Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

பரிசுத்த ஆவியானவரின் வேலை

Transcribed from a message spoken in June, 2013 in Chennai

By Milton Rajendram

“சத்திய ஆவியானவர் வரும்போது, அவர் உங்களை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவார். அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ் சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்” (யோவான் 16:13-14)

‘சத்திய ஆவியானவர் வரும்போது உங்களை நடத்துவார் அல்லது வழிநடத்துவார்.’ இரண்டாவது பகுதி, ‘அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு வெளிக்காண்பிப்பார். அதனால் அவர் என்னை மகிமைப்படுத்துவார்.’ 

இரட்சிப்பின் பொக்கிஷம்

நாம் பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பதுதான், பரிசுத்த ஆவி நமக்குள் வாசம்செய்கிறார் என்பதுதான், இரட்சிப்பினுடைய மாபெரும் பொக்கிஷம். இது ஓர் எளிய உண்மை. என்றைக்கு நாம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டோமோ, அன்றைக்கு நாம் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டோம். இது ஓர் எளிய உண்மை. ஆனால், இந்த உண்மைகூட பெரிய தாக்குதலுக்கு உள்ளாகும். “நீங்கள் எப்படி பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டீர்கள்? பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டதால் அது நடந்ததா? இது நடந்ததா? பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொண்டீர்களா? பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக்கொண்டீர்களா? இதை வேதாகமத்திலிருந்து நிரூபிக்க முடியுமா?” அது எனக்குத் தெரியாது. இது உண்மை. எப்படித் தெரியும்? எங்களுக்குத் தெரிந்த சகோதரர்கள் சொன்னார்கள். வேதம் அப்படிச் சொல்லுகிறது. நாம் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தபோது பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வந்தார்.

பரிசுத்த ஆவியானவரின் வேலை

இந்தப் பரிசுத்த ஆவியானவருடைய வேலை என்ன? யோவான் 16:13-14தான் அவருடைய வேலை. பரிசுத்த ஆவியானவருக்கு ஒரேவொரு வேலை மட்டுமே உண்டு. இயேசுகிறிஸ்துவை நமக்குக் காண்பிப்பதே அவருடைய வேலை. அவர் சகல சத்தியத்துக்குள்ளும் உங்களை வழிநடத்துவார் என்று சொல்லியிருக்கிறதே. வேதாகமத்தில் நிறைய சத்தியங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவர் வரப்போகிற காரியங்களை அறிவிப்பார் என்றும் 13ஆம் வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இது ரொம்ப சுவாரஸ்யமான விஷயமாக இருக்கிறது. இன்றைக்கு என்ன நடக்கும்? நாளைக்கு என்ன நடக்கும்? அடுத்த வருடம் என்ன நடக்கும்? அதற்குப்பின் எனக்கு என்ன நடக்கப்போகிறது? உங்களுக்கு என்ன நடக்கப்போகிறது? இது சுவாரஸ்யமான விஷயம் இல்லையா? இன்னும் 5 வருடம் கழித்து உங்களுக்கு என்ன நடக்கும் என்று எனக்குச் சொல்லத் தெரிந்தால் என் பின்னால் எவ்வளவு பெரிய கூட்டம் வரும்? அவர் உங்களை சகல சத்தியத்துக்குள்ளும் நடத்துவார். சத்தியம் என்றால் அது இயேசுகிறிஸ்துவே. அவர் … ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துதான் சத்தியம். அவர் இந்த வேலையைச் செய்து முடித்திருக்கிறார். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து யார்? அவர் செய்து முடித்திருக்கிற வேலை என்ன? இதனுடைய எல்லா விதமான அம்சங்களுக்கும் பரிசுத்த ஆவியானவர் நம்மை நடத்துவார்.

கிறிஸ்துவை அறிதல்

கலாத்தியர் 1:16: “தேவன் தம்முடைய குமாரனை எனக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்தபோது….” தம்முடைய குமாரனாகிய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைத் திரைநீக்கிக் காண்பிப்பதே தேவனுக்கு இன்பமான வேலையாகும். இதைச் சொன்னால் சிலர், “ஆ! இதுதான் எனக்குத் தெரியுமே!” என்பார்கள். குழந்தைகளிடம் எதைப்பற்றியாவது பேசும்போது, உடனே அந்தக் குழந்தை, “அதுதான் எனக்குத் தெரியுமே!” என்று சொல்லும். “அதற்கு இப்படி ஓர் அர்த்தம் இருக்கிறதே,” என்று நாம் சொன்னால், “அதுவும் எனக்குத் தெரியுமே” என்று அந்தக் குழந்தை சொல்லும். “சரி, அதில் இன்னொரு மென்மையான அம்சம் இருக்கிறதே தெரியுமா?” என்றால் “அதுவும் எனக்குத் தெரியுமே,” என்று சொல்லும். எதைப்பற்றிப் பேசினாலும், “அது எல்லாம் எனக்குத் தெரியும். எனக்குத் தெரியாதது எதுவுமே கிடையாது,” என்ற தொனியில் பேசும்.

ஆனால், அப்போஸ்தலனாகிய பவுல் தன் வாழ்க்கையின் கடைசிக் கட்டத்துக்கு வந்தபிறகுகூட, “என்னுடைய நெஞ்சின் பெரிய ஏக்கம் என்னவென்றால் அவரை அறிவதே,” என்று பிலிப்பியர் 3:8, 10இல் கூறுகிறார். கிறிஸ்துவை வாழ்க்கை முழுவதும் வாழ்ந்து முடித்து வாழ்க்கையின் இறுதியில் இருக்கும் அவர் தம்முடைய ஏக்கம் அவரை அறிவதுதான் என்று கூறுகிறார். அப்படியானால் இவ்வளவு நாள் அவர் கிறிஸ்துவை அறியவில்லையா? அறிந்திருந்தார். ஆனால், இந்தக் கிறிஸ்துவை அறிந்து தீர்த்துவிடவே முடியாது. எபேசியர் 3ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. “நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும், விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி நிலைபெற்றவர்களாகி சகல பரிசுத்தவான்களோடுகூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து…” இது ஒரு பெரிய ஜெபம். பரிசுத்த ஆவியானவர் உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படுத்துவது எதற்கென்று கேட்டால் கிறிஸ்துவினுடைய அகலம், நீளம், ஆழம், உயரம் ஆகியவைகளை அறிவதற்காக, தமிழ் வேதாகமத்தில் அவருடைய அன்பின் அகலம், நீளம், ஆழம், உயரம் ஆகியவைகளை அறிவதற்காக என்று எழுதியிருக்கிறது. அப்படி ‘அன்பின்’ என்று வாசித்தாலும் தவறில்லை. ஆனால் ஆங்கில வேதாகமத்தில் அவருடைய அகலம், நீளம், ஆழம், உயரம் ஆகியவைகளை அறிவதற்காக என்று இருக்கிறது. அப்படி வாசித்தாலும் அது தவறில்லை.

இயேசுகிறிஸ்து ஒரு மாபெரும் பொருள். அவருடைய பரிமாணங்களை அறிந்துகொள்வதற்காக அப்போஸ்தலனாகிய பவுல் எபேசுவிலுள்ள பரிசுத்தவான்களுக்காக ஜெபித்தார். பரிசுத்த ஆவியானவருடைய வேலை என்னவென்று கேட்டால் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து எப்பேர்ப்பட்ட நபர், அவருடைய வேலை என்ன என்ற வெளிச்சத்துக்குள் அவர் நம்மை நடத்துவார். இதைக் காண்பிப்பதுதான் பரிசுத்த ஆவியானவருடைய வேலை. இது ரொம்ப சுவாரஸ்யமான வேலை இல்லாததுபோல் நமக்குத் தோன்றலாம். “அவ்வளவுதானா? உப்புச்சப்பு இல்லாததுபோல் இருக்கிறதே!” உண்மையிலேயே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து எப்பேர்ப்பட்ட நபா; என்று பரிசுத்த ஆவியானவருடைய வேலையின்மூலமாக, பரிசுத்த ஆவியானவருடைய உதவியின்மூலமாக, வெளிப்பாட்டின்மூலமாக, பிரகாசிப்பதின்மூலமாக நமக்குக் காண்பிப்பாரென்றால் இதைப்போன்ற ஒரு மாபெரும் வெளிச்சம் இந்தப் பூமியில் வேறொன்றும் இருக்க முடியாது. இந்தப் பூமியில் இது ஒரு மாபெரும் வெளிச்சம்.

இதற்கு ஓர் எடுத்துக்காட்டு சொல்லவா? ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஒரு பெரிய தேசம் மாதிரி. இந்தத் தேசத்தில் நிறைய பொக்கிஷங்கள் இருக்கின்றன. இந்தப் பரந்த தேசத்தில் இருக்கும் பொக்கிஷங்களை நாம் இன்னும் ஆராய்தறியவே இல்லை. இன்னும் சொல்லப்போனால் நாம் ஆராய்ந்தறிய ஆரம்பிக்கக்கூட இல்லை. இன்னும்கூட ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் ஆராயந்தறியாத பெருவாரியான பகுதிகள் இருக்கின்றன. நித்தியத்தில்கூட நாம் என்னதான் செய்து கொண்டிருப்போம்? அவரை அறிந்துகொண்டுதான் இருப்போம். இதுவரை ஆராய்ந்தறியாத ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் சில பகுதிகளை நாம் இன்னும் ஆராய்ந்துகொண்டிருக்கிறோம். இது புத்தக ஆராய்ச்சி இல்லை, அனுபவரீதியில் நாம் ஆராய்ந்துகொண்டிருப்போம்.

கிறிஸ்துவே நிரப்பீடு

இதற்கும் என் வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு? ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து எப்பேர்ப்பட்டவர் , அவர் என்ன செய்துமுடித்திருக்கிறார் என்பதை நாம் அறிவோமானால் நம்முடைய வாழ்க்கையின் எல்லாத் தேவைகளுக்கும் அவர் நிரப்பீடாக, திருப்தியாக இருப்பார். நம்மெல்லாருக்கும் சின்ன சின்ன ஏக்கங்கள் இருக்கும். சிலரைக் கேட்டால், “நல்ல வருமானமுள்ள வேலை வேண்டும்” என்று சொல்வார்கள். இது எல்லா வாலிபரிடமும் இருக்கிற ஏக்கம். இந்த ஏக்கத்தை நிறைவேற்றுவதற்கு நாம் அவனுக்கு ஒரு வழிமுறை சொல்லிக்கொடுத்தால் நம் பின்னால் ஒரு மாபெரும் கூட்டம் வரும். ஏனென்றால், இதுதான் அவனுடைய உடனடித் தேவை. திருமணம் முடிக்கும் தருவாயில் உள்ளவர்களுக்கு “எப்படி ஒரு நல்ல திருமணம் முடிப்பது?” என்று சொல்லிக்கொடுத்தால் அதற்கும் ஒரு பெரிய கூட்டம் வரும். ஏனென்றால், அதுதான் அவர்களுடைய உடனடித் தேவை. அதுபோல் இயேசுகிறிஸ்துவின் ஆராய்ந்தறியமுடியாத .. ஒன்றேவொன்று சொல்ல முடியும். நம்முடைய பெரிய தேவைகளுக்கு மட்டும் இல்லை. நம் அனுதின வாழ்க்கையின் சிறிய தேவைகளுக்கும்கூட இயேசு கிறிஸ்து யார், அவர் என்ன செய்து முடித்திருக்கிறார் என்பதை நாம் அறிந்தால் அவர் போதுமானவராயிருக்கிறார்.

மனம் புதிதாக்கப்படுதல்

ஆனால், பரிசுத்த ஆவியானவர் இதை அவ்வளவு எளிமையாகச் செய்ய முடியவில்லை. இதற்கு என்ன காரணம்? இவ்வளவு பெரிய பொக்கிஷத்தைக் கொண்டிருக்கிறோம். எந்த வாழ்க்கைக்கும் அது போதுமானது. ‘இதை சாமர்த்தியசாலிகள்தான் உணர்ந்தறிவார்கள், சாதாரணமான மக்கள் உணர்ந்தறியமாட்டார்கள்,’ என்று சொல்ல முடியாது. இதை யார்தான் செய்ய முடியும்? பரிசுத்த ஆவியானவர் மட்டுமே இதை நம் வாழ்க்கையில் செய்ய முடியும். ஒவ்வொருநாளும், நாட்கள்பின் நாட்களாக, மாதத்தின்பின் மாதமாக, வருடத்தின்பின் வருடமாக நாம் இன்னும் அவரை அறியாத அம்சத்துக்குள் பரிசுத்த ஆவியானவர் நம்மை நடத்துவார். இயேசுகிறிஸ்து யார், அவர் என்னென்ன வேலை செய்துமுடித்திருக்கிறார் என்பதை அறிய வரும்போது, “இப்படிப்பட்ட ஓர் அற்பமான காரியத்துக்காகவா நான் வாழ்ந்துகொண்டிருந்தேன்?” என்று எண்ணத் தோன்றும். சமாதானம் இல்லாத நிறைவில்லாத வாழ்க்கை! இயேசுகிறிஸ்துவினுடைய வேலையின் அம்சம் நமக்குத் தெரியவரும்போது நம்முடைய ஆசைகள், ஏக்கங்கள், கொந்தளிப்புகள் மிகவும் அற்பமானவைகளாகத் தோன்றும். “இது தெரியாததால் நான் கொந்தளித்துக்கொண்டிருந்தேன்” அது தெரிந்தபிறகு மற்றவை அற்பமாகத் தோன்றும்.

ஆனால், இதைச் செய்வதற்குப் பரிசுத்த ஆவியானவர் நீண்டகாலம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து யார், அவர் என்ன செய்து முடித்திருக்கிறார் என்பதை அறிய நீண்டகாலம் தேவைப்படுகிறது. இதற்குக் காரணம் என்ன? நம்முடைய மனம். அது ஒரு பெரிய எதிரி. பரிசுத்த ஆவியானவர் இந்த வேலையைச் செய்யும்போது நம் மனதை அவர் கொஞ்சங்கொஞ்சமாகப் புதிதாக்குகிறார். ரோமர் 12:2ம், எபேசியர் 4:23ம் ஒரு முக்கியமான காரியத்தைப்பற்றிப் பேசுகின்றன. “உலகத்துக்கு ஒத்த வேஷம் தரியாமல்…உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” “உங்கள் மனதின் ஆவியிலே புதிதானவர்களாகி…”

மனம் புதிதாகுதல் என்ற ஒரு காரியம் வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது. இதைச் செய்பவர் யார்? “உங்கள் மனதின் ஆவியிலே புதிதானவர்களாகி” என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியானால் மனதைப் புதிதாக்கும் வேலையைச் செய்பவர் யார்? பரிசுத்த ஆவியானவரே இந்த வேலையைச் செய்கிறார். “மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.” மறுரூபமாக்கும் வேலையையும் யார்தான் செய்கிறார்? பரிசுத்த ஆவியானவர் தான் இந்த வேலையையும் செய்கிறார். 2 கொரிந்தியர் 3:18இல் சொல்லப்பட்டிருக்கிறது: “ஆவியாயிருக்கிற கர்த்தராலே அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.” நம் மனதைப் புதிதாக்குபவர் யார்? பரிசுத்த ஆவியானவர் . அவர் ஏன் நம் மனதைப் புதிதாக்குகிறார்? நம் மனதைப் புதிதாக்காமல் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து யார், அவர் என்ன செய்துமுடித்திருக்கிறார் என்று அவரால் நமக்குக் காண்பிக்க முடியாது. உண்மையில் சொல்லப்போனால், நம் மனம் புதிதாக்கப்படும்போதுதான் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து யார், அவருடைய அம்சங்கள் என்ன, பரிமாணங்கள் என்ன, பல கோணங்கள் என்னவென்று நாம் பார்க்க ஆரம்பிப்போம். அதன் விளைவாக நம் படிப்புக்காக, நம் வேலைக்காக, நம் திருமணத்திற்காக என்று நமக்கு என்னென்ன ஏக்கங்கள் இருக்கின்றனவோ அவைகளோடு தொடர்புபடுத்திப் பார்ப்போம்.. ஆசைகளுக்காக .. நிறைவேறாத ஆசைகளுக்காக.

உலகத்தின் சிந்தனை

நம் மனதைப் புதிதாக்கும் வேலையை மிகவும் மெல்ல மெல்லத்தான் செய்ய முடியும்.. நாம் யோசிக்கும் விதம் புதிதாக்கப்பட வேண்டும். நமக்குத் தெரியாது. ஒரு குறிப்பிட்ட போக்கில்தான் நம் சிந்தனை ஓட்டம் செல்லும். இது நம்மை அறியாமலே நடைபெறுகிறது. நம் சிந்தனையைத் தட்டிவிட்டால் போதும், அது ஒரு குறிப்பிட்ட போக்கில்தான் செல்லும். அதை beaten track or well-worn path என்று எப்படிச் சொன்னாலும் சரி. ஒரு குறிப்பிட்ட விதத்தில்தான் அது செல்லும். நான் மனோதத்துவம் பேசுவதாக எண்ண வேண்டாம். ரோமா; 12யை living Bibleஇல் வாசிக்கும்போது, “Don’t copy the customs and behavior of this world,” என்று கூறப்பட்டிருக்கிறது. தமிழில் “உலகத்துக்கு ஒத்த வேஷந்தரியாமல்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. எந்த விஷயத்தில் நாம் உலகத்தின் customs and behaviorயைப் பின்பற்றுகிறோம் என்றால் ரொம்ப முக்கியமாக நாம் சிந்திக்கும் விதத்தில். வெளிப்பிரகாரமாக நாம் காப்பி அடிக்க வேண்டிய அவசியமேயில்லை. பிறந்ததிலிருந்து இந்த உலகத்தின் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதால், நான் அதை osmosis என்று கூறலாம். இதை எப்படி வரையறுக்கலாம் என்றால் நம் கூட்டம், நம் நண்பர்கள், நம் பள்ளித் தோழர்கள், நாம் வாசிக்கிற புத்தகங்கள், நாம் கேட்கிற செய்திகள், செய்தித்தாள்கள்மூலமாக வரும் செய்திகள். அப்படி இந்த உலகத்தில் இருந்தாலே போதும் இந்த osmosisவழியாக இந்த உலகத்தின் சிந்தனை போக்கு நம்மை அறியாமலே எங்கே போகிறது? நம்மை அறியாமலே நமக்குள் செட்டாகிவிட்டது. அதை அப்படித் தொட்டாலே போதும், நம் சிந்தனைப்போக்கு அதன் போக்கில் கிர்றென்று ஓட ஆரம்பித்துவிடும்.

இப்போது நமக்குப் பணத்தைப்பற்றிய ஒரு சிந்தனை ஓட்டம் இருக்கிறது. வேலையைப்பற்றிய சிந்தனை ஓட்டம் இருக்கிறது. பணத்தைப்பற்றி நினைத்தவுடன் நம் மனம் அதன் சிந்தனை ஓட்டத்தில் தான் சுற்றிச்சுற்றி வரும். அதில் சுற்றிச்சுற்றி வரும்வரை பரிசுத்த ஆவியானவர் இயேசுகிறிஸ்துவின் நபரையும், அவருடைய வேலையையும்பற்றி நமக்குக் காண்பிக்க முடியாது.

நீதிமொழிகள் 21:1 இப்படிக் கூறுகிறது: “ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப் போலிருக்கிறது. அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்.” விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? வயலில் நிறைய பாத்திகள் இருக்கும். பாத்திகளுக்கு நீர் பாய்ச்ச வாய்க்கால்கள் இருக்கும். வாய்க்கால்கள் ஓரம் வரப்புகள் இருக்கும். விவசாயி கையில் ஒரு மண்வெட்டி வைத்திருப்பார். ஒரு பாத்திக்குத் தண்ணீர் பாய்த்து முடித்தபிறகு, அந்தப் பகுதிக்குத் தண்ணீர் போவதை மண்ணால் தடுத்துவிட்டு, அடுத்த பாத்திக்குத் தண்ணீர் பாய்ச்ச வாய்க்காலைத் திறந்துவிடுவார். மேலே இருந்து பார்த்தால் எல்லா பாத்திகளுக்கும் தண்ணீர் பாய்ந்தோடுவதற்கு அங்கு ஒரு போக்கு இருக்கும். அந்தப் போக்கை முடிவு செய்வது விவசாயி. அதைத்தான் நீதிமொழிகள் 21:1இல் பார்க்கிறோம். அந்த விவசாயி யார்? கர்த்தர். அந்த நீர்க்கால்கள் நம்முடைய சிந்தனை ஓட்டம். எந்த நீர்க்கால்கள் வழியாக நம்முடைய எண்ணங்கள் ஓடுகின்றன என்று தீர்மானிப்பது கர்த்தர். இன்னும் பல பகுதிகளுக்குள் நம் எண்ணங்கள் ஓடினதேயில்லை.

கிறிஸ்துவே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறார்

ஓர் எடுத்துக்காட்டு சொல்லுகிறேன். யோவான் 11ஆம் அதிகாரம். இந்த நிகழ்ச்சி லாசரு இறந்தபிறகு நடக்கிறது. “உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான்” என்று இயேசு மார்த்தாளிடம் கூறினார். அதற்கு மார்த்தாள், “உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன்,” என்று கூறினாள். இயேசு அவளை நோக்கி, “நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறேன்,” என்றார். மனம் புதிதாக வேண்டும் என்பதற்கு இது இன்னும் ஒரு நல்ல அருமையான எடுத்துக்காட்டு. “உன் சகோதரன் உயிர்த்தெழுவான்,” என்று இயேசு கூறினார். உடனே, அவளுடைய எண்ணம் எப்படி ஓடுகிறது? ஓடிஓடி பழக்கப்பட்ட அந்தப் பாதையில், நடந்து நடந்து தேய்ந்துபோன அதே பாதையில் அவளுடைய எண்ணம் ஓடுகிறது. எப்படி? “உயிர்த்தெழுதல் என்ற ஒருநாள் உண்டு. அந்த நாள் கடைசி நாள். அந்த நாளில் எல்லாரும் உயிர்த்தெழுவார்கள். அப்போது என் சகோதரனும் உயிர்த்தெழுவான். இதுதான் அவளுடைய எண்ணம்.” எனவே தான், “உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன்,” என்று கூறினாள். அவளுடைய மனதில் இப்படிப்பட்ட எண்ணமும், சிந்தனையும்தான் உதிக்க முடியும்.

ஆனால், ஆண்டவர் ஒரு புதிய எண்ணத்தைக் கூறுகிறார். “நான் ஒரு நாளைப்பற்றிப் பேசவில்லை. உயிர்த்தெழுதல் என்பது ஒரு சம்பவம் இல்லை. உயிர்த்தெழுதல் என்பது ஒரு நாள் இல்லை. அது ஒரு நபர்,” என்று அவர் கூறினார். இயேசுகிறிஸ்துவாகிய நபர்தான் உயிர்த்தெழுதல். “நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறேன்” என்று அவர் கூறினார். இது உடனே மார்த்தாளுக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஏனென்றால், அவளுடைய மனம் ஏற்கெனவே ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. Fully loaded. எதைப்பற்றி? அண்ணனோ அல்லது தம்பியோ இறந்துவிட்டான். அது தொடர்பாக நிறைய கவலைகள் இருக்கும். இல்லையா? “சாப்பிடுவதற்கு என்ன செய்வது, எங்கே தங்குவது, எங்கே போவது, என்ன செய்வது”போன்ற பல கவலைகள் இருந்திருக்கும். “அதை எப்படிச் செய்வது? இதை எப்படிச் செய்வது” இப்படி முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்ட மனதில் இயேசு கிறிஸ்து சொன்னது பதியுமா? “நானே உயிர்த்தெழுதல்” என்று அவர் கூறுகிறார். அந்தச் சூழ்நிலையில் பரிச்சயமான எண்ணங்களைச் சொன்னாலே மனதில் பதியாது. அப்படியிருக்க ஆண்டவர் முற்றிலும் பரிச்சயமில்லாத ஓர் எண்ணத்தைப் பேசுகிறார். இது overhead transmission. இது தலைக்கு மேலேயே போய்விடும்.

எப்படியாவது பரிசுத்த ஆவியானவர் தேவனைப்பற்றிய காரியத்தில் நம் மனதைப் புதிதாக்க விரும்புகிறார். நாம் ஒரு மரண சூழலில் இருப்போம். “இதிலிருந்து மீள முடியாது” என்று எண்ணியிருப்போம். மரணம் என்றால் என்ன? மரணம் என்றால் முடிவு என்று பொருள். மரணத்துக்குள் போவது எதுவும் திரும்பி வராது. ஆனால், உயிர்த்தெழுதல் என்றால் என்ன பொருள்? மரணத்தினூடாய்ச் சென்று வெளியே வந்து மீண்டும் இருப்பதுதான் உயிர்த்தெழுதல். கூடவோ குறையவோ நாமெல்லாரும் மரணத்தின் சூழலினூடாய்ச் செல்வோம். நாம் யோசிப்போம். இரண்டுபேர் சொல்வார்கள், நண்பர்கள் சொல்வார்கள், கூடப்படிக்கிறவர்கள் சொல்வார்கள், “அதுதான் முடிவு” என்று .. பரிசுத்த ஆவியானவர் அந்தக் கோணத்தில் அல்லது அந்த யூகத்தில் இயேசுகிறிஸ்துவை நமக்குக் காண்பிப்பார். அவர் நிறைய பேசவில்லை. “நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறேன்,” என்று மட்டும் கூறினார். இவ்வளவுதான். அவர் பெரிய தெளிவுரையெல்லாம் கொடுக்கவில்லை. ரொம்ப உணர்ச்சிவசப்பட்டெல்லாம் பேசவில்லை. சாதாரணமாக, “நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறேன்,” என்று மட்டுமே கூறினார். அப்படிச் சொன்னதும் நாமும் உடனே, “ஆம், நீர்தான் உயிர்த்தெழுதல், நீர்தான் ஜீவன்” என்று சொல்லிவிடுவதில்லை. இதற்குத்தான் அவர் நீண்டநாள் எடுத்துக்கொள்கிறார். நம் மனதைப் புதிதாக்க, உயிர்த்தெழுதலே அங்கே இருக்கும்போது..

பணம் எல்லாருக்கும் தேவைப்படுகிறது. “பணம் எனக்குத் தேவையில்லை. எனக்கு எல்லாம் நிறைவாக இருக்கிறது,” என்று சொல்லக்கூடிய ஒரு மனிதனைக்கூட பார்க்க முடியாது. “கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார். ஆனால் எனக்கு இன்னும் பணம் அதிகமாகத் தேவைப்படுகிறது” இது சங்கீதம் 23. “கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார். நான் தாழ்ச்சியடையேன்.” இன்றைக்கு நான் திருப்தியாயிருக்கிறேன். இதற்குமேல் ஒரு நயாபைசா தேவையில்லை. இன்றைக்கு. இதற்கு அர்த்தம் உழைக்கக் கூடாது என்பதல்ல.

பரிசுத்த ஆவியானவர் எண்ணப்போக்கை மாற்றுகிறார்

மனம் புதிதாக்கப்படுதல் மிகவும் முக்கியம். கர்த்தரிடம் அதிகமாக ஜெபிக்க வேண்டும். “கர்த்தாவே, என் மனதைப் புதிதாக்கும். உம் எண்ணங்களையும், சிந்தனைகளையும், வார்த்தைகளையும் மட்டுமே யோசிக்கவும், பேசவும் நான் விரும்புகிறேன்.” இயேசுகிறிஸ்து சிந்திக்கிற சிந்தனைகளை நம்மால் எப்படி சிந்திக்க முடியும்? 1 கொரிந்தியர் 2:9 இப்படி கூறுகிறது: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை.” அது மனிதனுக்குத் தெரியவில்லை. அது அவனுடைய அறிவுக்கும் கற்பனைக்கும் அப்பாற்பட்டது. இப்படியான ஒன்றைச் செய்யத் தேவன் தீர்மானித்திருக்கிறார் என்பது அவனுடைய மனதில் உதிக்கக்கூட இல்லை. ஏன்? ஜென்மசுபாவமான மனிதனால் இப்பேர்ப்பட்ட காரிங்களைச் சிந்திக்கத் திராணி இல்லை. இந்த எண்ணங்களுக்குள் யார்தான் நம்மை நடத்த முடியும்? பரிசுத்த ஆவியானவரால்தான் நடத்த முடியும். இப்படிப்பட்ட ஒரு மண்டலம் இருக்கிறது என்றும், இந்த மண்டலத்தில் இயேசுகிறிஸ்து இப்படிப்பட்டவராக இருக்கிறார் என்றும் பரிசுத்த ஆவியானவர் நம்மை மெல்ல மெல்ல நடத்துவார். அவருடைய எண்ணப் போக்குகள் நம்மை வழி நடத்தும்.

பணம் என்ற எண்ண ஓட்டம், திருமணம் என்ற எண்ண ஓட்டம், வேலை என்ற எண்ண ஓட்டம், பொழுதுபோக்கு என்ற எண்ண ஓட்டம், பரிசுத்தம் என்ற எண்ண ஓட்டம்.. நம் எண்ணப் போக்குகள் சில பழையவைகள் என்று நமக்குத் தெரியும். தெரிந்தும் அதிலேயே இருப்போம். ஆனால், தெரியாதவை கணக்கிலடங்காது. இதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். “ஆண்டவரே என் பழைய எண்ணப் போக்கிலிருந்து என்னை விடுவியும். அதை எடுத்துப்போடும்,” என்று ஜெபிக்க வேண்டும். அந்த எண்ணப்போக்கு இருக்கும்வரை முழுவேதாகமத்தையும் அதன் எண்ணப்போக்கில்தான் நாம் வாசிப்போம். உன் சகோதரன் உயிர்த்தெழுவான்,” என்று சொன்னால், உடனே “அதுதான் எங்களுக்குத் தெரியுமே. வேதாகமத்தில் இருக்கிறதே,” என்று சொல்வார்கள்.

பரிசேயர்களின் வாய்ப்பாடு

பரிசேயர்களிடம் சில எண்ணப்போக்கு இருந்தது. ஒரு சில எண்ணப்போக்கு அவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தாது. ஒரு சில எண்ணப்போக்குகளை ஒன்றோடொன்று இணைத்து அதை ஒரு வாய்ப்பாடாக வகுத்துவிடலாம். Paradigm is like an object oriented program மாதிரி. இது மிகவும் harmful. சிறிய எண்ணப் போக்கிலிருந்து விடுதலை பெறுவது கஷ்டம் என்றால் பெரிய வாய்ப்பாட்டிலிருந்து விடுதலை பெறுவது மரித்து உயிர்த்தெழும் அனுபவத்தைப்போன்றது. பரிசேயர்கள் பெரிய வாய்ப்பாடு வைத்திருந்தார்கள். அந்த வாய்ப்பாட்டை எடுத்துக்கொண்டார்கள். அந்த வாய்ப்பாட்டின்படி உண்மையான மேசியா பொருந்தவில்லை. “இப்போது வாய்ப்பாட்டை ஒழிப்பதா அல்லது மேசியாவை ஒழிப்பதா?” மேசியாவை ஒழித்துவிடுவதென்று தீர்மானித்தார்கள். ஏன்? ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை வாய்ப்பாடுதான் உயர்ந்தது. ஏன்? நானூறு ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட வாய்ப்பாடு. “இந்த மேசியா நம் வாய்ப்பாட்டுக்கு ஒத்துப்போக மாட்டார். அவர் கதையை முடித்துவிடு.”

வாய்ப்பாடு என்றால் என்னவென்று சொல்லுகிறேன். பழையகாலத்தில் ஒரு நகரம் இருக்கும். அதற்கு வடக்கு வாசல், தெற்கு வாசல், கிழக்கு வாசல், மேற்கு வாசல் என்று நான்கு வாசல்கள் இருக்கும். ஓர் ஆளை சாயங்காலமோ அல்லது காலையிலோ தெற்கு வாசலுக்குக் கூட்டிக்கொண்டு போய், “அது தெற்கு வாசல் இல்லை, வடக்கு வாசல்,” என்று சாமர்த்தியமாகப் பேசி அவனை சம்மதிக்க வைத்துவிட்டால், அவன் உள்ளே நுழைந்தபிறகு அவன் எல்லாவற்றையும் எதைவைத்துத்தான் பார்ப்பான்? “நான் வடக்கு வாசலிலிருந்து வருகிறேன்” என்றுதான் நினைப்பான். “இப்போது எங்கே போய்க்கொண்டிருக்கிறேன்? தெற்கே போய்க்கொண்டிருக்கிறேன். அது கிழக்கு, இது மேற்கு.” இது முற்றிலும் தவறு. தான் வடக்கு வாசலிலிருந்து வருவதாக அவன் நினைத்துக்கொண்டால் அவன் சொல்வதெல்லாம் சரிதான். ஆனால், நம்மால் அதைப் புரிந்துகொள்ள முடியாது.

வாய்ப்பாடு என்பது ஒரு வரைபடம் போன்றது. இது டில்லி வரைபடத்தை வைத்துக்கொண்டு சென்னையில் ஒரு தெருவைத் தேடுவதைப்போன்றது. கண்டுபிடிக்கவே முடியாது. ஆனால் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ சில சாலைகள் அப்படியே அந்த வரைபடத்தில் இருப்பதைப்போலத் தோன்றலாம். இது கொஞ்சம் தைரியத்தையும், நம்பிக்கையும் அதிகரிக்கும். ஆம். இது அங்கு உள்ள சாலையைப்போலவே இருக்கிறது. நாம் ஆண்டவரிடம் ஜெபிக்க வேண்டும். “ஆண்டவரே, என் பழைய எண்ண ஓட்டத்திலிருந்து, போக்கிலிருந்து, என்னை இரட்சியும்.” அவர் உண்மையிலேயே உள்ளே அவர் செய்வார். பல சமயங்களில் பரிசுத்த ஆவியானவர் செய்வதற்கு என்ன தேவை என்றால் வெளியே சில சூழ்நிலைகள் அவசியம். நம்முடைய பழைய எண்ண ஓட்டத்தை அவ்வளவு சீக்கிரமாக விட்டுவிடுவோமா? நம் பிரிய எண்ண ஓட்டம், இருபது வருடங்களாக, முப்பது வருடங்களாக இந்தத் தடத்தில் ஓடி ஓடி நமக்கு மிகவும் பரிச்சயமாகிவிட்டது. அதை விடுவதற்கு நமக்கு மனம் வரவே வராது. அந்த எண்ணப் போக்கை ஒழிப்பது சிலுவையாக இருக்கும். இப்படி யோசிப்பது கிறிஸ்துவுக்குரியது இல்லை. இது கிறிஸ்துவின் மனம் இல்லை. பரிசுத்த ஆவியானவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தைப் பிரயோகிப்பார். வெளியே சூழ்நிலைகளை உருவாக்குவார்.

ஆவிக்குள்ளாதலும், சூழ்நிலைகளும்

அப்போஸ்தலனாகிய யோவான் எபேசுவில் மூப்பராக இருந்தார். அப்போது ஒரு சூழ்நிலை உருவானது. அவர் பத்மு தீவுக்கு நாடுகடத்தப்பட்டார். பத்மு தீவில் அவர் எதைப் பார்த்தார்? நியாயத்தீர்ப்புச் செய்யும் மனித குமாரனைப் பார்க்கிறார்; ஏழு சபைகளைப் பார்க்கிறார்; அவைகளுடைய உண்மையான நிலைமைகளைப் பார்க்கிறார்; இந்த உலகத்தின் முடிவையும் அவர் பார்க்கிறார். திருவெளிப்பாட்டில் அடிக்கடி வரக்கூடிய வார்த்தை என்னவென்று கேட்டால் “நான் ஆவிக்குள்ளானேன்.” தேவனுடைய நித்திய இலக்கைக் காட்டுகிறார். “ஆவியானவர் என்னைப் பெரிதும் உயரமுமான மலையின்மேல் நிறுத்தினார்.. புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரம் தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக் கண்டேன்.”

இதை எதற்குச் சொல்லுகிறேன் என்றால், சில சமயங்களில் நம் சிந்தனையின் ஓட்டத்தை, நம் சிந்தனை செல்லும் போக்கை, புதிதாக்க ஆவிக்குள்ளானால் மட்டும் போதாது. வசதியான, சௌகரியமான இடத்தைவிட்டு நம்மை நாடுகடத்த வேண்டும். எபேசுவில் கொஞ்சம் சுதந்தரமாக இருக்கும். அப்போது மனித குமாரனையும் பார்க்க மாட்டோம்; சபையின் உண்மையான நிலைமையையும் பார்க்க மாட்டோம்; வரப்போகிற காரியங்களையும் பார்க்க மாட்டோம்; நமக்கு இன்று தேவையான கணவன், மனைவி, திருமணம், படிப்பு, மிதிவண்டி, மோட்டார் சைக்கிள், கார் வீடு, வேலை போன்றவைகள் நம் மனம் முழுவதையும் ஆக்கிரமித்துக்கொள்ளும். நம் மனதை ஆக்கிரமிக்கப் போதுமான காரியங்கள் இருக்கின்றன.

மனம் புதிதாக்கப்படுதல்

மில்லிமீட்டர் அளவுக்குக்கூட பேய் நமக்குத் தீமையான எண்ணங்களைத் தரமாட்டான். அவனுடைய வேலை நம் மனதை சுளுக்கி வைத்தால் போதும். அத்தேனே பட்டணத்தில் உள்ள தத்துவஞானிகள் பேசுவதற்கு ஒன்றும் இல்லையென்றால் ஒரு குண்டூசி முனையில் எத்தனை தேவதூதர்கள் நடனமாட முடியும் என்று காலையிலிருந்து மாலைவரை தர்க்கித்துக் கொண்டிருப்பார்களாம். தர்க்கம்பண்ணுவது நல்லதா நல்லதில்லையா? நிச்சயமாக நல்லது. வாதம் பிரதிவாதம். யார் பெரியவன்? காரணகாரியங்களைப் பயன்படுத்தி வாதம் செய்வது திறமையா இல்லையா? திறமைதான். எதைப்பற்றி வாதம் பண்ணுவது? ஒரு குண்டூசி முனையில் எத்தனை தேவதூதர்கள் நடனமாட முடியும் என்பதைப்பற்றியா..காலையிலிருந்து மாலைவரை. இது பாவமா? இல்லை. கெட்ட வார்த்தை பயன்படுத்துகிறார்களா? இல்லை. ஆனால் இது சாத்தானின் மாயவலை. ஏனென்றால் மனதிலிருக்கிற காலி இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டாலே போதும். ஒரு மனிதனைக் கைதுசெய்து விடலாம். Real estate is not expensive. Mind estate is very expensive. Real estate ஆண்டவருக்கு நிறைய கொடுப்போம். ஆனால் Mind estate கொடுக்க மாட்டோம். தேவன் சில சூழ்நிலைகளை மாற்றுவார். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையின் வழியாகப் போகும்போதுதான் நாம் எண்ணுகிற எண்ணங்கள், நாம் சிந்திக்கிற சிந்தனைகள் மாறும். வெறுமனே நூலகத்துக்குச் சென்று நம் எண்ணங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பரிசுத்த ஆவியானவர் விரும்பவில்லை. நாம் உள்ளான எந்தக் கிரயமும் செலுத்த வேண்டாம் என்றால் சலவைக்குப் போடுவதுபோல மனதைப் போட்டு ஒரு சுற்றுச் சுற்றி பரிசுத்த ஆவியானவர் அதைப் புதுப்பித்துத்தர முடியுமென்றால் அதை எல்லாரும் செய்வார்களே.. ஏன் இன்று நிறையபேருடைய மனம் புதிதாகமாட்டேன் என்கிறது? Partly our dear old thought patterns should also be sent to the cross. எண்ணப் போக்கு. இதை அவர் உள்ளான ரீதியிலும் செய்வார், புறம் பான ரீதியிலும் செய்வார்.

மனம் புதிதாகுதல் தொடர்ச்சியான காரியம்

இது ஒரே நாளில் நடந்து முடிவதில்லை. இது தொடர்ச்சியாக நடக்கிற ஒரு விஷயம். பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு நாளும் நம் மனதைப் புதிதாக்குகிறார். ஒரு மரம் எப்படி வளர்கிறதாம் தெரியுமா? ஏழு நாட்களிலோ அல்லது பத்து நாட்களிலோ நிறைய சத்து சேகரிக்கப்பட்டு சேமிக்கப்பட்டுவிடுமாம். ஆனால், அது திடமாக மாற ஒரு வருடமாகும். நம்முடைய சிந்தனைக் கோபுரம் பல சிந்தனை ஓட்டங்களால் கட்டியமைக்கப்பட்டிருக்கிறது. அதை ஒரேயடியாக இடித்துத்தள்ளுவது சாத்தியமில்லை. அதை ஒரு சின்ன தட்டு தட்டி, ஒரு பகுதியை எடுத்துவிட்டு அதை அவருடைய சிந்தனையினால் நிரப்புவார். இப்படி கொஞ்சம் கொஞ்சமாகப் பண்ணுவார். சில சமயங்களில் முக்கியமான சிந்தனை ஓட்டங்களை என்ன செய்ய வேண்டியிருக்கும்? அறுவை சிகிச்சை (மறுசாயலாக்க) செய்ய வேண்டியிருக்கும். சில சிந்தனைப் போக்கை மாத்திரை கொடுத்து சரிசெய்து விடலாம். வேறு சில சிந்தனைப்போக்கை அறுவை சிகிச்சை மூலம்தான் சரி செய்ய முடியும். இது வலிக்கும். அறுவை சிகிச்சைக்குமுன் கொஞ்சம் ஆயத்தப்படுத்த வேண்டும். அறுவைசிகிச்சைக்குப்பின் மருத்துவம் செய்ய வேண்டும். சில அன்றாட வாழ்க்கையில் நடக்கும். சில நெருக்கடிகள்மூலம் நடைபெறுகின்றன. ஆனால் ஒவ்வொருநாளும் நெருக்கடி என்றால் எந்த மனிதனாலும் வாழ முடியுமா? வாழ முடியாது. எப்போதாவதுதான் நெருக்கடி.. ஒருவேளை 5 வருடத்திற்கு ஒருமுறை அல்லது 10 வருடத்திற்கு ஒருமுறை. நம்முடைய வாழ்வில் நெருக்கடி வரும். தேவன் இரண்டையும் பயன்படுத்துவார். மாத்திரைகள் மூலமாகவும் நம்மைப் புதிதாக்குவார். பெரிய அறுவைசிகிச்சைமூலமாகவும் நம்மைப் புதிதாக்குவார். நம் அன்றாட வாழ்க்கையின்மூலமாகவும் நம்மைப் புதிதாக்குவார். நெருக்கடிமூலமாகவும் நம்மைப் புதிதாக்குவார்.

இதுவரை நகரத்தை நான் ஒருவிதமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். இதுதான் வடக்குவாயில் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஒரு பெரிய அறுவை சிகிச்சைபண்ணி அது வடக்கு வாயில் இல்லை கிழக்கு வாயில் என்று சரிசெய்ய வேண்டியிருக்கிறது. அப்படியானால் நான் இதுவரை வரைந்த வரைபடம் என்னாவது? இதுதான் நம்முடைய ஏக்கமாக இருக்க வேண்டும். “ஆண்டவரே என் மனதைப் புதுப்பியும். I don’t want to copy the customs and behaviors of this world. The way I think, the way I feel, the way I speak… my aspirations, my ambitions கிறிஸ்துவை நான் காண விரும்புகிறேன்.” யோவான் 12ஆம் அதிகாரத்தில் பண்டிகைக்கு வந்த சில கிரேக்கர்கள் பிலிப்புவினிடத்தில் வந்து, “ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்,” என்று கூறினார்கள். இதுவரைப் பார்த்திராத வகையில் பார்க்க விரும்புகிறோம். மனம் புதிதாகுதல்.

இதைக்கூட நான் என்னுடைய வாய்ப்பாட்டின்மூலமாகத்தான் தெரிந்தெடுக்கிறேன். கிரேக்க ஞானிகள் குண்டூசி முனையில் எத்தனை தேவதூதர்கள் நடனமாட முடியும் என்று தர்க்கம்பண்ணிக் கொண்டிருப்பார்கள். CPMகாரர்கள் என்ன ஆராய்ச்சி செய்வார்கள். கர்த்தரை சேவிக்கிறவர்கள் ஏன் திருமணம் செய்யக்கூடாது என்று ஆராய்ச்சிசெய்வார்கள். திருமணம் செய்யாமல் கர்த்தரை சேவிப்பதால் ஆசீர்வாதம் என்ன? இதைக்குறித்து ஒரு கூட்டம் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறது. ஏன்? அவர்களுடைய வாய்ப்பாடு திருமணம்தான். அதுபோல நம்மிடம் நிறைய வாய்ப்பாடு இருக்கிறது. அது நமக்குத் தெரியாது. மற்ற அறுவைசிகிச்சையைவிட மனதை அறுவைசிகிச்சை செய்வதுதான் பெரிய விஷயம்.

நாம் எவ்வளவோ விஷயங்கள் பேசலாம். இது ரொம்ப முக்கியம். நாம் வேதத்தை வாசிக்கும்போது, ஒருவரோடொருவர் உறவுகொள்ளும்போதுகூட எது முக்கியம்? மனம் புதிதாவதுதான் முக்கியம். இந்தப் பூமியில், அவர் உண்டாக்கின உலகத்தில், மனிதர்களுக்கு உபயோகமாக இருக்கிற சில திறமைகளை நாம் உத்தமமாக தினம் தினம் வளர்த்துக்கொண்டால் கண்டிப்பாக நம் கையில். “என்னிடம் நிறைய பணம் இருக்கிறது. அதனால் வெறுமனே ஒரு பட்டத்திற்காகத்தான் படிக்கிறேன். அதையும் எப்படிப் படிக்கிறேன். குறைந்த பட்சம்,” என்பதுபோல் சிலர் படிப்பதுண்டு.

இந்த உலகத்தில் ஒரு விஷயம் இருக்கிறது. ஒன்றைப் பெறுவதற்கு குறைந்தபட்சம் எவ்வளவு தேவையோ அவ்வளவுதான் செய்வார்கள். அதற்குக் குறைவாகச் செய்தால் அது கிடைக்காது. இது இந்த உலகத்தின் பழக்கவழக்கமாகும். இந்த எண்ணப் போக்கிலிருந்து கர்த்தர் நம்மை விடுவித்துவிட்டார் என்று வைத்துக்கொள்வோமே. அப்போது நமக்கு வேலை எளிதாகக் கிடைக்கும். “ஆண்டவரே, நான் நீர் உண்டாக்கின மனிதர்களுக்கு உபயோகமாக இருக்கிற திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கு என்னுடைய பணம், உழைப்பு, நேரம் ஆகியவைகளைச் செலவிட ஆயத்தமாயிருக்கிறேன்.” “தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்குமுன்பாக நில்லாமல் ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்” (நீதி. 22:29). இந்தக் காரியத்தை நான் இன்னும் யோசித்து முடிக்கவில்லை. ஒரு வேளை இன்னும் பல வருடங்கள் ஆகலாம்.