Transcribed from a message spoken in December 03, 2006 in Chennai
By Milton Rajendram
சுவிசேஷத்தை முதலாவது கேள்விப்படுகிறவர்கள் அதை மிகவும் சுலபமாகப் புரிந்துகொள்வார்கள். இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் பாவ மன்னிப்பைப் பெறுவதோடு நின்றுவிடுவதில்லை; அவர்கள் தேவனுடைய ஜீவனையும் பெற்றுக்கொள்கிறார்கள். சுவிசேஷத்தின் இந்த ஒரேவொரு உண்மையை நாம் மற்றவர்களுக்குச் சொன்னால்கூட அவர்களுடைய வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படும். நாம் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும்போது, தேவனுடைய ஜீவனைப் பெறுகிறோம். எனவே, இயேசு கிறிஸ்து நம்முடைய வாழ்க்கையில் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட ஆரம்பிக்கிறார். இதற்குமுன் கிறிஸ்துவின் உணர்வுகள் நம்மிடத்தில் இருந்ததில்லை. ஆனால், இப்போது இயேசு கிறிஸ்துவின் மென்மையான உணர்வுகள் அல்லது நுட்பமான உணர்வுகள் நம்மிடத்தில் இருக்கின்றன அல்லது தோன்ற ஆரம்பித்திருக்கின்றன. இயேசு கிறிஸ்துவின் எல்லா உணர்வுகளுக்கும் நாம் ஒருவேளை மறுமொழி கொடுக்காமல் போகலாம். ஆனால், முக்கியமாக, “இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதற்குமுன் என்னிடத்தில் இப்படிப்பட்ட உணர்வுகள் இருந்ததில்லை. இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தபின் என்னிடத்தில் இப்படிப்பட்ட உணர்வுகள் தோன்ற ஆரம்பித்திருக்கின்றன,” என்று நம்மில் பலர் சாட்சிசொல்ல முடியும். அதுதான் தேவனுடைய ஜீவன்.
எந்த அளவுக்கு நமக்கு வேதாகமத்தைப்பற்றிய அறிவு இருக்கிறது என்பது என்னைப்பொறுத்தவரை ஆரம்பத்தில் அவ்வளவு முக்கியம் இல்லை. நாம் தேவனுடைய ஜீவனைப் பெற்றிருப்பதால் நாம் கிறிஸ்துவின் உணர்வுகளைப் பெறுகிறோம் என்பது ஒரு மாபெரும் பொக்கிஷம். இதை நாம் விலையேறப்பெற்றதாகக் கருத வேண்டும்.
இந்தப் பூமியில் அநேகர் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கவில்லை. எனவே, அவர்களுக்கு இப்படிப்பட்ட உணர்வு இல்லை அல்லது வந்ததில்லை. ஒருவர் இப்படிச் சொன்னார். “என் படுக்கைக்குக்கீழே பல நாட்களாக சில அழுகிய பழங்கள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். இது உண்மையிலேயே சங்கடமான காரியம். ஏனென்றால், அழுகின நாற்றம் அறை முழுவதும் வீசுகிறது. ஆனால், இது பரவாயில்லை. ஏனென்றால், என் அறையில் இருக்கும் அந்த துர்நாற்றத்தை என்னால் முகர முடிந்தால் அதுவே ஒரு விதத்தில் ஆசீர்வாதம்தான். ஆனால், அழுகின பழம் படுக்கைக்குக்கீழே இருப்பதும், அறைமுழுவதும் நாற்றம் இருப்பதும் தெரியாமல் மக்கள் பரிதாபமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்களே!” என்று அவர் சொல்லுகிறார். இதுபோல, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்காத மக்களுக்கு அவருடைய உணர்வுகள் இல்லை. அவரை விசுவாசிப்பவர்களுக்கு மட்டுமே இந்த உணர்வுகள் வருகின்றன.
நாற்றத்தை முகர்ந்தபின் நாம் அறையைச் சுத்தம் செய்ய வேண்டும். அது அடுத்த காரியம். சுத்தம் செய்வது ஒருபுறம் இருக்கட்டும்; அசுத்தமான சில காரியங்கள் என் வீட்டில், என் அறையில், இருக்கின்றன என்பதை நாம் உணர்வதே சாட்சிதான். இது பரிசுத்த ஆவியானவர் தருகிற உணர்வு.
என்னுடைய புரிந்துகொள்ளுதலின்படி, கிறிஸ்தவ வாழ்க்கையை அல்லது கிறிஸ்துவை வாழ்வதை ஒரு வாக்கியத்தில் சுருக்கமாகக் கூறலாம் என்று நான் நினைக்கிறேன். பரிசுத்த ஆவியானவரின்படி நடப்பதே கிறிஸ்தவ வாழ்க்கை. ரோமர் 8:14, கலாத்தியர் 5:16, 21 ஆகிய மூன்று வசனங்கள் கிறிஸ்துவை வாழ்வது என்றால் என்னவென்பதை ஒரு வாக்கியத்தில் விளக்குகின்றன. walking according to the Spirit or walking by the Spirit or walking after the Spirit. பரிசுத்த ஆவியானவரின்படி நடத்தல் அல்லது பரிசுத்த ஆவியானவரைப் பின்பற்றி நடத்தல் அல்லது பரிசுத்த ஆவியானவரால் நடத்தல் இதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை.
“வேதாகமத்திலிருந்து எனக்கு நிறைய கட்டளைகள் தெரியாது,” என்று சிலர் சொல்லலாம். தெரியாவிட்டால் பரவாயில்லை. நமக்குள் தேவனுடைய ஜீவன் இருக்கிறது. நமக்குள் பரிசுத்த ஆவியானவர் வாசம்பண்ணுகிறார். இந்தப் பரிசுத்த ஆவியானவர் நமக்கு தேவனுடைய உணர்வுகளைத் தருகிறார் அல்லது கிறிஸ்துவின் உணர்வுகளைத் தருகிறார். இந்தப் பரிசுத்த ஆவியானவர் நமக்குத் தருகிற கிறிஸ்துவின் உணர்வுகளின்படி, தேவனுடைய ஜீவனின் உணர்வுகளின்படி, நடப்பதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை.
ஒரு விதத்தில் சொல்வதானால், கிறிஸ்தவ வாழ்க்கை மிகவும் எளிமையானது. கிறிஸ்தவ வாழ்க்கையின் அற்புதம் என்னவென்றால் பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும், நிறைய காரியங்கள் தெரியாமல் இருக்கும்போதே நாம் இயேசு கிறிஸ்துவை வாழ முடியும். பல சமயங்களில் தேவன் முதலாவது நமக்கு அனுபவத்தைத் தருகிறார். பரிசுத்த ஆவியானவர் நம்மை ஒரு அனுபவத்திற்குள் நடத்துகிறார். பிறகு, அவர் அந்த அனுபவத்தை, “இதுதான் உங்களுக்கு நடைபெற்றது,” என்று நமக்கு விளக்குகிறார். அப்போஸ்தலர் நடபடிகளில் எல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிறைகிறார்கள். பிறகு பேதுரு அதை விளக்குகிறார். “இந்த அனுபவம்தான் யோவேல் தீர்க்கதரிசி சொன்ன காரியம்,” என்று அவர் விளக்குகிறார்.
“முதலாவது அனுபவம் வரும், அதைத் தொடர்ந்து விளக்கம் வரும்,” என்று இதை ஒரு சட்டமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அப்படியல்ல. இன்னொருவர், “முதலாவது விளக்கம் வரும், அதைத் தொடர்ந்துதான் அனுபவம் வரும்,” என்று சொல்வார். அப்படியும் அல்ல. இன்னொருவர், “அது 50 விழுக்காடு, இது 50 விழுக்காடு,” என்பார். இவைகளெல்லாம் வீணானவை.
கிறிஸ்தவ வாழ்க்கையின் அற்புதமான பகுதி என்னவென்றால் நாம் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் பரிசுத்த ஆவியானவர் நமக்குள் கிரியைசெய்துகொண்டிருக்கிறார். ‘பெலிஸ்தர்கள் வந்துவிட்டார்கள்’ என்று தெலில்லாள் சொன்னவுடன் சிம்சோன் ‘கர்த்தர் என்னைவிட்டுப் போய்விட்டாரோ’ என்று நினைக்கக்கூடிய அளவுக்கு நாம் மிகத் தாழ்வான நிலையில் இருந்தாலும்கூட பரிசுத்த ஆவியானவர் நம்மில் கிரியைசெய்துகொண்டிருக்கிறார். “நான் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்” (சங்கீதம் 23). மரண இருளின் பள்ளத்தாக்கில் இருக்கும்போது ‘தேவரீர் என்னோடுகூட இருக்கிறீர’; என்று யாராவது தேவனுக்கு நன்றி சொல்வார்களா என்று எனக்குத் தெரியாது. மரண இருளின் பள்ளத்தாக்கு என்றால் என்னவென்று ஒருவர் இப்படிச் சொன்னார்: முன்னால் பார்த்தால் இருள், பின்னால் பார்த்தால் இருள், மேலே பார்த்தால் இருள், கீழே பார்த்தால் இருள், இடது பக்கம் பார்த்தால் இருள், வலது பக்கம் பார்த்தால் இருள், எங்கு பார்த்தாலும் இருள். இதுதான் மரண இருள். இந்த இருளில் நடந்தால் நமக்கு ஒரேவொரு எண்ணம்தான் வரும். ‘தேவரீர் என்னோடுகூட இருக்கிறீர்’ என்ற எண்ணம் வராது. ‘தேவரீர் நீர் எங்கே இருக்கிறீர்?’ என்ற எண்ணம்தான் வரும். ’ஆண்டவரே. நீர் என்னுடன்கூட இருக்கிறீரா?” என்று சில சமயங்களில் நான் முட்டாள்தனமாக ஜெபித்ததுண்டு. சில சமயங்களில் நான் முட்டாள்தனமாக சில அடையாளங்களையும் கேட்டதுண்டு. தேவன் நம் பக்திவிருத்தியையும், முதிர்ச்சியையும், முழு வளர்ச்சியையும்குறித்து சர்வ ஜாக்கிரதையாக அல்லது வைராக்கிய வாஞ்சையாக இருப்பார்.
அடிக்கடி நாம் தேவனுடைய ஜீவனைப்பற்றிப் பேசுவதால், கேள்விப்படுவதால் நாம் அதை மேலோட்டமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. தேவனுடைய பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து எருசலேமுக்குக்குக் கொண்டுவரும்போது ஒரு புது இரதத்தில் ஏற்றினார்கள். அபினதாபின் குமாரர்களாகிய ஊசாவும் அகியோவும் அந்த இரதத்தை ஓட்டிக்கொண்டு வருகிறார்கள். உடன்படிக்கைப் பெட்டியை வண்டியில் வைத்துக்கொண்டுவரும்போது நாகோனின் களத்தருகே வந்தபோது மாடுகள் மிரண்டு பெட்டி அசைந்து கீழே விழப்போனதுபோது ஊசா பெட்டியைத் தாங்கிப்பிடிக்கிறான். கர்த்தர் அவனை அங்கே அடித்தார். அவன் அங்கே பெட்டியினருகில் செத்தான். “கர்த்தர் இப்படிச் செய்துவிட்டாரே” என்று தாவீதுக்கு மிக விசனமாயிருந்தது. “இது நம்ம பெட்டிதானே! நம்ம வீட்டில்தானே பெட்டி வெகு நாளாயிருக்கிறது! அதை எப்படிக் கொண்டுபோனால் என்ன?” என்ற மனப்பாங்கு. இது தேவனுடைய காரியங்களில் பரிச்சயம்! தேவனைப்பற்றி ஏதாவது ஒரு காரியத்தைத் தேவனுடைய பிள்ளைகளிடம் சொல்லும்போது, “இதுதான் எங்களுக்குத் தெரியுமே!” என்பதுதான் அவர்களுடைய பதில். இதுதான் பரிச்சயம்.
ஒருமுறை ஒரு சகோதரியிடம், “கிறிஸ்து மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்,” என்று சொன்னோம். உடனே அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? “இதுதான் எனக்குத் தெரியுமே!” என்று சொன்னார்கள். இதுதான் பரிச்சயம்! இந்தப் பரிச்சயம் என்கிற காரியம் நம்முடைய திருமண வாழ்க்கைக்குப் பொருந்தும். முதலில் கணவன் விலையேறப்பெற்றவராகத் தெரிவார். மனைவி விலையேறப்பெற்றவராக இருப்பார். சில வருடங்களுக்குப்பின் காரியங்கள் தலைகீழாகிவிடும். காரணம் பரிச்சயம்! இப்பேர்ப்பட்ட பரிச்சயத்தைக்குறித்து நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
“நாம் தேவனுடைய ஜீவனைப் பெற்றிருக்கிறோம்” என்று சொன்னால், “இது எங்களுக்குத் தெரியாதா?” என்பார்கள். “மனிதனுக்கு ஆவி உண்டு?” என்று சொன்னாரல், “இது எங்களுக்குத் தெரியாதா?” என்பார்கள். சில காரியங்களை நாம் அடிக்கடிப் பேசுவதால் அல்லது அடிக்கடிக் கேள்விப்படுவதால் அதை நாம் உடைமையாகப் பெற்றிருக்கிறோம் என்ற அவசியம் இல்லை. ஒருவேளை அதுதான் மிகப் பெரிய வஞ்சகமாக இருக்கக்கூடும். நாம் அதைக்குறித்து அடிக்கடி பேசுகிறோம், கேள்விப்படுகிறோம். எனவே அது நம் உடைமை என்று நாம் நினைக்கிறோம். ஆனால், நிஜத்தைப் பொறுத்தவரை அது உண்மையல்ல. இப்படிப்பட்ட வஞ்சகமே மிகக் கொடிய வஞ்சகமாக இருக்கக் கூடும். மற்றவர்கள் நம்மைப் பார்க்கும்போது இன்றோ அல்லது நாளையோ அது அம்பலமாகிவிடும். இதைப் பகுத்துணர்வது கடினம்.
நாம் தேவனுடைய ஜீவனைப் பெற்றிருக்கிறோம். தேவன் தம்முடைய ஜீவனை நமக்குள் வைத்திருக்கிறார் என்பது சாதாரணமான காரியம் அல்ல. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஓர் உவமையில் இப்படிச் சொல்லுகிறார். ஒருவன் தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, ஒரு பொக்கிஷத்தை வாங்குகிறான். தேவனுடைய பார்வையிலே நாம் அவருக்குப் பொக்கிஷம். நம்முடைய பார்வையிலே தேவன் நமக்கு அதைவிடப் பெரிய பொக்கிஷம். தேவன் தம்முடைய குமாரனை சிலுவை மரணத்தினூடாய் அனுப்பி நமக்கு அளித்திருக்கிற பொக்கிஷம் தேவனுடைய ஜீவன்.
விதைப்பின் காலத்தில் ஒருவன் ஒரு விதையை விதைக்கிறான். அதிலிருந்து 50 கனிகளும் வர முடியும் அல்லது 100 கனிகளும் வர முடியும், அது 50 அடி உயரத்துக்கும் வளர முடியும் அல்லது 100 அடி உயரத்துக்கும் வளர முடியும் என்று வைத்துக்கொள்வோம். அப்படியிருக்க, அது குறைந்தபட்ச உயரத்துக்கு வளர்ந்து, குறைந்தபட்ச கனிகள் தந்தவுடன் எந்த விவசாயியும் திருப்பதியடைந்துவிட மாட்டான். ‘இந்த அளவுக்காவது வளர்ந்ததே’ என்று அவன் திருப்தியடையமாட்டான்.
தேவன் பரிசுத்த ஆவியானவரைக்குறித்துப் பரவசம் அடைகிறார். தேவன் இதைப்பற்றியெல்லாம் குளிர்ந்தநிலையில்தான் இருக்கிறார் என்று நாம் நினைக்கலாம். இல்லை. நம்மில் ஒரு துளிரைப் பார்க்கும்போது நம் பிதாவானவர் பரவசம் அடைகிறார். தங்கள் பிள்ளைகள் முதல் அடி எடுத்து வைத்து நடக்கும்போது அந்தப் பெற்றோர்கள் அடைகிற பரவசத்தைப் பார்க்க வேண்டுமே! “ஊரிலுள்ள எல்லாப் பிள்ளைகளும்தான் நடக்கின்றன. உன் பிள்ளை மட்டும்தான் நடக்கிறதா?” என்று யாராவது சொல்லும்போது அவர்களுடைய மகிழ்ச்சி குறைந்துபோகுமா? போகாது. அதுதான் பெற்றோரின் இருதயம். நம்முடைய சகோதர சகோதரிகள் கோணிக்கோணி நடக்கலாம். ஆனால், உங்களிடம் ஒரு தகப்பனின் இருதயம் இருந்தால் அவர்களுடைய வளர்ச்சியைப் பார்த்து நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். பரிசுத்த ஆவியானவருடைய ஏதோவோர் உணர்வு அவர்களுக்குள் வரும்போது நீங்கள் பரவசமடைவீர்கள்.
ஒருவர் “பிதாவே, எங்களை உம்முடைய குமாரனுடைய சாயலுக்கு ஒத்த சாயலாக வேண்டும் என்று முன்குறித்திருக்கிறீரே. அதற்காக உமக்கு நன்றி,” என்று ஜெபிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். “உங்களுக்கு இது எப்படித் தெரியும்? இதன் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். “கொஞ்ச நாட்களுக்குமுன் கேட்ட ஞாபகம். ஆனால், இதன் அர்த்தம் என்னவென்று தெரியாது,” என்று பதில் சொல்லுகிறார். அர்த்தம் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. பரிசுத்த ஆவியானவர் நினைப்பூட்டுவார். புரியாவிட்டாலும் பரவாயில்லை. 5 அல்லது 10 வருடங்களுக்குப் பிறகாவது பரிசுத்த ஆவியானவர் புரியவைப்பார்.
என்னைப் பொறுத்தவரை இப்படிப்பட்டவர் தத்தித்தத்தி நடந்துகொண்டிருக்கிறார் என்று பொருள். இந்தக் குழந்தை பரிசுத்த ஆவியானவருக்கு மறுமொழி கொடுக்கிறது. தகப்பனின் இருதயம் இதைப் பார்த்து பூரிக்கிறது; ஆனால், நீதிபதியின் இருதயமோ தீர்ப்பு வழங்கும். “எட்டு மாதத்தில் பக்கத்து வீட்டுக் குழந்தை நடக்கவே ஆரம்பித்துவிட்டது; நீ 10 மாதத்தில் இப்போதுதான் முதல் அடி எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறாய்,” என்று அந்த இருதயம் கிண்டல்செய்யும். சில சமயங்களில் நாம் நம் பிள்ளைகளைப் பக்கத்துவீட்டுப் பிள்ளைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து, “பக்கத்துவீட்டுப் பிள்ளை என்னமாதிரி ஜெபம் பண்ணுகிறான்” என்று வியப்பதுண்டு. “கர்த்தராகிய இயேசுவே, நான் உம்மை நேசிக்கிறேன். நீர் எனக்கு வேண்டும்,” என்று ஜெபித்துவிட்டு அவர்களே சிரித்துக்கொள்வார்கள். ஏனென்றால், “இந்த ஜெபத்தைத்தான் கடந்த 5 வருடங்களாக ஜெபித்துக்கொண்டிருக்கிறோம்,” என்று அவர்களுக்குத் தெரிகிறது. நான் சொல்லுகிறேன் “பரவாயில்லை”. ஏன் தெரியுமா? ஜெபம் பண்ணுகிறார்களே!
நாம் எந்தச் சூழ்நிலையில் இருக்கிறோமோ அந்தச் சூழ்நிலைக்கு பரிசுத்த ஆவியானவர் நிச்சயமாக இறங்கிவந்து ஒரு தாய் அல்லது ஒரு தகப்பன் தன் பிள்ளையை வளர்ப்பதுபோல் வளர்க்கிறார். உடல்ஊனமுற்ற குழந்தைகளை அந்தப் பெற்றோர் வளர்ப்பதைப் பார்க்க வேண்டும். இருதயம் இளகிவிடும்.
அவர் தேவன். அவர் நம் தகப்பன். ஒரு தகப்பன் தன் பிள்ளையை நடத்துவதுபோல பரிசுத்த ஆவியானவர் நமக்குக் கல்விபுகட்டுகிறார், நம்மைப் பயிற்றுவிக்கிறார், சிட்சிக்கிறார், நடத்துகிறார்.
“எவர்கள் தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரர்களாயிருக்கிறாரர்கள்,” என்று ரோமர் 8;14இல் நாம் வாசிக்கிறோம். அவர் எப்போதும் நம்மை நடத்துவதற்கு ஆயத்தமாயிருக்கிறார். காலைக் கண்விழித்ததுமுதல் இரவு தூங்கப்போவதுவரை அவர் நம்முடைய ஒவ்வொரு படியிலும் 24 மணிநேர வழிகாட்டியாக இருக்கிறார். இப்போது GPS பற்றி சொல்லுகிறார்கள். காரில் வைத்துவிட்டு, போகவேண்டிய இடத்தைச் சொன்னால் போதும் அல்லது தேவையான விவரங்களை அதில் போட்டால் போதும். அது நாம் போக வேண்டிய இடத்துக்கு நமக்கு வழிகாட்டுமாம், சரியாகக் கொண்டுசெல்லுமாம். “நேரே செல், இடது பக்கம் திரும்பு, வலது பக்கம் 50 கி.மீட்டர் செல்லவும்” என ஒருவர் நேரில் பேசுவதுபோல் நடத்துமாம்.
பரிசுத்த ஆவியானவரே மிகச் சிறந்த GPS. அவர், “பெரிய பெரிய பரிசுத்தவான்களை நடத்துவார். என்னை நடத்துவாரா?” என்று நாம் நினைக்கக்கூடும். நடத்துவார். காலையில் கண்விழித்ததுமுதல் இரவு தூங்கப்போகிறவரை பரிசுத்த ஆவியானவர் என்னை நடத்துவதைப்பற்றியெல்லாம் யோசிப்பாரா என்று நாம் நினைக்கலாம். பரிசுத்த ஆவியானவர் நம்மை உணர்த்துவார். தகப்பன் என்ற முறையிலும், ஆசிரியர் என்ற முறையிலும் அவர் நமக்குப் போதிப்பார், நினைப்பூட்டுவார். நாம் அவருக்கு மாறுத்தரம் கொடுக்காத நேரத்திலும்கூட அவர் நம்மை நடத்துவார். நினைப்பூட்டுவார். தேவனுடைய பிள்ளைகள் எல்லாரையும் நடத்துவதற்காக அவர் வைராக்கிய வாஞ்சையுடன் இருக்கிறார். நம்முடைய ஆவியில் அவர் இருக்கிறார்.
இன்னும் ஒரு குறிப்பை நான் சொல்ல விரும்புகிறேன். பரிசுத்த ஆவியானவர் நம்மை ஒவ்வொரு படியிலும் நடத்துகிறார். நான் பெரிய காரியங்களைச் சொல்லவில்லை. நான் எந்தக் கல்லூரியில் படிக்க வேண்டும், என்ன படிக்க வேண்டும், யாரைத் திருமணம் செய்ய வேண்டும், எந்த ஊரில் வேலை பார்க்க வேண்டும், என்ன வேலை பார்க்க வேண்டும் போன்ற பெரிய காரியங்களை நான் சொல்லவில்லை. அவர் நடத்துதல் எப்படி இருக்கும் என்றால் காப்பி குடித்துவிட்டு அதே இடத்தில் டம்ளரை வைப்பது, அதை அலசிவைப்பது, ஒரு குப்பையைப் பார்க்கும்போது அதை எடுப்பது போன்ற சிறிய காரியங்களிலும் நம்மை நடத்துவார். நான் ஓர் எடுத்துக்காட்டு தருகிறேன். அங்கு குழம்பு சிந்தியிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். “யார் அந்தக் குழம்பைச் சிந்தியது?” என்று கேட்டுவிட்டுச் சென்றுவிடலாம் அல்லது நானே ஒரு துணியை எடுத்துக்கொண்டு வந்து அதைத் துடைக்கலாம் அல்லது துடைத்துவிட்டு எதுவும் நடக்காததுபோல் செல்வதுபோன்ற சிறிய காரியமாகக்கூட இருக்கலாம். நம்முடைய வாழ்க்கை இப்படிப்பட்ட சிறிய காரியங்களால் நிறைந்திருக்கிறது. நான் பரிசுத்த ஆவியானவரின் நடத்துதலைப்பற்றிச் சொல்லுகிறேன். இந்தக் காரியங்கள் உங்களுக்கு அற்பக் காரியங்களாகத் தோன்றலாம்.
கிதியோனின் சேனையைப் பரிசுத்த ஆவியானவர் எப்படித் தெரிந்தெடுத்தார் என்று பாருங்கள். கிதியோன் சேனையில் சேர வந்தவர்களைத் தண்ணீரைக் குடிக்கச் சொல்லுகிறான். அவர்கள் எப்படித் தண்ணீரைக் குடிக்கிறார்கள் என்று பார்த்து, அதிலிருந்து சேனையைத் தெரிந்தெடுக்கிறார். அந்தச் சிறிய பரீட்சையின்மூலம் 10000 பேரை 300 பேராகக் குறைத்துவிடலாம். இது சிறிய காரியமா அல்லது பெரிய காரியமா என்பது ஒரு பொருட்டல்ல. பரிசுத்த ஆவியானவருடைய நடத்துதலை நாம் உன்னிப்பாகக் கவனித்தால், நாம் அவருக்குப் பதிலளித்தால், சிறிய சிறிய காரியங்களிலெல்லாம் அது வெளிப்பட ஆரம்பிக்கும். ஆனால், அது நமக்குக் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்.
“மாம்சத்தின்படி வாழ்ந்தால் சாவீர்கள்; ஆவியினாலே மாம்சத்தின் செயல்களை அழித்தால் வாழ்வீர்கள்” என்று ரோமர் 8:13 சொல்லுகிறது. பரிசுத்த ஆவியானவர் எப்போதுமே சிலுவையைப் பிரயோகிப்பார். பரிசுத்த ஆவியானவரின் நடத்துதலை நாம் பின்பற்ற வேண்டும் என்றால் அங்கு சிலுவை இருக்கும். அவர் சிலுவையைப் பிரயோகிப்பார். அது நம்முடைய மாம்சத்தின் கிரியைகளின்மேல் செயல்படுத்தப்படும். “அவர் குமாரனாயிருந்தும் பட்ட பாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்” (எபிரேயர் 5:8). இயேசு கிறிஸ்து எதற்காகப் பாடநுபவிக்க வேண்டும்? அவரிடத்தில் ஏதாவது பாவம் இருந்ததா? அவரிடத்தில் எந்தப் பாவமும் இல்லை. ஆனால், குமாரத்துவம் என்ற நிலையை எட்டுவதற்கு அல்லது குமாரத்துவம் என்ற முழு வளர்ச்சிக்கு நம்மை நடத்துவதற்கு பரிசுத்த ஆவியானவரின் நடத்துதலிலே எப்போதுமே சிலுவை உண்டு; பாடுகள் என்ற பாடங்கள் உண்டு. “இரட்சிப்பின் அதிபதியாகிய அவர் உபத்திரவங்களினாலே பூரணராக்கப்பட்டார்” என்று எபிரேயர் 2இலும், “அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்தார்” என்று எபிரேயர் 12இலும் நாம் வாசிக்கிறோம்.
எனவே, அருமையான சகோதா சகோதரிகளே, ஒவ்வொருநாளும் தேவன் நம்மைக் குமாரர்களாக வளர்த்துக்கொண்டிருப்பது மிகவும் அற்புதமானது. இது தேவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. நமக்கும் இது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. “பரிசுத்த ஆவியானவரைப் பின்பற்றுவதானால் அவர் சிலுவையைப் பிரயோகிப்பார் என்றால் நான் ஒன்றும் அப்படி குமாரனாக வாழ விரும்ப வில்லை,” என்று சிலர் சொல்லலாம். அவர்கள் உடனே கணக்குப்போட ஆரம்பிப்பார்கள். “வெறுமனே அவருடைய பிள்ளையாக இருப்பதில் ஏதாவது நட்டம் இருக்கிறதா? பிள்ளையாகவே இருந்தால் அந்தப் பாடுகள் கிடையாது அல்லவா? அதனால் நான் பிள்ளையாகவே இருந்துவிடலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்,” என்று சொல்லலாம். அதன் விளைவுகள் என்ன? மிகவும் எளிமையானது. 10, 20, 30, 40, 50 வருடங்கள் கழித்து ஒருவனுடைய வாழ்க்கையில் நிறைய கதறல்கள் இருக்கும். இன்னொருவனுடைய வாழ்க்கையில் கொஞ்சக் கதறல்களே இருக்கும்.
இது அற்புதமானது. ஒரு தாய் தன் பிள்ளையின் முழு வளர்ச்சியைப்பார்த்து எவ்வளவாய் மகிழ்ச்சியடைகிறாள்! அதுபோல தேவன் நம்மைப் பார்க்கும்போது, “இவன் அல்லது இவள் என் நேச குமாரன் அல்லது நேச குமாரத்தி. இவனில் அல்லது இவளில் நான் எவ்வளவாய் பூரிப்படைகிறேன்,” என்று அகமகிழ்கிறார்.
சிலர் கல்லூரியில் படிக்கும்போது ஒரு சிறிய மரக்கன்றை நட்டியிருப்பார்கள். 10 வருடம் கழித்துப் பார்ப்பார்க்கும்போது, அது பெரிய மரமாக வளர்ந்திருக்கும். என்னே மகிழ்ச்சி!
தேவன் நமக்குள் கிறிஸ்துவை விதைத்திருக்கிறார். அவர் வருகையில் அல்லது நாம் அவரைச் சந்திக்கும்போது, “ஓ! அவர் 30, 60, 100ஆக வளர்ந்திருக்கிறார். நான் அவனில் அற்புதமான கிறிஸ்துவைப் பார்க்கிறேன்! நான் அவனில் மிகவும் களிகூருகிறேன்,” என்பதைக் கேட்பதைப்போல் இன்பமானது வேறு என்ன உண்டு? தேவனுக்கும் இல்லை, நமக்கும் இல்லை.
பரிசுத்த ஆவியானவர் உண்மையுள்ளவர். அவருக்கு நாம் மாறுத்தரம் கொடுக்காவிட்டாலும்கூட அவர் தொடர்ந்து நம் வாழ்வில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். அவர் நம்மில் பொறுமையாயிருக்கிறார். இது என் முடிவுரை. தேவன் நம்மில் ஆரம்பித்திருக்கிற இரட்சிப்பைப் பூரணப்படுத்துவதற்காக பரிசுத்த ஆவியானவர் உண்மையும் உத்தமமுமாய் நம்மில் வேலைசெய்துகொண்டிருக்கிறார்.
தேவன் இந்த வார்த்தைகளை நம் இருதயத்துக்குள் எழுதுவாராக. ஆமென்.