Transcribed from a message spoken on November 16, 2014 in Chennai
By Milton Rajendram
“அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்தபோது: கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடர்களுக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும் என்னை அனுப்பினார் என்று எழுதியிருக்கிற இடத்தைக் கண்டு, வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெபஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது. அப்பொழுது அவர் அவர்களோடே பேசத் தொடங்கி: உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றைய தினம் நிறைவேறிற்று என்றார்” (லூக்கா 4:17-21).
புதிய ஏற்பாட்டின் காலத்தில் வாழ்கிற தேவனுடைய மக்கள் சட்டத்தின்படி வாழ்பவர்கள் அல்ல; அவர்கள் ஆவியின்படி வாழ்பவர்கள் என்கிற பேருண்மை தேவனுடைய மக்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் பரிசுத்த ஆவியின்படி வாழ வேண்டும் என்பது ஒரு மகத்தான உண்மை. பல நேரங்களில் தேவனுடைய மக்கள் பழைய ஏற்பாட்டில் வாழ்ந்த மக்களைப்போல் சட்டத்தின்படி வாழ்கிறார்கள்.
ஆவியின்படி வாழ்வது என்பது எந்தச் சட்டமும் இல்லாமல் வாழ்கிற வாழ்க்கை அல்ல. எந்தவொரு சட்டத்தின்படி வாழ்வதைவிட ஆவியின்படி வாழ்வது பல மடங்கு உயர்ந்தது. சட்டத்தின்படி வாழாமல் ஆவியின்படி வாழ்வதற்கு நாம் ஒரு விலைக்கிரயம் செலுத்த வேண்டும். புதிய ஏற்பாடு முழுவதும் அதைப் போதிக்கிறது. குறிப்பாக எபிரேயருக்கு எழுதின கடிதத்தை வாசித்துப் பாருங்கள்.
நம்முடைய வாழ்வின் பல்வேறு விதமான சூழ்நிலைகளிலும், நெருக்கங்களிலும், அழுத்தங்களிலும், என்னைப் பொறுத்தவரை, நாம் மூன்று மட்டங்களில் வாழ முடியும். நாம் உலகத்து மக்களைப்போல் வாழலாம் அல்லது சட்டத்தின்படி வாழலாம் அல்லது ஆவியின்படி வாழலாம்.
ஒன்று, நாம் உலகத்து மக்களைப்போல் வாழலாம். உலகத்து மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று சங்கீதம் 37 சொல்லுகிறது. உலகத்து மக்கள் எந்தத் தளத்தில், எந்த மட்டத்தில், வாழ்கிறார்களோ அந்தத் தளத்தில், அந்த மட்டத்தில், தேவனுடைய மக்களும் வாழலாம். ஆனால், பொதுவாக, கிறிஸ்தவர்கள் அப்படி வாழமாட்டார்கள். ஆனால், அவர்கள் இரண்டாவது மட்டத்தில், தளத்தில், அதாவது சட்டத்தின்படி வாழ்வார்கள். “சட்டப்படி நான் செய்வது சரி, சொல்வது சரி, நடப்பது சரி,” என்று அவர்கள் சொல்லலாம். ஆனால், தேவனுடைய மக்கள் அந்தத் தளத்தில், அந்த மட்டத்தில், வாழ அழைக்கப்படவில்லை; அவர்கள் அதைவிட உயர்ந்த மட்டத்தின்படி, தளத்தின்படி, வாழ அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
“உட்கார், நட, நில்” என்ற புத்தகத்தில் சகோதரன் வாட்ச்மேன் நீ ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். ஒரு விசுவாசியின் வயல் மேடான பகுதியில் இருக்கிறது. ஒரு அவிசுவாசியின் வயல் அவருடைய வயலைவிட தாழ்வான பகுதியில் இருக்கிறது. அந்த விசுவாசி இரவு முழுவதும் கண் விழித்துத் தன் வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறான். ஆனால், விடிந்தபின் போய்ப் பார்த்தால் அவன் வயலில் தண்ணீரே இல்லை. என்ன நடந்தது? விசுவாசி தண்ணீர் பாய்ச்சுவிட்டு வீட்டுக்குப் போனபின் அவிசுவாசி போய், விசுவாசியினுடைய வயலின் வரப்பை வெட்டி அவன் பாய்ச்சின தண்ணீரைத் தன் வயலுக்குத் திருப்பிவிடுகிறான். இப்படிப் பல நாட்கள் நடக்கின்றன. விசுவாசி ஒன்றும் செய்யவில்லை; பொறுமையுடன் சகித்துக்கொள்கிறான். தான் தேவனுடைய பிள்ளையாக இருப்பதால் சண்டை போடக்கூடாது என்று அவன் அமைதியாக இருக்கிறான். பல நாட்களுக்குப்பின் ஒருநாள் அவன் ஒரு சகோதரனிடம் போய் இந்தக் காரியத்தைச் சொல்லுகிறான். “இப்படி எனக்கு ஒரு துன்பம் நடைபெறுகிறது. என்னுடைய ஒவ்வொரு நாள் உழைப்பையும் ஒரு அநீதியான மனிதன் திருடிக்கொள்கிறான். ஆனால், நான் தேவனுடைய பிள்ளையாக இருப்பதால் சண்டைபோட முடியவில்லை. என்ன செய்யலாம்?” என்று கேட்கிறான். அதற்கு அந்தச் சகோதரன், “நாளைக்குப் போய் முதலாவது உன் வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்குப் பதிலாக உன் பக்கத்து வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சு,” என்று ஆலோசனை சொல்லுகிறான். முதலாவது, இதுபோல யோசிப்பது மிகவும் கடினம்; இரண்டாவது, இதைச் செய்வது அதைவிடக் கடினம்.
இதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை, தேவனைப் பின்பற்றுகிற தேவனுடைய மக்களுடைய வாழ்க்கை, என்றால் ஒருவேளை, நம்முடைய குரலில் மகிழ்ச்சிகூட போய்விடக்கூடும். “என்றைக்கு இந்தக் கிறிஸ்தவ வாழ்க்கை ஒரு முடிவுக்கு வருமோ!” என்கிற ஓர் ஏக்கம்கூட வரலாம்.
நாம் இயேசு கிறிஸ்துவோடு ஒன்றாக்கப்பட்டு, அவரைப் பின்பற்றி வாழ்கிற வாழ்க்கை உலகத்து மக்கள் வாழ்கிற வாழ்க்கையைவிட மிக மகிழ்ச்சியான, மிக இன்பமான, மிக இளைப்பாறுதலான வாழ்க்கையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் நாம் அதைத் தேவனிடம் கேட்டு, அதைச் சரி செய்துகொள்ள வேண்டும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மை இளைப்பாறுதலுள்ள வாழ்க்கைக்கு அழைத்திருக்கிறார் என்று மத்தேயு 11ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். “வருத்தப்பட்டுப் பாரஞ் சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத். 11:28). அதற்குப்பின், “நீங்கள் எந்த நுகமும் இல்லாமல் காட்டு விலங்குகளைப்போல் உங்கள் விருப்பம்போல் வாழ்வீர்கள்,” என்று அவர் சொல்லவில்லை. “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன். என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்” (மத். 11:29) என்று சொன்னார். எனவே, தேவனுடைய மக்களுக்கு நுகம் உண்டு; நுகம் நம்மை அடக்கும், நுகம் நம்மைக் கட்டுப்படுத்தும், நுகம் நம்மை நம் மனம்போல், விருப்பம்போல், வாழ விடாது. ஆனால், “என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது,” என்று அவர் வாக்குறுதி அளித்திருக்கிறார்.
“புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்துக்குரியதாயிராமல், ஆவிக்குரியதாயிருக்கிறது; எழுத்து கொல்லுகிறது; ஆவியோ உயிர்ப்பிக்கிறது” (2 கொரி. 3:6). 2 கொரிந்தியர் 3ஆம் அதிகாரம் முழுவதையும் நீங்கள் வாசித்துப்பாருங்கள். புதிய உடன்படிக்கையின் சேவை, புதிய உடன்படிக்கையின் ஊழியம், புதிய உடன்படிக்கையின் பணிவிடை, என்பது எழுத்தின்படியானது அல்ல, அது ஆவியின்படியானது என்று மிகத் தெளிவாகப் பார்க்கிறோம். எழுத்து என்றால் சட்டம். எனவே, நாம் ஒருவரோடொருவர் உறவுகொண்டு வாழ்வதும், ஒருவரையொருவர் சேவிப்பதும், ஒருவருக்கொருவர் பணிவிடை செய்வதும் சட்டப்படியானதாக இருக்கக்கூடாது. அது ஆவியானவரின்படி இருக்க வேண்டும். நாம் சட்டத்தின்படி வாழும்போதும், சேவிக்கும்போதும் அது கொல்லும்; அது மரணத்தைத் தரும். நாம் ஆவியானவரின்படி வாழும்போதும், சேவிக்கும்போதும் அங்கு ஜீவன் உண்டாயிருக்கும்; அது மக்களை உயிர்ப்பிக்கும்; மக்களை விடுதலையாக்கும்.
லூக்கா 4:17-21இல் நாம் வாசிப்பதுபோல் அது நம்மோடு தொடர்புக்குரிய, தொடர்புகொண்டுள்ள மக்களை விடுவிக்கும், மகிழ்ச்சியாக்கும்.
வழக்கம்போல் நான் மூன்று காரியங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். சட்டத்தின்படி வாழாமல் ஆவியின்படி வாழ்வது என்றால் என்ன பொருள்? 1. முதலாவது, தேவனுடைய மக்களுடைய அளவுகோல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. 2. இரண்டாவது, தேவனுடைய மக்களுடைய வழி சிலுவையின் வழி. 3. மூன்றாவது, அந்தந்த சமயத்திற்கேற்ப, தேவனுடைய மக்கள் நடக்கவேண்டிய பாதை, செய்ய வேண்டிய பணி, அவர்களுடைய மனப்பாங்கு ஆகியவைகளைத் தீர்மானிக்கிறவர் பரிசுத்த ஆவியானவர் .**
இந்த மூன்றையும் நான் மீண்டும் சொல்லுகிறேன். 1. தேவனுடைய மக்களுடைய அளவுகோல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. 2. தேவனுடைய மக்களுடைய வழி சிலுவையின் வழி. 3. தேவனுடைய மக்களுடைய ஆசிரியர் பரிசுத்த ஆவியானவர்.
நம்முடைய வாழ்க்கையில் பல நடைமுறைப் பிரச்சினைகள் உண்டு. நாம் ஒருவருக்கொருவர் கரிசனை கொள்ளுவதற்காகவும், அந்தக் கரிசனையினிமித்தம் நாம் ஒருவருக்கொருவர் கிறிஸ்துவைப் பாரிமாறுவதற்காகவும் கூடிவருகிறோம். கிறிஸ்துவைப் பரிமாறுவது இந்த இரண்டு மணி நேரத்தில் முடிந்துவிடுவதில்லை. நாம் தொடர்ந்து பரிமாறிக்கொண்டேயிருக்கிறோம். தொடர்ந்து நாம் ஒருவர் ஒருவருடைய நிலையை அறிந்து, அவர்களுடைய தேவையை அறிந்து, நாம் அவர்களுக்குக் கிறிஸ்துவைப் பரிமாறுகிறோம். கிறிஸ்துவைப் பரிமாறுவது நாம் அவர்களுக்காக ஜெபிப்பதாக இருக்கலாம் அல்லது ஒரு வார்த்தையைப் பேசுவதாக இருக்கலாம். அவர்களுடைய நிலையை அறிந்ததால் நாம் ஜெபிக்க வேண்டும். மற்றவர்கள் தங்களுக்காக ஜெபிப்பார்கள் என்பதால்தானே அவர்கள் தங்கள் நிலையை நமக்குத் தெரிவிக்கிறார்கள்! ஒருவருக்காக ஒருவர் ஜெபிப்பது தேவனுடைய ஆரோக்கியமான குடும்பத்தின் ஒரு குணமாகும். ஒரு சகோதரனோ ஒரு சகோதரியோ ஒரு காரியத்தை நம்மிடையே சொல்லி அந்தக் காரியத்துக்காக நாம் ஜெபிக்காமல் விட்டோம் என்ற நிலைமை நம்மிடையே இருக்கக்கூடாது. தேவனுடைய மக்கள் பகிர்ந்துகொள்ளும்போது அதற்கு நாம் பலவிதங்களில் மாறுத்தரம் கொடுக்கலாம். அதற்கு நம்முடைய ஒரு பதில் ஜெபம். அவர்களுடைய நிலைக்காக. அவர்களுடைய நிலை என்னவென்று நாம் புரிந்துகொண்டிருக்கிறோமோ அந்த அளவின்படி நாம் ஜெபிக்க வேண்டும். நாம் துருவித்துருவி காரியங்களைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. புரிந்துகொள்ளாத நிலைக்காக நாம் ஜெபிக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால், தேவனுடைய நித்திய நோக்கத்தையும், நித்தியத் திட்டத்தையும், நித்தியக் குறிக்கோளையும்விட்டு என் கண்களை நான் ஒருக்காலும் விலக்கமாட்டேன். என் வாழ்க்கையையும், பரிசுத்தவான்களின் முழு வாழ்க்கையையும் நான் அந்த வெளிச்சத்திலேயே பார்ப்பேன். ஏனென்றால், அந்த வெளிச்சத்தில் மட்டுமே நம் வாழ்க்கையின் எல்லாச் சிக்கல்களுக்கும் தீர்வு உண்டு. ஆமென்.
ஒரு மனிதன் சுருக்கு வழியில் தீர்வு தருகிறேன் என்று சொன்னால் அது பொய். தேவனுடைய கடந்த நித்தியம் தொடங்கி வரும் நித்தியம்வரை தேவனுடைய திட்டம், தேவனுடைய நோக்கம், தேவனுடைய குறிக்கோள், தேவனுடைய இலக்கு என்ற வெளிச்சத்தில் வாழ்க்கையை சீர்தூக்கிப் பார்க்கும்போது மட்டும்தான் அதை சமாதானமும், கனியும், பொருளும் நிறைந்த வாழ்க்கையாகப் பார்க்க முடியும். “நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனிதனுடைய முடிவு சமாதானம்” (சங். 37:37). இந்த வசனம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு மனிதனுடைய முடிவுவரைப் பார்க்க வேண்டும். நாம் ஒருநாள் இந்த உலகத்தைவிட்டுக் கடந்துபோவோம். யாராக இருந்தாலும் சரி, அவன் சமாதானத்தோடு கடந்துபோகிறானா இல்லையா என்பதுதான் ஒரு மனிதனுடைய லிட்மஸ் பரீட்சை (வேதியியலில் செய்யப்படும் ஒரு பரீட்சை). என்னுடைய வாழ்க்கையில் எனக்கு மிகவும் பயனுள்ள, என்னை ஆட்கொண்ட தேவனுடைய வசனங்களுள் இதுவும் ஒன்று.
நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தேவனுடைய எண்ணமாக இருக்கிறார்; தேவனுடைய எண்ணத்தின் ஊனுருவாக இருக்கிறார்; தேவனுடைய எண்ணத்தின் மொத்த வடிவமாக இருக்கிறார். முதலாவது, நாம் நம் கண்களை ஏறெடுத்து யாரை நோக்கிப் பார்க்க வேண்டும்? நம் கண்களை யார்மேல் பதிக்க வேண்டும்? ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்மேல். கணவன், மனைவி, பிள்ளைகள், பெற்றோர், சகோதர சகோதரிகள், நண்பர்கள் ஆகியவர்கள்மேல் அல்ல. மிக முக்கியமாக என்மேலும் அல்ல. இயேசு கிறிஸ்துவின் சீடனாக இருக்க வேண்டும் என்றால் தாயை. தகப்பனை, மனைவியை வெறுக்க வேண்டும் என்று சொல்வார்கள். அது ஒருவேளை எளிதாக இருக்கலாம். “தன்னைத்தான் வெறுத்து” என்பதை மறந்துவிடுகிறோம், விட்டுவிடுகிறோம். சீடனாக இருக்க மற்றவர்களை வெறுக்க வேண்டும் என்று அழுத்திச் சொல்லுவார்கள். “உன்னை நீ வெறுக்காவிட்டால் இயேசுகிறிஸ்துவுக்குச் சீடனாக இருக்கமாட்டாய்” என்பதை பல தடவை அழுத்திச் சொல்ல வேண்டும். பல சமயங்களில் நாம் நம் தாய் தகப்பனை வெறுப்பது நம்மேல்கொண்ட அன்பினால். நம்மை நாம் அவ்வளவாய் நேசிக்கிறோம். “என்னுடைய தூக்கம், என்னுடைய சௌகரியம், எனக்கு எந்தத் தொந்தரவும் இருக்கக்கூடாது” போன்றவைகளில் நாம் குறியாக இருக்கிறோம். நம்மை நாம் அதிகமாக நேசிப்பதால் நம் தாய் தகப்பனை வெறுப்பது நமக்கு வசதியாக இருக்கிறது. இது சிலுவையின் வழி அல்ல. இது நசல் பிடித்ததையும், ஊனமுற்றதையும் தேவனுக்குப் பலியாகக் கொடுப்பதற்குச் சமானம்.
முதலாவது, எல்லா நிலைகளிலும் நாம் நம் கண்களை ஏறெடுத்து, தூக்கி, நோக்கி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பார்க்க வேண்டும். “ஆகையால்…விசுவாசத்தைத் துவக்குகிறவரும், முடிக்கிறவருமாயிருக்கிற (முழுமையாக்குகிறவருமாயிருக்கிற) இயேசுவை நோக்கி..நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்” (எபி. 12:1). பொறுமையோடே ஓடக்கடவோம்; இல்லையென்றால். இந்த வாழ்க்கையை நாம் வெற்றியாக ஓடி முடிக்க முடியாது.
லூக்கா 4:17-21இல், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தை வாசித்து விட்டு, புத்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடம் கொடுத்துவிட்டு, “உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றைய தினம் நிறைவேறிற்று,” என்று சொன்னார். அவர் மிகவும் சாதாரணமாகத்தான் புத்தகச் சுருளைச் சுருட்டிப் பணிவிடைக்காரனிடம் கொடுத்தார் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆனால், நான் கொஞ்சம் கவிதை நயத்தோடு ஒன்று சொல்லுகிறேன். ஒருவன், உண்மையிலேயே, இயேசு கிறிஸ்துவைக் கண்டுவிட்டால், அதன்பின் புத்தகச் சுருளைச் சுருட்டி இன்னொருவன் கையில் கொடுத்துவிடலாம். இந்தப் புத்தகச் சுருளில் எழுதியிருக்கிற வார்த்தைகளல்ல, வாக்கியங்களல்ல, வசனங்களல்ல; அந்த வார்த்தைகளில் எழுதியுள்ளவைகளை நிறைவேற்றுகிற நபர்தான் மிக முக்கியம். தேவனுடைய மக்கள், ஒருவேளை, வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டிருக்கலாம்; ஆனால், அந்த வார்த்தை சொல்லுகிற நபரை விட்டுவிடுகிற வாய்ப்பு உண்டு. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தபிறகு, ஒருநாள் எம்மாவு என்னும் கிராமத்துக்குச் சென்றுகொண்டிருந்த இரண்டு சீடர்களுடன் சேர்ந்து நடந்துபோனார். தங்களுடன் நடந்துவருபவர் இயேசு என்று அவர்களுக்குத் தெரியாது. அப்போது, *“மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர் அவர்ளுக்கு விவரித்துக் காண்பித்தார்”9 (லூக்கா 24:27). எழுத்து அல்ல; எழுத்து சுட்டிக்காட்டுகிற நபரே மிக முக்கியம். வாக்கியம் அல்ல; வாக்கியத்தை நிறைவேற்றுகிற நபரே மிக முக்கியம்.
யோவான் 5:38-40ஆம் வசனங்கள் நமக்குத் தெரியும். “அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசியாதபடியால் அவருடைய வசனம் உங்களில் தரித்திருக்கவில்லை. வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே. என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை.” ஆண்டவராகிய இயேசு நம்முடைய ஜீவன். வேதவாக்கியங்களைவிட வேதவாக்கியங்களை நிறைவேற்றுகிற இயேசுவே ஜீவன்.
கோடை காலம் முழுவதும் ஒரு செடி காய்ந்திருக்கிறது. அது செத்துவிட்டது என்று நாம் நினைக்கிறோம். ஆனால், மழைக்காலம் வந்தவுடன் அதில் பசுமையான துளிரைப் பார்க்கிறோம். ஏனென்றால், காய்ந்து வறண்டபோன அந்தத் தண்டுக்குள் உயிர் இருக்கிறது. ஒரு சாதாரண தாவர உயிரால் ஒரு வருடம் முழுவதும் நெருக்கத்தையும், உஷ்ணத்தையும், வறட்சியையும், அழுத்தத்தையும் தாங்கமுடியும் என்றால் தேவனுடைய ஜீவனால் இவைகளைத் தாங்க முடியாதா? தேவனுடைய ஜீவன் என்பது உயிர்த்தெழுந்த ஜீவன். அது எதையும் தாங்கும்.
எந்த உயிரியாலும் தாங்க முடியாதது மரணம். உயிர் போய்விட்டதென்றால் அதோடு கதை முடிந்து விட்டது. அதற்குப்பின் செய்வதற்கு ஒன்றும் இல்லை. அது முற்றுப்புள்ளி. ஆனால், தேவனுடைய ஜீவன் மரணத்திற்குள் போனாலும், அது மரணத்தைவிட்டு வெளியேவரும். இயேசு கிறிஸ்து நம் ஜீவனாக இருக்கிறார் என்று நாம் சொல்லும்போது அவர் நமக்கு அப்படிப்பட்ட உயிர்த்தெழுந்த ஜீவனாக, மரணத்தினூடாய்ச் சென்று, மரணத்தை வென்று வாழ்கின்ற ஜீவனாக, உயிராக, இருக்கிறார். நமக்குள் இருக்கிற இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த உயிராக, ஜீவனாக, இருக்கிறார்.
ஒரு காரியத்தில் தேவனுடைய எண்ணம் என்னவென்று அல்லது இந்தக் காரியத்தில் தேவனுடைய சட்டம் என்னவென்று பார்ப்பதற்கு நாம் எழுத்தைப் பார்க்க முடியாது. நாம் இயேசு கிறிஸ்துவைத்தான் பார்க்க வேண்டும். பழைய ஏற்பாட்டில் தேவன் தன் சட்டத்தை எழுத்து வடிவத்தில் கொடுத்தார். ஆனால், தேவன் தாம் யாராக இருக்கிறார், அவருடைய இருதயம் என்ன, மனம் என்ன, குணம் என்ன, வழிகள் என்ன, பிரமாணங்கள் என்ன, மனப்பாங்கு என்ன என்பதை பல்லாயிரம் சட்டங்கள் எழுதினாலும் மனிதனுக்குத் தெரியப்படுத்த முடியாது. ஆகவே, அவர் அந்தப் பல்லாயிரம் சட்டங்களை இயேசு கிறிஸ்துவைக்கொண்டு, இயேசு கிறிஸ்துவில், வெளிப்படுத்துகிறார்.
பாடல்களின் இசை எப்படி இருக்கும் என்பதை ஐந்து வரிகளில் எழுதியிருப்பார்கள். நீங்கள் அதைப் பார்த்திருக்கிறீர்களா? ஒரு பாடலை எப்படிப் பாட வேண்டும் என்பதற்கு ஐந்து வரிகளில் அதைக் குறிப்புகளாக எழுதியிருப்பார்கள். அது துல்லியமாக அந்தப் பாடலின் இசைதான். ஆனால், இசையைக் குறிக்கும் அந்த சிறப்புக் குறிப்புகளைப் படிக்கும்போது காதுக்கு இனிமையாக இருக்குமா? இருக்காது. இனிமையான இசை காதுகளில் கேட்குமா? கேட்காது.
இசை வேறு; இசையைப்பற்றிய குறிப்புகள் வேறு. இரண்டுக்கும் இடையே பெரிய வித்தியாசம் உண்டு. தேவனுடைய சட்டத்தை வெறுமனே எழுத்து வடிவத்தில், வார்த்தை வடிவத்தில், பேச்சு வடிவத்தில் அல்லது சொல் வடிவத்தில் எழுதி வைப்பது வேறு; தேவனுடைய சட்டத்தின் ஊனுரு, மனுவுரு வேறு. இரண்டுக்கும் இடையே மிகவும் வித்தியாசம் உண்டு. ஆகவே, எந்தச் சூழ்நிலையிலும் நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவையே நோக்கிப்பார்க்க வேண்டும்.
நம்முடைய இருதயங்களில் முக்காடு இருக்கிறது என்றும், நாம் கர்த்தரை நோக்கித் திரும்பும்போது அந்த முக்காடு நம்மைவிட்டு எடுபட்டுப்போகும் என்றும் அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார் (2 கொரி. 3:16). “கர்த்தரே ஆவியானவர் ; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு. நாமெல்லாரும் திறந்த முகமாய்க் (முக்காடு இல்லாத முகமாய்க்) கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியில் காண்கிறதுபோலக் கண்டு (கண்ணாடியைப்போலக் கண்டு பிரதிபலித்து) ஆவியாயிருக்கிற கர்த்தரால் மகிமையின்மேல் மகிமையடைந்து (மகிமையின் ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு) மறுரூபப்படுகிறோம் (மறுரூபமாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம்) (2 கொரி. 3:17-20).
ஒருவன் கர்த்தரிடத்தில் திரும்பும்போது அவனுடைய இருதயத்தில் இருக்கும் முக்காடு எடுபட்டுப் போகும். தேவனுடைய மனம், தேவனுடைய எண்ணம், தேவனுடைய வழி என்னவென்று அறிந்துகொள்ள ஒரேவொரு வழிதான் உண்டு. தேவனுடைய மனமும், தேவனுடைய எண்ணமும், தேவனுடைய வழியும் எங்கிருக்கிறது? ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் தேவனுடைய மனம் என்ன, தேவனுடைய எண்ணம் என்ன, தேவனுடைய வழி என்னவென்று நாம் எப்படிக் கண்டுபிடிப்பது? ஆதியாகமத்திலிருந்து திருவெளிப்பாடுவரை ஆராய்ந்துபார்க்க முடியுமா? ஆராய்ந்துபார்க்க வேண்டுமா வேண்டாமா? ஆராய்ந்துபார்க்க வேண்டும். ஒரு காரியத்தில் தேவனுடைய மனம் என்ன, தேவனுடைய எண்ணம் என்னவென்று எனக்குத் தெரியாது என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்? ஆராய்ந்துபார்க்க வேண்டும்.
பல காரியங்களுக்காக நாம் தேவனுடைய வார்த்தையை ஆராய்ந்துபார்க்க வேண்டும். கொடுப்பதைப்பற்றி, கூடுகையைப்பற்றி, ஊழியத்தைப்பற்றி. தேவனுடைய மக்கள் ஒரு தெளிவைப் பெற வேண்டும் என்பதற்காகத் தேவனுடைய வார்த்தையை ஆராய்ந்துபார்க்கலாம். தேவனுடைய வார்த்தையை நாம் ஆராய்ந்துபார்க்க வேண்டும். ஒரு வருடம் ஆராய்ந்துபார்த்தபின்புகூட நமக்கு ஒரு தெளிவு ஏற்படாமல் போகலாம். எந்த அளவுக்கு நாம் தெளிவை எட்டியிருக்கிறோமோ அந்த அளவுக்கு நாம் செய்வோம்.
பல சமயங்களில் தேவனுடைய வார்த்தையை ஆராய்ந்துபார்ப்பதற்கு நமக்கு நேரம் இருக்காது. அந்தச் சமயத்தில் நாம் முடிவெடுக்க வேண்டும் அல்லது என்னதான் தேவனுடைய வார்த்தையை ஆராய்ந்துபார்த்தாலுங்கூட ஒரு தெளிவு பெற முடியாது. அப்போது என்ன செய்ய வேண்டும்? ஒன்றேவொன்றுதான் செய்ய வேண்டும். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை நோக்கி நாம் திரும்பும்போது அந்த முக்காடு எடுபட்டுப்போகும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே தேவனுடைய வழி, தேவனுடைய எண்ணம், தேவனுடைய பிரமாணங்கள், தேவனுடைய மனம், தேவனுடைய இருதயம் ஆகியவைகளின் ஊனுரு, மனுவுரு, முழுமையான வெளியாக்கம். அவரிடம் போய், “ஆண்டவரே! நீர் எப்படிப்பட்டவராக இருக்கிறீரோ, உமக்கு ஒத்த ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்,” என்று நாம் சொல்லும்போது, நிச்சயமாக நம்முடைய மனதிலே இருக்கிற முக்காடுகளெல்லாம் எடுபட்டுப்போகும்.
ஒருவன் தேவனுடைய வார்த்தையை வைத்துக்கொண்டாலுங்கூட அவனுடைய இருதயத்தில் முக்காடு இருக்க முடியும்; அதில் அவன் இயேசு கிறிஸ்துவைப் பார்க்கிற வாய்ப்பைத் தவறவிட முடியும்; அவரைப் பார்க்காமல் போகமுடியும். பரிசேயர்கள் தேவனுடைய வார்த்தையை வாசித்தார்கள். ஆனால், அவர்கள் இயேசு கிறிஸ்துவைப் பார்க்கவில்லை.
தமிழில் “வேத வாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்” என்று இருக்கிறது. ஆனால் அது, “வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்க்கிறீர்கள்,” என்று இருக்க வேண்டும். “நீங்கள் வேத வாக்கியங்களை ஆராய்ந்துபார்க்கிறீர்கள். அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று நீங்கள் எண்ணுகிறீர்கள். ஆனால், உங்களுக்கு நித்திய ஜீவன் கிடைக்காது. ஏனென்றால் வேத வாக்கியங்களுக்குப் பின்னிருக்கிற, அந்த வேதவாக்கியங்கள் சுட்டிக்காட்டுகிற, அந்த வேதவாக்கியங்களுக்கு ஊனுரு அல்லது மனுவுரு அல்லது வெளியாக்கம் கொடுத்திருக்கிற இயேசுகிறிஸ்துவை நீங்கள் காணாதவரை வேதவாக்கியங்களிலிருந்துகூட நீங்கள் ஜீவனைப் பெற முடியாது. இன்னும் சொல்லப்போனால் நீங்கள் வேதவாக்கியங்களை கொலைசெய்யவுங்கூடும்.” இதுதான் அதன் பொருள்.
தேவனுடைய மக்களுடைய அளவுகோல் வெறும் சட்டம் அல்ல; தேவனுடைய மக்களுடைய அளவுகோல் இயேசுகிறிஸ்து. இதில் ஓர் ஆபத்து உண்டு. அவரவர் தங்கள் விருப்பத்திற்கேற்ப இயேசு கிறிஸ்துவை வைத்துக்கொள்ளலாம். ஆளாளுக்கு அவரவர் பதிப்பை வைத்துக்கொள்ளக்கூடும். ஒருவருடைய இயேசு கிறிஸ்து மிகவும் சாந்தமாக இருப்பார். இன்னொருவருடைய இயேசு கிறிஸ்து எப்போதும் கையில் சாட்டையை வைத்துக்கொண்டிருப்பார். ஏனென்றால், எருசலேம் தேவாலயத்துக்குள் நுழைந்தபோது அவர் கையில் சாட்டையை வைத்திருந்தார் இல்லையா? இவர்களைப் பொறுத்தவரை இயேசு கிறிஸ்து எப்போதும் கையில் சாட்டை வைத்திருப்பார். எடுத்த சாட்டையை அவர் கீழே போடவேயில்லை. சிலுவையில்கூட அவர் கையில் சாட்டை வைத்திருப்பதுபோல்தான் பார்ப்பார்கள்.
அவரவருடைய பிறவிக்குணத்தின்படியும், கலாச்சாரத்தின்படியும், பின்புலத்தின்படியும், வசதியின்படியும், கட்டமைப்பின்படியும், இயேசுகிறிஸ்துவை கற்பனை பண்ணிக்கொள்கிற வாய்ப்பு உண்டு. “ஆண்டவரே, உண்மையாகவே நான் உம்மைக் கண்டு, தரிசிக்க விரும்புகிறேன்,” என்று ஜெபிக்கும்போது பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்துவார்.
இரண்டாவது, தேவனுடைய மக்களின் வழி சிலுவையின் வழி. எபேசியர் 2ஆம் அதிகாரத்தில் இந்த எண்ணம் உண்டு. இருதிறத்தாரையும் இயேசு கிறிஸ்து எப்படி ஒப்புரவாக்கினார், ஒன்றாக்கினார், என்று நாம் அங்கு பார்க்கிறோம். இருதிறத்தார் என்றால் யார்? கணவனும் மனைவியும் இருதிறத்தார்; பெற்றோர்களும் பிள்ளைகளும் இருதிறத்தார்; சகோதரர்களாகிய நாம் தேவனுடைய குடும்பமாகக் கூடிவாழும்போது பலதிறத்தார்; நம் அலுவகத்தில் பற்பலதிறத்தார் இருக்கிறார்கள்.
இவர்களை எப்படி ஒன்றாக்க முடியும் என்றால் எபேசியர் 2ஆம் அதிகாரத்தை நன்றாக வாசியுங்கள். நான் அதைச் சுருக்கமாகச் சொல்லுகிறேன். அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே அவர்களை ஒன்றாக்கினார் அல்லது சிலுவையின்மூலமாக இரண்டு சாராருக்குமிடையே இருந்த பகையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, இருதிறத்தாரையும் ஒரே சரீரத்திலே அவர் ஒன்றாக்கினார்.
இரண்டுபேரால் இந்த உலகத்தில் ஒன்றித்து இணைந்து வாழ்வது கடினம். கணவன் மனைவியாக இருந்தாலும் சரி அல்லது பெற்றோர் பிள்ளைகளாக இருந்தாலும் சரி. ஏனென்றால், சுயம்தான் ஒரு மனிதனுடைய நடுவில் இருக்கிறது. சுயம்தான் அவன் மையம். அவனுடைய சுய-வாழ்க்கை. சுய-இலாபம், சுய-மகிமை, சுய-வசதி, சுய-பெருமை, சுய-பாதுகாப்பு என்று நூற்றுக்கணக்கான காரியங்களைச் சொல்லலாம். ஒரு மனிதனுடைய வாழ்க்கை சுயத்தை மையமாகக் கொண்ட வாழ்க்கை. கணவன் மனைவியாக இருந்தாலும் சரி, பெற்றோர் பிள்ளைகளாக இருந்தாலும் சரி, சகோதர சகோதரிகளாக இருந்தாலும் சரி. அவர்கள் ஒரு உறவின் வாழ்க்கை வாழும்போது, அந்த உறவிலே யார் மையமாக இருப்பது என்ற கேள்வி எழுகிறது. ஒவ்வொரு மனிதனுடைய மனப்பாங்கும் தான் தான் மையமாக இருக்க வேண்டும் என்று ஏங்கும். எடுத்துக்காட்டாக கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயுள்ள உறவிலே, “நான்தான் மையமாக இருப்பேன்” என்று கணவனும் நினைப்பான், மனைவியும் நினைப்பாள். அவர்களுடைய உடல்-வாழ்வு, சுய-வாழ்வு, ஆத்தும-வாழ்வு, மையமாக இருக்க வேண்டும் என்று ஏங்கும். பொதுவாக எந்த உறவிலும் மனிதர்கள் தங்களைத்தான் மையமாக வைப்பார்களேதவிர அடுத்த சாராரை மையமாக வைப்பது அபூர்வம்.
இயற்பியல் பாடம் படிக்கும்போது இப்படிச் சொல்லியிருக்கிறார்கள்: இரண்டு வடதுருவங்களைப் பக்கத்தில் கொண்டு வந்தால் தள்ளுமா அல்லது ஈர்க்குமா? தள்ளும். நீங்கள் இதைப் பார்க்கலாம். இரண்டு தென் துருவங்களைப் பக்கத்தில் வைத்தாலும் அப்படித்தான் நடக்கும். சுயத்தை மையமாகக் கொண்டு மனிதர்கள் வாழும்போது அவர்கள் கட்டப்படமாட்டார்கள்; அவர்கள் தள்ளிப் போவார்கள். நம் உறவுகளில் நாம் மையமாக இருக்கிறவரை அங்கு கட்டப்படுதல் நடைபெறாது. அந்த இரண்டு மனிதர்களுக்கும் இயேசு கிறிஸ்துவின் அளவு பெருகும்போது அவர்களுடைய தள்ளுவிசை குறைந்து அவர்களுடைய ஈர்ப்புவிசை மிகவும் அதிகரிக்கும். எப்படி சுய வாழ்க்கை குறைந்து இயேசு கிறிஸ்து பெருகுவது? ஒன்றேவொன்றுதான் வழி. அதற்குப் பெயர் தான் சிலுவை..
சிலுவை என்றால் என்ன? சிலுவை, ஒரு மனிதனுடைய சுய வாழ்க்கையை எதிர்த்துநிற்கும். எனக்கு என் இயற்கையான வாழ்க்கை, இயற்கையான விருப்பு வெறுப்புகள், இயற்கையான எண்ணங்கள், இயற்கையான தீர்மானங்கள் உண்டு. நான் ஒரு பெரிய பட்டியலை அடிக்கடி சொல்வதுண்டு: என் ஆசைகள், என் விருப்பங்கள், என் ஏக்கங்கள், என் தாகங்கள், என் சாய்மானங்கள், என் மனப் பாங்குகள், என் நடை உடை பாவனைகள், என் முன்னுரிமைகள், என் சுவைகள் ஆகிய இவையெல்லாவற்றிற்கும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவை எதிர்த்துநிற்கும். இயேசு கிறிஸ்து சிலுவையின்மூலம் பகையாகிய நடுச்சுவரைத் தகர்த்தார். ஆகவே, இன்றைக்கும் நாம் ஒருவரோடொருவர் கட்டப்படவேண்டுமென்றால் இரண்டு சாராரும் சிலுவை தங்கள் வாழ்க்கையில் பிரயோகிக்கப்படுவதற்குத் தங்களை ஒப்புக்கொடுக்க வேண்டும். சிலுவையின் வழியில் நடப்பதற்குத் தங்களை அர்ப்பணித்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட மக்கள்தான் கட்டியெழுப்பப்பட முடியும்.
“இதோ, உங்களிடத்திற்கு மூன்றாந்தரம் வர ஆயத்தமாயிருக்கிறேன்; நான் உங்களை வருத்தப்படுத்துவதில்லை; நான் உங்களுடையதையல்ல, உங்களையே தேடுகிறேன்; பெற்றாருக்குப் பிள்ளைகளல்ல, பிள்ளைகளுக்குப் பெற்றார்களே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்க வேண்டும். ஆதலால், நான் உங்களில் எவ்வளவு அதிகமாய் அன்புகூருகிறேனோ அவ்வளவு குறைவாய் உங்களால் அன்பு கூரப்பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாய் நான் உங்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும், செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன்” (2 கொரி. 12:14-15).
2 கொரிந்தியர் முழுவதையும் வாசித்துப்பாருங்கள். 2 கொரிந்தியர் நிருபத்தை அப்போஸ்தலனாகிய பவுலின் சுய-வரலாறு என்று சொல்லுகிறார்கள். வேறு எந்தக் கடிதத்திலும் பவுல் தன்னைப்பற்றி இவ்வளவு அதிகமான விவரங்களைத் தெரிவிக்கவில்லை. பொதுவாக பவுல் தன்னை மறைத்துக்கொள்கிற மனிதன். இங்கு மட்டும்தான் அவர் தன்னைப்பற்றி நிறைய காரியங்களைப் பேசிவிட்டு, “நான் புத்தியீனமாய்ப் பேசுகிறேன்; நான் என்னைப்பற்றி நிறையக் காரியங்கள் பேசினதால் நான் முட்டாளைப்போல் பேசுகிறேன்,” என்று சொல்லுகிறார். “நான் இப்படிச் சொல்லியிருக்கக் கூடாது. ஆனால், நான் இவ்வளவு சொல்லக்கூடிய அளவுக்கு நீங்கள் என்னை ஆளாக்கிவிட்டீரகள். அப்படிப்பட்ட நிலைமைக்கு நீங்கள் என்னைத் தள்ளிவிட்டீர்கள்,” என்று சொல்கிறார். “நான் உங்களை வருத்தப்படுத்துவதில்லை…நான் உங்களில் எவ்வளவு அதிகமாய் அன்புகூருகிறேனோ அவ்வளவு குறைவாய் அன்புகூரப்பட்டிருந்தாலும் மிகவும் சந்தோஷமாய் நான் உங்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும், செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன்,” என்று சொல்லுகிறார்.
தேவனுடைய மக்கள் சட்டத்தின்படி வாழ்வதில்லை; வாழக்கூடாது. “உங்கள் ஆத்துமாக்களுக்காக நான் செலவுபண்ணவும் விரும்புகிறேன், செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன்,” என்று பவுல் கூறுகிறார். செலவுபண்ணுவது என்றால் நான் தீர்மானிப்பது; செலவுபண்ணப்படுவது என்றால் நான் தீர்மானிப்பதல்ல. செலவுபண்ணுவது என்று சொல்லும்போது நான் பணத்தைப்பற்றிச் சொல்லவில்லை. ஒருவனுடைய உழைப்பு, நேரம், மற்ற வளங்கள் எல்லாம் அடங்கும். அவையெல்லாவற்றையும் எடுத்துச் செலவழிப்பதற்கு அவன் தன்னை அர்ப்பணித்திருக்க வேண்டும்.
ஒரு கணவனைப் பொறுத்தவரை, அவன் மனைவியும் அவன் பிள்ளைகளும் அவனைச் செலவுபண்ணுவதை, அவனுக்குரியதை எடுத்துச் செலவழிப்பதற்கு அவன் தன்னை அர்ப்பணித்திருக்க வேண்டும். மனைவியும் அப்படியே அர்ப்பணித்திருக்க வேண்டும். சகோதரர்கள் மற்ற சகோதரர்களுக்காகச் செலவழிப்பதற்குத் தீர்மானித்திருக்க வேண்டும்; அவர்களால் செலவழிக்கப்படவும் விட்டுக்கொடுக்க வேண்டும்.
செலவழிப்பது என்பது திட்டமிட்டு என்றால் செலவழிக்கப்படுவது என்பது திட்டமிடாமல். திட்டமிட்டுச் செலவழிப்பதற்கு மட்டுமல்ல, திட்டமிடாமல் நம்மைச் செலவழிக்க விட்டுவிடுவதற்கும் நாம் ஆயத்தமாயிருக்க வேண்டும்; மனமுவந்து விட்டுக்கொடுக்க வேண்டும்.
நாம் செலவழிக்கவும் வேண்டும், செலவழிக்கப்படவும் வேண்டும். சகோதரர்களுக்கிடையேயுள்ள வழக்குகளைப்பற்றி 1 கொரிந்தியர் 6ஆம் அதிகாரத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் பேசுகிறார். “பரிசுத்தவான்களே, உங்களில் ஒருவனுக்கு வேறொருவனோடே வழக்குண்டானால், வழக்காடும்படி நீங்கள் பரிசுத்தவான்களிடத்தில் போகாமல், அந்த வழக்குகளை எடுத்துக்கொண்டு நீதிமன்றத்துக்குச் செல்கிறீர்கள்; அவிசுவாசிகளிடத்தில் செல்கிறீர்கள். நீதிமன்றத்தில் நீதிபதிகள் யார்? அவர்கள் அவிசுவாசிகள். அது உங்களுக்குத் தோல்வி. உங்கள் வழக்குகளை நியாயம்விசாரிப்பதற்கு ஞானம் உள்ளவன் உங்களுக்குள் ஒருவன்கூட இல்லையா? இரண்டு சகோதரருக்கு ஒரு வழக்கு இருக்கிறதென்றால் இன்னொரு சகோதரனிடத்திற்குச் செல்லுங்கள். ‘எங்களுக்கு இப்படி ஒரு வழக்கு இருக்கிறது. இது என் கருத்து. அது அவருடைய கருத்து. நீங்கள் என்ன சொல்லுகிறீர்களோ அதற்கு நாங்கள் கீழ்ப்படிகிறோம்’ என்று சொல்லுங்கள். இதற்கு ஒரு வழக்கறிஞரிடம் போக வேண்டுமா?” என்று கேட்கிறார். இப்படிச் செய்வதுகூட சட்டப்படி வாழ்வதுதான்.
மூன்று தளங்கள்: முதல் தளம், வழக்குகளை எடுத்துக்கொண்டு அவிசுவாசிகளிடம் போவது; இரண்டாவது தளம், வழக்குகளை எடுத்துக்கொண்டு சகோதரர்களிடம் போவது; மூன்றாவது தளம், நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக்கொள்ளக் கூடாது?
மனைவியோ அல்லது கணவனோ அல்லது பெற்றோர்களோ அல்லது பிள்ளைகளோ உங்களுக்குச் செய்வது அநியாயம் என்று நீங்கள் கருதினால் சகித்துக்கொள்ளுங்கள். ஏன்? “நீங்களே மற்றவர்களுக்கு அநியாயம் செய்கிறீர்கள்,” என்று பவுல் சொல்லுகிறார். நாம் மற்றவர்களுக்கு அநியாயமே செய்யாத ஆள் என்று நினைத்துக்கொள்ளக் கூடாது. கணவன் மனைவிக்கு அநியாயம் செய்வதில்லையா? மனைவி கணவனுக்கு அநியாயம் செய்வதில்லையா? பெற்றோர்கள் பிள்ளைகளுக்கும், பிள்ளைகள் பெற்றோர்களுக்கும், சகோதர சகோதரிகள் ஒருவருக்கொருவரும் அநியாயம் செய்வதில்லையா? நாம் மற்றவர்களுக்கு அநியாயமே செய்யாத ஆள்போல நாம் மற்றவர்களைக் குறை சொல்லிக்கொண்டிருக்கக்கூடாது.
முதலாவது நாம் நம் பொறுப்புகளைச் சுமக்க வேண்டும். அடுத்து, இன்னொரு காரியமும் இருக்கிறது; அதாவது, அது என் பொறுப்பல்ல. ஆனால், அது என் தலைமேல் சுமத்தப்படுகிறது. நான் அதையும் சுமக்கும்போது அதுதான் இரண்டாவது மைல் நடப்பதாகும்.
இப்படி வாழ்கிற குடும்பம் பாக்கியமான குடும்பம். இது குடும்பத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்; சபையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இரண்டும் ஏறக்குறைய ஒன்றுதான். குடும்பம் என்பது குறுவடிவத்திலுள்ள சபை; சபை என்பது விரிவான வடிவிலுள்ள குடும்பம்.
நான் என் பொறுப்புகளை நிறைவேற்றாமல் அவைகளை என் மனைவிமேல், என் பிள்ளைகள்மேல், என் கணவன்மேல், என் சகோதர சகோதரிகள்மேல் நான் சுமத்துகிறேன் என்றால் நான் குழந்தை என்று பொருள். பொதுவாக குழந்தைகள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றமாட்டார்கள். ஆவிக்குரிய குழந்தைப் பருவத்திலிருக்கிற சகோதர சகோதரிகள் நம்மிடையே எப்போதும் இருப்பார்கள். “தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்” (மத். 25:11). போதுமான தகப்பன்மார்களும் அந்தக் குடுமபத்தில் இருக்க வேண்டும். குழந்தைகளுடைய எண்ணிக்கை அதிகமாகவும் தகப்பன்மார்களுடைய எண்ணிக்கை குறைவாகவும் இருந்தால் அங்கு இரண்டாவது மைல் நடப்பதற்கு ஆட்கள் இருக்கமாட்டார்கள். அப்போஸ்தலனாகிய யோவான் சொல்வதுபோல் “பிள்ளைகள்” “வாலிபர்கள்” “பிதாக்கள்” எப்போதும் இருப்பார்கள் (1 யோவான் 2: 12-13).
மூன்றாவது, தேவனுடைய மக்கள் பரிசுத்த ஆவியினால் நடக்க வேண்டும். “எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்” (ரோமா; 8:14). அதற்கு முந்தின வசனம்: மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள். ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்* (ரோமர் 8:13). பரிசுத்த ஆவியானவர் எப்போதுமே நம் மாம்சத்துக்குரிய, உலகத்துக்குரிய, சுயத்துக்குரிய, இயற்கைக்குரிய எல்லாவற்றையும் சிலுவைக்குட்படுத்துவார்.
தேவனுடைய மக்களுடைய அளவுகோல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து; அவர்கள் நடக்கிற வழி சிலுவையின் வழி; அவர்களை நடத்துகிற ஆசான், ஆசிரியர் பரிசுத்த ஆவியானவர் . அவர் நம்மை எப்போதுமே தொடர்ச்சியாக சிலுவையின் வழியில்தான் நடத்துவார். ஆனால், சிலுவையின் வழி என்பது ஏமாந்துபோகிற வழி என்று நீங்கள் நினைத்துக்கொள்ள வேண்டாம். யோசுவா 9ஆம் அதிகாரத்திலுள்ள சம்பவம் உங்களுக்குத் தெரியும். கிபியோனின் குடிகள் பூசணம்பூத்த அப்பத்தையும், பீறலும் பொத்தலுமான பழைய திராட்சைரசத் துருத்திகளையும், கிழிந்துபோன ஆடைகளையும், தேய்ந்துபோன மிதியடிகளையும் போட்டுக்கொண்டு வந்து தாங்கள் அதிக தூரத்திலிருந்து வருவதாகச் சொன்னார்கள். அவர்கள் பக்கத்திலிருந்துதான் வந்தார்கள். ஆனால், பொய் சொன்னார்கள். அதை நம்பி யோசுவா அவர்களுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொள்கிறான். இது நமக்கு எச்சரிக்கை. இதன் பொருள் யார் என்ன கேட்டாலும் “இவன் கிதியோனின் குடியாயிருப்பானோ?” என்று சந்தேகக் கண்ணோடு பார்க்கவேண்டிய தேவையில்லை. ஆனால், எல்லாக் காரியங்களும் சிலுவையின் வழி அல்லது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் அன்பு என்கிற பெயரில் நாம் ஏமாந்துவிடக் கூடாது.
நான் மாணவனாக இருந்தபோது “நீ கிறிஸ்தவனல்லவா?” என்று சொல்லியே என்னிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துக்கொண்டுபோய்விடுவார்கள். மாணவப் பருவத்தில் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட எல்லாருக்கும் இந்த அனுபவம் உண்டு. பரிசுத்த ஆவியானவர் நடத்துகிறபடி ஞானத்தோடு நாம் செயல்பட வேண்டும்.
இன்று நான் பகிர்ந்துகொண்ட காரியங்களின் சுருக்கத்தை மீண்டும் ஒருமுறை சொல்லுகிறேன்.. நாம் நம் குடும்பத்தின் உறவைக் கட்டியெழுப்ப வேண்டும். தேவனுடைய மக்களிடையேயுள்ள உறவைக் கட்டியெழுப்ப வேண்டும். இந்த உலகத்து மக்களோடுகூட தேவனை அவர்களுக்குக் காண்பிக்கும் வண்ணம் நம் உறவைக் கட்டியெழுப்ப வேண்டும்.
ஒன்று, நம் அளவுகோல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து; எந்தச் சட்டமோ அல்லது சட்டவாதமோ அல்ல. தேவனுடைய மக்களுடைய அளவுகோல் சட்டமல்ல. தேவனுடைய மக்களுடைய அளவுகோல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. அவர்தான் தேவனுடைய இருதயத்தையும், மனதையும், குணத்தையும் முற்றுமுடிய, முழுமையாக, நிறைவாக ஊனுருவில் வெளிப்படுத்தினார். அவர் எப்போதும் நமக்குக் கிடைக்கிறார். எப்போதெல்லாம் நாம் அவரை நோக்கிப் பார்க்கிறோமோ அப்போதெல்லாம் அவர் எப்படிப்பட்டவர் என்று நாம் அறிந்துகொள்வோம்.
இரண்டாவது, தேவனுடைய மக்களின் வழி சிலுவையின் வழி. நம்முடைய பொறுப்புகளை மட்டும் அல்ல. பிறருடைய பொறுப்பும் நம்மேல் சுமத்தப்பட்டால் இன்முகத்தோடு ஏற்றுக்கொள்வதற்கு நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும்; நம் இருதயம் விசாலமாக இருக்க வேண்டும். தேவனுடைய மக்கள் இதை யோசித்துப்பார்க்க வேண்டும். என்னுடைய பொறுப்புகளை வேறு யாராவது சுமப்பதற்கு நான் விட்டுவிடுவேனென்றால் நாம் அதைக் குறித்து அச்சப்பட வேண்டும். “ஆண்டவரே, இது என்னுடைய பொறுப்பல்லவா, அப்படியிருக்க நான் இதை மற்றவர்கள் தோள்மேல் எப்படி சுமத்துவது?” “அவனவன் தன்தன் பாரத்தைச் சுமப்பானே” (கலா. 6:5) என்று பவுல் சொல்லுகிறார். “ஏற்கெனவே, சகோதர சகோதரிகளுக்கு அவரவருக்குரிய பாரம் உண்டு. இவர்களுக்கு நான் இன்னும் கூடுதலாகப் பாரத்தை வைக்க விரும்பவில்லை.” நாம் ஒவ்வொருவரும் நம் பாரத்தோடுகூட இன்னொரு பாரத்தை எடுத்துக்கொள்ள ஆயத்தமாக இருக்கிறோம் என்றால் நம் குடும்பமும், சபையும் எவ்வளவு ரம்மியமாக இருக்கும்!
நாம் எல்லாரும் சேர்ந்து ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். ஒவ்வொருவரும் கொஞ்சம் செலவழிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், தேவனுடைய பிள்ளைகள் எல்லாரிடமும் செலவழிக்க வசதி இல்லை? அந்த வசதி பணமோ, நேரமோ, உழைப்போ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அப்படியானால் என்ன செய்யலாம்? சிலரால் தங்கள் பாரத்தைச் சுமக்க முடியாமல் போகலாம். அப்போது, முடிந்த சகோதரர்கள் தங்கள் பொறுப்பை மட்டும் சுமப்பதோடுகூடச் சேர்த்து குறைந்தது இன்னொரு சகோதரனுடைய பாரத்தைச் சுமப்பதற்கு தங்கள் இருதயத்தை விசாலமாக்க வேண்டும். அப்போது சமநிலைப் பிரமாணத்தின்படி தாராளம் இருக்கும். ஆனால், எல்லாருமே, “நான் என்னுடைய பாரத்தையும் இன்னொருவருடைய பாரத்தையும் சுமப்பதற்கு என் இருதயத்தை விசாலமாக்கிவிடுகிறேன்,” என்றால் இப்படிப்பட்ட தேவனுடைய மக்களின் கூடுகையும், ஐக்கியமும், குடும்பமும் எவ்வளவு நலமாக இருக்கும்!
2 கொரிந்தியர் 7, 8, 9ஆம் அதிகாரங்களை நீங்கள் வாசித்துப் பாருங்கள். 2 கொரிந்தியர் 8:2, 3 தேவனுடைய மக்களின் குடும்பத்தையும், சபையையும் நடத்துகிற விளக்காக இருக்க வேண்டும். “அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள். மேலும் அவர்கள் தங்கள் திராணிக்குத் தக்கதாகவும், தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுக்கத் தாங்களே மனதுள்ளவர் களாயிருந்தார்கள் என்பதற்கு நான் சாட்சியாயிருக்கிறேன்.”
இதற்குப் பெயர் இரண்டாவது மைல். இரண்டாவது மைல் மத்தேயு 5:41இல் இருக்கிறது என்று நீங்கள் நினைத்துக்கொள்ள வேண்டாம். புதிய ஏற்பாடு முழுவதும் இரண்டாவது மைல் இருக்கிறது. முழு வேதாகமத்திலும் இரண்டாவது மைல் இருக்கிறது.
ஏனென்றால் இது தேவனுடைய குணம். அவர்கள், மக்கதோனியர்கள், மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், பரிபூரண சந்தோஷத்தினாலே, மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள். இந்த வசனத்தின் ஆழத்தை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதிலுள்ள பெயரடைமொழிகளை எடுத்துவிட்டு இந்த வசனங்களை வாசித்துப் பாருங்கள். அப்போது அந்த வசனங்கள், “அவர்கள் உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் சந்தோஷத்தினாலே, உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்,” என்று இருக்கும். ஆனால், வசனம் இப்படிச் சொல்லப்படவில்லை. அவர்கள் வெறுமனே உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில் என்று சொல்லாமல் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில் என்றும், தரித்திரமுடையவர்களாயிருந்தும் என்று சொல்லாமல் கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும் என்றும், சந்தோஷத்தினாலே என்று சொல்லாமல் பரிபூரண சந்தோஷத்தினாலே என்றும், உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள் என்று சொல்லாமல் மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
சகோதர சகோதரிகளை எந்த அளவுக்குச் சந்திக்க முடியுமோ அந்த அளவுக்கு நீங்கள் சந்தியுங்கள். எந்த அளவுக்குச் சந்திக்கிற வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு உருவாக்கிக்கொள்ளுங்கள். “நான் மிகுந்த உபத்திரவப்படுகிறேன்” என்று நீங்கள் சொன்னால், அதுதான் 2 கொரிந்தியர் 8:2 என்று நான் சொல்வேன். “கொடிய தரித்திரம்; ஆனால், அந்தச் சமயத்தில் நான் இன்னொரு சகோதரனுக்குச் செலவழிப்பது என்று தீர்மானித்து விட்டேன்.” அதையும் பரிபூரண சந்தோஷத்தினாலே செய்ய வேண்டும். அதற்கு அடுத்த வசனம்: மேலும் அவர்கள் தங்கள் திராணிக்குத்தக்கதாகவும், தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க மனதுள்ளவர்களாயிருந்தார்கள். ஒரு மைல் நடப்பது என் திராணிக்குத் தக்கது. இரண்டு மைல் நடப்பது என் திராணிக்கு மிஞ்சியது. திராணிக்கு மிஞ்சி செய்யலாமா? யாரோ ஒருவர் வசனத்தைச் சொல்லித் தாக்கி தாக்கி, சொல்லிச் சொல்லி நாம் செலவழிப்பதல்ல. தாங்களே மனதுள்ளவர்களாயிருந்தார்கள்.
சிலர், “நான் ஊழியம் செய்யப்போகிறேன்; சுவிசேஷம் அறிவிக்கப்போகிறேன்,” என்று சொல்வார்கள். ஆனால், அவருடைய குடும்பத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே பயங்கர உரசல்கள் இருக்கும். அங்கு மகிழ்ச்சியில்லை. இப்படிப்பட்ட ஆள் சுவிசேஷ ஊழியம் செய்யப் போகவேண்டாம். “ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?” (1 தீமோ. 3:5). ஒருவனுக்குத் தலைமைப் பொறுப்பைக் கொடுக்கலாமா அல்லது முன்னின்று நடத்துகிற பொறுப்பைக் கொடுக்கலாமா என்று தீர்மானிக்கும்முன் முதலாவது அவனுடைய குடும்பத்தைப் பார்க்க வேண்டும். அவன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் விசாரிக்கிறவனாக இருக்க வேண்டும்.
ஆகவே, தேவனுடைய அருமையான பரிசுத்தவான்களே, பரிசுத்த ஆவியானவர் நம்முடைய நல்ல ஆசான், ஆசிரியன், போதகன். “நான் உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” (சங். 32:8). அல்லது 1 யோவான் 2:27இல் சொல்லப்பட்டுள்ளதுபோல, “நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது; ஒருவனும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையும் குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல. அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக.” பரிசுத்த ஆவியானவர் அப்படிப்பட்ட ஆசான். சமயத்திற்கேற்ப, நாம் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று அறிவுறுத்துகிற, உணர்த்துகிற, நடத்துகிற, போதிக்கிற ஒரு நல்ல போதகர் நமக்கு உண்டு. ஆகவே, நாம் உறவுகளைக் கட்டியெழுப்புகிற மக்களாய் வாழ்வோம்.