குக் காண்பித்த பூமியினுடைய ராஜ்யங்களெல்லாம் ஒரு நொடியிலே உனக்குச் சொந்தமாக்கிவிடுவேன்,” என்று மத்தேயு 4ஆம் அதிகாரத்தில் காண்கிற உலகத்தின் வழி.

பிதாவானவரும் ஒரு வழியைக் காட்டுகிறார். சாத்தானும் ஒரு வழியைக் காட்டுகிறான். இரண்டும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் கண்களுக்குமுன்பாக படமாக விழுகின்றன. சாத்தான் சொல்கிறான்: “ஒரேவொரு முறை என்னுடைய வழியை நீ தெரிந்துகொள். ஒரு கணப்பொழுது மட்டுமே! இந்த எல்லா ராஜ்யங்களையும் உமக்குத் தந்துவிடுகிறேன்.” பிதாவானவர் ஒரு வழியைக் காட்டுகிறார். அந்த வழி சிலுவையின் வழியாய்ப்போய், “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்,” என்று கதறி, அதற்குப்பின் வருகிற உயிர்த்தெழுதலையும் காண்பிக்கிற வழி. அவர் வெறுமனே சிலுவையை மட்டும் காண்பிக்கவில்லை. பிதாவானவர் எதையும் காண்பிக்கிறார்? உயிர்த்தெழுதலையும் காண்பிக்கிறார்.

“அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்தார்” (எபி. 11:3). எப்படி சிலுவையைச் சகித்தார் என்றால் வரப்போகிற சந்தோஷத்தை அவர் பார்க்கிறார். மனிதர்கள் சந்தோஷம் என்கிற வார்த்தையை மிகவும் அற்பமாகப் பயன்படுத்துவதுண்டு. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கு சந்தோஷம் என்பது அதுவல்ல. அது மூன்றாம் நாளிலே வருகின்ற உயிர்த்தெழுதல்.

இந்தக் காரணத்தை முன்னிட்டுத்தான் “ஆண்டவரே உம்மையே சார்ந்துள்ளேன்,” என்ற பாடலை எழுதினோம். உண்மையிலேயே சிலுவை உயிர்த்தெழுதலின் வழியை அந்த 16ஆம் சங்கீதம் படம் பிடித்துக் காண்பிக்கிறது. எனவே, இயற்கையான வாழ்வு ஒருநாளும் சிலுவையின் வழியை அங்கீகரிக்காது. ஆனால், ஆவிக்குரிய வழி என்பது சிலுவையினூடாய்ச் சென்றபின்புதான் ஜீவனைத் தருகிறது. இது மட்டுமே மற்றவர்களுக்கு ஜீவனைக் கொடுக்க வல்லது.

மூன்றாவது அதே 2 கொரிந்தியர் 4ஆம் அதிகாரம் 16ஆம் வசனம், 1 கொரிந்தியர் 2ஆம் அதிகாரம் 14ஆம் வசனம். இவைகள் இயற்கையான மனிதனைப்பற்றிப் பேசுகின்றன: எங்களுடைய புறம்பான மனிதன்…புறம்பான மனிதன் என்பது outer man அல்லது இயற்கையான மனிதன் அல்லது ஆத்துமாவிற்குரிய மனிதன். “எங்கள் புறம்பான மனிதன் நாளுக்குநாள் அழிந்தும் எங்கள் உள்ளான மனிதனானது நாளுக்குநாள் புதிதாக்கப்பட்டு வருகிறது.” “ஜென்மசுபாவமான மனிதனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ள மாட்டான். அவைகள் அவனுக்குப் பைத்தியமாய்த் தோன்றும்” (1 கொரி. 1:14).

ஓ! சிலுவையினூடாய்ச் சென்று உயிர்த்தெழுதலில் வருவது, சிலுவையினூடாய்ச் சென்று தேவனுடைய நன்மைகளையும், செல்வங்களையும், வெற்றியையும், சாதனையும் பெறுவது! சிலுவை இல்லாமல் போய் ஒரு சாதனை அடைவது பெரிதா? சிலுவையின் வழியாய்ச் சென்று ஒரு சாதனை அடைவது பெரிதா? சிலுவையின் வழியாய் ஒரு மனிதன் போகும்போது அவன் சாதனை செய்கிற மனிதன் இல்லை. அவன் தோற்றுப்போன மனிதன். சிலுவையில் தொங்குகிற மனிதன் அந்த ரோம அதிகாரிகள், ரோமப் போர்வீரர்கள், சேவகர்கள், சாதாரண மக்கள் எல்லாருக்கும் முன்பாக எப்படிப்பட்டவன்? தோற்றுப்போன மனிதன். “ஓ! நீர் தேவனுடைய குமாரனானால் சிலுவையைவிட்டு இறங்கி வாரும். மற்றவர்களை இரட்சித்தான். தன்னைத்தான் இரட்சிப்பதற்கு இவனுக்கு முடியவில்லை.” ஆகவே, நாம் ஆத்துமாவிற்குரிய மனிதர்களாக அல்லது இயற்கையான மனிதர்களாக இருப்பதல்ல. ஆவிக்குரிய மனிதர்களாக நம்மை உருமாற்றுவது தேவனுடைய திட்டம்.

3. பரிசுத்த ஆவியின்படி நடக்க வேண்டும்

நான்காவதைச் சொல்லி முடித்து விடுகிறேன். நடைமுறையிலே நாம் என்ன செய்ய வேண்டுமென்றால் பரிசுத்த ஆவியின்படி வாழ வேண்டும் அல்லது ஆவியின்படி வாழ வேண்டும். இப்போது நாம் சொன்னோம் அல்லவா? இயற்கையான வாழ்க்கை அல்லது ஆவிக்குரிய வாழ்க்கை, ஆவிக்குரிய மனிதன். நடைமுறையிலே இதன் பொருள் என்ன? இது இந்த மனிதன் ஒவ்வொரு நாளும் பரிசுத்த ஆவியின்படி அல்லது ஆவியின்படி வாழ்கிற ஒரு வாழ்க்கை. “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையுள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கான தாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக்குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது” (எபி. 4:12). நாம் சொல்லுகிற காரியங்களெல்லாம் ஆத்துமாவுக்குரியதா ஆவிக்குரியதா என்று நிதானிக்கலாம்.

இந்த உலகத்து மக்களுக்கு ஆத்துமா மட்டும்தான் தெரியும். ஒரு வீடு வேண்டும், ஒரு கார் வேண்டும், ஒரு Air conditioner வேண்டும். ஆனால், காசு இல்லை. எனவே என்ன செய்ய வேண்டும். கடன் வாங்கி அந்தப் பொருட்களை வாங்க வேண்டும். பிறகு மாதந்தோறும் EMI கட்ட வேண்டும்.

ஆகவே, அருமையான பரிசுத்தவான்களே, தேவன் நம்மை இயற்கையான வாழ்க்கையல்ல மாறாக ஆவியின்படி வாழ்வதற்காக அழைத்திருக்கிறார். ஆவியின்படி வாழ்கிற வாழ்க்கை அற்புதமான வாழ்க்கை. இயற்கையான வாழ்க்கை வாழ்கிற இந்த உலகத்து மனிதர்களுக்கு இந்த வாழ்க்கையைப்பற்றித் தெரியாது. தேவனுடைய மக்களே என்ன வாழ்க்கைதான் வாழ்வார்கள்? அவர்கள் தேவனுடைய மக்கள், ஆனாலும் ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்வதற்கு அவர்களுக்குப் பயமாயிருக்கும். அவர்கள் எதைத் தெரிந்துகொள்வார்கள்? இயற்கையான வாழ்க்கை வாழ்வதைத் தெரிந்துகொள்வார்கள். இயற்கையான வாழ்க்கை புலப்படுகிற வாழ்க்கை, கண்களுக்கு அது தென்படும், காதுகளுக்கு அது கேட்கும், கைகளால் அதைத் தொடலாம். அது எப்போதுமே நன்மைகளையும், செல்வங்களையும், வெற்றியையும், சாதனையையும் தரும். ஆனால் ஆவிக்குரிய வாழ்க்கையென்பது, அது விசுவாசத்தினால் வாழ்கிற வாழ்க்கை. அது உடனடியாக நன்மைகளையும், செல்வங்களையும், வெற்றிகளையும், சாதனைகளையும் தராது. எனவே அவர்கள் அஞ்சுவார்கள், அப்படிப்பட்ட வாழ்க்கை வாழமாட்டார்கள். தேவனுடைய மக்களாகிய நாம் ஆவியின்படி வாழ்வதைத் தெரிந்து கொள்வோம்.

  1. ஒன்று, ஆவியின்படி வாழ்வது என்றால் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மனித வாழ்க்கையின் தேவை எல்லாவற்றிற்கும் போதுமானவர், நிறைவானவர் என்று விசுவாசித்தல். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினுடைய வழிகள், விதிகள், பிரமாணங்கள் ஆகியவைகளின்படி வாழ்ந்தாலும் நம்முடைய வாழ்க்கையின் எல்லாத் தேவைகளும் நிறைவாக்கப்படும், பூர்த்திசெய்யப்படும் என்று விசுவாசிக்கிற ஒரு வாழ்க்கை.

  2. இரண்டாவது, ஆவிக்குரிய வாழ்க்கை அல்லது ஆவியின்படி வாழ்வது என்பது சிலுவையின் வழியாய்ச் சென்று உயிர்த்தெழுதலில் வருகிற வாழ்க்கை. இதை இயற்கையான மனிதர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வழி, அவனுக்குப் பைத்தியமாய்த் தோன்றும். ஓ! பைத்தியமாய்த் தோன்றும்! வேதனையாய்த் தோன்றும்! முரண்டுபிடிப்பார்கள். இந்த வழியில் அவர்களும் போகமாட்டார்கள், மற்றவர்களையும் போக விடமாட்டார்கள். “இது உமக்கு நேரிடக்கூடாது. நீர் நேரே ராஜாவாக வேண்டும்,” என்று சொன்னது யார்? பேதுரு. அவர்களாலும் புரிந்துகொள்ள முடியாது, புரிந்துகொண்டு நடக்கிறவர்களை நடக்கவும் விடமாட்டார்கள். “எதற்கு இந்த மாதிரியான தீவிரமான பாதையில் நடந்துபோகிறீர்கள்? ஒரு EMI கொடுத்து ஒரு Air conditioner வாங்கு,” என்று சொல்வது நல்ல ஆலோசனையா? அதை விட்டுவிட்டு, “நீ மே மாதம் வெயிலில் வெந்தாலும் பரவாயில்லை,” என்று சொல்வது நல்ல ஆலோசனையா? இந்த ஒரு காரியத்தில் மட்டும் அல்ல, இதுபோன்ற பத்து காரியங்கள், நூறு காரியங்கள், ஆயிரம் காரியங்கள் தேவன் வைப்பார். ஒரு வாரத்தில், ஒரு மாதத்தில் பிரச்சினை முடிந்துவிடும் என்றால் அதற்கு நாம் ஆயத்தம். ஒருவேளை சாகிறவரை இதுதான் தேவனுடைய ஏற்பாடு என்றால்! ஆகவே இரண்டாவது இயற்கையான மனிதன் சிலுவையினூடாய்ச் சென்று ஜீவனில் பிரவேசிக்கிற வழியைத் தெரிந்து கொள்ள மாட்டான். ஆனால், தேவனுடைய மக்கள் அதை விசுவாசிக்கிறார்கள்.

  3. மூன்றாவது, இயற்கையான மனிதன் வேறு ஆவிக்குரிய மனிதன் வேறு. ஆவிக்குரிய மனிதன் என்பவன் வெறுமனே இயற்கையான காரணக்காரியங்களால் மட்டும் தன் தீர்மானங்களை எடுப்பதில்லை. மாறாக, நம்முடைய ஆவியில் இணைந்துள்ள, நம்முடைய ஆவியில் கலந்துள்ள பரிசுத்த ஆவியானவருடைய உணர்வுகள் என்னவோ, நடத்துதல் என்னவோ, வழிகாட்டுதல் என்னவோ, அதன்படி தன்னுடைய தீர்மானங்களை எடுக்கிறான்.

இந்த மூன்று குறிப்புகள் போதும். 4. நான்காவது கடைசியாக எதிர்மறையாகச் சொல்லிவிடுகிறேன. தேவன் தம்முடைய மக்களுக்காக வகுத்துள்ள ஒரு வாழ்க்கை வெறுமனே ஒரு மதமுறையிலான வாழ்க்கை அல்ல. மதச்சம்பிரதாயம், மதச் சடங்குகள், மத அமைப்புமுறை அல்ல. இதன்படி நம்முடைய வாழ்க்கையை அமைத்துக்கொண்டு விட்டோம் என்றால் அது ஒரு பொய்யான திருப்தியை மனிதர்களுக்கு தரலாம். ஆனால், உண்மையான காரியம் கிறிஸ்து நமக்குள் உருவாவது, கிறிஸ்து நம்மூலமாய் மற்றவர்களுக்கு வழங்கப்படுவது. இந்த இரண்டின்மூலமாய் கிறிஸ்து நம்மூலமாய் வெளியாக்கப்படுவது. இது ஒரு மதமுறையிலான வாழ்க்கை அல்லது மத சம்பிரதாயங்கள் அல்லது மதச்சடங்குகளாலான ஒரு வாழ்க்கையில் நடைபெறவே நடைபெறாது.

நம் அழைப்பு

தேவன் இப்படி ஆவியின்படி வாழ்கிற வாழ்க்கை வாழ நம்மை அழைத்திருக்கிறார். இது ரொம்ப சாகசம் நிறைந்த ஒரு வாழ்க்கை. இதை முதலாவது பார்ப்பதற்கு மிகவும் risk ஆன வாழ்க்கையாகத் தோன்றினாலும்கூட எபிரெயர் 11ஆம் அதிகாரத்தின்படி நாம் பார்க்கும்போது தேவன் நமக்கு ஒரு மாபெரும் நன்மையை வைத்திருக்கிறார் என்று எபிரெயர் 11ஆம் அதிகாரம் கடைசி வசனம் கூறுகிறது. தேவன் நமக்கு ஒரு விசேஷித்த நன்மையை வைத்திருக்கிறார். தேவனுடைய மக்களாகிய நமக்கு. எனவே, இந்தப் பூமியிலே வாழும்போது இந்த விசேஷித்த நன்மையை தேவன் நமக்கு வைத்திருக்கிறார் என்கிற விசுவாசத்தோடே நாம் ஆவியின்படி வாழ்வோமாக. ஆறுதலுக்காகச் சொல்லிவிடுகிறேன். நம் தேவன் தம்முடைய பிள்ளைகளுக்குத் தேவையான உலகத்து நன்மைகளைக்குறித்து அக்கறையுள்ளவராயிருக்கிறார். நம்மை கவலைப்படாதிருங்கள் என்று சொன்னாரேதவிர நம்முடைய பிதா உலகத்தில் வேண்டிய எல்லா நன்மைகளையும்குறித்து அக்கறையுள்ளவராயிருக்கிறார். உண்மையுள்ளவராயிருக்கிறார். Praise the Lord!